திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/பாட்டுடைத் தலைவர்

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



ஆதியே துணை



பாட்டுடைத் தலைவர்


   இவ்விலக்கியங்களின் பாட்டுடைத் தலைவர் எல்லாம் வல்ல இறைவர் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்கள். முழுமுதற் பொருள்; முன்னு பின்னு இல்லாத முதல்வர்; சதுர் யுகங்கோடி கால மக்களிடத்தும் உயிர்க்குயிராய் நின்றிலங்கும் சர்வேஸ்வரர; ஊண் உறக்கமற்ற தனித்தலைமைப் பெரும்பதி; இறப்பும் பிறப்புமில்லா ஏகநாயகர்; அருட் பெருஞ்சோதியர; தனிப்பெருங்கருணைத் தயாநிதி; சர்வ மதங்களையும் ஒருங்கிணைத்த சமரச நன்மார்க்கநாதர்; சர்வ சாதிகளின் பேதங்களையும் நீக்கி ஒன்றே குலம் என்பதை நிரூபித்து பேதமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கிய சமுதாயச்சிற்பி; சர்வ மூலமந்திரங்களின் திருவுருவைக் கண்காட்சியாகக் காட்டிய மந்திர ரூபர்; சர்வ வேதமாமறைகளின் பூட்டுகளை ஓரெழுத்து மாத்திரைக் கோலால் திறப்பித்த வேதநாயகர்; நரர்களாகப் பிறந்தவர்களை மனிதராக்கி, மகன்களாக ஏற்று, மாற்றிப் பிறப்பித்து, த்விஜர்களாக்கி, மகான்களாக, தேவர்களாக ஆக்கிய மகாமகத்துவர்.

   தாய்ப் பசு தன் கன்றிடம் காட்டும் அன்பினைப் போலத் தம் மக்களாகிய அனந்தாதி தேவர்களிடம் அன்பு காட்டும் (வாத்சல்யம்) அன்பே உருவானவர்; எல்லாவற்றுக்கும் முதன்மையாக உயிர்க்குயிராக இலங்கும் (சுவாமித்துவம்) மாட்சியினர்; அவரவர் இயல்புக்குத்தக்கபடி இறங்கி வந்து கருணை கூர்ந்து அரவணைக்கும் (சௌலப்யம்) அருட் ஜோதியர்; ஏற்றத் தாழ்வு இன்றி எல்லோரிடமும் பேதமற்ற பேரன்பு காட்டும் (சௌசீல்யம்) பெருந்தயைப் பெருமான்; குறைமனத்துப் பிழைஒதுக்கிப் பழகித்தேர்ந்த குருகுலாதிபர்; குணக்குன்று; மரணமிலாப் பேரின்ப சித்திப் பெருவாழ்வை வழங்கும் வான்கொடை வள்ளல்; கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பு; எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற ஈசன்; பிறவிப்பிணி தீர்க்கும் ஜீவ பண்டிதர்; சர்வ கலைக்ஞானங்களையும் கற்பிக்கும் கலாமலி ஞான பண்டிதர்; ஈடு இணை ஒப்பு உவமை கூறவியலாத ஒரு பெருந்தனித்தலைமைப் பெரும்பதித் தெய்வம; என்னுயிரில் தித்தித்துக் கிடக்கும் குல தெய்வ தேவேசர்; புதிய வகை இசையை உருவாக்கிய கலைவாணி; சாலைத்தமிழை உருவாக்கிய முத்தமிழ் வித்தகர்; நாற்கவிராஜ சிங்கம்; நினையாத முன்வந்து நிற்கும் நிர்மல சொரூபர்; கேட்டதெல்லாம் தரும் சர்வமூல மந்திரார்த்த ஜீவகற்பகத்தரு; செண்பக நறுமணம் கமழும் பொன்னார் திருமேனியரின் பொற்பாத கமலங்களை நினைந்து நினைந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஊன் உருக, உள்ளம் கனிய, பாடிப் பராவுவதே எளிய எனது பேதையுள்ளத்தின் லட்சியம்.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!

மெய்வழிச் சபையாரின் அடிப்படை நம்பிக்கைகள்

ஆண்டவர்' ஒருவர் உண்டு
அடியார்கள் உண்டு தீர்க்கம்
ஈண்டுரை தரிசி மார்கள்
இனிதுண்டு வேதம் உண்டு
மாண்டிடல் உண்டு தீர்ப்பு
மைதானம் தன்னில் நன்று
ஆண்டவர்' வழங்கல் உண்டு
அறிமின்கள் உலகினீரே!

மெய்வழியின் நோக்கம்

மதம் குலம் இனபே தங்கள்
மொழி நிறம் தேசம் எண்ணல்
இதம்கெடு அகந்தை மேல்கீழ்
எளியவர் வலியர் மற்று
பதவியான் உயர்வு தாழ்வு
பண்பிலாச் செயல்கள் நீங்கிப்
பொதுகுலம் இறையென் றெண்ணம்
புவியினில் நிலவ வேண்டும்.

மெய்வழி சார வேண்டுவன

ஆசான் கிருபை அடம்திடம் நம்பிக்கை
தேசோங்கச் செய்யும் சிறந்து.

மெய்வழியில் நிலைக்கப் பத்தியங்கள்

நிலைபெறு நித்ய வாழ்வில்
நலம்பெறத் தொடரும் பத்யம்
புலை, கொலை, களவு, பொய்கள்
புகை, திரை, அரசெதிர்த்தல்
கலங்குறு பிறன்ம னையைக்
கவர்நினை ஈனத் தன்மை
இலரெனும் வைராக்யத் தோர்க்(கு)
எமன்வரான் ஈசன் காக்கும்.

இந்நூலின் பாட்டுடைத் தலைவராகிய பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின் திருவரலாற்றுச் சுருக்கம்


   இப்பிரபந்தங்களின் நாயகர் பிரம்மப்பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்கள். அவர் ஆதிக்கு முன் அனாதியாக நின்ற சுயம்பிரகாச நித்யானந்த பிரம்ம சொரூபர். அப்பிரம்மத்தினின்றே ஐம்பூதங்களும் தோன்றின. அவற்றினின்று நால்வகைப் பிறப்பிடங்கள் வாயிலாக, எழுவகைத் தோற்றங்கள் உண்டாயின. இவற்றையெல்லாம் படைத்துவிட்டு, அவற்றுள் உயர்ந்த படைப்பாகிய மனிதனின் இதய மாளிகையில் இறைவன் குடியேறிக் கொண்டார். எழுவகை அமானிதங்களை மனிதனுக்குச் சீதனமாகத் தந்த இறைவன், தன்னை அறிந்து தலைவனை அறிதலை மனிதனின் கடமையாக்கி வைத்தார்.

உள்ளிருந்தே என்றும் உணர்த்துகினும் கண்டிலரென்(று)
உள்ளும் புறம்பும் ஆவோமென்று - மெள்ள
நரருருவில் ஆரூரில் வந்தார் நமையாண்(டு)
அருள்புரி ஞானப் ரகாசர்.
- சித்தாந்த சாஸ்திரம், சிவப்பிரகாசர்


   படைப்பில் உன்னதமான மனிதனின் இதயமாளிகையில் இறைவன் குடியேறியிருந்து உணர்த்தினாலும் மாயைவசப்பட்ட மனிதன் இறைவனை அறிந்து கொள்வதில்லை. ஆகலான் உள்ளேயும் இருந்து கொண்டு வெளியேயும் வந்து அருள்புரிவதற்காக இறைவன் மனிதனைப் போன்று வடிவெடுத்து அவதாரம் செய்தருளுகின்றார்.

இறவாத இன்பத்து எமையிருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்து - நறவாரும்
தாருலா வும்புயத்துச் சம்பந்த நாதனென்று
பேரிலா நாதனும்ஓர் பேர்புனைந்து - பாரோர்தம்
உண்டி உறக்கம் பயம்இன்பம் ஒத்தொழுகி
கொண்டு மகிழ்ந்த குணம் போற்றி.
- போற்றி பஃறொடை.உமாபதி சிவாச்சாரியார்
பரித்ராணாய சாதூனாம் விநாசாயச துஷ்கிருதாம்
தர்ம சம்ஸ்தாப ணார்த்தாய சம்பவாமி யுகே! யுகே!
- பகவத் கீதை, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா
“சாதுக்களை ரட்சிப்பதற்காகவும் தீயோர்களை அழிப்பதற்காகவும் அவ்வப்போது நான் பூமியில் அவதரிக்கின்றேன்” என்பது இதன் பொருள்.


   தன்னை அறிய மறந்த மனிதனுக்கு அவன் கடமையை நினைவூட்ட இறைவன் தமது தூதர்களை அனுப்பி வைத்தார். மனிதன், அவற்றை அலட்சியப்படுத்தியதோடல்லாமல், அவர்கள் தேகத்திற்கு ஊறும் விளைவித்தான். அதனால் தூல வலசு வாங்கிச் சென்ற இறை தூதர்கள் இறைவன் சந்நிதிமுன் நின்று இவ்வுலக மக்களை உய்விப்பான் வேண்டினர்.


   இறைவன் தமது தேவமகாசபையில் அவர்களின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டார். தாம் மாயா சரீரம் எடுத்து பூமிக்கு வருகையில் மாயை வசப்பட நேருமென்றும் தன்னையே தனக்கு நினைவு கூர்ப்பிக்க ஒரு விண்ணவரைத் தமக்கு முன்னே பூமிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் தாமும் மனிதப் பிறப்பெடுத்து பூமிக்கு வந்துற்றார்.


   அப்படி இந்தக் கலியுகத்தில் அவதரித்த இறைவன், அந்த முழுமுதற் பொருள், அமுதத் தமிழ் மொழி வழங்கும் தென்னாடகத்தே, கொங்குத் திருவள நாட்டில் மார்க்கம்பட்டி என்னும் சிற்றூரின்கண் வேளாண்மை செய்யும் பெருங்குடிப் பிறப்பினரான சீராரும் ஜமால் உசேன், திருவாரும் பெரியதாய் என்னும் தம்பதியினர்க்கு ஆண் மகவாக மார்கழித் திங்கள் இருபத்தொன்பதாம் நாளில் திரு அவதாரம் செய்தருளினார்கள். நாழியோர் மேனி கடிகையோர் வண்ணமுமாக வளர்ந்தோங்கிய செம்மல், வயதொரு ஏழானபோது பெரியவர் கருப்பண்ண ஆசாரியாரின் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து, நீதி நூல்கள், நிகண்டுகள், நன்னூல், பகவத்கீதை, ஞானவாசிஷ்டம் ஆகியவற்றைக் கற்றுச் சிறந்தார்கள். ஓதாதுணர்ந்திடும் ஒருதனி முதல்வர் மனிததேகமெடுத்து வந்ததாலே உலகியல் கல்வி பயில வேண்டியதாயிற்று. இரண்டாம் வகுப்பு படித்து முடித்தபோது, தங்கள் பண்ணையின் ஆடு மாடுகளை மேய்க்க ஆள் கிட்டாததால் தாமே அப்பணியை விரும்பி மேற்கொண்டார்கள். இப்பணிகளின் இடையே மஃறிபத் மாலை, திருக்குறள், குமாரசாமியம் போன்ற ஜோதிட நூல்கள், பெரிய ஞானக்கோவை, புராணங்கள் பலவும் கற்றுத் தேர்ந்தார்கள்.


   வயது வளர்வேறிய காலத்தே சிலம்பம், மற்போர், நீளந்தாண்டுதல், பார் விளையாட்டு, புல்லாங்குழல், வீணை, மிருதங்கம் முதலியவற்றில் இணையற்ற திறன் பெற்று விளங்கினார்கள்.


   பெற்றோர் பெரியோரிடம் பணிவு, இளையோர் தம்பால் அன்புபாராட்டல், எளியவர்களை அரவணைத்தல், நீதியை நிலைநாட்ட முன்னிற்றல், மிகுந்த இறையன்பு, சாதிமத பேதமில்லா சமத்துவ உணர்வு ஆகிய அரிய சற்குணங்களுடன் சிறந்து விளங்கினார்கள்.


   அதுசமயம், உள்ளூர்ப் பள்ளி வாசலில் ஆலிம்சா ஒருவர் மார்க்கச் சொற்பொழிவாற்றினார். இறை நம்பிக்கை, தொழுகை முறைகள், தொழுகையின் அவசியம், அதன் பயன்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். மேலும், சாவில் இரண்டுவகை உண்டென்றும், ஒன்று தன்னைப் படைத்த ஜீவ சக்தி வெளியாகி நாறிப் புழுத்துச் சாகும் அநியாய மரணமென்றும், மற்றொன்று ஜீவசக்தி தனக்குள்ளேயே அடங்கச் சுவர்க்கத்திற்குத் தாக்கலாக்கும் வஃபாத் ஆகிய பரிசுத்த ஜீவப் பிரயாணமென்றும் விளக்கினார். பரிசுத்த ஜீவப்பிரயாணம் ஆகுதற்கு ஷெய்கு எனப்படும் ஞானச் செயலுடைய மெய்க்குருபிரானைச் சந்தித்து, முரீது (உபதேசம்) பெற்று, இறைவனைத் தரிசித்து, முமீனாக வேண்டுமென்றும், இல்லையேல் இவனுக்கு மௌத்தாகிய துக்கச் சாவு வந்தே தீருமென்றும் எடுத்துரைத்தார்.


   இவற்றைக் கேட்ட நமது இளங்குமரரவர்கள்(இறைவர் திரு அவதாரமாக இருப்பினும் மாயை வசத்தால்) அநியாய மரணம் தனக்கு வரவே கூடாதென்றும், பரிசுத்த ஜீவப்பிரயாணம் அடைந்தே தீரவேண்டுமென்றும், அதற்குத் தமக்கு வழிகாட்டக் கூடிய மெய்க்குருபிரான் எங்கு கிடைப்பார் என்றும் தேடலுற்றார்கள். ஞானி என்ற பெயரில் எவரைச் சந்தித்தாலும் அவரை அண்டி உபதேசம் பெற்றார்கள். இவர்களுடைய யதார்த்த உள்ளத்தைக் கண்டுகொண்ட பொய்ப்பாசாண்டியர்கள் இவர்களைப் பல்லாற்றானும் அலைக்கழித்தார்கள். ஏமாற்றமுற்ற நாயகமவர்கள் பிரணாயாமம் என்னும் சிவராஜயோகத்தை விட்டால் வேறு வழியில்லை என்று நம்பி, அதைப் பின்பற்றி மூல ரோகம் ஏற்பட்டு அதற்கு அவ்வப்போது வைத்தியமும் செய்துகொண்டு அவ்வழியையே பின்பற்றிவரலானார்கள்.


   அதுகாலம் பள்ளப்பட்டியில் வாழ்ந்த மக்கத்து ஹஜரத் என்பவரின் செல்வத்திருக்குமாரத்தி சுலேகா பீவியை எங்கள் தேவகுமாரர் திருமணம் செய்து கொண்டு அன்றிலும் பேடுமாய் இனிய இல்லறம் நடத்தி வந்தார்கள். அதன்பயனாய் அதியற்புத அழகொளிர் பெண்மகவு ஒன்றும் பிறந்தது. இந்நிலையில் நெல் வியாபாரம் செய்து அதிகப் பொருளீட்ட விரும்பி ஈரோட்டிற்கருகில் காசுக்காரம்பாளையம் என்னும் ஊருக்குக் குடிபெயர்ந்தார்கள். ஈரோடு வெங்கட்டப்ப நாயக்கரின் (ஈ.வெ.ரா.பெரியாரின் தந்தையார்) மண்டியில் நெல் கொள்முதல் செய்து சுற்றுவட்டாரச் சந்தைகளில் விற்றுப் பெரும்பொருள் ஈட்டினார்கள்.


   இறைவனின் ஊழித்திட்டம் நிறைவேறும் நாள் வந்துற்றது. இறைவனின் ஆணைப்படி பூவுலகம் வந்த முதுபெரும் முனிவராகிய தனிகைமணிப்பிரான் என்பார் தமிழகத்தில் 600 வயதினையுடையவர்களாய் வாழ்ந்திருந்தார்கள். தீர்க்கத் திருஷ்டியால் நம் இளங்குமரர் இருக்கும் இடம், நிலை, பருவம் யாவும் அறிந்துணர்ந்து காசுக்காரம்பாளையம் வந்து நமது இளங்குமரரைச் சந்தித்தார்கள். திங்களூரில் அவர்கட்கு ஞானோபதேசம் வழங்கியருளினார்கள்.


   ஞானோபதேசம் பெற்றதும் துறவு பூணும் எண்ணம் கொண்ட நமது இளஞ்செம்மலவர்கள் தம் அன்பு மனையாளையும், அருமைக் குழந்தையையும், மிகப்பாடுபட்டுச் சேர்த்த பெரும் பொருளையும் துறந்து குருபிரானவர்களே கதியெனப் பின் தொடர்ந்தார்கள். பல ஆண்டுகள் குருபிரானைப் பிரியாது அகிலவலம் வந்தார்கள். பின் குருவின் உத்திரவுப்படியே ஓராண்டுகாலம் ஆடுமேய்க்கும் தொழிலாபரணத்தினை மேற்கொண்டார்கள். அதன்பின்னர் திருப்பரங்குன்ற குகையில் நீண்டகாலம் தவமிருந்து தம்மிரு கரங்களிலும் பன்னிரு தவ சன்னதங்கள் தரிப்பிக்கப் பெற்றார்கள். அவை சங்கு, சக்கரம், சூலம், வில், வேல், உடுக்கை, பராங்குசம், பாசம், தண்டாயுதம், பட்டயம், மோதகம், கிள்நாமம் என்பன.


   குருபிரானின் ஆக்ஞைப்படியே ஞானச் செங்கோலோச்சப் புறப்பட்ட நாயகமவர்கள் மதுரை, திருப்புத்தூர், ராஜகம்பீரம் ஆகிய ஊர்களில் பிரசங்கம் செய்து ஞானச் சீடர்களை ஆட்கொண்டார்கள். எம்பெருமானாரின் வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட கொடியவர்கள் பல்வகையிலும் அவர்கட்கு இடர்புரிந்தார்கள். அதன் உச்சகட்டமாகப் பெருமானார் ராஜகம்பீரத்தில் தவத்தில் இருக்கையில் தவக்குடிலுக்கு வெளிநாதாங்கி போட்டுத் தீ வைத்தார்கள். அதிலிருந்து தப்பி, தெய்வத் தனிப்பிரானவர்கள் காரைக்கால் சென்று மீண்டும் திருப்புத்தூர் வந்தார்கள். சீடர்குழாம் பெருகியது. பெண் சீடர்களுக்கென பனிமதி நாச்சியார் என்னும் மாதரசியைத் திருமணம் செய்துகொண்டார்கள். பின்னர், பர்மா சென்று சில மாணாக்கர்கட்கு உபதேசம் வழங்கினார்கள். அதன்பின் திருப்புத்தூர் வந்து தேவியாருடன் ஹஜ் யாத்திரை மேற்கொண்டு, மக்கா, மதினா என்னும் தலங்களையும், தங்கள் குருபிரான் அவதரித்த தலமாகிய ஹுனைன் நகர் சென்றதோடு, ஜெருசலேம் நகரையும் கண்டு வந்தார்கள். பின்னர், குருபிரானின் உத்திரவுப்படி நைமிசாரண்ய வனம் சென்று ஓராண்டு தவத்திலிருந்து ஞான நூல்களை இயற்றினார்கள்.


