திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 55 முதல் 56 வரை

விக்கிமூலம் இலிருந்து
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தாவீது அரசர். ஓவியர்: பீட்டர் பவுல் ரூபன்ஸ் (1577-1640). ஓலாந்து.

திருப்பாடல்கள்[தொகு]

இரண்டாம் பகுதி (42-72)
திருப்பாடல்கள் 55 முதல் 56 வரை

திருப்பாடல் 55[தொகு]

காட்டிக் கொடுக்கப்பட்டவரின் மன்றாட்டு[தொகு]

(பாடகர் தலைவர்க்கு;
நரம்பிசைக் கருவிகளுடன்;
தாவீதின் அறப்பாடல்)



1 கடவுளே! என் மன்றாட்டுக்குச் செவி சாய்த்தருளும்;
நான் முறையிடும் வேளையில் உம்மை மறைத்துக் கொள்ளாதேயும்.


2 என் விண்ணப்பத்தைக் கேட்டு மறுமொழி அருளும்;
என் கவலைகள் என் மன அமைதியைக் குலைத்துவிட்டன.


3 என் எதிரியின் கூச்சலாலும்,
பொல்லாரின் ஒடுக்குதலாலும் நடுங்குகின்றேன்;
ஏனெனில், அவர்கள் எனக்கு இடையூறு பல செய்கின்றனர்;
சினமுற்று என்னைப் பகைக்கின்றனர்.


4 கடுந்துயரம் என் உள்ளத்தைப் பிளக்கின்றது;
சாவின் திகில் என்னைக் கவ்விக்கொண்டது.


5 அச்சமும் நடுக்கமும் என்னை ஆட்கொண்டன;
திகில் என்னைக் கவ்விக்கொண்டது.


6 நான் சொல்கின்றேன்:
'புறாவுக்கு உள்ளது போன்ற சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்?
நான் பறந்து சென்று இளைப்பாறுவேனே!


7 இதோ! நெடுந்தொலை சென்று,
பாலை நிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பேனே! (சேலா)


8 பெருங்காற்றினின்றும் புயலினின்றும் தப்பிக்கப்
புகலிடம் தேட விரைந்திருப்பேனே!


9 என் தலைவரே! அவர்களின் திட்டங்களைக் குலைத்துவிடும்;
அவர்களது பேச்சில் குழப்பத்தை உண்டாக்கும்;
ஏனெனில், நகரில் வன்முறையையும் கலகத்தையும் காண்கின்றேன்'.


10 இரவும் பகலும் அவர்கள் அதன் மதில்கள் மேல் ஏறி
அதைச் சுற்றி வருகின்றனர்;
கேடும் கொடுமையும் அதில் நிறைந்திருக்கின்றன.


11 அதன் நடுவே இருப்பது அழிவு;
அதன் தெருக்களில் பிரியாதிருப்பன கொடுமையும் வஞ்சகமுமே!


12 என்னை இழித்துரைக்கின்றவன் என் எதிரியல்ல;
அப்படியிருந்தால், பொறுத்துக் கொள்வேன்;
எனக்கெதிராய்த் தற்பெருமை கொள்பவன் எனக்குப் பகைவன் அல்ல;
அப்படியிருந்தால், அவனிடமிருந்து என்னை மறைத்துக் கொள்வேன்.


13 ஆனால், அவன் வேறு யாரும் அல்ல;
என் தோழனாகிய நீயே;
என் நண்பனும் என்னோடு நெருங்கிப் பழகினவனுமாகிய நீதான்.


14 நாம் ஒன்று சேர்ந்து உரையாடினோம்;
கடவுளின் இல்லத்தில் பெருங்கூட்டத்தினிடையே நடமாடினோம்;


15 என் எதிரிகளுக்குத் திடீரெனச் சாவு வரட்டும்;
அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கட்டும்;
ஏனெனில் அவர்கள் தங்குமிடத்தில்
அவர்கள் நடுவிலேயே தீமை புகுந்து விட்டது.


16 நான் கடவுளை நோக்கி மன்றாடுவேன்;
ஆண்டவரும் என்னை மீட்டருள்வார்.


17 காலை, நண்பகல், மாலை வேளைகளில்
நான் முறையிட்டுப் புலம்புகின்றேன்;
அவர் என் குரலைக் கேட்டருள்வார்.


18 அணிவகுத்து என்னை எதிர்த்து வந்தோர் மிகப் பலர்;
என்னோடு போரிட்டோர் கையினின்று
அவர் என்னை விடுவித்துப் பாதுகாத்தார்.


19 தொன்றுதொட்டு அரியணையில் வீற்றிருக்கும் கடவுள்
எனக்குச் செவிசாய்ப்பார்;
அவர்களைத் தாழ்த்திவிடுவார்; (சேலா)
ஏனெனில், அவர்கள் தம் நெறிமுறையை
மாற்றிக் கொள்ளவில்லை;
கடவுளுக்கு அஞ்சுவதும் இல்லை.


20 தன்னோடு நட்புறவில் இருந்தவர்களை எதிர்த்து
அந்த நண்பன் தன் கையை ஓங்கினான்;
தன் உடன்படிக்கையையும் மீறினான்.


21 அவன் பேச்சு வெண்ணெயிலும் மிருதுவானது;
அவன் உள்ளத்திலோ போர்வெறி;
அவன் சொற்கள் எண்ணெயிலும் மென்மையானவை;
அவையோ உருவிய வாள்கள்.


22 ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு;
அவர் உனக்கு ஆதரவளிப்பார்;
அவர் நேர்மையாளரை ஒருபோதும்
வீழ்ச்சியுற விடமாட்டார்.


23 கடவுளே, நீர் அவர்களைப் படுகுழியில் விழச்செய்யும்;
கொலைவெறியரும் வஞ்சகரும்
தம் ஆயுள் காலத்தில் பாதிகூடத் தாண்டமாட்டார்;
ஆனால், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்.


திருப்பாடல் 56[தொகு]

பற்றுறுதியும் நம்பிக்கையும்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு;
'தொலையில் வாழும் மௌன மாடப்புறா'
என்ற மெட்டு;
பெலிஸ்தியர் தாவீதைக்
காத்து என்னுமிடத்தில் பிடித்த வேளை
அவர் பாடிய கழுவாய்ப் பாடல்
[*]



1 கடவுளே, எனக்கு இரங்கியருளும்;
ஏனெனில், மனிதர் என்னை நசுக்குகின்றனர்;
அவர்கள் என்னுடன் நாள்தோறும் சண்டையிட்டுத்
துன்புறுத்துகின்றனர்.


2 என் பகைவர் நாள்தோறும் கொடுமைப்படுத்துகின்றனர்;
மிகப் பலர் என்னை ஆணவத்துடன் எதிர்த்துப் போரிடுவோர்.


3 அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில்,
உம்மையே நான் நம்பியிருப்பேன்.


4 கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்;
கடவுளையே நம்பியிருக்கின்றேன்;
எதற்கும் அஞ்சேன்;
அற்ப மனிதர் எனக்கென்ன செய்ய முடியும்?


5 என் எதிரிகள் எந்நேரமும் என் சொற்களைப் புரட்டுகின்றனர்;
அவர்கள் திட்டங்கள் எல்லாம் என்னைத் துன்புறுத்தவே.


6 அவர்கள் ஒன்றுகூடிப் பதுங்கி இருக்கின்றனர்;
என் உயிரைப் போக்குவதற்காக
என் காலடிச் சுவடுகளைக் கவனித்துக்கொண்டே இருக்கின்றனர்.


7 அவர்கள் தீமைகளைச் செய்துவிட்டுத் தப்பமுடியுமோ?
கடவுளே, சினம் கொண்டெழுந்து
இந்த மக்களினங்களைக் கீழே வீழ்த்தும்.


8 என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்;
உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்;
இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா?


9 நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில்
என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்;
அப்போது, கடவுள் என் பக்கம் இருக்கின்றார் என்பதை
நான் உறுதியாய் அறிவேன்.


10 கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்;
ஆண்டவரின் வாக்கை நான் புகழ்கின்றேன்.


11 கடவுளையே நம்பியிருக்கின்றேன்;
எதற்கும் அஞ்சேன்;
மானிடர் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும்?


12 கடவுளே, நான் உமக்குச் செய்த
பொருத்தனைகளை மறக்கவில்லை;
உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன்


13 ஏனெனில், சாவினின்று என் உயிரை நீர் மீட்டருளினீர்;
வாழ்வோரின் ஒளியில்,
கடவுளின் முன்னிலையில் நான் நடக்கும் பொருட்டு
என் அடிகள் சறுக்காதபடி காத்தீர் அன்றோ!


குறிப்பு

[*] திபா 56: தலைப்பு: 1 சாமு 22:1; 24:3.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 57 முதல் 58 வரை