உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/014.திரு உலா

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.14. உலா

[தொகு]

இலக்கணம்:-

ஒப்புவமை கூறவியலா மாட்சிமையுடைய தலைவர் ஒருவர் தன் பரிவாரங்கள் புடைசூழ நகர்வலம் வருவதாகவும் அவர்தம் பேரழகால் காந்தம் இரும்பைக் கவர்தல் போலும் கவரப்படும் பருவப் பெண்டிர் மையல் மீதூரப் பெற்று காதல் நோயால் வருந்தும் நிலையை மொழிவதாக இப்பனுவல் அமையலாகிறது.

வீதிகள் தோறும் வெண்கொடி யோடு விதானங்கள் சோதிகள் விட்டுச் சுடர்மா மணிகள் ஒளிதோன்ற சாதிக ளாய பவளமு முத்துத் தாமங்கள் ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்

- தேவாரம்  4 -21.3

பேதை முதலா எழுவகை மகளிர்கண் டோங்கிய வகைநிலைக் குரியான் ஒருவனைக் காதல்செய் தலின்வரும் கலிவெண் பாட்டே

- பன்னிருபாட்டியல்  - 132

திறந்தெரிந்த பேதைமுத லெழுவர் செய்கை மறந்தயர வந்தான் மறுகென் -றறைந்தகலி வெண்பா உலாவாம்

- வெண்பாப் பாட்டியல்  - 49

பேதைமுத லேழ்பருவப் பெண்கண் மயக்கமுற வோதுமறு குற்றானொள் வேலோனென் - றேத மறக்கலி வெண்பாவின் மாட்ட லுலாவாம் புறந்தசாங் கந்தாங்கிப் போற்று.

- பிரபந்தத் திரட்டு  - 31

அழகிற் கணிசெயும் அற்புதப் பேரழகர் என்னை ஆண்டுகொண்ட குருபரர் பிரம்மோதய மெய்வழிசாலை ஆண்டவர்கள் திருவுலாப் போதருங்கால் நிகழ்வன புகலும் நீர்மையது இப்பனுவலென்க.

திருவுலா

காப்பு

ஆதி பிரம்மமிந்த அண்ட சராசரங்கள்
நீதி யொடுபடைத்து நின்றிலங்கி - மேதினியில்
அந்நாட்டு வித்தெடுக்க ஆர்ந்து உலாவருமெய்ப்
பொன்னரங்கர் பாதமலர் காப்பு

நூல்

கலி வெண்பா

சீர்மேவும் வானத் திருக்கயிலைப் பொற்சபையில்
பேரார் பரம்பொருள்பொன் னாரணையில் - சீரோங்க
வீற்றிருக்க விண்ணவர்கள் மெய்ப்பொருள்முன் தாம்வணங்கி
போற்றிப் பராவிப் புகழ்ந்தேத்தி - மாற்றறியாப்
பொன்னே! நவமணியே! போதலரும் கற்பகவான்
மன்னே! மறைப்பொருளே! வானரசே! - மன்னியசீர்
அன்னே! அனைத்துயிர்க்கும் அத்தா! அறவாழி!
முன்னை முதற்பொருளே! மாதவமே! - இன்னருளே!
குன்றா மணிவிளக்கே! கோதற்ற சீர்நிதியே!
மன்றுள் திருநடஞ்செய் வள்ளலே! - என்றும் (10)
மறையாத ஓர்கதிரே! மருவில்சீர் மாற்றுக்
குறையா அபரஞ்சித் தங்கம் - இறைவா!
காண்டீபர்க் கந்நாள் கதியருள்செய் கண்ணபிரான்!
வேண்டி மறைதொகுத்த வேதமுனி! - காண்டகுசீர்
விந்தைமிகு வேல்தாங்கி வெற்றிகைப் பெற்றவராய்
செந்தில் முனிபழனி ஆண்டவராய் - சிந்தைவளர்
ஏற்றமுயர் ஏதன்ஸ் கிரேக்கரிஷி! ஏதமின்றி
போற்றிடுமெய் மைத்ரேய புத்தர்பிரான்! - மாற்றுரையா
ஆதியார் சங்கரர்நல் அத்வைதர் நல்லறத்தார்
நீதியராம் ராமா னுஜப்பெரியார்! - வேதமுரை (20)
தானியேல்! எஸ்கிலாஸ்! என்னும் தவப்பெரியார்
வானவராம் யோசுவா! மற்றாங்கே - தானிகரில்
மாசில் இனங்காத்த மோசே! மலர்மேனி
ஏசுபிரான் என்னும் எழில்வேந்தர் - தேசுடனே
அண்ணல் முகம்மதராம் ஆர்நபியாம் அன்புருவர்
பண்ணவராம் கௌதுல்ஆ லம்எனவும் - வண்ணமிங்கண்
வந்துவந்து தோன்றி மனுக்குலத்தோர் உய்யவழி
தந்துஅருள் பாலித்துச் சீர்செய்தும் - இந்தவொரு
காலம் கடந்த கலிக்கடையில் ஏழ்பாவக்
கோலம் மிகுந்தழிவைக் கூர்க்கின்றார் - சீலம் (30)
நிறைந்தவொரு சந்ததியை நீணிலத்தில் ஆக்கிச்
சிறந்துலகம் வாழும் திறத்தை - அறந்தழுவிச்
செய்யவந்த தீர்க்க தரிசியர்க்கும் முத்தருக்கும்
வெய்யகொடும் துன்பமிழை வஞ்சகர்கள் - வையகத்தில்
இன்னல் புரிந்துளர்காண் யாம்செய்வ தோர்கில்லோம்
பொன்னாடர் தாங்களே போதருவீர் - மன்ஆதி
தென்னாடு டைசிவனார் செந்தமிழ்ச்சீர் வாழ்பதியில்
அன்னா டகம்துலங்க வந்துதிப்பீர் - சின்னாளும்
தாமதித்த லின்றித் தயவருள்வீர் என்றிறைஞ்ச
மாமதித்தாய் சிந்தை மிகக்கனிந்து - ஆமனுவே (40)
தாயுமிலி தந்தையிலி தான்தனிய ராய்விளங்கு
ஆய்மதியின் சிந்தையொளிர் ஆண்டவர்கள் - தாயொருவர்
சீரார் கருக்குகையுட் சேர்ந்து அவதரித்துப்
பாரோர்க்கு மெய்ம்மைப் பரிசளிக்க - ஆரெழில்சேர்
தீர்க்க தரிசியரும் செம்மல்களும் வானவரும்
ஆர்க்கும் தரிசனத்தை ஆங்கறிந்து - தீர்க்கத்
தெளிவாய் உரைத்தசீர் செல்வச்சொல் வாக்கு
ஒளிவாய் நிறைவேற வேண்டி - களிதேங்க
வாடா நெறிமுழங்கும் வானவரே வையகத்தில்
தேடற் கரியதொரு தேட்டுடையீர் - பாடுமிகும் (50)
மெய்யாம் வழிதன்னை மேதினியில் உண்டாக்கச்
செய்யும் திறம்பெரிது அக்காலம் - வையகத்தில்
“என்மக்க ளாய்நீவிர் எல்லாம் திகழ்வதற்குப்
பொன்மக்க ளாயினிது போய்ப்பிறப்பீர் - நன்மக்காள்”
என்றெங்கள் சாமி எடுத்துரைக்க தேவரெல்லாம்
நன்றுநன்றென் றார்ப்பரித்து நானிலத்திற்(கு) - அன்றே
புறப்பட்டார் அந்தப் பிரம்மம்முன் செல்லத்
திறப்பட்டார் ஓர்நொடிக்கோர் அண்டம் - அறம்வாழ
இப்புவியில் தெய்வீகம் என்றும் விளங்கினிற்கும்
செப்பரிய பாரதத்தில் சீர்மிகுந்து - ஒப்பரிய (60)
இன்பத் தமிழ்வாழும் ஏரகத்தில் ஏதமிலா
அன்பர் அறம்வளர்க்கும் மார்க்கநகர் - தென்புமிகச்
செய்யும் தொழிலில் சிறந்தோங்கும் வேளாண்மை
உய்யும் தொழிலாய் அதுபுரியும் - துய்யமனச்
சீரார் ஜமாலென்னும் செல்வர் திருமனையாள்
பேரார் பெரியதாய் பொன்வயிற்றில் - பாரோங்க
எல்லா முனிவர்களும் ஏரார்ந்த தேவர்களும்
பல்லோரும் வேண்டிப் பணிந்தபடி - வல்லாளர்
ஆதி இறைசூல் பரிசுத்த ஆவியது
நீதி நிறைந்து நிறைந்திருக்க - வேதமணிச் (70)
சூலாகத் தங்கிச் செழித்தே வளர்ந்தினிது
மேலோர் வணங்க அவதரித்து - சீலமெல்லாம்
ஓருருவாய் இந்த உலகிடையே நின்றோங்கி
சீருருவாய்க் காரண வல்லரசாம் - பேருருவாய்த்
தத்தித் தவழ்ந்து தளர்நடைசெய் தின்பத்தை
வித்தி விளைத்து வளர்ந்தோங்கி - முத்தி
தருநெறியைத் தாம்வேண்டித் தம்மைத்தாம் தேடி
திருநெறிசார் தேட்டம் செறிந்து - வருங்காலம்
கற்கத் தகுந்தவற்றைக் கற்று அறநெறியில்
நிற்கும் நிலைவிழைந்து நின்றோங்கிப் - பற்குணர்தாம் (80)

