திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 13 முதல் 15 வரை
2 மக்கபேயர் (The Second Book of Maccabees)
[தொகு]அதிகாரங்கள் 13 முதல் 15 வரை
அதிகாரம் 13
[தொகு]மெனலாவின் இறப்பு
[தொகு]
1 நூற்று நாற்பத்தொன்பதாம் ஆண்டு
அந்தியோக்கு யூப்பாத்தோர் பெரும் படையோடு யூதேயாவை எதிர்த்து வருவதாக
யூதாவுக்கும் அவருடைய ஆள்களுக்கும் செய்தி எட்டியது.
2 அவனுடைய பாதுகாப்பாளனும் ஆட்சிப் பொறுப்பாளனுமான லீசியாவும்
அவனோடு வந்திருந்தான். [1]
இலட்சத்துப் பத்தாயிரம் காலாள்கள், ஐயாயிரத்து முந்நூறு குதிரைவீரர்கள்,
இருபத்திரண்டு யானைகள், வாள் பூட்டிய முந்நூறு தேர்கள் அடங்கிய
கிரேக்கப் படை ஒன்று அவர்களுக்கு [2] இருந்தது.
3 மெனலாவும் அவர்களோடு சேர்ந்துகொண்டு
அந்தியோக்குக்கு நயவஞ்சமாக ஊக்கமூட்டினான்;
தன் நாட்டின் நலனை முன்னிட்டு அன்று,
தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற
நம்பிக்கையில்தான் அவ்வாறு செய்தான்.
4 ஆனால் மாவேந்தராம் இறைவன்
அந்தக் கயவனுக்கு எதிராக அந்தியோக்கின் சீற்றத்தைத் தூண்டிவிட்டார்;
எல்லாத் தீமைகளுக்கும் மெனலாவே காரணம் என்று
லீசியா அந்தியோக்குக்குத் தெரிவித்தான்.
எனவே மெனலாவைப் பெரோயாவுக்குக் கொண்டுபோய்
அந்த இடத்தின் வழக்கப்படி கொல்ல அந்தியோக்கு ஆணையிட்டான்.
5 அங்கே ஐம்பது முழ உயரமுள்ள மாடம் ஒன்று இருந்தது;
அது சாம்பலால் நிறைந்திருந்தது;
அம்மாடத்து விளிம்பின் உட்புறத்தைச் சுற்றிலும்,
சாம்பலை நோக்கிச் சரிந்த ஒரு தளம் இருந்தது.
6 கோவிலைத் தீட்டுப்படுத்தியவர்களை
அல்லது கொடிய குற்றம் புரிந்தவர்களை
அங்கிருந்து கீழே தள்ளிக் கொன்றழிப்பது வழக்கம்.
7 திருச்சட்டத்தை மீறிய மெனலா இவ்வாறே இறந்தான்;
அடக்கம் செய்யப்படவுமில்லை.
8 தூய நெருப்பும் சாம்பலும் கொண்ட பலிபீடத்திற்கு எதிராகப்
பல பாவங்களைச் செய்திருந்த அவன்
சாம்பலில் உழன்று செத்தது முற்றிலும் பொருத்தமே.
மோதயினுக்கு அருகே யூதர்கள் பெற்ற வெற்றி
[தொகு]
9 மன்னன் தன் தந்தையின் காலத்தில்
யூதர்கள் பட்டதைவிடக் கொடிய தீமைகளை அவர்கள்மீது சுமத்தும்படி
முரட்டுச் செருக்குடன் புறப்பட்டுச் சென்றான்.
10 யூதா இதைக் கேள்வியுற்றதும்,
இரவும் பகலும் ஆண்டவரை வேண்டுமாறு தம் மக்களுக்குக் கட்டளையிட்டார்;
ஏனெனில் திருச்சட்டம், நாடு, திருக்கோவில் ஆகியவற்றை
அவர்கள் இழக்கும் தறுவாயில் இருந்ததால்,
முன்பைவிட மிகுதியாக அவருடைய உதவி
அவர்களுக்கு அப்பொழுது தேவைப்பட்டது.
11 மக்கள் புத்துணர்வு பெறத் தொடங்கிய வேளையிலேயே
இறைவனைப் பழித்துரைக்கும் பிற இனத்தாரின் கையில்
அவர்கள் விழாதிருக்கமாறு வேண்டவும் அவர் கட்டளையிட்டார்.
12 அவர்கள் எல்லாரும் அவ்வாறே செய்தார்கள்;
மூன்று நாள் இடைவிடாமல் கண்ணீர் சிந்தி உண்ணாநோன்பிருந்து
குப்புற விழுந்து இரக்கமுள்ள ஆண்டவரை மன்றாடினார்கள்.
தக்க ஏற்பாடுகளோடு இருக்குமாறு யூதா அவர்களுக்கு ஊக்கமூட்டினார்.
13 மூப்பர்களோடு தனிமையில் கலந்து பேசியபின்,
மன்னனின் படை யூதேயாமீது படையெடுத்து
எருசலேம் நகரைக் கைப்பற்றுமுன்பே,
கடவுளின் துணையுடன் புறப்பட்டுச் சென்று போர்தொடுக்க முடிவுசெய்தார்.
14 உலகைப் படைத்தவரிடம் முடிவை ஒப்படைத்துவிட்டுத்
திருச்சட்டம், கோவில், நகர், நாடு,
வாழ்க்கை முறை ஆகியவற்றுக்காக
இறக்கும்வரை துணிவுடன் போராடத் தம் ஆள்களுக்கு யூதா அறிவுறுத்தினார்;
பின் மோதயினுக்கு அருகில் பாசறை அமைத்தார்;
15 "கடவுளுக்கே வெற்றி" என்று தம் ஆள்களைப் போர்க்குரல் எழுப்பச் சொன்னார்.
ஆண்மை படைத்த இளைஞர்களினின்று தேர்ந்தெடுத்த
ஒரு படைப் பிரிவோடு அவர் இரவில் மன்னனின் கூடாரத்தைத் தாக்கினார்;
பாசறையில் இருந்த இரண்டாயிரம் பேரைக் கொன்றார்;
முதலில் சென்ற யானையை அதன் பாகனோடு குத்திக் கொன்றார்.
16 இறுதியில் கலக்கமும் குழப்பமும் பாசறையை நிரப்ப,
அவர்கள் வெற்றியுடன் திரும்பினார்கள்.
17 ஆண்டவரின் உதவி யூதாவுக்குப் பாதுகாப்பு அளித்ததால்
பொழுது புலரும் வேளையில் இதெல்லாம் நடந்தது.
யூதர்களோடு ஒப்பந்தம்
[தொகு]
18 யூதர்களுடைய துணிவை நேரில் கண்டபின்
அந்தியோக்கு மன்னன் அவர்களுடைய படைத்தளங்களைக் கைப்பற்றச்
சூழ்ச்சியைக் கையாண்டான்;
19 ஆகவே யூதர்களுடைய வலிமைமிக்க கோட்டையாகிய
பெத்சூரை எதிர்த்துச் சென்றான்; ஆனால் துரத்தியடிக்கப்பட்டான்;
மீண்டும் தாக்கியபோது தோல்வி கண்டான்.
20 கோட்டைக்குள் இருந்தவர்களுக்கு யூதா தேவையானவற்றை அனுப்பினார்.
21 ஆனால் யூதர்களின் படையைச் சேர்ந்த உரோதொக்கு
பகைவர்களுக்குப் படைத்துறை இரகசியங்களை வெளியிட்டான்.
அதனால் அவனைத் தேடிப் பிடித்துச் சிறையில் அடைத்தார்கள்.
22 மன்னன் இரண்டாம் முறை
பெத்சூரில் இருந்த மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினான்;
ஒப்பந்தம் செய்துகொண்டபின் திரும்பிச் சென்றான்.
மீண்டும் யூதாவையும் அவருடைய ஆள்களையும் தாக்கித் தோல்வியுற்றான்.
23 ஆட்சிப் பொறுப்பாளனாய் மன்னன் அந்தியோக்கியில் விட்டுவைத்திருந்த பிலிப்பு
கிளர்ச்சி செய்ததாக அவனுக்குச் செய்தி கிடைத்தது.
கலக்கமுற்றவனாய் யூதர்களை வரவழைத்து
அவர்களுடைய கோரிக்கைகளுக்கு இணங்கி
அவர்களுடைய உரிமைகள் அனைத்தையும் காப்பதாக ஆணையிட்டான்.
இத்தகைய ஒப்பந்தத்தைச் செய்தபின் பலி ஒப்புக்கொடுத்தான்;
கோவிலைப் பெருமைப்படுத்தி அதற்குத் தாராளமாக நன்கொடைகள் வழங்கினான்.
24 மன்னன் இன்முகத்தோடு மக்கபேயை வரவேற்றான்;
பின்னர் தாலமாய் முதல் கேரார்வரையிலான பகுதிக்கு
எகமோனிதை ஆளுநனாக எற்படுத்தினான்.
25 அவன் தாலமாய்க்குச் சென்றான்.
ஆனால் யூதர்களோடு அவன் செய்திருந்த ஒப்பந்தம்பற்றி
அந்நகர மக்கள் சினங்கொண்டார்கள்; அ
தன் விதிமுறைகளைச் செல்லாததாக்க விரும்பும் அளவுக்கு வெகுண்டார்கள்.
26 அப்போது லீசியா பொது மேடையில் ஏறித்
தன்னால் முடிந்தவரை ஒப்பந்தத்துக்கு ஆதரவாகப் பேசி,
அவர்களை இணங்க வைத்து அமைதிப்படுத்தினான்;
அவர்களுடைய நல்லெண்ணத்தைப் பெற்றவனாய்
அந்தியோக்கிக்குப் புறப்பட்டான்.
இவ்வாறு அந்தியோக்கு மன்னனுடைய படையெடுப்பும்
பின்வாங்கலும் முடிவுற்றன. [3]
- குறிப்புகள்
[1] 13:1 - கி.மு. 163.
[2] 13:2 - "அவர்கள் ஒவ்வொருவருக்கும்" என்பது கிரேக்க பாடம்.
[3] 13:18-26 = 1 மக் 6:48-63.
அதிகாரம் 14
[தொகு]தலைமைக் குரு ஆல்கிம்
[தொகு]
1 மூன்று ஆண்டுகளுக்குப்பின், செலூக்கின் மகன் தெமேத்திரி
ஒரு வலிமைமிக்க தரைப்படையோடும் கப்பற்படையோடும் பயணம் செய்து
திரிப்பொலி நகரத் துறைமுகத்துக்கு வந்து,
2 அந்தியோக்கையும் அவனுடைய பாதுகாப்பாளன் லீசியாவையும் கொன்றபின்
நாட்டைக் கைப்பற்றியதாக
யூதாவுக்கும் அவருடைய ஆள்களுக்கும் செய்தி கிடைத்தது.
3 முன்பு தலைமைக் குருவாக இருந்தவனும்
கிளர்ச்சிக் காலத்தில் மனம் பொருந்தித்
தம்மையே தீட்டுப்படுத்திக் கொண்டவனுமான ஆல்கிம்
தனக்கு எத்தகைய பாதுகாப்பும் இல்லை என்றும்,
தூய பலீபீடத்தை அணுக வாய்ப்பு இல்லை என்றும் உணர்ந்தான்;
4 நூற்று ஐம்பத்தோராம் ஆண்டளவில்
தெமேத்திரி மன்னனிடம் சென்று ஒரு பொன்முடி,
பொன் குருத்தோலை ஆகியவற்றோடு
கோவிலிருந்து வழக்கமாகக் கொடுக்கப்படும் ஒலிவக்கிளைகளையும்
அவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான்; அன்று அமைதியாய் இருந்தான். [1]
5 ஆனால் தன்னுடைய மதிகெட்ட திட்டத்தை நிறைவேற்ற
ஆல்கிமுக்கு நல்லதொரு வாய்ப்புக் கிட்டியது.
ஆட்சிமன்றக் கூட்டத்துக்குத் தெமேத்திரி அவனை அழைத்து
யூதர்களின் மனநிலை, திட்டம் பற்றி வினவியபோது
அவன் பின்வருமாறு பதிலிறுத்தான்:
6 "யூதா மக்கபேயின் தலைமையில் செயல்படுகின்ற
கசிதேயர் எனப்படும் யூதர்களே
தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்;
பேரரசில் அமைதி நிலவாதவாறு
கிளர்ச்சியைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். [2]
7 ஆகவே என்னுடைய மூதாதையர் வழிவந்த பெருமையாகிய
தலைமைக் குருபீடத்தை இழந்துவிட்டு இப்போது இங்கு வந்திருக்கிறேன்.
8 முதலாவதாக, மன்னருடைய நலன்களில் எனக்கு உண்மையான ஈடுபாடு உண்டு;
இரண்டாவதாக என் நாட்டு மக்களின் நலனிலும் எனக்கு நாட்டம் உண்டு.
நான் முன்குறிப்பிட்டவர்களுடைய மூட நடவடிக்கைகளால்
எங்கள் இனம் முழுவதும் பெருந்துன்பத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
9 மன்னரே, இதுபற்றிய முழு விவரமும் தாங்கள் தெரிந்துகொண்டு,
எல்லாரிடமும் காட்டும் மனித நேயத்துக்கு ஏற்ப
எங்கள் நாட்டுக்கும் ஒடுக்கப்படுகின்ற எங்கள் இனத்துக்கும்
நன்மை செய்யுங்கள்.
10 யூதா உயிரோடிருக்கும் வரை பேரரசில் அமைதி நிலவ முடியாது." [3]
11 ஆல்கிம் இவ்வாறு பேசியவுடன்,
யூதாவோடு பகைமை கொண்டிருந்த மன்னனின் நண்பர்களும்
தெமேத்திரிக்கு மேலும் சினமூட்டினார்கள்.
12 எனவே தெமேத்திரி உடனடியாக
யானைப் படையின் தலைவனாய் இருந்த நிக்கானோரைத் தேர்ந்தெடுத்து
யூதேயாவின் ஆளுநனாக ஏற்படுத்தி அனுப்பி வைத்தான்;
13 யூதாவைக் கொல்லவும் அவருடைய ஆள்களைச் சிதறடிக்கவும்
சிறப்புமிகு கோவிலின் தலைமைக் குருவாக ஆல்கிமை ஏற்படுத்தவும்
அவனுக்குக் கட்டளையிட்டான்.
14 யூதாவுக்கு அஞ்சி யூதேயாவிலிருந்து தப்பியோடியிருந்த பிற இனத்தார்
நிக்கானோரோடு சேர்ந்துகொள்ள ஒன்று கூடினார்கள்;
யூதர்களுக்கு நேரிடும் இன்னல்,
இடுக்கண்கள் தங்களுக்கு வளமூட்டும் என்று எண்ணினார்கள்.
நிக்கானோரின் நட்பும் எதிர்ப்பும்
[தொகு]
15 நிக்கானோருடைய வருகை பற்றியும்
பிற இனத்தார் அவனோடு சேர்ந்துகொண்டது பற்றியும்
யூதர்கள் கேள்விப்பட்டபோது,
தங்கள் தலையில் புழுதியைத் தூவிக்கொண்டார்கள்;
தங்களை என்றென்றும் தம் மக்களாக நிலைநிறுத்தி,
தம் வெளிப்பாடுகள் மூலம் தம் வழிவழி உரிமையாகிய
தங்களைக் காத்துவரும் இறைவனிடம் கெஞ்சி மன்றாடினார்கள்.
16 தலைவர் யூதா கட்டளையிட,
அவர்கள் அங்கிருந்து உடனே புறப்பட்டுத்
தெசாவு என்ற சிற்றூரில் எதிரிகளோடு போர் தொடுத்தார்கள்.
17 யூதாவின் சகோதரரான சீமோன், நிக்கானோரை எதிர்த்துப் போரிட்டார்;
திடீரெனப் பகைவர்கள் அவரைத் தாக்கியதால், சற்றுப் பின்வாங்கினார்.
18 இருப்பினும் யூதா, அவருடைய ஆள்கள் ஆகியோருடைய வலிமைபற்றியும்,
தங்கள் நாட்டிற்காகச் செய்த போரில் அவர்கள் காட்டிய துணிவுபற்றியும்
நிக்கானோர் கேள்வியுற்றபோது,
குருதி சிந்துதல்மூலம் இச்சிக்கலுக்குத் தீர்வு காணத் தயங்கினான்.
19 ஆகவே ஒப்பந்தம் செய்துகொள்ளப்
பொசிதோன், தெயதோத்து, மத்தத்தியா ஆகியோரை அனுப்பினான்.
20 ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை முற்றிலும் ஆய்ந்துபார்த்தபின்
அவைபற்றித் தலைவன் நிக்கானோர் தன் வீரர்களுக்கு எடுத்துக்கூறினான்.
அவர்கள் அனைவரும் அவற்றுக்கு இணக்கம் தெரிவித்து
ஒருமனப்பட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
21 தலைவர்கள் சந்தித்துக்கொள்ள ஒருநாள் குறிப்பிடப்பட்டது.
ஒவ்வொரு படையிலிருந்தும் ஒரு தேர் முன்னால் வந்தது;
இருக்கைகள் போடப்பட்டன.
22 பகைவர்கள் திடீரெனச் சூழ்ச்சியில் இறங்கிவிடாதவாறு
படைக்கலன்களைத் தாங்கிய வீரரை முன்னேற்பாடாக
முக்கியமான இடங்களில் யூதா நிறுத்திவைத்தார்.
இருவரும் முறைப்படி கலந்து ஆலோசித்தனர்.
23 நிக்கானோர் எருசலேமிலேயே தங்கியிருந்தான்.
முறைகேடானது எதுவும் செய்யவில்லை.
தன்னைச் சுற்றித் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை அனுப்பிவைத்தான்.
24 அவன் யூதாவோடு அடிக்கடி உரையாடுவான்;
அவரிடத்தில் உள்ளார்ந்த பற்றுக் கொண்டிருந்தான்.
25 யூதா திருமணம் செய்துகொண்டு பிள்ளைகளைப் பெற்றெடுக்குமாறு
அவன் தூண்டினான்.
அவரும் திருமணம் செய்து அமைதியில் வாழ்க்கை நடத்தினார்.
26 அவர்கள் இருவருக்கும் இடையே நிலவிய நட்பைக் கண்ட ஆல்கிம்,
முன்பு செய்யப்பட்டிருந்த ஒப்பந்தத்தின் நகலை எடுத்துக்கொண்டு,
தெமேத்திரியிடம் சென்றான்;
அரசத் துரோகியான யூதாவை நிக்கானோர் தன் பின்தோன்றலாக ஏற்படுத்தியுள்ளதால்
அவன் அரசுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கிறான் என்று அவனிடம் கூறினான்.
27 இந்தச் சதிகாரனுடைய பொய்க் குற்றச்சாட்டுகளால்
கொதிப்படைந்த மன்னன் சீற்றங்கொண்டான்;
அந்த ஒப்பந்தம் தனக்கு மனநிறைவு தரவில்லை என்றும்
மக்கபேயை உடனே கைதியாக அந்தியோக்கிக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும்
நிக்கானோருக்கு எழுதினான்.
28 இந்தச் செய்தி நிக்கானோருக்குக் கிடைத்தபோது அவன்பெரிதும் கலங்கினான்;
யூதா எவ்வகைக் குற்றமும் செய்யாதிருந்தபோது
அவரோடு செய்திருந்த ஒப்பந்தத்தை முறிக்க வேண்டியிருந்ததைப் பற்றி வருந்தினான்;
29 ஆயினும் மன்னனை எதிர்க்க முடியாததால்
அவனுடைய ஆணையைச் சூழ்ச்சியாக நிறைவேற்ற
ஒரு வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தான்.
30 ஆனால் நிக்கானோர் தம்மோடு மிகக் கண்டிப்பாய் நடந்துகொண்டதையும்,
வழக்கத்திற்கு மாறாகத் தம்மோடு கடுமையாய் இருந்ததையும் கண்ட மக்கபே
இது நல்லெண்ணத்தால் எழுந்தது அன்று என்று முடிவு செய்தார்.
ஆகவே தம் ஆள்களுள் பலரைச் சேர்த்துக்கொண்டு,
நிக்கானோரிடமிருந்து விலகிச் சென்று ஒளிந்து வாழ்ந்தார்.
31 யூதா தன்னைச் சூழ்ச்சியினால் வென்றுவிட்டார் என்பதை உணர்ந்த நிக்கானோர்,
குருக்கள் வழக்கப்படி பலி செலுத்திக்கொண்டிருந்த வேளையில்
திருப்பெருங் கோவிலுக்குச் சென்றான்;
மக்கபேயைத் தன்னிடம் ஒப்படைக்கக் கட்டளையிட்டான்.
32 அவன் தேடிய மனிதர் எங்கு இருக்கிறார் என்பது
தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் ஆணையிட்டார்கள்.
33 அப்போது நிக்கானோர் கோவிலை நோக்கித் தன் வலக்கையை நீட்டி,
"நீங்கள் யூதாவைக் கைதியாக என்னிடம் ஒப்படைக்காவிட்டால்
கடவுளின் இந்தத் திருஉறைவிடத்தைத் தரைமட்டமாக்குவேன்;
பலிபீடத்தை இடித்துத் தள்ளுவேன்;
இங்குத் தியனீசுக்கு மிகச் சிறந்த ஒரு கோவிலைக் கட்டுவேன்"
என்று சூளுரைத்தான்.
34 இச்சொற்களைக் கூறிவிட்டு அவன் சென்றுவிட்டான்.
குருக்கள் விண்ணை நோக்கித் தங்கள் கைகளை உயர்த்தித்
தம் இனத்தை எப்போதும் காத்துவருகின்றவரை மன்றாடினார்கள்;
35 "அனைத்துக்கும் ஆண்டவரே, உமக்கு ஒன்றும் தேவையில்லை.
எனினும் நீர் எங்களிடையே தங்குவதற்கு
ஓர் உறைவிடம் அமைக்கத் திருவுளங்கொண்டீர்.
36 எனவே, தூய ஆண்டவரே, தூய்மைக்கெல்லாம் ஊற்றே,
சிறிது காலத்துக்குமுன் தூய்மைப்படுத்தப்பெற்ற இந்த இல்லத்தை
என்றென்றும் தீட்டுப்படாமல் காப்பாற்றும்" என்று வேண்டினார்கள்.
இராட்சியின் இறப்பு
[தொகு]
37 எருசலேமின் மூப்பர்களுள் ஒருவரான இராட்சிக்கு எதிராக
நிக்கானோரிடம் குற்றம் சாட்டப்பட்டது.
அவர் தம் மக்களிடம் அன்புகொண்டவர்; அவர்களிடையே மதிப்புப் பெற்றவர்;
நல்மனம் படைத்தவர்; இதனால் யூதர்களின் தந்தை என்று பெயர் பெற்றவர்;
38 முற்காலத்தில் நடந்த கிளர்ச்சியின்போது,
யூத நெறிப்படி வாழ்ந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி,
யூத மறைக்காகத் தம் உடலையும் உயிரையும்
மிகுந்த ஆர்வத்துடன் இழக்கத் துணிந்தவர்.
39 யூதரோடு தனக்கு இருந்த பகைமையை வெளிப்படுத்த விரும்பி,
இராட்சியைக் கைது செய்து வருமாறு
ஐந்நூறுக்கும் மிகுதியான படைவீரர்களை நிக்கானோர் அனுப்பிவைத்தான்;
40 இதன்மூலம் யூதர்களுக்குப் பேரிடர் விளைவிக்க எண்ணினான்;
41 படைவீரர்கள் காவல் மாடத்தைக் கைப்பற்றி
முற்றத்தின் கதவை உடைக்கவிருந்தபோது
நெருப்பைக் கொண்டுவரச்செய்து கதவுகளை எரிக்கப் பணித்தான்.
அப்பொழுது அவர்களால் சூழப்பட்ட இராட்சி தம் வாளின் மேலேயே வீழ்ந்தார்.
42 தீயோர் கையில் அகப்பட்டுத்
தம் உயர்குடிப் பிறப்புக்குத் தகாத இழிவு அடைவதைவிட
மானத்தோடு இறக்க விரும்பினார்.
43 அப்போது ஏற்பட்ட பரபரப்பில்
அவர் வாள் மீது சரியாக விழவில்லை.
வீரர்கள் கதவுகளின் வழியாகப் பாய்ந்து வரவே
அவர் துணிந்து மதில்மேல் ஏறி ஆண்மையோடு கூட்டத்தினூடே குதித்தார்.
44 ஆனால் வீரர்கள் விரைந்து விலக,
அங்கு ஏற்பட்ட வெற்றிடத்தின் நடுவில் விழுந்தார்.
45 இன்னும் உயிர் இருக்கையில்,
சீற்றத்தால் பற்றியெரிந்தவராய் அவர் எழுந்தார்;
குருதி பீறிடக் கொடிய காயங்களுடன் கூட்டத்தின் நடுவே ஓடி
ஒரு செங்குத்தான பாறைமேல் நின்றார்.
46 அவருடைய குருதியெல்லாம் வடிந்ததும்
அவர் தம் குடல்களைக் கீறி எடுத்து இரு கைகளாலும் பிடித்துக்
கூட்டத்தை நோக்கிச் சுழற்றி எறிந்தார்.
இவற்றைத் தமக்குத் திரும்பவும் தருமாறு
உயிருக்கும் மூச்சுக்கும் ஆண்டவரான இறைவனை மன்றாடினார்.
இவ்வாறு இராட்சி இறந்தார்.
- குறிப்புகள்
[1] 14:4 - கி.மு. 161.
[2] 14:6 = 1 மக். 2:42; 7:13.
[3] 14:1-10 = 1 மக் 7:1-21.
அதிகாரம் 15
[தொகு]நிக்கானோரின் சூழ்ச்சி
[தொகு]
1 யூதாவும் அவருடைய ஆள்களும் சமாரியா நாட்டில் இருக்கிறார்கள் என்று
கேள்வியுற்ற நிக்கானோர் தனக்கு இழப்பு நேராவண்ணம்
அவர்களை ஓய்வுநாளில் தாக்கத் திட்டமிட்டான்.
2 நிக்கானோரைப் பின்தொடரக் கட்டாயத்துக்கு உள்ளான யூதர்கள் அவனிடம்,
"அவர்களை இத்துணைக் கொடுமையாகவும்
முரட்டுத்தனமாகவும் அழிக்கவேண்டாம்;
எல்லாவற்றையும் காண்பவர் மற்ற நாள்களைவிட மாட்சிப்படுத்தித்
தூய்மைப்படுத்தியுள்ள இந்நாளை மதிப்பீராக" என்றார்கள்.
3 அதற்கு அந்த மாபெரும் கயவன்,
"ஓய்வு நாளைக் கடைப்பிடிக்க கட்டளையிட்டுள்ள ஓர் அரசன்
விண்ணில் இருக்கிறானோ?" என்று வினவினான்.
4 அப்போது அவர்கள், "என்றுமுள ஆண்டவரே விண்ணின் வேந்தர்;
அவரே ஏழாம் நாளைக் கடைப்பிடிக்க எங்களைப் பணித்தவர்"
என்று அறிக்கையிட்டார்கள்.
5 அதற்கு அவன், "மண்ணின் வேந்தன் நான்.
ஆகவே நீங்கள் படைக்கலங்களை எடுத்து
அரச அலுவல் செய்ய நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்" என்றான்.
ஆயினும் தனது கொடிய திட்டத்தை நிறைவேற்றுவதில்
அவன் வெற்றிபெறவில்லை.
யூதா போருக்கு ஏற்பாடு செய்தல்
[தொகு]
6 செருக்கும் இறுமாப்பும் கொண்ட நிக்கானோர்
யூதாவையும் அவருடைய ஆள்களையும் வென்று,
வெற்றிச் சின்னம் ஒன்றை எழுப்ப முடிவு செய்திருந்தான்.
7 ஆயினும் ஆண்டவரிடமிருந்து தமக்கு உதவி கிடைக்கும்
என்ற முழு நம்பிக்கையில் மக்கபே தளராதிருந்தார்;
8 பிற இனத்தாரின் தாக்குதலைப்பற்றி அஞ்சாதிருக்கவும்,
முன்பு விண்ணக இறைவனிடமிருந்து தங்களுக்குக் கிடைத்த
உதவியை நினைவுகூரவும்,
இப்போதும் எல்லாம் வல்லவர் தங்களுக்கு வெற்றியை அருள்வார்
என நம்பிக்கைகொள்ளவும்
அவர் தம் ஆள்களுக்கு அறிவுரை வழங்கினார்;
9 திருச்சட்ட நூலிருந்தும் இறைவாக்கு நூல்களிலிருந்தும் படித்துக்காட்டி
அவர்களுக்கு ஊக்கமூட்டினார்; அவர்கள் ஏற்கெனவே வென்றிருந்த
போர்களை நினைவுபடுத்தி ஆர்வத்தைத் தூண்டிவிட்டார்.
10 அவர்களுக்குத் துணிவூட்டிக் கட்டளையிட்டார்;
பிற இனத்தார் நம்பிக்கைத் துரோகம் புரிந்ததையும்
ஆணைகளை மீறியதையும் சுட்டிக் காட்டினார்;
11 கேடயம், ஈட்டி ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் பாதுகாப்பைவிட
ஊக்கமூட்டும் சொல் என்னும் படைக்கலத்தை
அவர்கள் ஒவ்வொருவருக்கும் அணிவித்தார்;
தாம் கண்ட ஒரு கனவுபற்றி
அதாவது நம்பத்தகுந்த ஒருவகைக் காட்சிபற்றி விளக்கி
அவர்கள் அனைவரையும் மகிழ்வித்தார்.
12 அவர் கண்ட காட்சி பின்வருமாறு:
ஓனியா தம் கைகளை விரித்து
யூத மக்கள் அனைவருக்காகவும் மன்றாடிக் கொண்டிருந்தார்.
அவர் ஒரு காலத்தில் தலைமைக் குருவாய் இருந்தவர், நல்லவர், மேன்மைமிக்கவர்,
எளிமையான தோற்றமும் அடக்கமுடைமையும் உள்ளவர்,
பொருந்தப் பேசுபவர், குழந்தைப் பருவ முதல் நற்பண்புகளில் பயிற்சி பெற்றவர்.
13 இதேபோல வேறொரு மனிதரும் தோன்றினார்;
அவர் நரைத்த முடியும் மதிப்பும் வியத்தகு மாட்சியும்
அதிகாரத் தோற்றமும் கொண்டவர்.
14 அப்போது ஓனியா,
"இவர் தம் சகோதரர்கள்மீது அன்புசெலுத்துபவர்;
தம் மக்களுக்காகவும் திருநகருக்காகவும் மிகுதியாக வேண்டிக்கொள்பவர்;
இவரே கடவுளின் இறைவாக்கினரான எரேமியா" என்று கூறினார்.
15 அப்பொழுது எரேமியா தமது வலக்கையை நீட்டி,
யூதாவுக்கு ஒரு பொன் வாளைக் கொடுத்தார்.
அதைக் கொடுத்தபடியே,
16 "கடவுளின் கொடையாகிய இத்தூய வாளை எடுத்துக்கொள்ளும்;
இதைக்கொண்டு உம்முடைய எதிரிகளை அடித்து நொறுக்கும்" என்றார்.
17 அஞ்சாமையைத் தூண்டிவிடக் கூடியதும்
இளைஞருடைய உள்ளங்களில் வீரத்தை எழுப்பிவிடக்கூடியதுமான
தம் விழுமிய சொற்களால் யூதா எல்லாருக்கும் ஊக்கமூட்டினார்.
எனவே காலம் தாழ்த்தாமல் துணிவுடன் தாக்கி,
முழு வலிமையோடு நேருக்கு நேர் போர்செய்து
நிலைமைக்கு முடிவு காண அவர்கள் உறுதிபூண்டார்கள்;
ஏனெனில் நகரமும் திருஉறைவிடமும் கோவிலும் ஆபத்தான நிலையில் இருந்தன.
18 தங்கள் மனைவியர், பிள்ளைகள், சகோதரர்கள்,
உறவினர்கள் ஆகியோரைப் பற்றி அவர்கள் பெரிதும் கவலைப்படவில்லை;
தூய்மைப்படுத்தப்பெற்ற கோவிலைப்பற்றியே
எல்லாவற்றுக்கும் மேலாகக் கவலைப்பட்டார்கள்.
19 நகரில் விடப்பட்டிருந்தவர்களும் பெரிதும் மனக்கலக்கம் அடைந்தார்கள்;
ஏனெனில் திறந்தவெளியில் நடைபெறவிருந்த
மோதலைப் பற்றிய கவலை அவர்களுக்கு இருந்தது.
20 போரின் முடிவை எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
எதிரிகள் போருக்கு அணிவகுத்துத் தங்கள் படைகளுடன்
நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள்.
யானைகள் போர்த்திற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும்,
குதிரைப்படைகள் இருபக்கங்களிலுமாக நிறுத்தப்பட்டன.
21 படைத்திரளின் அணிவகுப்பையும்
வீரர்களின் படைக்கல வகைகளையும்
யானைகளின் வெறியையும் கண்ட மக்கபே
விண்ணை நோக்கித் தம் கைகளை உயர்த்தி,
வியத்தகு செயல்கள் புரியும் ஆண்டவரை மன்றாடினார்.
ஏனெனில் படைக்கலங்களினால் அல்ல;
ஆண்டவரின் திருவுளப்படி தகுதி பெற்றவர்களுக்கே
அவர் வெற்றியை அருள்கிறார் என்று அறிந்திருந்தார்.
22 அவர் பின்வருமாறு மன்றாடினார்:
"ஆண்டவரே, யூதேயாவின் மன்னர் எசேக்கியாவின் காலத்தில்
நீர் உம் வானதூதரை அனுப்ப,
அவர் சனகெரிபின் பாசறையில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரைக் கொன்றார். [1]
23 விண்ணின் வேந்தரே,
பகைவர்களைப் பெரிதும் அஞ்சி நடுங்கவைத்து
எங்களை வழிநடத்தக் கூடிய ஒரு நல்ல வானதூதரை இப்போது அனுப்பும்.
24 உம் தூய மக்களைத் தாக்க வந்திருக்கும் இந்த இறைப்பழிப்போரை
உமது கைவன்மையால் வீழ்த்துவீராக."
இத்துடன் அவர் தம் வேண்டுதலை முடித்துக்கொண்டார்.
நிக்கானோரின் வீழ்ச்சியும் இறப்பும்
[தொகு]
25 நிக்கானோரும் அவனுடைய ஆள்களும்
எக்காளங்களோடும் போர்ப் பாடல்களோடும் முன்னேறிச் சென்றார்கள்.
26 ஆனால் யூதாவும் அவருடைய ஆள்களும்
இறைவனைத் துணைக்கு அழைத்து மன்றாடிய வண்ணம்
பகைவர்களை எதிர்த்தார்கள்;
27 இவ்வாறு கைகளால் போர் செய்து கொண்டும்,
உள்ளத்தில் கடவுளை மன்றாடிக்கொண்டும் இருந்ததால்,
குறைந்தது முப்பத்தையாயிரம் பேரை வீழ்த்தினார்கள்;
கடவுளுடைய வெளிப்பாட்டால் பெரிதும் மகிழ்ந்தார்கள்.
