உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

விக்கிமூலம் இலிருந்து
"நிலத்தில் பாடுபடுவோர் நிறைந்த விளைச்சல் பெறுவர்." - சீராக்கின் ஞானம் 20:28

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)

[தொகு]

அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

அதிகாரம் 19

[தொகு]


1 குடிகாரரான தொழிலாளர்கள் செல்வர்களாக முடியாது;
சிறியவற்றை புறக்கணிப்போர் சிறிது சிறிதாய் வீழ்ச்சி அடைவர்.


2 மதுவும் மாதும் ஞானிகளை நெறிபிறழச் செய்யும்;
விலைமாதரோடு உறவு கொள்வோர் அசட்டுத் துணிவு கொள்வர்.


3 அவர்களது உடல் அழிவுற, புழு தின்னும்;
அசட்டுத் துணிவு கொண்டோர் விரைவில் எடுத்துக்கொள்ளப் பெறுவர்.

நாவடக்கம்

[தொகு]


4 பிறரை எளிதில் நம்புவோர் கருத்து ஆழமற்றோர்;
பாவம் செய்வோர் தங்களுக்கே தீங்கு இழைத்துக் கொள்கின்றனர்.


5 தீச்செயல்களில் [1] மகிழ்ச்சி காண்போர் கண்டனத்திற்கு உள்ளாவர். [2]


6 புறங்கூறுதலை வெறுப்போரிடம் தீமைகள் குறையும்.


7 உன்னிடம் கூறப்பட்டதை மற்றவர்களிடம் சொல்லாதே;
சொல்லாவிடில், உனக்கு ஒன்றும் குறைந்துவிடாது.


8 நண்பராயினும் பகைவராயினும் அதைத் தெரிவிக்காதே;
மறைப்பது உனக்குப் பாவமானாலொழிய அதை வெளிப்படுத்தாதே.


9 நீ கூறியதைக் கேட்டு உன்னைக் கவனித்தோர்
காலம் வரும்போது உன்னை வெறுப்பர்.


10 எதையாவது நீ கேள்வியுற்றாயா? அது உன்னோடு மடியட்டும்.
துணிவுகொள்; எதுவும் உன்னை அசைக்கமுடியாது.


11 அறிவிலிகள் தாங்கள் கேட்டவற்றை வெளியிடாமல் இருப்பது
அவர்களுக்குப் பேறுகாலத் துன்பம் போல் இருக்கும்.


12 தொடையில் அம்பு ஆழமாகப் பாயும்;
அதுபோலப் புரளி அறிவிலிகளின் உள்ளத்தில் உறுத்தும்.

கேட்பதையெல்லாம் நம்பாதே

[தொகு]


13 உன் நண்பர்களைக் கேட்டுப்பார்;
ஒருவேளை அவர்கள் ஒன்றும் செய்யாதிருந்திருக்கலாம்.
ஒருகால் அதைச் செய்திருந்தாலும்
இனிமேலாவது செய்யாதிருப்பார்கள்.


14 அடுத்திருப்பவர்களைக் கேட்டுப்பார்;
ஒருவேளை அவர்கள் ஒன்றும் சொல்லாதிருந்திருக்கலாம்.
ஒருகால் அவற்றைச் சொல்லியிருந்தாலும்
மறு முறை சொல்லாது விட்டுவிடுவார்கள்.


15 உன் நண்பர்களைக் கேட்டுப்பார்;
நீ கேள்விப்பட்டது பொதுவாக அவதூறாக இருக்கும்.
எனவே கேட்பதையெல்லாம் நம்பிவிடாதே.


16 அறியாது சிலர் தவறலாம்;
தம் நாவால் பாவம் செய்யாதோர் யார்?


17 உனக்கு அடுத்திருப்பவரை அச்சுறுத்துமுன் எச்சரிக்கை செய்;
உன்னத இறைவனின் திருச்சட்டத்திற்கு உரிய இடம் கொடு.


18 [3] [ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே அவரால் ஏற்றுக்கொள்ளப்படுவதன் தொடக்கம்.
ஞானம் அவருடைய அன்பைப் பெற்றுத் தருகிறது.]


19 [4] [ஆண்டவருடைய சட்டங்கள் பற்றிய அறிவு
வாழ்வு அளிக்கும் நற்பயிற்சியாகும்;
அவருக்கு விருப்பமானதைச் செய்வோர்
வாழ்வு அளிக்கும் மரத்தின் கனியைப் பெறுவர்.]

உண்மையான ஞானம்

[தொகு]


20 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே முழு ஞானம்;
முழு ஞானம் என்பது திருச்சட்டத்தின் நிறைவே.
[20ஆ [5] அவரது எல்லாம் வல்ல தன்மை பற்றிய அறிவே.


21 'நீர் விரும்புவதைச் செய்யமாட்டேன்' எனத்
தன் தலைவரிடம் கூறும் அடிமை
பின்பு அதைச் செய்தாலும்
தனக்கு உணவு அளித்து வளர்க்கின்றவரின் சினத்தைத் தூண்டி விடுகிறான்.]


22 தீமை பற்றிய அறிவாற்றல் உண்மையான ஞானமன்று;
பாவிகளின் அறிவுரையில் அறிவுத்திறனில்லை.


23 அருவருக்கத்தக்க அறிவுடைமையும் உண்டு.
ஞானம் இல்லாதோர் மூடராவர்.


24 அறிவுத்திறன் இருந்தும் திருச்சட்டத்தை மீறுவோரைவிட
அறிவுக்கூர்மை இல்லாது போயினும் இறையச்சம் கொண்டோர் மேலானோர்.


25 தெளிந்த அறிவுடைமை இருந்தும் அது அநீதியானதாய் இருக்கலாம்;
தீர்ப்பில் வெற்றி பெற நன்மைகளைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வர்.


26 துயரில் முகவாட்டமுடன் திரியும் தீயவர்கள் உண்டு;
அவர்கள் உள்ளத்தில் நிறைந்திருப்பதெல்லாம் வஞ்சகமே.


27 அவர்கள் கண்டும் காணாதவர்களாய்
ஒன்றும் கேளாதவர்கள்போல் இருப்பார்கள்;
அவர்களை யாரும் கவனிக்காத வேளையில்
உன்னைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.


28 வலிமைக் குறைவு பாவம் செய்வதினின்று அவர்களைத் தடுத்தாலும்,
வாய்ப்புக் கிடைக்கும்போது அவர்கள் தீங்கு செய்வார்கள்.


29 தோற்றத்தைக் கொண்டு மனிதரைக் கண்டு கொள்ளலாம்.
முதல் சந்திப்பிலேயே அறிவாளியைக் கண்டுகொள்ளலாம்.


30 ஒருவருடைய உடையும் மனமுவந்த சிரிப்பும் நடையும்
அவர் எத்தகையவர் என்பதைக் காட்டிவிடும்.


குறிப்புகள்

[1] 19:5 - "உள்ளத்தில்" என்னும் பாடம் சில சுவடிகளில் காணப்படுகிறது.
[2] 19:5 - சில சுவடிகளில் 19:5ஆ-6அ இடம் பெறுகிறது.
5ஆ இன்பங்களை மறுத்து வாழ்வோர் வாழ்வின் மணிமுடியைச் சூடிக்கொள்வர்.
6அ தம் நாவை அடக்குவோர் பிணக்கின்றி வாழ்வர்.
[3] 19:18 - [ ] சில சுவடிகளில் மட்டுமே காணப்படுகிறது.
[4] 19:19 - [ ] சில சுவடிகளில் மட்டுமே காணப்படுவது.
[5] 19:20ஆ-21 - [ ] சில சுவடிகளில் மட்டுமே காணப்படுவது.

அதிகாரம் 20

[தொகு]

காலம் அறிந்து பேசுதல்

[தொகு]


1 தவறான நேரத்தில் கண்டிப்போரும் உண்டு;
அமைதி காத்து ஞானி ஆனோரும் உண்டு. [1]


2 உள்ளே புகைந்து கொண்டிருப்பதைவிடக்
கண்டிப்பது மேல்.


3 தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொள்வோர்
தோல்வியிலிருந்து விடுவிக்கப்பெறுவர்.


4 கட்டாயத்தின்பேரில் ஒருவர் நீதியானதைச் செய்வது
ஓர் அண்ணகன் ஒரு சிறுமியை கற்பழிக்க விரும்புவதற்கு இணையாகும்.


5 அமைதி காப்போர் ஞானியராக எண்ணப்படுகின்றனர்;
வாயாடிகள் வெறுப்புக்கு ஆளாகின்றனர்.


6 எதைப்பேசுவது எனத் தெரியாமல் அமைதியாய் இருப்போரும் உண்டு;
எப்போது பேசுவது எனத் தெரிந்தவராய் அமைதி காப்போரும் உண்டு.


7 ஞானியர் தக்க நேரம் வரும் வரை அமைதி காப்பர்;
வீண் பெருமை பேசும் மூடர் சரியான நேரத்தைத் தவறவிடுவர்.


8 மட்டு மீறிப் பேசுவோர் அருவருப்புக்கு ஆளாவார்;
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவோர் வெறுக்கப்படுவர்.

முரண்பாடு

[தொகு]


9 தீமை நன்மையாக மாறுவதும் உண்டு;
நல்வாய்ப்பு இழப்புக்கு இட்டுச் செல்வதும் உண்டு.


10 உனக்குப் பயன் அளிக்காத கொடையும் உண்டு;
இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கொடைகளும் உண்டு.


11 பெருமை நாடி வீழ்ச்சி அடைந்தோர் உண்டு;
தாழ்நிலையிலிருந்து உயர்நிலை அடைந்தோரும் உண்டு. [2]


12 நிறைந்த பொருளைக் குறைந்த விலைக்கு வாங்கக் கருதி
ஏழு மடங்கு மிகுதியாகக் கொடுத்து வாங்குவோரும் உண்டு.


13 ஞானிகள் தங்கள் சொற்களால் தங்களை
அன்புக்குரியோர் ஆக்கிக்கொள்ளுகின்றார்கள்;
மூடரின் இச்சகம் வீணாகின்றது.


14 அறிவிலிகளின் கொடை உனக்கு ஒன்றுக்கும் உதவாது;
அது அவர்களுக்கே பன்மடங்கு பெரிதாய்த் தெரிகிறது.


15 அவர்கள் குறைவாகக் கொடுப்பார்கள்; நிறைய திட்டுவார்கள்.
முரசறைவோர் போன்று அதுபற்றிப் பேசுவார்கள்.
இன்று கடன் கொடுப்பர்; நாளையே அதைத் திருப்பிக்கேட்பர்.
இத்தகையோர் வெறுப்புக்கு உரியோர்.


16 'எனக்கு நண்பர்கள் இல்லை;
நான் செய்த நற்செயல்களுக்கு எவரும் நன்றி காட்டுவதில்லை' என
அறிவிலிகள் சொல்லிக் கொள்வார்கள்.


17 அவர்கள் அளிக்கும் உணவை அருந்தியவாறே
அவர்களைப்பற்றி இழிவாய்ப் பேசுவார்கள்;
பல நேரங்களில் அவர்களை எள்ளி நகையாடுவார்கள்.

பொருந்தாப் பேச்சு

[தொகு]


18 நாவினில் தடுமாறுவதைவிட
நடைபாதையில் தடுமாறி விழுவது மேல்;
தீயவர்களின் வீழ்ச்சி திடீரென்று ஏற்படும். [3]


19 பண்பற்றோர் பொருத்தமற்ற கதையைப் போன்றோர்;
அறிவற்றோரின் வாயில் அது தொடர்ந்து இருக்கும்.


20 மூடர்களின் வாயினின்று வரும் பழமொழிகள் ஏற்றுக்கொள்ளப்படா;
காலம் அறிந்து அவர்கள் அவற்றைச் சொல்வதில்லை.


21 வறுமையினால் பாவம் செய்வதினின்று தடுக்கப்படுவோர் உண்டு;
அவர்கள் மனவுறுத்தலின்றி ஓய்வு கொள்வார்கள்.


22 தன்மானம் இழக்கும் நேரத்தில் உயிர் நீப்போர் உளர்;
மூடர்பொருட்டு அழிவோரும் உண்டு.


23 வெட்கம் தாங்காமல் சிலர்
தங்கள் நண்பர்களுக்கு உறுதிமொழி வழங்குகின்றனர்;
காரணமின்றி அவர்களைப் பகைவர் ஆக்கிக்கொள்கின்றனர்.

பொய்

[தொகு]


24 பொய் பேசுதல் மனிதருக்கு அருவருக்கத்தக்க கறை ஆகும்;
அறிவற்றோரின் வாயிலிருந்து அது ஓயாது வெளிப்படும்.


25 பொய் சொல்லும் பழக்கம் கொண்டவரை விடத்
திருடன் மேலானவன்;
இருவருமே அழிவை உரிமையாக்கிக்கொள்வர்.


26 பொய்யரின் நடத்தை இகழ்ச்சிக்கு இட்டுச்செல்லும்;
அவர்களின் வெட்கக்கேடு அவர்களோடு எப்போதும் இருக்கும்.

ஞானியர்

[தொகு]


27 ஞானியர் தங்கள் சொற்களால் முன்னேற்றம் அடைவர்;
முன்மதி கொண்டோர் பெரியார்களை மகிழ்விக்கின்றனர்.


28 நிலத்தில் பாடுபடுவோர் நிறைந்த விளைச்சல் பெறுவர்;
பெரியார்களுக்கு வேண்டியோர் அநீதி புரிந்திருந்தாலும் தப்பிவிடுவர். [4]


29 சலுகைகளும் அன்பளிப்புகளும் ஞானிகளின் கண்களைக் குருடாக்கும்;
கடிவாளமிட்ட வாய்போல் அவை கண்டனங்களைத் தவிர்த்துவிடும்.


30 மறைந்து கிடக்கும் ஞானம்,
கண்ணுக்குத் தெரியாத புதையல் ஆகியவற்றால்
கிடைக்கும் பயன் என்ன?


31 தங்கள் ஞானத்தை மறைத்து வைக்கும் மனிதரைவிடத்
தங்களது மடமையை மூடி மறைக்கும் மானிடர் மேலானோர்.

குறிப்புகள்

[1] 20:1 = சஉ 3:7; ஆமோ 5:13.
[2] 20:11 = மத் 23:12.
[3] 20:18 = நீமொ 12:13.
[4] 20:28 = நீமொ 12:11.

(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 21 முதல் 22 வரை