திருவாசகம் சில சிந்தனைகள்-2/பின்னுரை

விக்கிமூலம் இலிருந்து



பின்னுரை


திருவாசகத்தின் தொடக்கத்தில் உள்ள நான்கு அகவல்களும் பழைய மரபுபற்றி வரும் அகவல் பாக்களேயாகும். இதிலும்கூட ஒரு புதுமையைக் காணமுடிகிறது. அகவற்பாக்கள் எட்டாம் நூற்றாண்டில் ஏறத்தாழ வழக்கொழிந்துவிட்டன என்றே கூறல் வேண்டும். அதிலும், பக்தி இயக்கத்தில் பெருவீறுடன் தோன்றிய பாடல்கள் இசைப் பாக்களாகவோ விருத்தப் பாக்களாகவோ இருந்தன. ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை உள்ள காலப்பகுதியில் மூவர் முதலிகள் தேவாரங்கள்தவிர ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களும் தோன்றின. இவை அனைத்துமே இசைப் பா, விருத்தப் பாக்களால் ஆகியவை என்பதை நினைவிற் கொள்வது நலம். கட்டளைக் கலித்துறை போன்ற விருத்தப் பாக்கள் காரைக்கால் அம்மையார் காலத்திலேயே தோன்றிவிட்டன. ஆனால், இதே விருத்தப்பாக்கள் நான்கு முதல்...எட்டுவரை உள்ள சீர்களைக் கொண்டே அமைந்தன. ஆனால், இசைப்பாக்களாக வடிவெடுக்கும் பொழுது முதலடியில் ஐந்து சீர், இரண்டாம் அடியில் நான்கு சீர் என்ற முறையில் பல்வேறு விகற்பங்களுடன் தோன்றலாயின. இவற்றிற்கு ஒரே காரணம் இந்த இசைப்பாக்கள் தாளத்தோடு பாடப்பெற்றதால் அந்தத் தாளக்கட்டுக்கேற்ப முதலடி இரண்டாம் அடிகளில் சீர்களின் எண்ணிக்கை மாறி வரலாயின. இந்த விகற்பங்களைத் திருஞானசம்பந்தர், நம்மாழ்வார் போன்ற பெருமக்கள் பாடிய பாடல்களில் நன்கு காணலாம்.

மணிவாசக அடிகளார் காலத்தில் இசைப்பாக்களும் செல்வாக்கை இழந்துவிட்டன. முன்னரே செல்வாக்கை இழந்த ஆசிரியப்பாக்களுக்குப் புத்துயிர் கொடுத்து நான்கு அகவல்களைப் பாடும் புதுமையை மேற்கொண்டவர் அடிகளார்.

ஆனால், அவரேகூடப் பக்தி உணர்ச்சியை- அனுபவ வெளிப்பாட்டை வெளியிட ஆசிரியப்பாக்கள் இடம் தரவில்லை என்பதை உணர்ந்தார்போலும். அதனாலேயே அகவல் பாடல்களுக்கு அதிக இடம் தராமல் விருத்தப் பாக்களைக் கையாளுகிறார்.

விருத்தப் பாக்களில் வெளியிடும் உணர்ச்சியை ஆசிரியப்பாக்களில் கொண்டுவருதல் கடினம். அடிகளாரின் சதகத்தின் முதல் பாடலாகிய 'மெய்தான் அரும்பி’ என்று தொடங்கும் பாடலை ஆசிரியப்பாவாக மாற்றிப் பாடிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். முன்னர் உள்ள நான்கு அகவல்களில் எந்தப் பகுதியும் ‘மெய்தான் அரும்பி’ என்ற பாடலுக்கு இணையான உணர்ச்சி வெளிப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பது தெரியவரும்.

திருவாசகம் இன்று பதிக்கப்பெற்றுள்ள நிலையில் அகவற்பாக்கள் நான்கும் முடிந்த நிலையில் திருச்சதகம் வைக்கப்பெற்றுள்ளது. சதகம் நூறு முடிந்தவுடன் நீத்தல் விண்ணப்பம் இருப்பதற்குக் காரணம் அது ஐம்பது பாடல்களுடன் இருப்பதுதான் என்று இக்காலத்தில் பலரும் உரை கூறியுள்ளனர். அந்த வைப்புமுறைக்குக் காரணம் நூறு, ஐம்பது, இருபது, பத்துப்பாட்டுக்கள் என்ற முறையில் பதிகங்கள் அமைந்திருப்பதால் இவ்வாறு வைக்கப்பெற்றுள்ளன என்று கூறுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை எதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

திருப்பெருந்துறை அனுபவத்திலிருந்து மீண்ட அடிகளாருக்குப் பெரும் அதிர்ச்சியும் அச்சமும் தோன்றின. தம்பால் உள்ள ஏதோ ஒரு குறை காரணமாகத் தம்மை உலகிடை விட்டுவிட்டுப் போய்விட்டார் குருநாதர் என்ற ஓர் அச்சம் வலுவாகப் பீடித்து நின்றது. மெள்ள மெள்ள அதிர்ச்சி, அச்சம் என்ற இவை இரண்டும் குறையவே, அந்த அனுபவத்தை மீண்டும் நினைந்து, மறுபடியும் அதனுள் புகுந்து, அனுபவித்துவிட்டு, வெளிவந்து, உடனே அதனைப் படம்பிடித்துப் பாடும் பாடல்கள் திருவாசகத்தில் பெரும்பகுதியாய் அமைந்துள்ளன.

இந்த அடிப்படையில் சிந்திக்கும் என் மனத்தில் தோன்றும் முடிவின்படி பார்த்தால் திருச்சதகத்துக்கு முன்னர் நீத்தல் விண்ணப்பம் இடம் பெற்றிருக்கவேண்டும். இவ்விண்ணப்பம் முடியும் தறுவாயில் எழும் இறுதிப் பாடல்களில், ‘என்னை விட்டுவிடாதே’ என்று அஞ்சி வேண்டுவதற்குப் பதிலாக, ஒருவகை மனநிறைவு ஏற்பட்டு இறைவனையே எள்ளி நகையாடும் துணிவு பிறக்கின்றது. ‘என்னைக் கைவிட்டால் உன் மானத்தை வாங்கி விடுவேன்’ என்ற முறையில் அப்பாடல்கள் அமைந்து உள்ளன.

இந்த மனவளர்ச்சிக்குப் பிறகு மனத்தில் ஏற்பட்ட தென்பு காரணமாக ஒரு அமைதி நிலையை அடைகின்றார், அடிகளார். அந்த அமைதியில் பழைய அனுபவம் மெள்ள உள் நுழைகின்றது. வந்த அனுபவத்தை ஓடி விடாமல் பிடித்துக்கொள்ள வேண்டுமேயானால் அதற்கு ஒரே வழி திருவடிகளை நோக்கிக் கூப்பிய கைகளைப் பிரிக்காமல் இருப்பதுதான் என்ற எண்ணம் வர, 'கைதான் நெகிழவிடேன்’ என்று பாடத் தொடங்குகிறார்.

சதகம் முழுவதும் பத்துப் பத்துப் பாடல்களாக அமைந்திருப்பினும் ஒவ்வொரு பத்திலும் உணர்ச்சியின் தோற்றம், உச்ச நிலையை நோக்கிச் செல்லுதல், தணிதல் ஆகிய மூன்று நிலைகளும் இடம் பெற்றுள்ளன என்பதைக் கூர்ந்து நோக்கினால், காணமுடியும். இவ்வாறு கூறுவதால் இந்த அளவீடு முற்றிலும் சரியானது, அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கருத்தில் இதைச் சொல்லவில்லை.

ஆயிரம் ஆண்டுகளாக ஓலைச்சுவடியிலும் புத்தகத்திலும் அமைந்துள்ள முறையை, மாற்றி வைத்துக் கொண்டால், அடிகளாரின் வாழ்வில் நிகழ்ந்த இறையனுபவ வளர்ச்சியை இந்த அமைப்பு முறை பிரதிபலிக்குமோ என்ற நினைவில் என் சிந்தனைப் போக்கிற்கு இடம் கொடுத்துள்ளேன்.

முதலில் நீத்தல் விண்ணப்பமும் அடுத்துத் திருச்சதகமும் இடம் பெறுவது முறை என்ற சிந்தனைக்குப் பிறகு மிகப் பெரிய வினாவாக நிற்பது முன்னர்ப் பதிப்பிக்கப்பெற்றுள்ள நான்கு அகவல்களைப் பற்றியதே ஆகும். இந்த அகவல்கள் எப்போது பாடப்பெற்றன என்ற வினாவிற்கு விடை காண்டது கடினம். நான்கு அகவல்களிலும் சிவபுராணம் தவிர ஏனைய மூன்றும் ஒரு தனித் தொகுதியாக உள்ளன. இறைவனுடைய பெருமை பற்றியும் உயிர்களின் சிறுமைபற்றியும் இந்த உயிர்கள்மாட்டு இறைவன் கொண்ட கருணைபற்றியும் அமைதியான மனத்துடன் நீண்ட காலம் அடிகளார் சிந்தித்திருக்க வேண்டும். ஒரு தொடர்பும் ஒரு முறையும் இல்லாமல் முன்னும் பின்னுமாய் மனத்தில் தோன்றிய எண்ண ஓட்டங்கள் நீண்டகாலம் நிலைபெற்ற பின்னர், அவை, சித்தத்துள்ளே புகுந்து ஊறிய பின்னர், ஒரு வடிவைப் பெற்றுள்ளன. அந்த வடிவு பெற்ற நிலைதான் கீர்த்தித் திருஅகவல், திருஅண்டப்பகுதி, போற்றித் திருஅகவல் ஆகியவையாம். இவைகளிலும், நடுவில் உள்ள அண்டப்பகுதி, புறநுநிலையில் நின்று (objective outlook) இறைவனைப் பற்றி அடிகளார் கொண்ட சிந்தனையின் முடிவாகும். விரிந்து செல்லும் அண்டமும் சிறியது என்று சொல்லும்படி பெரியதாய் நிற்கும் ஒருவன், சிற்றுயிர்களாகிய பறவை, விலங்குகள், மனிதர்கள் ஆகிய மூவகை இனத்திற்கும் வேறுபாடின்றி அருள்செய்வதைக் கீர்த்தித் திருஅகவலும், போற்றித்திருஅகவலும் பாடிச் செல்கின்றன.

இந்த மூன்று அகவல்களும் ஒரு புறம் நிற்க, சிவபுராணம் ஒரு மாபெரும் தத்துவத்தைச் சொற்களால் கூற முயலும் முயற்சியில் தொடங்குகிறது. அதைவிடச் சிறப்பு என்ன என்றால், அப்பாடலில் 'சிவபுராணம் தன்னைச் சிந்தை மகிழ, முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்' (திருவாச 1-1920) என்று பேசுகிறார் அடிகளார். இது ஆழ்ந்து சிந்திப்பதற்கு உரியது.

சிவபுராணத்திற்கு விரிவாக எழுதப்பெற்ற சிந்தனைப் பகுதியில் (திருவாசகம்-சில சிந்தனைகள்-Pt1) பாடல் செல்லும் முறையில் உரை கூறப் பெற்றுள்ளது. அதற்கு முற்றிலும் மாறாகத்தோன்றிய புதிய சிந்தனை, இங்கு இடம் பெறுகிறது. புதிய சிந்தனைகள் தோன்றும்பொழுது பழையவற்றிற்கு அவை மாறுபட்டவையாகவும் இருக்கலாம்.

திருஞானசம்பந்தருக்கு இரண்டு நூற்றாண்டுகள் கழித்துவரும் அடிகளார், திருவாசகம் முழுவதிலும் தம்மை நாயினும் கடையேன் என்று கூறிக்கொள்ளும் அடிகளார், ‘முந்தை வினைமுழுதும் ஓயச் சிவபுராணம்தன்னை உரைப்பன்’ என்று கூறுவது மிகப் புதுமையானது. இந்த ஒர் இடத்தைத் தவிர வேறு எங்கும் இக்கருத்து இடம் பெறவில்லை. இனி, இந்தத் தொடருக்குப் பொருள் செய்யும்பொழுது முன்னும் பின்னுமாக உள்ள சொற்களையும் தொடர்களையும் பின்வருமாறு கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளுதல் பயனுடையதாக இருக்கும்.

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், மெய்யே. உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடுற்றேன்(1-31.32) சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழ முந்தை வினை முழுதும் ஓய (1,17-20), கண்ணுதலான் தன் கருணை எய்தி வந்து (1-21) கண் காட்ட சிவபுராணம் தன்னை (1.19) உரைப்பன் யான் (1,20).

இவ்வாறு கொண்டுகூட்டுச் செய்ததன் பொருள்: ‘ஓரறிவு உடைய புல்முதல் ஆறறிவுடைய மக்கள் உள்ளிட்ட எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தவனாகிய யான், இப்பொழுது சிவபுராணத்தைச் சொல்கின்றேன் என்று நினைக்க வேண்டா. உண்மை என்னவெனில் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்து, இப்பிறவியை அடைந்து பொன்னடிகள் கண்டு வீடுற்ற என் சிந்தையுள், சிவன் அவன் வந்து புகுந்தான்; அதன் விளைவாக முந்தைவினை முழுதும் ஓய்ந்தது; அதன் பயனாக கவலைகளும் துன்பங்களும் நிறைந்திருந்த என் சிந்தை ஆனந்தத்தால் நிறைந்தது. அந்நிலையில் கண்ணுதலான் தன் கருணை, எய்தி வந்து வழி காட்ட, சிவபுராணம்தன்னை உரைப்பன் யான்’ என வரும்.

இவ்வாறு கூறுவதால், சிவபுராணம் என்ற பகுதியை, தம்முடைய பரந்த அனுபவம், அறிவு, கல்வி, பாடல் இயற்றும் ஆற்றல் என்பவற்றின் துணைகொண்டு தாம் பாடவில்லை என்பதை நுணுக்கமாகப் பெறவைக்கிறார் அடிகளார்.

எனவே, சிந்தையுள் அவன் நின்றதாலும், அவன் அருளைத் துணையாகக் கொண்டு அவன் திருவடிகளை வணங்கியதாலும், முந்தை வினைகள் முழுவதும் ஒய்ந்ததாலும், சிந்தையில் ஆனந்தம் நிரம்பியதாலும் அவன் கருணை வழிகாட்டியதாலும் சிவபுராணம் வெளிப்பட்டது. ‘உரைப்பன் யான் என்று தன்மை ஒருமை வினைமுற்றால் அடிகளார் கூறியிருப்பினும் மேலே கூறிய காரணங்களால் இந்த உரைப்பன் யான்’ என்பதற்கு அடிகளாரை முதன்மையாகக் கொள்ள வேண்டிய தேவையில்லை. உரைத்தலாகிய செயல் நிகழ, அடிகளாரின் திருவாய் பயன்பட்டது என்பது உண்மைதான். அந்த அளவில் ‘உரைப்பன் யான்’ என்பதின் பொருள் முடிந்துவிடுகிறது. அதுதவிர, சிவபுராணத்திற்கும் அடிகளாருக்கும் வேறு தொடர்பைக் கற்பிக்கத் தேவையில்லை. சிந்தையுள் ஒருவன் நிரம்பிய பிறகு உரைப்பன் என்ற சொல்லுக்கு நான் என்ற எழுவாயைப் பயன்படுத்தத் தேவையில்லை. 'சிந்தையுள் நின்றவன் என் வாய்மூலம் உரைத்தான்’ என்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.

திரு இலம்பையங் கோட்டூர்த் தேவாரத்தில் ‘எனதுரை தனதுரையாக' (திருமுறை 76-6) என்று ஆளுடைய பிள்ளையார் கூறியிருப்பதைக் காண்பது மேலே கூறிய கருத்துக்கு அரண் செய்வதாகும். சிவபுராணம் என்ற பெயருடன் வெளிப்பட்டுள்ள இப்பாடலைப் பொருள் உணர்ந்து படிப்பவர் சிவபுரத்துச் சென்று தங்கியிருப்பர் என்ற முறையில் இந்தப் பகுதி முடிகின்றது. ஆதலின் மேலே கூறிய பொருள் வலுவுடையதாக ஆகின்றது.

இவ்வாறன்றி, ‘உரைப்பன் யான்’ என்பதற்கு அடிகளாரை எழுவாயாக ஆக்கினால், தாம் பாடிய சிவபுராணத்தைப் படிப்பவர் சிவபுரத்தில் சென்று தங்கி இருப்பர் என்று பொருள் கூறிட நேரிடும். அடிகளாரின் வாழ்க்கைமுறை, திருவாசக அமைப்புமுறை ஆகியவற்றை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள்கூட 'யான் உரைத்த சிவபுராணத்தைப் படிப்பவர் சிவபுரத்தில் சென்று தங்கியிருப்பர்’ என்று பொருள் கொள்ளும்படியாக அடிகளார் பாடியிருக்க முடியாது என்பதை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.

ஆளுடைய பிள்ளையார் 'எனதுரை தனதுரை' என்று கூறிவிட்ட காரணத்தால்தான், அவர் பாடல்களைப் படிப்பவர்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே (2: 85-11) பாவம் பறையும்'(1: 52-11) 'பிள்ளையினோடு உள்ளம் நினைவாயினவே வரம்பெறுவர் ஐயுற வேண்டா'(2: 48-2) என்று துணிவோடு பாட முடிந்தது.

இதே முறையைப் பின்பற்றி, பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் சிவபுரத்தில் சென்று தங்குவர் என்று அடிகளார் கூறியதைப் பார்த்தவுடன் ஆளுடைய பிள்ளையாரின் எனதுரை தனதுரை போல ஒரு பகுதி இந்தச் சிவபுராணத்தினுள் எங்கோ ஓரிடத்தில் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொள்ள முடியும். எந்த நிலையிலும், தாம் பாடிய பாட்டைப் பாடுபவர் இந்நிலை அடைவர் என்று அடிகளார் கூறியிருக்கமாட்டார். ஆதலின் 'உரைப்பன் யான்' என்பதற்குப் புதிய முறையில் பொருள் காணப்பெற்றது.

மனிதர்கள் பாடிய பாட்டை, ஏனையோர் பொருள் அறிந்து அல்லது பொருள் தெரிந்து மட்டுமே கூடப் பாட முடியும். ஆனால், இறைவனே கூறிய பாடல் ஆதலின் சொல்லிய பாட்டின் பொருள் தெரிந்து அல்லது அறிந்து என்று கூறாமல் 'பொருள் உணர்ந்து சொல்லுவார்’ என்று கூறப்பெற்றுள்ளது. இங்கு வரும் 'உணர்ந்து’ என்ற சொல்லே, மேலே உள்ள பாடற்பகுதி சிவனுரை ஆகும் என்பதை நுணுக்கமாகத் தெரிவிக்கிறது.

இவ்வாறு கூறியபிறகு, சிவபுராணத்தை அடிகளார் திருவாசகத்தின் முதல் பாடலாகப் பாடினார் என்று கூறுவது சரியாகத் தோன்றவில்லை. திருவாசக நூலில் இப்பகுதி முதற்பாடலாக இடம் பெற்றிருப்பினும் அடிகளாரின் வாழ்க்கையில் மிகப் பிற்காலத்தில் பாடப் பெற்றிருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. இங்கே ஓர் ஐயம் எழ இடமுண்டு. விருத்தப்பாக்களால் ஆகிய பகுதிகளைப் பாடிய பிறகு மறுபடியும் சிவபுராணத்தை அகவலில் பாட வேண்டிய சூழ்நிலை என்ன? இங்குக் கூறப்பெற்ற கருத்துக்களை விருத்தப்பாக்களில் கூறியிருக்க முடியாதா என்ற வினாத் தோன்றினால், விடை கூறல் ஓரளவு கடினமேயாகும். உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்தும் விருத்தப்பாடல்களில் தலையாய இடம் பெறுவது உணர்ச்சிப் பெருக்கே தவிர, செய்திகள் அல்ல. செய்திகளை விரைவாக அடுத்தடுத்து அடுக்கிக்கொண்டே செல்லும் திறம் அகவலுக்கு உண்டே தவிர உணர்ச்சிப் பாடல்களுக்கு, விருத்தப் பாடல்களுக்கு இல்லை.

இறையனுபவத்தில் துளையமாடிய அடிகளார், கடைசிக் காலத்தில் ஒரு முடிவுரை போலவும், ஓரளவு உருக்கமாகவும், உணர்ச்சிகளுக்கு அதிக இடம் கொடாமலும், செய்திகளை அடுக்கிச் சொல்லும் முறையில் ஒரு பாடலைப் பாட நினைத்திருந்தார்போலும். மனித சமுதாயத்திற்கு ஒரே ஒரு பாடலை, அவர்கள் நம்பிக்கையை வளர்க்கும் முறையில், விட்டுச்செல்ல வேண்டும் என்று நினைத்த அடிகளார், இறைவனை நோக்கி 'என் கருத்து முடியும் வண்ணம் முன் நின்று’ (திருவாச:378) அருளவேண்டும் என்று பலமுறை வேண்டிக் கொண்டிருத்தல் வேண்டும். அதன் பயனாக, இறைவன் உயிர்கள்மாட்டுக் கொண்ட பரம கருணையினாலும் அடிகளார்மாட்டுக் கொண்ட கருணையினாலும் தானே அவருள் புகுந்து, சிவபுராணத்தை அருளிச் செய்தான் என்று நினைப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. ஒளிவடிவாக உள்ள இறைவன் தன் ஒலி சொரூபத்தை உயிர்கள் உணர்தல் நலம் என்று எண்ணினான் போலும், அதனாலேயே 'நமச்சிவாய’ என்று தொடங்கினான். சொல்லிய பாட்டின் பொருளை உணர்ந்து சொல்லும் பொழுது, அவர்களையும் அறியாமல் சொல்பவர்களின் மனத்தில் ஆணவம் புகுந்து விடும். அதனைப் போக்கவே பாடலை முடிக்கின்றபொழுது ‘பணிந்து’ என்ற சொல்லை இறுதியாக வைக்கின்றான். ஒலிவடிவினனாகிய இறைவனைப் பணிந்து வழிபட்டால் சிவபுரத்தினுள் புகமுடியும் என்பதே இப்பாடலின், திரண்ட கருத்தாகும்.

சிவபுராணத்தின் இந்த அருமைப்பாட்டை அறிந்திருந்த நம் முன்னோர் நூலின் முதற்பாடலாக இதனை வைத்தனர். ஏனைய மூன்றும் அகவலாக இருக்கின்ற காரணத்தால் இதன் பின்னர்ச் சேர்த்தனர் என்று நினைப்பதில் தவறில்லை.

திருவாசகம் போன்ற அருட்பாடல்கள், இறையனுபவத்தில் மூழ்கியவர்கள், அவ்வப்பொழுது அதிலிருந்து வெளிப்பட்டு வந்து மூழ்கியிருந்த நிலையை நினைக்கும் பொழுது தோன்றியவையாகும்.

ஒரு காப்பியப் புலவனைப்போல ஒரு திட்டம் தீட்டிக் கொண்டு, 'முதலில் இதைப் பாடவேண்டும், அடுத்து இன்னது வரவேண்டும்’ என்ற முறையில் அருட்பாடல்கள் தோன்றவில்லை. முதல் பாடல் தொடங்கிவிட்டால் பத்து அல்லது இருபது பாடல்களை ஒருசேரப் பாடிவிட்டுத்தான் முடித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. பத்து என்ற அளவுவரை சென்று முடிப்பது தேவாரத்திற்கு உகந்ததாக இருக்கலாம். இறைவனை முன்னிறுத்தி, தம் எல்லையற்ற பக்தியை இடைநிறுத்தி, தாம் மூன்றாவதாக நின்றுகொண்டு பாடிய பாடல்களாகும் தேவாரங்கள். அப்பாடல்களைப் பாடியவர்கள், பாடலுக்குள் அமிழ்ந்து போகவில்லை. அவர்கள் தனியே நிற்பதால் பத்து என்ற திட்டம் பொருந்திவருவதாயிற்று.

திருவாசகம் இந்த வகையைச் சேர்ந்ததன்று. எல்லாப் பாடல்களிலும் பாடியவர் பாடலுக்குள் அமிழ்ந்து விடுகிறார்.

பாடியவரைத் தனியே பிரித்து, பாடல்களைத் தனியே பிரித்துப் பார்ப்பது ஒரு முறை. இவ்விதம் பார்ப்பதால் நம்முடைய கவனத்தை முழுவதுமாகப் பாடலில்மட்டும் செலுத்த முடியும். அதன் பயனாக, பாடலுக்குப் பதவுரை, பொழிப்புரை முதலியன காணமுடியும்.

இவ்வாறு செய்வதால் அப்பாடலின் சிறப்பையும் ஆழத்தையும்மட்டும் அறியலாமேதவிர, அதனை இயற்றியவரின் மனநிலையை, அனுபவத்தை அறிய முடியாமல் போய்விடுகிறது.

இம்முறையில் பாடல்களைப் பார்க்கும்போது தனித்தனிப் பாடலாகத்தான் எடுத்து அதனைச் சிந்திக்கின்றோம். காப்பியப் பாடல்களாக இருப்பின் கதைப்போக்கை அறிந்துகொள்வதற்காகவேனும் முன்னர் வந்த பாடல்களில் நம் சிந்தனையைச் செலுத்துகின்றோம். அன்றியும், இக்காப்பியப் பாடல்கள் கதைத் தொடர்பை அடிப்படையாகக் கொண்டமையின் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாகவே அமைந்திருக்கும்.

ஆனால், பக்தி அடிப்படையில் தோன்றும் தன்னுணர்ச்சிப் பாடல்களில் (subjective poetry) ஒரு பாடலுக்கு அடுத்த பாடல் தொடர்புடையதாக இருக்க வேண்டுமென்ற இன்றியமையாமை இல்லை. எனவே, படிக்கின்ற நமக்கும் அத்தொடர்பைப்பற்றிச் சிந்திக்கும் வாய்ப்பே தோன்றுவதில்லை. பல சமயங்களில் தனி மரங்களில் சிந்தனையைச் செலுத்தித் தோப்பையே மறந்து விடுகிறோம்.

இக்குறை அல்லாமல் மற்றோர் குறையும் ஏற்படுகிறது. அருட்பாடல்களைப் படிக்கும்போது மரபு என்ற ஒன்று நம் முதுகின்மேல் ஏறிக்கொள்கிறது. அந்த மரபின் அடிப்படையிலேயே பாடல்களைப் படிக்கின்றோம்; பொருள் செய்கின்றோம்; சில சமயங்களில் அனுபவிக்கக் கூடச் செய்கின்றோம்.

உதாரணமாக, திருவாசகத்தில் வரும் திருவெம்பாவை, அம்மானை, பொற்சுண்ணம் போன்ற பகுதிகள் நீண்ட நெடுங்காலமாகத் தமிழ் இலக்கியத்தில் வெவ்வேறு பெயர்களில் இடம் பெற்றவை ஆகும். எனவே, அத்தலைப்பில் வரும் திருவாசகப் பாடல்களைப். படிக்கும்போது பழைய மரபுபற்றியே அப்பாடல்களுக்குப் பொருள் செய்துகொள்கிறோம்.

இருபது பாடல்களையும் படித்த பிறகுகூட அதில் ஏதேனும் புதுமை இருக்கிறதா என்று நாம் சிந்திப்பது இல்லை. பழைய , மரபை விட்டுவிட்டுப் பாடல்கள் முழுவதையும் ஒன்றாக வைத்து, இவற்றில் ஏதேனும் புதிய சிந்தனையை அருளாளராகிய அடிகளார் தருகிறாரா என்று சிந்திக்கத் தொடங்கினால், பல புதுமைகளைக் காணமுடியும். இதுபற்றி, திருவெம்பாவைக்கு எழுதப் பெற்ற பின்னுரையில் சற்று விரிவாகச் சிந்தித்து உள்ளோம். திருஅம்மானை முதலியவற்றிற்கும் அவ்வாறே.

மரபுபற்றிப் பாடப்பெறும் தனித்தனி வருணனைப் பாடல்களிற்கூடக் கவிஞர்கள் தத்தம் முத்திரையைப் பதிக்கின்றார்கள். அப்படியிருக்க அருளாளர்களில் தலைசிறந்த ஒருவராகிய அடிகளார் திருவெம்பாவை, திரு அம்மானை முதலியவற்றில் தம் முத்திரையைப் பதிக்காமல் இருந்திருக்கமாட்டார். இதுவரை நாம் செய்த தவறு, மரபு அடிப்படையில் இப்பாடல்களுக்குப் பொருள் செய்து அத்துடன் திருப்தி அடைந்துவிட்டமையே ஆகும்.

ஒரு தலைப்பில் வரும் அனைத்துப் பாடல்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கும்போது பல புதிய சிந்தனைகளை 'அவை' உள்ளடக்கி இருத்தலைக் காணலாம்.

திருச்சதகம்

நான்கு அகவல்களையும் அடுத்து இருப்பது திருச்சதகம் ஆகும். நூறு பாடல்கள் அமைந்திருத்தலின் சதகம் என்ற பெயர் அமைந்துள்ளது. காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி வெண்பாவில் அந்தாதித் தொடையாக அமைந்திருத்தலின் திருவந்தாதி என்ற பெயர் பெற்றது. அடிகளாரின் திருச்சதகமும் அந்தாதித் தொடையாக அமைந்திருத்தலின் அந்தாதி என்ற பெயர் பொருத்தமுடையதே ஆகும். ஆனால், கட்டளைக் கலித்துறை முதலிய பல்வேறு வகைப் பாடல்கள் இதனுள் இருத்தலின், அந்தாதி என்ற பெயரை விட்டுவிட்டுச் சதகம் என்ற பெயரைத் தந்தனர்போலும்.

ஒவ்வொரு பத்துப் பாடல்களுக்கும் ஓர் உள் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. என்றாலும், பெரும்பான்மையான தலைப்புக்கள் அடுத்துள்ள பத்துப் பாடல்களுடன் எவ்வித பொருத்தமும் இன்றி அமைக்கப்பட்டுள்ளன. ஓரிரு தலைப்புக்கள் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன. உள் தலைப்புகள் பொருத்தமில்லவிடினும் எல்லாப் பதிப்புகளிலும் இவை இடம் பெற்றுள்ளன. படிப்பவர் குழப்பமடையாமல் இருக்க இப்பதிப்பிலும் அந்த உள் தலைப்புகள் அப்படியே தரப்பெற்றுள்ளன.

பொருத்தமாக அமைந்த தலைப்புகளுள் மெய்யுணர்தல் என்ற முதல் தலைப்பு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. மெய்அறிதல் என்று கூறுவதுதான் மரபு ஒன்று பொய்யா அல்லது மெய்யா என்பதை அறிவின் துணைகொண்டுதான் அறியமுடியும். ஒன்றை மெய்ம்மையானது அல்லது உண்மையானது என்பதை அறிந்து கொண்டால், மனத்தில் ஒரு திருப்தி ஏற்படும். அறிவின் துணைகொண்டு ஆராய்ந்து அறியப்படும் எந்த ஒன்றும் முடிவானது என்று சொல்வதற்கில்லை. அறிவின் துணைகொண்டு வளரும் விஞ்ஞானத்தில், இன்று மெய்ம்மை என்று கருதப்பட்ட ஒன்று, அறிவு வளர வளர நாளை மாறிவிடுவதைக் காண்கிறோம். இங்கு மெய் என்று சொல்லப்படுவது ‘facts’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் சொல்லிற்கு இணையாகலாம்.

திருச்சதகத்தின் முதல் பத்துப் பாடல்களுக்குத் தரப்பெற்ற மெய்யுணர்தல் என்ற தலைப்பில் வரும் 'மெய்’ என்ற சொல்லுக்கு இது பொருள் அன்று. 'Truth' என்று சொல்லப்படும் உண்மையையே (சத்தியத்தையே) 'மெய்' என்ற சொல்லால் முன்னோர் குறிப்பிட்டனர். இந்த மெய்ம்மை என்றும் பொய்யாவதில்லை; மாறுவதும் இல்லை. இதனை அறிவு கொண்டு ஆராய்வது கடினம். பொருளின் இயல்பு, தன்மை என்பவை பற்றி மட்டுமே அறிவு ஆயமுடியும். எவ்வளவுதான் அறிவின் துணைகொண்டு ஆய்ந்து மெய்ம்மையின் தன்மையையும் இயல்பையும் எடுத்துக் கூறினாலும், அதனை முழுவதுமாக அறிவது இயலாத காரியம். சர்க்கரை என்ற இனிப்புப் பொருளின் தன்மை, இயல்பு என்பவற்றை சேதன வேதியியல் (organic chemistry) மிக நுண்மையாக ஆராய்ந்து ஒரு சமன்பாட்டின் மூலம் எடுத்துக்கூறுகிறது. அறிவின் துணைகொண்டு சர்க்கரையை ஆராய்ந்ததின் முடிவு இது ஆகும். இவ்வாறு செய்வதால் சர்க்கரையின் சுவையை அறிய முடியுமா? சுவையை உணரமுடியுமேதவிர அறிய முடியாது.

மேலே கூறிய விளக்கத்தை மனத்தில் வாங்கிக் கொண்டால், மெய்யறிதல் என்று தலைப்பிடாமல், மெய் உணர்தல் என்று ஏன் நம் முன்னோர்கள் பெயரிட்டனர் என்பதை நன்கு விளங்கிக்கொள்ள முடியும். Facts என்று சொல்லப்படும் மெய்ம்மையை அறிவது அறிவின் செயல், Truth என்று சொல்லப்படும் மெய்ம்மையை (உண்மையை) அறிய முடியாது; அதனை உணரத்தான் முடியும்.

இந்த நிலையில், ஒன்றை மனத்துள் வாங்கிக்கொள்ள வேண்டும். சர்க்கரையின் சுவையை உணரும் அனுபவத்திற்கு அதன் தன்மையையோ இயல்பையோ அறிந்திருக்கத் தேவையில்லை. சர்க்கரையின் தன்மையைக் கூறும் வேதியியல் சமன்பாட்டினை அறியாமலும் சர்க்கரையைச் சுவைக்கமுடியும். அதேபோலச் சத்தியப் பொருளை, உண்மையை, அல்லது மெய்ம்மையை உணர்ந்துகொண்டு, அதனில் மூழ்கி அதனை அனுபவிப்பதற்கு அதன் இயல்பு, தன்மை என்பவற்றை அறிய வேண்டிய தேவையில்லை.

இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டுதான் மெய்யறிதல் என்று சொல்லாமல் மெய்யுணர்தல் என்ற தலைப்பைக் கொடுத்தனர். வள்ளுவர் காலம் தொடங்கி 13ஆம் நூற்றாண்டுவரை உண்மை என்ற சொல்லுக்குப் பதிலாக மெய் என்ற சொல்லையே தமிழ் இலக்கியம் பயன்படுத்திவந்தது என்பதை அறிதல் வேண்டும். சத்தியப் பொருள் அல்லது உண்மைப் பொருள் என்று சொல்லவேண்டிய இடத்தில் அடிகளாரும் மெய் என்ற சொல்லையே பயன்படுத்துகிறார்.

‘மெய்யே! உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்’ (திருவாச : 1-32) 'மெய்யா! விமலா!' (திருவாச 1-34) என்று வரும் தொடர்களில் மெய்யே என்ற சொல்லாட்சி சத்திய வடிவினனே என்ற பொருளில் அமையக் காணலாம்.

மெய்யுணர்தல் என்ற தலைப்பு, முதல் பத்துப் பாடல்களுக்குத் தரப்பெற்றிருப்பினும் சதகம் முழுவதிலும் பல இடங்களில் இது பேசப்பட்டிருப்பதைக் காணலாம். உணர்தல் என்பது தல் என்ற விகுதி பெற்ற தொழிற்பெயர் ஆகும். எனவே, உணர்தல் என்பது ஒரு செயலை அல்லது தொழிலைக் குறிக்கும் சொல் ஆகும். ஒரு தொழிலை அல்லது செயலைச் செய்தோம் என்றால், புறக்கருவிகள் ஆகிய கை, கால் முதலியவற்றைப் பயன்படுத்தித்தான் அத்தொழிலைச் செய்யமுடியும். கால்கள் மிக விரைவாகத் தொழிற்படும்போது ஓடுதல் என்ற தொழில் நடைபெறுவதாகக் கூறுகிறோம். உறுப்புக்களின் பெயர்கள் குறிப்பிடப்பெறாவிடினும் ஓடுதல் என்று கூறினவுடன் அல்லது செய்தல் என்று கூறியவுடன் கால்களோ அல்லது கைகளோ பயன்பட்டன என்பதை அறிகிறோம் அல்லவா? இந்தக் கை, கால்கள் தாமே செயல்படுமாறு இல்லை, மூளையில் தோன்றும் உந்துசக்தி நரம்பின் வழியே கை கால்களுக்கு இத்தொழிலில் ஈடுபடுமாறு ஆணையிடுகிறது. இந்த உறுப்புக்களின் செயல்களைமட்டும் கண்டுவிட்டு மூளையுள் தோன்றிய உந்துசக்தியை அறிகிறோம் அல்லவா?

அதன் எதிராகப் பக்தி மீதூர்ந்த நிலையில் நிற்கும் ஒருவருடைய உடல் நடுங்குகிறது; வியர்வை துளிர்க்கின்றது; நாக் குழறுகிறது; கண்ணீர் வருகின்றது. ஒரே நேரத்தில் செயல்கள் நடைபெற்றாலும் இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை அல்ல. இந்த நிலையில் அறிவின் நிலைக்களனாகிய மூளை தொழிற்படவில்லை. அதாவது மூளை உந்துசக்தியாகவும் இல்லை; ஒருங்கிணைக்கவும் இல்லை.

என்றாலும், மெய் நடுங்குதல் போன்ற செயல்கள் நடைபெறுகின்றனவே! கண்ணீர் ஆறாகப் பெருகுகின்றதே! எந்த ஒரு பொருளையும் கண்ணால் கண்டோ காதால் கேட்டோ இச்செயல்கள் நடைபெறவில்லை. கண்கள் மூடி உள்ளன. புறத்தே எழும் ஒலியும் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. புற உடம்பில் இத்தனை செயல்கள் நடைபெற்றாலும் அறிவின் செயற்பாடு இல்லை; மூளையின் அதிகாரம் இங்கு இல்லை என்று கூறி விட்டோமே. அப்படியானால் இந்தச் செயல்களுக்கு மூலமாக இருப்பது எது?

மனத்தில் தோன்றும் எண்ணம் ஒரு வேளை இதைச் செய்திருக்குமோ என்றால், எண்ணங்களுக்கு இவ்வளவு ஆற்றல் இல்லை. எனவே, இச்செயல்களுக்குக் காரணம் எண்ணமோ, அறிவோ, மூளையோ இல்லை என்பது தெளிவு. இச்செயல்களுக்கு மூலகாரணம் என்பது எது என்று சிந்திக்கத் தொடங்கினால் ஓர் உண்மை விளங்கும். அறிவு, எண்ணம் என்பவற்றை எல்லாம் கடந்து சித்தத்தின் ஆழத்தில் தோன்றும் உணர்வே, உடம்பில் காணப்படும் வேறுபாடுகளின் காரணம் என்று அறிந்துகொள்ள முடிகிறது. உணர்வினால்மட்டுமே இவற்றைச் செய்ய முடியும். அந்த உணர்வு எதைப் பற்றிக்கொண்டு தோன்றிற்று? மெய்ம்மைப்பொருள் அல்லது சத்தியப் பொருள் சித்தத்தின் அடிப்பகுதியில் புகுந்தவுடன் அறிவு முதலியவை தொழிற்பாட்டை இழக்கின்றன. அம் மெய்ப்பொருளால் ஏற்பட்ட உணர்வாகிய அனுபவம் சித்தத்தை நிறைத்து, மனத்தின் செயற்பாட்டை ஒழித்து, புத்தியை மடக்கி, அகங்காரத்தையும் செயல் இழக்குமாறு செய்கிறது. மயங்கிய நிலையில், சித்தம் தொழிற்படாமல் நிற்கும்போது ஒருவன் செய்யும் செயல்களைப் பைத்தியத்தின் செயல்கள் என்று கூறுகிறோம். ஆனாலும், புத்தியும் ஆணவமும் செயலிழந்து நிற்க, சித்தத்தில் தோன்றிய உணர்வு, அந்தக்கரணங்கள் நான்கையும் மூடி, முழுவதும் உணர்வுமயமாகி நிரம்பிய நிலையில், உள்ளே நிகழும் நிகழ்ச்சி புற உடலைத் தாக்குகிறது. இந்த உணர்வின் தாக்கத்தால் உடம்பு முழுவதும் நடுங்குகிறது; நாக் குழறுகிறது; வியர்வு பொடிக்கின்றது; கண்ணீர் பெருகுகின்றது.

புறத்தே நிகழும் இச்செயல்பாட்டை முதற்பாடல் தெரிவிக்கின்றது. ஆதலின், முன்னோர் இதனை மெய்யுணர்தல் என்ற தலைப்பில் கொண்டுவந்தனர்.

உலகிடை மனிதர்களாகப் பிறந்து வாழ்கின்றவர்களுள் அடிகளாரைப் போன்றவர்கள் இறையனுபவத்தைப் பெற்றுத் தம்மை மறந்த நிலையில் இருக்கின்றார்கள். என்றாலும், மனித உடலில் அவர்கள் வாழ்கின்றார்கள். ஆதலின், அந்த இறையனுபவம்கூட இருபத்து நான்கு மணி நேரமும் ஒருபடித்தாக நிலைத்து இருப்பதில்லை. சித்தத்தில் தோன்றும் உணர்வுகூட அலைகளைப் போன்று மேல் எழுந்தும் இறங்கியும், ஏற்ற இறக்கங்களோடு இருத்தல் இயல்பே ஆகும். அப்படியானால், சாதாரண மனிதர்களின் மனத்தில் உணர்ச்சிகள் ஏற்ற இறக்கங்களோடு இருப்பது போல்தான் இவர்களுக்கும் இருக்கின்றதா? சாதாரண மனிதர்களின் உணர்ச்சிகள் விநாடிக் கணக்கில் மாறுகின்றன; இப்பெருமக்களின் உணர்வுகள் மணிக் கணக்கில் நிலைபெறுகின்றன. என்றாலும், ஒரோவழி அந்த உணர்வுகள் இறங்கிவிட அவர்களும் நம்மைப்போல ஆகிவிடுகிறார்கள்.

இப்படி இறங்கிவிட்ட நிலையில் உணர்வில் மூழ்கியிருந்த பழைய நிலையை நினைந்து பார்க்கிறார்கள். இப்பொழுது தாம் யார், தம்மைச் சுற்றி உள்ளவர்கள் யார், அவர்கள் தம்மைப்பற்றி என்ன பேசுகிறார்கள் என்பவை மனத்திரையில் நிழலாடுகின்றன. இவர்களுடைய பழைய அனுபவ நிலையின் இயல்பை அறியாத, சுற்றி நின்றவர்கள் இவர்களைப் பைத்தியம் என்று கூறினார்கள். பைத்தியம் என்று இப்பொழுதுதான் சொல்கிறார்களா? அனுபவத்தில் மூழ்கியிருந்த காலத்திலும் கூறினார்கள்; அதனிலிருந்து வெளிப்பட்ட காலத்திலும் கூறினார்கள். அனுபவத்தில் மூழ்கியிருந்தபோது அயலாரின் ஏச்சு இவர்கள் காதில் ஏறவில்லை.

இப்பொழுது உள்ள சாதாரண நிலையில், சராசரி மனிதர்களாக இருப்பின், பிறர் எள்ளி நகையாடும் பழைய நிலைக்குப் போக வேண்டாம் என்று நினைப்பர். அடிகளார் போன்றவர்கள் இதற்கு நேர் மாறாகத் 'தத்தம் மனத்தன பேச எஞ்ஞான்றுகொல் சாவதுவே'(திருவாச : 7) என்று புலம்புகிறார்கள்.

சாவது என்ற சொல் இங்கே மரணத்தைக் குறிக்கவில்லை; பிறர் அவமதித்துக் கூறும் சொற்கள் காதில் விழாத நிலை, விழுந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாத நிலை என்ற இரண்டு நிலைகளையுமே குறிக்கின்றது. எனவே, ‘சாவது' என்ற சொல் அகங்கார மமகாரங்களை அறவே ஒழித்து நிற்கும் நிலையைக் குறிப்பதாகும்.

'மெய்தான் அரும்பி' என்ற 5-ஆம் பாடல் மெய்யுணர்வு அனுபவத்தில் முழுவதும் மூழ்கிவிட்ட நிலையைக் குறிக்கும். அந்த அனுபவத்திலிருந்து மீண்ட நிலையில் பொறி, புலன்கள் விழிப்படைய, நான் ஓரளவு தலையெடுக்கிறது. அப்போது சுற்றி நின்றவர்கள் பேச்சு காதில் விழுகின்றது. இவையெல்லாம் காதில் விழாத நிலைக்கு எப்போது போகப் போகிறோம் என்ற ஆதங்கத்தில் வெளிப்பட்டதாகும் ஏழாவது பாடல்.

தாம் நினைத்தவுடன் பழைய நிலைக்கு போகும் வழியில்லை. இந்த நிலையில் அந்த இறையனுபவம் எதனால் வந்தது, எவ்வாறு வந்தது- முதலிய வினாக்களை எழுப்பி ஆழ்ந்து சிந்திக்கிறார் அடிகளார். இச்சிந்தனையின் பின்னர் ஓர் உண்மை அவருக்குப் புலனாகின்றது. தம்பால் உள்ள எந்தத் தகுதியினாலோ எந்தப் பண்பாட்டினாலோ அந்த நிலையை அடையவில்லை என்பதை அறிகின்றார்.

திருப்பெருந்துறையில் குருதரிசனம் கிடைத்தபோது நூற்றுக்கணக்கான அடியார்கள் சுற்றி அமர்ந்திருந்தார்கள். எப்பொழுதும் இறையனுபவ நிலையில் இருப்பவர்கள் அவர்கள். எப்பொழுதும் அனுபவத்தில் மூழ்கியிருக்கின்றவர்களிடையே சில நேரம் மட்டுமே அவ்வனுபவத்தின் பேற்றைப் பெற்ற தாம் புகுதல் பொருத்தமன்று என்று நினைக்கின்றார். அந்த நினைவு 'புகவே தகேன் உனக்கு அன்பருள் யான்' (14) என்ற தொடராக வெளிப்படுகிறது.

தமக்கோ தகுதியில்லை. ஆனால், அத்தகுதியை முழுவதும் படைத்தவர்களிடையே சில நேரம் தங்கி இருக்குமாறு செய்தார் குரு. அவ்வாறு அவர் செய்தது ஒரு நாடகம் போன்றுள்ளது என்று நினைக்கின்றார் அடிகளார். இது எவ்வாறு நாடகமாயிற்று அடுத்த வேளைச் சோற்றுக்கில்லாதவனை, நாடகம் முடிகின்றவரை அரசன் வேடத்தில் இருத்துவதுதான் நாடகத்தின் இயல்பு. அதேபோலத் தகுதியற்ற தம்மைத் தக்கார் ஊடே இருத்தியதை நாடகம் என்று நினைக்கின்றார்.

அடுத்துள்ள தலைப்பு 'அறிவுறுத்தல்' ஆகும். பதினான்காம் பாடலில் குருநாதர் செய்தது நாடகம் என்று பேசிய அடிகளார் 15-ஆம் பாடலில் நாடக வேடதாரிகள் இடையே ஒரோவழி நடைபெறுகின்ற புதுமையைப் பேசுகின்றார். நாடகத்தில் வேடம் அணிபவர்கள் பெரும்பாலும் தம்மை மறப்பதில்லை. ஒரோவழி ஒரு சிலர் தாம் யார் என்பதை மறந்து வேடத்திற்கு ஏற்ற பாத்திரமாகவே மாறுகின்றார்கள். அவ்வாறு மாறிவிட்ட நிலையில் பொருந்தாத சில செயல்களைச் செய்ததாகக் கேள்விப்படுகிறோம். காரணம் மிக எளிதாக விளங்கும். சில மணித்துளிகள் தம்மை மறந்து பாத்திரமாக ஒன்றிவிட்ட நிலையில் நிகழ்வதாகும் இது.

இத்தகைய ஒரு நிலையைத்தான் அடிகளார் பதினைந்தாம் பாடலில் குறிப்பிடுகிறார். குருநாதர் நிகழ்த்திய நாடகத்தில் உண்மை அடியார்களிடையே சிறிது நேரம் அடிகளாரையும் இருக்குமாறு செய்தார். தாம் திருவாதவூரர் என்பதையும் அமைச்சர் என்பதையும் மறந்து அடியார்களிடையே இருந்த சில நேரத்தில், அவர்களைப் போல் தாமும் வீடுபேற்றை அப்பொழுதே அடைந்துவிட வேண்டும் என்று நினைத்ததாக இப்பாடலில் பேசுகிறார். ‘விடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன் என வரும் தொடரின் பொருள் இதுவேயாகும். விரைகின்றேன்’ என்பது நிகழ்காலத்தைக் குறிக்கும் தன்மை ஒருமை வினை முற்றாகும். ஆனால், இப்பாடல் பாடப்பெறுகின்ற நேரத்தில் இங்குக் கூறப்பெற்ற செயல் எதுவும் நடைபெறவில்லை. சிலகாலம் முன்னர்த் திருப்பெருந்துறையில் நிகழ்ந்த நிகழ்ச்சியே ஆகும் அது.

அந்த நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாக மனத்துள் நினைந்துபார்க்கும் அடிகளார், இவ்வாறு கூறுகிறார். இறைவன் இவரை ஆட்கொள்ளும்பொழுது இவர் தம்வசத்தில் இல்லை. அதேபோல அடியார் கூட்டத்தினிடையே அமருமாறு குருநாதர் ஆணையிட்ட பொழுதும் இவர் தம்வசத்தில் இல்லை. இறையதுபவத்தில் முற்றிலுமாக மூழ்கியிருந்தபொழுது நடைபெற்ற செயல்களாகும் இவை. அந்த அநுபவம் நீடிக்கவில்லை; அதன் விளைவாக அடியார் கூட்டத்தினிடையே இருந்த நிலையும் நீடிக்கவில்லை. தம்முடைய நிலைக்கு மீண்டபொழுது நடந்தவற்றை நினைந்து பார்க்கையில், அடிகளார் மனத்தில் புதிதாகத் தோன்றிய எண்ணமாகும் இது.

அமைச்சராக அந்த விநாடிவரை இருந்த தாம், ஒரு விநாடி நேரத்தில், இறையநுபவம், அடியார் கூட்டம் என்ற இரண்டிலும் ஈடுபட்டுப் பின்னர் மீண்டது வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நாடகம் என்றே நினைக்கின்றார் அடிகளார். அந்த நாடகத்தில் அடியார்களிடையே இருக்குமாறு தம்மைப் பணித்தவர் நாடகத்தை நடத்தும் குருநாதர் அல்லவா? நாடகத்தின் தலைவராகிய குருநாதர், நாடகம் முடிந்துவிட்டது என்பதை அறிவிப்பதுபோல மறைந்து விட்டார். நாடகம் முடிந்து, தமக்குரிய வேடத்தைக் கலைத்துவிட்டு மறுபடியும் அமைச்சர் பொறுப்பை ஏற்பதை விட்டுவிட்டு, மறுபடியும் நாடகத்தில் வந்த ஏனைய பாத்திரங்கள் குருநாதருடன் சேர்ந்து வீடுபேற்றை எய்தியதுபோலத் தாமும் எய்தவேண்டும் என்று நினைத்தது ஒரு வேடிக்கை அல்லவா? எனவே, அந்த நிகழ்ச்சியில் நிகழ்ந்தவற்றைக் கூறும்பொழுது ‘மிகப்பெரிதும் விரைந்தேன்’ என்று கூறவந்த அடிகளார், அந்த விரைவில் உள்ள உறுதிப்பாட்டைக் கோடிட்டுக் காட்டுவதற்காக 'விரைகின்றேன்’ என்று நிகழ்காலத்தால் கூறினார். உரையாடலில் வருவேன் என்ற எதிர்காலச் சொல் பயன்படவேண்டிய நிலையில் விரைவும், உறுதியும் கருதி ‘வந்தேன்’ என்று இறந்த கால வாய்பாட்டில் வருகிறதல்லவா? அதேபோல இங்கு விரைந்தேன் என்ற இறந்தகாலச் சொல், உறுதி கருதி 'விரைகின்றேன்’ என்ற நிகழ்காலச் சொல்லாக மாறிவந்துள்ளது.

உறுதி கருதியே இறந்தகால வினைமுற்றுக்குப் பதிலாக நிகழ்கால வினைமுற்று வந்தது என்று கூறுவதற்குரிய காரணம் 16ஆம் பாடலில் விரிவாகப் பேசப்பெற்றுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி ஒருவர் விரைகின்றார் என்றால் அதன் பொருள் யாது? முன்னர் இருந்த இடத்தில் தொடர்ந்து இருக்க விருப்பமில்லை. புதிய இடத்திற்குச் செல்லவேண்டுமானால் உடனே செல்ல வேண்டும். நாளைச் செல்லலாம்; நாளைச் செல்லலாம் என்று காலங் கடத்தினால் நாளை என்பது வராமலும் போய்விடலாம் அல்லவா? எனவே, இருந்த இடத்தை விட்டுப் புதிய இடத்திற்கு விரைகின்ற நிலை ஏற்படுகின்றது. இருந்த இடத்தில் எவ்வளவு சுகங்கள் கிடைப்பினும் ஒருவர் அதனை உதறிவிட்டு மற்றொரு இடத்திற்கு விரைகின்றார் என்றால், அந்தப் புதிய இடத்தில் பழைய இடத்திலிருந்த சுகத்தைவிட அதிக சுகம் கிடைக்கும் என்ற உறுதிப்பாடு காரணமாகவே விரைகின்ற நிலை ஏற்படுகின்றது. 'வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன்' என்பது இப்பொழுது கிடைத்துள்ள சுகம், மேலே வரக்கூடிய சுகம் ஆகிய இரண்டையும் குறிக்கின்றது.

இவற்றையெல்லாம் உதறிவிட்டு மிக்க உறுதிப்பாட்டுடன் வீடுபேற்றை நோக்கிச் செல்ல முடிவு செய்துவிட்டமையின் 'விரைகின்றேன்’ என்று நிகழ்காலத்தால் கூறினார்.

முதல் பத்துப் பாடல்களுக்கு மெய்யுணர்தல் என்ற தலைப்புத் தரப்பெற்றுள்ளது. அத்தலைப்பு மிகவும் பொருத்தமானது என்று முன்னர்க் கூறினோம். இரண்டாம் பத்தின் தலைப்பு அறிவுறுத்தல் என்பதாகும். மெய்யை உணர்ந்தபின், அறிவுறுத்தல் வருவதற்கு இடமேது என்ற ஐயம் நியாயமானதே ஆகும்.

மெய்யை உணர்ந்த நிலையில்தான், தாம் இன்னும் அந்த முழுநிலையை அடையவில்லை என்பதை அடிகளார் உணர முடிகின்றது. மெய்யுணர்தலில் முழுத்தன்மை பெற்றிருந்தால் ஏனைய அடியார்களோடு சேர்ந்து வீட்டுலகம் சென்றிருக்கலாம்.

நடைமுறை வேறுவிதமாக உள்ளது. அவர்கள் போய்விட்டார்கள். அடிகளார் தங்கிவிட்டார். சிறிது நேரம் மெய் உணரும் வாய்ப்புத் தமக்குத் தரப்பெற்றது ஒரு நாடகப்பாத்திரத்துக்குரிய வேடமே என்று நினைக்கின்றார்.

ஆனாலும், அந்தச் சிறிதுநேர அனுபவம் அதனை முழுமையாய்ப் பெறவேண்டும் என்று உந்துதலை அவருள் ஏற்படுத்தியது உண்மை. மெய்யுணர்ந்த நிலையில் குருநாதர், குருநாதர் மட்டுமல்ல; 'வானாகி மண்ணாகி... நின்றாயை’ என்றும் உணர்கின்றார். இப்படிப்பட்ட ஒருவரை என்ன சொல்லி வாழ்த்துவது என்று மருள்கின்றார்.

இதனை அடுத்த, மூன்று பாடல்களில் வாழ்த்துதலுக்கு அப்பாற்பட்டு நிற்கும் அவனுடைய அருமை, பெருமைகளைப் பேசுகின்றார்.

மெய்யுணர்ந்த நிலையில் இருந்து விடுபட்டு, தம் நிலைக்கு மீண்ட நிலையில் இந்தப் பத்துப் பாடல்களும் இடம் பெறுகின்றன. அதிலும் ஒரு புதுமை உள்ளது. முதல் இரண்டு பாடல்கள் அநுபவநிலையில் பெற்ற இன்பத்தைக் குறிக்கின்றன. அந்த அநுபவத்தின் பயனாகத் தலைவன் எத்தகையவன் என்பதையும் அறிந்துகொண்டதை அடுத்த எட்டுப் பாடல்களும் குறிக்கின்றன.

இதன் கடைசி இரண்டு பாடல்களும் அறிவுறுத்தல் என்ற தலைப்புக்குப் பொருத்தமாக அமைந்துள்ளன. இத்துணை நேரம் எங்கோ சஞ்சரித்துக்கொண்டிருந்த அந்த மனம், திடீரென்று தன் இயல்பைக் காட்டத் தொடங்கி விட்டது. தூரத்தே குருநாதரைக் கண்டதிலிருந்து, அவர் திருவருளைப் பெற்றுச் சுயநினைவுக்கு வரும்வரை அடங்கி ஒடுங்கிப் பெட்டிப் பாம்புபோல் இருந்த மனம், இப்பொழுது லேசாகத் தலை தூக்குகிறது. சராசரி மனிதர்களுக்குரிய சாதாரணப் பாலுணர்ச்சி மெள்ளத் தலை தூக்குகிறது. 23ஆம் பாடலில் வரும் முதல் இரண்டடிகள் மனம் தன் புத்தியைக் காட்டும் நிலையை அறிவிக்கின்றன. அந்த மனத் தொடர்பிலிருந்து தம்மைப் பிரித்துக்கொண்ட அடிகளார், குரங்கின் தலையில் குச்சியால் தட்டும் குரங்காட்டிபோலப் பாழ் நெஞ்சே என்ற சொற்களின் மூலம் அந்த மனத்தின் தலையைத் தட்டுகிறார். தட்டியவுடன் குரங்கு குரங்காட்டியின் பக்கத்தில் பணிவுடன் நிற்பதுபோல அந்த நெஞ்சம் அடிகளாரின் அண்மையில் பணிந்து நிற்கின்றது.

அந்த நெஞ்சை நோக்கி 'ஏ நெஞ்சே! நீ செய்த அடாத காரியத்தைப் பார்த்தாயா? தவறான எண்ணங்களிலிருந்து விடுபட்டு நீ அடங்கியிருந்தபொழுது என்ன நிகழ்ந்தது என்பதை இதோ உனக்கு நினைவூட்டுகிறேன். மரத்தடியில் இருந்த குருநாதர் வழியோடு சென்ற நம்மை இழுத்துப் பிடித்து நமக்குள் புகுந்தார். என்ன அற்புதமான அநுபவம் கிடைத்தது தெரியுமா உனக்கு! ஊனெலாம் நின்று உருகிற்று. ஏ நெஞ்சே! நீ அப்படியே ஒழுங்காக இருந்திருந்தால், அந்த அநுபவம் நீடித்திருக்கும். திடீரென்று நீ உன் புத்தியைக் காண்பித்துவிட்டாய். அதன் பயன் என்ன தெரியுமா? நம்முள் புகுந்து, ஊனெலாம் உருக நம்மை ஆண்டவர் இப்பொழுது நம்மை விட்டுவிட்டு வானத்திற்குச் சென்று விட்டார். இனி என்ன செய்வது? இந்த அநுபவம் போனபொழுதே நீயும் செத்து ஒழிந்திருக்க வேண்டும். என்ன வேடிக்கை: ஊனுருகும் நிலை போய்விட்டது; அதனை உருக்கியவர் வானத்திற்குப் போய்விட்டார். செத்து ஒழியாமல் நீமட்டும் வாழ்கின்றாய். நான் என்ன செய்யட்டும்?

இந்த அநுபவப் பிரிவினால் மாண்டிருக்க வேண்டிய நெஞ்சம் மாளாமல் வாழ்கின்றது. ஆதலால், அதன்மாட்டுக் கருணை கொண்ட அடிகளார், அந்த நெஞ்சை நோக்கி இறுதியாக ஓர் அறிவுரை கூறுகிறார். 'நெஞ்சே! நீ இப்படியே இருந்தால் மீளாத் துயரக் கடலில் விழப்போவது உறுதி. அப்படி நீ விழாமல் இருக்க வேண்டுமானால் ஒரே வழிதான் உண்டு. உன் பழைய இயல்பை விட்டுவிட்டு, இத்துயரக் கடலில் வீழாமல் காப்பவரை ஏத்துவாயாக’ என்று முடிக்கின்றார்.

திருச்சதகத்தில் மூன்றாவதாக அமைந்துள்ள பத்துப் பாடல்களுக்கும் சுட்டறுத்தல்’ என்ற தலைப்புத் தரப் பெற்றுள்ளது. அது எவ்வளவு தூரம் பொருந்தும் என்பதைச் சிந்திப்பது நலம். இந்தத் தலைப்பை மறந்துவிட்டுப் பாடல்களுக்குள் நுழைந்தால், மேலைப் பாடல்களோடு இவற்றுக்குள்ள தொடர்பு நன்கு விளங்கும்.

சென்ற பாடலில் ‘அவலக்கடலில் வீழாமல் காப்பவனை ஏத்த வேண்டும்’ என்று நெஞ்சுக்கு அறிவுரை கூறினார் அல்லவா? எப்படி ஏத்த வேண்டும்? என்ற வினாவிற்கு விடை கூறுவதுபோல அமைந்துள்ளன இப்பாடல்கள்.

‘வெள்ளந்தாழ் விரிசடையாய்” என்று ஏத்தத் தொடங்கினால் உள்ளந்தாள் நின்றுச்சியளவும் நெஞ்சாய் உருக வேண்டும். உடம்பெல்லாங் கண்ணாய் வெள்ளம் பாய வேண்டும்.

இவ்வாறு நடைபெறாமல் செய்வது நம்முடைய வினையின் கோளாறு என்று வருந்துகிறார் அடிகளார். அவ்வினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆற்றல் கொண்டவன் இறைவன் என்பதை 'வினைக்கேடன்' என்ற சொல்லால் அறிவிக்கின்றார்.

அந்த வினைக்கேடன் தம்மிடம் வந்து தம் வினையைப் போக்கத் தம்பால் என்ன தகுதி இருக்கிறது என்பதை நினைக்கத் தொடங்கி, தகுதி ஒரு சிறிதும் இல்லாத நாய்போன்றவனாகிய தம்மிடத்து வினைக்கேடன் வந்தது, அவன் கருணையால் என்று குறிப்பிடுகின்றார்.

அவன் கருணையினால் ஆட்கொண்ட பிறகுதான், நாம, ரூபம் கடந்து எங்கும் எதிலும் நிறைந்திருப்பவன் அவன் என்பதை அவரால் உணரமுடிந்தது. ஆனாலும், என்ன புதுமை? நாம, ரூபம் கடந்த அப்பொருள் தம் எதிரே வந்து, 'வண்ணங் காட்டி, வடிவு காட்டி, மலர்க்கழல்கள் அவை காட்டி' ஆட்கொண்டது என்கிறார்.

வண்ணம், வடிவு, மலர்க்கழல்கள் என்பவற்றைப் புறத்தே காட்டிய அப்பொருள், உள்ளே புகுந்தது. அதன் பயனாகக் சுற்றித் திரிகின்ற சிந்தனை அவர்மாட்டுச் செல்லத் தொடங்கிற்று. கண்டதையெல்லாம் பார்க்கின்ற கண்கள் அவர் திருவடிகளையே பார்க்கத் தொடங்கிற்று. பேசும் சொற்களும் பிரார்த்தனையும் அத் திருவடிக்கே என முடிந்தது.

இதனை அடுத்துள்ள பாடலில் சராசரி மனிதர்களுக்குரிய குறைபாடுகளோடு இருந்த தாம், ஐந்தெழுத்தாகிய புணையைப் பற்றிக் கரையேறிய சிறப்பைக் கூறுகிறார்.

இரண்டாவது பத்தின் இறுதிப் பாடலில் தம் நெஞ்சை அறிவுறுத்தத் தொடங்கிய அடிகளார், இந்தப் பத்தின் இறுதி மூன்று பாடல்களில் தம் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம் வேறு யாருக்கும் கிட்டாத ஒன்றாகும் என்பதை விரிவாக எடுத்துக்கூறி உலகத்தாருக்கு அறிவுறுத்துகின்றார்.

பல நூற்றாண்டுகளின் முன்னரே தேவார, திருவாசகங்கள் மக்களிடையே பெரிதும் பரவி அவர்களை ஆட்கொண்டிருந்தன. 9 ஆம் நூற்றாண்டு முதலே தேவார, திருவாசகப் பாடல்கள் திருக்கோயில்களில் ஓதப்பெற்று வந்தன என்ற உண்மையை வைரமேகப் பல்லவ மன்னனின் திருத்தவத்துறைக் கல்வெட்டிலிருந்தும், பின்னர் வந்த சோழர்கள் கல்வெட்டிலிருந்தும் அறியமுடிகிறது. 13, 14-ஆம் நூற்றாண்டுவரை பக்தி அடிப்படையில் எவ்வித வேறுபாடும் இன்றித் திருமுறைகள் கோவில்களிலும், வீடுகளிலும் ஒதப்பெற்றுவந்தன.

14ஆம் நூற்றாண்டுவாக்கில், சைவ சித்தாந்த சாத்திரங்கள் தோன்றலாயின. அறிவின் துணைகொண்டு பேசப்பெறும் சாத்திரங்கள் ஒருவகை, உணர்வின் துணைமட்டுமே கொண்டு ஒதப்பெற்ற திருமுறைகள் ஒருவகை. 15ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இவ்விரண்டையும் ஒருங்கிணைக்கும் முயற்சி தொடங்கப் பெற்றது. சமய குரவர்கள் நால்வர் வாழ்க்கையும்கூடச் சன்மார்க்கம், சத்புத்ரமார்க்கம் என்றெல்லாம் பெயரிடப் பெற்றுச் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவற்றுள் சமய குரவர்கள்கூடப் புகுத்தப்படும் முயற்சி தொடங்கிற்று.

நல்ல வேளையாக இம்முயற்சியைச் செய்தவர்கள் திருமுறைகளில் கைவைக்கவில்லை. சாத்திரம், தோத்திரம் என்று பிரித்து, திருமுறைகளைத் தோத்திரம் என்ற தலைப்பில் அமைத்துவிட்டனர். பல திருமுறைகள் இப்பெருமக்கள் பார்வையில் படவில்லை என்றாலும் என்ன காரணத்தாலோ திருவாசகம் இவர்கள் கையில் சிக்கிக்கொண்டது. சாத்திரத்தில் ஊறித் திளைத்து, அந்தச் சட்டையை அனைவருக்கும் அணிவித்து மகிழ்ந்த அந்தப் பெருமக்கள் திருவாசகத்தின் ஆழ்ந்த உட்பொருளை அறியாமற்போனதில் வியப்பில்லை.

திருவாசகம் ஏனைய திருமுறைகளைப் போலல்லாமல் தனித்து நிற்கும் சிறப்புடையதாகும். ஏழு திருமுறைகளும் இறையநுபவத்தில் தோய்ந்த மூவர் முதலிகளால் பாடப்பெற்றன என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் அனைவரும் இறைவனைப் புகழ்ந்து அவனுடைய அளப்பரும் தன்மையைப் பாடினார்களே அன்றி, தாம் பெற்ற இறையநுபவத்தை அது எவ்வாறு இருந்தது என்பதைப் பாடவில்லை. இந்த நிலையில் மூவர் முதலிகளுக்குப் பிற்பட்டு, மணிவாசகப்பெருமான் தோன்றுகிறார். அவர் பாடிய திருவாசகம் முழுவதும் அவர் பெற்ற இறையதுபவத்தைப் பிழிந்து, பாடல்களாகத் தருவதாகும்.

இந்த வேறுபாட்டையும் துணுக்கத்தையும் அறிந்திராத சிலர் ஏனைய ஏழு திருமுறைகளைப்போல் திருவாசகம் இல்லை என்பதை மட்டும் கண்டுகொண்டனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு சாத்திரங்களில் காணப்பெறும் சில பெயர்களைத் திருவாசகத்தின் பல பகுதிகளுக்குத் தலைப்புகளாகச் சூட்டிவிட்டனர். திருச்சதகத்தில் காணப்பெறும் பல தலைப்புகள் இந்த முறையில் இடம்பெற்றவை; ஆதலின், அவை பொருந்தாது நிற்றலை ஆழ்ந்து நோக்குவார் எளிதில் அறியமுடியும்.

ஆத்தும சுத்தி என்ற தலைப்பும் இப்படி இடம் பெற்ற ஒன்றாகும். இதில் வரும் பத்துப் பாடல்களில் முதல் வரும் ஐந்து பாடல்கள் (35-39) அடிகளார் தம் விருப்பப்படி நடவாத நெஞ்சை நோக்கி நொந்து கூறியனவாகும். இறை அருளில் மூழ்கி ஆடுதல் முதலியவற்றைச் செய்யாத தம் நெஞ்சைப் 'பிண நெஞ்சே' என்று விளிக்கின்றார். இதே கருத்து ஏனைய நான்கு பாடல்களிலும் தொடர்கின்றது.

தம்முடைய நெஞ்சம் திருப்பெருந்துறை அநுபவத்தில் மூழ்கி அதிலேயே தங்கிவிடாமல் வெளியே வந்து தன் விருப்பம் போல் ஆட்டம் போடுவதற்குரிய காரணத்தைச் சிந்திக்கின்றார் அடிகளார். குருநாதரே தம்மை ஒதுக்கி விட்டாரோ என்ற ஐயம் ஒரு விநாடி மனத்தில் தோன்றினாலும், குருநாதர் அவ்வாறு செய்யவில்லை என்ற முடிவுக்கு வருகின்றார். அதனையே, 'வினை என் போல்..'(41) என்று தொடங்கும் பாடலில் ‘தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப்பு அன்று’ என்ற முடிவுக்கு வருகிறார். அவ்வாறானால் குருநாதர் திருவடியை விட்டுப் பிரிந்ததற்குக் காரணம் தம்முடைய கொடிய வினையே என்ற முடிவுக்கு வந்ததால் வினை, என்போல் உடையார் பிறர் யார்?’ என்று பாடுகிறார்.

