திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மத்தேயு நற்செய்தி/அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

விக்கிமூலம் இலிருந்து
"1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்." - மத்தேயு 17:1-3

மத்தேயு நற்செய்தி (Matthew)[தொகு]

அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

அதிகாரம் 17[தொகு]

இயேசு தோற்றம் மாறுதல்[தொகு]

(மாற் 9:2-13; லூக் 9:28-36)


1 ஆறு நாள்களுக்குப் பின்பு
இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும்
ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.
2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார்.
அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது.
அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.
3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி
இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.
4 பேதுரு இயேசுவைப் பார்த்து,
"ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது.
உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும்
எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா?
இது உமக்கு விருப்பமா?" என்றார்.
5 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது
ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது.
அந்த மேகத்தினின்று,
"என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்.
இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது. [1]
6 அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள்.
7 இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு,
"எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்" என்றார்.
8 அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை.
9 அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு,
"மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை
இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது" என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
10 அப்பொழுது சீடர்கள் அவரிடம்,
"எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே,
அது எப்படி?" என்று கேட்டார்கள். [2]
11 அவர் மறுமொழியாக,
"எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே.
12 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை.
மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள்.
அவ்வாறே மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்" என்றார்.
13 திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை
அப்பொழுது சீடர்கள் புரிந்து கொண்டார்கள்.

பேய் பிடித்திருந்த சிறுவனைக் குணமாக்குதல்[தொகு]

(மாற் 9:14-29; லூக் 9:37-43அ)


14 அவர்கள் மக்கள் கூட்டத்தினரிடம் வந்தபோது
ஒருவர் அவரை அணுகி அவர் முன் முழந்தாள் படியிட்டு,
15 "ஐயா, என் மகனுக்கு இரங்கும்;
அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான்.
அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் விழுகிறான்.
16 உம் சீடர்களிடம் அவனைக் கொண்டுவந்தேன்;
அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை" என்றார்.
17 அதற்கு இயேசு,
"நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே,
எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்?
எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக் கொள்ள இயலும்?
அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்" என்று கூறினார்.
18 கொண்டுவந்ததும் இயேசு அப்பேயைக் கடிந்துகொள்ளவே,
அது அவனைவிட்டு வெளியேறியது.
அந்நேரமே சிறுவன் குணமடைந்தான்.
19 பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து,
"அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?" என்று கேட்டார்கள்.
20 இயேசு அவர்களைப் பார்த்து,
"உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம்.
உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால்
நீங்கள் இம்மலையைப் பார்த்து
'இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ' எனக் கூறினால் அது பெயர்ந்து போகும்.
உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்" [3]
21 ["இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலுமேயன்றி,
வேறு எதனாலும் வெளியேறாது"] [4] என்றார்.

இயேசு தம் சாவை இரண்டாம் முறை முன்னறிவித்தல்[தொகு]

(மாற் 9:30-32; லூக் 9:43ஆ-45)


22 கலிலேயாவில் சீடர்கள் ஒன்று திரண்டிருக்கும்போது
இயேசு அவர்களிடம்,
"மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்.
23 அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்;
ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்" என்றார்.
அப்பொழுது அவர்கள் மிகவும் துயரடைந்தார்கள்.

இயேசு வரி செலுத்துதல்[தொகு]


24 அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்த போது
கோவில் வரியாக இரண்டு திராக்மா [5] தண்டுவோர் பேதுருவிடம் வந்து,
"உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா?" என்று கேட்டனர். [6]
25 அவர், "ஆம், செலுத்துகிறார்" என்றார்.
பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு,
"சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது?
இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்?
தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா?" என்று கேட்டார்.
26 "மற்றவரிடமிருந்துதான்" என்று பேதுரு பதிலளித்தார்.
இயேசு அவரிடம், "அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல.
27 ஆயினும் நாம் அவர்களுக்கு தடையாய் இருக்கக் கூடாது.
எனவே நீ போய்க் கடலில் தூண்டில் போடு;
முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால்
ஸ்தாத்தேர் நாணயத்தைக் [7] காண்பாய்.
அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து" என்றார்.


குறிப்புகள்

[1] 17:5 = தொநூ 22:2; திபா 2:7; எசா 42:1; மத் 3:17; 12:18;
மாற் 1:14; லூக் 3:22; 1 பேது 1:17,18.
[2] 17:10 = மலா 4:5.
[3] 17:20 = மத் 21:21; மாற் 11:23; 1 கொரி 13:2.
[4] 17:21 - அடைப்புக்குறிக்குள் உள்ள வசனம் பல
முக்கிய கையெழுத்துப்படிகளில் காணப்படவில்லை.
[5] 7:24 - ஒரு திராக்மா என்பது ஒருநாள் கூலிக்கு இணையான
கிரேக்க வெள்ளி நாணயம்.
[6] 17:24 = விப 30:13; 38:26.
[7] 17:27 - "ஸ்தோத்தேர்" என்னும் வெள்ளி நாணயம்
நான்கு திராக்மா பணத்தின் மதிப்புடையது.