அகிலவலத் திருவுலா

பண்டு பழுத்தமறைப் பெட்டகத்தைப் பேரர்க்குக்
கொண்டுவந்து தாம்வழங்கும் கோதறுசீர்த் - தொண்டுபழம்
பாட்டையர் பண்பையர் பேர்சீர்த் தனிகைமணித்
தேட்டையர் இன்பத் திருவான - நாட்டையர்
திங்களூர் தன்னில் திருவோங்கிப் பொங்கிடும்சீர்த்
திங்கள் வதனரைத்தாம் சந்தித்து - எங்கள்
உயிர்க்கின்பம் நல்கும் உயிர்ப்பயிர்செய் வேளாண்
அயர்வலுப்பு எண்ணா அரசு - துயர்தவிர்க்கும்
வானார் பெருங்கொடைஞர் மாண்பார் தவவேந்தர்
தேனார் அருள்பொழியும் சீராளர் - கோன்ஆர் (90)
வான்தனிகை வள்ளல் வழங்குகொடை மாநிதியைத்
தான்கனிந்தேற் றெங்கள் தனித்தங்கம் - கோன்திலகம்
எண்ணம் குருமணிக்கே ஈடளித்துக் கண்ணிமைபோல்
திண்ணம் சிறக்கத் திருவோங்க - பண்ணகரும்
செல்வம், சிறுகபடம் தானறியாச் சீர்மனையாள்
செல்வக் கனிமதலை சுற்றத்தார் - பல்விதமாய்ப்
பண்பாய்ப் பழகும் துணைநட்பெ லாம்துறந்து
விண்பாய் விழுமியநல் வேட்கையால் - திண்ணமாய்
தங்கள் குருகொண்டல் தம்மைப் பிரியாது
எங்கும்என் றும்தொடரும் ஏர்முடிபாய் - பொங்கிவளர் (100)

அணிகள் பூணுதல்

எண்ணத்தில் வைராக்யம் தன்னை எடுத்தணிந்தார்
வண்ணமிகு தாதை வழிச்செலுங்கால் - அண்ணலரும்
வில்லளவு தூரம் இடைவிட் டிடப்பாகம்
செல்லுமொரு மென்னடையைத் தாள்புணைந்து - சொல்லழகர்
தன்வதனம் மேனி திருக்குறிப்பை நுண்ணோக்கி
முன்னறிதல் நோக்கில் மிகவணிந்தார் - பொன்பூத்(த)
இமையவர் பொன்மேனி இமைத்தால் மறையுமென்று
இமையாத நாட்டத்தை ஏற்றார் - நமையாளத்
தன்மேனித் தன்சுகத்தைத் தானுதறித் தம்கரத்தில்
பொன்மேனி பேணும் பணிபுணைந்து - இன்செவியில்
ஆசான் அருளும் மறைமொழிகள் மாந்துவதே (110)
தேசான செல்வமெனத் தேர்ந்தணிந்து - மாசறியாத்
தங்கம் குருபரர்தாம் கேட்கில் தகுமானம்
அங்கே பணிவின்சொல் வாய்பூண்டு - அங்கன்று
பாராளு மன்னவர்கள் பண்பாய் உலாவருவர்
காராரு மேனியுடை ஆனையின்மேல் - நேரேறும்
எங்கள் குருசாமி ஏறிவந்த நல்லானை
தங்கள் குருவாணை தானறிமின் - செங்கமலப்
பூவிதழ்போல் செந்நாகற் பூரத்தின் வாடைகமழ்
தேவர் திருவாணைச் சீரகத்தார் தேவானை
அன்று உலாத்துவக்கம் ஆங்குசென்றார் வான்தனிகைக் (120)
குன்று திருக்குமரர் கோமகனார் - என்றும்
இறவாப் பெருவரத்தை எங்களுக்காய்த் தேடும்
உறவாளர் ஓங்குயர்வான் மெய்ம்மைத் - திறனாளர்
உடன் உலாச் சென்றோர்
தாதை தனிகையரும் தன்னேரி லாசுதனார்
பூதலத்தின் மீதுஉலாப் போதருநாள் - பூதேவி
வானகத்து நாயகனார் மண்ணகமாம் தன்மிசையே
தானெழிலாய்ப் பொற்பாதம் தான்பதியக் - கோனுலவப்
கண்டு உவந்தோர்
பூரித்தாள் நாயகியாள் பூத்தாள் தருக்கினத்தால்
மாரி பொழிந்தாளவ் வான்மங்கை - வாரியெனும்
ஆடை அலைமுழங்கி ஆர்ப்பரித்தாள் புள்ளினங்கள் (130)
கூடிக் குரலெடுத்துக் கூவினகாண் - நாடிமிக
ஊர்வனங்க ளெல்லாம் உவந்து மகிழ்ந்திருப்பப்
பேர்வனத்துள் காலிகளும் பொங்கிமகிழ் - நீர்வாழும்
அவ்வுயிர்கள் எல்லாம் அகமகிழும் - வன்மறலித்
தெவ்வொழிந்த தென்றமரர் தாம்களிக்கும் - எவ்வுலகும்
என்றும்கா ணாக்காட்சி இவ்வுலகில் இந்நாளில்
குன்றுடையார் கோதறவே காட்டும்நாள் - நன்றுவர
இன்று உலாத்துவக்கம் இன்ப விழாத்துவக்கம்
என்றுவக்கும் தீர்க்க தரிசியர்கள் - பொன்றா
வரம்பெறவே வையகத்து வந்திருக்கும் வானோர் (140)
பரன்வருகை தன்னை எதிர்பார்த்து - அரனார்
தரிசனத்திற் கேங்கித் தவித்திருக்கும் வேதம்
கரிசனமாய்த் தாம்விளங்கக் காத்து - உரியதிரு
நாள்வந்து நற்றுளபத் தோள்தந்து வன்கலிமாய்
வாள்வந்து தாள்தந்து வாழ்த்து துங்காண் - ஆள்கைக்கு
சாமி புறப்பட்டார் தாதை திறப்பட்டார்
பூமிக் கறவாழி போதந்தார் - தாமிருவர்
கல்மலிந்த வன்குறிஞ்சி காடகமா முல்லைனிலம்
நெல்மலிந்த நன்மருதம் நெய்தலொடு - வல்லதொரு
பாலை நிலம்மற்றும் பாங்காகப் பூத்தொளிரும் (150)
சோலை வனமூர்கள் நாடுநகர் - மேலை
வெளிமருந்து கொண்டுவந்து வேதரருட் ஜோதி
ஒளிமருந்து ஊட்டும் ஒரேதாய் - தெளிவோங்க
கண்டுவந்தோர் காடவரும் வேடுவரும் தேன்மலசர்
அண்டிவந்து அன்பாய் உபசரிப்பார் - பண்டினிது
ஆநிரைகள் மேய்க்கும் ஆரிடையர் தோதுவர்கள்
கோன்குலத்தோர் தம்குடியில் கூட்டிவைக்கும் - மானிலத்தோர்க்(கு)|r}}
உண்பா னளிக்கும் உழவர் பெருமக்கள்
பண்பார் நெசவாளர் பாங்குடையோர் - நண்போங்கப்
பல்தொழிலும் செய்யும் பரிசனங்கள் பல்லோரும் (160)
தொல்புகழார் தேவர்களைத் தோத்தரிக்கும் - நல்நெய்தல்
செம்படவர் சீர்வலைஞர் சந்தித்தார் வந்தித்தார்
தம்பெருமா னோடெங்கள் தம்பிரான் - உம்பர் தொழ
தன்படைப்பைத் தான்காணச் சர்வேசர் தானிரங்கி
மன்பதைக்குள் வந்த வசந்தமிது - அன்புமிக்குப்
பல்லுயிரும் தம்மைப் படைத்தவரைப் பார்த்துவந்து
நல்லுயிர்ப்புக் கொண்டு நனிகளித்துத் - தொல்புவியில்
வாடை பனிமழையை வன்காற்று வெம்மைமிகு
கோடை வெயிலெதுவும் எண்ணாது - ஆடையது
ஆசான் கிருபையொன்றே என்றெம்மை ஆளரசர் (170)
தேசோங்கச் சிந்தையுடல் தாம்பூண்டு - நேசருடன்
உண்ணும் உணவும் உறங்கும் இடம்நிலையின்(று)
எண்ணம் பரபோகத் தேறிநின்று - பண்ணகர்தம்
கட்டளையின் வண்ணம் கனிந்தாடு மேய்ப்பரென
மட்டில் திருப்பணியொன் றேற்றார்கள் - அட்டியின்றி
ஒங்கு திருப்பரங்குன் றாங்கோர் எழில்குகையில்
பாங்காய்த் தவம்புரிந்து சன்னதங்கள் - வாங்கியபின்
ஞானச்செங் கோலாட்சி நன்றேற்க வேண்டுமென
வானத்தார் பாட்டையர் மாண்புரையால் - மோனத்தார்
மாற்றறியாப் பொன்னை வளங்குறையா வானிதியை (180)
ஏற்று இனிதாண்ட ஏந்தல்தனை - வேற்று
இணையுரைக்க ஏலா இறைகுருவை இன்பத்
துணையாம்பே ரின்பத்தின் தோன்றல் - குணாநிதியர்
வான்தனிகை வள்ளல் தமைப்பிரிந்து தீவிழுந்து
தான்துடிக்கும் மென்புழுப்போல் துன்புற்று - கோன்சொல்
மறுத்துரைக்க ஏலா மனங்கசிந்து துன்பம்
பொறுத்திடவும் மாட்டாது பொங்கி - அறத்தரசு
என்றும் தனித்தலைவர் இன்றும் தனித்தனர்காண்
மன்றுள் நடம்புரியும் மாதேவர் - சென்று
துறவியரென் றேய்க்கும் துட்டர்க்கு மெய்யாம் (190)
அறமுரைக்க அன்னோர் கொடிய - திறமறிந்து
இல்லறத்தின் நல்லறத்தார்க் கீந்துய்விப் போமென்று
சொல்லறத்தின் தேவேசர் சிந்தித்து - பல்லூருள்
கோவில் குளக்கரைகள் கூடிமக்கள் தாமிருக்கும்
சாவடிமுச் சந்திகளில் சர்வேசர் - ஓவாது
வானகத்துச் செல்வத்தை வாரி வழங்கிடவும்
ஆனகத்தார் சிற்சிலர்மெய் அன்புகொள - தேனகத்தார்
தெய்வ சபைபெருகத் தீங்கினர்கள் வெந்தருக
மெய்யின் அரசாட்சி மேலோங்க - ஐயர்தமை
நம்பினர்க்கு நாயகமாய் நாடிவந்தோர் தாயகமாய் (200)
வம்பர்க்கு வாளாக வான்புகழ - உம்பர்தொழ
பேராரும் வான்ராஜ கெம்பீர நந்நகரில்
சீரார் திருப்புத்தூர் தன்னிலுமெம் - ஆரூரர்
பொன்னார் திருவடிகள் மண்தோயத் தானுலவி
நன்மாணாக் கர்பலர்க்கு நல்லருள்செய்(து) - அன்போங்கும்
உம்முசல் மாவென்னும் உத்தமியார் ஈன்றெடுத்த
அம்மை பனிமதித்தாய் ஆர்மணங்கொண்(டு) - எம்பெருமான்
மக்காப் பெரும்பதிக்கும் மதினாத் திருப்பதிக்கும்
தக்கபெரும் யாத்திரையும் தாம்புரிந்து - சொக்கேசர்
நைமிசா ரண்யமெனும் நல்வனத்தில் நற்றவத்தைச் (210)
செய்மினெனத் தாதையுரைச் சீர்நிறைவித் - தெம்மிறைவர்
சீடர் குழாம்பெருகச் சிற்சபையி லாடரசு
நாடியொரு பொற்கோவில் நன்கியற்றிப் - பாடுமிகப்
பட்டார், படுகளத்தின் போராயு தக்கிடங்காய்ப்
பட்டாளத் தான்விழைந்தான் பொன்னரங்கைப் - பட்டாங்கம்
தன்கரத்தி லேந்தும் தவவேந்தர் தாம்துறந்து
இன்புதுகை நாடகத்தி லோர்வனத்தில் - முன்னோராம்
தீர்க்கத் தரிசியர்கள் சொல்நிறைவே றும்படிக்கு
ஆர்க்கும்பே ராலயமும் ஆங்கியற்றிக் - கார்க்கும்தீக்
பிச்சை யாண்டவர் திருக்கோலத் திருவுலா
கைக்கொண்ட சாமி களிகொண் டெமையாண்டு (220)
மெய்விண்டு மேலாம் தவம்புரிய - மெய்கொண்ட
மேன்மக்கள் முன்னாளில் மிக்கிழைத்த வெம்பாவம்
தாமொக்கத் தீர்க்கும் தயைகொண்டு - சேமத்தை
நல்கவென நாயகரும் நற்கருணை மேலோங்க
பல்கிவளர் பொன்னரங்கப் பேர்சபையில் - ஒல்காப்
புகழ்மெய்யர் பற்றாளர் பண்பனந்தர் வாழ்ந்து
திகழ்சாலைச் சீர்விடுதி தோறும் - தகையோங்கு
பிச்சையாண் டாரெனவே போதரவும் இச்சைகொண்டார்
இச்சையெதும் இல்லாத எங்கள்துரை - அச்சமெமன்
இன்னல் தவிர்த்தருளும் ஏந்தல் அருளாழி (230)
பொன்னரங்கர் மெய்யாம் பொருள்வேந்தர் - தென்னன்
பெருந்துறையார் இன்பம் தருந்துறையார் எம்முன்
இருந்துறைவார் சாவா மருந்தை - விருந்தெனவே
அள்ளி வழங்கும் அருங்கொடையார் வானகத்தின்
வள்ளலெனும் சாலை வளநாடர் - உள்ளம்
குடிகொண்ட கோமகனார் கஞ்சமலர் மென்மை
அடிகொண்டா டிச்சிரமேற் பாகை - முடிகொண்டு
சூடிச் சுடர்கொடுத்து சூழ்வினையெ லாம்தவிர்த்து
தேடரிய செல்வத்தைத் தந்தருள - நாடி
உலாவருவதற் கெம்மான் உவந்தார்காண் சர்வ (240)
கலாநிதியெம் கற்பகர்பே ரின்பம் - குலாவரசர்
சீராரும் தெய்வமணிச் செண்பகப்பூ வாசமொளிர்
பேராரும் பொன்மேனி பூதலத்தில் - நீராட
அணிகலன் பூணுதல்
வேண்டுவதின் றென்றாலும் மென்மலர்பொற் றாள்சிரத்தே
பூண்டுமகிழ் பொன்னனந்தர் பேரின்பம் - நீண்டுவளர்ந்(து)
ஐயர் திருவடியை அன்புக்கண் ணீர்சொரிந்து
மெய்யாய்க் கழுவி மனங்கனிந்து - துய்யமலர்ப்
பன்னீரில் மூழ்குவித்துப் பட்டா லடிதுடைத்து
தன்னேரி லாத்தலைவர் தாள்வணங்கிப் பொன்வேய்ந்த
சந்தன மென்குறடு தன்னை அணிவித்து (250)
விந்தையொளிர் பொற்காப்பு மென்றாளில் - சிந்தைகவர்
பொற்சதங்கை பொன்னரைஞாண் பூட்டியங்கு பொற்சரிகை
நற்பஞ்ச கச்சம்பீ தாம்பரமும் - தற்பரர்க்கு
பொன்னாலே முப்புரினூல் போற்றவிய லாஅழகு
மின்னுகின்ற கட்டாணி முத்தாரம் - மன்னும்
நவரத்ன மாலையதும் நன்குதிரு மார்பில்
சிவனார் அணிந்துஎழில் தேங்க - தவநாதர்
மென்மிடற்றில் பொற்காரை மிக்கெழிலார் தாவடங்கள்
பொன்னரங்கர் சன்னதமார் பொற்கரத்தில் - அந்நாடர்
ஒன்பான் மணியிழைத்த ஒப்பில் கடகங்கள் (260)
அன்பால் அனந்தர்கண் டார்ப்பரிக்க - இன்பாலே
பத்துத் திருவிரலில் பவழமணி மோதிரங்கள்
சித்தர் தலைவரங்கு சீர்புனைந்து - மெத்தவுமே
பொன்மகுடம் பூண்டு பொலியும் திருமுகத்தில்
மின்னொளிரும் வான்கருணை மிக்கிலங்கிப் - பொன்கரத்தில்
முக்கூர் திருவாளை மிக்கெடுத்துச் சொக்கிடவே
தக்கார் அறுநான்கு மூப்பரொடு - ஒக்கல்
சபைக்கரசர் தம்கரத்தை தாழ்த்திமலர் தூவி
“அவைக்கெழுக கோமானே” என்றே - ப(வ்)வியமாக
வேண்டி வணங்கி விழைந்துதொழ என்சாமி (270)
ஈண்டு இளநகையர் இன்முகத்தோ டாண்டெழிலார்
வெண்கவரி வீசிடவும் வெண்கொற்ற நற்குடைக்கீழ்
பண்ணழகர் பொன்மணலில் தாள்பதித்து - விண்ணரசு
வெள்ளானை யேறிப்பின் விண்பவனி போதருவார்
கள்ளானை கண்டற்றே தான்கருக - வள்ளண்மை
பொங்க எழுந்தருளும் பொற்றேரின் மீமிசையே
எங்கள் குலம்விளங்கும் ஏந்தல்காண் - அங்கினிதே
எக்காளம் ஊத எழில்துந்து பிமுழங்க
முக்கோடி தேவர்களும் வாழ்த்திசைக்க - மிக்கு
உடன் சென்றோர்
உடன்வந் தறுபத்து ஒன்பான் அரசர் (280)
திடன்கொண் டவர்சீர்மை செப்பும் - படிமிசையே

கவுண்டர்

எல்லாத் தொழில்களிலும் ஏற்றமிகு வேளாண்மை
வல்ல பணிபுரிந்து மன்பதையோர் - எல்லார்க்கும்
உண்டி கொடுக்கும் உயர்குடியாய் ஆனவர்கள்
கண்டு அருளுண் கவுண்டர்களாம் - அண்டர்கோன்
வேளாளர், நாட்டு வேளாளர்
வேள்தனக்கு ஆளர்காண் வேளாளர் நாட்டு
வேளாளர் என்று விளம்புவார் - தாளாளர்
கார்காத்த வேளாளர்
பார்பூத்து வானம் பொழியப் பயிர்காத்தார்
கார்காத்த வேளாளர் காண்மின்கள் - சீர்காத்து
ஒன்பது கோள்களமல் ஓர்திருக்க ரத்தடக்கி (290)
அன்பருக்குள் தாமடங்கும் அத்தனருள் - தென்புபெற்று
கைக்கோளர், முதலியார்
கைக்கோளர் என்ற குருநாமம் கொண்டிலங்கும்
மெய்க்கோள் முதல்வர் முதலியார் - கைக்கோல்கொண்(டு)
ஆடைகள் நெய்வித்து அம்புவிமா னம்காக்கும்
ஈடற்ற ஏர்தொழில்செய் தின்புறுவோர் - நீடுலகில்
செட்டியார், வாணிபர்
நன்மைதீ மைக்கணக்கை நன்கறிந்து செட்டாகப்
புன்மையின்றிப் பாதமலர் போற்றிசெய்து - மென்மைமிகும்
செட்டியார் என்னும் திருவாளர் வான்வரவைக்
கெட்டியாய்க் கைப்பிடிக்கும் கோகுலத்தோர் - மட்டில்லா
வையப் பொருள்கள் வகையாய்ப் பரிமாற்றம் (300)
செய்யும் திறம்விளங்கு தேட்டாளர் - ஐயமின்றி

ஐயர்

எம்பெருமான் சீர்மை இனிதுரைக்கும் மாமறைகள்
தம்பெருமை தானறிந்து ஓதியுணர்ந்(து) - அம்புவியில்
ஓதுவிக்கும் உத்தமர்கள் அந்தணலின் அந்தணர்கள்
தீதறுமென் ஐயர்வழி ஐயர்புவி - மீதினிதே

ஐயங்கார்

எம்மையர் தாள்காத்து இன்பமறை தாமோதும்
செம்மைமிகு ஐயங்கார் சீர்குலத்தோர் - மும்மையொளிர்

வன்னியர்

வன்னியெனும் அக்கினியில் வந்துதித்த வான்மரபோர்
வன்னியரென் றோதும் மனுக்குலத்தோர் - அந்நிலத்தே

படையாட்சி, கண்டர்

அண்ணல் திருப்படையின் ஆட்சிதனைக் கண்டவர்கள் (310)
வண்ணப் படையாட்சி கண்டர்களாம் - எண்ணம்சீர்

கண்டியர்

கொண்டு குருதயவைக் கண்டு இயல்தெரிந்தோர்
கண்டியரென் றாங்கோர் குலமுண்டு - எண்டிசையும்

பரையர் புராதனர்

கண்டறியா அன்னை பராபரையின் நல்வழியார்
பண்டைப் பரையர், புராதனர் - தொண்டு
இசையின்பம் தன்னில் இனிதே நிலைத்து
வசையின்றி வாழும் மரபோர் - திசையில்லா

அம்பலகாரர்

அம்பலத்தில் ஆடரசர்க் காட்பட்ட ஆன்றோரே
அம்பலகாரர் என்னும் அன்புடையோர் - தெம்புடனே

தேவர்

தெய்வத் திருமரபில் தேர்ந்து நிலைத்தவர்கள் (320)
உய்வைப் பெருந்தேவ ராயுவந்தோர் - மெய்வைத்த

தேவாங்கர்

தேவரின் அங்கமெனத் தேர்ந்த மரபினரே
தேவாங்கர் என்னும்மெய்ச் சீர்குலத்தோர் - ஓயாது

தேசிகர்

தேசிகர் ஆடும் திருநடனம் கண்டோர்கள்
தேசிகர் என்னும் திருக்குலத்தார் - மாசறியா

தம்பிரான்

எம்பிரான் தன்னை இனிதா யுரிமை கொண்டோர்
தம்பிரான் என்னும் தகையோர்கள் - எம்பெருமான்

நம்பியார்

தம்பதத்தை நம்பித் தரித்திருந்த தக்கோர்கள்
நம்பியார் ஆனார்கள் நானிலத்தே - உம்பர்பதம்

நம்பூதரி

தம்பூ தனில்பதித்த சீராள வம்சமது (330)
நம்பூதரி யென்றே நாட்டிடுவார் - அன்பாக

நாயகர்

நாயகரின் நற்றாள் நனிகண்ட நற்குலத்தோர்
நாயகரென் றன்றே நவின்றார்கள் - தாயகர்தம்

நாயக்கர்

செந்நாத் திருமொழியின் சீர்பெருமை தாமுணர்ந்தோர்
பொன்னார்நா யக்கரெனும் பெற்றியர்காண் - அன்னோரே

நாயுடு

நாயுடுவென் றேனாமம் நன்றடைந்தோர் நன்நாட்டின்
ஆய பெருமை அறிந்தடைந்தோர் - தேயமிதில்

நாடர், நாட்டார்

நாடரெனும் தாயகமாம் நாட்டாரென்னும் பெயரை
ஆடரங்கர் சன்னிதியில் அன்றுபெற்றார் - நாடும்

நயினார்

அருள்நயன நன்நோக்கிற் கானோர் நயினார் (340)
பொருள்மெய்ப் பொதிந்ததொரு பேழை - கருவூலம்

பண்டாரம்

பண்டார மென்றவர்க்குப் பாங்கார் திருநாமம்
அண்டர்கோன் தம்மை அகத்துடையார் - கண்டார்

அகமுடையர், உடையர்

அகமுடையார் என்றும் உடையார்க ளென்றும்
சுகமுடையார் சீர்மெய்க் குலத்தோர் - தகைபெருஞ்சீர்

கருணீகர், கோனார்

வான்கருணை பெற்றோர் கருணீகர் மாண்புடைய
கோன்தயுவுக் காளானோர் கோனார்காண் - தான்மறைந்து

கோமுட்டி

கோவின் திருவருளைக் கோதறவே பெற்றுய்யத்
தாவி முயல்வோரே கோமுட்டி - சேவைபுரிந்(து)

சேர்வை

ஆர்வசித்த மோடிறைவர் அம்பொன்தா ளிற்சிந்தை (350)
சேர்வித்தோர் சேர்வையெனச் செப்பலுற்றார் - சீர்மிகுந்த

சாகார், சாணார்

ஏகாப் பெருநிலையில் எம்பெருமான் ஏற்றிவைக்கச்
சாகா திருந்தோரே சாகாராம் - போகாப்
புனல்கண்டு வேகாத காலதுவும் கண்டு
தனையறிந்து தெய்வத் தயவார் - இனமொன்றி

சாஸ்திரி, குரவர்

சாவின் திறமறிந்தோர் சாஸ்திரியாம் சற்குருவாம்
கோவின் குணம்கற்றோ ரேகுரவர் - ஜீவனெனும்

ஆச்சாரி, பூசாரி

ஆவின் நெறிச்செல்வோர் ஆச்சாரி ஆருயிர்வாழ்
பூவின் வழிசார்ந்தோர் பூசாரி - தேவேசர்

மந்திரி, முத்திரியர்

மன்னும் திறம்மூல மந்திரத்தின் வான்பொருளும் (360)
தன்னுள் அறவாழி தான்காட்ட - இன்னருளை
மாந்தியோர் மந்திரியாம் வானாட்டின் முத்திறமார்
காந்தியைக் கண்டோர்கள் முத்திரியர் - சாந்தியெனும்
மேனன், மேத்தா (மேல்நன், மேல்தாவுநர்)
மேனிலைக்கு மெய்த்தெய்வம் மேலேற்ற வாய்த்தோர்கள்
மேனன்மேத் தாவென்ற மாண்புற்றார் - வானார்

மறைக்காயர் (மறைக்கு ஆயர்)

மறைதெளிந்த சான்றோர் மறைக்காயர் மற்று
இறைதயவால் மோனத் திருக்கும் - துறையறிந்து

யாதவர், ஆறுசுத்தியார்

ஏறுவோர் யாதவராம் இருமூ புரிவலத்தோர்
ஆறுசுத்தி யாரென்ற அன்பர்களாம் - கூறறிய

புலவர்

தெய்வத் திருப்புகழைத் தோத்தரிக்கும் சீராளர் (370)
தெய்வப் புலவர் எனுமரபோர் - ஐயர்திரு

பிள்ளை

அன்பில் மிகநனைந்து ஆதரிக்கப் பெற்றோர்கள்
தென்பாரும் பிள்ளையெனும் சீர்பெற்றார் - அன்னாட்டில்

போயர், ஒட்டர்

போய்நிலைத்து ஒட்டியவர் போயரென்பார் ஒட்டரென்பார்
தாயகத்தில் தான்சீர் மறுபிறப்பு - வாய்ப்பால்
இரெட்டியார், இராவுற்றார் (இராவுத்தர்)
இரெட்டியார் என்றும்பேர் எட்டாநாள் ராவோர்
இராவுற்றார் ஈடில் பதத்தைப் - பராவுவோர்

செம்படவர்

செம்மைபட வாழ்வின் சீரறிந்த சான்றாளர்
செம்படவர் திங்களணி கங்கையர்தம் - செங்கரத்தில்

தீயர், ஏகாலி

ஏற்றும்தீ கண்டுவந்தோர் தீயரென்பார் எங்களுயிர் (380)
தாந்தழுவும் தாள்பெற்றார் ஏகாலி - மாந்தரெனத்
தாம்பிறந்து தன்னையறிந் தேதலைவர் தன்னையறிந்
தோம்பியவர் பங்கானார் உத்தமரின் - மேம்பாட்டை

பண்டிதர்

பண்டு இதமாய்மெய் பார்த்தறிந்தோர் பாருலகில்
பண்டிதரென் றக்கால் பெயருற்றார் - விண்டுதிரு

நாவிதர்

நாவால் அருட்சுவையை நன்கறிந்த நானிலத்தோர்
நாவிதரென் றன்றே நவிலலுற்றார் - ஜீவ

மருத்துவர்

மருத்துவமும் தேக மருத்துவமும் கண்டோர்
மருத்துவரென் றேவழங்கப் பெற்றார் - திருத்தகுமெய்

ராஜர்

ராஜநிலை கண்டோர் ராஜரெனும் நாமமுற்றார் (390)
தேஜஸ் சிறந்து திகழ்ந்தார்கள் - பூஜையெனும்

சங்கமர்

ஓயா வணக்கத்தில் ஒன்றிநின்று சங்கமித்தோர்
மாயாத சங்கமராய் வாழ்ந்தார்கள் - நேயமிக

பண்ணாடியர், வேளார்

தெய்வப்பண் ணாடிச் சிறந்தோர்ப்பண் ணாடியராம்
உய்வித்து வேள்ஆர்ந்தோர் வேளார்காண் - ஐயமின்றி

சக்கிலி நாயக்கர்

ஆசான் அருளருந்தும் அன்பர் அருந்ததியர்
நேசமிகு சக்கிலிநா யக்கரென்பர் - வாசமிகு

கிராமணியர்

மெய்யிற் கிரமமொடு மேன்மை அணிந்தவர்கள்
தெய்வக் கிராமணியார் சீராரும் - தெய்வச்சூல்

சௌராஷ்டிரர்

சௌவும் கிழியும் தவராஷ்ட்ர தேசத்தார் (400)
சௌராஷ்டிரர் என்றே தகையுற்றார் - ஓங்கும்

சாயபூ

ஐவண்ண நாதர்தம் ஆரழகில் ஆர்ந்தோரே
மெய்வண்ணர் சாயபூ என்றார்கள் - வையகத்தே

லாலா

மெல்லிசையால் மெய்த்தெய்வம் மிக்கேற்றும் மாண்புடையோர்
நல்லாலா நற்குலத்தோர் நற்றேவர் - அல்லல்

அயிரப்பிரியர்

துயரறமெய் யின்பத்தைத் துய்க்கும் அறவாளர்
அயிரப்பிரிய ரெனும் ஆன்றோர் - செயிர்தீர்
எல்லாக் குலமும் இறையருளால் தோன்றியவே
எல்லாரும் ஓர்நிறையே என்றினிதே - வல்லாளர்
சாலை வளநாடர் சாதித்துத் தாரணியில் (410)
கோல மெடுத்தறவோர் கூட்டிவைத்த - சீலமிகு
நற்சமய மெல்லாமோர் நல்வழியாம் மெய்வழியே
வெற்பு எமபடரின் மீட்பதுவே - பொற்பாரும்
சத்திய நன்னடையே சர்வ மதங்களிலும்
வித்தி விளைவித்த மெய்ப்பயிரே - எத்தாலும்
துக்கம் நிவர்த்தி சுகத்தின் பிராப்தியென்ப(து)
எக்காலும் எல்லோரும் ஏற்பதுவே - முக்காலும்
ஆருயிர்கள் எல்லாம் அவாவுறும்பே ரின்பத்தில்
சீருயிர்க்கு உற்றதுணை தெய்வமே - பாருலகில்
தன்னை யறிந்து தலைவனைத் தானறிதல் (420)
எந்நிலத்தும் எல்லார்க்கும் ஓர்படித்தே - இந்நாளில்
நன்மார்க்கம் ஒன்றை நனிகொணர்ந்து நானிலத்தே
என்மார்க்கம் சன்மார்க்கம் என்றருளார் - சொன்மார்க்கம்
தந்து மறைமுடிச்சைத் தானவிழ்த்து மெய்கண்ட
பந்துக்க ளாக்கிப் பரிசளித்து - விந்தைமிகும்
ஆண்டவர்கள் சந்ததியாய் ஆக்குவித்து மாரணத்தை
தாண்டுகின்ற சற்சனராய் சாகாராய் - ஈண்டினிது
செய்வித்து எல்லார்க்கும் சீருடையைத் தானருளி
உய்வித் தொருமெய்ப்பா டோங்குவித்து - மெய்வித்து
ஆக்கிசிவ காமியென அன்பேறும் தன்குடியாய் (430)
ஊக்கி வளர்த்து அருள்பொங்கும் - நோக்கினால்
மறலிகை தீண்டாத வாழ்வினுக்கே வந்து
அறவாழி அந்தணரெம் ஆண்டார் - திறமாரும்
பொற்பாதம் போற்றிஎம் பொய்யருகி மெய்வாழ
நற்போதம் நல்கியருள் நாயகர்தம் - பொற்பார்
திருமுகத்தைக் கண்டு தெரிசித்த கண்மற்(று)
ஒருமுகத்தைக் காணுமோ ஐயர் - திருவாக்கை
கேட்டுய்ந்த நற்செவிகள் கேளாப் பிறர்சொற்கள்
தேட்டிற் சிறந்த திரவியமே - மீட்பருள்மெய்
வேதாந்தம் மான்மியத்தை மிக்கிசைத்த நல்வாய்மற் (440)
றோதிடுமோ மற்றொருநூ ல்உற்றுணர்ந்து - சேதமிலா
வாழ்வருளும் தெய்வம் மலர்ப்பாதம் - போற்றியகை
தாழ்வதுண்டோ எவ்விடத்தும் தோத்தரிக்க - ஆழ்ந்துணர்ந்த
என்துரையை நாயகராய் ஏற்றதொரு சிந்தையினில்
பின்னொருவர் போதருதல் உண்டாமோ - கோலமிகும்
சந்நிதிமுன் தாழ்ந்து பணிந்த சிரங்கள்மற்(று)
எந்நிதிக்கும் தாழுமோ எக்காலும் - தென்னன்

அமுது படைத்தல்

தரிசனங் கண்டார்த்துத் தம்விடுதி முன்றில்
அரிசி பருப்புகறி காய்கள் - கரிசனமாய்
வைத்து வணங்கிநின்றார் மாதேவர் தாம்ஏற்கில் (450)
நைத்திடும் வெம்பிறவி, மாய்கைவினை - உய்த்தருள்வார்
என்று இருகரங்கள் ஏந்திக் கனிந்துருகி
நின்று பணிந்து தரிசித்து - பொன்றா
வரம்பெற்ற மாதவர்கள் மாதேவர் தங்கள்
வரம்பெற்ற ஆரமுதை உண்டு - உரம்பெற்றோர்
திங்கள் வதனர் திருமணிநற் சூலதனில்
தங்கி மறுபிறப்புத் தான்பெற்று - எங்கும்
எவரும் இணையொப்பு என்றுரைக்க வொண்ணா
தவமேரு தானருள்விண் செல்வக் குவைபெற்று
அந்நாட்டு வித்தாக ஆன அனந்ந(ர்)குலப் (460)
பொன்னாடர் ஈன்ற பெருங்கூட்டம் - தென்னாடர்
பெம்மான் பெருந்துறையார் பேர்தயவுப் பேராண்மைச்
செம்மல் திருவுலாத் தாம்கண்டு - தம்முள்ளம்
பூரித்து மேனி புளகாங்கி தம்பெற்று
வாரி அலைமுழங்கல் போல்வாழ்த்தி - நேரில்சீர்

போற்றுதல்

கண்டோம் குருநாதா! ஜென்மம் கடைத்தேற
எண்டிசையும் கண்டறியா எந்தாயே! - பண்டைப்
புராதனரே! பூதலத்தே போந்தெமையும் ஏற்றுச்
சிரோமகுடம் தந்தருள்செய் தெய்வ - வரோதயரே!
அண்ணலே எம்மா ருயிர்க்குயிரே! ஆதரித்த (470)
விண்ணமுதே! வேதாவே! மெய்ப்பரிசே! - பண்ணகரே!
தேவாதி தேவா! திருவையாறா! எங்கள்
கோவே! குலதெய்வ கோமானே! - ஓவாது
இன்பந்தந் தாளும் இணையில்சீர் எம்சாமி!
அன்பின் திருவுருவே! ஆதரவே! - துன்ப
எமபயத்தைத் தாண்டவைத்த ஏந்தலே! எம்முள்
சமரசத்தைத் தந்தருளும் சீரே! - இமையவரே!
குன்றாப் பெருநிதியே! கோதற்ற வான்பதியே!
என்றும் இலங்கும் இறைசூலே! - சென்றநாள்
வண்ணமிடா ஓவியமாய் வந்துற்றோம் எங்களுக்கு (480)
வண்ணமிட்ட ஓவியரே! மாதேவே! - திண்ண
வடிவமுற்றா சிற்பங்க ளாயிருந்தோம் மெய்யார்
வடிவமுற்ற வான்சிற்ப மாக்கிப் - படிமிசையே
மீகாமன் இல்லா மரக்கலமாய் மிக்கழிந்தோம்
மீகாமன் ஆகியெமை மிக்காண்டு - மாகாதல்
தாய்முகத்தைக் காணாத் தவித்திருந்த சேயெமக்கு
தாய்முகத்தைக் காட்டிவைத்த மெய்த்தாயே! - வாய்ப்பின்றி
வாடிக் கிடந்த உயிர்ப்பயிர்க்கு வான்மழையாய்
நாடி நலமருள்விண் நன்முகிலே! - கோடி
திரவியத்தைத் திக்கற்ற தீனரெமக் கீந்து (490)
மருவும் மணாளரே! மாண்பே! - ஒருவருமே
மீட்டாத வீணைகளாய் வீணாய்க் கிடந்தேமை
மீட்டி இசைசேர்த்த விண்ணிசையே! - காட்டகத்தே
ஐம்புல வேடர் அலைக்கழித்த சேயிழைக்கு
பைம்பொழில் காட்டியணை பர்த்தாவே - ஐம்பொன்னால்
கல்செம்பு வெள்ளிக் கடவுட் சிலைவணக்க
வல்மயக்கம் தீர்த்த மகத்துவமே - இல்லையென்று
நாத்தழும்பு ஏறமிகு நாத்திகமும் பேசிநின்ற
தீத்திறத்தைத் தீய்த்தெறிந்த தெய்வமே! - ஆர்த்து
மதிப்பு ருசிபதவி வல்வெறியிற் சாய்ந்த (500)
கொதிப்பை அடக்கிவிட்ட கோமான் - விதியெழுத்தை
மாற்றி மதியெழுத்தை ஏற்றி மயக்கறமெய்
ஆற்றின் துறைகாட்டும் அத்தாவே! - கூற்றின்
கொடுமை களைந்தெம்மைக் கொத்தடிமை கொண்டெம்
மிடிமை தவிர்த்தமுத லாளி - அடிமுடியும்
காட்டி அருளமுதம் ஊட்டிப்பே ரின்பநிலை
வீட்டில் குடிவைத்த மெய்வேந்தே! - வாட்டம்
தவிர்த்த மணிமொழியே! சற்றோய்வின் றாற்றும்
தவப்பலனைத் தந்தாள் தயவே - சிவமென்று
பாடிப் பரவிப் பலவாறாய்த் தோத்தரித்தார் (510)
நாடி வணங்கி நமஸ்கரித்தார் - கூடினின்ற
பேதை பெதும்பையரும் மங்கை மடந்தையரும்
ஏதமிலா ஆண்பால் இளஞ்சிறார் - தாதையர்போல்
தாமும் பணிந்து தபோபலன்கள் பெற்றார்கள்
நாமும் இதுநெறியே நண்ணிணோம் - சேமநிதி
இவ்வா றிருக்கிறதென் றன்றறியோம் இங்குற்றோம்
செவ்வான் திருவே! எனவாங்கு - பவ்வியமாய்ப்
போற்றிப் பணிந்து புதியோரும் கூடிநின்றார்
ஏற்று இனிதெமது ஏந்தலவர் - வீற்றிருந்து
மெய்யாம் வழிநாடி மேன்மைக் குலத்தோராய் (520)
வையகத்தில் இவ்வளவோ வந்துற்றீர் - ஐயமிலா(து)
உங்கட்கு என்றும் அழியா நிதிவழங்கும்
இங்குற்ற நல்லிர் இனிதுய்கென் - றெங்கோன்
இரக்கம் அடைபடுத்த இருதிருநன் நோக்கில்
சுரக்கும் தயைபொழியச் சீடர் - பெருக்கந்தான்
பெற்ற பெருவரமும் பேர்நிதியும் வாய்மொழியால்
உற்றுரைக்க ஒல்லுவதோ ஆண்டவர்கள் - பொற்றிருவாய்

ஆண்டவர்கள் திருவருள் வரம்

நாயகரும் நல்வாக்கு நல்கினார் பெற்றமுது
ஆய்மதிச் சிந்தையரும் பல்கினார் - சேய்காள்!
எங்கெங்கும் மெய்வழியே ஏற்றமுறும் மாந்தரெல்லாம் (530)
உங்கள்போல் மெய்பெற்று உய்ந்திடுவர் - பங்கமின்றி
நேரும் பிரளயம்பின் நீதி யுகம்பிறக்கும்
பாரில்மெய் ஒன்றே பரிமளிக்கும் - சீராக
மெய்யடக்க முற்றோர்கள் மீண்டெழுவர் தீர்ப்பினுக்கு
வையகமெங் கும்மெய் வழிநிலைக்கும் - ஐயமின்றி
ஓயா வணக்கத்தில் ஊன்றி நிலைத்திருங்கள்
மாயாத வாழ்வு வரமளிப்போம் - நேயமிக
நம்பிய பேர்களுக்கு நாலாம் பதமருள்வோம்
தெம்பாகச் செம்மை நெறிநின்மின் - உம்பர்களே!
ஆண்டவர்கள் சந்ததியாய் ஆகி நிலைத்திடுவீர் (540)
வேண்டிய வேண்டியாங் கெய்திடுவீர் - யாண்டும்
மெய்வாழும் பொய்வீழும் வையகமே மாற்றமுறும்
செய்ய தவமாட்சிச் சீர்சிறக்கும் - மெய்யாக
எக்காலும் பேரின்பம் என்றருள்செய் ஆண்டவர்கள்
மிக்க தயவோங்க மேதினியில் - தக்காங்கு
மன்னுயிர்தம் வல்வினைகள் வீய வரமருளிப்
பொன்னரங்கர் போந்தார் உலா. (547)

திரு உலா இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!