திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மத்தேயு நற்செய்தி/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து
"இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர,
அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: "ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது." - மத்தேயு 5:1-3

மத்தேயு நற்செய்தி (Matthew)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]

மலைப்பொழிவு[தொகு]


1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர,
அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.
2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:

பேறுபெற்றோர்[தொகு]

(லூக் 6:20-23)


3 "ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.


4 துயருறுவோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். [1]


5 கனிவுடையோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். [2] [3]


6 நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர். [4]


7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.


8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். [5]


9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.


10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்;
ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. [6]


11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி,
உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது
நீங்கள் பேறுபெற்றவர்களே! [7]
12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்!
ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.
இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும்
அவர்கள் துன்புறுத்தினார்கள். [8]

உப்பும் ஒளியும்[தொகு]

(மாற் 9:50; லூக் 14:34-35)


13 நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்.
உப்பு உவர்ப்பற்றுப் போனால்
எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்?
அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்;
வேறு ஒன்றுக்கும் உதவாது. [9]
14 நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.
மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. [10]
15 எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை;
மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர்.
அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். [11]
16 இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!
அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு
உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். [12]

திருச்சட்டம் நிறைவேறுதல்[தொகு]


17 "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ
நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்;
அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். [13]
18 விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும்.
அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என
உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். [14]
19 எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி
அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர்
விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார்.
இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ
விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.
20 மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட
உங்கள் நெறி சிறந்திருக்கட்டும்.
இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என
உங்களுக்குச் சொல்கிறேன்.

சினங்கொள்ளுதல்[தொகு]


21 "கொலை செய்யாதே;
கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்" என்று
முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். [15]
22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
"தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர்
தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்;
தம் சகோதரரையோ சகோதரியையோ 'முட்டாளே' என்பவர்
தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்;
'அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.
23 ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப்
பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது
உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல்
ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,
24 அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப்
போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
25 உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும்போது
வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள்.
இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார்.
நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.
26 கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல்
அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என
உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.

விபசாரம்[தொகு]

(மத் 19:9; மாற் 10:11,12; லூக் 16:18)


27 " 'விபசாரம் செய்யாதே' எனக் கூறப்பட்டிருப்பதைக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள். [16]
28 ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும்
தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.
29 உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால்
அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள்.
உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட
உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. [17]
30 உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால்
அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள்.
உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட
உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. [18]
31 'தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும்
மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்' எனக் கூறப்பட்டிருக்கிறது. [19]
32 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி
வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது.
அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர்.
விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர். [20]

ஆணையிடுதல்[தொகு]


33 "மேலும், 'பொய்யாணை இடாதீர்.
ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்" என்று
முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். [21]
34 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
ஆணையிடவே வேண்டாம்.
விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்;
ஏனென்றால் அது கடவுளின் அரியணை. [22]
35 மண்ணுலகின் மேலும் வேண்டாம்;
ஏனெனில் அது அவரின் கால்மணை.
எருசலேம் மேலும் வேண்டாம்;
ஏனெனில் அது பேரரசரின் நகரம்.
36 உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்;
ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும்
வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது.
37 ஆகவே நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும்
'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள்.
இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.

பழி வாங்குதல்[தொகு]

(லூக் 6:29-30)


38 "'கண்ணுக்குக் கண்', ' பல்லுக்குப் பல்' என்று
கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். [23]
39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்.
மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு
மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.
40 ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து,
உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால்
உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டுவிடுங்கள்.
41 எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால்
அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.
42 உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்;
கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.

பகைவரிடம் அன்பாயிருத்தல்[தொகு]

(லூக் 6:27-28, 32-36)


43 "'உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக',
'பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக' எனக்
கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். [24]
44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்;
உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். [25]


45 "இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.
ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும்
தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார்.
நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும்
மழை பெய்யச் செய்கிறார்.
46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே
நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால்
உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்?
வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?
47 நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும்
வாழ்த்துக் கூறுவீர்களானால்
நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன?
பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?
48 ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை
நிறைவுள்ளவராய் இருப்பது போல
நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள். [26]


குறிப்புகள்

[1] 5:4 = எசா 61:2
[2] 5:5 - இங்கு பயன்படுத்தப்படும்
கிரேக்கச் சொற்களுக்குப் பின்னால் உள்ள
எபிரேயச் சொற்களின்படி
"நிலமிழந்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் நிலத்தை உரிமையாக்கிக் கொள்வர்"
என்றும் மொழிபெயர்க்கலாம்.
[3] 5:5 = திபா 37:11.
[4] 5:6 = எசா 55:1,2.
[5] 5:8 = திபா 24:3,4.
[6] 5:10 = 1 பேது 3:14.
[7] 5:11 = 1 பேது 4:14.
[8] 5:12 = 2 குறி 36:16; திப 7:52.
[9] 5:13 = மாற் 9:30; லூக் 14:34,35.
[10] 5:14 = யோவா 8:12; 9:5.
[11] 5:15 = மாற் 4:21; லூக் 8:16; 11:33.
[12] 5:16 = 1 பேது 2:12.
[13] 5:17 = மாற் 4:21; லூக் 8:16; 11:13.
[14] 5:18 = லூக் 16:17.
[15] 5:21 = விப 20:13; இச 5:17.
[16] 5:27 = விப 20:14; இச 5:18.
[17] 5:29 = மத் 18:9; மாற் 9:47.
[18] 5:30 = மத் 18:18; மாற் 9:43.
[19] 5:31 = இச 24:1-4; மத் 19:7; மாற் 10:4.
[20] 5:32 = மத் 19:9; மாற் 10:11,12; லூக் 16:18; 1 கொரி 7:10,11.
[21] 5:33 = லேவி 19:12; எண் 30:2; இச 23:21.
[22] 5:34 = யாக் 5:12.
[23] 5:38 = விப 21:24; லேவி 24:20; இச 19:21.
[24] 5:43 = லேவி 19:18.
[25] 5:44 - "பகைவரிடம் அன்பு கூருங்கள்" என்னும் சொற்றொடருக்குப் பின்
"உங்களைச் சபிக்கிறவர்களுக்கு ஆசி கூறுங்கள்;
உங்களை வெறுக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்;
உங்களைத் தூற்றுகிறவர்களுக்காகவும்,
துன்புறுத்துகிறவர்களுக்காகவும்
இறைவனிடம் வேண்டுங்கள்" எனவும்
சில முக்கியமல்லாத
கையெழுத்துப்படிகளில் காணப்படுகிறது.
[26] 5:48 = லேவி 19:2; இச 18:13; 1 யோவா 3:3.


அதிகாரம் 6[தொகு]

அறச்செயல்கள்[தொகு]


1 மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன்
உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்.
இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.
இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து
உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.

தர்மம் செய்தல்[தொகு]


2 நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள்.
வெளிவேடக்காரர், மக்கள் புகழ வேண்டுமென்று
தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர்.
அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
3 நீங்கள் தர்மம் செய்யும்போது,
உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.
4 அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்;
மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும்
உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.

இறைவேண்டல்[தொகு]

(லூக் 11:2-4)


5 நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது
வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம்.
அவர்கள் தொழுகைக்கூடங்களிலும்
வீதியோரங்களிலும் நின்றுகொண்டு
மக்கள் பார்க்க வேண்டுமென
இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள்.
அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். [1]
6 ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது
உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு,
மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள்.
மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும்
உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
7 மேலும் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது
பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்;
மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால்
தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
8 நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம்.
ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை
உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.
9 ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்:

விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே,


உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!


10 உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல
மண்ணுலகிலும் நிறைவேறுக!


11 இன்று தேவையான உணவை [2] எங்களுக்குத் தாரும்.


12 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல
எங்கள் குற்றங்களை மன்னியும்.


13 எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,
தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்.


["ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்."] [3]


14 மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால்
உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.
15 மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில்
உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார். [4]

நோன்பு இருத்தல்[தொகு]


16 மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது
வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம்.
தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே
அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள்.
அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
17 நீங்கள் நோன்பு இருக்கும்போது
உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்.
18 அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது;
மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும்.
மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும்
உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.

உண்மைச் செல்வம்[தொகு]


19 "மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம்.
இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்;
திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். [5]
20 ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்;
அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை;
திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.
21 உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

உடலுக்கு விளக்கு[தொகு]

(லூக் 11:34-36)


22 "கண்தான் உடலுக்கு விளக்கு.
கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.
23 அது கெட்டுப் போனால்,
உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும்.
ஆக, உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாயிருந்தால்
இருள் எப்படியிருக்கும்!

கடவுளா? செல்வமா?[தொகு]

(லூக் 16:13)


24 எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது.
ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்;
அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.
நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.

கவலை வேண்டாம்[தொகு]

(லூக் 12:22-34)


25 ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ,
உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்.
உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?
26 வானத்துப் பறவைகளை நோக்குங்கள்;
அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை;
களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை.
உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார்.
அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!
27 கவலைப்படுவதால் உங்களில் எவர்
தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? [6]
28 உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?
காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்;
அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.
29 ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம்
அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என
நான் உங்களுக்குச் சொல்கிறேன். [7]
30 நம்பிக்கை குன்றியவர்களே,
இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக்
கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால்
உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?
31 ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்?
எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள்.
32 ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்;
உங்களுக்கு இவை யாவும் தேவை என
உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.
33 ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும்
அவருக்கு [8] ஏற்புடையவற்றையும் நாடுங்கள்.
அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.
34 ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.
ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும.
அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.


குறிப்புகள்

[1] 6:5 = லூக் 18:10-14.
[2] 6:11 - "இன்று தேவையான உணவை"என்னும் சொற்றொடரை
"எங்கள் அன்றாட உணவை" அல்லது
"நாளைய உணவை" எனவும் மொழிபெயர்க்கலாம்.
[3] 6:13 - "ஆட்சியும்... ஆமென்" என்னும்
அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்றொடர்
இவ்வேண்டலின் இறுதியில்
சில முக்கியமல்லாத கையெழுத்துப்படிகளில்
மட்டும் காணப்படுகிறது.
[4] 6:14,15 = மாற் 11:25-26.
[5] 6:19 = யாக் 5:2,3.
[6] 6:27 - "தமது... முடியும்?" என்னும் சொற்றொடரை
"தமது ஆயுளோடு ஒரு நாளைக்
கூட்ட முடியும்?" எனவும்
மொழிபெயர்க்கலாம்.
[7] 6:29 = 1 அர 10:1-29.
[8] 6:33 - "அவருக்கு" என்னும் சொல்லை "அதற்கு" எனவும் மொழிபெயர்க்கலாம்.


(தொடர்ச்சி): மத்தேயு நற்செய்தி: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை