திருவாசகம் சில சிந்தனைகள்-2/திரு அம்மானை

விக்கிமூலம் இலிருந்து
8. திரு அம்மானை

இள மகளிர் உருண்டையாக உள்ள பந்து வடிவான காய்களை, மூன்று அல்லது ஐந்து என்ற அளவில் கையில் எடுத்துக்கொண்டு, அவற்றை மேலே தூக்கிப்போட்டு தரையில் வீழாமல் பிடித்து ஆடும் ஆட்டம் அம்மானை எனப்படும்.

சங்க காலத்தில் கழங்கு ஆடுதல் என்ற பெயருடன் இவ்விளையாட்டு ஆடப்பெற்றது. ஆனால், சிலப்பதிகார காலத்திலேயே கழங்காட்டம் என்ற பெயர் மாறி, அம்மானை ஆட்டம் என்ற பெயர் வழங்கலாயிற்று.

இருவர் முதல் ஐவர்வரை வட்டமாக நின்றுகொண்டு, அவரவர் கையிலுள்ள காய்களைத் தூக்கிப் போட்டுப் பிடித்து ஆடும் ஆட்டம் அன்று வழக்கில் இருந்தது. காய்களை மேலே தூக்கிப் போட்டு பிடிக்கும்போது ஒரு தாளகதிக்கு உட்பட்டே அது நடைபெறல் வேண்டும். இன்றேல், காய்கள் கீழே விழுந்துவிடும். இந்தத் தாள கதியை நிறைவு செய்ய, அதற்கு ஏற்ற சந்தத்தில் பாடல்கள் பாடப்பெற்றன. அம்மானைப் பாட்டின் அடிப்படை இதுவேயாகும்.

ஆடுவோர்கள் இளம்பெண்கள் ஆதலால், காதல்பற்றிய கருத்துக்கள் அன்றைய அம்மானைப் பாடல்களில் பெரிதும் இடம்பெற்றன. எனவே, காதல்பற்றிப் பாடப் பெறும் வரிப்பாடல்களில் இதுவும் ஒன்றாக எண்ணப் பெற்று, அம்மானை வரி என்றும் பெயர் சூட்டப் பெற்றது.

ஒரு நாடு முன்னேற்றம் பெறவேண்டுமானால் அந் நாட்டிலுள்ள மகளிர் முன்னேற்றம் பெறவேண்டும் என்பது இற்றைநாள் சமுதாய இயலார் கண்ட உண்மையாகும்.

மகளிர் முன்னேறாத நாடு முழு முன்னேற்றம் அடையமுடியாது என்ற இற்றைநாள் கண்டுபிடிப்பை அன்றே அறிந்திருந்த அடிகளார், இளமகளிர்க்கு இறையுணர்வை ஊட்டுவதே அவர்கள் முன்னேற்றத்திற்கு வழி எனக்கண்டார். அதனை அறிவுரையாகக் கூறாமல், அவர்கள் விளையாடும் விளையாட்டுப் பாடல்களிலேயே இந்த அருங்கருத்தைப் புகுத்தினார். அம்மானை, பொற் சுண்ணம், பொன்னுரசல், எம்பாவை, சாழல், பூவல்லி ஆகியவை மகளிர் விளையாட்டுக்களே என்பது நன்கு விளங்கும்.

என்றாலும், அதில் ஒரு வேற்றுமை உண்டு என்பதை அறிதல் வேண்டும். பருவமடைந்த இள மகளிர் மனத்தில் காதல் உணர்வை வளர்க்க, இப்பாடல்கள் மூலம் பழங்காலத்தார் முயன்றனர். அந்த இளவயதிலேயே அவர்கள் பாடும் பாடல்களைக் கொண்டே அம்மகளிரின் ஆழ்மனத்தில் இறையுணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்முதலாக கருதியவர் அடிகளாரே ஆவர்.

விளையாட்டாகப் பாடப்படும் இப்பாடல்கள் தொடக்கத்தில் கருதிய பயனைத் தராவிட்டாலும், நாளாவட்டத்தில் பலமுறை பாடப்படும்போது அவர்கள் மேல் மனத்தைக் கடந்து உள்ளத்தில் சென்று பதியும் என்ற நுணுக்கத்தை அறிந்துகொண்ட அடிகளார், இந்த விளை யாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டே பாடல்களை இயற்றினார்.

தொடக்கத்தில் ஆடும்போது இப்பாடல்களின் உட் பொருளை அறிந்து கொண்டே அவர்கள் பாடினார்கள் என்று கூறுவது சரியில்லை. ஆனாலும், பாடல்களின் ஓசை நயம், தாள கதி என்பவை மிகச் சிறப்பாக இப்பாடல்களில் அமைந்திருத்தலின் இவற்றிற்காகவே மீட்டும் மீட்டும் இப்பாடல்களைப் பாடி ஆடினர். நாளாவட்டத்தில் அவர்களையும் அறியாமல் பாடகளின் உட்பொருள் அவர்கள் உள்ளத்தில் சென்று தங்கிற்று. ஒரு சமுதாயத்தின் சரிபாதியான மகளிரை இளவயதிலேயே இறையுணர்வு பெற்றவர்களாக ஆக்க வேண்டும் என்று நினைத்த அடிகளார், இப்பாடல்கள் மூலம் பெருவெற்றி அடைந்தார் என்று கூறினால், அது மிகையாகாது.

இப்பாடல்கள் ‘ஆறடித் தரவு கொச்சகம்’ என்ற பெயரில் அமைந்துள்ளன. ஒவ்வோர் அடியும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்திருத்தலைக் காணலாம்.

இப்பகுதிக்குப் பழங்காலத்தில் ‘ஆனந்தக் களிப்பு’ என்று யாரோ பெயரிட்டுள்ளனர். பின்வந்தவர்கள் அத்தலைப்பை அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்கு விளக்கமும் எழுதினர். ஆனந்தம் என்பது அகத்தே தோன்றுவது. களிப்பு அல்லது மகிழ்ச்சி என்பது புறமனத்தே தோன்றுவதாகும். இந்த ஆனந்தம் அகத்தே நிறைந்திருக்கும்போது அதனை உடைய மகான்கள் அதனை வெளிக்காட்டுவதே இல்லை. அவர்கள் முகத்தில் காணப்பெறும் அமைதி, கண்டார் அனைவரையும் ஈர்க்க வல்லதாகும். அகமனத்தில் நிறைந்த ஆனந்தம் அற்புதமான அலைகளை ஓயாது வெளிப்படுத்திக்கொண்டிருக்கும். ஆதலின், எதிரே உள்ளவர்களையும் ஈர்க்கும் ஆற்றல் உடையது அது. இத்தகைய ஆனந்தம் என்ற சொல்லோடு களிப்பு என்ற மிகச் மிகச் சாதாரணமான சொல்லையும் சேர்த்து ஆனந்தக் களிப்பு என்று பெயரிட்டவர்கள், ஆழ்ந்து சிந்தித்து இப்பெயரைத் தந்ததாகத் தெரியவில்லை.

அடிகளாரின் பின்வரும் பாடல்களில் ஆனந்தமும் அது தோன்றுவதற்குரிய காரணமும் பேசப்பெற்றுள்ளன. அது ஏன் என்பதைப் பின்னர்க் காணலாம்.

175. செம் கண் நெடுமாலும் சென்று இடந்தும் காண்பு அரிய
பொங்கு மலர்ப் பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள் சோலைத் தென்னன் பெருந்துறையான்
அம் கணன் அந்தணன் ஆய் அறைகூவி வீடு அருளும்
அம் கருணை வார் கழலே பாடுதும் காண் அம்மானாய் 1

இடந்து-தோண்டியும். எம் தரம்-எங்கள் அளவு. தெங்கு-தென்னை. அங்கணன்-அழகிய நெற்றிண்ணையுடையவன். அந்தணன்-குருவாக எழுந்தருளிய அந்தணன். அறைகூவி-வலிய அழைத்து.

செங்கண் நெடுமால் என்றமையின் மிகக் கூர்மையான பார்வையும் நெடிதான வளர்ச்சியும் பெற்றவன் என்பது பெற்றாம். செங்கண்ணை உடைய ஒருவன் இருந்த இடத்தில் இருந்தே எதிரேயுள்ளதைக் காணும் வாய்ப்பு உடையவன் என்றாலும் இவனைப் பொறுத்தமட்டில் இருந்த இடத்திலிருந்தும் காணமுடிய வில்லை; நெருங்கிச் சென்றும் காணமுடிய வில்லை; நிலத்தை அகழ்ந்தெடுத்தும் காணமுடியவில்லை என்ற அழகு தோன்றுச் 'சென்று இடந்தும் காண்பு அரிய' என்றார்.

பூமிக்குள் ஆழ்ந்து நிற்கும் பாதத்தைப் 'பொங்கு மலர்ப்பாதம்’ என்று அடைகொடுத்துக் கூறியது வியப்பேயாகும். பூமியை அகழ்ந்துகொண்டு உள்ளே சென்றமையின் மிக வன்மையான பாதம்போலும் என்ற நினைவு தோன்றாதிருக்க ‘மலர்ப்பாதம்’ என்றார். பாதாளம் ஏழினும் கீழ்ச் சென்றிருக்கும் பாதத்தை, 'பொங்கு பாதம்' (ஒளியுடைய பாதம்) என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? ஒளிக்கெல்லாம் மூலமாய் இருப்பதாலும் அருக்கனுக்கே சோதி அமைத்ததாலும் அப்பாதத்தை ஒளியுடைய பாதம் என்றார். இந்தக் கருத்து திருவாசகத்தில் 172ஆம் பாடலிலும் பேசப் பெற்றிருப்பதைக் காணலாம்.

ஒளி உடைய ஒன்றை அது எங்கே இருந்தாலும் எளிதாகக் காணமுடியுமே! அவ்வாறிருக்க இந்தப் பொங்கு பாதத்தைச் செங்கணவன் சென்றும், இடந்தும்கூடக் காணமுடியாமல் போனது விந்தையே என்ற குறிப்புப் பொருள் சிந்திக்கத் தக்கது ஆகும்.

செங்கணவனே தேடிக் காண முடியாத பாதம் என்று அதன் சிறப்பை இவ்வளவு விரிவாகக் கூறியது ஒரு கருத்தை உட்கொண்டதாகும். செங்கண்ணனுக்குத் தன்னை மறைத்துக்கொண்ட அப்பாதம், சராசரி மனிதர்கள் நடமாடும் இந்தப் பூதலத்தில் வந்தது. அவ்வாறு வருதற்கு, இப்பூதலம் தன் முயற்சியால் தவம் ஏதொன்றும் செய்யவில்லை. அப்படி இருந்தும், அப்பாதம் பூதலத்தே போந்தது என்றால், பூதலத்தின் தகுதிநோக்கி அன்று; தன் அருள் காரணமாகவே இவண் போந்தது என்கிறார் அடிகளார்.

அருள் காரணமாக இப்பூதலத்து வந்த அத்திருவடி, என் பிறப்பைமட்டுமா அறுத்தது? அத்திருவடியைக் காணும் பேறுபெற்றோர் அனைவரது பிறப்பையும் அறுத்தது என்பதை விளக்க 'எங்கள் பிறப்பறுத்திட்டு’ என்று தன்மைப் பன்மையாகக் கூறினார். அடுத்தபடியாக 'எம் தரமும் ஆட்கொண்டு' என்று பேசுகிறார். இவை முன்னும் பின்னுமாகக் கூறப்பெற்றிருப்பினும் ஆட்கொண்டு என்பதை முன்னரும்’ பிறப்பு அறுத்திட்டு என்பதைப் பின்னரும் வைத்துப் பொருள் கொள்ள வேண்டும்.

பல்வேறு தரமுடைய மக்களை ஒரே நிலைப்படுத்திப் பிறப்பை அறுப்பது எப்படி முடியும்? மக்கள், உடம்பு உடையவர்களேனும் பல்வேறு மனநிலையில் உள்ளவர்கள் ஆயிற்றே! பிறப்பை அறுக்கவேண்டுமானால் அந்த உயர்ந்த மனநிலைக்கு வளர்ந்தவர்களை மட்டும்தானே ஏற்றுக் கொண்டு அவர்கள் பிறப்பை அறுக்க முடியும் என்ற வினாத் தோன்றுமன்றோ? அதற்கு விடையாக 'எம் தரமும் ஆட்கொண்டு’ என்கிறார்.

பிறப்பு அறுபடுவதற்குத்தான் அவர்கள் வளர்ச்சி நிலையை ஆதாரமாகக் கொள்ளவேண்டுமே தவிர, ஆட்கொள்ப்படுவதற்குத் தரம் பார்க்கவேண்டிய தேவையில்லை. அவனுடைய அருள் காரணமாகவும், வள்ளன்மை காரணமாகவும் ஆட்கொள்கிறானே தவிர, ஆட்கொள்ளப்படும் பொருளின் தரம் பார்த்து இது நடைபெறுவதில்லை. இதனை விளக்கவே எங்களுடைய தரத்தைப்பற்றிக் கவலைப்படாமல் எங்கள் அனைவரையும் ஆட் கொண்டான் என்கிறார். அவனால் ஆட்கொள்ளப் பெற்றபின் தரத்திலிருந்த வேறுபாடுகள் அனைத்தும் மறைந்து அனைவரும் ஒருநிலை அடைந்துவிட்டார்கள். ஆதலின், அவர்கள் அனைவருடைய பிறப்பையும் அறுத்தான் என்று கூறுகிறார்.

'தென்னன்’ என்பது தென்னாட்டிற்கு உரியவன் என்ற பொருளைத் தந்து நிற்கின்றது.

‘அறைகூவி வீடு அருளும் அம் கருணை வார்கழல்’ என்ற பகுதியில் அடிகளார் தமக்கு நேர்ந்த அனுபவத்தை நினைந்து பார்க்கிறார். வீடுபேற்றைப்பற்றி ஒரு சிறிதும் சிந்தியாமல் குதிரை வாங்கச் சென்றுகொண்டிருந்த தம்மை, வலிய இழுத்து அத்திருவடிகளைத் தந்தான் என்று கூறுகின்றார். கருணை உடையவன் தன் வார்கழலைத் தந்தான் என்பதற்குப் பதிலாக, கருணையை வார்கழல்மேல் ஏற்றி, அத்தகைய திருவடியைப் பாடிக்கொண்டே அம்மானை ஆடுவோம் என்கிறார்.

அறைகூவி வீடு அருளும் என்பதற்கு, குருந்த மரத்தின் அடியில் இருந்த குருநாதர் இவரை வாய்விட்டு அழைத்தார் என்று பொருள்கொள்ளத் தேவையில்லை. அவருடைய திருவருளால் திருவாதவூரர் மனத்திடைத் தோன்றிய குரலே ஆகும் அது என்பது கருத்து. இது ‘அறை கூவி ஆட்கொண்டு அருளி' (திருவாச 3-148) என்ற அண்டப்பகுதியில் விளக்கப்பெற்றுள்ளது.

176. பாரார் விசும்பு உள்ளார் பாதாளத்தார் புறத்தார்
ஆராலும் காண்டற்கு அரியான் எமக்கு எளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி
வாரா வழி அருளி வந்து என் உளம் புகுந்த
ஆரா அமுது ஆய் அலை கடல்வாய் மீன் விசிறும்
பேர் ஆசை வாரியனைப் பாடுதும் காண் அம்மானாய் 2

பாரார்-மனிதர்கள். பேராளன்-பெருமையையாள்பவன். வாரா வழி-முத்தி, பேராசை வாரியன்-பெரிய அன்புக்கடலாக உள்ளவன்.

‘மண்ணுலகம், விண்ணுலகம், பாதாள உலகம், இவற்றைக் கடந்துள்ள ஏனை அண்டங்கள் ஆகியவற்றுள் எங்கே வாழ்பவர்களும், கண்ணாலும் கருத்தாலும் காண்டற்கு அரியனாய் உள்ள ஒருவன் எமக்கு எளியனாய் வந்தான். மானுட வடிவில் எளியனாய் வந்திருப்பினும் அவன் காண்டற்கு அரிய பேராளன் என்பதையும், தென்னன் என்பதையும், பெருந்துறை நாயகன் என்பதையும் யான் புரிந்துகொண்டேன். மானுட வடிவில் வந்த குருவை இவ்வாறு புரிந்துகொள்ள எனக்கு உதவியது என்னுடைய அறிவோ கல்வியோ அனுபவமோ அல்ல. குருவாக வந்தவர் முதலாவதாக எனக்குச் செய்த காரியம் என்னைப் பிச்சனாக்கியதுதான்' என்கிறார்.

‘உலகத்தார் கண்ணில் நான் பித்தனாகப் படினும் உண்மையில் நடைபெற்றது வேறு ஒன்றாகும். அந்தக் குருவானவர் முதலில் என் உள்ளம் புகுந்தார். பின்னர்த் தன் பரிசு, வினை இரண்டு, சாரும் மலம் மூன்றும் என்னை விட்டு நீங்கும்படியாகச் செய்தார். அதனாலேயே யாராலும் காண்டற்கு அரியவனை, பேராளனை, தென்னன் என்றும் பெருந்துறையான் என்றும் எமக்கு எளியவனாக எம் எதிரே அமர்ந்துள்ளான் என்றும் தெரிந்துகொண்டேன்’ என்கிறார்.

சென்ற பாடலிலும் இப்பாடலிலும் பின்னரும் பல இடங்களிலும் இறைவனைத் ‘தென்னன்’ என்று அடிகளார் குறிப்பிடுவது சிந்திக்கற்பாலதாகும். வேதகாலத் திற்கு முற்பட்டே சிவ வழிபாடு தமிழகத்தில் தோன்றி வளர்ந்தது. ஆதலின், ‘தென்னன்’ என்ற சொல் சிவபெருமானைக் குறிப்பதற்குக் காரணத்தோடு சொல்லப்பட்ட பெயராகும்.

‘அலைகடல்வாய் மீன் விசிறும்' என்ற தொடர் திருவிளையாடல் புராணத்தில் காணப்பெறும் ‘வலைவீசிய படலக்' கதையை நினைந்து கூறியதாக இருக்கலாம்.

177. இந்திரனும் மால் அயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்கச் சிவன் அவனி வந்தருளி
எம் தரமும் ஆட்கொண்டு தோள் கொண்ட நீற்றன் ஆய்ச்
சிந்தனையை வந்து உருக்கும் சீர் ஆர் பெருந்துறையான்
பந்தம் பறிய பரிமேல் கொண்டான் தந்த
அந்தம் இலா ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய் 3

அந்தரம்-ஆகாயம். அவனி-பூமி. எந்தரமும்-எமது நிலையிலும். சிந்தனை-கவலை. பந்தம்-கட்டு, பரிய-நீங்க. பரி. குதிரை.

இந்திரன், மால், அயன், வானோர், ஏனோர் என்பவை பொதுவாக மேலுலகம் என்ற பொருளைத் தந்துநிற்கு மேனும், ஒரு காரணம்பற்றியே அடிகளார் இங்கு வரிசைப்படுத்திக் கூறுகிறார்.

இந்திரன் சுக போகங்களை அனுபவிப்பதற்காகவே மேலுலகில் வாழ்பவன். அந்த அனுபவச் செல்வத்தை அளிப்பவன் திருமால். இந்தச் செல்வமும் அனுபவமும் துவர்த்த பிறகு அவற்றின் நிலையாமையை உட்கொண்டு, ‘நான் யார்? என் உள்ளம் ஆர்?’ என்பனபோன்ற வினாக்கள் அறிவின் அடிப்படையில் தோன்றுகின்றன. அவ்வினாக்களின் பயனாக வானோர் பிரானே எம்தலைவன் என்ற முடிவை அந்த அறிவு தந்தாலும், அவனை அடைவதற்கு உரிய வழி துறைகளைத் தடுத்து, அந்த அறிவே ஆணவ வடிவங்கொண்டு நிற்றலின் அந்த அறிவின் தலைவனாகிய நான்முகனை மூன்றாவதாகக் கூறினார். ஏனோர், வானோர் என்பவர் மேலே கூறிய மூவருக்கும் கீழ்ப்பட்டு இடை நிற்பவர்கள் ஆவர்.

இவர்கள் அனைவருக்கும் அறியொணாதவன் என்றதால் அவனுடைய பெருமை கூறியவாறாயிற்று.

அத்தகையவன் யார் என்ற வினாவிற்கு விடை கூறுவார்போல, சிவன் என்ற பெயரைக் கூறினார். ‘அவனி வந்தருளி' என்றதால் குருவடிவில் வந்ததை நினைவூட்டினார்.

குருவடிவிற்கு விளக்கம் தருபவர்போல் 'தோள் கொண்ட நீற்றன்' என்றார். ஆட்கொள்ளப் படுபவரின் தராதரம் பாரது ஆட்கொண்டான் என்பதை 'எந்தரமும் ஆட்கொண்டு’ என்றார்.

சீரார் பெருந்துறையான் ஒருவர் உள்ளத்தில் புகுந்தான் என்பதை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? இதோ விடை கூறுகிறார் அடிகளார். நம்முடைய கட்டுப் பாட்டிற்கு அப்பாற்பட்டுச் சித்தத்தினுள்ளே உருக்கம் தோன்றினால், பெருந்துறையான் வந்தான் என்பதை அது அறிவிக்கும். அதனையே 'சிந்தனையை வந்து உருக்கும் சீரார் பெருந்துறையான்’ என்கிறார் அடிகளார்.

‘பரிமேற் கொண்டான் தந்த அந்தம் இலா ஆனந்தம்’ என்பது அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சியைக் குறிப்பதாகும்.

இரண்டு பேரைப் பார்க்கும்பொழுது சிந்தை உருகி அந்தமிலா ஆனந்தம் கிடைத்தது. இந்த அனுபவத்தை முதலில் தந்தவர் குருநாதர். அவராவது அடியார் குழுவினிடையே குருநாதராக வீற்றிருந்தார். அவரைக் கண்டவுடன் சிவன் எனத் தேறினார் ஆதலின், ஆனந்தம் கிடைத்தது நியாயமானதே ஆகும்.

ஆனால், குதிரைச் சேவகனாக வந்த ஒருவன் சிவன்தான் என்று எவ்வாறு அடிகளார் தேறினார்? குதிரைச் சேவகனைக் கண்டவுடன் 'தாம் அமைச்சர்; வந்தவன் குதிரைச் சேவகன்' என்ற தராதரம் மறைந்தது. குதிரைச் சேவகன் பாண்டியனிடம்தான் பேசினான்; அடிகளாரிடம் பேசவில்லை; என்றாலும், என்ன அதிசயம்! அங்கு நிகழ்ந்தவற்றை இதோ அடிகளார். பேசுகிறார். ‘பரிமேல் கொண்டான் தந்த அந்தமிலா ஆனந்தம்’ என்ற தொடர் அதற்கு விடையாகும். திருப்பெருந்துறையில் சிவன் என முதலில் தேறினார்; பிறகு ஆனந்தம் கிடைத்தது. குதிரைச் சேவகனைக் கண்டவுடன் முதலில் ஆனந்தம் பெருகிற்று; எனவே, குதிரைச் சேவகனைச் சிவன் என்றே தேறினார் அடிகளார்.

178. வான் வந்த தேவர்களும் மால் அயனோடு இந்திரனும்
கான் நின்று வற்றியும் புற்று எழுந்தும் காண்புஅரிய
தான் வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு
ஊன் வந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப்பு எய்து
தேன் வந்து அமுதின் தெளிவின் ஒளி வந்த
வான் வந்த வார் கழலே பாடுதும் காண் அம்மானாய் 4

கான் நின்று வற்றி-தவஞ்செய்வதாகக் காட்டிற்புகுந்து உடல்வற்றி. புற்று எழுந்து-உடல்முழுதும் புற்றால் மூடப்பெற்று.

முன்னர்ப் பல இடங்களிலும் பேசியதுபோல இப்பாடலிலும் திருப்பெருந்துறை அனுபவத்தை நினைவுகொள்கிறார் அடிகளார்.

தேவலோகத்தில் உள்ள இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் அவ்வுலகத்திலுள்ள இன்பங்களை அனுபவிப்பதற்காக அங்கு உள்ளனர். அன்றி, அங்கிருந்தே தவம் செய்து வீடுபேற்றை அடைந்தார்கள் என்று குறிப்பிட ஒருவருமில்லை. உய்கதி அடைய விரும்பினால் இந்திரன் முதலாய தேவர்களும் பூவுலகிற்கு வந்து இறைவனை வழிபட்ட பின்னரே முன்னேற முடியும்.

தேவர்களும் காட்டினிடை வந்து பல காலம் தவம் செய்து அடைவதற்குரிய அத்திருவடிகள் தம்மைப் பொறுத்தவரை மிகமிக எளிதாகத் திருப்பெருந்துறையில் அறைகூவி ஆட்கொண்டன என்கிறார் அடிகளார்.

அங்குக் கிடைத்த அனுபவம் எத்தகையது என்பதை முன்னர்ப் பலகால் பேசிய அடிகளார், இங்கு மீட்டும் பேசுகின்றார். மயிர்க்கூச்செறிதல், உயிர்த்தல் ஆகிய உடம்பு நிகழ்வுகள் நான்காம் அடியில் பேசப்பெற்றுள்ளன.

குருநாதரின் அத்திருவடிகள் பெருமை வாய்ந்தன என்பதை 'வான் வந்த வார்கழல்’ என்கிறார். பருவடிவுடன் இருந்த அத்திருவடிகள் கண்ணுக்கு இதத்தையும், மனத்திற்கு அமைதியையும் தந்தது உண்மை தான். ஆனால், தேன், அமுது என்ற இரண்டையும் இங்கு எப்படி உவமை கூறமுடியும்? திருவடி கட்புலனுக்கு விருந்தாயதுபோலத் தேனும் அமுதும் நாப்புலனுக்கு விருந்து ஆயின. அப்படியானால் இந்த உவமையிலிருந்து பெறக்கூடிய கருத்து ஒன்று உண்டு.

மனத்திற்கு அமைதி, ஆனந்தம் என்பவற்றைத் திருவடி தருகின்றது. அதேபோல அந்த இரண்டையும் இனிய தேனும் தெளிந்த அமுதும் தருகின்றன. எனவே, மனத்திற்கு அமைதி, ஆனந்தம் தந்த காரணத்தால் திருவடிக்கு அமுதும், தேனும் உவமையாகிவிட்டன.

179. கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றிக்
கல்லைப் பிசைந்து கனி ஆக்கித் தன் கருணை
வெள்ளத்து அழுத்தி வினை கடிந்த வேதியனைத்
தில்லை நகர் புக்குச் சிற்றம்பலம் மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதும் காண் அம்மானாய் 5

கல்லைப்பிசைந்து கனியாக்கல்-சுவையற்ற வலிய கல்போலும் மனத்தைச் சுவையுள்ள மென்மையான பழமாகச்செய்தல். கடிந்த-நீக்கிய. ஒல்லை விடையான்-விரைந்து செல்லும் இடபத்தை உடையவன்.

மேலைப் பாடல்களைப்போல இப்பாடலும் திருப்பெருந்துறை அனுபவத்தை நினைந்து பாடியதாகும். இப்பாடலின் தனிவிசேடம் என்னவென்றால், குருநாதர் ஆட்கொள்வதற்கு முன்னர்த் தம் மனநிலை இருந்த தன்மையையும், ஆட்பட்ட பின்னர் அம்மனநிலையில் ஏற்பட்ட மாறுபாட்டையும் சிந்திப்பதாகும்.

‘கல்ஆம் மனத்துக் கடைப்பட்ட நாயேன்' என்றதால் ஆட்படுவதன் முன்னர்த் திருவாதவூரரின் மனம் கல்போன்று இருந்தது என்பதாம். தலைமையமைச்சராக இருந்த ஒருவருக்கு அறிவின் பயனாக உள்ள கல்வி, உலக அனுபவம் ஆகிய அனைத்தும் நிரம்பியிருந்தன. ஆனால், இந்தக் கல்விச் செல்வமும், அனுபவத் தொகுப்பும் இவருடைய மனத்தை கனிவிக்க முடியவில்லை; அன்பு என்னும் உணர்வு அம்மனத்தினுள் நிறைந்து, அது முதிர முதிர மனம் கனியும் என்றபடி.

இந்த அடிப்படைத் தத்துவம் திருவாதவூரருக்கு நன்கு தெரியுமல்லவா? பேரறிஞராகிய அவர், அன்பெனும் உணர்வை மனத்தினுள் செலுத்தி அதனைக் கனியவைத் திருக்கலாமே ஏன் அவ்வாறு செய்யவில்லை; அவர் பலமுறை முயன்றிருத்தல் வேண்டும். ஆயினும், அன்பெனும் உணர்வை மனத்துட் செலுத்த முடியவில்லை. இப்பொழுது திருப்பெருந்துறையில் குருநாதர் வடிவிலிருந்த ஒருவர், ஒரே விநாடியில் அதனைச் செய்து முடித்துவிட்டார். பல்லாண்டுகள் முயன்றும் தாம் செய்யமுடியாத ஒன்றை, ஒரே விநாடியில் குருநாதர் செய்துவிட்டார்; ஆதலின், அவரை 'வல்லாளன்’ என்கிறார் அடிகளார்.

நீண்ட காலம் தாம் செய்ய முடியாததை ஒரே விநாடியில் குருநாதர் செய்துவிட்டதால்மட்டும் அவர் வல்லாளன் ஆகிவிடவில்லை. மேலும் ஒரு காரியத்தைச் செய்ததனால்தான் அவர் வல்லாளன் ஆனார். கல்போன்ற மனத்தைப் பிசைந்து கனியாக்குதல் ஒரு மாபெரும் செயல்தான். ஆனாலும், அங்ஙனம் கனிந்த மனம் முழுப்பயனையும் தராது. இன்று கனிந்த பழம் என்று நாம் காணும் பல பழங்கள் பெரும் பகுதி இன்சுவையும், ஒரு சில பகுதிகள் சுவையின்றியும் இருத்தலைக் காண்கிறோம். கல்போன்ற மனத்தைப் பிசைந்து கனியாக்கியவன் மனத்தின் இயல்பை நன்கு அறிந்தவன். கனியாக்கிவிட்டாலும் மறுபடியும் அந்த மனம் திருவாதவூரரிடம்தானே இருக்கப் போகிறது? அப்படிப்பட்ட நிலை வரும்போது கனிவிக்கப்பட்ட இம்மனம், ஒரு சில இடங்களில் பழைய கல் தன்மைக்குப் போய்விடும் அல்லவா?

அவ்வாறு நிகழாமல் இருக்க 'வல்லாளன்’ ஒரு காரியம் செய்தான் என்கிறார் அடிகளார். அது என்ன? ‘பிசைந்து கனியாக்கி' யவன் அக்கனியைத் 'தன் கருணை’ ஆகிய வெள்ளத்துள் அழுத்தினான்.

இன்றும்கூடப் பழம் முழுச்சுவை பெறுவதற்கும் தன் நிலை கெடாமல் நீண்ட நாள் இருப்பதற்கும் பழத்தைத் தேனுள் அமிழ்த்தி வைக்கின்ற பழக்கம் உண்டு. அதனை ‘முரபா' என்று கூறுவர்.

அதனையே இங்கு அடிகளார் ‘தன் கருணை வெள்ளத்து அழுத்தி' னான் என்கிறார்.

தேனுள் அழுத்திய பொழுது பழத்திலுள்ள குறைகள் எல்லாம் முற்றிலுமாக நீங்கிவிடுவதுபோல, கருணை வெள்ளத்துள் அழுத்தப்பெற்ற மனம், தன் குறைகளாகிய வினைகளிலிருந்து முற்றிலும் நீங்கிவிடுகின்றது என்பதையே ‘வெள்ளத்து அழுத்தி வினை கடிந்த வேதியன்’ என்கின்றார்.

‘தில்லை நகர் புக்குச் சிற்றப்பலம் மன்னும்' என்ற தொடர் மேலோட்டமாகப் பார்க்கும்போது குழப்பத்தை உண்டாக்கும். வரலாற்று அடிப்படையில் கண்டால் (திருஆலங்காட்டுத் தல புராணம்) திருஆலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய பெருமான், உடமன்யு முனிவனுக்காகத் தில்லை நகரை நிர்மாணித்து, அங்கே சிற்றம்பலத்தை உருவாக்கி, அங்கேயே ஆனந்தத் தாண்டவம் ஆடினான் என்பது விளங்கும்.

'புக்கு' என்பது புகுந்து என்று பொருள் தரும். அப்படியானால் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இவன் தில்லையில்மட்டும் இல்லாதிருந்து இப்போது புதிதாகப் புகுந்தானோ என்ற ஐயம் தோன்றுமன்றோ? இம்மாதிரி இடங்களில் புகுந்து என்ற சொல்லை, இருந்து என்ற சொல்லுக்குப் பரியாயச் சொல்லாகக் கொள்ள வேண்டும். அடிகளார் இந்தக் கருத்தில்தான் 'புக்கு' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் என்பதைப் பின்வரும் திருவாசகத் தொடர்களும் வலியுறுத்தும்.

வான்பழித்து இம் மண் புகுந்து மனிதரை
ஆட்கொண்ட வள்ளல்

(திருவாச:351)

தானே வந்து எனது உள்ளம் புகுந்து
அடியேற்கு அருள் செய்தான்

(திருவாச:555)

புகுதல் என்று கூறினாலே, அதன் எதிர்மறையான வெளிவருதல் என்ற சொல்லை அது நினைவூட்டும். ‘புக்கு' என்ற சொல் இருந்து என்ற பொருளைத் தருவதாயினும் சொல்லளவில் புக்கு என்பது வெளிப்படுதல் என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல் ஆதலின், இதில் குழப்பம் நேராதிருக்க 'மன்னும்' (நிலை பெறுதல்) என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

180.
கேட்டாயோ தோழி கிறி செய்த ஆறு ஒருவன்
தீட்டு ஆர் மதில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டாதன எல்லாம் காட்டிச் சிவம் காட்டித்
தாள்தாமரை காட்டித் தன் கருணைத் தேன் காட்டி
நாட்டார் நகை செய்ய நாம் மேலை வீடு எய்த
ஆள்தான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண் அம்மானாய் 6

கிறி-மாயம். தீட்டு ஆர் மதில்-சுதை தீட்டப்பெற்ற மதில். காட்டாதன-காட்டத்தகாதனவாகிய உண்மை ஞானங்கள்.

இப்பாடலின் உயிர்நாடி 'நாட்டார் நகைசெய்ய நாம் மேலை வீடெய்த' என்ற தொடராகும். இரண்டு செயல்கள் உடனிகழ்ச்சிகளாக இங்கு பேசப்பெற்றுள்ளன. வீடு எய்துதற்குரிய வழிகளைக் குருநாதர் கையாண்டார். அதனால் விளையும் பயனைக் காணவோ அறியவோ முடியாத சராசரி மனிதர்கள் 'நகை' செய்தார்கள். வீடு எய்துவதற்குரிய முதற்படி புற, அகத் துறவுகளாகும். அமைச்சர் கோலத்தில் வந்த வாதவூரர் திருவடி தீட்சை பெற்றபின் அகத்துறவை உடனே பெற்றுவிட்டார். ஆனால், இதனை யாரும் அறிந்திலர் அமைச்சர் பதவியை விட்டுவிட்டதும் அந்தப் பதவிக்குரிய ஆபரணங்களைத் துறந்துவிட்டதும் அடுத்து நிகழ்ந்த புறத்துறவாகும்.

அடிகளாரின் அகத்துறைவை அறியமாட்டாத மக்கள், புறத்துறவைமட்டும் கண்டுவிட்டு, பெரும் பதவியையும், உயர்ந்த ஆடை ஆபரணங்களையும் துறந்துவிட்ட ஒருவரைப் பார்த்து, பித்தன் என்று கூறி நகையாடினர்.

விடு எய்துவதற்கு உரிய நிலை படிப்படியாக இவர் உள்ளே நிகழ, அதன் பயனாக விளைந்தது புறத்துறவாகும். மக்கள் நகைத்தார்கள். ஆதலின் 'நகை செய்ய' என்றும் அதே நேரத்தில், அகத்துறவு காரணமாக ‘வீடு எய்த’ என்றும் கூறினார்.

நாட்டார் நகை செய்வதற்குரிய காரணம் நன்கு விளங்கிவிட்டது. வீடு எய்துவதற்கு உரிய படிகள் எவ்வாறு தோன்றின என்பதை முற்பகுதியில் விளக்குகின்றார்.

‘காட்டாதன எல்லாம் காட்டி'னான் என்பது முதற்படியாகும். உலகியல் நிலையில் காணும்பொழுது அந்த மன வளர்ச்சிக்கு ஏற்ப, உலகிடைக் காணப்பெறும் பொருள்கள் பல்வேறு வடிவினவாய்ப் பல்வேறு பெயர் உடையனவாய் ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காட்சியளிக்கும்.

அருள் பெற்று, வளர்ச்சி அடையும்போது இப்பொருள்களின் மாறுபாடுகள் மறைந்து, இவற்றின் ஊடே இலங்கும் மூலப்பொருள் ஒன்றே என்பது தெரியத் தொடங்கும். 'பார்க்கின்ற மலருடு நீயே இருத்தி’ என்பது இதனை விளக்கும். அந்த ஒன்றைக் காண முற்பட்டவுடன் பல்வேறு நாம, ரூபம் உடைய இப்பொருள்கள் மறையத் தொடங்கும். இந்த வளர்ச்சியைத்தான் 'காட்டாதன எல்லாம் காட்டி' என்கிறார்.

காணாதன எல்லாம் காட்டி என்று சொல்லியிருக்கலாமே? 'காட்டாதன' என்று சொல்லியதன் காரணமென்ன? மாறுபாட்டில் ஒருமைப்பாட்டைக் காணும் இயல்பு நம்பால் இல்லை. தலைவனாகிய அவன் நம்முள் இருந்து நம்மை வளர்த்து, அவன் காட்டும் பொழுதுதான் இந்த ஒருமைப்பாட்டை அறிய முடியும். 'காட்டுவித்தால் யாரொருவர் காணாதாரே, காண்பார் ஆர் கண்ணுதலாய்! காட்டாக் காலே' (திருமுறை: 6-95-3) என்று நாவரசர் பெருமான் கூறியதும் இக்கருத்தை வலியுறுத்தும்.

அதாவது, தம் கல்வி அறிவாலும் அனுபவ அறிவாலும் இதுவரை உலகையும் பொருள்களையும் வாதவூரர் கண்டிருந்த முறை வேறு, திருவடி தீட்சைக்குப் பின் அந்தப் பழைய உலகையும் பொருள்களையும் மணிவாசகப் பெருமான் காணுகின்ற முறை வேறு. இப்போதுதான் அவன் காட்டினான். ஆதலால், (இதுவரையில்) 'காட்டாதன எல்லாம் காட்டி’ என்றார்.

‘சிவம் காட்டி' என்பது அடுத்து நிற்கும் தொடராகும். இங்கே சிவம் என்றது உருவம் கடந்து நிற்கின்ற அருவநிலைப் பொருளைக் குறிப்பதாகும். இப்பொழுது பாடலின் முறைவைப்பை நன்கு அறிந்துகொள்ள முடியும்.

நாம், ரூபங்களோடு கூடிய உலகைக் கண்டு, வேறுபாடு உடையது இவ்வுலகம் என்ற கருத்தில் வாழும் திருவாதவூரரை, இந்த நாம, ரூபங்களைக் கடந்து பொருள்களை காணுமாறு செய்தான் இறைவன். தம்முடைய கருவி, கரணங்களின் துணைகொண்டு பார்த்தபொழுது வேறுபட்டு நின்ற இந்தப் பிரபஞ்சம் அவன் அருளே கண்ணாகக் கொண்டு காணும்பொழுது ஒன்றாகவே நின்றுவிட்டது. அதாவது நாம, ரூபங்களைக் கடந்து எங்கும் நிறைந்த ஒரே பொருளாக அனைத்தும் காட்சியளித்தன. அந்த ஒன்றைத்தான் ‘சிவம் காட்டி’ எனறார்.

இத்தகைய காட்சி அனுபவம் அடிகளாருக்கு முன்னர் நாவரசர் பெருமானுக்குக் கிடைத்ததை, அவர் பாடல் மூலம் அறிய முடிகிறது. (திருமுறை 4:3) கயிலை மலையிலிருந்து யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைந்த போது, பிடியும் களிறுமாகக் காட்சியளித்த யானைகள் மெள்ள மெள்ள மறைகின்றன. மிகப் பெரிய வடிவுடைய யானைகள் மறைந்து, அவன் திருவடிகள் அந்த இடித்தில் காட்சியளிக்கின்றன. முதலில் களிறு வருவதைக் கண்டவர் நாவரசர் என்ற மனிதர். ஒரே விநாடியில் அக்காட்சி மறைந்து எங்கும் நிறைந்துள்ளவன் திருவடிகள் இப்போது காட்சி நல்கின. இக்காட்சி நாவரசர் என்ற மனிதரின் புறக்கண்களுக்கு அப்பாற்பட்டுக் கிடைத்த காட்சியாகும்.

முதலிற் கண்ட காட்சியையும் இப்போது கிடைத்த காட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்த வாகீசர் 'கண்டு அறியாதன கண்டேன்’ என்று பாடுகிறார். இந்த இறைக் காட்சி சித்தித்துவிட்ட பிறகு எங்கும் எதிலும் சிவத்தைக் காணுகின்ற சக்தி வந்துவிடுவதால் அதனையே வாகீசர் ‘கண்டறியாதன கண்டேன்’ என்று பாடுகிறார். இதனையே மணிவாசகப் பெருந்தகை காட்டாதன எல்லாம் காட்டிச் சிவம் காட்டி’ என்றார்.

‘தாள் தாமரை காட்டி' என்பது அடுத்து நிற்கும் தொடராகும். உண்மையான சிக்கல் இங்கேதான் பிறக்கின்றது. முதலில் வேறுபாட்டில் ஒருமைப்பாட்டைக் காணுமாறு செய்தான். அந்த ஒருமைப்பாடே சிவ சொரூபம் என்பதை விளக்கினான். இப்பொழுது வீடு எய்துவதற்குரிய தகுதிகள் அனைத்தும் அடிகளாரை வந்து அடைந்துவிட்டன. 'நாம் மேலை வீடு எய்த' 'காட்டாதன எல்லாம் காட்டிச் சிவம் காட்டி' னான் என்பதுவரையில் வளர்ச்சி முறையும் பயனும் நன்கு பேசப்பெற்றுள்ளன.

இந்த நிலைக்குப் போனபின் 'தாள் தாமரை காட்டி’ என்று பருப்பொருளைக் கூறுவது மறுபடியும் அடிகளாரை இந்த உலக இயல்புக்குக் கொண்டுவந்துவிட்டான் என்பதை அறிவுறுத்துகிறது. உணவை வாய்க்குள் வைக்கப் புகும்பொழுது கையைத் தட்டிவிட்டதுபோல, மேலை வீடெய்தச் சிவம் காட்டியவன் அந்த நிலையினின்றும் கீழே இறக்கிப் பருப்பொருளாகிய 'தாள் தாமரை காட்டி' னான் என்று கூறுவது கற்கின்ற நமக்கே மருட்சியைத் தருவதாகும். இதனையே அடிகளார் 'கிறி (வஞ்சனை) செய்தவாறு' என்று கூறுகின்றார்.

அவ்வளவு உயர்ந்த நிலையிலிருந்து கீழே வந்தமையின் தம்மை மேலே அழைத்துச் சென்றவன் கீழே இறக்கி வஞ்சனை செய்துவிட்டான் என்று பேசுவதில் நியாயம் இருக்கிறது.

முன்னர் அகவலில், குருநாதர் தம்மை இங்கு விட்டுச் சென்ற காரணத்தை அடிகளாரே விளக்கியுள்ளார். ‘பரா அமுது ஆக்கினன்’ (திருவாச. 3-181 என்றும் 'கோலம் ஆர்தரு பொதுவினில் வருக' (திருவாச 2-128) என்றும் தாம் இங்கு விடப்பட்ட காரணத்தை அடிகளாரே கூறியுள்ளார். வீடு எய்துவதற்கு உரிய வாய்ப்புப் பெற்றிருந்தும் குருநாதர் ஒரே விநாடியில் தம்மை இங்கு விட்டுச் சென்றமையின் 'கிறி செய்தான்' என்று அடிகளார் வருந்துவது நியாயமானதே ஆகும்.

181.
ஓயாதே உள்குவார் உள் இருக்கும் உள்ளானைச்
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாது இருக்கும் பாதியனை

நாய் ஆன நம்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயானைத் தத்துவனை தானே உலகு ஏழும்
ஆயானை ஆள்வானைப் பாடுதும் காண் அம்மானாய் 7

உள்குவார்-தியானிப்பவர்கள். உள்ளான்-உள்ளீடானவன். சேயான்-தூரத்திலுள்ளவன். தத்துவன்-உண்மைவடி வானவன். உலகு எழும் ஆயான்-எழுலகங்களும் ஆனவன்.

நாயன்மார்கள், அடியார்கள் என்பவர்கள் உறவையும் உலகையும் துறந்துவிட்டு, காட்டுக்கு ஓடிக் கனசடை வைத்து, மூக்கைப் பிடித்துத் தவம் செய்யவில்லை. அவரவர்கள் எந்தச் சூழ்நிலையில் பிறந்தார்களோ, அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த உலகில் தத்தம் கடமைகளைச் செய்தனர். ஆனாலும் என்ன அதிசயம்! ஏனையோர் இறைவனை நாடிச் செல்ல, இறைவன் இவர்களை நாடியல்லவா வருகிறான்!

பெரிய புராணத்தில் காணப்பெறும் அத்தனை அடியார்களும் தத்தம் கடமைகளைச் செய்துகொண்டு இவ்வுலகிடை வாழ்ந்தவர்களே. இறைவன்தான் அவரவர்கள் எதிரே வெவ்வேறு வடிவத்துடன் வந்து இறுதியில் வீடுபேற்றையும் தந்தான்.

மூவர் முதலிகளைப் பொறுத்தமட்டில்கூட நடந்தது இதுவேயாம். கரையில் நின்று அழும் பிள்ளைக்கு இறைவனே ஓடோடி வந்து பால் தந்தான். திருமணக் கோலத்திலிருந்தவரிடம் தானே வந்து ஏசிய பேச்சையெல்லாம் கேட்டான்; ஆட்கொள்ளவும் செய்தான். நாவரசரைப் பொறுத்த மட்டில் களைத்து நின்றபொழுது தண்ணீர்ப் பந்தல் வைத்துக் கட்டமுது தந்தான்; கயிலை செல்லும் தளரா ஊக்கத்துடன் செல்பவரை இறைவன்தான் முனிவர் வேடத்தில் வந்து தடைசெய்து, கயிலைக் காட்சியை இப்பிறப்பிலேயே காணுமாறும் செய்தான்.

மணிவாசகரைப் பொறுத்தமட்டில் திருப்பெருந்துறையில் குருவடிவம் தாங்கிநின்று வழியோடு செல்பவரை வலிதில் அழைத்து, திருவடியாகிய வீடுபேற்றை ஒரே கணத்தில் தந்துவிட்டான்.

இந்த மாபெரும் வரலாற்று நிகழ்ச்சிகள் மிக முக்கியமான செய்தி ஒன்றைத் தெரிவிக்கின்றன என்பதைக் கூர்ந்து சிந்தித்தல் வேண்டும். மாறுபட்ட புறச்செயல்கள் ஒன்றும் இல்லாமல் உலகியலோடு இயைந்த வாழ்வு வாழ்ந்த இவர்களுக்கு, இந்தப் பிறப்பிலேயே இறைவனைக் காணும் பேறும் கிடைத்தது; வீடும் கிடைத்தது.

துறவு பூண்டு தவம் மேற்கொண்டு பல்லாண்டுகள் தவம் செய்வார்க்கும் இச்சிறப்புக் கிடைக்கவில்லை; ஆனால், இவர்களுக்குக் கிடைத்தது. இதற்குரிய காரணம் யாது?

தேவர்களும் முனிவர்களும் நனி வாட, இவர்களுக்கு மட்டும் அந்தத் தனிச்சிறப்புக் கிடைத்தது என்றால், அதற்கு ஒரேயொரு காரணந்தான் உண்டு. அது என்ன என்பதைத்தான் இப்பாடலின் முதலடி இரத்தினச் சுருக்கமாக வெளியிடுகின்றது.

'ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானை’ என்பது அந்த அடியாகும். ஓயாதே உள்குவார் என்ற இரண்டு சொற்களும் நன்கு தெரிந்த சொற்கள் போலக் காணப்பட்டாலும் ஆழமான பொருளுடையவை என்பதை மறுத்தற்கில்லை. ஓயாது என்றால் ஒரு விநாடியும் இடை விடாமல் என்பது பொருளாகும். உள்குதல் என்பது மனத்தில் நினைப்பது அன்று; மனத்தையும் தாண்டி, மேல் சித்தத்தையும் கடந்து அடிச்சித்தத்தில் நினைத்தலையே உள்குதல் என்ற சொல் குறிக்கும். உள்குதல் என்ற சொல்லின் முற்பகுதி உள் என்பதாகும். எனவே புறமனம், ஆழ்மனம், சித்தம் என்ற வரிசையில் உள்ளே உள்ளே சென்று தொழிற்படுவதைத்தான் உள்குதல் என்ற சொல்லால் அடிகளார் குறிப்பிடுகின்றார். இதற்கு ஒரு காரணமும் உண்டு.

மேல்மனத்தின் மேற்பகுதி, அடிப்பகுதி, அகமனத்தின் மேற்பகுதி என்பவற்றில் தோன்றும் எண்ணங்களை அதே இடத்தில் நிலைபெறுமாறு செய்தல் மிகமிகக் கடினமாகும். விரும்பிய பொழுதெல்லாம் இப்பகுதிகளில் ஒரு நினைவை உண்டாக்கலாமேனும் சில விநாடிகளுக்கு மேல் அந்நினைவு நிற்பதில்லை.

மன இயலின் இந்த நுணுக்கத்தை அறிந்த அடிகளார், எண்ணுவார், நினைப்பார், சிந்திப்பார் என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் உள்குவார் என்ற சொல்லைப் பயன்படுத்தியதன் கருத்து இதுவேயாகும்.

உள்ளத்தில் தோற்றுவிக்கப்படும் இந்தச் சிந்தனைகூட, மனத்தோடு ஒப்பிடும்போது மிக நீண்டநேரம் நிலைநிற்கும் என்பது தவிர, நிலைபேறாக நின்றுவிடும் என்று சொல்ல முடியாது. அப்படி அது நிற்கவேண்டுமானால் ஒரு விநாடிகூட இடைவிடாமல் இந்த ஆழ்ந்த சிந்தனை உள்ளத்தின் ஆழத்தில் நிலைபெற்றிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது ஒருவருடைய கடமை என்பதைக் கூறவந்த அடிகளார் 'ஓயாதே உள்குவார்’ என்றார்.

இவ்வாறு உள்கினால் கிடைக்கும் பயனை நாம் அறிந்துகொள்வது கடினம். நோய்க்கு வாய்வழியாக உண்ணும் மருந்து குருதியுடன் கலந்து உடல் முழுதும் பரவி நோயைப் போக்குகின்றது என்பது உண்மைதான். ஆனால், அந்த மருந்து உடலின் எப்பகுதியில் உள்ளது, எவ்வாறு பணிபுரிகின்றது, எவ்வாறு நோயைப் போக்கிற்று என்பதை நோயாளி அறிவதில்லை.

அதேபோல ஓயாது உள்குவாருக்கும் ஒரு நிலையான பயன் கிடைக்கின்றது. எல்லோருக்கும் உள்ளே எப்பொழுதும் மறைந்திருக்கும் இறைவன், ஓயாது உள்குவார்க்குமட்டும் வெளிப்பட்டு, அவர்களே உணரு கின்ற நிலையில் உள்ளே இருப்பான். அவன் இருக்கின்றான் என்பதைக் கணந்தோறும் அவர்கள் உணரமுடியும், அதைத்தான் 'உள்ளிருக்கும் உள்ளானை’ என்று கூறினார் அடிகளார்.

ஏனையோர்க்கு உள்ளத்துள் மறைந்து நிற்கும் இறைவன் ஓயாது உள்குவார்க்கு அவர்கள் உணருமாறு வெளிப்பட்டுள்ளான். ஆதலின் இவர்களுடைய வாழ்க்கையில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழ்கின்றது. உயிரைப் பற்றி நிற்கும் அச்சம் இவர்களைப் பொறுத்தமட்டில் ஓடி மறைந்துவிடுகிறது. இவர்கள் பார்வையில்பட்டவர்கள், இவர்களை நெருங்கித் தொண்டு செய்பவர்கள் ஆகிய அனைவருக்கும் மாபெரும் சிறப்புக்கள் வந்து எய்துகின்றன.

அடுத்து உள்ளது ‘சேயானை’ என்ற சொல்லாகும். ஓயாது உள்குவார்க்கு உள்ளத்தின் ஆழத்தில் அவர்கள் உணருமாறு வெளிப்பட்டு நிற்கின்ற ஒருவன், உள்காதவர் உள்ளத்தில் சேயானாய் (துரத்தில் இருப்பவனாய்) ஆகிவிடுகிறான்.

ஒருவனே ஒரு சிலருக்கு நெருங்கியவனாகவும் ஒரு சிலருக்குச் சேயானாகவும் எப்படி இருக்கமுடியும் என்ற ஐயத்தைப் போக்கிக்கொள்வது எளிது.

தூரத்தே இருக்கும் பொருள்களை அண்மைப் படுத்திக் காண்பதற்குப் 'பைனாக்குலர்' (Binocular) என்ற கருவியைப் பயன்படுத்துகிறோம். இதில் கண்வைத்துப் பார்க்கும் பகுதி சிறிதாகவும் பொருளைக் காட்டும் எதிர்ப்பகுதி பெரிதாகவும் இருப்பதைக் காணலாம். சிறிய பகுதியைக் கண்ணில் வைத்துப் பார்க்கும்போது நூறடி தூரத்திற்கு அப்பாலுள்ள பொருளும் ஒரு அடி தூரத்தில் நெருங்கி இருப்பதுபோலக் காட்சி தரும். இதே பைனாகுலரைத் திருப்பி வைத்துக்கொண்டு பார்த்தால் ஒரு அடி தூரத்திலுள்ள பொருள்கூட நூறடிக்கு அப்பாலுள்ளது போலக் காட்சியளிக்கும். இதில் காண்பானும், காணப்படு பொருளும் மாறுவதில்லை. இடையிலுள்ள கருவிதான் முன்பின்னாக மாறி நிற்கும். அதேபோல மனிதனும் இறைவனும் அவரவர் இடத்தில்தான் இருக்கின்றனர். ஓயாது உள்குதல் என்ற பைனாக்குலரைப் பயன் படுத்துவோர்களுக்கு முன்னர்த் தூரத்தில் காணப்பட்ட இறைவன் இப்போது நெருங்கி வந்து காட்சியளிக்கிறான். இந்த உள்குதல் ஆகிய செயலை இறைவன் மாட்டுச் செய்யாமல் பிற பொருளின்மேல் செலுத்துவோர்கள் பைனாக்குலரைப் பின்முன்னாக வைத்துப் பார்ப்பவர்கள் ஆவர். இப்படிப்பட்டவர்களுக்கே இறைவன் சேயனாகக் காட்சி அளிக்கிறான். இதனையே அடிகளார் ‘சேயானை’ என்று கூறினார்.

'சேவகன்' என்ற சொல்லுக்கு வீரன் என்பது நேரடியான பொருளாகும். இங்குக் குதிரைச் சேவகனையும் அச்சொல் குறிப்பால் உணர்த்திற்று.

'நாயான நம் தம்மை ஆட்கொண்ட நாயகனை' என்பது அடுத்து நிற்கும் தொடராகும். மிகவும் வெறுத்து ஒதுக்கத்தகுந்த தம்மையும் ஒரு பொருளாக்கி ஆட்கொண்டான் ஆதலின் அவனைத் தலைவன் என்கிறார்.

'தாயானை தத்துவனை’ என்ற சொற்கள் முரண்பட்ட இரு பொருள்களை உடையன. தாய் என்பவள், குற்றம் குறைகள் காண முற்படாமல், எந்நேரமும் தன் கவனத்தைக் குழந்தைக்குத் தருபவள் ஆதலின், அப்பண்புகள் எல்லாம் ஒருங்கேயுடைய இறைவனைத் தாய் என்றார். இம்மட்டோடு நிறுத்தியிருப்பின் இறைவனின் பெருமையை அறியாமல் தாய் என்ற முறையில் எளிதாகக் கருதிவிடக் கூடும். எனவே, 'தத்துவனை' என்ற சொல்லை அடுத்து வைத்தார். தத்துவம் என்ற சொல் உணர்தற்கு அரிய மெய்ப்பொருள் என்ற கருத்தைத் தருவதாகும்.

பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து, காத்து, அழிப்பவன் என்று சொல்வதுதான் மரபு. இவ்வாறு கூறும் பொழுது இப்பொருள்கள் அவனினும் வேறுபட்டவை என்ற கருத்துக்கு இடங்கொடுத்துவிடும். அதனைப் போக்குவதற்கே 'உலகு ஏழும் ஆயானை’ என்கின்றார். ஆயவன் என்றாலே ஆக்கல் தொழிலைச் செய்பவன் என்ற பொருளைத் தராமல் தானே அதுவாக ஆயினவன் என்ற பொருளைத் தந்துநிற்கின்றது. அதுவாக ஆயினவன் என்றால் இவ்வாறு ஆவதற்கு முன்பு ஒரு நிலை உண்டு என்பது பெறப்படுமன்றோ! சோறு ஆயிற்று என்றால் சோறாக ஆகும் நிலைக்கு முன்னர் அரிசி என்ற ஒரு நிலை இருந்தது என்பது பெறப்படும். எனவே, 'ஆயானை’ என்றால் உலகேழும் தன் சொரூபமாக நிற்றலோடு, தனியேயும் உள்ளான் என்ற கருத்தைக் குறிப்பால் உணர்த்திற்று.

'ஆள்வானை' என்றதால் படைத்தல், காத்தல் என்ற இரு தொழிலையும் கூறினாராயிற்று.

அம்மட்டோடு அல்லாமல் ஒரு புதிய கருத்தையும் அடிகளார் இங்குப் பெறவைக்கிறார். ஒருவனே தனியாக நிற்கிறான்; அவனே பிரபஞ்சமாக மாறுகிறான்; அப் பிரபஞ்சத்தை அவனே ஆள்கிறான். தொழில் என்ற முறையில் ஆதல், ஆள்தல் என்பவை வெவ்வேறாகக் காணப்படினும் ஒருவனே தன்னைப் பிரபஞ்சமாகப் படைத்துக்கொண்டு அதை ஆள்பவனாகவும் இருக்கின்றான். இரண்டு தொழில்களைக் கூறியமையின் அருத்தாபத்தியால் மூன்றாவதாகிய அழித்தல் தொழிலும் பெறப்பட்டது என்க.

182.

பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்
"கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை
மண் சுமந்த கூலி கொண்டு அக் கோவால் :மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண் அம்மானாய் 8

பண்சுமந்த பாடற்பரிக-பண்ணைத்தாங்கிய பாடல்களை ஆக்கும் தன்மை. விண்கந்த கீர்த்தி-விண்ணுலகில் வியாபித்த புகழ். மொத்துண்டு-அடிபட்டு. கோ-வரகுண பாண்டியன்.

‘பண் சுமந்த பாடல்’ என்பது இறைவன் புகழைப் பாடும் இசைப்பா என்ற பொருளைத் தரும். அடிகளாரைத் தவிர ஏனைய மூவரும். பண் சுமந்த பாடல்களைப் பாடினார்கள். எனவே, இந்த அடி அவர்கள் பாடிய பாடல்களைக் குறிக்கும் என்று பொருள் கூறுவாரும் உளர். அடிகளார் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆதலின், இவ்வாறு பொருள் கொள்வதிலும் தவறில்லை. இவ்வாறு கொள்ளாமல் பண்ணோடு கூடிய இசைப்பாக்களைப் பாடுகின்றவர்கள் யாராக இருப்பினும் அப்பாடலுக்கு இரங்கி, வீடுபேறு முதலியவற்றைத் தருபவன் என்று பொதுவாகவே பொருள் கொள்ளலாம். இங்ஙனம் கருணையுடைய பெருமானின் புகழ், இவ்வுலகம் முழுவதும் நிறைந்து மேலுலகம் வரையில் சென்றது என்ற பொருள்பட 'விண்சுமந்த கீர்த்தி' என்றார்.

கீர்த்தி என்ற சொல்லை இரண்டாவது முறையாக அடிகளார் பயன்படுத்துகிறார் என்பதும் அறியத்தக்கது. புகழ் என்னும் பொருளை உடைய கீர்த்தி என்னும் வடசொல்லை இவர்க்கு முன்னர் யாரும் பயன்படுத்த வில்லை. ஆதலால், அடிகளார் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று நினைப்பதில் தவறில்லை.

பாண்டியர், சோழர் கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்தி என்ற சொல் பெரிதும் ஆளப்படுவதை இங்கே சிந்திக்கலாம்.

‘கலிமதுரை' என்பது தொடங்கி, பொன்மேனி என்பதுவரை உள்ள நிகழ்ச்சிகள் அடிகளார் வாழ்க்கையில் அவர் கண் எதிரே நடைபெற்றவையாகும்.

மண்சுமந்தவனுக்கு முதுகில் விழுந்தது ஒரெயொரு அடிதான். பிரம்பால் ஒரு அடி முதுகில் கொடுத்தால், எந்த ஒரு முதுகும் புண்ணாகிவிடாது. அப்படியானால் 'மொத்துண்டு புண் சுமந்த பொன்மேனி' என்று பாடுவதன் நோக்கம் என்ன?

குழந்தைக்கு ஒரு சிறு துன்பம் நிகழ்ந்தாலும் அதனைப் பெரிதுபடுத்தி வருந்துவது தாய்இயல்பு. அன்பின் எதிரே சிறியதும், பெரிதாகக் காட்சியளிக்கும். எனவே, சொக்கன் முதுகில் பட்ட ஓரடி, அடிகளார் மனத்தில் பெரும் புண்ணைத் தோற்றுவித்தது. தம் மனத்தில் ஏற்பட்ட புண்ணைச் சொக்கன் முதுகின்மேல் ஏற்றி புண் சுமந்த பொன்மேனி என்று பாடுகிறார். இதனால் அடிகளாரின் அன்பின் எல்லை ஓரளவு உய்த்துணரப்படும்.

அடிகளாருக்கு ஆயிரம் ஆண்டுகள் பிற்பட்டு வந்த வடலூர் வள்ளற்பெருமான் இந்தக் காட்சியை மனத்திலே கொண்டுவருகிறார். ஆனாலும், ஒருவேறுபாடு உண்டு. சொக்கன் முதுகில் பட்ட அடிக்கு மனம் நொந்தார் அடிகளார். ஆனால், வள்ளலாரைப் பொறுத்தமட்டில் அந்த அடியைக் காட்டிலும் அதைக் கண்டுகொண்டிருந்த மணிவாசகப் பெருமானின் மனம் என்ன பாடுபட்டதோ என்று நோகிறார். அதற்குக் காரணத்தையும் அவரே சொல்கிறார். ஆலவாய்ச் சொக்கனே நீ அடிபட்டாய் என்பதை ஆயிரம் ஆண்டுகள் கழித்து இப்பொழுது காதால் கேட்டவுடனேயே என் நெஞ்சத்தில் இடிவிழுந்தது போல் ஆயிற்றே, அப்படியிருக்க இதனை நேரே கண்ட அடிகளாரின் உள்ளம் என்ன பாடுபட்டிருக்குமோ என்ற கருத்துப்படப் பின்வரும் செய்யுளைப் பாடுகின்றார்.

வன்பட்ட கூடலில் வான்பட்ட வையை வரம்பு இட்டநின்
பொன்பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவி நடையாம்
துன்பட்ட வீரர் அந்தோ வாதவூரர் தம் தூய நெஞ்சம்
என்பட்டதோ? இன்று கேட்ட என் நெஞ்சம் இடிபட்டதே

(திருஅருட்பா 2251)

‘வாதவூரர் தம் தூய நெஞ்சம்' என்று நெஞ்சுக்கு அடைமொழியாகத் தூய என்ற சொல்லைத் தருகிறார் வள்ளலார் வாதவூரர் நெஞ்சத்தைத் துரிய நெஞ்சம் என்று கூறியதால் நான்காவது அடியில் வரும் ‘என் நெஞ்சம்’ என்பது தூ ய்மை இல்லாத நெஞ்சம் என்பது பெறப்பட்டது.

தூய்மை இல்லாத நெஞ்சங்கட ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் ஒரு நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டபோதே இப்படி இடிபட்டது என்றால், தூய நெஞ்சம் அந்த நிகழ்ச்சியை நேரே கண்டிருக்கும்போது என்ன பாடுபட்டிருக்குமோ என்று வள்ளலார் நோகின்றார்.

இப்பாடலில் ‘மண் சுமந்த கூலிகொண்டு’ பாண்டியனால் மொத்துண்டவனைப்பற்றிக் கூறவந்த அடிகளார், பாடலின் முற்பகுதியில் விண் சுமந்த கீர்த்தி உடையவன் என்றும், முக்கண்ணன் என்றும், கடவுள் என்றும் அவன் புகழைப் பாடும்போது, இடையே 'பெண் சுமந்த பாகத்தன்’ என்று கூறியுள்ளது சிந்திக்கற்பாலது.

அடிகளார் வாழ்க்கையில், இரண்டுமுறை அவர் தண்டிக்கப்படுகிறார். ஆவணி மூலத்தில் குதிரைகள் வராதபோது, பதினான்கு நாட்களுக்கு மேலாகக் கடுமையான தண்டனையை அவர் ஏற்றபோது, இந்த நெற்றிக் கடவுள் உதவ முன்வரவில்லை. ஏன்? அடிகளார் செய்த தவற்றிற்காக அப்போது தண்டனை அனுபவிக்கிறார். அரசாங்கத்தில் குதிரை வாங்குவதற்காக என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பணத்தை(ear-marked fund) வேறு எவ்வளவு உயர்ந்த காரியத்திற்கு என்றாலும் செலவிடுதல் பிழை. அந்தக் குற்றத்திற்காக முதன்முறை அவர் தண்டனை அனுபவிக்கும்போது ஆலவாய்ச் சொக்கன் தலையிட வில்லை. இந்நாட்டில் இம்மரபு காக்கப்பட்டது என்பதை, பக்த இராமதாஸரின் வரலாறும் நன்கு உணர்த்தும். திருவாதவூரரைப்போலப் பக்த இராமதாஸரும் அரசனுக்குச் சேரவேண்டிய வரிப்பணத்தை இராமனுக்கு அழகிய திருக்கோயில் கட்டுவதற்குச் செலவழித்துவிட்டார். அதற்கெனப் பன்னிரண்டு ஆண்டுகள் சிறை இருந்தார்.

ஆனால், இப்பொழுது குதிரைகள் வந்து பாண்டியன் அதனைப் பெற்றுக்கொண்ட பிறகு மற்றோர் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பரிகள் நரியாயின என்றாலும், இப்பொழுது அவை பாண்டியனுடைய சொத்தாகும். குதிரைகளைக் கயிறுமாற்றிப் பெற்றுக்கொண்ட பிறகு அவை நரியாக மாறினாலும் புலியாக மாறினாலும் மணிவாசகர் அதற்குப் பொறுப்பாகார். இதுவே அரச நீதி. இந்த நீதியை மறந்த மன்னன் மறுமுறையும் அடிகளாரைத் தண்டிக்கத் தொடங்கியபோது வைகையில் வெள்ளம் புரண்டது.

அடியார் துயரம் பொறாத ஆலவாயான் அடிகளாரின் துன்பத்தைத் துடைப்பதற்கும், இறையன்பு மேலிட்ட வந்திக்கும், பாண்டியன் வரகுணனுக்கும் காட்சி நல்கவும் மண் சுமக்கும் கூலியாளாய் வந்து சேர்ந்தான்.

திருவாதவூரர், வரகுணன், வந்தி என்ற மூவருக்கும் ஒரே நேரத்தில் அருள் செய்ய ஏற்றுக்கொண்ட வடிவம், மண் சுமக்கும் வடிவம். இந்தக் கருணையை நினைந்து பார்க்கின்றார் அடிகளார். ஆலவாய்ச் சொக்கனுக்கு இந்தப் பெருங்கருணை தோன்ற யாது காரணம் என்று நினைக்கின்றார். புதிதாகத் தகுதி ஒன்றும் மூவருக்கும் வந்துவிடவில்லை. எனவே, சொக்கன் தோன்ற உடனிருக்கும் தாயின் பரிவே காரணம் என்ற நினைவு தோன்றியதால்தான் இவ்வாறு பாடுகிறார். அவன் பெம்மான், விண்சுமந்த கீர்த்தி உடையான், வியன் மண்டலத்து ஈசன், கண்சுமந்த நெற்றிக் கடவுள் என்றாலும் அவன் கூலி ஆளாய் வருவதற்கு இவையல்ல காரணங்கள். பெண் சுமந்த பாகத்தானாய் இருப்பதே அவன் கருணைக்குக் காரணம் என்ற கருத்துப்படப் பெண்சுமந்த பாகத்தன்' என்று பாடுகின்றார்.

மண் சுமந்து கூலி கொண்டு, மண் சுமந்த கூலி கொண்டு என்று இருவகைப் பாட வேறுபாடுகள் உள்ளன. ‘சுமந்து’ என்ற வினையெச்சத்தைக் காட்டிலும் ‘சுமந்த’ என்ற பெயரெச்சமே சிறப்புடையதாகத் தெரிகிறது.

சுமந்த கூலி என்னும்பொழுது ஒரு சிறந்த கருத்தை அது கொண்டு நிற்பதைக் காணலாம். இறைவன் படைப்பில் எந்த ஒன்றைப் பெறவேண்டுமாயினும் அதற்குரிய விலையைத் தந்தே தீரவேண்டும். அவனுடைய கருணை ஒன்றுக்குத்தான் விலையில்லை. இங்கே வந்தியம்மையிடம் நிரம்பப் பிட்டை வாங்கிக்கொண்டு தின்றுவிட்டு மூட்டையும் கட்டிக்கொண்டு சென்றானே, இது முறையா? ஏழைப் பிட்டு வாணிச்சியிடம் இறைவனே ஆயினும் பிட்டைப் பெறுவது முறையா என்ற வினாவிற்கு விடை கூறுவார்போல இது இலவசமாகப் பெற்றதன்று, மண் சுமந்ததற்காகவே பெற்ற கூலியாகும் என்று பொருள்பட நிற்றலின் இப்பாடமே இங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

183.

துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்
கொண்ட புரிநூலான் கோல மா ஊர்தியான்
கண்டம் கரியான் செம் மேனியான் வெள் நீற்றான்
அண்டம் முதல் ஆயினான் அந்தம் இலா ஆனந்தம்
பண்டைப் பரிசே பழ அடியார்க்கு ஈந்தருளும்
அண்டம் வியப்பு உறுமா பாடுதும் காண் அம்மானாய் 9

கோலமா-அழகிய குதிரை. ஈந்தருளும்-கொடுத்தருளும் வகையை.

'துண்டப் பிறையான்' தொடங்கி 'அண்டம் முதல் ஆயினான்’வரை இறைவனுடைய சிறப்புக்கள் பல் வகையானும் போற்றப்பெறுகின்றன.

பழ அடியார்க்கு அந்தமிலா ஆனந்தத்தை, பண்டைப் பரிசே தருகின்றான் என்பது இந்நாட்டவர் கண்ட பழைய மரபாகும்.

பழ அடியார் என்பது பரம்பரை பரம்பரையாக இறைத்தொண்டில் ஈடுபட்டவர்களைக் குறிப்பதாகும். பழ அடியார் என்றும் புத்தடியார் (திருவாச: 157) என்றும் அடிகளாரே குறிப்பிடுகின்றார்.

ஏயர்கோன் கலிக்காமரும் அடியார்க்கு இறைவனிடம் உள்ள உரிமையை ‘எந்தை தந்தை’ (பெபு:ஏயர்-392) என்று தொடங்கும் பாடலில் குறிப்பிடுவதைக் காணலாம்.

பரம்பரை பரம்பரையாக வரும் சில குணப்பண்புகள் நீக்க முடியாமல் வலுப்பெற்றிருக்கும் என்பது இன்றைய விஞ்ஞான உலகமும் ஏற்றுள்ள முடிவாகும். இதனை நம் முன்னோர் அன்றே கண்டு போற்றியுள்ளனர்.

‘பழவடியார்க்குப் பண்டைப் பரிசே அருளும்’ என்பதனைக் கூர்ந்து நோக்குதல் இன்றியமையாதது. பழஅடியார் என்பது பரம்பரை பரம்பரையாக வந்து கொண்டிருக்கும் ஒரு தொகுப்பினரையே குறிப்பதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் என்ன வேண்டினாரோ அதையேதான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய நாயன்மார்களும், பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் தோன்றிய குமரகுருபரர் போன்ற பெருமக்களும் வேண்டினர். பரம்பரைக் கணக்கில் இவர்கள் ஒவ்வொருவரும் பழ அடியார்கள் என்பதை மறத்தலாகாது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய காரைக்கால் அம்மையார்க்கு எதனை வழங்கினானோ, அதனையே நாயன்மார்கள் முதலியோர்க்கும் குமரகுருபரர் போன்றோர்க்கும் வழங்கினானாதலால் ‘பண்டைப் பரிசே ஈந்தருளும்’ என்றார்.

அடியார்கள் அனைவர்க்கும் பண்டைப் பரிசே ஈந்தருளினான் என்றால், எதனை என்ற வினாத் தோன்றுமன்றே! வீடுபேற்றை என்று விடை கூறினாலும், அதனைப் பெற்றால் நமக்கு என்ன கிடைக்கும் என்று உசாவுவது மனிதமனம். அதற்கு விடை கூறுவார்போல ‘அந்தமிலா ஆனந்தம்' ஈந்தருளினான் என்கிறார்.

மகிழ்ச்சி, இன்பம் என்பவை குறையுடையன; நிலையில்லாதன; இவ்வுலகிடைக் கிடைப்பன. இக் குறைபாடுகள் எதுவும் இல்லாத, நிலைபேறுடைய ஒன்றை ‘அந்தமிலா ஆனந்தம்’ என்கிறார் அடிகளார்.

184.

விண் ஆளும் தேவர்க்கும் மேல் ஆய வேதியனை
மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பு ஆகி நின்றானைத்
தண் ஆர் தமிழ் அளிக்கும் தண் பாண்டி நாட்டானைப்
பெண் ஆளும் பாகனைப் பேணு பெருந்துறையில்
கண் ஆர் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணாமலையானைப் பாடுதும் காண் அம்மானாய் 10

மாண்பு-மாட்சிமைதரும் பொருள். கண் ஆர் கழல்-யாரும் தியானித்தற்கரிய திருவடி. கண்ணுதல்-எண்ணுதல்.

'வேதியன்’ என்ற சொல் உயர்ந்தவன் என்ற பொருளைத் தந்து நிற்கின்றது. மன்னர்க்கு மாண்பாகி நின்றான் என்பது கூர்ந்து நோக்கத்தக்கது. எவ்வளவு உயர்ந்தவன் என்று இலக்கியங்கள் கூறினாலும், மன்னன் என்பவனும் முக்குண வசத்தனாய மனிதன்தான். தனிப்பட்ட சாதாரண மனிதர்களுக்குக்கூட வேண்டப்படும் உயர் பண்புகள் ஒரோவழி ஒருவன்பால் இல்லையென்றாலும், அதனால் பெருந்தீங்கு விளைந்துவிடாது. அவனையும் அவனைச் சுற்றியுள்ள ஒரு சிலரையும் மட்டுமே தாக்கும். ஆனால், மன்னனாக இருக்கின்றவன் அனைத்து உயிர்களையும் காக்கின்ற பொறுப்பில் இருப்பவன், ஆதலால் அன்பு, கருணை, இரக்கம், பிறர் துயர்துடைக்கும் பண்பு, பிழை பொறுக்கும் இயல்பு ஆகிய கடவுட் பண்புகள் அவன்பால் இருந்தே தீரவேண்டும். அவை இல்வழி அந்நாடே பெருந்துயரில் மூழ்க நேரிடும். ஆகவேதான், மன்னர்க்குரிய இம்மாண்புகளை, இறைப் பண்புகளை உடையவனே இறைவன் என்றே குறிப்பிடுகின்றார். ‘மண்ணாளும் மன்னர்க்கும் மாண்பாகி நின்றானை’ என்பதன் பொருள் இதுவேயாகும்.

‘மக்கட்கு இறை என்று வைக்கப்படும்’ (குறள்:388) என்ற வள்ளுவர் வாய்மொழி இக்கருத்தையே வலியுறுத்தும். கருணை முதலிய இறைப் பண்புகள் நிறைந்த ஒருவனை இறைவன் என்றே மக்கள் போற்றுவர் என்ற குறட் கருத்தையே அடிகளார் 'மாண்பாகி நின்றானை’ என்ற தொடரில் பெறவைக்கிறார்.

தமிழை வளர்க்கின்ற பொறுப்பைச் சங்கங்கள் அமைத்ததன் மூலமாகப் பாண்டிநாடே நிறைவேற்றியது ஆதலின், 'தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாடு’ என்றார்.

‘பாண்டி நாடே பழம்பதியாகவும்' (திருவாச2.18) என்று முன்னர்க் கூறியுள்ளார். அதே கருத்தை இங்குத் 'தண்பாண்டி நாட்டானை’ என்று கூறுகின்றார்.

தண் பாண்டி நாட்டிற்குத் 'தமிழ் அளிக்கும்’ என்று அடை தந்ததால் கண்ணுதல் பெருமான் தானும் ஒரு புலவனாய்ச் சங்கம் ஏறித் தமிழாய்ந்தான் என்று கூறுதலும் பொருந்தும்.

அடியார்கள் விரும்பிப் போற்றிப் பரவுகின்ற திருப்பெருந்துறையில் கண்ணார் கழல்காட்டி அடிகளாரை ஆட்கொண்ட சிறப்பு முன்னரும் பல இடங்களில் கூறப் பெற்றுள்ளது.

இப்பாடலிலும் 'அண்ணாமலையான்' என்ற சொல் வருதலின் இது திருஅண்ணாமலையில் பாடப்பெற்றது என்று கூறுவாரும் உளர்.

அடிகளார் எந்த ஊரில் எந்தப் பதிகத்தைப் பாடினார் என்று கூறுவதற்குரிய ஆதாரங்கள் ஏதுமில்லை. திருவாதவூரடிகள் புராணம் முதலியவை சேக்கிழாரைப் போன்ற சரித்திர அறிவு மிக்கவரால் பாடப் பெறவில்லை. எனவே அவற்றை ஆதாரமாகக்கொண்டு இந்தப் பதிகங்கள் எந்த ஊரில் பாடப்பெற்றவை என்று கூறுதல் பொருத்தமாகத் தெரியவில்லை. அன்றியும் தோழி கூற்றுப்போன்று சில பாடல்கள் அமைந்திருப்பதாலேயே இப்பாடல்களை அகத்திணை இலக்கணத்தில் புகுத்தி, தோழி கூற்று, தலைவி கூற்று, இயற்படமொழிதல், இயற்பழித்து மொழிதல் என்ற தலைப்புகளுள் அடக்கிப் பொருள்கூறுவதும் பொருந்துமாறில்லை.

185.

செப்பு ஆர் முலை பங்கன் தென்னன் பெருந்துறையான்
தப்பாமே தாள் அடைந்தார் நெஞ்சு உருக்கும் தன்மையினான்
அப் பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பு ஆர் சடை அப்பன் ஆனந்த வார் கழலே
ஒப்பு ஆக ஒப்புவித்த உள்ளத்தார் உள் இருக்கும்
அப்பாலைக்கு அப்பாலை பாடுதும் காண் அம்மானாய் 11

செப்பு-சிமிழ். அப்பு-தண்ணீர் கழலே ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார்-கழல்களுக்கே தம்மை அடகாகக் கொடுத்த மனத்தினையுடைய அடியார்கள். அப்பாலைக்கு அப்பாலை-சுத்த மாயாபுவனங்களுக்கு அப்பாற்பட்டவரை.

பிறந்த நாட்டைப்பற்றி வீறு கொள்ளுதலும் அதனைப் புகழ்ந்து பேசுதலும் பழைய இலக்கியங்களில் அதிகம் காணப்படா. மூவர் தேவாரங்கள் அந்தந்த ஊர்களில் பாடப்பெறும்போது அந்த ஊர்களுக்கு உரியவனாகவே இறைவன் பேசப்பெறுவான்.

அடிகளாரைப் பொறுத்தவரை தென்னன் என்றும் தென்பாண்டி நாட்டான் என்றும் பல முறை கூறியுள்ளதைக் காணலாம். சிவனைப் பாண்டி நாட்டுக்கு உரியவன் என்ற கருத்தில் முன்னர்த் 'தென்னாடு உடைய சிவன்' (திருவாச: 4-164) என்று கூறினாரோ என நினைக்கத் தோன்றுகிறது. தமிழகம் முழுவதையும் தென்னாடு என்று தமிழர்கள் குறிப்பதில்லை. தட்சிண தேசம் என்று வடவர்கள் குறிப்பிட்டதற்குக் காரணம், இப்பகுதி இந்தியாவின் தென்பகுதியில் உள்ளது என்பதாகும். வடக்கே உள்ளவர்களுக்கு இது தென்னாடே தவிரத் தமிழரைப் பொறுத்தமட்டில் தென்னாடு என்பது பாண்டி நாடே ஆகும்.

‘தாளடைந்தார் நெஞ்சைத் தப்பாமே உருக்கும் தன்மையினால் என்று கூறியதால் அன்பர் பணி என்ன, ஆண்டவன் பணி என்ன என்பதை விரிவாகவே கூறியுள்ளார்.

ஆறறிவுடைய மனிதராகப் பிறந்தவர்கள் வாழ்வின் குறிக்கோள் யாது என்பதை ஆழ்ந்து சிந்தித்தால், தாள் அடைதலே அக்குறிக்கோள் என்பது நன்கு தெரியவரும். இது மனிதர்கள் கடமையாகும். இது நன்கு நிறைவேறினால் நெஞ்சு உருகும் நிலை ஏற்படக் காணலாம். நெஞ்சு தானாக உருகும் இயல்புடையது அன்று; அதனை உருக்குவிக்கும் தன்மை நம்பாலில்லை. எனவே, நெஞ்சு உருகிற்று என்றால் அதனை உருக்கினான் ஒருவன் உண்டு என்பது நன்கு தெளியப்பெறும். ஒரு பணியைச் செய்தவருக்கு அப்பணியைப் பெற்றுக்கொண்டவர்கள் தவறாமல் கூலி கொடுத்தல்போல் தாள் அடைதலாகிய பணியைச் செய்தவர்க்கு, தவறாமல் அவர்கள் நெஞ்சை உருக்கும் பயனைத் தருகிறான் இறைவன்.

நெஞ்சு உருகிற்று என்றால், ஆன்மாவிற்கு அவன் அருள் கிடைத்துவிட்டது என்பது உறுதி.

‘அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த அப்பார் சடையப்பன்’ என்ற தொடர் திருவிளையாடல் புராணத்தில் வரும் வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய கதையைக் குறிப்பதாகவும் இருக்கலாம். இன்றேல் மானுட வடிவு தாங்கிய ஆலவாய்ச் சொக்கன், வலை வீசியது முதலாக, மண்சுமந்ததுவரையான பல திருவிளையாடல்களையும் செய்வதற்கு இடமாகத் தேர்ந்தெடுத்தது பாண்டி நாடே ஆதலின் அதனைக் குறித்ததாகவும் இருக்கலாம்.

‘வார்கழலே ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார்’ உள்ளிருக்கும் இறைவன் என்பது, யாருடைய உள்ளத்தில் இறைவன் தங்குகிறான் என்பதை விளக்கமாகக் கூறியது. தம்முடைய உள்ளத்தை வார்கழலுக்கு முழுவதுமாக ஒப்புவித்த அடியார்கள் யாரோ அவர்களுடைய உள்ளத்தில் குடிகொண்டிருப்பவன் என்பதே இதன் பொருளாகும். முற்றிலும் தம்முடைய உள்ளத்தைத் தம் பணி செய்யும் கருவியாகக் கொள்ளாமல் வார்கழல் வந்து தங்குவதற்குரிய இடமாக முற்றிலும் செய்துவிட்டால் அக்கழலுக்கு உரியவனும் அங்கே வந்து தங்கிவிடுவான் என்ற பொருளையும் தந்துநிற்கின்றது. அடிகளார் ஈடு பட்டது வார்கழலிலேயே ஆகும். வார்கழலில் தொடங்கிய அந்த ஈடுபாடு, வெகுவிரைவில் அக் கழலுக்குரியவன் அவருடைய உள்ளத்தில் வந்து தங்குமாறு செய்துவிட்டது. அதே வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தில் தம் அனுபவத்தை அடிகளார். இங்கே பேசுகிறார்.

‘அப்பாலைக்கு அப்பால்’ என்று அடிகளார் கூறுவதில் ‘அப்பால்’ என்ற சொல் இருமுறை பயன்படுத்தப்பெறுகிறது. அப்பால் என்று கூறினாலேயே அது, சொல், கருத்து, கற்பனை என்பவற்றைத் தாண்டி நிற்பது என்ற பொருளைத் தரும். அப்பால் என்ற சொல், இட அடிப்படையில் பார்த்தால் பருப்பொருளாக இருக்கின்ற பிரபஞ்சத்திற்கு அப்பால் என்ற பொருளையும் தரும். கால அடிப்படையில் பார்த்தால் முடிவில்லாத காலத்தைக் குறிக்கும். எனவே சொல், கருத்து, கற்பனை என்பவற்றைக் கடந்து, பிரபஞ்சத்தைக் கடந்து, முடிவிலாத காலத்தையும் கடந்து இருக்கின்ற ஒரு தன்மையையே ‘அப்பாலைக்கு அப்பாலை' என்று குறிக்கின்றார். அடிகளார்.

186. 

மைப் பொலியும் கண்ணி கேள் மால் அயனோடு இந்திரனும்
எப் பிறவியும் தேட என்னையும் தன் இன் அருளால்
இப் பிறவி ஆட்கொண்டு இனிப் பிறவாமே காத்து
மெய்ப் பொருட்கண் தோற்றம் ஆய் மெய்யே நிலைபேறு ஆய்
எப் பொருட்கும் தானே ஆய் யாவைக்கும் வீடு ஆகும்
அப் பொருள் ஆம் நம் சிவனைப் பாடுதும் காண் அம்மானாய்

எப்பிறவியும் தேட-எல்லாப்பிறவிகளிலும் தேட. மெய்ப் பொருங்கண் தோற்றமாய்-அழியாப் பொருளாகிய ஆன்மா வினிடத்து விளக்கமாய். மெய்யே நிலைபேறாய்-சத்துத் தன்னேயே தமக்குநிலையான இடமாகக்கொண்டு. எப்பொருட்குந் தானேயாய் -எல்லாப் பொருளுக்கும் பற்றுகோடாய்.

தமக்கு நேர்ந்த அனுபவத்தை உற்றாராக இருக்கும் ஒருவரிடம் சொல்லி மகிழ்தல் எல்லா மக்களுக்கும் இயல்பாகும். அந்த அடிப்படையில் தோழிப் பெண்ணை நோக்கிக் கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.

இத்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றும் உடனிருந்த தோழி அதனைக் கண்ணால் காணாமல் இருந்தது வியப்பே ஆகும். எனவே 'மைப்பொலியும் கண்ணி கேள்’ என்று பாடல் தொடங்குகிறது. அதாவது மை தீட்டப் பெற்ற கண்கள் என்பது நேரடிப் பொருள். மை என்பதற்குக் குற்றம் என்ற பொருளும் உண்டு. இயல்பாகக் காணவேண்டியதைக் காணுவதே கண்ணின் தொழிலாக இருப்பவும், இத்தோழியின் கண்கள் அதைக் காணாதது, அவள் கண்ணின் குறைபாடே என்ற குறிப்புப் பொருளையும் தந்து நிற்கின்றன இச்சொற்கள்.

மால், அயன், இந்திரன் ஆகியோர் பல்வேறு பிறப்பெடுத்தும் இறைவனை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்களே தவிரக் கண்டபாடில்லை. அதாவது செல்வம், அறிவு, போகம் என்பன எத்தனையோ வகையான வடிவுகளைக் கொள்ளும். ஆதலால், எந்த வடிவெடுத்துத் தேடினாலும் அவன் கிட்டான் என்பதை அறிவுறுத்தவே எப்பிறவியும் தேட என்றார்.

'தேட' என்ற சொல்லிலும் ஒரு நயம் உண்டு. தேடுதல் என்ற தொழிலுக்குக் கர்த்தா ஒருவன் வேண்டும். அந்தக் கர்த்தா ஒன்றைத் தேடினான் என்றால், அவன் வேறு, தேடப்படும் பொருள் வேறு, தேடுதலாகிய செயல் வேறு என மூன்று உண்டு.

தேடுபவன், 'நான் தேடுகிறேன்’ என்ற முனைப்புடன் இத்தொழிலைத் தொடங்குகிறான். அன்றியும், தன்னால் தேடிக் கண்டுபிடிக்கப்படும் பொருள் அது ஆதலால் அப்பொருள் தன்னைவிட மதிப்பில் குறைந்தது என்றே அவன் கருதுகிறான். எனவே, தன்முனைப்பு, தேடப்படும் பொருளைக் குறைத்து மதிப்பிடுதல் ஆகிய இரண்டு குற்றங்கள் இந்த மூவர் மாட்டும் இருந்தமை புலப்படும்.

'தேடிக் கண்டு கொண்டேன்’ (திருமுறை:4-9-12) என்ற பாடலில் நாவரசரே திருமாலொடு நான்முகனும் காணாத ஒரு பொருளைத் தாம் தேடிக் கண்டு கொண்டதாகச் சொல்கிறாரே-அந்தப் பாடலில் வரும் தேடி என்ற சொல்லுக்கு மேலே கூறப்பட்ட இரண்டு குற்றங்களும் வாராவா என்ற வினாத் தோன்றினால், அது நியாயமானதே ஆகும்.

தேடி என்ற சொல் இரண்டு இடத்திற்கும் பொதுவாயினும் தேடுபவர்கள் பண்பு காரணமாக ஓரிடத்தில் அது குற்றமாகவும், மற்ற ஓரிடத்தில் குற்றமில்லாதது ஆகவும் அமைகின்றது.

திருமால், நான்முகன் முதலியோர் சிவனையும் தம்முள் ஒருவராகக் கருதி, அவனைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று தருக்கி நின்றனர். அவர்கள் அவனைத் தேட முற்பட்டபோது தம் தருக்குக் காரணமாக அவனைக் குறைத்தும் மதிப்பிட்டனர். எனவே, அவர்கள் தேடலில் இரண்டு குற்றங்கள் அமைந்துவிட்டன.

நாவரசர் தேடும்போது தாம் எத்துணை இழிந்தவர் என்பதை அவர் மறந்ததே இல்லை. திருமால் முதலியவர்களால் காணப்பெறாத பொருளைக் 'கண்டு கொண்டேன்’ என்று சொல்வதால் பொருளின் பெரு மதிப்பை அறிந்து கூறினார் ஆயிற்று.

எனவே நாவரசர் தேடலில் குற்றமின்மை அறிக.

'என்னையும் தன் இன்னருளால் இப்பிறவி ஆட்கொண்டு இனிப் பிறவாமே காத்து என்பது அடுத்துள்ள தொடராகும். என்னையும் என்பதிலுள்ள உம்மை, நாயிற் கடையாகிய என்னையும் என்று பொருள் தந்து நிற்கின்றது.

மேலே கூறிய மால், அயன், இந்திரன் முதலிய மூவரும் பிறவிதோறும் தேடினர். அப்படிப்பட்ட அரும்பொருள் ஆன அவன் நாயேனாகிய என்னை இந்தப் பிறவியிலேயே ஆட்கொண்டான். அப்படியானால் பல பிறவியெடுத்தும் அந்த மூவருக்கும் கிட்டாத ஒருவன் தம்மை இப்பிறவியிலேயே ஆண்டான் என்றால் அவர்களிலும் தாம் மேம்பட்டவர் என்ற தவறான எண்ணம் தோன்றிவிடக் கூடாது என்பதற்காகவே தன் இன்னருளால்' என்றார்.

இப்பிறவியிலேயே தாம் காணுமாறு அவன் வெளிப்பட்டு நின்றமைக்கு ஒரே காரணம், அவன் இன்னருளே தவிர வேறில்லை என்கிறார்.

இப்பிறவியில் அவன் வெளிப்பட்டு நின்று அருள் செய்தமையின் இரண்டு பெரும் பயன்கள் கிட்டின.முதலாவது பயன் இந்த மானுட உடம்புடன் இருக்கும்பொழுதே முழுமையான இறையனுபவம் கிட்டியமை என்க. இது உடனடிப் பயனாகும். இரண்டாவதாக, நீண்ட காலப் பயன் ஒன்றும் உண்டு. அடுத்துவரும் பிறப்புக்களில் இருந்து விடுபட்டதே நீண்டகாலப் பயன் என்க. இதனையே 'இனிப்பிறவாமே காத்து’ என்றார். இறைவனைப் பல இடங்களிலும் தேன். என்று அடிகளார் கூறுவது உடனடிப் பயன், நீண்ட காலப் பயன் என்ற இரண்டும் தருவதுபற்றியே ஆகும்.

'மெய்ப் பொருட்கண் தோற்றம்’ என்பது சத்தியத்தில் தோன்றுபவன் என்ற பொருளைத் தருவதாகும். 'மெய்யே நிலைபேறாய்' என்றதனால் அந்தச் சத்தியத்திலேயே நிலையாக உறைபவன் என்ற பொருள் பெறப்படும்.

உலகிடைக் காணப்படும் பொருள்கள் பொறி புலன்களால் காணப்படாத உள் பொருள்கள் ஆகிய அனைத்திற்கும் தானே நிலைக்களனாக உள்ளவன். “தானேயாய்" என்று கூறியமையின் அப்பொருள்களும் அவனுடைய வடிவே என்க.

அவன் சத்திய சொரூபி, சர்வ வியாபி என்ற பெயர்களின் விளக்கமாக இத்தொடர்கள் அமைந்திருத்தலைக் காணலாம்.

மெய்ம்மையில் தோன்றியும், அதிலேயே நிலைபெற்றும் என்று கூறியது ‘சத்’ என்ற வடசொல்லின் விளக்கமாகும். இவ்வனைத்தும் 'ஏகம் சத்’ என்ற வடமொழி வழக்கிற்கு விளக்க உரைபோன்று அமைந்துள்ளது.

இத்துணைப் பெரியவனாக இருப்பினும் உயிர்கள் மாட்டுக் கொண்ட கருணையினால் நம்மிடை வந்து நம்மை ஆட்கொள்பவன்; ஆதலால் அவன் உயர்வு கண்டு அஞ்ச வேண்டா, அவன் நம்முடையவன் என்ற கருத்துப்பட 'நம் சிவனை' என்றார்.

187. கை ஆர் வளை சிலம்பக் காது ஆர் குழை ஆட
மை ஆர் குழல் புரளத் தேன் பாய வண்டு ஒலிப்பச்
செய்யானை வெள் நீறு அணிந்தானைச் சேர்ந்து அறியாக்
கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை
ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானாய் 13


சேர்ந்து அறியாக் கையானை-குவித்தறியாத கையினை உடையானை ; தான்வணங்குந்தரத்தினர் பிறரின்மையால்.

அம்மானை ஆடுகின்ற பெண்கள் அம்மானைக் காய்களை மேலே தூக்கியெறிந்து மாறிமாறி இரண்டு கைகளிலும் அவை வந்து தங்கிவிடாமல் கைகளை மேலும் கீழும் அசைத்துக் காய்களை மேலே செலுத்துவர். அவ்வாறு செய்யும்போது இடையின் மேலுள்ள அவர்கள் உடம்பு இடப்புறமும் வலப்புறமும் அசையும் ஆதலின் அந்த அசைவால் நிகழும் நிகழ்ச்சிகளைக் 'கையார் வளைசிலம்ப.........' முதலிய தொடர்களில் குறிப்பிட்டார்.

'சேர்ந்தறியாக் கையானை எங்கும் செறிந்தானை’ என்ற தொடர்கள் முரண்பட்ட பொருளில் அமைந்து உள்ளன. கை என்ற சொல்லுக்கு இடம் என்ற பொருள் உண்டு. அவனுடைய அருள் இருந்தாலொழிய உயிர்கள் தம் முயற்சியால் சென்று சேர முடியாத இடத்தை உடையவன் என்று பொருள் கூறுவதே சரியாகப்படுகிறது.

உயிர்கள் சென்று அடையமுடியாத இடத்தை உடையவன் என்று கூறியவுடன், இவ்வுயிர்களின் வேறுபட்டுத் தனித்து எங்கோ இருப்பவன் என்ற எண்ணம் தோன்றுமன்றோ? அதனை மறுப்பதற்காக, உயிர்கள் சேர முடியாத இடத்தை உடையவன் என்றாலும், பிரபஞ்சம் முழுவதிலும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்துள்ளான் என்ற கருத்துத் தோன்ற எங்கும் செறிந்தானை என்றார். அதாவது எங்கும்.எல்லாவற்றிலும் செறிந்து நிற்பவனும் அதே நேரத்தில் உயிர்கள் சேர்ந்து அறியாத தனி இடத்தில் இருப்பவனும் அவன் ஒருவனே என்ற முரண்பட்ட கருத்தைதான் இத்தொடர்களில் கூறியுள்ளார். வேறாய் உடன் ஆனான்’ (திருமுறை:1;11-2) என்று காழிப் பிள்ளையாரும், தோய்ந்தும் பொருளனைத்தும் தோயாது நின்ற தொல் சுடரே' (கம்பன்.சரப-27) என்று கம்பநாடனும் கூறுவது இக்கருத்தையேயாம்.

‘கையானை’ என்பதிலுள்ள கை என்ற சொல் யாவரும் அறிந்த கை என்ற பொருளைத் தருவதோடு, ஒழுக்கம், தன்மை என்ற பொருள்களையும் தரும். ஆதலால், யாரையும் கைகளைச் சேர்த்து வணங்கி அறியாதவன் என்று பலரும் கூறும் பொருளும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே ஆகும். இவ்வாறு கூறுவது அவனினும் மேம்பட்டவன் இல்லை என்ற கருத்தைத் தெரிவிப்பதற்கே ஆகும்.

188.

ஆனை ஆய்க் கீடம் ஆய் மானிடர் ஆய்த் தேவர் ஆய்
ஏனைப் பிறவு ஆய்ப் பிறந்து இறந்து எய்த்தேனை
ஊனையும் நின்று உருக்கி என் வினையை ஒட்டு உகந்து
தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்து இனிய
கோன்அவன் போல் வந்து என்னைத் தம் தொழும்பில் கொண்டருளும்
வானவன் பூம் கழலே பாடுதும் காண் அம்மானாய் 14


கீடம்-புழு. எனைப்பிறவாய்-மற்றைய பிறவிகளாய். கன்னல்-கருப்பஞ்சாறு. கோன்-தலைவன். தொழும்பு - அடிமை. ஓட்டுகந்து -விருப்பத்துடன் போக்கி.


முதுகெலும்பு உடைய பெரிய வடிவிற்கு யானையையும், அதற்கு முரணாக எலும்பே இல்லாத புழுவையும் கூறியதோடு நில்லாமல், பரு உடலை உடைய மனிதரையும், சூக்கும வடிவுடைய தேவரையும் ஒருங்கிணைத்து உயிர் வர்க்கச் சங்கிலியில் இப்பிறப்புக்கள் அனைத்தும் ஒவ்வொரு கணுவே ஆகும் என்ற விஞ்ஞானக் கருத்தைப் போகிறபோக்கில் அடிகளார் கூறியுள்ளார்.

இந்த பல்வேறு பிறப்புக்களில் எந்தப்பிறப்பை எய்துவது என்பது அந்த உயிரின் நல்வினை தீவினைகளைப் பொறுத்ததாகும். அப்படிப் பிறந்துள்ள தமக்குக் குருவடிவில் வந்திருந்து தம் அருளார் அமுதத்தை வாரி வழங்கினார். அதனை உண்டு அறியாத, நம்மைப் போன்றவர்களுக்கு விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக நாமறிந்த தேன், பால், கன்னல்போன்ற சுவைப்பொருட்களை உவமையாகக் காட்டியுள்ளார்.

அருளார் அமுதம் அனுபவிக்கும்போது பெருஞ்சுவையுடைதாய் இருந்தது. கோனாக வந்த அவர் இந்தச் சுவையைத் தந்ததுடன் தன் அடியார்கட்டத்திலும் ஒருவராகத் தம்மைச் சேர்த்துக்கொண்டார் என்கிறார்.

189.

சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில்
இந்திரனைத் தோள் நெரித்திட்டு எச்சன் தலை அரிந்து
அந்தரமே செல்லும் அலர் கதிரோன் பல் தகர்த்துச்
சிந்தித் திசை திசையே தேவர்களை ஓட்டு உகந்த
செம் தார்ப் பொழில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதும் காண் அம்மானாய் 15

அந்தரம்-ஆகாயம். சிந்தி-சிதறி. செந்தார்-சிவந்த மாலை.

இப்பாடலில் தக்கன் வேள்வியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் கூறப்பெற்றுள்ளன.

‘செந்தார்ப் பொழில் புடைசூழ் தென்னன்' என்றது சிவந்தும் நன்கு மலர்ந்தும் உள்ள மலர்கள் சூழ்ந்த பொழில்களோடு கூடிய தென்னாட்டின் தலைவன் என்கிறார். அவன், தேவருலகின் மலராகிய மந்தாரப் பூக்களால் தொடுக்கப்பெற்ற மாலையை அணிந்துள்ளான் என்றவாறு.

190.

ஊன் ஆய் உயிர் ஆய் உணர்வு ஆய் என்னுள் கலந்து
தேன் ஆய் அமுதமும் ஆய்த் தீம் கரும்பின் கட்டியும் ஆய்
வானோர் அறியா வழி எமக்குத்தந்தருளும்
தேன் ஆர் மலர்க் கொன்றைச் சேவகனார் சீர் ஒளி சேர்
ஆனா அறிவு ஆய் அளவு இறந்த பல் உயிர்க்கும்
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண் அம்மானாய் 16

ஊன்-உடல். வானோரறியாவழி-பேரின்பவழி. ஆனா அறிவு- அமையாத பேரறிவு.

ஊன் வேறு உயிர் வேறு என்பது பலரும் அறிந்த ஒன்று. உயிருக்கு உயிராய் இறைவன் உள்ளான் என்றாலும் எல்லாவற்றிலும் அவன் கலந்து ஊடுருவி உள்ளான் என்பதால், ஊனினும் கலந்து உயிரிலும் ஊடுருவி உள்ளான் என்பது விளங்கும். எனவே 'ஊனாய், உயிராய்’ என்றார்.

கொன்றை மாலை அணிந்த சேவகன் 'வானோர் அறியா' வழி எமக்குக் காட்டினான் என்க.

எந்த வானவரும் அந்த நிலையிலிருந்து நேரே வீடுபேற்றை அடைய முடியாது. மீண்டுவந்து உலகிடைப் பிறந்து, பின்னரே உய்கதி அடைய வழிதேட வேண்டும். ஆனால், அடிகளாருக்குப் பிறவா நெறி அருளினானாதலால் 'வானோர் அறியா வழி எமக்கு தந்தருளும்’ என்றார்.

191.

சூடுவேன் பூம் கொன்றை சூடிச் சிவன் திரள் தோள்
கூடுவேன் கூடி முயங்கி மயங்கி நின்று
ஊடுவேன் செவ் வாய்க்கு உருகுவேன் உள் உருகித்
தேடுவேன் தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன்
வாடுவேன் பேர்த்தும் மலர்வேன் அனல் ஏந்தி
ஆடுவான் சேவடியே பாடுதும் காண் அம்மானாய் 17

முயங்கி-கலந்து. மயங்கி-இன்பமீதூர்ச்சியால் போகம் போதாதென்ற எண்ணம் பிறக்க மயங்கி.

இப்பாடலுக்கு தமிழ் அகத்திணை இலக்கண வழிபற்றி முழுவதுமாகப் பொருள் கூறுவர்.

ஆனால், இறைப்பிரேமை என்று முன்னர் நாம் குறித்துள்ளதை இங்கே நினைவுகூர்தல் நலம் பயக்கும். இறைப்பிரேமை கொள்பவர்கள் ஆண் பெண் என்ற வேறுபாடின்றி இறைவனையே தலைவனாகக் கொண்டு, தம்மை மறந்தும், சில சமயம் சுயநினைவு வரப்பெற்றும், பாடி ஆடுவர்.

அடிகளாரின் இப்பாடலில் இந்நாட்டு மரபைப் பின்பற்றி இறைவன்மாட்டுக் காதல் கொண்டவர் கூற்றாக இதனை அருளிச் செய்கின்றார்.

‘சூடுவேன்’ என்பது முதல் ‘கூடி முயங்கி மயங்கி நின்று’ என்பதுவரை, தம்மை மறந்த நிலையில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகளாகும். இப்படி இரண்டறக் கலந்த நிலையிலும் ஒரோவழி தற்போதம் தலைதூக்குகின்றது. அது தலை தூக்கியவுடன், தான் - அவன் என்ற வேறுபாடு தெரியத் தொடங்குகின்றது. எவ்வளவு முயங்கியும், திரள்தோள் சேர்ந்தும் முற்றிலும் தான் அதனுள் கலக்க முடியாமையின், தான் - அவன் என்ற வேறுபாடு தோன்ற, ஊடல் தோன்றுகிறது.

முற்றிலுமாக அவன் (தலைவன்) விருப்பப்படியே விட்டிருந்தால் 'தன்னை மறந்து தன் நாமம் கெட்டு, தலைவன் தாளே தலைப்பட்டு’ (திருமுறை:6-15-7) இருப்பாள். இவ்வாறு இருக்கும் நிலையில், தான் என்ற பொருளே இன்மையின், ஊடலுக்கு அங்கு இடமே இல்லை. இறைப் பிரேமையின் முழு நிலையாகும் அது.

‘ஊடுவேன்’ என்று அடிகளார் கூறுவதால் இரண்டற்ற நிலை நீங்கி இரண்டான நிலை தோன்ற ஊடல் தோன்றிற்று. ஊடலைத் தணிக்க வேண்டியவன் வராவழியும் தலைவியின் உள்ளத்தில், அவன் வந்தால் என்ன செய்யவேண்டும் என்ற கற்பனை விரிகின்றது. அதனையே 'செவ்வாய்க்கு உருகுவேன், உள்ளுருகித் தேடுவேன், தேடிச் சிவன் கழலே சிந்திப்பேன்’ என்று பாடுகின்றார்.

ஊடுதலில் இரண்டற்ற நிலை மறைந்து விட்டமையின் செவ்வாய்க்கு உருகத் தொடங்கி, சிவன் கழலே சிந்தித்து மலர்கின்ற நிலை ஏற்படுகிறது.

‘முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்' என்ற நாவரசர் பெருமானின் பாடலின் (திருமுறை: 6-24-7) பின்னிரண்டு அடிகள் இறைப்பிரேமையின் இரண்டற்ற நிலையை விளக்குவதாகும். அந்த நிலை கைகூடுவதற்கு முன்னர், ஒரு சில நேரம் இரண்டற்ற நிலையும், ஒரு சில நேரம் இரண்டாக உள்ள நிலையும் மாறிமாறித் தோன்றுதலின் அந்த நிலையை விளக்கும் பாடலாகும் இது.

192.
கிளி வந்த இன் மொழியாள் கேழ் கிளரும் பாதியனை
வெளி வந்த மால் அயனும் காண்பு அரிய வித்தகனைத்
தெளி வந்த தேறலைச் சீர் ஆர் பெருந்துறையில்
எளிவந்து இருந்து இரங்கி எண்அரிய இன் அருளால்
ஒளி வந்து என் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ
அளி வந்த அந்தணனைப் பாடுதும் காண் அம்மானாய் 18

கேழ்-நிறம். தேறல்-தேன். அளி-கருணை.

கிளிபோன்ற மொழி பேசுபவளும், கிளியின் நிறத்தை ஒத்தவளுமாகிய உமையை தன் உடலின் ஒரு பாதியாக உடையவனும், தேடிக் காண்போமாக என்று கூறிக் கொண்டு புறப்பட்ட மாலுக்கும் அயனுக்கும் ஒளித்து நின்றவனும், தெளிந்த தேன்போன்ற இனியவனும் ஆகிய ஒருவனைப் பாடுதுங்காண் என முடிக்க.

இதுவரை இறைவனுடைய புகழைப் பேசிய அடிகளார், இறப்பு உயர்ந்த அந்தப் பரம்பொருள் திருப்பெருந்துறையில் மானிட வடிவு தாங்கி யாவரும் காண எளிவந்து தமக்கு இன்னருள் புரிந்து என்கிறார். அந்த இன்னருள் இரு வகைகளில் அடிகளாருக்கு அருள் செய்தது.

முதலாவது, கற்பனைக்கும் எட்டாத இறையனுபவத்தில் முழுவதுமாக மூழ்கி, தம்மை மறந்த நிலையில், அந்த அனுபவத்தில் ஒன்றிப்போகுமாறு செய்தமை ஆகும்.

இரண்டாவது, ஒளி வடிவான அவன் அந்த ஒளிவடிவோடே உள்ளத்தில் புகுந்தான். அங்கேயே ஒளி வடிவுடன் நின்றுவிட்டான். அதன் பயனாக உள்ளே உள்ள அஞ்ஞானமாகிய இருள் அகன்றது; மெய்ஞ்ஞானம் பிறந்தது.

இவை இரண்டும் நிகழ்ந்தது தம் தகுதியால் அன்று; தம் எளிமைக்கு இரங்கிக் கருணைகொண்டு அவன் அளித்ததனாலேயே என்கிறார் அடிகளார்.

193.
முன்னானை மூவர்க்கும் முற்றும் ஆய் முற்றுக்கும்
பின்னனைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாது இயலும் பாதியனைத்
தென் ஆனைக்காவானைத் தென் பாண்டி நாட்டானை
என்னானை என் அப்பன் என்பார்கட்கு இன் அமுதை
அன்னானை அம்மானைப் பாடுதும் காண் அம்மானாய் 19

முற்றுக்கும்-அனைத்துப்பொருள்கட்கும். பிஞ்ஞகன்-பிஞ்ளும் என்று சொல்லப்படும் ஒருவகைச் சடையை உடையவன்.

பிரமன், மால், உருத்திரன் என்ற ஆதி தேவர்கள் மூவர்க்கும் அப்பாற்பட்டு நிற்கும் அநாதி தேவனாய் உள்ளவன். அவர்களுக்கு அப்பாற்பட்டு நிற்பவன் என்பதை 'முற்றுமாய்' என்றார். அவர்களும் சர்வ சங்கார காலத்தில் அவனுள் அடங்குவர் ஆதலின் 'மூவர்க்கும் முற்றுமாய்’ என்றார்.

பிரபஞ்சத்தில் தோற்றம், இருப்பு, மறைவு என்ற மூன்றுக்கும் கட்டுப்பட்டு உள்ள எல்லாப் பொருள்களும் அழிந்த பின்னரும், தான் ஒருவனாக நிலைபெறுதலின் 'முற்றுக்கும் பின்னானை' என்றார்.

பிரபஞ்சத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய தொழில்களைச் செய்யும் ஆதி தேவர்கள் மூவரும் ஏனையோரிலும் மிக உயர்ந்து நிற்பவர்கள் ஆவர். அப்படி உயர்ந்து நிற்கின்ற அம்மூவருக்குமே தோற்றம், இருப்பு, மறைவு என்பவை உண்டாகலின் அவர்கள் தோன்றுவதற்கு முன்னர் இருந்தவன் என்பதை 'முன்னானை’ என்ற சொல்லால் குறிப்பிட்டார். அவர்கள் மறைந்த பின்னரும் அவன் ஒருவனே இருத்தலின் 'பின்னானை’ என்றார். மும்மூர்த்திகளும் சர்வசங்கார காலத்தில் அடைவதற்குரிய இடமாக இருத்தலின் 'முற்றுமாய்’ என்றார்.

அவனைத் தவிர ஏனையோருக்கெல்லாம் உயர்ந்து நிற்றலின் மூவரை முதலில் கூறினார். அடுத்துப் பிரபஞ்சத்தை கூறினார்.

‘பிஞ்ஞகன்’ என்பது ‘பிஞ்ஞம்’ என்று சொல்லப்படும் ஒரு வகைச் சடாபாரத்தை உடையவன் என்ற பொருளைத் தரும்.

194.
பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான் பெருந்துறையான்
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன் அடியார்
குற்றங்கள் நீக்கிக் குணம் கொண்டு கோதாட்டிச்
சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான் தொல் புகழே
பற்றி இப் பாசத்தைப் பற்று அற நாம் பற்றுவான்
பற்றிய பேர் ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய் 20

பெற்றி-தன்மை. பிறர்-அன்பரல்லாத பிறர். கோதாட்டி-சீராட்டி. பற்றி இப்பாசத்தைப் பற்றற-அநாதியே பற்றிநிற்கின்ற பாசத்தில் பற்றற்றுப்போகும்படி. நாம் பற்றுவான் பற்றிய பேரானந்தம்-நாம் சிவத்தைப் பற்றுவதற்காக நம்மை வந்து பற்றிய சிவானந்தம்.

இப்பாடலின் முதலிரண்டு அடிகள், அடிகளார் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சியாகும். பாண்டியன் உள்ளிட்ட அனைவரும் குதிரைச் சேவகனாக வந்தவன், வந்த கூட்டத்தின் தலைவன் என்று கருதினார்களே தவிர, அவன் இன்னான் என்று அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அக்கூட்டத்திலிருந்த அடிகளார்மட்டும் குதிரைச் சேவகனாக வந்தவன் ஆலவாய்ச் சொக்கன் என்பதை அறிந்துகொண்டார்.

தாம் செய்த குற்றங்களையெல்லாம் மன்னித்து, அவன் மாட்டுக் கொண்ட உள்ளன்பு என்ற குணத்தைமட்டும் ஏற்றுக்கொண்டு அருள்செய்ய வந்துள்ளான் என்பதை உணர்கின்றார் அடிகளார். அந்த அருள் மற்று ஒன்றையும் செய்தது.

அமைச்சராக இருந்த பெருமகனார்க்குச் சுற்றம் என்ற பெயரில் நூற்றுக் கணக்கானவர் இருந்திருப்பர் என்பதில் ஐயமில்லை. இந்த வாழ்க்கையை வெறுத்து அடிகளார் புறப்படுவதாக இருந்தால் இந்தச் சுற்றத்தார் அவரை விடப் போவதில்லை. அதிகாரம் உடையார் என்ற காரணத்திற்காக, அவரைச் சுற்றிய சுற்றமாகும் இது. எனவே, அவர் அதிகாரத்தை விட்டுப் போகிறார் என்றால், அச்சுற்றத்தார் குறுக்கே நின்று அவர் போக்கைத் தடை செய்திருப்பர் என்பதிலும் ஐயமில்லை. எனவேதான், 'சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான்’ என்று பாடுகின்றார். இது உண்மையில் நிகழ்ந்திருக்கும் என்பதை சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள், பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும் (திருவா: 4-48) என்று அடிகளார் முன்னர்க் குறிப்பிட்டுள்ளமையின் அறியலாம்.

இயல்பாகவே உயிரைப் பற்றியுள்ள பற்றை அறுக்க வேண்டுமாயின் அதற்குரிய ஒரே வழி இறைவன் திருவடிகளைப் பற்றுவதே ஆகும்.

‘பாசத்தைப் பற்று அற’ என்று கூறியது நோக்கத்தக்கது. 'பற்றற' என்பது வேரோடு களைய என்ற பொருளைத் தரும். அவன் திருவடிகளைப் பற்றி நின்றாலொழிய நம்முடைய அகப், புறப் பற்றுக்களை வேரொடு களைதல் இயலாத காரியம்.

அவனுடைய திருவடிகளைப் பற்றிக்கொண்டால் நம்மில் நிறைந்திருக்கின்ற பற்று முற்றிலுமாக அறுபடும் எனறார்.

மனத்தின்கண் நிறைந்துள்ள அகப், புறப் பற்றுக்கள், முற்றிலுமாக அழிந்துவிட்டால் அவை இருந்த இடம் காலியாக இருக்குமே? பற்றறுத்தல் என்பது எதிர்மறைச் செயலாகும். எதிர்மறைச் செயல் என்றும் நிறைவை உண்டாக்காது. எனவே, இந்த நுணுக்கத்தை அறிந்த அடிகளார் பற்று அறுபட்டவுடன், அந்த இடம் காலியாக இல்லை, அந்த இடத்தில் பேரானந்தம் வந்து குடிகொண்டு விட்டது என்ற மிக அற்புதமான நுண்ணிய கருத்தைப் ‘பற்றிய பேரானந்தம்’ என்று பேசுகிறார்.

இக்கருத்து முழுவதும்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

(திருக்குறள்-350)

என்ற குறளின் முழு விளக்கமாக அமைத்திருத்தலைக் காணலாம்.