திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/வாழ்த்துரைகள்
வாழ்த்துரை
மெய்வழி சாலை வர்க்கவான்
அட்சரகலா ஆதீனர் & சபைக்கரசர்,
மெய்வழிச் சபை.
திகழ்திவ்யப் பிரபந்த மணிமா லைகள்
சீராகச் செப்புமிந்த திருவார் நூலை
நிகழ்நல்ல இலக்கணத்தின் முறைமா றாது
நேர்த்தியாய் இயற்றியினி தளிக்கும் நல்லார்
மகிழும்இளம் கலைக்கோட்டு அனந்தர் வாழ்க
மெய்வழிதெய் வமாசீர் பதிக்க ஓங்க
புகழும்ஆ தீனர் சபைக் கரசர் அன்பாய்
புனைந்துகனிந் தினிதுரைக்கும் வாழ்த்தி தாமே!
இங்ஙனம்,
மெய்வழி சாலை வர்க்கவான்
அட்சரகலா ஆதீனர் & சபைக்கரசர்,
மெய்வழிச்சாலை.
தெய்வத் திருச்சன்னிதிமுன் பணிவார்ந்த இன்னுரை
●
ஆதியே துணை
பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களே! அருட்பெருஞ்சோதியரே! தனிப்பெருங் கருணையரே! எல்லாம் வல்லவரே! முழுமுதற் பொருளே! அன்பே வடிவானவரே! அருளோர் உருவானவரே! ஆதியும் அந்தமுமில்லா அனாதி தாயகரே! நீதி நிறைந்த பரம் பொருளே! வேதங்கள் போற்றும் விமலரே! பாதங்கள் பற்றும் பக்தகோடிகட்குப் பரமபதமருளும் பரந்தாமரே! அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகரே! அண்ட புவனங்கள் அனைத்தும் ஈன்ற அன்னையே! அனைத்துயிர்களையும் காத்து வளர்க்கின்ற அத்தனே! அருள் மெய்ஞ் ஞானம் வழங்கி ஆருயிர் காக்கும் சற்குரு கொண்டலே! அண்டி வந்தவர்களை அமரராக்கிப் பேரின்ப சித்திப்பெருவாழ்வு அருளும் குலதெய்வ தேவேசரே! தேவரீருடைய திவ்வியத் திருவடிகளை சிரோபூஷணமாக அணிந்து தேவரீருடைய அற்புதப் பெரும் புகழை மகா மகத்துவத்தைப் போற்றிச் சொன்மாலைகளைப் பணிவுடன் பொற்பாத கமலங்களில் சமர்ப்பிக்கின்றேன், ஏற்றருள் பாலிக்க வேண்டும் தெய்வமே! ஆராலும் அளப்பரிய பிரம்மத்தை அறிந்த அனந்தாதி தேவப் பெருங்குலப் பெருந்தகைகளே! ஆண்டவர்கள் தயவால் மறுபிறப்புப் (த்விஜன்) புனல் ஜென்மம் பெற்று அமரத்துவ நிலை பெற்றுச் சிறப்போங்கி வாழ்கின்ற ஆருயிர்ப் பிறவியர்களே! சாவா வரம்பெற்ற சாயுச்யர்களே! சத்திய தேவ பிரம்ம குலச் சான்றோர்களே! தெய்வீக அன்புகனிந்த நமஸ்காரம் நமஸ்காரம்.
பல்கலைத் தேர்ச்சியும், பன்னூற் புலமையும், பைந்தமிழ்ச் சுவை மாந்தி இன்புற்று இதயம் பூரித்து விளங்கும் செந்தமிழ்ச் சான்றோர்களே! தங்கட்கு வந்தனங்கள்.
கல்கி அவதார புருஷோத்தமர், மகதி ஆண்டவர்கள், இறுதி நீதித் தீர்ப்பர், மைத்ரேய புத்தர் என்றெல்லாம் முன்வந்த தீர்க்கத்தரிசிமார்களால் ஞானதிருஷ்டியில் கண்டு விண்டெழுதிப் பாராட்டிப் போற்றப் பெற்ற தேவாதி தேவர், திருக்கயிலை வாசர், திருவையாறர், தில்லைப் புராதனர், திருவரங்க நாயகர் எங்கள் குலதெய்வ தேவேசர் பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் திருவருட் பெருங்கருணைத் தயவால் ஏற்று ஆட்கொள்ளப் பெற்ற அடியேன் அவர்களின் அற்புதத் திருப்பெரும்புகழை விதந்தோதுமுகத்தான் பிள்ளை மொழிகளால் சொன் மாலைகள் தொடுத்துச் சமர்ப்பித்துள்ளேன். அவர்களின் முழு மாட்சியின் கோடியிலொரு பங்கு கூட எளியேனால் வரைய இயலாது. அன்னை பராசக்தியாகிய அவர்களின் அமுதகலசத்தில் ஞானப்பால் அருந்திய கடைப்பிள்ளை எளியேன். ஆர்வ மேலிட்டால் பாடிப் பராவிய சொன்மாலைகள் இவை. குறைமனத்துப் பிழை ஒதுக்கிப் பழகித் தேர்ந்த குருகுலாதிபர் மரபினர் என் உள்ளுணர்வுகளை அங்கீகரித்து ஏற்பர் என நம்புகிறேன்.
இங்ஙனம்,
ஆண்டவர்களின் கடைப்பிள்ளை
அனந்தரடிப் பொடி
மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்
அணிந்துரை
முனைவர் முனைவர் க.பாஸ்கரன்,
துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
தமிழில் பக்தி இலக்கியப் பாரம்பரியத்தில் திவ்வியப் பிரபந்தம் எனும் தொடர் நன்கறியப்பட்டது. பெருமாளை முதற்பரம்பொருளாய்ப் பேணும் வைணவத்தில் ‘தமிழ்மறை' என்றும் ‘திராவிடப் பிரபந்தம்' என்றும் ‘திவ்வியப் பிரபந்தம்' சிறப்புப் பெறுகிறது. ‘திவ்ய' என்னும் சொல் மேலான என்றும் ‘பிரபந்தம்' என்னும் சொல் பலவகைப் பாடல் தொகுப்பு என்றும் பொருள்படுகிறது. தமிழில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையான காலத்துள் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாசுரத்தொகுப்பே நாலாயிர திவ்வியப் பிரபந்தமாக நன்கறியப்பட்டது. பிற்காலத்தில் திருவரங்கத்தமுதனார் இயற்றிய இராமானுச நூற்றந்தாதியும் நாலாயிர திவ்விய பிரபந்தத் திரட்டுடன் இணைக்கப் பெற்றது.
ஒரு மேன்மைப் பொருள் பற்றிய பலவகையான பாடல்களின் தொகுப்பே ‘திவ்வியப் பிரபந்தம்' எனும் வகையில் அப்பொருள்மேல் கொண்ட தீராக் காதலினால் பக்திச் சுவை பயக்கும் பலவகைப் பாடல்கள் தமிழில் வெளிவந்தன. வெளிவந்த வண்ணம் உள்ளன. பக்தி இலக்கிய வயலில் அருந்தமிழ் ஆற்றலாலும் அன்பூறும் ஆழ்ந்த பக்தியாலும் இக்காலத்தில் விளைந்த செந்தமிழ்ப் பாமாலைகளே, ‘திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108' எனும் பெயரிலான இப்பெரும் பிரபந்தத் திரட்டாகும். அருட்பாவலர் மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் பிரம்மோதய மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் திருவோங்கும் புகழ் போற்றும் வகையில் யாத்தவையே இப்பக்திப் பாசுரங்கள். நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பாட்டுடைத் தலைவர் திருமால் போல திவ்வியப் பிரபந்தமணி மாலைகளின் பாட்டுடைத் தலைவர் “பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள்” வழிபடுவோனும் வழிபடுபொருளும், பாடுவோனும் பாடுபொருளும் பழமும் சுவையும் போல ஒன்றிக் கலந்து நிலைக்கும் ஆன்ம இணைவு இப்பாடல்களின் சாரமாய் அமைகின்றது.
சொரூபநிலைப் பரம்பொருள் ஆன்மாக்களின்பால் கொண்ட பெருங்கருணையால் மண்ணில் மனிதவுருத்தாங்கி, நல்ல வண்ணம் வாழும் வழிகாட்டி, உய்யும் திறமெலாம் உய்ந்து, உறுதியடையும்படி உரைத்து, உணர்த்தி நின்ற பெருமையெல்லாம் பாடல்களில் சொல் நயமும் பொருள் நயமும் மேவிடப்பாடியுள்ளார், அருட்பாவலர் மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர். பாக்களில் செய்யுள்நடையைப் பக்திக் கால்கள் பதியும் வண்ணம் வளம் பெருக வைத்துச் செல்கிறாள், தமிழ்ப்பாவை.
ஔவைக்குறள் முதலாகப் பல அரிய தமிழ்ப் பாடல்களின் அடியொற்றியும், கீதை காட்டும் பாதை முதலாகச் சைவசித்தாந்த சாத்திரங்கள் செப்பும் செழும்புதையல் வரையான கருத்துக்களின் அடியொற்றியும் பாடல்கள் இயற்றப்பட்டிருப்பது அருட்பாவலர் அருந்தமிழ் மரபை அடியொற்றி வந்த பாவலர் என்பதற்கு சான்று பகர்கிறது. 96 வகையாக பிரபந்தங்களில் 64க்கு மட்டுமே இலக்கியம் உள்ள்து. ஏனைய 32 பிரபந்த வகைகளுக்கு இலக்கணம் மட்டுமே உள்ளது. அருட்பாவலர் அவற்றுக்கும் இலக்கியம் எழுதியிருப்பது சிறப்புக்குறியதாகும். இதனைவிட மேலானது 96 வகைப் பிரபந்தம் எனும் மரபையும் தாண்டி 12 வகையான பிரபந்தங்களை அடையாளம் கண்டு அவற்றுக்குரிய இலக்கணங்களையும் இலக்கியங்களையும் ஆக்கியளித்துள்ளமையாகும். அந்தவகையில் புலவர் பாடல் இயற்றுபவர் என்ற நிலையில் மட்டுமன்றி, பாடலுக்கான இலக்கணம் இயற்றுபவராகவும் இருப்பது சிறப்புக்குரியதாகும். இது பாராட்டப்பட வேண்டிய பணி ஆகும்.
பாட்டுடைத் தலைவரின் உடல் உறுப்புகளைக் கேசாதிபாத முறையில் வருணிக்கும் கலிவெண்பாவில் அமைந்த திருஅங்கமாலையுடன் ஆரம்பிக்கும் இப்பெரும் பிரபந்த்திரட்டு, பாட்டுடைத் தலைவர் தம் தேவியரை மணந்ததும், அவர் துறவு பூண்டபோது அவர்களைப் பிரிந்ததுமான செய்திகளைக் கூறும் கோடைக்கால இயற்கைச் சிதைவுகளோடு ஒப்புமைப்படுத்தும் வேனில் மாலையுடன் நிறைவுறுகிறது. 108 மணிமாலைகளிலும் பக்திப் பெருக்கு மிகுந்து காணப்படுகிறது. இம்மாலைகள் தமிழ் இலக்கியச் சோலையுள் என்றென்றும் மணம்பரப்பி மானுடரை வாழ்விக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தமிழன்னைக்கு 108 மணிமாலைகளை அணிவித்து அழகு செய்துள்ள மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் அவர்களின் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
எண்பது வயது நிரம்பிய அருட்பாவலர் ஆக்கிய ஆக்கங்கள் பல. கவிதைகள், கீர்த்தனைகள், உரைநடைக் கட்டுரைகள், வில்லுப்பாட்டு முதலிய பலவகைப் படைப்புகள் இவரின் புலமையைப் பறைசாற்றுமெனினும் 96 சிற்றிலக்கிய வகைகளும் அமைந்த “108 திவ்விய பிரபந்த மணிமாலைகள்” எனும் இப்பெரும் படைப்பே என்றும் அழியா அருந்தமிழில் இவருக்கு நின்று நிலைக்கும் இடத்தை வழங்கும்.
முனைவர் க.பாஸ்கரன்,
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம்
தஞ்சாவூர்.
மதிப்புரை
முனைவர் க.திலகவதி எம்,ஏ.,எம்.எஸ்ஸி.,எம்ஃபில்.,பிஎச்.டி..
துறைத் தலைவர், இலக்கியத் துறை
தமிழ்ப் பல்கலைக் கழகம் , தஞ்சாவூர்-613010.
பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் மெய்யடியார்களுள் ஒருவராகிய அருட்பாவலர் மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் அவர்கள் எண்பது அகவையில் மிகச் சிறந்த பாமாலையைப் புனைந்து சிற்றிலக்கிய வரலாற்றில் சாதனை படைத்துள்ளார். திவ்வியப் பிரபந்த வரிசையில் பல நூல்களையும், ஒலிப்பேழைகளையும் படைத்துள்ளார். அவ்வகையில் தற்போது 96 வகைச் சிற்றிலக்கியங்களில் இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு புதிய சிற்றிலக்கியம் படைத்துள்ளார். 12 புதிய வகை இலக்கியங்களையும் எழுதியுள்ளார். அவ்வகையில் 108 திவ்வியப் பிரபந்த மணிமாலைகளைப் பாமாலைகளாக்கி மெய்வழிச் சாலை ஆண்டவர்களுக்குச் சூட்டியுள்ளார். பல்வேறு விருதுகள், பட்டங்கள் பெற்றுள்ள அருட்பாவலர் சிறந்த பண்புகள் கொண்ட சான்றோராகத் திகழ்கின்றார். தாயி, சாமி, அம்மா, மகராசி போன்ற சொற்களால் பெண்களை வாழ்த்தி வழியனுப்பும் அன்புள்ளம் கொண்டவராக விளங்குபவர். இலக்கணம், இலக்கியம் இரண்டையும் கற்றுணர்ந்த பாவலர். சிற்றிலக்கிய வகை, சிற்றிலக்கியத்தின் பெயர், பாவினம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு 108 சிற்றிலக்கியங்கள் பாடியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. திவ்வியப் பிரபந்த மணிமாலைகளின் பாட்டுடைத் தலைவராக பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களை மனத்துள் இருத்திப் பாடியுள்ளார் அருட்பாவலர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆண்டாள் போன்ற அடியார்கள் இறைவனோடு ஒன்றிக் கலந்து பாடியுள்ளது போல, அருட்பாவலர் மெய்வழிச் சாலை ஆண்டவர்களோடு மலரும் மணமும் போல ஒன்றியிருந்து பக்திமழையாக - தைலதாரையாக, மடைதிறந்த வெள்ளமெனப் பாடிக் குவித்துள்ளார். ஒலியந்தாதி, வருக்கக்கோவையைத் தேடி தள்ளாத வயதிலும் தமிழ்ப் பல்கலைக் கழக நூலகத்திற்கு வந்து படியெடுத்துச் சென்ற கருணையுள்ளம் கொண்டவர் அருட்பாவலர். “என் செயலாவது யாதொன்றும் இல்லை, எல்லாம் நின் செயலே”, என்பதற்கேற்ப அருட்பாவலர் ஒவ்வொரு பிரபந்த மாலையின் நிறைவிலும் குரு வாழ்க, குருவே துணை, எல்லாம் ஆண்டவர்கள் தயவு என்று அவர் குறிப்பிடுவது அவரின் பணிவையும், தன்னடக்கத்தையும் காட்டுகின்றது.
“தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே” - திருமந்திரம்
எனத் திருமூலர் சுட்டும் பாடலுக்கேற்ப குருபக்தி அருட்பாவலரிடம் புலப்படுகிறது.
அங்க மாலையில் தொடங்கி வேனில் மாலை வரை108 மணி மாலைகள் பாடித் தமிழன்னைக்கு அழகு செய்துள்ளார். அருட்பாவலரின் தமிழ்ப் பணிக்குத் தமிழுலகம் நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளது.
இப்பக்தி மாலைகள் தமிழ்மணம் பரப்பி மாந்தர்குலத்தை உய்விக்கும். அருட்பாவலர் அவர்களின் பாமாலையைப் படிக்கும் பெரும்பேற்றினை அருளிய இறைவனது அருட்கருணைக்கு நன்றி. தமிழிலக்கிய வரலாற்றில் மெய்வழி இளம்கலைக் கோட்டு அனந்தர் அவர்களின் பெயர் என்றும் நிலைபெற்று வாழும். அருட்பாவலர் அவர்களின் தமிழ்ப்பணியும், இறைத்தொண்டும் சிறக்கத் தமிழ் நெஞ்சங்களின் சார்பாக வாழ்த்துகிறேன்.
குரு வாழ்க! குருவே துணை!
நன்றி மலர்களுடன்
முனைவர் க.திலகவதி எம்,ஏ.,எம்.எஸ்ஸி.,எம்ஃபில்.,பிஎச்.டி..
துறைத் தலைவர், இலக்கியத் துறை
தமிழ்ப் பல்கலைக் கழகம்
தஞ்சாவூர்-613010.
அன்பின் இனியவுரை
●
ஆதியே துணை
செல்வி.முனைவர் பொன்.சுசீலா.,எம்.ஏ.,எம்.எட்.,எம்ஃபில்,பி.எச்டி.,
மெய்வழிச்சாலை.
பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் மெய்யடியார்களுள் ஒருவராகிய அருட்பாவலர் மெய்வழி இளங்கலைக் கோட்டு அனந்தர் அண்ணா, தமிழில் இதுவரை பட்டியலிடப் பெற்றுள்ள 96 சிற்றிலக்கிய வகைகளிலும் மெய்வழி ஆண்டவர் அவர்களைப் பாட்டுடைத் தலைவராக வைத்து இலக்கியம் படைக்கும் அரும்பெருஞ்செயலைத் தாம் ஒருவராகவே ஏற்று முடித்திருக்கின்றார். குறைந்த வயதினரும் செய்து முடிக்க அரிதான இப்பணியை எண்பது வயதான இவர் எப்படித்தான் செய்து முடித்தாரோ என வியக்க வேண்டியுள்ளது.
இவருடைய கவி எழுதும் ஆற்றலைக் காண்கையில் இச்செயல் இவரால் ஆகக்கூடியதே என்றும் ஏற்க முடிகிறது.
எழுத்தெண்ணிப் பாடும் கட்டளைக் கலித்துறைப் பாடல்களை 14 வயதிலேயே எழுதும் ஆற்றல் இவருக்கு இருந்துள்ளது. தாண்டகம், சதகம் போன்ற அரிய வகைகளுடன் காவடிச் சிந்து, வில்லுப்பாட்டு போன்ற இனிய கவி வகைகளையும் முறையான சங்கீதக் கீர்த்தனைகளையும், வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகியவற்றின் இனங்களாகிய துறை, தாழிசை, விருத்தம் மற்றும் மருட்பா உள்ளிட்ட அனைத்துப் பா வகைகளையும் மழைபோல் பொழியும் ஆற்றலைத் தெய்வமவர்கள் இவருக்கு அருளியுள்ளார்கள். அவ்வாற்றலால் முறையான, இலக்கண வரம்பு குறையாத திவ்வியப் போற்றி மலர்கள், திவ்வியப் பிரபந்தத் திரட்டு, தெய்வப் பிரபந்த மணிகள், தெய்வக் கீர்த்தனைகள், வில்லுப்பாட்டு ஆகிய கவிதை இலக்கியங்களையும், தெய்வத் திருவரலாறு, தெய்வ மகாமகத்துவம் ஆகிய உரைநடைப் பேழைகளையும் ஏற்கனவே இயற்றி தெய்வத் திருவடிகளில் அணிவித்துள்ளார்.
தற்போது, 96 வகைச் சிற்றிலக்கியங்களில், இலக்கியம் இல்லாத இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகட்கு இலக்கியம் படைத்துச் சேர்த்துள்ளதுடன், 12 புதிய வகை இலக்கியங்களையும் எழுதிச் சேர்த்து 108 திவ்வியப் பிரபந்த மணிகளால் சொன்மாலை கோர்த்து, தெய்வப் பொன்னார் திருவடிகளை அலங்கரித்துள்ளார்.
அரசு ஆசிரியப் பணிக்காக நல்லாசிரிய விருது பெற்ற இவர், அவருடைய சீரிய இலக்கியப் பணிகளுக்காக அருட்பாவலர், இறையருட் செல்வர், சிகரம் தொடும் செம்மல், சங்கீத சிரோன்மணி ஆகிய பட்டங்களையும் பெற்றிருக்கிறார். இருந்தும், தன்னை மெய்வழி ஆண்டவர்களின் “கொத்தடிமை” என்று கூறிக் கொள்வதையே மிக உன்னதமான பட்டம் எனக் கருதுகிறார். இவருடைய கவித்திறனுக்கும் மேலாக, இறை நெறி ஒழுக்கம், சத்திய நன்னெறி நடக்கை, தெய்வம் வைத்த பத்தியங்களைக் கடைபிடிப்பதில் திடசித்தம், தன்னடக்கம், பணிவுடைமை, அதே சமயத்தில் தெய்வ நீதத்தை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காத வைராக்கிய சித்தம் ஆகிய உயர் பண்புகள் இவரிடம் மேலோங்கி நிற்கின்றன. எழுதுவதில்தான் ஆற்றல் என்றில்லாமல், கேட்போர் நெஞ்சுருகிக் கண்ணீர் வடிக்கும் வண்ணம் மெய்வழி தெய்வமவர்களைப்பற்றி முத்திப் பேருரையாற்றும் ஆற்றல், மதுரமான குரலில் ஆண்டவர்கள் மான்மியம் ஓதும் பாங்கு, தெய்வ பாசுரங்களை இனிமையாகப் பாடும் திறம், உலகியல் வாழ்வில் தவறு செய்தோர்க்கு இங்கிதமாக அறிவுரை கூறி நல்வழிப்படுத்தும் நன்மனம் ஆகியனவும் இவரின் சிறப்பியல்புகள்.
தாய்க்குலத்திற்கு இவர் அளிக்கும் மரியாதையைப் பார்த்தாலே நமக்கு, இவர்மீது மதிப்பு வளரும். அவரைக் காணச் செல்கையில், “தாயே” என்றும் “சாமி” என்றும் “அம்மா” என்றும் பாசமுடன் அழைத்து, பேசி முடிந்தவுடன் “மகராசியாகப் போய் வாருங்கள்!” நன்மாராயம் கூறி வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் உயர் பண்பினைக் கண்டே இவரை உடன் பிறவாச் சகோதரராக ஏற்று மகிழ்கிறேன்.
இவரைப் பற்றிக் கூறுகையில் வித்துவான் மெய்வழி சோமசுந்தரம் செட்டியார் அவர்கள், “தமிழ்ப் புலமை கொண்ட எல்லோருமே கவிதை இயற்ற முடியாது. மிகச் சிலருக்கு மட்டுமே கவிபாடும் ஆற்றல் வாய்க்கும். இவ்வாய்ப்புக்குரியவர்களும் எல்லாவகைச் செய்யுட்களையும் பாடிவிட முடியாது. மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் ஒரு சாதனையாளர்”, என்பார்.
சிற்றிலக்கியங்கள் என்பவை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நபர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு வெவ்வேறு புலவர்கள் இயற்றப்பெற்றவை. இப்படிப்பட்ட இலக்கியங்கள் 96 எனத் தற்போது தொகுக்கப் பெற்றுள்ளன. அப்படிப்பட்ட 96 வகை இலக்கியங்களிலும் ஒரே தெய்வத்தைப் பாட்டுடைத் தலைவராக்கி, ஒரே புலவர் ஒரே காலத்தில் எல்லாவகைப் பாவினங்களையும் பயன்படுத்தி எழுதியுள்ளார் என்பது வியப்பும் மகிழ்வும் தரத்தக்கதாக உள்ளது.
இன்னொரு கோணத்தில் பார்க்கையில், தமிழ் படித்த எல்லோருக்கும் தமிழ்ப்புலமை இருப்பதில்லை. புலமையுற்ற எல்லோரும் மெய்யுணர்ந்தவர்களில்லை. இவ்விரண்டும் இணைந்தவர்கள், பக்திச் சுவை நனி, சொட்டச் சொட்ட பாடியவர்கள், தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், திருப்புகழ், திருவருட்பா ஆகியன பாடிய தமிழ் வல்லார்.இவர்கள் வரிசையில் வைக்கத்தக்க இந்நூலாசிரியர், தான் கண்ட மெய்யை, தான் உணர்ந்த மெய்யை அப்படியே சுவை குன்றாது தமிழ்ப் பாடல் வரிகளாக்கி கொடுத்திருக்கிறார் என்பது புதுமையான பழமை.
தாம் எழுதி முடித்த இலக்கியங்களுக்கு சுத்த நகல் எடுத்தல், அச்சு வாகனமேறிய பக்கங்களில் அச்சுப்பிழை திருத்தல் ஆகிய எளிய பணிகளுக்காக என்னை உதவும்படி கேட்டுக்கொண்டார். அவர் கொடுத்த சிறு பணிகளை ஆற்றியதன் மூலம் நான் அறிய நேர்ந்த செய்திகள் அதிகம். என் தமிழறிவு தெய்வத் திருப்பணிக்கெனப் பயன்படுவது குறித்தும் எனக்கு மகிழ்ச்சியே.
இவர் எழுதியுள்ள நூல் முழுவதையும் படிக்கும் வாய்ப்பு கிட்டியபோது, எனக்குள் எழுந்த எண்ணமாவது ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த, பார்பதித் தாயிடம் ஞானப்பாலருந்திய முத்துச் சிவிகை ஏற்ற, தம்பதங்கண்டு இன்பந்திரண்ட திருஞானச் சம்பந்தப் பெருமான்,
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”
என்று இயற்றியருளிய வரிகட்கு இருபத்தோராம் நூற்றாண்டில் எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் இவர்தாம் என்பதே!
“வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர் ஜெயங்கொண்டான் விருத்தமென்னும் ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன் கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள் வசைபாடக் காளமேகம் பண்பாகப் பகர்சந்தம் படிக்காச லாலொருவர் பகரொண்ணாதே”
என்று ஒவ்வொரு இலக்கியத்திற்கும், பாவினத்திற்கும் ஒவ்வொருவர் சிறந்தவர் என்ற நிலையிருக்க, அனைத்துப் பா வகைகளிலும் அனைத்துச் சிற்றிலக்கிய வகைகளையும் இவர் ஒருவராகவே பாடிக் குவித்திருக்கிறார். இத்தெய்வத் தமிழ்ப் புலவர் வாழும் காலத்தில் வாழும் ஊரில் நானும் வாழ்கிறேன் என்பதே எனக்குப் பெருமை!