28 போர் முடிந்து அவர்கள் மகிழ்ச்சியோடு திரும்பிக்கொண்டிருந்தபோது
நிக்கானோர் தன் முழுப் போர்க்கவசத்துடன் இறந்து கிடப்பதைக் கண்டுபிடித்தார்கள்.
29 அப்போது அவர்கள் உரத்த குரல் எழுப்பி ஆரவாரம் செய்து
வல்லவரான இறைவனைத் தங்கள் தாய்மொழியில் போற்றினார்கள்.
30 தம் உடலாலும் உள்ளத்தாலும்
எக்காலத்தும் தம் மக்களைப் பாதுகாத்து வந்தவரும்
தம் நாட்டினர்பால் இளைமைமுதல் பற்றுக்கொண்டிருந்தவருமாகிய யூதா,
நிக்கானோரின் தலையையும் தோளோடு வலக்கையையும் வெட்டியெடுத்து
அவற்றை எருசலேமுக்குக்கொண்டு வரும்படி தம் ஆள்களுக்குக் கட்டளையிட்டார்.
31 அங்குச் சேர்ந்தபோது அவர் தம் மக்களை ஒன்றுகூட்டினார்;
குருக்களைப் பலிபீடத்திற்குமுன் நிறுத்தினார்;
கோட்டையில் இருந்தவர்களுக்கு ஆளனுப்பினார்;
32 கயவன் நிக்கானோரின் தலையையும்,
எல்லாம் வல்லவரின் தூய இல்லத்துக்கு எதிராக
இறுமாப்போடு நீட்டிய அந்த இறைபழிப்போனின் கையையும்
அவர்களுக்குக் காட்டினார்;
33 கடவுள் நம்பிக்கையற்ற நிக்கானோரின் நாக்கைத் துண்டித்தார்;
அதைச் சிறுசிறு துண்டுகளாக்கிப் பறவைகளுக்கு உணவாகப் போடவும்,
அவனுடைய மூடத்தனத்தின் விளைவை மக்கள் காணும்பொருட்டு,
அவனுடைய தலையையும் கையையும்
கோவிலுக்கு எதிரில் தொங்கவிடவும் கட்டளையிட்டார்.
34 அவர்கள் எல்லாரும் விண்ணை நோக்கி,
தம்மையே வெளிப்படுத்தியிருந்த ஆண்டவரை வாழ்த்தினார்கள்:
"தம் சொந்த இடத்தைத் தூய்மை கெடாதவாறு காப்பாற்றியவர் போற்றி!"
என்று முழங்கினார்கள்.
35 ஆண்டவரிடமிருந்து அவர்கள் பெற்றிருந்த உதவியின்
தெளிவான, வெளிப்படையான அடையாளமாக
எல்லாருக்கும் விளங்கும்பொருட்டு
நிக்கானோரின் தலையைக் கோட்டையில் யூதா தொங்கவிட்டார். [2]
36 இந்நாளைக் கொண்டாட ஒருபோதும் தவறக் கூடாது என்றும்,
அரமேய மொழியில் அதார் என்ற பன்னிரண்டாம் மாதம்
பதின்மூன்றாம் நாள், அதாவது மொர்தக்காயின் நாளுக்கு முந்திய நாள்
அதனைக் கொண்டாட வேண்டும் என்றும்
பொது வாக்கெடுப்பு மூலம் அவர்கள் முடிவு செய்தார்கள். [3]
7. முடிவுரை
[தொகு]
37 இதுவே நிக்கானோரின் முடிவு.
அக்காலம்முதல் எருசலேம் நகர் எபிரேயர்களுக்கு உரியதாயிற்று.
இத்தோடு நானும் வரலாற்றை முடிக்கிறேன்.
38 இது நன்முறையிலும் கட்டுக்கோப்புடனும் எழுதப்பட்டிருப்பின்
இதுவே எனது விருப்பம்.
குறைபாடுகளுடனும் சிறப்புக் குன்றியும் அமைந்திருந்தால்
என்னால் செய்ய முடிந்தது அவ்வளவுதான்.
39 திராட்சை இரசத்தை மட்டும்
அல்லது தண்ணீரை மட்டும் தனியாகக் குடிப்பது
உடல்நலனுக்குக் கெடுதி தரும்.
மாறாக, தண்ணீர் கலந்த திராட்சை இரசம்
இனிமையானது, சுவைமிக்கது.
அதுபோல வரலாற்றை எழுதுவதில் கையாளப்படும் நடை
படிப்போரின் செவிக்கு இன்பம் ஊட்டும்.
- குறிப்புகள்
[1] 15:22 = 2 மக் 8:19; 2 அர 19:35; எசா 37:36; 1 மக் 7:40-41.
[2] 15:25-35 = 1 மக் 7:43-50.
[3] 15:36 = 1 மக் 7:49; காண். எஸ் (கி) 9:17-22.
(மக்கபேயர் - இரண்டாம் நூல் நிறைவுற்றது)
(தொடர்ச்சி): மத்தேயு நற்செய்தி: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை