திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மத்தேயு நற்செய்தி/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

விக்கிமூலம் இலிருந்து
"இயேசு 'உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்' என்றார்." - மத்தேயு 16:18-19

மத்தேயு நற்செய்தி (Matthew)[தொகு]

அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

அதிகாரம் 15[தொகு]

மூதாதையர் மரபு[தொகு]

(மாற் 7:1-23)


1 அதற்குப்பிறகு பரிசேயரும் மறைநூல் அறிஞரும்
எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து,
2 "உம் சீடர் மூதாதையரின் மரபை மீறுவதேன்?
உணவு அருந்துமுன் அவர்கள் தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே" என்றனர்.
3 அவர் அவர்களுக்கு மறுமொழியாக,
"நீங்கள் உங்கள் மரபின் பொருட்டுக் கடவுளின் கட்டளையை மீறுவது ஏன்?
4 கடவுள், 'உன் தந்தையையும் தாயையும் மதித்து நட' என்றும்,
'தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்'
என்றும் உரைத்திருக்கிறார். [1]
5 ஆனால் நீங்கள், 'எவராவது தம் தாயையோ தந்தையையோ பார்த்து,
"உமக்கு நான் தரக் கடமைப்பட்டிக்கிறது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று" என்றால்,
6 அவர் தம் தந்தையை மதிக்க வேண்டியதில்லை' என்று சொல்லுகிறீர்கள்.
இவ்வாறு உங்கள் மரபின்பொருட்டுக்
கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள்.
7 வெளிவேடக்காரரே,
உங்களைப் பற்றிப் பொருத்தமாகவே எசாயா இறைவாக்கு உரைத்திருக்கிறார்.
8 அவர்,

'இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்.


இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது.


9 மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர்.


இவர்கள் என்னை வழிபடுவது வீண்'


என்கிறார்" என்றார். [2]


10 மேலும் இயேசு மக்கள் கூட்டத்தைத் தம்மிடம் வரவழைத்து
அவர்களை நோக்கி,
"நான் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள்.
11 வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது;
மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப்படுத்தும்" என்றார்.
12 பின்பு சீடர் அவரை அணுகி,
"பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு மனவேதனை அடைந்தனர் என்பது
உமக்குத் தெரியுமா?" என்றனர்.
13 இயேசு மறுமொழியாக,
"என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும்.
14 அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் குருட்டு வழிகாட்டிகள்.
பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால்
இருவரும் குழியில் விழுவர்" என்றார். [3]
15 அதற்குப் பேதுரு அவரை நோக்கி,
"நீர் சொன்ன உவமையை எங்களுக்கு விளக்கும்" என்று கேட்டார்.
16 இயேசு அவரிடம்,
"உங்களுக்கு இன்னுமா புரியவில்லை?
17 வாயினுள் செல்வது அனைத்தும் வயிற்றினூடே சென்று
கழிப்பிடத்தில் வெளியேற்றப்படும் எனத் தெரியாதா?
18 வாயினின்று வெளிவருபவை உள்ளத்திலிருந்து வருகின்றன.
அவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன. [4]
19 ஏனெனில் கொலை, விபசாரம், பரத்தைமை,
களவு, பொய்ச்சான்று, பழிப்புரை ஆகியவற்றைச்
செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன.
20 இவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன.
கை கழுவாமல் உண்ணுவது மனிதரைத் தீட்டுப்படுத்தாது" என்றார்.

கானானியப் பெண்ணின் நம்பிக்கை[தொகு]

(மாற் 7:24-30)


21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன்
ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.
22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த
கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து,
"ஐயா, தாவீதீன் மகனே, எனக்கு இரங்கும்;
என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்" எனக் கதறினார்.
23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட
மறுமொழியாகச் சொல்லவில்லை.
சீடர்கள் அவரை அணுகி,
"நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே,
இவரை அனுப்பிவிடும்" என வேண்டினர்.
24 அவரோ மறுமொழியாக,
"இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே
நான் அனுப்பப்பட்டேன்" என்றார்.
25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து,
"ஐயா, எனக்கு உதவியருளும்" என்றார்.
26 அவர் மறுமொழியாக,
"பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து
நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார்.
27 உடனே அப்பெண்,
"ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும்
சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே" என்றார்.
28 இயேசு மறுமொழியாக,
"அம்மா, உமது நம்பிக்கை பெரிது.
நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்று அவரிடம் கூறினார்.
அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

இயேசு பலவகை நோயாளர்களுக்குக் குணமளித்தல்[தொகு]


29 இயேசு அவ்விடத்தை விட்டு அகன்று
கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று
அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார்.
30 அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர்.
அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர்,
உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர், மற்றும் பிற நோயாளர் பலரையும்
அவர் காலடியில் கொண்டுவந்து சேர்த்தனர்.
அவர்களை அவர் குணமாக்கினார்.
31 பேச்சற்றோர் பேசுவதையும் உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும்
பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு
மக்கள் கூட்டத்தினர் வியந்து
இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

நாலாயிரம் பேருக்கு உணவு அளித்தல்[தொகு]

(மாற் 8:1-10)


32 இயேசு தம் சீடரை வரவழைத்து,
"நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன்.
ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள்.
உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை;
இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை;
அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்" என்று கூறினார்.
33 அதற்குச் சீடர்கள் அவரிடம்,
"இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு
நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?" என்று கேட்டார்கள்.
34 இயேசு அவர்களைப் பார்த்து,
"உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?" என்று கேட்டார்.
அவர்கள், "ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன" என்றார்கள்.
35 தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்.
36 பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து,
கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க,
அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.
37 அனைவரும் வயிறார உண்டனர்.
மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர்.
38 பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக நாலாயிரம் ஆண்கள் உண்டனர்.
39 பின்பு அவர் மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டுப்
படகேறி மகத நாட்டு [5] எல்லைக்குள் சென்றார்.


குறிப்புகள்

[1] 15:4 = விப 20:12; 21:17; லேவி 20:9; இச 5:16.
[2] 15:8,9 = எசா 29:13.
[3] 15:14 = லூக் 6:39.
[4] 15:18 = மத் 12:34; தீத் 1:15.
[5] 15:39 - மகத நாடு என்னும் இப்பாடம் மகதலா நாட்டைக் குறிக்கும்.


அதிகாரம் 16[தொகு]

அடையாளம் கேட்டுச் சோதித்தல்[தொகு]

(மாற் 8:11-13; லூக் 12:54-56)


1 பரிசேயரும் சதுசேயரும் இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் அவரிடம் வந்து
வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைத் தங்களுக்குக் காட்டும்படி கேட்டனர். [1]
2 அவர் அவர்களிடம் மறுமொழியாக,
["மாலை வேளையாகும்போது வானம் சிவந்திருந்தால்
'வானிலை நன்றாக இருக்கிறது' என நீங்கள் சொல்வீர்கள்.
3 காலை வேளையில், வானம் சிவந்து மந்தாரமாயிருந்தால்,
'இன்று காற்றுடன் கூடிய மழை இருக்கும்' என்பீர்கள்.
வானத்தின் தோற்றத்தைப் பகுத்துணர நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
ஆனால் காலத்தின் அறிகுறிகளை அறிய உங்களால் முடியாதா?"] [2]
4 "இந்தத் தீய, விபசாரத் தலைமுறையினர் அடையாளம் ஒன்று கேட்கின்றனர்.
இவர்களுக்கு யோனாவின் அடையாளமேயன்றி வேறு
எந்த அடையாளமும் கொடுக்கப்படமாட்டாது" என்றார்.
பின் அவர் அவர்களை விட்டு விலகிப் போய்விட்டார்.

பரிசேயர், சதுசேயரின் புளிப்புமாவு[தொகு]

(மாற் 8:14-21)


5 சீடர்கள் மறு கரைக்குச் சென்ற போது
அப்பங்களை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார்கள்.
6 இயேசு அவர்களிடம்
"பரிசேயர், சதுசேயரின் புளிப்பு மாவைக்குறித்துக்
கவனத்தோடும் எச்சரிக்கையோடும் இருங்கள்" என்றார். [3]
7 "நாம் அப்பங்களை எடுத்து வராததால்தான் அவர் இப்படிச் சொன்னார்" எனத்
தங்களிடையே அவர்கள் பேசிக்கொண்டார்கள்.
8 இதை அறிந்த இயேசு,
"நம்பிக்கை குன்றியவர்களே, அப்பமில்லை என்று
உங்களிடையே ஏன் பேசிக் கொள்கிறீர்கள்?
9 உங்களுக்கு இன்னுமா புரியவில்லை?
நான் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளித்த
ஐந்து அப்பங்களைப் பற்றி நினைவில்லையா?
அப்போது எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தீர்கள்? [4]
10 அல்லது நாலாயிரம் பேருக்கு நான் பகிர்ந்தளித்த
ஏழு அப்பங்களைப்பற்றி நினைவில்லையா?
அப்போது எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தீர்கள்? [5]
11 நான் உங்களிடம் கூறியது அப்பங்களைப் பற்றியல்ல என்பதை
நீங்கள் புரிந்துகொள்ளாதது எப்படி?
பரிசேயர், சதுசேயர் ஆகியோரின் புளிப்பு மாவைப்பற்றி
எச்சரிக்கையாய் இருங்கள்" என்றார்.
12 அப்பொழுதுதான் அப்பத்திற்கான புளிப்பு மாவைப் பற்றி அவர் சொல்லவில்லை;
மாறாகப் பரிசேயர், சதுசேயர் ஆகியோரின் போதனையைப்பற்றி
எச்சரிக்கையாய் இருக்கவே அவர் சொன்னார் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை[தொகு]

(மாற் 8:27-30; லூக் 9:18-21)


13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார்.
அவர் தம் சீடரை நோக்கி,
"மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டார்.
14 அதற்கு அவர்கள்,
"சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர்
எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்" என்றார்கள். [6]
15 "ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் கேட்டார்.
16 சீமோன் பேதுரு மறுமொழியாக,
"நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார்.
அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். [7]
17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை;
மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.
18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்:
உன் பெயர் பேதுரு; [8] இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.
பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.
19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.
மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்.
மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார். [9]
20 பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று
இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.

இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல்[தொகு]

(மாற் 8:31-9:1; லூக் 9:22-27)


21 இயேசு தாம் எருசலேமுக்குப் போய்
மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால்
பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும்
மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத்
தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.
22 பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு,
"ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என்றார்.
23 ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து,
"என் கண்முன் நில்லாதே சாத்தானே,
நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்;
ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல்
மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்றார்.
24 பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து,
"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து
தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.
25 ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர்.
மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். [10]
26 மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும்
தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?
அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?
27 மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு
தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்;
அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார். [11]
28 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்;
இங்கே இருப்பவருள் சிலர் மானிடமகனது ஆட்சி வருவதைக்
காண்பதற்கு முன் சாகமாட்டார்" என்றார்.


குறிப்புகள்

[1] 16:1 = மத் 12:36; லூக் 11:16; யோவா 6:30,31.
[2] 16:2-3 - அடைப்புக் குறிக்குள் உள்ள பகுதி பல முக்கிய
கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை.
[3] 16:6 = லூக் 12:1.
[4] 16:9 = மத் 14:17-21.
[5] 16:10 = மத் 15:34-38.
[6] 16:14 = மத் 14:1,2; மாற் 6:14,15; லூக் 9:7-8.
[7] 16:16 = யோவா 6:68,69.
[8] 16:18 - "பேதுரு" என்னும் கிரேக்கச் சொல்லுக்குப் "பாறை" என்பது பொருள்.
[9] 16:19 = மத் 18:18; யோவா 20:23.
[10] 16:24,25 = மத் 10:38; லூக் 14:27; 17:33; யோவா 12:25,26.
[11] 16:27 = யோபு 14:11; திபா 62:12; மத் 25:31; உரோ 2:6.


(தொடர்ச்சி): மத்தேயு நற்செய்தி: அதிகாரங்கள் 17 முதல் 18 வரை