மெய்வழி ஆண்டவர்களின் பேரருட் பெருந்தயவை, இவரின் இலக்கிய வரிகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. கவிதை மலர்கொண்டு செய்யும் இவரின் இலக்கியப் பூசனையில் பக்தி மணம் பாரெங்கும் பரவுகிறது. சிற்சில இலக்கியங்கட்டு அவர் எடுத்துக் கொண்டுள்ள இலக்கியக் கரு, இலக்கிய உத்தி, கவிதைப் போக்கு, உணர்வு மழை, சந்த நயம், மெய்வழிக் கருத்துக்களுக்கு அவர் அளித்துள்ள இலக்கியப் போர்வை எல்லாமே தனித்தனியாகவும், சிறப்பாகவும் மிளிர்கின்றன. மொத்தத்தில் தமிழிலக்கியப் புழக்கமும், மெய்வழி ஒழுக்கமும் உள்ள பிறவியர்கட்கு இவர் நூல் “பல்சுவை மெய்ஞ்ஞானத் தமிழ் விருந்து”.
“எமனுடைய மூர்க்கமான பலத்தை முறியடித்து மக்களைத் தேவராக்கி அரியவற்றுள் அரியதாகிய சாவாவர வாழ்வை எளியவர்க்கும் எளிதாகத் தரவல்லது எம் சாலைத் தமிழ்” என்று மெய்த்தமிழையே எமனை வெல்லும் கூர் ஆயுதமாகப் பயன்படுத்தும் வல்லபம் படைத்த மெய்வழி ஆண்டவர்கள் தேகமெடுத்து இப்பூமிக்கு அவதரித்து வந்த பொழுது அவர்களை அண்டி, தேவ அங்கமாகி, தெய்வ ஆவிடையில் மறுபிறப்புப் புனல் ஜென்மம் பெற்று, தேவ குமாரனாக நின்று நிலைத்திருக்கும் மெய்வழி இளங்கலைக் கோட்டு அனந்தர் அண்ணா அவர்களின் சீரிய இலக்கியப் பணியைக் கண்ணுறும் அறிவுக்கண் படைத்த ஆன்றோர்கள், அவர் படைத்த இலக்கியங்கள் வழியே இறவா வரந்தரும் இறைவரைக் காணட்டும்! மூவா மருந்தென்னும் முத்தமிழ்க்கரசரைக் காணட்டும்! நீதியின் யுகம்வர சாதி மெய்த்தமிழ் தரும் வேதியர்க்கரசரைக் காணட்டும்! கண்டால், கண்டு வேண்டினால், வேண்டியவர்க்கு வேண்டியவாறு சாவாவரம் கிட்டுதல் சத்தியம்!! இப்பயனுக்கே அவர் ஆற்றிய பணி பயன்படட்டும்!.
“என் ஆயுட்காலம் முழுவதும் என்னை ஆண்டு கொண்ட ஆண்டவர்களின் அருட்பணிக்கே” எனக் கூறும் அவரின் தெய்வீக இலக்கியங்களை இனியும் வரவேற்கத் தமிழுலகம் காத்து நிற்கிறது. அவரிடமிருந்து எவ்வளவு இலக்கியங்கள் புறப்பட்டாலும் அவ்வளவும் நம் அறிவுக்கும், தமிழுக்கும், ஆன்மீகத்துக்கும் வரவாகும் செல்வங்கள்தானே!.
இவண்,
இருகரம் ஏந்தி இறையருள் விழையும்
சாலை பொன்.சுசீலா