திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 39 முதல் 40 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
"கடவுள் அருளிய காட்சியில் அவர் என்னை இஸ்ரயேல் நாட்டுக்குக் கொண்டு சென்று, அங்கே மிக உயர்ந்த மலையொன்றில் என்னை நிறுத்தினார். அதற்குத் தெற்கே ஒரு நகர் போன்ற கட்டடங்கள் காணப்பட்டன. அவர் அங்கே என்னை அழைத்துச் சென்றார். அங்கே மனிதர் ஒருவரைக் கண்டேன்...கோவிலுக்கு வெளியில், அதனை முற்றிலும் சுற்றி, ஒரு மதில் இருக்கக் கண்டேன்." - எசேக்கியேல் 40:2-3,5

எசேக்கியேல் (The Book of Ezekiel)[தொகு]

அதிகாரங்கள் 39 முதல் 40 வரை

அதிகாரம் 39[தொகு]

கோகின் படுதோல்வி[தொகு]


1 மானிடா! நீ கோகுக்கு எதிராய் இறைவாக்குரைத்துச் சொல்:
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே.
மெசேக்கு மற்றும் தூபால் இனங்களின் முதன்மைத் தலைவனாகிய கோகே!
நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்.
2 நான் உன்னைத் திருப்பி, தொலைவடக்குப் பகுதிகளிலிருந்து விரட்டி,
இஸ்ரயேல் மலைகளுக்கு இழுத்துக்கொண்டு வருவேன்.
3 பின்னர் உன் இடக்கையில் இருக்கும் வில்லை நான் தட்டிவிட்டு
வலக்கையில் இருக்கும் அம்புகளைக் கீழே விழச் செய்வேன்.
4 இஸ்ரயேல் மலைகளில் நீ வீழ்வாய்;
நீயும் உன் எல்லாப் படைகளும், உன்னோடிருக்கும் மக்களினங்களும் வீழ்வீர்.
நான் உன்னை ஊன் தின்னும் எல்லாப் பறவைகளுக்கும்,
காட்டு விலங்குகளுக்கும் இரையாகக் கொடுப்பேன்.
5 நீ திறந்தவெளியில் வீழ்வாய். நானே இதை உரைத்தேன்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
6 நான் மாகோகின்மீதும் கடலோரங்களில் பாதுகாப்பாய் வாழும் எல்லார்மீதும்
நெருப்பை அனுப்புவேன்.
அப்பொழுது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.
7 நான் என் மக்களாம் இஸ்ரயேலில் என் திருப்பெயரை அறியச் செய்வேன்.
என் திருப்பெயரை இனிமேல் தீட்டுப்படவிடமாட்டேன்.
ஆண்டவராகிய நானே இஸ்ரயேலில் தூயவராய் இருப்பவர் என
வேற்றினத்தார் அறிந்துகொள்வர்.
8 இதோ வருகிறது! இது உறுதியாய் நடந்தேறும்;
இதுவே நான் குறிப்பிட்ட நாள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
9 அப்போது, இஸ்ரயேல் நகர்களில் வாழ்வோர் வெளியேறிப்
படைக்கலன்களாகிய சிறியதும் பெரியதுமான கேடயங்களையும்
வில்களையும் அம்புகளையும், வேல்களையும்
ஈட்டிகளையும் எரிபொருளாய் பயன்படுத்துவர்.
ஏழாண்டுகள் இவ்வாறு எரிபொருளாய்ப் பயன்படுத்துவர்.
10 அவர்கள் விறகுகளை வயல் வெளியிலிருந்து சேகரிக்கவோ
காடுகளிலிருந்து வெட்டவோ மாட்டார்கள்.
ஏனெனில் படைக்கலன்களை அவர்கள் எரிபொருளாய்ப் பயன்படுத்துவர்.
அவர்கள் தங்களைக் கொள்ளையடித்தவர்களைக் கொள்ளையடிப்பர்,
தங்களைச் சூறையாடியோரைச் சூறையாடுவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
11 அந்த நாளில் இஸ்ரயேல் கடலுக்குக் கிழக்கே
வழிப்போக்கர்களின் பள்ளத்தாக்கில் கோகுக்கு ஓர் இடுகாடு கொடுப்பேன்.
அது வழிப்போக்கரின் பாதையில் இருக்கும்.
ஏனெனில் கோகையும் அவனுடைய கூட்டத்தினர் அனைவரையும் அவர்கள் அங்கே புதைப்பர்.
எனவே அதை 'அமோன் கோகு [1] பள்ளத்தாக்கு' என அழைப்பர்.
12 நாட்டைத் தூய்மைப்படுத்தும்பொருட்டு
இஸ்ரயேல் வீட்டார் அவர்களை ஏழு மாதங்கள் புதைப்பர்.
13 நாட்டின் எல்லா மக்களும் அவர்களைப் புதைப்பர்.
நான் என் மாட்சியை வெளிப்படுத்தும் அந்நாள்
அவர்களுக்குச் சிறப்பான நாளாய் இருக்கும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
14 நாட்டைத் தூய்மைப்படுத்த வழிப்போக்கர் குழு ஒன்றை அவர்கள் அழைப்பர்.
அக்குழுவினர் அவர்கள் நாடெங்கும் சென்று
மண்ணில் எஞ்சிக் கிடக்கும் பிணங்களைத் தேடிப்புதைப்பர்.
ஏழு மாத முடிவில் அவர்கள் இப்படித் தேடத் தொடங்குவர்.
15 அவர்கள் நாடெங்கும் செல்கையில் ஒருவன் ஒரு மனித எலும்புக்கூட்டைப் பார்த்தால்,
புதைப்போர் அதனை அமோன் கோகு பள்ளத்தாக்கில் புதைக்கும் வரை,
அதன் அருகில் ஓர் அடையாளம் வைக்க வேண்டும்.
16 இத்துடன் 'அமோனா' எனும் பெயரில் ஒரு நகரும் இருக்கும்;
இவ்வாறு அவர்கள் நாட்டைத் தூய்மைப்படுத்துவர்.
17 மானிடா! தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
எல்லாப் பறவைகளையும் எல்லாக் காட்டுவிலங்குகளையும் அழைத்துச் சொல்:
வாருங்கள்! எப்பக்கமுமிருந்து நான் தயாரிக்கும் என் பலிக்கு ஒன்று திரண்டு வாருங்கள்.
உங்களுக்கென இஸ்ரயேல் மலையில் நடைபெறும் பெரிய பலி அது.
நீங்கள் அங்கே இறைச்சி உண்டு, இரத்தம் குடிக்கலாம்.
18 வலிமைமிகு மனிதரின் சதையை உண்பீர்கள்.
நாட்டின் தலைவர்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள்.
அவற்றை, ஆட்டுக்கிடாய்கள், செம்மறிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள்,
பாசானின் கொழுத்த காளைகள் ஆகியவற்றை உண்பது போல உண்பீர்கள்.
19 நான் உங்களுக்கெனத் தயாரிக்கும் பலியில்
நீங்கள் தெவிட்டுமளவுக்குக் கொழுப்பை உண்டு,
வெறியுண்டாகுமளவுக்கு இரத்தத்தைக் குடிப்பீர்கள்.
20 என் மேசையில் நீங்கள் குதிரைகளையும் குதிரை வீரர்களையும்
வலிமைமிகு மனிதர்களையும் எல்லாப் போர் வீரர்களையும்
வயிறார உண்பீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். [2]

இஸ்ரயேலுக்கு மறுவாழ்வு[தொகு]


21 நான் என் மாட்சியை வேற்றினத்தாரிடையே வெளிப்படுத்துவேன்.
நான் நிறைவேற்றும் தண்டனைத் தீர்ப்பையும்
அவர்கள் மீது விழும் என் கைவலிமையையும் எல்லா மக்களினத்தாரும் காண்பர்.
22 ஆண்டவராகிய நானே அவர்களின் கடவுள் என்பதை
அந்நாளிலிருந்து இஸ்ரயேல் வீட்டார் அறிந்துகொள்வர்.
23 இஸ்ரயேல் மக்கள் எனக்கு உண்மையற்றவராய் நடந்ததால்
தங்கள் பாவத்தின் பொருட்டுச் சிறையிருப்புக்குச் சென்றனர் என
வேற்றினத்தார் அறிந்துகொள்வர்.
எனவே நான் என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொண்டு
அவர்களைப் பகைவர்களிள் கையில் ஒப்புவித்தேன்.
அவர்கள் எல்லாரும் வாளால் வீழ்ந்தனர்.
24 நான் அவர்களின் தீட்டுக்கும் குற்றங்களுக்கும் ஏற்றபடி அவர்களை நடத்தி
என் முகத்தை அவர்களிடமிருந்து திருப்பிக்கொண்டேன்.
25 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
இப்போது நான் யாக்கோபை முன்னைய நன்னிலைக்குக் கொணர்வேன்.
இஸ்ரயேல் வீட்டார் அனைவர் மீதும் மனம் இரங்குவேன்.
என் திருப்பெயர் குறித்து பேரார்வம் கொண்டிருப்பேன்.
26 அவர்கள் தங்கள் நாட்டில் எவருடைய அச்சுறுத்தலுமின்றிப்
பாதுகாப்புடன் வாழும்போது,
தங்கள் அவமானத்தையும் அவர்கள் எனக்குச் செய்த எல்லா
நம்பிக்கைத் துரோகங்களையும் மறந்து விடுவர்.
27 நான் அவர்களை வேற்றினத்தாரிடமிருந்தும்
பகை நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்க்கையில்,
நான் தூயவர் என அவர்கள் வழியாய்ப்
பல மக்களினங்கள் முன்னால் வெளிப்படுத்துவேன்.
28 அப்போது ஆண்டவராகிய நானே அவர்களின் கடவுள் என்று
அவர்கள் அறிந்து கொள்வர்.
ஏனெனில் நான் அவர்களை வேற்றித்தாரிடையே
சிறையிருப்புக்கு அனுப்பினாலும்
அவர்களது நாட்டிற்குள் கூட்டிச் சேர்ப்பேன்.
அவர்களில் யாரையும் அங்கே விட்டுவிட மாட்டேன்.
29 நான் இனி ஒருபோதும் என் முகத்தை
அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்ளமாட்டேன்.
இஸ்ரயேல் வீட்டார் மீது என் ஆவியைப் பொழிவேன்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.


குறிப்புகள்

[1] 39:11 - எபிரேயத்தில், 'கோகு கூட்டத்தினர்' என்பது பொருள்.
[2] 39:17-20 = திவெ 19:17-18.


அதிகாரம் 40[தொகு]

எசேக்கியேலின் காட்சியில் எருசலேம்[தொகு]

(40:1 - 48:35)


1 எங்கள் சிறையிருப்பின் இருபத்தைந்தாம் ஆண்டின் தொடக்கத்தில்
மாதத்தின் பத்தாம் நாளில்,
எருசலேம் நகர் அழிக்கப்பட்டதன் பதினான்காம் ஆண்டு நிறைவுநாளில்,
ஆண்டவரின் ஆற்றல் என்மீது இறங்கியது.
அவர் என்னை அங்கே அழைத்துச் சென்றார்.
2 கடவுள் அருளிய காட்சியில் அவர் என்னை இஸ்ரயேல் நாட்டுக்குக் கொண்டு சென்று,
அங்கே மிக உயர்ந்த மலையொன்றில் என்னை நிறுத்தினார்.
அதற்குத் தெற்கே ஒரு நகர் போன்ற கட்டடங்கள் காணப்பட்டன. [1]
3 அவர் அங்கே என்னை அழைத்துச் சென்றார்.
அங்கே மனிதர் ஒருவரைக் கண்டேன்.
அவரது தோற்றம் வெண்கலமயமாய் இருந்தது.
அவர் நார்ப்பட்டுக் கயிறும் அளவுகோலும் கையில் வைத்துக் கொண்டு,
வாயிலில் நின்று கொண்டிருந்தார். [2]
4 அந்த மனிதர் என்னை நோக்கி,
'மானிடா! உன் கண்களால் பார், அனைத்தையும் உன் இதயத்தில் பதியவை.
ஏனெனில், இவற்றைப் பார்க்கும்படியே நீ இங்குக் கூட்டி வரப்பட்டாய்.
நீ காணும் யாவற்றையும் இஸ்ரயேல் வீட்டாருக்குத் தெரிவி' என்றார்.

கிழக்கு வாயில்[தொகு]


5 கோவிலுக்கு வெளியில், அதனை முற்றிலும் சுற்றி,
ஒரு மதில் இருக்கக் கண்டேன்.
அம்மனிதர் கையில் வைத்திருந்த அளவுகோல்
ஆறு முழமும் நான்கு விரற்கடையும் நீளம் கொண்டிருந்தது.
அவர் அம்மதிலை அளந்தார். அதன் அகலம் ஒரு கோல்; உயரம் ஒரு கோல். [3]
6 பின்னர் அவர் கிழக்கு நோக்கி இருக்கும் வாயிலுக்கு வந்து
அதன் படிக்கட்டில் ஏறி, வாயிற்படியின் மேலிருந்து அளந்தார்.
அது ஒரு கோல் ஆழம் உடையதாய் இருந்தது.
7 பக்க அறைகள் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமும் இருந்தன.
அறைகளுக்கு இடையே ஐந்து முழ இடைவெளி இருந்தது.
கோவிலை நோக்கிய மண்டபத்தின் அருகிலுள்ள வாயிற்படி
ஒரு கோல் ஆழமுடையதாய் இருந்தது.
8 பின்னர் அவர் கோவிலை நோக்கிய வாயிலின் முன்னிருந்த
புகுமுக மண்டபத்தை அளந்தார்; அது ஒரு கோல் இருந்தது.
9 பின்னர் அவர் புகுமுக மண்டபத்தை அளந்தார்.
அதன் அளவு எட்டு முழம்; அதன் புடைநிலை இரண்டு முழம்;
இதுவே கோவிலை நோக்கிய வாயிலின் புகுமுகமண்டபம்.
10 கிழக்கு வாயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று அறைகள் இருந்தன.
மூன்றும் ஒரே அளவுடையனவாய் இருந்தன.
ஒவ்வொரு பக்கத்தின் புடைநிலைகளும் ஒரே அளவையே கொண்டிருந்தன.
11 பின்னர் அவர் நுழைவாயிலின் அகலத்தை அளந்தார்.
அது பத்து முழம் இருந்தது. அதன் நீளமோ பதின்மூன்று முழம்.
12 ஒவ்வோர் அறைக்கு முன்னாலும் ஒரு முழ உயரமான ஒரு கைப்பிடிச் சுவர் இருந்தது.
ஒவ்வோர் அறையும் ஆறு முழ சமசதுரம் கொண்டது.
13 பின்னர் அவர் ஓர் அறையின் பின்பக்கச் சுவர் உச்சியிலிருந்து
நேர் எதிரே இருந்த அறையின் உச்சிவரை இடைப்பட்ட வாயிலை அளந்தார்.
ஒரு கதவு இன்னொரு கதவுக்கு நேரெதிராய் இருந்தது.
இடைப்பட்ட தூரம் இருபத்தைந்து முழம்.
14 அவர் புடைநிலைகளை அளந்தார்.
முற்றத்தை ஒட்டிய புகுமுக மண்டபம் வரையிலான அளவு அது.
அவை அறுபது முழம் இருந்தன.
15 வாயிலிருந்து புகுமுக மண்டபம் வரையிலான அளவு ஐம்பது முழம்.
16 அறைகளுக்கும் வாயிலின் உள்ளிருந்த புடைநிலைகளுக்கும்
குறுகிய பலகணிகள் சுற்றிலும் இருந்தன.
புகுமுக மண்டபத்துக்கும் பலகணிகள் இருந்தன.
சுற்றிலுமிருந்த பலகணிகள் உள்நோக்கி இருந்தன.
புடைநிலைகளில் பேரீச்ச மரங்களின் வடிவங்கள் இருந்தன.

வெளி முற்றம்[தொகு]


17 பின்னர் அவர் என்னை வெளிமுற்றத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்.
அங்கே முற்றத்தைச் சுற்றி அறைகளும் நடைமேடைகளும் அமைக்கப்பெற்றிருந்தன.
நடை மேடைகளைச் சுற்றி முப்பது அறைகள் இருந்தன.
18 வாயிலின் பக்கத்தில் இருந்த நடைமேடை நீளமும் அகலமும்
ஒரே அளவை உடையதாய் இருந்தது. இதுவே கீழ்த்தள நடைமேடை.
19 பின்னர் அவர் கீழ்வாயிலின் உட்புறமிருந்து
உள் முற்றத்தின் வெளிப்புறம்வரை அளந்தார்.
அது கிழக்கேயும் வடக்கேயும் நூறு முழம் இருந்தது.

வடக்கு வாயில்[தொகு]


20 பின்னர் அவர் வெளிமுற்றத்தை நோக்கிய
வடக்கு வாயிலின் நீள அகலங்களை அளந்தார்.
21 ஒவ்வொரு பக்கமும் மூன்றாக இருந்த அறைகளும்,
புடைநிலைகளும் புகுமுக மண்டபமும்
முந்தைய வாயிலைச் சுற்றியிருந்தவற்றின் அதே அளவுகளைக் கொண்டிருந்தன.
அதாவது ஐம்பது முழம் நீளம், இருபத்தைந்து முழம் அகலம்.
22 அதன் பலகணிகள், புகுமுக மண்டபம்,
பேரீச்சமர வடிவங்கள் யாவும் கிழக்கு நோக்கியவாயிலின்
அருகிலிருந்தவற்றின் அதே அளவையே கொண்டிருந்தன.
அதில் ஏறிப்போக ஏழு படிகள் இருந்தன.
அவற்றின் எதிரில் புகுமுக மண்டபம் இருந்தது.
23 கிழக்குப் பக்கம் இருந்ததுபோலவே வடக்கு வாயிலை நோக்கிய
உள்முற்றத்திற்கு இன்னொரு வாயிலும் இருந்தது.
ஒரு வாயிலிருந்து எதிர் வாயில்வரை அவர் அளந்தார். அது நூறு முழம் இருந்தது.

தெற்கு வாயில்[தொகு]


24 பின்னர் அவர் என்னைத் தெற்குப் பக்கம் அழைத்துச் சென்றார்.
அங்குத் தெற்கு நோக்கிய வாயில் ஒன்று இருந்தது.
அவர் அதன் புடைநிலைகளையும் மண்டபத்தையும் அளந்தார்;
அவை மற்றவற்றின் அளவையே கொண்டிருந்தன.
25 அதற்கும் முக மண்டபத்திற்கும்,
மற்றவற்றிற்குப் போலவே பலகணிகள் இருந்தன.
அவை ஐம்பது முழ நீளமும் இருபத்தைந்து முழ அகலமும் கொண்டிருந்தன.
26 அதற்கு ஏறிச்செல்ல ஏழு படிகள் இருந்தன.
முன்பக்கம் புகுமுக மண்டபம் இருந்தது.
அதன் இருபக்கமிருந்த புடைநிலைகளில் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன.
27 உள் முற்றத்தில் தெற்கு நோக்கிய வாயில் ஒன்றும் இருந்தது.
அவர் அவ்வாயிலிலிருந்து தெற்குப் புறமுள்ள வெளிவாயில்வரை அளந்தார்.
அது நூறு முழ நீளம் இருந்தது.

உள் முற்றம் - தென் வாயில்[தொகு]


28 பின்னர் அவர் என்னைத் தெற்கு வாயில்வழியாக
உள்முற்றத்திற்கு அழைத்துச் சென்று தெற்குவாயிலை அளந்தார்.
அதற்கும் மற்றவை போன்ற அளவுகளே இருந்தன.
29 அதன் அறைகள், புடைநிலைகள், புகுமுக மண்டபம் யாவும்
மற்றவை போன்ற அளவுகளையே கொண்டிருந்தன.
வாயிலையும் புகுமுக மண்டபத்தினையும் சுற்றிலும் பலகணிகள் இருந்தன.
அவை ஐம்பது முழம் உயரம், இருபத்தைந்து முழம் அகலம்.
30 சுற்றிலுமிருந்து புகுமுக மண்டபங்களுக்கு நீளம் ஐம்பது முழம்;
அகலம் இருபத்தைந்து முழம்.
31 அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கி இருந்தது.
புடைநிலைகளில் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன.
அதற்கு வெளியே செல்ல எட்டுப் படிகள் இருந்தன.

உள் முற்றம் - கீழை வாயில்[தொகு]


32 பின்னர் அவர் என்னைக் கிழக்கு வாயிலுக்கு அழைத்துச் சென்று,
அவ்வாயிலை அளந்தார். அதற்கும் மற்றைய அளவுகளே இருந்தன.
33 அதன் அறைகள், புடைநிலைகள், புகுமுக மண்டபம் அனைத்திற்கும்
மற்றவற்றுக்கான அளவுகளே இருந்தன.
வாயிலையும் புகுமுக மண்டபத்தையும் சுற்றிப் பலகணிகள் இருந்தன.
அவற்றின் நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
34 அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது.
புடைநிலைகளில் இரு பக்கமும் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன.
மேலேறிச் செல்ல எட்டுப் படிகள் இருந்தன.

உள் முற்றம் - வட வாயில்[தொகு]


35 பின்னர் அவர் என்னை வடக்கு வாயிலுக்கு அழைத்துச் சென்று
அதை அளந்தார். அதற்கும் மற்றவற்றிற்கான அளவுகளே இருந்தன.
36 அதன் அறைகள், புடைநிலைகள், சுற்றிலுமிருந்த பலகணிகள் அனைத்திற்கும்
ஐம்பது முழம் நீளமும் இருபத்தைந்து முழம் அகலமும் இருந்தன.
37 அதன் புகுமுக மண்டபம் வெளிமுற்றத்தை நோக்கியிருந்தது.
அதன் புடைநிலைகளில் இரு பக்கமும் பேரீச்சமர வடிவங்கள் இருந்தன.
அதற்கு ஏறிச்செல்ல எட்டுப் படிகள் இருந்தன.
38 ஒவ்வோர் உள்வாயிலிலும் புகுமுக மண்டபத்தின் அருகில்
வாயிலுடன் கூடிய அறை ஒன்று இருந்தது.
அங்கே எரிபலிப் பொருள்களைக் கழுவுவர்.
39 வாயிலருகே உள்ள புகுமுக மண்டபத்தில் ஒவ்வொரு பக்கமும்
இரு மேசைகள் இருந்தன.
அவற்றின்மேல் எரிபலி, பாவம் போக்கும் பலி,
குற்றநீக்கப் பலி ஆகியவற்றிற்கான விலங்குகள் வெட்டப்படும்.
40 வாயிலருகே உள்ள புகுமுக மண்டபத்தின் வெளிச் சுவரருகே
வடக்கு வாயிலில் உள்ள படிகளின் ஒரு பக்கத்தில்
இரு மேசைகளும் மறு பக்கத்தில் இரு மேசைகளும் இருந்தன.
41 இவ்வாறு அங்கே பலிசெலுத்துவதற்கென நான்கு மேசைகள் உள்ளேயும்
நான்கு மேசைகள் வாயிலுக்கு வெளியேயும், மொத்தம் எட்டு மேசைகள் இருந்தன.
42 செதுக்கப்பட்ட கற்களில் எரிபலிக்கென
மேலும் நான்கு மேசைகள் இருந்தன.
அவை ஒன்றரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமும்
ஒரு முழ உயரமும் கொண்டிருந்தன.
அவற்றின் மேல் எரிபலி மற்றும் குற்ற நீக்கப்பலிக்கான
விலங்குகளை வெட்டுவதற்குரிய கருவிகள் இருந்தன.
43 சுவர்களைச் சுற்றிலும் ஒரு சாண் அளவுள்ள முளைகள்
இருபக்கமும் பொருத்தப்பட்டிருந்தன.
இறைச்சி மேசைகளின்மேல் வைக்கப்பட்டது.
44 உள் வாயிலின் வெளியே உள்முற்றத்தில்
இசைக்குழு அறைகள் இருந்தன.
அவற்றுள் ஒன்று வடக்கு வாயிலின் பக்கத்தில் தெற்கு நோக்கியிருந்தது.
இன்னொன்று கிழக்கு வாயிலின் பக்கத்தில வடக்கு நோக்கியிருந்தது.
45 அவர் என்னிடம், 'தெற்கு நோக்கியிருக்கும் அறை
கோவில் பொறுப்பிலிருக்கும் குருக்களுக்கானது.
46 வடக்கு நோக்கி இருக்கும் அறை
பீடப்பொறுப்பிலிருக்கும் குருக்களுக்கானது.
இவர்கள் சாதோக்கின் மக்கள்.
லேவியரில் இவர்கள் மட்டுமே ஆண்டவருக்குப் பணிபுரிய
அவரருகில் செல்லலாம்' என்றார்.

உள்முற்றமும் கோவில் கட்டடமும்[தொகு]


47 பின்னர் அவர் முற்றத்தை அளந்தார்.
அது நூறு முழ நீளமும் நூறு முழ அகலமும் கொண்டு சதுர வடிவில் இருந்தது.
கோவிலுக்கு முன்பக்கம் பீடம் இருந்தது.
48 அவர் என்னைக் கோவிலின் புகுமுக மண்டபத்திற்கு அழைத்து வந்து,
அதன் புடைநிலைகளை அளந்தார்.
அது ஒரு பக்கம் ஐந்து முழமும் மறுபக்கம் ஐந்து முழமும் இருந்தது.
வாயிலின் அகலம் பதினான்கு முழம்;
அதன் புடைநிலைகள் ஒரு பக்கம் மூன்று முழம், மறுபக்கம் மூன்று முழம்.
49 புகுமுக மண்டபம் இருபது முழ அகலமும் பதினொரு முழ நீளமும் கொண்டிருந்தது.
அதற்கு ஏறிச் செல்லப் படிகள் இருந்தன.
புடைநிலைகளில் ஒவ்வொரு பக்கமும் தூண்கள் இருந்தன.


குறிப்புகள்

[1] 40:2 = திவெ 21:10.
[2] 40:3 = திவெ 11:1; 21:15.
[3] 40:5-42:20 =1 அர 6:1-38; 2 குறி 3:1-9.


(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 41 முதல் 42 வரை