உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மத்தேயு நற்செய்தி/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து


மத்தேயு நற்செய்தி (Matthew) [1]

[தொகு]

முன்னுரை

ஆசிரியர்

[தொகு]

இயேசு கிறிஸ்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்தூதர் மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு திருத்தூதர் தாமே நேரில் கண்ட, கேட்ட நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதை விட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்கவேண்டும் எனக் கொள்வதே சிறப்பு.

சூழல்

[தொகு]

எருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின்னர் யூதச்சங்கங்கள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய ஒரு காலக்கட்டத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். இயேசுவின் சீடர்கள் யூதத் தொழுகைக் கூடங்களை விட்டுவிட்டுத் திருச்சபையாகக் கூடிவரத் தொடங்கிவிட்ட காலத்தில் இந்நூல் தோன்றியிருக்கிறது. அத்தகைய தொடக்கக் காலத் திருச்சபைக்குள்ளும் அறம், மன்னிப்பு, நல்லுறவு ஆகியவை இன்றியமையாதவை எனக் கற்பிக்க வேண்டிய சூழல் காணப்படுவதையும் இதைப் படிப்பவர் உய்த்துணரலாம்.

உள்ளடக்கம்

[தொகு]

கிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்துக் கிறிஸ்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன. இது தவிர யூதக் கிறிஸ்தவர்கள் பலர் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மனத் தளர்ச்சியடைந்து இருந்தனர். இயேசுதான் உண்மையான மெசியாவா என்ற ஐயப்பாடு அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாண இந்நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இயேசுதாம் என யூதக் கிறிஸ்தவர்களுக்கு அழுத்தமாக இந்நூல் கூறுகிறது. அவர் இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது எனும் கருத்தும் சுட்டிக்காட்டப்படுகிறது.

யூதக் கிறிஸ்தவர்கள் பிற இனத்தாரையும் சீடராக்கும் பணியைச் செய்ய இந்நூல் அறைகூவல் விடுக்கிறது. பிற இனத்தார் திருச்சட்டம் பெறாதவர்கள். இப்போது அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிடினும் திருச்சட்டத்தின் உயர்வு பற்றி அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. கிறிஸ்து திருச்சட்டத்தின் நிறைவு எனவும் வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் மத்தேயு, இறையாட்சியின் நெறிகள் யூதச் சமய நெறிகளைவிட மேலானவை எனக் கூறிக் கிறிஸ்தவ மதிப்பீடுகளைத் தொகுத்துப் புதிய சட்டநூலாகத் திருச்சபைக்கு வழங்குகிறார்; யாவரும் இப்புதிய சட்டத் தொகுப்பைக் கடைப்பிடிக்க அறைகூவல் விடுக்கிறார் (மத் 28:20). இதற்கு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், முக்கியமாக அவரின் கலிலேயப் பணிகள் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன எனவும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.

இந்நூலில் கிறிஸ்தியல், திருச்சபையியல், நிறைவுகால இயல் ஆகியவற்றிற்கான அடிப்படைகள் பிணைந்து கிடக்கின்றன.

அமைப்பு

[தொகு]

திருச்சட்ட நூலில் ஐந்து நூல்கள் அமைந்திருப்பது போல் இந்நூலிலும் முகவுரை, முடிவுரை நீங்கலாக ஐம்பெரும் பகுதிகள் அமைந்திருக்கக் காணலாம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு நிகழ்ச்சிப் பகுதியும் ஓர் அறிவுரைப் பகுதியும் காணப்படுகின்றன.

மத்தேயு நற்செய்தி

[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
முன்னுரை

இயேசுவின் பிறப்பும் குழந்தைப் பருவமும்

1 - 2 5
பகுதி 1: விண்ணரசு பறைசாற்றப்படல்

1. நிகழ்ச்சி (3, 4)
2. அறிவுரை (5 - 7)
(மலைப்பொழிவு)

3 - 7 7 - 16
பகுதி 2: விண்ணரசுப் பணி

1. நிகழ்ச்சி (8, 9)
2. அறிவுரை (10)
(திருத்தூதுப் பொழிவு)

8 - 10 16 - 22
பகுதி 3: விண்ணரசின் தன்மை

1. நிகழ்ச்சி (11, 12)
2. அறிவுரை (13:1-52)
(உவமைப் பொழிவு)

11:1 - 13:52 22 - 29
பகுதி 4: விண்ணரசின் அமைப்பு

1. நிகழ்ச்சி (13:53 - 17)
2. அறிவுரை (18)
(திருச்சபைப் பொழிவு)

13:53 - 18:35 29 - 38
பகுதி 5: விண்ணரசின் வருகை

1. நிகழ்ச்சி (19 - 23)
2. அறிவுரை (24, 25)
(நிறைவுகாலப் பொழிவு)

19 - 25 38 - 53
முடிவுரை

இயேசு துன்புற்று இறத்தலும் உயிர்த்தெழுதலும்

26 - 28 53 - 61

மத்தேயு நற்செய்தி (Matthew)

[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1

[தொகு]

இயேசுவின் பிறப்பும் குழந்தைப் பருவமும்

[தொகு]

இயேசுவின் மூதாதையர் பட்டியல்

[தொகு]

(லூக் 3:23-38)


1-2 தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான
இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:
ஆபிரகாமின் மகன் ஈசாக்கு;
ஈசாக்கின் மகன் யாக்கோபு;
யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். [1]


3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்;
பெரேட்சின் மகன் எட்சரோன்;
எட்சரோனின் மகன் இராம். [2] [3]


4 இராமின் மகன் அம்மினதாபு;
அம்மினதாபின் மகன் நகசோன்;
நகசோனின் மகன் சல்மோன்.


5 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு;
போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது;
ஓபெதின் மகன் ஈசாய்.


6 ஈசாயின் மகன் தாவீது அரசர்;
தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.


