திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 53 முதல் 54 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்" - எசாயா 53:6.

எசாயா (The Book of Isaiah)[தொகு]

அதிகாரங்கள் 53 முதல் 54 வரை

அதிகாரம் 53[தொகு]


1 நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்?
ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது? [1]


2 இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும்
ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்;
நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை;
நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை;


3 அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்;
வேதனையுற்ற மனிதராய் இருந்தார்;
நோயுற்று நலிந்தார்;
காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்;
அவர் இழிவுபடுத்தப்பட்டார்;
அவரை நாம் மதிக்கவில்லை.


4 மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்;
நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்;
நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும்
சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். [2]


5 அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்;
நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்;
நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்;
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். [3]


6 ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்;
நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்;
ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார். [4]


7 அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்;
ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை;
அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும்
உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும்
அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். [5]


8 அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு,
இழுத்துச் செல்லப்பட்டார்;
அவருக்கு நேர்ந்ததைப் பற்றி அக்கறை கொண்டவர் யார்?
ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்;
என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார். [6]


9 வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை;
வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை;
ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்;
செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார். [7]


10 அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும்
ஆண்டவர் திருவுளம் கொண்டார்;
அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்;
எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்;
ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும்.


11 அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்;
நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்;
அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.


12 ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்;
அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்;
ஏனெனில், அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்;
கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்;
ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்;
கொடியோருக்காகப் பரிந்து பேசினர். [8]


குறிப்புகள்

[1] 53:1 = யோவா 12:8; உரோ 10:16.
[2] 53:4 = மத் 8:17.
[3] 53:5 = 1 பேது 2:24.
[4] 53:6 = 1 பேது 2:25.
[5] 53:7 = திவெ 2:6.
[6] 53:7-8 = திப 8:32-33.
[7] 53:9 = 1 பேது 2:22.
[8] 53:12 = மாற் 15:28; லூக் 22:37.


அதிகாரம் 54[தொகு]

இஸ்ரயேல் மீது ஆண்டவர் கொண்ட அன்பு[தொகு]


1 பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு;
பேறுகால வேதனை அறியாதவளே,
அக்களித்துப் பாடி முழங்கு;
ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள்
கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட
ஏராளமானவர்கள், என்கிறார் ஆண்டவர். [1]


2 உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு;
உன் குடியிருப்புகளின் தொங்கு திரைகளைப் பரப்பிவிடு;
உன் கயிறுகளைத் தாராளமாய் நீட்டி விடு;
உன் முளைகளை உறுதிப்படுத்து.


3 வலப்புறமும் இடப்புறமும் நீ விரிந்து பரவுவாய்;
உன் வழிமரபினர் வேற்றுநாடுகளை உடைமையாக்கிக் கொள்வர்;
பாழடைந்து கிடக்கும் நகர்களிலும் அவர்கள் குடியேற்றப்படுவர்.


4 அஞ்சாதே, நீ அவமானத்திற்குள்ளாகமாட்டாய்;
வெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்;
உன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்;
உன் கைம்மையின் இழிநிலையை இனி நினைக்கமாட்டாய்.


5 ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர்,
'படைகளின் ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம்.
இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்;
'உலக முழுமைக்கும் கடவுள்' என அவர் அழைக்கப்படுகின்றார்.


6 ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவி போலும்,
தள்ளப்பட்ட இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை
ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள்.


7 நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்;
ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.


8 பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே
என் முகத்தை உனக்கு மறைத்தேன்;
ஆயினும் என்றுமுள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன்,
என்கிறார் ஆண்டவர்.


9 எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது;
நோவாவின் காலத்துப் பெருவெள்ளம்
இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது
என்று நான் ஆணையிட்டேன்;
அவ்வாறே உன்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும்,
உன்னைக் கண்டிக்க மாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன். [2]


10 மலைகள் நிலை சாயினும்
குன்றுகள் இடம் பெயரினும்
உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது;
என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது,
என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.


11 துயருற்றவளே, சூறைக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டவளே,
ஆறுதல் பெறாது தவிப்பவளே,
இதோ, மாணிக்கக் கற்களால் உன் அடித்தளத்தை அமைப்பேன்,
நீலக் கற்களால் உன் நிலைக்களத்தை நிறுவுவேன்.


12 உன் கால்மாடங்களைச் சிவப்புக் கற்களாலும்,
உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும்
உன் மதில்கள் அனைத்தையும் விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன். [3]


13 உன் குழந்தைகள் அனைவருக்கும்
ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்;
உன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர். [4]


14 நேர்மையில் நீ நிலைநாட்டப்படுவாய்;
ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்;
நீ அஞ்சாதே! திகில் உன்னை அணுகாது.


15 எவர்களாவது உன்னை எதிர்த்துக் கூடினால்
அவர்கள் என்னிடமிருந்து வந்தவர்கள் அல்லர்;
உன்னைத் தாக்கவரும் எவனும் உன் பொருட்டு வீழ்ச்சியுறுவான்.


16 இதோ, கரிநெருப்பை ஊதிப் போர்க் கருவியை
அதன் பயனுக்கு ஏற்ப உருவாக்கும் கொல்லனைப் படைத்தவர் நான்;
அதைப் பாழாக்கி அழிப்பவனையும் படைத்தவர் நான்.


17 உன்னைத் தாக்குமாறு உருவாக்கப்பட்ட
எந்தப் போர்க்கருவியும் நிலைத்திராது.
உன்மேல் குற்றஞ்சாட்டித் தீர்ப்புச் சொல்ல எழும் எந்த நாவையும்
நீ அடக்கிவிடுவாய்;
இவையே ஆண்டவரின் ஊழியர்களது உரிமைச்சொத்தும்
நான் அவர்களுக்கு அளிக்கும் வெற்றியுமாய் இருக்கின்றன,
என்கிறார் ஆண்டவர்.


குறிப்புகள்

[1] 54:1 = கலா 4:27.
[2] 54:9 = தொநூ 9:8-17.
[3] 54:11-12 = திவெ 21:18-21.
[4] 54:13 = யோவா 6:45.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 55 முதல் 56 வரை