அதிகாரம் 18[தொகு]

திருச்சபைப் பொழிவு[தொகு]

யார் மிகப் பெரியவர்?[தொகு]

(மாற் 9:33-37; லூக் 9:46-48)


1 அந்நேரத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி,
"விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?" என்று கேட்டார்கள்.
2 அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி,
3 பின்வருமாறு கூறினார்:
"நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால்
விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
4 இந்தச் சிறு பிள்ளையைப்போலத்
தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். [1]
5 இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும்
என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

பாவத்தில் விழச் செய்தல்[தொகு]

(மாற் 9:42-48; லுக் 17:1-2)


6 "என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது
பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில்
எந்திரக் கல்லைக் கட்டித் தொங்கவிட்டு
ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது.
7 ஐயோ! பாவத்தில் விழச்செய்யும் உலகுக்குக் கேடு!
பாவத்தில் விழுவதைத் தவிர்க்க முடியாது.
ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்போருக்குக் கேடு!
8 உங்கள் கையோ காலோ உங்களைப் பாவத்தில் விழச்செய்தால்
அதை வெட்டி எறிந்துவிடுங்கள்.
நீங்கள் இரு கையுடனோ இரு காலுடனோ
என்றும் அணையாத நெருப்பில் தள்ளப்படுவதைவிடக்
கை ஊனமுற்றோராய் அல்லது கால் ஊனமுற்றோராய்
நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. [2]
9 உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால்
அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள்.
இரு கண்ணுடையவராய் எரிநரகில் தள்ளப்படுவதைவிட
ஒற்றைக்கண்ணராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.

காணாமற்போன ஆடு பற்றிய உவமை[தொகு]

(லூக் 15:3-17)


10 "இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்;
கவனமாயிருங்கள்!
இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன்
எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
11 [ஏனெனில் மானிட மகன் நெறிதவறியோரை மீட்கவே வந்தார்."] [3] [4]


12 இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால்,
அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு
வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா? [5]
13 அவர் அதைக் கண்டுபிடித்தால்
வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட
வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப்பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என
உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
14 அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே
உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.

பாவம் செய்யும் சகோதரர்[தொகு]

(லூக் 17:3)


15 "உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர்
உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்
நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது
அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள்.
அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது;
உங்கள் உறவு தொடரும். [6]
16 இல்லையென்றால் 'இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால்
அனைத்தும் உறுதி செய்யப்படும்' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப
உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். [7]
17 அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள்.
திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு
வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.
18 மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும்
விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்;
மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும்
விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என
நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். [8]
19-20 உங்களுள் இருவர் மண்ணுலகில்
தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால்
விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.
20 ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு
எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ
அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்." [9]

மன்னிக்க மறுத்த பணியாள் உவமை[தொகு]


21 பின்பு பேதுரு இயேசுவை அணுகி,
"ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர்
எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால்
நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்?
ஏழு முறை மட்டுமா?" எனக் கேட்டார்.
22 அதற்கு இயேசு அவரிடம் கூறியது:
"ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என
நான் உனக்குச் சொல்கிறேன். [10]
23 விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்;
ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார்.
24 அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது,
அவரிடம் பத்தாயிரம் தாலந்து [11] [12] கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர்.
25 அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான்.
தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு
அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப்
பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.
26 உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து,
'என்னைப் பொறுத்தருள்க;
எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்' என்றான்.
27 அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து
அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.
28 ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும்,
தன்னிடம் நூறு தெனாரியம் [13] கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு,
'நீ பட்ட கடனைத் திருப்பித் தா' எனக்கூறி
அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான்.
29 உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து,
'என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்' என்று
அவனைக் கெஞ்சிக் கேட்டார்.
30 ஆனால் அவன் அதற்கு இசையாது,
கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.
31 அவருடைய உடன் பணியாளர்கள்
நடந்ததைக் கண்டபோது
மிகவும் வருந்தித் தலைவரிடம் போய்
நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள்.
32 அப்போது தலைவர் அவனை வரவழைத்து,
"பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால்
அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன்.
33 நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல
நீயும் உன் உடன்பணியாளருக்கு
இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?" என்று கேட்டார். [14]
34 அத்தலைவர் சினங் கொண்டவராய்,
அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை
அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.
35 உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை
மனமார மன்னிக்கா விட்டால்
விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்."


குறிப்புகள்

[1] 18:3,4 = திபா 131:2; மாற் 10:15; லூக் 18:17.
[2] 18:8 = மத் 5:30; மாற் 9:43-47.
[3] 18:11 - அடைப்புக்குறிக்குள் உள்ள வசனம் பல முக்கிய கையெழுத்துப்படிகளில் காணப்படவில்லை.
[4] 18:11 = லூக் 19:10.
[5] 18:12 = எசே 34:4,16.
[6] 18:15 = கலா 6:1; தீத் 3:10.
[7] 18:16 = இச 19:15; 2 கொரி 13:1; 1 திமொ 5:19,20.
[8] 18:18 = மத் 16:19; யோவா 20:23.
[9] 18:19,20 = மத் 7:7,8; யோவா 15:7,16.
[10] 18:21,22 = லூக் 17:3,4.
[11] 18:24 - ஒரு தாலந்து வெள்ளி 6000 திராக்மாவுக்கு அல்லது தெனாரியத்துக்கு இணையாகும்.
ஒரு தாலந்து பொன் 1,80,000 திராக்மா அல்லது தெனாரியத்துக்கு இணையாகும்.
[12] 18:24 - திராக்மா, தெனாரியம், ஆகியவற்றின் விளக்கத்தை முறையே
மத் 17:24, 18:28இல் காண்க.
[13] 18:28 - ஒரு தெனாரியம் ஒரு தொழிலாளரின் ஒரு நாள் கூலிக்கு
இணையான உரோமை வெள்ளி நாணயம்.
[14] 18:33 = 1 யோவா 4:11.


(தொடர்ச்சி): மத்தேயு நற்செய்தி: அதிகாரங்கள் 19 முதல் 20 வரை