திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சாலமோனின் ஞானம் (ஞானாகமம்)/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


"அலைமோதும் நீர்ப்பரப்பைக் கிழித்துக்கொண்டு கப்பல் செல்கிறது. அது சென்ற தடத்தை யாரும் காணமுடியாது; அதன் அடித்தட்டின் சுவடுகள் அலைகளில் புலப்படுவதில்லை... இலக்கை நோக்கி எய்த அம்பு காற்றைக் கிழித்துக்கொண்டு செல்கிறது. பிளவுண்ட காற்று உடனே கூடிவிடுகிறது. ஆனால் அம்பு சென்ற வழியை ஒருவரும் அறிவதில்லை. இவற்றைப் போன்றதே நம் நிலையும்! நாம் பிறந்தோம்; உடனே இறந்துபட்டோம்." - சாலமோனின் ஞானம் 5:10,12-13.

சாலமோனின் ஞானம் (The Book of Wisdom)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]


1 அப்பொழுது நீதிமான்கள் தங்களைத் துன்புறுத்தியோர் முன்பும்
தங்கள் உழைப்பைப் பொருட்படுத்தாதோர் முன்பும்
துணிவோடு நிற்பார்கள்.


2 இறைப்பற்றில்லாதவர்கள் அவர்களைக் கண்டு
பேரச்சத்தால் நடுங்குவார்கள்;
எதிர்பாரா வகையில் அவர்கள் அடைந்த மீட்பைப்பற்றித்
திடுக்கிடுவார்கள்.


3 அவர்கள் உளம் வருந்தி,
ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வார்கள்;
மிகுந்த மனத்துயருடன் பெருமூச்சு விட்டுப்
பின்வருமாறு சொல்வார்கள்:


4 "இவர்களைத் தானே நாம் முன்பு எள்ளி நகையாடினோம்;
வசை மொழிக்கு ஆளாக்கினோம்.
நாம் மூடர்கள்.
அவர்களது வாழ்க்கை மடமையானது என்று எண்ணினோம்;
அவர்களது முடிவு இழிவானது என்று கருதினோம்.


5 கடவுளின் மக்களாக அவர்கள் எவ்வாறு எண்ணப்பட்டார்கள்?
தூயவர்கள் நடுவில் அவர்களுக்கு எவ்வாறு பங்கு கிடைத்தது?


6 எனவே நாமே உண்மையின் வழியிலிருந்து தவறிவிட்டோம்.
நீதியின் ஒளி நம்மீது படரவில்லை;
கதிரவன் நம்மீது எழவில்லை.


7 நெறிகேடும் அழிவும் நிறைந்த வழியில்
நாம் மனமுவந்து நடந்தோம்;
பாதை இல்லாப் பாலைநிலங்களில் பயணம் செய்தோம்;
ஆண்டவரின் வழியையோ அறிந்திலோம்!


8 இறுமாப்பால் நமக்குக் கிடைத்த பயன் என்ன?
செல்வச் செருக்கால் நமக்கு விளைந்த நன்மை என்ன?


9 இவை அனைத்தும் நிழல்போலக் கடந்துபோயின;
புரளி போல விரைந்து சென்றன.


10 அலைமோதும் நீர்ப்பரப்பைக் கிழித்துக்கொண்டு
கப்பல் செல்கிறது.
அது சென்ற தடத்தை யாரும் காணமுடியாது;
அதன் அடித்தட்டின் சுவடுகள் அலைகளில் புலப்படுவதில்லை.


11 பறவை காற்றில் பறந்து செல்கிறது.
அது சென்ற வழியின் அடையாளமே தெரிவதில்லை.
அது சிறகடித்துச் செல்லும்போது
மென்காற்றின்மீது மோதுகிறது;
அது பறந்தோடும் வேகத்தில்
காற்றைக் கிழித்துக்கொண்டு செல்கிறது;
இறக்கைகளை அசைத்துக் காற்றை ஊடுருவிச் செல்கிறது.
பின்னர் அதன் போக்கினது சுவடே தென்படுவதில்லை.


12 இலக்கை நோக்கி எய்த அம்பு
காற்றைக் கிழித்துக்கொண்டு செல்கிறது.
பிளவுண்ட காற்று உடனே கூடிவிடுகிறது.
ஆனால் அம்பு சென்ற வழியை ஒருவரும் அறிவதில்லை.


13 இவற்றைப் போன்றதே நம் நிலையும்!
நாம் பிறந்தோம்; உடனே இறந்துபட்டோம்.
பிறரிடம் காட்டுவதற்கு நம்மிடம் நற்பண்பின் அடையாளம் எதுவுமில்லை.
நம்முடைய தீமையால் நம்மையே அழித்துக்கொண்டோம்."


14 இறைப்பற்றில்லாதவர்களின் நம்பிக்கை
காற்றில் அடித்துச் செல்லும் பதர்போன்றது;
புயலால் சிதறடிக்கப்படும் உறைபனிபோன்றது;
காற்றால் அங்கும் இங்கும் கலைக்கப்படும் புகைபோன்றது.
ஒரே நாள் தங்கும் விருந்தினர்களின் நினைவுபோல்
அது மறக்கப்படும்.


15 நீதிமான்களோ என்றென்றும் வாழ்கிறார்கள்.
அவர்களுக்குரிய கைம்மாறு ஆண்டவரிடம் உள்ளது.
அவர்களைப்பற்றிய கவலை உன்னத இறைவனுக்கு உண்டு.


16 அவர்கள் மாட்சிமிக்க பொன்முடியைப் பெறுவார்கள்;
ஆண்டவருடைய கையிலிருந்து மணிமுடியைப் பெறுவார்கள்.
அவர் தம் வலக்கையால் அவர்களை அரவணைப்பார்;
தம் புயத்தால் அவர்களைப் பாதுகாப்பார்.


17 ஆர்வம் என்னும் படைக்கலத்தால்
அவர் தம்மை முழுதும் மூடிக்கொள்வார்;
தம் எதிரிகளைப் பழிவாங்கப்
படைப்பினைப் படைக்கலமாகக் கொள்வார்.


18 நீதியை அவர் மார்புக்கவசமாக அணிந்து கொள்வார்;
நடுநிலை தவறாத தீர்ப்பைத் தலைக்கவசமாகப் புனைந்து கொள்வார்.


19 வெல்ல முடியாத கேடயமாகத்
தூய்மையை அவர் கொண்டிருப்பார். [1]


20 அவர் கடுஞ்சினத்தைக் கூரிய வாளாகக் கொள்வார்.
உலகம் அவரோடு சேர்ந்து அறிவிலிகளை எதிர்த்துப் போராடும்.


21 மின்னல் கீற்று இலக்கை நோக்கி நேராகப் பாயும்;
நாணேற்றிய வில்லினின்று புறப்படும் அம்புபோல்
அது முகில்களிலிருந்து குறியை நோக்கித் தாவும்.


22 எறியப்படும் கவண்கல்லைப் போலச்
சினம் செறிந்த கல்மழை விழும்.
கடல் நீர் அவர்கள்மீது சீறிப்பாயும். [2]
ஆறுகள் இரக்கமின்றி அவர்களை மூழ்கடிக்கும்.


23 புயல் அவர்களை எதிர்த்து வீசும்;
அது சூறாவளிபோல் அவர்களைப் புடைத்தெடுக்கும்.
முறைகேடு மண்ணுலகையே பாழாக்கும்.
தீவினை வலியோரின் அரியணைகளைக் கவிழ்க்கும்.


குறிப்புகள்

[1] 5:17-19 = எசா 59:19; எபே 6:14-17.
[2] 5:22 = யோசு 10:11.


அதிகாரம் 6[தொகு]

2. ஞானத்தின் தோற்றம், இயல்பு, அதை அடையும் வழி[தொகு]

ஞானத்தைத் தேடல்[தொகு]


1 மன்னர்களே,
நான் சொல்வதற்குச் செவிசாய்த்துப் புரிந்துகொள்ளுங்கள்;
உலகின் கடையெல்லைவரை நீதி வழங்குவோரே,
கற்றுக்கொள்ளுங்கள்.


2 திரளான மக்களை ஆள்வோரே,
பல மக்களினங்களைப் பற்றிப் பெருமை பாராட்டுவோரே,
எனக்குச் செவிசாயுங்கள்.


3 ஆண்டவரிடமிருந்தே உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது;
உன்னத இறைவனிடமிருந்தே உங்களுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது.
அவரே உங்கள் செயல்களைச் சோதித்தறிபவர்;
உங்கள் திட்டங்களை ஆராய்பவரும் அவரே. [1]


4 அவரது அரசின் பணியாளர்களாய் இருந்தும்,
நீங்கள் நேர்மையுடன் தீர்ப்பு வழங்கவில்லை;
திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கவில்லை;
கடவுளின் திருவுளப்படி நடக்கவில்லை.


5 கொடுமையாகவும் விரைவாகவும் அவர் உங்கள்மேல் வருவார்;
உயர் நிலையில் உள்ளவர்களுக்குக் கடும் தீர்ப்பு வழங்குவார்.


6 எளியோர்க்கு இரக்கங்காட்டி அவர்களைப் பொறுத்தருள்வார்;
வலியோரை வன்மையாகத் தண்டிப்பார். [2]


7 அனைத்திற்கும் ஆண்டவர் யாருக்கும் அஞ்சி நடுங்க மாட்டார்;
உயர்ந்தோர்க்கென்று தனி மதிப்பு அளிக்கமாட்டார்.
ஏனெனில் பெரியோரையம் சிறியோரையும் படைத்தவர் அவரே;
எல்லாரும் ஒன்றென எண்ணிக் காப்பவரும் அவரே. [3]


8 அவர் வலியோரிடம் கண்டிப்பான கணக்குக் கேட்பார்.


9 எனவே, மன்னர்களே,
நீங்கள் ஞானத்தைக் கற்றுக் கொள்ளவும்,
நெறிபிறழாது நடக்கவும், உங்களுக்கு நான் கூறுகிறேன்;


10 தூய்மையானவற்றைத் தூய்மையாய்க் கடைப்பிடிப்போர்
தூயோர் ஆவர்;
தூய்மையானவற்றைக் கற்றுக்கொண்டோர்
தங்கள் செயல்களை முறைப்படுத்த வழி காண்பர்.


11 எனவே என் சொற்கள்மீது நாட்டங் கொள்ளுங்கள்;
ஏக்கங் கொள்ளுங்கள்.
நீங்கள் அவற்றால் நற்பயிற்சி பெறுவீர்கள்.


12 ஞானம் ஒளிமிக்கது; மங்காதது.
அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்;
அதைத் தேடுவோர் கண்டடைவர். [4]


13 தன்னை நாடுவோர்க்கு
அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும்.


14 வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடையமாட்டார்கள்;
ஏனெனில் தம் கதவு அருகில்
அது அமர்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள்.


15 அதன்மீது மனத்தைச் செலுத்துவதே
ஞானத்தின் நிறைவு.
அதன்பொருட்டு விழிப்பாய் இருப்போர்,
கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர்.


16 தனக்குத் தகுதியுள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது;
அவர்களுடைய வழியில் கனிவுடன் தன்னையே காட்டுகிறது;
அவர்களின் ஒவ்வொரு நினைவிலும் அது அவர்களை எதிர்கொள்கிறது.


17 நற்பயிற்சி பெறுவதில் கொள்ளும் உண்மையான நாட்டமே
ஞானத்தின் தொடக்கம்;
நற்பயிற்சி மீது செலுத்தும் கவலையே
ஞானத்தின்பால் கொள்ளும் அன்பு.


18 ஞானத்தின் மீது அன்பு செலுத்துவது
அதன் சட்டங்களைக் கடைப்பிடிப்பதாகும்;
சட்டங்களைக் கடைப்பிடிப்பது அழியாமைக்கு உறுதி தரும்.


19 அழியாமை ஒருவரைக் கடவுளுக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.


20 ஞானத்தின்மீதுள்ள ஆர்வம் ஒருவரை அரசுரிமைக்கு வழி நடத்துகிறது. [5]


21 நாடுகளை ஆளும் மன்னர்களே,
உங்களுடைய அரியணையிலும் செங்கோலிலும்
நீங்கள் மகிழ்ச்சி அடைய விரும்பினால்,
எப்பொழுதும் ஞானத்தை மதியுங்கள்;
அப்பொழுது என்றென்றும் ஆட்சிபுரிவீர்கள்.


22 ஞானம் என்றால் என்ன,
அது எவ்வாறு உண்டானது என உங்களுக்கு விரித்துரைப்பேன்;
மறைபொருள்களை உங்களிடமிருந்து மறைக்க மாட்டேன்;
அதன் படைப்புக்காலம் தொட்டு அதனை ஆராய்ந்து பார்ப்பேன்;
அதைப்பற்றிய அறிவை வெளிப்படுத்துவேன்;
உண்மையை நழுவவிடமாட்டேன்.


23 நோயாம் பொறாமையோடு தோழமை கொள்ளமாட்டேன்.
ஏனெனில் பொறாமை ஞானத்துடன் உறவு கொள்வதில்லை.


24 ஞானிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே
உலகின் மீட்பு அமையும்.
அறிவுள்ள மன்னர் தம் குடிமக்களின் நிலைக்களனாய் இருக்கின்றார்.


25 எனவே என் சொற்களால் நற்பயிற்சி பெறுங்கள்.
அதனால் உங்களுக்கு நற்பயன் விளையும்.


குறிப்புகள்

[1] 6:3 = நீமொ 8:15; தானி 2:21; உரோ 13:1.
[2] 6:6 - "பரிசோதிப்பார்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
[3] 6:7 = யோபு 34:19; சீஞா 35:12.
[4] 6:12 = சாஞா 8:17.
[5] 6:20 = சாஞா 3:7-8.


(தொடர்ச்சி): சாலமோனின் ஞானம்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை