உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/085.தவத்ததிகாரம்

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.85. பெருங்காப்பியம்

[தொகு]

இலக்கணம்:-

காப்பியம் என்பது தொன்மையான கதையினை அல்லது உண்மையான திருவரலாற்றைத் தொடர்நிலைச் செய்யுட்களால் அடிநிமிர்ந்து செல்வனவாக யாக்கப்பெறுவது.

தொன்மை தானே சொல்லுங் காலை
உரையொடு புணர்ந்த பழமை மேற்று
- தொல்காப்பியம்  - பொருளதிகாரம் -538
இழுமென் மொழியால் விழுமியது நுவலினும்
பரந்த மொழியா னடிநிமிர்ந் தொழுகினும்
தோலென மொழிப தொன்னெறிப் புலவர்
- தொல்காப்பியம் -பொருளதிகாரம் -539
தொடர்நிலைச் செய்யுள் பாட்டுப்பல தொகுத்துத்
தலை யிடை கடையென நுவலவும் படுமே
- பன்னிரு பாட்டியல்  - 225
“பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொரு ளிவற்றினொன்(று)
ஏற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித்தாகித்
தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய்
மலைகடல் நாடு வளநகர் பருவம்
இருசுடர் தோற்றமென் றினையன புனைந்து
நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல்
பூம்பொழில் நுகர்தல் புனல் விளையாடல்
தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென்(று)
இன்னன புனைந்த நன்னடைத் தாகி
மந்திரந் தூது செலவிகல் வென்றி
சந்தியிற் றொடர்ந்து சருக்கம் இலம்பகம்
பரிச்சே தம்மென்னும் பான்மையின் விளங்கி
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றிய தெனப்”
- தண்டியலங்காரம்  - 8

இவ்விதமாக இலக்கண நூலார் வகுத்த முறைப்படி எல்லாம் வல்லார் என் குரு கொண்டல் தனிப்பெருங்கருணையர், அருட்பெருஞ்சோதியர் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் புனித பூரண அற்புத, திவ்விய, ஈடுஇணை கூற வியலாத மகாமான்மியத்தை, அருள்திரு வரலாற்றினைக் காப்பியமாக இயற்ற வேண்டும் என்ற தகுதிக்கு மீறிய பேராசை எளிய எனது உள்ளத்தில் முகிழ்த்தது. அதன் விளைவு இச்சிறு நூல். பன்னூற் பயிற்சியும் பெரும் செழுந்தமிழ்ப் புலமையும், இலக்கணத் தேர்ச்சியும் இல்லேன் எனினும் ஆசைக்கு அளவுமில்லை வெட்கமுமில்லை ஆகலான் எளியேன் மொழிந்துள்ளவற்றில் யாதானும் பிழையிருப்பின் பொறுத்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று என்குலதெய்வ தேவேசரை, பிரம்மத்தை அறிந்த அனந்தாதி தேவர்களை, பைந்தமிழ்ப் புலமைமிக்க ஆன்றோர்களை மிகமிகப் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன். இக்காவிய நாயகர் பாட்டுடைத் தலைவர் எல்லாம் வல்ல இறைவர், முழுமுதற்பொருள், அளவிலா அருளாளர், நிகரிலா அன்புடையர், அருட்பெருஞ்சோதியர், தனிப் பெருங்கருணையர், சுயம்பிரசாசர், நித்தியானந்தர், பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள். அவர்களின் மாட்சி எத்தன்மைத்தோவெனின் எந்த ஒரு சாம்ராஜ்யாதி பதிகளாலும், வல்லரசர்களாலும், மதஸ்தாபகர்களாலும், சமயாச்சாரியர்களாலும் செய்ய இயலாத அளவில் சாதி, மத, இன, மொழி பேதங்களைக் களைந்து அனைத்து சாதி மத இனத்தவர்களையும் ஒருங்கிணைத்து, கலந்து, மருவித் திருமண சம்பந்தம் கொண்டு பேதமற்று வாழும் சமரச சுத்த நன்மார்க்க மாகிய மெய்வழியை உண்டுபண்ணி, புலை கொலை, களவு, கள், காமம், புகை, சினிமா, அரசியல் துரோகம் என்னும் எண்வகைக் குற்றங்களும் இல்லாத பரிசுத்தவான்கள் அடங்கிய சமுதாயத்தை உருவாக்கி வளர்த்து வருவதுவேயாம். இஃது சமுதாய அளவிலான மாபெருஞ் சாதனையாம். மற்றொன்று, மனிதர்களின் உயிர்வாழ்க்கை தொடர்புடையது. தனிமனித வாழ்வின் முக்கிய லட்சியங்களாவன - தன்னை அறிந்து, தலைவனை அறிதல் என்ற பெருஞ்சிறப்பைப் பெற்று, நரனாகப் பிறந்தவன் ஆண்டவர்கள் திருமுன் சென்று, அவர்கள் திருவருளால் மனிதனாகி, மறுபிறப்புப் புனல் ஜென்மம் பெற்று, அவர்கள் தயவால் எமபடர் கடந்து, பரமபத நித்திய முத்திச் செயலினில் ஏற்றுவிக்கப்பெற்று, ஜீவப்பிரயாணம் ஆகித் தெய்வத் திருவடிகளில் ஐக்கியமாதல் என்பனவாம். இவற்றுள் முதற்செயலைத் தாம் தூலத்திருமேனி தாங்கியிருந்த காலத்தே நடத்தியருளிய தெய்வமவர்கள், வான்கன்னி விராட்தவத்திற்கு ஏகத் தமது தூலதேகத்தை மறைத்துக்கொண்ட போதிலும், அவர்கள்தம் தயவால் எமபடர் நீக்கி சிவமயம் ஆக்கும் அரும்பெருஞ்செயலை இற்றை நாள் வரை நிகழ்த்தி வருகின்றார்கள். மேலும் அவர்கள் ஆசு, மதூம், சித்திரம் விஸ்தாரம் என்னும் நாற்கவிராஜ சிங்கம். அவர்கள் இயற்றியருளிய மெய்ஞ்ஞானம் நிறைந்த பாசுரங்கள், உரையிடையிட்ட பாட்டுடைக் காவியங்கள், அமுதத் திருவாக்கியங்கள், இசை நயம் கனிந்த ஞான இரகசியங்கள் பொதிந்த “ஆண்டவர்கள் மான்மியம்”, என்னும் இன்னிசைப் பேழை ஆகியன அற்புதச் சொல்லாட்சியும் மெய்ப்பொருள் மாட்சியும் ஞானக்கண்காட்சியும் மிளிர்ந்து வியக்கத் தக்கனவாகப் பொலிகின்றன. அத்துடன் அமையாது இன்பத்தமிழில் இதுகாலம் வழக்கற்றுப் போன முப்பத்து மூன்று எழுத்துக்களையும் முழுமையாகப் பயன்படுத்தி முழு எழில் பிறங்கும் சாலைத் தமிழில் தெய்வவேதாந்தங்கள் இயற்றப் பெற்றுள்ளன. மனிதவாழ்வின் முக்கிய லட்சியங்களாவன - தன்னை அறிந்து தலைவனை அறிதல் என்ற பெருஞ்சிறப்பைப் பெற்று நரனாகப் பிறந்தவன் ஆண்டவர்கள் திருமுன் சென்று, அவர்கள் திருவருளால் மனிதனாகி, மறுபிறப்புப் புனல் ஜென்மம் பெற்று, தேவனாகி, பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைதல். தெய்வ தயவால் எமபடர் பயம் கடந்து பரமபத நித்திய முத்திச் செயலினில் ஏற்றுவிக்கப் பெற்று, ஜீவப்பிரயாணம் ஆகித் தெய்வத் திருவடிவங்களில் ஐக்கியமாதல் ஆவது என்பனவாம். அத்தகைய தன்னேரிலாத ஞானப்புலமை மிக்கோங்கும் தவத்ததிகாரச் செம்மல் சற்குரு குபேரர் எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் திவ்விய மகாமேன்மை தங்கிய திருப்பெரும் புகழ் வரலாற்றினை மொழிவது இப்பனுவல்.

தவத்ததிகாரம்

காப்பு

நேரிசை ஆசியப்பா

சிவன்மால் அயன்ஓர் திருவுரு வேற்று
புவியகத் துற்றநற் பொற்பதம் போற்றி
பவக்கட லிடைத்துரும் பாயினர் மாந்தர்
அவம்கடந் துய்ந்திட அரும்புணை யதுவாம்
தவமுதல் தயைபுரி தனிப்பெருங் கருணையர்
நவநிதி நல்கும் நாதநா தாந்தர்
ஈன்றுகாத் தின்பருள் இணையிலா அன்னை
ஆன்றஎன் அத்தன் அருட்குரு தெய்வம்
வேண்டுவ வழங்கும் வித்துநா யகமாம்
பாண்டிநன் னாடர் பழம்புரா தனராம்
பேரின்ப சித்திப் பெருவாழ் வினிதருள்
சீருயர் மெய்வழி சாலை ஆண்டவர்கள்
தவத்ததி காரமே மறலியை வென்றிடும்
சிவபதம் நல்கும் ஜென்ம சாபல்யரின்
வான்புகழ் போற்றிட விழைந்தேன்
கோன்தவ கொண்டலின் கழல்மலர் காப்பே!

நூல்

பதிகம்

இணைகுறள் ஆசிரியப்பா

விண்ணகத் திறைவர் விளங்கொளி துலங்கும்
வண்ணக மன்றம் திருவோ லக்கம்
கோடிசூர் யப்பிர காசம் கொழிதர
ஈடில் பேரெழில் ஓன்பான் மணியிழை
தேவசிம் மாசனத்(து) திருமிகுந்(து) இரீஇ
மூவா முதல்வர் முனிவர்கட் கரசர்
சுயம்ப்ர காசர் நித்தியா னந்தர்
தயவொரு மேனியர் தாம்வீற் றிருப்பவும்
முப்பத்து முக்கோடி தேவர்கள் முனிவரர்
செப்பரும் நாற்பத்தெண் ணாயிரம் ரிஷிமார் (10)
கந்தர்வர் கின்னரர் கிம்புரு டர்நபி
விந்தையார் தீர்க்க தரிசியர் கர்த்தர்கள்
அனைவரும் ஒருங்கிணைந் திறைவர்சன் னிதிமுன்
இனிதுவந் துற்று இதயம் நெகிழ்ந்து
கற்பக நறுமலர் கரமலர் ஏந்தி
பொற்பத மலர்களில் பொழிந்தினி தேத்தும்
“தேவாதி தேவா! திருக்கயி லாயா!
மூவா முதல்வா! முனிவர்கட் கரசே!
ஓவா தவத்துறை ஒருதனி முதலே!
சாவா வரந்தரும் சாயுச்ய நாதா! (20)
பரமண் டலத்தின் பரமபி தாவே!
சிரமண் டலத்தொளிர் செம்மலே போற்றி!
அருட்பெருஞ் ஜோதியீர்! தனிப்பெருங் கருணையீர்!
இருட்குலம் கடிந்தித யத்தொளிர் ஏந்தலே!
அளவற் றோங்கும் ஆரருள் அண்ணலே!
உளம்புகுந் தாண்டருள் உத்தம தெய்வமே!
கனம்பெரும் நீதரே! கர்த்தாதி கர்த்தரே!
தினம்புதி யோரே! சீர்தவ மேரே!
தேவரீர்!
இப்பா ருலகினர் இன்னல் தவிர்த்து
செப்பரும் மேனிலைக் கேற்றுக” வென்று (30)
எம்மைத் தூதராய் இறைநெறி காட்டிடச்
செம்மை நெறிசொலத் தாரணிக் கனுப்பினீர்!
ஆங்குயாம் உற்று அறநெறி பகர்கால்
பாங்கிலா மாந்தர் பண்பறி யாதோர்
தீங்குகள் இயற்றிச் செகுத்துயிர் மாய்த்தனர்
ஏங்கியாம் இன்னலுற்(று) ஈங்குற லாயினோம்
சாதியுட் பேதம் சமயவி வாதம்
நீதமில் நெறிகள் நெடுமத வெறிகள்
கடவுள் இலையெனும் காதகர் செயலால்
படமுடி யாத்துயர் பட்டோம் இறையே! (40)
தாங்களே எழுந்து சழக்கக் கலியனை
ஆங்குவென் றழித்து அறநெறி நிறுவி
நலம்கெடு கலியுகம் நலிவுற அழித்து
குலஇன பேதம் மதப்பிணக் கொழித்து
வலமுயர் புதுயுகம் வையகத் துறவே
நிலைபெறு நீதம் நிலையுறச் செய்குமின்”
என்றவர் வேண்ட இறைவரஃ தோர்ந்து
“நன்றுநும் விழைவு நாமதை ஏற்றோம்
சென்றுயாம் அந்தத் திருச்செய லாற்றுவம்
அதன்முன்
தேவர்கள் யாவரும் சென்றாங் காங்கு (50)
மேவுறு பல்வகைச் சாதிம தங்களில்
பிறப்பெடுத் தென்றன் பெருவரு கைதரு
சிறப்பினிற் கலந்திடச் சிந்தைகாத் திருங்கள்
யாம் போந்து
இந்நாட் டவர்தமை இனிதொருங் கிணைத்து
அந்நாட் டினுக்கென அரியவித் தெடுத்து
அருந்தவம் இயற்றிப் பெருஞ்செயல் புரிதற்(கு)
யாம் ஆங்கு
ஒருதாய் வயிற்றிடைப் புக்குப் பிறந்திடக்
கருக்குகை மேவிடில் மாயை வசப்படும்
வெம்மா யச்சிறை விடுத்தெமை மீட்டிட
செம்மையார் சற்குரு சீர்தரல் வேண்டும் (60)
அவ்வா(று) எற்காய் ஆக்கும்மெய்ச் சான்றோர்
செவ்வியர் யாவர் செப்புமின்,” எனுங்கால்
முதுபெரும் ஒருமுனி இதமுயர் ஏந்தலர்
இதுகால் தனிகையர் என்றியம் பிடுமவர்
செப்பரும் தவத்தினர் சீருயர் மாண்பினர்
அப்பொறுப் பேற்றனர் ஆங்குறு அவையோர்
வாழிய! வாழிய! எனவாழ்த் தினர்காண்
ஆழிவாழ் ஐயர் ஆசீர் பதித்தனர்
முதுபெரும் முனிவரர் வையகம் போந்தனர்
இதமுயர் பதியாம் குணைன்எனும் நகரினில் (70)
உதயம் செய்து உருவளர்ந் துற்றனர்
இதயக் கனியெனும் எம்மான் வருகைசெய்
தென்னகம் நோக்கிச் செலவுமேற் கொண்டனர்
பொன்மணி அவதரி புலம்தனைத் தேடுறும்
சிந்தை கனிந்திவண் சீரியர் மாதவர்
விந்தைமிக் குயர்ந்த வேதநன் முனிதிரு
முகம்மது அபுசா லிகெனும் நாமம்
அகம்மது தெளிந்த ஆண்மையர் உற்றனர்
மச்ச முனிவர்தம் மாண்புயர் கோத்திரத்(து)
இச்சை கனிந்துப தேசமும் பெற்றனர் (80)
காஞ்சியில் வாழ்ந்தனர் கைப்பிடி மாது
வாஞ்சைமிக் கந்தணர் மரபினள் அவட்கொரு
பெண்மக வுற்றது பேணியிங் கிருந்தனர்
ஒண்சுடர் பெரியோர் உவந்துப தேசம்
இருவர்க்கு ஈந்தனர் இருவரும் மௌனியர்
திருவுயர் மூன்றாம் சீர்பெறு மகனார்
வடலூர் வள்ளல் பெருமான் அவர்க்கு
இடர்புரி காதகர் இன்னல் இயற்றிட
அடர்பகை வென்றிட இயலா ஆற்றலர்
சித்தி வளாகத் திருமா ளிகைதனில் (90)
வித்தகர் திருக்காப் பிட்டுக் கொண்டனர்
அருட்பெருஞ் ஜோதி அதுதனில் கலந்தனர்
பெருந்தகை தனிகையர் பெரிதுளம் மாழ்கினர்
ஆதி அருண்மணி அவதரித் திடுதலை
வேதியர் நோக்கி மாதவத் திருந்தனர்
இஃது இவ்வா றாகலும் எம்பிரான்
ஆதி முழுமுதல் உற்பவ முதலாய்
வேதியர் மான்மியம் விளம்பிடு வகைதனை
மூன்றுகாண் டங்களாய் மொழிந்தனம் அன்னவை
ஆன்றநல் ஆதியர் காண்டம் மற்றும் (100)
வேதியர் காண்டம் வையகம் உய்தரு
நீதியர் காண்டம் எனவிளம் பிடுவாம்
ஓதிடும் வரன்முறை பருவமென் றியம்பும்
நீதிநன் நடவின் நெறிமெய் வழியாம்
ஆதி உதயத் தலையெனும் பருவம்
ஆதி உதயம் ஆகிடும் பருவம்
அழியும் கலியின் அமல்அடர் பருவம்
மொழியது உதய(ம்)செய் மூதுரை பருவம்
வளர்குழந் தையதின் மாண்புயர் பருவம்
உளம்புகும் குருவிடம் அருள்பெறு பருவம் (110)
அகிலம் வலம்வரும் அற்புதப் பருவம்
தகவுடை யோக தனமெனும் பருவம்
நிகரிலா தவத்துறை நேரியல் பருவம்
அகம்விளை தவம்முயர் சன்னதப் பருவம்
சிகரமாம் உத்தி யோங்குநற் பருவம்
ஜீவசிம் மாசனம் சீர்பெறும் பருவம்
தேவமா ணாக்கர் திகழ்வரு பருவம்
வெய்யவர் இடர்தடை வென்றிடு பருவம்
துய்யவர் அதிசயத் திருமணப் பருவம்
மெய்யரின் திருவுள் வீணரால் மெலிந்ததால் (120)
மைசூர் சென்றிட முனைந்திடு பருவம்
சீடரின் விழைவினை ஏற்றுஅம் மதுரையில்
பாடுயர் கற்றளி இயற்றிடு பருவம்
போர்ப்படைக் கலன்பொதி கொட்டிலுக் கரசு
சீர்மிகு ஆலயம் தனைவிழை பருவம்
அரண்மனைக் கெதிர்மனை யிலைஎனக் கருதி
பரன்திரு ஆலயம் பரங்கியர்க் களித்து
துறவுகொண் டுத்யோ வனமெனும் சோலை
அறஞ்செயல் விரிக்கும் அரியமெய்ச் சாலை
அமைத்திடு மாட்சியும் அரும்பெரும் நிகழ்வுசொல் (130)
தீர்க்கத் தரிசனச் செல்வம் பொழிந்திடும்
ஆர்க்கும் திருநிகழ் அற்புதப் பருவம்
வெள்ளையன் சூழ்ச்சியை விஞ்சிடு வோமெனும்
கொள்ளையர் இடர்தரு கொடுமிடர் பருவம்
காஷா யம்தரும் கனிவுயர் பருவம்
நேசமாய்ப் பஞ்சகச் சம்மொடு பூண்நூல்
அணிவித் திடுமுயர் அற்புதப் பருவம்
முத்தர் முகுந்தர் மிகுபெரும் தயவால்
முத்தா பம்தீர் மாபெரும் வரமும்
தன்னை அறிந்து தலைவரை அறிதல் (140)
இன்னல் தவிர்த்து எமனமல் கடத்தல்
தீர்க்கத் தரிசனச் செல்வம் கொழிக்க
ஆர்க்கும் அறவோர் அங்கம் ஆகிட
புலைகொலை களவு கள்ளொடு காமம்
அலைவுறச் செய்புகை திரைப்படம் அரசியல்
எண்வகைக் குற்றம் அற்றதோர் உத்தமர்
பண்ணகப் பண்பினர் பொருந்து மெய்வழியில்
முற்றவும் சாதி மதவெறி களைந்து
நற்றவ அனந்தர்கள் சத்திய தேவர்கள்
மற்று மறலிகை தீண்டா மதத்தினர் (150)
ஒற்றுமை கனிய உயிர்ப்பயிர் தளிர்த்தது
இருள்மதப் பிணக்கு இரிந்தது ஆண்டவர்
அருளார் நறுமணம் அகந்தனில் கமழ்ந்தது
தருமொரு பெருஞ்செயல் தெய்வத் தயைதரும்
ஒருதனி முதல்வர் உற்றஇக் காலம்
பெருகுறும் மெய்வழி பாரக மெங்கணும்
சந்திர வட்டத் திருக்குடை நிழற்ற
மந்திர சயன மாமணித் தேரோன்
ஈனர் பொய்யிருள் இனியிகத் திலையென
ஞானச் செங்கோல் நானிலத் தோச்சி (160)
பேதமில் சமூகம் பெருகுற சத்திய
நீதம் நிலையுற சமரச மெய்ம்மதம்
திகழ்ந்திட வேதவே தாந்தம் தெளிவுற
அகந்தனில் அருமறை அற்புதம் நிறைவுற
தென்னா டுடையார் சிவனார் துலக்கி
அன்னா டகம்இலங் கணிதிகழ் மாட்சியர்
கண்டவர் காணார் கனிந்(து)உயர் நாமம்
விண்டவர் யாவரும் வெற்றி மாணிக்கம்
அங்கை தன்னில் அழகுற மிளிர
பொங்கும் மாதவர் பேரருள் சிறக்க (170)
என்றும் மெய்வழி ஏறித் துலங்கிட
குன்றுடை யார்தம் கொழுமலர்ச் சேவடி
பணிந்தோர் இதயம் தனில்பரி மளிக்க
அணிந்தோர் இறையடி யவருயிர் செழிக்க
ஆன்ற கன்னி விராட்தவத் தமர்ந்தனர்
ஏன்ற யாவர்க்கும் இறவாப் பெருவரம்
நாமம் நவின்றவர் நற்பதம் பெற்றனர்
சேமம் சிறந்தனர் ஜென்மசா பல்யராய்
உய்வழி உற்றனர் செய்வழி தேர்ந்தனர்
வையகத் துள்ளே வாழ்வாங் குவாழ்வுறும் (180)
ஆகலின் மாந்தரீர்!
பிறப்பினில் உயர்ந்தது மானுடப் பிறப்பு
இறப்பிலா நித்தியம் எய்துதல் மனுக்கடன்
கடெமடுத் ததுமனு தேவனா வதற்கே
திடமுடன் மறுப்பிறப் பெய்திடல் துவிஜனாம்
ஆசான் கிருபை அதுபெற அருள்தரும்
தேசோங் கவர்தான் தெய்வத் திருவுரு
கற்றதன் பயன்அவர் நற்றாள் தொழுவது
நற்றுணை யாவது நம்பிரான் நாமமே
விதியினை சற்குரு மதியினால் வெல்லுவர்
புதியவர் நாளும் பொற்பதிச் சாலையர் (190)
ஒன்றே குலமும் ஒருவரே தேவராம்
நன்றே அறிமின் நமனிலை நாளை
உய்வழி உலகிற் கொன்றே மெய்வழி
செய்வழி ஆண்டவர் திருவடி சார்தல்
நைவழி நீக்கி நலனுறத் திருவுளம்
ஐவழி நெறிபட ஆண்டவர் தயைகூர்ந்(து)
அவதரித் தனர்காண் அற்புதர் நித்தியர்
சிவபரம் பொருளோர் திருவுளம் இரங்கி
பவத்ததி காரம் படர்ந்தயிப் புவியில்
அவத்ததி காரம் தனைஅழித் தனர்காண் (200)
சிவத்ததி காரம் செழித்தினி தோங்கின
தவத்ததி காரம் வெற்றிமே டுற்றது
கலிபுரு ஷன்தன் கொடுமை அழிந்திட
வலிமைமிக் கோங்கிய வரதரெங் குருபரர்
நாவலன் தீவினில் நன்மெய் வழிதரும்
தேவதே வேசர் திருவரங் கரசர்
நீதியை நடத்த நீணிலம் போந்த
சாதிகள் கர்த்தர் சாயுச்ய நாயகர்
மந்திர உருவராம் மாவரம் நல்கிடும்
எந்திர வள்ளல் இணையிலா முனிவரர் (210)
பவக்கடல் கடத்தும் பருமரக் கலமிவர்
சிவக்கனி பழுத்துத் தேம்பிழி யமுதம்
இருள்கிழித் தெழுந்த இரவியாம் எம்மான்
அருட்பெருஞ் சோதியர் அமலாண் மையர்காண்
தாகம் தணித்த சுவைநன் நீர்க்கடல்
மோகம் கெடுத்த மெய்ம்மண நாயகர்
நலந்திகழ் அந்நா டகமது காட்டிடும்
கலங்கரை விளக்கம் கரையே றிடுதுறை
கோடையின் களைதவிர் குளிர்தரு நறுநிழல்
வாடிடா துயிர்ப்பயிர் வளர்ந்திடப் பாய்மடை (220)
சகமிது கண்டிரா சமரசப் புரட்சியர்
அகமது விளைவுற அருள்பொழி வான்மழை
இனி எங்கும்
விண்ணர சிலங்கும் மண்ணுல குய்யும்
பண்ணகம் அறியும் பாங்குளோர் நிறைவர்
தேவனின் எல்லையில் சாவினி இல்லை
ஆவா இஃதென் அதிசயம் அதிஜெயம்
தீவா தனையிலை மூவா முதல்வரால்
ஓவா தறம்மிளிர்ந் தோங்கும் என்றும்
மூவா முதல்வரின் மொழிபொழி செல்வம்
என்றென்றும்
மெய்வழி நிலைபெறும் (230)
பொய்வழி பொசுங்கிடும்
சிவகதி சாரும்
நவநிதி யேறும்
பவப்பிணி தீரும்
நம்புமின் நாடுமின் நமனிலா நன்னிலை
உம்பர்தம் பதவி உற்றிடும்
செம்பொருள் வழங்கிய செல்வம் கொண்டோர்
பைம்பொழில் ஆரெழில் சாலையர்
பதம்கதி பற்றுமின் நன்றென் றென்றுமே.

உரைபெறு கட்டுரை

இவ்வாறாக எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் நவரத்னகசிதம் இழை பொன்னார் திருமுடி சூடி அருளரசாட்சி ஞானச் செங்கோல் திருக்கரம் தரித்து பெருந்தவ மாட்சி ஓங்கலான் அவர்களின் அருள் வளர்ந்தோங்கும் திருச்சன்னிதிமுன் நின்று பணிந்து நரர்களாக இருந்தவர்கள் மனுவாகி, ஆண்டவர்கள் தயவால் மறுபிறப்புப் புனல்ஜென்மம் பெற்றுச் சுவர்க்கபதித் திருவாசல் திறப்பிக்கப் பெற்றுத் தேவர்களாகப் பரிணமித்தார்கள்.

எமனுடைய அவமான அவஸ்தை வந்து தீண்டும் அடையாளம் கசப்புத் தீட்டுப் பிணநாற்ற ஜலம் வெளியாகி யுகங்கோடி கால நரக வேதனைக்குப் போகாமல் அது மாற்றப் பெற்றுப் பரமபத நித்திய முத்திச் செயலினுக்கு ஏற்றுவிக்கப் பெற்றார்கள்.

சாதிகளுட் பேதங்கள் தீர்ந்தன, ஒருங்கு இணைந்து ஆர்ந்து மருவின, மதங்களின் உண்மை நோக்கம் மறலிகை தீண்டாமையே என்று அனைவரும் உணர்ந்தனர். எனவே மதபேதங்கள் மறைந்தன. சர்வமதங்களின் சத்தியம் நித்தியம் ஒன்றிப் பிரகாசம் கொப்பளிக்க சமரச சுத்த நன்மார்க்கமாக ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உத்தம சித்தி உயர்கொள்கை நிலை பெற்றது.

புலை, கொலை, களவு, கள், காமம், புகை, சினிமா, அரசுகோல் துரோகம் என்னும் எண்வகைக் குற்றங்கள் இல்லாது அனைவரும் மிகமிகச் சுத்தச் சத்தியதேவ பிரம்மகுல உத்தமர்களாக விளங்குகின்றார்கள். அனந்தாதி தேவர்களாக மாட்சிமிக்கு ஓங்குகின்றார்கள்.

கலிபுருஷன் ஆட்சி அழிந்தது. மெய்வழியின் மேலாண்மை மிகமிகச் சிறந்தோங்கி மிளிர்ந்தது. பொய்யெண்ணம், போலி ஞானம், சந்தேகம் பொதுப்புலமை எல்லாம் அழிவுற்றன.

இகவாழ்வின் முடிவில் இரண்டு விதங்கள் உண்டென்ற மகாரகசியம் தெளிவுறப்பெற்றது. ஒன்று பரிசுத்த ஜீவப்பிரயாணம். இது இறைவனடி சேர்தல், சிவலோக பதவி அடைதல், வைகுண்டப் பிராப்தி அடைதல், கர்த்தருக்குள் நித்திரையடைதல், பரிசுத்த மரணம், மகாபரி நிர்வாணம், வஃபாத், சுவர்க்கபதியடைதல் என்னப்பெற்றது.

மற்றது துக்கச்சாவு, அலறி உளறி மரணத்துன்பம் அடைதல், உடல் ஜில்லிட்டுப் போதல், விறைத்தல், நாற்றமெடுத்தல், வீங்குதல், புழுத்தல், கனத்தல், கசப்புத் தீட்டு ஜலம் (ஆணுக்குச் சுக்கிலம், பெண்ணுக்கு சுரோணிதம்) வெளியாதல், தண்ணீர் தொண்டையில் இறங்காமல் அடைத்துக் கொள்ளல். மண்ணில் போட்டால் மண் தின்றுவிடும் (மட்கிவிடும் தன்மை) மீளாத துன்பம்மிக்க நரகுலகடைதல்.

தெய்வ கிருபைக்கு ஆளானவர் பரிசுத்த ஜீவப் பிரயாணம் அடைவர்

1.தேகத்தில் ஜீவசக்தி வெளியாகாது. (சுக்கில சுரோணிதங்கள்)

2.தெய்வ தீர்த்தம் கொடுத்தால் அடக்கம் பெற்றவர் தொண்டையில் இறங்கும். 40 நாள் கழித்துக் கொடுக்கப் பெற்றபோதும் இஃது சாத்தியம் ஆயிற்று, ஆகின்றது, ஆகும்.

3.உடல் வெயிலில் போட்ட வாழைத் தண்டு போல் துவளும். (விறைக்காது)

4.பூக்கூடையைத் தூக்குவது போல் கனமின்றி இருக்கும்.

5.தேகத்தில் இளஞ்சூடு இருக்கும்.

6.தெய்வப்பாசுரங்கள் படிக்கும் போது வியர்வை கொப்பளிக்கும்.

7.பசுமஞ்சள் வண்ணம்பூத்து இளமை பளிச்சிடும்.

8.மண்மறைவுசெய்தால் மண் தீண்டாது மற்றும் விளைவேறும்.

9.ஒருவித நறுமணம் கமழும்

10.கை கால் விரல்களில் நெட்டி எடுத்தால் சொடக்கு விழும்.

மரணவாதனை சிறிதும் இல்லாமல் எல்லோரிடமும் “இதோ தெய்வத் தங்கரதம் வந்துவிட்டது; தெய்வம் அழைக்கிறார்கள்; நான் சென்று வருகிறேன்”, என்று சொல்லிக் கொண்டு பயணப்படுவார்கள்.

இங்கு எல்லா மதவேதங்கள் வேதாந்தங்கள் (தெய்வ தயவால்) தெளிவாக விளங்கப் பெற்றன. பேதங்கள் தீர்ந்தன. நீதம் நிறைந்தது. ஆத்ம போதம் சிறந்தது. என்றென்றும் மாறாத உண்மையான, உத்தமமான, சாவே இல்லாத சத்திய சீலர்களால் நிறைந்த உயர்ந்த சமுதாயம் மெய்வழியாக மெய்வழிச் சாலையம்பதியில் உதயம் செய்துள்ளது. நாழியோர் மேனியும் கடிகையோர் வண்ணமுமாக வளர்ந்தோங்கி விளங்குகின்றது.

இது சத்தியம்! சத்தியம்!! சத்தியம்!!!

ஆதியர் காண்டம்

மங்கல வாழ்த்து

சிந்தியல் வெண்பா

ஆதியைப் போற்றுதும் ஆதியைப் போற்றுதும்
ஆதி அனைத்தின் முதன்மைய தாகி
அகிலம் படைத்தளித்த லான் (1)
நீதியைப் போற்றுதும் நீதியைப் போற்றுதும்
நீள்புவி மாந்தர் நெறியுற நித்தியர்
ஆள்கைசெய் அத்தன்மை யால் (2)
வேதமே போற்றுதும் வேதமே போற்றுதும்
மெய்வழி யான்மனு வானவ ராகிட
உய்வழி உட்காட்ட லால் (3)
பாதமே போற்றுதும் பாதமே போற்றுதும்
பாத தரிசனம் வேதம் தெளிவுற
நீதம் அருள்நீர்மை யால் (4)
நாமமே போற்றுதும் நாமமே போற்றுதும்
நாமம் நவின்றிடில் நல்லுயிர் உய்ந்தந்த
ஏமன் அமல்விலக்க லால் (5)
திருமுகம் போற்றுதும் திருமுகம் போற்றுதும்
தரிசினை செய்வோர்க் கிருவினை தீர்ந்து
அரியமெய் ஆர்ந்தோங்க லால் (6)
மாமறை ஓதுதும் மாமறை ஓதுதும்
ஓதலால் மும்மலம் நீறாகி மெய்ம்மையாம்
மாதனம் வந்தோங்க லால் (7)
பாடிப் பராவுதும் பாடிப் பராவுதும்
நாடிய நித்திய நல்வரம் நண்ணலால்
கூடி விதந்தோது வாம். (8)
வாயார வாழ்த்துதும் வாயார வாழ்த்துதும்
தாயாராய்த் தந்தையாய்ச் சற்குரு தெய்வமாய்
நேயம் நிறைந்தோங்க லால் (9)
சிந்தனை செய்குமின் சிந்தனை செய்குமின்
சீராரும் தெய்வத் திருமணியர் வான்பதியர்
பேராளர் காத்தருள்வர் காண். (10)

1.ஆதிஉதயத் தலைப்பருவம்

ஆதியில் இருந்த தோர்இருட் கோளம்
ஆதி விஸ்வம் பிரம்மம் ஓம்எனும்
புராத னம்பர வஸ்து அருண்மணி
பராப ரம்கூ டஸ்தம் கன்சுல்-
 -மகபியா நிர்வி காரமாம் ரகிதம்
அகம்பொ ருந்திய அஃதிறை வஸ்து
கால கால காலம் கடந்தது
சீல மோங்குகா ருண்யக் கருப்பது
நாமம் உருவமில் நாதநா தாந்தம்
ஆம்பளு கடந்த அசைவில் குன்றது (10)
ஒலியெலாம் கடந்தவல் ஊமை எழுத்தது
வலிமை யெலாம்கடந் திட்டதோர் வலிமை
நிறமெலாம் கடந்த நிறம்பொதி நிறமது
அறமெலாம் திரண்டருட் கோளமாம் வெற்பு
குணமெலாம் கடந்த நிர்க்குணப் பிரம்மம்
மணமெலாம் கடந்த மணம்பொதி பெட்டகம்
சுவையெலாம் கடந்த சுவையெலாம் பொதிந்த
சுயம்சுத்த சுகியாம் சூதானநி தானம்
அசைவெலாம் கடந்த அசைவில் அனாதி
இசையெலாம் கடந்த இன்னிசைப் பேழை (20)
மூலம் கடந்த மும்மூ லத்துறை
கோலம் சிறந்த குணமணி சீலம்
எழுத்தெலாம் கடந்த எழுதா எழுத்தது
முழுமுதல் மெய்ப்பொருள் மூதுரை நாதம்
இயல்ஆல் சிறுவிதை மரம்பொதிந் திருத்தல்போன்ம்
மயிலதன் அண்டம் நிறம்பொதிந் துளபோல்
வித்திலா வித்து வித்தக மாயது
சத்தியெ லாம்திரள் சத்திய நிலையிடம்
அதனுள் ஆங்கோர் அசைவுண் டாயது
அதன்இயக் கம்மதை உசும்புதல் என்பர் (30)
அறுவகை வேகம் சரகதி சர்ப்பம்
உறுவகை மயூரம் இடிமின் மனோகதி
இவற்றின் மிக்க கதியுடைத் தாயது
கதிர்மதி கோள்கள் விண்மீன் உற்பவம்
இதமிகு கதியினுள் அக்கினி அதனுள்
நீருண் டாயது அதுவீழ் நிலையால்
சீராய் வாய்வுண் டாகி அலைத்தலால்
நுரையும் மண்ணும் மலைகடல் அருவி
விரைவுடன் உயிர்கள் தோற்றம் உற்றன
பிறப்பிடம் நால்வகை புழுக்கம் வித்து (40)
நிறம்பொதி அண்டம் சினையெனச் செப்புவர்
ஓரறி முதலாய் ஆறறி வீறாய்
சீருடன் சுவையொளி ஊறு ஓசை
பேருயர் நாற்றம் அவற்றொடு மனனே
மூவிரண் டறிவென மொழிகுவர் சான்றோர்
பெருகுறு தோற்றம் ஏழ்வகை என்பர்
தருக்கினம் புள்ஊர் காலி ஜலம்வாழ்
பெருக்கினம் மனுவும் அமரர் என்பன
எண்பது நான்குநூ றாயிரம் வகைகள்
பண்பதாம் குணபே தத்துடன் தோன்றின (50)
அனைத்துப் படைப்பிலும் உயர்ந்தது மானுடம்
தனையுணர் தன்மையால் தலைவனை அறிதல்
என்னும் மாட்சியர் இனிய திறத்தினர்
மன்னும் வாழ்வினர் வானவர் அருளால்
ஏழ்வகை அமானிதம் ஈந்தனர் மனுக்கே
வாழ்வகை காலம் நியதி கலையொடு
வித்தை ராகம் புருடன் மாயை
சித்தம் தெளிவுறு தெய்வப் பரிசிவை
படைப்பில் உயர்ந்த மனுவின் இதயமே
உடைப்பெரும் ஆலயம் உவந்தனர் இறைவர் (60)
யாவும் படைத்தது மனுவினுக் கென்றே
தேவன் ஆவதே மனுக்கடன் ஆகும்
உள்ளத்தி னுள்ளே உறைந்தருள் ஈசரைத்
தெள்ளத் தெளிவாய் தெரிசனை கொளவே
ஏற்றொரு சற்குரு எழில்மணிச் சூலில்
மாற்றிப் பிறக்க வகைதேர்ந் துற்று
ஆற்றின் துறைகண் டமரன் ஆகுதல்
பேற்றிற் சிறந்த பெரும்பே றிதுகாண்
குருவால் சிவபரம் கூடுதல் கடனே
உருவாய் வருகுவர் அரனே உணர்மின் (70)
முத்தர்தம் முதல்வராய் மூதுரை நாதராய்
சித்தம் கனிந்திறை திருஅவ தாரம்
மெத்தவும் செய்திடும் வையகம் உய்ந்திட
எத்தனை கோடி கோடிபல் காலம்
அத்தன் இயற்றிய அரியவிக் கோளம்
எத்தன் கலியனால் இயல்பவம் தீர்த்த
சுத்தம் தெளித்துப் புதுயுகம் படைக்க
எண்ணினர் இறைவர் இரக்கமிக் கோங்க
அண்ணலர் அதுநிறை வேற்றிடும் இனிதே
வரும்புது யுகத்தின் மாட்சியை மொழியின் (80)
அரும்பெறல் அழகிய திதுவென அறிமின்

2. ஆதி உதயப் பருவம்

ஆதி நாயகர் அருட்பெருஞ் ஜோதியர்
நீதித் தாயகர் நிர்மல சொரூபர்
தேவ மகாசபை தனில்செய் யுரைவணம்
பூவுல கினிலவ தரித்திடத் திருவுளம்
கொண்டனர் இங்கோர் குருபரர் வடிவொடு
விண்டெழும் பரம்பொருள் வேதியர் நாயகர்
பெருங்கிர ணர்பெருங் கருணையர் பேரருள்
பெருந்துணை யாம்பெரும் தெய்வமும் அதுஎன
ஆதி மூலம்அ ருள்கனிந் தெழுந்தது (90)
மேதினி யின்மிசை மிகப்பரி சுத்தம்
இறைசூல் என்றும் திரிசூல் என்றும்
மறைமுதல் மாதவர் வான்தவ மியற்றும்
எண்பது நான்குநூ றாயிரம் என்னும்
பண்புள படைப்பினுள் உயர்ந்தது மானுடம்
இம்மனு இதயம் அதனில் குடிபுகும்
செம்மையார் இறையுரை தேவ ரகசியம்
மறைந்துறை மாட்சியை மனுவுணர்ந் திடவே
நிறைமொழி மாந்தர் தீர்க்கத் தரிசியர்
அவரருட் கரத்தினுள் திறவுகோல் வழங்கும் (100)
சிவபரம் பொருளவர் ஜீவரை நோக்கி
”ஒருதலை முறையாய் உன்னுள் உறையும்
என்னைநீ அறிய இதுஉணர்ந் திடுக!
தன்னுள் அறியத் துணைகுரு பரரை
நாடுக, நாடி அடைந்திலா யெனின்நீ
தேடுகண் குருடாய்ச் சன்னிதி முன்னிலை
நிற்பாய்” என்று நிறைமொழி பகர்ந்தார்
பொற்புயர் இறைவரின் பெரும்தீர்ப் பிதுகாண்
தெய்வம் தன்னுள் திருவீற் றிருக்கும்
உய்வழி காண உவப்பிலா மாந்தர் (110)
மனுவின் கடனறி யாத மாண்பினர்
தனின்கடன் உணராத் தறுகணர் மாய்வர்
இப்பெரும் பார ரகசியம் தெளிவுற
செப்பரும் தவத்தினர் துணைதனைத் தேடுமின்
மெய்ப்பொருள் மெய்ப்பயன் பெற்றிட விழைமின்
மெய்க்குரு வின்றி மேவிட இயலா(து)
என்ற திருவுரை யாவரும் தெளிவுற
நன்று மறைகளில் நவின்றுவைத் தனர்காண்
தீர்க்கத் தரிசியர் தம்மைமுன் அனுப்பி
ஆர்க்கும் மாந்தர்க்கு அறவுரை பகர (120)
பார்க்குள் அனுப்பினர் பரமனார் அறிமின்
சேர்க்கும் மெய்ந்நெறி செழித்திடத் துணைதரும்
அந்நாட் டிருந்து ஆன்றமெய்ப் பரம்பொருள்
இந்நாட் டினுக்கு எழுந்தருள் சிந்தையர்
தம்மு¬ரை வண்ணம் தரணியிற் போந்தார்
செம்மையார் மக்கள் செவ்வுளம் விழைந்து
திருவரு கைக்காய் காத்துள ரென்று
அருள்வளர் அண்ணலர் அம்புவி அடைந்திட
வரங்கள் அனைத்தும் மென்கரம் பொதிந்து
அரங்கர் எழுந்தனர் அகிலமே உய்வுற (130)
காலகா லங்களாய் கனிமறை மொழிகளால்
சீலர்கள் இறைவரின் திருவரு கைதனை
செப்பிவைத் திட்டனர் சகத்துறு தேவர்கள்
ஒப்பிய குணம்குறி செயலிடம் காலம்
உருவடை யாளம் உவந்தருள் மாட்சி
திருவெலாம் வரைந்தனர் தீர்க்கமாய்க் கண்டு
எத்தனை மொழிகள் நாடுகள் இனங்கள்
மெத்தவும் கால வேறுபா டுடையன
அத்தனை யும்ஒருங் கிணைந்து இசைந்து
ஒருமுக மாக ஒருவரைக் குறித்தே (140)
பெரும்புகழ் பெருமை பெறலறும் பேறு
பெருஞ்செயல் யாவும் பொதிந்த பெட்டகங்கள்
தந்துவைத் தனர்காண் தயைமிகு சான்றோர்
விந்தை யிதனின் வேறிலை புவியில்
சத்திய சுத்த உத்தமர் தாமே
நித்தியம் பெற்று நிமலர்தாள் பரவி
ஒத்திருந் துவந்து ஓங்குமெய் வழியில்
வித்துநா யகர்திரு மெல்லடி பரவி
எத்திசை யினரும் இசைந்திவண் போந்து
முத்திவித் துக்களாய் விளங்கிடும் ஆர்ந்து (150)
ஒப்புயர் வீடு இணைதுணை இல்லாச்
செப்பரும் மேனிலைக் குற்றவர் ஆவர்
மெய்ப்பால் அறிவர் மேதகு நிலைபெறும்
துப்புடை யார்தம் திருவருள் வரம்பெறும்
இகபரம் இரண்டினும் இவ்வுல கிடையே
சுகம்பெறும் தகையராய்த் திகழ்வர்சான் றோர்கள்
அகம்விளை அறநெறி அரன்பதம் அடைகுறி
பகர்மொழிச் சுவையறி பாங்கினர் ஆவர்
இவ்வுல கென்றும் எங்கும் காணா
செவ்வியல் மெய்வழி சிறந்தினி தோங்கும் (160)
தருமம் தாழ்ந்துஅ தருமம் வளர்கால்
அருமை மெய்வழி அங்குறும் அறவழி
பெருமைமிக் கோங்கப் பெருஞ்செயல் புரியும்
திருமிகு ஞானம் தெளிவுறும் உலகில்
பார வான்கள் பார்த்தெதிர் நோக்கிய
சீர்மிகு ஞானம் செழித்திடும் இதுநாள்

3. அழிகலிப் பருவம்

எண்ணிலா ஞானியர் ரிஷிகள் சித்தர்கள்
வண்ணமார் அறிவொளிர் ஜீவன் முத்தர்கள்
பண்ணகம் தெளிந்த பரமாத் மாக்கள்
விண்ணகம் விளங்கும் வேதகர்த் தர்கள் (170)
தோன்றித் துலங்கிடும் தூயமெய்ம் மாதவர்
ஆன்றவிந் தடங்கிய சான்றோர் பல்லோர்
வாழ்ந்து வளம்செறி மாபா ரதம்தனில்
ஆழ்ந்தமெய்ஞ் ஞான அறந்திகழ் புண்ணிய
பூமியில் கலியனின் நாத்திகம் புக்கது
சாமியில் லையெனச் சாற்றுவன் மற்றும்
பாவபுண் ணியமிலை என்றும் பகர்வன்
புலையெனும் பிணம்உணல் நலமெனப் புகல்வன்
கொலைசெய அஞ்சாக் கொடூரன் ஆயினன்
களவுசெய் தல்திறன் என்றும் கழறுவன் (180)
உளமறி பொய்யை மெய்யென உடற்றுவன்
சூதாட் டம்மது திறமையென் றுளறுவன்
வாதாட் டம்புரி வன்கணன் அன்னோன்
கள்ச்சா ராயப் போதைவஸ்த் துக்கள்
உள்ளம் உவந்து குடித்தழிந் திடுவன்
பிறர்மனை விழையும் பேதையன் ஆவன்
அறஞ்செயல் தேவை யற்றது என்பன்
மறச்செயல் வீரம் என்றுவா தாடுவன்
சாதி வெறிகொடு சமர்கள் புரிவன்
பேதம் பேசிப் பிறர்தமை இகழ்வன் (190)
மதவெறி கொண்டு மக்களை மாய்ப்பன்
இதமெய் அறிந்திடா ஈனன் இன்னவன்
செய்ந்நன் றிதனைச் சற்றும் எண்ணிடான்
பொய்ம்மொழி பேசுதல் பெருமையென் றுரைப்பன்
குருபரற் கிடர்செயும் குரூரன் இன்னோன்
உருபெரு இறைகுரு என்றெ(ண்)ணா அழிம்பன்
அரசுகோல் துரோகம் அஞ்சா தியற்றுவன்
பரசுகம் இலையெனப் பகன்றிடும் பாவி
பெரியோர் ஞானியர் என்பதை மறுப்பன்
அரியமெய் யொழுக்கம் தேவையின் றென்பன் (200)
என்குலம் பெரிது உன்குலம் சிறிதென
வன்மொழி புகன்று வழக்கிட் டழிவன்
அறநெறி நில்லான் ஆன்றோர் மாட்சித்
திறமறி யாத தீங்கினன் ஆவன்
பிறர்பொருள் கவர்ந்திடும் பெருங்கொடும் குரூரன்
வேதா கமங்கள் தம்மை இகழ்வன்
தீதாய்க் குறையுரை செப்பிவீ ணாவன்
வலுத்தவன் வாழ்வான் என்ற கொள்கையன்
உலுத்தவன் அக்ரமம் செய்தற் கஞ்சான்
பாலர்கள் பெண்டிரைப் பொய்வழிக் கிழுப்பன் (210)
சீலம் செந்நெறி இலையெனச் செப்புவன்
நேர்மை என்பது கோழையின் செயலெனும்
சீர்மெய் இலையெனத் தீயுரை புகல்வன்
மெய்ஞ்ஞா னியர்தம் மேன்மை கருதான்
செய்அனுக் கிரகம் தன்னை நம்பிடான்
வீடடை மாட்சி யிலையென விளம்புவன்
தேடுடை அறஞ்செயல் செய்யாத் தீங்கினன்
இறந்தபின் ஏதும் இலையென வாதிடும்
சிறந்திடும் சிவபதம் சிறிதும் எண்ணிடான்
அழியுல கின்மதிப் பார்வமாய்த் தேடுவன் (220)
பழிபா தகங்களைப் பயப்படா தியற்றுவன்
சரிகை நெறிகளைச் சற்றும் மதித்திடான்
அரியமெய்ஞ் ஞானியர் அவதா ரத்தினை
தீர்க்கத் தெரிசியர் திருநிறை மொழிகளை
ஏற்க மறுப்பான் இறைநெறி நில்லான்
கடவுள் இல்லை என்ற கொள்கையன்
கடவுளை வணங்குதல் அவசியம் இலையெனும்
பாமரன் பண்டிதன் ஒன்றெனப் புளுகுவான்
தீமையே பேசுதல் திறமையென் றெண்ணும்
கலைஞனும் கொலைஞனும் ஒன்றென வாதிடும் (230)
விலைமனை யாட்டி வாழ்வை விரும்புவன்
யோக்கியன் போக்கிரி ஒன்றென உளறும்
மீக்கொடும் திருடனும் யதார்த்தனும் ஒன்றெனும்
கற்பு நெறிதனைக் கருதாக் கசடன்
பொற்புடை ஆண்பெண் ஒன்றென வாதிடும்
செந்தண் மையரை சற்றும் கருதிடான்
அந்தணர் தம்மை அவமதித் திடுவான்
புல்லரை உகப்பன் புலையர்கால் தழுவுவன்
வல்ல கொடியரை வணங்கியே போற்றுவன்
வேளா ளர்தமை வெருட்டுவன் சீரிய (240)
தாளா ளர்எனும் வணிகரைத் தாழ்த்துவன்
ஆத்திகம் இலையென அற்பமாய்ப் பேசி
நாத்தழும் பேற நாத்திகம் பேசும்
கொடியனாய் வாழ்ந்து கொக்கரித் தலைவன்
குடியரைக் கும்பிடும் கோஷமிட் டேத்தும்
நிழலெனும் சினிமா நெறிதனைப் போற்றிடும்
அழல்நர கேக அலைந்திடும் பேதை
இவ்வா றிஃது இருந்திடும் ஓர்பால்
செவ்வியர் என்று செப்பித் தமையே
ஞானிய ரென்று நடித்திடும் கள்ளர் (250)
ஊனப் படுத்தும் உத்தம மக்களை
இதமாய் இச்சை பிறங்கப் பேசுவர்
உதட்டினில் ஞானம் உள்ளுறும் வஞ்சகம்
வேத வசனம் விரித்துரை செய்குவன்
சூதாய்ப் பணம்கறந் திடுதலே நோக்கம்
மந்திரம் ஜெபியென மயங்குறச் செப்புவன்
எந்திர பூஜை இயற்றென இயம்புவன்
பொய்ஞ்ஞா னியர்கள் போலிகள் வேடம்
மெய்ஞ்ஞா னியரென விளம்பரம் செய்குவன்
இறைநெறி விழைவோர் தம்நம் பிக்கைகளை (260)
துறைதனை மாற்றி துன்பியல் புகுத்தும்
ஜெபதப மென்னும் சிலைவணக்கம் செயும்
அபத்தமாம் நெறிவகுத் தலைக்கழித் திடுவன்
நன்மன மக்களை நம்பிடச் செய்து
வன்மனக் கொடியோர் வழி கெடுத்திடுவர்
தானும் கெட்டுத் தனைநம் பியவரை
ஈன இறப்பில் இழிந்திடச் செய்பவர்
பெற்றோர் குலம்,குடி அரசுகோல் துரோகம்
உற்ற சற்குரு தெய்வத்து ரோகங்கள்
உலகில் நிறைந்ததைக் கண்டனர் இறைவர் (270)
கலகம் மலிந்ததை அறிந்தனர் கர்த்தர்
எமபடர் கடத்தி இறையடி சாரும்
இமையவர் நெறியில் ஏகிடச் செய்யும்
அமரர்தம் அறவினை ஆற்றிட ஆக்கும்
மெய்யருட் குருபரர் மெய்வழி காட்ட
உய்யும் நெறிதனில் உவந்தினி தேறிட
இக்கொடுங் கலியனின் இயல்பது மாற
தக்கதோர் மெய்வழி தரணியில் கொணர்ந்தனர்
செய்வழி காட்டி உய்வழி கூட்டி
நைவழி நீக்கி நலவழி தேக்கி (280)
செய்வழி ஆற்றும் உய்வழி ஏற்றும்
அருட்பெருஞ் சோதியர் தனிப்பெருங் கருணை
இருட்குலம் கடியும் இளஞ்சூ ரியனென
அகிலம் போதரும் அனைத்துயிர் உய்ந்திடும்
சகல வரந்தரும் சாயுச்ய நாயகர்
இகபர சுகமது யாவரும் எய்திட
பகவான் மெய்வழி தெய்வமாய் இங்ஙண்
அவதரித் திடுநாள் ஆர்ந்தது உலகோர்
தவவரம் பெற்றுத் தன்னிலை அறிந்து
சிவபரம் பொருளாம் தெய்வம் அருள்செயும் (290)
சுகோத யம்வரும் ஜெகமெலாம் உய்யும்
யுகோத யம்வரும் ஊழுழி காலம்
என்றும் எங்கும் மெய்வழி
நன்று நிலவும் நீடுக மன்னோ

4. முதுமொழி உதய பருவம்

நிலைமண்டில ஆசிரியப்பா

உலகின் அழகிய திருமுகம் போன்று
இலகும் தென்னா டென்னும் தமிழகம்
நலமிகு வளந்திகழ் நற்றமிழ் அகத்தின்
திலகம் கொங்குத் திருவள நாடு
அங்கண் கல்மலிக் குறிஞ்சி நன்னிலம்
பொங்கும் எழில்திகழ் பொற்பதி வளங்கள் (300)
தங்கும் மார்க்க நன்னகர் அதுசூழ்
சான்றோர் உள்ளம் உயர்ந்துநிற் றல்போன்ம்
ஆன்ற மல்லிஸ் வரன்மலை அரங்க
மலைசெல் லப்பன் மாமலை அன்னவை
வலமிகு மரகதத் தூண்கள் விண்ணை
நலமுடன் தாங்கி நிற்பன போல்வன
வேங்கை வேழம் வராகம் கான்பசு
தேங்கு மான்மரை என்கு குரங்கினம்
செந்நாய் ஓநாய் சிறுநரி பெருநரி
இன்னன பல்வகை விலங்குகள் உறைமலை (310)
அரனவர் அவதரித் திடுமவ் வூர்க்கு
அரண்போல் இலங்கிடும் அற்புதப் பருவதம்
வரையவை கசிந்து புனலது பொங்கி
அருவிகள் இணைந்துநன் காஞ்சி ஆறெனும்
நிலத்தின் அணியெனும் நெல்லும் கரும்பும்
நலமிகு தென்னை வாழை மாபலா
பச்சைப் பட்டு விரித்தா லன்ன
இச்சை கொளஇலங் கேரார் வயல்கள்
வேங்கை கோங்கு வாகைப லாசம்
ஓங்கி உயர்ந்து செழித்து வளர்ந்து (320)
விண்தொடு வோமென தருசெறி சோலைகள்
மண்ணின் ஆபர் ணம்மென இலங்கின
மல்லிகை முல்லை மணிப்பூங் கருவிளை
குல்லை பிடவம் குவளை குறிஞ்சி
தாழை தளவம் தாமரை தில்லை
ஞாழல் மௌவல் நறுமணக் கொகுடி
கரந்தை ஆவிரை கடிகமழ் பாலை
செருந்தி செண்பகம் சிறுசெங் குரலி
செங்காந் தள்எழில் ஆம்பல் அனிச்சம்
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை (330)
தும்பை துழாஅய் அரும்பு ஆத்தி
செம்பொன் போல்வன தேன்சிந் தும்மலர்
கொடியினும் கோட்டினும் நீரினும் நிலத்தினும்
வடிவெழில் இலங்க மலர்ந்து கமழ்ந்தன
ஆறதன் நீர்கவர் வேலு சமுத்திரம்
நூறு குளம்மதும் நிரம்பி வழிந்தன
வெண்ணிலா ஆதவன் தம்முகம் பார்க்கும்
கண்ணா டிகளாய்க் குளங்கள் விளங்கின
இத்தகைச் சூழல் இலங்கிடு நல்லூர்
அத்தன்எம் ஆண்டவர் அவதரித் திடுமூர் (340)
உயிர்கட் குணவு வழங்கிடும் உழுதொழில்
உயர்வுடை பயிர்விளை வித்திடும் சீரூர்
நலமிகு வேளா ளர்கள் நாயகர்
வலமிகு செட்டியார் திராவிடர் முஸ்லிம்
இலகிடு தச்சர் கொல்லர் குயவர்
நெய்யும் தொழிலினர் வாணிகர் பொன்னணி
செய்யும் வினைஞர்கள் பூசுரர் என்னப்
பல்வகை மாந்தர் நல்லுற வார்ந்து
சொல்தவ றாத தூயராய்ப் பக்தராய்
நல்வித மாக நயமொடு வாழ்ந்தனர் (350)
விநாயகர், பெருமாள், முனீஸ்வரர் காளி
நாச்சா ரம்மன் பகவதி கருப்பனார்
முத்தா ளம்மன் மதுரை வீரன்
மாரி முஸ்லிம் தொழுதிடும் பள்ளி
எல்லாம் அங்குற இனிய விழாக்கள்
ஆலயம் தோறும் அடிக்கடி நடைபெறும்
கோலமார் இவ்வூர் விழாவறா நல்லூர்
வேறுபா டெண்ணா மாந்தர்கள் மாசிலார்
மாறுபா டில்லா மனமகிழ்ந் துறைந்தனர்
மொழிஇன மதங்கள் பேதமங் கில்லை (360)
எழிலுற யாவரும் ஒருங்கிணைந் திருந்தனர்
நதியரு குறுநிலம் மருதம் ஆயினும்
பதிவரு நன்னிலம் கல்மலிக் குறிஞ்சி
புன்செய்ப் பயிர்கள் பொலிவொடு வளர்ந்தன
நன்மன வணிகர்கள் நாடொறும் வந்துறும்
இத்தகு இனியநல் லூரினில் உழுதொழில்
மெத்த இயற்றும் மாண்புயர் பெருந்தகை
சுத்த மனத்தினர் தூயநல் லொழுக்க
உத்தமர் ஜமாலுசேன் உயர்பெருங் குடியினர்
அத்தகு நல்லார்க் கருமனை யரசி (370)
பத்தினித் தங்கம் பெண்குல திலகம்
உத்தமி பெரியதாய் ஒளிவிளக் கதுபோல்
வாய்த்தனர் இருவரும் மனமொருங் கிணைந்து
இல்லற மென்னும் நல்லற மியற்றினர்
நல்லெண் ணம்செய் செயலுடைப் பண்பினர்
மனையறம் புரிந்து வாழ்ந்திடு காலம்
இனியபெண் மகவுகள் இருவர் பிறந்தனர்
தாயம் மாவும் சின்னப் பிள்ளையும்
வாய்த்தனர் நன்மணி மக்கள் எனவே.
எனினும் தமக்கொரு ஆண்மக விலையெனக் (380)
கனிந்த உளத்தில் கவலையுற் றிருந்தனர்
கோயில்கள் சென்று கசிந்து வணங்கினர்
ஆய்மதிச் சிந்தையர் அரிய விரதங்கள்
தாமிருந் தேங்கினர் தவமிகச் செய்தனர்
மெய்ம்மனை விளக்கது வேண்டியன் னோர்கள்
நெய்விளக் கேற்றி நேர்த்திக் கடன்செயும்
தேவனை வேண்டித் தோத்திரம் செய்தனர்
கோவில்கண் டயிடம் குழைந்துகும் பிட்டனர்
இஃது இங்ஙனம் இருக்க மாண்புயர்
நான்காம் வேதம் நவின்ற நபிபிரான் (390)
தாம்பிறந் தகுடி தன்னில் மகதியாம்
ஆண்டவர் வருவார் என்றன் றுரைத்தனர்
மீண்டுயாம் வருமென இயேசுபி ரான்சொலும்
தர்மம் தாழ்ந்துஅ தர்மம்மே லோங்குநாள்
தர்மம் காக்க அவதரிப் போமெனக்
கண்ணபி ரானன்று கீதையில் உரைசெய்
வண்ணமும் இந்த வையகம் தன்னில்
தீங்குகள் ஏறிடும் ஊழிஊ ழிதோறும்
பாங்காய் உருவும் பேர்வேற் றுமையதாய்
வையகங் காக்க வந்திடு வார்என (400)
வைணவ உலகப் பேரா தீனர்
சடகோ பர்அன்று செப்பிய வண்ணமும்
நடைபெற வேண்டி நலம்திகழ் மாட்சியர்
எல்லாம் வல்ல இறைவர் திருவுள்
பொல்லாங் கெல்லாம் போய்மடிந் திடவே
நல்லார் இதயம் நனிகளித் திடவே
தர்மம் தழைக்க நீதி நிலைக்க
அருள்மெய்ஞ் ஞானம் அகிலத் தோங்கிட
தீர்க்கத் தரிசியர் செப்பிய சீருரை
ஆர்க்க நிறைவே றிடவே திருவுள் (410)
எண்ணினர் உத்தமி பெரியதாய் கருக்குகை
நண்ணினர் நாழியோர் மேனியும் கடிகையோர்
வண்ணமு மாக வளர்ந்து சிறந்தனர்
ஐயிரு திங்கள் ஆயது மெய்வழி
ஐயன் அவதரித் திடுநாள் வந்தது
மார்கழித் திங்கள் மதிநிறை நன்னாள்
ஆர்கலி உலகம் அயர்வொழிந் தூய்வுற
கோழி கூவும் கவின்உறு நேரம்
ஆழிவாழ் ஐயர் அவதரித் தருளினர்
இருட்குலம் கடியும் இளஞ் சூரியனென (420)
மரகத மணிமலை வந்துநின் றனரே
அறம்வளர் சூல்விட் டகன்றுமே வெளியாய்
அறமெனும் ஆழியே உருவெடுத் துற்றனர்
வையகக் குருமணி வந்து பிறந்தார்
ஐவகைப் பொறுப்புடை அண்ணல் பிறந்தார்
மெய்வழி வழங்க மேதினி பிறந்தார்
பிறந்தனர் அறிவுப் பிழிம்பெனும் கிரணர்
பிறந்தனர் வித்து நாயகம் பிறந்தார்
விண்ணில் பேரொளி விளங்கி மிளிர்ந்தது
மண்ணகத் துயிர்கள் மகிழ்ந்து களித்தன (430)
தேவர்கள் ஓர்பால் திருத்தவ முனிவர்கள்
மேவினர் கர்த்தர்கள் சித்தர்கள் ரிஷிகள்
வாழி சோபனம் வாழிசோ பனமென
ஆழிவாழ் ஐயரை அமரர்கள் வாழ்த்தினர்
தாம்தெளி வுறுதிரு நாள்வந் ததுஎன
மாமறை யாவும் மகிழ்ந்தினி தேத்தின
கற்பக மலர்களைக் கழலினிற் சொரிந்து
பொற்புகு வானவர் போற்றித் துதித்தனர்
கதிரவன் உதித்துபொற் கதிர்விரித் தேத்திடும்
மதியது பூர்ண மடைந்தினி தொளிர்ந்தது (440)
சமரசம் வந்துறும் சாதிகள் பிணக்கறும்
எமதிடர் தீருமென் றினங்கள் களித்தன
இதமிக இடர்தவிர் இறைவந் தாரென
மதங்கள் மகிழ்ந்து வாழ்த்தி மகிழ்ந்தன
மந்திர ரூபரே வந்தவ தரித்தலால்
மந்திரம் யாவுமே வாழிசோ பனம்சொலும்
அண்ணல் உதித்ததால் அகம்கிளர்ந் தெழுந்து
மண்மகள் செழித்திட விண்வரு ஷித்தது
மண்தீண் டாப்பதம் மண்படிந் திடுமென
மண்ணக தேவி மனம்களிப் புற்றனள் (450)
மரம்செடி கொடிகள் மலர்ந்து நறுமணம்
அரன்பதம் சார்கெனத் தூதுவிட் டார்ந்தன
குயில்கிளி புள்ளினம் கூவின பாடின
மயில்கள் சிறைவிரித்(து) ஆடிக் களித்தன
மன்றல் நாயகர் மலர்திருப் பதங்களை
தென்றல் வந்து தழுவி உயிர்த்தது
குவலயத் தோரே! குதூகலம் கொண்மின்!
தவபிரான் இந்தத் தரணியில் போந்துளார்
பொய்ம்மைக ளெல்லாம் போயொழிந் திடுமின்!
மெய்ம்மை ஒன்றே மேவுமின்! உலகில் (460)
அறமதே மிளிரும் அகிலமீ தினிகொடு
மறமது தாழ்ந்து மாய்ந்தே போய்விடும்
வேதியர் வந்தார் வினைகள் கருகிடும்
நீதியர் வந்தார் நேர்மை நிலைபெறும்
வானக் கனியெனும் ஞானக் கனியுற
ஈனம் அழிந்தது மோனம் சிறந்தது
அவநெறி கெடஒரு தவநெறி வந்தது
சிவனெறி இந்தச் செகத்தினில் தழைத்தது
தீமைகள் இனியிலை தேவரின் அருளால்
சேம நெறியே சிறந்திடும் எங்ஙணும் (470)
சுமைமிகு துன்பத் தழுந்திய மாந்தரே
அமைதியே கொண்மின் அருண்மணி வந்தனர்
புண்பட் டுள்ளம் புலம்பிடு மக்களே!
பண்பட் டுய்ந்திடப் பரமர்வந் துதவுவர்
தாகம் தணிஉயர் நன்னீர்க் கடலிவர்
மோகம் தவிர்த்திடு மேதகு மாதவர்
ஏகன் அனேகன் இன்பருள் நாயகர்
தேகம் எடுத்துத் தாரணி போந்தனர்
கரணம் ஓய்ந்து கடும்பயம் துயர்தரு
மரணம் இலையினி மெய்யர்வந் துற்றனர் (480)
வெம்பிக் கைதளர் வேதனை யுறுபவர்
நம்பிக் கைகொண்ம் நாலாம் பதம்தரும்
கலியுகம் கழிந்தது நலிவுகள் அழிந்தன
பொலிவுறு புதுயுகம் பிறந்தது சிறந்தது
அலகில் சோதியர் ஆண்டவர் வருகையால்
உலகொளி துலங்கிட உய்வழிக் கானது
ஆகா அதிசயம் ஆச்சர் யம்இது
சாகா வரமது தருமிறை சார்மின்
தீர்க்கத் தரிசியர் திருவுரை நிறைவுற
ஆர்த்துக் களித்து அகம்மகிழ் வுற்றனர் (490)
தீர்ப்பர் வருகையால் சமாதியுள் ஆன்மா
மீட்பர்வந் தாரென மகிழ்ந்துபூ ரிக்கும்
அங்ஙனமாகலும்
ஆண்மக வைக்கண் டத்தனும் அன்னையும்
பூண்டனர் மகிழ்ந்து பூரித் தார்த்தனர்
வரவெண் ணித்தவத் தமர்ந்நுள தனிகையர்
உரமிக உளம்தளிர்த் துவகை யுற்றனர்
உத்தர வின்படி உலகிடைப் பிறந்த
சத்திய சுத்தர் தாமகிழ் வுற்றனர்
உற்றவர் வந்துகண் டுவகை மிகுந்தனர்
மற்றவர் கண்டு மகிழ்வொடு வாழ்த்தினர் (500)
தொப்புள் கொடியினைச் சீராய்த் துணித்து
ஒப்புடன் தூய நன்னீர் ஆட்டி
மென்சல் லாவால் மேனி துடைத்து
பொன்மத லைக்கு நறுமணம் சாத்தினர்
அக்கா லத்தில் பாய்மரக் கப்பலில்
மக்கா சென்று ஹஜ்ஜூ முடித்த
புனிதர் சின்னக் கலிபா சாயபு
இனிய பெரியவர் தனையழைத் துவந்து
சர்க்கரை பழம்கருப் பட்டியும் வைத்து
மிக்குயர் சடங்கு முடித்து முறையாய் (510)
வாங்கு சொல்லித் தொழுகை முடித்து
பாங்குடன் காதிரு பாச்சா என்று
(காதிரு பாச்சா - காரண வல்லரசு)
ஆங்குயர் நாமம் ஓங்கி யுரைத்தனர்
தேங்கமழ் திருவாய் திகழ்மத லைக்கு
பாலும் தேனும் தொட்டு நாவினில்
சீலமாய் வைத்தனர் சீர்மத லைக்கு
வந்தஎல் லோர்க்கும் சர்க்கரை பழமும்
சிந்தை கனிந்து வழங்கி மகிழ்ந்தனர்
திருவெலாம் திரண்ட செல்வக் குழந்தையை (520)
பெருகிடும் அன்புடன் பார்த்துக் களித்து
அருகுறு ஊரினர் அன்பர்நட் பினர்கள்
வருவதும் போவது மாக இருந்தனர்
எத்தனை அழகிய(து) இம்மணிச் செல்வம்
மெத்ததெய் வீகம் விளங்கும் எழில்முகம்
பார்த்தவ ரெல்லாம் பரவச முற்றனர்
சீர்மண மலர்களைத் திருவடி சாற்றினர்
கண்டவர்க் கெல்லாம் கழிபே ருவகை
விண்டனர் நெஞ்சில் மிகப் பூரித்தனர்
மானுடப் பிறவி யன்றுஇக் குழவி (530)
வானவர் மேனி என்றுவாழ்த் தினர்காண்

5. வளர் குழந்தை குமாரப்பருவம்

இணைகுற ளாசிரியப்பா

இங்ஙனம் எழில்பொலி இளம்பசும் மேனியர்
தங்க விக்ரகம் தனிப்பெரும் சீதனம்
பொங்கும் அழகியர் புதுமையாய் மிளிரும்
திங்கள் திருமுக செல்வக் குழவி
ஆயிரம் ஆயிரம் நாமம் விளங்கும்
தாயினும் மிக்க தயவுடைக் கடவுள்
அன்றிவர் உலகில் அவதரித் திருந்து
நன்று நலம்புரி கால்உரை நாமம்
ஒருவர்மைத் ரேய புத்தர் என்றும் (540)
ஒருவர் ஆண்டவர் என்றும் மற்று
ஒருவர் இறுதித் தீர்ப்பர் என்றும்
ஒருவர் கடைசி மெசையா என்றும்
ஒருவர் இறுதி கல்கி என்றும்
ஒருவர் சாலை ஆண்டவர் என்றும்
ஒருவர் பொன்னின் அரங்கர் என்றும்
ஒருவர் சோஷி யாஸ்இவர் என்றும்
ஒருவர்கர்த் தாதி கர்த்தர் என்றும்
ஒருவர்மெய் வழிதரு மகதி என்றும்
இன்னனம் பற்பல நாமங் கட்கு (550)
மின்னும் மேனியர் மிக்குரித் தாயினர்
இத்தகு செல்வர்தம் மகவென அந்த
அத்தனும் அன்னையும் அறியார் எனினும்
பன்னாள் இறைவனைப் பணிந்து வணங்கி
தன்னுடல் வருந்த விரதமேற் கொண்டு
எழுவரு டங்கள் நோன்புகள் நோற்று
தொழுதும் அழுதும் ஆண்மக வுக்காய்
நேர்த்திக் கடன்கள் செய்ததால் கிட்டிய
கீர்த்தி மிக்கஇக் குழவியைக் கண்டதும்
உள்ளம் பூரித்(து) உணர்வோங் கன்பு (560)
வெள்ளம் பெருக மெலிவெலாம் தீர்ந்து
அகமகிழ்ந் தானந்த பாஷ்பம் பொங்க
சுகஉத யம்கொள் சிந்தையர் ஆயினர்
சப்தம் செவியைப் பொதிந்துள போலும்
சுவையை நாவது பொதிந்தது போலும்
நறுமணம் நாசியைப் பொதிந்தது போலும்
உணர்ச்சியை உடலது பொதிந்தது போலும்
காட்சிகள் கண்களில் கனிந்துள போலும்
மாட்சிமிக் கோங்கும் மகவினை ஆர்ந்து
ஈஎறும் படரா வணம்அதைக் காத்து (570)
தாயும் தந்தையும் தங்கள் உயிராய்
கண்ணை இமைகாத் திருப்பது போலும்
எண்ணெய் இட்டு இதமுழுக் காட்டி
உச்சி துடைத்து உணர்வெழ முகர்ந்து
இச்சை பிறங்க இனிதெடுத் தணைத்து
வாசனை யூட்டி மகவைக்கை யேந்திப்
பாசம தோங்கப் பாலமு தூட்டி
மாரது மீதும் மடியது மீதும்
சீராய்த் தோளதன் மீதும் சாய்த்து
மடைதிறந் தன்பு வெள்ளம் பெருக (580)
துடையதில் தொட்டிலில் கட்டிலில் வைத்து

வேறு

ஆராரோ ஆரிராரோ ஆறறிவு மேரேறே!
பேரூர் பிறந்தபசும் பொன்னேநீ கண்வளராய்
கண்ணே!என் கண்மணியே! கல்புக் கனிரசமே!
என்னதவம் செய்தேனோ இங்குவந்து நீபிறந்தாய்!
நெய்விளக்கு ஏற்றி நேர்ந்து தவமிருந்தே
வையகத்தில் என்வயிற்றில் வந்துபி றந்தகண்ணே!
காலமெல் லாமிருந்து கலிதீர்க்க வந்தஎந்தன்
ஏலப் பசும்மேனி என்மகனே! கண்வளராய்!
முன்னை முழுமுதலே! பின்னைப் பெரும்பொருளே! (590)
அன்னையாய் அத்தனுமாய் ஆன்றகுரு தெய்வமுமாய்
வண்டக்கலி துண்டாட வந்த பராபரரே!
அண்டர்க் கரியவரே! அன்பர்க் கெளியவரே!
பண்டைப் புராதனரே! பரமபுரு டோத்தமரே!
எண்டிசையும் கண்டறியா எந்தாய் பராபரையே!
தொள்ளா யிரம்முத்தில் துழாவி எடுத்தமுத்தே!
ஆயிரம் மாணிக்கத்துள் ஆய்ந்தெடுத்த மாணிக்கமே!
தாயின் கருணைமிகு தயாபரரே தாலேலோ!
தூய மணிவிளக்கே! சுடரார்ந்த பேரொளியே!
கலியுகத்தை முடித்துக் கட்டான தர்மபதி (600)
வலியுகத்தைத் தாம்படைக்கும் வல்ல தவத்தரசே!
சாவா வரமருளும் தருமதுரை தாலேலோ!
ஜீவாமிர் தஊற்றே! செழுங்கனியே தேன்பிழிவே!
தேவாதி தேவரையா! திருக்கயிலை வாசரையா!
மூவா முதல்வரையா! முனிக்கரசே கண்வளராய்!
ஓவா தவமியற்றும் உத்தமரே தாலேலோ!
பூவாது பூத்திடுவான் பொழில்மலரே தாலேலோ!
பாவசங் காரம்செய்யும் பரமேசா கண்வளராய்
தீவினைக ளையறுத்து தேவநிலைக் கேற்றுவிக்கும்
மாவினைஞன் நீயன்றோ மன்னவனே! கண்வளராய் (610)
தூங்காத ஆண்மைத் துலங்குதவ கோமானே!
பாங்காகப் பஞ்சணையில் படுத்தினிது கண்வளராய்!
செப்பரிய வான்செல்வம் சேர்க்கத் தவம்புரிவாய்!
சற்றும் உறங்காதே தனிகையரின் வான்மகவே!
மற்(று)அவர்முன் காத்திருக்கும் மணிச்செல்வா கண்ணயர்வாய்!
கட்டாணி நன்முத்தே கனவயிர மாமலையே!
எட்டாத மேனிலைக்கு ஏற்றுமெங்கள் கோமானே!
கிட்டாத வான்செல்வக் கொழுநிதியே கண்வளராய்!
பொன்னே! நவமணியே! புதுமலரே! கற்பகமே!
அன்னே! அருண்மணியே! அறிவுருவே! கண்வளராய்! (620)
பின்னே பெரும்பணிக்கு முன்னே களைப்பாறு
தன்னேரே இல்லாத தவமேரே கண்வளராய்!
பூரணமே ஆரணமே காரணமே தோரணமே!
சீரனந்தர் தேவேசா திருவிளைவே தாலேலோ!
ஆராலும் அளப்பரிய அருந்தவத்து மேரேறே!
பேரான பெம்மானே! பொற்சிலையே கண்வளராய்!
மணியே!ம ணியொளியே! மாதவமே! கண்வளராய்!
அணியே!அ ணியார்ந்த அற்புதமே! கண்வளராய்!

வேறு

இங்ஙனம் இனிய ஏரார் குழவியை
செவ்வையாய் கனிந்த சீருடன் வளர்த்தனர் (630)
நாழியோர் மேனி கடிகையோர் வண்ணம்
ஊழி முதல்வர் ஓங்கி வளர்ந்தனர்
செப்பரும் பொற்சிலை குப்புறக் கவிழ்ந்தது
ஒப்பிலா இளநகை உவப்புறக் காட்டிட
முத்தி முகந்தனர் முதுபெருங் குரவர்
தத்தி எழுந்து பிடிநடை நடந்து
சித்திரம் உயிர்பெற் றாலெனத் திகழும்
வித்தகச் செல்வரின் வயதொரு நான்கில்
சிவந்த வர்ண செழுங்கரங் கட்கு
கவர்ந்தெழில் துலங்கும் காப்பணி வித்தனர் (640)
பச்சிளம் கமுகனை மென்மிடர் தனக்கு
இச்சை பிறங்கெழில் காரை பூட்டினர்
இளம்பூ மேனி தாங்கிடும் இடைக்கு
வளமார் அரைஞாண் சதங்கை புனைந்தனர்
வெண்கலம் விளக்கிய மென்தாள் கட்கு
வண்ணமார் விருது காப்பணி வித்தனர்
மணியொளிர் மாதவர் வனப்பொளிர் மகவுக்கு
அணிகலன் பூட்டி அழகுபார்த் தின்புறும்
தேவ ஓவியம் சீருயிர் பெற்றது
பூவுல கிதனில் பொலிவுற லானது (650)
கற்கும் கல்வியும் பயனும் ஆயது
பொற்குன் றனைய புதல்வர் தமக்கு
கல்விகற் பிக்கக் கனிந்துளத் தெண்ணினர்
கல்வி கற்பித்தவர் கருப்பணாச் சாரியார்
எங்கள் இளங்குருத்(து) அனையநற் செல்வர்
தங்கச் சிலையது தளர்நடை நடந்து
பொங்கெழில் சுவடிக் கட்டினைச் சுமந்து
செங்கம லம்மெனும் சீரடி பெயர்ந்து
தங்க மணித்தேர் ஊர்வலம் செலல்போல்
எங்கள் உயிர்ச்சிலை கற்றிடச் சென்றது (660)
கலைமக ளேஓர் திருவுரு வாய்வரு
தலைமகன் எம்மான் தான்பள்ளி சென்றனர்
எழுத்தறி வித்த இறைவராம் எங்கோன்
எழுத்தெண் அறிய ஏகிடும் பள்ளி
ஓதா துணர்ந்திடும் ஒருதனி முதல்வர்
வேதா கமங்களாய் விளங்கிடு வேதியர்
நாதநா தாந்தர் நற்றிரு வானவர்
போதம் பெறவே பள்ளிக் கேகினர்
ஓலைச் சுவடியே உற்றகா லம்மது
சீலர் ஆசான் செப்பிடச் செப்பும் (670)
செவிவழி கேட்டு திரும்பச் செப்பிடும்
நவவழி அதுநாள் நற்கலை ஆகும்
சுருதி சுரோத்திரம் என்றன் றுரைப்பக்
கருத்தில் உறுத்தாய் கவனித் திடுவர்
சித்திரப் பதுமை அத்தக அடங்கி
ஒத்துரை கேட்டு உறுநூல் பகர்தல்
அன்னம் போலும் ஆவினைப் போலும்
சொன்னநன் னூல்கள் தெளிவுற அறிதல்
ஆசான் வீட்டு அகன்ற திண்ணையும்
மாசில் மணல்செறி இண்டம் புதர்நிழல் (680)
இவையே அன்றைய பள்ளி யிடங்கள்
நவையே இன்றி நன்கிவர் கற்றனர்
சொன்ன தன்படியே சொல்நினை வாற்றல்
தென்னன் சீமான் திருவுறக் கற்றனர்
இங்ஙன மாக இரண்டாம் வகுப்பு
செங்கம லத்தாள் செம்மல் பயின்றனர்
ஈடிலா உழவர் பெருங்குடி மக்கள்
ஆடுகள் மாடுகள் வளர்ப்பது வழக்கம்
ஆடுகள் மேய்த்திட ஆள்நிய மிப்பர்
தேடினும் ஆள்கிடைக் காததக் காலம் (690)
தாயும் தந்தையும் செல்வக் குமரரை
மேய்ப்புப் பணிக்கென ஆக்கிட எண்ணினர்
ஆய்மதிச் சிந்தையர் அவர்கருத் தறிந்தனர்
“அத்தா! அம்மா! யான்மறி மேய்க்கும்
சித்தம் கலங்கேல்,” எனச்செப் பிடவும்
பெற்றோர் தாமும் பெருமகிழ் வுற்றனர்
கற்றது போதும் எனும்கருத் தினராய்
நற்றவர் ஞானச் செங்கோல் தாங்கும்
பொற்றிருக் கரத்தில் மேய்ப்புடைக் கோலைத்
தாங்கி எழுந்தனர் தரணியில் நம்மை (700)
ஈங்கு மேய்த்து இன்னமு தளிக்கும்
பாங்குக் கன்றே பதித்தனர் வித்து
தேங்கமழ் தாரோன் திருமணி நாயகர்
ஆங்குறு மேய்ப்புத் தலங்களில் ஆடுகள்
மேய்த்திடும் காலையில் வேய்ங்குழல் இசைக்கும்
மேய்ந்திடும் மறிகள் பசுக்கள் யாவும்
இன்னிசை கேட்டு இன்ப வடிவரின்
தன்னரு கார்ந்து திருமுகம் நோக்கும்
ஓங்கிக் குரலெடுத் துவப்புடன் பாடுவர்
ஆங்காங்(கு) ஆடுகள் கழுத்தணி மணிகள் (710)
பாங்கர்பா டற்குச் சுருதியும் சேர்க்கும்
பூங்கழல் நாயகர் பொன்னுளம் விழைந்து
சித்தரின் நூல்கள் கீதை திருக்குறள்
வித்தக புராணம் ஞானவா சிஷ்டம்
குமாரசா மியம்சூ டாமணி நிகண்டென
குமாரர் பன்னூல் கற்றுத் தேர்ந்தனர்
எங்ஙன மோமிரு தங்கம் வீணை
பொங்கிசைப் புல்லாங் குழலெனும் கருவிகள்
கற்றுத் தேர்ந்தனர் கண்மணி நாயகர்
பள்ளிப் பருவம் தன்னில் தன்னை (720)
உள்ளம் உவப்ப உற்று அணைத்து
கல்வி பயிற்றிய கனிவுடை ஆசான்
நல்லார் ஒருநாள் இறப்பு எய்தினர்
கூட்டம் கூடி உறவோர் அழுதனர்
ஈட்டம் பெருகி எல்லாம் வருத்தி
அன்னவர் உடலைப் பிணமென் றரற்றி
மென்மையர் அவரை மண்ணில் புதைத்தனர்
உற்றவர் எல்லாம் ஒருங்கு கூடி
மற்றுச் சடங்குகள் மிகவும் செய்தனர்
அன்னவை அவரை அவமா னம்செய் (730)
தன்மை போலும் திகழ்வது கண்டனர்
அவர்கள் அழும்போ திவரும் அழுதனர்
தவறறி யாத சான்றோர் தம்மை
மண்ணில் இட்டு மறைத்த பின்னன்(பு)
எண்ணம் இன்றி எல்லாம் திரும்பினர்
இதுகா றும்நம் இளங்கு மாரர்
இதுசா வென்று காணார் அறியார்
ஆசிரி யர்இனி வாரார் தாமோ
பேசரி யாரோ உணவுக் கென்செயும்?
என்றெலாம் எண்ணி இளவல் இரங்கும் (740)
இடுகா டேகிப் புதைகுழிக் கருகில்
கடிதே அமர்ந்து கண்ணீர் பெருக்கினர்
பெற்றோர் பிள்ளையைக் காணா தலைந்து
உற்றவர் இடுகாட் டிருப்பது கண்டனர்
குழந்தையை அழைத்து கொடுபோந் தாசான்
இழந்ததைப் பற்றி எடுத்துரை செய்து
நல்லார் பொல்லார் எல்லாம் சாவார்
வல்லான் ஏமன் கொண்டே போவான்
சாவென் பதுவே பொதுவென் றுரைத்தனர்
பூவின் மெல்லிய பொன்மனச் செல்வர் (750)
சாவு நிச்சயம் என்கின் றனரே
சாவில் லாமல் இருக்க வழியெது?
சாவில் லாத வாழ்வொன் றுண்டோ?
நோவில் லாமல் வாழ்வது எப்படி?
என்றெல் லாமும் எண்ணினர் குமரர்
தம்மை அன்பால் அருகணைத் திட்டு
செம்மை நலமுடைச் செல்வரென் றுரைத்த
தரும கர்த்தா என்பவர் இறந்தார்
அருமைச் செல்வர் அதுநினைந் தழுதார்
மாசு மறுவில் மென்மனச் செல்வர் (760)
நேசர் நெஞ்சம் புண்பட் டயர்ந்தார்

அ. பள்ளிவாசலில் ஆலிம்சா பிரசங்கம்

இங்ஙன மாக இருந்துறை நாளில்
அங்குள பள்ளி வாசலில் ஆலிம்
என்னும் பெரியார் இன்னுரை பகரும்
வம்மின் உலகீர்! வம்மின் உலகீர்!
செம்மை உரைகள் செப்புவம் கேளீர்!
இம்மை மறுமை இரண்டு உண்டு
இம்மண் ணுலகில் இறப்பு இருவகை
நியாய மரணம் அநியாய மரணம் (770)
ஆய்ந்து அறவோர் அறிவித் துள்ளனர்
ஒன்று மவுத்து துக்கச் சாவு
நன்று “வஃபாத்” இறையடி சார்தல்
குசுல்என் றுரைக்கும் நஜீஸ்வெ ளிப்படும்
கசப்பு என்றும் கூறுவர் இதனை
அப்படி ஆகிடில் அருநர கடைவர்
இஸ்ரா யில்எனும் ஏமன் வருவான்
மசியான் எவர்க்கும் வன்மன முடையான்
சக்ராத் என்னும் மரணத் துன்பம்
எக்காலத்தும் எவர்க்கும் வருகும் (780)
நன்மை செய்வோர் மெகராஜ் ஏகுவர்
பொன்மை உலகில் போயின் புறுவர்
தீமை செய்வோர் மவுத்தது ஆகி
தீய ஜஹன்னத் துயருள் ஆழ்வர்
ஈமான் ஆறு என்றறி மின்கள்
ஈமான் நம்பிக் கைஎன் றறிமின்
இறைவன் ஒருவரே தேவர்கள் உண்டு
இறைதூ தர்கள் உள்ளனர் தெளிமின்
வேதம் உண்டு மரணம் உண்டு
நீதம் வழங்கும் தீர்ப்புநாள் உண்டு (790)
எல்லாம் நடப்பது இறைவன் அருளால்
சொல்லில் செயலில் நினைவில் தூய்மை
கல்பில் நூரொளி கண்டிட வேண்டும்
கல்பில் கதிரொளி காட்டுவார்ஷெய்கு
நாசி வெளியே மூச்சோ டாதவர்
தேசிகர் ஷெய்கு என்றறி மின்கள்
என்று ஆலிம் இன்னுரை மொழிந்தார்
நன்றது கேட்டனர் நம்இளம் குமரர்
அன்னவர் நல்லுரை ஆழமாய்ப் பதிந்தது
இன்னமிழ் தனையவர் தொழுகையை முறையாய் (800)
ஐந்து வேளையும் ஆர்வமாய்ச் செய்தனர்
நாடி நவின்று கலிமா சொல்லல்
கோடி முறையெனக் கூறிட லாகும்
இவரின் இயல்பை தொழுகை முறைகளை
தவறில் லாதுறை நன்னடக் கைகளை
கூர்ந்து ஆலிம் கண்டு வியந்தனர்
ஆர்ந்து அவர்தொழல் கண்டு மகிழ்ந்தனர்
இச்சிறு பருவத் திவர்போல் தொழுகை
எச்சகத் தும்எவ ரும்செய் தாரிலை
நிச்சய மாயவர் ஞானி என்றனர் (810)
மெச்சுதல் கேட்டுப் பெற்றோர் மகிழ்ந்தனர்
மாலக் கோயில் விழாவினுக் கேகியே
சீலர் மஃறிபத் மாலை வாங்கினர்
ஞானநூல் கற்றால் பித்துறும் என்று
ஈனர் சில்லோர் பெற்றோர்க் குரைத்தனர்
தந்தை நூல்பெற் றதைமறைத் திட்டனர்
விந்தையார் குமரர் விபரமாய் அதனைக்
கண்டறிந் தெடுத்து காட்டினில் வைத்துக்
கொண்டனர் மனனம் என்னோ வேட்கை!
இளஞ்செம் மல்இவர் இனிதே வளர்கால் (820)
உளமோ இறையை உவந்து வேண்டியது
இறைவரைக் கல்பில் எப்படிக் காண்பது
துறையைக் காட்டிடும் தோன்றலர் யாவர்?
அநியாய மரணம் ஆகா தன்றோ!
நியாய மரணம் எவ்வண மாகும்
யாரிதைத் தெளிவுறச் செய்குவர்? எந்தப்
பாரினி லுள்ளார் பகர்வார் மெய்வழி
உண்ணல் உறங்கல் உறவொடு பழகல்
எண்ணம் பொய்ப்பொருள் தேட்டினுக் கலைதல்
மின்னல் போலும் தோன்றி மறையும் (830)
இன்னல் நிறைந்த இப்புவி வாழ்வு
அழியும் இன்பத் தேட்டினர் மாந்தர்
அழியா வாழ்வு ஒன்றுள தறியார்
நித்திய ஞானம் நல்கிடு நற்குரு
எத்திசை யுள்ளார் என்றே அலையும்
நமக்குப தேசம் நல்கும் குருபரர்
தமைநாம் தேடிக் காண்பது எவ்வணம்
என்றே இளவல் எண்ணி மயங்கும்
கன்றே போலும் கதறி அழுவார்
சாவை வெல்ல தேவனைக் காண (840)
யாவர் நற்றுணை எங்குளார் கொல்லோ!
அந்தந் தக்கா லத்தில் பெரியார்
வந்தனர் என்றே வரைந்துளர் சான்றோர்
இந்தக் காலத் தப்படி ஞானியர்
வந்தில ரோநல் வாய்ப்பில தோவென
விண்ணின் மைந்தர் மெலிந்திடும் எண்ணி
அண்ணல் நெஞ்சம் அனல்மெழு காகும்
நிலையா மைநம் இளவல் நெஞ்சுறும்
அலையா தலைந்து மெய்ந்நெறி தேடுறும்
மலைவில் நெஞ்சர் மெய்மை நாடும் (850)

ஆ. வண்ணமேனி வடிவழகர் வர்ணனை

அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரியச் சந்தவிருத்தம்

தானே அந்தத் தனிமுதலாம்
தன்னே ரில்லா இறைவரெனத்
தானே அறியார் தனைத்தேடி
தலங்கள் எங்கும் அலைந்தாரே
வானோர் தலைவர் வளநாடர்
வளர்ந்து இளமைப் பொலிவேறு
தேனார் மொழியர் சீரெழிலைச்
செப்ப விழையும் எளியேனே
(851)
எங்கள் செல்லம் இளங்குமரர்
இனிதாய் எழிலாய் வளர்வேறி
தங்கச் சிலையோ தந்தந்தான்
செதுக்கி எடுத்த சிற்பமதோ
வெங்க லத்தான் மிகமுயன்று
வடித்து விளக்கும் திருவுருவோ
பொங்கும் அழகைத் தரிசிக்க
போதா தாயிரம் கண்களம்மா!
(852)

திருமுடி

கருமை செறிந்து அழகார்ந்து
குழலே சுரிந்து கண்டம்வரை
அருமை யாகச் சிந்துமெழில்
யார்தான் கண்டு மயங்காதார்
திருவார் நுதலும் வளர்பிறையோ
திகழும் அழகார் பட்டயமோ
பெருவீ ரன்கை வாள்போலும்
புருவ எழிலைக் காணீரோ
(853)

திருவிழிகள்

அமரர் கோனின் திரு விழிகள்
அழகார் கமலம் பூத்ததுவோ
இமையோர் தலைவர் என்சாமி
எழிலார் விழிகள் மாணிக்கம்
குமரர் குவளைக் கண்ணழகை
கூறற் கெளிதோ அம்மம்ம!
எமையும் உலகின் உயிர்கள்தமை
இரங்கி நோக்கும் ஒளிர்கண்கள்
(854)
இரக்கம் கனிந்து அருளாளர்
இதயக் கனியின் திருநோக்கம்
சுரக்கும் கருணைக் கீடிணையோ
சொல்ல வலனோ எளியேனே
சுரர்கோன் சுயமாம் பிரகாசம்
நித்யா னந்த சுயஞ்சோதி
அரனின் விழிநோக் கிதுபெற்றால்
அகலும் பிறவிப் பிணியம்மா!
(855)

திரு நாசி

எள்ளின் மலரின் எழில்போலும்
இலங்கும் எம்மான் திருநாசி
உள்ளம் கவரும் பேரழகை
உரைக்க வல்லார் உண்டோசொல்
அள்ளற் கரிய சுவாசமது
அடங்கித் தவம்செய் திறமோங்கும்
கள்வர் எங்கள் உளங்கவர்ந்தார்
கண்ணின் மணியர் திருநாசி
(856)

திருவாயிதழ்கள்

அல்லி மலர்ந்து சிவந்ததுவோ
அழகு முருக்கின் பூவிதழோ
நல்செங் கமல மலரிதழோ
நங்கோன் திருவாய் இதழழகு
மெல்லென் றமுத மழைபொழிய
மிளிரும் கொவ்வைக் கனியிதழோ
அல்லென் மறலி இடர்தவிர
அருளார் வரங்கூர் இதழ் காண்மின்
(857)

திருப்பற்கள்

வெண்முத் தாரும் அரணிதுவோ
வளஞ்சீர் அமுதக் கடற்கரையோ
வெண்மா துளைமுத் தின்வரிசை
விளங்கும் எம்மான் திருப்பற்கள்
அல்லார் நெஞ்சத் திருளகல
அழகாய் நகைசேர் ஒளிர்விளக்கு
பல்நன் றிலங்கும் பவளவாய்ப்
பளிங்குப் பேழை காணீரோ
(858)

திரு நா

செந்தா மரையின் இதழ்செப்பம்
செய்த அமுதத் திருநாவே
பைந்தார் துளபர் என்னையர்
பவளத் திருவாய் தனிலிலங்கும்
செந்தேன் விஞ்சும் சுவையாரும்
திருவார் அமுத மொழிசிந்தும்
எந்தன் நாதர் திருநாவிற்(கு)
ஈடு உரைத்தல் எளிதாமோ
(859)

அமுத மடையே திறந்தினிது
அறிவின் அருவி பொழிநாவே
குமுதத் திருவாய் மலர்ந்தருளி
கூற்றை வெல்லும் வரமருளும்
தமர்தாள் பணிந்த சற்சனர்க்கு
சாவா வரங்கள் தருதிரு நா
அமரா திபரென் றார்ந்துவரும்
அண்ணல் திருவாய் மலர்மணிநா
(860)

திருக்கன்னம்

கதுப்புக் கன்னம் பேரழகு
கனிமாம் பழமார் திருவுடைத்து
இதங்கொள் எம்மான் திருச்செவிகள்
எழிலார் வள்ளை மலர்போலும்
நிதமும் புதியர் எம்சாமி
நெஞ்சம் அகலா துறைநாதர்
புதுமை கொழிக்கும் திருக்கண்டம்
பொலியும் சங்கு போன்மிளிரும்
(861)

திருமுகம்

விண்ணின் நிலவில் கறையுண்டு
வேந்தர் எங்கோன் திருமுகமாம்
மண்ணின் நிலவில் நிறைவொன்றே
மிளிரும் அழகைக் காணீரோ!
அண்ணல் தன்னைச் சார்வோர்க்கு
அகலும் பிறவிப் பிணிதானும்
மண்ணில் போந்த மறைவேந்தர்
மாட்சி யுரைக்க வல்லேனோ!
(862)

திருத் தோள்கள்

திண்டோள் இரண்டும் முழவனைய
செப்பற் கரிய பேரழகு
கண்டோர் வியக்கும் தன்மைத்தாய்
கரங்கள் கொண்டற் கொடைநிகர்த்த
விண்டே வியப்பார் மறையருள்செய்
விளங்கும் முழந்தாள் முட்டுவரை
அண்டர் கோனின் அருட்கைகள்
அமுதம் வழங்கும் திருக்கைகள்
(863)

திரு மார்பு

வெள்ளா னைதன் மத்தகமோ
விளங்கும் குமரர் திருமார்பு
உள்ளார்ந் தொடுங்கும் திருவுதரம்
ஒளிசேர் வயிரத் தூண்தாள்கள்
வெள்ளந் தாழ்செந் தாமரைபோல்
விளங்கும் பொற்றாள் வளர்சீமான்
உள்ளந் தன்னில் கொலுவீற்று
உறையும் எம்மான் பேரழகர்
(864)
யவனர் வெண்க லம்உருக்கி
இயற்றும் சிற்பம் போலிலங்கும்
சிவனார் எங்கள் திருக்குமரர்
சீரார் அழகும் ஆற்றலுமே
புவனம் எங்கும் கண்டறியா
பேராரெழிலாய் துலங்கியதே
தவனார் திருப்பேர் அழகுரைக்கத்
தமியேற் கேது திறனம்மா!
(865)

கலித்தாழிசை

எழில்மிகு இளங்குமரர் இனியவர் குணமணியர்
பழகுதற் கெளியவர்காண் பணிவொடு கனிவுடையர்
தொழுகையைத் தொடர்பிடியாய் வழுவறச் செயும்தகையர்
மொழிவதில் நிறைவுடையார் முனிவிலர் அமைதியினர் (866)

பெரியவர் தமைப்பணிவர் எளியவர் தமைஅணைப்பர்
அரியமெய் மறையுரைகள் அமுதெனப் படித்தறியும்
பரிவொடு பிறர்க்குதவி புரிவது இவரியல்பு
சரியெனும் அருஞ்செயலை திறன்மிக முடித்திடுவர் (867)

இளநகை பொலியுமுகம் இனியநல் மொழிபுகல்வாய்
தளர்வறு உழைப்புடையார் தமர்பிறர் குறைகருதார்
உளமதில் தெளிவுடையார் ஒளிச்சுடர் விழியுடையார்
களவுகள், கபடுடையார் தமைவெறுத் தொதுக்கிடுவார் (868)

அறவுரை எவர்சொலினும் அதைப்பணி வுடன்கொளுமே
திறனொடு செயல்புரியும் தளர்ந்தவர் துயர்தவிர்க்கும்
மறுவறு நினைவுடையார் மனமதில் நிறைவெதிலும்
வறியவர் நிறைவுறவே வழங்கிடும் உணவுடைகள் (869)

வழக்குகள் எதுவரினும் முறைசெயும் தெளிவுரைக்கும்
சழக்கரை அடக்கிடுவார் தனித்திறன் உடையரிவர்
ஒழுக்கநன் னெறிதனிலே உயர்நல மிகவுடையார்
வழுக்கியும் குறைமொழியார் மதிதெளி வுடைஇளவல் (870)

இ. வேங்கை வேட்டைநாய் சம்பவம்

நல்விளை யுள்நிறை நற்குடி வாழ்பதி
கல்மலிக் குறிஞ்சி நன்னில நன்னகர்
வல்லர் எம்பிரான் வந்தருள் தந்தவூர்
தொல்பொருள் சீருயர் சான்றோர் வதியுமூர்
நேரியர் தந்தை நல்லார் ஜமாலுசேன்
சீரியர்க் குற்ற சிறந்ததோர் நண்பர்
மலையரு குற்றிடு மாவனம் சூழ்ந்தது
நிலமுடை யவரவர் அங்கு விலங்குகள்
பலபல போந்து திரிதரும் ஆகலான்
வேங்கை தன்னையும் வென்றிடும் வேட்டைநாய் (880)
பாங்குற வளர்த்துப் பாதுகா வல்கொளும்
அன்னவர் தம்பால் அண்ணலின் தந்தையார்
நன்னய மாகநற் செய்தி செப்பென
இளங்கும ரர்அங் கேகினர் அதுகால்
வளர்வுறு திரிதரு வலிமைமிக் கந்நாய்
வீறியே அம்புபோல் விரைந்தரு குற்றது
சீறியே நம்கும ரர்மேற் பாய்ந்தது
யாது செய்வதென் றோர்கிலார் செல்வர்
தோததன் வாயில்தம் தோளுறு நற்றுகில்
கையில் சுற்றியே கடிதந் நாயின் (890)
வெய்ய வாயில் இடதுகை தந்துமே
வலக்கரத் தால்கீழ்த் தாடையைப் பற்றியே
பலங்கொண் டேபிளந் தேயதை வீழ்த்தினர்
நண்பர் ஓடிவந் தேஎங்கள் செல்வரின்
பண்பு மேனியில் பட்டிடு காயம்
கழுவி நன்மருந் திட்டுப் பெற்றோர்க்குப்
பழுது நேர்ந்தவிச் செய்தியைச் செப்பினர்
கேட்டுப் பெற்றோர் கலங்கி மயங்கினர்
தேட்டுத் தங்கள் தவப்புதல் வர்தனின்
மார்பில் ரத்தக் காயம் கண்டதும் (900)
பேர்பெ ரியதாய் தந்தை கதறினர்
நின்னின் பேரழ கைக்காண் கண்களே
இன்ன கோரத்தை காணலும் ஆனதே!
தவத்தி னால்விளை தங்கமே! செல்லமே!
அவத்தின் காட்சியைக் காணப் பெருங்கொலோ!
தெய்வ மேயிது தந்தருள் பிச்சை
செய்த பாவம் எதுவோ அறிகிலோம்
துய்ய மாமலை துன்புற லானதே!
என்று பற்பல வாறு புலம்பினர்
கன்றனை நம்கும ரரும்மே கலங்கினர். (910)
நீண்ட காயத்தை நீவித்த டவியே
மாண்டு போயுயிர் மீண்டது கண்டனர்
ஆண்ட வர்செயல் என்று உணர்ந்தனர்
கூண்டு வண்டியில் ஏற்றிக்கொண் டூர்வரும்
ஒருகால் குமரரின் தோழன் தனக்கு
திருநோன் பதனை வைத்தனர் பெற்றோர்
பசிபொறுக் காத பேதை அன்னோன்
ருசி புசி உண்டு நோன்பு முறிந்தனன்
நோன்பு முறிந்ததன் காரணம் இவரென
வீண்பழி சுமத்தினர் அன்னவன் பெற்றோர் (920)
ஜமாத்துள் பிராதும் தந்தனர் அன்னோர்
நமதுயிர் குமரரை விசார ணைசெய
வருகென அழைத்தனர் வினவினர் அங்குறு
பெருமகன் ஆலிம் முன்வந் தன்பொடு
பெருமை யுடன்சில மொழிகள் கூறும்
இந்த இளைஞர்க் கீடிணை எவரும்
எந்தப் பகுதி யிலும்இலை வருநாள்
இவரொரு ஞானி ஆகவந் திடுவார்
தவறெதும் என்றும் செய்திடாத் தூயவர்
முதியவர் கூட இணையிலா வகையில் (930)
இதமிகு சிறப்பாய் இறைவனை வேண்டிடும்
தொழுகை முறைகளில் அணுவும் தவறார்
ஒழுக்கம் சிறந்த உத்தமர் இவர்காண்
தம்மகன் செய்பிழைக் கயலவர் மகனை
வெம்பழி சுமத்திடல் தவறென அறிமினே
குற்றமில் மகனைப் பெற்றவர் புண்ணியர்
நற்றவர் இவரென நவின்றனர் ஆலிம்
இதுகேள் ஜமாத்தும் ஈன்றவர் சுற்றம்
மிதமிகு மகிழ்ச்சியும் பெருமையும் உற்றனர்
ஈன்ற பொழுதில் பெரிதே உவக்கும் (940)
சான்றோன் மகனெனத் தாயும் தந்தையும்
நம்முயிர்த் தங்கம் நற்றவச் செல்வம்
செம்மை நெறியர் சீருரைப் பண்பினர்
வயதின் மீறிய நுண்ணறி வாளராம்
நயமிகு இனிமை நன்மொழி புகல்வர்
தயவொரு வடிவரைத் “தம்பி”யென் றினிதே
இயல்பாய் அனைவரும் இனிதாய் அழைப்பர்
ஊரினில் நியாயம் உரைக்கும்சான் றோர்களும்
சீருயர் தீர்ப்புச் செய்திடும் முன்னர்
தம்பியை ஒருசொல் கேட்டிடு வோமெனும் (950)
உம்பர்நம் செல்வரும் உவந்துரை வழங்கும்
இங்ஙன மாகநம் இளங்கும ரேசர்
பொங்குவே ளாண்மை பொருத்தமுற் றோங்கி
எவரும் நிகரிலா வண்ணம் இயற்றுவர்
தவநெறிச் செல்வர் தகைசால் பண்பினர்
பசுமறி மேய்த்துப் பட்டி பெருக்கினர்
இசைவுடன் வேளாண் மையதும் சிறப்புறும்
எத்தொழில் புரியினும் எந்நிலை வரினும்
வித்தகர் சித்தம் இறையையே எண்ணும்
தொடங்கினும் நடப்பினும் முடிப்பினும் இன்னவர் (960)
கடவுள் தம்மையே கருத்தில் நிறைத்திடும்
சாம்பிணம் கூடிய சமுகத் திடைநாம்
ஏம்பிறந் தோமென எண்ணும் உளத்தினர்
அக்கா லங்களில் அரியமெய்ஞ் ஞானியர்
தக்கோர் இருந்தனர் என்றுரை கேட்டுளோம்
இக்கா லத்தில் இலரா யினரோ?
புக்கில் யாது? பெரியோர் எங்குளர்?
அனியா யம்மர ணம்மிலா வாழ்வு
இனியெங் குளது? எவர்காட் டிடுவர்?
என்றெண் ணியெண்ணி ஏங்குறும் சிந்தையர் (970)
கன்றிடும் நெஞ்சம் கசிந்திடும் கண்ணில் நீர்
பந்தயங் களில்கலந் தாற்றல் சிறந்திடும்
விந்தையாய்ப் பரிசுகள் வென்றுகொண் டேவரும்
நீளத் தாண்டுதல் என்னும் திறத்தினில்
ஆளுடை நம்பி கிணற்றினைத் தாண்டுவர்
நூறுதேங் காய்களை முறையடுக் கிவைத்து
மாறுறார் பத்துக் குத்தினில் உடைத்திடும்
வழுக்கும ரம்திரி கைசுமந் தேறுவர்
இழுக்கில் லாவணம் பரிசினை எய்துவர்
சிலம்பம் சுற்றலில் செப்பரும் ஆற்றலர் (980)
நலம்பெறும் மாம்பா றைஜமீன் மட்டுமே
அண்ணலோ டினிது ஆடிக் களிப்புறும்
வண்ணம் அவரை தோல்விகொ ளச்செயார்
கண்ணியம் காத்தவர் கேண்மையைப் பெற்றிடும்
பண்பெழில் பாங்கினர் பெரிதும் உவப்புறும்
மார்க்கம் பட்டியர் மாம்பா றையினர்
தீர்க்கம் எண்ணாச் சிந்தையர் தம்முள்
ஊர்ப்பகை கொண்டு ஒருவரோ டொருவர்
ஊர்க்குள் வந்திடும் பார்த்திடு வோமென
சூளுரை கொண்டனர் செல்வர்நம் செம்மல் (990)
வாளுடன் மாட்டு வண்டியில் அவ்வூர்
சென்று ஜமீனின் தோப்பில்தேங் காய்களை
அன்றுவண் டியினில் அவைநிறைத் தேற்றி
வந்தனர் அவ்வூர் மக்கள் எதிர்த்தனர்
சிந்தைசற் றோரார் செய்தனர் இதனை
பெருந்தகை ஜமீன்தார் பெரிதுசிந் தித்தனர்
“அருந்திரு நட்பினர் ஆய்ந்திடா தியற்றிய
செயல்தனைப் பொறுத்து, செலவிடும் அவர்தமை
அயலென எண்ணிடேல் அவர்நம் மவரே!
அவர்க்குத் தீங்குகள் யாரும் இயற்றிடேல் (1000)
அவரே வென்றவர் ஆகுக நன்றெனும்”
இன்னவா றப்பகைச் சூளுரை அமர்ந்தது
பார்விளை யாட்டுப் பலவும் தெளிவுறும்
சீர்பெற அந்தரக் கரணமும் அடித்திடும்
பரிசொடு பாராட் டுப்பல குவிந்தன
மற்போர் புரிவதில் மகாவல் லவரிவர்
மற்போர் வல்லார் வந்துபோர் புரிந்தவர்
தோற்றிடும் நிலைவரும் போதுநம் தங்கம்
ஆற்றல்பா ராட்டி அவமதிப் புறாவணம்
சென்றுவா ருமெனப் பரிசொடு அனுப்புவர் (1010)
நன்றவர் பணிந்து நன்றியு டன்செலும்
சொற்போர் தன்னில் சோர்ந்ததே யில்லை
கற்றோர் இதயம் களிக்க வாதாடுவர்
உவமைகள் பழமொழி மேற்கோள் பலவும்
நவநிதி யெனவிவர் நாவில் நடமிடும்
உடலினில் ஆண்மை மொழித்திறன் மேன்மை
கடலெனப் பொங்கும் கருத்துகள் பான்மை
அடலே றெனமிளிர் அற்புதத் தோற்றம்
நடமா டும்ஒரு பல்கலை ஈட்டம்.

ஈ. பொய்க்குருமாரின் போலிஞானம்
அதுகால்

கடவுளே தாங்களோர் கருக்குகை மேவுகால் (1020)
திடமிகு மாய்கையால் தாம்மயக் குற்று
கடவுளே கடவுளைத் தேடினர் என்னோ!
கடவுளைக் காட்டுவோர் எங்குளர் என்று
அடமுடன் இடம்பல ஆய்ந்துதே டினர்காண்
சாமியார் மஸ்தான் சடைமுடி தரித்த
நேமியர் எவரெங் குறினும் பணிந்து
ஆம்நெறி காட்டுக வென்றே விழைகுவர்
தாம்தாம் இறையென தமையுண ராதார்!
இங்ஙனம் மாந்தரை ஏய்ப்போர் பல்கினர்
தங்கமே ரிவருளம் தனைஅலைக் கழித்தனர் (1030)
பொய்யினை மெய்போல் காட்டிப் பொருளைப்
பையப் பறித்துப் பாழாம் நெறியினால்
உத்தம மக்களை உழன்றிடச் செய்யும்
பித்துடை அரக்கப் பேயினங் கள்பலர்
பெரிதும் ஞானியர் போலும் நடித்திடும்
அரிதுசெப் புவர்போல் அலைகிறார் இன்றும்
தாடிகள் சடைவளர் சாமியார் எனச்சொலி
நாடிப் பிறர்பொருள் நயந்திடும் கொள்ளையர்
பழிக்கஞ் சாத பாதகர் கூட்டம்
வழிகெடுத் திடுதல் மலிந்தஇக் காலம் (1040)
இசுலா மியன்ஒரு வன்ஞா னிபோல்
பசுத்தோல் போர்த்த புலியவன் வீணன்
முரீது தருவேன் மிக்க ரகசியம்
அரியது இதுவென அறைகுவன் இவ்வா(று)
கலிமா சொல்லுமின் கடவுள்கா ணுறுமென
வலிதாய் சிலருரை வழங்கிய வண்ணம்
கலிமா ஓவா துரைத்திடும் கண்ணியர்
கலிமா உரைத்தது கோடியும் தாண்டும்
இதமிகு ஏந்தல் அதுவழி பற்றி
ஏதுபய னின்றி ஏமாந் தனர்காண் (1050)
இறையுண ரற்கு இதுநல் வழியென
முறையெவ ருரைப்பினும் அதுவழி பற்றும்

காளி மந்திரம்

ஆங்கோர் துறவிபோல் வேடமிட் டொருவன்
பாங்காய் நன்னெறி பகருவோன் போலே
சீராய் ரகசியம் செப்புதற் கரிதென
நேரியர் பால்வந் தோருரை நிகழ்த்தும்
கானகத் தேகி ஆல்விருட் சத்தில்
ஆனதோர் உரிபதி னாறுகால் கட்டி
தானமர்ந் துபவா சத்தோடு முறையாய்
வான்மகள் காளியின் மந்திரம் ஜெபித்து (1060)
ஒருநாள் ஒருகால் வெட்டி எறிந்து
இருஎண் நாளும் இப்படிச் செய்து
இறுதி நாளினில் கீழ்விழும் பொழுது
உறுதியாய் அந்தக் காளியாம் அம்மை
இருகரம் ஏந்தி இயல்வரம் தருவாள்
என்றுரைத் தனன்அவன் உண்மையே போல
நன்றவன் பேச்சை நம்பிய நம்மவர்
கானகம் சென்று கழறிய வாறு
தானுரி யமைத்து தவமியற் றல்போன்ம்
மந்திரம் ஜெபித்தனர் வஞ்சகன் பார்த்தனன் (1070)
இந்தவை ராக்யரின் இயல்பினை உணர்ந்தான்
ஜபத்தின் முடிவில் காளிவா ராளெனின்
அபத்தமாய் முடியும் அடித்திடு வாரிவர்
ஆகையால் இதற்கோர் உபாயம் வளர்புல்
தோகைகள் சருகுகள் தழைகுழை சேர்த்து
உரியின் அடியில் மெத்தெனப் பரப்பி
அரியவர் வீழ்ந்தால் அடிபடா வண்ணம்
அமைத்துவிட் டன்னோன் எடுத்தான் ஓட்டம்
எமதருங் குமரர் இறுதிகால் வெட்டி
தமர்மயக் கத்துடன் தாம்வீழ்ந் தனர்காண் (1080)
காளியும் வந்திலள் கூளியும் வந்திலள்
யாளிபோல் எழுந்து சுற்றி நோக்கினர்
புல்லன் தப்பி ஓடியே போயினன்
நல்லார் நலிந்துளம் நல்லூர்க் கேகினர்.

மதுரை வீரன் மந்திரம்

மற்றோர் புளுகன் வந்தனன் இவர்பால்
வெற்றியூர் மதுரை வீரனின் மந்திரம்
உற்றுமக் குரைப்பேன் உறுதியாய் நீரில்
நிற்றல் வேண்டும் மூன்றுநாள் என்றனன்
குதிரை மீதமர்ந் தந்தக் கொற்றவன்
மதுரை வீரன் வரும்மிக சிறப்பாய் (1090)
கழுத்தள வாழ்ந்து கடிது நில்லுமின்
புழுத்தலைப் புலையன் புகன்றனன். இங்ஙனம்
அன்னவன் உரைத்த அவ்வுரைப் படியே
இன்னமு தனையார் உறுதியாய் நின்றனர்
கடந்தது மூன்றுநாள் காட்சி கிடைத்திலை
அடர்ந்தெழு சினத்தோ டண்ணல்மே டேறினர்
பித்த லாட்டப் பேயினன் மணலில்
வித்தக மாய்பரிக் குளம்பின் தடம்போல்
மெத்தக் கைபதித்து “வந்தான் வீரன்
பாவக் கண்களால் பார்க்க வொண்ணாது (1100)
தேவன் அவனெ”,னச் செப்பினன் அவ்விதம்
இளம்பிரா யத்தில் இவ்வனம் மணலில்
விளையாட் டயர்ந்தது உண்டுகாண் அதனால்
யாருடை கண்ணடா பாவக் கண்ணென
தீரர் அந்தத் தீயனை அறைந்தனர்
ஏமாற் றியஅவ் வெத்தனும் ஓடினான்
தாமே விதிநொந் தண்ணலும் மீண்டனர்
எருக்கம் பாலருந்தல்
அடுத்து வந்தவன் எருக்கம் பாலினை
மடுத்தால் ஞானம் வந்திடும் என்றனன்.
நம்பிய நாயகர் அங்ஙனம் செய்து (1200)
வெம்புண் தொண்டையில் மிக்குறத் துன்புறும்.
கல்பினைப் பிரகாசமாகக் காட்டல்
கல்புப் பிரகாசம் காட்டுவ தாக
வல்லபொய்ச் செய்தி விளம்பினர் அதனை
நம்பிஎம் பெருமான் நாடியங் கேகினர்
வம்பனின் ஆஸ்ரமம் ஏழுகட் டுடைத்து
அன்னவன் உண்பதே இல்லையாம் “ரம்சான்”
என்னுமத் தினத்தில் உணவை முகர்ந்து
பார்ப்பது மட்டும் செய்குவன் என்றனர்
கூர்த்த மதியினர் கோமகன் அங்குபோய்
ஒவ்வொரு செயலையும் உற்று நோக்கினர் (1210)
ஏழு அறையுடை கட்டிடம் அவ்விடம்
ஏழாம் கட்டினில் இருந்தனன் மஸ்தான்
நெஞ்சை நிமிர்த்தினால் இதயம் ஒளிர்வது
மிஞ்சும் கிளரொளி விளங்கிக் காணுறும்
பார்த்தவ ரெல்லாம் பரவச முறுவர்
ஆர்ந்து,“அல்கம்ந்து லில்லா”, என்பர்.
என்ன ரகசியம் என்றதை அறிய
மன்னர் அனைத்தையும் கூர்ந்து நோக்கினர்
ஒவ்வொரு நாளும் ஊழியன் ஒருவன்
செவ்வையாய் மல்லிகை மலர்ப்பந் தோடு (1220)
கைகால் சுத்தம் செய்துபின் உட்செலும்
மறுநாள் காய்ந்த மலர்களைக் கூடையில்
உறமிக எடுத்து ஏகுவன் வெளியில்
ஒருநாள் அன்னோன் சுத்தி செய்யாமல்
விரைந்தனன் உள்ளே பூப்பந் துகளுடன்
துரையெங் கோமான் கவனித் திதனை
கிளர்ந்துரை செய்யும் சுத்தம் செய்கென
உளம்தடு மாறிய ஊழியன் பேதை
அன்னவன் பூப்பந் தங்ஙண் வைத்து
நன்னய மாய்த்தூய் மைசெயச் சென்றனன் (1230)
இயல்பாய் இருக்கும் பூப்பந் ததுவும்
இயல்பு மாறி அமிழ்ந்து பட்டது.
எம்பிரா னதனைக் கூர்ந்து பார்த்துத்
தம்விரல் கொண்டதை அழுத்திப் பார்த்தனர்.
அதுவோ மாமிச உணவுப் பொட்டலம்
இதுவே இவனு(ண்)ணா திருந்திடும் ரகசியம்
என்று அறிந்தனர் எம்மான் பின்னர்
நன்று அவ்வூழியன் வெளிச்செல் காலை
பின்னே தொடர்ந்தனர் பேதை அன்னோன்
என்னைத் தொடர்வது ஏனென வினவினன் (1240)
நின்னைத் தொடரேன் நீசொல் ரகசியம்
அன்னோன் தினமும் உண்பதுண் டன்றோ
என்ன விதமவன் இதயம் ஒளிர்வது
மறைக்கா துரைப்பாய் இன்றேல் அடிப்பேன்
இறைக்கா தலரவர் விவரம் கேட்டனர்.
அஞ்சிய ஊழியன் அவ்வுண்மை தனை
எஞ்சிடா துரைத்தான், “என்னெனக் கூறுதும்
மஸ்தான் நெஞ்சினில் உளதுகண் ணாடி
மஸ்தான் எதிரில் சுவரில் விளக்குற
அன்னவன் நிமிர்ந்தால் விளக்கின் பிம்பம் (1250)
துன்னென ஆடியில் பிரதிபிம் பம்தரும்
இதயம் ஒளிர்வது இப்படித் தானெனும்
எதையும் செய்திடேல் என்னைவிட் டிடும்”,என
அஞ்சிக் கெஞ்சினன் அண்ணலும் விட்டார்
நெஞ்சினில் ஞான வேட்கையில் ஊர்வரும்.

வெள்ளியங்கிரிச் சம்பவம்

அன்ன காலம்எம் அண்ணல் மோதிரம்
பொன்னால் அரைஞாண் பூண்டு இருந்தனர்
இங்ஙனம் இன்னவர் இருத்தல் கண்டு
தங்க ஆபர்ணம் தன்னில் இச்சை
பொங்கும் கள்ளன் ஞானிபோல் நடித்து (1260)
வெள்ளி யங்கிரி மேலொரு யோகியும்
தெள்ளி யங்ஙண்சிவ ஞானி உளனெனும்
அன்ன வன்அலங் காரமாய் உள்ளவர்
தன்னை மிக்க விரும்பும் என்றனன்
கள்ள மின்றிஎம் கண்மணி அன்னவன்
உள்ளம் தன்னை உணர்ந்தறி யாமலே
சொன்ன தோர்குறிப் பின்வழிச் சென்றனர்
என்ன காரணம் அன்னவன் இங்கன்
பொன்னணி அணிந்தே வருகெனச் செப்பினன்
எண்ணினர் தாமணி அணிகள் யாவையும் (1270)
அண்ணல் கழற்றி கைச்சவுக் கத்தில்
வழியில் ஓரிடம் வைத்தடை யாளமும்
எழிலாய் வைத்து ஏகினர், அங்கே
வேட தாரியும் வல்லரக் கர்சிலர்
கோடரி கொலைவாள் கைகொளக் கண்டனர்
சட்டெனத் திரும்பி வருவழி மீளவும்
வெட்டினி யாம்ஒரு வீணன் தொடர்ந்தான்
ஓடிச் செல்லவும் துரத்தி னானவன்
நாடி வைத்தஅவ் வணிகலன் முடிச்சினை
எங்களின் அண்ணல் தங்கரத் தெடுத்து (1280)
சிங்க ஏறுபோல் சீறியே ஓடிடும்
வந்த தோர்தடம் மாறிப் போயது
அந்த வோர்வழி வெள்ள வாரியும்
கொந்திப் பாய்ந்தது குறுக்காய் உற்றது
எவ்வணம் அதனைக் கடப்பதென் றெண்ணினர்
தங்கச் செல்வரும் சற்றே ஓர்ந்து
கிணறு தாண்டிய பழக்கம் நினைவுற
உணர்வில் ஊக்கம் ஓங்கி எழுந்திட
சற்று ஓர்அடை யாளம் வைத்தனர்
எற்றி எவ்வியே பாய்ந்தவ் வாரியை (1290)
முற்றும் தாண்டியே தப்பிப் போந்தனர்
உற்றுத் தொடர்ந்தவன் உள்ளம் வியந்தான்
“தப்பிக் கொண்டனிர்”, என்றுரை சாற்றினன்
அப்பன் தப்பியே தம்மில் போந்தனர்
இப்படி யேபல எத்தர்கள் கூற்றினை
ஒப்பிலா நமதிளம் குமரர்சந் தித்தனர்
ஆடல் பல்புரிந்து அவற்றுள் வெற்றிகொள்
ஈடில் லாராய் இனிது விளங்கினர்
எய்வகைப் பந்தயம் பரிசுபட் டங்கள்
பெற்று வருவது பழக்கமாய் ஆனது (1300)
பல்வகை யானும் பாடுகள்பட்டும்
நல்லதோர் ஞான நெறிகிட்டிலதால்
நெஞ்சம் மெலிந்து நினைவுள்மருகி
எஞ்சிய தேதென எண்ணுறும் இளவல்
இந்த உலகினில் இப்பிறப் பெடுத்து
வந்துற்றோமே வருந்திப் பயனிலை
நந்தம் துறையினை நாம்தேர் வோமென
சிந்தையில் முடிவு செய்தநம் குமரர்
நிந்தையில் நெறியெனத்தொழுகை செய்தனர்
வைகறை எழுந்து ஏகனை வணங்கி (1310)
செய்தொழில் வேளாண்மைதனைச் சீராய்ச்
செய்தனர் இடையே திறனார் விளைவின்
ராஜ யோகமே சிறந்தது அதுவே
தேஜஸ் தரும்இறை ஞானம் தெளியும்
என்றே உரைக்க அவ்வா றியற்றும்
நன்றே மூச்சை இழுத்தடக் கிடுதல்
சித்தர்கள் முத்தர்கள் செப்பிய திதுவென
மெத்தவும் உரைப்ப மிகத்தொடர்ந் தியற்றும்
அதனால் உடலில் வெப்பம் மீறி
இதமே மாறி இரத்தமூ லத்தால் (1320)
துன்பம் உற்றனர் தோன்றலர் அதுகால்
மென்முருங் கைப்பூ நெருஞ்சிப் பூவும்
தென்பாய்ப் பாலில் காய்ச்சி யருந்தும்
நோய்குண மானபின் மீண்டும் தொடரும்
துரையெங் கோமான் “தம்”பிடித் துற்றால்
அரையடி அந்தரத் தெழும்பும் உடலம்
வாசி யோகமென் றொன்றுண் டென்றுமே
தேசி கர்பிறர் சொல்லில் மயங்கினர்
ஆறறி விருந்தும் ஐயறி நுகர்வில்
ஊறுபட் டலையும் உலக மாந்தர்கள் (1330)
பிறப்பின் பயனெனப் பெரிதும் ஓராது
இறப்பே முடிவென எண்ணி மயங்குவர்
துக்கச் சாவும் துன்புற் றரற்றலும்
மக்கள் யாக்கையின் இயல்பென எண்ணுவர்
இறைவன் அடிசேர் இன்பப் பயணத்
துறையொன் றுளதென் றறியார் ஏந்தலர்
தங்க மாமணிச் சற்குண சீலர்
எங்கள் கண்மணி இன்பக் கனியவர்
அன்னை பால்மிக அன்புடன் பாசமும்
தன்ன ரும்உயர் தந்தைபால் சற்று (1340)
அச்சம் கலந்த ஆசையும் நேசமும்
உற்றசோ தரியர்பால் உளம்கனி பாசமும்
மற்றிளை யவராம் தம்பியர் தம்மொடு
அரவணைப் பதுவும் அகம்கனி அன்பும்
ஒத்ததம் வயது உற்றவர் கேண்மையும்
சித்தம் கனிந்து சேர்த்தணைக் கும்குணமும்
பெரியோர் பால்நற் பணிவும் வணக்கமும்
அரிது நேர்ந்தோர்கட் காதர வளித்தலும்
அரிய தம்இளை யார்பால் வாஞ்சையும்
தவறு செய் தோரை இதமிகு பேச்சினால் (1350)
தவறு திருந்திடச் செய்திடு மாட்சியும்
பேச்சினில் என்றுமே நீதிசொல் வாசகம்
கூச்சமு றும்சுபா வம்உயர் நோக்கினர்
உண்ணும் நட்பும் உற்றார் உடனுற
எண்ணம் தூய்மையாய் இருக்கும் பெற்றியும்
எளியவர் ஏழையர் தம்பால் இரக்கமும்
தெளிவு நற்சொல் உதவிடும் நற்குணம்
தம்பி நல்லவர் வல்லவர் என்றபேர்
தெம்புடன் எதுவும் ஆற்றிடு திறனும்
குணநிதி யெனவே கூறும்சுற் றூரெலாம் (1360)
மணம்பர வுதல்போல் புகழ்பரந் தோங்கிடும்

உ. அருங்குணச் செல்வரின் திருமணம்

தகவுடைச் செல்வரின் திறம்சிறப் பறிந்தபேர்
மகட்கொடை யீயப் பலருமுன் வந்தனர்.
செல்வந் தர்கள் சிறப்புடன் வாழுமூர்
நல்விருந் தோயா துறுமோர் நல்லவூர்
மார்க்கம் பட்டியின் தென்கீழ் திசையினில்
ஆர்க்கும் பள்ளபட் டியெனும் நல்லூர்
மக்கத் துஹஜ ரத்தெனும் செல்வர்
தக்க நற்பெரும் பண்புடைச் சான்றோர்
அன்ன வர்க்கோர் அருந்தவச் செல்வியும் (1370)
அன்னம் போலும் அழகு மயிலனாள்
சொர்ண விக்ரகம் போலெழில் சுந்தரி
வர்ண மாமலர் போல்மிக மென்மையள்
அழகு நற்குணம் யாவும் மிளிர்பவள்
பழகு நல்லுயர் பண்பு பளிங்கனாள்
சுலேகா பீவி எனும்எழிற் செல்வி
நலமெலாம் திரண்ட நற்குணப் பொற்கிளி
பெண்மை இலக்கணம் பொதிந்த இலக்கியம்
ஒண்மை சுடரொளி யாயியல் ஓவியம்
அத்தகு செல்வியை அருங்கும ரற்கு (1380)
ஒத்தநற் றுணைவியாய் உறவோர் தேர்ந்தனர்
மார்க்கநன் நகரிலும் மற்றுசுற் றூரிலும்
ஆர்க்கும் அழகொரு ஆற்றல்மிக் காரெனும்
பெருமைக் குரியார் பண்பினிற் சிறந்தார்
அருமைச் செல்வருக் கப்பைங் கிளியை
நிற்காக் குதலெனும் நிக்காஹ் செய்திட
நற்பெருஞ் சான்றோர் நன்மணம் பேசினர்
ஊரெலாம் அலங்கரித் துவந்தனர் மாவிலைத்
தோரணம் வாழைதென் னோலைப் பந்தர்
அவரவர் மனையினில் நிகழ்வுறு மணமென (1390)
நவநிதிச் செல்வரின் நல்லெழில் திருமணம்
இனிதே நடந்திட இன்பக் களிப்பொடு
நனியலங் காரம் நளின சிங்காரம்
வெண்கலச் சிலையுயிர் பெற்றது போலும்
கண்மணிக் குமரர் கனகஆ பரணம்
நல்லணி புனைந்து மல்லிகை முகபடாம்
செல்வர் இளங்கதிர் செல்வார் அணிந்து
பஞ்சகல் யாணிப் பரிமிசை, பார்ப்போர்
நெஞ்சம் களித்திட நிகழ்மண ஊர்வலம்
எங்கள் மணமகன் இணையிலா அழகர் (1400)
தங்க நற்குணம் சீருயர் செல்வர்
இவருக் கிணையில் எனப்புகழ்ந் தேத்த
புவனத் தழகிப் பொன்மயி லாளை
கடிமணம் கொள்வோர் கொடுத்துவைத் தவர்காண்
ஒளிதிகழ் ஒண்மணி உத்தமச் செல்விகாண்
எனப்பெண் வீட்டார் ஏர்திறம் பேசவும்
இன்பக் களிமிகு இன்னுரை யாடல்
அன்புறு வோரிடை அழகுற நிகழ்ந்தது
ஊரிடைக் கட்டுப் பாட்டினால் குமரர்
சீருடை ஜமீனைத் திருமண நிகழ்வுக் (1410)
கழைத்திலர் ஆயினும் அப்பெருந்தகையர்
எழிற்றிரு மகனார்க் கியன்றது அறிந்து
மக்கள் சிலரொடு மணவிழாக் கிவர்ந்தனர்
தக்கார் எம்கோன் தம்முன் போந்து
வருக வருகென வரவேற் றன்பொடு
தருகிலேன் அழைப்பு பொறுத்திடு வீரென
மருகிநற் சொல்புகன் றாரதை ஏற்று
அருகணைத் தன்பொடு அன்னோர்முன் னின்று
திருமண விழாவினை சீருற நடத்தினர்
பெருமணம் இனிதே பெருஞ்சிறப் புற்றது (1420)
மணவினை கொண்ட மயிலெனும் மாதினை
மணமக ளாக மணமகன் கருதிலர்
வளர்த்திடு கிள்ளை எனவவர் கருதினர்
ஒளிவிளக் கென்ன உவந்தவர் பேணினர்
சீருயர் மாடியில் செழித்துவாழ் செல்வியைக்
கூரையில் வாழ வேண்டுதில் என்றுதம்
கூரைவீ டதனை ஓட்டுவீ டாக்கினர்
ஆர்ந்திளம் தம்பதி அற்புதப் பொற்பகர்
அன்றிலும் பேடும் அன்புகொண்டதுபோல்
நன்றுமென் நகம்தசை பொதிந்தது போலும் (1430)
முத்தமிழ்ச் சுவைபோல் முகிழ்த்திரு தங்கமும்
சித்தம் கனிந்தறம் செய்தனர் மகிழ்ந்தே
இனியநற் செல்வரும் கனிமொழி மாதும்
நனிதிகழ் நல்லறம் நன்கியற் றினர்காண்
நற்குண நாயகர் மெல்லிய லாளொடு
பொற்குணம் பொருந்த பலரும் போற்றிட
வாழ்ந்தனர் மக்கள் பெற்றோர் சுற்றமும்
சூழ்ந்தநல் லின்பத் தற்புதக் கனியென
பொற்சிலை உயிரொடு பொலிந்தது போலும்
நற்சிலை பெண்மக வொன்றும் உதித்தது (1440)
பூங்கொடி பொழில்தரு படர்ந்து மலர்ந்தது
சந்தனத் தருவினைச் சார்ந்தது பூங்கொடி
இந்திர தனுஅவ் வெழில்மலை சார்ந்தது
வேங்கைத் தருவினில் மென்கொடி படர்ந்தது
அற்புத ஆற்றலர் அணிதிகழ் அழகினர்
பொற்புகு திருமணம் கொண்டு பொலிந்தனர்
விந்தையர் அழகொடு விளங்கிய குழவி
தந்தையின் அச்செனத் திகழ்ந்தனள் பொன்மகள்
இருவரின் உயிரும் ஒருவுரு ஏற்றபோன்ம்
அருந்திரு குழவி அழகொளிர்ந் தார்ந்தது. (1450)

ஊ. நெல் வாணிகம் செய்தல்

இளங்கும ரர்தம் ஏரார் தோட்டம்
வளங்குறை கல்மலிக் குறிஞ்சி ஆகலின்
உண்பதைப் பார்ப்பினும் உழைப்பதைப் பார்த்திலாப்
பண்புடை எம்மான் பொருள்சேர் வேட்கையால்
தானியல் திறத்தின் தேட்டம் மிக்குற
வாணிபம் செய்ய விழைந்தனர் செல்வர்
பொன்னி நதிபாய் பூந்துறை நாடுசார்
நன்னிலப் பகுதியில் நெல்வா ணிகம்செய
எண்ணம் முந்துற இருமுது குரவரும்
வண்மையாம் உறவதும் நட்பதும் வாழ்த்த (1460)
சீரார் வளம்கொழி செல்வ நகராம்
ஈரோ டருகுறு திங்களூர்க் கருகில்
மாசிலா வேளாண் மக்கள்வாழ் நல்லூர்
காசுக் காரம் பாளையம் சேர்ந்தனர்
அங்கே குடிபதி யாக இருந்து
வெங்கட் டப்ப நாயகர் மண்டியில்
நெல்கொள் முதல்செய் தருகுறு சந்தையில்
நல்வியா பாரம் செய்திட லாயினர்.
சொற்சா துரியம் நெல்தரும் சிறப்பு
நற்குண இயல்பு நலம்நா டுரையால் (1470)
இன்முகத் தோற்றம் இனிதனு சரிப்பு
அன்புயர் பழக்கம் அரவணை கனிவு
விற்பனை பெருக மிகத்துணை யாயது
பொற்புயர் குமரர் பெருக்கினர் செல்வம்
மனையது வாங்கினர் வண்டிகள் மாடுகள்
அனைத்தும் உரித்தாய் ஆக்கினர் அண்ணலர்

எ. வணிகம் செய் குமரரின் வள்ளல் தன்மை
ஓர் கால்

பள்ள பாளையம் என்னும் ஊரினில்
உள்ளோர் பஞ்சத் தால்துன் புற்றனர்
வள்ளல்நம் இளவல் வண்டிநெல் கொண்டு
உள்ளம் உவந்து இலவச மாக (1480)
நெல்தந் துதவினர் பஞ்சம் தெளிந்தது
நல்வித மாக மழைபொழிந் தவ்வூர்
செல்வம் கொழிக்கும் சீரூர் ஆனது
அவ்வூர் மாந்தர் அன்புநன் றிமிகு
செவ்வியர் ஆயினர் சீலரைக் கண்டு
வணங்கி வாழ்த்தி வள்ளல் பெயரால்
இணங்கி ஆலயம் ஒன்றியற் றினர்காண்
இராவுத்தர் கோவில் என்றதன் பெயராம்
பராவுதல் எதற்குமுன் அவ்வூர் வழக்கம்
அக்குலம் தன்னை ராவுத்தக் கவுண்டர் (1490)
எம்குலப் பெயரென இயம்பிட லாயினர்
அன்றுதொட் டின்று வரையிது வழக்கமாய்
நன்று நிலவு கின்றதப் பகுதியில்
இவ்வா றியன்றகால்
சந்தை முடிந்து வந்திடு ஒருநாள்
முந்த இரவு நேரமோர் ஊரின்
மந்தை வெளியில் மாதொரு கர்ப்பிணி
நொந்து அழுகுரல் கேட்டனர் அண்ணல்
யாரும் துணையின் றப்பெண் பிரசவம்
நேருறும் நிலையினைக் கண்டனர் தோதாய்
வண்டியி லேற்றி அன்னவள் வீட்டில் (1500)
கொண்டுபோய் விட்டனர் கோமகன் அன்று
ஊரார் புகழ்ந்து பாராட் டினர்கள்
சீரோர் இதுஎன் கடமையென் றேகும்
சந்தைக்(கு) வந்து திரும்பிடு மக்களை
சிந்தை கனிந்து வண்டியி லேற்றி
அவரவர் ஊரில் இறக்கி விட்டிடும்
நவநிதி பெருக்கம் உற்றது எம்மான்
செலவுத் துளையைச் சீராய் மூடி
வலமிகு வரவுத் துளையைத் திறந்து
எக்கணத் தும்பொருட் சேர்க்கை வேட்கை (1510)
சிக்கன மாகத் திரட்டிய செல்வம்
முப்பத் தாறா யிரம்வெள் ளிப்பணம்
ஒப்புடன் உவந்து சேர்த்து வைத்தனர்
தெளிவதாய் வாணிகம் செய்தனர் குமரர்
களிபெறு இல்லறம் ஒளிபெற நடந்தது

வேதியர் காண்டம்

6. சற்குருவைச் சந்திக்கும் பருவம்

இங்ஙன மாகலும்
ஆழிவாழ் ஐயர்தாம் அன்றுரை செய்த
ஊழியின் விதியது தன்கட னியற்றிடும்
முழுமுதல் தனைநினை வூட்டற் கெனவே
எழுதரு முனிவர் தனிகைநன் மணியவர்
பழுதிலா(து) அறுநூ றகவையர் திருவுள் (1520)
காத்துள நோக்கம் நிறைவுறும் நாளும்
ஆர்த்திடு நேரமும் அண்மிய தன்று
திங்களூர் அருகுறு சீரூர் நோக்கி
எங்கள் குலமணி தனைஇணை வதற்காய்
மென்னடை யிட்டனர் மேலவர் இனிதே
தென்னவர் தம்மனை யின்வடக் குத்திசை
தனிலிருந் தேதம் மனையினை நாடி
இனிதே போந்து ஏறினர் சாலை
திங்கள் செங்கதிர் தனைநேர்ந் ததுபோன்
எங்கள் குலவிளக் கேற்றிடு ஏந்தலர் (1530)
எண்ணிடு எண்ணம் ஈடேறு தலை
எண்ணினர் உள்ளில் எக்களிப் போங்க
தருகித் தருகி மெல்லென நடையிட
குருமணி குமரர் கொண்டலை நோக்கினர்
சீரார் முதியவர் செல்கிறார் களைத்து
ஊரோ தூரம் என்றுளில் எண்ணினர்
என்றுமே பெரியரைப் பேணும் இயல்பினர்
நன்றுஅப் பெரியவர் திருமுன் நெருங்கி
“தஸ்லிம்” என்னும் சீர்வணக் கம்செய
இசைவுடன் முதியவர் இளநகை பிறங்கும் (1540)
எளியேன் குடிலுக் கெழுந்தருள் புரிகென
அளிமிகு கொண்டல் ஆர்வமாய் வேண்டினர்
அணிகிளர் ஆன்றோர் அன்புடன் ஏற்றனர்
மணியும் ஒளியும் மனையகம் சேர்ந்தனர்
செங்கை வளையணி நங்கையர் திலகம்
பொங்கிடு மன்பொடு பொன்முகம் மலர்ந்து
அன்றுசெய் கேழ்வர கப்பமும் தேனும்
நன்றா வின்பால் நல்கினர் உண்டபின்
இருபெருஞ் சான்றோர் ஏகும்மண் டிக்கு
பெருகுமன் பினர்எம் பெருமான் தாங்கள் (1550)
பழகிடு ராஜயோ கந்தனைப் பெரிதாய்
அழகுற எடுத்து அவர்முனம் உரைக்கவும்
அதுகேட் டண்ணல் அமைதியாய் இருந்தனர்
இதுகண் டெங்கோன் இவர்புரிந் திலரே
என்றுள் எண்ணி, “என்ன பெரியீர்
நன்றுதா னோநான் கடைப்பிடி யோகம்?”
எனவினா விடவும் ஏந்தல் நிமிர்ந்து
“மனமார்ந் தேநீர் விளம்பிய யோகம்
நரகினுக் கேகும் குறுக்கு வழி”,யெனும்
வரோதயர் கேட்டு மனம்'திடுக்' குற்றனர் (1560)
இப்பெரி யாரிதை மறுத்துவே றுரைக்கில்
அப்பெருவழியே சரியென லாகும்
நன்றுநம் நன்மணி நம்பினர் உறுதியாய்
குன்று தனிகையர் மேலுரை பொழியும்
ஞானக் கோவையில் புலஸ்தியர் சித்தர்
தானுரை பாசுரத் தாலதை நிறுவினர்
புலால்மறுத் தல்தனைப் பொருத்தமாய் விளக்கினர்
நலமுயர் தேவர்கள் நன்னா டேகிடும்
வாகனம் மயில்,புராக், கருடன் அன்னம்மென
ஆகம புராணச் செய்திகள் உண்மை (1570)
என்றப் பெருந்தகை இனிதெடுத் துரைக்கவும்
நன்றுநம் குமரர் நன்குணர்ந் திவர்களே
நமக்கென வந்த நற்குரு பரரென
தமதுளம் தெளிந்து தனிகையர் முன்னே
எழுந்துநின் றிறைஞ்சி இருகரம் ஏந்தி
தொழுதனர் சீடனாய் ஏற்றுகொண் மின்னென

வேறு

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபத மளிப்பாய்
செல்வமே சிவபெருமானே
எனவுளம் உருகிப் பாடி இளவல்
கனிவொடு கரங்கள் ஏந்தி இறைஞ்சி

வேண்டினர் அந்த விமலா தித்யர்
பாண்டியர் நமது பரமரை ஏற்றனர்

அ. புனல் ஜென்மத் திருநாள் காட்சிகள்

திங்கள் எனும்திருத் தனிகை வள்ளலார்
எங்கள் தங்கம் இளஞ்சூ ரியர்தனை (1580)
பங்குனி மாதம் பவுரணை நாளினில்
திங்களூர் நத்தத் தேரடிக் கழைத்து
பொங்கும் கிளரொளி பூத்தினி தொளிர
அங்கண் விரியா சனமது இட்டுத்
துங்கமார் தக்ஷிணா மூர்த்தியாய் அமர்ந்தனர்
செங்கதிர் குருபரர் திருமுன் பணிந்தனர்
தங்கள் முப்பொருள் தத்தம் செய்தனர்
தனிகை அன்னை தம்திரு மணிச்சூல்
இனிதே தரித்து ஈன்றனர் செம்மலை
அழகுஆ காய கங்கையில் ஆழ்த்தினர் (1590)
பொழுது படாத பொய்கையில் மூழ்கினர்
முழுதுகில் நனையா(து) முக்கரை ஏறினர்
சுவர்க்க மத்திய பாதா ளங்களை
இவர்க்கினி தறிவித் தின்பம் ஊட்டினர்
வெட்டாச் சக்கரம் பேசா மந்திரம்
எட்டா புஷ்பத் தியல்புகள் காட்டினர்
ஏகமாம் ஜீவ கிரணோ தயத்தை
சோகம் அறவே திருவுருக் காட்டினர்
அஞ்சுமூன் றெட்டாம் பந்துலாம் மந்திரம்
கஞ்சா மனக்கண் காட்டிடக் கண்டனர் (1600)
அஞ்சா யிதமும் அதிலாறு வீதியும்
பஞ்சவர் ணோதயப் பரவுல கேற்றினர்
வாடாத கன்னி வயதுபத் தான
ஏடான கலைமகள் இருப்பிடம் காட்டினர்
தோடுடை செவியும் துலங்குகுண் டலமும்
கூடஸ்த பிரம்மக் குறியதும் காட்டினர்
நிழற்சாய லற்ற நீள்உடல் காட்டினர்
அழல்மேனி கொண்ட அரன்திரு மேனியும்
நில்லாத நீர்சடை நின்றதி சயமும்
கல்லாது கற்கும் கலைப்பொழில் காட்டினர் (1610)
மேல்கீழ் உலகும் விழுங்கியங் குமிழும்
ஆலவாய் திறந்து அதிசயம் காட்டினர்
எழுதாக் கிளவி இயல்பினைக் காட்டி
பழுதிலாத் தேகப் பண்பறி வித்தனர்
விதியெழுத் தும்மதை விமலர்தம் திருவுயர்
மதியெழுத் தாலே மாற்றியும் காட்டினர்
பொதிகை மலையும் ஜோதி விருட்சமும்
மதியுயர் அகஸ்திய முனிவரைக் காட்டினர்
மெய்ப்பொருள் தன்னை விளங்கரு நெல்லியாம்
கைப்பொரு ளாகக் காட்டினர் வள்ளல் (1620)
அங்கிக் கெனாது எங்கும்ப்ர காசம்
பொங்கும் அருளோடு பொருந்தக் காட்டினர்
பார்த்தர்க் கன்று பாரத பூமியில்
ஆர்ந்திடக் காட்டிய விஸ்வரூ பத்தினை
காண்டீ பத்தினைக் காட்டினர் கனிவாய்
பஞ்சபூ தங்களும் பார்பொறி ஐந்தும்
நெஞ்சம் களித்திட நீள்உடல் காட்டினர்
சிவபிரான் பார்பதி சமேதராய் இடப
தவவா கனத்தில் திகழ்ந்திடக் காட்டினர்
திருப்பாற் கடலில் அனந்த சயனம்செய் (1630)
அருட்பால் நாரணர் அவர்நெஞ் சமர்ந்த
திருமகள் தனையும் உந்திக் கமலம்
அதனில் அமர்ந்த பிரம்மரும் காட்டினர்
மூஷிக வாகன மேறிய கணபதி
தேசிகர் தன்னின் திருவுருக் காட்டினர்
உறுமெழில் மயில்தனில் ஊர்ந்துவந் திலங்கும்
அறுமுகக் கடவுள் அழகினைக் காட்டினர்
அன்ன வாகன மன்னர் பிரம்மா
வின்னமில் லாது விளங்கிடக் காட்டினர்
நாவில் குடிகொளும் நாயகி கலைமகள் (1640)
தேவியின் திருவுரு திகழக் காட்டினர்
வெள்ளைத் தாமரை வீற்று வீணையை
கொள்ளை யின்பம் கூட்டிட இசைத்தனர்
பிண்டோற் பத்தியும் அறுத்தடை வாசல்
கண்டோர் இதயம் களிக்கக் காட்டினர்
இமையா நாட்டத் திமையவர் தம்மை
அமரா பதியில் அழகுறக் காட்டினர்
அகர முதலும் அவ்வுசின் முத்திரை
நிகரில் எழிலுற நற்றவர் காட்டினர்
ஜோதி மலையும் சொற்கடங் காத (1650)
ஆதி முதல்வரின் அற்புதம் காட்டினர்
கேட்டதும் கேளா ததுவும் அருளும்
தேட்டமுற் றிலங்கும் கற்பகம் காட்டினர்
ஆயிர வர்தம் காமம் தவிர்த்திடும்
தாயாம் பத்தினித் தங்கம் காட்டினர்
திருக்கயி லாயமும் ஸ்ரீவை குண்டமும்
பெருக்குயர் சத்திய லோகமும் காட்டினர்
பரமண் டலமும் மெகராஜ் அதுவும்
அரன்மண் டலமும் அழகுறக் காட்டினர்
திரிபுரம் சிரித்தே எரித்த சிவமெனும் (1660)
விரிசடைக் கடவுள் வித்தகம் காட்டினர்
வேகாக் காலும் போகாப் புனலும்
சாகாத் தலையும் சீருறக் காட்டினர்
ஓமெனும் ஏகாட் சரமதும் காட்டித்
தாமுயர் பஞ்சாட் சரமதும் காட்டி
தோமறு அஷ்டாட் சரமதும் சீரார்
ஆமனு ஆறு அட்சரம் காட்டினர்.
நான்குதே கம்மதும் நன்னிதி வைப்பை
பாங்கு பெறவே பண்பொடு காட்டினர்
பிரணவப் பட்சி நான்கிறக் கைகொள் (1670)
சிரோமணி காயத் திரிதனைக் காட்டினர்
கூடு விட்டுக் கூடுபாய்ந் திடுமோர்
ஏடவிழ் மந்திர இயல்பினைக் காட்டினர்
தோடுடைச் செவியும் துலங்குகுண் டலமும்
பாடுயர் பரமனார் பெரும்உருக் காட்டினர்
ஏழ்நிலை மாடத் தியல்நிலை நாட்டினர்
வாழ்வுறு சீரார் மதியொளி காட்டினர்
வேற்கரம் தெய்வம் விளங்கெழில் பார்பதி
நாற்கரம் காட்டி நல்வரம் கூட்டினர்
இருதயந் தன்னில் ஐவகைக் கலப்பும் (1680)
இருபுரு வத்திடை லலாடக் கண்ணும்
தில்லையம் பலமும் திருவுயர் பாற்கடல்
எல்லையில் பேரின் பத்துறை காட்டினர்
நந்திமந் திரமும் நாற்கா ரணமதும்
விந்தையாம் ராஜ நிலையதும் காட்டினர்
அங்கம தில்முதல் உதித்தமெய்ப் பொருளும்
பங்கமி லாதுறை நடுநிலை காட்டி
செங்கம லப்பீ டம்எண் கோணமும்
பொங்கெழி லார்முக் கோணமும் காட்டினர்
உயிரதன் நிலையும் உத்தமர் இருப்பும் (1690)
செயிர்தீர் காட்சிச் சிறப்பினை நாட்டினர்
குலமெலாம் ஒன்றாய்க் குலவிடும் நிலையும்
நலமெலாம் திரண்ட நற்புவி காட்டினர்
சாகுந் தலமும் சாகாக் கலையும்
பாகார் மொழியார் பகர்ந்தனர் காட்டினர்
எத்தனை எத்தனை கோடியின் பங்கள்
முத்தி நாயகர் மகிழ்ந்திடக் காட்டினர்
ஒருமொழி யாலே ஆயிரம் மந்திரம்
திருமிகத் தெளிந்திடக் காட்டினர் சீமான்
மெய்ப்பொருள் தன்னை விளங்கிடக் காட்டினர் (1700)
எய்ப்பெனும் ஏமனை வெல்திறம் கூட்டினர்
எழுதா எழுத்தை எழிலுறக் காட்டினர்
பழுதா காது மூச்சினைக் காக்கும்
வழுவா நெறியின் வகைதனைக் காட்டினர்
ஐம்புலன் அடங்கும் அற்புத வகையும்
உம்பர்தம் நிலையும் ஒளிபெறு மாட்சியும்
மந்திர உருவின் மிக்கெழில் துலங்கிட
விந்திறம் தன்னை விளக்கினர் எளிதே
உறக்க நிலையும் உறங்காத் திறமும்
துறக்கம் திறந்து தூய்மதி காட்டினர் (1710)
அன்பது பெருகும் அருட்பெருஞ் சோதி
ஒன்பது வாசலை உள்தான் இடுதிறன்
ஆயிரம் ஆயிரம் சித்தர்கள் தவம்செயும்
தூயமெய் குகைதனை திறந்துஉட் புகுத்தினர்.
பிணியும் மூப்பும் சாக்கா டில்லா
அணிதிகழ் மேனியின் அற்புதம் காட்டினர்
ஏறா நிலைமிசை ஏற்றினர் என்றும்
மாறா அறிவொளி விளங்கிடக் காட்டினர்
உபாதையே இல்லா உலகினிற் கேகும்
கபால மோட்சக் கதிதனைத் தெளித்தனர் (1720)
மதமதன் நிலைதனை மாட்சியைக் காட்டி
இதமுடன் இணைந்தவை ஒருங்குற நாட்டினர்
சாதிகள் ஒன்றாம் சமரச நிலையை
வேதியர் காட்டினர் வென்னோய் தீர்த்தனர்
மொழிமுதற் காரணர் மோட்சசாம் ராஜ்யம்
எழிலுறக் காட்டி ஏற்றினர் அவ்விடம்
முப்பால் ஊட்டி முப்பாழ் மாற்றி
அப்பால் ஏகும் அருட்பால் அருத்தினர்
ஓதிடும் மறைகளின் உட்பொருள் தெளிய
வேதத் திருவுரு மெய்யெழில் காட்டினர் (1730)
ஆயிர நாமங்கள் அழகுறப் பெற்று
தாயினை காட்டித் தயவமு தூட்டினர்
மெய்ப்போ தகரென புவியவ தரித்து
பொய்ப்போ தகத்தின் புன்மையைப் போக்கினர்
தவம்ஜபம் யோகம் தியானம் யாவையும்
பவத்துறை கடந்திடும் பான்மையும் காட்டினர்
கூடுவிட் டடுத்தொரு கூடுபாய்ந் திடலும்
வீடுபே றுறுதிறம் விளக்கினர் ஐயர்.
எங்கும்ப்ர காசம் இறையடி நேசம்
பொங்கும்மெய் வாசம் பொருந்திடக் காட்டினர் (1740)
எத்தனை எத்தனைக் காட்சிகள் அம்மவோ
அத்தனை காட்டிஎம் அத்தனைக் கொண்டனர்
காணொனாக் காட்சிகள் கண்டஎம் பெருமான்

ஆ. துறவு பூணல்

காண்விழி யிமைகள் இமையா நிலையுறும்
அன்றுகாண் டீபர்காண் விஸ்வரூ பத்தினை
நன்றுகண் டெம்மான் நனிவியந் தனர்காண்
நமையாண் டிடவென நானிலம் போதரு
இமையவர் இவரென இனிதுளம் தெளிந்தனர்
மெய்யினைத் தந்தருள் மேலவர் இவராம்
ஐயனைப் பிரியா துறைந்திடத் துணிந்தனர் (1750)
உடல்பொருள் ஆவி தத்தம்செய் திட்டேன்
திடமுடன் உமைப்பிரி யாதுற வேண்டும்
தங்களைத் தொடர்ந்திடத் தயவருள் புரிகென
எங்களின் நாயகர் இனிதுவேண் டினர்காண்
மங்கா தவத்து மாமலை தனிகையர்
தங்களுள் ளத்தெதிர் பார்த்ததும் அதுவே
எண்ணிய எண்ணியாங் கெய்துதல் கண்டு
விண்ணவர் பாட்டையர் மிகமகிழ் வுற்றனர்
மெய்ப்பொருள் பெற்றஎம் வேந்தருக் குலகத்
துய்ப்புகள் தூசாய்த் தோன்றின இனிமேல் (1760)
அரைக்கண மும்மிவர் தனைப்பிரி யேனெனத்
துரையெங் கோமான் திருவுளம் திடனுறும்.
அருமை மனையாள் அற்புதக் குழவி
பெரும்பா டுற்றுப் பெருக்கிய செல்வம்
பெற்றோர் உற்றார் பேணிய நட்பு
மற்றுள யாவையும் மறந்தனர் துறந்தனர்
வரவுகள் செலவுகள் மொய்கள் முறைகள்
தரவேண் டியவெலாம் தந்து முடித்தனர்
உள்ளம் பளிங்கனை உத்தமி கண்ணீர்
வெள்ளம் பெருகுற வேதனை யுளத்துடன் (1780)
யாதாமோ வென அஞ்சுஆ ரணங்கு
மாதா மயங்கி வாயிலோ ரம்உற
எழிலெலாம் திரண்ட இனியபொற் சிலையாம்
அழகிய அணிதிகழ் அருங்கனி குழவி
எண்ணெய் தடவி இளவெயில் தழுவிட
திண்ணையில் கிடந்திடத் தேசிகர் தாமும்
செல்லக் கிளிதனைத் திருக்கரம் தொட்டு
செல்லமே! உன்னையும் அன்னையும் விட்டு
ஏகுதும் இனிக்கதி யாதோ உமக்கு
போகிறேன் என்றுளம் பொங்குபா சத்தால் (1790)
வேகுற வேகமாய் விலகியே விரைந்து
தாகமாய்க் காத்துள தனிகையர் திருமுன்
வாகுடன் நின்றனர் வள்ளல்பொன் முகத்தில்
இளநகை பிறங்க எழுந்தனர் உயிர்க்கு
வளம்தரும் அகில வலம்துவங் கியதே.

7. அகிலவலம் வரும் பருவம்

குயிலது காகக் கூட்டினில் முட்டையிட்(டு)
அயலிருந் தார்ந்து அதுகுஞ் சாகிப்
பருவம் வந்ததும் குரல்கொடுத் தழைத்துத்
தருணம் பார்த்துத் தான்கொடு போதல்போல்
ஒருகரு வமர்ந்த ஊழி முதல்வரைப் (1800)
பருவம் வரும்வரைப் பார்த்திருந் தழைத்து
பருந்து குஞ்செடுத் தேபறத் தல்போல்
அருந்தவர் தம்மை அண்ணல் தனிகையர்
அழைத்தே கினர்காண் அம்புவி மக்கள்
பிழையெனக் கருதுவர் பெரும்பயன் உலகம்
பெறுதல் பொருட்டாய் நடந்ததிச் செயல்காண்
மறுகிடும் குடும்பம் பெற்றோர் சுற்றம்
தெய்வ நீதம் இதுவெனத் தெளிமின்
வையகம் உய்ய வாய்த்தமு கூர்த்தம்
ஆர்ந்துதாம் எடுத்த அருமைக் குமரர்தாம் (1810)
சோர்ந்து விடுவரோ எனச்சோ திக்க
கபட நாடகர் கனிபாட் டையர்
சுபமங் களம்வளர் செல்வரை அறிமுகம்
பழகிய ஊர்களின் வழியழைத் தேகும்
எழில்மிகு நமது ஏந்தலர் யாரோ
முதியவர் பின்னர் ஆட்டின் குட்டிபோல்
பதியவர் ஏகுதல் பார்த்துளம் பதறுவர்
மந்திர வாதியோ மைவைத் தனரோ
நந்திருச் செல்வரை நனிகொண் டேகுதும்.
சொல்லினில் வல்லவர் தூயவர் ஆற்றலர் (1820)
நல்லவர் இவர்க்கு நேர்ந்தது யாதோ?
இல்லகம் துறந்து ஏகுதல் நியாயமோ?
பொல்லார் பெரியரைப் போய்க்கேட் போமென
முன்வந் தவரெலாம் பின்னடைந் தேகினர்
சொன்மணிச் செல்வர் சோர்ந்திலர் தொடர்ந்தனர்
இங்ஙனம் இவ்வா றிதுநடந் திடுகால்
தங்கமாம் தேவி சுலேகா பீவியார்
வருவார் மீண்டென வருகைபார் திருந்து
வருகா நிலையுணர்ந் துள்ளம் நொறுங்கி
பிணியுற் றனராய்ப் பெரிதும் நொந்தனர் (1830)
அணிதிகழ் குழவி அதுசோர்ந் திட்டது.
பெற்றோர் சுற்றம் பெரிதுதுன் புற்றனர்
மற்றவ ரனைவரும் மருகிக் கசிந்தனர்
தேவியின் சிற்றப் பாரவர் அலைந்து
ஓவியர் தம்மை ஒருவா ரடைந்தனர்
மகள்நிலை யுரைத்து வருகென விழைந்தனர்
தகவுடைச் செல்வர் தாம்மறுத் தேகினர்
மகவுசின் னாட்சென் றென்பால் வந்துறும்
அகம்விழை மனையாள் அடுத்த பிறப்பினில்
வந்தெனை அடைவாள் வருந்தேல் செல்கெனும் (1840)
துயர்தரும் செய்தியைத் தெரிந்ததும் தேவி
உயிரடங் கிட்டனர் உற்றநற் குழவி
தந்தைதாய் இல்லாத் தனிமரம் ஆனது
நொந்துற வோர்தம் கைகளில் வளர்ந்தது
தவமிருந் தேதாம் தேடிய குமரர்
அவமுற அகமிக துயருறப் பிரிந்ததை
எண்ணி வருந்திய இணையிலர் தந்தை
கண்ணீர் சொரிந்து கடும்பே தியுற்று
விண்ணா டேகினர் விரைந்துற வோர்கள்
அண்ணலை அலைந்து கண்டிச் செய்தியை (1850)
உரைக்கவும் தனிகையர் சென்றுவா வென்று
உரைத்தனர் மறுக்கிலா ஆக்ஞையை ஏற்று
நம்பெரு மானும் நடந்தனர் அவரொடு
வெம்பியங் கேகினர் வீழ்ந்தனர் மயங்கி
எவ்விதத் தானும் எழுந்திலர், உறவோர்
ஒவ்வா ரிவரென கிடத்திவிட் டேகினர்
செவ்வியர் எழுந்து சேர்ந்தனர் குருவை
செவ்வையாய் அகிலச் சீர்வலம் தொடர்ந்தது.
பழகிய ஊர்வழி பண்ணவர் நடந்தனர்
அழகினர் மயங்கிலர் வைராக் கியரென (1860)
கண்டுகொண் டாரக் கனிமொழி தனிகையர்
விண்டவர் காணா ஊர்வழி நடந்து
கோயம் புத்தூர் குறுகினர் இருவரும்
நேயர்தாம் உபதே சம்நடந் தக்கால்
ஆசான் முன்னே எளிமைகாட் டிடவே
தேசோங் கரைஞாண் திருவிர லாழிகள்
தம்மொடே தங்கி விட்டதை உணர்ந்தனர்
தம்பிரான் கைங்கர்யம் தனக்கிது உதவுமென்
றெண்ணினர் உருக்கித் துண்டுக ளாக்கி
நண்ணியே வைத்துக் கொண்டனர் இனிதே. (1870)
வாதவூர் அடிகள் மன்னன்செல் வத்தை
ஏதமில் குருபணிக் கியற்றிய தெண்ணினர்
தங்கமா மேருவும் தனிகைபாட் டையரும்
இங்ஙன மாக ஈடில்மா தவருடன்
நடந்தன ரம்ம! நல்லகி லவலம்
தொடர்ந்தது உலகம் துயரறும் செயற்கே.
சீரூர் நகர்கள் செழிப்புறும் வயல்கள்
பேரூர் பலவும் கடந்தனர் பெரியோர்
நாடுகள் கடந்து நன்மரம் செறிந்த
காடுகள் தம்முட் புக்கனர் அங்ஙண் (1880)
வளர்தருக் கினங்கள் வாதிலைக் கரங்களால்
வளம்குளிர் நிழல்இருள் மண்டிக் கிடப்ப
கதிரவ னின்னொளிக் கிரணக் கரங்களால்
பொதிநிழல் கொள்ளை யிடாவணம் காத்துக்
கொண்டிருப் பனபோன் கொழுநிழல் செறிந்து
மண்டுசில் வண்டின் ரீங்கா ரத்தொனி
பண்டைவே தியரைப் பாலகர் தம்மைக்
கண்டினி துவந்து வரவேற் றல்போன்ம்
இருள்செறி நிழல்பொதி இருண்டகா னகத்தே
மருள்தரு பயங்கர மாவனத் தேகினர். (1890)
கொடுமிரு கங்களும் கூடிவாழ் காலிகள்
படும்குளிர் பனிவெயில் பருமரக் கானகம்
பயத்தையும் குளிரையும் போர்வையாய் அணிந்தனர்
நயமிகு நற்றவர் நடந்திடு கானில்
கொடிப்பூ கோட்டுப் பூநில நீர்ப்பூ
வடிவெழில் திகழவும் வாசம்தூ தனுப்பின
கான்தரு கோகோ எனுமொலி எழுப்பி
வானவர் வம்மின் எனவர வேற்றன.
காகூ என்றொலி கனிவொடே இசைத்து
காத்திட விழைந்தன கானக மரங்கள் (1900)
வான்தொட விழைந்து வளர்தருக் கினங்கள்
கோன்தனி கையரைக் குமரரை வணங்கின
விண்தொடு உயர்தரு விளைசுவைக் கனிகளை
அண்ணல்ஏ றிப்பறித் தருட்குருக் களிக்கும்
அருள்மக னொடுசெல் அற்புதத் தனிகையர்
குருபரர் சொற்கனி கொடுத்தவா றேகுவர்
கதிரவன் குடதிசை ஏகிடும் தருணம்
கதிரிளங் குமரரும் மதிமணி தனிகையும்
இரவில் தங்குதற் கிடம்தே டிடுவர்
படர்ந்து அடர்ந்த பெருமர வனந்தனில் (1910)
வேளாண் மைசெயும் கவுடர்கள் சேரியில்
ஆளாண் மைசெயும் வேடர்கள் வாழிடம்
வானுயர் வரைகளில் அமைந்துள எட்டரும்
தேன்சே கரித்திடு மலசர்கள் குடில்களில்
ஆங்காங் கேசென் றற்புதர் இருவரும்
பாங்காய்த் தங்குவர் பளிங்கனை உளமுடை
மக்கள் அதிசயம் மிகவர வேற்று
எக்களிப் போங்க இனிதுப சரிப்பர்
எங்களோ டிருமின் எனமிக விழைவர்
தங்கமே றெங்கள் தனிகையும் குமரரும் (1920)
பொங்குநன் மாரா யம்சொலிப் போதரும்
நாடுகள் நகர்கள் ஊர்கள் கடந்து
காடுகள் வழிஇளங் கதிரொடு திங்களும்
மென்மலர்ப் பதங்கள் வருந்த நடந்தனர்
பொன்மனச் சீரோர் கண்மலர் கண்டவை
சுண்டை ஆதளை வேம்பின வகைகள்
மண்டுநொச் சிச்சி அத்தியும் ஆத்தியும்
கும்மணி கொடுப்பை காரை வாகை
அம்மணிக் கோரை அருகுசீர் விழுதி
வெட்டிசெந் திட்டி வேர்விலா மிச்சை (1930)
திட்டி பிரண்டை சேப்பன்நன் னாரி
செழுநீ ரோடைக் கங்குகள் எங்கும்
விழுதினி தோடும் தாழைசெந் தாழை
கொடுக்குமுக் கோரை சம்பை நாணை
சிரிக்கி சிறியா நங்கை கரிசலான்
துளசிதூ துவளை தொட்டாச் சிணுங்கி
தளிரெழில் துத்தி முடக்கத் தானும்
கோவையும் செந்நா யுருவியும் பூலா
ஆவியார் கீழா நெல்லியும் முள்ளி
கற்பூர வல்லியும் நீலக் கொளுஞ்சி (1940)
தணக்கு விருட்சம் தான்றி கடுக்காய்
மணக்கு செண்பகம் மாமரம் நெல்லி
தேக்குதேத் தாமரம் சிறுநவா அகிலும்
ஆக்கருங் காலி புரசொடு மூங்கில்
சந்தனம் வாகை சரக்கொன் றைஆல்
வெந்தேக்கு மட்டி வேங்கையும் நாணும்
இருள்புளி இலந்தை நறுவிலி எட்டி
பெருந்தோ தகத்தி பாலத்தி புன்கு
புன்னைஏர் அழிஞ்சி பூவத்தி அரசு
மன்னுமட் டிப்பால் மருதமும் கொடுக்காய் (1950)
மலம்பூ வரசு மதனகா மரமும்
நலம்பா தாமும் நாட்டுக் களாப்பழம்
கொய்யா மகிழம் கனியுகு விருட்சம்
எய்தரு வில்வம் இனியபே ரீஞ்சி
வன்னியும் வேலா முந்திரி மற்றும்
மென்கனி வாழை மாதவி குரவம்
நாகம் திலதம் நறவும் நந்தியும்
போகமார் பொதிநிழல் பெருமரக் காவில்
கூவும் குயிலும் கூட்டம் புறாவினம்
மணிப்புறா தவிட்டு மாடப் புறாவும் (1960)
கானாங் கோழி கவுதாரி காடை
வானம் பாடி வல்லூறு ஆந்தை
செம்பூத்து சேவல் செங்காலி நாரை
வாலோடி நீண்ட மணிச்சலான் சிட்டு
முருக்கன் சிட்டு முள்வேலிச் சிட்டு
அடைக்கலன் தூக்கணான் அனேகசிட் டினங்கள்
கொன்னவாக் குருவி கொண்டை வளர்ந்தான்
அழுகவண் ணாத்தி அன்றிலும் கரிச்சான்
மயில்களும் கிளிமரங் கொத்திக் குருவி
ஐவர்ணச் சிட்டு ஆள்காட்டி மைனா (1970)
வளுங்கு தேவாங்கு வாள்பல்லுக் கீரி
அணில்வரி உடும்பு ஆமையும் பூனை
குரங்குபுள் வேட்டை குழிமுயல் முயலும்
கரடியும் பன்றியும் காட்டானை எருமை
புள்ளிமான் கிள்ளை புலிநாய் நரியும்
மரைமா டுடனே மட்டிலாக் காட்டில்
பொன்னெழில் வண்டு விரியன் வண்டு
கோதும்பை வண்டு கொளுஞ்சியின் வண்டு
செவ்வண் டுடனே சில்வண் டிரைச்சல்
பாப்பார வண்டு பஞ்சவர்ண வண்டு (1980)
மரகத வண்டு மாணிக்க வண்டு
மொழுக்கவண் டுடனே மூவர்ண வண்டு
எரியுரு வண்டு கருங்கொடுக் கதண்டு
மணிவண் டுடனே கனிவண் டுகளும்
செடிவன மெங்கும் சிலைஓசை ஓடிக்
கொப்பசைந் தாடும் கொழுவனப் பரப்பில்
பூவிரி வாடை பெருவனங் கானில்
தேனி வண்டினம் செப்பொணாக் கும்பல்
தேறலை உண்டு சிறகோசை விரிக்கும்
இத்தகு எழில்திகழ் இரும்பெரும் கானகம் (1990)
முத்தரும் முகுந்தரும் மென்னடை பயின்றனர்
சிவகுரு வரதராம் தனிகையர் வள்ளலும்
தவத்திருக் கண்மணி நவநிதிச் செல்வரும்
பாட்டையர் முன்செலப் பண்புயர் ஞானத்
தேட்டையர் தொடர்ந்து செவ்வழி ஏகுநாள்
கனிகள் உதிர்ந்து களைப்பினை ஆற்றின
இனியதென் றல்வந் தின்பம் அளித்தது.
கொண்டலின் தூறல் பன்னீர் தெளித்தது
வண்டிசை பாடி மகிழ்வைக் கூட்டின
கிளிகளும் குயில்களும் கீதம் பாடின (2000)
களிமயில் ஆடிக் களிப்பினை ஊட்டின
அகில்சந் தனமரம் அருமணம் கமழ்ந்தன
சுகந்த வாடையே சூழ்ந்தாங் கியன்றது.
மரங்கள் அசைந்தசைந் திசைந்து வருகெனத்
தரங்கொள் பெரியரைத் தாமழைத் திலங்கின.

அ. குருபிரான் குமரர்க்கு வைத்த சோதனைகள்
பயம்

இங்ஙன மாக இருபெருங் குரவரும்
பொங்கிடும் ஞானப் பொருண்மலர் பூத்திட
மென்னடை பயின்று மேவிடு காலை
வன்புலி யொன்று வந்தது எதிரில்
அன்புயர் பாட்டையர் அதைநோக் கேகிட (2010)
தென்புயர் குமரர் சிந்தை கலங்கினர்
காணார் போலக் கொண்டல் ஏகிட
மாண்பார் இளவல் அண்ணலின் மென்தோள்
தன்னைத் தொடவும் தட்டிவிட் டனர்குரு
வன்கொடும் புலியது தனிகையர் பதத்தில்
தன்தலை வைத்துத் தாழ்ந்து பணிந்து
தன்வழி யேகிட தனயர் வியந்தனர்
செம்பொருள் அண்ணல் சென்றனர் மேலும்
வெம்புலிக் கூட்டம் மிக்காங் குலவின
கான்மா டொன்றினைக் கடித்துக் குதறின (2020)
வான்மக வெங்கள் வரதர் நடுங்கினர்
தனிகையர் மகவின் தன்மைகண் டுணர்ந்து
இனியர்தம் திருக்கரம் கொண்டெம் இளவலை
கனிமொழிப் பிரானார் தீண்டினர் நடுக்கம்
தீர்ந்தது வள்ளல் செப்பினர் ஓருரை
மாமிச வாடைக் கேபுலி பாய்ந்திடும்
தாமிசை புல்வா டைக்கது தீண்டா
நமதிரு மேனியும் நரர்வா டைதவிர்ந்
தமரர்கள் மேனி ஆயது கலங்கேல்
என்றுரை கேட்டு இளவல் அமைந்தனர் (2030)

காமம்

நன்றகி லவலம் நல்லோர் தொடர்ந்தனர்
காடுகள் கடந்தனர் கழனியுட் பயிர்செய்
நாடூர்ப் பகுதிகள் நண்ணினர் நற்றவர்
இளந்திருக் குமரர் எழில்மிகு மேனி
வளந்திகழ்ந் திருந்தது வெங்கொடுங் காம
மயக்கம் உளதுகொல் என்றாய்ந் திடவே
நயப்புடை பெரியவர் நினைத்தனர் ஆங்கே
நம்பியை அழைத்து நன்முது உடலம்
வெம்புதல் உற்றது வெப்பம் மிகுந்தது
அந்நோய் தணிந்திட அத்தி மரப்பால் (2040)
தன்னால் தவிரும் ஆகலால் செல்க
இன்ன இடத்திலோர் அத்தி விருட்சம்
தன்னெடுந் தோற்றத் தோடுள ததனின்
வடபால் அடியில் வேரது கண்டு
இடமகல் வாகத் தோண்டியக் குழியில்
மண்குடம் ஒன்றை வைத்துவேர் சீவிட
தண்துளித் துளியாய்க் குடத்தினில் வீழும்
அனுதினம் வேர்நுனி மெல்லெனச் சீவிட
மனம்நிறை வடைதல்போல் குடம்நிரம் பியபின்
அதன்பின் எம்பால் இவ்விடம் வருக (2050)
அதுவரை அங்குள வயல்களில் உழைப்போர்
தம்மொடு உழைத்துப் பசிதவிர்ந் திடுக
எம்மை அதுவரை நேரா திருமின்
என்றுரை செப்பி ஏகினர் தனிகையர்
நன்றிது குருபரர் நல்லா ணையெனத்
தென்றி சைக்கயி லாயர்சிந் தித்தனர்
வள்ளல் குறித்த வாறிவர் ஏகிடத்
தெள்ளிய அத்தி விருட்சம் கண்டனர்
அருகூர் சென்று மண்குடம் தேர்ந்து
குருபிரான் செப்பிய வாறு இயற்றினர் (2060)
அங்ஙணோர் பண்ணை அழகுறத் திகழ்ந்து
பொங்கெழில் வயற்பணி புரிந்துகொண் டிருந்தனர்
நங்குல நாயகர் அங்கவ ருடனே
தங்களால் இயன்றவா றப்பணி செய்தனர்
அங்குற் றோராச் சரியம் கொண்டனர்
இங்குற் றிப்பணி இணைந்துசெய் செல்வர்
எங்குற் றாரிவர் எழில்மிகு வடிவினர்
தங்க மேனியினர் தரம்மிகு உழைப்பினர்
சிங்கவே றனையர் செல்வர் பெருங்குடிப்
பிறந்தவர் போலும் புரிபணி எதிலும் (2070)
சிறந்தவ ரிவரெனச் சிந்தையுள் எண்ணினர்
பசியா றுமினெனப் பரிந்துரை செப்பினர்
இசைவுடன் இளவலும் ஏன்றது கொண்டனர்
அன்னவர் திண்ணையில் அயர்ந்திராக் கழித்தனர்
தன்பணி தவறா தம்மரம் ஏகுவர்
வேர்தனை மெல்லெனச் சீவுவர் சீராய்
வேர்நீர் சொட்டிக் குடத்தினில் தேங்குறும்
இப்பணி இவ்வா றியன்றிடு காலையில்
அப்பெரும் பண்ணையில் அண்ணலும் பணிசெயும்
பண்ணைக் கதிபர்க் கிருந்தனள் ஒருமகள் (2080)
வண்ண ஓவிய வடிவழ குடையாள்
அருங்குண வதியாம் அற்புதப் பண்பினள்
திருமணப் பருவச் செழிப்புள நங்கை
தண்ணெழில் வயங்குநம் தருமரைப் பார்த்து
எண்ணத் தில்சல னம்மிகக் கொண்டனள்
பொங்கும் பேரெழில் பொதிஇளங் குமரர்
தங்கள் சிந்தையில் சற்றும் பிறழ்ந்திலர்
பிறர்பெண் ணோக்காப் பெருங்குணப் பண்பினர்
மறந்தும் பிறரை மனத்தகத் தேலார்
குனிந்த சிரமும் கூர்த்தநல் லுழைப்பும் (2090)
இனிதெதும் வினவில் எண்ணிப் பேசலும்
ஏறிட் டெதையும் நோக்கா இயல்பும்
மாறுபா டில்லா மாண்புடைப் பண்பர்
அழகும் அடக்கமும் ஆற்றிடு பணிதிறன்
பழகும் விதமும் பார்த்து வியந்தஅப்
பண்ணையார்க் குளத்தோர் எண்ணம் உதித்தது
வண்ணமார் இவரை மருகராக் கிக்கொள
தன்மனை யாள்பால் தன்கருத் துரைக்கவும்
என்கருத் ததுவென் றம்மணி செப்பினள்
பெற்றோர் இங்ஙனம் பெரிதுஎண் ணிடவும் (2100)
மற்றுஅவ் வனிதை மனதினில் காதல்
ஏற்றி வளர்ந்தது என்செயும் பேதை
மற்றுபற் றில்லா மாதவச் செல்வர்
சற்றும் சலனம் உற்றிலர் சிறிதும்
அடம்திடம் ஆசான் கிருபைமிக் குற்றவர்
குடம்நிரம் பிடலே குறியதாய்க் கொண்டனர்
பெற்றோர் பொன்மகள் மூவரின் அகத்தில்
நற்றேன் அன்பு நனிசுரந் திட்டது
“அன்னவர்க் கினிமேல் அன்பீன் மகளே!
அன்னம் பாலி”யென் றனுமதி தந்தனர் (2110)
என்னவி தத்தும் இனியர்ஏ றிற்றிலர்
அன்பணங் குளத்தில் பொங்கி எழுந்தது
குருபரர் நினைவே கூர்ந்துளத் துளதால்
அருங்கு மரற்கு அயர்வுவந் திலது
பொங்கிடு அன்புப் பெருக்கினால் அந்த
மங்கை எழுந்தனள் மாதவச் செல்வர்தம்
பங்கினில் வந்தனள் பரமனார் விருட்டென
அங்கெழுந் தத்தி மரத்தரு கேகினர்
குடம்நிறைந் திருந்தது குமரர் எடுத்துத்
திடமுயர் தனிகையர் திருமுன் சென்றனர் (2120)
நிறைந்தது குடமென நம்பி யுரைத்தனர்
நிறைந்தது எனதுள் எனகுரு நவின்றனர்
செல்லுவம் வாவெனச் செப்பிய தனிகையர்
நல்லதம் மகவினை நன்கழைத் தேகலும்
“அத்திநீர்” என்று அருங்கும ரர்சொல
சித்திநீர் பெற்றனிர் தேவையஃ தில்லெனும்
காம நயப்பில் கலங்கிலர் மகனெனச்
சேமநன் னிதியர் சிந்தை மகிழ்ந்தனர்
சகலவ ரந்தரு சற்குணா ளர்க்கு
அகில வலமது மீண்டும் தொடர்ந்தது (2130)

பசி

கபடநா டகராம் கனிமொழி தனிகையர்
சுபமங் களம்வளர் செல்வகு பேரர்க்(கு)
இன்னும் சோதனை இயன்றுளம் கொண்டார்
நன்மக வும்குரு நாயகர் தாமும்
பொன்பத மலரது வருந்த நடந்தனர்
கம்பு சுழற்றியும் கடும்பணி யுழந்தும்
நம்பிரான் மேனி நனிவளர்ந் திருந்தது
வெம்பசி ஓர்நாள் மிகுந்து எழுந்தது
தெம்பினர் ஓரூர் தாண்டிச் செல்கையில்
பிட்டுகள் வாங்கிக் கட்டினர் மடியில் (2140)
மட்டில் தவமுனி மகன்செயல் கண்டனர்
ஆங்கோர் நீர்த்துறை அங்குசென் றுண்ணலாம்
ஈங்கோர் தோப்புள திங்கமர்ந் தருந்தலாம்
என்றுநம் குமரர் எண்ணிடு காலையில்
குன்று தனிகையர் நீரிலா நெறியே
சென்றிட லானார் செல்வரை அழைத்து
நன்றீ ரெட்டுநாள் நடந்தனர் பசியுடன்
தாகமும் தணிந்திலர் பசியும் தவிர்ந்திலர்
மோகம் கடந்தநம் முனிக்கர சண்ணல்
குருபரர் கருத்தது வாமெனில் ஆக (2150)
வருவது எதுவெனின் வருகவென் றுறுதியாய்
திருமகன் உள்ளம் திடமுடன் எண்ணினர்
குருமுனி குமரரின் உளக்கருத் தோர்ந்தனர்
மகவே! அன்றுநீ வாங்கிய தென்னென
தகவுடன் “பிட்”டெனச் செல்வரும் பகர்ந்தனர்
சுகபரர் திடமார் சிந்தையைத் தெளிந்து
மிகவுயர் முனிவரோர் குளக்கரை சென்றனர்
மடியில் காய்ந்துமுள் முள்ளாம் பிட்டினைப்
படியினில் வைத்துநீர் பெய்து நனைத்து
இருபெருங் குரவரும் பசியா றினர்காண் (2160)
குருபரர் வைத்த கொடும்சோ தனையில்
அருமகன் வென்றார் அண்ணல் மகிழ்ந்தார்
குருபரர் இதயம் கொண்டது நிறைவு
இங்ஙன மாக இனியவர் தனிகையர்
பொங்கெழில் ஞானப் புதுமைகள் பூக்கவும்
தென்னன் பாண்டியர் சிந்தை செழிப்புற
தன்மகன் பொன்மனம் தளர்வறி யாவனம்
உரையமு தம்பொழிந் தின்பம் கொழிதர
கரைகா ணாத்திரு ஞானக் கடலதன்
பார ரகசியம் பன்னீ ராயிரம் (2170)
சீருயர் தூல ரகசியம் யாவும்
எண்ணில் கோடி இயம்பி வளர்த்தனர்
மண்ணில் விண்ணின் மாரி பொழிந்தது
வினாவிடைச் சுவையமு தேற்றநம் குமரர்
தானாட்டியர் ஆகத் திகழ்ந்தனர் அதுகால்
அவதா ரம்செய் நோக்கம் நிறைவுற
தவதா ரம் செய் தம்மக வேகிட
சித்திபெறத் திறன் செழிப்புற தாமோர்
உத்தி யெடுத்தனர் உள்ளம் கனிந்தே
பிரிவறு இணையுளம் தனியுறப் பழகிட (2180)
பெரிதொரு வழிதனை தனிகையர் செய்தனர்
உறவும் நட்பும் சுற்றமும் துணையும்
திருமிகு செல்வமும் தாதையே என்றுறு
அறம்நிறை யுளத்தே ஆழ்ந்த உணர்வதை
துறந்திட தனிகையர் திருவழி தேர்ந்தனர் (2185)

8. ஆடுமேய்ப்புத் திருக்கோலப் பருவம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்

மன்னன் ஆகி வாழ்ந்தாலும்
மெய்யாம் ஞானம் பெற்றிலனேல்
என்ன பயனாம் எமன்கைப்பட்(டு)
ஏகும்நரக வாழ்வினுக்கே
பென்னம் பெரிய குருவருளைப்
பெற்றோர் அன்றே மனுப்பிறப்பு
தன்னின் பயனை அடைந்தரென
தருமர் தாதை முன்னுரைக்கும்
(2186)

தாமோர் அறுநூ றாண்டாக
தரணி தன்னில் தவமாற்றி
சேம நிதியின் பெட்டகமாய்ச்
செல்வக் குமரர் தமையீன்றோம்
ஆமா றாக்கும் அருங்குமரர்க்(கு)
அன்பும் பணிவும் அரவணைப்பும்
தாழ்மைத் தகையும் தான்வளரத்
தனிகை மணியர் தாம்நினைக்கும்
(2187)

கலியை அழித்துக் கட்டான
கனிவார் புதிய யுகம்படைக்கும்
வலியர் தமது மகவினுக்கு
மனதில் அகந்தை எழலாகா
பலியாய்த் தீய பண்புகட்கு
பண்போங் கிளவல் படியாமல்
புலிபோல் நெஞ்சில் உரம்கொண்டு
புத்ரன் வளர விழைந்தனரே!
(2188)

தவகொண் டல்நம் தனிகைமணி
தன்னே ரில்லாச் சீராளர்
சிவகொண் டல்நம் செல்வர்தமை
சீரூர் ரெட்டி யப்பட்டி
கவரை நாய்க்கர் பண்ணையினில்
கனிவாய் ஆடு மேய்த்திடுமோர்
புவனப் பணிக்கு நியமித்தார்
பொன்னின் மனத்தார் அதையேற்கும்.
(2189)

குருசொல் கடவாக் கோமகனார்
குமரர் அந்தப் பணிதன்னை
அருமைத் தொழிலா பர்ணமென
அணிந்தே கொண்டார் அற்புதர்தற்
பெருமை கொள்ளாப் பெரியதகைப்
பேரா ளர்சீர்ப் பண்புயர்ந்தார்
கருவில் மெய்யாம் திருவுடையார்
கட்ட ளையாய்ச் சிரமேற்கும்.
(2190)

பிற்றை நாளில் ஜீவர்களைப்
பெரிதும் மேய்த்துக் கலியழித்து
முற்றும் புதிய யுகம்படைக்கும்
மூலத் தான முத்தரசர்
சற்றும் தயக்கம் கொள்ளாமல்
சற்குரு வின்சொல் திருவாணை
பற்றிப் பணிந்து அணியெனவே
போற்றும் தெய்வக் கண்மணியே!
(2191)

பழைய காவிச் சிரப்பாகை
பொன்மே னியிலோர் காஷாயம்
இழையும் இடையில் செங்காவி
இலங்கும் ஆடை அணிகலனாம்
எழிலார் ரத்ன கசிதமிழை
ஏரார் சிம்மா சனமென்னும்
வழிமெய் யரசர் கொள்கோலம்
மற்றெண் ணில்நெஞ் சுருகுதம்மா.
(2192)

ஞானச் செங்கோல் ஓச்சுதிரு
நளினக் கரத்தில் வாங்கரிவாள்
தானம் இடைமுள் வாங்கிக்கொத்(து)
தானும் இலங்கும் திருத்தோளில்
ஆன குடிகொட் டாங்குச்சி
அரிய குடுவை அதுஇலங்கும்
தேனார் மொழியார் கோலமெண்ணில்
செந்நீர் கண்ணில் பெருகுதம்மா.
(2193)

விண்கொள் மேலை நாட்டரசர்
விளங்கும் எழிலைக் கண்டுமகிழ்
கண்கள் இதனைக் காணுறவோ
கர்த்தர் மறிமேய்க் கோலமிதை
பண்கள் பொழிந்து உயிர்காக்கும்
பவளத் திருவாய் மொழியழகர்
மண்கொள் பணிசெய் அருளாளர்
மேனி காணில் உள்உருகும்.
(2194)

பட்டி திறந்து ஆடுகளைப்
பரமர் மேய்க்கும் பணிசெய்தார்
மட்டில் பூளைமரை வெள்ளை
வால்கி டாவும் பூனங்கால்
எட்டித் தாவும் சாம்பல்சடை
ஈற்றா டுகளும் மூளிநரை
குட்டிகு ழாங்கள் யாவையுமே
கோமான் ஓட்டி மறிமேய்க்கும்.
(2195)

காடு கண்மாய் கானகமார்
கருவேல் குன்று சோங்குகளும்
ஓடித் தாவி இலைகொழைகள்
உவந்து மேயும் ஆடுகளை
நாடித் தானும் வாங்கரிவாள்
தன்னால் வளைத்துத் தந்திடுவார்
வாடி டாமல் மறியாவும்
மேய்ந்து ஓடை நீரருந்தும்
(2196)

மேய்ப் பிடத்தில் சினைமறிகள்
விரைந்து குட்டி ஈன்றுவிடும்
ஆய்ம தித்தாய் அனைசெல்வர்
அவற்றை மடியில் கட்டியதன்
தாய்ப்பால் அருத்தி சுமந்துவந்து
சார்கு டாப்பில் தான்காக்கும்
ஓய்வின் றித்தாம் மறிமேய்த்து
உவந்தே பட்டி பெருக்கிடுங்காண்.
(2197)

நிலைமண்டில ஆசிரியப்பா

மகவை மறிமேய் பணியில் அமர்த்திய
தகவார் தனிகை மணியர் தாமும்
குமரர் உடனே தொடர்ந்தனர் சிலநாள் (2200)

அமரர் சிலநாள் பிரிந்தும் இருந்தனர்
வாரம் ஒருநாள் வருதலும் செய்தனர்
வாரா தீராறு நாட்கள் கடத்தினர்
பிரிவினைத் தாங்காப் பொன்மணிச் செல்வர்
அரிதுதாம் பெற்ற அற்புதத் தாதையை
சென்றுகண் டவர்முன் சிந்தை கலங்கிக்
கன்றிக் கசிந்து கண்ணில்நீர் பெருக்கினர்
அன்றிரா முழுதும் அண்ணலோ டிருந்து
நன்றுதம் பணிக்கு நாயகர் மீண்டனர்
நகமும் சதையும் நிழலும் உருவும் (2210)

அகமார் அன்றிலும் பேடும் போலும்
கன்றும் பசுவும் கனியும் சுவையும்
ஒன்றி உவந்து இருத்தல் போலும்
குமரர் குருபர ரோடே கண்ணின்
இமைபோல் பிரியா திருந்தனர் நன்றே
கண்ணுள் மணியாய்க் காத்தனர் தனிகையர்
கண்ணா ளர்தம் கதிபாட் டையரை
எண்ணத் தாலும் பிரிந்திலர் என்றும்
வண்ணபாட் டையர் வகையாய் மகவைப்
பிரித்திடத் திருவுள் பெரிதுசிந் தித்தனர் (2220)

தெரிந்திதைக் குமரர் சிந்தை கலங்கினர்
அணிதிகழ் அருண்மணி அருங்கும ரேசர்
பணிதனைக் கருத்தும் உறுத்துமாய்ச் செய்தனர்
பட்டியும்பெருகிப் பத்து நூறானது
மட்டிலாப் புகழினர் மணுமகன் பணியும்
தொடர்ந்தது ஓராண் டதுவும் நிறைந்தது
அடர்ந்துறை ஆசான் அண்ணல் தனிகையர்
மகவினை அப்பணி தன்னினின் மீட்டனர்
சுகபரர் தமக்கோர் திருச்செயல் செப்பினர்

9. சன்னதம் பெறு பருவம்

அ. பாசுபத தவமும் சன்னதம் பெறுதலும்

என்னரு மருந்த(ன்)ன இனியபொன் மகவே (2230)
நின்னை மீண்டோர் நிலைக்கினி தேற்றுவம்
திருப்பரங் கிரிஎனும் பொருப்பணித் துளது
அருட்பரங் கிரிதனில் அற்புதச் சுனையமை
திருக்குகை யொன்றுள அங்குநீ செல்க!
திருத்தவ மாற்றுக சீர்பெற் றோங்குக!
பெறற்கரும் பேறுகள் பெரிதடைந் துயர்க!
அறஞ்செயல் விரிமின் அற்புதம் பெறுமின்!
நிலமிசைப் போந்த நின்கடன் அதுகாண்!
வலமெலாம் பெற்று வாழிய! வாழிய!
என்றுபாட் டையர் ஆசீர் பதித்து (2240)
நன்றுநம் குமரரை நற்றவம் புரிய
வென்றனுப் பினர்காண் வேதநா யகரை,
பண்டை வேதியர் பகர்ந்துரை வண்ணம்
மண்டு வான்புகழ் மாதவ, நன்மணி
காடுகள் மேடுகள் கழனிகள் கடந்து
ஈடிலாச் சீர்பரங் குன்றம தேகினர்
தேடி ஆய்ந்து சற்குரு சொல்லிடம்
நாடி நற்றவ நற்குகை நண்ணினர்
“கிபுலா” என்னும் குருதிசை நோக்கியே
அபுரூ பம்மாம் அற்புதா சனத்தமர்ந்(து) (2250)
தவமெய் மாட்சித் தன்னேரி லாமணி
மவுன கம்பத் தடிநிழல் சார்ந்தனர்
கொழுமுனை யாம்கதிர் முளையினி லூன்றினர்
வழுவி லாநெறி வானகத் தேறினர்
அந்தர் மாமுக அகமதின் நோக்கினில்
சுந்தரர் நம்மெழில் சுகமிகு வாரிதி
ஐம்புலன் யாவும் அடங்கி ஒடுங்கிட
செம்பொருள் நாயகர் திருத்தவம் ஆற்றினர்
ஓர்மை வலுத்தது சீர்மை நிறைந்தது
கூர்மையாய் ஆறாம் அறிவோங் கிச்சிரம் (2260)
அங்கதே சம்கடந் தந்தரத் தெமும்பினர்
மங்கா மணியொளிர்ந் தின்பம் கிளர்ந்தது
ஊணும் உறக்கமும் அற்றனர் உத்தமர்
காணற் கரிய காட்சிகள் கண்டனர்
மதியொளி ஒன்றே மாந்தும் உமாப்போல்
மதிவான் அமுதம் மாந்தினர் மாதவர்
உணர்வெலாம் சமதளத் தொன்றியாங் குற்றது
பணர்விரித் தேபெரும் இன்பம் முகிழ்த்தது
பண்டைம யேந்திர கிரிதனைச் சார்ந்தனர
விண்டிடு பொழுதுப டாச்சுனை மூழ்கினர் (2270)
அங்கம் நனைந்தது ஆடை நனைந்திலை
தங்கம் கண்டிதைத் தான்வியப் புற்றனர்
முன்பின் நிகழ்யுகம் கண்டு களித்தனர்
நன்னய மூலபண் டாரமும் கொண்டனர்
காணரு வேதநற் காட்சிகள் கண்டனர்
மாணெழில் ஞான வரமெலாம் பெற்றனர்
தெள்ளத் தெளிந்து சிந்தை குளிர்ந்தது
அள்ளக் குறையா அருள்நிதி பெருகுறும்
வேத உலகும் பாதாள உலகும்
நீதி நெறிகளும் நிறைந்தது கண்டனர் (2280)
சித்திவி ளாகக் குகைதனில் புகுந்தனர்
முத்தி விருட்சத் தடிநிழல் அமர்ந்தார்
ஆகாய கங்கை மானஸ சரோவரம்
பூகயி லாயம் பொற்புவி கண்டனர்
தளிர்ந்த நெஞ்சம் தெளிந்து சிறந்தது
ஒளிர்ந்தது வானகம் ஓங்குளம் களித்தது
காமக்கு ரோதம் கடுகி ஒழிந்தது
சேமமார் மெய்வழி சீர்சிறந் தோங்கிற்று
தென்னா டுடைய சிவபரம் பொருளவர்
எந்நாட் டவர்க்கிறை ஏந்தலர் ஓங்கினர் (2290)
அயன்அரி அரன்ஒரு திருவுரு வேற்றனர்
தயவுடை இறைகுரு தெய்வமென் றுணர்ந்தனர்
எமன்பதி கடந்து வீரக்குன் றேறினர்
அமரர் பதியின் அற்புதம் கண்டனர்
எல்லாம் கடந்தோங் கெழில்திகழ் நிலையில்
வல்லார் குருபரர் விளங்கிடக் கண்டனர்
இதுவரை எவரின் சுவடுப டாத
முதுபெரு நிலையில் மாதவர் ஏகினர்
சிவகுரு வரதர் செம்மல்நம் இளவல்
பசிவரில் தணிக்க
அடிவா ரம்தனில் அற்புத மாய்வளர் (2300)
நெடியகற் றாழைப் பட்டைமுட் சீவிப்
புசிப்பர் எழுவது இரவெனில் அதுமிலை
மசியாத் திடமுடை மாதவர் எழுவது
ஓர்கால் கோடைமற் றோர்கால் குளிராம்
ஓர்கால் மழைமற் றோர்கால் வசந்தம்
ஓர்கால் பயிர்நடும் காலமாய் இலங்கும்
ஓர்கால் அறுவடைக் காலமாய்த் திகழும்
காலம் கடந்த கருணைக் குமரர்
சீலம் சிறந்த செம்மல்செய் தவத்தால்
பொன்னார் திருக்கரம் பொலிந்தது தவத்திரு (2310)
பன்னிரு சன்னதம் பாங்குறத் திகழ்ந்தது
கடலறி யாத வலம்புரிச் சங்கும்
திடமிகு உயிராம் சக்கர மதுவும்
அற மோதகமும் அற்புதச் சூலமும்
திறமுயர் திருக்கரத் தேந்தினர் கோமான்
இருபுறம் கருக்கோங் கிடுமெழில் பட்டயம்
திருவுயர் ஒலிதரு துடியுடுக் கையதூஉம்
வெல்தவ வேலும் வில்லா யிதமும்
நல்லா சீர்பாத கங்கணம் அதுவும்
வெல்லரும் தண்டா யிதமும் அங்குசம் (2320)
தொல்பா சமும்கிள் நாமமும் இலங்கின
இத்தனை சன்னதம் எவருமெங் குற்றிலர்
அத்தனின் தவநிலைச் சார்நிகர் உலகில்
இன்னவா றண்ணல் ஏற்றமுற் றோங்கும்
தன்னை யாவரோ அசைத்திடல் போலும்
அண்ணல் உணர்ந்தனர் அருட்கண் மலர்ந்தனர்
வண்ணமார் சான்றோர் தனிகையர் முன்னுறும்
எழுந்து வணங்கிட இயலா நிலையில்
செழுந்திருத் தாள்கள் பிடிப்புற் றிருந்தன
“தெய்வமே”! என்று திருக்கரம் கூப்பினர் (2330)
ஐயர் தனிகையர் அதனைத் தடுத்தனர்
“ஆய்மதிச் சிந்தை அருட்குணச் செல்வரே!
நீகை குவித்தால் தாங்கரி தெனக்கு
தூய மெய்ப் பரன்நீர் துலங்கெழில் இறைவர்
வையகம் உய்ய வந்தவ ரோதயர்
என்னையும் எவரையும் இவ்வுல கிதனில்
நன்னய மாய்ரட் சித்தருள் நாத(ன்) நீர்
உமையறி விக்கவே உலகிடைப் போந்தேன்
எமதுயிர்க் காவலர் எல்லாம் வல்லவர்
தேடரு ஞானசிங் காதன மென்னும் (2340)
பீடமதேறிடு பெம்மான் பெருந்தகை
நின்தவம் நிறைந்தது சன்னதம் பொலிந்தது
என்தவ நோக்கம் இனிது நிறைந்தது
பொன்மலர்ப் பாதம் பூமியிற் படியா
தொன்மறை போற்றும் தோன்றலர் நீரே!
தங்களின் அவதா ரத்திரு நோக்கம்
பொங்கெழில் மாட்சி புகலுவன் கேண்மின்
காசினி யெங்கணும் கலியனின் ஆட்சி
மாசுறுத் திடுதலால் மாந்தர் துயருறும்
ஆசீர் பதிக்கும் அருந்தவச் செம்மலே (2350)
ஊசிமு னைத்தவம் உடற்றிய உத்தமா!
கலியுகம் அழித்துப் புதுயுகம் படைக்கும்
வலியவர் கல்கி மகதிநீர் ஐய!
இப்பெருஞ் சுமைதனை ஏற்றிடு மகவே!
செப்பருந் தவத்துச் செல்வமே”, என்று
ஒப்பிலா மாமணி உரைத்தனர் நந்தம்
மெய்ப்பய னாகிய மேலவர் விண்மணி
வையகம் வானகம் யாவையும் என்றும்
உய்யவைத் திடுமிவ் வுத்தமர் தமக்கு
மெய்வழி காட்டி உய்வழி கூட்டும் (2360)
செய்வழிச் சேகரர் செம்மல் குமரர்க்கு
மார்க்கநன் நாதர் எனும்திருப் பெயரை
மார்க்கநன் நாதர் மார்க்கநன் நாதரென்(று)
ஆர்க்கும் வானோர் அனைவரும் வாழ்த்தினர்
வையகம் வானகம் உய்ந்திட அருள்தரு
ஐயரே வாழ்கென மலை எதிரொலித்தது
தீர்க்கராம் தனிகையர் சீர்பெறச் சூட்டினர்
இன்பக் கனியே! இதயத் தொளிர்பெரும்
அன்பு மணியே! அறிவின் சிகரமே!
எம்முப தேசம் தன்னைச் செம்மையாய் (2370)
இம்மண் ணுலகம் உய்யும் பொருட்டாய்
செய்து வருவாய் சீருயர் நாயகா!
எய்துவர் யாவரும் ஈடில் மாட்சி
என்றுரை செப்பினர் இனிது வாழ்கென
நன்று வாழ்த்தினர் நல்லமராதிபர்.

ஆ தகவுயர் குருபிரான் மகவினைப் பிரித்தல்

வேறு

சீரோங்கு தேவத் திருமகவே விண்ணவனே!
பேரோங்கு வாக்குப் பேராண்மை பெற்றசெல்வா!
எல்லா வரங்களுமே இனிது கொண்ட என்குமரா!
வல்லாள மாமணியே வான்விஞ்சை பெற்றிலங்கும்
முக்கோடி தேவர்கட்கும் முதல்வரெனும் முத்தியனே! (2380)
எக்கோடி யாராலும் வெல்லரிய வல்லோனே!
தீர்க்கத் தரிசியர்கள் செப்பிவைத்த அத்தனையும
ஆர்க்க நிறைவுறச்செய் அற்புதமார் ஓவியனே!
கார்க்கும்தீ கைக்கொண்ட கண்ணியமார் காவியமே!
சொல்தவறாத் தூயவனே திருவிளங்கும் சத்தியனே!
அல்பகலாய் மெய்த்தவம்செய் ஆற்றல்மிகு உத்தமனே!
பத்தினித்த னம்மாறாப் பாங்கரசே! பொன்மணியே!
சித்தியெலாம் பெற்றவனே! செழுநிதியே! வான்பதியே!
சதுர்யுகத்தும் ஈடில்லா தவமேரே! சர்வேசா!
புதியயுகம் புரக்கவந்த பொற்பதியே! நன்னிதியே! (2390)
இதமோங்கு ஏந்தலரே! இறையுருவே! எம்மானே!
இருபத்து ஏழாண்டு யான்காத்துப் பெற்றெடுத்த
மருவீசும் மாணிக்கம்! வைரமணி பெட்டகமே!
அக்கினிஉன் வலக்கையில் அப்பா மறவாதே!
தக்கார்கட் கெல்லாம் சாயுச்யம் தந்தருள்வாய்
நம்பி யிருப்போர்க்கு நாலாம் பதம்கொடுநீ
வெம்பியிருப் போர்மேலே வீசும் அருள்மாரி
விஞ்சைமதி வீரசிங்கச் செங்கரத்துக் கங்கணவா!
பஞ்சமுத்ரா லம்பமெனும் நெஞ்சணியும் செஞ்சொலனே!
வலியன்எ மன்பலத்தை முறியடிக்கும் வல்லவனே! (2400)
கலியன் கலிச்சிகளைக் கடியாதே நம்பாதே!
நிலைதிரியா நித்தியனே! நீதியொரு மேனியனே!
விதியைவெல் வித்தகனே! வேற்கரத்து வானவனே!
மதிமகத்துக் கெல்லாமும் மன்னவனே! ஆருயிரே!
உன்னுடைய சோல்நாப்பை உற்றசெல்வம் எல்லையிலை
என்னுரிமைச் செல்லமிகு ஏரார்ந்த வான்மணியே!
மன்னாதி மன்னவர்க்கும் விண்ணாதி மன்னவன் நீ
தென்னா டுடைசிவன்நீ! சொற்றுணையாம் வேதியன்நீ!
பாரகத்தே சென்றிடுவாய் பரபோகம் ஈந்தருள்வாய்
சீரகத்தார்க் கெல்லாம் திருவழங்கி உய்விப்பாய் (2410)
வல்லார்க்கு வல்லவன் நீ! வானோர் தலைவன் நீ!
எல்லார்க்கும் மெய்யமுது இனிதருளும் அன்னைநீ
கூடாரை வென்றோங்கும் கோவிந்தன் நீ! மணியே!
வாடா நெறிமுழங்கும் மாமேரே! பூமணியே!
தேடாப் பெருநிதியே! தேட்டிலுயர் வான்நிதியே!
கோடானு கோடிசெல்வக் குவையே! அருட்கதியே!
சென்றிடுவாய் எண்டிசையும் செகமெல்லாம் உய்யவைப்பாய்
வென்றிடுவாய் வெற்றிமணி மாலையணி வேந்தன் நீ!
தயங்காதே செல்கனியே! தாரணியில் மக்களெல்லாம்
மயங்கித் தவிக்கின்றார் வன்கலியன் மாய்கையினால் (2420)
அஞ்சேல்என் செல்வமே! அருமைத் திருக்குமரா!
வஞ்சக்க லியினின்று வையகத்தை மீட்டிடுவாய்
உன்கண்கா ணாதவண்ணம் உடனிருப்பேன் ஒண்மணியே!
தென்பாண்டிக் கண்மணியே சென்றுவா என்றுரைத்தார்
சிவகுருவும் இவ்வாறு செப்பிடவும் நம்மருமைத்
தவமணியர் பேராளர் தாயனைய சீராளர்
புரிந்திட நேர்வதெண்ணிப் பெரிதும் கலக்கமுற்றார்
தெரிந்தே அவர்கருத்தைச் சிந்தை மயக்கமுற்றார்
அழகாகத் தாம் வளர்த்த அழகு குடுமிதனில்
நழுகாது கட்டிவிட்ட நற்றேங்காய் போலுணர்ந்தார் (2430)
நாடாளும் வல்லரசன் நல்லரசி கர்ப்பமுற்று
நாடாள ஆண்மகவை யீன்றெடுக்கு மந்நேரம்
பிரசவ வேதனையைப் பேசிடவும் கூடுவதோ
அரசு புருஷனொடு ஆளன்புத் தோழியரும்
ஒத்தாசை செய்வாரோ உடல்வலியை வாங்குவரோ
செத்துமடி யுந்துன்பம் செறிந்துவரும் அப்போது
துடைஉதறித் தோள்உதறி தேகம் நடுநடுங்கி
இடைவலியின் துன்பமது ஏறும் மடமடத்து
மாற்றும் சுமையிதுவோ மற்றுதவி யார்செய்வார்
ஆற்றொண்ணாத் துன்பமது அலையலையாய் மிக்கேறும் (2440)
வேர்த்து மிகத்துடித்து வாய்விட்டுத் தானலறி
ஆர்த்துமிகத் தத்தளித்து அலமருமத் துன்பத்தால்
தட்டுண்டு தான்தனியே தாங்கமுடி யாத்துயரால்
மட்டில்லா தேவலியால் மாதரசி தான்கதறும்
அப்படியோர் துன்பம் அடைந்தார்கள் அன்பழகர்
எப்படித்தான் சற்குருவை யான்பிரிவ தென்றெண்ணி
பருந்தெடுத்துப் போட்டகுஞ்சு தாய்பிரிந்து தான்தவிக்கும்
துரும்புபெருங் கடலலையில் தான்அலைக் கழிதல்போல்
தன்னந் தனிவீட்டில் தாயின்றிக் காரிருளில்
சின்னஞ் சிறுகுழவி தான்வீறிட் டேயழும்போல் (2450)
நீங்காத் துணையென்று நெஞ்சிலுரம் கொண்டிருந்தார்
பாங்கரசர் செல்லென்று பரிதவிக்க விட்டதென
ஓடும் கண்ணீரால் உடலெல்லாம் தான்நனைய
வாடி உளம்கலங்கி மறுகிமிகத் துன்புற்று
தந்தையே! என்றன் தனிக்கருணை வாரிதியே!
எந்தையே! இன்னுயிர்க்கு ஏற்ற கொழுகொம்பே!
ஆதித் தலைநாளில் அன்பால் அரவணைத்து
நீதித் திருவாக்கு நித்தியவித் தாலின்று
போதிப்பூ வாசமிகப் பொங்க வளர்த்தெடுத்து
வேதித்துச் சற்றும் விலகாது கண்ணிமைபோல் (2460)
காத்துக் கனியமுதால் கருத்துருத்தாய்த் தாம்பேணி
மாதாபி தாவுமென வாய்த்த குருபரரே!
ஆதி இறைகுருவே! ஜோதி நிறைதிருவே!
நீதி யுரைவரையே! நித்தியத்தைத் தந்தருள்செய்
எந்தையே ஆரூரா! எனைப்பிரிய எண்ணாதீர்
சிந்தை கலங்குதையா! சீராரும் என்தகப்பா!
என்றுபுலம் பிக்குமரர் இதயம் வெடித்தார்கள்
கன்றி யுளம்நெகிழ்ந்து கண்ணீர் சொரிந்தார்கள்
அப்போது நந்தம் அருளாளர் நெஞ்சகத்தே
முப்போதும் தானுணரும் மனுமகனார் பிற்காலம் (2470)
செகமுய்யச் செய்வதற்காய் சீராய்ப் பிரசங்கம்
மிகப்பொழியும் போதினிலே வீணர்செயும் பல்லிடர்கள்
கல்சாணம் விட்டெறிதல் களவாடல் மிக்கிகழ்தல்
வல்லகொடும் பாதகர்நேர் வந்தெதிர்த்தல் தீவைத்தல்
முன்னே சலாம்செய்து பின்னேகோ ணைப்பழித்தல்
இன்னபிற இன்னல் இயற்றல் அவமதித்தல்
வன்செயல்கள் நெஞ்சில் வந்து நிழலாடும்
இன்னும் சிலகாலம் என்னோடு தாமிருந்து
வன்மை தகர்த்தேற வழிசாற்றிச் சென்றாரேல்
நன்றாகும் என்றே நம்குமரர் தாமெண்ணும் (2480)
பொன்றாத வாழ்வருளும் பாட்டையர் முன்னிருந்து
சென்ற நிகழ்வருங் காலங்கள் நனியுணர்ந்து
நன்று நமதுபணி நலம்தொடருமெ னனினைக்கும்
வேதாவை நோக்கி

வேறு

நாவலன் தீவில் நாட்டமுற் றாய்ந்து
பூவுல கிதனில் பன்னாள் அலைந்து
அல்லும் பகலும் அலுப்பா யலுத்து
வெல்லரும் மதிப்பளுச் சுமைமாற் றுதற்காய்
தென்பாண்டி நாட்டில் தேடிவந் தாய்ந்து
என்தலை மதிச்சுமை ஏற்றவென் றென்றன்
சிட்டைப் பிடித்த தேவாதி தேவா (2490)
மட்டில் புகழார் மாதவ குருவே
தங்களை வாவென வரவேற் றிலனே
தாங்களே வந்தென் தலைதரம் அறிவித்(து)
புண்பாடே பாடெனெப் புகுந்திருந் தேற்கு
பண்பாடு காட்டிப் பதிப்பித்தீர் மெய்யை
நின்பாடு சொல்லில் நிலம்பாடு சாயும்
உன்பாடு சொல்ல உலகிடம் கொள்ளா
ஆதித் தலைநாளில் அறியாப் பருவத்தில்
நீதித் திருவுருவே! நீரென்னைக் கைபிடித்தீர்!
என்னசெய் தீரென்று இன்றுவரை நானறியேன் (2500)
விழியழகு காட்டி விளைந்தகா மத்தால்
அழியாத ஆசை சலியா தெழும்பிட
பழிகாரி என்று பாரிலுள் ளோர்கள்
வழிவசை பொழிய வந்தன னுன்பின்னே
உன்னிடம் வாழ்வே உறுதுணை யென்று
என்னிளம் பருவத்து எல்லாம் மறந்துன்
பின்னே தொடர்ந்தேன் என்னவோ இந்நாள்
என்பே ரெடுத்து என்வடிவம் மாற்றி
உன்பேரு வைத்து உன்வடிவம் தந்த
உத்தம சுத்த உறுதிநா யகமே (2510)
சித்தம தில்நிலை சீருயர் மாதவா!
இங்ஙனம் தாங்கள் எனையெடுத் தணைத்த
தங்கமா மேருவே! தனிச்சீ தனமே!
நீள்வய துடைய குளவியா னதுஒரு
மாள்சிறு வயதுடை புழுவினை யெடுத்து
தன்கூட் டில்அடைத் தேரீங் காரம்
மென்மை யாய்ஓங் காரம் செய்து
தன்கொடுக் காலே கொட்டியே அச்சம்
மின்நினை வூட்டிட அப்புழு கேட்டுக்
குளவியாய் மாறும் தன்மையைப் போன்றும் (2520)
இளவய துடையேன் எனைத்தடுத் தாண்டீர்
இடும்பைப் படும்வாழ் வென்னும் உலகியல்
குடும்பத் திருந்து கடிதே பிரித்து
துன்பம் தொலைத்து தொல்பெருஞ் சீருடை
இன்பவாழ் வருளிய எந்தையே! தந்தையே!
இன்றெனைப் பிரிந்து ஏகெனச் செப்புதல்
நன்றோ? முறையோ? நாதாந்த நாதா!
பிரியேல் ஐயா! பிரிந்தால் என்னுயிர்
தரியேன் ஐயா! தசைசால் பெரியீர்
என்றுமன் றாடியே இருகரம் ஏந்தினர் (2530)
திங்களூர் நத்தத் தேரடி யதனில்
பொங்குமெய்ஞ் ஞானப் பெருமணிச் சூலில்
தாங்கி ஈன்றனிர் தனிப்பெருங் கருணையீர்!
ஆங்கது தொடர்ந்து அருந்துற வேற்று
ஈங்குநும் முடனே இருந்தனன் பலகால்
சொற்றுணை வேதியர் சோதியர் நும்முடை
நற்றுணை பெற்று நனிமகிழ்ந் திருந்தேன்
சட்டெனத் தாங்கள் பிரிகெனத் தொடர்பை
விட்டிடச் செப்புதல் விமலா! முறையோ?
ஏதும்யான் அறியேன் இக்கலி யுலகில் (2540)
தீதுநன் றறியேன் சோதனை வருங்கால்
மீதுஊர்ந் ததனை வெல்வகை யறியேன்
சூதா னம்மிகச் செப்புமின் ஐயா!
சுருக்கு மந்த்ரா லோசனை உரைமின்
கருக்குற் றென்னுளம் கலங்குகின் றதுவே,
என்றுமன் றாடினர் இருகரம் ஏந்தினர்
பொன்றாப் புகழினர் பெரியர்பாட் டையர்
திலகபி ரானவர் மகவுரை கேட்டு
எல்லாம் வல்ல இனிய மெய்ச் செல்வா!
பொல்லாப் பிணிதீர் பொன்மணி மகவே! (2550)
சித்தம் முற்றிய திருத்தவ சேகரா!
நித்திய நீதிப் பெருந்தவக் கண்ணே!
வருந்தேல் சற்றும் மனங்கலங் கிடல்விடு
அருந்தவச் செல்வமே! அன்றுவான் சபையில்
தீர்மா னம்செய் திருவுரை தெளிமின்
பேரார் பெருமாண் புடையபொற் செல்வமே
காலங்கள் வேறு தேசங்கள் வேறு
கோலமாய்ச் செப்பிய பாஷைகள் வேறு
சீலமாய் நின்னையே சீர்குறிப் பாக
வாலறி வன்நின் மாட்சிமை விதந்து (2560)
தீர்க்கத் தரிசியர் ஞான திருஷ்டியால்
ஆர்க்கும் தரிசனம் அழகுரை செப்பினர்
ஒருவர்வா னாட்டுச் செல்வரென் றோங்கும்
ஒருவர்கிள் நாமக் காரரென் றுரைத்தார்
ஒருவர் கரைகண் டாரெனச் செப்பினர்
ஒருவர் மெசியா வெனப்பெயர் புகன்றனர்
ஒருவர் நீதித் தீர்ப்பரென் றழைத்தார்
ஒருவர்மைத் ரேய புத்தரென் றேற்றினார்
ஒருவர்சொல் சோஷியாஸ் அஸ்வத் எரேதா
ஒருவர் கல்கி இவரெனப் புகழ்ந்தார் (2570)
ஒருவர் மனுமகன் எனும்நா மம்சொலும்
ஒருவர் மகதி அலைகிஸ்ஸ லாமெனும்
ஒருவர் பனிமதிக் கன்னிபங் கன்எனும்
ஒருவர் சமயங் களின்நம் பியெனும்
ஒருவர் கர்த்தாதி கர்த்தர் என்பர்
ஒருவர்சா லைஆண் டவரென வழுத்தும்
ஒருவர் ஞானசித் தர்எனப் போற்றும்
ஒருவர் வேதா வெனப்பெயர் விளிக்கும்
ஒருவர் அருட்பெருஞ் சோதிஆண் டவரெனும்
ஒருவர்சன் மார்க்கச் சாலையப் பாஎனும் (2580)
பெருகுரு புகழினோய்! பெருந்தவச் செல்வமே!
திருவுயர் நின்புகழ் இவ்வா றுரைப்பர்
முன்னெரு பிறப்பில் சேரன் ஆள்கைசெய்
தென்னா டதனில் சான்றோர் குலமது
சீலம் சிறந்து செழித்து வளர்ந்தது
நாலாம் பதம்பெறு நன்னிலை கண்டு
நெஞ்சு பொறாத நம்பூ திரியர்
வஞ்சகத் தீங்கினர் மாறுகள் செய்தனர்
ஆடை குறைத்து அவமதித் திட்டனர்
மூடர்கள் என்று மிகவும் தாழ்த்தினர் (2590)
அடிமைக ளாக்கி அழிம்புகள் செய்தனர்
மிடிமையால் மேலோர் மிகவும் தவித்தனர்
மானம் கெடுத்து வசைமொழி செப்பினர்
ஈனமாய்க் கூறி எட்டிநில் லென்றனர்
கர்ப்பிணிப் பெண்ணைக் கட்டிஏர் உழுதனர்
அற்பமாய்ச் சிறுவரை உயிருடன் புதைத்தனர்
தேவ நிலையுயர் சான்றோர் குலத்தினை
கேவலப் படுத்திக் கொடுமைகள் இயற்றினர்
பொறுக்கவே முடியாப் புண்பா டியற்றினர்
ஒறுத்திடல் தமக்கு உரிமையென் றாடினர் (2600)
போடிவா டியெனப் பெண்களைப் பேசினர்
வாடிநம் மாதர்கள் வசைமொழி கேட்டிலார்
கூடிநின் றேகோ கோவென் றழுதனர்
தெருக்களில் நின்று தேங்கிநின் றழுதனர்
பெருகுதுன் பத்தால் புலம்பினர் தாய்க்குலம்
இன்பம் இழந்து ஏரார்சான் றோர்குலம்
துன்பத் தழுந்தித் துயருறு காலம்
வடிவுடை மாலோன் வடிவமெ டுத்து
முடிசூ டும்பெரு மாளெனும் நாமமும்
ஆதிநா ராயணர் எனும்பெயர் தரித்து (2610)
மேதினி மிசைவந் தவதரித் திட்டனம்
இன்னல் களைந்து இனம்தழைத் திடவே
நன்னலம் புரிமழை போலும் திகழ்ந்தனம்
வெம்பிய குலத்தின் வேதனை தீர்த்தனம்
செம்பொருள் கண்ட சீலர்நந் தமக்கு
நம்பூ திரியரும் நாயரும் கூடி
துன்பம் கொடுத்தனர் தொடர்இடர் புரிந்தனர்
அத்தனை யும்வென் றன்புசான் றோர்குலம்
மெத்தமே லேறிட மேன்மைகள் செய்தனம்
செழுந்திருக் குலமாம் சான்றோர் இனமே (2620)
எழுந்துமே டுற்றது இழிந்தனர் ஈனமாய்ப்
பலயிடர் புரிந்த பாவியர் யாவரும்
நலங்கெட் டழிந்தனர் நம்குலம் உயர்ந்தது

இடையில்

நம்குடிப் பிறந்த புல்லுரு விகளை
நம்பூரி திரியர் தம்வழிக் கிழுத்து
நாட்டுப் பட்டம் நாட்டுவோம் என்று
தேட்டுடைத் தெய்வ திருவினை என்றும்
நாடார் என்று மகுடப் பட்டம்
கேடாய்ச் சூட்டினர் கீழ்களஃ தொப்பினர்
காப்புகள் கட்டி ஆப்புகள் வைத்தனர் (2630)
மாப்புகழ்க் குரியோர் மயங்கித் தாழ்ந்தனர்
ஆயினும் சான்றோர் குலமது உயர்ந்தது
மாயிரு ஞாலத் தேமாண் புற்றது.
எதிரிகள் அழிந்தனர் ஈனர்கள் மாய்ந்தனர்
பதிதர்தம் பவத்திமிர் போயொழிந் திட்டது
புதியராய் உரிமைகொண் டிக்குலம் உயர்ந்தது
சதியினர் தாழ்ந்தனர் சான்றோர் சிறந்தனர்
சர்வ யுகபரச் செய்திகள் நிறைந்துள
சர்வா கமம்எனும் கிரந்தமும் தந்தனம்

மற்று

வன்கலி யழித்து வையக மனுக்கு (2640)
ஜென்மசா பல்யம் சீர்பெற அருளி
புதுயுகம் படைத்து பூமியென் றென்றும்
இதமாய் இலங்கிடும் ஏர்பணிக் கென்றே
தவமணிச் செல்வமே! தரணியில் வந்து
அவதரித் திட்டனை அன்பின் உருவே!
அழிவுஒன் றதன்பின் அம்புவி யின்கண்
தழைவுஒன் றுண்டெனத் தானறி தங்கமே!
அன்ன காரியம் ஆகமு கூர்த்தம்
உன்னால் அன்றே ஊன்றியும் ஆனது
ஏகவி யாழ ராசியும் வந்துறும் (2650)
பூகயி லாயம் பொன்னரங் கங்குறும்
நின்உத் தரவது நிகழ்த்திய படியே
பொன்னொளிர் தேவர்கள் பூமியில் வந்து
எல்லா மதத்தும் குலத்தும் உதித்து
பல்லோர் உந்தன் பேர்வரு கைக்காய்
காத்துளர் என்றன் கண்மணிச் செல்வமே!
ஆர்த்துபொய்ஞ் ஞானியர் அவர்தமை ஏய்க்கும்
அயலவர் பொய்யரால் அலைக்கழி கின்றனர்
கயவர்கைப் பட்டுக் கசங்கித் தவித்துளர்
புனர்ஜன னப்பிற விவய தேறி (2660)
நினையெதிர் நோக்கி நிற்கிறா ரந்தோ!
தேவப் பிறப்புறச் சிந்தை விழைந்து
ஆவலாய்க் காத்துளார் ஐயா! புறப்படு!
உத்தர வுப்படி உலகிடைப் பிறந்து
முத்திவித் துக்களாய் மக்கள் யாவரும்
வைகுண் டம்மி(ன்)னும் வரக்கா ணோமென
நைகின் றனரே நாதரே வருகென
எல்லா மதத்தும் குலத்தும் உதித்துப்
பல்லோர் உன்றன் பேர்வரு கைக்காய்
காத்துளர் ஒன்றே குலமும் மதமுமாய் (2670)
சேர்த்ததொருங் கிணைக்கவும் தீர்க்கத் தரிசியர்
செப்பிய யாவுமே நிறைவுற வேண்டி
ஒப்பியே நோக்கிக் காத்துளர் மன்னோ!
கலியுகம் ஐயா யிரத்தொடு முடிந்தது
வலியதாம் புதுயுகம் வகுத்துரை செய்குவீர்!
எனக்கோ வயதறு நூறும் ஆனது
உனக்குச் சம்மதமோ இன்னும்யான் உழல்தல்
என்பணி இனிதே முடிந்தது கண்ணே!
நின்பணி சிறப்பாய்த் தொடங்கி வளர்க!
என்றுபாட் டையர் இதமாய் உரைத்தனர் (2680)
மதிப்பளுச் சுமையை மகன்தலைக் கேற்றி
இதயம் சுமைகுறைந் தின்பம் கொழிதர
பாரகம் போந்த பணிநிறைந் தவராய்
சீரகம் கனிந்து தனிகைவீற் றிருந்தார்
மன்றினி லாடும் மதிமணி குமரர்
சென்றுவா வெனகுரு செப்புமாக் ஞைகொடு
இணங்கிப் பெரியவர் ஆசீர் பதிக்க
வணங்கி விடைபெற் றெழுந்தனர் அம்ம!
தவம்வளர் குகைவிட் டிறங்கிய செம்மல்
சிவகுரு வரதர் சிந்தை நொறுங்குறும் (2690)
தசைதனைப் பிய்த்து வேங்கைகள் மத்தியில்
இசைவுடன் போஎன இழுத்துவிட் டதுபோல்
நகம்பிரி சதையாய் உயிர்பிரி உடலாய்
மிகுதுயர் பெருக மென்மலர் இதயம்
துடித்திடச் செல்வர் சேரும் மலையடி
வெடித்தது இதயம் வெந்துயர் உற்றனர்
குணமணி தனிகையர் குகைதனி லிருப்ப
மணமணி துடித்து வழிநெடும் பாதையில்
மக்கள் கூட்டத் திடையே மதிமணி
தக்கார் ஒதுங்கியும் விலகியும் நடந்தனர் (2700)
பார்த்த முகமெலாம் வேற்று முகங்கள்
வேர்த்துளம் துயருடன் விண்ணவர் நடையிடும்
எங்கே செல்வது? எவரொடு பழகுதல்?
தங்குதல் எங்கே? தாமு(ண்)ணல் எவ்விதம்?
கேட்போர் யாவர்? கிளத்துதல் எவ்வணம்?
வேட்போர் எங்குளர்? வினைசெயல் எவ்வகை?
இவ்வண மாக இளவல் நடந்தனர்
செவ்வண மதுரை சென்றுசேர்ந் தனர்காண்

நீதியர் காண்டம்

10. யோகதனபோத ஏக மேய்ப்புப் பருவம்

அ.இதமுயர் தோன்றலர் முதல் பிரசங்கம்

மதுரை கோவில் மேலக் கோபுர
இதமார் மகிழ மரத்தடி நின்றனர் (2710)
ஆங்காங் கேபிர சங்கம் செய்வோர்
பாங்காய் உரைப்பதும் பரவச முற்றோர்
“சிவசிவா” என்று செப்பி வியப்பதும்
நவமாய் “அல்ஹம்துலில்லா” என்பதும்
வியப்புச் சொற்கள் விளம்புதல் கேட்டனர்
நயமாய்த் தாமுரை நவிலத் தொடங்கினர்
இறைவன் கருணா மூர்த்தி அறுசுவைத்
துறையைப் படைத்தது சுவைகளால் விளையும்
குணங்கள் பேதம் குறித்து விளக்கி
வணம்மிகு உயிரின் மாட்சிகள் கூறி (2720)
திருவுயர் இறைவனைத் தெளிவது கூறி
குருபரர் தம்மொடு கூடித் தெளிவுறல்
மனிதனின் பிறப்பு மாட்சிமை உடைத்து
இனியவன் கடமை இறையடி சார்தல்
தனிச்செயல் அதற்கு சற்குரு வேண்டும்
குருவின் றிச்சிவம் கூடவொண்ணாது
குருவாய் இறையே அவதரித் தருள்வார்
குருவெனப்பலபேர் வேடமிட் டலைவர்
குருபரர் அவரல கொடியபா சாண்டியர்
தன்னுயி ருட்சிவம் தான்தரி சித்தல் (2730)
மன்னுயிர்க் குற்ற மாபெருங் கடமை
தூல உடலிது அழியும் இயல்பது
தூலத் துள்ளே சூக்குமம் காரணம்
வால மகாகா ரணமது செப்புவர்
அழியா நிதியும் ஆர்பெரும் இன்பமும்
வழிகாட் டிடுமெய்ச் சற்குரு அடைமின்
எல்லாம் தெளிவாய் எடுத்துரை பொழிந்தனர்
வல்லபண் டிதர்கள் மற்றுள முதியோர்
நல்லகா லட்சே பம்என மொழிந்து
அவரவர் வழியே ஏகினர் அன்றி (2740)
எவரும் தமக்கிது வேண்டுமென் றெண்ணிலர்
தன்தன் வழியே தானே கினர்காண்
முன்வந் தெவரும் விளக்கம் கேட்டிலர்
ஆரவா ரம்மிகு பெரியதிந் நகரம்
ஆர்வம் இதனில் வாரா தாகலின்
உறவுசெல் வங்கள் உதறிவாழ்ந் திடுமத்
துறவியர் உறையும் இடமிது சார்ந்தனர்
அந்திக் கடைப்பொட் டல்அதன் பேராம்
சந்தித் தவர்பால் சார்ந்துரை யாடினர்
அந்தோ அவர்கள் அற்பர்கள் என்று (2750)
சந்தே கம்மறத் தாம்தெளி வுற்றனர்
குடும்பத் தாரிடைக் கோபமுற் றோடினோன்
இடும்பைக் கடன்ஏய்த் திடுங்கொடு ஈனனும்
உழைக்க மறுக்கும் சோம்பே ரித்தனன்
பிழைக்கச் சுலபம் பிச்சை ஏற்றல்
எனநினைத் திடுமவ் விழிதகை யோனும்
தனதுகுற் றம்மதை மறைத்திட வேண்டி
புனைந்தனன் காவி தாடியும் சடைமுடி
இனையன தீயர்கள் இணைந்ததவ் விடமாம்
கஞ்சாக் குடியர் காமுகர் தீங்கிழை (2760)
அஞ்சாக் கொடியர்கள் அங்குவாழ்ந் திருந்தனர்
கற்பொழுக் கம்மிலாச் கசடர்கள் போதையர்
நற்பண் பில்லா பேதையர் நீசர்கள்
வந்துசார்ந் தோர்தமை வழிகெடுத் திடுபவர்
அறனழி கொடியோர் மறைந்துவாழ் வதற்கு
துறவுடை மறைவிடம் எனத்தேர்ந் தவரவர்
என்றறிந் தண்ணல் இதயத் தோர்ந்து
வென்றிகொள் மெய்ந்நெறி வீணர் கள்அன்னோர்
பொய்ஞ்ஞா னியரெனும் புலையர்கள் தாமும்
மெய்ஞ்ஞா னம்மிதை மேவார் என்றும் (2770)
களிமயக் கில்லா குடும்பத் தோர்வாழ்
எளியநல் லூர்கட் கேகுவம் மற்றும்
காவியு டைதனைச் கண்டஞ் சுவரால்
சேவைசெய் வெண்மைச் சீருடை தரிப்போம்
எனநினைந் தண்ணல் ஏற்கும்வெள் ளாடை
தனநகர் விட்டுச் சிற்றூர் ஏகினர்
வான்மீ கர்தம் சமாதிஸ் தலமாம்
கோன்திருப் புத்தூர் நோக்கி நடந்தனர்

ஆ.அருள் புத்தூரார் திருப்புத்தூ பிரசங்கம்

அன்றிரா நாவினிப் பட்டியில் தங்கி
சென்றுசேர்ந் தனர்காண் திருப்புத் தூரில் (2780)
அறுபத்து மூன்று நாயன்மார் மடத்தில்
மறுவில் மாணிக்கம் மாதவர் தங்கினர்
அற்புத அருட்பிர சங்கம் தொடங்கினர்
கோவில் முகப்பு பள்ளி வாசல்
மேவுமுச் சந்தி பொய்கைப் படித்துறை
தெள்ளிய பேட்டை சந்துகள் புலவர்
பள்ளிக் கூடம் கடைவீ திகளிலும்
வண்டிப் பேட்டை மதரசா மற்றும்
அண்டி மக்கள் அன்புடன் கூடும்
இடங்களில் எல்லாம் எம்பிரான் ஞானத் (2790)
திடமுயர் பிரசங் கம்மது பொழியும்
ஓசையும் ஒலியோன் ஆகிய எங்கோன்
ஓசை ஓங்கிக் குரலெடுத் தினிது
சித்தர் பாடலைத் தேன்கனி இன்குரல்
மெத்தவும் பாடுவர் மக்கள் திரண்டிடும்
ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடு
ஆச்சரியம் மெத்தமெத்த அதுதான் பாரு
சோதியந்த நடுவீடு பீடமாகிச்
சொகுசுபெற வீற்றிருந்தாள் துரைப்பெண் ஆத்தாள்
வீதியந்த ஆறுதெரு அமர்ந்த கன்னி
விளையாடி நின்றதிரு மாளி கண்டாய்
பாதிமதி சூடியே இருந்த சாமி
பத்துவய தாகுமிந்த வாமிதானே
 - கருவூரார் பூஜாவிதி
பாடல் கேட்டுப் பல்லோர் திரள்வர்
கூடும் மக்கள் மத்தியில் எங்கோன்
கற்பூர வாடை கமழும் இனிய
பொற்பூ ரும்வாய் மலர்ந்து பொழியும்
வையகத் தினரே! வையகத்தினரே! (2800)
மெய்யாய் ஒருமொழி விளம்புவன் கேண்மின்
எல்லாம் வல்லான் இறைவன் நம்மைப்
பல்லாற் றானும் பயன்பெறப் படைத்தான்
கண்களைப் படைத்துக் காட்சிகள் படைத்தான்
உண்சுவை நாவுக் குற்ற அறுசுவை
எண்ணில வாகப்படைத்தனன் இனிதே
எண்ணரும் இசைகள் செவிக்கே படைத்தனன்
நாசியைப் படைத்து நல்லெழில் மிக்குள
வாசனை மலர்களைப் படைத்தளித் திட்டான்
எத்தனை கோடி இன்பம் படைத்தான் (2810)
அத்தனை யும்அழி யும்சிற் றின்பம்
ஐம்புலன் நுகர்வுகள் அழிவன அறிவின்
ஆறாம் அறிவால் அனுபவித் திடுமோர்
பேறாம் சுகமே பெரும்பேர் இன்பம்
அதனை அடையவே அம்புவி போந்தோம்
இதனை இயம்பவே இங்குற் றேன்நான்
வயிற்றை வளர்க்கவே வந்ததிக் கல்வி
துயரிலா இன்பமும் தாமனு பவிக்க
இயன்ற தோர் தேகம் இதனுள் உண்டறி
அதுபெறக் கற்றல் மெய்க்கல் விஎனும் (2820)
அதனைத் தரவே யான்வந் துற்றேன்
இவ்வுடல் இயக்கம் உயிரால் எனஅறி
செவ்விய உயிரினைச் சீர்பெற அறிகிலை
அவ்வுயிர் தரிசனம் ஆத்ம தரிசனம்
பிறந்தது முதலாய் இறப்பது வரையும்
சிறப்பொடு துணைசெயும் சீவனை எண்ணியே
உடலில் உயிருள வரையே மதிப்புறும்
உயிரின் காட்சி ஆறாம் அறிவாம்
உயிரைக் காணலே மெய்க்கல் விஎனும்
இறைவன் மனிதன் இதயத் துறைந்துளன் (2830)
இறைவன் இருதய கமலவா சன்எனும்
உள்ளம் கோவில் ஊனுடம் பாலயம்
தெள்ளத் தெளிஜீ வன்சிவ லிங்கம்
இறைவன் உடலினுள் உயிரினுள் இயங்கி
துறைபே ரின்பத் துணையாம் அறிமின்
இறையே குருபர னாகியிங் குறுவர்
முறையாய் ஜீவனை சிவலிங் கந்தனை
காட்டுவர் மெய்ந்நெறி தன்னில் ஆக்குவர்
ஊட்டுவர் வானா ரமுதம் உயிர்க்கு
இருதயம் தன்னில் ஈசன்என் பார்கள் (2840)
பெருநெறி சைவப் பெரியோர் நன்று
இருதய கமல வாசன் அரியென
திருவுயர் வைணவ சான்றோர் சிறப்பாய்
தூய இருதயர் பரமபி தாவென
ஆயர் கிருத்துவர் அறைகுவர் தெளிமின்
கல்ஃபெனும் இதயத் துள்ளார் நூரொளி
அல்லா வென்பர் இஸ்லாம் மக்கள்
மணியாம் பத்மம் இதயத் திறையென
அணிதிகழ் பௌத்தர் அறைகுவர் நன்றே
ஆயிரம் ஆயிரம் நாமம் இறைக்கு (2850)
ஆயினும் இறைபொருள் ஒன்றென அறிமின்
பிறப்பும் ஒன்றே நுகர்வும் ஒன்றே
சிறப்பொவ் வாமை செய்தொழில் திறனாய்
ஆதலி னாலிவ் வகிலத் தோரே!
காதலி னாலிறை கழலடி சார்மின்
நிச்சயம் ஒருநாள் மரணம் வருகும்
அச்செயல் தன்னில் இருவிதம் உண்டு
ஒன்று இறையடி சார்ந்தின் புறுதல்
அன்றி எமனிடம் சேர்துன் புறுதல்
இறைசேர்ந் திடுதல் ஜீவன் பயணம் (2860)
குறையெமன் சேர்ந்தால் ஓயாத் துன்பம்
உள்ளங் கையின் நெல்லிக் கனிபோல்
தெள்ளத் தெளிவாய்த் தெரிந்து கொண்மின்
வாழ்நாள் முடிவில் மெய்ம்மை தெளிந்தோர்
ஆழ்வார் இன்பத் தற்புத மகிழ்வொடு
தெய்வக் காட்சி சிறப்பொடு கண்டு
ஜீவ சக்தி வெளியே றாமல்
தேவ மணமாய் இளமையாய் எழிலாய்
பூக்கூ டைபோல் மென்மையாய்ப் பசுமையாய்
யாக்கையை மண்மகள் ஏற்றுக் காத்திட (2870)
சுவர்க்க உலக வாழ்வினை எய்துதல்
தவமும் விரதம் வேள்வி யோகம்
எல்லாம் இறைவனின் இணையடி சாரவே
கல்லான் கற்றான் வலியன் எளியன்
வறியவன் செல்வன் யாவரும் அந்த
வெறியெமன் சிக்கவே விரைகிறார் அந்தோ!
வாரும் உலகீர்! மெய்வழி நாதன்
சாரும் நெறியுரைத் திடவே வந்துளேன்
என்றிளம் குமரர் எடுத்துரை புகன்று
கன்றின தாள்கள் கடுநடை நடந்து (2880)
நாள்கள் மாதம் வருடம் கழிந்தன
ஆள்கள் சேர்தலும் கலைதலும் ஆயது
ஊரூ ராக ஒன்பது ஆண்டுகள்
பேருரை ஆற்றிய பெருமான் மாட்சியை
சீரினைச் செப்பிடச் சிறியேன் வல்லனோ!
ஆரும் திறனிலார் அம்மவோ! அம்மவோ!

இ.தேடுயர் காலமும் சீடர்கள் சேர்தலும்

சீடரைத் தேடிய செம்மல் திருவுளம்
வாடிய பயிராய் மெலிந்தது அதுநாள்
உம்முசல் மாவெனும் உத்தமி ஒருதாய்
செம்மை நெறியெனச் செப்பவும் கேட்டு (2890)
அம்மையும் கணவரும் அருமைக் குமரரும்
நம்மரும் செல்வரை நண்ணியே தீட்சை
பெற்றனர் பணிந்து போற்றினர் உய்ந்தனர்
உற்றதம் மனையில் ஒருகுடில் அமைத்து
அனுதினம் வணங்கி அருள்பெற் றுய்ந்தனர்
மனுமகன் புகழது பெருகிய தங்கண்
ஆதிநூ ராணியை அல்லா அருட்பெருஞ்
சோதியைக் கல்பினில் சுடர்பெறக் கண்டனர்
(குறிப்பு: நூராணி-ஆதித்தாய்; கல்பு-இருதயம்; அல்லா-இறைவன்)
ஒயாத் தொழுகை ஓங்கும் திசையிலா (2900)
மாயாப் பள்ளி வாசலும் கண்டனர்
மக்காப் பதியும் மதினாப் பதியும்
தக்கார் இதயம் தனில்கண் டதிசயம்
உற்றனர் குர்ஆன் சரிபின் விளக்கம்
பெற்றனர் பெருமகிழ் வுற்றனர் மூவரும்
மாணாக் கர்பலர் வந்துசேர்ந் தனர்காண்
காணாக் கருவூலம் கண்டுமெய் பெற்றனர்
உயிர்ப்பயிர் வளர்ந்த செழுங்கழ னிதனில்
துயர்களைப் பயிரும் தோன்றி வளர்ந்தது
ஆண்டவர் என்று ஐயனைப் போற்றலை (2910)
மாண்டொழி வஞ்சகர் கேட்டெரி வுற்றனர்
ஒழிகெனப் பழிமொழி அட்டையில் எழுதி
வழிசெல் வோரிடம் காட்டி அழிந்தனர்
சலாமது கூறுவர் சென்றதன் பின்னாம்
குலமது கெடவே கோணைப் பழித்தனர்
கல்லும் சாணமும் கடிந்தெறிந் திட்டனர்
சொல்லால் சுட்டனர் தூஷணை செய்தனர்
ஆசிர மத்தில் அண்ணல் திண்ணையில்
மாசறும் தேசிகர் அமர்ந்திருந் தக்கால்
நாற்பது தடிமடைக் கொடியர்கள் கையில் (2920)
வேற்படை அரிவாள் கொண்டவண் போந்தனர்
அண்ணலோ தனியர் அங்குறு நிலைத்தூண்
தன்னை உதைத்தெடுத் தோள்மிசைக் கொண்டு
எதிர்த்தங் கேகிட ஈனர்கள் அஞ்சி
விதிர்விதிர்த் தொருவர்மேல் ஒருவரும் வீழ்ந்து
அவரவர் கொடுவந் தாயுதங் களினால்
தவறா தெல்லாம் காயமுற் றாங்கே
எடுத்தனர் ஓட்டம் காவலர் நிலையம்
அடுத்து ஆண்டவர் அடித்தா ரென்று
முறையிட் டார்கள் மேலதி காரிகள் (2930)
முறையாய் வினவி மெய்யை அறிந்து
குறைமனக் கொடியர் அனைவருக் கும்மே
சிறையப ராதம் விதித்தனர் அன்றே
இதுவும் இங்ஙனம் இவ்வா றிருக்க
மாதர் குலமணி உம்முசல் மாவும்
தீதறு தெய்வபி ரானை வணங்கி
ஆதரித் தல்கேட் டறுதலித் தோசிகள்
மாற்று மதத்தவர் தம்மைத் தெய்வமாய்
ஏற்று வணங்குதல் செய்கின் றனரெனத்
தூற்றினர் தெய்வத் திருமகள் அம்மை (2940)
பிடறி சிலிர்த்து எழுந்திடும் சிங்கமாய்
அடர்ந்து சினந்து அற்புத மாமறை
மேற்கோள் காட்டி விளக்கம் உரைத்து
நாற்கா ரணர்தம் நல்லெழில் மாட்சியை
முதல்வரின் வான்புகழ் தனைமிகச் சிறப்பாய்
விதந்து ஓதினர் வீணர்போ யொழிந்தனர்
அம்மை உத்தமி அருமைத் திருமகள்
செம்மைசால் சம்சு என்னும் சேயிழை
தனக்கும் முரீது தருகவென் றிறைஞ்சினள்
நினக்கிள வயதென நேரியர் மறுத்தனர் (2950)
நேரிழை சம்சு மாதினுக் கந்நாள்
சீருடல் பருத்து தசைப்பிண் டம்மென
செப்பிடு வண்ணம் திகழ்ந்து இருந்தது
ஒப்புயர் வில்லா உத்தமர் கண்டு
உப்பிலாப் பத்தியம் உவப்புடன் வைத்தனர்
மைப்படும் கண்ணியள் மாதிணை ஏற்றனர்
எப்பொழு தும்மந் ரம்ஜபித் திடுதல்
உப்பிலாக் கஞ்சி ஒருபொழு துண்ணல்
இப்படி யாக இருந்தனர் பத்தியம்
செப்பரும் கட்டளை சேயிழை கடைப்பிடி (2960)
அந்நா ளில்தீப் பட்டது மனையில்
அண்ணன் காசீம் வந்துகாப் பாற்றினார்
பதினொரு மாதம் பத்தியம் தொடர்ந்தது

11.அருந்தவக் குருபரர் நிரந்தரப் பிரிவுப் பருவம்

திருப்பரங் கிரியில் தம்திருக் குமரரை
திருத்தவத் திருத்தி சன்னத மேற்றிட
உருப்படுத் தியஅவ் வுத்தமர் தனிகையர்
அருட்பெருங் கருணை அன்புளம் பெருகத்
திருப்புத் தூருக் கினிதெழுந் தருளினர்
குருபரர் வருகையால் குதூகலம் எய்தினர்
உயிர்பிரி உடலில் உயிர்வந் துற்றபோன் (2970)
செயிரொளி இழந்தகண் சீரொளி பெற்றபோன்
காய்ந்ததோர் கழனி கனமழை பெற்றபோன்
ஆய்மதிச் சிந்தையர் அருட்குரு பரர்தனை
கண்டுபூ ரித்துக் கழிபே ருவகையால்
விண்டிட வியலா மகிழ்வுமீ தூர்ந்தனர்
அன்புக் குமரா! அருந்தவச் செல்வமே!
என்பொன் மணியே! இதயக் கனியே!
எக்கா லத்தும் எவரும் ஈடிலா
தக்கமா ணாக்கா! தனிச்சீ தனமே!
பொக்கிஷத் துள்நிறை நவமணிக் குவையே! (2980)
சொக்கே சா!என் தவமணித் தோன்றலே!
எனைப்பிரிந் திங்கண்நீ இனிதுவந் துற்றபின்
நினைத்தொடர் நிகழ்வுகள் முறையாய் எடுத்துச்
செப்புக வென்று திருவுயர் தகைசொல
ஒப்புடன் மகவும் உரைத்திட லானார்
பேரார் தனிகைப் பெரியவர் கேட்கவும்
சீரா ளர்தம் சிந்தை கனிந்து
நடந்த செய்திகள், நயனிலார் மாக்கள்
இடர்செய் திடுதல் ஏந்தல்வென் றிடுதலும்
வரிசையாய்க் குமரர் வகைசொலக் காலம் (2990)
பெரியவர் இடையே குறுக்கிட் டதுகால்
இன்னது நடந்தது என்றுரை செப்பும்
என்னயிஃ திவர்தான் உடனிருந் தனரோ
என்றுநம் குமரர் வியந்திடு வார்கள்
இவ்வா றிருநாள் இயன்றது வசந்தம்
செவ்வியர் தனிகையர் சீர்புதல் வர்பால்
கனிந்த அன்பு கான்றொழு கிடவும்
இனிய என்றன் மெய்வழிக் கண்ணே!
ஒப்பிலா இந்த உயர்நெறி தனக்கு
எப்பொழு தும்இடர் வருதல் இயல்புதான் (3000)
தேவ ரகசியம் தேர்ந்தநற் செல்வமே!
ஜீவத யாபரா! சகமெலாம் உய்ந்திட
மெய்வழி நடத்த மேவினை இனிதே
பொய்க்கலி தன்னைப் பொசுக்கிடல் வேண்டும்
காலச் சக்கரம் முடித்திட வேண்டும்
ஞாலத் தில்புது யுகம்வர வேண்டும்
சீலர்கள் மட்டுமே ஜெகத்தினில் வாழவும்
கோலம் தரித்தெழு கோமகன் நீயே!
ஜீவர்கள்தம்மை திருவுடன் மேய்க்கும்
தேவ மேய்ப்புக் கோவலன் நீயே! (3010)
தவமெய் மாட்சிச் சன்னதம் தாங்கினை
சிவசெங் கோலும் சின்முத் திரையும்
பவப்பளுப் பாரம் தீர்த்திடு பொறுப்பும்
உவப்புடன் ஏற்ற ஒருதனி முதல்வன்நீ!
கலியனின் கொடுங்கோல் கடிதழித் திடுமெய்
வலியன்நீ மகவே வானோர் தலைவா!
சித்தம் செழித்த செல்வநீ வாழிய!
உத்தமா! என்றும் ஓங்கிநீ வாழிய!
தருமம் தழைத்திட அதர்மம் அழிந்திட
பெருநெறி செலுத்திடும் பெருமகன் நீயே! (3020)
ஜென்மசா பல்யமும் சீருயர் வரங்களும்
நின்முனர் சார்ந்த நித்தியர்க்(கு) அருள்செய்
வன்மைமிக் கோங்கும் வானவன் நீயே!
தீர்க்கத் தரிசியர் செப்பிவைத் திட்டவை
ஆர்க்க நிறைவுற ஆக்குவோன் நீயே!
தாயினும் சிறந்த தயாபரா குமரா
வாயினைத் திறவென வழங்கினர் ஓர்சொல்
முழந்தாள் தன்னின் முட்டு வரைநீள்
செழுங்கொழுந் தனைய திருக்கரம் எடுத்து
தன்னரு மகவின் திருநா தொட்டு (3030)
கன்னல் மொழியினால் கனிவொடு வாழ்த்தும்
தொல்வினைக் கூட்டம் துகள்படப் பாய்ந்து
கல்மனம் பிளக்கும் நீண்டுரை வாளிது
மனத்திருள் கடியும் வடிவுவாள் நின்நா!
மறைமலை பிளந்து வகைதரும் வாளிது
எண்ணுறும் நினைவில் ஏறுகூர்ப் பாய்ந்து
சாதிச்சிக் கறுக்கும் செந்நிறக் கூர்வாள்
வகைதொகை யறுக்கும் வடிவுவாள் நின்நா!
இருபுறம் கருக்குடை கூரான சுணையும்
உருவினை யனைத்திலும் ஊடுருவி யோடும் (3040)
பேரான உன்நாப் பேசும் வாளெனும்
இங்ஙன மாக இனிது வாழ்த்திய
தங்கமா மேரு தனிகையர் தாமும்
பொங்கிடும் அன்புடன் புனிதரை நோக்கி
திங்கள் வதனச் செல்வமே! யானென்
மூல வளநா டேகுதும் சீருயர்
சீலனே! நீயும் சிறப்பொடு வாழிய!
என்றவர் வாழ்த்தி ஏகிட லாயினர்
நன்றவர் தம்மை நனிதொடர் நாயகர்
சிந்தை மந்திரச் செல்வர் தனிகையாம் (3050)
தந்தையர் அவர்திரு மேனி நோக்கினர்
விரிவுசிகை அசைவு விளங்கிடும் எழிலைப்
பரிவுடன் நோக்கிப் பதைபதைப் பார்கள்
முன்வளைவு நடையும் பின்கவன வீச்சும்
தன்கவனத் தெண்ணித் தழுதழுப் பார்கள்

வேறு

எத்திக்கு செல்லினும் இணைபிரி யாது
தித்தித்துக் கிடந்த சிறப்பை நினைவார்கள்
இனியிம் மேனியின் எழில்நடை தன்னை
கனிவன்பை எண்ணிக் கலங்கிடு வார்கள்
திடதீர்க்க மாகச் செப்பிடுங் காலம்
அடம்திட முகம்விரல் அசைவை நினைப்பர் (3060)
பலகா லங்களாய்ப் பாதுகாத் திட்ட
நலம்நா டன்பை நினைந்தோரு வார்கள்
சீர்பூத்த சிந்தையர் திருவோங்கு தந்தையர்
மேற்பூத்த மேனியும் பார்பூத்த தூலமும்
பார்ப்பதென் றோவெனப் பதறிடு வார்கள்
ஏர்பூத்த செழுமுகமும் பார்பூத்த செஞ்சொல்
கண்கொண்டு கண்டு காதலிப் பார்கள்
தந்தைமந் திரம்கமழ் மதுரமுர்த ஒலியும்
சுந்தரமும் இன்றோடே தோற்கிறோம் என்று
சிந்தையில் பாய்ந்து தியங்கி மலைப்பார்கள் (3070)
அறியாத நாளில் அறிமூல வழியாய்க
கருவூரு சென்று மறுபிறவி வைத்த
திருவோங்கு வகையின் சீரை நினைப்பார்
தெரியாத பருவம் சூதானம் சொன்ன
குருவாயூ ரழகுக் கோலம் நினைப்பார்கள்
கடுவாய் உறங்கும் காரிருள் வனத்தும்
புள்ளிமான் மேயும் பெருங்கான கத்தும்
நெடுநாளும் காத்ததை நினைந்தோரு வார்கள
நிலையான தவசில் நீயேறு மகனெனத்
தலைதாங்கி நின்ற தகையை நினைவார்கள் (3080)
முச்சகத் தும்உறை முனிதேவர் வரமெலாம்
மிச்சமேல் வைத்த விதத்தை நினைவார்கள்
விண்ணுலா விவரும் விமலநிலை வைத்து
மெய்முத்தி ரிக்க தலைவைத்தது கர்த்தாவே
அத்தா! இன்று அருள்செய் சீரார்
வளர்ஞான காலம் வான்மீகர் நாட்டுப்
புத்தூரில் இந்நாள் பிரிவுவந் திட்டதே
என்றெலாம் எண்ணி ஏந்தல் குருவுடன்
கண்மாய்க் கரையும் காட்டாறு வழியும்
கண்ணீர் பெருக கடந்து சென்று (3090)
தந்தைநின் உடம்பைத் தனிகையர் என்று
விந்தைமிக் கெண்ணினேன் வேதா! விமலா!
நாடிட பணம்மனை பதியெலாம் இழந்து
கூடத் தொடர்ந்தேன் குருவென் னீஸ்வரா!
விதிகதி யெல்லாம் நீரென விழைந்து
பதியுமைத் தொடர்ந்தேன் பல்லாண் டாக
ஏலமா மலையே! எந்தையா ரூரா!
சீலம் நிறைந்த செம்பொருட் செம்மலே
எல்லா வலதும் எல்லாமே னிலையும்
எல்லாத் தவமும் எல்லாக் காலமும் (3100)
எல்லாச் செயலும் எல்லா முனதே
விற்பனக் கற்பகா! உத்தம மேருவே!
நற்பதம் நீயே! நாதாந்த நாதா!
நீவிட்ட படியே நான்காண்ப தல்லால்
நானொன்றும் நினையேன் நற்றவ மேருவே!
கடைக்கண் போட்டெனைச் கைக்கொண் டெழுந்தீர்
அடைக்கல மாயினேன் அன்றுனைக் கண்டேன்
என்றுமே பிரியேன் என்றெண்ணி யிருந்தேன்
சென்றனுன் பிறகே தேசங்க ளெங்கும்
கல்லாத தெல்லாம் கற்பித்தீர் கர்த்தாவே (3110)
எல்லாநற் காட்சிகளும் இணையில்லா மாட்சிகளும்
தில்லை வளநாடும் திருப்பாற் கடல்வரமும்
எல்லா அடக்கொடுக்கும் என்கையில் தந்தீர்கள்
சுற்றிவரு நாளையிலே சுந்தரரே! சோதியரே!
புற்றூரி லிங்கே பிரிந்திடவும் நேர்ந்ததிங்கே
நின்னைப் பிரிந்திருக்க நேர்ந்ததுவே நாதாவே!
என்னைப் பிரிந்தேக இதயமதில் சம்மதமோ!
என்பிறவி நால்வருக்கும் இல்லாத இக்குறையை
என்றனுக்கு வைத்தீரே என்சாமி என்துரையே
கலைமலிந்த நின்நடனக் காட்சியெனக் கில்லையினி (3120)
அலைதனில் ஒர்துரும்பாய் ஆனேனே அத்தாவே!
பழம்குலுங்கும் ஆல்தேடிப் பறவையினம் வாழ்ந்து
பழம்பாடு சாய்ந்ததன்பின் பறவையினம் போவதுபோல்
என்ஜீவன் வாழ்ந்த ஏல மலைவிருட்சம்
தன்சொற் கனிமாறத் தத்தளிக்கு தென்பொறியே
வானுயர்ந்த பாவம் வளர்ந்த கலியுலகில்
தனித்து வழிநடக்கத் தாங்களின்னாள் வைத்திருந்தீர்
உன்காலம் நீயிருந்த(து) உற்றதுணை யில்லாது
அன்னாள்போல் என்காலம் ஆக்கியுற்ற என்தகப்பா
இன்னவா றண்ணல் இதயம் நெகிழ்ந்துருகி (3130)
மன்னவர் நம்சாமி மயங்கித் தவித்தார்கள்

வேறு

காரையூர்ப் பொட்டலில் குருவைப் பிரிந்தனர்
தொழுது வணங்கினர் செல்திசை நோக்கி
அழுதுபு ரண்டனர் அண்ணலை எண்ணி
கள்ளர்கள் களவுசெய் பழிகொலை மேட்டில்
வள்ளலைப் பிரிந்தோ மெனமனம் கலங்கினர்
என்று செம்மலும் ஏங்கிப் புலம்பினர்
குன்று வான்தனி கையர் மறைந்ததும்
கன்றி நெஞ்சம் கதறித் துடித்தனர்
தன்றன் உள்ளம்மி கத்தடு மாறினர் (3140)
ஞாலம் படைத்த நற்றவர்க் கும்உறும்
தூலப் பிரிவு துயர்தரும் அம்மவோ?
கோலம் கொண்ட குரீஸ்வரர் தாமுமே
ஆல மாலப்பட் டகம்மிக நொந்தனர்
மங்கி நெஞ்சம் மயங்கிய மாதவர்
எங்கு செல்வோம் எனுநினை வின்றியே
தங்கம் திருப்புத் தூரினுக் கேகினர்

12.மாணாக்கர் பெருகுறு பருவம்

பின்னர்

எங்கள் நாயகர் பிரான்மலை ஏகினர்
அங்ஙனோர் குகையில் ஆழ்ந்தனர் தவத்தில்
பெண்க ளில்துற வேற்றவோர் பொன்மகள் (3150)
பண்பு டைச்சாமி யாரம்மா உத்தமி
ஒண்ணெழில் ராஜகம் பீர ஊரினள்
தண்ணெழி லார்பி ரான்மலை போந்தனள்
கந்தூ ரியெனும் நேர்த்திக் கடன்செய
வந்த னளந்த மாதுநல் லாளவள்
விந்தை யார்தவ மாற்றும்எம் ஐயரை
அந்த மாதுகண் டதிசயம் கொண்டனள்
தவமி யற்றிடும் தானவர் முன்னிலே
தவசி மாது அமுது படைத்தனள்
சிவப ரம்பொருள் ஏதும றிந்திலர் (3160)
தவநி லையினில் தானமர்ந் திருந்தனர்
ஊர்சென் றாளாவ் வுத்தமி மீண்டுமே
சீர்த வத்தினர் தம்மை நினைந்தனள்
நேரும் அன்புளத் தோடவண் போந்தனள்
பார்க்கில் அவ்வமு தங்ஙணே காணுறும்
இப்படி யோர்தவத் தினரெங் குமிலை
எப்படி யும்மவ ரருள்வேண்டு வமென
அப்பொன் மாது அமர்ந்தனள் முன்னிலே
செப்பு ரும்தியா னத்தில் தானுறும்
நந்த யாபரர் திருக்கண் மலர்ந்தனர் (3170)
விந்தை மாதவள் மெல்லடி வீழ்ந்தனள்
தந்தை யேயெனைத் தங்கள் சீடராய்
இந்த வேளையே ஏற்கவென் றிறைஞ்சினாள்
ஏது மில்பர மார்த்தரெங் கோமகன்
மாது யாவள்எவ் வூரினள் என்றனர்
தீதில் ராஜகம் பீரமென் ஊரது
பாதத் தில்தனை ஏற்றிட வேண்டினள்
அம்மை நின்னையான் ஏற்ப திலைநி(ன்)னுர்
செம்மை ஆண்மக்கள் சீடராய் ஆனபின்
உம்மைப் பெண்ணடி யாளாய் ஏற்பன்யான் (3180)
எம்மான் இங்ஙன் எடுத்துரை செப்பினர்
என்னூர் ராஜகம் பீரம்வந் தருள்க
என்னின் சீடர்கள் ஆண்கள் உள்ளனர்
அன்னோர் சீடராய் ஆவரங் காஸ்ரமம்
தன்னைச் செய்து தவமங் கிருமினென்(று)
அன்ன வள்சொல் வண்ணமங் கேகினர்
வின்ன மில்பர மாத்ம சொருபரும்
சொன்ன வாறுஆண் சீடர்கள் சேர்ந்தனர்
மன்னர்க் காஸ்ரமம் மிக்கங் கியற்றினர்
சுற்று வட்டார ஊரினர் சான்றோர் (3190)
கற்ற ஞானவேட் கையுள மாந்தர்
நற்ற வர்எங்கள் ஞானவ ரோதயர்க்(கு)
உற்ற சீடராய் வந்து உவந்தனர்
அ.வெய்யவர் இடர்தரு நிகழ்ச்சிகள்
நல்லோர் நாடிஞா னம்பெற்(று) இன்புறும்
பல்லோர் வந்து பணிந்தினி தேற்றினர்
கல்லா மூடர்கள் கண்டு பொறாமையால்
எல்லாம் வல்லார்க் கிடர்செய லாயினர்
மையை வைத்து மயக்குகி றாரென்று
பொய்யைப் பாவியர் கூடிப் பரப்பினர்
மைச்சி மிழ்கவர் வோமென மட்டிகள் (3200)
பையல் கள்கூடி யாஸ்ரமம் வந்தனர்
ஐயன் லங்கோடு தன்முடிச் சவிழ்த்திட
மைச்சி மிழ்வீழ் கின்றதென் றெண்ணியே
பொய்ப்பா தகர்கள் பற்றிட வீழ்ந்தனர்
மெய்யர் வைதிட வீணர்போய் மாய்ந்தனர்
கூட்டம் கூடியே கொன்றிட வந்தனர்
வாட்ட மில்பர மேசர்தம் சீடர்கள்
ஈட்டம் வாளுடன் ஈனர்மேல் பாய்ந்திட
ஓட்ட மிக்கெடுத் தோடி யழிந்தனர்
மாத வர்க்கு மகட்கொடை செய்துமே (3210)
சூதாய் ஆலிம்சா வாக்கி அடிமைகொள்
தோதெ டுத்தனர் தோன்றல் வரோதயர்
ஈதெ மக்கிலை என்றும றுத்தனர்
வல்ல வர்க்குவல் லாரெங்கள் வானோரை
வெல்ல வோர்தசைப் பிண்டமாம் மல்லனை
புல்லர் கொண்டுவந் தேஏவி விட்டனர்
மல்லன் உண்மை யுணர்ந்தோடிப் போயினன்
மலைமேல் ஏறி மூரீது தருகெனப்
புலையர் அங்கழைத் தேகினர் கொன்றிட
நிலையு ணர்ந்திட்ட நீதர்ஓர் தோதினால் (3220)
வலையில் வீழ்ந்திடா தேதப்பிப் போந்தனர்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரியச் சந்தவிருத்தம்

நேசர்க் கெளியர் நாதாந்தர்
நீங்கித் திருப்புத் தூரினின்று
வாசப் பெரியார் தனிகையரை
வளநா டேக வழியனுப்பி
மாசில் மணியர் மனம் நொந்து
மீண்டும் புத்தூர் வந்திலரால்
பூசித் திருந்த மெய்யடியார்
பெரிதும் உள்ளம் கலங்கினரே
(3222)

எங்கோ! எங்கே சென்றனரோ
ஏது மறியேம் சோதரரே!
மங்கா ஞான மணிவிளக்கர்
மாதே வர்என் றலைந்தனர்காண்
பொங்கும் அன்பின் திருவுருவர்
போதர் ராஜ கம்பீரத்
திங்கண் உள்ளார் எனஅறிந்து
இதயம் களித்தார் சீடரெலாம்
(3223)

தேடி வந்து திருமுன்னே
சீடர் கதறித் தொழுதழுது
வாடும் பயிராய் மயங்குகிறோம்
மழையாய் வருக குருதேவா!
கூடி மீண்டும் எம்முடனே
குடியாய் இருங்கள் புற்றூரில்
நாடி யிங்கன் விழைந்தார்கள்
நாதர் ஆசீர் பதித்தார்கள்
(3224)

எங்களுடனே இருமென்று
ராஜ கம்பீ ரத்தார்கள்
பொங்கும் அன்பால் விழைந்தார்கள்
போதா யனர்நம் பொற்கோவும்
இங்கும் அங்கும் சிற்சிலநாள்
இருப்போம் கவலேல் என்றுரைத்தார்
தங்கம் அனைய சீடர்குழாம்
தளிர்த்து மகிழ்ந்து ஏற்றார்கள்.
(3225)

மாது சம்சு மணிக்கன்று
வைத்த பத்யம் பதினொன்று
மாதம் முடிந்த தறிந்தெம்மான்
மக்கள் சூழச் சென்றங்கு
தீதில் பத்யம் தான் முறித்து
சீராய் ஆசீர் பதித்தார்கள்
மாது எலும்பும் தோலாக
மெலிந்து இருந்தார் மகிழ்வாக
(3226)

பத்தி யத்தின் திடமென்னும்
பாடல் பாடி குருகொண்டல்
சத்தி தேவி யாய்வருகும்
சம்சு மாதின் உப்பில்லாப்
பத்யம் முறிக்கும் பரந்தாமர்
பாகார் மொழியர் குருகொண்டல்
சித்தம் தெளிந்த சம்சன்னை
சீராய்த் தேகம் தனைக்காக்கும்
(3227)

அத்தன் திருப்புத் தூர்விட்டு
அடைந்தார் ராஜ கம்பீரம்
மெத்த நெஞ்சில் எரிவுற்ற
முஸ்லிம் குலத்து வன்கணர்கள்
எத்திக் கும்மெய் வழிவளரும்
ஏற்றம் கண்டு வயிறெரிந்தார்
சித்தர் தலைவர் இதற்கஞ்சார்
செம்மாந் திருந்தார் தவமேரு
(3228)

கொடுமைக் கெல்லாம் பெருங் கொடுமை
குருவின் ஆஸ்ர மம்மதற்கு
கொடியர் சுற்றி ஓலைகளின்
கற்றை அடுக்கி வெளிபூட்டி
கடுந்தீ மூட்டித் தீய்ந்தொழிந்தார்
குருத்து ரோகக் கும்பலொம்
கொடுந்தீ யணைக்க முயன்றோரை
கொடியர் தடுத்துக் குலமழிந்தார்
(3229)

ஆழ்ந்த தவத்தில் அமர்ந்திருந்த
அண்ணல் மேல்தீ கங்கு விழ
சூழ்ந்த தீயைக் கண்ட பிரான்
சுருக்காய் எழுந்து முகடுவெட்டி
வாழ்ந்தக் காலப் பயிற்சியினால்
வல்லார் வெளியிற் பாய்ந்தனரே
வீழ்ந்த இடமுள் கற்றாழை
விலக்கஇயலாப் புதரம்மா!
(3230)

கண்ணா ளர்தம் சீடரெலாம்
கதறி யழுதார் எம்சாமி
விண்ணாளர் என் னானாரோ
வெந்தீ தன்னில் கருகினரோ?
அண்ண லேநீர் இக்கதியை
அடையத்தானோ வந்தீர்கள்
மண்ணாய்ப் போகும் வன்கொடியர்
வஞ்ச கத்தின் உச்சமிதோ
(3231)

இங்ஙன் சீடர் குழாம்கதற
எங்கள் சாமி முட்புதரில்
அங்கம் முட்க ளால்கிழிந்து
அல்லல் பட்டு துன்புறுங்கால்
அங்கோர் சீடன் இதையறிந்து
அரிவாள் கொண்டு புதர்வெட்டித்
தங்க மேனிக் குருபரரைத்
தனியே வைகைப் புதர்சேர்க்கும்
(3232)

எண்ணெய் தடவி முள்ளகற்றி
எரிபுண்கட்கு மருந்திட்டு
அண்ணல் மேனி வலிகுறைய
ஆன ஔட தம்கொடுத்து
விண்ணின் வேந்தர்க் குபசரித்தார்
மெய்ம் மாணாக்கர் அதுகாலை
எண்ணம் மெலிந்து அதிகாலை
எழுந்து காரைக் காலேகும்.
(3233)

மண்தீண் டாத மலர்ப்பதத்தார்
வருந்தி நடந்தார் தாள்நோக
புண்தீப் பட்ட தெரிந்திடவும்
புலைசொல் நெஞ்சில் எரிவுறவும்
அண்ணல் தஞ்சை கடந்தேகி
ஆங்கோர் ஏரிக் கரையிறங்கும்
எண்ணம் நமக்கோர் ஊர்மக்கள்
இருந்தால் இதுவா ராதென்னும்
(3234)

மன்னர் காரைக் கால்சென்று
வழங்கும் சிலபேர்க் குபதேசம்
பொன்னர் மீண்டும் திருப்புத்தூர்
போந்தார் சீடர் மகிழ்ந்தார்கள்
மன்னும் திருப்புத் தூர்தன்னில்
வாழ்ந்த அச்சா பீஸ்காரன்
தென்னன் பேரை இகழ்ந்தங்கோர்
நோட்டீஸ் அச்சிட் டேபோட்டான்.
(3235)

ஆண்ட வர்க்குச் சூட்டுக்கோல்
என்று குறைகள் அதில்கூறி
ஆண்ட வர்தம் ஆசிரமம்
அதனில் போட்டான் அக்கிரமன்
ஆண்ட வர்தம் சீடரெலாம்
அதுகண் டவன்மேல் ஓர் வழக்கு
வேண்டும் தொடுக்க வென்றதனை
விரைவாய் செயலும் படுத்தினர்காண்
(3236)

மன்றில் வழக்குவி சாரணையில்
வஞ்சன் ஆண்டவர் இவரல்ல
என்றும், ஆண்டவர் எத்தனையோ
இருக்கின் றாரென் றுளறினனே
குன்றாண் டார்நம் குலதெய்வம்
கூறும் ஆண்டார் பலர்,ஆனால்
இன்றாண் டவர்நாம் தானென்று
இனிதே உறுதி யாய்ச்செப்பும்.
(3237)

மேலாம் நீதி மன்றத்தில்
மெய்தான் நிலைக்க வீணனவன்
கோலம் மாற்றிக் கொண்டோடி
கடுகி மறைந்தான் திண்டாடி
சீலர் தெய்வத் திருமுன்னர்
செய்தி செப்பச் சீராளர்
ஆலம் உண்டார் ஆண்டவரென்(று)
அருள்நா மம்ஓங் கப்பெற்றார்.
(3238)

அண்ணல் கைத்துப் பாக்கிக்கு
அரிய உரிமம் பெறுகாலை
வண்ண கலெக்டர் நும்பேர்தான்
வரைக ஆண்டவர் என்றார்காண்
விண்ணாள் வேந்தர்க்(கு) ஆண்டவர் என்(று)
மேல்நா மம்வந் தேறியதே
மண்ணின் மக்கள் உய்கதிக்கு
மந்தி ரச்சொல் ஆண்டவர்கள்
(3239)

நாமம் உரைக்கில் நலம்பெருகும்
நமனார் இடரை வென்றுவிடும்
சேமம் செழித்தல் சாயுச்யம்
சித்திக் கும்மெய் தான்துலங்கும்
ஏமன் இடரைத் தீர்த்தின்பம்
இனிய உலகில் புகுத்தாட்டும்
ஆமன் வித்து ஆண்டவர்கள்
அடிசார்ந் தோர்நற் கதிபெறுவர்.
(3240)

இடர்செய் வோர்கள் எக்காலும்
இருந்தே தீர்வர் எமன்தன்னின்
படரை வெல்லும் பரந்தண்ணல்
பரப்பும் மெய்யாம் வழிதன்னை
தொடரும் எம்கோன் தூய்நெறியில்
சீரோர் சார்ந்து செழிப்புற்றார்
அடமும் திடமும் ஆசானின்
அருளார் கிருபை உய்விக்கும்.
(3241)

திருப்புத் தூரில் நம்பெருமான்
சீடர் குழாமும் பெருகிடவே
அருட்பேர் சபையும் வளர்ந்ததுவே
அற்பர் இடரும் இருந்ததுமெய்ப்
பொருள்சேர் புகழும் பெருகியதே
பொன்னின் அரசர் திருவளர
அருட்பா லிப்பு இயற்றினரே
அணிமெய் வழியும் ஓங்கியதே!
(3242)

13.அதிசயத் திருமணப் பருவம்

தேனார் தெண்ணீர்க் குளந்தன்னில்
சீரார் கமலம் பூத்திருக்க
கான வண்டின் இனம்போந்து
கனிதேன் உண்ணும் அதுபோலும்
வானோர் பெம்மான் திருஞானம்
வழங்கக் கேட்ட மாண்புடையோர்
பூனேர் விழியர் தமைப்பணிந்து
புகழ்மெய்ஞ் ஞானம் பெற்றனரே! (3243)

அறிவார் பதம்மெய் பெறப்போந்த
அன்னோர் தம்முள் பெண்பாலர்
நெறியோங் கினியர் வரலானார்
நீதர் தமக்குத் துணையாக
செறியாச் சாரம் சிறந்தோர்பெண்
திகழ்ந்தால் நலமாம் திருவுள்ளம்
குறியாய் நினைந்து முடிவொன்று
கொண்டார் மீண்டும் துணையேற்க! (3244)

உத்தமிப் பெண் குலதிலகம்
உம்மு சல்மா திருமகளார்
பத்யம் இருந்து பொன்மேனி
பண்பட் டிருந்த பெண்மணியைச்
சக்தி மாதே வியெனவே
தேர்ந்தார் தெய்வம் திருவுளத்தே
சித்தம் கனிந்தார் சிவகொண்டல்
சீடர்க் கிதனைத் தெரிவித்தார். (3245)

அன்னோர் தாமும் இனிதறிந்து
அம்மை உம்மு சல்மாபால்
பொன்னார் மேனித் துணைபணிக்கு
பொருந்தும் பெண்ணைக் கேட்டார்கள்
அன்னை அதுகேட் டருமைமகள்
தன்னைக் காணிக் கையெனவே
இன்னே தருவேன் எனமொழியும்
ஏந்தல் திருவுள் நிறைந்ததுவே (3246)

இந்தச் செய்தி ஊர்பரவ
எதிர்த்தார் உற்ற சுற்றமெலாம்
அந்தப் பெரியோர் மலையாளர்
அவர்க்குக் குரைசிக் குலப்பெண்ணை
எந்த விதத்தும் மணம்கொள்ள
ஏற்கோம் தடுப்போம் எனமொழியும்
இந்தத் தாய்உம் முசல்மா
எழுந்தார் சிம்மம் எனச்சிலிர்த்தே (3247)

தடுத்தால் நிற்காத் திருமணமே
தாரை வார்த்தேன் திருவடிக்கே
அடுத்து வருவோர் வருகவென
அழைத்தேன் வந்தால் அருள்பெறுவீர்
மடுத்தார் செவிவாய் நெஞ்சுகளன்
மாண்பார் துணையாய் வந்தணைவீர்
கடுத்தோர் விலகிச் செல்மின்கள்
கடுகும் கவலேன் அறிமின்கள். (3248)

முன்னா கும்நற் சீடர்குழாம்
முனைந்தே மணத்திற் காம்செயல்கள்
மின்போற் செய்யும் அணியாடை
மிகவும் கொணர்ந்தார் திருமுன்பு
தென்னன் பார்த்தார் பட்டாடை
தவிர்த்தார் வெண்மைத் துகில்தேர்ந்தார்
இன்ன செயல்பார்த் துறவோர்கள்
இதயம் வருந்தி ஏகினரே! (3249)

முறையாய் மணமும் நடந்ததுவே
விண்ணோர் வாழ்த்தி மகிழ்ந்தனரே
உறவோர் உண்ணும் மணவிருந்தை
உற்ற ஏழை கட்கீய்ந்தார்
அறமா(து) அம்மை பனிமதித்தாய்
அகத்தில் மகிழ்ந்தே திகழ்ந்தனர்காண்
அறந்தேர் அன்னை உம்முசல்மா
அணுவும் தயக்கம் கொண்டிலரே! (3250)

அ.இரவு நிகழ்ச்சியும் உறவின் புகழ்ச்சியும்

திருவின் மணமும் நிறைந்தினிதே
திகழும் நாளில் உறவோர்கள்
பெருகும் அன்புஉம் முசல்மா
பேதை ஏழை பிராமணர்க்கு
தருகும் மகளை மகட்கொடையாய்
சிறுமி பாவம் எனமிகவும்
உருகும் விதமாய் பாவனை செய்(து)
ஊரோர் அலரும் தூற்றினரே! (3251)

தளிர்போல் சம்சு எழில்மலரும்
தவச்சீர் அண்ணல் தயைமேரு
ஒளிரும் தம்மை ஏழையென
உளறும் மாந்தர் உளம்திருந்த
களியார் உத்தி தாமெடுத்தார்
கனிபோன்ம் பனிமா மதித்தாய்பால்
ஒளியே! நம்மின் பணமெல்லாம்
ஒருங்கே எண்ணு வோமென்றார். (3252)

மன்னர் உரத்திம் மொழிசெலவும்
மாது நல்லாள் ஒப்பிடவும்
மன்னும் அன்றிர வில்ரூபாய்
மெள்ள இருபத் தேழதனை
பொன்னர் திரும்பத் திரும்பவுமே
மெதுவாய்த் தட்டி எண்ணினரே
தென்னன் பல்லாயி ரமாகச்
செப்பும் கனமாய்ப் பிறர்கேட்க. (3253)

இந்நா யிரத்தை இங்கேவை
இனிதா யிரத்தை அங்கேவை
முந்திப் பானை அடியில்வை
மிகவும் “பத்ரம் பத்ர”மென்றார்
தந்தி ரம்மாய் பிறர்கேட்கத்
தருமர் சொல்ல ஒற்றறிந்தோர்
இந்த மருகர் செல்வந்தர்
என்றே அவர்க்குள் மிகப்புகழும் (3254)

மறுநாட் காலை மருகர்க்கு
வருகும் நிறைய வந்தனங்கள்
உறவோர் புகழ்ந்து வரவேற்கும்
உவந்நே தம்மை அறிமுகம் செய்
நிறைவாய் அன்பை மிகக்காட்டும்
நெருங்கி வந்து உறவாடும்
அறமோர் உருவர் உத்தியினால்
அன்பின் மழையில் நனைந்தனரே! (3255)

ஆ. ஃபிலாஸபரும் பெருமானும்

இங்கிவ் வண்ணம் நிகழ்வுறுங்கால்
எம்மான் மைத்து னன்ஒருவன்
பொங்கும் அழுக்கா றதுபெருக
பெரியோர் தம்மை அவமதிக்க
அங்கோர் பிலாச பர்தம்மை
அழைத்து வந்தான் வாதாட
எங்கோன் அவரைத் தெளிவிக்க
இயற்றும் பாக்கள் அற்புதமே! (3256)

சித்தர் தம்மைக் காட்டிடுவார்
சாக வில்லை எனச்செப்பும்
முத்தர் இவரென மைத்துனனும்
மிகஏ ளனமாய்த் தானுரைத்தான்
அத்தன் அதற்கு மறுமொழியாய்
அற்பு தம்மாய்ப் பாட்டிசைக்கும்
மெத்த அறிவன் பிலாசபரும்
மிகவும் வணங்கி விரைந்தேகும். (3257)

இவ்வா றனந்தம் இகழ்வுகளும்
இடரும் எம்மான் அடைந்தனர்காண்
செவ்வி யர்தாம் கலங்காமல்
செலுத்தும் ஞான ரதமதனை
ஒவ்வா மாந்தர் என்றுமுளார்
உண்மை நெறிக்கு மாறாக
துவ்வா தார்க்கும் துணையவரே
தோன்றல் திருத்தாள் வணங்குதுமே! (3258)

இ.பாய் நெசவு

வந்து சீடர்கு ழாம் பெருக
வரவேற் றிடவும் செலவுக்கும்
எந்த விதத்தும் எவ்விடத்தும்
எவரும் துணைநின் றாரில்லை
விந்தை அரசர் மெய்த் தெய்வம்
விமலர் அகிலம் வலம்வருங்கால்
வந்த வாசி ஊரினிலே
மகிழ்பாய் நெசவும் கற்றிருந்தார். (3259)

தனக்கும் மைத்து னர்தமக்கும்
சீர்பாய் நெசவுத் தறியமைத்து
கனக்கும் பாய்நெய்தே சந்தை
கட்கே கொண்டு விற்றிடுவார்
தனக்கொன் றில்லாத் தகையோர்க்கும்
தரணி மாய்கை விட்டிலதே
தினமும் புதியர் தாமுழைத்து
சீடர் தமக்குக் களையாற்றும். (3260)

பிற்றை நாளில் மாணாக்கர்
பெருமான் பாடு பெரிதுணர்ந்து
கற்றைச் சடையார் கங்காளர்
கனிவாய்ச் சபையை நடத்துதற்கு
உற்ற பொருளும் உவந்தளித்து
உயிரின் பயிரை வளர்ப்பதனை
முற்றும் கற்றார் என்சாமி
முனிவர்க் கரசர் பணிசெய்யும். (3270)

என்னே சாமி திருவுள்ளம்
எவர்தான் இவர்க்கு இணையாவார்
அன்னை போலும் அமுதூட்ட
அண்ணல் மாவும் ஆட்டிடுவார்
அன்னை சம்சுக்(கு) அன்றெடுத்த
அழகுப் பட்டுப் புடவைகளை
மன்னர் விற்றுச் செலவிட்டு
மக்கள் சபையை நடத்தினரே! (3280)
உண்மை உணர்வோர் ஒருபக்கம்
உலுத்தர் கூட்டம் மறுபக்கம்
ஒண்மெய் வழியே சிறந்நோங்க
உலகை உய்விக் கும்பணியை
தண்ணார் அன்பின் தகைசான்றார்
தெய்வப் பெருமான் அயராது
எண்ணம் சற்றும் நெகிழாது
ஏற்றம் பெறவே மிக்குழைக்கும் (3290)

14.யாத்திரைப் பருவம்

அ. ஹஜ், ஜெருசலம் மற்றும் குனைன் யாத்திரை

மணம்மு டிந்ததும் மாதவர் கோமான்
குணம்பெ ரும்நிதி கோதில் நாயகர்
பர்மா சென்று பண்புளோர் சிலர்க்கு
தர்ம நெறியில் சாரச் செய்து
நாற்பத் தைந்து நாட்கள் கழித்து
வேற்க ரத்தார் வந்தார் புற்றூர்
பனிமா மதியாம் பத்தினி யார்க்கு
இனிதே ஹஜ்ஜூக்(கு) உடைகள் கொணர்ந்தார்
அதுகால் அண்ணல் உணர்ந்தார் ஒன்று
முதியோர் தனிகை வள்ளல் பெருமான (3300)
இதமாய் அந்நா டேகினர் என்று
மதிமா மணியும் கதிசேர் குருவும்
திங்கள் ஊரில் சந்தித் திணைந்தனர்
பொங்கும் பரமார் குன்றில் பிரிந்தனர்
மீண்டும் காரையூர் பொட்டலில் மேனியை
யாண்டும் காணா வண்ணம் பிரிந்தனர்
மண்ணகத் துலவினும் வான்தவத் தாழினும்
எண்ணகம் தன்னிலௌளளவும் பிரிந்திலர்
அறுநூ றாண்டுகள் அகிலத் துலவினர்
உறுமெய் தோன்றலர் உத்தமர் தனிகையர் (3310)
பருவுடல் நீத்து பரமார் சீரெழில்
திருவுடல் ஏற்றதை உய்த்து உணர்ந்தனர்
எத்தனை மாபெரும் துறவது ஏற்பினும்
முத்தர்கள் முனிவர்கள் யாவரே ஆயினும்
தூலப் பிரிவினைத் தாங்குதல் எளிதல
ஞாலத் திதுஎன் றும்மே இயல்புகாண்
எல்லாம் உணர்ந்த எம்பிரான் தெய்வம்
பொல்லாப் பிணிதவிர் பெருமான் குருவை
எண்ணினர் பனிமா மதித்தாய் தம்மொடு
நண்ணினர் ஹஜ்ஜூ யாத்திரை மேற்கொள (3320)
அன்னை தனக்கு அழகிய ஹஜ்உடை
முன்னைப் பொருளவர் மிக்கெளி யவர்போல்
எளிய உடையை ஏற்றுக் கொண்டனர்
களிமிக் கூரும் கனியனை மொழியர்
தங்கக் காசுகள் உடையினில் திணித்து
அங்கும் ஏழையர் தோற்றம் காட்டினர்
சென்னை மும்பை வழிசென் றப்பால்
அன்னா(டு) அரபு செல்லும் கப்பலில்
ஏடன் வழியாய் ஜெட்டா சென்றனர்
நாடாம் அரபின் மக்கா சேர்ந்தனர் (3330)
தமிழ்நா டதனைச் சார்ந்தோர் தங்கிடம்
அமரர் தாமும் அன்னையும் தங்கினர்
பாத்திமா என்னும் பண்புடை மாது
மீத்துணை யாகப் பனிமதித் தாய்க்குறும்
இருவரும் சேர்ந்தே எங்கும் சென்றனர்
பெருநற் றுணையாய்ப் பாத்திமா விளங்கினர்.
அங்ஙன் தங்கி அருள்பெறு மூவரும்
பொங்கும் அழகிய கஃபத் துல்லா
தன்னை வலம்வர வாயினர் தினமும்
அன்னை புதிய அனுபவம் கொண்டனர் (3340)
துருக்கி அரசியால் தோன்றிய சுபைதா
பெருக்குடை கிணறு அங்ஙன் உற்றது
இப்ரஹீம் குமரர் இஸ்மயி லால்விளை
ஒப்பிலா 'ஜம்ஜம்' தீர்த்தமாங் குள்ளது
இருநாள் அங்கண் இருந்து அரஃபாத்
திருமை தானம் சென்றனர் தொழுக
அனைவரும் அல்லா தன்னைத் தொழுதனர்
தனையே அல்லா தான்தொழு திட்டனர்
நகரா ஒலித்திட நல்லோர் தொழுதனர்
அகரப் பொருளாம் அல்லா நம்குரு (3350)
அறமோர் திருவுரு அல்லா இறைசூல்
பிறரைப் போலவே தாமும் தொழுதனர்
பெருக்குடைக் கூட்டம் தன்னில் அம்பலம்
திருப்புத் தூரார் தாம்வந் திருந்தனர்
அன்னை பனிமதி அவரைக் கண்டு
தன்னைக் கண்டதாய்த் தாய்தந் தையர்க்கு
செப்பிடுங் கள்எனச் செய்தியும் உரைத்தனர்
ஒப்பினர் அவரும் ஊர்சென் றிஃதை
உரைத்தனர் செய்தி உற்றார் புறம்பாய்
உரைத்தது தவறென உணர்ந்து வருந்தினர் (3360)
பனிமதித் தாயின் பெரிய தந்தையார்
கனிந்தனர் இதயம் கழறிய தனைத்தும்
தவறென மன்னிப் பும்தாம் வேண்டினர்
அவப்பெயர் சொலவிழை ஆலிம் சாக்கள்
உவப்புமிக் குற்றனர் உண்மை தெரிந்தனர்
இவ்வண மாக எந்தையும் தாயும்
செவ்வையாய் யாத்திரை சிறப்புற நிகழ்த்தினர்
தமிழ்நாட் டார்ஓர் சமயப் பொழிவினர்
தமைப்பெரி தாகவும் சுவர்க்கப் பதியினை
நேரில் கண்டது போல்வரு ணித்தார் (3370)
சீரியர் அன்னவன் செப்புதல் வெறுத்தனர்
அன்னவன் எம்மான் அருகினில் போந்து
என்சொற் பொழிவினை யாவரும் வியந்திடத்
தாங்கள் மட்டும் வியக்கா தேனோ
பாங்குடைப் பொழிவில் பிழையெதும் உண்டோ?
என விழைந் திடவும் எம்மான் அவர்பால்
தனதுளம் ஒப்பப் பொய்புகல் கின்றீர்
இதைவெறுக் கின்றது எனதுளம் எனவும்
நிதம்புதி யோர்பால் இரவில் முரீது
'தருக'வென் றிறைஞ்சவும் திருமகன் நம்பிரான் (3380)
அருகரல் லார்க்கு ஏற்புடைத் திதுவல
திருடரும் பயங்கொளித் தீங்குளம் உடையோர்
குருநெறி சாரத் தகையிலர் என்றனர்
அன்னை பனிமதி அம்மை தனித்துற
வின்னமாய் வெஞ்சின வீணர்தம் பெண்டிர்
அன்னை செவியணி அரச வாளியை
கன்னெஞ் சத்தொடு கடுகிப் பறித்தனர்
அன்னையின் வாயில் துணிவைத் தடைத்தனர்
வின்னமில் பாத்திமா விரைந்துவந் தம்மைக்(கு)
வேண்டுவ பணிசெய் தேமிக உதவினர் (3390)
வேண்டினன் கீழ்வீட் டானவன் நகைகளை
மீண்டுஒப் படைத்து மன்னிப்பு வேண்டினன்
ஈண்டிது தெரிந்தால் அரசுகை வெட்டும்
என்றே கெஞ்சினன் அண்ணல்மன் னித்தனர்
அதன்பின் அண்ணல் அம்மை பாத்திமா
மதினா மாநகர் வந்தனர் மாநபி
திருவுயர் சமாதி ஸ்தலமது கண்டனர்
பெருமான் நபியவர் பெற்ற துன்பங்கள்
இவ்வுல குய்ந்திட இடர்ப்படு துயரம்
செவ்வியர் வேதனை சாதித்த சாதனை (3400)
எல்லாம் எண்ணினர் எம்பிரான் உணர்வுறும்

அதுகால்

சுகம்மது தெளிவுறு சுந்தரர் நம்முயர்
மகம்மது நபியுடன் மனமிகக் கலந்தனர்
அறிவும் அன்பதும் ஒருங்கிணைந் துற்றன
நெறியும் நேர்மையும் நேர்ந்திணைந் தோங்கின
வள்ளல் இறைசூல் மாமணி போற்றிட
உள்ளம் உருகிட உடலம் பொடிந்து
தெள்ளத் தெளிந்த செழுநீ ரோடைபோல்
அள்ளும் சிந்தையை அற்புதக் குருமணி
மாலை பொழிந்தனர் வானோர் வாழ்த்தினர் (3410)
சோலைக் கோகிலம் சுகந்தமாய்க் கூவின
கண்டோர் வியந்தனர் கேட்டோர் உருகினர்
மண்டுமா நபிபிரான் மாட்சிகள் போற்றினர்
அங்குறு ஆலயக் காவலர் எம்பிரான்
செங்கரம் பற்றிக் கண்ணீர் பெருக
அறுபத்து நான்கு ஆண்டுகள் இங்குளேன்
மறுவற்ற மாணிக்கம் தங்களைக் கண்டேன்
தங்கமாம் நாயக நபிபிரான் தன்னை
இங்ஙனம் பாடியோர் எவருமில் என்றனர்
பின்னர் மூவரும் பயணம் குணைன்எனும் (3420)
நன்னகர் நோக்கி நன்றுபோய்ச் சேர்ந்தனர்
குருபக வானின் கோதறு அடக்கம்
திருமிகு அறிதுயில் செய்யிடம் சென்றனர்
இதுவரை எங்கும் எவரும் இயற்றிடா
மதிதெளி மாட்சியர் வான்குரு ஸ்தோத்திரம்
குருமணி தன்னைக் கொற்றவர் நினைந்து
மருகியும் உருகியும் பாடி வணங்கினர்
இன்னிலை தன்னில் ஜெருசலேம் ஆலயம்
தன்னையும் கண்டு தரிசித் திவர்ந்தனர்
நாடு திரும்பிட நல்லுளம் ஓர்ந்தனர் (3430)
பாடுகள் ஒன்றல பழகிய பான்மைகட்(கு)
ஈடிலை அக்பர் என்னும் கப்பலில்
தேடரு நிதியமும் தென்றலும் பாத்திமா
மூவரும் போந்தனர் எண்ணிலா வகையில்
மேவுறு போழ்து பனிப்புயல் வீசிடக்
கப்பல் மூழ்கிடு நிலைவந் துற்றது
கப்பல் தலைவன் அவரவர் தெய்வம்
வேண்டி வணங்குமின் மெல்லடி பரவுமின்
ஈண்டுநான் கப்பலோ டிருந்தே மாள்குவன்
என்றுதன் அறைபுக் கிருந்தனன் திடீரென (3440)
நன்றுள் ஒளிர்ந்து நாவாய் பீரங்கி
தன்னை முழக்குமின் என்றனன் முழக்கினர்
பஞ்செனப் பறந்தது பனிக்குவை யாவும்
அஞ்சலி செலுத்தினன் அம்மீ காமன்
எல்லாம் வல்லார் அல்லா காத்தனர்
எல்லாரும் அவர் இணையடி போற்றுமின்
என்றே நவின்றனன் ஈடிலா அல்லா
நன்றே அங்குறல் நண்ணி அறிகிலான்
அண்ணலை அரபு நாட்டினில் கண்டு
பண்பினை உணர்ந்த பம்பாய் வாசி (3450)
கப்பல் பம்பாய் வந்ததும் அண்ணலை
ஒப்புடன் உபசரித் தினிதே போற்றினர்
மாலைகள் சூட்டி ஊர்வலம் செய்து
சீலமாய்ப் போற்றி செலவிடும் சென்னை
தென்னன் பாண்டியர் திருவூர் சேர்ந்தனர்
முன்னம் இகழ்ந்தோர் மிகப்பணிந் தேத்தினர்
கரம்பிடித் தேகண் களில்ஒற்றிக் கொண்டனர்
சிரம்குவித் தேமிக தஸ்லிம் செய்தனர்
சீடர் குழாமது சீரோர் திருமொழி
கேட்டுளம் கிளர்ந்து கனிந்துயிர் செழித்தது (3460)

ஆ. நைமிசாரண்ய வனம் செல்லல்

இங்ஙனம் இங்கே இருந்தநாள் தன்னில்
செங்கம லத்தாள் செல்வ நாயகம்
பனிமதி யரசி பத்தினி யார்க்கு
நனிவில் வித்தை நன்குகற் பித்தனர்
குறிபார்த் தெய்யும் கலைதனைப் பயிற்றினர்
நெறியுயர் அன்னையும் நற்றிறம் சிறந்தனர்
இருமா தங்கள் இங்ஙனம் பயின்றபின்
திருத்தவ மாதவர் தேவியா ருடனே
நைமிசா ரண்ய கானகம் ஏகினர்
விமலை அன்னையும் வில்லுடன் தொடர்ந்தனர் (3470)
மக்கள் வாழ்ஊர் தாண்டிச் செலுங்கால்
தக்கதோர் தோலுடை தாம்புனைந் தனர்காண்
பார்த்தால் கரும்புலி போல்உரு வுற்றனர்
ஆர்த்துக் காந்தக் கோல்கைப் பெற்றனர்
ராமலக் குவணரும் தண்டகா ரண்யம்
நேமமாய்ச் சென்றபோல் நைமிசா ரண்யம்
விருப்பு வெறுப்பிலா மாசிலா மாதவர்
பொருப்பதின் சரிவில் தனிகையர் உரைவணம்
கூர்மமாம் குகைதனைத் தேடியே சென்றனர்
ஆர்வமாய் மலரெலாம் நறுமணம் கமழ (3480)
சீர்பெறு மாதவர் தமைவர வேற்றன
வண்ண மயில்கள் ஆடிக் களித்தன
பண்ணிசை கூட்டின பறவை கிளிகுயில்
தென்றல் தழுவிட இன்கனிப் பாட்டின்
நன்றே வருகென வாழ்த்தினி தேற்றன
மணமகள் மலரணி அணிந்தெழில் கூட்டினள்
விண்மகள் தூறலால் பன்னீர் தெளித்தனள்
தருநிழல் கவிந்து தண்ணிழல் கூட்டி
வருகென அழைக்கவும் மரங்கள் கனியுகும்
பசிதவிர் பாங்கு பழமரம் செய்தன (3490)
அணில்வரி உடும்புகள் முயல்களும் ஓடின
மணியார் புள்ளி மான்கள் உலாவின
எத்தனை எத்தனை எழில்மிகு காட்சிகள்
வித்துநா யகரொடு விமலையை விழைந்தன
ரீங்கா ரம்செய் வண்டின ஓசை
பாங்காய் சுருதியும் கூட்டின கானில்
கிடுகிடு பள்ளத் தொருமலைச் சரிவில்
நடுநிலை தன்னில் நற்குகை கூர்மம்
ஆமை வடிவில் அழகுறத் திகழ்ந்தது
தோமறு குகையது இருவிழி போலும் (3500)
காட்சியும் தந்தது கடும்புலி வாழ்ந்தது
மாட்சியர் அண்ணல் மற்றொரு உத்தியால்
புகையைக் கிளப்பிப் புலிவெளி யேறிட
தகைசால் செம்மல் தந்திரம் செய்தனர்
சென்னியர் அங்கண் திருத்தவத் தாழ்வர்
அன்னை வில்லுடன் காவல்காத் திடுவர்
உலகம் தோற்றிய காலத் திருந்து
நலமிகு நற்றவம் இவர்போல் எவரும்
ஆற்றிய தில்லை அற்புதம் எல்லை
கானக வாழைக் கனிபழுத் திருக்கும் (3510)
தேனகர் பறித்து சிறுபசி தவிர்க்கும்
அன்னவா றோர்நாள் பழம்பறிக் குங்கால்
மன்னு சதுப்புப் புதைசே றதனில்
அண்ணல்கால் வைக்க அதுகீழ் இழுத்தது
விண்ணவள் பனிமதி மேலே இழுத்தனர்
பூதே வியிவர் என்னவர் என்றனள்
சீதே வியெனைச் சேர்ந்தவர் என்றனள்
இருவரும் இழுபறி யாகஇயன்ற கால்
திருவுயர் அண்ணல் காந்த(க்)கோல் ஊன்றி
மேலே எழுந்து மீண்டனர் விபத்தில் (3520)
சாலவும் பின்னர் ஜாக்ரதை யுற்றனர்
வானவர் குருமு ருதியும் அகவல்
ஞானக் குறளொடு முரீதுச் சுருக்கமும்
கூர்மமாம் குகைதனில் இருந்தநாள் இயற்றினர்
ஆர்வமாய் மகிழம் அக்கால் பூத்தது
வந்துஓர் ஆண்டு முடிந்தது என்று
சிந்தை கனிந்து தெளிந்தனர் மனுமகன்
பெருவிரல் அளவின சிறுதேங் காய்களும்
திருவாள் தீர்த்தம் திருக்கரம் ஏந்தி
செந்துவர் வாயுமை மங்கையும் பங்கரும் (3530)
செந்தமிழ் நாடகம் வந்தனர் மகிழ்வொடு
பலஊர் சீடர்கள் பண்ணவர் தம்மை
நலங்கெழு தரிசனம் கண்டுஉய் வுற்றனர்
தீர்த்தம் பெற்றுச் சிந்தை களித்தனர்
ஆர்த்து நூல்கேட்டு அகம்செழிப் புற்றனர்
மக்கா மணிவிளக் கனையரும் மாதவ
மங்கையர்க் கரசியும் வாழ்ந்தனர் இனிதே!

இ.அகம் நெகிழ்ந்து பிரிந்த மகள் வந்து சேரல்

இங்ஙனம் மங்காத் தங்கமார் மாமலை
செங்கோல் செலுத்திச் சீருயர்ந் திருந்தனர்
சென்றகா லத்தினைச் சிறிதே நினைகுவாம் (3540)
நன்று பாட்டையர் நல்லுப தேசம்
நல்கிடப் பெற்று நல்லுற வேற்றகால்
செம்மை முதன்மகள் சீருயர் ஆயிசு
அம்மை குழவியை அருந்தவர் பிரிந்தனர்
மெய்ம்மை நலந்திகழ் மாது சுலேகா
பொய்ம்மை அறியாப் பொன்மகள் தானும்
கணவரைப் பிரிந்தறி யாதபொன் மாதவள்
கணவர்வந் திலரெனக் கண்டதும் ஜன்னியால்
உடல்மிக நலிந்து உணவும் வெறுத்து
நடமிடல் இல்லா தந்நா டேகினர் (3550)
இந்தச் சிறிய இனியநன் மதலை
சொந்தம் எனக்கொண் டாடல் யாரை?
தந்தை துறவுற தாயும் இறந்திட
தந்தையை ஈன்ற பாட்டனும் மாண்டனர்
தந்தையை ஈன்ற பாட்டியே மிஞ்சினர்
அன்னவள் தானும் மகன்மீண் டும்வர
சொன்னபல் வழியும் செய்தும் வந்திலர்
மனமது நொந்தனள் மாண்டும் போயினள்
உறவெனக் கூற ஒருவரு மில்லா
சிறுமத லைக்கு சொந்தம்யா ரும்மிலை (3560)
சிற்றப் பன்மார் அத்தைமார் மனைகளில்
மற்றாங் காங்கே மதலையும் வளர்ந்தது
பாராட்டி டிடவோ பாங்குளோர் இல்லை
சீராட் டிடுதல் செய்வோ ரில்லை
பெண்பா லர்தம் பேச்சுக் களவிலை
பண்பறி யாமல் பலபட இகழ்ந்தனர்
தாயை விழுங்கினள் தந்தையைப் போக்கினள்
ஆய பாட்டனைப் பாட்டியை மடித்தனள்
என்றெலாம் அவர்கள் இகழ்சொல் கேட்டு
குன்றிடும் நெஞ்சம் குமுறும் அழுகையும் (3570)
கொண்டுஅச் செல்வி கலங்கி வளர்ந்தனள்
மண்டும் துன்பத் திற்கோர் அளவிலை
இங்ஙனம் செல்வி இடரிடை வளர்ந்து
மங்கிடும் உள்ளம் மருகிடும் காலம்
மார்க்கப் பட்டிப் பள்ளி வாசலில்
ஆர்க்கும் ரம்சான் பண்டிகை யன்று
ராசகம் பீரம் தனிலிருந் துவந்த
நேசர் ஒருவர் நல்லதோர் தமிழ்நூல்
ஓதும் அதன்பேர் பூரணப் புதையல்
தீதிலா அதனை இயற்றிய சான்றோர் (3580)
காதலன் ஜமாலின் வங்கிஷத் தோனாம்
சீதனர் மார்க்க நாதர் காதிரு
பாட்சா சொன்ன பூரணப் புதையல்
மாட்சியர் பாட்டன் ஷேக்க மாலாம்
குருநா தர்பேர் தனிகை வள்ளலாம்
திருவினர் வைத்தபேர் மார்க்க நாதர்
என்று குறிப்பிட் டிருந்ததந் நூலில்
அண்ணன் அத்தன் பாட்டன் பெயர்கள்
நிண்ணய மாக நூலில் இருக்கவும்
இதனை இயற்றியோர் எங்குளர் என்றும் (3590)
இதமுயர் அண்ணலின் இனியச கோதரர்
பெரியஜ மால்தீன் ராவுத் தர்அவர்
அரிது கேட்கவும் அன்னவர் கூறும்
இப்பெயர் உடையார் ராஜகம் பீரம்
செப்பரும் ஊரில் வாழ்கிறார் சான்றோர்
ஒப்புடன் உடன்வரில் காட்டுதும் என்றனர்
அப்படிப் பெரிய ஜமா(ல்)அவ் வூர்செலும்
அருமை அண்ணனைக் கண்டறிந் தார்ந்து
பெருமை பொங்கத் தம்மவர்க் குரைத்தனர்
எல்லாம் திரண்டு ஏகினர் அவ்வூர் (3600)
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?
அருந்தவச் செல்வியை அண்ணல் கண்டனர்
களிபெறு திருமகள் தந்தையோ டிணைந்தனர்
ஒளிபெறு மனையென உளம்தளிர்த் தோங்கினர்
அத்தனும் செல்வியை அருகில்வைத் தின்புறும்
முத்தெனும் திருமகள் மகிழ்ந்தினி தின்புறும்

அக்காலத்தே

வானோர் நற்றவம் செய்தவ மாளிகை
தானும் கூரையாய் தானிருந் தஃதனால்
வீணர் தீ வைத்து வெம்பழி தீர்த்தனர்
மாணும் மாளிகை ஓடுவேய்ந் தால்நலம் (3610)
என்று சீடர் இனிதுஆ லோசித்து
நன்று மாற்றினர் நாதர் மகிழ்வுற
மேலும் பல்லோர் மகிழ்ந்துப தேசம்கொள்
சீலம் ஓங்கு பெருந்திரு ஆஸ்ரமம்
கோலம் செய்ய குறித்தனர் திட்டமே
காலப் போக்கில் திட்டமா றியதே
அட்டாங் கயோக ஐயன் தரிசனைக்(கு)
இட்டம் ஓங்கும் இனியசீர்ப் பண்பினர்
செட்டி நாட்டினின் றேவருங் காலையில்
துட்டர் கள்வர்கள் தோன்றியி டர்செயும் (3620)
நகரத் தார்பெண்டிர் நல்லணி கலனொடு
இகத்தில் போதுற லாம்அது கண்டுமே
அகம்தீ கொள்ளும் அழிகலிச் சண்டியர்
மிகுதி தொல்லையும் தந்திட முனைந்தனர்
அண்ணல் சாமியார் பாலுப தேசம்கொள்
வண்ணம் ஏகுதும் என்றவர் செப்பவும்
எண்ணம் மாறிய ஈனத் திருடர்கள்
கண்ணாளர் தமைக் களவெதும் செய்திலர்
இன்ன தீங்குகள் ஏற்படல் எண்ணி
மன்னர் ஆஸ்ரமம் மாற்றிப்புத் தூரில் (3630)
கட்டிட எண்ணிக் கனித்துளம் உவந்தனர்
மட்டில் அன்பர்கள் மகிழ்ந்தது செய்தனர்
வின்ன மில்லதோர் அற்புத மாளிகை
வென்னோய் தீர்த்த ருளச்சிறந் தோங்கும்
தவமிருந் திடவும் சீருயர் நிலவறை
சிவம ருள்பொழி யும்பேர் அரங்கமும்
நவம ணிப்பதி மேல்மா டியறை
புவனத் திருப்புத் தூர்சபா மண்டபம்
நன்க மைத்துநம் நாயக ரும்மக்கள்
அன்பொடே சபை ஆர்ந்து நடத்தினர் (3640)
சபை பதிவு பெற்றது

கலிவிருத்தம்

அந்தக் காலத்தி லேயொரு தாசில்தார்
வந்து மாணடி போற்றினர் சீடராய்
முந்து மாசிலா நன்மணி என்னும்பேர்
விந்தை கொண்டனர் மாதவர்ச் சார்ந்துமே
அன்னர் நன்முயற்சி கொண்டு நம்சபை
நன்ன யம்மாய்ப் பதிவுசெய் சீர்பணி
வின்ன மின்றி வியந்தினி தாற்றினர்
தென்னன் சீர்திரு வுள்ளம் மகிழ்ந்ததே
செட்டி நாட்டுப்பெண் சீடர்நல் ஆச்சிமார்
அட்டி யின்றி அருளுப தேசம்கொள் (3650)
மட்டில் பேரன்பு கொண்டவர் பண்புடன்
இட்ட மாய்ப்பணி வோடவர் வேண்டினர்

அன்னையின் வெண்மை ஆடை வண்ண ஆடையானது

தேவ தேவரே யாங்கள்பல் வண்ணமாய்
பூவுல கினிலே ஆடைகள் பூண்டுளோம்
தேவி நாச்சியார் வெள்ளுடை பூண்டுளார்
தேவே வண்ணமாய் மாற்றிட வேண்டினோம் (3653)

அண்ணல் சற்றதை ஆலோ சித்து
விண்மா தேவி பனிமதித் தாய்க்கு
வண்ண ஆடை வழங்கி வாழ்த்தினர்
திண்ணமாய்த் தர சீடர் மகிழ்ந்தனர் (3654)

இன்னும் ராசகம் பீரத்து ஈனர்கள்
வன்னெஞ் சோடவர் மிக்கிடர் செய்தனர்
தென்னன் யாவர்க்கும் சீர்தரு மேன்மையை
வன்மை யாய்எதிர்த் தேகல கம்செயும் (3655)

எங்கள் பெண்களை நன்மணம் கொண்டுமே
எங்கள் ஆலிம்சா வாக இருந்திட்டு
பொங்கு நன்முரி தெங்கட்கு மட்டுமே
இங்க ளியுங்கள் இந்துக்கள் வேண்டிலம் (3666)

தாங்கள் மட்டும் இறைநேசர் என்றுமே
ஈங்கு ளோர்காபிர் என்று இகழ்ந்துமே
பாங்கு யர்மெய்ப் பராபரர்க் கின்னல்கள்
ஈங்கி யற்றினர் பல்வகை யாகவே (3667)

பொய் வழக்குகள் போட்டு இடர்செயும்
வெய்யர் கூடியே தாக்க வந்திடும்
ஐயர் சீடர்கள் வாளோ டார்த்தெழ
மையிருள் நெஞ்ச வீணர்தோற் றோடிடும். (3668)

ஓடிச் சென்று ஒழிந்தஅப் பாவியர்
தேடி வந்தருள் செய்யும் இறைவர்க்கு
நாடித் தீங்குமேல் நல்கிட எண்ணினர்
வாடித் துன்புறும் வானோர் திருவுளம் (3669)

ஈ.மைசூர் செல்ல விழைவு

நேரிசை ஆசிரியப்பா

ஆண்டவர் தவநெறி அதனில் சோதனை
ஈண்டிய தெத்தனை ஏற்றனர் ஓங்குற
கண்ட பொறாமைக் காரர்கள் செய்யிடர்
மண்டின மாதவர் திருவுளம் மயங்குற
எவ்வகை யாங்கு இப்பெரும் ஞானமார்
செவ்வியல் ரதத்தை செலுத்துதல் இயலும்
மன்னரைச் சார்ந்து வாழ்ந்திடில் இத்தகு
இன்னல்கள் வாரா தென்றினி தெண்ணினர்
மைசூர் மன்னர்க்கு மடலும் எழுதினர்
மைசூர் மன்னரும் இணக்கம் வழங்கினர்
அண்ணலும் அன்னை பனிமா மதியொடு (3680)
நண்ணினர் ரயிலில் ஏறினர் இதுகேள்
மாணாக் கர்குழாம் வந்து குவிந்தனர்
வீணர்க் கஞ்சி விமலா சென்றிடேல்
தடையெது வரினும் தயங்கோம் காப்போம்
உடைப்பெரும் ஞான உத்தம தெய்வமே!
பிரியேல் எம்மை பிரிந்தங் கேகிடில்
பெருமெய்ஞ் ஞானம் எங்ஙனம் பெறுவோம்
எளியவர்க் கரிதாய் ஆகுமே அந்தோ!
களிபெறு கனிமொழி கணநா யகரே!
சாகாக் கலையருள் சாயுச்ய நாதரே (3690)
ஏகிடல் வேண்டாம் எம்மோ டிருமென
ஏகச் சத்தம் எல்லோர் அழுகை
கூக்குரல் கேட்டனர் நிலையத் தலைவர்
ஓடோ டிவந்து உத்தமர் முன்னர்
நாடிப் பணிந்து “நற்றவப் பெரியீர்!
சென்றிடேல் இவ்வரும் சீடரை விட்டு
நன்றல பிரிதல் நன்றுநும் பயணச்
சீட்டின் தொகையைத் திருப்பித் தருவேன்
தேட்டுயர் மக்களின் செழுமுகம் காண்மின்”
என்றே பணிவுடன் இயல்தொகை ஈந்தனர் (3700)

15. கற்றளி இயற்றிய பருவம்

குன்றாண் டார்நம் கோமகன் திருவுள்
இரங்கி இறங்கினர் எழிலார் மதுரையில்
பரங்கிளர் பண்ணவர் பண்புடன் தங்கினர்
பிள்ளைகள் கூடிப் பெரிதுளம் ஆய்ந்து
தெள்ளிய ஓரிடம் தேர்ந்து அங்ஙனே
கற்றளி யொன்று கட்டிட எண்ணி
நற்றவர் முன்உரை நவின்றனர் நாயகர்
முற்றிலும் ஒப்புதல் மொழிந்தனர் அவ்விடம்
அருப்புக் கோட்டைப் பாதையின் மேல்பால்
பரப்புடைப் பரன்மே(டு) என்னும் ஓரிடம் (3710)
ஆட்சியர்க் குரியது அருங்கனி சோலையார்
மாட்சி யுடைத்தென மக்கள் உரைத்திட
நம்பிரான் பார்வையிட் டனுமதி நல்கினர்
செம்பொற் சோதியர் சீடர்கள் குழுமினர்
சீணிக் காநெறிச் செல்வர் திருப்பணிக்(கு)
காணிக் கைப்பொன் குவியல் நிறைந்தது
காடுகள் மேடுகள் கல்முள் அகற்றி
ஈடிலாச் சமநிலம் இனிததை ஆக்கினர்
பொறுப்புடைச் சான்றோர் பொன்மணிச் செல்வர்கள்
திருப்பணி யாற்றத் திரண்டுவந் துற்றனர். (3720)
ஒட்டர்கள் உழைப்பவர் தங்கட் கொன்று
திட்டமாய்ச் சமைப்பவர் தங்கட் கொன்று
மக்களும் தாங்களும் தங்குதற் கொன்றென
தக்கதாய் மூன்றுதங் கும்மிடம் அமைத்தனர்
மலைகளில் இருந்துகற் கள்கொண்ர்ந் தார்சிலர்
அலையெனத் திரண்டுபல் லோர்பணி செய்தனர்
தண்ணீர் வண்டிகள் தாம்நீர் கொணர்ந்தனர்
வண்ணத் தாய்க்குல மும்பணி யாற்றினர்
சமையல் நற்பணி பெரியபிள் ளைசெயும்
இமையவர் ஆலய வரவு செலவினை (3730)
வல்லார் சுப்பிர மணியம் செய்தனர்
எல்லா நற்பணி செய்உறங் காப்புலி
நல்லார் குலமான் அனந்தர்முன் நிற்குமால்
நண்ப கல்இரா ஏதும் எண்ணிலர்
அண்ணல் தாம்பொறி யாளர் பணிசெயும்
உலகில் மாந்தர் இறைவனுக் காலயம்
நலமாய் செய்தது நாமும் அறிந்துளோம்
அலகில் சோதியர் தாம்தமக் காலயம்
இலகச் செய்வது இங்ஙண் அதிசயம்
வேடிக் கையும் விளையாட் டாகவும் (3740)
நாடி நற்பணி யாற்றிடும் யாவரும்
பொற்கோ பொன்னரங் கையர் திருக்கரம்
கற்கள் தொட்டு கலையெழில் மிளிர
சீலர் செய்யும் திருவிளங் காலயம்
கோலமார் லிண்டல் கற்களில் அண்ணலார்
“ஆலயம் மாற அரசுமா றும்”என
வால தீர்க்கத் தரிசனம் பதித்திடும்
பகல்மு ழுதும்மே பணிகள் சிறந்திடும்
தகவி ராவினில் கேளிக்கை கள்உறும்
தங்க மேரு தனிக்கரு ணாகரர் (3750)
எங்கள் நாயகர் இன்பவ ரோதேயர்
தங்கள் பொன்னரங் காலய நற்பணி
பொங்கி யேறி வளர்வுற லானதே
அவ்வி டம்கள வாணிகள் வாழிடம்
செவ்வி யர்தம் சீடராம் வேங்கைகள்
தம்மைக் காவல் புரிந்திடத் தாம்செயும்
தம்மருஞ் சீடர்க்கு நீர்விளக் கேற்றிடும்
எதிர்ஜ லத்தில்நீர் ஏறிடு மாறுபோல்
மதிம ணிவலார் மாண்புறு ஆலயம்
எதிர்ப்பை வென்றுமே ஏறியங் கானதே (3760)

ஓர்கால்

காவ லன்போல் உடைதரி கள்வன்
தேவர் நன்கனிச் சோலையுள் புக்கனன்
தெய்வ சீடர் திருடனைப் பற்றியே
தெய்வம் தம்முனர் தான்கொணர்ந் தேவிடும்.
அந்தக் கள்ளனும் உண்மையை ஒப்பினன்
எந்தக் காலமும் இனிதிரு டேன்எனும்
நந்தம் சீடர்கள் நையப் புடைத்திடும்
தந்து பல்கனி போக்கும் அவன் வழி
பெண்க ளுக்கிடர் செய்யுமோர் கள்வனும்
வன்கணன் பற்றி மாதர் முறையிட (3770)
அண்ணல் சீடர்அ வனைக்கைப் பற்றியே
பண்ண வர்முன் பணியவைத் தார்களே
தண்டித் தேயவன் தன்னையே நற்குணம்
கொண்டு ஏகிடச் செய்தனர் போயினன்
அங்கு ழைத்திடும் அன்பணி யாளர்கள்
தங்கள் நன்மையே பேணுமெய் மாதவர்
துங்க மாமணிச் செல்வர்தம் ஆலயம்
பொங்கு மாதவப் பொன்னரங் கம்எனும்
வைய கத்து அகந்தை வளர்ந்துமே
பொய்ய கத்தை விதைத்துவேர் ஊன்றிட (3780)
ஐயர் மெய்வழி ஆண்டவர் மாந்தர்கள்
துய்ய வானெறி தன்னை நிறுவினர்
ஆல யம்புது கற்றளி யானதால்
சீலர்க் கென்றுமே சேதமுறா துறும்
தென்னன் பாண்டியர் சீர்திகழ் ஆலயம்
பொன்ன ரங்கம் எனும்பெய ருற்றது
மன்னு கோளரி மந்திர வாசகர்
முன்பின் இல்லா முதல்வரின் கோவிலாம்
ஆல யத்தின் அதன்முனர் பேரெழில்
சீல மோங்கு திருமாளி கையதும் (3790)
கால காலங் கடந்தவர் தாங்களே
கோல மோங்கக் கனிவொ டியற்றினர்
அவ்வெழில் மாளிகை அஃதிணைச் சார்ந்து
செவ்விய நற்சுவைத் தேன்கனிச் சோலை
மாபலா வாழை மதுரகொய் யாக்கனி
மாதுளை நெல்லி முந்திரி நாவல்
சுவைதாக் கனியும் திராட்சை யாரஞ்சு
நவநறு விலியும் மலைசெவ் வாழை
தேன்கற் பூரம் நேந்திரம் மொந்தன்
வானெலு மிச்சை சாத்துக் கட்டியும் (3800)
பிளம்ஸ் செர்ரி பேரிக் காயும்
எத்தனை கனிகள் எண்ணவொண் ணாச்சுவை
அத்தனின் சோலையில் கனிந்து குலுங்கின
மல்லிகை முல்லை இருவாட்சி யொடு
மெல்லியல் ரோஜா பல்வர் ணங்களும்
செண்பகம் மகிழம் மனோ ரஞ்சிதம்
ஒண்பொழில் துளசி மருமிகு கொழுந்து
மயில்கள் ஆடிடும் கிளிவகை கொஞ்சும்
குயிலும் கூவிடும் குருவிகள் இரையும்
செழுநீ ரோடைத் தேன்சுவை நறுநீர் (3810)
எழில்குளம் மலர்ந்த தாமரை அல்லி
குவளை ஆம்பல் நெய்தல் வள்ளி
சைவலம் கொட்டி ஜில்க்கொடி மலர்கள்
இத்தனை பொதிந்த எழில்மிளிர் சோலையார்
முத்தி நிலைப்பிடச் சித்தரின் ஆலயம்
தென்கிழக் கதனில் பாபநா சமெனும்
இன்சுவைத் தேனார் கிணறொண் றிலங்கும்
அதன்நீர் தானே துவாரபா லகர்க்கு
இதமாய் விளக்கெரித் திடவே இயன்றது
கோலந் திகழும் கோமான் ஐயரின் (3820)
ஆலயத் திருப்பணி நிறைவே றியதும்
பொன்னரங் காலயந் திறந்திடும் பெருவிழா
மன்னு தவப் பெரும் மாமணி இறைவர்
தன்னர சோச்சும் திருவுயர் பெருநாள்
எல்லா மதங்கள் இணங்கி ஒருங்கிணை
பொல்லாப் பிணிதவிர் பொன்னரங் கம்மெனும்
ஆலயம் எங்கணும் அலங்கா ரங்கள்
வாலறி வர்திருக் கோவில் அருள்விழா
பச்சைப் பந்தல் பன்மலர் மாலைகள்
இச்சை கனிந்திட ஏர்தரும் தோரணம் (3830)
எங்கணும் பக்திப் பரவசம் பொங்கும்
அங்கத் தினர்கள் அறவோர் நல்லோர்
கூடி யிருப்ப குரீஸ்வரர் தம்மை
நாடிப் பெரியோர் மாளிகை நண்ணி
கண்ணா ளர்தம் திருக்கழல் பணிந்து
அண்ணல் தம்மை அரும்பண் ணிசைத்து
கரங்கள் ஏந்தி கனிவொடு வேண்டிட
அரங்கர் திருவுள் அங்கீ கரித்து
மென்மலர்ப் பதங்கள் மென்னடை பயின்று
பொன்னரங் காலய முன்றில் போந்தனர் (3840)
பொற்பதி மனுமகன் பொன்னரங் கையர்
அற்புத கரத்தால் அருட்கொடி யேற்றினர்
புட்ப மாரி பொழிந்திடக் கொடியும்
பெட்புற ஏறி நுடங்கி மிளிர்ந்தது
துந்துமி இசைதர எக்காளத் தொனி
சிந்தை யுணர்வை மேலெழச் செய்தன
மங்கள மேளம் மணியொலி முழங்க
சங்குகள் நாதஸ் வரங்கள் இன்னிசை
பொங்கி இசைத்துப் புத்துணர் வூட்ட
செங்க மலத்திரு சீரெழில் இறைவர் (3850)
தங்க மொளிர்திருச் சீர்கரந் தன்னில்
பொன்னின் திறவுகோல் கொண்டே ஆலயம்
தன்னைத் திறந்தனர் தரணியிஃ துய்ய
மலர்மழை பெய்தது வானோர் வாழ்த்தினர்
நலந்திகழ் நற்றவ மாணாக் கர்குழாம்
பாதாம் பருப்புகள் பல்சுவை பண்டம்
நீதர் விழாவில் நிறையச் சொரிந்தனர்
மங்கள மாம்சுப மங்கள மென்று
அங்கண் உற்றபேர் ஆரவா ரித்தனர்
எங்கள் குருமணி இணையில் நாயகர் (3860)
பொங் கெழில் பொற்றாள் படிமிசைப் படிய
அற்புத அழகொளிர் அணிதிகழ் மேடை
பொற்புறு ஜீவசிம் மாசன மேறினர்
ஒவ்வொரு படிக்கும் ஓர்வரி போல
செவ்விய பாசுரம் பொழிந்திடும் எம்மான்
வேலையெழில் சூழ்உலகில் விய்யா நின்ற
வல்லிருளை மாய்க்கவென்று முன்னோர் நாளில்
காலையிளம் சூரியனும் முழுநி லாவுங்
கலந்துமுடிவு கட்டிவிட்ட கார ணத்தால்
மாலையெனும் சாதிகுல இருட்ப ரப்பை
மாய்த்துஒரு பெருங்ஙுலமாய் உதயம் செய்யச்
சாலையென்று வந்ததிந்தப் பொன்ன ரங்கச்
சபையிளுள்ளோ ரெந்நாளும் நீடு வாழ்க
வாழ்த்தும் வரமும் பெருகெழில் பாசுரம்
ஆழ்த்திய தின்பத் தடியவர் தம்மை
ஒருபெரும் தனித்தலை மைப்பதி தெய்வம்
திருவுயர் ஆலயம் சீர்மிகுந் தோங்கிடும்
அருட்பெருஞ் ஜோதி அண்ணலர் மக்கள் (3870)
பெரும்பிணி தீர்ந்துபே ரின்பமிக் குற்றனர்
வையக மாந்தர் மகிழ்வுறு திருநாள்
தைமுதல் நாளென ஆர்ந்துகொண் டாடுவர்
மெய்வழி சந்திரப் பிரபா அனந்தகி
மெய்வழி தனாஅ னந்தகி இருவரும்
தெய்வத் திருமுன் பணிந்து வேண்டியே
தைப்பொங் கல்தனைப் படைத்துப் போற்றினர்
அண்ணல் புகழை அரிது பராவும்
வண்ணம் பொன்னரங் கக்கும் மியது
அன்னை பெரிய நாச்சியார் இயற்றிட (3880)
ஆடவர் பெண்டிர் அழகுசி றார்களும்
பாடல் பாடிக் கும்மி யடித்தனர்
தேவர் உலகின் திருவிளை யாடல்
மாவலார் செய்த மகிழ்வுறு நிகழ்வு

ஆண்டவர்

மரக்கிளை யொன்றினைப் பற்றின போது
கரத்தினில் அரவு சுற்றியங் குற்றது
ஆண்டவர் திருக்கையில் பாம்பெனக் கூவினர்
மாண்டது திருக்கரர் வாளால் அரவது
மூஞ்சுறு மூலையில் பாம்புள தென்று
தாஞ்சொல லாகவும் தாக்கிக் கொன்றனர் (3890)
ஒளிவிளக் கின்சுடர் ஒருபாம் புளதென
தெளிவுறக் கூறவும் சென்றாங் கடித்தனர்
விட்டம் விழுமென மண்ணது செப்பவும்
சட்டம் தவறார் முட்டுக் கொடுத்தனர்.
அஃறிணைப் பொருள்களும் அண்ணலோ டுரைசெயும்
பஃறுளி நதிமணல் எண்ணிலும் புகழினர்

அ. காஷாய தீட்சை அருளல்

மக்கள் யாக்கை
உயிரடங் கியதும் உலகோர் உடலைத்
துயர்மிகு நெருப்பினில் சாய்ப்பமென்று ளறும்
தீய இயல்பினர் வாழ்ந்திடு உலகம்
முத்தன் ஏந்தலார் வள்ளிமுத் தம்மை (3900)
மெத்தவும் அடக்கம் உற்றனர் மேனியைச்
சுற்றம் சுட்டனர் எனும்செய் தியுற
குற்றமும் துன்பமும் என்றறி தெய்வம்
பொதுவாய்க் காவி அணிந்தவர் தம்மை
இதமாய் மண்மறை வியற்றுதல் இயல்பு
இத்தை நன்கோர்ந்து எம்பிரான் புதுகைச்
சித்தராம் நாரதர் மாமலை சார்ந்தனர்
அவ்வூர் மலைதிகழ் அரியநற் குகையில்
செவ்வு காஷாயம் தந்துதவி செயும்
மூலமந் திரமும் சீலர்கட் கருளும் (3910)
வால குருதாள் பணிந்தோர் பெற்றனர்
பல்வகை இடர்கள் யாவும் கடந்து
நல்வித மாக நற்சபை நடந்தது
அன்புடை சான்றோர் அங்கமும் ஆயினர்
தென்புயர் தெய்வம் திருவுளத் தேற்றனர்
களிதவழ் மெய்வழி காசினி யின்மிசை
தெளிந்த நீரோடைபோல் சீர்நடை யுற்றது.

16.அரசு ஆலயம் மேற்கொள் பருவம்

விமானம் ஒருநாள் தாழ்வாய்ப் பறந்தது
தமரர சாங்கம் சண்டைப் பயிற்சிக்(கு)
ராணுவம் அவ்விடம் வந்து பயிற்சி (3920)
தானும் மேற்கொள லானது அதற்கென
அவ்விடம் வாழ்வோர் அகன்றிடல் வேண்டும்
எவ்வித முகாந்திரம் இயம்பிடல் வேண்டாம்
என்று விளம்பரத் தாள்கள் விழுந்தன
குன்றாண் டார்நம் கோமகன் கண்டனர்
ராணுவத் தலைவன் அனுமதி கேட்டு
காணுற லாயினன் கற்றளி தன்னை
போர்த்தள வாடம் பொதிந்து வைத்திட
சீர்மிகு பொருத்தமிக் கட்டடம் என்றனன்
எங்கட் கிதனை ஈந்திடு மென்றனன் (3930)
எங்கள் நாயகர் 'ஆலயம்' என்றனர்
வன்முறை யாலே அபகரித் திடவே
தன்னாட் படையை ஏவினன் அன்னோன்
எங்கணும் சன்னக் கம்பிகள் கட்டி
இங்குறா வண்ணம் உத்திகள் செய்தனர்
அங்குஅத் தலைவன் மாற்றமும் பெற்றான்.

அ. ஹம்மாரே குருநானக்

'சிங்' கெனும் பஞ்சாப் சேர்ஒரு யோக்கியன்
இங்குஅத் தலைமைப் பொறுப்பினை ஏற்றனன்
பணிவாய் வந்தனன் பவ்யமாய்ப் பேசினன்
அணிசல் லாவெனும் ஆடையைத் திருமுன் (3940)
சமர்ப்பணம் செய்து தணிந்துரை யாடி
தமரென உணர்ந்து தெய்வநா யகத்தை
“எங்கள் குரு”வென ஏற்றிப் போற்றினன்
அங்கண் ஆறு குதிரைகள் பூட்டிய
சாரட் வண்டியி லேற்றி ஊர்வலம்
சீராய்ச் செய்து திருவரம் பெற்றனன்
வைசிராய் தமக்கு மிகமுறை யாக
தெய்வ ஆலயம் இதுவென உரைக்கவும்
அன்னவன் வந்து அடக்கம தாக
மன்னவர் பால்பணி வாயெடுத் துரைத்து (3950)
இன்னது பெரும்போர் இதற்குத விடுமென
நன்னய மாக நவின்றனன் நம்கோன்
அரசின் பணிவுரை அதுகேட் டாய்ந்து
அரசை எதிர்த்தல் ஆகா தென்றே
பரசுகம் தரும்நம் பரமனார் எண்ணி
ஆலயம் தன்னை அவருக் கீந்தனர்

ஆ. மதுரையைவிட்டு மாதவர் ஏகல்

சீலரும் தாங்கள் செல்வதெங் கென்று
சாலவும் ஆய்ந்து சார்ந்தனர் கால
காலங் கடந்த கவினுருக் கொண்டல்
கீழ்த்திசை நோக்கிக் கிளம்பினர் தாதை (3960)
வாழ்த்திசைத் தனர்அவ் வானோர் தாமும்
வேந்தன் பட்டியில் வந்து தங்கினர்
ஏந்தல் ஆலயம் இயற்றிடம் தேடினர்

ஊறல் மலைச் சாரல் சார்தல்

ஆய்மதிச் சிந்தையர் ஆய்ந்து தேடி
தாயக மாகிடும் தலமது நாடி
ஊறல் மலைசார் பாப்பநாச் சிவயல்
மாறில் நல்லிடம் எனஅதைத் தேர்ந்து
வாங்கினர் சாமி மனிதர்கா லடிபடா
பாங்குள பூமி பண்டைய பெரியோர்
தீர்க்கத் தரிசனம் செப்பிய தொப்ப (3970)
ஆர்க்கும் அற்புத நன்னிலம் இதுவாம்
மரங்கள் அடர்ந்த மாவனம் சூரியன்
கரங்கள் தீண்டா நிழல்கனிச் சோலை
காசாம் பூமரம் களாகுமிழ் பாலை
பூசார் கொன்றை நொச்சி இச்சிஆல்
புங்கன் புரசு அசோகு புளியும்
அங்ஙண் பூவர சத்தி இண்டு
அத்தி சங்கு மஞ்சனத் தியொடு
சித்தி செங்கத் தாரி துவரை
நெல்லி தங்கர ளிவிழி பூலா (3980)
மல்லிகை அல்லி விராலி தகரை
மெல்லியல் மதன காஞ்சோரி வேலா
எங்கணும் சில்வண் டிரைச்சல் ஓங்கும்
இங்ஙனம் பன்மரம் இலங்கு கானகம்
செழுநீர் ஓடைகள் செறிமலை அருவி
பொழில்வளம் சிறந்து பேரெழில் மிளிரும்
முயல்நரி உடும்பு மான்மரை பூனை
இயல்பல சிறுமிரு கங்கள் உலாவும்
பாம்புகள் பல்வி பூரான் தேள்களும்
தாம்வதி கானில் சாமிவந் திறங்கினர். (3990)

17.பொன்னரங்க ஆலய நிர்மாணப் பருவம்

ஒருமர நிழலில் உத்தமர் அமர்ந்து
திருவிளை யாடல் சொன்மா ரிபெயும்
மற்றொரு மரநிழல் மங்கையர் கூட்டம்
பொற்புடை குழவிகள் பொருந்துமோர் மரநிழல்
நிஜநிதி வளர்சொற் பெருக்கோர் மரநிழல்
பஜனை பாடல் பரிமளிக் கோர்நிழல்
கொடிகுடை விருதுகள் குவிந்துள தோர்நிழல்
வடிவுடை மால்புகழ் மகிழ்ந்துரை ஓர்பால்
வின்னமில் வேந்தர் மெய்வழி தெய்வம்
பொன்னரங் கையர் பொற்றாள் படிந்ததும் (4000)
அவ்வூர்ப் பகுதி கண்டறி யாமழை
செவ்வித் துப்பொழி வுற்றது கண்டனர்
சுற்றுவட் டார ஊரினர் திரண்டு
எற்றும் பத்தெண் வாத்தியம் முழங்க
வந்துநம் இறையை வணங்கி வரம்பெறும்
சொந்தம் நீரெமக் கென்றிறை செப்பிடும்
ஆருயிர்க் குற்ற அருந்துணை எம்பிரான்
சீருயர் சொற்பொழி திருவினர் எங்கோன்
கேட்டார் பிணிக்கும் கிளர்மொழி அமுதர்
பாட்டாள ரெனும் பேருழைப் பாளர் (4010)
அருளமு தூட்டும் அன்னையாய் இலங்கும்
பொருட் காட்சியருள் அத்தனாய்ப் பொருந்தும்
உறுதுணை செய்யும் உற்றநல் நட்பாம்
நறும்பொழில் விளையாட் டயர்ந்திடும் தோழர்
தீராப் பிணிதவிர் சீர்மருத்து வர்அவர்
பேராப் பெரும்பேர் பண்டிதர் பெருவிண்
நவக்கிர கக்கோள் மாற்றிடும் ஆற்றலர்
சிவநிதிக் குவைசேர் செல்வகு பேரர்
எதிர்த்திடு வோர்தமக் கோர்நெஞ் சாணி
மதித்திடு வோர்க்கவர் மணம்கமழ் மல்லிகை (4020)
கோகுலம் காத்திடும் கோபா லர்இவர்
சீர்மெய்க் குலம்வளர் தெய்வத் தனிப்பிரான்
கோளரி வாளர் தோளணை துணைவர்
வாள்முனைக் கூர்மை வன்மையர் தீரர்
நாதஜோ திடரிவர் நன்கிசை கீதர்
வேதமோர் உருவுறு வேதியர் இன்னோர்
காதலர்க் கினியர் கனிந்தவர்க் கெளியவர்
மூதுரை முனிவரர் முத்தமிழ் வித்தகர்
வரந்தரு திருவினர் உரந்தரு நற்றுணை
சீதனம் அளிக்கும் செம்பொருள் வழங்கும் (4030)
வாய்திறந் தாலம் காட்டிடும் மாலிவர்
ஆய்மதிச் சிந்தை அன்புடை நீதர்
இவ்வணம் எம்மான் எழில்திருக் கோலம்
ஒவ்விய மக்கள் தம்மொடுங் கானில்
புதர்கள் களைந்து கல்முள் ளகற்றி
இதமுயர் பண்ணகச் சாலைகள் இயற்றி
தேவா லயமதைச் சீருற அமைக்கும்
ஓவா தறம்புரி உத்தமர் தட்சிணா
மூர்த்தியாய் தென்திசை நோக்கி இலங்கும்
சீர்த்திமிக் கோங்கும் ஜீவசிம் மாசனம் (4040)
வடபால் அமைத்து மெய்யுப தேசம்
திடமாய் அருளும் மேடையும் இட்டனர்
சுற்றுச் சுவர்கள் இருமுழ உயரம்
மற்றும் மூங்கில் தேக்குத் தூண்கள்
தென்னங் கிடுகு வேய்ந்த கோபுரம்
வின்னம் இல்லா வித்தகர் ஆலயம்
பூட்டும் இல்லை கதவும் இல்லை
ஜீவசிம் மாசன மேடையில் இருபுறம்
தேவர்கள் சந்திர சூரியர் சின்னம்
வெண்கலத் தாலியல் இலைவிளக் குகளும் (4050)
ஒண்மணி நாயகர் ஆலயத் திலங்கும்
ஏழெக் காளம் துந்துமி இசைக்கும்
வாழ்பதி சாலையர் ஆலயம் இலங்கும்
ஆலயத் துள்மணல் பரப்பியங் கிலங்கும்
சீலர்கை யெழுத்தால் திகழ்வாக்கியங்கள்
தேவா லயத்துறும் வடகிழக் கதனில்
தேவரின் திருமா ளிகையது துலங்கும்
ஆலய முன்றில் வணக்க மைதானம்
கோலமார் கொடிமரம் அறுபது நான்கடி
தெற்கிலும் மேற்கிலும் சீடர்தம் விடுதிகள் (4060)
அற்புத மாக அமைந்தன எளிமையாய்
முன்னொரு காலம் காகபு சுண்டர்
தன்னருஞ் சீடர் வசிஷ்டர் முதலோர்
இங்ஙண் குடிலில் இனிதிருந் தருளிய
மங்கள ஜீவ மந்திரம் தீர்க்க
தரிசனம் யாவும் மலர்ந்தது இங்ஙணே!
கீழ்த்திசைப் பகுதி வயல்கள் ஆயின
வாழ்த்துயர் திருவய லூரென ஆனது
உத்தி யோங்கும் சித்திகா னகமாய்
முத்தி வழங்கிடும் மாதவர் கோவிலாய் (4070)
பொன்னரங் கம்மெனும் பெருந்தவப் பள்ளியாய்
தன்னெழில் துலங்கும் தற்பரர் திருவூர்
உலகின் புனித இடங்கள் அனைத்தின்
நலமிகு பெயர்க் குரித்தாக இலங்கும்
ஜீவசிம் மாசனத் திருமணி மேடை
தேவதேவேசர் ஏற்றும் திருவிழா
அதியற் புதமாய் அமைந்தது நாடொறும்
புதியர் பெருமான் பொன்னரங் காலயம்
தென்னா டுடைசிவன் திருவருள் நிறைந்து
எந்நாட் டவர்க்கும் இறையெனச் சிறந்து (4080)
அந்நாட் டினுக்கு ஆகும்வித் தெடுத்து
பொன்னாட் டின்மனு மகவெனும் தெய்வம்
ஆதி தேவனின் நீதிச் செங்கோல்
மேதினி யின்மிசை ஓங்கிடு ஆலயம்
சேதமி லாத்தவ சேகரர் திருவிளை
வேதநற் காலம் மறுமலர்ச்சி யுறும்
என்னோ அதிசயம்! என்னோ அதிசயம்!
மன்னா திமன் னர்களும் கூடி
இன்ன காரியம் இயற்றிட இயலா
வண்ணம் மதங்கள் வந்தொருங் கிணைந்தன (4090)
திண்ண மாய்மத இனவெறி தீர்ந்தன
சாதிகள் இணைந்தன நீதியும் நடைபெறும்
பேதமி லாதொரு பெருஞ்சமு தாயம்
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனிலை இவர்க்கு
குன்றாண் டார்திகழ் கோதில் கோவில்
மாதம் இருமுறை வான்கொடி யேற்றம்
தீதறு சீதனத் திருவிழா நிகழ்வுகள்
தையும் பங்குனி வைகா சியொடு
மெய்யர் கார்த்திகை தீபமும் மற்றும் (4100)
புரட்டாசி பௌர்ணமி தன்னில் பிச்சை
திரட்டிடு ஆண்டவர் திருவிழாத் திகழும்
கர்த்தர்கள் முனிவரர் ரிஷிகள் சான்றோர்
சித்தர்கள் எத்தனை எத்தனை யோபேர்
காலம் மொழிகள் தேசம் இனங்கள்
சாலவும் வேறு பட்டவர் பல்லோர்
ஒருமுக மாக ஒருவரைக் குறித்தே
திருமுகத் தீர்க்கத் தரிசனம் வரைந்துளர்
ஒவ்வொரு நிகழ்வும் செயல்அடை யாளம்
நவ்வி படவும் நன்கெடுத் துரைத்து (4110)
இன்ன காலத்து இன்னவை நிகழும்
இன்னா ரிதற்கு இனிதுசெய் திடுமென
வண்ண வண்ணமாய் வகுத்துரை செய்தனர்
திண்ணமாய் அன்னவை சிறந்தோங் கியுள
இங்ஙனமாகவும் அன்று
திருப்புத் தூரில் கலகம் பற்பல
ஒருப்பட்டே செய் ஊரினர் சில்லோர்
அருள்மலர்ப் பாதம் அருஞ்சிரம் சேர்த்து
திருவரம் பெறுதலைத் தவிர்த்துத் தீங்குகள்
இயற்றி இகழ்தல் திறமென எண்ணிடும் (4120)
தெய்வத் திருவுளம் எண்ணினர் உலகை
உய்யவைத் திடநாம் உவந்த காலையில்
கலகம் இடர்கள் செறிந்து வரலால்
உலகில் நாமும் தூல வலசு
வாங்கிடும் நேரம் வந்துறுமோ வென
எண்ணிய ஏந்தல் இன்ப நாயகர்
மண்ணினில் நாமும் இருந்ததற் கெதுவும்
வைத்துப் போதல் வேண்டுமென் றெண்ணினர்
ஆதலி னாலே அண்ணல் பதாம்புயர்
சீதன மாகஇச் செகத்துமக் கட்கெலாம் (4130)
மாதனம் தந்திட மாண்புளம் கருதி
மெய்நிதிப் பெட்டகம் வானமுதக் கடல்
மெய்வழி நூலை இயற்றி யருளினர்
வேதமோர் திருவுறு வாயின தெய்வம்
வேதமி யற்றினர் சேதமிலா நெறி
நலமெலாந் திரண்ட நாயகர் பாடலைப்
புலவர் ஒருவர்பால் தந்தனர் தயவுடன்
பாசுரம் கண்ட பாவலர் “ஐயனே!
ஈசனே இயற்றிய திது”வென வியந்தனர்
கற்பகத் தருவினில் கவினுற மலர்ந்த (4140)
பொற்புகு நறுமலர் பூத்துக் கமழ்ந்தன
நாளிதழ் இடைவெளி தன்னில் எழுதித்
தாளினைச் சுருட்டிக் கூரையில் செருகுவர்
தாய்க்குலத் திலகம் உம்முசல் அம்மை
ஆய்மதிச் சிந்தையர் அருள்நிதி யிவற்றை
சேகரம் செய்தனர் சந்ததிக் கின்று
மாகதி யருளும் வளர்நிதி யாயது
தமிழ்மொழி தோன்றிய ஞான்றின் றுவரை
அமிழ்திது போன்று யாதுமெங் கெவரும்
இயற்றவும் இல்லை இயற்றவும் இயலா (4150)
துயரறு தொன்னெறிச் செல்வம் இதுகாண்
மயர்வறு மதிநலம் வழங்கிடு புதையல்
எத்தனை கோடி இன்பம் பொதிந்த
புத்தமு தம்எம் பொன்னரங் கண்ணல்
சித்தம் கனிந்த செழுஞ்சுவை யமிர்தம்
வித்தகம் பொதிந்த விண்ணகச் செல்வம்
சுத்தாவிச் சித்து முத்தான வித்து
சித்திகள் அருள்கனிச் செல்வக் குவைகள்
பத்தொன் பதுமலர் மெய்வழி நூல்முதல்
ஆதிமெய் உதய பூர்ணவே தாந்தம் (4160)
ஆதியர் மான்மியம் கோடா யிதக்கூர்
வேதியர் திருமெய்ஞ் ஞானக் குரலும்
போதக வான்மதிக் குரலும் தீர்க்கச்
சீதனச் சீருரைச் செல்வம் யாவும்
இயற்றி அருளினர் இறைமனு மகனார்
துயர்தீர் ஜீவ மருந்துப் பெட்டகம்
அயர்வறு அருள்நிதிக் கருவூ லம்இவை
நயநலம் நல்கும் நல்லமு தூற்று.

அ.வள்ளல் சாலையும் கள்ளர் வேலையும்

அருமறை முதல்வர் அம்புயத் தாளினர்
பெருந்துறை மேவிய பெம்மான் தெய்வம் (4170)
பொன்னரங் கியற்றிப் பொற்பதிச் சாலை
தன்னரங் கத்தின் தேடுடை மக்கள்
தாம்புடை சூழ திருவுயர் நீதி
யாம்தவச் செங்கோல் ஓச்சிடு காலம்
மாயையும் தன்செயல் வழிநடத்தினதே
தீயன புரியத் துணிந்தவர் இங்ஙன்
மெய்வழி ஆண்டவர் மதுரையி னின்று
செய்வகை ஓர்ந்து சிறந்து வளர்கால்
கட்டித் தங்கம் கணக்கிலாச் செல்வம்
மட்டில் லாமல் கொணர்ந்துளர் நாமும் (4180)
கொள்ளை யடித்தால் கோடியும் தொகுக்கலாம்
அள்ளிட லாம்பொன் னரங்கம் செல்குவம்
என்றே அற்பர் அழிம்பர்கள் கூடி
குன்றிய நெஞ்சினர் கோல்வாள் வேலொடு
சாலை நோக்கித் தாக்கிடப் போந்தனர்
சாலை ஆண்டவர் தம்மருட் செல்வர்கள்
வீர வேங்கைகள் வெஞ்சமர்க் கஞ்சாத்
தீர மறவர்கள் தீயரை விரட்டினர்
எத்தனை உத்திகள் எடுத்தனர் எம்மான்
நத்தின நாசகர் நடுங்கி ஓடினர் (4190)
காவல் துறையினர் கண்டிது வென்றிட
மேவும் துப்பாக் கிகளும் ஈந்தனர்
இரவு பகலாய் எங்கும் காவல்
அரவுபோல் நஞ்சுடை அற்பர்கள் தோற்றனர்
கொடிய கொள்ளைக் களவுசெய் நினைவினன்
மாறு வேடத்தில் வந்தனன் நம்மவர்
சீறு புலியெனச் சினந்து வினாவிட
“நானிலை நானிலை” என்றே நழுவினன்
வானவர் குமரர் வலிந்தவன் மனைக்கே
சென்றுமெய் தெய்வச் சீரினைச் செப்பினர் (4200)
வென்றிட எண்ணேல் வீண்மனக் கோட்டை
கன்றிச் சிதறிடும் கனவும் கண்டிடேல்
என்றுரை செப்பவும் ஈனன் திருந்தினன்
உளம்உடல் திடமுடை அனந்தா தியர்காண்
களவுசெய் காதகர் கடுகி மறைந்தனர்
எண்ணிலாக் கள்வர் ஈனக் கொள்ளையர்
அண்ணலை எதிர்த்து அழிந்தே போயினர்
ஞானச் செங்கோல் நம்மிறை ஓச்சுதல்
ஈனர் எதிர்ப்பிடை இனிதே வளர்ந்தது.
இன்னவா றெம்மான் ஆள்கைசெய் தருணம் (4210)
தென்னன் பாண்டியர் சீடர்திருக் குழாம்
ஆண்டவர் சந்நிதி அண்மிநின் றரிய
வேண்டுகோள் ஒன்றை வைத்தனர் அரிதாய்
பொங்குமா தவத்தின் பெருந்தவக் குன்றே
தங்கள் திருமணிச் சூலினின் றருளால்
தங்கச் சந்ததி எங்கட் களித்திடும்
தங்கள் திருவுளம் இரங்கி யருள்க
என்றே வேண்டினர் எம்பிரான் ஓர்ந்து
என்வய தளவென ஏனிது வேண்டல்
என்றே மறுத்தும் ஏற்றிலர் சீடர்கள் (4220)
அன்னை பனிமதி நாச்சியார் தங்கையை
பொன்னரங் கையர் கடிமணம் கொண்டனர்

ஆ. திருக்குமரர்கள் உதயம்

நன்னய மாக நாரீமணி யவர்
இன்கனிச் செல்வர் மூவரை ஈன்றனர்
அன்னவர் தாமே அருண்மணி யுகவான்,
பொன்னெழில் பொற்பகர் சாலை வர்க்கவான்
வர்ணோ தயமெனும் மங்கையர் திலகம்
சொர்ணவிக் கிரகம் ஆதி மகம்மா
ஆழிசூழ் உலகில் அற்புதர் மூவரும்
நாழியோர் மேனி கடிகையோர் வண்ணம் (4230)
வளர்பிறை யாக வளர்வு எய்தினர்
தளிர்தரு வாகிப் பூத்துக் குலுங்கினர்
சிவகுரு மேனியின் திருவெலாம் திரண்ட
தவத்திரு சயிலத் தனிச்சீ தனங்கள்
உலகியல் கல்வி உற்றிலர் பற்றிலர்
நலந்திகழ் ஞான நற்கலை பயின்றனர்
மும்மணிச் செல்வமும் வீணை பிடிலும்
செம்மையாய் ஹார்மோ னியமதும் கற்றனர்
கவிமழை பொழியும் கருவிலே திருவினர்
தவநெறி பயின்று தனித்தே வளர்ந்தனர் (4240)
இப்புவி மாந்தரின் இயல்புகள் இன்றி
செப்பரு நற்குணச் செல்வராய் வளர்ந்தனர்
ஆடவர் இருவரும் அருங்கலை சிலம்பம்
ஈடிலா வகையில் இனிதுகற் றார்ந்தனர்
தேடு கூடகத் தேன்கடல் குளித்து
ஆடல் கனிந்த கோகுலர் கட்டம்
நாடகப் பாங்கினில் நற்றவர் களிக்க
அதிசய மென்று அனைவரும் மகிழ
மதிமுக மணிகள் மூவரும் நடித்திடும்
பண்கள் கனிவொடு பாடுகோ குலங்கள் (4250)
எண்ணம் ஈர்த்திடும் எழில்மிகு வடிவினர்
குயில்கூ வியதோ வீணை இழைந்ததோ
எனவியப் புறவே இனிது ஆடினர்
கவிக்குயில் ஆதி மகம்மா அம்மையை
தவத்திருச் செல்வியைத் தமக்கை பேரற்கு
அருள்மிகு நீதியர் அற்புத மணம்செயும்
இனியொரு சிற்பி இயற்றிட வியலா
தனித்திரு மேனியர் யுகவான் அவர்கள்
மோகனப் புன்னகை சுந்நர வடிவினர்
ஆகமக் கலையின் ஆதீனர் என்னும் (4260)
பூகயி லாயப் பொன்மணிச் செல்வர்
வீர சைவம் விளைந்தநல் யோக்கியர்
தீரர் மெய்வழி புலந்திர அனந்தர்
தம்மின் திருமகள் தனைமணம் கொண்டனர்
குணநிதி என்னும் கோமகன் திருவார்
வணமிகு வர்க்க வான்தவ மணியர்
கவிமழை பொழியும் கற்பகச் செல்வர்
புவியினில் மீண்டுறும் வடலூர் வள்ளல்
அன்னவர் தமக்கு அறந்திகழ் வைணவ
மன்னும் ஆச்சார ஜனக ஜனாவெனும் (4670)
அனந்தர் திருமகள் அற்புதச் செல்வியை
இனமுயர் இன்பமார் எழில்மணம் செய்தனர்.
ஆர்கடல் பொங்கி அலைசெறிந் தோங்க
சீரும் சிறப்பாய் சபைவளர் வுற்றது
நாற்கவி ராஜர் நலம்புல மைத்திறம்
பாற்கடல் பொங்கிப் பரிமளித் ததுபோன்ம்
வேதவே தாந்தம் மான்மியம் வாக்கியம்
போதமார் நறுமணப் பூக்கள் மலர்ந்தன
ஆடலங் கண்ணி அற்புதச் சொற்கனி
தேடு கூடகம் சீருயர் கவிமழை (4680)
மதங்கள் அனைத்தும் வந்துசங் கமித்திட
இதங்கொள் சாதிகள் இணைந்து களித்தன

இ.சமயங்களை ஒருங்கிணைத்தல்

அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்

சைவர்

ஆதியில் தோன்றி இந்த
அகிலமுற் றுய்யச் செய்த
நீதிமெய்ந் நெறியே சைவம்
நிர்மல சுகிர்தர் என்னும்
வேதியர் அவத ரித்து
மெய்வழி தந்துய் விக்கும்
சீதனம் சைவ மென்று
செகத்தினோர் அறிமின் நன்றே
(4681)

வைணவம்

நவவழி நெறிமா றாமல்
நன்னிலை சார்ந்தோர் தாமே
தவநெறி பற்றும் சீலர்
ஸ்ரீவை ணவர்என் போர்கள்
அவமிருத்யு இலாது ஆசான்
அன்பினால் பேரின் பம்கொள்
பவக்கடல் கடந்தோர் தம்மைப்
பகரும்வை ணவமென் றோதும்
(4682)

புத்தர்

சித்தம்மும் மலத்தால் சற்றும்
சீரழி யாமல் காத்து
அத்தனின் அருட்தாள் போற்றி
அகம் பிரம்ம நிர்வாணத்துள்
சுத்தமாய் ஓங்க நிற்கும்
சுயம்ப்ர காசம் பெற்றோர்
புத்தரென் றறவோர் போற்றும்
புனிதர்காண் அறிமின் நெஞ்சே!
(4683)

கிறித்தவர்

கிறியெனும் தவத்தின் மிக்கார்
கிறித்தவ ரானார் தெய்வ
நெறிபிறழாத மாந்தர்
நித்திய ஜீவன் கைக்கொள்
அறிவறி ஆன்றோர் அன்னோர்
அன்புநன் வழியி லுய்வர்
குறிகுணா நிதியர் தேவ
குருபதம் பற்றும் நல்லோர்
(4284)

முகம்மதியர்

அகம்மது தெளிந்து தங்கள்
ஆருயிர் உய்ந்து ஆசான்
முகம்மது மாறாச் சிந்தை
முத்திவீ டெய்தும் மாந்தர்
சகம்மதில் சாயுச் யத்தை
சற்குரு மதியால் உற்றார்
முகம்மதி யர்என் றான்றோர்
மொழிந்தனர் அறிமின் மன்னோ!
(4285)

மதம் ஒன்றே

மதமெலாம் ஒன்றே செப்பும்
மார்க்கமும் நோக்கம் ஒன்றே
இதமிலாக் கூற்றை வென்று
இன்பமெய் நெறியில் வாழ்தல்
இதனின்மெய் யறியா மாந்தர்
ஈனனாம் கூற்றன் கையாள்
மதமது சம்ம தம்மாய்
மாறமெய் வழியே தேர்மின்
(4286)

இறைவன் எத்தனை

எத்தனை இறைவன் அந்த
ஈசனின் மதந்தான் என்ன?
செத்தழி மாந்தர் தாங்கள்
சேர்மதம் சிறந்த தென்பர்
வித்தக தெய்வம் ஒன்றே
விளம்பிடும் எண்ணில் நாமம்
ஒத்திருந் தனைவர் ஓர்ந்து
உயர்ந்தமெய் வழியில் நில்லும்
(4287)

மதங்களின் நோக்கம்

மறலிகை தீண்டா மைதான்
மதங்களின் நோக்கம் ஒன்றாம்
அறநெறி நின்று ஜீவன்
அரன்பதம் சார்தல் நன்றே
மறுவிலா முழும திநன்
மார்க்கராம் நாதர் சாலை
அறந்திகழ் ஆண்ட வர்தம்
அருள்நிழல் சார்ந்தோர் உய்யும்
(4288)

சாதி ஒன்றே

ஆதியே தோன்றி இந்த
அகிலமெய்ம் மதங்க ளெல்லாம்
நீதியாய் ஒன்றென் றாக்கி
நீள்புவி மாந்தர் தங்கள்
சாதியொன் றெனஸ் தாபித்து
சர்வமந்த் ரங்கள் வேதம்
பேதங்கள் தெளிய வைத்த
பொன்னடி போற்றி! போற்றி!
(4289)

பிறப்பு ஒன்றே

பிறப்பொக்கும் உயிர்கள் தம்முள்
பேதங்கள் இலையென் றாக்கி
சிறப்புமெய் வழியும் சார்ந்து
தெய்வநற் பாக்கி யங்கள்
நிரப்பவும் பெறச்செய் ஐயன்
நிர்மலப் பதங்கள் போற்றி
அறமொரு உருவாம் சாலை
ஆண்டவர் தாள்கள் போற்றி
(4290)

சாதிகளின் கர்த்தரும் சாதிகளும்
ஐயர்

தூய்மை யென்றதன் இலக்காய்
தொடர்ந்திறை சார்ந்து நிற்போர்
வாய்மைநல் லொழுக்கம் வேதம்
முறைமையாய் பயில்தல் மற்றோர்
ஆய்மதிச் சிந்தை கூர்ந்து
அனுதினம் ஓதச் செய்யும்
ஆயர்தாம் ஐயர் என்று
அன்றுயர் நாமம் கொண்டார்
(4291)

ஐயங்கார்

தெய்வநற் றாளைச் சார்ந்து
திருமிகப் பெற்ற சான்றோர்
வையகத் தறமார் நெஞ்சர்
மனம்மொழி மெய்யால் தூயர்
ஐம்புலன் அடக்கி யாவும்
அற்புத நீர்மை சார்ந்தோர்
ஐயங்கார் என்ற நாமம்
அழைத்திடப் பெற்றார் நன்றே
(4292)

அந்தணர்

ஞானமார் அக்னி தண்ணில்
நலந்திகழ் சான்றோர் வாழ்வில்
வானவ ராகி என்றும்
வாழ்வாங்கு வாழும் மாந்தர்
தானிறைக் கணுக்க மாகித்
தன்மைமிக் கோங்கும் நல்லார்
தான்அந்த ணர்கள் என்று
சாற்றுவர் சான்றோர் காணே.
(4293)

பார்ப்பார்

தூலத்துள் சூக்மம் கார்ணம்
சீர்மகா காரணம் தன்னை
வாலமெய் குருசா யுச்யர்
மாணடி தரிசித் தோர்கள்
சீலகா யத்திரி தேவி
திருதரி சனைபெற் றோர்கள்
ஞாலத்தில் பார்ப்பார் என்று
நவிலவும் பெறுவர் மன்னோ
(4294)

வேளாளர்

வேளெனும் இறைவர்க் காளாய்
வியனுல குணவு ஈயும்
தாளாண்மை மிக்க சான்றோர்
தயவொரு வடிவாய் நிற்போர்
தோளுயர் கங்கை மைந்தர்
தூயநற் பண்பா ளர்கள்
வேளாளர் என்ற நாமம்
விளம்பிடப் பெற்றார் அம்மே.
(4295)

குடியானவர்

தெய்வநற் குடியாய் ஆகி
தாரணிக் குணவுண் டாக்கி
வையகம் காக்கும் நல்ல
வளப்பணி புரியு மக்கள்
உய்வகை தன்னி லென்றும்
உவப்புடன் வாழும் நல்லோர்
மெய்க்குடி யானார் என்று
மெய்யர்கள் வழங்கும் அன்றே
(4296)

கவுண்டர்

இறைவனின் கருணை தன்னை
இனிதுண்டோர் கவுண்டர் என்னும்
துறையினர் உழவு செய்து
தரணியைக் காக்கும் தூயர்
நிறைமன நல்லோர் கேட்போர்
நெஞ்சகம் உவப்ப ஈவர்
குறையிலா குணத்தோர் என்று
குவலயம் உரைக்கும் மன்னோ
(4297)

கைக்கோளர்

விண்ணிடை விளங்கும் கோள்கள்
மாந்தரின் உயிருள் சார்ந்து
மண்ணவர் வாழ்வின் செய்கை
வளம் நலம் செய்தல் தன்னை
பண்ணகர் இறையை நாடிப்
பற்றிகைக் கொண்ட பேரை
நண்ணுகைக் கோளர் என்று
நவிலுவலர் நல்லோர் தாமே.
(4298)

முதலியார்

இறைவனின் அருளைத் தங்கள்
இதயமா ளிகையுள் கொண்டு
உறைபவர் முதல்கைக் கொண்ட
உத்தமர் முதலி யென்பார்
நிறைமுதல் என்றும் குன்றா
நீர்மையர் இன்னோர் என்றும்
மறைமுதல் மக்க ளென்று
மண்ணகத் துற்றார் நன்றே!
(4299)

நாடர்

தெய்வமெய் முதலை நாடித்
திருவருள் பெற்ற மாந்தர்
உய்வகை யறிந்த மாண்பர்
உத்தமர் உள்ளம் என்றும்
ஐவகை உயர்வும் நன்றே
ஆக்கிடும் திறனார் நல்லோர்
செய்வகை நாடும் நாடர்
செப்பினர் உலகோர் அம்மே.
(4300)

சான்றோர் (சாணார்)

ஆன்றமெய் இறைவர் தாளில்
அடைக்கலம் பெற்று எந்த
ஞான்றுமே இறைநாட் டத்தில்
நன்றுள மாந்தர் தம்மைச்
சான்றோர்கள் என்று இந்தச்
சகத்துளோர் போற்றும் தாயும்
ஈன்றநற் பொழுதும் போற்றும்
இனியவர் காண்மின் அம்ம!
(4301)

கார்கார்த்தார்

கார்க்கும்தீ கைக்கொண் டார்நம்
கடவுளைக் கண்டு பொற்றாள்
காத்திடும் நல்லோர் தம்மை
கார்கார்த்தார் என்று செப்பும்
ஆர்த்திடும் புலன்கள் ஐந்தும்
அடங்கிடக் காத்துக் கொள்வார்
சீர்த்திமிக் குடையர் இன்னோர்
தெய்வப்பற் றுடையோர் அம்ம!
(4302)

குரும்பர் (குரு+உம்பர்)

குருவென வருவார் உம்பர்
கோனவர் திருவை யார்ந்து
திருமிகப் பெற்ற நல்லோர்
ஜீவனும் உய்யக் கொண்டோர்
அருள்மிகக் கொண்ட செல்வர்
அறநெறி நிற்கும் சீரோர்
குருஉம்பர் என்னும் நாமம்
கொண்டவர் அறிமின் நன்றே!
(4303)

நாயகர்

தாயகம் இறைதாள் என்று
தன்னைத்தான் அறிந்த மாந்தர்
தூயநல் இதயத் தோன்றல்
துறையறி வாய்மை யாளர்
நாயகர் இறையை நத்தி
நற்செயல் புரியும் மக்கள்
நாயகர் என்று நாமம்
நவிலவும் பெற்றார் அம்ம!
(4304)

கண்ணாளர்

கண்ணகம் இன்றேல் இந்தக்
காசினி இருளாம் அன்றோ
கண்மணி போலும் ஜீவன்
கடவுளைக் கண்டு ஆர்ந்தோர்
கண்ணாளர் என்று நன்று
கழறினர் சான்றோர் நன்றே
விண்மணி இறைவர்க் கின்னோர்
மிக்குயர் பக்தர் காணே!
(4305)

ஆச்சாரி

ஆச்சாரம் மிக்க சீரோர்
ஆண் குரு ஜீவன் உய்ய
பேச்சாரும் பொருண்மை கண்ட
பெரியவர் குருபீ டம்மாய்
வாய்ச்சாரும் மாண்பி னோர்கள்
மெய்தெய்வ வழியில் நின்று
மூச்சாரும் மூமீன் என்று
மொழிகுவர் மூத்தோ ரம்மே!
(4306)

உடையவர்

மடைதிற வெள்ளம் போலும்
மெய்யிறை அருள்பொங் கும்கால்
உடையவ ராகி ஏற்று
உம்பராய் விளங்கும் சான்றோர்
உடையவர் என்று நாமம்
உற்றுமிக் கோங்கும் தூய
நடையது உடைய நீதர்
நாடது உரைக்கும் அம்ம!
(4307)

செட்டியார்

செய்கையில் நன்மை தீமை
செறிந்துநல் இயல்பு என்றும்
மெய்கையில் கொண்ட தெய்வ
மெல்லடி சார்ந்து நின்று
உய்வகை கொண்டு செட்டு
உவந்தவர் செட்டி யாராம்
துய்யநற் பண்பு மிக்க
தூயவர் உலகில் மன்னோ!
(4308)

தேவாங்கர்

மூவுல கிற்கும் உற்ற
முதல்வரின் மென்றாள் சார்ந்து
தேவரின் அங்க மாகத்
திகழ்பவர் தேவாங் கர்காண்
சேவையில் தங்கம் அங்கம்
செய்பணி சிறக்க வாழ்வோர்
பூவுல கினில் தேவாங்கர்
புகலுவர் அன்னோர் நாமம்.
(4309)

கோமுட்டி

கோவெனும் இறைவர் தாளில்
குறைவிலா அன்பி னோடு
சேவைகொண் டிடவே முட்டிச்
சேர்வர்கோ முட்டி யென்பார்
தாழ்வில ராகி எந்தச்
சமயத்தும் வாழ்வில் ஓங்கும்
கோவலர் கோமுட் டியாம்
குறைவறு நாமம் பெற்றார்
(4310)

இரெட்டியார்

நரனெனப் பிறந்து தெய்வ
நற்பதம் நத்தி நின்று
அரன்திரு மணிச்சூல் தன்னில்
அருள்மறு பிறப்புற் றார்ந்து
சுரனெனத் தேவ னாகி
சிறந்தவர் இரட்டி யாராம்
பரசுகம் எய்தச் சான்ற
பண்பினோர் இன்னா ரம்ம.
(4311)

தேவர்

உலகிடை நரனாய்த் தோன்றி
உத்தமர் இறைதாள் சார்ந்து
நலமிகு மனுவாய் மாற்றம்
நண்ணிநன் மணிச்சூல் ஏகி
வலமிகு புனல்ஜென் மத்தால்
வானவன் தேவ னென்று
உலகெலாம் போற்ற வாழும்
உத்தமர் தேவர் என்போர்
(4312)

கள்ளர்

வெள்ளமாம் அருளே பொங்கு
வேதநா யகர்தாள் நண்ணி
உள்ளமே கவர்கள் வர்க்கு
உற்றவ ரானோர் கள்வர்
தெள்ளிய அன்பர் வீரத்
திறனுடை மாண்பர் இன்னோர்
கள்ளரென் றுலகோர் செப்பக்
கனிவுடன் வாழ்வர் மன்னோ.
(4313)

மறவார்

இறவாத வரமிங் கீயும்
இறைவரின் கருணை மாந்தி
மறவாது வணங்கு மாண்பர்
மறவா ரென்றுரைப்பர் நல்லோர்
அறவாழி அண்ணல் தொண்டில்
அணுவும் பின்னடையா நெஞ்சர்
நறவாரும் இனிய நல்லோர்
நற்பதம் மறவார் அம்மே!
(4314)

சேர்வை

இறைவரின் திருத்தாள் தன்னில்
இதயத்தைச் சார வைத்து
மறைப்பிலா தூய அன்பால்
வணங்கிடு மாண்பர் தம்மை
இறைவன்தாள் சேர்வை பக்தி
எழிலுற நிற்பார் சொர்க்கம்
நிறைவுறச் சேர்வார் என்னும்
நற்பெயர் பெற்றார் அம்மா!
(4315)

பண்டாரம்

பண்டைவே தியராம் தெய்வம்
பரமனார் அமுதர் தன்னைக்
கண்டினி தேத்தி அன்னோர்
கருணையை உயிரில் தேக்கிக்
கொண்டவர் பண்டா ரம்காண்
கோதிலாக் கருவூலம் தான்
விண்டவர் உள்ளம் கோவில்
விளங்கிடும் பூசைக் குற்றோர்.
(4316)

ஆண்டி

வேண்டுநல் வரங்கள் ஈய்ந்து
வையகம் காக்கும் தெய்வம்
ஆண்டனர் ஜீவன் தன்னை
ஆண்டியென் றவரின் நாமம்
ஆண்டியால் ஆளப் பெற்றோர்
ஆண்டியென் றுற்றார் நாமம்
ஈண்டுல கினிலே பக்தி
இனிதுஆண் டிருப்பர் அம்மே!
(4317)

பண்டிதர்

உடற்பிணி தவிர்ப்போர் தூல
பண்டிதர் என்ற நாமம்
உடலியக் கிடும் உயிர்க்கு
உறுபிணி தீர்ப்போர் ஜீவ
திடமுளார் பண்டி தர்ஆம்
செப்புவர் பிறவி யென்னும்
அடர்பிணி தவிர்ப்போர் ஞான
பண்டிதர் அறிமின் அம்ம.
(4318)

புலவர்

நலமெலாம் திரண்ட எம்மான்
நல்லுயிர்க் கின்பம் நல்கும்
வலமுயர் மதிநா வேந்தர்
மணிமொழி அரசர் நங்கோன்
புலமைமிக் கோங்கும் சீரார்
புலவராம் அவர்சார்ந் தோர்கள்
புலவரென் றுரைக்க லாகும்
புனிதமெய்க் குலத்தோர் காணே
(4319)

ராஜபுத்திரர்

தேவதே வேசர் ராஜர்
திருமணி வயிற்றிற் றோன்றி
தேவரின் புத்ரர் என்று
தரணியில் அழைக்கப் பெற்றார்
சாவிலா வரங்கள் ஈயும்
சாயுச்ய ராஜர் ஈன்ற
மாவலார் ராஜ புத்ரர்
வம்சமென் றுரைப்பர் மன்னோ!
(4320)

தேசிகர்

வாசியாம் பரியி லேறி
வலம்வரும் தேவ கோமான்
நாசியின் வெளிமூச் சோடா
நற்றவர் நாதாந் தர்தாம்
தேசிகர் எனுநா மத்தாற்
தெரிவரும் தெய்வம் தன்னின்
ஆசிபெற் றவரைத் தாமே
அன்பின்தே சிகர்என் றோதும்!
(4321)

நம்பூதரி

செம்பொருள் உருவ மேற்று
திருவுயர் குருவாய்ப் போந்து
நம்பியோர் சாயுச்யம் கொள்
நற்றவர் மலர்த்தாள் சென்னி
உம்பர்கள் சூடி ஓங்கும்
உயர்திரு மாட்சி யாலே
நம்பூத ரிப்போர் என்ற
நற்குல மாந்தர் தாமே.
(4322)

கண்டியர்

மண்டினி ஞாலத் துற்ற
மனுக்குல மாந்த ரென்னும்
தொண்டர்கள் இதயப் பூவில்
துலங்கிடும் தெய்வக் காட்சி
கண்டவர் தாமே இங்ஙண்
கண்டியர் என்போர் ஆவர்
அண்டர்நா யகர்தாள் போற்றும்
அன்புகண் டியர்காண் மன்னோ
(4323)

சக்கிலி

அருந்ததி உதித்த வம்சம்
அரியமெய்க் குருபால் பற்று
பொருந்திடும் குற்றம் அற்றோர்
பிரிதெதும் எண்ணா மாந்தர்
அருந்தவ நல்லோர் தாமே
அன்பர்சக் கிலியர் என்பர்
குருதய வார்ந்து யர்ந்தோர்
குலம்சக் கிலியர் என்பர்
(4324)

ஒட்டர்

தெய்வநற் குருகொண் டல்பால்
சிந்தைமிக் கொட்டி வாழ்ந்து
அருந்தவ மாற்றும் நல்லார்
ஆசான்பால் ஒட்டு மிக்கார்
பெருந்திரு நாட்டி னுக்கு
போய்வரு ஒட்டர் என்பர்
குருதய வேற்கும் நேசர்
குலமது ஒட்டர் என்பார்.
(4325)

கோனார்

ஐயறி நுகர்வில் ஆழ்ந்து
ஆறறி வறியா மாந்தர்
மெய்யறிந் துய்ய வேண்டி
மேய்ப்பராய் விளங்கும் கோனார்
ஐயனின் அருட்தாள் சார்ந்து
அருளமு தருந்தி மெய்ப்பால்
துய்ப்பர்சீர் பண்பில் கோனார்
திருவுயர் குலத்தோர் அம்மா.
(4326)

கருணீகர்

கருணைமெய்க் கரத்தில் ஆகி
கதிபெறு நல்லோர் தாமே
குருபரர் தயவால் ஞானம்
கொண்டுநல் அமரர் ஆகும்
அருட்பெருஞ் சோதி அண்ணல்
அகிலத்துற் றாள்கை செய்தார்
கருணீகர் குலமாய் ஓங்கும்
கண்ணியர் அவர்தாம் அம்மே!
(4327)

வாணிகர்

வாழ்வில்மெய் வரவாய் ஆக்கி
மற்றுபொய் செலவு ளாக்கி
தாழ்விலா வணிகம் செய்யும்
தயவருள் தெய்வம் சார்ந்தோர்
ஆழ்வர்ஆண் டவர்கள் தாளில்
அன்புடன் நாட்டம் கொள்வர்
வாழ்வாங்கு வாழும் மாந்தர்
வாணிகர் என்பர் மன்னோ.
(4328)

கிராமணி

பராபரர் பொற்றாள் பற்றி
பக்திமிக் கொண்டுய் வோரைக்
கிராமணி யென்று ஆன்றோர்
கிளத்துவர் நாமம் அன்றோ
சிரோமகு டம்என் றையன்
திருவடி பூண்போர் என்றும்
விராட்சொரு பர்தாள் போற்றி
விளங்குவர் உலகில் அம்மா!
(4329)

பிள்ளை

பெற்றவள் பிள்ளை தன்னைப்
பேணுமாப் போலே தெய்வம்
நற்றவச் சேய்கள் தம்மின்
நல்லுயிர் காத்து உய்க்கும்
கற்றவர் விழுங்கும் அந்தக்
கற்பகர் பிள்ளை யாவோர்
எற்றுவர் கூற்றை வெல்வர்
இருமைமுத் தாபம் தீர்வர்.
(4330)

யாதவர்

மாதவம் செய்து மாந்தர்
மறலிகை தீண்டா வண்ணம்
யாதவத் தோங்கும் தெய்வ
இணைமலர்த் தாள்கள் சார்ந்தோர்
சேதமில் ஞானச் செல்வம்
சேகரம் கொண்டு உய்வர்
யாதவ குலத்தோர் என்று
இயம்புவர் உலகத் தோரே.
(4331)

அம்பலம்

அம்பலம் அறியார் ஏமன்
அவன்கரம் பட்டு மாள்வர்
அம்பலத் தாடும் ஐயன்
அருட்பதம் பணிந்த சான்றோர்
அம்பலக் காரர் என்று
அழைக்கவும் படுவர் என்றும்
நம்பினோர் அம்ப லம்ஆம்
நற்கதி அடைவர் மன்னோ!
(4332)

பாலகர்

சீலமிக் கோங்கும் தெய்வத்
திருமலர்ப் பாதம் சார்ந்து
பாலமு தூட்டும் காலை
பக்குவம் பார்த் தருந்தில்
ஞாலத்தில் கூற்றை வென்று
நற்கதிக் காளா கும்காண்
பாலக ராகி மெய்ம்மை
பற்றுவோர் உய்வர் அம்மே!
(4333)

புராதனர்

ஆதிக்கு முன்னர் ஆதி
யாம்புரா தனர்தம் பாதம்
நீதிகை பற்றி நிற்போர்
நிர்மல சுகிர்தர் மெய்ம்மை
போதிக்கை யமுதம் மாந்தும்
புராதனர் என்ற நாமம்
சாதிக்கை வென்று உய்யும்
சற்சனர் சான்றோர் மன்னோ!
(4334)

குலாளர்

குலமுழு தாளும் தெய்வக்
கொழுமலர் தாள்கை பற்றி
நலம்கொளும் நல்லோர் தாமே
நற்குலா ளர்என் பார்கள்
சலம்கெட சத்யர் தெய்வம்
தாமுணர்ந் தேத்தி வாழும்
குலமுயர் குலால ரென்று
கூறுவர் குணத்தோர் தாமே!
(4335)

பண்ணாடியார்

சிந்தையாம் பண்ணை தன்னை
திருநாவே ருழுது ஜீவ
விந்தையார் பயிர் செய்விக்கும்
வித்தகர் பண்ணை நாடி
தந்தைதாய் குருதெய் வம்மாய்
சார்ந்தவர் உய்வர் என்றும்
நிந்தையில் பண்ணா டியாய்
நீடுழி வாழ்வர் மன்னோ!
(4336)

ஆயிரப் பிரியர்

தாயினும் மிக்க அன்புச்
சான்றமெய்த் தாள்கள் போற்றி
மாயிரு ஞாலந் தன்னில்
வாழ்ந்துறு வோர்கள் தம்மை
ஆயிரப் பிரிய ரென்று
அகிலவர் போற்றும் தெய்வச்
சேயெனும் சிறப்பு ளாழ்வர்
சிந்தைநன் குணர்வீர் அம்மே!
(4337)

பத்தர்

சித்திகள் நல்கும் சீரார்
சிவபெரு மானின் தாளில்
பக்திமிக் கோங்கும் பாங்கர்
பக்தர்என் றழைக்கப் பெற்றார்
சத்தியம் தவறா மாந்தர்
தமதெலாம் இறைக்கே என்று
நித்தியம் பெறவே வேட்கும்
நிர்மலர் பத்தர் காணே.
(4338)

வேளார்

வேளெனும் சிவனார் பாதம்
மிக்கினி தன்பாய்ப் போற்றி
ஆளனாய்ப் பணிகள் செய்து
அவரருள் ஆர்ந்து நிற்போர்
வேளாரென் றினிய நாமம்
விளம்பிடப் பெற்றார் வாழ்வின்
தாளாண்மை மிக்கார் சான்றோர்
தண்ணளி சிறந்தார் வேளார்.
(4339)

சைனிகர்

அறநெறி நிறுவும் போரில்
ஆற்றல்மிக் காராய் நின்று
திறனொடு யுத்தம் செய்து
ஜெயக்கொடி நாட்டுகின்ற
மறவர்கள் சைனி கர்கள்
மாதவர் கணங்கள் இன்னோர்
அறமிளிர் ஆன்றோர் என்று
அகிலவர் புகழும் மன்னோ!
(4340)

முத்தரையர்

ஆழ்கடல் விளைகட் டாணி
அற்புத முத்தின் மிக்கார்
வாழ்விதின் இறைநே யத்தார்
மதிமணி முத்தின் வேந்தர்
சூழ்ந்திடு மாயை தன்னை
சீருயர் வைராக் யத்தால்
வீழ்ந்திடச் செய்வல் மன்னர்
வெற்றிமுத் தரையர் காணே.
(4341)

ஆறுசுத்தியார்

செறிதரு பிரம்மம் என்று
சின்மயில் ஏறும் கோமான்
அறுமுக தெய்வக் கோவில்
ஆறெனும் புரியார் கோட்டை
உறும்பெரும் பக்தி மிக்கார்
உற்றதை வலம்வந் தோங்கிப்
பெறும்வரம் பேராண் மையர்
பேர்ஆறு சுத்தி யாராம்.
(4342)

படையாட்சி

விடைதனில் உலாவ ரும்கோன்
மாதொரு பாகர் போற்றும்
படைதனில் ஆட்சி செய்யும்
பண்பினோர் பக்திப் பண்பு
உடைபெரும் மக்கள் ஞான
உத்தம தேவ ரின்னோர்
படையாட்சி என்று சான்றோர்
பகர்தற்கு உரியர் மன்னோ!
(4343)

கண்டர்

தொண்டெழு மனிதன் தூய
துறையிரு தயத்துள் மேவும்
அண்டர்கோன் அவத ரித்து
ஆச்சார்ய வடிவம் தாங்கி
விண்டுமெய் வழியிற் சார்ந்து
வையகம் உய்யக் கண்ணாற்
கண்டபேர் கண்ட ரென்று
கழறும்கா சினியோர் அம்மே!
(4344)

தம்பிரான்

நம்புநல் லடியார் தம்மை
நமனிடர் கடத்தி மீட்கும்
செம்பொருள் சிவபி ரானே
திருவுரு போந்த ஞான்று
அம்புவி தனிலன் னோரை
அண்மிநின் றருள்பெற் றோர்கள்
தம்பிரான் என்று போற்றும்
தரணியோர் அறிமின் காணே!
(4345)

வாரியார்

ஆரியர் அருள் கனிந்து
அம்புவி அவத ரித்து
சீரிய ஞான மெய்யை
சார்ந்தவர் களிக்கும் ஞான்று
நேரியல் அமுதம் பொங்கி
நிறைந்தது பாயும் அன்பு
வாரியர் என்று மேலோர்
வழங்கிடு குலத்தோர் மன்னோ
(4346)

தீயர்

ஞானத்தீ கையி லேந்தி
நானில மக்கள் தங்கள்
ஈனத்தை எரித்து மாற்றி
எழில்மறு பிறப்ப ராக்கி
வானவர் ஆகச் செய்யும்
மாதவர் அருள்பெற் றோர்கள்
தானவர் தீயர் என்று
தரணியோர் போற்றும் நன்றே!
(4347)

மேனன்

ஆனமெய் யிறைவர் தங்கள்
அடிநிழல் சார்ந்து நின்றோர்
வானவ ராக்கப் பெற்று
மறுபிறப் பாளர் என்பர்
ஈனமாம் குலத்தி னின்று
இவருறு மேன்மை கூறும்
மேல்நன் எனும்கு லத்தோர்
மேனன்என் றுரைப்பர் காணே!
(4348)

நயினார்

புறமெனும் நயனக் காட்சிப்
பொய்ம்மையி லுழன்ற பேரை
அறம்கெழு விழிதி றந்து
அருள்நய னத்தோர் ஆக்கும்
திறமுயர் தெய்வம் சார்ந்தோர்
ஜீவன் முத்தர்கள் என்பர் ஆகும்
பெறலரும் நயினர் என்னும்
பெருங்குலச் சான்றோர் ஆவர்
(4349)

வேட்டுவன்

வேட்டுவன் குளவி தானும்
வெறும்புழு வெடுத்து வந்து
கூட்டினி லடைத்து நாதம்
கொடுத்ததைக் குளவி யாக்கும்
தேட்டுடை தெய்வம் அங்கண்
செய்து மெய்க் காக்கப் பெற்றோர்
வேட்டுவ குலத்தோர் என்று
மேலவர் உரைப்பர் தாமே!
(4350)

பரையர்

ஆதியாம் அன்னை தெய்வம்
அருட்பரா பரையின் பொற்றாள்
நீதியாய்ப் பணிந்து போற்றும்
நிர்மல சுகிர்தர் தம்மை
பேதமில் பரையர் என்று
பெரியவர் கூறும் இந்ந
நீதத்தை அறிமின் மக்காள்
நேர்சக்தி குலத்தோர் அன்னோர்
(4351)

ஏகம்பர்

பூகம்பத் தேற்றி ஞாலம்
பொய்யரை மெய்யர் ஆக்கும்
மாகம்பர் தெய்வச் சீரார்
மாணடி சேர்ந்தோர் உய்வர்
ஏகம்பத் தூக்கும் தாளின்
எழிலினைப் பெற்றோ ரெல்லாம்
ஏகம்பர் என்று போற்றும்
ஏர்குலச் சான்றோ ராகும்.
(4352)

குரவர்

பெரியதைப் பெரிதென் றார்க்கும்
பெரியவர் குரவர் ஞாலத்(து)
அரிதெழில் மெய்சார்ந் துற்ற
அறிவினோர் பெரிய ரம்ம
துரியவான் பதத்தி னோரைத்
துன்பிலா நெறியி னோரைச்
சரியெனச் சான்றோர் போற்றும்
சற்குணர் குரவர் காண்மின்
(4353)

நாயர்

தீயவை கடிந்து தெய்வத்
திருவருள் நெறிசார்ந் துற்ற
நேயரை மாசில் லாரை
நற்குண வான் இனத்தை
நாயரென் றுரைப்பர் அன்னோர்
நன்மலை யாளம் வாழ்வர்
தூயமெய்க் குலத்து மாந்தர்
துரியமாம் நிலைகண் டார்காண்.
(4354)

பூசாரி

ஞானப்பூ ஆர்ந்து நின்று
நன்மறு பிறப்புற் றோர்கள்
வானவர் மென்றாள் பூவை
மகிழ்ந்துமே சிரத்தில் சூடி
தானவர் தம்மைச் சார்ந்த
சான்றோர்பூ சாரி யென்பர்
ஊனங்கள் மாய்ந்து ஜீவன்
ஓங்கிடும் தெய்வத் தாளில்
(4355)

வண்ணர்

ஐவர்ண நாதர் தங்கள்
அடிநிழல் சார்ந்த பேர்கள்
மெய்வணம் பெற்று நீடு
மேதினி மிசை வாழ்வாங்கு
உய்வர்கள் அன்னோர் தம்மை
உத்தமர் வண்ணர் என்பர்
தெய்வநற் பாதம் பற்றில்
திருவண்ணம் சிறக்கும் மன்னோ!
(4356)

சோழகர்

வாழகம் அறிந்து தெய்வ
மலரடி பணிந்த பேர்கள்
ஊழகம் மாறி நீதம்
உற்றினி தோங்கு வார்கள்
சோழகர் என்று அந்தச்
சுகந்தரை அழைப்பர் மாந்தர்
பாழகம் தீர்ந்து மெய்யாம்
பரசுகம் அறிவர் மன்னோ!
(4357)

சௌராஷ்டிரர்

அரன்பதம் சார்ந்து நின்று
அறநெறி வாழ்வர் தாமே
சுராஷ்டிரர் என்ற நாமம்
சுதந்தரம் தன்னைக் கொள்வார்
பராபரைக் குற்று ஞானப்
பாலமு தருந்தப் பெற்று
சுரர்நிலை எய்தும் சான்றோர்
சுத்தமெய் யடியார் தாமே.
(4358)

ராவுத்தர்

வாசியாம் குதிரை தன்னை
வழிநெறிப் படுத்தும் தெய்வம்
தேசிகர் உளம் கனிந்து
திருவருள் ஈயப் பெற்றோர்
தோசமில் தூயர் சான்றோர்
ராவுத்தர் என்பர் நல்லோர்
நேசமாய் இறைசார்ந் துய்யும்
நற்றவர் அறிமின் மன்னோ!
(4359)

ராவுத்தர் - வாசியாகிய குதிரையை அடக்குபவர்

சிங்-சீக்கியர்

மங்கிடச் செய்யும் மும்ம
லாதிகள் தம்மை மாற்றும்
சிங்கமாய் கூற்றை மாற்றும்
சீரியர் தெய்வச் சீடர்
தங்கமாய் நித்ய மெய்யில்
தாமிகுந் தோராய் வாழ்வர்
சிங்கெனும் சீக்யர் சீடர்
தெய்வநற் பற்றில் வல்லார்.
(4400)

மறலி கை தீண்டா மெய்மதம்

நிலைமண்டில ஆசிரியப்பா

மதவெறி யதுவும் தீர்ந்தொருங் காயது
அதிகொடும் இனவெறி அடங்கிச் சாய்ந்தது
இணக்கம் எங்கணும் இன்பமார் லாகிரி
சுணக்கம் தீர்ந்து சுகோதயம் ஆனது
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நிறைவுறு நளினம் கொண்டது
ஆழிவாழ் ஐயர் அவதரித் தருளிய
ஊழியின் நோக்கம் உச்சம் அடைந்தது
வேதம் யாவும் விளங்கத் துலங்கின
போதம் பலவும் பொங்கி மலர்ந்தன (4410)
நீத நெறிகள் நித்தியம் எய்தின
ஆதம் பாதம் அருண்மழை பொழிந்தது
சேதமிலா நெறி திக்கெலாம் சீர்பெறும்
அன்றொரு காலத்து அண்ணலின் கனவு
இன்று நிறைவுற லானது இனிதே
மறலிகை தீண்டா சாலைஆண் டவர்மெய்
திறமுயர் மதமெனும் கதிரவன் உதித்தது.

ஈ.ஆலய நடைமுறைகளும் வணக்கங்களும்

இணக்கம் மிகுந்த ஏரனந் தாதியர்
வணக்க நடைமுறை வகுத்தனர் தெய்வம் (4420)
வான்குல மாதவர் தான்களிப் போங்க
நான்கு மணிக்கு வான்மணி யோசை
சத்திய சுத்த உத்தமர் மேரு
புத்த பகவான் தீர்க்க தரிசனம்
ஆதி முதல்வர் ஆண்டவ ரைப்புகழ்
நீதி நிறைந்த பரம்பொருள் பாசுரம்
மண்டிடும் புகழார் மாதவர் போற்றி
எண்டிசை கண்டறி யாதநற் பாசுரம்
நெஞ்சகம் நெகிழும் நிர்மல சுகிர்தர்
பஞ்சணை எழுச்சிப் பண்ணிசை முழங்கும் (4430)
நீதியின் யுகம்வரச் சாதிமெய்த் தமிழ்தரும்
ஆதிநம் ஆண்டவர் மான்மியம் பொழியும்
பொங்கருள் கற்பகர் பொற்பதம் சார்மகா
சங்கற் பம்மதும் செப்புவர் சான்றோர்
அறநெறி யோங்கும் அற்புதர் ஆலயம்
திறன்மிகு உரும காலத் தவசின்
அறம்வலம் வருகும் அனந்தா தியர்கள்
உறும்பெருந் தவப்பலன் இறையருள் ஈயும்
தாயின் மிக்க தயையுடை தெய்வம்!
சாயுங் காலம் சற்குண சீலர்கள் (4440)
வேதம் முழங்கு(ம்) மெய்ம் மணம்கமழும்
நீத வணக்கம் நேரியர் செய்யும்
பொற்பத போதகர் நற்றவ நாதர்
அற்புத வாக்கியம் அங்ஙண் மொழியும்
ஆடக மன்றில் அற்புதம் மிளிரும்
தேடு கூடகத் தேன்மழை பொழியும்
அன்பது பெருகி ஆருயிர் செழிக்க
ஒன்பது மணிக்கு வணக்கம் புத்தர்
தீர்க்கத் தரிசனம் செப்புவர் நெஞ்சம்
ஆர்க்கும் ஆண்டவர் வாக்கியம் கமழும் (4450)
ஆவல்மிக் கோங்கும் அற்புத சீடர்கள்
காவல் காக்கும் பாரா வணக்கம்
பாசுரம் பாடல் பண்கனி இசையும்
தேசுறு இறைபுகழ் சீருரை யாடல்
நித்திரை தேவியை ஒத்தி யிருவென
சித்தம் கனிந்த செல்வர் விழித்து
தீரர் இணக்கம் திருவருள் பெருக்கும்
பாரா வணக்கம் பணிவுடன் செய்யும்

நீதித் திருமணம்

ஆதி தேவனை அண்டிய பேரிடை
நீதித் திருமண நெறிமுறை யதற்கு (4460)
சாதி இனம்மொழி மதம்நிறம் தடையிலை
பேதம் கருதிலர் பண்பும் பக்தியும்
நீதம் உடையவர் நித்தியர் சத்தியர்
வேத நெறியினர் மெய்யர் தாமே
தகுதி உடையார் சற்குணம் மற்றும்
அகநிறை அன்பும் ஆண்டவர் பிள்ளையாய்
ஒருமணக் கூரும் அடம்திடம் ஆசான்
திருவுள கிருபை சேர்அருட் சேகரர்
நெறிபிற ழாத நேர்மையர் தக்கார்
அறிவறி திறத்தினர் அகம்கனி மணம்கொளும் (4470)

நிகழ்வுகள்

தெய்வ மாலை முதல்சமர்ப் பித்து
தெய்வத் திடம்நற் றிருவரம் பெற்று
நவக்கிர கக்கோள் நன்றே நீற்று
தவத்தினர் வேப்பிலைத் தீர்த்தம் தெளித்து
சற்குரு பாத பூஜையும் நிகழ்த்தி
பால்பழம் தந்து பண்புடன் பெற்றோர்
சீலமாய்த் திருமணத் துகில்சமர்ப் பித்து
நன்மா ராயம் நற்றவர் நவில
பொன்னொளிர் மாலை மிக்கணிவித்து
கங்கண ஏற்றம் கனிவுடன் செய்து (4480)
பொங்கும் நிறைநீர் குடமார் தியானம்
சம்மதம் கேட்டு சரியென அறிந்து
பொன்னொளிர் மங்கள தாரகை நாட்டி
தெய்வ வணக்கம் சீர்மிகச் செய்து
உய்கென வாழ்த்து உவப்புடன் கூற
சபைக்கு வணக்கம் தம்பதி யர்சொலும்
தவத்தோர் கங்கண பூர்த்தியும் செய்தபின்
திருமா ளிகைஅமு ததுவும் வழங்கும்
அருளார் நீதித் திருமணம் பூர்த்தி

புனல் ஜென்மம்

மாதவர் மக்களை அங்கத் தேற்று (4490)
துவிஜன் ஆதல் மறுபிறப் புறுதல்
உபநய னம்சம்ஸ் காரம் செய்தல்
மாற்றிப் பிறத்தல் முரீதுபெறுதல்
ஏற்றம் லைலத் துல்கதிர் இரவு
சிவனின் ராத்திரி விநாயக சதுர்த்தி
தவமார் வைகுண் டேகா தசியும்
எட்டா நாள்ரா ஞானஸ் நானம்
மட்டிலா தன்னை அறிந்து தலைவனை
தானறி பான்மை யாவும் ஓர்செயல்
இக்கடம் நீக்கி அக்கடம் ஏறுதல் (4500)
தக்கதோர் அருட்பெரும் ஜோதி தரிசனம்
விஸ்வ ரூப மிக்குயர் தரிசனம்
வாழ்வில் இஃதே மாபெரும் சிறப்பு
தாழ்வில் லாத தேவனாம் பிறப்பு
இத்திரு நாளை ஆண்டாண் டுதோறும்
அத்தனின் திருமுன் புதுப்பித் துக்கொளல்
புனர்ஜென் மத்திரு நாளென மொழிவர்
கன்னல் மொழியர் அண்ணல் கழறும்
இன்னல் தவிரும் இன்பத் துறைகள்
எண்ணும் அறுபத் தொடுநான் கென்பர் (4510)
எண்ணில் கோடி உபதே சங்கள்
எம்மான் அருள்வர் ஏற்கும் தகுதி
அம்மா பெரிது பெரிதென் குவமே!

திருவிழாக்கள்
கோளரி சாலையர் திருவிழா

தேவ தேவர் திருவவ தாரம்
மூவா முதல்வர் மார்கழித் திங்கள்
இருபத் தொன்பதாம் இனியநன் நாளாம்
அருமைக் கோழி கூவுநன் நேரம்
அதுவே அவதா ரத்திரு நாளாம்
இதமாய் மறுநாள் பொங்கல் வைத்து
மதிமெய் தெய்வத் திருமுன் படைக்கும் (4520)
கோன்முக் கூராம் கத்தியைக் கொண்டு
பானைப் பலிசெய் பொன்திரு நாளாம்
உலகின் மேய்ப்பர் உத்தமர் தெய்வம்
அலகில் ஜோதியர் கோகுலம் மேய்த்து
நலமார் பொங்கல் நன்கு படைத்து
வலமிகு ஆவினம் மகிழ்வொடு உண்ண
தாமே வழங்கும் திருவுயர் பெருநாள்
சேம நிதியர் திருவருள் பெறுநாள்

பங்குனி பிறவா நாட் பிறப்புத் திருநாள்

திங்களுர் தன்னில் திருமக வார்ந்து
எங்கள் பாட்டையர் இனியர் தனிகையர் (4530)
காலையில் நேர்ந்து சாலை யேறிய
கோலத் திருநாள் குருபரர் தமக்கு
சீலமாய்க் கேழ்வர கப்பம் வழங்கி
பாலும் தேனும் படைத்த திருநாள்
திங்களூர் நத்தத் தேரடி யமர்ந்து
பொங்கு பிரம்மோப தேசம் புனைந்தநாள்
உலகெலாம் உய்வடை ஒருபெருந் திருநாள்
நலமெலாம் திரண்ட நற்றவர் குருநாள்
அண்ணல் தங்கள் அருட்குரு பரரை
எண்ணி இளகி உருகும் அருள்நாள் (4540)
இறவா வரம்தரும் எங்கள் பெருமான்
பிறவா நாட்பிறப் புத்திருப் பெருநாள்

வைகாசி - பாசுபதக் கங்கண தவக்கோல சன்னதத் திருநாள்

இருபத் திரண்டு ஆண்டாண் டுகளாய்
குருபரர் தம்மைக் கூடித் தொடர்ந்து
அகில வலம்புரி அற்புத காலம்
சகலவ ரம்பெறு சீருயர் கோலம்
வாழ்வில் வரங்கள் வழங்கு மாண்பர்க்கு
தாழ்மைத் தகைமை தான்வரு விக்க
ஆடுகள் மேய்த்திடும் அருந்தொழில் வழங்கி
ஈடிணை யற்ற எழிற்றிரு மகவினை (4550)
திருப்பரங் குன்றினில் தவத்தினில் ஆழ்த்தி
அருட்பெரும் சன்னதம் அடைந்திட ஆக்கி
கனிமொழி மனுக்குலம் உய்ந்திடச் செய்ய
கலியுக முடிப்பும் புதுயுகப் பிறப்பும்
வலிமையொ டாற்ற ஊக்கினர் தாதை
பாசுப தத்தின் தவத்தின் மூலம்
ஆசிபெ றுந்திருச் சன்னத சீலம்
பொய்ப்பா சாண்டியர் பொசுங்கிடு காலம்
மெய்யர் புத்தணி புனைந்திடு கோலம்
நவையறு நலம்பெறு நற்றவர் நேர்மை (4560)
இவைவை காசித் திருவிழாச் சீர்மை

புரட்டாசி - பிச்சை ஆண்டவர் திருக்கோலத் திருவிழா

தேசிகர் திருக்கரம் இயற்றிய ஆலயம்
ஆசிகள் வழங்கிட அருள்செயும் காலம்
ஆங்கில அரசினர் அங்குறு நேரம்
பாங்குறு ஆலயம் பார்த்ததன் சீரும்
காசினிப் பெரும்போர் கலிதள வாடம்
மாசுற வைத்திட இடமதை நாடும்
அரசினர் நோக்கம் அதனின் தாக்கம்
பரசுகம் அருள்பரர் பதியினின் நீக்கம்
காதலர் மக்கள் கலிவயப் பட்டு (4570)
ஏதிலர் செய்பவம் பிச்சைய தேற்று
மாதொரு பாகர் வரமருள் பெற்று
சீதன ஜென்மசா பல்யராம் மற்று
நீதம் அருள்செய் நின்மலர் இனிதே
போதம் தயையருள் பொற்புடை நன்னாள்
அரிசிப ருப்புக் காய்கறி படைத்து
அரியயன் அரன்ஒரு திருமுன் பணிந்து
ஆண்டவர் தயைபெறு அற்புதக் காட்சி
வேண்டும் வரம்தரும் விமலரின் மாட்சி
அனைத்துண வுப்பொருள் யாவும் சமைத்து (4580)
அனைவர்க் கமுதருள் அற்புதத் திருவிழா
பொய்ப்பவம் போய்மடிந் திடவருள் குருபரர்
பிச்சை ஆண்டவர் பெருந்தயைத் திருவிழா
மெய்த்தவத் திருவருள் தரும்உயர் திருவிழா

கார்த்திகை - கார்க்கும்தீ கைகொண்டோர் தீபத்திருவிழா

ஆர்க்கும் எமனின் அமலது தவிர்ந்திட
கார்க்கும் தீகைக் கொண்ட குருபரர்
வேற்கை கொண்டார் விமலர் மெய்வழி
சீர்கொள் தெய்வத் தயைபெற் றோர்கள்
தெய்வ ஆலயம் தனில்அகல் விளக்குகள்
உய்யும் நெறிக்காய் உவந்து ஏற்றி (4590)
அருட்பெருஞ் சோதி அகத்தினில் ஏற்றி
இருள்சேர் இருவினை யாவும் இரிந்திட
அருள்சேர் அன்பான் ஆண்டவர் தயைபெற
பொருண்மெய் கண்ட போதகர் பதம்பணி
ஜீவன் செழிக்கும் சேகரர் திருவடி
தேவர் கிருபை பொழியும் திருவிழா
கார்த்தி கையர் கருணை நிறைவிழா
ஆர்த்து அனந்தர்கள் அருள்பெறும் பெருவிழா

18. தீர்க்கத் தரிசனப் பருவம்

இன்ன காலத்தில் இன்னார் இன்னது
நன்னய மாக நடத்திடும் என்பதை (4600)
முன்னே மொழிவது தீர்க்கத் தரிசனம்
சொன்னோர் திரிகா லம்காண் தெரிசனர்
அன்னவர் அருண்மணி நாயகர் அற்புதர்
முன்பின் நிகழ்வுறு செய்திகள் செப்புவர்
தன்னகம் துறந்த தவப்பெருஞ் சீலர்கள்
மன்னவர் இறைநெறி மாட்சிமிக் குற்றவர்
காலம் தேசம் இனம்மொழி மதங்கள்
கோலம் கடந்த குருபரர் சான்றோர்
மங்கா வாக்கும் சௌபத நிலைகாண்
பொங்கும் தவத்துப் பேரருள் நீதியர் (4610)
மன்னு தவத்து மாதவர் எங்கோன்
இன்னருள் மாட்சி இயம்பிய சான்றோர்
இசைந்த மதியின் நிசமிகத் தவழும்
வசந்த ரிஷியெனும் காகபுசுண்டர்
வடலூர் மேவு அடலேறு அண்ணல்
திடமுயர் ஞானக் கொண்டலர் வள்ளலார்
காணாக் கருவுலம் காசினிக் கருளிய
சாணார் குலத்தின் வேத நாயகர்
ஆதிபு ராதன வேதச் செம்மல்
சேதமி லாநெறி சொராஸ்டர் நாயகம் (4620)
அருள்னவாக் கிரந்தம் அருளிய யாஸ்னா
திருமெய்ஞ் ஞானக் கல்கிபு ராணம்
அருளிய சீரார் அற்புத முனிவர்
பாரத பூமி புகழ்தேத் திடும்உயர்
நாரத மாமுனி நற்றவச் செல்வர்
சத்திய சுத்த உத்தமர் மேரு
புத்த பகவான் பொற்பதிச் சீமான்
திபேத்து நாட்டின் திருவுயர் வரமிகும்
கபாலி பாஷை ரகசிய கிரந்தம் (4630)
சகத்தில் உயர்தவ அகத்திய மாமுனி
அஸ்மா ஆலத் தரசர் எஸ்கிலாஸ்
செம்பொருள் கண்ட சிபில்மா தரசியர்
மதிநில வெரிக்கும் பதிமே வண்ணல்
விதிகடந் தேறிய ஆதி சங்கரர்
மறைவிதி கண்ட மதிவா னரசர்
நிறைமொழி மாந்தர் மார்க்கண் டேயர்
ஞானசை தன்யர் நற்றமிழ் நல்கிய
வானவர் சுப்பிர மணியர் மாதவர்
திரிகாலம்காண் திருமூல மாமுனி (4640)
ஞான சக்தியின் நற்றவ முத்து
வானத் தரசி மாகாளியம்மன்
கலைமலி காட்சிக் கவின்கோடு கண்ட
நிலைபெறு நித்தியர் கபீரெனும் தாசர்
அறநெறி யோங்கும் பரவச வசனர்
திறமொளிர் தேவர் வீரப் பிரம்மம்
வைணவ உலகப் பேரா தீனர்
தெய்வசிங் காசனர் சடகோ பர்பிரான்
நற்கலைக் ஞான நன்மணிச் செல்வர்
தற்கலை பீர்மு கம்மது அப்பா (4650)
மெய்மார்க் கம்சொல் மயூர நாதர்
ஆணிப்பொன் அம்பல அற்புத வானவர்
காணிக்கை நீதி மாணிக்க வாசகர்
நயந்துரை நவின்ற நற்றவ செல்வர்
சயிந்திர மாமுனி தவமிகு திருமணி
கோவா மணிபுனை யோவா னவர்கள்
ஆவா அதிசயர் ஆகாய் தீர்க்கர்
கோவேந் தர்எனும் தாவீது நாயகம்
ஏசா யாஎனும் மாசிலா மாதவர்
எத்தனை எத்தனை முத்திமா தவர்கள் (4660)
வித்துநா யகர்தம் வான்புகழ் மாட்சியை
மார்க்க மகாமுனி மகரிஷி மாண்பினை
தீர்க்க தரிசனம் செப்பிவைத் துற்றனர்
மெய்வழி தெய்வ மகத்துவப் புகழினை
செய்வழி யாவையும் சிறப்புறச் செப்பினர்.

19.விராட் தவம் ஏகும் பருவம்

பொய்ப்பா சாண்டியர் முகத்திரை கிழிந்தது
மெய்ந்நிலைப் போதம் விளங்கி ஒளிர்ந்தது
வேதகா லம்மது மீண்டும் எழுந்தது
நாதநா தாந்தர் நல்லருள் மலர்ந்தது
உத்தி யோவன சித்திகா னகத்தே (4670)
முத்தர்கள் பக்தர்கள் மொய்த்துக் களித்தனர்
ஆரா லும்மே அளக்கரும் அனந்தர்கள்
சீராய் ரட்சிப்புச் சீரா அணிந்தனர்
ராஜகம் பீரம் நளினசிங் காரம்
ஆஜானு பாகுவாய்ந் திகழ்அலங் காரம்
தன்னுயி ரில்ஒளி திகழ்அறு புரிதூல்
மின்னும் மேனியில் விளங்கும் பூண்நூல்
எம்மான் அருட்திறம் எமனை மிகைத்தது
செம்மாந் திருக்கும் திருஇடைக் கச்சம்
வஞ்சக் கலியனை வென்றஇக் காலம் (4680)
பஞ்சகச் சம்மணி பண்புயர் கோலம்
பஞ்சபா தகங்கள் பறந்தே போயின
அஞ்சா அறநெறி உயர்ந்தே மேயின
கிள்நா மம்எமன் தனைவெல் நாமம்
துள்கா மம்அழிந் திடுநல் சேமம்
அறமிளிர் தேம்பொழில் அற்புதக் காட்சி
திறமிளிர் அனந்தா தியர்உயர் மாட்சி
தவபலத் தாலுயிர் தன்பெரு மீட்சி
உபநய னத்தின் உள்ளொளிர் காட்சி
எத்தனை கோடி இன்பம்என் சாமி (4690)
அத்தனை யும்அனு பவிசிவ காமி
திக்விஜ யம்புறப் பட்டனர் கோமான்
எக்களிப் பருளும் எம்முயிர்ச் சீமான்
அனந்தா தியர்படை அரிபோ லும்நடை
இனம்கா வியுடை இதற்கே தினிதடை
இன்பம் கொழிமடை எழில்வே தக்கடை
துன்பத் துளையடை தொன்மறைக் கேவிடை
விண்ணைத் தொட்டது மெய்வழிக் கோஷம்
மண்ணைக் கவ்விய தேகலி தோஷம்
முழுமுத லாம்எம் மெய்வழி தெய்வம் (4700)
தொழுதெழுந் தோர்கள் ஆருயிர் உய்யும்
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நிறுவினர் அருண்மொழி நாவினர்
தனிஒரு வர்இச் சாதனை செய்தனர்
இனிக்கதி வேறிலை இன்னருள் பெய்தனர்.

கலிவிருத்தம்

அண்ணல் ஞானச்செங் கோல்புரி காலத்தே
எண்ணி லாதோர் எதிர்த்திடர் செய்தனர்
விண்ண வரென்ற மெய்ம்மை யுணர்ந்தபின்
பண்ண கர்சீடர் ஆகிப்பதம் பெற்றார் (4701)
வல்ல பண்டிதர் யாமெனக் கர்வமாய்
சில்லோர் வந்து ஜெயிக்க முனைந்தனர்
கல்வி யும்கல்வி யின்பயன் என்றறி
கல்வி கற்றுக் கலையின்மே டேறினர் (4702)
கடவுள் இல்லையென் றேமுரண் டாட்டமாய்
கடவு ளைக்காட் டும்என்று வாதிட்டோர்
கடவு ளைக்கண்டு கனிபக்த ராகியே
கடவு ளோடே கலந்தைக்ய மாயினர் (4703)
எத்து றையினர் யாவர்வந் திங்ஙணே
வித்து நாயகர் மேன்மை யுணர்ந்துமே
ஒத்து நல்லமா ணாக்கரும் ஆகியே
வித்த கர்ஆகி மெய்ஞ்ஞான முற்றனர் (4704)
மந்த்ர வாதிகள் வந்துசா மர்த்யமாய்
இந்த்ர ஜாலம் இயற்றியே தோற்றனர்
வந்தோர் மந்த்ர உருவென் றறிந்துமே
எந்தர வள்ளல் இணையடி சார்ந்தனர் (4705)
இங்கு கொள்ளை இயற்றவந் தகள்ளர்
பங்கப் பட்டு பரிதவித் தேகினர்
எங்கள் நாயகர் இன்னருள் நாடினோர்
தங்க மாகியே சாயுச்யம் பெற்றனர் (4706)
பொன்செய் வோமெனும் வீண்ரச வாதிகள்
தன்கண் கெட்டுத் தடுமாறி வீய்ந்தனர்
தன்நன் மேனிபொன் னாம்ரச வாதம்செய்
பொன்ன ரங்கரைப் போற்றினோர் உய்ந்தனர் (4707)
நம்பி னோரெலாம் நாலாம்ப தம்பெறும்
எம்பி ரானின் இணையடி சார்ந்துமே
செம்பொன் மேனியர் தெய்வ தயைபெற்றோர்
உம்ப ராகியே உய்வடைந் தோங்கினர் (4708)
எங்கு மென்றும் இதற்கொப்ப தேதுமில்
திங்கள் மாமுகச் செல்வ வரோதையர்
தங்கள் சீரார் தவத்ததி காரமே
வன்கண் வெம்மற லியமல் வெல்லுமே (4709)
அவத்த திகாரத் தால்மனு தாழ்வுறும்
பவத்த திகாரத் தால்மனு மாள்வுறும்
சிவத்த திகாரத் தால்மனு தேவனாம்
தவத்த திகாரத் தால்மனு உய்யுமே (4710)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

குலத்தொழில் தாதை யோடு
கோமகன் நிறைவாய் ஆற்றி
நிலத்தொழில் வனப்பு ஓங்க
நீடுழைத் திட்ட சாமி
வலத் தொழில் வணிக மாற்றி
வளம்கெழு பொருள்மிக் கார்ந்து
நலத்தினோர் நாளும் போற்ற
நனியுயர்ந் திட்டார் அன்றே
(4711)
அன்றுவிண் ணமரர் தம்முள்
அளித்தவாக் கதுமெய் யாக
நன்றந்தத் தனிகை வள்ளல்
நாலொடு இரண்டு நூறு
தொன்றுபல் லாண்டு காத்து
துரைமக வினைக் கண்டார்ந்து
வென்றுமெய் வழங்கிச் சேயை
விரைந்து கொண் டேகினாரே!
(4712)
ஏகினர் அகில மெல்லாம்
இருபெருந் தகையும் சென்று
பாகதின் சுவைபோன்ம் ஞானம்
பரிமளித் திடஆ ளாக்கி
சேகரர் மறிமேய்த் திட்டுத்
திருப்பரங் குன்றம் மேவி
மாகதி தவமிக் காற்றி
மறுவில்சன் னதங்கள் ஏற்கும்
(4713)
ஏற்றுப் பாட்டையர் தங்கள்
இணைபிரிந் தேகிச்சீராய்
ஆற்றினர் பிரசங் கங்கள்
அன்புயர் சீடர் சேர
நாற்றிசை புகழ வாழ்நாள்
நாசகர் இடர்பல் ஈய
மாற்றறி யாப்பொன் வேந்தர்
மதுரைப்பொற் கோவில் செய்தார்
(4714)
கோவிலை அரசு கண்டு
கொடும் பெரும் போர்க்காய் ஏற்க
நாவலர் புதுகை நண்ணி
நலமிகு பொன்னர ங்கம்
மாவலார் இயற்றி மெய்யாம்
வழியது ஓங்கச் செய்ய
மூவலார் தனிகை வள்ளல்
மொழிந்தவை நினைவு கூர்ந்தார்
(4715)
கூர்ந்தந்தக் கணிதம் செப்பும்
குருவெனும் வியாழன் ஏகச்
சீருடை ராசி வந்து
செறிந்ததென் றறிந்த சீமான்
பார்குரு பகர்ந்த வண்ணம்
பரமவை குண்டம் ஏக
ஆரியர் சிந்தை யார்ந்தார்
ஆன்றமெய்த் தவத்தை ஓர்ந்தார்
(4716)
வாருங்கள் மக்காள் என்று
மாளிகை முன்றில் என்னைப்
பாருங்கள் நன்றாய் சொன்ன
பத்தியம் கைக்கொண் டென்றும்
நேருங்கள் பிரள யத்தை
நிகழ்த்துநாள் மட்டும் ஒன்றாய்
சேரும்தோள் கூடிச் சேர்ந்து
சிறந்திட வரம் தந்தாரே!
(4717)
தந்தனர் தாயார்க் கண்ணல்
தகுவன சிறப்பாய்க் கூறி
விந்தையர் விராட் தவத்தில்
மேயினர் மேலோர் நன்றே
கந்தையாய்க் கிழிந்த நெஞ்சர்
கனிஅனந் தாதி மக்கள்
சிந்தையே சிதறி விம்மும்
செப்புதற் கெளிதோ அம்ம!
(4718)
ஆலமர் கண்டர் சாலை
ஆண்டவர் அருட்பொன் னாரும்
தூலமே பிரிந்த சேய்கள்
துடிதுடித் தழுத ரற்றி
ஞாலமே மூழ்கிற் றென்று
நலிந்தனர் ஒருவா ராறி
கோலமெய்த் தவத்தார் தம்மைக்
கோவிலில் அமர்த்தி னாரே!
(4719)
தூலமே மறைந்த போதும்
தொடர்ந்தும்மைக் காப்பேன் என்று
ஆலமேல் அனந்தர் கோமான்
அன்றுரை வண்ணம் இன்றும்
சீலமாய்த் தொழுத பேர்கள்
திருவரம் பெறஉய் விக்கும்
கோலமே திகழும் சாமி
கொழுமலர்ப் பாதம் காப்பே!
(4720)

20.ஆண்டவர்கள் ஆசீர்பாதப் பருவம்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்

கல்லார் கற்றார் கலைக்ஞானர்
கணிமே தைகள் கோவேந்தர்
எல்லார்க் கும்மெய்ஞ் ஞானமருள்
இனிய வள்ளல் எங்கோமான்
நல்லார் இதயக் கொலுவேறும்
நாதர் சாலை ஆண்டவர்கள்
பல்லோர் போற்றும் பரமேசர்
பணிந்தோர் பரம பதமெய்தும்.
(4721)

தன்னே ரில்லாத் தனித்தலைவர்
சாலை ஆண்ட வர்சாரந்தோர்
வின்னம் இல்லாமெய் வழியில்
மிக்கார்ந் திருந்து வல்லெ மனின்
பென்னம் பெரிய துன்பமுறார்
பேரின் பம்சார்ந் துய்வார்கள்
நன்னம் பிக்கை யோக்கியர்கள்
நண்ணும் இந்த நன்னெறிக்கே!
(4722)

எங்கும் என்றும் மெய்வழியே
ஏறித் துலங்கும் இப்புவியில்
பொங்கும் அருளார் பொன்னரங்கர்
போதம் ஏற்போர் புண்ணியராம்
மங்கா ஜீவப் பிரயாணம்
வழங்கப் பெற்று மாண்புறுவார்
தங்கும் பூமித் தாய்மடியில்
தெய்வத் தங்கம் ஆகிடுவார்
(4723)

நித்தி யம்மெய்ச் சத்தியமும்
நிர்ம லர்சார் பத்தியமும்
அத்தன் திருப்பொன் னடிசார்ந்(து)
அன்போங் கிடுநன் நம்பிக்கை
எத்தன் எமனை வெல்மார்க்கம்
எம்மான் சாலை நன்மார்க்கம்
வித்தாய் விமலர் தாள்படிந்தே
விளைந்தே வளர்ந்தே உய்ம்மின்னே!
(4724)

கோடி பலவாய்த் தொகுத்தோரும்
கோல்கைப் பிடித்து ஆண்டோரும்
நாடி ஓவாக் காமுகராய்
நலிந்தே திரிந்த நாசகரும்
வாடி எமனின் கைப்பட்டு
மடிந்தே வெய்ய நரகேகும்
தேடித் தெய்வத் தாள்பணிந்தோர்
சேர்வர் சுவர்க்க பதம்பெறுவர்
(4725)

கடலின் அலைபோல் ஓயாது
கவலை வசமாய் மிக்கலைந்து
இடனார் பிணிதுன் பக்குவையில்
இழிந்தே எமன்வந் தலைக்கழிக்கும்
அடர்ந்தே எமன்வந் தெடுத்தேகும்
அந்நாள் வருமுன் மெய்வழியின்
தடமே சார்ந்தோர் உய்வடைவர்
சாற்றும் இச்சொல் சத்தியமே!
(4726)

உண்டே உறங்கி அலைவோரே
உடலின் வெறியால் நலிவோரே
பண்டே பழுந்த மறைவேந்தர்
பாரில் மெய்யை அருள்தருணம்
கண்டே கைப்பற் றிப்பணிந்தோர்
கதியாம் சுவர்க்கம் சேர்வாரே!
விண்டே ஏற்போர் வெற்றிபெறும்
மெய்ப்பே ரின்பம் உற்றிடுவர்!
(4727)

தேனா ரமுதம் பொழிசாலை
தெய்வ பாக்யம் அருள்சோலை
வானோர் கூடும் இதுகாலை
வந்தே பணிதல் நம்வேலை
ஆனோர் அருந்தும் மெய்ப்பாலை
ஆண்ட வர்தம் செங்கோலைத்
தானே தொடர்ந்தார் முப்பாலை
தெய்வ பதமே சிரமாலை
(4728)

வாடா நெறிமெய் முழங்குதம்மா
வந்தே பெற்று உய்யுமம்மா
தேடாப் பெரிய தவச்செல்வம்
சாவா மருந்து உறைகல்வம்
பாடாய்ப் பட்டார் பரமேசர்
பாரோர்க் கருளும் இறைநேசர்
ஏடாயிரம் கற்றென் செய்யும்
இறைவர் தயவால் உயிருய்யும்
(4729)

மெய்யாம் தெய்வம் பணிமின்கள்
மலர்த்தாள் சிரமேல் அணிமின்கள்
உய்யும் வழிசேர்ந் தோங்குங்கள்
உயர்மா தவர்தாள் தாங்குங்கள்
வையம் வானம் ஈடில் லார்
வழங்கும் நிதியைத் தேடுங்கள்
மெய்யர் தாளே அடைக்கலமே!
மறலியை வெல்லும் படைக்கலமே!
(4730)

வேறு

அருள்நயந்த அறவாழி அம்புவியிற் போந்து
இருள்சேர்ந்த இருவினையும் இரிந்தோடச் செய்யும்
இரிந்தோடச் செய்தெமனின் இயல்துயரம் தீர்க்கர்
பரிந்தேவாழ் பொன்னரங்கர் சாலைவள நாடர் (4731)

பொருள்நயந்து இருள்கவிந்து புலைநுகர்ந்து மாய்ந்து
மருள்வழியில் ஏகாமல் அருள்ஞானம் சிறந்த
அருள்ஞானம் மிகச்சிறந்த பெருங்கருணை தெய்வம்
திருவிளங்கச் சித்தியெலாம் திகழ்ந்தோங்கு நாடர் (4732)
தளர்வறியா நெறிபடிந்து தனித்துயர்ந்து சாலை
வளர்கயிலை வான்பதியர் மெய்வழிவ ழங்கும்
மெய்வழியர் வழங்கமுதம் வெவ்வினைகள் தீர்க்கும்
உய்வழியர் வரந்தருகும் உயர்ந்ததிரு நாடர் (4733)
வாடாத நெறிமுழங்கும் வானகத்தின் செல்வர்
தேடரிய நிதியமதைத் தரணியர்க்கு வழங்கும்
கோடானு கோடிக்கு அதிபதியாய் வான
நாடாளும் ஆண்டவர்கள் நம்குமரர் நல்லார் (4734)
ஈடாரும் கூறவிய லாததிறன் உடையார்
பாடான பாடுழந்து பரஉலகின் நிதியை
வாடாது தவமியற்றி முயன்றுவந்து சேர்க்கும்
ஆடவர்எம் ஆண்டவர்கள் அருட்திறனை மொழிவாம் (4735)

வேறு

குமுத மலர்போன்ம் குமரர் மணமார்
கமழ்கற் பூரத் திருவாய் மொழிகள்
கமழ்கற் பூரத் திருவாய் மொழிகள்
அமரத் வம்தரும் அமுதம் அமுதம் (4736)
அமரர் தலைவர் அறத்தின் அரசர்
கமலத் திருக்கண் கடையின் நோக்கம்
கமலத் திருக்கண் கடையின் நோக்கம்
இமையோ ராக்கும் கருணை கருணை (4737)
குமரே சர்நம் குருகொண் டல்தாம்
தமைந்தந் தெமைக்கொள் தயவார் வாக்யம்
தமைத்தந் தெமைக்கொள் தயவார் வாக்யம்
எமையுய் விக்கும் அருளார் அமுதம் (4738)
துன்பம் தொலைத்து இன்பம் வழங்கும்
அன்பின் உருவர் அணிகொ ள்நிதியர்
அன்பின் உருவர் அருளார் நிதியர்
இன்ப வடிவர் ஈவார் நித்யம் (4739)
எமன்வா தனைதீர் எமையா ளுடையார்
தமர்மெய் வழியர் தருகும் கிருபை
தமர்மெய் வழியர் தருகும் கிருபை
நமையேற் றுவிக்கும் சுவர்க்கம் சத்யம் (4740)

வேறு

இங்ஙனம் எழில்மிளிரும் எங்களின் ஆண்டவர்
பொங்கிடும் திறன்பொலியும் பொற்புயர் மதிமணியர்
செங்கமலத் திருத்தாளர் திறனார்ந்த விளைவாடல்
தங்களெழில் மான்மியத்தின சீரெடுத்து ஓதினம்காண் (4741)

அடிமை இளங்கலை அகநெகிழ்ந்தியம்பல்

இங்ஙன மாக எங்குரு கொண்டல்
மங்கா தவத்து மாமணிச் சேகரர்
திங்கள் வதனச் செழுங்கலை நிதியர்
பொங்கும் அருளினர் போதமார் சீதனர்
வேத முதல்வர் விமலா தித்யர்
நாதநா தாந்தர் நற்றவ மேரு
எல்லாம் வல்ல எங்கள் துரைக்குரு
எல்லார்க் கெல்லாம் ஈந்தருள் நாயகர்
பட்டபா டுரைக்கில் பாறைகள் உருகும்
கஷ்டம் கூறில் கடலும் சுவறும் (4750)
அற்புதம் உரைக்க அடியேன் வல்லேனோ!
பொற்பதம் புகழப் பேதைக் கில்திறம்
சொற்பதம் கடந்த சுந்தரர் சேகரர்
கோனிலாத் தவத்துக் கோமகன் தாயகர்
மேனி மறைத்திட மிக்குளம் கொண்டனர்
வானா டேகிடத் திருவுளம் கருதினர்
தேனார் அமுதர் திருநாட் டரசுற
எங்ஙனம் இனிதுளம் எண்ணி னர்மாதோ
தங்கமா மேரே! தனிச்சீ தனமே!
சிங்க வேறனைய செல்வமே தாயே! (4760)
என்றுமே தாங்கள் எம்முடன் இருப்பீர்
என்றுயாம் எண்ணி இருந்தனம் அம்மா!
மன்றிலா டண்ணலே! மாதவ மேரே!
இன்றுநும் தூலப் பிரிவினை எண்ணி
கன்றிடும் நெஞ்சுடன் கண்ணில்நீர் பெருக்குடன்
குன்றிக் குமைகிறோம் கோதறு நாதரே!
அடைக்கலம் தந்த அத்தனே! சுத்தனே!
விடைக்குலம் மறைக்கெலாம் தந்தவே தாந்தமே!
கடைக்கண் காட்டிய கவனாதி மலையே!
உடைப்பெருஞ் செல்வமே! ஒருதனி முதலே! (4770)
கருணை பெருகிடும் கார்விழ