திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/023.அருள் எண் செய்யுள்
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
23. எண் செய்யுள்
[தொகு]இலக்கணம்:-
பாட்டுடைத்தலைவரின் பெயரினையும், ஊரினையும் சிறப்பித்துப் பாடும் பொருண்மையுடன் பாடல் எண் வரையறையுடன் இயற்றப்பெறுவது இவ்வியலக்கியமாகும்.
ஊரையும் பெயரையும் உவந்து எண்ணாலே சீரிதின் பாடல் எண் செய்யு ளாகும். - இலக்கண விளக்கம் -848
பாட்டுடைத் தலைவன் ஊரும் பெயரும் பத்துமுதல் ஆயிரம் அளவு பாடி எண்ணால் பெயர்பெறல் எண்செய்யுள் ஆகும். - முத்துவீரியம் -1080
பாட்டுடைத் தலைவனூர்ப் பெயரினை யிசைத்துமெண் ணாற்பெயர்பெற வீரைந்து கவிமுத லாயிரம் வரைச்சொல்லல் எண்செய்யு ளாகுமன்றே. - பிரபந்த தீபிகை -15
எண்செய்யுள் என்பது எழில்செய்யுள் தலைவன் ஊரும் பேரும் உயர்குலம் அழகு உரம் பத்துமுதல் ஆயிரம் பகர்தலும் விதியே. - பிரபந்த தீபம் -21
பிரம்மப்பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் திருப்புகழை அருள் எண் செய்யுள் என்னும் இலக்கிய வகையான் பாடப்பெற்றதாமென்க.
அருள் எண் செய்யுள்
காப்பு
கலித்தாழிசை
செங்கமலத் திருத்தாளர் திருவிளங்கும் முழுமுதல்வர்
எங்களெழில் குலவிளக்கு எம்பெருமான் சாலையண்ணல்
அங்கணருட் பெரும்புகழை அனவரத மும்துதிக்கப்
பொங்கிவரச் சொற்பொருளும் பூம்பதங்கள் காப்பாமே.
நூல்
ஆதி
ஆதியெனும் அருண்மணியே அருமைமிகு திருமணியே
நீதிதிரு மேனிகொண்டு நீணிலத்தில் நன்கிலங்கும்
வேதமெலாம் ஓருருவாய் மேதினியில் வந்தவரே!
மாதுளப மிக்கணிந்தீர் மலரடிகள் போற்றுகின்றேன். (1)
திரு அவதாரம்
பிறப்புறுமிவ் வுலகுயிர்கள் பெருநெறிசார்ந் தினிதிருந்து
சிறப்புறவே சுகம்பெறவே முறைவகுத்த அருமறையோன்
இறப்பொழித்து இறையடிசேர் இனியவழி தனைநிறுவ
அறம்சிறந்து ஆண்டவர்கள் எனும்நாமத் தவரித்தீர். (2)
திருப்பெருங்குடி
உலகுயிர்க்கு உணவளிக்கும் உழவர்பெருங் குடிசிறந்த
நலமுயர்ஜ மால்உசேன் நாற்குணமார் திலகமணி
குலமுயர்ந்த பெரியதாய் கூடிமகிழ் திருமனையில்
வலமுயர்ந்த மார்க்கநகர் வளப்பதியில் பிறந்தீரே! (3)
திருவளர் மாட்சி
நாழியொரு மேனியெனக் கடிகையோர் வண்ணமுமாய்
ஆழிதுயில் அணணல்நீர் அழகொளிரத் தாம்வளர்ந்தீர்
வாழியென மக்களெலாம் வாழ்த்திடவே வளர்ந்தீர்கள்
ஊழியின்மு தல்வரென உயிர்கள் பணிந்தனவே. (4)
ஆயகலைக் கதிபர்
கலைகல்வி அனைத்துமொரு கனிவுடைய திருமேனி
நிலைவாழ்வே அருள்வடிவே நவரத்ன கசிதமெனும்
தலைமகவே தரணியெலாம் தழையவரு குலஇறையே
சிலைநிகரார் எழில்வடிவ முடையவரே வழுத்துகின்றேன். (5)
கலைவாணி கல்வி கற்றல்
வடிவழகு மணித்தேர்சு வடிசுமந்து கலைபயில
படிமிசைப்பூம் பதம்படிய பனிமலரே! செலும்அழகில்
படியுமென துளம்அரசே! பரமகுரு இளவரசே!
