திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
"ஞானத்தின் எண்ணங்கள் கடலினும் பரந்தவை." - சீராக்கின் ஞானம் 24:29

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]

அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

அதிகாரம் 23[தொகு]


1 தந்தையாகிய ஆண்டவரே, என் வாழ்வின் தலைவரே,
என் வாய் கூறுவதையெல்லாம் பொருட்படுத்தாதேயும்;
அவற்றின் பொருட்டு நான் வீழ்ச்சியுறாதவாறு செய்யும்.


2 என் தவறுகளுக்காக என்னை விட்டுவைக்காமலும்
என் பாவங்களைக் கவனித்துத் தவறாமலும் இருக்குமாறு,
என் எண்ணங்களைக் கட்டுப்படுத்தத் தண்டனை கொடுப்பவர் யார்?
என் உள்ளத்திற்கு ஞானத்தின் நற்பயிற்சியை அளிப்பவர் யார்? [1]


3 இல்லையேல், என் தவறுகள் பெருகிவிடும்; என் பாவங்கள் மிகுந்துவிடும்.
என் எதிரிகள் முன் நான் வீழ்ச்சியுறுவேன்;
என் பகைவர் என்னைக்குறித்து மகிழ்வர். [2]


4 தந்தையாகிய ஆண்டவரே, என் வாழ்வின் கடவுளே,
இறுமாப்புள்ள பார்வைக்கு நான் இடம் கொடாதிருக்கச் செய்யும்.


5 தீய நாட்டங்களை என்னிடமிருந்து அகற்றும்.


6 பேருண்டி விருப்பமும் சிற்றின்ப ஆசையும் என்னை மேற்கொள்ள விடாதேயும்;
தகாத எண்ணங்களுக்கு என்னை ஒப்புவிக்காதேயும்.

ஆணையிடல்[தொகு]


7 குழந்தைகளே, நாவடக்கம்பற்றிக் கேளுங்கள்;
நாவைக் காப்போர் எதிலும் சிக்கிக்கொள்ளமாட்டார்கள்.


8 பாவிகள் தங்கள் நாவினாலேயே அகப்பட்டுக்கொள்வார்கள்;
வசை கூறுவோரும் செருக்குக்கொண்டோரும் அதனால் இடறிவிழுகின்றனர். [3]


9 ஆணையிட உன் நாவைப் பழக்கப்படுத்தாதே;
தூய கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டே இராதே. [4]


10 விசாரணைக்கு உள்ளாகி அடிக்கடி அடிபடும் அடிமையிடம்
அதன் வடுக்கள் காணப்படாமல் போகா;
எப்போதும் ஆணையிடுவோரும் கடவுளின் பெயரைப் பயன்படுத்துவோரும்
பாவங்களினின்று கழுவப்படமாட்டார்கள்.


11 அடிக்கடி ஆணையிடுபவர்கள் தீநெறியில் ஊறியவர்கள்;
இறைத் தண்டனை அவர்களது வீட்டை விட்டு அகலாது.
அவர்கள் தவறாக ஆணையிட்டால் பாவம் அவர்கள் மீதே இருக்கும்;
தங்கள் ஆணையைப் புறக்கணித்தால் அவர்களது பாவம் இரு மடங்காகும்.
வீணாக ஆணையிடுவோர் பாவத்தினின்று விடுபடார்;
அவர்களது வீடு பேரிடரால் நிரப்பப்படும்.

இழிவான பேச்சு[தொகு]


12 சாவுக்கு ஒப்பிடக்கூடிய தீய சொற்கள் உண்டு;
யாக்கோபின் உரிமைச்சொத்தில் அவை காணாதிருக்கட்டும்.
இறைப்பற்றுள்ளோர் இவை அனைத்திலிருந்து விலகி நிற்பர்;
அவர்கள் பாவச் சேற்றில் புரளமாட்டார்கள்.


13 பண்பற்ற பேச்சுக்கு உன் நாவைப் பழக்காதே;
அது பாவத்துக்குரிய பேச்சு.


14 பெரியோர்கள் நடுவே நீ அமர்ந்திருக்கும்போது
உன் தந்தை தாயை நினைவில்கொள்.
இல்லையேல், அவர்கள் முன்னிலையில் உன்னையே மறப்பாய்;
உன் தீய பழக்கத்தால் அறிவிலிபோன்று நடந்து கொள்வாய்;
நீ பிறவாமல் இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும் என விரும்புவாய்;
உன் பிறந்த நாளையும் சபிப்பாய். [5]


15 வசைமொழி பேசிப் பழக்கப்பட்டோர்
தங்கள் வாழ்நாள் முழுவதும் நற்பயிற்சி பெறப்போவதில்லை.

சிற்றின்ப ஆசை[தொகு]


16 இரண்டு வகை மாந்தர் பாவங்களைப் பெருக்குகின்றனர்;
மூன்றாவது வகையினர் சினத்தைத் தூண்டிவிடுகின்றனர்.


17 கொழுந்துவிட்டு எரியும் காமவெறி கொண்டோர்;
அவர்களது காமவெறி எரிந்து அடங்கினாலன்றி அணையாது.
தம் உறவினர்களோடு முறையற்ற உறவு கொள்வோர்;
அந்த ஆசை அடங்கும்வரை தீநெறியை அவர்கள் விடமாட்டார்கள்.
தகாத உறவு கொள்வோருக்கு எல்லா உணவும் இனியதே;
இறக்கும்வரை அவர்கள் தளர்ந்து போக மாட்டார்கள்.


18 பிறர்மனை நாடுவோர்: 'என்னைப் பார்ப்பவர் யார்? இருள் என்னைச் சூழ்ந்துள்ளது.
சுவர்கள் என்னை மறைத்துக் கொள்கின்றன. யாரும் என்னைக் காண்பதில்லை.
நான் ஏன் கவலைப்படவேண்டும்?
உன்னத இறைவன் என் பாவங்களை நினைத்துப்பாரார்'
எனத் தங்களுக்குள் சொல்லிக்கொள்வர்.


19 மனிதரின் கண்கள் கண்டுவிடுமோ என அவர்கள் அஞ்சுகிறார்கள்.
ஆண்டவரின் கண்கள் கதிரவனைவிடப் பத்தாயிரம் மடங்கு ஒளி படைத்தவை;
அவை மாந்தரின் வழிகளையெல்லாம் காண்கின்றன;
மறைந்திருப்பவற்றை அறிகின்றன என்பதை அவர்கள் அறியார்கள். [6]


20 அனைத்தும் படைக்கப்படுமுன்பே ஆண்டவர் அவற்றை அறிந்திருந்தார்;
அவற்றைப் படைத்து முடித்த பின்னும் அவற்றை அறிந்துள்ளார்.
21 காமுகர் நகர வீதிகளில் தண்டிக்கப்படுவர்;
எதிர்பாராத இடத்தில் பிடிபடுவர்.

விபசாரம்[தொகு]


22 தன் கணவரை விட்டு விலகி, வேறு ஆடவன்மூலம்
அவருக்கு வழித்தோன்றலை உருவாக்கும் மனைவிக்கும் அவ்வாறே நேரும்.


23 முதலாவதாக, அவள் உன்னத இறைவனின் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிவதில்லை;
இரண்டாவதாக, தன் கணவருக்கு எதிராகக் குற்றம் புரிகிறாள்;
மூன்றாவதாக, தன் கெட்ட நடத்தையால் விபசாரம் செய்கிறாள்;
அடுத்தவர்மூலம் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாள்.


24 அவள் சபைமுன் அழைத்து வரப்படுவாள்;
அவளுடைய பிள்ளைகளும் விசாரணைக்கு ஆளாவர்.


25 அவளிள் பிள்ளைகள் வேரூன்றமாட்டார்கள்;
அவளின் கிளைகளும் கனிகள் கொடா.


26 அவள் சாபத்துக்குரிய நினைவை விட்டுச்செல்வாள்;
அவள் அடைந்த இழிவு ஒரு நாளும் அழியாது.


27 ஆண்டவருக்கு அஞ்சுவதைவிட மேலானது எதுவுமில்லை என்றும்,
ஆண்டவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைவிட இனிமையானது எதுவுமில்லை என்றும்
அவளுக்குப்பின் வாழ்வோர் உணர்ந்துகொள்வர்.


குறிப்புகள்

[1] 23:2 = தோபி 3:3.
[2] 23:3 = திபா 13:14.
[3] 23:8 = திபா 59:12.
[4] 23:9 = மத் 5:34; யாக் 5:12.
[5] 23:14 = யோபு 3:3.
[6] 23:19 = நீமொ 5:21.

அதிகாரம் 24[தொகு]

ஞானத்தின் புகழ்ச்சி[தொகு]


1 ஞானம் தன்னையே புகழ்ந்து கொள்கிறது;
தன் மக்கள் நடுவே தனது மாட்சியை எடுத்துரைக்கிறது.


2 உன்னத இறைவனின் மன்றத்தில் திருவாய் மலர்ந்து பேசுகிறது;
அவரது படைத்திரள்முன்பாக தமது மாட்சியை எடுத்துரைக்கிறது.


3 உன்னதரின் வாயினின்று நான் வெளிவந்தேன்;
மூடுபனிபோன்று மண்ணுலகை மூடிக்கொண்டேன்.


4 உயர் வானங்களில் நான் வாழ்ந்து வந்தேன்;
முகில்தூணில் அரியணை கொண்டிருந்தேன்;


5 வானத்தையெல்லாம் நானே தனியாகச் சுற்றிவந்தேன்;
கீழுலகின் ஆழத்தை ஊடுருவிச் சென்றேன்.


6 கடலின் அலைகள்மேலும் மண்ணுலகெங்கும்
மக்கள் அனைவர் மீதும் நாடுகள் மீதும் ஆட்சி செலுத்தினேன்.


7 இவை அனைத்தின் நடுவே ஓய்வு கொள்ள ஓர் இடத்தை நான் விரும்பினேன்;
யாருடைய உரிமைச்சொத்தில் நான் தங்குவேன்?


8 பின், அனைத்தையும் படைத்தவர் எனக்குக் கட்டளையிட்டார்;
என்னைப் படைத்தவர் என் கூடாரம் இருக்கவேண்டிய இடத்தை முடிவு செய்தார்.
'யாக்கோபில் தங்கி வாழ்;
இஸ்ரயேலில் உன் உரிமைச்சொத்தைக் காண்பாய்' என்று உரைத்தார்.


9 காலத்திற்கு முன்பே தொடக்கத்தில் அவர் என்னைப் படைத்தார்.
எக்காலமும் நான் வாழ்ந்திடுவேன்.


10 தூய கூடாரத்தில் அவர் திருமுன் பணிசெய்தேன்;
இதனால் சீயோனில் உறுதிப்படுத்தப்பெற்றேன்.


11 இவ்வாறு அந்த அன்புக்குரிய நகரில் அவர் எனக்கு ஓய்விடம் அளித்தார்;
எருசலேமில் எனக்கு அதிகாரம் இருந்தது.


12 ஆண்டவரின் உரிமைச்சொத்தாகிய பங்கில்
மாட்சிமைப்படுத்தப் பெற்ற மக்கள் நடுவே நான் வேரூன்றினேன்.


13 லெபனோனின் கேதுருமரம் போலவும்
எர்மோன் மலையின் சைப்பிரசுமரம் போலவும் நான் ஓங்கி வளர்ந்தேன்.


14 எங்கேதி ஊரின் பேரீச்சமரம் போலவும்,
எரிகோவின் ரோசாச்செடி போலவும்,
சமவெளியின் அழகான ஒலிவமரம் போலவும்,
பிளாத்தான்மரம் போலவும் நான் ஓங்கி வளர்ந்தேன்.


15 இலவங்கப் பட்டைபோலும், பரிமளத்தைலம் போலும் மணம் கமழ்ந்தேன்;
சிறந்த வெள்ளைப்போளம்போல நறுமணம் தந்தேன்;
கல்பானும், ஓனிக்சா எனும் நறுமணப் பொடிகள்போலும்,
உடன்படிக்கைக் கூடாரத்தில் எழுப்பப்படும் புகைபோலும் நறுமணம் வீசினேன்.


16 தேவதாருமரத்தைப்போல் என் கிளைகளைப் பரப்பினேன்;
என் கிளைகள் மாட்சியும் அருளும் நிறைந்தவை.


17 நான் அழகு அளித்திடும் திராட்சைக் கொடி.
மாட்சி, செல்வத்தினுடைய கனிகள், என் மலர்கள்.


18 [1] [நானே தூய அன்பு, அச்சம், அறிவு,
தூய நம்பிக்கை ஆகியவற்றின் அன்னை.
கடவுளால் குறிக்கப்பட்ட என் பிள்ளைமேல் நான் பொழியப்படுவேன்.]


19 என்னை விரும்புகிற அனைவரும் என்னிடம் வாருங்கள்;
என் கனிகளை வயிறார உண்ணுங்கள்.


20 என்னைப்பற்றிய நினைவு தேனினும் இனியது;
என் உரிமைச்சொத்து தேனடையினும் மேலானது.


21 என்னை உண்பவர்கள் மேலும் பசி கொள்வார்கள்;
என்னைக் குடிப்பவர்கள் மேலும் தாகம் கொள்வார்கள்.


22 எனக்குக் கீழ்ப்படிவோர் இகழ்ச்சி அடையார்;
என்னோடு சேர்ந்து உழைப்போர் பாவம் செய்யார். [2]

ஞானமும் திருச்சட்டமும்[தொகு]


23 இவ்வாறு ஞானம் கூறிய அனைத்தும்
உன்னத இறைவனின் உடன்படிக்கை நூலாகும்.
மோசே நமக்குக் கட்டளையிட்ட,
யாக்கோபின் சபைகளுக்கு உரிமைச் சொத்தாக வழங்கப்பெற்ற திருச்சட்டமாகும்.


24 [3] [ஆண்டவரில் வலிமை கொள்வதை விட்டுவிடாதே.
அவர் உனக்கு வலுவூட்டும் பொருட்டு அவரைப் பற்றிக்கொள்.
எல்லாம் வல்ல ஆண்டவர் ஒருவரே கடவுள்;
அவரைத்தவிர வேறு மீட்பர் இல்லை.]


25 பீசோன் ஆறுபோன்றும் அறுவடைக்காலத்தில் திக்ரீசு ஆறு போன்றும்
திருச்சட்டம் ஞானத்தால் நிறைந்து வழிகிறது.


26 யூப்பிரத்தீசு ஆறுபோல,
அறுவடைக்காலத்தில் பெருக்கெடுத்தோடும் யோர்தான் ஆறுபோல,
அது அறிவுக்கூர்மையால் நிரம்பி வழிகிறது.


27 திராட்சை அறுவடைக் காலத்தில் நைல் ஆறு வழிந்தோடுவதைப் போல்
அது நற்பயிற்சியைப் பெருக்கெடுத்து ஓடச்செய்யும்.


28 முதல் மனிதன் ஞானத்தை முழுமையாக அறியவில்லை;
இறுதி மனிதனும் அதன் ஆழத்தைக் கண்டானில்லை.


29 ஞானத்தின் எண்ணங்கள் கடலினும் பரந்தவை;
அதன் அறிவுரைகள் படுகுழியை விட ஆழமானவை.


30 நான் ஆற்றிலிருந்து பிரியும் கால்வாய் போன்றவன்;
தோட்டத்தில் ஓடிப் பாயும் வாய்க்கால் போன்றவன்.


31 'எனது தோட்டத்துக்கு நான் நீர் பாய்ச்சுவேன்;
எனது பூங்காவை நீரால் நிரப்புவேன்' என்று சொல்லிக் கொண்டேன்.
உடனே என் கால்வாய் ஆறாக மாறிற்று; என் ஆறு கடலாக மாறிற்று.


32 நான் நற்பயிற்சியை விடியல் போன்று ஒளிரச் செய்வேன்;
அது தொலையிலும் தெரியும்படி செய்வேன்.


33 போதனைகளை இறைவாக்குப் போன்று பொழிவேன்;
அதைக் காலங்களுக்கெல்லாம் விட்டுச் செல்வேன்.


34 எனக்காக மட்டும் உழைக்கவில்லை;
ஞானத்தைத் தேடுவோர் அனைவருக்காகவும் உழைத்தேன்
என அறிந்து கொள்ளுங்கள்.


குறிப்புகள்

[1] 24:18 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.
[2] 24:1-22 = நீமொ 8:22-28; சாஞா 7:21-8:1.
[3] 24:24 - [ ] சில சுவடிகளில் மட்டுமே காணப்படுகிறது.


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 25 முதல் 26 வரை