திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சாலமோனின் ஞானம் (ஞானாகமம்)/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து


"நம் வாழ்வு முகில் போலக் கலைந்து போகும்; கதிரவனின் ஒளிக்கதிர்களால் துரத்தப்பட்டு, அதன் வெப்பத்தால் தாக்குண்ட மூடு பனிபோலச் சிதறடிக்கப்படும்." - சாலமோனின் ஞானம் 2:4.


சாலமோனின் ஞானம் (The Book of Wisdom) [1][தொகு]

முன்னுரை

"சாலமோனின் ஞானம்" என்னும் இந்நூல் சாலமோனைப் பற்றிய சில மறைமுகக் குறிப்புகளைக் கொண்டிருந்தாலும் (காண் 8:9-15; 9:7-8,12) காலத்தாலும் கருத்தாலும் பிந்தியது என்பது உறுதி. பாலஸ்தீனத்துக்கு வெளியே, எகிப்து நாட்டு அலக்சாந்திரியாவில் வாழ்ந்துவந்த ஒரு யூதரால் கி.மு. முதல் நூற்றாடின் நடுவில் இது கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்; இதுவே பழைய ஏற்பாட்டு நூல்களுள் இறுதியாக எழுத்து வடிவம் பெற்றிருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.

பாலஸ்தீனத்துக்கு வெளியே வாழ்ந்துவந்த யூதர்களுஸ் சிலர், கிரேக்க மொழி, மெய்யியல், பண்பாடு, வழிபாட்டு முறை, வாழ்க்கை முறை முதலியவற்றின் மீது அளவற்ற நாட்டம் கொண்டதோடு, யூத மறையைவிடக் கிரேக்கர்களின் மறைவான சமயச் சடங்குகள் உயர்ந்தவை என்னும் தவறான எண்ணத்தால் தூண்டப்பெற்று யூத மறையைக் கைவிட்டனர். இவர்கள் யூத மறைக்கு மனம் மாறி வர அழைப்பு விடுப்பதே இந்நூலாசிரியரின் முதன்மை நோக்கம். அதே நேரத்தில், யூதக் கோட்பாடுகளில் பிடிப்போடு இருந்தவர்களை ஊக்கப்படுத்தி உறுதிப்படுத்துகிறார் ஆசிரியர்; விசுவாசத்தில் தளர்ந்து தடுமாற்ற நிலையில் இருந்தவர்களை எச்சரிக்கிறார்; கிரேக்கருடைய சிலைவழிபாட்டின் மூடத்தனத்தை அடையாளம் காட்டுவதோடு, ஆண்டவர்மீது அச்சம் கொள்வதே - அவரது திருச்சட்டத்தின்படி ஒழுகுவதே - உண்மையான, உயரிய ஞானம் என்று கோடிட்டுக் காட்டி, யூத மறையைத் தழுவுமாறு வேற்றினத்தாரைத் தூண்டுகிறார். கிரேக்கருக்கும் கிரேக்கச் சூழலில் வாழ்ந்துவந்த யூதருக்கும் யூதநெறிக் கோட்பாடுகளை விளக்க எழுந்த இந்நூலில் கிரேக்க மெய்யியல், நடை, சொல்லாட்சி முதலியன மிகுதியாகக் காணப்படுகின்றன.

முழு நூலும் இனிய கவிதை நடையில் அமைந்துள்ளது. நூலின் இறுதிப் பகுதி (அதிகாரங்கள் 10-19) யூதப் போதகர்கள் கையாண்டுவந்த விவிலிய விளக்க முறையான "மித்ராஷ்" என்னும் இலக்கிய வகைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சாலமோனின் ஞானம்[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. ஞானமும் மனிதரின் முடிவும் 1 - 5 69 - 75
2. ஞானத்தின் தோற்றம், இயல்பு, அதை அடையும் வழி 6 - 9 75 - 82
3. மீட்பு வரலாற்றின் ஞானம் 10 - 19 82 - 101

சாலமோனின் ஞானம் (The Book of Wisdom)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

1. ஞானமும் மனிதரின் முடிவும்[தொகு]

நீதியைத் தேடுதலே இறவாமைக்கு வழி[தொகு]


1 மண்ணுலகை ஆள்பவர்களே, நீதியின்மேல் அன்பு செலுத்துங்கள்;
நன்மனத்துடன் ஆண்டவரைப் பற்றி நினைந்திடுங்கள்;
நேர்மையான உள்ளத்துடன் அவரைத் தேடுங்கள்;


2 அவரைச் சோதியாதோர் அவரைக் கண்டடைகின்றனர்;
அவரை நம்பினோர்க்கு அவர் தம்மை வெளிப்படுத்துகின்றார்.


3 நெறிகெட்ட எண்ணம் மனிதரைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடும்.
அவரது ஆற்றல் சோதிக்கப்படும் பொழுது,
அது அறிவிலிகளை அடையாளம் காட்டிவிடும்.


4 வஞ்சனை நிறைந்த ஆன்மாவில் ஞானம் நுழைவதில்லை;
பாவத்திற்கு அடிமையான உடலில் ஞானம் குடிகொள்வதில்லை.


5 நற்பயிற்சி பெற்ற உள்ளம் வஞ்சனையினின்று விலகியோடும்;
அறிவற்ற எண்ணங்களை விட்டு அகலும்;
அநீதி அணுகுகையில் அது நாணி ஒதுங்கும்.


6 ஞானம் மனிதநேயமுள்ள ஆவி;
ஆயினும் இறைவனைப் பழிப்போரை அது தண்டியாமல் விடாது.
கடவுள் அவர்களுடைய உள்ளுணர்வுகளின் சாட்சி;
உள்ளத்தை உள்ளவாறு உற்று நோக்குபவர்;
நாவின் சொற்களைக் கேட்பவரும் அவரே.


7 ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது;
அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அந்த ஆவி
ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது.


8 நேர்மையற்றதைப் பேசுவோர் மறைந்திருக்க முடியாது;
தண்டனை வேளையில் நீதியினின்று தப்பமுடியாது.


9 இறைப்பற்றில்லாதோரின் சூழ்ச்சிகள் நுணுகி ஆராயப்படும்;
அவர்களுடைய சொற்கள் ஆண்டவரின் காதுக்கு எட்டும்;
அவர்களுடைய நெறிகெட்ட செயல்கள் கண்டிக்கப்படும்.


10 விழிப்புடைய காது அனைத்தையும் கேட்கின்றது.
முறையீடுகளின் முணுமுணுப்பு செவிக்கு எட்டாமல் போவதில்லை.


11 பயனற்ற முணுமுணுப்புப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள்;
பழிச்சொல் கூறாது உங்கள் நாவை அடக்குங்கள்.
ஏனெனில் மறைவாய்ப் பேசிய எதுவும் விளைவின்றிப் போகாது.
பொய் சொல்லும் வாய் ஆன்மாவைக் கொல்லும்.


12 நெறிதவறிய வாழ்வால் சாவை வரவேற்றுக்கொள்ளாதீர்கள்;
உங்கள் செயல்களாலேயே அழிவை வருவித்துக்கொள்ளாதீர்கள்.


13 சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை;
வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை.


14 இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார்.
உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை;
அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை;
கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை.


15 நீதிக்கு இறப்பு என்பது இல்லை.

இறைப்பற்றில்லாதவர்கள் வாழ்வை நோக்கும் முறை[தொகு]


16 இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் செயலாலும் சொல்லாலும்
இறப்பை வரவழைத்தார்கள்;
அதை நண்பனாகக் கருதி அதற்காக ஏங்கினார்கள்;
அதனோடு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்;
அதனோடு தோழமை கொள்ள அவர்கள் பொருத்தமானவர்களே.


குறிப்புகள்

[1] 1:1 = சாஞா 6:1-11.
[2] 1:4 = சீஞா 15:7.
[3] 1:13 = எசே 18:32; 33:11; 1 பேது 3:9.
[4] 1:16 = நீமொ 8:36; எசா 28:15.


அதிகாரம் 2[தொகு]


1 இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து
உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக் கொண்டார்கள்:
"நம் வாழ்வு குறுகியது; துன்பம் நிறைந்தது.
மனிதரின் முடிவுக்கு மாற்று மருந்து எதுவுமில்லை.
கீழுலகிலிருந்து யாரும் மீண்டதாகக் கேள்விப்பட்டதில்லை.


2 தற்செயலாய் நாம் பிறந்தோம்;
இருந்திராதவர்போல் இனி ஆகிவிடுவோம்.
நமது உயிர்மூச்சு வெறும் புகையே;
அறிவு நம் இதயத் துடிப்பின் தீப்பொறியே.[1]


3 அது அணையும்பொழுது, உடல் சாம்பலாகிவிடும்.
ஆவியோ காற்றோடு காற்றாய்க் கலந்துவிடும்.


4 காலப்போக்கில் நம் பெயர் மறக்கப்படும்.
நம் செயல்களை நினைவுகூரமாட்டார்கள்.
நம் வாழ்வு முகில் போலக் கலைந்து போகும்;
கதிரவனின் ஒளிக்கதிர்களால் துரத்தப்பட்டு,
அதன் வெப்பத்தால் தாக்குண்ட மூடு பனிபோலச் சிதறடிக்கப்படும்.[2]


5 நம் வாழ்நாள் நிழல்போலக் கடந்து செல்கின்றது.
நமது முடிவுக்குப்பின் நாம் மீண்டு வருவதில்லை;
ஏனெனில் முடிவு குறிக்கப்பட்டபின் எவரும் அதிலிருந்து மீள்வதில்லை.


6 "எனவே, வாருங்கள்;
இப்போதுள்ள நல்லவற்றைத் துய்ப்போம்;
இளமை உணர்வோடு படைப்புப்பொருள்களை
முழுவதும் பயன்படுத்துவோம்.[3]


7 விலையுயர்ந்த திராட்சை மதுவிலும்
நறுமண வகைகளிலும் திளைத்திருப்போம்;
இளவேனிற்கால மலர்களில் எதையும் விட்டுவைக்கமாட்டோம்.


8 ரோசா மலர்களை அவை வாடுமுன்
நமக்கு முடியாகச் சூடிக்கொள்வோம்.


9 நம் களியாட்டங்களில் ஒவ்வொருவரும் பங்குகொள்ளட்டும்;
இன்பத்தின் சுவடுகளை எங்கும் விட்டுச்செல்வோம்.
இதுவே நம் பங்கு; இதுவே நம் உடைமை.[4]


10 "நீதிமான்களாகிய ஏழைகளை ஒடுக்குவோம்;
கைம்பெண்களையும் ஒடுக்காமல் விடமாட்டோம்;
நரைதிரை விழுந்த முதியோரையும் மதிக்கமாட்டோம்;


11 நமது வலிமையே நமக்கு நீதி - நமக்குச் சட்டம்.
வலிமையற்றது எதுவும் பயனற்றதே.


12 "நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்;
ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்;
நம் செயல்களை எதிர்க்கிறார்கள்;
திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள்.
நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள்.[5]


13 கடவுளைப்பற்றிய அறிவு தங்களுக்கு உண்டு என
அவர்கள் பறைசாற்றுகிறார்கள்;
ஆண்டவரின் பிள்ளைகள்[6] எனத் தங்களை அழைத்துக் கொள்கிறார்கள்.


14 அவர்களது நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது.
அவர்களைப் பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது.


15 அவர்களது வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையினின்று வேறுபட்டது;
அவர்களுடைய வழிமுறைகள் மாறுபட்டவை.


16 இழிந்தோர் என நம்மை அவர்கள் எண்ணுகிறார்கள்;
தூய்மையற்ற பொருளினின்று ஒதுங்கிச் செல்வதுபோல
நம்முடைய வழிகளினின்று விலகிச் செல்கிறார்கள்;
நீதிமான்களின் முடிவு மகிழ்ச்சிக்குரியது எனக் கருதுகிறார்கள்;
கடவுள் தம் தந்தை எனப் பெருமை பாராட்டுகிறார்கள்.


17 அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்;
முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம்.


18 நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால்,
அவர் அவர்களுக்கு உதவி செய்வார்;
பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார்.


19 அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும்,
பொறுமையை ஆய்ந்தறியவும்,
வசைமொழி கூறியும் துன்புறுத்தியும்
அவர்களைச் சோதித்தறிவோம்.


20 இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்;
ஏனெனில் தங்கள் வாய்மொழிப் படி
அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.


21 இறைப்பற்றில்லாதவர்கள் இவ்வாறு எண்ணி
நெறி தவறிச்சென்றார்கள்.
அவர்களின் தீயொழுக்கமே அவர்களைப் பார்வையற்றோர் ஆக்கிவிட்டது.


22 அவர்கள் கடவுளின் மறைவான திட்டங்களை அறியவில்லை;
தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்று நம்பவில்லை;
மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும் என்று உய்த்துணரவில்லை.


23 கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்;
தம் சொந்த இயல்பின் சாயலில் [7] அவர்களை உருவாக்கினார். [8]


24 ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது.
அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர். [9]


குறிப்புகள்

[1] 2:2 = சீஞா 44:9.
[2] 2:4 = சஉ 2:16
[3] 2:6 = எசா 22:13; 1 கொரி 15:32.
[4] 2:9 = சஉ 3:22
[5] 2:12 = நீமொ 1:11
[6] 2:13 - 'ஊழியர்' என்றும் மொழிபெயர்க்கலாம்.
[7] 2:23 - "நித்தியத்தின் சாயல்" எனச் சில பழைய சுவடிகளில் உள்ளது.
[8] 2:23 = தொநூ 1:26-27.
[9] 2:24 = தொநூ 3:13.


(தொடர்ச்சி): சாலமோனின் ஞானம்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை