திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 25 முதல் 26 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
"என் மனத்திற்குப் பிடித்தவை மூன்று; அவை ஆண்டவர் முன்னும் மனிதர்முன்னும் அழகுள்ளவை. அவை: உடன்பிறப்புகளிடையே காணப்படும் ஒற்றுமை, அடுத்திருப்பாரோடு ஏற்படும் நட்பு, தங்களுக்குள் ஒன்றி வாழும் கணவன் மனைவியர்." - சீராக்கின் ஞானம் 25:1

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]

அதிகாரங்கள் 25 முதல் 26 வரை

அதிகாரம் 25[தொகு]

இனியவை மூன்று; இன்னா மூன்று[தொகு]


1 என் மனத்திற்குப் பிடித்தவை மூன்று;
அவை ஆண்டவர் முன்னும் மனிதர்முன்னும் அழகுள்ளவை. அவை:
உடன்பிறப்புகளிடையே காணப்படும் ஒற்றுமை,
அடுத்திருப்பாரோடு ஏற்படும் நட்பு,
தங்களுக்குள் ஒன்றி வாழும் கணவன் மனைவியர்.


2 மூன்று வகை மனிதரை நான் வெறுக்கிறேன்;
அவர்களின் வாழ்வை நான் பெரிதும் அருவருக்கிறேன். அவர்கள்:
இறுமாப்புக் கொண்ட ஏழைகள்,
பொய் சொல்லும் செல்வர்,
கூடா ஒழுக்கத்தில் ஈடுபடும் அறிவற்ற முதியவர்.

முதியோர்[தொகு]


3 உன் இளமையில் நீ எதையும் சேமித்து வைக்காவிடில்
முதுமையில் எதைக் காண்பாய்?


4 தீர்ப்பு வழங்குவது நரை திரை விழுந்தோருக்கு ஏற்றது;
அறிவுரை கூறுவது பெரியவர்களுக்குத் தக்கது. [1]


5 முதியோருக்கு ஞானமும்,
மாண்புடையோருக்குச் சிந்தனையும் அறிவுரையும் எத்துணைச் சிறந்தவை.


6 பரந்த பட்டறிவே முதியோருக்கு மணிமுடி;
ஆண்டவருக்கு அஞ்சுவதே அவர்களுக்கு மாட்சி. [2]

பேறுபெற்றோர்[தொகு]


7 பேறுபெற்றோர் என நான் கருதுவோர் ஒன்பது வகைப்படுவர்;
பத்தாம் வகையினரைப்பற்றியும் என் நாவால் எடுத்துரைப்பேன். அவர்கள்:
தங்கள் பிள்ளைகளில் மகிழ்ச்சியுறும் பெற்றோர்,
தங்கள் பகைவரின் வீழ்ச்சியைக் காண வாழ்வோர், [3]


8 அறிவுக்கூர்மை கொண்ட மனைவியருடன் வாழும் கணவர்கள்,
நாவால் தவறாதோர்,
தங்களைவிடத் தாழ்ந்தோருக்குப் பணிவிடை செய்யாதோர், [4]


9 அறிவுத்திறனைக் கண்டடைந்தோர்,
செவிசாய்ப்போரிடம் பேசுவோர், [5]


10 ஞானத்தைக் கண்டுகொண்டோர் எத்துணை மேலானவர்கள்!
ஆயினும் ஆண்டவருக்கு அஞ்சுவோரை விடச் சிறந்தவர்கள் எவருமில்லை.


11 ஆண்டவருக்கு அஞ்சுதல் எல்லாவற்றையும்விட மேலானது.
அதனைப் பெற்றவருக்கு ஈடு இணை ஏது?


12 [6] [ஆண்டவருக்கு அஞ்சுதலே அவரை அன்புசெய்வதன் தொடக்கம்;
பற்றுறுதியே அவரைப் பற்றிக் கொள்வதன் தொடக்கம்.]

பெண்கள்[தொகு]


13 வருத்தங்களிலெல்லாம் கொடிது மனவருத்தமே;
தீமைகளிலெல்லாம் கொடிது பெண்ணிடமிருந்து வரும் தீமையே.


14 துன்பங்களிலெல்லாம் கொடிது நம்மை வெறுப்பவரிடமிருந்து வரும் துன்பமே;
பழிகளிலெல்லாம் கொடிது நம் பகைவரிடமிருந்து வரும் பழியே.


15 தலைகளிலெல்லாம் கொடிது பாம்பின் தலையே;
சீற்றத்திலெல்லாம் கொடிது பகைவரின் சீற்றமே.


16 கெட்ட மனைவியுடன் வாழ்வதைவிடச்
சிங்கத்துடனும் அரக்கப் பாம்புடனும் வாழ்வது மேல்.


17 பெண்ணின் கெட்ட நடத்தை அவளது தோற்றத்தை மாற்றுகிறது;
கரடியின் முகத்தைப்போன்று அவளது முகத்தை வேறுபடுத்துகிறது.


18 அவளுடைய கணவர் அடுத்தவர்களுடன் அமரும்போது
அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கடுமையாகப் பெருமூச்சுவிடுவார்.


19 பெண்ணின் தீச்செயலுக்குமுன் மற்ற எல்லாமே சிறிது.
பாவிகளுடைய கேட்டுக்கு அவள் ஆளாகட்டும்.


20 மணல்மேட்டில் முதியவரால் ஏறமுடியாது;
வாயாடி மனைவியுடன் அமைதியான கணவர் வாழ முடியாது.


21 மங்கையரின் அழகினில் மயங்கி விடாதே;
பெண்கள்மீது இச்சை கொள்ளாதே.


22 தன் மனைவியின் ஆதரவில் வாழ்க்கை நடத்தும் கணவர்
அவளுடைய சினத்துக்கும் செருக்குக்கும் ஆளாகிப் பெரும் இகழ்ச்சி அடைவார்.


23 சோர்வுற்ற மனம், வாட்டமான முகம், உடைந்த உள்ளம் ஆகியவை
கெட்ட மனைவியினால் வருகின்றன.
தன் கணவரை மகிழ்விக்காத மனைவி
நலிவுற்ற கைகளையும் வலிமையற்ற முழங்கால்களையும் போன்றவள்.


24 பெண்ணாலேயே பாவம் தோன்றியது.
அவளை முன்னிட்டே நாம் அனைவரும் இறக்கிறோம். [7]


25 தொட்டியிலிருந்து தண்ணீர் ஒழுகியோடவிடாதே;
கெட்ட பெண்ணை அவளுடைய விருப்பம்போலப் பேசவிடாதே.


26 உன் விருப்பப்படி உன் மனைவி நடக்கவில்லையெனில்
உன்னிடமிருந்து அவளை விலக்கிவை.


குறிப்புகள்

[1] 25:4 = யோபு 32:7.
[2] 25:6 = நீமொ 16:31.
[3] 25:7 = நீமொ 23:24.
[4] 25:8 - எபிரேய, சிரியாக்குச் சுவடிகளில்
"காளையையும் கழுதையையும் பிணைத்து உழாதோர்"
என்னும் பாடம் காணப்படுகிறது.
கிரேக்கத்தில் இது விடப்பட்டுள்ளது. (காண் இச 22:10).
[5] 25:9 = நீமொ 3:13.
[6] 25:12 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.
[7] 25:24 = தொநூ 3:6; 1 திமொ 2:14.

அதிகாரம் 26[தொகு]


1 துணிவுள்ள மனைவியை அடைந்த கணவன் பேறுபெற்றவன்.
அவனுடைய வாழ்நாளின் எண்ணிக்கை இரு மடங்காகும். [1]


2 பற்றுள்ள மனைவி தன் கணவரை மகிழ்விக்கிறாள்;
அவன் தன் வாழ்நாள் முழுவதும் அமைதியாகக் கழிப்பான்.


3 நல்ல மனைவியை ஒருவனுக்குக் கிடைக்கும் நல்ல சொத்து.
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பெறும் செல்வங்களுள் ஒன்றாக
அவளும் அருளப்படுவாள்.


4 செல்வனாகவோ ஏழையாகவோ இருந்தாலும்
அத்தகையவன் உள்ளம் மகிழ்ந்திருக்கும்;
எக்காலத்திலும் அவனது முகம் மலர்ந்திருக்கும்.


5 மூன்றைப்பற்றி என் உள்ளம் அஞ்சுகிறது;
நான்காவது என்னை அச்சுறுத்துகிறது. அவை: நகரத்தின் அவதூறு,
மக்கள் கும்பல், தவறான குற்றச்சாட்டு - இவை மூன்றும் சாவினும் கொடியவை.


6 ஒரு பெண் மற்றொரு பெண்மேல் பொறாமைப்படுவது
உள்ளத்துக்குத் துன்பமும் துயரமும் தருகிறது.
வெடுக்கென்று பேசும் நாவைக் கொண்டவளை எல்லோரும் உணர்ந்து கொள்வர்.


7 கெட்ட மனைவி எருதுகள் பூட்டிய பொருந்தா நுகத்தடி போன்றவள்;
அவளை அடக்குகிறவன் தேளைப் பிடித்தவன் போன்றவன்.


8 குடிவெறியில் உள்ள மனைவி கடுஞ்சினத்தைத் தூண்டிவிடுவாள்;
அவள் தன் வெட்கத்தை மறைக்க மாட்டாள்.


9 கற்பு இழந்த பெண்ணை அவளுடைய கண்வெட்டுகளாலும்
கண் இமைகளாலும் அறிந்துகொள்ளலாம். [2]


10 அடக்கமற்ற மகளைக் கண்டிப்புக்குள் வைத்திரு;
இல்லையேல் அவள் கண்டிப்புத் தளர்ந்த நிலையை உணர்ந்து
அதைத் தனக்கெனப் பயன்படுத்திக்கொள்வாள்.


11 நாணமற்ற அவளுடைய கண்களைப்பற்றி எச்சரிக்கையாய் இரு;
இல்லையேல், அவள் உன்னை இழிவுபடுத்தும்போது வியப்படையாதே.


12 தாகம் கொண்ட வழிப்போக்கனைப்போன்று அவள் தன் வாயைத் திறப்பாள்;
தனக்கு அருகில் இருக்கும் எந்தத் தண்ணீரையும் பருகுவாள்;
ஒவ்வொரு கூடாரத்தின் முளைக்குச்சிக்கு முன்னும் அமர்வாள்;
எல்லா அம்புகளுக்கும் தன் தூணியைத் திறப்பாள். [3]


13 ஒரு மனைவியிடம் விளங்கும் நன்னயம் அவள் கணவனை மகிழ்விக்கும்;
அவளிடம் காணப்படும் அறிவாற்றல் அவன் எலும்புகளுக்கு வலுவூட்டும்.


14 அமைதியான மனைவி ஆண்டவர் அளித்த கொடை;
நற்பயிற்சி பெற்றவளுக்கு ஈடானது ஏதுமில்லை.


15 அடக்கமுள்ள மனைவியின் அழகே அழகு!
கற்புள்ளவளுக்கு ஈடு இணை எதுவுமில்லை.


16 ஒழுங்கமைதி உடைய இல்லத்தில் விளங்கும் நல்ல மனைவியின் அழகு
ஆண்டவர் உறையும் உயர்வானில் எழும் கதிரவனைப் போன்றது.


17 தக்க பருவத்தில் மிளிரும் அவளது அழகிய முகம்
தூய விளக்குத் தண்டின்மேல் ஒளிரும் விளக்குப் போன்றது. [4]


18 உறுதியான அடிகளின்மேல் அமைந்த அவளுடைய அழகான கால்கள்
வெள்ளித் தளத்தின்மேல் நிற்கும் பொன் தூண்களைப் போன்றவை.


19 [5] [குழந்தாய், உன் இளமைப் பொலிவைத் தீங்கின்றிக் காப்பாற்று;
உன் வலிமையை அன்னியரிடம் வீணாக்காதே.


20 சமவெளியெங்கும் வளமான வயலைத் தேடு;
உன் நல்ல வழிமரபில் நம்பிக்கை வைத்து, உன்
விதையை அங்கே விதை.


21 இவ்வாறு உன் வழிமரபினர் வலிமையுறுவர்;
நல்ல வழிமரபில் நம்பிக்கை கொண்டவர்களாய் உயர்வு பெறுவர்.


22 விலைமாது எச்சில் போன்று கருதப்படுவாள்;
மணமுடித்த பெண் தன் கள்ளக்காதலர்களுக்குச் சாவுக்கூடமாய் அமைவாள்.


23 இறைப்பற்றில்லா மனைவி,
சட்டத்தைக் கடைப்பிடிக்காதவனுக்குக் கொடுக்கப்படும் உடைமை;
இறைப்பற்றுள்ள மனைவி
ஆண்டவர்பால் அச்சம் கொள்வோனுக்குக் கொடுக்கப்படும் கொடை.


24 நாணமற்ற மனைவி தன் இகழ்ச்சியில் மகிழ்ச்சி அடைகிறாள்;
நாணமுள்ள பெண் தன் கணவன் முன்கூட அடக்கமாய் இருப்பாள்.


25 அடக்கமற்ற மனைவி நாய் எனக் கருதப்படுவாள்;
நாணமுள்ளவள் ஆண்டவருக்கு அஞ்சுவாள்.


26 தன் கணவனை மதிக்கும் மனைவியை
ஞானி என அனைவரும் கண்டுகொள்வர்;
தன் கணவனை மதிக்காத, செருக்குற்ற மனைவியை
இறைப்பற்றில்லாதவள் என அனைவரும் அறிந்து கொள்வர்.
நல்ல மனைவியை அடைந்த கணவன் பேறுபெற்றவன்;
அவனுடைய வாழ்நாளின் எண்ணிக்கை இருமடங்காகும்.


27 கூச்சலிட்டு வம்பளக்கும் மனைவி
போருக்கு அழைக்கும் எக்காளம் போன்றவள்;
இத்தகைய மனைவியை அடைந்தவன்
போர்க் குழப்பத்தின் நடுவே தன் வாழ்நாளைக் கழிப்பான்.]

வருத்தும் காட்சிகள்[தொகு]


28 இரண்டு வகையினரைப் பற்றி என் உள்ளம் வருந்தியது;
மூன்றாம் வகையினர் என் சீற்றத்தைக் கிளறினர். அவர்கள்:
வறுமையில் வாடும் போர்வீரர்,
இகழப்படும் அறிவாளிகள்,
நன்னெறியை விட்டுப் பாவத்துக்குத் திரும்புவோர்.
மேற்கூறியோரை வீழ்த்தும்படி ஆண்டவர் வாளை ஏற்பாடு செய்வார்.

வாணிகம்[தொகு]


29 தவறுகளைத் தவிர்ப்பது வணிகருக்கு அரிது;
விற்பனையாளருக்கும் பாவங்களை விலக்குவது அரிது.


குறிப்புகள்

[1] 26:1 = நீமொ 31:10-31.
[2] 26:9 = நீமொ 6:25.
[3] 26:10-12 = சீஞா 7:24-25; 42:9-11.
[4] 26:17 = லேவி 24:2-4.
[5] 26:19-27 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 27 முதல் 28 வரை