உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/008.திருவருட்சாலை ஆற்றுப்படை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



8. ஆற்றுப்படை

[தொகு]
ஆதியே துணை

இலக்கணம்:-

வள்ளண்மை மிக்க புரவலன் ஒருவன்பாற்சென்று பரிசில் பலபெற்றுத்திரும்பும் இரவலன் ஒருவன் வழியிடைக் கண்ட பிறிதோர் இரவலனை நோக்கித் தான் பரிசில் பெற்றுவந்த வள்ளலின் ஈகைத் திறனையும் அவன்தன் நாட்டு வளத்தையும் அந்நாட்டிற்குச் செல்லும் வழியையும் பல்லாற்றான் விளக்கி அவ்வள்ளல்பாற் சென்றாயாயின் நின் வறுமையும் ஒழியுமாதலால் நீ உடனே செல்க என வழிப் படுத்துதல் ஆற்றுப் படையாம். திணை - பாடாண் திணை; துறை - ஆற்றுப்படை.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் 
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் 
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்
- தொல்காப்பியம்  - பொருளதிகாரம்  - 88
இருங்கண் வானத் திமையோ ருழைப்
பெரும்புல வனைஆற் றுப்படுத்தன்று 
- புறப்பொருள் வெண்பா மாலை  - 230
ஆற்றுப் படையே அகவல் பாவால்
விறலி பாணர் கூத்தரில் ஒருவர்
பரிசுக்குச் சென்று பாவலர் புகழும்
கொடையும் கொற்றமும் வழியிடைக் கூறலே
- பிரபந்ததீபம் 7
புகழ்அகவ லாற்புலவர் பாணர் கூத்தர்
பொருநர் முதலவருரையாற் எதிர்ப்பா டாகப்
பகருமது ஆற்றுப்படை யாம்
- சிதம்பரப்பாட்டியல்  - 34
தேரு ளைப்புரவி வார ணத்தொகுதி
   திறைகள் கொண்டுவரு மன்னநின்
தேய மேதுனது நாம மேதுபுகல்
   செங்கை யாழ்தடவு பாணகேண்ம்
வாரு மொத்தகுடி நீரு நானுமக
   தேவன் ஆறைநகர் காவலன்
வான பூபதி மகிழ்ந்த ளித்த வெகு
   வரிசை பெற்றுவரு புலவன்யான்
நீரு மிப்பரிசு பெற்றுமீளவர லாகும்
   ஏகுமவன் முன்றில் வாய்
நித்தி லச்சிகர மாட மாளிகை
   நெருங்கு கோபுர மருங்கெலாம் 
ஆரு நிற்குமொரு பனையு நிற்குமொரு
   வேம்பு நிற்குமதன ருகிலே
அரசு நிற்கும் அரசைச் சுமந்தசில
   அத்திநிற்கு மடை யாளமே! 
- தனிப்பாடல் திரட்டு
ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும்
அளியும் என்றிவை ஆய்ந்துரைத் தன்று
- புறப்பொருள் வெண்பாமாலை 189

இப்பனுவல் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் திருவருள் பெற்ற அனந்தர் ஒருவர் வழியிடை மற்றொருவரைக் கண்டு, தான்பெற்ற அரும்பெருஞ் செல்வ வளத்தை அவரிடம் புகழ்ந்து உரை செய்து, தான் திருவருள் பெற்ற தனித்தலைமைப் பெரும் பதியின் திருநாமம் திருவூர் ஆகியவற்றைக்கூறி அவர்கள் திருச்சன்னிதி சார்ந்து உய்யுமாறு ஆற்றுப்படுத்தும் முறையில் ஆக்கப்பெற்றுள்ளது. மேலும் கொண்டற் கொடையை விஞ்சும் திருச்செங்கரத்தினையுடைய பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் திருவருட் கீர்த்தியும் தபோபலமும் வான் செல்வத்தை வரையறாது வழங்கும் அருட் கொடையும் தண்ணளியும் இதன்கண் விதந்தோதப் பெற்றுள்ளது.

திருவருட்சாலை ஆற்றுப்படை

காப்பு

நேரிசை ஆசிரியப்பா

ஆதி மூலமே! அருட்தயை வடிவே!
நீதி யுருவமே! நிர்மல சொரூப!
வேத முதலே! மெய்வழித் தேவே!
போதப் பொருளே! பொன்னரங் கரசே!
சீதனக் குவையே! செல்வமெய்த் திருவே!
நாதநா தாந்தரே! நற்றுணைத் தெய்வமே!
கோதில் தவமே! கொழுமலர்ச் சேவடி
மேதினி மிசைபட மென்னடை பயில
புவிமகள் மகிழப் பூதலம் உய்ய
செவிமலர் பூத்துச் சிந்தைமெய் கமழ
வேதமா மறைகள் வெள்ளிடை மலையென
மேதகு தெளிவுற விந்தையார் செந்தமிழ்
தன்னிக ரில்லாச் சாலைத் தமிழென
இன்னமு தெனச்சுவை யிலங்கித் துலங்க
சாவா வரம்சா யுச்யவான் பதங்கள்
நாவலர் நல்க நற்றவர் களிக்க
அருட்பெருந் திருவோங் கமுதுகு முகிலே!
திருத்தகு வான்புகழ் செப்புபே ராவல்
கொண்டனன் நாவிற் குடியிருந் தருள்க
பண்டை வேதியர் பதமடை துறையுரை
அண்டர்நா யகர்கழல் அடைநெறி புகலும்
தண்டமிழ் ஆற்றுப் படையெனும் சின்னூல்
சொன்மலர் சாற்றத் திருவருள் விழைந்து
நின்மலர்த் தாளில் தஞ்சமுற் றடியேன்
வேண்டினன் வேண்டுவ வேண்டி யாங்கு
ஈண்டருள் இணைமலர்ப் பொற்றாள் காப்பே!

நூல்

அனந்தர் தோற்றம்

விண்ணகச் செல்வம் வியன்புவி யோர்க்காய்
மண்ணகம் கொணர்ந்த மறைமணி மொழிநா
மெய்வழிச் சாலை ஆண்டவர் தயையான்
உய்வழி கண்டு உவந்தவர் பதம்சேர்ந்(து)|r}}
எய்ப்பெனும் ஏமன் இருட்கெட வான
வைப்புகள் கொழிக்கும் வான்மதிச் செல்வர்
செவ்விய பாகை சிரம்புனை சேகரர்
திவ்விய கிள்னா மம்மதி லிலங்க
பவ்விய பஞ்ச கச்சமும் இடையில்
கவ்விடைக் கச்சுடை கனிந்தருள் நோக்கினர் (10)
வான்மறை பொழியும் தேன்கமழ் வாயினர்
நான்மறை வாக்கியம் தேக்குநற் செவியினர்
தெய்வமெய் யன்பு தேங்கிய சிந்தையர்
உய்வருட் திருப்பணி உவந்துசெய் கையினர்
அறம்வலம் புரியும் அருநடை தாளினர்
மறலிகை தீண்டா சாலைஆண் டவர்திரு
மெய்ம்மதத் தானவர் மேதகு நெறியினர்
மொய்ம்புகழ் சத்திய தேவராம் பிரம்ம
குலத்தினர் உத்தம குணமிளிர் நித்திய
நலத்தினர் நற்றவர் நாதர்மெய்ச் சந்ததி (20)
பூணுநூல் புனைந்த பொங்கெழில் மேனியர்
மாண்புயர் பண்பினர் வானவர் மெய்யிறை
அனந்தம் புகழ்சேர் அண்ணலர் வழங்க
அனந்தர் எனும்பெயர் அணிந்ததோர் பிறவியர்
தேவ அறஞ்செயும் சீருறை மாட்சியர்
மூவா முதல்வரின் மிக்கெழிற் காட்சியர்
அவர்தமை

ஆர்வலர் தோற்றம்

தெய்வத் தேட்டம் தேங்கிய சிந்தையர்
பொய்யர்தம் புன்மையால் பெருங்களைப் புற்றவர்
கோவில்கள் நாடிக் குளங்களில் மூழ்கி
ஆவலாய்த் தலங்களில் அலைந்திறை தேடி (30)
தீச்செயல் தீங்கினர் செல்வழி தொடர்ந்து
மூச்சைப் பிடித்து வாசியென் றுளறும்
மாச்செயல் பிராணா யாமமென் றலறும்
பேச்சினர் தம்மைப் பெரிதுளம் நம்பி
இலவினைக் காத்த கிளியது போலும்
நலமறு கானல்நீர் நாடுமான் போலும்
எந்திரம் சக்கரம் இவைதமை வணங்கியும்
மந்திரம் ஜபித்தும் மற்றுபல் பூசைகள்
செய்தும் சிறுபலன் தேர்கிலாப் பூரியர்
வெய்துயர் எய்தி வீணரால் இன்னல் (30)
செப்பிடு வித்தைக் கள்ளரேய்ப் புற்றும்
ஒப்பிடு குறிசொல் வோர்களால் உளைந்தும்
உய்வழி காணா துழன்றவோர் நல்லார்
ஐயர்தம் பிள்ளை அனந்தர்கண் டுற்று
பாலையில் தவித்தவர் பொழில்செறி நிழலார்
சோலைகண் டன்ன சிந்தையுட் களித்து
ஐயம் தெளிய ஆவலாய் வினவவும்
தெய்வச் செல்வர் சீருரை பகரும்
ஆர்வலர் விழைவு
வந்தனம் ஐய! வந்தனம் ஐய!
சிந்தை தெளிந்த தெய்வநற் செல்வரீர்! (40)
தெளிவுயர் வதனச் சீரிய நோக்கினீர்!
களிபெறு மொழியீர்! கண்ணிய வானே!
யாவர்நீர்? எங்குளீர்? எந்நெறிச் சார்பினீர்?
தேவரோ? சித்தரோ? முனிவரர் தாமோ?
தோற்றம் புதிது சொற்றிறம் பெரிது
ஏற்றமெய்ந் நெறிநடைப் பண்புயர் வுடையது
இதுவரை எங்கெவ ரிடத்திலும் காணாப்
புதுமைகாண் கின்றேன் பூணுடை அணிகள்
சைவம்வை ணவமும் கிறித்தவம் இஸ்லாம்
உய்வகை அனைத்தும் ஒன்றிய போலும் (50)
நெறிதனில் நிற்கும் நேரிய நீர்மை
வெறிமதம் கொள்ளா மெய்ந்நிறை பாங்கு
தான்பெரி தென்றெ(ண்)ணாத் தன்மைகாண் கின்றேன்
வான்பெரி தென்னும் மாட்சிகாண் கின்றேன்
பூசுரர் போலும் பொய்ம்மைகாண் கில்லேன்
ஆசறு செந்நெறி ஆர்ந்துளீர் போலும்
கொள்கையா தென்று கோதிலா வகையான்
விள்ளுமின் ஐய! வேண்டுதும் தெளிவு
எம்மதம் பெரிதென் றியம்பிலிர் நீவீர்
எம்மதத் தினரென இயம்புமின் இன்னே (60)

அனந்தர் விளக்கம்

எமதுயிர்ச் சாலை தெய்வமே! சரணம்!
நமஸ்கா ரம்நமஸ் காரம்நல் லன்பரீர்!
என்றனைப் போலும் இன்மனுப் பிறப்பரே!
நன்றுநன் றிங்ஙன் நவின்றநும் வாசகம்
நாடொறும் புதியவர் ஈடில் பழமையர்
தேடரும் வானிதிச் செல்வக் குபேரர்காண்
தென்னா டுடைய சிவபரஞ் செம்பொருள்
எந்நாட் டவர்க்கும் இறைவரெம் பரமனார்
சமரச வேத சாயுச்ய நாதர்
எமபடர் கடத்தும் ஏந்தலர் எங்கோன் (70)
சாதிகள் கர்த்தர் சர்வமும் வல்லார்
நீதி நடவின் ஆதிமூ லம்மவர்
தேவதே வேசர் திருக்கயி லாயர்
நாவலந் தீவில் நண்ணுபொன் னரங்கர்
கர்த்தாதி கர்த்தர் கலைமலி காட்சியர்
வித்தாதி நாயகர் வேதமா முதல்வர்
கல்கி மெசயா கலிபவம் கடத்துவர்
தொல்பழ வினைகெட தயவருள் தெய்வம்
இறுதித் தீர்ப்பர் இணையில் சோதியர்
மறுபிறப் பருள்செய் வானவர் ஆதியர் (80)
சர்வேஸ் வரரெனும் தனிப்பெருங் கருணையர்
சர்வசன் னதங்களும் தாங்குதி ருக்கரர்
வையகம் உய்ய வந்ததோர் திருநெறி
ஐயர்மெய்ச் சாலை ஆண்டவர் அருள்நெறி
மெய்வழி தெய்வ மாணடி பணிந்து
உய்வழி கொண்ட ஒருமக வெளியேன்
அலைகட லாடை அணிந்தவிப் புவியில்
இலைநிக ரென்னும் இறையருட் ஜோதி
அண்டச ராசரம் அனைத்தும் படைத்தவான்
கொண்டல் முழுமுதல் கருணைமீக் கூர்ந்து (90)
நால்வகைப் பிறப்பிடத் தெழுவகைத் தோற்றக்
கால்வழி வந்த கனிவுடை மனுவும்
பிறந்ததோர் கடமை பெரிதுண ராமல்
அறந்திகழ் தன்னை அறிந்துமெய்த் தலைவரை
சிறந்தறிந் துய்யும் செந்நெறி மாட்சி
மறந்தவர் தமக்கு வாழ்வருள் தயவால்
சித்தர்கள் ஞானியர் தேவர்கள் வானவர்
முத்தர்கள் இறைதிருத் தூதர்கள் மாதவர்
தீர்க்கத் தரிசனம் செப்பிய பலரை
ஆர்கலி யுலகத் தனுப்பிமெய் யுரைத்தும் (100)
சீர்சிறி தறியாத் தீங்கினர் இடரால்
பாரகப் பாமரர் பண்ணுசில் மிஷத்தால்
மெய்யர்கள் துன்பம் மிக்கடைந் தனரால்
வெய்துயர் கேட்டு விமலர்தாந் தாமே
திருவுளம் இரங்கிய தெய்வமெய்ச் சிந்தை
அருள்வளம் கொழிக்க அம்புவி தன்னில்
திருவவ தாரம் செய்தனர் இதுகால்
பெருங்கரு ணாகரர் புவிமிசைப் போதர
ஞானமெய்ந் நாட்டம் நாடிடு நல்லார்
மோனமெய் வழிதனை விழைந்திடு மாண்பினர் (110)
ஆனவர் இலங்கும் ஆசியாக் கண்டம்
வானவர் துலங்கும் விந்தையார் பாரத
தேசந் தன்னில் திருவுயர்ந் தோங்கும்
ஆசறு தண்டமிழ் அணிதிக ழகத்தில்
எழுசதுர் யுகத்தில் கடைக்கலி காலத்(து)
எழில்மிகும் ஏந்தல் இனிதவ தரித்தார்
பொன்னார் மேனி பொலிதவ ராஜர்
தென்னா டகத்து திருவருள் வருகை
சாதிகள் மதங்கள் தம்முள் மாறுற்று
தீதுறு கொடுமைத் தீபடர் காலம் (120)
தாம்பெரி தென்னும் தறுகணர் ஆட்சி
வீம்புறு நேரம் வெய்யபொய்ப் போதகர்
பல்லோர் தோன்றிப் பாருல கெங்கும்
நல்லோர்க் கிடுக்கண் நல்கிய காலம்
வந்தனர் மெய்வழி வழங்குமென் சாமி
தந்தனர் உய்வழி தரணியோர்க் கெல்லாம்
அன்றுவா னமரர் அருட்டிருச் சபையில்
நன்றுரை குறிப்பு நனிதிகழ்ந் தொளிர
முடிவுசெய் திட்ட மூதுரை ஞாலம்
விடிவுசெய் திருவாய் விளங்குமெய்க் குருஆண் (130)
தரைதனில் நமக்குத் திருவருள் வரந்தர
துரையவ தரித்தார் தெரிமின்கள் ஐய!
அவரருள் உய்வழி அருட்பெரும் மெய்வழி
தவநெறி யோங்கத் தவத்தினர் செய்வழி
ஐம்பொறி வாயில் அலைப்புறு மாந்தர்
நைவழி கடந்து நலம்பெறு மெய்வழி
ஒருதனித் தலைவர் திருவுருத் தாங்கி
வருமரு ளாட்சி வளந்திகழ் மெய்வழி
துன்பம் துடைக்கும் தொல்நெறி மெய்வழி
இன்பம் விளைக்கும் இன்னெறி மெய்வழி (140)
அன்புள் நிலைக்கும் அருள்நெறி மெய்வழி
தென்புள் சிறக்கும் சீர்நெறி மெய்வழி
வானகம் வையத்(து) வருநெறி மெய்வழி
தேன்கமழ் சாலைத் தமிழ்வளர் மெய்வழி
தீர்க்கத் தரிசியர் திருவுரை மெய்வழி
ஆர்க்கும் ஞானியர் அணிதவ மெய்வழி
சத்தியந் திகழும் சீர்நெறி மெய்வழி
நித்திய வாழ்வு நல்குமிம் மெய்வழி
கலிதவிர்ந் துய்யக் காட்டுமிம் மெய்வழி
நலிவகல் நற்றவம் நல்குமிம் மெய்வழி (150)

ஆர்வலர் வினா

அங்ஙன மாயின் அருட்டிரு அனந்தரீர்!
செங்கம லத்தாள் தெய்வமிக் கிலங்க
பொங்கெழில் சீரார் பொற்பதி யாண்டு
இங்கித மாக இலங்குதல் உரைமின்
கேட்கக் கேட்கக் கிளர்ந்தெழென் சிந்தை
வேட்கை தணிய விளம்புமின் ஐய!

அனந்தர் விடை

ஆர்வமிக் குற்று அன்பொடு வினவும்
சீர்திகழ் சிந்தைச் செல்வரீர்! வாழ்க!
எண்ணிய யாவும் இனிதுற வாழ்த்தும்
விண்ணியல் மெய்வழி விளங்கிடும் பதியும் (160)
செயலுடைச் சீர்மை திருவுயர் மாட்சி
துயரறு காட்சி சகத்துயிர் மீட்சி
இனிதுரை செய்யும் இன்னுயிர் களிக்க
நனிசெவி யேன்மின் நல்லுயிர் உய்ய

சாலை அமைவிடம்

பரந்தவிப் பெரிய பாரகம் தன்னில்
நிரந்தர மெய்ம்மை ஞானமிக் கோங்கும்
பொன்னொளிர் பாரத பூமியின் திலகம்
தென்னாட கத்தில் தேன்தமிழ் வழங்கும்
தென்கும ரித்திரு வேங்கடத் திடையே
மன்னிய மெய்ம்மை வளந்திகழ் புவியில் (170)
ஆதிசை வம்மினி தற்புத மிலங்கும்
நீதி நிறைந்த நற்றமிழ் அகத்தே
பூவிரி பொழில்வளர் பொன்னியெ னும்பேர்
காவிரி நதியும் கலைபல மிளிரும்
மெய்வளர் சங்க மாமது ரைசார்
வைகை நதியும் விளங்கிடை நாடு
சீரார் அங்கம் திருசிர புரமும்
பேரார் நகராய்ப் பொலியும் வடதிசை
தென்மது ரைப்பதி திருப்புத் தூரும்
தென்திசை விளங்கும் கீழ்த்திசை தன்னில் (180)
தஞ்சையும் பட்டுக்கோட்டையும் திகழும்
எஞ்சிய மேற்கில் கோவை திண்டுக்கல்
எண்டிசை கண்டறி யாதமெய்த் தெய்வம்
அண்டர் நாயகர்க்கு அமரர்கள் பணிசெயத்
தொண்டர்க ளாகத் துலங்குசீ மையதால்
தொண்டர்மான் சீமை எனப்பெயர் செப்புவர்
மூவா முதல்வர் முழுமுதல் தெய்வம்
தேவதே வேசர் திருக்கயி லாயர்
பூவடி பூமிசைப் பொருந்திட அருட்டிருச்
சேவடி நடமிடும் சீருயிர் புதியமெய்ப் (190)
பாட்டையைப் பாரகர் பெறநெறி பாங்குறக்
காட்டலாற் புதிய கோட்டையிப் பகுதியாம்
ஊறல் மலையது உற்றது கிழக்கில்
மாறில் விறலி மலையது மேற்கில்
சீருயர் நாரத மலையது வடக்கில்
பேருயர் சித்தண்ண மலையது தெற்கில்
சத்திய மங்கலம் ஊறல் விளத்துச்
சித்துத் தாயினிக் கூத்தினிப் பட்டிகள்
கீழக் குறிச்சி அண்ணல் வாயில்
வாழ்மற மாந்தர் விளங்குசிற் றூர்கள் (200)
மலையும் மலைசார் மண்ணக மாயெழில்
சிலையாம் குறிஞ்சி நிலமெனச் செப்பும்
ஓங்கி வளர்ந்த உயர்தருக் கினங்கள்
பாங்குறத் திகழலால் முல்லையென் றியம்பலாம்
செந்நெல் விளைசெழும் வயல்வெளி மருங்குற
இந்நிலம் மருதம் என்னவும் பெறுமால்
மாதவர் ஆலயம் மன்றும் முன்றிலும்
தீதறு சந்தன மெனுமணல் செறிதலால்
நெய்தலென் றியம்பலும் நேருமற் றாங்கே
எய்துள குறும்புதர் காரையும் சூரை (210)
கள்ளியும் கானல் பரந்துள காட்சி
விள்ளலாம் பாலை வெம்மைசார் நிலமாம்
ஐவகை நிலமும் ஆங்கிலங் கெழிலாய்
உய்வகை உத்தியோ வனமது ஓங்கும்
சாலை நாமங்கள்
தாபத வேள்வியர் தவத்தினர் சாவா
மாபத விக்காய் வணக்கம தியற்றும்
ஓங்குத போவன மாம்திரு நாமம்
பாங்காய் உரைசெயப் படுமிது காண்மின்
சற்குரு பெருமான் திருவரு ளாட்சியால்
நற்குருச் சேத்திர மெனும்பெயர் நவில்வாம் (220)
மாகயி லாயர் வந்திலங் கிடலால்
பூகயி லாயம் எனப்புகன் றிடுவோம்
தென்னகத் தரங்கர் திகழ்திருப் பாங்கினால்
பொன்னரங் கம்எனப் புகலவும் பெறுங்காண்
வைகுண் டத்தின் வாசர்வந் துறலால்
மெய்குண் டம்மென விளம்புவம் இப்பதி
வரம்பில்மெய்க் காட்சி வானக மாட்சியாய்
பரமண் டலமிது என்றினிப் பகரும்
திருமுக திவ்விய தரிசனை சிறத்தலால்
அருள்முக ராஜ்என ஆர்ந்துரைக் காமிது (230)
சத்திய தேவ பிரம்ம குலத்தினர்
வித்துநா யகரென் வேதமா முதல்வர்
நித்திய வரமும் நீள்தவப் பலன்கொளப்
பத்திசெய் திங்கண் பரவிவாழ் வதலான்
சத்தியலோகம் எனும்பெயர் சாற்றும்
முத்திக் கொருவித் தெங்கோன் குருபரர்
பிரம்மப் பேரொளி பிறங்கியிங்குறலான்
பிரம்மலோகம் எனவிது பெயருறும்
தேவர்கள் யாவரும் மேவியிங் குறலான்
தேவலோ கம்எனச் செப்புதும் இதனை (240)
மெய்வழி காட்டி உய்வழி கூட்டி
பொய்ம்மல மாய்கை பொசுங்கிட நிசந்தவழ்
மெய்ம்மலி காட்சி மிக்குற எம்பிரான்
மெய்ந்நகர் என்று விளம்புறும் இவ்வூர்
மண்ணே ருழவர் விளைவொரு பாலுற
விண்ணே ருழவர் வித்துநா யகர்தயை
துயரறு மெய்ம்மை துலங்கநா வேருழும்
உயிர்ப்பயி ரேற்றும் ஊரான ஊரிது
மருவிடு வளம்நிறை வயலரு குறுஊர்
திருவய லூரெனச் செப்புதல் சாலும் (250)
அருங்குண நல்லார் அனந்தர்கள் வதிதலால்
திருஅனந் தர்புரம் சீர்பெயர் செப்புவம்
பார்பதி பங்கர் பரமரிங் காளலால்
பார்பதி புரமெனப் பகரவும் பெறுங்காண்
அஷ்டமா சித்திகள் அதுகடந் தப்பால்
ஸ்பஷ்டமாய் ஞான சித்தி உத்யோவன
சித்திகா னகமெனச் சீர்பெயர் கூறும்
அத்தனெம் முயிர்க்கு அருண்மழை பொழிந்து
திருவெலாம் எம்முயிர் தனில்பதித் தருளலால்
திருப்பதி எனும்பெயர் தேருமிப் பதிக்கே (260)
சித்தெலாம் இங்குற சிவபரம் எங்கோன்
சிதம்பரம் என்று திருப்பெயர் தரிக்கும்
நீதிமெய் யாட்சி நிகழ்தலான் இதற்கு
நீதி நகரெனும் நாமமும் நாட்டினர்
சாலைஆண் டவர்தயை திருவரம் நிறைதலான்
சாலை வளநா டெனும்பெயர் சாற்றுவர்
மந்திர மனைத்தும் மெய்யுருக் காட்டலால்
மந்திரச்சாலை யென்று வழங்குவர்
வேதம் அனைத்தும் மெய்ம்மை துலங்கலால்
வேதபுரியென விளம்புமிப் பதியினை (270)
சீரார் அங்கம் தெரிவுற நாட்டலால்
சீரங்கம்மெனத் தெளியலாம் இப்பதி
வருகொடு மறலியை விலக்கிடும் ஆணையால்
திருஆணைக்காச் சீர்பெறும் இப்பொழில்
ஒருதரு வதனில் பலகனி யுகுக்கும்
திருமிகு கற்பகத் தேம்பொழில் விருட்சம்
எழில்பெற இலங்கும் ஈடில் சிறப்பினால்
பழமுதிர்ச் சோலை எனப்பெயர் பகரலாம்
அருட்சீர் கொழிக்கும் அலைகடல் போல்வதால்
திருச்சீர் அலைவாய் செப்புநற் பெயராம் (280)
திருவாய் மலர்ந்து தேன்கமழ் பொழிலில்
அருட்குடி அனந்தர் ஆர்குலம் சிறத்தலால்
திருவா வினன்குடி எனும்பெயர் தகுமாம்
பெருமான் தயவு பெருகியங் கினிதே
திருவார்ஞானம் தெளியுநல் லூரிதால்
திருஆர் ஊரென திருப்பெயர் திகழும்
சாவினை வென்றிகொள் சற்சனர் வாழ்மலை
சாமிமலையெனச் சாற்றுவம் இவ்வூர்
திருக்கரம் தனில்மெய்ச் செம்மையோங் கிலங்கிடத்
திருத்தனி கையெனச் செம்மொழி சாற்றும் (290)
சமயமெ லாமிவண் சார்ந்தொருங் கடைதலால்
சமய புரமெனச் செப்புதல் ஒப்பும்
பண்டறி ஞானம் பகர்புர மாகலின்
பண்டறி புரமெனப் பகர்வது பொருந்தும்
காத்தருள் சிவனார் கதிதரும் காட்சியால்
காசி யெனப்பெயர் கூறுதல் நன்றாம்
ஜகமுயும் நாதத் திருவொலி யோங்கலால்
ஜகந்நாத் தென்று செப்பலாம் இதனை
அறித்து வாரக் கங்கை பெருகலால்
அறித்து வாரம் எனும்பெய ரிலங்கும் (300)
விருந்துமெய்ஞ் ஞானம் வழங்குமிச் சோலை
விருந்தாவனமென மாண்புறு மிப்பொழில்
குருவாய் திறந்து அருட்தேன் பொழிதலால்
குருவா யூரெனக் குலவியிங் குரைப்பர்
மதினா வேந்தர் வந்திங் குறலால்
மதினாப் பதியென வழங்குதல் சாலும்
விண்ணவர் கோமான் மெய்யருள் பெற்று
மண்ணகத் தடங்கினும் மக்கா துறலால்
மக்காப் பதியெனும் மாண்புறும் இவ்வூர்
தக்கார் தகவிலர் எனத்தெளி சாட்சி (310)
வருங்கசப் புச்சலம் அகற்றமர் புரிதலால்
செருசலம் எனும்பெயர் செப்புதல் பொருந்தும்
திருவிளங் கிடுமெய்ச் சிரமறிந் திருத்தலால்
திருசிர புரமெனச் செப்புவர் இதனை
வேதம் தெளிவுறு மெய்க்கான கமிதால்
வேதா ரண்யம் எனப்பெயர் புகல்வர்
குருபிரான் எழுந்தருள் குகையிலங் கிடலால்
குருத்துவாரெனக் குறிப்பதும் இதனையே
பத்து வயதுடைப் பாங்குயர் கன்னி
சித்தி நிலைப்பிடத் திருந்திங் கிலங்கலால் (320)
கன்னியா குமரி எனும்பெயர் சிறக்கும்
நன்னிலம் என்று நவிலலும் தகுங்காண்
திருநா கூர்மெய்த் திருமொழி தெளிதர
திருநா கேச்சுரம் நாகூர் என்பராம்
தன்சா வூரின் தரம்தெரிந் துய்தலால்
தஞ்சாவூரெனத் தகுமித் திருப்பதி
எத்தனை எத்தனை நாமம் உரைப்பினும்
அத்தனின் அருட்செயல் விரித்தலே ஆகும்
செப்புறு பான்மை சீர்பெறத் துலங்கும்
ஒப்பிலி யப்பர் ஓங்கு தபோவனர் (330)
கோடிபல் கோடி நாமமும் பொருந்தும்
கோடீஸ் வரகு பேரராம் நாயகர்
பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள்
எல்லாம் வல்லார் எங்குரு கொண்டல்
கல்லார் கற்றார் அனைவரும் களிக்க
உள்ளம் திளைக்க உயிர்கள் செழிக்க
வள்ளல் பெருமான் மதிமணி கொழிக்கும்
தெள்ளிய ஞானச் செல்வம் வழங்கும்
விள்ளரும் மெய்ச்செயல் விளங்கும் பதிகாண்
அள்ளக் குறையா அருட்பெரு நிதிகாண்
கள்ளம் தவிர்த்துயிர்க் களைப்பறும் கதிகாண் (340)
தோற்றம் முதலா இற்றைநாள் வரைக்கும்
வேற்றெவர் நிகரிலா மெய்ம்மறைத் துலக்கம்
ஆதியாய் அந்தமாய் அனாதியாய் விந்தையாய்
நீதியாய் நித்யமாய் நிர்மல சொரூபமாய்
அண்டம் அகண்டமாய் அணுவினுள் அணுவாய்ப்
பிண்டமாய் உணர்வெனும் பிழம்பாய்த் திகழ்வர்
விண்ணெனப் பரந்தவர் காற்றென விரிந்தவர்
மண்ணெனப் பொறையினர் வளம்பல நிறைந்தவர்
நீரெனும் தண்ணளி நிரம்பிய நீர்மையர்
பேரொளி கனலென வெம்மைமிக் குடையவர் (350)
உளர்என் பார்க்கு உளரெனப் பொலிபவர்
உளம்இருள் படிந்து இலையென் பார்க்கு
இல்லையென் றாவர் இறையெனும் பரம்பொருள்
எல்லையில் கருணையர் இன்பமெய் வாரிதி
நானென அகந்தை நவில்பவர் தமக்கு
தான்மறைந் திருப்பர் தன்னகம் அறிந்திறை
வானே பெரிதென மதித்திருப்பார்க்கு
தான்திரு தரிசனை தந்துஉய் விப்பர்
தோற்றம் முதலா இற்றைநாள் வரைக்கும்
வேற்றெவர் நிகரிலார் மெய்ம்மறை துலங்கும் (360)
கல்வியாய் கலைகளாய் கடந்தவிற் பனங்களாய்
செல்வமாய்ச் சீராய் செம்பொருட் பேழையாய்
நல்விதம் நல்லருள் நல்கிடும் வள்ளலாய்
தொல்லைசெய் ஏமன் துயர்தவிர் துணைவர்காண்
என்னுயிர்த் தெய்வம் இன்னுயிர் நாயகர்
மன்னுவி ராட்பதி மாதவத் தோன்றல்
புகழினை எழுதப் பெரியவான் ஏடாய்
அகல்கடல் மையாய் ஆர்வமிக் குற்று
கோடிநற் கரங்கள் கோடிபல் லாண்டுகள்
நாடி வரையினும் நாவுகள் கோடி (370)
நவின்றிவர் புகழை நலம்பெற உரைக்கினும்
எவர்க்கும் என்றும் எங்கும் இயலா
இணைதுணை கூறவோ இயலா தம்ம
அணையுடைத் தெழுந்து ஆர்த்திடும் வெள்ளப்
பெருக்குடை அருளால் புவியெலாம் காக்கும்
திருவுயர் தெய்வத் திருப்பெரும் மாட்சிக்(கு)|r}}
எவர்நிகர் எவரிணை நிகரிலை இணையிலை
தவப்பெரும் மாட்சித் தகைமை என்சாமி
எங்கோன் என்துரை என்னுயிர்க் கணவர்
பொங்கெழில் வாரிதி பொன்னடி போற்றி (380)
இருநூ றொடுநாற் பத்தேழ் எழுத்தாம்
திருவார் அங்கத் தீந்தமிழ்த் தாயின்
மூன்றுபத் தொடுமூன் றெழுத்துக்கள் இந்நாள்
ஆன்றநல் வழக்கா றிழந்தும் ஒலியின்
இலக்கணம் வழுவியும் எழிலது மங்கி
நலக்குறை வுற்று நற்பெயர் சிதைந்தும்
அங்கம் இழந்த அன்னையைச் செந்தமிழ்ச்
சிங்கம் என்போர் சிறுமைசெய் காலம்
சாலைத் தமிழெனத் திருப்பெயர் சாற்றி
கோலந் திகழும் தவமுனி யரசு (390)
அங்கம் அனைத்தும் அழகுற மிளிர
பொங்கும் சிறப்புறப் பொன்னார் மேனியர்
திங்கள் வதனர் திருமறை நூல்கள்
இங்கித மோங்க எம்பெரு மானார்
இயலிசை கூடகம் இனிமை துலங்க
வியப்புற இயம்பிய மேன்மையென்னுரைப்பேன்
தமிழே! தமிழே! சாலையர் அருளினில்
அமிழே! அமிழே! ஆண்டவர் புகழ்மணம்
கமழே! கமழே! கதிரொளி எண்டிசை
உமிழே! உமிழே! என்றுளம் போற்றுதும் (400)
யோகம் ஞானம் எனப்பெயர் சாற்றி
ஆகா நெறியுள் ஆழ்த்துபா சாண்டியர்
சிந்தையைக் கெடுக்கும் தீயர்வந்திங்கண்
மந்தை மந்தையாய் வழிகெடுத் திடுகால்
எந்தை அவற்றின் இயல்பறி வித்து
மந்திரத் திருவுரு மாண்புறக் காட்டி
கந்தம் தவழக் கலைபல தெளிய
தந்தம் மதங்களின் தனிச்சிறப் பொளிர
நந்தா விளக்கினை நற்றவர் தங்கள்
சிந்தா குலம்தவிர்ந் தோங்கிட ஏற்றிய (410)
பைந்தார் துளபர் பெரும்புகழ்ப் பெற்றியை
விந்தைச் செயலை மேன்மையை மாட்சியை
சிறியபுன் னாவால் செப்பவல் லேனோ
வறியசிற் சொற்களால் வரையமாட் டுவனோ
குருமகாப் பிரபுவின் கோத்திறம் தெளிய
அருமையை அறிய ஆர்வமுற் றீரே
ஆற்றுப்படுத்துதல்
நன்றுநன் றுங்கள் நாட்டம் சிறந்ததே
தென்றமிழ்ச் சீமை சேர்ந்தனிர் நன்றே
எம்பிரான் திருப்பதிக் கேகிட விழைந்தீர்
செம்பொருள் காணச் சிந்தையுள் விழைவு (420)
ஆகுக! ஆகுக! ஆற்றுப் படுத்துதும்
ஏகுக! ஏகுக! இறைநெறிக் கிசைந்து
திருசிரபுரத்தின் தென்பா லேகில்
வருமூர் சத்திய மங்கல மங்கண்
மேற்றிசை ஏகில் வழியிடை எங்கோன்
ஏற்றிய கொடிமரத் துச்சிகாண் குறுமோர்
தோற்றம் அதனின் தொடர்வழி ஏகில்
மாற்றறி யாமெய்ச் சாலைசேர் தும்மே
கீரனூர் தாண்டிக் கிளைவழி ஏகில்
சீராய்க் கீழக் குறிச்சித் தென்பால் (430)
மெய்வழிச்சாலை மிக்கிலங் கிடுமால்
உய்வழி கண்டு உவந்திட லாகும்
அன்ன வாசல் அதன்வட கிழக்கில்
தென்னன் சிவபிரான் சாலை திகழும்
இருபுறம் ஏரி இலங்கிடத் துலங்கும்
திருவுயர் சாலைச் சீரூர் சார்மின்
முள்ளார் வேலி முகிழ்ந்தங் கிருக்கும்
தெள்ளிய அனந்தர் தங்குமங் களவூர்
கடற்கரை நாவாய் கவிழ்ந்தெனக் குடில்கள்
நெடுநல் வரிசை நிரைநிரை யாய்த்தென் (440)
னோலையால் வேய்ந்த உத்தமர் விடுதிகள்
சாலையி லெங்கும் சார்ந்திலங் கிடுங்காண்
ஆலய முன்றில் அழகுபொன் துகள்மணல்
கோலமிக் கிலங்கிடும் ககனம் தொடுமென
ஓங்கிய கொடிமரம் ஒளிதிகழ்ந் தொளிரும்
பாங்குயர் துவஜம் பரிவுடன் நுடங்கி
தெள்ளிய ஞானம் தெளிவுற அருளும்
வள்ளல் பெரும்பதி வம்மினென் றழைக்கும்
கள்ளம் தவிர்த்தருள் வெள்ளம் பெருக்கிட
உள்ளம் உருகிட உவந்தழைத் திடுமிது (450)
கிள்நா மக்கொடி எனப்பெயர் திகழும்
அள்ளும் அழகுயர் ஆண்டவர் கொடியிது

அனந்தாதி தேவர்கள் இயல்பு

எளியநற் குடில்களில் தெளிவுறு மதியினர்
களிபெறு அனந்தர்கள் கனிவொடு வாழ்வர்
மந்திரச் சந்ததி மறைதெளி மாந்தர்
விந்தையார் மெய்ம்மை விளங்கிய பாங்கினர்
சாந்தம் தவழும் சற்சனர் தெய்வக்
காந்தன் கழலினைக் கவ்விய சிந்தையர்
சினமடங் கித்தெளி சித்திபெற் றுறைபவர்
மனமடங் கிக்குரு மரபெனும் மாண்பினர் (460)
அனந்தா தியரெனும் ஆண்டவர் திருக்குல
இனந்தான் வதியும் இவர்தம் பண்புகள்
புலைநுக ராத பொருந்துநல் உணவினர்
கொலைச்செயல் புரியாக் கோதறு குணத்தினர்
களவுசெய் யெண்ணம் கடுகள விலர்காண்
உளந்தனில் மெய்ம்மை ஓங்கு குணத்தினர்
போதைப் பொருள்களைப் பொருந்தா துறைபவர்
சூதாட் டம்சிந் தையினும் கருதார்
புகையெனும் அரக்கனின் பற்றினிற் கட்டுறார்
பகைதிரைக் காட்சி பார்த்திடாத் தூயவர் (470)
பிறர்குறை கூறாப் பேணுநன் மொழியினர்
அறந்திகழ் உரையே ஆற்றிடு சீரினர்
பால்நெய் தள்ளிய பத்திய உணவினர்
ஆலமர் கண்டர்க் கன்புமா ணாக்கர்
வழியுணா விடுதியுள் பசிப்பா டாற்றிடார்
பழிதரும் உலகினர் சாவுச் சடங்கினில்
பங்குகொள் ளாதவர் பேச்சினில் அரசிகழ்ந்(து)|r}}
எங்கும்பே சாதவர் ஏற்றவெத் தொழிலிலும்
இடையறா துழைத்துக் குறைவற முடிப்பார்
நடைமுறை வாழ்வில் நல்லறம் திகழ்பவர் (480)
ஆடவர் பெண்டிர் அழகுசி றார்கள்
தேடரும் சிறப்பின் திருமறை தன்னை
ஓவா திசைக்கும் ஒலிதிகழ் வாயினர்
மூவா முதல்வரை எண்ணுநற் சிந்தையர்
இணக்கமிக் குடைய இனிய தகையிறை
வணக்கம் புரிதல்மெய் வாழ்வின் குறிக்கோள்
சத்தியச் செந்நெறி சார்ந்திருந் தோங்கிப்
பத்தியம் கடைப்பிடி பாங்கினர் எம்மவர்
நித்திய வாழ்வெனும் நிலைவரம் பெறவே
அத்தனின் அருட்தாள் படிந்தங் குறைபவர் (490)
தேவாதி தேவர் திருப்புகழ் தன்னை
நாவாரப் போற்றும் நன்னா வுடையார்
கர்த்தாதி கர்த்தர் கழல்கதி யென்று
வித்துநா யகர்தமை வழிபடு மாட்சியின்
அதிதி யெனத்தகும் அன்புடை நும்போற்
புதியரைக் காணில் பொங்குமன் புடனே
வருகென அழைத்து வழிக்களைப் பாற்றி
அருகுற அமர்த்தி ஆண்டவர் மாண்பினை
இதயம் களிக்க எடுத்தியம் பிடுவர்
உதயம் செயும்மெய் யுணர்வு முகிழ்க்கும் (500)

பொன்னரங்க தேவாலயம்

மேரு மலையென மிகஉயர்ந் தோங்கிச்
சீரோங் காலயம் சிறந்தங் கிலங்கும்
ஆண்டவர் தரிசனைக் கார்வமுற் றீரேல்
வேண்டி வணங்கிட விழைந்தனிர் ஆயின்
பொங்கிடும் அன்புப் பொலிவுகொண்டீ ரெனின்
தங்கமார் எங்கள் தருமரின் மக்கள்
பழமும் புஷ்பம் படைத்ததாம் பாளம்
அழகுற ஏந்துவித் தாலய முன்றிலில்
தீர்த்தம் தெளித்துச் சுத்தீ கரித்து
சீர்மிகு தெய்வ தரிசனைக் காகத்
தேவரின் கோவிலுள் சேர்ப்பர்காண் கனிந்தே (510)
ஆவல்மிக் கினியீர்! அங்குறு காட்சிகள்
சத்தியப் பிடிமூப் பர்பன் னிருவர்
பத்திமிக் கோங்கு பண்புடை அனந்தர்கள்
நத்தியங் கினிதுறு நன்மன மக்கள்
வித்தக முனிவரர் வேதியர் சித்தர்கள்
மெத்தவும் அன்புடை மேன்மையர் எங்கள்
அத்தனின் அருட்திரு வருகையை நோக்கும்
பார்த்துகண் பூத்துப் பண்புடன் காத்து
ஆர்த்துக் கிடப்பர் அவரொடு நீரும்
அரனயன் மாலோர் திருவுரு வாய்வரு (520)
பரமரின் வருகை பார்த்திரும் ஐய!
குருமகான் எங்கள் கோதகல் கோமகன்
தரும துரைக்கோன் தயவொரு வடிவர்
திருமிகு தேவதே வர்கோன் இங்ஙன்
வருகா வருகை தருகுமக் காலை
எக்கா ளம்மணி இசைத்திடும் நல்லோர்
சொக்கே சர்திரு வருகைஊர்க் குணர்த்தும்
சுகமோர் வடிவர் சுந்தரர் வருகையை
நகரா முரசு நன்கதிர்ந் தொலிக்கும்
ஏந்து கரத்தினர் எந்தையை ஆரெழில் (530)
மாந்தி வணங்கி மன்னுயிர் செழிப்பர்

ஆண்டவர்கள் திருவருகையும் தரிசினையும்

புதியோர் தரிசினை பெறப்புகு காலை
விதிகடந் தோங்கு விமலர் திருவுளம்
கனிந்து இரங்கிக் காசினி மாந்தர்
இனிதுய்ந் திடவே எழில்தரி சினைதரும்
கடலிடை யிருந்து கதிரெழு தோற்றமோ!
திடமிகு சிம்மம் குகையினின் றெழுந்ததோ!
மலைமுகட் டெழுந்த முழுமதிக் காட்சியோ!
கலைமுனி யரசு கானிருந் திவர்ந்தரோ!
மண்ணிற் கிளர்ந்தெழு மாணிக்க ஒளியோ! (540)
பண்ணுடை யாழில் மீட்டஇன் னிசையோ!
வறியவன் பெற்ற வான்கொடைப் பரிசோ!
செறிந்தழ கெல்லாம் திரண்டஓ வியமோ!
அறிவெலாம் ஒருங்கிணைந் தாக்கிய சிற்பமோ!
நெறியெலாம் ஒருங்கு திரண்டபெட் டகமோ!
கற்பனை கடந்த தமிழ்க்கா வியமோ!
விற்பன வேந்தர் விமலர்மெய் நாயகம்
கற்பகத் தருஎமைக் காத்தருள் தாயகம்
பொற்பொலி ஆலயம் போந்தருள் எம்மான்
கண்டோம்! கண்டோம்! தேவ ஆவியை (550)
விண்டெம் வினைகடந் தேகடைத் தேற
என்றொலி எழும்பும் இருவிசும் பதிர
மன்றினில் எங்கோன் மனுமகன் வந்துறும்
தரிசினை ஒன்றே தவப்பலன் அருளி
இருவினை கடத்தித் திருவினிற் சேர்க்கும்
குருநா தாவெனக் கூவி அருள்வரம்
தருநா தாவெனத் தாழ்ந்தினி தேற்றிடும்
தெய்வ மேயெனச் செப்பும் தயவினால்
உய்வ மேயென உணர்ச்சி பூர்வமாய்
சமரச நாதா! சாதிகள் கர்த்தா! (560)
எமதுயிர்க் குயிரே! இணையிலா அரசே!
தேவ தேவே! திருக்கயி லாயா!
கோவே! எங்கள் குலத்தின் தெய்வமே!
வைகுண் டத்தினை வையகம் கொணர்ந்து
மெய்குண் டம்மென விளைவுசெய் வேந்தே!
கரணம் கெட்டுக் காலன் அமளியால்
மரணம் வரல்தவிர் மாதவ மணியே!
சரணம் சரணம் சாயுச் யக்குரு
பரனே! போற்றி! பதமலர் போற்றி!

மெய்வழி சார்தல்

போற்றிப் பணிதல் புகழ்துதிப் பாடல் (570)
ஏற்றி இறைஞ்சுதல் யாவும் பூர்த்தியாம்
தரிசனைக் குற்றோர் தாம்பா ளத்துடன்
வரிசையாய் வம்மின் என்றங் கறைவர்
அரிஅயன், சிவன்மும் மூர்த்தி கரமும்
ஓருரு வாய்வரு ஒருதனித் தலைமைப்
பெரும்பதி யரசைப் பணிந்திட விழைந்து
திருமுன் போந்த தக்கோர் தமக்கு
திருவுளம் இரங்கிச் செய்யபொற் கரத்தால்
அருளுவர் அமுது அதுபெறு ஜீவன்
உய்யும் இனிதே ஓங்குத போவனர் (580)
பையவந் தோர்முகம் பரிவுடன் நோக்கி
நாமம் ஊர்திறம் நலம்பிறப் பியல்பு
சேமம் செல்நெறி துறைசொலக் கேட்டு
மெய்வழி சாரும் விழைவின ராயின்
உய்வழி கூறி உற்றபத் தியங்களைச்
செப்புமின் ஜென்மத் தியல்புளத் தாய்ந்து
ஒப்பு விண்ணப்பம் உவந்தளித் துயிர்க்கென
எழுதிகை யொப்பம் இடத்திரு ஆணை
பழுதிலா தருளிப் பரமரெம் பெருமான்
தங்கச் சந்ததி சார்ந்தனை யென்றன் (590)
அங்கத் தினனென அன்புவந் தேற்பர்

பத்தியங்கள்

களவு, பொய், காமம், புலை,கொலை, கள்ளும்
உளமழி திரை,புகை, அரசியல், சூது,
மத,இன, மொழி,வெறி மற்றிவை யின்றி
இதமுயர் பண்புகள் இலங்குநல் லோராய்

நம்பிக்கைகள்

இறையுளர் அவர்தமை எத்துவித் திடுமெய்
நிறைமதி தீர்க்கத் தரிசியர் அரிய
மறையுள மானுடர் வாழ்வும் மரணமும்
நிறைகோல் நீதித் தீர்ப்புநாள் அதன்பின்
சுவர்க்கம் நரகம் தனில்நிலை வாழ்வு (600)
எவர்க்கும் உண்டு என்னு நம்பிக்கை
கொண்டவர்க் கேமெய்க் குருநெறி தெளிவாம்
கண்டவர்க்கே மெய்க் காட்சிகள் இலங்கும்

காஷாய தீட்சை, மூலமந்திர தீட்சை.

என்றறி வித்து இயல்பினால் நரனை
நன்றறி மனுவாய் நாதர்மாற் றிடுவார்
வென்றிகா ஷாயம் மேலணி வித்து
பொன்றிடும் நாளுடல் பேரெரி யுறாமல்
சத்தியம் கூறி மூலமந் திரமதும்
நித்திய நெறிமுறை வாழ்வெலாம் உரைப்பர்
ஆரா வமுதர் அழகு ரட்சிப்புச் (610)
சீரா அணியத் திருவுயர் ஆணை
அங்கீ காரம் அருளுவர் காண்மின்
தங்கமே ரெங்கள் தனிமுதற் பெருமான்

பிரம்மோபதேசம் அருளல்

மங்கா மணியெம் மாதவர் வழியில்
சங்கா திருந்து தகுதிமிக் குற்றால்
பொங்குமெய்ச் சாலைப் பொன்னரங் கையர்
தங்கள் திருவுளம் தயவுசெய் திரங்கி
மணிஉத ரத்தே இம்மனுத் தாங்கி
அணிதிகழ் தேவர் ஆக்குமெய்ப் பிறப்பில்
ஆக்கிட வரமும் அளித்திடும் அறிமின் (620)
போக்கிட மிதுவெனப் பொருந்திக் காண்மின்
வருபிறப் பொழிக்கும் மறுபிறப் பென்னும்
திருப்புனல் ஜன்மம், துவிஜன், மாற்றிப்
பிறத்தல் முரீது ஞானஸ் நானம்
அறத்துறை சார்ந்து ஆருயிர் காணல்
ஜீவனைக் கண்டு சிவபதம் அடைதல்
தேவனைக் கண்டு திருமிகப் பெறுதல்
என்றெலாம் புகழும் எழில்உப தேசம்
மன்றில் நடமிடும் மாதவர் அருளும்
பெற்றது பெரும்பரி சுற்றது உலகிடை (630)
கற்றவர் கல்லார் காணும் காட்சிகள்
உரைசெயல் எளிதோ உணர்வுறு மாட்சி
துரையெமக் கருளும் தேவமெய் யாட்சி
உளம்புகும் தெய்வ உத்தமர் கோமான்
விளம்பிடும் மேனிலை வைப்புகள் எண்ணில்
மந்திர உருவும் மறைகளின் தெளிவும்
தந்திறம் ஒளிரத் தருபெருங் கொடையும்
வரந்தரு திருவும் மதிமணி கொழிக்கும்
உரம்பெறு உள்ளம் உவந்துயிர் செழிக்கும்
இன்பவெள் ளத்தின் இனியமெய்ப் பெருக்கம் (640)
அன்புகொண் டோங்கி ஆர்ந்துளம் உருக்கும்
ஆதலின்
மெய்விழைந் தீரே! மெய்விழைந் தீரே!
மெய்வழி நேரே உய்வழி தேரே
நைவழி யாம்கருப் பைவழி கடத்தி
ஐவழித் துன்ப மைவழி தவிர்த்துண்-
-மைவழி ஓங்கத் தெய்வம் அருள்தரும்
மெய்வழி ஆண்டவர் மிக்குயர் தயவால்
வெய்ய எமன்படர் வீய்ந்தினி துய்ய
பையவந் தெம்மான் துய்யத் திருவடி
பற்றிட விழைந்து நற்றவப் பேறு (650)
உற்றிடு வீரேல் உத்தம நல்லிர்
எத்தனை கோடி இன்ப நிகழ்வுகள்
வித்தகர் திருவாய் மலர்மணம் கமழ்ந்து
வீசிடு வாசமெய் நேசம தோங்கும்
தேசுயர் ஞானச் செல்வமும் தேங்கும்

நாள் நிகழ்வுகள்

விஞ்சையர் உலக மெய்உஷைக் காலம்
செஞ்சொலர் புத்தர் தீர்க்கத் தரிசனம்
தஞ்சம் அடைஸ்தோத் திரமது பாடல்
பஞ்சணை எழுச்சிப் பாடிடும் இன்பம்
எங்கள் குலத்தகை இணையில் பெருமான் (660)
தங்களின் தவமார் தரிசனை உதய
நற்பெரும் நேரம் அற்புதக் காட்சி
பொற்புயர் மெய்வழி பொன்னரங் கையர்
அற்புதச் செல்வர் அனந்தா தியர்சங்
கற்பமு ரைக்கும் களிதவழ் நிகழ்வு
ஆண்டவர் ஆலயத் தெழுதரு கோலம்
வேண்டு வரங்கள் வழங்கிடு சீலம்
உருமகா லத்தே ஓங்குயர் தவம்செய்
திருமிகு அறவலம் செய்யு மாணாக்கர்
பிற்பகல் பரமர் பெறலரும் பேறாய் (670)
கற்பக அமுத மதிநிதி பொங்கும்
ஏலவல் லாரின் இணைமலர் தாள்பணி
மாலை வணக்கம் மாட்சியுற் றோங்கும்
வானோர்க் கினிய வைப்பெனும் நிதியம்
தேனார் அமுத வாக்கியம் பொழியும்
பொன்பத மதித்தாள் போற்றிசெய் திடுமோர்
ஒன்பது மணிக்கு உற்றுயர் வணக்கம்
சித்தம் கனிந்து உத்தமர் மேரு
புத்த பகவான் புகன்றுரை செய்த
தீர்க்கத் தரிசனம் செப்பிடும் மாட்சி (680)
ஆர்க்கும் அன்பர்தம் ஆருயிர் மீட்சி
அல்பகல் ஓயா அறஞ்செயல் விளையும்
பல்வரம் நல்கும் பாரா வணக்கம்
எக்கா ளங்கள் துந்துபி முழங்கும்
சொக்கர் ஆலயத் திருமணி ஒலிக்கும்
வேத மிசைக்கும் மேலவர் ஒருசார்
கீதமிசைக்கும் சீதனர் ஒருசார்
மாதவர் திருப்பணி யாற்றுவர் ஒருசார்
போதம் விரிக்கும் பண்பினர் ஒருசார்
தேடு கூடகச் செவியணி திருப்பண் (690)
பாடு பாங்கினர் பண்ணிசை யொருசார்
ஈடில் மான்மியம் இணையில் தேன்மழை
கூடி ஓதிடு குழுவினர் ஒருசார்
சாவா வரந்தரு சாயுச்ய நாதரை
ஓவா தேற்றும் ஒளிபெறு மாட்சியைப்
பாட வல்லேனோ! பதமலர் சிரமிசைச்
சூட வல்லேனோ! சொற்பெருக் காற்றி
நீடுபு கழ்தனை நிகழ்த்தவல் லேனோ
தேடரும் சிறப்பினில் தோய்ந்து களித்து
ஆடவல் லேனோ அனந்தா தியரெனும் (700)
சீடர்கு ழாத்திடை சிந்தை பூரித்துக்
கூட வல்லேனோ கோதறு குணத்தின்
என்னுயிர்க் காதலர் இணையில் சோதியர்
பொன்னரங் கையர் பொற்பதம் போற்றி
மதிநிறைந் தோங்கும் மார்கழித் திங்கள்
கதிதரும் கடைநாள் கர்த்தரெங் கோமான்
திருவவ தாரம் செய்த மெய்த்திருநாள்
இனிப்புகள் தேனும் இறையவர் எங்கோன்
தனித்தலை மைக்குச் சமர்ப்பணம் செய்வர்
கசுர்க்கா யமுது கர்த்தர் வழங்கும் (710)
இசைதை முதல்நாள் பொங்கல் இலங்கும்
சொக்கே சர்எம் துரைகுரு கொண்டல்
முக்கூர் கத்தி திருக்கர மேற்றுப்
பானைப் பலிசெய் பேரெழிற் காட்சி
தேனைச் சிந்தை தனில்தேக் கிடுங்காண்
தேவர் கோவில் தொழுவகம் சார்ந்த
ஆவினம் களிக்க அனைவரும் செழிக்க
காணும் பொங்கல் வானவர் அமுதம்
மாணும் சிலம்பம் கும்மிகோ லாட்டம்
அல்ல லறுத்த அமரரா லயத்தே (720)
எல்லை கடந்த இன்பம் பொங்கும்
பங்குனி நன்மதிப் பௌர்ணமி நாளில்
எங்குரு பெருமான் ஏந்தலர் தனிகை
தங்குரு கண்டு தம்மனைக் கழைத்து
இங்கித மாவின் அப்பமும் தேன்பால்
அங்கினி தருத்தி அருளுப தேசம்
பொங்குயிர் களிக்கப் பெற்றினி தோங்கி
மங்கிடா வாழ்வில் வயங்கியும் நம்மைப்
பங்குற வைத்த பங்குனித் திருநாள்
அன்றெம தையர் ஆன்றசற் குருவொடு (730)
சென்றனர் அகிலத் திருவலம் சிறந்தே
காடுகள் மேடுகள் கழனிகள் சிற்றூர்
நாடுகள் நகர்கள் நலம்சுகம் எண்ணார்
குளிர்பயம் வெயில்மழை கொடுவிலங் குறைகான்
துளிசலிப் பிலராய் தொடர்ந்துசெல் காலை
தங்கள் தாதை தருமறி வமுதம்
பொங்கிடு ஞானம் பொழியலை கடலாய்
எங்குரு சாமி ஏன்றனர் இதயம்
அங்குஅக் காலம் அவருறு துயரம்
சொல்லில் அடங்கா கல்லும் உருகும் (740)
அல்பகல் ஊணும் உறக்கம் கருதார்
நிலம்பட ராத நேமியர் நற்றாள்
நிலமகள் களிக்க நிலம்படர்ந் தனவே
ஆன்றசற் குருவின் அருண்மொழி வண்ணம்
ஏன்றனர் மறிகளை மேய்த்தொழில் அணியாய்
அங்ஙனம் ஓராண் டாகிய பின்னர்
தங்குரு வாணை திருப்பரங்குன்றில்
பொங்கெழிற் சுனைசார் பொருந்திய குகையில்
ஐம்புல னடக்கி அருட்பெருஞ் ஜோதி
உம்பர் பெரும்பத ஊசி முனைதனில் (750)
தெம்புட னூன்றித் திருத்தவ மாற்றும்
ஊணும் உறக்கம் ஓரணு வும்மிலை
வானுயர் மேரு வளர்கற் பகத்தரு
வாடாப் பெருந்தவ மாற்றிமெய் விளைந்து
தேடரு நிதியம் சன்னதம் பலவாய்
தாங்கினர் தங்கள் திருக்கர மிசையே
பாங்கினர் எங்கள் பரமனார் இனிதே
சங்கொடு சக்கரம் தண்டா யிதம்வேல்
பொங்குவில் உடுக்கை பொலிந்திடு சூலம்
கிள்நா மம்ப ராங்குசம் பட்டயம் (760)
தெள்ளிய சன்னதச் சீர்பல துலங்கும்
இத்திரு நாளை இயல்வை காசியில்
வித்தக அனந்தர் வியந்துகொண் டாடும்
குருதிரு மணியைக் கூடியக் காலம்
அருகணைத் தென்றும் அகலோம் என்று
அன்றிலும் பேடும் ஆரொளி மணியும்
தென்றலும் இதமும் தேனதும் சுவையும்
நகமொடு சதையும் நல்லுயி ருடலும்
தகவுயர் தனிகை மலைதனைப் பிரியோம்
என்றிணைந் தெங்கள் ஏந்தலர் எண்ண (770)
மென்றிரு மேனியர் விளம்புமோ ராணை
“நன்றென தருமை நன்மணி மகவே!
மன்றினி லாடும் முழுமுதற் சிவமே!
அன்றுவிண் ணரங்கில் அமரர்கள் சபையில்
நன்றுநிற் களித்த நல்லுரைப் படியே
இறுதி நீதித் தீர்ப்பு நடாத்திட
உறுதிகொண் டிந்த உலகிடைப் போந்து
பொய்ம்மை மிகுந்த பூவுலகிதனில்
மெய்ம்மை மறைந்துள வெங்கலி காலம்
இத்தரை மாந்தர் முத்தர்க ளாக (780)
நித்திய வாழ்வில் நிலைத்திடச் செய்ய
கருப்பை சார்ந்திடில் கவியும் மதியிருள்
திருப்பித் தெளிமதி யோங்கிடச் செய்யும்
என்றனின் கடமை இனிது முடிந்தது
நன்றுநீ ஞான ரதம்நடத் திடுக!
நிகரில் தவமே ரெனும்சிறப் பினரே!
சுகவா ரிதியே! சுந்தர மகவே!
தேடற் கரிய செல்வக் குவையே!
ஈடில் திருவாக் கருள்திரு நாவோய்!
வாக்குமி யேயிவ் வையகம் மெய்யில் (790)
ஆக்குமெய் யண்ணலே! அருட்பெரு நிதியே!
மகரிஷி மார்க்க நாதர்வ ரோதய!
சகத்தினி மகவே! தவமுனி யரசே!
சொல்வாக் கெல்லாம் நல்வாக் காகும்
செல்வாக் குடைய தேவதே வேசா!
செல்லுக உலகிடை திருவரு ளாட்சி
வெல்லுக கலிபவம் விளைகி ருதயுகம்
கலைமலி காட்சியே! கருணைவா ரிதியே!
இலைநிக ரெதிருமக் கென்று மெத்திசையினும்
நிலம்நிகர் பொறையே! மலர்நிகர் மென்மையே! (800)
மலைநிகர் திண்மையே! துலைநிகர் நிதியே!
உலகெலாம் பலகால் ஓடி ஓய்ந்திடினும்
நலம்கனி நிற்கிணை நவிலவோர் மகவிலை
சுத்தவை ராக்கியத் தூய மாணாக்க!
சித்தத் தடம்திடம் செறிந்த கோமகனே!
கலங்கேல் கனியே! கதியே! நிதியே!
நலங்கேள்! அன்றுநீ நவின்றதிக் கட்டளை
சென்றுவா கலியை வென்றுவா செல்வமே!
உன்றனின் கூடவே உவந்துநான் வருவேன்”
இங்ஙனெம் பாட்டனார் இனிதெடுத் துரைக்க (810)
தங்கமே ரெங்கள் தனிப்பெருங் கருணையர்
இடியொலி கேட்ட அரவென மயங்கும்
கடியவெவ் விருளில் தனித்தொரு அறையில்
நெடுதுய ருழக்கும் குழவியைப் போலும்
கலைபிரி மான்போல் துணைபிரி அன்றிலாய்
துடித்தனர் நெஞ்சம் துயர்மிகக் கண்ணீர்
வடித்தனர் இந்த வையக மெல்லாம்
அடித்தலத் திருந்து அகன்றபோ லுணர்ந்து
பொடித்திரு மேனி அணுவணு வாகப்
பிய்த்தெறிந் ததனைப் பெருங்கொடும்புலிகள் (820)
மொய்த்தது போலும் மிகுதுய ருழந்தனர்
வருந்தினர் மயங்கினர் வகுத்தவோ ராணை
குருமொழி யாகலான் கடந்திட வியலா
தேகினர் துடித்து இனியமெய்ஞ் ஞானம்
போகியர்க் காகா யோகியர்க் கீவோம்
எனவுளம் கருதி எங்கணும் தேடி
தனித்திறை மதுரை அந்திக் கடையாம்
பொட்டலில் வாழ்ந்த பொய்ப் பாசாண்டியர்க்-
-கிட்டமு டன்மெய் இயம்பிய காலை
ஏலா தன்றியும் இழிசெயற் கஞ்சா (830)
ஏலுமென்று ரைப்ப எங்குரு பகவான்
காவி சடைமுடி தரித்தோ ரெல்லாம்
சேவைகள் செய்மெய்த் துறவிய ரன்று
என்றுடன் காவி உடைகிழித் தெறிந்து
நன்றினி குடும்ப நற்றுணை போல்வோம்
எனவெழில் உடைகள் இனிதணிந் தனர்காண்
மனங்கவர் மாட்சி மாதொரு பாகர்
பெருமா னங்கெடு மறலியி னிடர்தவிர்
பெருமா னெம்முயிர் நித்தியம் பெறவருள்
தருமா னம்மிது இல்லற வாசிகள் (840)
குருமான் மியர்திரு வுளமதி லுற்றிடு
கருமா னக்குடி யேறிய காட்சியோர்
வருமானம் என தாருயிர்க் கானது
பொல்லா மனத்தின் பிழைகள் தோஷமாம்
சொல்லாற் செய்பிழை குற்றமாம் உடலாற்
செய்பிழை பாவமாம் அன்னவற் றாலே
எய்தும் நரகமாம் அதனின் மீட்க
அருட்பெருஞ் சோதி ஆண்டவர் தனிப்பெருங்
கருணையர் பெருமான் கோதறு நாயகர்
தேவ கோமான் திருவுள மிரங்கிப் (850)
பாவ விமோசனத் திருமந் திரத்தை
உளங்கனிந் துருக ஓதுவித் துய்வித்(து)|r}}
களங்க மறுத்துக் கசடறு நெறிதனில்
நின்று நிலைக்க நித்திய மருளும்
நன்றெம தையர் நலந்தரு முயிர்க்கு
இச்சைமிக் கியற்றிடப் பவவினை கருக
பிச்சை ஆண்டவர் பேரெழில் கோலம்
கொண்டெம தையர் தூய்மதி ஆசனர்
பண்டை வேதியர் பொன்னரங் கையர்
வந்தருள் தந்தெம் வாழ்வு சிறக்க (860)
விந்தை விளைக்கும் விமலா தித்யர்
ஆர்க்கும் அலைசெறி ஆழிசூழ் ஞாலம்
கார்க்கும் தீதிருக் கரங்கொண் டெழுந்து
தீர்க்கும் பிறவிப் பிணிதனை எங்கோன்
ஆரொளி தீபம் ஆயிரம் ஆயிரம்
ஆலயத் தனந்தகி அம்மையர் ஏற்றிடு
கோலம் புகழ்தற் கெளிதோ அம்ம!
உலகு புரக்க எழுதரு நாயகர்
அலகில் அருட்பெருஞ் ஜோதியர் எம்மான்
ஓய்வொழி வின்றி உடற்றிடு தவத்தான் (870)
மேவி விளைவுறு மிகுபலம் ஒவ்வொரு
திங்களும் பூரணை நாளினில் துலங்கும்
பங்கதிற் பெற்றுப் பரசுகம் ஓங்க
அப்பெரு மாட்சி அமலாண் மையினை
ஒப்புடன் அனந்தா தியருளம் மகிழ்ந்து
வானுயர்ந் தோங்கி விளங்கு கம்பத்தே
கோனெழிற் கிள்நா மக்கொடி தன்னை
ஏற்றிக் களிப்பர் இன்பம் துளிர்ப்பர்
மாற்றறி யாப்பொன் மேனியர் பெருமான்
மூவா முதல்வர் மெய்வழி ஆண்டவர் (880)
தேவதே வேசர் திருவருட் தயவால்
சாவா வரம்பெறு சாயுச் யர்க்கு
ஜீவ பந்து உரிமைக் காட்சியும்
தேவனாம் நாற்பதாம் நாட்திருக் காட்சியும்
ஆண்டு பூர்த்தியும் அழகுற நடாத்தும்
ஆவிடை யோனியில் அனந்தர்கள் பிறந்து
சாவில ராகிய தனித்திரு நாளைப்
புனல்ஜென் மத்திரு நாளெனப் போற்றும்
இனிமை கனிந்திடு இன்ப விழாக்கள்
அனந்தா தியர்தம் அறங்கெழு வாழ்வில் (890)
இனந்தான் பெருகி ஏற்றம் உறுங்கால்
பொற்புகு குழவி பொலிவுறப் பிறந்து
இற்புகு நாற்பதாம் நாள்தீர்த் தம்இடல்
புதுமுடி வைத்தல் நாமம் சூட்டல்
இதமுடன் காதிற் பொன்னணி பூட்டல்
இருதுமங் கலங்கொண் டுறுநாற் பதுநாள்
பெருமகிழ் தீர்த்தம் பெய்துமனை புகல்
ஆதி தேவன் அருட்திரு முன்னில்
நீதித் திருமண நிகழ்ச்சிகள் பலவாம்
வருபிறப் பறுக்கும் மறுபிறப் புற்று (900)
பெருஞ்சிறப் போங்கும் புனிதநாள் தன்னில்
புதியநன் நாமம் பெறுதலும் உயர்ந்த
நிதியெனும் அனந்தர் அனந்தகி பட்டம்
பரிசுப தம்பெறு பாங்குறு காட்சிகள்
பெரிதும் காணுற லாகும் பெருமான்
அருள்கனிந் திளகி இருள்கெட ஒளிசேர்
திருமறை மணிபொழி திவ்யவாக் கியம்பெயல்
சபையிற் புதியோர் சார்ந்துஉய் காட்சிகள்
நவைதீர் காஷா யம்பெறு நலமும்
கோலந் திகழும் கோமான் தயைதரு (910)
மேல்நிலை தீட்சா வைப்புகள் நிகழ்வும்
திருவுயர் பாகை திகழனந் தர்களும்
சிரகா ஷாயம் சேர்அனந் தகியரும்
ஆலய முன்றிலில் அழகுறத் திரண்டு
கோலஞ் சிறக்கக் கூடிடு பேரெழில்
தாமரைக் காடு பூத்ததோ என்னக்
காமுறு காட்சி காணுறும் அன்னவர்
வணக்கம் புரிதலும் மகிழ்ந்தொருங் கிணைந்து
இணக்கமொ டமர்ந்து எம்பெரு மான்புகழ்
ஏற்றியும் போற்றியும் இதயம் நெகிழ்ந்து (920)
ஆற்றிடு முத்திப் பேருரைப் பொழியும்
ஆண்டவர் திருமுன் அங்கம்நெக் குருகி
வேண்டுவ ரம்பெற விழைதலும் பாடலும்
தெய்வத் திருவருள் மாட்சியால் அவர்கள்
எய்திய அதிசய இன்ப நிகழ்வுகள்
விளம்பவும் கேட்டோர் வியத்தலும் நெகிழ்ந்து
உளம்புகும் தெய்வ ஓங்குயர் மாட்சி
ஆதலால் எம்மான் ஆண்டகை திருப்புகழ்
காதலால் கேட்ட கனிவுடை அன்பரீர்!
பூதலத் திதுவோர் புதுமையார் பழமை (930)
மேதலத் தியல்பை விளக்குமெய் வளமை
மனுவெனப் பிறந்தவர்க் கவசியக் கடமை
கனிந்தது சார்ந்தவர்க் கினியநல் உடமை
உய்ந்திட விழைபவர்க் கருமையில் அருமை
மெய்வழி தெய்வத் திருவருட் பெருமை
கற்றிட வேண்டுவோர்க் கரிய மெய்க்கல்வி
உற்றுயிர் உய்ந்திட உதவிடும் செல்வம்
கலைகளின் சிகரம் சாகாக் கலையே!
இலைநிக ரெனத்தகும் மேரெனும் மலையே!
ஞானரத் னாபர ணம்நிறை கடையே! (940)
வானமு தம்பெருக் கோடிடு மடையே!
திக்கிலை என்பவர்கட் குற்றநல் உறவே!
சொக்கர்எ னைப்புரந் தார்துயர் அறவே!
மக்களுக் கிரங்கி மண்ணகம் வந்து
புக்கிலாய் உயிர்க்குப் பொருந்து மாதவரின்
மிக்குயர் சிறப்பை விளம்பவல் லேனோ
துக்கம் தவிர்த்த தயவுரைப் பேனோ
கருவினி லிருந்து காத்திவண் கொணர்ந்து
அருவினை கடத்திய அருளுரைப் பேனோ
அன்பொடு நோக்கி அங்கந் தனிலே (950)
தென்புரைத் தேற்ற திருவுரைப் பேனோ
தெய்வமென் றறியாச் சிறுமொழி புகன்றேன்
ஐயர் பொறுத்த அருளுரைப் பேனோ!
தன்னிலை விட்டு என்னிலைக் கிரங்கி
என்னுயிர் காத்த இயல்பு ரைப்பேனோ!
கற்றவ ருக்கதி கற்றவ ராய்ப்புகழ்
உற்றவ ரோதயர் உயர்வுரைப் பேனோ!
கல்லா தவர்பொரு ளில்லார் எளியரை
நல்லா தரவருள் நலமுரைப் பேனோ!
வித்தக ரெனத்தமை வியந்திடு மதகரி (960)
மத்தகம் பிளந்தெரி மாண்புரைப் பேனோ!
நாற்றப் பயல்எனை நற்றிரு மணிச்சூல்
ஏற்றுஈன் றருள்கொடை மாண்புரைப் பேனோ!
பவக்குறை தவிரத் தவப்பலன் அளித்த
சிவத்திரு மேனிச் சிறப்புரைப் பேனோ!
நரன்தனை மனுவாய் மனுஅம ரர்எனத்
திருவருள் செய்த திறமுறைப்பேனோ!
வேதம் விளங்க மண்படி யாத
பாதம் அருளிய பண்புரைப் பேனோ!
இருள்நயந் திருந்த ஈனனேற் கரிய (970)
அருளமு தளித்த அன்புரைப் பேனோ!
பொன்மெரு கேற்றிப் பொலிந்தது போல்மிளிர்
என்குரு மேனியின் எழிலுரைப் பேனோ!
வெண்பஞ் சோபனி யோஎனத் திகழும்
ஒண்மணிச் சிகையழ குவந்துரைப் பேனோ!
வளர்பிறை யோபட் டயமோ எனுமெழில்
ஒளிதிகழ் நுதலின் உயர்வுரைப் பேனோ!
தொல்பழ வினைகெடத் துகள்செயும் சரம்விடு
வில்லெனும் புருவம் வியந்துரைப் பேனோ!
அருள்நயம் கனிந்து இரக்கம தியங்கும் (980)
கருணையொண் விழிகள் கண்டுவப் பேனோ!
முப்புர மெரித்த திருவிழி நோக்கின்
செப்பம் உரைக்கச் சிறியன்வல் லேனோ!
உள்ளமர்ந் தோடா உயர்தவ மூச்சார்
எள்மலர் நாசி ஏர்புரைப் பேனோ!
செம்பவ ளம்செவ் வல்லி இதழ்நேர்
எம்பெரு மான்திரு வாயெழில் காண்மின்!
போதம் அருளிப் பெருநிலைக் கேற்றும்
கீதத் திருவாய் கிளந்துரைப் பேனோ!
இளநகை பிறங்க அமுதுகு திருவாய் (990)
இளஞ்சிவப் பாரிதழ் எழிலுரைப் பேனோ!
மாதுளை முத்து வரிசையும் முல்லைப்
பூதிகழ் திருப்பல் அழகுரைப் பேனோ!
மறைமணி யமுத கனிமொழி பொழியும்
துறைதிரு நாவின் சிறப்புரைப் பேனோ!
வெள்ளப் பெருக்கு மேவிடு பேரொளி
கள்ளம் தவிர்மொழி கதியுரைப் பேனோ!
கமழ்கற் பூர மணமிகு பொங்கும்
எமதுறை திருவாய் எழிலுரைப் பேனோ!
வெள்ளப் பெருக்கின் மிக்கொலி நெஞ்சம் (1000)
அள்ளும் திருமொழி ஆர்ந்துரைப் பேனோ!
உயிரனைத் துய்ய உவந்தருள் திருவுள
துயரறு மொழிதரு சுகமுரைப் பேனோ!
அமுதுகு அருண்மழை பொழிதரு பொழுது
எமதுயிர்க் களிப்பின் எக்களிப் பளவோ?
மண்ணகம் வந்த விண்ணக நிறைமதி
தண்ணெழில் திருமுகச் சீருரைப் பேனோ!
வலம்புரிச் சங்கம் விளங்கெழில் திருவார்
நலங்கனி மிடற்றின் நலமுரைப் பேனோ!
வித்தகர் எங்கோன் மெய்வழி தெய்வம் (1010)
மத்தக மார்பின் மாண்புரைப் பேனோ!
கொண்டலை விஞ்சும் கொடைக்கரத் தழகை
விண்டுரைக் கென்நா வலிமையும் உளதோ?
பொன்வட் டில்எழில் பொங்கிடு மழகார்
மென்உத ரத்திரு மாண்புரைப் பேனோ!
துயர்கெடு தவமதி லிருந்திட அமர்ந்த
வயிரத் திருத்தொடை மகிழ்ந்துரைப் பேனோ!
வெண்கலம் விளக்கி வைத்தன போல்திகழ்
ஒண்கழல் அழகின் உயர்வுரைப் பேனோ!
என்னித யத்தில் எழிலுற அமர்ந்த (1020)
பொன்பது மத்தாள் பொலிவுரைப் பேனோ!
வளரெழில் குலவி மனங்கவர் நடைபோன்ம்
தளர்நடை தவதரி சனைபொழு திலங்கும்
உரையின் அளவைக் கடந்தவான் புகழின்
உச்சிக் கலசம் எங்குரு கொண்டல்
சாதிச் சமயச் சழக்கினைச் சாடிய
வேதியர் ஆரெழில் விளம்பவல் லாரார்
வரந்தரு திருவும் நிரந்தர வாழ்வும்
தருங்கிரு பாகரர் திருவுரைப் பேனோ
எண்ணிய எண்ணியாங் கெய்துவித் திடுமென் (1030)
புண்ணியர் பொற்றாள் பணிந்திருப் பேனோ
முன்னழ கார்ந்து மொழிஎழி லுவந்து
பின்னழ கார்ந்து பெரிதுகா முற்றேன்
முன்தொழும் பின்தொழும் முழுமுதல் எங்கோன்
சென்றிடு திக்கெலாம் தொழுதெழும் எளியேன்
என்போற் றேகம் எடுத்துறை சோதர!
நின்பாற் சேதி நன்றொன் றுரைக்கும்
நாயகர் திருப்பதம் நண்ணிட விழைந்த
தூய மனத்தீர்! செப்புவன் கேண்மின்
பிறந்தீர் வளர்ந்தீர் வாழ்ந்தீர் நாளை (1040)
இறந்திடும் நாள்வரும் எங்கெது செய்வீர்?
செல்லும் காலை நல்வழி அல்வழி
எல்லோ ருக்கும் உண்டென அறிமின்
சாதலின் பெரிய துன்பமொன் றில்லை
சாதல் இலாப்பே ரின்பமெய் எல்லை
சாகாக் கல்வி என்றொன் றுண்டு
ஏகாப் பெருவெளிக் கேகிடும் நன்று
இறப்பொடு வாழ்வு முடிவது மில்லை
இறவாப் பெரும்பே றிருக்கும்மெய் எல்லை
எமன்படர் அமலில் இருப்பது சாவு (1050)
எமபயம் கடத்தி இறைதரும் வாழ்வு
படைத்தவித் தடக்கம் ஜீவப் பயணம்
படைத்தமெய்த் தெய்வத் தாளினில் சயனம்
இப்புவி உய்ய மெய்பெரும் பரிசு
செப்பரும் மெய்வழி செய்வழி எனத்தேர்
மெய்ம்மை துலங்க வேதம் விளங்க
மெய்வழி ஒன்றே எனத்தெளி நன்றே
பிறப்புறும் தன்மை பொறிபுல னிவற்றால்
சிறப்பென இன்பம் துய்த்திடு முறைமை
இன்பம் விழைதல் அன்பை உவத்தல் (1060)
துன்பம் வெறுத்தல் செல்வ நயப்பு
வாழ்வுறும் போது மகிழ்ச்சியில் மிதத்தல்
சாவுறல் நினைத்து சஞ்சல முறுதல்
அஞ்சல் அலமரல் அலறிவீழ்ந் தரற்றல்
வஞ்ச உலகிடை வாழ்வதில் பொதுதான்
மீட்பறி யாதிவர் மெலிதல்கண் டிறைவர்
தாட்டிமை யாற்தவ மாட்சியின் திறத்தால்
பொங்கரு ளாலெமைக் காத்திடத் தங்கள்
அங்கத் தேற்ற அன்பினுக் கேதிணை
பூத்தெம துயிருட் பொலிந்திடு தெய்வம் (1070)
ஆர்த்தெமை ஆண்டுகொள் அருட்பெருஞ்சோதி
கோலம் திகழ்கோ மான்குரு கொண்டல்
சீலம் மிகுந்த தெய்வநன் நாயகம்
சாலை ஆண்டவர் என்றறி மின்கள்
ஆயிரம் ஆயிரம் நாமமிங் குடையார்
தாயின் மிக்க தயவுடைத் தெய்வம்
தூயமெய்ச் சிந்தையுட் துலங்கிடும் அண்ணல்
ஆய்கலைக் கதிபர் அறிவுரு எம்மான்
சாலை ஆண்டவர் திருவடி சரணம்
மேலைமெய் வழிமருந் தென்னும் தயைசெய் (1080)
பொன்னரங் கையா! பொற்பதம் சரணம்
இன்னல் தவிர்த்த இணையடி சரணம்
வின்னமில் லாதமெய் வாழ்வருள் வேந்தே!
கன்னல் சுவையார் கனிமொழி யமுதரே!
தென்னன்பாண் டியரே! திருவடி சரணம்
அன்னையே அத்தா அருட்குரு தெய்வமே!
என்னுயிர்க் குயிரே! எழில்பதம் சரணம்
அகில மெலாம்நின் அடிமலர் பணிந்து
சகலரும் சத்திய மெய்வழி சார்ந்து
உய்ந்திட அருள்வீர் ஓங்குயர் நின்புகழ் (1090)
வையகம் வந்த வானே வாழிய!
செய்யபொற் றாள்மலர் சரணம் சரணம்
ஐயா சரணம் அமலா சரணம்
மெய்வழி தெய்வமே! வேந்தே! சரணம்
துய்யா! துரையே! தேவதே வேசரே

ஏற்றெமை ஆண்ட இனியரே!
போற்றி ஜயஜய! போற்றி! போற்றி! (1097)

திருவருட்சாலை ஆற்றுப்படை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!