உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/அன்புநிறை முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து

முனைவர்.சரசுவதி இராமநாதன்.,எம்.ஏ.,எம்.எட்.,பி.எச்டி.,[1]
தலைவர், கண்ணதாசன் தமிழ்ச்சங்கம், சென்னை
தலைவர், ஔவைக்கோட்டம், திருவையாறு.


அன்புநிறை முன்னுரை
   இதை மதிப்புரை என்றால் அதுமிகை. ஆகவே, நூலைப்படிக்கும் முன் உள்ளே புக வைக்க முன்+உரை தான் எழுதுகிறேன்.

கடல் நீரைக் கொட்டாங்கச்சி அளந்து விடமுடியுமா!
பாயும் அருவியைப் பானை அளந்து காட்டுமா!
பரந்த முகிலை ஓலைக்கீற்று அளக்குமா!
பகலவன் ஒளிக்கு அகல் ஒன்று ஒளிதருமா!


   “மெய்வழி இளங்கலைக்கோட்டனந்தர்” எனும் என் ஆசான், அருட்பாவலரின் அருள்மணக்கும் பாமாலைக்கு, எளிய, கடைச்சிறிய நான் பாராட்டுரையோ, மதிப்புரையோ தரலாமா?.


   பிரம்மோதய சாலை ஆண்டவர்கள் நம் அருட்பாவலரை ஆட்கொண்டு, ஞானத்தமிழமுதூட்டி, கலைக் கோட்டுமுனி(ரிஷிய சிருங்கர்)க்கு இவர் இளையவர் என “இளங்கலைக்கோட்டு அனந்தர்” என தீட்சா நாமம் சூட்டி அருட்பாமாலைகள் தந்தருள வைத்துள்ளார். “என் ஆயுள் முழுதும் ஆண்டவர் புகழ் பாடவே” என வாழ்பவர் ஆசான். “தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு” ஞானபோதனர் சாலை ஆண்டவர்கள் இவரை உய்வித்துள்ளார். இவரும் “பாடும் பணியே பணியாகக்” கொண்டு வாழ்கின்றார். எனக்கு மெய்வழிச்சாலை, அனந்தர்கள், என்ற அறிமுகம் டாக்டர்.மெ.சுந்தரம் ஐயாவால் கிடைத்தது. எளியவளை அங்கு அழைத்துச் சென்று பேறு பெற வைத்த என் ஆசான், அருட்பாவலரே! ஆசானின் நூலுக்கு மாணவி முன்னுரை தரலாம் என நன்னூல் பகர்கிறதே!.


   தமிழ் இலக்கண நூல்களைப் பயின்றவர்களுக்குச் சிற்றிலக்கியம், அல்லது சிறுபிரபந்தம் 96 என்று தெரியும். சிலருக்குச் சில இலக்கியப் பெயர்கள் தெரியும். உலா, தூது, மாலை, பிள்ளைத்தமிழ், அந்தாதி என்று சொல்லத் தெரியும். திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் பல சிற்றிலக்கிய வகை பாடியுள்ளார். ஆனால் எத்தனைபேர் அருட்பாவலரைப் போல இத்தனைவகைப் பிரபந்தங்கள் பாடமுடியும்?


   ஐம்பதாண்டுகளாக மேடையில் பேசி வருபவள் நான். முறையாக வித்துவான், எம்.ஏ.,பி.எச்.டி எனப்பட்டம் பெற்றவள். எனக்குப்பல சிற்றிலக்கியப் பெயர்கள்தான் தெரியும். படித்ததில்லை. எழுதுவது எங்கே! இது மிகப்பெரிய இமாலய சாதனை! வாழ்த்துவோம், வணங்குவோம்!


   திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108 தந்திருக்கிறார். தெவிட்டாத தேன், தமிழ்த்தேன், தெய்வீக அமுதமாம் தேன்! நம்மை உய்விக்கும் தேன்! திருவோங்கு புண்ணியச் செயலோங்க வைக்கும் ஆனந்தத்தேன்! எந்தப் பக்கம் தொட்டாலும் இனிக்கும் தேன். படித்தேன், இல்லை சுவைத்தேன். சில துளிகள் உங்கள் முன் வைக்கிறேன். அதன்பின் உள்ளே நுழைந்து, திளைத்து ஆனந்த வாரியில் மூழ்குக!


