திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை
சீராக்கின் ஞானம் (The Book of Sirach)
[தொகு]அதிகாரங்கள் 21 முதல் 22 வரை
அதிகாரம் 21
[தொகு]பல்வேறு பாவங்கள்
[தொகு]
1 குழந்தாய், பாவம் செய்துவிட்டாயா? இனிமேல் செய்யாதே;
உன் பழைய பாவங்களுக்காக மன்னிப்புக் கேள்.
2 பாம்பைக் கண்டு ஓடுவதைப்போலப் பாவத்தைவிட்டு ஓடிவிடு;
நீ பாவத்தின் அருகில் சென்றால் அது உன்னைக் கடிக்கும்;
அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள் போன்றவை;
அவை மனிதரின் உயிரைப் போக்கி விடும்.
3 நெறிகேடுகள் எல்லாமே இருமுனைக் கூர்வாள் போன்றவை;
அதன் காயங்கள் ஆறமாட்டா.
4 திகிலும் இறுமாப்பும் செல்வங்களைப் பாழாக்கும்;
செருக்குற்றோரின் வீடு பாழாகும்.
5 ஏழைகளின் வாயினின்று எழும் விண்ணப்பம் கடவுளின் செவிகளை எட்டும்;
அவரது நீதித் தீர்ப்பு விரைவில் வரும். [1]
6 கடிந்துரையை வெறுப்போர் பாவிகளின் வழியில் நடக்கின்றனர்;
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் மனம் வருந்துவர். [2]
7 நாவன்மை படைத்தோர்பற்றிய பேச்சு தொலைவிலும் பரவும்;
ஆனால் அவர்கள் நாத்தவறும்போது அறிவுள்ளோர் அதைக் கண்டுகொள்வர்.
8 மற்றவர்களின் பணத்தைக் கொண்டு தங்கள் வீட்டைக் கட்டுவோர்
தங்கள் கல்லறைக்கு வேண்டிய [3] கற்களைத்
தாங்களே சேர்த்து வைப்போர் போன்றவர்கள். [4]
9 நெறிகெட்டோரின் கூட்டம் சணல் குப்பை போன்றது;
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பே அவர்களின் முடிவு.
10 பாவிகளின் பாதை வழவழுப்பான கற்களால் பாவப்பட்டுள்ளது;
அதன் முடிவில் கீழுலகின் வாயில் உள்ளது.
அறிவாளியும் அறிவிலியும்
[தொகு]
11 திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்போர் தங்கள் எண்ணங்களைக் கட்டுப்படுத்துகின்றனர்;
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சத்தின் நிறைவே ஞானம்.
12 திறமை இல்லாதோருக்குக் கல்வியறிவு புகட்ட முடியாது;
கசப்பை விளைவிக்கும் ஒருவகைத் திறமையும் உண்டு.
13 ஞானிகளின் அறிவு வெள்ளம் போலப் பெருக்கெடுத்து ஓடும்;
அவர்களின் அறிவுரை வாழ்வளிக்கும் நீரூற்றுக்கு நிகராகும். [5]
14 மூடரின் உள்ளம் ஓட்டைக் கலன் போன்றது;
அதில் எவ்வகை அறிவும் தங்கி நிற்காது.
15 அறிவாற்றல் பெற்றோர் ஞானம் நிறைந்த பேச்சைக் கேட்டுப் புகழ்வர்;
அது வளம் பெறச் செய்வர்.
அப்பேச்சை ஒழுக்கம் கெட்டோர் கேட்க நேரிட்டால் அதை விரும்புவதில்லை;
அதை உள்ளத்திலிருந்தும் விரட்டிவிடுவர்.
16 மூடரின் உரை பயணத்தின் போது எடுத்துச் செல்லும் பெருஞ்சுமை போன்றது;
அறிவுக்கூர்மை கொண்டோரின் பேச்சு இன்பம் தருகின்றது.
17 அறிவுத்திறன் வாய்ந்தோரின் வாய்மொழிகளைச் சபை விரும்பித் தேடும்;
அவர்களின் கருத்துகளை உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துப் பார்க்கும்.
18 மூடர்களுக்கு ஞானம் பாழடைந்த வீடு போன்றது;
மதியீனர்களுக்கு அறிவு பொருளற்ற உரை போன்றது.
19 அறிவிலிகளுக்கு அளிக்கும் நற்பயிற்சி கால்விலங்கு போன்றது;
வலக்கையில் மாட்டப்பட்ட தளை போன்றது.
20 மூடர்கள் சிரிக்கும்போது உரத்த குரல் எழுப்புவர்;
அறிவில் சிறந்தோர் அமைதியாகப் புன்னகைப்பர். [6]
21 அறிவுத்திறன் கொண்டோருக்கு நற்பயிற்சி பொன் நகையாகும்;
வலக்கையில் அணிந்த கைவளையாகும்.
22 மூடர்களின் கால்கள் மற்றவர்களின் வீட்டுக்குள் விரைகின்றன;
பட்டறிவு பெற்றவர்களின் கால்களோ நுழையத் தயங்குகின்றன.
23 அறிவிலிகள் கதவு வழியாக வீட்டுக்குள் எட்டிப் பார்ப்பார்கள்;
நற்பயிற்சி பெற்றோர் வெளியே காத்திருப்பர்.
24 நற்பயிற்சி பெறாதோர் கதவு அருகே நின்று ஒற்றுக் கேட்பர்;
அறிவுத்திறன் வாய்ந்தோர் அதை இகழ்ச்சியாகக் கொள்வர்.
25 அறிவற்றோர் எளிதாகப் பிதற்றுவர்; [7]
நுண்ணறிவு கொண்டோர் சொற்களை அளந்து பேசுவர்.
26 அறிவிலார் சிந்திக்குமுன் பேசுவர்;
அறிஞர் பேசுமுன் சிந்திப்பர்.
27 இறைப்பற்றில்லாதோர் தங்கள் எதிரியைச் சபிக்கும்போது
தங்களையே சபித்துக்கொள்வர்.
28 புறங்கூறுவோர் தங்களையே மாசுபடுத்திக்கொள்வர்;
சுற்றுப்புறத்தார் அவர்களை வெறுப்பர்.
- குறிப்புகள்
[1] 21:5 = சீஞா 35:17-18; விப 3:9.
[2] 21:6 = நீமொ 12:1.
[3] 21:8 - "மாரிக் காலத்துக்கு வேண்டிய" என்னும் பாடம் சில சுவடிகளில் காணப்படுகிறது.
[4] 21:8 = அப 2:6.
[5] 21:13 = நீமொ 10:11.
[6] 21:20 = சஉ 7:6.
[7] 21:25 - "அன்னியர் இவைபற்றியே பேசுவர்" என்றும் சில சுவடிகளில் காணப்படுகிறது.
மிகவும் சிதைவுற்ற இப்பாடம் சுவடிக்குச் சுவடி மாறுபடுகிறது.
அதிகாரம் 22
[தொகு]சோம்பேறி
[தொகு]
1 சோம்பேறிகள் மாசுபடிந்த கல் போன்றவர்கள்;
அவர்களது இழிவு கண்டு எல்லோரும் எள்ளி நகையாடுவர். [1]
2 சோம்பேறிகள் குப்பைமேட்டுக்கு ஒப்பானவர்கள்;
அதைத் தொடுவோர் அனைவரும் கையை உதறித் தட்டிவிடுவர்.
பண்பற்ற பிள்ளைகள்
[தொகு]
3 நற்பயிற்சி பெறாத மகனைப் பெற்ற தந்தை இகழ்ச்சி அடைவார்;
அத்தகைய மகளோ அவருக்கு இழிவைக் கொணர்வாள். [2]
4 அறிவுத்திறன் கொண்ட மகள் கணவரை அடைவாள்;
இழிவாக நடப்பவள் தன் தந்தைக்கு வருத்தம் ஏற்படுத்துவாள்.
5 நாணமற்ற மகள் தன் தந்தைக்கும் கணவருக்கும் இகழ்ச்சியைக் கொணர்வாள்;
அவ்விருவரும் அவளை இகழ்வர்.
6 நேரத்திற்குப் பொருந்தாத பேச்சு
புலம்பவேண்டிய நேரத்தில் இன்னிசை எழுப்புவதைப் போன்றது;
கண்டிப்பும் நற்பயிற்சியும் எக்காலத்திலும் ஞானத்தைக் கொடுக்கும்.
7 [3] [நல்வாழ்க்கை வாழப் பயிற்றவிக்கப் பெற்ற மக்கள்
தங்கள் பெற்றோரின் இழிபிறப்பை மறைத்துவிடுகிறார்கள்.
8 ஒழுக்கத்தில் வளர்க்கப்படாமல் இறுமாப்பும் பிடிவாதமும் கொண்ட மக்கள்
தங்களின் குலப்பெருமைக்கு அவமானம் கொணர்வார்கள்.]
மெய்யறிவும் பேதைமையும்
[தொகு]
9 மூடருக்குக் கல்வியறிவு புகட்டுவோர்
உடைந்துவிட்ட பானை ஓடுகளை ஒட்டுவோருக்கு ஒப்பாவர்;
ஆழ்ந்த தூக்கத்தில் இருப்போரைத் தட்டி எழுப்புவோர் போலாவர்.
10 மூடரோடு பேசுவோர் தூக்கக்கலக்கத்தில் உள்ளவரோடு
பேசுவோருக்கு ஒப்பாவர்;
பேச்சின் முடிவில், 'அது என்ன?' என மூடர் கேட்பர்.
11 இறந்தோருக்காக அழு; ஒளி அவர்களைவிட்டு மறைந்து விட்டது.
மூடருக்காக அழு; அறிவுக்கூர்மை அவர்களை விட்டு அகன்றுவிட்டது.
இறந்தோருக்காக அமைதியாக அழு;
அவர்கள் அமைதியில் துயில் கொள்கிறார்கள்.
மூடரின் வாழ்வு சாவைவிடக் கொடிது.
12 இறந்தோருக்காக ஏழு நாள் துயரம் கொண்டாடப்படும்;
மூடருக்காகவும் இறைப்பற்றில்லாதோருக்காகவும்
அவர்களின் வாழ்நாள் முழுவதும் துயரம் கொண்டாடப்படும்.
13 அறிவிலிகளோடு மிகுதியாய்ப் பேசாதே;
மதியீனரிடம் செல்லாதே.
உனக்குத் தொல்லை ஏற்படாதவாறு எச்சரிக்கையாய் இரு;
அவர்களோடு தொடர்பு கொண்டால் நீயும் பாழாவாய்.
அவர்களை விட்டு விலகிப்போ; அப்போது ஓய்வு காண்பாய்;
அவர்களின் அறிவின்மையால் சோர்வுறமாட்டாய்.
14 ஈயத்தைவிட கனமானது எது?
மூடர் என்பதை விட அவர்களுக்கு வேற என்ன பெயர் பொருந்தும்?
15 மதி கெட்டோரைப் பொறுத்துக் கொள்வதைவிட
மணல், உப்பு, இரும்புத் துண்டு ஆகியவற்றைச் சுமப்பது எளிது. [4]
16 கட்டடத்தில் இணைக்கப்பட்ட மர உத்திரங்களை
நிலநடுக்கத்தால்கூட அசைக்க முடியாது.
ஆழ்ந்த சிந்தனையில் முதிர்ச்சிபெற்ற உள்ளம் கொண்டவர்கள்
எந்தக் குழப்பத்திலும் தளர்ச்சியுற மாட்டார்கள்.
17 அறிவுக்கூர்மை கொண்ட சிந்தனையில் அமைந்த உள்ளம்
சுவரை அழகு செய்யும் பூச்சுப் போன்றது.
18 உயர்ந்த இடத்தில் அமைக்கப்பட்ட வேலி
காற்றை எதிர்த்து நிற்காது;
மூடத்தனமான எண்ணங்கள் கொண்ட கோழை உள்ளம்
எவ்வகை அச்சுறத்தல்களையும் எதிர்த்து நிற்காது.
நட்பு
[தொகு]
19 கண்ணைக் குத்திக்கொள்வோர் கண்ணீரை வரவழைக்கின்றனர்;
உள்ளத்தைக் குத்திக்கொள்வோர் உணர்ச்சிகளை வெளிக்காட்டுகின்றனர்.
20 பறவைகள் மீது கல்லெறிவோர்
அவற்றை அச்சுறுத்தி ஓட வைக்கின்றனர்;
நண்பர்களைப் பழிப்போர் நட்பை முறித்துவிடுகின்றனர்.
21 உன் நண்பருக்கு எதிராக வாளை நீ உருவியிருந்தபோதிலும்
நம்பிக்கை இழந்துவிடாதே.
மீண்டும் நட்பு ஏற்பட வழி உண்டு.
22 உன் நண்பருக்கு எதிராகப் பேசியிருந்தாலும் அஞ்சாதே.
நல்லிணக்கத்துக்கு வழி உண்டு.
இகழ்ச்சி, இறுமாப்பு, இரகசியங்களை வெளியிடல்,
வஞ்சகத்தாக்குதல் ஆகியவற்றினின்று எந்த நண்பருமே ஓடிவிடுவர்.
23 அடுத்திருப்பவர்களது வறுமையில்
அவர்களது நம்பிக்கையைப் பெறு;
அவர்களது வளமையை முழுமையாய்ப் பகிர்ந்து கொள்வாய்.
துன்பவேளையிலும் அவர்களைச் சார்ந்திரு;
அதனால் அவர்களின் உரிமைச்சொத்தில் நீயும் பங்கு கொள்வாய்.
24 சூளையிலிருந்து நெருப்புக்குமுன் ஆவியும்
புகையும் வெளிவருகின்றன.
கொலைக்கு முன்னே இழிசொல் இடம் பெறும்.
25 நண்பருக்குப் பாதுகாப்பு அளிக்க நான் வெட்கப்படமாட்டேன்;
அவரது பார்வையினின்று என்னை மறைத்துக் கொள்ளவும் மாட்டேன்.
26 அவர்களால் எனக்குத் தீங்கு நேர்ந்தால்,
அதைக் கேள்வியுறுவோர் அனைவரும் அவர்களிடம் எச்சரிக்கையாய் இருப்பர்.
பாவத்தில் விழாதிருக்க மன்றாட்டு
[தொகு]
27 நான் வீழ்ச்சியுறாதிருக்கவும்
என் நாவே என்னை அழிக்காதிருக்கவும்
என் வாயைக் காவல் செய்பவர் யார்?
என் உதடுகளை நுண்ணறிவு எனும் முத்திரையிட்டு மூடுபவர் யார்? [5]
- குறிப்புகள்
[1] 22:1 = சஉ 10:13-14.
[2] 22:3 = நீமொ 10:1.
[3] 22:7-8 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.
[4] 22:15 = நீமொ 27:3.
[5] 22:27 = திபா 39:1; 141:3.
(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 23 முதல் 24 வரை