   பின்னர் ராஜகம்பீரம் திரும்பிய நாயகமவர்கள், அரக்கர் தொல்லை எல்லை மீறவே மைசூர் சென்று தங்கிவிட எண்ணம் கொண்டார்கள். மாணாக்கர்களின் பணிவான வேண்டுகோளால் அவ்வெண்ணத்தைக் கைவிட்டு, மதுரையிலேயே முற்றிலும் கருங்கற்களாலான ஓர் ஆலயம் எழுப்பி ஞானச்செங்கோல் ஓச்சினார்கள்.


   நம் தேவபிரான் கட்டிய கருங்கல் ஆலயக்கட்டிடத்தை ஆங்கிலேயர்கள் இரண்டாம் உலகப்போருக்கு போர்த் தளவாடங்கள் வைப்பதற்காக வேண்டி விண்ணப்பித்து, பெருந்தொகை கொடுத்துப் பெற்றுக் கொண்டார்கள். அதற்காகப் பெற்ற கிரயத் தொகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அடர்ந்த மரங்கள் நிறைந்த மனிதர் காலடியே பட்டிராத கானகமான பாப்பநாச்சி வயலை வாங்கி மெய்வழிச்சாலையை நிர்மாணித்தார்கள்.


   அனைத்து மதங்களின் நோக்கமும் மறலி(எமன்) கை தீண்டாமையே. அச்செயலையே காரணமாக வைத்துத் தம்மால் உருவாக்கப்பட்ட மதத்திற்கு “மறலி கை தீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம்” என்று பெயர் சூட்டினார்கள். எல்லா மதங்களிலிருந்தும் சுமார் அறுபத்தொன்பது சாதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து அங்கத்தினரகளாக(மாணாக்கர்) ஆனார்கள். அனைவரும் ஞானோபதேசம் பெற்று அனந்தர், அனந்தகி என்ற பட்டப்பெயருடன் “சத்தியதேவ பிரம்மகுலத்தினர்”ஆனார்கள். புலை, கொலை, களவு, கள், காமம், புகை, சினிமா, அரசுகோல்துரோகம் என்னும் எட்டுவகைக் குற்றங்களும் இல்லாத பரிசுத்த வான்களாக அனந்தர்கள் விளங்குகிறார்கள். இன்ன காலத்தில், இன்னவாறு, இன்ன எல்லைக்கு வந்து, இறுதித் தீர்ப்பரவர்கள் ஞானச் செங்கோல் ஓச்சி, கலியுகத்தை மாற்றித் தலையுகத்தை ஸ்தாபிப்பார்கள் என்ற தீர்க்க தரிசனங்கள் நிறைவேறின. அவர்கள் நிர்மாணித்த சாலையம்பதி பல்வகையாலும் தரணியில் இல்லாத தனிச்செயல் பதியாக, மாட்சிமையுடன் இன்றும் விளங்குகிறது.


   எம்பெருமான் இறுதித் தீர்ப்பு நடாத்திப் புதுயுகம் புரப்பிக்கும் மாபெரும் திருப்பணிக்காகச் செண்பக மணம் கமழும் பொன்னொளிர் திருமேனியை மறைத்து ஆன்ற வான்கன்னி விராட் தவத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள்.


   அவர்களின் புனிதபூரண அருட்கிரணம் பரிமளிக்கும் அற்புத தவ ஆலயத்தில் அனந்தாதி தேவர்களும், அவர்களின் சந்ததியினரும், யதார்த்த நன்மன வைராக்கிய ஜெயசீலர்களும் கூடி, வணக்கங்கள் செய்து, திருவிழாக்கள் கொண்டாடி, எண்ணற்ற அதிசயங்களுடன் கூடிய பெறற்கரும் பேறாகிய மரணமிலாப் பெருவாழ்வென்னும் முத்திப் பதவி பெற்றுப் பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இது சத்தியம்! சத்தியம்! சத்தியம்!
விரும்பும் யாவரும் இவ்வாழ்வைப் பெற்றுக்கொள்ள யாதொரு தடையுமில்லை.
அறிக! உணர்க! பெறுக!

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!