இனிமையின் எல்லையாக உள்ள குருநாதரைப் பிரிந்து நெடுங்காலம் ஆகிவிட்டதுபோல அவருக்குத் தோன்றுதலின், இன்னும் இந்த உடம்பை வைத்துக் கொண்டு காப்பாற்றுகின்றேன், இது என்ன கொடுமை? என்ற கருத்தே 42ஆவது பாடலில் பேசப்படுகின்றது.

நெடுங்காலம் பிரிந்துள்ளோம், இந்த உடம்பைத் காப்பாற்றுகின்றோம் என்ற எண்ணம் தோன்றியவுடன் அவனுடைய கருணைப்பெருக்கும், தம் சிறுமையின் எல்லையும் வெளிப்படுதலின் தீயில் புகுந்தோ, மலையிலிருந்து உருண்டோ உடம்பைப் போக்கிகொள்ள வேண்டும் என்று நினைக்கின்றார்.

திருச்சதகத்தில் இதுவரை கண்ட நாற்பது பாடல்களில் இறையநுபவப் பெருக்கு, அதில் ஆழ்தல், மீட்டு வெளிவருதல் என்பவைபற்றிப் பாடும்பொழுதே எந்நேரமும் அந்த இறையநுபவத்தில் மூழ்கியிராமல் வெளியே வந்துவிடும் நெஞ்சை நோக்கி, ஏசிப் பேசுகின்ற பாடல்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த நாற்பது பாடல்களில் இரண்டு பாடல்களில் (23, 44) மகளிர் பற்றிய குறிப்பு வருகிறது. இந்தப் பால் உணர்வே தாம் ஈடுபாட்டை இழப்பதற்குக் காரணம் என்று நினைக்கின்றார் அடிகளார். அநுபவ வளர்ச்சியைக் கூறிக்கொண்டுவரும் நாற்பது பாடல்களில் அந்த அநுபவ இடையீடு, பால் உணர்வால் ஏற்பட்டது என்பதை அப்படியே குறிக்கின்றார் அடிகளார்.

ஆத்தும சுத்தி என்ற தலைப்பிற்கும், இந்தப் பத்துப் பாடல்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.

தம் விருப்பம்போல் தலைப்புகள் கொடுக்க யாருக்கும் உரிமை இல்லை. திருவாசகப் பாடல்களின் இயல்பை அறியாதவர்கள் தரும் ஆத்தும சுத்தி போன்ற உள்தலைப்புகள் பின்னே வருகின்றவர்களைக் குழப்பிவிடுகின்றன. இத்தலைப்புகள் பொருந்தும்படியாக விளக்கம் தரவேண்டும் என்ற விருப்பத்தினால், குழப்பத்தை மிகுதிப்படுத்துகின்றனர்.

நாற்பத்தைந்து முதல் ஐம்பத்து நான்கு வரை உள்ள பாடல்களும் இதுவரை கூறிய கருத்துக்களையே மீட்டும் கூறுகின்றன.

இந்தப் பத்து பாடல்களில், மூன்று பாடல்கள் (46, 51, 47 சிந்திக்கத் தக்கன. குருநாதராக வந்து ஆட்கொண்டு அருள்புரிந்து மறைந்துவிட்ட பிறகு, மானுட வடிவில் வந்த அவர் யார் என்பதை நன்கு உணர்ந்துகொண்ட அடிகளார், ஒரு விநாடி நேரம் அந்த உணர்விற்கு ஒய்வு கொடுத்துவிட்டு, தம் அறிவு கொண்டு குருநாதராக வந்தவரை ஆராய்கின்றார். இந்த மெய்ஞ்ஞானியின் விஞ்ஞானப் பார்வையில் தம்மை ஆண்டுகொண்ட கூத்தன், கூத்தனாகமட்டு மில்லாமல் எல்லையற்ற வனாகவும், காலதத்துவமாகவும் உள்ளான் என்பது தெரிகின்றது. இந்த விஞ்ஞானப் பார்வை, பொருளின் இயல்பை அறிவு கொண்டு ஆராய்ந்ததில் கிடைத்த விளக்கம் என்பது உண்மைதான். இந்த விளக்கத்தை அறிந்துகொண்டதால், அடிகளாருக்கு அச்சம் இருந்ததேதவிரக் கூத்தனிடம் நெருக்கம் ஏற்படவில்லை. ஒரு பொருளிடம் நெருக்கம் ஏற்படவேண்டுமாயின் அங்கு அறிவு தொழிற்பட்டுப் பயனில்லை. அந்த அறிவு பொருளின் பெருமையையும், தனது சிறுமையையும் சுட்டிக்கொண்டே இருக்குமாதலின் நெருக்கம் ஏற்பட வழியே இல்லை.

எனவே, அடிகளார். இந்த அறிவு ஆராய்ச்சியை விட்டுவிட்டு, உணர்வின் துணைகொண்டு கூத்தனைப் பார்க்கின்றார். அந்த உணர்வின் பெருக்கம் பொருளிடம் நெருக்கத்தை உண்டாக்குகின்றது. அதன் பயனாக, “யாவருஞ் சிந்தையாலும் அறிவருஞ் செல்வன், முந்தி என்னுள் புகுந்தனன் (5) என்றும், தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்’ (46) என்றும் பாட முடிந்தது.

அடுத்து வரும் ஐம்பத்தைந்து முதல் அறுபத்து நான்கு வரை உள்ள பாடல்கள் இறையநுபவத்தில் மூழ்க முடியாமல், தடையாக நிற்கும் தம் உடலை விட வேண்டும் என்ற குறிப்பில் பாடப்பெற்றவை ஆகும். இப்பத்தில் ஏழாவது பாடல் (6) மறுபடியும் பாலுணர்வு பற்றியே பாடுகிறது. இந்த உடம்பு இருக்கின்றவரையில் பாலுணர்வுப் பிரச்சினை தீராது என்று அடிகளார் நினைத்திருக்க வேண்டும். எனவேதான், உடலை ஒழிக்க வேண்டும் எனப்பாடும் இத்தொகுப்பினுள் இப்பாடல் இடம் பெறுகின்றது.

அறுபத்தைந்து முதல் எழுபத்து நான்கு வரை உள்ள பத்துப் பாடல்களும் ஒரு புதிய திருப்பமாக அமைந்து உள்ளன. திருப்பெருந்துறை அநுபவத்திலிருந்து விடுபட்ட நிலையில், மீண்டும் அதனைப் பெறவேண்டும் என்ற துடிப்பும், அதனைப் பெறுவதற்கு இவ்வுடம்பு தடையாக உள்ளது என்ற ஏக்கமும் முன்னர் உள்ள அறுபது பாடல்களில் பேசப்பெற்றதைக் கண்டோம். இந்தப் பத்துப் பாடல்களும் போற்றி போற்றி என்று முடிதலின், ஏதோ ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிவிக்கின்றன. இறையநுபவத்தைத் தரும் குருவின் திருவடியை இனி எப்பொழுது காண்பது என்று வருந்திய அடிகளாருக்கு இப்பொழுது அது கிடைத்திருக்க வேண்டும். இவ்வாறு கூறுவதால் மறுபடியும் குருவடிவில் வந்து ஆட்கொண்டான் என்பது பொருளன்று. முதன் முறையாகக் குருவைக் கண்டபொழுது எந்த அநுபவம் சித்தித்ததோ அந்த அனுபவம் மீட்டும் இங்கே சித்தித்திருக்க வேண்டும். அதனாலேயே போற்றி போற்றி என்று பாடல்கள் போற்றி செய்கின்றன. இங்கு மூன்று பாடல்களில் வரும் மூன்று தொடர்கள் சிந்திக்கத்தக்கன. பெருந்துறை அநுபவம் கைவிட்டுப் போனதுபோல இப்பொழுதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற அச்சத்தால் ‘புறமெனைப் போக்கல் கண்டாய்' (66) என்று பாடுகிறார்.

மறுபடியும் கிடைத்துள்ள இந்த அநுபவம், மறுபடியும் கைவிட்டுப் போய்விடாமல் இருக்கவேண்டுமே என்ற அச்சம் மனத்தில் தோன்றுகிறது. உடம்பு என்ற ஒன்று இருக்கின்றவரையில் அநுபவம் நிலையாக நில்லாது என்று அஞ்சிய அடிகளார், 'இங்கு இவ்வாழ்வு ஆற்றகில்லேன்' (69) என்றும் உடலிது களைந்திட்டு ஒல்லை உம்பர்தந் தருளு போற்றி (68) என்றும் பாடுகிறார்.

முந்தைய பாடல்களைப் போலவே அடுத்த பத்துப் பாடல்களும் (75-84) அநுபவப் பெருமையையும் அவற்றை விட்டுவிட நேர்ந்த இயல்பையும்பற்றியே பேசுகின்றன.

எழுபத்தாறாவது பாடல் தமக்கு என்ன வேண்டும் என்பதை அடிகளார் கூறுவதாக அமைந்துள்ளது. போகம், இன்பம் என்பவற்றை மனம் என்றும் நாடும் என்பதில் ஐயமில்லை. மகிழ்ச்சித் தரும் போகங்களில் இந்திரபோகம் மிக உயர்ந்தது என்பர். அந்த இந்திராதி போகமும் வேண்டிலேன் என்று முதலிரண்டு அடிகளில் அடிகளார் கூறுகிறார். அப்படியானால் அதற்குச் சமமானதாக அல்லது அதைவிட உயர்ந்ததான ஒன்றை அல்லவா கேட்க வேண்டும். ஆனால் அடிகளார் கேட்டது சற்று வித்தியாசமானதாகும்.

உடம்பு நைய, தலைமேல் கைகள் ஏற, கண்ணிர் ஆறாகப் பெருகவேண்டும். இவையே அடிகளார் வேண்டுவனவாகும். சற்று நின்று நிதானித்தால் இந்த வேண்டுதலின் சிறப்பை, ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியும். கைகள் தலைமேல் ஏறுவது, மனம் நைதல், கண்ணீர் பெருகுதல் ஆகியவை இந்த உடம்பின் செயல்கள் அல்லவா? இந்த உடம்பிற்குக் கர்த்தா அடிகளார் அன்றோ? அவர் எப்பொழுது விரும்பினாலும், இவற்றைச் செய்ய முடியுமே. அப்படியிருக்க, மனம் நையவும், கண்ணிர் ஆறாகப் பெருகவும் ஐயன் அருள் செய்ய வேண்டும் என்று ஏன் கேட்கிறார்?

மனத்தின்கண் இன்பம், துன்பம் ஆகிய எந்த உணர்ச்சி ஆழமாகத் தோன்றினாலும் மனம் நையும், கண்ணீர் பெருகும். ஆக, கைகள் தலைமேல் குவிய வாய்ப்பே இல்லை. அதனைக் கூறியதால், இன்ப துன்பமாகிய இரண்டு உணர்ச்சிகளையும் நீக்கிவிட்டு, வேறு ஏதோ ஒர் உணர்வை வேண்டி நிற்கின்றார் என்பது வெளிப்படை அந்த உணர்வு என்ன என்பதை வெளிப்படையாகக் கூறாமல், குறிப்பால் உணர்த்துகின்றார்.

இன்ப, துன்ப உணர்வுகள் ஆழமாக மனத்திடைத் தோன்றவேண்டுமாயின் அவற்றிற்குக் காரணமாக ஏதாவது ஒன்று இருத்தல் வேண்டும். இந்த மனம் எதில் அதிகம் ஈடுபட்டு, எதைப் பற்றிக்கொண்டு நிற்கின்றதோ அதுவே இன்ப, துன்ப உணர்வுக்குக் காரணமாகும். இவற்றை ஆசா பாசங்கள் எனக் குறிப்பர். இவை காரணமாகத் தோன்றும் பற்றே இன்ப, துன்ப உணர்வுக்குக் காரணமாக அமைகின்றது.

'இந்திராதி போகம் வேண்டிலேன்’ என்று அடிகளார் கூறுவதால், அந்த ஆசா பாசம் காரணமாகத் தோன்றும் பற்று அவர்மாட்டு இல்லை என்பது வெளிப்படை.

ஆசா பாசங்களைத் துறத்தல் என்பது எதிர்மறைச் செயலாகும். மனம் இந்தப் பற்றுக்களை விடவேண்டும் என்று விரும்பினால், அந்த மனத்திற்கு வேறு ஏதாவதொரு பற்றைத் தந்துதீர வேண்டும். ஏதாவதொரு பற்றுக் கோடில்லாமல் தன்பால் உள்ள பற்றுக்களை மனம் விடாது. இது கருதியே வள்ளுவப் பேராசான், மனத்திடை உள்ள பற்றுக்கள் நீங்கவேண்டுமாயின், பற்றற்றானைப் பற்றுக என்று கூறிப்போனார். இக்கருத்தைத்தான் அடிகளார் இப்பாடலின் இரண்டாவது அடியில் விவரிக்கின்றார். ‘ஏக! நின் கழல் இணை அலாது (வேறு பற்று) இலேன்’, என்று கூறுவதால் கழல்களாகிய பற்றுக்கோட்டை இறுகப் பற்றிக்கொண்டார் என்பது தெரிகிறது. வேறு பற்று இலேன் என்பதால் ஆசா பாசங்கள் காரணமாக வரும் பற்றை அறவே துறந்து, கழற் பற்று ஒன்றையே ஆதாரமாகக் கொண்டுள்ளார் என்ற கருத்தையே இந்த அடி விளக்குகின்றது. இந்தக் கழற் பற்று உறுதிப்பட, அந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் முறையில் உள்ளம் நைதல், கைகள் தலைமேல் ஏறுதல், கண்ணிர் ஆறாகப் பெருகுதல் ஆகிய மெய்ப்பாடுகள் நடைபெறுகின்றன என்பதை மூன்று, நான்காம் அடிகள் அறிவிக்கின்றன.

மெய் கலந்த அன்பு என்றால், சத்தியமானதூய்மையான வேறு கலப்பில்லாத முழுத்தன்மை பெற்ற அன்பு என்பதே பொருளாகும்.

இதையல்லாமல், இந்தத் தொடருக்கு மற்றொரு குறிப்புப் பொருளையும் கூறலாம். மனத்தளவில் நின்றுவிடும் அன்பு ஒரு வகை. அது பெரும்பாலும் புறத்தே வெளிப்படுவதில்லை; உடம்பில் எவ்வித மாறுபாட்டையும் செய்வதில்லை. மனம் விரும்பிய பொருளிடத்துச் செலுத்தப்படும் அன்பாகும் இது.

மனம், அடிமனம், மேல் சித்தம் என்பவற்றைக் கடந்து சித்தத்தின் அடிப்பகுதியில் தோன்றும் அன்பு, தான் இருப்பதை உடம்பின்மூலம் வெளிப்படுத்தியே தீரும். சித்தத்தில் தோன்றும் அன்பு, உள்ளம் நையவும், தலைமேல் கைகள் ஏறவும், கண்ணீர் ஆறாகப் பெருகவும் செய்துவிடும். உடம்போடு தொடர்புடைய, மேலே கண்ட செயல்களை வெளியிடச் செய்யும் அன்பு என்பதால் இதனை 'மெய் கலந்த அன்பு' என்று கூறினார் போலும்.

'மெய் கலந்த அன்பர்' என்ற தொடரால் அடிகளார் இத்தகைய அன்பர்களை இனம் பிரித்துக் காட்டுகிறார். இந்த மெய் கலந்த அன்பர் அன்பில், துன்பத்திற்கோ துயரத்திற்கோ நிலையாமைக்கோ இடமே இல்லை. இவர்கள் அன்பு ஆனந்தமயமானது, நிலையானது. இதன் பயனாகவே இவர்கள் நாள் முழுவதும் நையும் உள்ளத்தோடு தலைமேல் ஏறிய கையராய், கண்ணிரை ஆறாகப் பெருக்கிக்கொண்டு நிற்கின்றனர்.

இதனையே சேக்கிழார் பெருமான் 'இறவாத இன்ப அன்பு'(பெ.பு-காரைக்கால் 60) என்று பேசுகிறார்.

இத்தகைய பெருமக்களின் அன்பு, எத்தகையது என்பதை ஒருவாறு அறிந்துகொண்ட அடிகளார், அத்தகைய அன்பு தமக்கும் வேண்டும் என்ற கேட்கின்றார்.

அடுத்து வரும் பத்துப் பாடல்கள் (85-94) முன்னர் உள்ள பத்துப் பாடல்களோடு ஒரளவு மாறுபட்ட நிலையில் அமைந்துள்ளன. திருப்பெருந்துறை அனுபவம் கடந்த நிலையில், மனம் வருத்தி அந்த அதுபவம் மீட்டும் தமக்கு வரவேண்டும் என்று பேசும் நிலையில் அமைந்துள்ளன இப்பாடல்கள்.

திருப்பெருந்துறையில் கிடைத்த இறையனுபவமும் அடியார் கூட்டமும் தம்மை விட்டுப் போயினமைக்குத் தம்முடைய வாழ்க்கையில் ஏதோவொரு பெருங்குறை உள்ளதுபோலும் என்று நினைத்த அடிகளார், அது எதுவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றார். சென்ற 77ஆவது பாடலின் இறுதியில், 'மெய் கலந்த அன்பர் அன்பு எனக்குமாக வேண்டும்’ என்று வேண்டி நின்றவர், அக்கருத்தை மேலும் தொடராமல் இறைவனிடம் அது வேண்டும் என்று மேலும் வேண்டிப் பாடாமல், திடீரென்று புதிய திசையில் போகின்றார்.

சென்ற பத்துப் பாடல்களில் பலமுறை இத்தகைய அன்பு வேண்டும் என்று பாடியவர், திடீரென்று புதிய திசையில் போவதற்குரிய காரணம் என்ன?

ஒன்றைப் பல முறை வேண்டியும், அது கிட்டவில்லை என்றபொழுது இரண்டு வகையான காரணங்களைச் சிந்திக்கலாம். ஒன்று அதனைக் கொடுக்க வேண்டியவர் மனம் இரங்கவில்லை என்ற முடிவுக்கு வரலாம். இந்தக் காரணம் அடிகளாரைப் பொறுத்தமட்டில் பொருந்த வில்லை. வழியோடு போனவரை வலிதில் பற்றி இழுத்து ஆட்கொண்டு அனுபவத்தைத் தந்தவர், அடியார் கூட்டத்திடை இருக்கச் செய்தவர், தம்மாட்டு இரக்கம் கொள்ளவில்லை என்று நினைப்பதே தவறு.

அப்படியானால் இரண்டாவதாக உள்ள காரணத்தைச் சிந்திக்கலாம். என்ன காரணமாக இருக்கும்? இரக்கமுள்ளவரே, முன்னர் எளிதாகத் தந்தவரே இப்பொழுது தரவில்லை என்றால், அவர்மேல் குற்றம் இல்லை. எனவே, இரண்டாவது காரணத்தில் தம்மிடம் உள்ள குறை காரணமாகவே அவர் தரவில்லை என்ற முடிவுக்கு வருகிறார் அடிகளார். தம்மாட்டு உள்ள குற்றம் என்ன என்பதை நினைந்தவுடன், பொய் என்ற ஒன்று, விசுவரூபம் எடுத்து அடிகளாரின் முன்னே நிற்கின்றது. இந்தப் பத்துப் பாடல்களிலும், பின்னரும் பல பாடல் களிலும் பொய்யைத் தம் வாழ்க்கையோடு இணைத்துப் ‘பொய்யன்' என்று தம்மை அடிகளார் கூறிக்கொள்கிறார்.

இந்த ஆய்வின் முடிவில் அடிகளாருக்கு ஒர் உண்மை தெளிவாகின்றது. தாம் எவ்வளவு பொய்யராக இருப்பினும், தம்முடைய அன்பு எவ்வளவு பொய்யாக இருப்பினும், தம் பிழையை நினைந்து அழுதால் மறுபடியும் அவர் அநுபவத்தைத் தருவார் என்ற முடிவுக்கு வருகிறார் அடிகளார்.

திருச்சதகத்தின் கடைசிப் பத்துப் பாடல்கள் அடிகளார் மனத்தில் மறுபடியும் துளிர்த்த புது நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளன.

பொய்யோடு தம்மைத் தொடர்புபடுத்தி அதனாலேயே தாம் அவரைவிட்டுப் பிரிய நேர்ந்தது என்று சென்ற பத்துப் பாடல்களில் வருந்திய அடிகளார், இப்பொழுது புதிய கருத்தொன்றைப் பேசுகிறார். மனித வாழ்க்கையில் இயல்பாக நடைபெறுகின்ற ஒன்று உண்டு. கையில் ஒரு பொருள் கிடைத்தால் அதன் அருமைப்பாடு தெரியாமல் எளிதில் அதனை இழந்துவிடுவதும் உண்டு. அதுபோலத் திருப்பெருந்துறையில் எளிதில் தமக்குக் கிடைத்த குருநாதரையும் அவர் தந்த அனுபவத்தையும் கிடைத்தற் கரியது என்று அதன் அருமைப்பாட்டை அறிந்து போற்றி வைத்துக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்துவிட்ட தாகவும், அதனாலேயே அந்த அநுபவம் கழன்று போயிற்று என்றும், ஒர் எண்ணம் அடிகளார் மனத்தில் தோன்றியது போலும், அதன் பயனாகவே 'மையிலங்கு நற் கண்ணி பயங்கனே’ (96) என்ற பாடல் வெளிவருகிறது.

சென்ற பத்துப் பாடல்களில் தம்மை பொய்யன் என்று கூறிவிட்டு, இப்பொழுது அவர் அருமை தெரியாமல் கவனக்குறைவோடு இருந்தமையின் அவர் நழுவிவிட்டார் என்று பேசிக்கொண்டே வந்த அடிகளாருக்கு, ஒர் ஊக்கம் கிடைத்தது. அந்த ஊக்கம் பிறக்கத் திருப்பெருந்துறை நிகழ்ச்சியே காரணமாய் அமைகின்றது.

அமைச்சராக இருந்த தாம், அதிகாரம் காரணமாகக் கடமை என்ற பெயரில் பிறர்மாட்டுச் செலுத்த வேண்டிய அன்பை மறந்து, மனத்தைக் கல்லாக ஆக்கிக் கொண்டிருக்க வேண்டும். திருப்பெருந்துறைக்காரர் ஒரே விநாடியில் அந்தக் கல்லைப் பிசைந்து கனியாக்கினார். அத்தகைய பேராற்றல் படைத்தவர், தாம் எவ்வளவு பிழை செய்தாலும் அதனை மன்னித்து ஏற்கும் இயல்புடையவர் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இந்த அடிப்படையில்தான் ‘இல்லை நின் கழற்கு அன்பு அது என் கணே (98) என்ற பாடல் பிறக்கின்றது.

திருச்சதகத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உள் தலைப்புகளை எல்லாம் ஒருசேர ஒதுக்கிவைத்துவிட்டு, சதகம் முழுவதையும் மனத்துள் கொண்டு சிந்தித்தால் ஒரு சில சிந்தனைகள் தோன்றுகின்றன.

‘மெய்தான் அரும்பி’ என்று தொடங்கும் முதல் பாடல், இறையனுபவத்தின் உச்ச கட்டத்தில் தோன்றிய பாடலாகும். இதற்கு நேர் எதிராக, துணையிலி பிணநெஞ்சே என்று வரும் பகுதி அனுபவத்தை இழந்து வருந்தும் ஒரு நிலையாகும். இந்த இரண்டு நிலைக்கு உட்பட்டு அடிகளாரின் மனநிலை ஊசலாடுகின்றது. இறையனுபவம் உட்பட எந்த அனுபவமும் உடம்போடு ஒருவன் இருக்கின்றவரை, ஒருபடித்தாக நிலைத்து நிற்பதில்லை. ஏறுவதும் இறங்குவதும், திடீரென்று காணாமல் போவதும் - அதேபோலத் திடீரென்று தோன்றுவதும் அனுபவத்தின் இயல்பாகும். எனவே, அனுபவத்தின் உச்சகட்டத்தை அறிவிக்கும் திருச்சதகத்தின் முதற்பாடலும், 'துணையிலி பிணநெஞ்சே'(35) என வரும் பாடலும், இந்த ஏற்ற இறக்கங்களுக்கு உதாரணமாகும். இந்த அனுபவத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மனித நம்பிக்கையும் அதனோடு சேர்ந்து ஏறி இறங்கும் இயல்புடையதாகும். இவ்வாறு கூறுவது சிலருக்கு வியப்பையும் சினத்தையும் உண்டாக்கலாம். அனுபவம் அலைபோல ஏறுவதும் இறங்குவதும், நம்பிக்கையும் அதனோடு சேர்ந்து ஏறுவதும் இறங்குவதும் நம்போன்ற சாதாரண மனிதர்களுக்குக் கூறுவது சரி. அடிகளார்போல மாமனிதர்களுக்கும் இது பொருந்தும் என்று கூறுவது அடாதசெயல் என்று சிலர் கருதலாம். இம்மாமனிதர்களின் வாழ்க்கையைக்கூட அறிவு கொண்டு ஆராய்தலில் தவறொன்றுமில்லை. அவ்வாறு ஆராய்வதால்தான் நாமும் அவர்களைப் பின்பற்றி முன்னேறலாம் என்ற நம்பிக்கை மனித சமுதாயத்துக்குப் பிறக்கிறது. நால்வர் பெருமக்களில் திருஞானசம்பந்தர் தவிர ஏனைய மூவரையும் இவ்வாறு ஆராய்வதில் தவறொன்றுமில்லை. ஏன் திருஞான சம்பந்தரைமட்டும் விட்டுவிடவேண்டும்? திருஞான சம்பந்தர் ஏனை மூவரைப் போலப் பிறப்பெடுத்துச் சிலவற்றைச் செய்து, வீடுபேற்றை அடைய வேண்டிய நிலையிலில்லை. 'துறக்குமா சொலப்படாய்' (திருமுறை: 2-98-5) என்ற பாடலில் வரும் 'திருந்தடி மறக்குமாறு இலாத எனை இம் மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய்’ என வரும் பிள்ளையாரின் திருவாக்கும், இலம்பையங்கோட்டுர்த் தேவாரத்தில் ‘எனதுரை தனதுரை’ என்ற திருவாக்கும், அவர் மூவரினும் வேறுபட்டவர் என்பதனை அறிவுறுத்தும். எல்லாவற்றையும் கடந்து இறைவன் திருவடி நிழலில் இருக்கும் சில ஜீவன்முக்தர்கள் அவ்வப்பொழுது குறிப்பிட்ட செயலை நிறைவேற்ற உலகிற்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களுள் ஒருவர் திருஞானசம்பந்தர். இந்த நுணுக்கத்தைச் சேக்கிழாருக்குப் பிறகு யாரும் தெரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. ‘நால்வர் நான்மணிமாலை' ஆசிரியர் உள்பட யாரும் இதனைத் தெரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளற்பெருமான்மட்டும் இதற்கு விலக்காவார். நால்வரைப்பற்றியும் பாமாலை சூட்டிய வள்ளலார் திருஞானசம்பதரிடம் வரும்பொழுது தம்மை. மறந்து, 'ஞானசம்பந்த குருவே’ என்று பாடத் தொடங்குகின்றார்.

மணிவாசகப் பெருமானைப் பொறுத்தமட்டில் திருச்சதகம் அநுபவ ஏற்ற இறக்கத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டும் பகுதியாகும். இறையநுபவம் விட்டுப் போனதற்குத் தம்மாட்டுள்ள குறைகளே காரணம் என்று கருதித் தம்மைப் பொய்யன் என்று கூறிக்கொள்ளும் அடிகளார், கடைசிப் பகுதியில் குறைகளை நினைந்து அழுதால் அவன் அருளைப் பெறலாம் என்ற நம்பிக்கையோடு திருச்சதகத்தை முடிக்கின்றார்.

நீத்தல் விண்ணப்பம்

விண்ணப்பம் என்ற சொல் ஆறாம் நூற்றாண்டிலேயே நாவரசர் பெருமானால் பயன்படுத்தப்பெற்ற சொல்லாகும். ‘பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்’ (திருமுறை: 4-109-1) என்பது அவருடைய திருவாக்கு. விண்ணப்பம் என்பது உயர்ந்தோரிடத்துத் தாழ்ந்தோர் தங்கள் வேண்டுகோளை அறிவிக்கும் செயலாகும். வேண்டுகோள் என்று சொல்வதைவிட விண்ணப்பம் என்ற சொல் சற்று அழுத்தமுடையதாகும். ஒருவரிடம் வேண்டுகோள் விடுத்தால் அவர் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலும் இருக்கலாம். ஆனால் விண்ணப்பம், அவருடைய கவனத்தை ஈர்க்கும் முறையில் செய்யப்படுவதாகும்.

நீத்தல் விண்ணப்பம் என்பது நீத்தலைப்பற்றிய வேண்டுகோள். அப்படியானால் 'நீத்தல்’ என்ற செயல் எங்கே வந்தது? குருவாக வந்தவர் தம்மைவிட்டு மறைந்ததே, தம்மை அவர் நீத்த செயலாகும் என்று கருதினார் அடிகளார்.

ஒருவரை மற்றவர் விட்டு நீங்கிச் சென்றால் (நீத்தல்) அதற்கு இரண்டு காரணங்கள் இருக்க வேண்டும். ஒன்று, தம் துணை தேவையில்லை என்ற நிலையில் நீத்துச் செல்வார்கள். இரண்டாவது, இனி இவருடன் இருந்து எவ்விதப் பயனும் இல்லை; ஆகவே, நாம் சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் நீத்துச் செல்வதாகும்.

பெருந்துறை நாயகன் நீத்தும் சென்றுவிட்டான் என்றால் அதை மேலே கூறிய இரண்டு காரணங்களில் எந்த அடிப்படையில் நிகழ்ந்தது என்று அடிகளார் சிந்திக்கத் தயாரில்லை. என்றாலும் அவன் போய் விட்டான் என்ற உண்மை மனத்தை உறுத்திற்று. எனவேதான், எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்த நிலையிலும், என்னை விட்டுவிடலாகாது என்ற கருத்தில் ஐம்பது பாடல்கள் பாடுகிறார்.

தம்மைக் கைவிட்டுவிட வேண்டா என்று இறைவனை வேண்டிக்கொள்கின்ற கருத்தைப் பலரும் பாடியுள்ளனர். ஆனால், இந்த ஒரே கருத்தை ஐம்பது பாடல்களிலும் மையமாக வைத்துப் பாடிய பெருமை, சமய இலக்கிய உலகில் அடிகளார் ஒருவருக்கே உரியதாகும். ஒவ்வொரு பாடலிலும் 'விட்டுவிடாதே’ என்று கூறுவதால், இந்த ஐம்பது பாடல்களும் ஒரு தொகுப்பாயிற்று.

சதகத்தின் முடிவில் 'அழுதால் உன்னைப் பெறலாமே' (திருவாச. 94) என்று பாடியவர் மறுபடியும் தளர்ச்சி அடைகிறார். 'உன்னைப் பெறலாம்' என்ற நம்பிக்கை தளர்வதற்குக் காரணம் ஒன்று உண்டு.

எதிர்பாராமல் பெற்ற அனுபவம் ஒருமுறை கைவிட்டுப் போனமையின் அழுது அவன் அருளைப் பெற்றாலும், மறுபடியும் அது கை நழுவிப் போய்விடுமோ என்ற அச்சமும் தளர்ச்சியும் தோன்றுகின்றன. மனத்திட்பமும் தளர்ச்சியும் மாறி மாறி வருவதைச் சதகம் முழுவதிலும் காணமுடிகிறது. எந்த உயர்ந்த நிலையை ஒருவர் அடைந்துவிட்டாலும், மனித உடலுடன் இந்த உலகில் இருக்கின்ற வரை, இந்தத் திட்பமும் தளர்ச்சியும் இருக்கத்தான் செய்யும். இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாவிட்டால் மாறி மாறி வருகின்ற எண்ணப் போக்கைத் தெரிவிக்கும் பாடல்களைச் செம்மையான முறையில் புரிந்துகொள்ள இயலாது.

நீத்தல் விண்ணப்பத்தின் முதல் பாடல் சற்று ஆழ்ந்து சிந்திப்பதற்குரியது. தம்மைப் பொய்யன் என்றும் பெருங்குற்றங்கள் உடையவன் என்றும் அருளைப் பெறத் தகுதியற்றவன் என்றும் இதுவரை கூறிவந்த அடிகளார், இப்போது மற்றொரு புதிய கருத்தைப் பேசுகிறார். இவருக்குத் தகுதி இருக்கிறதா இல்லையா என்று பார்த்துப் பெருந்துறையான் ஆட்கொள்ளவில்லை. தமது தகுதியின்மை, தமக்கே தெரியும்பொழுது பெருந்துறை நாயகனுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? அப்படி இருந்தும் வழியோடு சென்ற தம்மை வலிந்து ஆட்கொண்டான் என்றால், அதற்குக் காரணம், அவனுடைய கருணை என்பது நன்கு விளங்கும். தகுதிபற்றி ஆராயாமல் கருணை ஒன்றையே காரணமாகக் கொண்டு ஆண்டுகொண்டான் என்றால் அந்தக் கருணை வற்றிவிடக் காரணம் இல்லையே! மனித உணர்ச்சிகளைப்போல இறைவனுடைய கருணை, ஏறி இறங்கும் தன்மை உடையதல்லவே! அது என்றும் ஒருபடித்தாக உள்ளதன்றோ!

இவற்றையெல்லாம் மனத்திற் கொண்ட அடிகளார், ‘கடையவனேனைக் கருணையினால் கலந்து, ஆண்டு கொண்ட விடையவனே!’ (திருவாச:105) என்று விளிக்கின்றார். இப்படி விளித்திட்ட பிறகு 'விட்டிடுதி கண்டாய்' என்று சொன்னால், அது அவன் கருணையைக் குறை கூறியதாக முடியுமே; என்றும் ஒருபடித்தாக உள்ள அந்தக் கருணை-தகுதிபற்றி ஆராயாமல் ஆண்டுகொண்ட அந்தக் கருணை இப்பொழுது விட்டுவிடும் என்று நினைப்பதே தவறல்லவா?

அப்படியிருக்க, விட்டிடுதி கண்டாய் என்று அடிகளார் கூறுவது எப்படிப் பொருந்தும்? இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு இப்பாடலின் இறுதி அடியில் அடிகளார் பயன்படுத்திய ஒரு தொடரை நன்கு மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டும். எம்பிரான்! தளர்ந்தேன் என்னைத் தாங்கிக் கொள்ளே’ என்பதே அந்தத் தொடராகும்.

தளர்தல், அடிகளாரைப் பொறுத்ததாகும். தளர்ச்சி அடைந்து விழப்போகிறோம் என்ற அச்சம் அடிகளார் மனத்தில் தோன்றுகிறது. எனவேதான், விழப்போகின்றவனைப் பின்னிருந்து இரண்டு கைகளையும் கொடுத்துத் தாங்கிக்கொள்வதுபோல், தம்மைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்கிறார்.

இக்கருத்தைச் சற்று விரிவாகக் காணவேண்டும். பசியுற்றிருப்பவர், நோயுற்றிருப்பவர் என்ற இருவருக்கும் பசியையும் நோயையும் போக்கிவிட்டால் அதன்பிறகு அவர்கள் தாமே இயங்க முற்படுவார்கள்; பிறருடைய உதவி தேவையில்லை. பெருந்துறையில் ஆட்கொண்டு, இறையனுபவத்தைத் தந்து, அடிகளாரின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தைக் குருநாதர் உண்டாக்கிவிட்டார் அல்லவா? எவ்வாறு ஆட்கொண்டார்? திருவடி தீட்சை செய்தார்; அடியார் கூட்டத்திடை இருக்கச் செய்தார். இவ்வளவும் நடந்து முடிந்த பிறகு, அவ்வழியைப் பின்பற்றி, அடிகளார் தாமே செல்ல வேண்டும் என்று இறைவன் கருதினால் அதில் தவறு என்ன இருக்கின்றது?

அவ்வழியைப் பின்பற்றிச் சென்று, சதா சர்வ காலமும் இறையனுபவத்தில் மூழ்கி இருக்கவேண்டும் என்று அடிகளார் விரும்புகின்றார். அது நடவாதபோது அச்சம் தோன்றுவது இயல்புதானே? எனவேதான், ஐம்பது பாடல்களிலும் ‘என்னைக் கைவிட்டுவிடாதே’ என்று பாடுகிறார்.

முதற் பாடலில் கைவிட்டுவிட வேண்டாம் என்ற விண்ணப்பத்தோடு மற்றொரு விண்ணப்பத்தையும் வைக்கின்றார். 'தளர்ந்துவிட்டேன் என்னைத் தாங்கிக் கொள்’ என்று சொல்லும்பொழுது ஒரு புதிய வேண்டுகோளாக அது வெளிப்படுகிறது. கைகொடுக்க வேண்டியவன் முன்னே நிற்கின்றான். தன் எதிரே இருப்பவனை அஞ்சாதே என்று சொல்லி அவனுடைய கைகளைப் பற்றிக்கொண்டு மனத்திற்குத் தென்பைத் தருகின்றான்.

இந்தச் செயலில் கைகொடுப்பவனின் உதவி ஐம்பது சதவிகிதம் என்றால் கை கொடுக்கப்பட்டவன் ஐம்பது சதவிகிதம் தென்புடையவனாக இருத்தல் வேண்டும். ‘விடுதி கண்டாய்' என்று சொல்கின்றவரையில் இந்த அடிப்படைதான் பேசப்பெறுகிறது.

பாடலின் நான்காவது அடியில் இந்த நிலை மாறி விடுகிறது. கைகொடுக்கப்பட்டவனிடம் இருக்கவேண்டிய தென்பு முற்றிலுமாக அழிந்துவிடுகிறது. இப்பொழுது எதிரே இருப்பவன், கையைமட்டும் கொடுத்துப் பயன் இல்லை. கொடுத்த கையைப் பற்றிக் கொள்ளும் ஆற்றல்கூட இவனிடம் இல்லை. அந்த நிலையைத்தான் 'தளர்ந்தேன்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

தளர்ந்து விழப்போகும் ஒருவனை, மற்றவன் பின்னே வந்து இரண்டு கைகளாலும் தாங்கிக்கொள்ள வேண்டுமே தவிர, முன்னே நின்று ஒரு கையை நீட்டிப் பயன் இல்லை. இந்த நுண்ணிய கருத்தைத்தான் தளர்ந்தேன், என்னைத் தாங்கிக் கொள்ளே என்று குறிப்பிடுகிறார்.

இத்தொடரில் மற்றொரு பொருளும் அமைந்திருக்கக் காணலாம். விழுகின்றவனுக்குத் தன்னிச்சை, தன்செயல் என்ற இரண்டும் இல்லை என்பதும் பின்னே இருந்து தாங்குகின்றவனிடம் முழுவதும் அடைக்கலம் ஆகி விட்டான் என்ற பொருளும் தொனிக்கின்றதல்லவா?

அடிகளார். தளர்ந்தேன், என்னைத் தாங்கிக்கொள்ளே என்று கூறும்போது தம்மை முழுவதுமாகத் தலைவனிடம் ஒப்படைத்துவிட்டார் என்ற கருத்தும் பெறப்படுகிறது அல்லவா? இதன் விரிவுரையாகத்தான் ‘அன்றே என்தன் ஆவியும் உடலும்' (திருவாச:500) என்ற பாடலும் பின்னர் வெளிப்படுகிறது.

தம்மைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்று இறைவனை அழைக்கும் அடிகளார், 'சடையவனே' என்ற சொல்லை அற்புதமாகப் பயன் படுத்துகிறார். இறைவனைக் குறிக்க ஆயிரக்கணக்கான சொற்கள் இருக்க, சடையவனே என்று ஏன் சொல்ல வேண்டும்? அதற்கொரு காரணம் உண்டு. தம்மைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் விண்ணப்பம் செய்யும்பொழுது கீழே விழும் எதனையும் தாங்கிக் கொள்ளும் அநுபவம் ஏற்கெனவே அவனுக்கு உண்டு என்பதை அறிவிக்கவே, இந்தக் கருத்துடை விளிச் சொல்லைப் பயன்படுத்துகிறார். மேலிருந்து விழும் கங்கையையே அநாயாசமாகத் தன் சடையில் தாங்கிக் கொண்டவன் அல்லவா அவன்? அகங்காரத்தோடு வந்த அவளையே தாங்கிக்கொள்ளும் அவன், தளர்ந்திருக்கும் அடியவராகிய தம்மைத் தாங்குதல் எளிதாகலின் 'தாங்கிக்கொள்ளே’ என்றார். ஆதலின், 'சடையவனே' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

தம் குறை தீர்க்கவேண்டும் என்று மிக்க பணிவோடு நீத்தல் விண்ணப்பத்தைத் தொடங்கினார் அடிகளார். ஒவ்வொரு பாடலிலும் விட்டுவிடாதே என்ற வேண்டுகோளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே வருகிறார். மனம் உருகிப் பாடுகின்ற இவர் ஒருமுறை அல்லது இருமுறை சொன்னால் போதாதா? ஐம்பது பாடல்களிலும் இதைச் சொல்லவேண்டிய காரணம் என்ன ? நீத்தல் விண்ணப்பம் தொடங்கி, பல பாடல்களைப் பாடியபிறகும் தம்மை இறைவன் விட்டுவிட மாட்டான் என்ற நம்பிக்கை முழுவதுமாக வரவில்லை போலும், தம் குறை தீர்க்கவேண்டும் என்று கெஞ்சும் முறையில் பாடிக்கொண்டு வந்த அடிகளார், 152, 153 ஆம் பாடல்களில் கெஞ்சும் முறையை அடியோடு மாற்றி விட்டார். இந்த இரு பாடல்களும் இறைவனுக்கு எச்சரிக்கைவிடும் முறையில் அமைந்துள்ளன. நீ எனக்கு அருள் செய்யாவிட்டால் உலகத்தார் உன்னைக் கண்டு சிரிக்கும்படியாகச் செய்துவிடுவேன் என்ற பொருளில் இரண்டு பாடல்களைப் பாடுகிறார். இது சற்றுப் புதுமையான திருப்புமுனை ஆகும்.

தம்மை இறைவனின் அடிமை என்று மனம், மொழி மெய்களால் ஒப்படைத்துவிட்ட ஒருவர், தம்முடைய எஜமானனுக்கு எச்சரிக்கை விடுவது எவ்வாறு பொருந்தும்?

இறைவனுக்குத் தம்மை அடிமையாக்கிக்கொண்ட நாவரசர் பெருமான்கூட திருநாகைக் காரோணத் திருவிருத்தத்தில் பின்வருமாறு பாடுகிறார்:


வங்கமலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே
எங்கள் பெருமான் ஒர் விண்ணப்பம் உண்டு அது கேட்டு அருளீர்
கங்கை சடையுள் கரந்தாய்! அக் கள்ளத்தைமெள்ள மெள்ள உமை
நங்கை அறியின் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே

(திருமுறை: 4-103-8,9)


அடக்கம், அமைதி என்பவற்றையே தம் வடிவாகக் கொண்ட நாவரசர் பெருமானுக்கு, இறைவனையே கேலி செய்யும் இந்தத் துணிவு எவ்வாறு வந்தது?

முழுதும் இறையடிமை பூண்ட நாவரசர், மணிவாசகர் ஆகிய இருவருமே இறைவனை எச்சரித்தும், கேலி செய்தும் பாடினார்கள் என்றால், தோழமை பூண்ட சுந்தரரைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமோ? கண்களை இழந்த நிலையில், சுந்தரர் மனம் மிகுதியும் நொந்து இறைவனைக் குறைகூறிப் பாடிய பாடல்கள் பலப்பலவாகும்.

பிழையுளன பொறுத்திடுவர் என்று அடியேன்

பிழைத்தக்கால்

பழியதனைப் பாராதே படலம் என் கண் மறைப்பித்தாய்

(திருமுறை: 7-89-)

அன்றில் முட்டாது அடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி அவை போல
என்றும் முட்டாப் பாடும் அடியார் தம் கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் வீழ்ந்தால் வாழ்ந்து போதிரே

(திருமுறை: 7-95-3)

விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினீர்
எற்றுக்கு அடிகேள் என் கண் கொண்டிர் நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாராது ஒழிந்தால் வாழ்ந்து போதீரே

(திருமுறை: 7-95-2)

பாரூர் அறிய என்கண் கொண்டிர் நீரே பழிப்பட்டீர்

(திருமுறை: 7-95-11)

அடிமைத் திறம் கொண்ட இருவர், தோழமைத் திறம் போற்றிய ஒருவர் ஆகிய மூவருமே இறைவனை எச்சரித்தல், அவனிடம் பிணங்கிக்கொள்ளுதல், கேலி செய்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுவதைக் கண்டோம். இதன் அடிப்படைபற்றிச் சற்றுச் சிந்திப்பது நலம்.

பெரிய அளவில் இறை நம்பிக்கை உடையவர்கள் இரு வகைப்படுவர். ஒரு சாரார் ஓரளவு அறிவின் துணை கொண்டு அவனைப்பற்றிய ஆய்வில் தொடங்கி, இறுதியாக அனைத்திற்கும் காரணம் அவன்; எங்கும் எல்லாவற்றிலும் ஊடுருவி நிறைந்தும் அவற்றை விட்டு வெளியே தனித்தும் நிற்பவன் அவன், என்பதை அறிகின்றார்கள். இந்த ஞானத்தின் அடிப்படையில் இப் பெருமக்களுக்கு இறை பக்தி அல்லது இறையுணர்வு ஏற்படுகிறது. எந்த நிலையிலும் இறைவன் மேம்பட்டவன் என்ற நினைவில் உள்ள இவர்கள், அவனிடம் உறவு கொள்ளவோ, தமக்குரியவனாக அவனைச் செய்து கொள்ளவோ முற்படுவதே இல்லை.

இதனெதிராக, மற்றொரு சாரார் ஓரளவு அறிவின் துணை கொண்டு அவனை அறிய முற்பட்டு அந்த ஆய்வின் முடிவில் தம் அறிவை, உதறித் தள்ளி விடுகின்றனர். இவர்கள், உள்ளத்தில் நிறையும் அன்பு காரணமாக அனைத்தையும் கடந்து நிற்கின்ற கடவுளைத் தமக்கு உறவுடைய பொருளாகக் கருதத் தொடங்கி விடுகின்றனர். இந்த உறவுமுறை முதிர்ந்தவுடன் இறைவனைத் தமக்குரியவனாகவே கருதத் தொடங்கி விடுகின்றனர். உறவின் அடிப்படையில் தோன்றிய இந்த உரிமை, முதிர்ச்சி அடைய அடைய அவனைத் தாயாக, தந்தையாக, குழந்தையாக, காவலனாக, நண்பனாக, எஜமானனாக, தமக்கே உள்ள உரிமைப் பொருளாக (காதலனாக இவர்கள் கருதத் தொடங்கிவிடுகின்றனர். இதனைப் பொதுவாக மேனாட்டாரும், சிறப்பாகக் கிறித்துவர்களில் ஒரு பகுதியினரும் தனி உரிமைக் கடவுட்கொளகை (Concept of Personalised God) என்று கூறுவர்.

தனி உரிமை உறவு முறை ஏற்பட்டதனால்தான் பின்வரும் பாடல்கள் இப்பெருமக்களிடம் தோன்றலாயின.

என்னை வருத்திலையேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே!

(திருமுறை: 4-105-2,3)

யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி

(திருமுறை: 7-51-10)

சங்கிலிக்கா என் கண் கொண்ட பண்ப

(திருமுறை: 7-69-3)

குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளும்
கொள்கையால் மிகைபல செய்தேன்

(திருமுறை: 7-69-6)

குன்றே அனைய குற்றங்கள் குணமாம் என்றே நீ

கொண்டால்

என்தான் கெட்டது இரங்கிடாய் எண்தோள் முக்கண்

எம்மானே
(திருவாச: 498)

திருவாசகத்தில் உள்ள பாடல்களை ஆழ்ந்து கற்பவர்களுக்கு ஓர் அடிப்படையான ஐயம் மனத்தில் தோன்றினால், அது இயல்பே ஆகும். சிவபுராணத்திலேயே ‘இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்’ என்றும், அடுத்து வரும் பகுதிகளில், ‘என் உள் புகுந்து ஆண்டான்’ என்றும் ‘என்னை ஆண்டாய்க்கு என்றும், புகுந்து நின்றான்’ என்றும், பலபடியாகப் பாடிய அடிகளார், நீத்தல் விண்ணப்பம் முழுவதிலும் ‘என்னை கைவிட்டுவிடாதே’ என்று பாடுவது முன்னுக்குப் பின் முரணாக இருப்பதுபோல் தோன்றலாம்.

ஆழ்ந்து நோக்கினால், இந்தக் கூற்றுக்களில் முரண்பாடு ஏதும் இல்லை என்பது தெரியும். திருப்பெருந்துறை நிகழ்ச்சி முற்றாக இவரை இறையனுபவத்தில் மூழ்க வைத்தது என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. அந்த அடிப்படையில்தான் இமைப் பொழுதும் போன்ற தொடர்கள் இடம்பெற்றன.

இந்த அனுபவத்திலேயே அடிகளார் இருந்திருப்பின், திருவாசகம் என்னும் மனித குலத்தை உய்விக்கும் பாடல்கள் தோன்றியிருக்க முடியாது. அந்த அனுபவத்திலேயே முழுவதுமாக இருந்திருப்பின் ‘சிரிப்பார், களிப்பார்' என்ற முறையில் அடிகளாரின் வாழ்க்கை கழிந்திருக்கும். மனித வாழ்க்கையில் அடையவேண்டிய மிகப் பெரிய ஒன்றைத் திருப்பெருந்துறையில் அவர் பெற்றுவிட்டார். பின்வரும் சந்ததியினராகிய நமக்கு அதனால் என்ன பயன் ? நமக்குப் பயன் விளைய வேண்டுமானால் திருவாசகப் பாடல்கள் தோன்ற வேண்டும். அந்தப் பாடல்கள் தோன்றவேண்டுமானால் மூழ்கிய இறையனுபவத்திலிருந்து அடிகளார் வெளிப்பட வேண்டும்; வெளிப்பட்ட பிறகு அந்த அனுபவத்தை நினைந்து நினைந்து, உருகி உருகிப் பாட வேண்டும்.

இறையனுபவத்தில் இருந்துகொண்டே அது போய்விட்டதாகக் கற்பனை செய்துகொண்டு பாடமுடியுமேனும், அவ்வாறு பாடியிருப்பின் அது திருவாசகமாக இராது; வெறுவாசகமாகத்தான் இருக்கும். அதனாலேயே இறைவன் அடிகளாருக்குக் கொடுத்த அனுபவத்தை உண்மையிலேயே திரும்ப வாங்கிக்கொண்டான்.

அனுபவம் தம்மை விட்டுப் போய்விட்டது என்ற உணர்வில் பாடியதுதான் நீத்தல் விண்ணப்பம். நீத்தல் விண்ணப்பம் பாடிக்கொண்டுவரும்போதே அந்த அனுபவம் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டும்வர, முழுவதுமாக அது சித்திக்கவில்லை என்ற மனத்தாங்கலில்தான் 152, 153ஆம் பாடல்கள் தோன்றுகின்றன.

மனத்தாங்கல் காரணமாக இரண்டு பாடல்களில் ஏசிவிட்டாலும் தாம் ஏசினது பிழை என்று கருதுகிறார் அடிகளார். ஏன்? வழியோடு போன தம்மை இழுத்துப் பிடித்து அருள் செய்து, அனுபவத்தைத் தந்தான். அப்படித் தந்தது அவன் கருணை காரணமாகவே தவிரத் தம் தகுதி காரணமாக அன்று என்பதை அடிகளார் உணர்ந்துள்ளார். கருணை காரணமாகத் தந்த ஒன்றைத் தாம் வைத்துக் காப்பாற்ற முடியாமையால்தான் தம்மைக் கைவிட்டு விடாதே என்று கெஞ்சினார். அந்தக் கெஞ்சல் பயனளிக்காதபோது இரண்டு பாடல்களில் ஏசினார். ஏசுகின்ற பாடல்கள் வெளிவருகின்ற அதே நேரத்தில் அடிகளாரின் ஆழ் மனத்தில் ஓர் உண்மை புலப்படுகிறது. தம் குறை காரணமாக அனுபவம் கைவிட்டுப்போக, அனுபவத்தைத் தந்தவனை ஏசுவதற்கு என்ன காரணம்? காரணம் ஒன்றும் இல்லை. எனவே, ஏசியது தவறு என்று உணர்கிறார். அப்பிழையைச் செய்ததற்கு மன்னிப்புக் கோரும் வகையில்,


ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து
வேசறுவேனை விடுதி கண்டாய்

என்று பாடுகிறார். (வேசறுதல் = கழிவிரக்கம்)

இப்பாடலின் முதலடி 'ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து வேசறுவேன்’ என்று நிற்கின்றது. கொண்டுசுட்டிப் பொருள் செய்தால், யான் உன்னை ஏசினும், ஏத்தினும் என் பிழைக்கு இரங்கி வேசறுவேன் என்று நிற்கும். ஏசினும், ஏத்தினும் என்பவை முற்றிலும் முரண்பட்ட சொற்களாகும். ஏத்துதல் என்பது ஒருவருடைய பண்புகளை உயர்த்திச் சொல்லி, அதன் பயனாாக அவர் உயர்ந்து நிற்கின்றார் என்ற பொருளைத் தரும். இதன் எதிராக, ஏசுதல் என்பது அவரிடம் இல்லாத, அல்லது உள்ள குறைகளைப் பெரிதுபடுத்திக் கூறி, அவற்றால் அவர் தாழ்ந்து நிற்கின்றார் என்று பழிப்பதாகும். முற்றிலும் மாறுபட்ட அந்த இரண்டு சொற்களையும் ஒன்றாக அடுக்கி, 'உம்'மையும் கொடுத்துப் பாடுகிறார் அடிகளார்.

ஒரு வேளை ஏசிவிட்டால் பின்னர் அதனை நினைந்து, தாம் செய்தது பிழை என்று உணர்ந்து கழிவிரக்கம் கொள்வது நியாயமே ஆகும். ஆனால், ஏத்திப் புகழ்ந்த பிறகு என் பிழைக்கே வேசறுவேன்’ என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? இதனைப் பாடியவர் இறையருளில் தோய்ந்த தலையாய கவிஞர் ஆவார். எனவே, அவரது ஒவ்வொரு சொல்லையும் சிந்தித்துப் பொருள்கொள்ள வேண்டும். 'யான்’, ‘உன்னை’ என்ற இரண்டு சொற்களும் 'ஏசினும்' என்ற சொல்லுக்கு முன்னர்க்கூட வந்திருக்கலாம். அவ்வாறு மாற்றிப் பாடியிருந்தாலும் இதே பொருளைத்தான் தரும். அப்படியிருக்க ‘ஏத்தினும்' என்ற சொல்லிற்கு முன்னர் 'யான்' ‘உன்னை' என்ற சொற்களைப் பெய்ததன் நோக்கம் என்ன? ஏசல், ஏத்தல் என்ற இரண்டிலும் ஏசப்படுபவனும் ஏத்தப் படுபவனும் ஒருவனாக இருக்கின்றான்; ஏசுகின்றவரும் ஏத்துகின்றவரும் ஒருவராகவே உள்ளார். எனவே, எதிரே ஒருவன், இப்புறம் ஒருவர் என்ற இருவரைத் தவிர மூன்றாவது ஒருவருக்கு அங்கு இடமே இல்லை.

எதிரே உள்ளவனிடம் குறைகள் இல்லாவிட்டாலும், தமக்கு அவன் ஒன்றும் துயர் செய்யாவிட்டாலும், தம் துயரம் காரணமாக, எதிரே உள்ளவனிடம் இல்லாத குறைகளைச் சொல்லி ஏசுதல் மனித மனத்தின் குறைபாடுகளில் ஒன்றாகும். அவன்பால் குறை ஒன்றும் இல்லை என்று அறிந்தவுடன் தாம் ஏசியது தவறு என்று ஏசியவன் உணர்கின்றான். இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை.

அடுத்தபடியாக உள்ள, ஏத்துதலில் எங்கிருந்து பிழை வரும்? யாரோ ஒருவனை ஏத்தினான் என்றால், ஒன்று அவனிடம் உள்ள நற்பண்புகளை ஏத்தி இருக்க வேண்டும். அல்லது வேறு பயன் கருதாது அவனிடம் இல்லாத, காணப்படாத நற்பண்புகளை அவன்மேல் ஏத்திப் புகழ்ந்திருக்கவேண்டும். இதில் எம்முறையில் ஏத்தினாலும் ஏத்துபவன் எப்பிழையும் செய்யவில்லை. எனவே, வருந்த வேண்டிய தேவையும் இல்லை.

ஆனால், அடிகளாரின் பாடல், 'ஏத்தினும் என் பிழைக்கே இரங்கி' என்று தெளிவாகவே உள்ளது. இதனை விளங்கிக்கொள்ள வேண்டுமானால் முன்னர் உள்ள இரண்டு சொற்களையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏத்துபவர் அருட்கடலில் மூழ்கி எதிரே உள்ள பொருளினை ஏத்தத் தொடங்கினால், சில விநாடிகளில் ஏத்துபவர் அங்கே இருக்கமாட்டார். அதுதான் உண்மையான ஏத்துதல். இவ்வாறில்லாமல் ஏத்துபவர், தம் தனித்தன்மையை மறவாமல், 'நான் ஏத்துகிறேன்’ என்ற தன்முனைப்போடு ஏத்தினால், சொற்கள் ஏத்துவதாக இருக்குமே தவிர 'நான்' என்ற ஆணவம் அழியாத காரணத்தால், அது உண்மையான ஏத்துதலாக இராது.

அடிகளாரைப் பொறுத்தவரை ‘தான்' என்பது முற்றும் அழியவில்லை என்பதைக் குறிப்பாக உணர்த்தவே ‘யான்' உன்னை ஏத்தினும் என்றார். இவ்வாறு பொருள் கொள்வது ஒன்று.

இந்த நுணுக்கத்தை நன்கு புரிந்துகொண்ட வள்ளற்பெருமான் திருவாசகத்தைப்பற்றிப் பாடும்போது நின் வாசகத்தை 'நான்' கலந்து பாடுங்கால் என்று பாடி அருளினார். இறைவனை ஏத்தினாலும் திருவாசகத்தைப் பாடினாலும் ‘நான்’ என்பது தனித்து நிற்காமல் அந்த ஏத்துதலிலும் பாடுதலிலும் கரைந்துவிட (கலந்து) வேண்டும் என்பதே கருத்தாகும்.

இக்கருத்தைக் 'கடுக்கன்' தியாகராஜ தேசிகர் தாம் பாடிய திருவேரகப் பதிக்கத்தில் 'ஒரு தரம் சரவணபவா’ என்று தொடங்கும் பாடலில் மிக நுணுக்கமாக வைத்துக் காட்டுகிறார். ‘பரிவாகவே அனந்தம் தரம் சரவணபவா என்று நான் சொல்லியும் எண்ணியது பலியாது இருப்பது ஏனோ? என்ற பகுதியில் அக்குற்றம் என்ன என்பதை விளக்குகிறார். பரிவாகச் சொல்லியது உண்மை; அனந்தந்தரம் சொல்லியதும் உண்மை; அது பலியாமல் போனதும் உண்மை. இது ஏன் என்பதற்குக் காரணம் ஒரு சொல்லில் சுட்டப்பெறுகிறது. 'நான் சொல்லியும்’ என்பதில் உள்ள ‘நான்’ என்ற சொல்தான். அக்குறையைச் சுட்டி நிற்கிறது.

அடிகளார் பாடலில் 'யான் உன்னை ஏத்தினும்’ என்ற தொடரில் ‘யான்’ இருத்தலால், ஏத்துதல் பயனற்றதாகிவிடுகிறது. வேறு வகையாகக் கூறுமிடத்து அந்த ஏத்துதலே பயனற்ற சொற் கூட்டமாக அமைந்து விடுகிறது. பயனில்லாத சொற்களைக் கூறுதல் பிழை. ஆதலின், 'ஏத்தினும் என் பிழைக்கே இரங்கி' என்றார்.

இவ்வாறு இல்லாமல், வேறு ஒருவகையாகவும் பொருள்கொள்ளலாம். எல்லை கடந்து நிற்கும் ஒருவனுடைய புகழை ஏத்திக் கூறத்தொடங்கும்பொழுது நம்மையும் அறியாமல் ஒரு பிழை நேர்ந்துவிடுகிறது. புகழ்ந்துகொண்டே செல்லும்பொழுது அப்புகழுக்கு ஒர் எல்லை வகுத்துவிட்டதாக மனத்திடை ஒர் எண்ணம் தோன்றக்கூடும். சாதாரண மனிதர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் புகழுக்கு ஒர் எல்லை உண்டு. ஆதலின், இவ்வாறு கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், எல்லையற்ற புகழுடைய ஒருவனைப் புகழத் தொடங்கி, ஒர் எல்லைக்கு வந்துவிட்டோம் என்று நினைத்தால், அது பெருந்தவறாகும். இறைவனை ஏத்துதலாகிய நற்செயலே ஒரு பிழைக்குக் காரணமாகி விடுகிறது.

இந்த உண்மையைத் திருமுருகாற்றுப்படை நன்கு விளக்குகிறது. முருகப் பெருமானைத் தேடிச் செல்கின்ற பக்தன் ஒருவன், இறுதியில் அவன் இருக்கும் இடத்தைக் கண்டதாக அவனை ஏத்தத் தொடங்குகிறான்.

'மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!’ என்ற முறையில் ஏத்தத் தொடங்கி, அவன் புகழைச் சொல்லிக் கொண்டே வந்தான். திடீரென்று அந்தப் பக்தனின் மனத்தில் ஒர் எண்ணம் தோன்றிற்று. என்னுடைய அறியாமை இருந்தவாறு என்னே! எத்தனை பிறவிகள் எடுத்தாலும், அத்தனை பிறவிகளிலும் தொடர்ந்து அவனுடைய புகழைக் கூறிக்கொண்டு வந்தாலும் அது கூறிமுடிந்ததாக ஆகாதே என்று உணர்ந்தான். ஏத்தலில் கூடப் பிழை உள்ளது என்பதை உணர்ந்த அந்தப் பக்தன், ‘ஐய! நின் அளந்து அறிதல் மன்னுயிர்க்கு அருமையின் நின்னடி உள்ளி வந்தனன், நின்னொடு புரையுநர் இல்லாப் புலமையோய்’ (திருமுருகாற்றுப்படை: 78-79) என்று கூறிவிட்டு, வாயை மூடிக்கொண்டான். புகழ்தலில்கூடப் பிழை உண்டு என்று உணர்ந்தவன் வாயை மூடிக் கொண்டவுடன் முருகப்பெருமான் வெளிப்பட்டு 'அஞ்சல் ஒம்புமதி! அறிவல் நின் வரவு!’ (திருமுருகாற்றுப்படை:291) எனக் கூறிகான் என்ற முறையில் திருமுருகாற்றுப்படை ஒரு புதிய கருத்தைப் பேசுகிறது.

திருமுருகாற்றுப்படையிலும் முருகனைப் புகழ்ந்து பாடியவன் முதலில் தன்னை மறக்கவே இல்லை. தன்னை மறவாமல் ‘நான்’ என்ற எண்ணத்துடன் எத்தனை புகழ்ந்தாலும் முருகன் அங்கே தோன்றவில்லை. அதனைப் பிழையெனக் கண்ட பக்தன் 'நான்’ என்பதை மறந்து தன் வாயை மூடியவுடன் முருகன் வெளிப்பட்டான். இந்த அடிப்படையில் அடிகளாரின் 'யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே இரங்கி' என்ற அடிக்குப் பொருள் கொள்ளலும் ஒருவகையாகும்.

இனி, மூன்றாவது வகையாகப் பொருள் கொள்வதும் ஒன்று. முக்குண வசப்பட்ட ஒருவரைமட்டும்தான் ஏத்தவோ இகழவோ முடியும். குணங்குறி கடந்தவனாகிய பரம்பொருளை ஏத்தினாலும் இகழ்ந்தாலும் அப்பொருள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. அப்பொருளின் இயல்பை அறியாது ஏத்தவோ இகழவோ செய்தால், அது செய்தவர்களைப் பாதிக்குமே தவிர அப்பொருளைப் பாதிக்காது. ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்தவர்கள் ஏத்தல், இழித்தல் என்ற இரண்டிலும் பொருளில்லை என்பதை உணர்ந்து, வாய் முடி மெளனியாக இருந்துவிடுகின்றனர். ஏத்துபவரின் உள்ளக்கிடக்கை மட்டமானதாகவும் இருக்கக்கூடும்; இகழ்பவரின் உள்ளக்கிடக்கை மிக உயர்ந்ததாகவும் இருக்கலாம். எனவே, ஏத்தல், இகழ்தல் என்ற இரண்டையும் தாங்கிவரும் சொற்கள் பொருளற்றனவாகி விடுகின்றன. இதனை மனத்திற் கொண்டுதான் அருணகிரிப் பெருமான் ‘முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்’ (கந்த. அல: 22) என்று பாடுகிறார்.

இக்கருத்தை மனத்திற் கொண்டு பார்த்தால் அடிகளாரின் பாடலுக்குப் புதிய விளக்கம் கிடைக்கின்றது. ‘என் பிழைக்கே இரங்கி வேசறுவேன்’ என்பது சதாசர்வ காலமும் அவருடைய அகமனத்தில் இருந்த எண்ணமாகும். ஆனால், அவருடைய வாய்மட்டும் சில நேரங்களில் ஏத்திற்று. இந்த நிலையில் பாடலுக்குப் பின்வருமாறு பொருள் கூறவேண்டும். ஐயனே என் ஆழ் மனத்தில் இடைவிடாமல் என் பிழையை எண்ணிக் கழிவிரக்கம் கொண்டு இனி என்னே உய்யுமாறு என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். அந்த ஆழ்மனத்தோடு தொடர்பு இல்லாமல் வாயளவில் ஏசலும் ஏத்தலும் நடை பெறுகின்றன. எனவே, இவற்றைப் பொருட்படுத்தாமல் பிழைக்கு இரங்கி வேசறும் என்னை விட்டுவிடாமல் காப்பாயாக’ என்று பொருள்கூறுதலும் ஒரு வகையாகும்.

அடிகளாரின் உளப்பாங்கை அறியவும், திருப்பெருந்துறை அனுபவத்திற்குப் பிறகு அவர் வளர்ச்சி முறையை அறியவும் நீத்தல் விண்ணப்பம் பேருதவி புரிகின்றது என்பதை மனத்துட் கொண்டு மறுபடியும் நீத்தல் விண்ணப்பத்தைப் படிப்பது நலம்.

திருவெம்பாவை

திருவெம்பாவைபற்றிய சில செய்திகள் முன்னரே தரப்பெற்றுள்ளன. இந்த இருபது பாடல்களையும் ஒரே நேரத்தில் வரிசையாகப் படித்தால் அதிலொரு புதுமையைப் காணமுடியும்.

மணிவாசகப் பெருமானுக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்டவராகிய கோதைநாச்சியார் தாம் பாடிய திருப்பாவையில் பாவை நோன்பு, அந்த நோன்பிற்கு வேண்டிய பொருள்கள், நோன்பு நோற்கும் முறை ஆகியவைபற்றி விரிவாகப் பேசுகிறார். ஆனால், அடிகளாரின் திருவெம்பாவையில் நோன்பைப்பற்றிய எவ்விதக் குறிப்பும் இல்லை. இதை மனத்துட் கொண்டு பார்த்தால், பழைய பாவை நோன்பின் ஒரேயொரு பகுதியைமட்டும் அடிகளார் எடுத்துக்கொண்டுள்ளார். என்பது தெரியவருகிறது.

விழித்தெழுந்த பல பெண்கள் ஒன்றுகூடி இறைவன் புகழைப் பாடிக்கொண்டு தெருவிலே சென்று, தங்களுள் ஒருத்தியைக் காணாமையால் அவள் இல்லம் சென்று அவளை எழுப்புவதாக உள்ள பகுதி. திருப்பாவை, திருவெம்பாவை என்ற இரண்டிற்கும் பொதுவாகவுள்ளது. இதனைக் கூறவரும் திருவெம்பாவையின் முதல் எட்டுப் பாடல்கள் வேறு ஏதோ ஒரு கருத்தை மனத்துட் கொண்டு, இந்த மரபையும் ஏற்றுக்கொண்டு பாடியதுபோலத் தெரிகிறது.

மனித மனம் எப்பொழுதும் ஒரே நிலையில் நின்று இயங்குவதில்லை. உறங்குகின்ற பெண்ணைப்பற்றிக் கூறவரும் திருவெம்பாவை, அப்பெண் சாதாரண காலத்தில் எப்பொழுதும் என்ன நினைத்தாள், என்ன பேசினாள் என்பதை 'இராப்பகல் நாம் பேசும்போது எப்போதும் பாசம் பரஞ்சோதிக்கு என்பாய்’ என்ற சொற்களாலும் 'முன்வந்து எதிர் எழுந்து என் அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளுறித் தித்திக்கப் பேசுவாய்’ என்ற சொற்களாலும் மிக அழகாக எடுத்துரைக் கின்றது. மேலும், அப்பெண்கள் 'எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ' என்று கூறு முகத்தால், அவளின் அன்பின் ஆழத்தைத் தாம் நன்கு அறிந்திருப்பதாகக் கூறுகின்றனர். உறங்குகின்ற பெண் சாதாரண காலத்தில் தோழியருடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது பேசிய பேச்சு, அவள் அன்பின் ஆழத்தையும், அவளின் நெஞ்சு உரத்தையும், அவள் தன்னம்பிக்கையையும் எடுத்துக் காட்டுவதாய் அமைந்து உள்ளது. ‘மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம்போல் அறிவோம்’ என்று கூறியதால் இவை விளங்குகின்றன. தனி ஒருத்தி தன்னைப்பற்றிப் பேசும் பொழுது, நான் என்று கூறாமல் தன்மைப் பன்மை வாய்பாட்டால் நாம் அறிவோம் என்று கூறியது ஏன்? மலைஇலக்காக உள்ள பொருளை அறிந்ததால் ஏற்பட்ட உள்ளப் பெருமிதத்தின் விளைவாக வெளிப்பட்ட சொற்களாகும் இவை.

‘நாம்போல் அறிவோம்’ என்ற தொடரில் போல் என்பதை அசைநிலையாக்கி நாம் அறிவோம் என்றே பலரும் பொருள் கூறியுள்ளனர். அவ்வாறு கொள்ளாமல் போல் என்பதற்குப் போன்றவர்கள் என்று பொருள் கூறினாலும் தவறில்லை. அப்படிப் பொருள் கொள்ளும் போது நாம்போல்’ என்பதற்கு நம்போன்றவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

மேலே கூறிய மூன்று பகுதிகள் உறங்குகின்றவளின் உள்ளக் கிடக்கையையும் அவள் பேச்சுத் திறனையும் எந்நேரமும் இறையன்பில் ஊறித் திளைப்பவள் என்பதையும் நன்கு விளக்கக் காணலாம்.

அப்படிப்பட்ட ஒருத்தி இப்பொழுது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றாள். வாயிலில் நின்று தோழிமார் உரக்கப் பாடி எழுப்பினாலும் எழுந்ததாகத் தெரியவில்லை. ஆனால், அவளுடைய உறக்கம் ஏனையோர் உறக்கம் போலச் சோம்பல் காரணமாக விளைந்ததாகத் தெரியவில்லை. அதன் எதிராகத் திருவெம்பாவையின் முதற் பாடலிலேயே அவளது உறக்கத்தின் சிறப்புப் பேசப் பெறுகிறது.

தோழிமார்கூட்டம் இறைவன் புகழைப் பாடிக் கொண்டு தெருவழியே வந்து இவள் வீட்டு முன்றிலில் நிற்கின்றது. அப்பொழுது உள்ளே என்ன நடைபெறுகிறது என்பதைத் தோழிகளில் ஒருத்தி கூர்ந்து கவனித்துச் சொல்லுகின்றாள். ‘வாழ்த்தொலி வீதிவாய்க் கேட்டலும் விம்மிவிம்மி மெய்ம்மறந்து கிடந்தாள்’ என்று கூறுகிறாள் அத்தோழி. எனவே, உள்ளிருப்பவளின் உறக்கம், ஏனையோரின் உறக்கம்போன்றது அன்று என்பது வெளிப்படுகின்றது. இறைவன்பற்றிய ஒலி காதில் நுழைகிறது; உடனே விம்முகிறாள், மெய்ம்மறக்கின்றாள்; அதன் விளைவாக உடல் செயலற்றுக் கிடக்கின்றது.

இறைவன் புகழைக் காதால் கேட்டவுடன் சமாதி நிலையை அடையும் பகவான் இராமகிருஷ்ணரின் வாழ்க்கை, இப்பகுதிக்கு விளக்கம் தருகிறது. இப்படிப்பட்ட ஒருத்தியின் சமாதி நிலையை நன்கு புரிந்துகொள்ளாமல் தோழிமார் நையாண்டி செய்கின்றனர்.

சமாதி நிலை கலைந்தபொழுது இவளும் புறத்தே நிற்கின்ற தோழிமாரைப் பார்த்து, 'எல்லோரும் வந்து விட்டனரோ? நீங்கள் பழை அடீயிர், நாங்கள் புத்தடியோம்’ என்றெல்லாம் பேசுகிறாள்.

சமாதி நிலைக்குச் செல்லக்கூடிய ஒருவரைப் புறத்தே உள்ளவர்கள் எளிதில் புரிந்துகொள்வது இயலாத காரியம். அந்த நிலைதான் இங்கேயும் நிகழ்கின்றது. முதல் பாடலிலேயே கேட்டல், விம்முதல், மெய்ம்மறத்தல். கட்டைபோல் கிடத்தல் என்ற சமாதி நிலைக்கான எல்லா நிலைகளும் பேசப்பெற்றுவிட்டமையின், உள்ளே உறங்குபவள் சோம்பலில் உறங்கவில்லை என்பதையும், புறத்தே நிற்கின்றவர்களும் அவளுடைய உண்மை நிலையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதையும் அடிகளார் விளங்கவைக்கின்றார்.

விழித்துக்கொண்டிருக்கும்போது தன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்திப் பேசிய அவள், தனக்குச் சமாதிநிலை கைகூடியதைத் தோழிமாரிடம் கூறினாளில்லை. அத் தோழிமாரும் அவளது வளர்ச்சியை அறிந்தார்களில்லை. எனவேதான், உறங்குகின்றவளைப் 'பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படீறீ' என்று எள்ளி நகையாடுகின்றனர். இதன் பிறகு, உறங்குகின்றவள் வெளியே எழுந்துவந்து, எல்லோருடனும் சேர்ந்து நீராடச் செல்வதாகப் பாடல்கள் அமைகின்றன.

உறங்கி எழுந்து வந்த அவள், புறத்தே உள்ளவர்களுக்குத் தலைமை வகித்து நீராட அழைத்துச் செல்கிறாள் என்று நினைப்பதில் தவறில்லை.

ஒருத்தி உள்ளே உறங்குகின்றாள், அவளை ஏனையோர் வந்து எழுப்புகின்றனர் என்று சொல்லப்பட்ட பழைய மரபுபற்றியே இதுவரை பலரும் பொருள் கூறியுள்ளனர். இவ்வாறு கூறுவதில் உள்ள குறைபாட்டை உணர்ந்த ஒருவர் நவ கன்னிகைகள், ஒருவரை ஒருவர் எழுப்ப முற்பட்டனர் என்று பொருள் கண்டார். அவ்வாறு கூறுவதால் தெய்வங்களாகிய நவ கன்னிகைகளைக்கூட இந்த உரையாசிரியர் தூங்குமூஞ்சிகளாகக் காட்டிவிட்டார்.

இவை அனைத்தும் மணிவாசகரின் பாடல் போக்கிற்குப் பொருந்தி வாராமையின் முன்னர்க் கூறிய முறையில் சிந்தனை செல்லலாயிற்று.

தெருவில் பாடிக்கொண்டுவந்த மகளிர் இறைவன் புகழைப் பாடினர் என்பது உண்மைதான். ஆனால், பாடுகின்ற அவர்கள் வாழ்க்கையில் என்ன குறிக்கோளை வைத்திருந்தனர், என்ன வேண்டிக்கொள்ள விரும்பினர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பெண்களாதலின் அவர்கள் மனத்தில் இயல்பாகத் தோன்றும் சில விருப்பங்களைப் பிறர் அறிய இறைவனிடம் வெளிப்படையாகக் கூறிடும் மனத்திடம் அவர்கள்பால் இல்லை போலும். அதனால்தான் சமாதிநிலை கலைந்துவந்த ஒருத்தி தம் தோழிமார்களின் உள்ளத்தில் வேர்விட்டு முளைத் திருக்கும் ஆசைகளுக்கு வடிவு கொடுக்கும் முறையில் அவர்களையும் உளப்படுத்திக்கொண்டு இறைவனிடம் அவர்கள் சார்பாகப் பின்வருமாறு வேண்டுகிறாள்:

உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன் அடியார் தாள் பணிவோம்; ஆங்கு அவர்க்கே
பாங்கு ஆவோம்;
அன்னவரே எம் கணவர் ஆவார்; அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்

(திருவாச. 163)

என்ற இப்பாடற்பகுதி அனைவரும் சேர்ந்து பாடியது போலக் காணப்படினும் சமாதிநிலை கலைந்து வந்தவளின் சொற்களாகவே அமைந்துள்ளது. இவ்வாறு நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ‘உன்னடியார் தாள் பணிவோம், ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம்’ என்ற இரண்டும் இம்மகளிரின் செயற்பாடுகள் ஆகும். அவர்கள் மன உறுதி காரணமாகப் பணிவோம், பாங்காவோம் என்று கூறியது நியாயமானதே ஆகும்.

ஆனால், ‘அன்னவரே எம் கணவர் ஆவார்’ என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? தங்களைப் பற்றிச் சொல்லிக்கொள்வது சரி, வரப்போகும் கணவன் எத்தகையவனாக இருக்கவேண்டும் என்று சொல்லி அத்தகையவனைத் தந்தருள்க என்று கேட்பதும் சராசரி மகளிருக்குப் பொருந்துவதே ஆகும். அதை விட்டுவிட்டு அன்னவரே எம் கணவர் ஆவார் என்று உறுதிப்பாட்டுடன் கூறுவது சராசரி மகளிரின் சக்திக்கு அப்பாற்பட்டதாகும். எனவேதான், சமாதி நிலையிலிருந்து எழுந்துவந்து தலைமை வகித்த பெண்ணின் கூற்று இது என்று சிந்திப்பதில் தவறில்லை.

அடுத்தபடியாக இப்பெண்களின் கூற்றாக வருவது ‘என்ன குறையும் இலோம்' என்பதாகும். உயிர்களாகப் பிறந்த அனைவர்க்கும் குறைகள் இருந்தே தீரும். குறையிலாதவன் ஈசன் ஒருவனே. அப்படியிருக்க, ‘என்ன குறையுமிலோம்’ என்று சொல்வது எப்படி நியாயமாகும்? என்றாலும், சமாதிநிலை கலைந்துவந்தவளின் உயர்விற்கும் உறுதிப்பாட்டிற்கும் 'என்ன குறையும் இலோம்' என்று சொல்வது பொருத்தமுடையதே ஆகும். அதனாலேயே இதனை இரண்டாவது காரணமாகச் சிந்திக்க முடிகிறது.

தனி மனிதன் அல்லது ஒரு பெண் என்பவர்களுக்கு மனம் என்ற ஒன்று இருந்தே தீரும். அந்த மனத்தை ஆட்டிப்படைப்பது நான் என்ற அகங்காரமாகும். அந்த மனம், மொழிகளின்வழி நின்று தன் விருப்பத்தைப் பூர்த்தி செய்துகொள்கிறது. அந்த விருப்பம் தோன்றக்கூடக் காரணம் அகங்காரமே ஆகும். அந்த நான் அழிந்தால், அல்லது செயலற்றுவிட்டால் குறை என்று ஒன்று தோன்றக் காரணமே இல்லை. சமாதி கலைந்துவந்த பெருமாட்டி, ஆணவம் செயலற்றுப் போக, ஓர் அற்புதமான வழியைக் கையாள்கின்றாள்.

ஒரு மோட்டார்க் காரை நாம் ஒட்டிச் செல்லுகின்ற போது, சாலை, சாலையில் தோன்றும் இடையூறுகள், அவற்றைக் கடந்து செல்லும் வழிவகைகள் ஆகியவற்றை ஓட்டுபவர்களாகிய நாமே விநாடிதோறும் ஓயாமல் கவனித்துக்கொள்ள வேண்டும். இத்தனை பொறுப்புக்களும் நமக்கு ஏன் வருகிறது? நாமே வண்டியை ஓட்டத் தொடங்கியதால் இப்பொறுப்புக்கள் நம்மை வந்து சூழ்ந்து கொள்கின்றன.

இவ்வாறு செய்யாமல் முழுத்தகுதி வாய்ந்த ஓட்டுநர் ஒருவரிடம் ஒட்டும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுப் பின்னேயுள்ள இருக்கையில் நாம் சாய்ந்து படுத்துக் கொண்டால், மேலே கூறிய பொறுப்புக்கள் அனைத்தும் நம் மனத்தைவிட்டு அகன்றுவிடுகின்றன; அமைதியாக உறங்கக்கூடச் செய்யலாம். இந்தக் கருத்துத்தான் இப்பாடலில் பேசப்பெறுகிறது.

‘உன்னைப் பிரானாகப் (தலைவனாக) பெற்ற உன் சீரடியோம்’ என்பதில் நம்மைத் தோற்றுவித்து வாழவும், வளரவும் வழிசெய்து கடைசிவரை உடனிருந்து நடத்துபவன் இறைவன் என்பது பேசப்பெற்றது. அவன் காலம், இடம் என்பவற்றைக் கடந்தவன்; ஆதலால், நமக்கு எதனை எப்பொழுது வழங்கவேண்டும் என்பதை அறிந்து வழங்குபவன் ஆவான். ஆனால், அவன் பருப் பொருளாக எதிரே தோன்றுவதில்லை. தேவை ஏற்படும் பொழுது நம் கைகளால் அவனைப் பற்றிக்கொள்ளும் வாய்ப்பேயில்லை. என்றாலும், அவனே தலைவன் என்பதை அறிந்து கொண்டால் நம்முடைய கவலைகளும் பொறுப்புகளும் பெரும்பகுதி நீங்கிவிடும். தேவை ஏற்படும்பொழுது, இவ்வுடம்பால், பற்றிக்கொள்ள ஒருவர் தேவை. அதற்காகவே கணவன்மார் வேண்டுமென்று இம்மகளிர் விரும்புகின்றனர். சிறந்த கணவர்கள் வாய்க்கும்போது எஞ்சியுள்ள பொறுப்பும் அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இக்கணவன்மார் எத்தகையவர்? இறைவனிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் போக, எஞ்சியவற்றை இவர்களிடம் ஒப்படைக்கவேண்டுமானால், இவர்கள் அந்த இறைவனுடன் தொடர்புடையவர்களாக இருத்தல் வேண்டும். அவர்கள் அத்தகையவர்கள் என்பதை விளக்கவே "நின்னடியார்’ என்றும் 'அன்னவரே எம் கணவர் ஆவார்’ என்றும் அப்பெருமாட்டி கூறினாள்.

இந்த நிலையிலும் ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்யும். எவ்வளவுதான் பொறுப்புகளைப் பிரானிடமும் கணவரிடமும் ஒப்படைத்தாலும் இந்த அகங்காரம் என்ற ஒன்று இருக்கின்றவரையில், பிரானும் கணவரும் செய்கின்றவற்றை மகிழ்ச்சியோடும் பொறுப்போடும் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஓரளவு குறையத்தான் செய்யும்.

அவர்கள் எவ்வளவு செய்தாலும், 'இன்னும் கொஞ்சம் செய்திருக்கலாமே; இதை இப்படிச் செய்யாமல் அப்படிச் செய்திருக்கலாமே என்ற குறைகள் ஆணவத்தில் சிக்குண்ட மனத்திற்கு இருக்கத்தான் செய்யும். ஆணவத்தைப் போக்குதல் என்பது இயலாத காரியம். அந்த ஆணவம் இருக்கின்றவரை இந்தச் சிறு குறைகள் மனத்திடை தோன்றிக்கொண்டே இருக்கும். இந்தச் சிறு குறைகளும் நீங்க வழி என்ன? சமாதிநிலையில் இருந்து வெளிப்பட்ட பெருமாட்டி, தன் அநுபவத்தில் கண்ட எளிய வழியைத் தன் தோழிமார்களுக்கு நேரடியாகவும், நம் போன்றவர்களுக்கு மறைமுகமாகவும் இதோ கூறுகின்றாள்.

தலைவன் என்றோ கணவன் என்றோ இறைவனையும், ஒரு மனிதனையும் முழு மனத்துடன் ஏற்றுக்கொண்ட பிறகு, என்ன செய்யவேண்டும்? 'அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்’ என்பதே அந்த எளிய வழியாகும். கவிதை ஆதலின் சொற்கள் முன்பின் மாறி அமைந்துள்ளன. சொற்களை மாற்றி 'அவர் சொன்னபரிசே தொழும்பாய் உகந்து பணிசெய்வோம்’ என்ற முறையில் அமைத்துக் கொண்டால், பொருள் எளிதாக விளங்கும். அவர்கள் எந்தக் கட்டளை இட்டாலும் மகிழ்ச்சியோடு அதனை ஏற்றுப் பணி செய்யத் தொடங்கிவிட்டால், ஆணவத்தின் பேயாட்டம் அங்கு இல்லாமல் அடங்கிவிடும். அத்தகைய மன நிறைவு வந்தவர்கள்தாம் ‘என்ன குறையும் இலோம்’ என்று சொல்லமுடியும்.

இந்தத் தலைவி இப்பொழுது தோழிமார்களை அழைத்துக்கொண்டு குளத்திற்கு நீராடச் செல்கிறாள். இத்தலைவியுடன் சேர்ந்து அவள் சொற்களைக் கேட்டு, தோழிமார்களும் வளர்ச்சி அடைந்துவிட்டனர்.

இந்த வளர்ச்சியை, அடுத்து வரும் மூன்று பாடல்களும் (திருவாச: 164,165.166) அற்புதமாக விளக்குகின்றன. உன்னைப் பிரானாகப் பெற்ற அடியோம் என்று தலைவி கூறினாள் அல்லவா? யார் அந்தப் பிரான் என்ற வினாவைத் தோழிமார்கள் தலைவியிடம் எழுப்பியிருக்க வேண்டும். அதற்குத் தலைவி பதில் கூறுமுகமாக இதோ பேசுகிறாள்.

'தோழிகளே! யார் அந்தப் பிரான் என்று எளிதாகக் கேட்டுவிட்டீர்கள். இதற்கு நேரிடையாகப் பதில் கூறுவது கடினம். அண்ட பிண்ட சர அசரங்கள் ஆகிய அனைத்திலும், ஊடுருவியும் தனித்தும் நிற்கின்றான் அவன் என்று அஞ்சிவிட வேண்டா, ஓத உலவாத பெருமையுடையவன் ஆயினும், நமக்குத் தோழனாகவே எப்பொழுதும் உள்ளான். நம்போன்ற அடியவர்களிடையே எப்பொழுதும் இருந்துகொண்டிருக்கிறான் என்று கூறுவது தவிர அவனைப்பற்றிக் கூற வேறொன்றும் தெரியாது. இருபத்துநான்கு மணி நேரம் கோவிலில் தங்கி இருந்து இறைவனுடைய பணிகளைச் செய்துவரும் பிணாப் பிள்ளைகளை ஒருவேளை கேட்டுப்பார்க்கலாம். எது அவனுடைய ஊர்; அவன் பெயர் என்ன, அவனுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் யார் யார்-என்ற வினாக்களை எழுப்பியும் அவர்களாலும் ஒன்றும் விடைகூற முடியவில்லை’.

இவ்வாறு கூறிக்கொண்டு, தலைவன் யார் என்று அறுதியிட்டுக் கூற முடியாத நிலையில் அத்தலைவி தோழிகளோடு சேர்ந்து மொய் ஆர் தடம் பொய்கை புக்கு, கையால் குடைந்து குடைந்து விளையாடினாள்.

அப்படி விளையாடும்போது வாய்கள் என்ன செய்தன? அவன் திருவடிகளைப் புகழ்ந்து பாடின. என்ன சொல்லிப் புகழ்ந்தன? 'செய்யா! வெண்ணிறு ஆடீ! செல்வா! சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா ஐயா!’ என்று கூறியதோடு நிறுத்தாமல் 'நின் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்து ஒழிந்தோம்’ என்று கூறிப் புகழ்ந்தன. மொழியும், மெய்யும் இணைந்து செயற்பட்டதை இப்பாடலில் கூறினார் அடிகளார். மனத்தின் உதவியின்றி இங்ஙனம் அவனைப் புகழ்ந்துரைத்திருத்தல் முடியாது. எனவே, மனமும் சேர்ந்தே தொழிற்பட்டது என்பது அருத்தா பத்தியால் பெற்றாம்.

அடுத்துவரும் பாடலில் மனத்தின் தொழிலை அடிகளார் விளக்கமாகவே சொல்கிறார். தில்லையில் கூத்தாடும் பெருமான், தீர்த்தன் (தூய்மையே வடிவானவன்), தீயாடுபவன் ஆவான். இப்படி ஆடிக்கொண்டே அண்டபிண்ட சராசரம் அனைத்தையும் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடுகின்றான் என்று கூறுவதால், அவனது புற வடிவத்தையும் அவன் தொழிலையும் மனத்தால் நினைந்து சொல்லால் வடிக்கிறாள். அத்தலைவி.

இவ்வாறு தலைவன் யார், அவன் சிறப்பென்ன, அவன் செய்தொழில்கள் யாவை என்பவற்றை நீராடிக் கொண்டே தலைவி சொல்லும்போது, உடன் நீராடும் தோழிமார்களுக்கு உண்மை விளங்கலாயிற்று. அதுவரை ‘எங்கோ கற்பனைக்கு எட்டாத தூரத்தில், விண்ணில் இருக்கிறான் இறைவன்' என்றுகொண்ட எண்ணம் அகன்று, தம்முள் ஒரு தோழனாகவும் தம்மிடையே உள்ள ஒரு தொண்டனாகவும் உள்ளான் என்பதை உணர்ந்த தோழிமாருக்கு ஒரு புதிய காட்சி தென்படலாயிற்று.

சமாதி நிலையிலிருந்து விடுபட்டுக் குருவாக அமைந்த தலைவியின் கூற்றுகள், அவர்களுடைய அஞ்ஞானத்தைப் போக்கவே, எதிரே உள்ள குளத்தின் காட்சி மாறிவிட்டது.

அந்த விநாடிவரை நாள்தோறும் அவர்கள் கண்டு மகிழ்ந்து, முகேரெனப் பாய்ந்து விளையாடிய குளம், அஞ்ஞானம் போனவுடன் புதிய காட்சியை நல்கிற்று. அந்தக் குளமே இறைவன் இறைவி வடிவாகக் காட்சி தரலாயிற்று. அதனை விளக்குவதே ‘பைங்குவளை...’ என்று தொடங்கும் பாடல்.

கயிலை யாத்திரை தொடங்குமுன் நாவரசர்பெருமானுக்கு நன்கு பழக்கப்பட்ட ஊராகும் திருஐயாறு. அங்கே உள்ள திருக்கோயில், அங்கு வழிபட வருவோர், தெருவில் நடமாடிய யானை முதலிய விலங்குகள் அவருக்கு நன்கு பழக்கப்பட்டவையே ஆகும். செல்லும் வழியில் கயிலைக் குளத்தில் மூழ்கி யாதும் சுவடு படாமல் ஐயாறடைந்த பெருமானுக்கு, அதே திருவையாறு முற்றிலும் புதிய காட்சியை நல்கியது. அதனையே நாவரசர் பெருமான் ‘கண்டு அறியாதன கண்டேன்’ (திருமுறை 4-3) என்று பாடியருளினார். எல்லா இடத்திலும் இறைவனைக் காணும் காட்சி நாவரசருக்குக் கயிலை மலையில் முனி புங்கவர் வேடத்திலிருந்த பெருமானால் அருளப்பெற்றது.

அதேபோன்று சமாதி நிலையிலிருந்து வெளிப்பட்ட நங்கையின் மூலம், நீராடச் சென்ற மகளிருக்கு முன்னர்க் கண்டறியாத காட்சி கிடைத்தது.

உறங்குகின்ற தலைவி என்று பலரும் உரைகண்ட திருவெம்பாவையின் முதற்பாடலுக்கு, அவள் சமாதி நிலையிலிருந்து எழுந்தாள் என்று புதிய சிந்தனை பெறப்பட்டது. யோக நித்திரை என்று சொல்லப்படும் இந்தச் சமாதிநிலையிலிருந்து எழுந்த அவள், பேசிய பேச்சுக்களையும் உடன் வந்த தோழிமார்களுக்கு இறைவனின் சிறப்பைக் கூறிய முறையையும் இதுகாறும் கண்டோம்.

அடுத்து ‘ஓர் ஒரு கால்....’ என்று தொடங்கும் பாடல் அந்தத் தலைவியை வேறொரு கோணத்தில் காட்டுகின்றது. இப்பொழுது அவள் பேசவில்லை. உடன் இருந்த தோழிமார்கள் அவள் பேசிய பேச்சைக் கேட்டு வியப்படைந்தனர். இவள் தங்கள் பழைய தோழிதானா என ஐயுற்று வியந்தனர். இப்பொழுது அவர்கள் தத்தம் பொறி, புலன்களை ஒருமுகப்படுத்தி, தத்தம் பொறியறிவு முழுவதையும் கண்ணின்மூலம் செலுத்தி, தலைவியை மறுமுறை நோக்குகின்றனர். இப்பொழுது அவர்கள் தலைவியைப் பார்க்கவோ காணவோ விளிக்கவோ இல்லை. அதற்குப் பதிலாக அவளைக் கூர்ந்து நோக்கினர். அவர்கள் பார்வையிற் பட்டு, அவர்கள் உள்ளத்தில் பதிந்த தலைவி உருவம் அடிகளாரால் 'ஓரொருகால்..’ என்ற பாடலில் வரையப்படுகிறது.

அடுத்துவரும் 171, 172 ஆகிய இரு பாடல்களும் தலைவியின் சிந்தனை ஓட்டத்தில் ஒரு புதிய திருப்பத்தைக் காட்டுகின்றன. 'பாதாளம் ஏழினும் கீழ்ப் பாதமலர்’ (164) என்றும் 'பேதை ஒருபால்’ (164) என்றும் 'திருமேனி ஒன்றல்லன்' (164) என்றும், பிரபஞ்சத்தைப் 'படைத்தும் கரந்தும் விளையாடுபவன் (166) அவன் என்றும் பேசத் தொடங்கிய தலைவி, அவனுடைய எளிவந்த தன்மையை நினைவுகூரும் வகையில் ஒரு 'தோழன் தொண்டருளன்’ (64) என்று தோழியருக்கு முன்னர் நினைவுறுத்திய அந்தத் தலைவி, இப்பொழுது இவ்விரு (17, 172) பாடல்களிலும் திருவடிப் பெருமை பேசுகிறாள். 'பாதாளம் ஏழினும் கீழ்ச் சொல்லுக்கு அடங்காமல் தாண்டிச்செல்லும் அப்பாதமலர் என்று நினைத்து அஞ்சவேண்டா! அதே பாதமலர் இங்கு நம் ஒவ்வொருவருடைய இல்லந்தோறும் எழுந்தருள்கின்றது. எதற்காக நம்தம்மைக் கோதாட்டுவதற்காக' என்று, அஞ்சிக்கிடக்கும் மானிட உயிருக்கு அச்சம் தீர்த்து ஊக்கம் தரும் முறையில் இப்பாடல் அமைந்துள்ளது.

இவ்வாறு கூறுவதிலும் ஒரு பிழை உண்டாகிவிடும். நம் இல்லந்தோறும் அத்திருவடிகள் எழுந்தருளுகின்றன என்றால், அதன் சிறப்பைக் குறைத்து மதிப்பிட்டுவிட நேரிடும். அக்குறையைப் போக்கவே இல்லங்கள் தோறும் எழுந்தருளும் அந்தப் பாதமலர், எத்தகையது தெரியுமா என்ற வினாவிற்கு விடை கூறுவதுபோல் அடுத்த பாடல் அமைந்துள்ளது. அண்ணாமலையான் திருவடி, பெண் ஆகி, ஆணாய், அலியாய், பிறங்கு ஒலிசேர் விண் ஆகி, மண் ஆகி, இத்தனையும் வேறாகி நிற்கின்றது.

‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி' என்று வடிவற்ற ஒளிப்பிழம்பாக இருக்கின்றான் இறைவன் என்று தொடங்கும் திருவெம்பாவைப் பாடல், அவனுக்கு ஓர் அழகிய வடிவைக் கொடுத்து அவனுடைய திருவடியைப் புகழும் முறையில் ‘கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்’ (172) என்று நிறைவு செய்கிறது.

ஒளியைக் கூறியதன் நோக்கம் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் இயல்பை உணர்த்துவதற்கே ஆகும். ஊருடுருவிச் செல்லும் இதனை நம்முடைய சிறிய மனத்துள் நிறுத்த இயலாது. ஆதலின், நின்றான் கழல் என்று நம்முடைய கட்புலனுக்கும் மனத்திற்கும் தெரிவிக்கின்ற முறையில் திருவடிப் பெருமை பேசிற்று.

மேலே 163 ஆவது பாடலில் மிக்க உறுதிப்பாட்டுடன் 'சீரடியோம்’ என்றும், கணவர் ஆவார்’ என்றும், பணி செய்வோம்’ என்றும் கூறிய அப்பெருமாட்டி 173 ஆவது பாடலில் சேரற்க, செய்யற்க, காணற்க என்று பாடுவதன் நோக்கம் யாது? இந்த இரண்டு பாடல்களையும் ஒருசேர வைத்துப்பார்த்தால் பல சிந்தனைகள் தோன்றுகின்றன. சேரற்க காணற்க என்ற பாடல் முன்னர் வந்து, ஆவார் பணிசெய்வோம் என்ற பாடல் பின்னர் வந்திருந்தால் ஒருவேளை பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆனால், தலைகீழாக இவை இரண்டும் அமைந்துள்ளன. ஏன் என்று சிந்திக்கத் தொடங்கினால், மனித மனத்தின் கூறுபாட்டை மிகத் தெளிவாக உணர்ந்த அடிகளார், வேண்டுமென்றே இந்த முறைவைப்பைப் பின்பற்றியுள்ளார் என்பது புலப்படும்.

புத்தாண்டின் தொடக்கத்தில் சில நல்ல தீர்மானங்களை நினைந்து, அந்த ஆண்டு முழுவதும் அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற முடிவிற்கு வருகின்றோம். இவற்றைச் செய்தேதீரவேண்டும் என்ற முடிவு மனத்திடைத் தோன்றும்பொழுது ஐயப்பாட்டிற்கோ மனத்திண்மை இன்மைக்கோ அங்கு இடமேயில்லை. ஆனால், பதினைந்து நாட்களில் இந்தத் தீர்மானங்கள் நம்மைவிட்டு மெல்ல மறையத் தொடங்கிவிடுகின்றன. இன்னும் சில நாட்களில் தீர்மானம் இருந்த சுவடே தெரியாமல் போய்விடுகிறது. எந்தச் சராசரி மனிதனின் மனப்பாங்கிற்கும் இதுவே இலக்கணமாகும். இதனை மனத்துட் கொண்ட அடிகளார், திருவெம்பாவையின் முதற்பாடலில் காணப்பெறும் தலைவியின் கூற்றாக ஆவோம், பணிசெய்வோம் என்று உடன்பாட்டு முகத்தால் 163ஆம் பாடலில் பாடிவிட்டார்.

அதன் பிறகு ஒன்பது பாடல்களில் இந்த வளர்ச்சி பேசப்படுகிறது. 'பைங்குவளைக் கார் மலரால்...' (6) என்று தொடங்கும் பாடலில், தாங்கள் அன்றாடம் நீராடும் குளத்தையே இறைவன் இறைவி வடிவாகக் காணும் புதிய மனோநிலை வந்துவிடுகிறது. இந்த வளர்ச்சியின் முடிவில் அனைத்தையும் படைக்கும் இறைவன், அனைத்தையும் கடந்துநிற்கும் இறைவன் தன் எளிவந்த தன்மை (ஸெளலப்பியம்) காரணமாக இல்லங்கள்தோறும் எழுந்தருளி நம்மைக் கோதாட்டி ஆட்கொள்கிறான் என்று நினைக்கின்ற வரையில் அந்த வளர்ச்சி தொடர்கின்றது.

ஆனாலும், மனித மனத்தின் இயல்பான குறைபாடு இங்கே புகுந்துவிடுகிறது; பழைய உறுதிப்பாடு தளர்ந்து விடுகிறது. அதன் பயனாக மனம் பேதலிக்கின்றது. சராசரி மனிதர்களைப்போல மனம் வேலைசெய்யத் தொடங்கியவுடன் உள்ளே தனித்தியங்கும் உறுதி விழித்துக்கொண்டு மனத்திற்குக் கட்டளையிடத் தொடங்குகிறது. அந்தக் கட்டளை எதிர்மறைமுகமாக அமைகின்றது. ‘காணற்க, செய்யற்க' என்ற எதிர்மறை ஏவல்கள் உறுதியால் பிறப்பிக்கப்படுகின்றன. இப்படி உறுதியால் ஏவப்பெற்ற பொறி, புலன்கள், மனம் என்பவை இந்த ஏவலுக்குக் கீழ்ப்படியுமா என்ற ஐயம் தோன்றிவிடுகிறது. தன் அதிகாரத்தைச் செலுத்த ஒரு துணை தேவைப்படுகிறது. தன்னுடைய செல்வாக்குக் குறைந்திருந்தாலும் துணையின் செல்வாக்கைக் கண்டு பொறி புலன்கள் அஞ்சி நிற்கும் என்று அப்பெருமாட்டி கருதுகின்றாள்.

அப்பெருமாட்டி தேடிய துணைதான் இறைவன். அப்பெருமானிடம் இதனைச் செய்தருள்க என்று நேரடியர்கக் கூறாமல், 'எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்’ (173) என்று தன் விண்ணப்பத்தை அத்தலைவி வைக்கின்றாள். இதனைக் கேட்பாயாக என்று தலைவனிடம் கூறியபிறகு, இல்லங்கள்தோறும் எழுந்தருளிக் கோதாட்டும் தம் பெருமானின் திருவருள் கிடைத்து விட்டது என்ற நம்பிக்கையில் 'எம்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க’, ‘எம் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க’, ‘எம் கண் மற்றொன்றும் காணற்க’ என்று கட்டளையிடுகிறாள்.

தலைவி, உடன் வந்த தோழியர் ஆகிய அனைவரின் பொறி புலன்களும் இக்கட்டளைக்களுக்குக் கீழ்ப்படிந்து விட்டன. ஆதலின், உள்ளத்தில் கொண்ட உறுதிப்பாட்டின் விளைவாக அனைவரும் சேர்ந்து இறைவனைத் துதிக்கத் தொடங்குகின்றனர். அதுவே ‘போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்’ (174) என்ற பாடலாகும்.

இப்பாடல் (174) முழுவதும் இறைவனின் திருவடிப் பெருமை பேசுகின்றது. உயிர்கள் அனைத்தும், கூர்தல் அறத்தின் அடிப்படையில் புல்லாய்ப் பூடாய்த் தொடங்கி, மானிட வாழ்க்கையில் புகுந்து, அதிலும் சில பிறப்புக்கள் கடந்து, கடைசியாகத் ‘தெய்வம் என்பதோர் சித்தமுண்டாகி' மேலும் வளர்ந்து, நிறைவாகத் திருவடி தரிசனம் பெற்று உய்கதி அடைகின்றன. ஆதலால், அத்திருவடிப் பெருமையை இப்பாடல் முழுவதிலும் கூறியுள்ளார்.

திரு அம்மானை

தைந் நீராடல் என்ற பழைய பெயர் மறைந்து, மார்கழி நீராடல் என்ற பெயர் நிலைத்துவிட்ட காலத்தில் தோன்றிய அடிகளார், மகளிர்விளையாட்டில்கூட ஆன்ம வளர்ச்சி பெறமுடியும் என்பதை உணர்த்துவார்போலத் திருவெம்பாவை பாடினார். அதன் இறுதியில் இறைவன் திருவடிபற்றியே ஒரு முழுப்பாடல் முகிழ்த்தது.

மூவர் தேவாரங்களில் இறைவன் திருவடி பேசப்பெறினும், அவன் இறைவனாகவே இருந்து செய்த வீரச் செயல்களே மிகுதியாக இடம் பெற்றன. திருவாசகத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை நூற்றுக் கணக்கான பாடல்களில் குறிப்பாகத் திருவடியே பேசப்பெறுகிறது. இதன் காரணத்தைச் சிந்தித்தால் அதனை எளிதில் விளங்கிக்கொள்ள முடியும்.

திருவாதவூரராக அமைச்சர் பதவியிலிருந்து உலகியலில் முழுவதுமாக மூழ்கியிருந்த ஒருவரைப் பெருந்துறையிலிருந்த குருநாதர் இழுத்துப் பிடித்துத் தம் திருவடிகளில் விழுமாறு செய்தார். குதிரையிலிருந்து இறங்கிக் குருநாதரிடம் வருகின்றவரை அவருடைய மானிட வடிவம், அவருடைய இரண்டு பாதங்கள் என்பவை திருவாதவூரரின் கண்களில் நன்கு பட்டுக்கொண்டிருந்தது உண்மை. அத்திருவடிகளைப் பற்றிக்கொண்டு, வீழ்ந்து வணங்கி எழுந்தவுடன் ஒரே விநாடியில் திருவாதவூரரும், அமைச்சரும் முற்றிலுமாக மறைந்துவிட, அங்கே மணிவாசகர் தோன்றினார். தம்முடைய இந்த மாற்றத்திற்குக் குருநாதரைவிட அவருடைய திருவடிகளே காரணம் என்று அடிகளார் முழுமையாக நம்பியமையே, அவர் திருவடிகளைப்பற்றி இவ்வளவு அதிகமான பாடல்களில் பாடியமைக்குரிய காரணமாகும்.

திருப்பெருந்துறைக் காட்சியைப் பல இடங்களில் கூறி அருளினாரேனும் 'புவனியில் சேவடி தீண்டினன் காண்க; சிவன் என யானும் தேறினன் காண்க' (திருவாச 3-61, 62) என்று வரும் பகுதி ஒரு விளக்கத்தைக் தருகிறது.

நம்மைப் பொறுத்தவரை எதிரே அமர்ந்திருக்கும் ஒருவரைப் பார்த்துக்கொண்டே வருவோமானால் முதலில் தெரிவது அவருடைய வடிவம். நெருங்கிச் சென்று பார்க்கும்போதுதான் அவருடைய கால்கள் தெரியும். ஆனால், அடிகளாரைப் பொறுத்தவரை நிலைமை தலைகீழாக உள்ளது. எதிரே உள்ளவரை, சிவன் என அவர் தேறுவதற்கு முன்னர் அவருக்கு காட்சி தந்தது புவனியைத் தீண்டிய குருவின் சேவடியாகும். அந்த முதற்காட்சியே இறுதிவரை அடிகளார் மனத்தில் நிலைத்துவிட்டதாதலால் தம்முடைய மாற்றத்திற்குக் குருநாதரைவிட அவர் திருவடிகளே காரணம் என்று அடிகளார் நினைக்கின்றார். ஆதலின், அத்திருவடிகளை நூற்றுக்கணக்கான பாடல்களில் விடாது பாடிக்கொண்டே வருகிறார்.

‘நமச்சிவாய வாஅழ்க’ என்று ஒலிவடிவாக இறைவன் உள்ளான் என்று தொடங்கிய உடனேயே அடுத்து நினைவுக்கு வருவது 'நாதன்தாள் வாழ்க’ என்ற அவனது திருவடிகளே ஆகும். இந்த நினைவு சிவபுராணத்தின் பதினைந்து அடிகள் கடக்கின்றவரை அடிகளாரைவிட்டு நீங்கவில்லை.

இங்குப் பேசப்பெற்ற திருவடி என்ற சொல்லுக்குத் திருவருள் என்ற சாத்திரப் பொருள் கொண்டு குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. அடிகளார் குறிப்பது குருநாதரின் திருவடிகளைத்தான்.

இந்த அடிப்படையை மனத்துட் கொண்டு திரு அம்மானைப் பாடல்களைப் பார்ப்பது நலம். திருவெம்பாவையின் இறுதிப் பாடலில் விரிவாகப் பேசப்பெற்ற திருவடியே, அம்மானையின் இருபது பாடல்களில் ஐந்து இடங்களுக்குமேல் இடம்பெற்றுள்ளது.

எங்கோ சுற்றித் திரிந்த தம்மை ஈர்த்து ஆட்கொண்டது. அத்திருவடிகள் ஆதலால், தம்முடைய மாற்றத்தைப்பற்றி நினைக்கும்பொழுதெல்லாம் அத்திருவடிகள் அல்லவா இம்மாற்றத்தைத் செய்தன என்று இறும்பூது எய்துகிறார். கீழ்வரும் திரு அம்மானைத் தொடர்கள் மேலே கூறிய கூற்றை மெய்பிப்க்கின்றன.

அறை கூவி வீடு அருளும் அம் கருணை வார்கழல்

(175)
வான் வந்த வார்கழலே
(178)

தாள் தாமரை காட்டி (180)

கண்ணார் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட (174)

என்னைத் தன்தொழும்பில் கொண்டருளும் வானவன் பூங்கழல் (188)

சிவன் கழலே சிந்திப்பேன் (191)

புவனியில் தீண்டிய குருநாதரின் சேவடி, தமக்கு என்ன செய்தது என்பதை ஐந்து இடங்களில் கற்பார் உள்ளம் உருகும் வகையில் அடிகளார் பேசியிருக்கின்றார். இதில் மிக முக்கியமான பகுதி 'எந்தரமும் ஆட்கொண்டு’ என்பதாகும். அதாவது, அருளைப் பெறத் தகுதி உள்ளவனா, இல்லையா என்று பாராமல் எம்போன்ற தரம் குறைந்தவர்களையும் ஆட்கொண்டான் என்று கூறுவதால், மனம் ஒடிந்து கிடக்கும் மனித சமுதாயத்திற்கு மாபெரும் நம்பிக்கையை ஊட்டுகின்றார் அடிகளார்.

...............சீரார் பெருந்துறையில்
எளிவந்து இருந்து இரங்கி எண் அரிய இன் அருளால்
ஒளிவந்து என் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ
அளி வந்த அந்தணன்........... (192)

தான் வந்து நாயேனைத் தாய்போல் தலையணித்திட்டு (178)

நாயான நம்தம்மை ஆட்கொண்ட நாயகன் (181)

......................என்னையும் தன் இன்னருளால்
இப்பிறவி ஆட்கொண்டு இனிப் பிறவாமே காத்து (186)

என்பன போன்ற பகுதிகள் அத்திருவடிகளையும், அத்திருவடிகளுக்கு உரியவனாகிய பெருமான் தமக்கு என்ன செய்தான் என்பதையும் விரிவாக எடுத்துப் பேசுகின்றன.

அம்மானையின் பத்தொன்பது பாடல்களில் திருவடிப் பெருமையும், அத்திருவடிகள் தமக்குச் செய்த பேருதவியும், அதனால் தம்மில் நிகழ்ந்த மாற்றமும்பற்றிப் பாடிய அடிகளார், நிறைவுப் பாடலில் தம் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியைப் பின்னோக்கிப் பார்க்கின்றார். மதுரை நாயகனாகிய சொக்கன் குதிரையின்மேல் வந்தானென்று கூறாமல், பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தான் என்று பாடுவது சிந்திக்கத் தக்கது.

பெருந்துறையில் குரு அருள் செய்கின்றவரையில் அங்குத் திருக்கோயில் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. இன்றும்கூடத் திருப்பெருந்துறைக் கோயிலின் கருவறையில் பீடம் இருக்கின்றதே தவிரச் சிவலிங்க வடிவம் இல்லை. குருவாக வந்தவர் அப்பீடத்திலிருந்து அருள்செய்த பிறகு அப்படியே மறைந்துவிட்டார் என்பதைக் குறிக்கவே, கருவறையில் சிவலிங்க வடிவம் இல்லாமல் கோயில் அமைக்கப்பெற்றுள்ளது. அடிகளாரே இக்கோயிலைக் கட்டினார் என்று வரும் கதைகளில் உண்மை இருக்குமா என்பது சிந்திக்கற்பாலது. புவனியில் சேவடி தீண்டியவன் சிவன் என அடிகளார் தேறிவிட்டமையின், அவர் இக் கோயிலை அமைத்திருப்பின் நிச்சயமாகச் சிவலிங்கத்தை நிறுவியிருப்பார். எனவே, அவர் காலத்துக்குப் பின்னர், அவருடைய மன்னனாகிய இரண்டாம் வரகுண பாண்டியன் போன்றவர்கள், நடைபெற்ற நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு இக்கோயிலைக் கட்டியிருக்க வேண்டும்.

அது எவ்வாறாயினும் 'பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தருளிக் கோதாட்டினான்’ என்று அடிகளார் கூறுவதால், குருவடிவிலிருந்த பெருமானே இத்திருவிளையாடலைச் செய்தான் என்று அடிகள் நம்புகிறார். அப்படிப் பாடும்போது 'தன் அடியார் குற்றங் களைந்து குணங்கொண்டு கோதாட்டினான்’ என்று கூறுவதால் அவனுடைய தாயன்பை நினைந்து உருகினாராயிற்று.

‘குற்றங் களைந்து குணங்கொண்டு கோதாட்டி’ என்றால் என்ன? இதற்கு விளக்கம் ‘கல்லா மனத்து’ (175) என்று தொடங்கும் பாடலில் விரிவாகப் பேசப்பெறுகிறது. கல்லைப் பிசைந்து கனியாக்குதல் என்பது உலகியலில் நடைபெறாத ஒன்று. கல், பிசையக்கூடிய பொருளன்று. பிசையக்கூடிய பொருள் எதுவும் கனியாக மாறுவதில்லை. அப்படியிருக்க, கல்லுக்கு நிகராக உள்ள தம் மனத்தைப் பிசைந்து கனியாக்கினான் என்கிறார். கல்லைப் பிசையக்கூடிய ஒருவன் வல்லாளனாய்த்தான் இருத்தல் வேண்டும். 'உருகா மனம், சிவஞானம் உணரா அறிவு' ஆகியவை கல்போன்றவையாம். இப்படிப்பட்ட மனத்தையும் கனியாக்கவேண்டுமானால் முதலில் ஆணவத்தைச் செயலிழக்கச் செய்யவேண்டும். அதுவும் இறைவன் துணைகொண்டு நடைபெறுதலின் 'பிசைந்து’ எனறார்.

மிகப் பெரிய அறுவை மருத்துவம் மேற்கொள்வதற்கு முன்னர், மயக்க மருந்து தருவதுபோல ஆணவத்தோடு இணைந்திருக்கின்ற மனத்தைக் கனிவிக்க வேண்டுமாயின் அந்த மனத்தை ஆணவத்திலிருந்து பிரிக்கவேண்டும். பெருந்துறை வல்லாளனனுக்கு இந்த இரகசியம் தெரியுமாதலால், இந்த மனத்தைப் பற்றியிருக்கும் ஆணவத்தை முதலில் செயலிழக்கச் செய்தான் என்பதைப் 'பிச்சேற்றி' என்ற சொல்லைச் சொல்வதன் மூலம் குறிப்பிடுகின்றார்.

‘தான்’ என்பதை இழந்தவர்கள்மட்டுமே தம்மிலிருந்து மனத்தைப் பிரித்துவைக்க முடியும். பிச்சேற்றுவதன்மூலம் தான் என்பதை ஒழித்த குருநாதர், மனமாகிய கல்லைப் பிசைந்து கனியாக்கினார் என்றார்.

கனியாக்கப்பட்ட அடிகளாரின் மனம் இறை அனுபவமாகிய தேனுள் மூழ்கி, எழுந்து உலகிற்குத் திருவாசகத்தைத் தரவேண்டும். ஆதலால், தன் கருணை வெள்ளத்து அழுத்தினான் என்கிறார். அழுத்தியதால் என்ன நிகழ்ந்தது? சஞ்சிதம், பிராரத்துவம், ஆகாமியம் என்ற மூன்று வினைகளும் அவரைவிட்டு நீங்கின. இவை அனைத்தும் நீங்கியபிறகு அங்கு வாதவூரரும் இல்லை, மணிவாசகரும் இல்லை. வினைகள் கடியப்பட்டவுடன் இறைவன் ஆணையை, திருவாசக வடிவில் தரும் ஒரு பிழம்பாகவே அடிகளார் ஆகிவிட்டார். இதன்பிறகு அவரைப் பொறுத்தவரை 'தன் பரிசும், வினை இரண்டும், சாரும் மலம் மூன்றும் அற, அன்புப் பிழம்பாய்' (பெ.பு: கண்ண: 154) திகழ்ந்தார். அந்தப் பிழம்பிலிருந்து தெறித்து விழுந்த சுடர்கள்தாம் திருவாசகப் பாடல்களாக முகிழ்த்தன.

இதனை அடுத்து வரும் 'தில்லை நகர்புக்குச் சிற்றம்பலம் மன்னும்' என்ற பகுதி இவருடைய குருநாதரை மட்டுமல்லாமல் அன்பு பிழம்பாய்த் திரிந்த இவரையும் குறிப்பதாகும்.


***