   பாட்டுடைத் தலைவர் யார்? மறலி கை தீண்டா மெய் மார்க்கநாயகர் சாலை ஆண்டவர்கள். பாடியவர் அவரது பேரருட்பார்வை தீட்சை பெற்ற பாவலர் இளம்கலைக்கோட்டு அனந்தர். நல்லாசிரியர். பிறவிக்கவிஞர். மறந்தும் வேறு செயல் அறியா நல்லவர், ஆண்டவரையே ‘சிக்கெனப்’ பிடித்தவர். தெய்வமணிக் கீர்த்தனைகளாலும் வரலாற்று மான்மியத்தாலும் சொன்மாலை சூட்டியவர். ஊற்றெழும் பக்திப்பனுவல் இவை. மோனை எதுகைக்கு முக்கிநிற்கும் புலவனின் கவிதைகளில்லை. 96 வகைப் பிரபந்தங்களுடன், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகை இலக்கியங்களும், 12 வகைப் புதிய இலக்கியங்களும் தந்துள்ளார். அங்கமாலை, அட்டகம், அட்டமங்கலம் என்று வரிசை வளர்கிறது. வேனில்மாலையில் 108 ஆவது பிரபந்தம் நிறைவு பெறுகிறது.

தேன் துளிகள் சில


   1. திருஅங்கமாலை என்பது ஆடூஉ, மகடூஉ (ஆண், பெண்) இருபால் பாட்டுடைத்தலைவரின் அங்க அழகை வருணித்துப்பாடும் பாடல். கலிவெண்பா யாப்பில், ஆண்டவரைக் கேசாதிபாதமாக வர்ணிக்கிறார் கலைக்கோட்டார். விழிக்கே அருளுண்டு என்றார் அபிராமிபட்டர். அதுபோல ஆண்டவர் முகத்தில்

    அருளே பெருகும் திருவிழிகள், ஆர் மெய்ப்
    பொருளோர் குவளை மலர் போன்ம் - திரு விளங்கும்
    செந்தா மரையிதழை ஒக்கும் நயனங்கள்.

அவரது செவிகள்

    எங்கள் பணிவார்ந்த விண்ணப்பம் ஏற்றருளும்
    பொங்கெழிலார் நற்செவியர்

அவரது திருவடிகள் எப்படி?

    “சீரார் திருத்தாள் சிறப்புரைக்க வல்லேனோ?”

என வியந்து நிற்கிறார். உண்மைதானே! (பக்.3.5,8)


   2. திரு அட்டகத்தில்

    சதமென்று இந்தச் சகவாழ்வை எண்ணி
    சா திக்கில் ஏகும் நரரை
    சரி என்று ஏற்று, கிரியொன்று ஆற்றி
    சாகாத வாழ்வு அருள்வார்!

என்றது மெய்வழியாம் சன்மார்க்கத்தின் குறிக்கோள் விளக்கம் தென்திசை குறித்துப்பாடுகிறார். (பக்.14)


   3. அட்டமங்கலத்தில்

    “தெய்வமே மெய்வழிச் சாலையப்பா!”

என்று தோத்தரிப்பார்களைத் தென்திசைக்குரிய காவலன் இயமன் தீண்டமாட்டானாம். மறலி மெய் தீண்டா வகை செய்து உய்விக்கத்தானே ஆண்டவர்கள் மானுடச் சட்டை தாங்கி வந்தார்கள் (பக்.17)


   4. மேற்சொன்ன கருத்து அம்மானையில் வலியுறுத்தப் பெறுகிறது. திருஅம்மானை 10ஆவது பாடலில்

    “தேவர் என்போர் வானுலகோர், பூவுலகில் இல்லை என்று
    பூவுலகோர் செப்புவது பொருந்துமோ அம்மானை?”
    தேவர்என்போர் பூவுலகில் தாமுறைதல் செப்புவன்கேள்
    ஆவா, இது உலகின் ஆரதிசமயம் அறிமின்
    ஜீவர்களைத் தெய்வம் மணிவயிறேற் றீன்றெடுத்து
    தேவர் என ஆக்குவது தரணியில்தான் அம்மானை (பக்.28)


   ‘பெற்ற பெருவளம், பெறா அர்க்குஅறிவுறீ இச் சென்று பயன் எதிரச் சொன்னது ஆற்றுப்படை’. பாவலர், நம் ஆசான், தான் சாலையில் பெற்ற அனுபவங்களைப் பிறர் பெற ஆற்றுப்படுத்துகிறார். பலப்பல பாதை சென்று தயங்கி, மயங்கி, உய்வகை காணாது அலையும் உயிர் ஒன்று அருட்பாவலரைப் பார்த்து, வணங்கி “யாவர் நீர்? எங்குளீர்? எந்நெறிச் சார்பினீர்?”

    தோற்றம் புதிது, சொற்றிறம் பெரிது
    புதுமை காண்கிறேன் பூணுடை அணிகள்
    சைவம் வைணவம் கிறித்தவம் இஸ்லாம்
    உய்வகை அனைத்தும் ஒன்றிய போலும் என்கிறது.(பக்.57)


   அனந்தர் விளக்கம் தந்து, குருயார்? அவர் இடம் எப்படிப்பட்டது? பொன்னரங்க ஆலயம், அனந்தாதியர் திருச்சபை, ஆண்டவர் தரிசனம், தீட்சை அளித்தல் என 1130 அடிகளால் நேரிசை ஆசிரியப்பா யாப்பில் சுவைபட விளக்குகிறார். இந்த ஒரு யாப்பே (ஆற்றுப்படை) கூட எழுத இயலாது எனக்கு என்று ஒத்துக்கொள்கிறேன். பின்னர் 108 மணிமாலை எப்படி உருவாக்குவேன்! பிரமிக்கிறேன் ஐயா! உமது கையிலுள்ள பேனா எழுதவில்லை, அதன் வழி ஆண்டவரின் அருள் ஊற்று எழுத வைத்துள்ளது!


   இணைமணிமாலை என்பது இரண்டு வெண்பா, இரண்டு கட்டளைக் கலித்துறை என்று நிரல்படப்பாடுவது. இதிலும் 100 பாடல்கள் தந்துள்ளார் அருட்கவி. காரைக்காலம்மையார் முதன் முதலில் இரட்டை மணிமாலை தந்தார். அந்தாதித்தொடையில் வெண்பா, கட்டளைக் கலித்துறை என மாற்றி மாற்றி 20 பாடல்கள் வரும். ஒரு பாடல் எடுத்துக்காட்டாகத் தரட்டுமா?

    “ஆதிநின் தாளுக் கணிகலன்கொள் என்னுயிரை
    நீதித் திருவுருவே நித்தியமே - மேதினியில்
    பற்றென்ப துன்தாளைப் பற்றுதலே ஏழைஎற்கு
    மற்றுப்பற் றில்லாமல் செய்” - என உருகுகிறார்.
    “மற்றுப்பற்றெனக்கின்றி நின்திருப் பாதமே மனம் பாவித்தேன்”,

என்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளின் உறுதி இங்குத் தென்படுகிறது. (பக்.108)

‘திருஉந்தியார்’ - மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் சிறப்பு. இளங்கலைக் கோட்டாரின் திருவுந்தியாளும் அழகோ! அழகு! திருக்குறள் பயிற்சியை ஆங்காங்கே எடுத்தாள்கிறார்.

    “வையகம் வானகம் எதும்ஈ டில்நன்றி
    செய்யாமல் செய்தாரே உந்தீ பற
    மெய்யாக மெய்யாக உந்தீ பற” 

(செய்யாமல் செய்த உதவிக்கு....குறள்)

    “சேற்றில் கிடந்தேனைச் செங்கரத்தால் தொட்டு
    ஆற்றினில் இட்டாரே உந்தீ பற
    போற்றிப் பணிந் தினிது உந்தீ பற” 
    எத்தனை அழகான அடிகள்! (பக்.118)


   திருஉலா, உழத்தி பாட்டு, அருள் உற்பவமாலை, அருள் எண் செய்யுள் என வரிசை வரிசையாக உலாவருகிறது ஐயாவின் தமிழ் ஆற்றல்.


   திருவெழு கூற்றிருக்கை, ஞானசம்பந்தப்பெருமான் திருமங்கையாழ்வார் ஆகியோர் திருட்பாடல்களில் நான் படித்துப் பாடியதுண்டு. அருட்பாவலர் அதிலும் வெற்றி கண்டுள்ளார்.(பக்.205-210)


   இனி, மெய்யூர் ஐந்திணைச்செய்யுள் வருகிறது. ஒவ்வொரு திணையாக, உரிப்பொருள் திணைக்குரிய துறைகள் எனத்தலைப்பிட்டு, ஆண்டவராம் தலைவரை நாயகியாம் ஜீவாத்மா எண்ணிப் பாடுவதாக அகத்துறையில் பேரின்பம் காட்டிப் பாடிய திறம் போற்றுதற்குரியது.(பக்.211 முதல் 220)


   ஒருபா ஒருபஃது - பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் பத்துப் பாடல்கள் அருமையாகப் புணைந்துள்ளார்.

“மாலயனும் காணாத திருவடியும் மறை முடியும் ஏழைக்குக் காட்ட வேண்டும”, 

என வேண்டுகிறார்.


   ஓசை ஒலிஎலாம் ஆன இறைவனின் திரு அவதாரர் பிரம்மோதய ஆண்டவருக்குத் திருஒலி அந்தாதி பாடியுள்ளார்.

    ஆதி அந்தமும் ஆனீர் நமோநம
    ஆகமம் மறை ஆனீர் நமோநம
    ஆருயிர்க் குயிர் ஆனீர் நமோநம

திருப்புகழ் பாடுவது போல இனிக்கிறது.


   நற் கடிகை வெண்பா காவலர் கடவுள் சிலரை நாழிகை, யாமத்தில், வெண்பாவால் போற்றிப் பாடுவது. நமது அருள் ஞானப்பாவலர், மணி, மணித்துளி எனக் காலத்திற்கேற்பப் பாடியுள்ளது சிறப்பு!


   கலம்பகம் (கலப்பு+அகம்) பாவகை உறுப்புகள் கொண்டது. வெண்பா விருத்தம், கலித்துறை (அம்போதரங்கம் வரும்) ஆசிரியம் எனப்பலவகைப் பாக்கள் விரவிவரும்.

    “தேவாதி தேவா, மூவா முதல்வா
    கோவே தனிகையர் கொடையாம் புதல்வா!”

- என வாய் குளிரப் பாடி

    “நீதிநீர் ஆதிநீர்
    அருளும்நீர் பொருளும் நீர்
    சிவமும் நீர், தவமும் நீர்”

- என்கிறார். (பக்.293)


   அன்னத்தை அழகாகத் தூதனுப்புகிறார்.


   சாலைக் கலம்பகம் தமிழன்னைக்கு அற்புத அணி (பக்.322)


   நல் காஞ்சி மாலை, தெய்வக் காப்பியம், ஊறல் மாலைக் குறமங்கை (குறவஞ்சி) என்று எதைச் சொல்ல! எதை விட!


   குறவஞ்சியில் பறவைகள் கண்ணிக்குள் வந்துவிழும் இங்கோ, அனைத்து மதம், இனம், சாதி, பிரிவு கடந்து மக்கள் சாலைக்குள் வந்து விட்டனர் எனப் பாடுகிறாள் குறமங்கை அதிசயம்! ஆனால் உண்மை!


   கேசாதிபாத வர்ணனை, திருவருட்கோவை, திருச்சதகம் அருமையான தமிழ்க் கருவூலங்கள். சதகத்தில் அருளாளராம் ஐயர் நன்மார்க்கமாம் மெய்வழியை உபதேசிக்கப் பட்ட இடர்கள் சென்ற இடங்கள் எல்லாம் பேசப் பெறுகின்றன.


   தாண்டகம் என்ற பாவகை அப்பரடிகளால் பெரிதும் கையாளப் பெற்றதால் அவரைத் ‘தாண்டகவேந்தர்’ என்றார் சேக்கிழார். இளங்கலைக் கோட்டார் மற்றொரு தாண்டக வேந்தர் ஆகிவிட்டார்!


   நட்சத்திரங்களுக்குப் பாடல் தரும் ஒளிர் தாரகை மாலை என்ற பா வகையை இப்போது தான் நான் படித்தேன்! உண்மை! ஒப்புக் கொள்கிறேன், ஐயா! சிறு சிறு துளிகளைத் தொட்டுக் காட்டவே நான் திணறுகிறேனே! எப்படி ஐயா இப்படிப் பாடினீர் நீர் அருட்பாவலர் என்பதை ஆயிரம் கோவிலில் சொல்வேன்!


   என் முன்னுரையே தனி நூலாகிவிடுமோ!


   நான்மணிமாலை, நூற்றந்தாதி, பதிகம் இவை தவிர நொச்சிமாலை, பயோதரப்பத்து, பெருங்காப்பியம் இவை இதில் உள, பொன்னரங்கர் பண்ணலங்காரத்தில் 52 அணிகளை எடுத்தாண்டுள்ள திறம் வியந்து போற்றதற்குரியது.


    பரணி என்பது போர்க்கள வர்ணனை, பேய்களின் தோற்றம் என்றெல்லாம் பாடப்படும் சிற்றிலக்கியம். ஆண்டவர்கள் என்ன போர் செய்தார்கள்? அறியாமை, ஆணவம், பலப்பல தெய்வம் சொல்லி வளர்க்கும் பகை, மெய்வழி அறியாத இருள் இவற்றை எதிர்த்து யுக முடிவு செய்து, புது யுக வரவு செய்து வெற்றி பெற்றார்கள். அதற்கே ‘யுக உதயப் பரணி’ பாடுகிறார் பாவாணர். இங்கு அனந்தாதியர் வர்ணனை அழகு.


   வள்ளற் பெருமான் கந்தகோட்டத்து முருகப்பிரான் மீது தெய்வ மணி மாலை தந்தார்கள். அருட்பாமணி பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் தெய்வமணிப் பதிகம் தந்துள்ளார்.

    “மறலிகெட வரமருள மதிஒளிரு கதிஉதவு
    மெய்வழித் தெய்வ மணியே”

போன்ற மகுடம் (ஈற்றடி) அற்புதம்.


   நெல்வகை எண்ணினாலும் பள்ளு வகை எண்ணமுடியாது என்பர். சாலையூர்ப் பள்ளு இலக்கியத்தரமுடைய இன்னொரு பள்ளு,

    நாற்கவியும் பொழியும்கவி வானர் முன்னே
    நானுமொரு புலவன் என முளைத்தேன்!

என்கிறார். பால்குடி மறந்தபிள்ளை அறிஞர் முன் மொழி பகர்வது போன்றது என் செயல் என அவையடக்கம் பாடுகிறார்.


   கோலகாரன் வருகிறான், மனத்தைப் பண்படுத்திப் பக்திப்பயிர் வளர்த்து விவசாயம் செய்யச் சொல்கிறார்.

    “ஏர் உழுது மண்உணக்கிச் சீர்படுத்துங்கள் - உங்கள்
    இனியமனம் கள்ளமின்றிப் பண்படுத்துங்கள்
    சீருடனே நல்லஉரம் இட்டுவையுங்கள் நல்ல
    சிந்தையினில் தூய்மை தரம் நட்டு வையுங்கள்
    வேருடன் களைகளைக் களைந்தெறியுங்கள் - இனிய
    மென்மனதில் ஆற்றலின் திறம் விரியுங்கள்
    பாருலகில் வேளாண்மை ஓங்கிடச் செய்வோம் - தெய்வப்
    பாதமனதைப் போற்றி எந்தப் பணியையும் செய்வோம்”


   அப்பர் சுவாமியின் ‘மெய்ம்மையாம் உழவைச் செய்து’ என்ற அருள்உரை நினைவில் வருகிறது.

    “காரார் கூந்தலினில் நேராய் வகிடெடுத்துச் சீவியே - அதை
    ஓரக் கொண்டையிட்டு” - லோகசுந்தரியாம்

மூத்தப்பள்ளி வருகிறாளாம்.


   பண்ணையாரின் வருகையில் நகைச்சுவை தோன்றுகிறது.
   பன்மணிமாலை பாவலரின் கவித்திறனுக்குச் சாட்சி.


   பாதாதிகேசம் மிக அழகு.

    மதிநிறை அமுதவரே! மணிமொழிக் கனியவரே!
    இதயம தனிலமரும் எழிலரசிவர் அறிமின்


   கானல் வரியில்

    திரைவிரி தருதுறையே
    திரு மணல் விரியிடமே!

என்று பாடுவது போல ஒலிக்கிறது.


   வாயாரப்பாடிப் பரவப் பிள்ளைத்தமிழ் உகந்தது.

    மண்ணிடைப் பிறவாத தங்கமே! அலைமிகும்
    வாரி காணாத முத்தே!
    மலையிடைப் பிறவாத மணியே! உயர்ந்திடும்
    மலையில் தொங்காத தேனே!
    தேயாத நிலவுநீர் மறையாத கதிரும்நீர்
    சிறிதும் குறையாத நிதி நீர்!
    “வாராய்மணியே! வளவரசே!
    முழு மெய் மதியே! மிக்கொளிசேர்
    வானின் கதிரே! மலர்மணமே!
    வண்ணம் இலங்கும் ஓவியமே!”

இப்படி எத்தனை அழகுத் தொடர்கள், இன்பமோ இன்பம்.


   “அம்புலி, புலவர்க்குப்புலி” இவரோ நெல்லை அல்வாவை விழுங்குவது போல எளிதாகப் பாடி விடுகிறார். நிலவுக்கும் ஆண்டவருக்கும் சிலேடை பாடுகிறார்,

    பாலர் முதல் அனைவரும் பிரியமுறல், நாற்கலைகள்
    பதினாறு கொண்டிலங்கல்,
    பண்பு தண்ணிளியாதல் இருள் விலக்கல்

இப்படி ஒப்புமை பல உண்டே! (பக்.1131)


   மெய்ப்புகழ்ச்சி, புறநிலை, அருள் புறநிலை வாழ்த்து, திருப்பெயர் நேரிசை வெண்பா, திருப்பெயர் இன்னிசை வெண்பா என எந்த வகையையும் விட்டுவைக்கவில்லை பாவலர் ஐயா!


   85 ஆவது பெருங்காப்பியம் (தவத்ததிகாரம்) பக் 1175 தொடங்கி 1352 வரை சிறப்பாக விளங்குகிறது. காப்பு, பதிகம், உரைபெறு கட்டுரை தொடங்கி முறையாகப் பெருங்காப்பியம் இயற்றப்பெற்றுள்ளது.


   ஆன்ம நாயகராம் ஆண்டவரிடம் நாயகி கலைக்கோட்டார் திரு மடல் ஏறவும் துணிந்து பேசுகிறார். (பக்.1367 முதல் 1375 முடிய) மெய்ப்பொருள் மணிமாலையில் வரும் பிரார்த்தனை உலகோர் அனைவருக்கும் பொது.

    அறிந்தும் அறியாமாற் செய்பாவங் கள்தாம்
    சிறிதும் பெரிதும் பலவாம் - குறித்து
    வருந்தி மனம் கலங்கி வேண்டுகிறேன், தேவே!
    பெருந்தகையால் மன்னிப்பீர் இன்று. (பக்.1383)


   சிதம்பர மும்மணிக் கோவை குமர குருபர சுவாமிகள் அருளியது. அதைப் படிப்பது போன்ற உணர்வு இறைதிரு மும்மணிக் கோவை படிக்கும்போது எழுகிறது.


   மெய்க்கீர்த்தி கல்வெட்டுகளில் மன்னனின் புகழ் போற்றி எழுதப் படுவது. சோழர் காலத்து மெய்க்கீர்த்தி இலக்கியத்தரமும், வரலாற்றுக் குறிப்பும் நிறைந்திருக்கும்.

    ஸ்வஸ்திஸ்ரீ
    தென்னாடுடைய சிவபரம் பொருளே
    எந்நாட்டவர்க்கும் இறையெனும் அளுளே!

எனத் தொடங்கி 461 அடிகளில் தவமெய்க்கீர்த்தி பொலிவுடன் தரப் பெற்றுள்ளது.


   வஸந்தகாலத்தில் ஆண்டவரைப் போற்றி நல் வஸந்த மாலை பாடியிருத்திறார்.


   வருக்கக்கோவை - அ முதல் ஔ முடிய உயிர் எழுத்தாலும் க முதல் வௌ முடிய உயிர்மெய்யெழுத்தாலும் தொடங்கிப் பாடுகிற வகையில் பாடி, வருக்கமாலை 103 பாடல்களும் பாடித் தந்துள்ளார்.


   கலியை வென்ற ‘வாகைமாலை’ யும் யானையை வென்றவரைப் புகழும் வதோரண மஞ்சரியும் தந்துள்ளார்.

    உய்யப் பற்றுமின் மெய்வழி
    தெய்வ நற்பதி மெய்வழி
    வையம் உய்வழி மெய்வழி
    மெய்யர் சார்நெறி மெய்வழி


   திருவாயுறை வாழ்த்து, ஞான விளக்கு நிலை அற்புதம். வீர வெட்சிமாலை, வெற்றிக் கரந்தை மஞ்சரி இவை புறப்பொருள் போல மாலை சூடி வந்து, வருணம், புகை, கொலை, களவு, சினிமா, நாத்திகம், அகந்தை இவற்றையெல்லாம் வென்று, மெய்நெறி காட்டும் சிறப்பைப் பகர்வன. இதயம் நெகிழ்மாலையில் நெஞ்சுருகிப் போற்றி, ஜெய மங்களம் பாடி மாலையை நிறைவு செய்கிறார்.


   ஐயா! என் ஆசானே! அருட்பாமணியே! உம் பக்திக்கும், பாத்திறனுக்கும் நான் அடிமை! பிரம்மோதய சாலை ஆண்டவர்களின் முழுமையானஅருட் கடாட்சம் உம்மீது வழிந்து தமிழ் அருவியாகக் கொட்டியுள்ளது. இது நயாகரா நீர்வீழ்ச்சி. பார்த்து, பிரமித்து, மகிழ்ந்து, சிலிர்த்து பரவசத்தில் வாய்திறந்து நிற்கிறேன்! ஓம் ஆதியே துணை!


இங்ஙனம்,
சரசுவதி இராமநாதன்

மேற்கோள்கள்[தொகு]

 1. முனைவர். சரஸ்வதி இராமநாதன் எம்.ஏ,எம்.எட்.பி.எச்.டி. கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (சென்னை) மற்றும் ஔவைக்கோட்டம்(திருவையாறு) தலைவர். இவர் காவியக் கலைமாமணி, செந்தமிழ் திலகம், சொல்லின் செல்வி, கம்பராமாயண நவரசத் திலகம், ஏழிசை அரசி, ஏழிசை வள்ளி, முத்தமிழ் பேரரசி, இயல் இசை தமிழ் வாணி, உபன்யாசத் திலகம், திருப்புகழ் செம்மணி, இசை ஞான இலக்கியப் பேரொளி உள்ளிட்ட விருதுகள் பெற்றவர்