அடிமலரைத் தொழுதெழுந்தேன் ஆருயிரே! போற்றுகின்றேன். (6)
எழில் இளங்குமரர்
குழலிசைக்க ஆமறிகள் குழுமியங்கண் சொக்கிநிற்க
எழில்விளங்க இளமைபொலி இறைமணியே எனதுயிரே!
பொழில்மலர்ந்த கற்பகமே! புகல்உமது பொற்பதமே
அழகொளிர மறிமேய்த்த ஆரெழிலை நினைந்துருகும். (7)
திருவிளைவு ஆடல்
கறங்கெனவே சிலம்பாட்டம் கடியபல விளைவாடல்
திறன்மிகுந்த பந்தயத்துள் பரிசுபெறும் நிறையாற்றல்
அறங்கமழும் உயரொழுக்கம் அனைவர்புகழ் வளர்வேற்றம்
சிறந்திலங்கு செழுமணியே! திருவடியை வணங்குகின்றேன். (8)
சற்குணச் சிறப்பு
பொறுமைமிகு குணச்சிறப்பு பெரியோர்பால் பணிவன்பு
அறமனமும் எளியவர்பால் தயைமிகுந்த அனுசரிப்பு
குறைமனத்துப் பிழைஒதுக்கும் குலஇயல்பு கனிவுரைகள்
இறையுருவே! இளமைநல இயல்பெண்ணி வியக்கின்றேன். (9)
திருவருள் மணம்
பொன்மலரோர் நறுமணம்கொள் பெற்றியது போன்ம்அரசே!
நின்அருமைத் திருமணமும் நிகழ்ந்ததுகாண் நலம்சிறந்து
இன்னமுதத் திருமகளோ டிணைந்துமகிழ்ந் தறம்புரியும்
என்னுயிரே! மணநிகழ்வை எண்ணியென்னுள் பூரிக்கும். (10)
எழில் மகப்பேறு
திடஞானக் கொண்டலரே!சிறந் தொளிரும் திருவாழ்வில்
கடல்விளையா எழில்முத்தாய் மலைவிளையாத் திருமணியாய்ப்
புடம்படியாப் பொற்சிலையாயப்ப் பதுமையெனத் திருமகளும்
வடிவுடையாள் உதித்தார்காண் மகிழ்ந்துஉளம் களிதுளும்பும். (11)
வணிகம்
அருள்நயந்த திருவுளத்தே அகிலவர்போல் சிறந்திடவே
பொருள்நயந்து புரிவணிகப் பெருவிருப்பம் விளைவுறவே
வரும்ஊழி வழிநடத்த நெல்வணிகம் இயற்றினிரே!
பெரும்பொருளும் குவிந்தததுவே வருநிகழ்வை எண்ணிலிரே!. (12)
அருட்குரு வருகை
சிறந்தினிய வாழ்வமைந்து திகழ்ந்தினிது வாழ்ந்திடுநாள்
அறந்தவழும் நிறைந்தவுள அண்ணலுயர் தனிகைமணி
துறந்தமனத் தனியோகர் அறமணியைத் தடுத்தாள
பிறவாழி கடந்திடவே வருகைதந்தார் இணைந்திடவே! (13)
சற்குரு சந்திப்பு
ஆழிதுயில் அரங்கண்ணல் அம்புவியில் அவதரித்தீர்
ஊழிவிதி நடத்திடவும் உயர்யுகமே படைத்திடவும்
வாழிஐயர் தனையெடுத்து வளர்விக்கும் திருவுளத்தார்
பூழியர்கோன் தனிகைமணி பெரும்வரவைப் போற்றுதுமே. (14)
இருபெருஞ்சுடர் இணைவு
சூரியனும் சந்திரனும் சுகவிளைவுக் காயிணைந்து
நேரியல்மெய் வழிநிறுவ நலமிலங்கச் சந்திக்க
ஆரியர்வந் தாட்கொண்ட அற்புதத்தை என்னென்பேன்
பாரிலுயர் பரிசருளும் பரந்தாமர் பதம்பணிந்தேம். (15)
தவவாய்மையர்க்கு அமுது படைத்தல்
வருகுகுரு மணிக்குக்கேழ் வரகப்பம் பசும்பால்தேன்
தருகுமதை அவரேன்று அருமைமிகு உபதேசம்
பெருகுவரம் அருள்தரவும் பெருமகனார் திருவுள்ளம்
அருள்மணியைத் தொடர்முடிபை அடிமையெண்ணி அகமகிழ்ந்தேன். (16)
அருட்புனல் ஜென்மம்
காணரிய காட்சிகளும் கேட்டறியாக் கேள்விகளும்
பூணரிய ஞானபதப் பெருநிதியைச் சீதனத்தை
மாணெழில்சேர் மணிக்குவையை வளவரசர் பெற்றீர்கள்
பேணியெமைக் காக்கவென்று பெருமானைப் பெற்றீர்கள். (17)
மெய்த்துறவு
மாசுமறு வறியாதாள் மலரிதழ்மென் மேனியினாள்
தேசுநிறம் மிக்கொளிரும் செம்பொன்னார் சிலைமனையை
பாசநிறை திருமகளாம் பொற்பதுமைப் பெண்மகவை
தூசெனவே கருதினிரே துறவேற்கச் சம்மதமோ? (18)
துறவிகட்கரசர்
செல்லமதைத் திருமனையைச் சற்குணமார் சீர்கட்டி
வெல்லமதை மிகமுயன்று சேகரித்த செல்வமதை
எல்லாமும் வைராக்ய மாய்ந்துறந்து ஏகுபெரு
வல்லமையை என்னென்பேன் மயங்குகின்றேன் மாதவரே! (19)
வியத்தகு துறவாண்மை
பலமகவு களுக்கமுது பரிந்தூட்டிப் பசிதவிர்க்கக்
குலமகவைத் துறந்தீரோ கொற்றவரே! மெய்ப்பொருளை
உலகவர்க்கு அருள்தரவே உழைத்துவளர் பொருளையெலாம்
சிலநொடியில் விலக்கியமெய்த் துறவுளத்தை என்னென்பேன்! (20)
சிரமணியும் பதமலர்கள்
பாரனைத்தின் துயர்களைந்து பரிபலித்த பரந்தாமா!
சீர்மிகுந்த செழுஞ்சுடரே! செப்பரிய பேராளா!
காருண்யா! கதியருளும் கனிமொழியோய்! கழல்மலரை
ஆரியரே! அடியேங்கள் அணியாகச் சிரம்புனைந்தோம். (21)
ஒளிர் மணி
ஒருமணியைக் குருமணியைத் திருமணியை அருள்தரவே
வருமணியை ஒளிர்மணியை மணிமொழியைப் பொழிமணியை
கருமணியைப் பொதிமணியைக் கதிமணியை மதிமணியைப்
பெருமணியை முதுமணியைப் புதுமணியைப் போற்றுதுமே. (22)
குருகொண்டல் மாட்சி
வருகொண்டல் தனிகைமணி குருகொண்டல் திருவுருவை
அருள்கொண்டு நிழலென்று உடன்ஒன்றி நிலைநின்றீர்
திருவிண்ட ஒளியென்று திகழ்கின்ற மணிமன்றே
பெருகுகின்ற அனந்தர்குலப் பெருமானே போற்றுதுமே. (23)
சகிப்புத்தன்மை வைராக்கியம்
அருளரசும் தவமுரசும் அகிலவலம் புரிகாலை
பெருவனங்கள் விலங்கினங்கள் வதிகின்ற மலைகானம்
இருள்செறிந்த அடர்வனமும் இயல்தனிகை அரசுடனே
அருண்மணியர் தொடர்ந்தேகும் வைராக்கியம் வாய்த்ததுவே. (24)
உறக்கத்தை ஜெயங் கொண்டார்
அயர்வறியார் அணுக்கணமும் துயிலாதார் படுத்தறியார்
உயிர்க்கினிய துணையானார் திருத்தனிகை மணிவள்ளல்
துயரறியார் தொழத்தக்கார் தமைத்தொடர்ந்த எம்சீமான்
மயர்வறியா மதிநலத்தார் மாட்சியினைப் போற்றுதுமே. (25)
இளமைவளம் கொழிபருவம் எமையெல்லாம் வளர்த்தெடுக்க
துளபஉள முதுமொழியர் உமதுஉயர் குணம்வியந்து
அளவறியா அமுதமழை வருவித்து வளர்த்தார்கள்
தளர்வறியா வளர்வெய்தி சிறந்துயர்ந்து ஓங்கினிரே!. (26)
காமம் வென்ற சேமம்
இளவயது வனிதையர்பால் இணைவிழைவு இதயத்தில்
உளதோவென் றுயர்தனிகை உத்தமர்செய் சோதனையில்
உளம் தளராத் திடன்கொண்டு வலவென்றி அடைந்தீரே!
உளம்புகுந்து ஆண்டவரே! ஒளிர்மணியே! வாழியரோ!. (27)
பயம் பற்றிய சோதனை
கொடும்புலிவாழ் வனமதனில் குருபரரோடிணைந் தேக
இடர்செய்புலி தனிகைபதம் தனில்தலைவைத் தேகியதே
திடஞானத் தெளிஞருழை சீறுபுலி கனிவு கொளும்
உடனியல்பு உற்றுணர்ந்து உமதுயிரும் களித்ததுவே!. (28)
ஆடுமேய்ப்புத் திருக்கோலம்
உடையோம்யாம் பெருஞ்செல்வம் உயர்ஞானம் என்றகந்தை
அடையாமல் பெருந்தகைமை பணிவின்சொல் கொளவேண்டி
நடனபதி எமதிறையை நியமித்தார் மறிமேய்க்க
அடதிடத்தார் அணியெனவே அணிந்தீர்கள் அப்பணியை. (29)
பாசுபதத் தவம்
அப்பணியோர் ஆண்டாக அரனார்தம் திருமகவை
செப்பமுறத் திருத்தவத்திற் கங்கணமும் பூணவைத்தார்
ஒப்புயர்வில் கடுந்தவத்தால் பன்னிருசன் னதம்பெற்று
இப்புவியில் எமக்குநலம் அளக்கவந்தீர் எங்கோவே! (30)
திருத்தவ நோக்கம்
கலியழித்து யுகத்தீர்ப்பு கனிந்துகடந் திடச்செய்து
வலியபுது யுகம்படைக்க வந்தபெரும் அந்தணரே!
நலிவடையும் நல்லுயிர்க்குப் புகலிடமே நாதாநின்
ஒலிவளத்தால் உயிர்வளர்க்கும் ஒருபெரிய தவத்தரசே! (31)
அருள் மழை வருஷிப்பு
குருபரர்சொல் சிரமேற்று குவலயத்தோர் உய்யவென
திருவுயர்வான் மழைபொழிந்து திருவரங்கள் அருளவென
திருப்புத்தூர் மேவியங்கண் சீரோங்கு பிரசங்கம்
தருகொண்டல் தவமேரே தாள்பணிந்து போற்றுதுமே! (32)
குரு கொண்டல் பிரிவு
திருத்தனிகை மணியரசர் திருப்புத்தூர்க் கெழுந்தினிது
அருட்குமரர்க்கு அறஅணிகள் அருள்மணிகள் அணிவித்து
பெருநகர்கு னைன்செல்லப் பிரிந்தார்கள் இணைபிரிந்த
ஒருஅன்றில் போல்துயரம் உற்றீர்கள் உத்தமரே! (33)
பிரான்மலைத் தவம்
பிரிவாற்றாத் துயர்தவிர பிரான்மலைசென் றங்குதவம்
புரிகால்பெண் துறவிவிழை வால்ராஜ கம்பீரம்
உரியசிறு குடிலமைத்து இருந்தீர்கள் தவத்தினிலே
பரிவுடனே மாணாக்கர் பலர்வந்து குழுமினரே. (34)
அரக்கர் செய்யிடர்கள்
மதவெறியர் மனம்கொதித்து மாதவரைக் கொலைபுரிய
எதுவகையென் றெண்ணியெண்ணி எத்தனையோ வகையானும்
மதியரசர்க் கிடர்புரிந்தார் மக்காத மதியரசர்
எதுவரினும் அஞ்சாது ஏற்றமிகப் பெற்றனிரே! (35)
எதிர்ப்பு அணி
வன்கணர்கள் அசுரர்பலர் வெங்கொடுமை செய்தார்கள்
அன்புருவர் தமையழிக்க அணிதிரண்டும் வந்தார்கள்
என்புருகும் கல்லுருகும் எண்ணிடுங்கால் கடல்சுவறும்
அன்பரசர் தெம்புளத்தால் அனைத்தையுமே வென்றனிரே! (36)
தவக்குடிலுக்குத் தீ
அரவனைய விடக்கொடியர் அமரர்தலை வரைமடிக்க
இரவினிலே தவக்குடிலுக் கிட்டார்கள் பெருநெருப்பு
பரம்பொருளெம் பெருமானார் பெருந்திறத்தால் தப்பித்து
இரவோடு இரவாக ஏகினர்கா ரைநகர்க்கே. (37)
அருள் மணம்
மீண்டுதிருப் புத்தூர்வந் திளமானார் பனிமதியை
வேண்டுமொரு திருப்பணிக்காய்த் திருமணம்கொண் டன்னவரோ(டு)
ஆண்டு ஹஜ்ஜூ முடித்துவந்து நைமிசா ரண்யமதும்
வேணடுவரம் நல்குபிரான் சென்றுதவம் ஆற்றிவந்தீர். (38)
மைசூர் செல்ல எண்ணல்
பட்டபடு களத்தாலே பண்பாளர் மைசூர்செல்
திட்டமும்கொண் டேகுங்கால் சீடர்குழாம் தாம்கதற
அட்டாங்க யோகீசர் அருள்கனிந்து அகம்நெகிழ்ந்து
திட்டமிட்டீர் கற்றளியொன் றியற்றிடவே மதுரையிலே. (39)
மதுரைப் பொன்னரங்க ஆலயம்
திருவளரும் சீடர்குழாம் சிந்தைநெகிழ்ந் தேதிருமுன்
பொருள்சொரிய மதுரைநகர்ப் பரன்மேட்டில் கற்றளியை
பெருமானார் நிர்மாணம் செய்சீரை என்னுரைப்பேன்
திருக்கோவில் பொன்னரங்கம் சீர்நாமம் பெற்றதுவே. (40)
உலகப் போர்
அறவாழி அந்தணரும் அதிற்சிம்மா சனமேறி
சிறப்போங்கத் திருஞானம் செங்கோல்செய் அதுகாலம்
அறமழிக்கும் உலகப்போர் அதுதொடங்கும் தீக்காலம்
அறமிழந்த ஆங்கிலனும் ஆலயம்கண் டதிசயித்தான். (41)
படைக்கலக் கொட்டில்
படைக்கலக்கொட் டிலுக்காகப் பரமேசர் ஆலயத்தை
கொடுங்களென்று வலியுறுத்திப் பொருள்கொடுத்துக் கொண்டனன்காண்
விடையேறும் பெருமானார் மெல்லுளம்சற் றயர்ந்தார்கள்
தடைகடந்து ஊறல்மலைச் சாரலில்வந் துற்றனரே. (42)
கற்றளி
கற்றளியைக் கண்டரசு கடும்போர்க் களக்கருவிக்(கு)|r}}
உற்றகிடங் கிற்காக உவந்துவலிதிற் கொண்டான்
கொற்றவரும் ஊறல்மலைச் சாரல்வந்து சாலைசெய்து
நற்றவஞ்செய் பொன்னரங்கில் நற்செங்கோல் தான்செலுத்தும். (43)
ஊறல் மலைச்சாரல்
வனந்தனில்ஊர் வனம மிருகம் முட்புதர்கள் மலிந்திருக்க
அனந்தர்குலத் தனித்தலைவர் அங்குற்றுக் காடழித்து
இனமுயர்ந்த அமரர்பதி இதுவென்று ஆக்கினர்காண்
வனமுத்யோ வனமாமெய் வழிச்சாலை யானதுவே! (44)
குருச்சேத்திரம்
உலகனைத்தும் இவண்குழுமி உயர்ஞானம் பெறும்பதியாய்
நலமுயர்சத் யத்தேவப் பிரம்மகுலம் உற்பவிக்க
தலமதிலே மறலியின்கை தீண்டாத மெய்ம்மதமும்
குருச்சேத்ரம் உற்பவித்த குலகுருவைப் போற்றுதுமே! (45)
அனந்தாதி தேவர்
இறவாத பெருவரமும் எண்ணரிய மெய்ப்பதங்கள்
நறவாரும் தார்புனைந்த நற்றவர்மெய் ஆண்டவர்கள்
உறவங்கம் ஆயினர்க்கு உவந்தளித்து அனந்தரென
சிறப்புயர்ந்த குலமாக்கும் சீர்தயவுக் கென்கடவேம்! (46)
ஜீவப் பிரயாணம்
சார்ந்துநின்ற மக்கட்கு சகலவரம் தான்கொடுத்து
ஆர்ந்துநித்ய வாழ்வளித்து அரும்ஜீவப் பிரயாணம்
நேர்ந்திடச்செய் நித்தியராய் சத்தியராய்த் தாமிலங்கும்
பார்பெரிய பொன்னரங்கா! பரந்தாமா! போற்றுகின்றோம்! (47)
ஒன்றே குலம் ஒருவரே தேவர்
ஒன்றுகுலம் ஒன்றிறைவர் என்றுநிலை நாட்டியிங்கு
வென்றுவினைக் குலமதனை வேரறுத்து சீர்கொடுத்து
என்றும்நிலை வாழ்வுதரும் எம்பெருமான் வாழியரோ!
பொன்றாத புகழரசர் பொற்பதங்கள் வாழியரோ! (48)
சாவில்லா ஊர்
சாவில்லா ஊரிதுகாண் சற்சனர்பி றவிஎனும்
நோவில்லா நல்லூர்காண் சாலையெனும் திருத்தலமே
மாவல்லார் மாதவத்தார் மாமணியாம் ஆண்டவர்கள்
பூவின்மென் பொற்றாளைப் புகழ்ந்தேத்தல் எம்பணியே! (49)
சீர்வழங்கு வள்ளல்
தேடரிய திருஞானச் சீர்வழங்கு வள்ளலிவர்
பாடறிந்தோர் அண்டிவந்து பரமபதம் பெற்றேமால்
ஆடரங்கர் அம்புயத்தாள் அடியேம்சி ரம்புனைந்தேம்
கூடகரும் ஆகியுய்ந்தோம் கொற்றவரைப் போற்றுதுமே! (50)
கணக்கரிய மாட்சி
அணிவிளங்கு அம்புயத்தாள் ஆண்டவர்கள் ஆரருளால்
பிணிமூப்பு சாவில்லாப் பொன்னுடலம் பெற்றேமால்
கணிக்கரிய மாட்சியினர் கருணைவிழி நன்னோக்கும்
மணிக்குரியர் மாவலியர் மாதவர்தாள் போற்றுதுமே. (51)
காமனைக் கண்ணாலெரித்தது
காமனைக்கண் ணாலெரித்த கனவயிர மாமலையே!
ஏமனையி டப்பாதத் தாலெத்தும் எங்கோவே!
பூமிசைநின் பொன்னடியைப் போற்றுபவர் சாவதில்லை
சாமியுங்கள் தாள்மலரைச் சிரமணிந்து போற்றுதுமே! (52)
தவமாளிகக்குத் தீ
செவிகைக்க வசைபாடிச் சீரழிந்தார் வல்லசுரர்
தவித்திடவே தீமூட்டித் தவக்குடிலைத் தானெரித்தார்
அவிந்தழிந்தார் அத்தனைபேர் அத்தாவே நீர்பொறுத்தீர்!
புவிமிசைமெய்க் குருகுலத்தை போற்றிவளர்க் கும்தாயே! (53)
அரக்கர் செய் துயர்
கூட்டங்கள் கூடிவந்தார் கொலைபுரிவாள் வேலுடனே
ஒட்டமெடுத் தேயொழிந்தார், உத்தமரே! சத்தியரே!
வாட்டங்கள் தீர்த்தெம்மை வழிநடத்தும் சற்குருவே!
நாட்டமுங்கள் நல்லடியே நற்றுணையே! நாதாவே. (54)
அணையாத திருவிளக்கே! அழிவில்லா வான்பதமே!
புணையாக வெம்பிறவிக் கடல்கடத்தும் பொன்னரங்கர்
துணையாக எம்முயிர்க்குத் திருவிளங்கும் துணையரசே!
இணையில்லா வல்லரசே! எம்மானே! வணங்குகின்றோம். (55)
ஊறல் மலைச்சாரல்
காலடியே பட்டறியாக் கடும்புதர்க்காட் டைத்தாங்கள்
பாலடியார் வாழ்பதியாய்ப் பைம்பொழிலாய் மாற்றிச்செங்
கோலியற்றும் கோமானே! கோதகல்சீர் கொண்டலரே!
ஆலமுண்ட கண்டரெனும் ஆண்டவரே! தாள்பணிந்தோம். (56)
அருள் மணத்தார்
திருஞானம் தரவந்த பெருமான்கள் பல்லோரை
இருள்மனத்தோர் செய்கொடுமை எல்லாமும் கணித்தறிந்து
அருள்மணத்தால் வென்றாண்டு ஆருயிரைக் காக்கின்ற
திருமணமே! குருபரரே! தெண்டனிட்டு வணங்குகின்றேன். (57)
கொள்ளையர் துன்பம் தரல்
கொள்ளையிட வந்தபெருங் கூட்டமெல்லாம் வாட்டமுற்றார்
வெள்ளைமனச் சீடர்குழாம் ஞானமெனும் தேட்டமுற்றார்
கள்ளமனக் காதகர்கள் கழிந்துநர கேகலுற்றார்
உள்ளமள்ளும் உங்கள்பதம் உவந்துவந்து போற்றுகின்றோம். (58)
துன்பச்சுமை தாங்கி
அன்பருள்ளத் தேயினிக்கும் ஆரமுதே! ஆருயிரே!
மன்பதைக்குள் மிக்கொளிரும் மாணிக்க மாமலையே!
துன்பமெலாம் தாம்சுமந்தீர் தேவாதி தேவா!மெய்
இன்பமெலாம் எற்களித்தீர் என்கடவேம்! என்கடவேம்! (59)
பொன்னுலகு விடிந்தது
படிமிசையெம் போல்பிறந்து பரமபதம் நல்கவந்த
வடிவுடைய மாமணியே மாதவரே தங்கள்திரு
வடியெமது சிரமணிந்து வணங்கியுயிர் செழிக்கின்றோம்
விடிந்ததுபொன் னுலகென்று வியந்துள்ளம் களிக்கின்றோம். (60)
தோற்றோர் பரிசு பெறல்
தோற்றோர் பரிசுபெறல் தொல்புவியில் எங்குமிலை
தோற்றீர்பாட் டையரிடம் திருமெய்ஞ்ஞா னப்பரிசை
ஏற்றீர்கள் எங்களுக்காய் எம்மரசே எம்முயிரை
மாற்றிப்பி றக்கவைத்த மாதாவே போற்றுகின்றோம். (61)
கலைஞானம்
கல்லார்க்கும் கற்றவர்க்கும் கலைக்ஞானம் கற்பித்து
எல்லார்க்கும் நித்தியத்தை ஈந்தருளும் எம்சாமி!
பொல்லாத பிணிதவிர்க்கும் பொன்னாட்டு நாயகமே!
வல்லவரே! வானவரே! மலரடிகள் சிரம்புனைந்தோம். (62)
கண்டெடுத்த பரிசு
பாட்டையர் கண்டெடுத்துப் பரிசெமக்குத் தந்தருள்செய்
தேட்டான திரவியமே! தென்பாண்டி மன்னவரே!
வாட்டங்கள் தீர்க்கவந்த வான்ஜீவ பண்டிதரே!
நாட்டமுற்றோம் நற்றவர்நும் நல்லடியே நாவலரே!. (63)
தில்லை அமுது
வல்பிணியும் மும்மலமும் மடிந்தொழியச் செய்தருளி
சொல்லணிகள் பூட்டியெற்குத் துரியபதம் ஏற்றிவைத்தீர்!
வல்லசுர மாய்கைகெட மணிமந்த்ர ஔஷதங்கள்
தில்லையமு தூட்டியுயிர் தேற்றினிரே! போற்றுகின்றோம். (64)
கட்டிக் கரும்பு
துரும்பெடுத்துக் கடிக்குமொரு சிறுவனுக்குச் சுவைக்கட்டிக்
கரும்பெடுத்துத் தந்தீரே! கண்ணியரே! மணமில்லா
அரும்புநுகர் எந்தமக்கு அருள்மணமார் கற்பகத்தின்
பெருமலரை ஈந்தருளும் பெருமானைப் பணிகின்றோம். (65)
எதிர் நீச்சல்
எத்தனைபா டருமுயற்சி எதிர்த்துவந்த தடைக்குவைகள்
அத்தனையும் வென்றொழித்து அருட்செல்வம் எமக்களித்த
வித்தில்லா வித்தகரே! வேதமணிப் பெட்டகமே!
முத்துநவ ரத்தினமே! முனியரசே! போற்றுகின்றோம். (66)
முப்பொருள் தத்தம்
முப்பொருளும் தத்தமிட்டுப் பெறுஞான மெய்ம்மணியை
எப்பொருளும் ஏலாமல் இலவசமாய் ஈந்தருள்செய்
அப்பனும்நீர்! அன்னையும்நீர்! அருட்குருவும் தெய்வமும்நீர்!
செப்பரிய மேனிலைநீர்! திருவேதம் தாள்போற்றி! (67)
அருள் வள்ளல்
வெல்லரிய ஏமனையும் வென்றெம்மைக் காத்தருளி
சொல்லரிய நான்மறைகள் துலங்கச்செய் தூமணியே!
அல்லலெலாம் அகன்றோட அறம்வளர்க்கும் வள்ளால்நும்
எல்லையில்லாப் பேர்தயவுக் கென்கடவேம் எம்துரையே! (68)
சர்வ மதங்களொன்றாய்த் தானிலங்கும் சம்மதமே!
பர்வதமே!எம்முயிருள் பரிமளிக்கும் பேரொளியே!
நிர்விகற்பர் நிர்மலர்மெய் நித்தியரே! சத்தியரே!
சர்வக்ஞர் சாயுச்யர் சாலைதிகழ் மெய்ம்மணியே! (69)
ஞான நறுங்கனியே! நற்றவரே! கொற்றவரே!
வானார் மதிக்கனியே மண்ணுயிர்க்கும் விண்ணுயிர்க்கும்
தேனார் மொழியமுதம் தந்தருளும் வான்வள்ளால்!
கோணா யதார்த்தருள்ளில் குடிகொண்ட கோமானே! (70)
- மெய்வழி பக்தி இலக்கியங்கள்
- மெய்வழி அடியார்களின் படைப்புகள்
- சமய இலக்கியம்
- அகரமுதலான வரிசையில் படைப்புகள்
- இறையியல்
- சிற்றிலக்கியங்கள்
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
- கவிதைகள்
- திரட்டு நூல்கள்
- 2017 படைப்புகள்
- பாடல்கள்
- தற்கால புலவர்களின் படைப்புகள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்