7 சாலமோனின் மகன் ரெகபயாம்;
ரெகபயாமின் மகன் அபியாம்;
அபியாமின் மகன் ஆசா. [4]


8 ஆசாவின் மகன் யோசபாத்து;
யோசபாத்தின் மகன் யோராம்;
யோராமின் மகன் உசியா.


9 உசியாவின் மகன் யோத்தாம்;
யோத்தாமின் மகன் ஆகாசு;
ஆகாசின் மகன் எசேக்கியா.


10 எசேக்கியாவின் மகன் மனாசே;
மனாசேயின் மகன் ஆமொன்;
ஆமொனின் மகன் யோசியா.


11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் [5] அவர் சகோதரர்களும்.
இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச்
சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.


12 பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு
எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்;
செயல்தியேலின் மகன் செருபாபேல்.


13 செருபாபேலின் மகன் அபியூது;
அபியூதின் மகன் எலியாக்கிம்;
எலியாக்கிமின் மகன் அசோர்.


14 அசோரின் மகன் சாதோக்கு;
சாதோக்கின் மகன் ஆக்கிம்;
ஆக்கிமின் மகன் எலியூது.


15 எலியூதின் மகன் எலயாசர்;
எலயாசரின் மகன் மாத்தான்;
மாத்தானின் மகன் யாக்கோபு.


16 யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு.
மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு. [6]
17 ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீது வரை
தலைமுறைகள் பதினான்கு;
தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை
தலைமுறைகள் பதினான்கு;
பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை
தலைமுறைகள் பதினான்கு.

இயேசுவின் பிறப்பு

[தொகு]

(லூக் 2:1-7)


18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்:
அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும்
திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது.
அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். [7]
19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர்.
அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல்
மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது
ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி,
"யோசேப்பே, தாவீதின் மகனே,
உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்.
ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.
21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார்.
அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்.
ஏனெனில் அவர் தம் மக்களை
அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார். [8]

22-23 "இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்.
அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்"


என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே
இவை யாவும் நிகழ்ந்தன.
இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள். [9]
24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து
ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே
தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.
25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை
யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை.
யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார். [10]


குறிப்புகள்

[1] 1:1 = மத் 9:27; கலா 3:16; எபி 7:14.
[2] 1:3 - கிரேக்க பாடம்: ஆராம்.
[3] 1:3 = தொநூ 38:29.
[4] 1:7 - கிரேக்க பாடம்: ஆசாபு.
[5] 1:11 - "எக்கோனியா" என்பவரின் மறுபெயர் "யோவாக்கின்" ஆகும்.
[6] 1:16 - "மெசியா" என்னும் எபிரேயச் சொல்லே
"கிறிஸ்து" என்று கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இதற்கு "அருள்பொழிவு பெற்றவர்" அல்லது
"கடவுள் தேர்ந்தெடுத்த தலைவர்" என்பது பொருள்.
[7] 1:18 = லூக் 1:27; 2:5,11.
[8] 1:21 = லூக் 1:31.
[9] 1:23 = எசா 7:14.
[10] 1:25 = லூக் 2:21.


அதிகாரம் 2

[தொகு]

ஞானிகள் வருகை

[தொகு]


1 ஏரோது அரசன் காலத்தில்
யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்.
அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,
2 "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?
அவரது விண்மீன் எழக் கண்டோம்.
அவரை வணங்க வந்திருக்கிறோம்" என்றார்கள்.
3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான்.
அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.
4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும்,
மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி,
மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.
5-6 அவர்கள் அவனிடம் "யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.
ஏனெனில்,

'யூதா நாட்டுப் பெத்லகேமே,


யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை;
ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர்


உன்னிலிருந்தே தோன்றுவார்'


என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்" என்றார்கள். [1]
7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய்
விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.
8 மேலும் அவர்களிடம்,
"நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு
எனக்கு அறிவியுங்கள்.
அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்"
என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.
9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்.
இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக்
குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை
அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.
10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும்
அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
11 வீட்டிற்குள் அவர்கள் போய்க்
குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்;
நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்;
தங்கள் பேழைகளைத் திறந்து
பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும்
காணிக்கையாகக் கொடுத்தார்கள்.
12 ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று
கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால்
வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்

[தொகு]


13 அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர்
யோசேப்புக்குக் கனவில் தோன்றி,
"நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு
எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும்.
நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும்.
ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்" என்றார்.
14 யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு,
இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
15 ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு,

"எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்"


என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது. [2]

குழந்தைகள் படுகொலை

[தொகு]


16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு
மிகுந்த சீற்றங் கொண்டான்.
அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக்
காலத்தைக் கணக்கிட்டுப்
பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி
இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான
எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.
17-18 அப்பொழுது

"ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது;


ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது;
இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறார்;
18 ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்;


ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை"


என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது. [3]

எகிப்திலிருந்து திரும்பி வருதல்

[தொகு]


19 ஏரோது காலமானதும்,
ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,
20 "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு
இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும்.
ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள்
இறந்து போனார்கள்" என்றார்.
21 எனவே, யோசேப்பு எழுந்து
குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு
இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.
22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா
தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு
அங்கே போக அவர் அஞ்சினார்;
கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார்.
இவ்வாறு, "நசரேயன்" என அழைக்கப்படுவார் என்று
இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது. [4]


குறிப்புகள்

[1] 2:6 = மீக் 5:2.
[2] 2:15 = ஓசே 11:1.
[3] 2:18 = எரே 31:15.
[4] 2:23 = மாற் 1:24; லூக் 2:39; யோவா 1:45.


(தொடர்ச்சி): மத்தேயு நற்செய்தி: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை