திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/102.திருவாயுறை வாழ்த்து
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
102. வாயுறை வாழ்த்து
[தொகு]இலக்கணம்:-
வாயுறை வாழ்த்து என்பதன் பொருள் யாதெனில் வாய் - திருவாய்மொழி, உறை - மருந்து அஃதாவது பாட்டுடைத் தலைவரின் திருவாய் மொழியே அமிர்தமாய் (மிருத்யு - எமன், அமிர்த்யு - எமன்அமலை மாற்றும் வல்லபம்) கூற்றுவனை வெல்லும் ஆற்றல் மிகுந்த மருந்தாய் விளங்கும் என்றும் அத்தகைய தன்னேரிலாத தலைவரின் திவ்விய மகாத்மியத்திருவுயர் வாழ்வியல் சிறப்புகளை எடுத்துரைத்து வாழ்த்துதல் என்பதாம்.
புறநிலை வாயுறை வாழ்த்துதல் புவியில் ஒருவன்செவி யறிவே யுறுத்த லகப்புறக் கைக்கிளை ஆனவிந்த நெறியிற் பொருள்களை யன்றிமருட்பா நிகழ்த்தலினால் அறியவிந் நாற்செய்யு ளல்லாத பாவினும் ஆமென்பரே. - நவநீதப் பாட்டியல் - 55
வாயுறை வாழ்த்தே வன்சொல் பொறுத்து வாழியென வெண்பா ஆசிரியம் வகுத்தலே! - பிரபந்த தீபம் - 84
புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத் திறநிலை மூன்றுந் திண்ணிதில் தெரியின் வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும் பண்புற முடியும் பாவின என்ப - தொல்காப்பியம் பொருளதிகாரம் 463
இங்ஙனம் இலக்கணங்கள் கூறும் நெறியில் எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு நேரிசை ஆசிரியப் பாவால் இவ்வாயுறை வாழ்த்து இயற்றப் பெற்றுள்ளது என்பதாம்.
திருவாயுறை வாழ்த்து
காப்பு
தாயினும் மிக்க தயவுடையீர் நும்நாமம் வாயுறை வாழ்த்தால் வழுத்துதற்கு - ஆய்கலைநற் சொற்பொருளும் சிந்தைத் தெளிவும் அருள்கவென நற்றாள் பணிந்தேன் நனி
நூல்
நேரிசை ஆசிரியப்பா
ஆதிக்கும் ஆதி முன்நீர் வாழிய!
நீதிநீர் நின்மலர் நித்தியர் வாழிய!
வேதவே தாந்த மெய்ப்பொருள் வாழிய!
நாதநா தாந்தர் நற்றவர் வாழிய!
பொன்னொளிர் பொற்றாள் வாழிய! வாழிய! (5)
மன்னுக நின்புகழ் மண்விண் அனைத்துளும்
இருளெனும் கோளமாய் இருந்தனிர் அன்று
அருள்தர அசைவு ஆயிற்று நன்று
விசும்பினில் தீநீர் காற்றொடு மண்ணும் (10)
உசும்புத லாகிய உவமையில் முதலே!
புழுக்கம் வித்து அண்டம் சினையென
ஒழுக்குடை நால்வகைப் பிறப்பிட வாயிலாய்
தருக்கினம் புள்ஊர் வனமொடு காலி
பெருக்குள ஜலம்வாழ் ஜந்தும் மனுவும்
அமரர் என்னும் அரியஏழ் தோற்றம் (11)
அமரர்கோன் ஆக்கினீர் அதன்தலை மனுவே
சுவைஒளி ஊறு ஓசை நாற்றம்
அவையொடு பகுத்து அறியுமாறறிவும்
தகையும் எண்பத்து நூறா யிரமாம்
வகைப்பிறப் புக்களை வகுத்தனிர் ஐய! (20)
மனுவின் இதயம் தன்னுள் புகுந்தீர்
இனிதொரு தலைமுறை இருந்தனிர் அங்ஙண்
தன்னை அறிந்து தலைவனை அறிதல்
என்னும் இனிய எழில்வழி வகுத்தீர்!
உள்ளகத் திருந்தும் உணர்ந்திலர் என்று (25)
எள்ளகத் திருந்த எண்ணெயோ ருருவாய்
பொள்ளென வெளியே போதரு மாபோல்
விள்ளருட் குருவாய் உருவாய் வந்து
நரர்பிறப் பினையே மாற்றிநன் மனுவாய்
தரமுயர் மனுவை மறுபிறப் பருளி (30)
தேவனாய் ஆக்கித் திருவருள் தேக்கும்
மூவா முதல்வ! முனிவர்கட் கரசே!
இவ்வருஞ் செயலை இயற்றும் பொருட்டாய்
செவ்வை நெறியுயர் ஞானிகள் தேவர்கள் (35)
கடவுளர் கர்த்தர்கள் அடியார் நபிமார்
திடமுடன் தொல்புவிக் கனுப்பிவைத்தீர்கள்!
தூதர்கள் போந்து சிந்தை கனிந்து
வேதம் விளக்கி மெய்ப்பொருள் காட்ட,
தாயினும் மிக்க தனிப்பெருங் கருணையர் (40)
மாய்கை விலக்க முயன்றனர் அத்தகு
தூயநற் பெரியோர் தம்மைக் கொடிய
தீயர்பல் லோர்கள் செப்பொணாக் கொடுமை
செய்தனர், சீரழித் திட்டனர், நடுக்குற
வைதனர், வதைத்தனர், மடித்தனர், அதனால் (45)
நற்றவர் அனைவரும் நாதர்நும் திருமுனர்
உற்றனர், உரைத்தனர், உற்றவப் பாடுகள்,
“கொற்றவா! கோதிலாக் கோவே! தேவே!
இற்றையாம் பட்ட இன்னல் கேண்மின்!
பாரகம் சென்றுயாம் பட்டது போதும் (50)
நீரவ தாரம் நிகழ்த்துமின் நிலமிசை
சாதியுட் சண்டைகள், மதவெறிக் கலவரம்,
நீதி நெறிதவிர் நலம்குலை இடர்கள்
பல்கின புவியில் பரமரே வந்து
நல்விதம் மெய்வழி நாட்டுமின் நன்று (55)
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
என்றவோர் இயல்நெறி இனிதே நிலைக்க
துஷ்டநிக் கிரகம் செய்து தரணியில்
சிஷ்ட பரிபா லனம்செய் திடுமின்”,
என்றவர் விழைய எம்முயிர் தழைய (60)
நன்றுஎம் பெருமான் நானிலம் போதர
அன்று திருவுளம் ஆர்ந்தனிர் ஐய!
தீர்க்கத் தரிசியர் சீருரை சொற்றனர்
ஆர்க்கும் பெரியோர் அருளுமுன் செய்தி
சர்வவல் லமையும் தனிப்பெருங் கருணையும் (65)
சர்வ வரங்ஙளும் திருக்கரம் ஏற்று
வையகம் உய்ய வரந்தரு திருவினர்
மெய்யகம் கனிந்தனர் மண்ணுயிர் களித்தன
இறையே புவியகத் தவதரித் திடினும்
மறைமுதல் வரினும் மரபு குருவழி (70)
ஆதலால் எற்குமுன் அம்புவி போந்திடு
நீதர்தான் யாவர்? நிகழ்த்துதும், என்ன
மூதுரை மாண்பினர் முதுபெரும் தனிகை
மாதவர் அதற்கென மண்ணுல கிவர்ந்து
முக்கனிச் சுவைவிஞ் சுஞ்செந் தமிழ்மொழி (75)
மிக்கிலங் கிடுபுவி தனில்காத் திருந்தனர்
இதுயிவ் வாறாய் எழில்தமிழ் நாட்டில்
இதமுயர் மார்க்கம் பட்டிநல் லூரில்
தீன்குல திலகம் ஜமால்உ சேனும்
தேன்மொழி யரசி பெரியதாய் அம்மையும் (80)
வாழ்ந்தனர் ஆண்மக வதுதனை வேண்டி
சூழ்ந்தனர் நேர்த்திக் கணங்களும் விரதம்
இறைவர் திருவுளம் இரங்கி அருள்தர
மறைமுதல் பெரியதாய் கருவினி லமர்ந்தனிர்!
ஐயிரு திங்கள் அழகுற வளர்ந்து (85)
மெய்யெழில் உருவினர் அவதரித் தருளினிர்
மண்ணக மன்னுயிர் வாழ்த்தின, வணங்கின,
விண்ணக அமரர்கள். மிகமகிழ்ந் தேற்றினர்,
புள்ளினம் ஆர்த்தன, பொழில்மலர் மலர்ந்தன,
தெள்ளிதின் தென்றல் தவழ்ந்துமைத் தழுவிட (90)
மதிகதிர் போற்றின, மகிழ்கடல் ஆர்த்தன,
சொன்மழை பொழியும் சுகந்தவான் கொண்டலை
நன்மழை பொழிய நானிலம் செழித்தன,
வாழி சோபனம்! வாழிசோ பனமென
ஆழி அலைக்குழாம் ஆர்த்து முழங்கின! (95)
செல்லமே! திகட்டாத் தீஞ்சுவைக் கட்டி
வெல்லமே! மெல்லென வீசிடும் தென்றலே!
தேனே! செழுங்கனிச் சுவையே! எம்குலக்
கோனே! இன்ப கீதம் இசைவரிக்
குயிலே! வானெழில் மயிலே! தாங்கள் (100)
நாழியோர் மேனி கடிகையோர் வண்ணமாய்
ஆழிவாழ் ஐய! அழகுற வளர்ந்தனிர்
ஊழி முதல்வ! உயிர்ப்பயிர் தழைக்க
மேழிகைப் பிடிக்கும் வேந்தர் திருக்குலம்
தன்னில் பிறந்து வளர்ந்தீர் திருமிக (105)
மழலை பொழிந்து மகிழ்விளை வாடல்
எழிலுறப் புரிந்திட ஈன்றோர் களித்தனர்.
கலையெலாம் ஓருரு வான கற்பகமே!
நிலையுயர் நித்யமே! நிகரில் மன்னவா!
எழுத்தறி வித்த இறையே! தாங்கள் (110)
எழுத்துகள் கற்றீர் ஈராண் டுகள்வரை
ஓதா துணர்ந்திடும் ஒருதனித் தலைவர்
ஓதினீர் மறைகள் உலகுவந் திடவே
அதுகால் ஆவினம் மறிகளும் பெருக
இதமாய் மேய்ப்பர் இலையெனும் நிலைவர (115)
ஆறறி வினமெமை இன்றிவண் மேய்க்க
மாறிலா தன்று மறிமேய்த் தனிர்காண்!
வளர்ந்தனிர், சிறந்தனிர், அங்ஙனோர் பெரியார்
உளந்தனில் பதிந்திடச் சொற்பெருக் காற்றினர்
ஈமான் என்னும் நம்பிக்கை கொண்மின் (120)
மாமாண் புடைய சரிகை தவறேல்
மரணம் தன்னில் இருவிதம் உண்டு
கரணம் கருவிகள் துன்புற் றெமனிடம்
சிக்கித் தவித்துச் செல்கதி நரகம்
கக்கிச் கசப்பு வெளியா கிடுங்காண் (125)
மவுத்தாம் மரணம் என்பர் இதனை
தவத்தால் சிறந்த சான்றோர் சார்ந்து
எல்லாம் வல்ல இறைமெய் வழியில்
செல்லும் நல்லான் சிந்தை மகிழ்ந்து
அடக்கம் ஆதல் 'வஃபாத்'தெனலாம் (130)
திடமெய் யடியார் சேர்ந்திடும் சுவர்க்கம்
ஆதலின் அனைவரும் அறநெறி ஓம்புமின்
மாதனம் இறைவனை மறவா திருத்தல்
என்றெலாம் நன்மொழி இயம்பினர் ஆலிம்
நன்றிந் நன்மொழி நெஞ்சகத் தழுந்த (135)
மறையோ துதலும் மணிமொழி கலிமா
நிறைமனத் துடன்பல் கோடிகள் ஓதினீர்!
பெரியோர் துறவியர் என்போ ரிடமெலாம்
அரிதாம் வழிகேட் டயர்ந்தீர் ஐய!
பலனெதும் கிட்டிலை பண்புடை நல்லிர் (140)
வலமிக ராஜ யோகம் பயின்றீர்
மூச்சை அடக்கி அந்தரத் தெழும்பினீர்!
ஆச்சுது மூலம் அனல்கொடு வந்தது
இங்ஙனம் நும்நிலை இயன்றவப் போது
செங்கொழுந் தோடும் சிறப்புடை வனப்பொடு (145)
யௌவனம் வந்தது எழில்மிளிர்ந் திடவே
செவ்விய திறனார் திருவிளை(வு) ஆடல்கள்
புரிந்தனிர்! புவனம் போற்றிட வளர்ந்தனிர்!
அரியநற் றிருமணம் அழகுற நடந்தது
சௌபாக் கியவதி சுலேகா அம்மையும் (150)
செவ்விதின் நும்முடன் சீருயர் நல்லறம்
இயற்றினர் வாழ்வில் இன்பம் நிறைந்தது
செயற்றிறம் மிக்க செல்வர்நெல் வாணிகம்
முயற்சியோ டாற்றமுனைந்தனிர் செய்தனிர்
அயற்சியே கருதா அருந்திறன் விளைவால் (155)
பெரும்பொருள் வளமிகப் பெருகிய காலம்
அரும்பெறல் மகளார் ஆயிசு அம்மை
பிறந்தனர் மனையில் பெருமகிழ் வுறைந்தது
நிறைந்துஇவ் வாறு நிகழ்வுறு நாளில்
அவதா ரம்செய் நோக்கம் அதற்கென (160)
தவமணி முனிவர் தனிகைநன் மணியர்
வருகா வருகை தந்தனர் இனிதே!
குருகோ மகனார் கூடினர் நும்பால்
வாடிய பயிரும் வான்மழை பெற்றது
தேடிய செல்வம் திருக்கரம் சேர்ந்தது (165)
தென்றலில் மலர்மணம் சேர்ந்தது தவழ்ந்தது
கன்றொடு தாயும் கனிந்தினி திணைந்தது
நன்னீர்க் கடலும் நதியும் இணைந்தன
பொன்னார் மலரது நறுமணம் பெற்றது
கதிர்வரக் கமலம் கிளர்ந்து மலர்ந்தது (170)
மதிவரக் குமுதம் மலர்ந்து பொலிந்தது
வையகம் தன்னில் வானகம் இறங்குற
மெய்யகம் விடிந்து மெய்ந்நிலை வாய்த்தது
மெய்யே மெய்யைத் தேடிய ஞான்று (175)
தையும் வந்தது மெய்யும் பொலிந்தது
விண்கதிர் முகிலால் மறைந்துறு காலை
விண்காற் றதனை விலக்க ஒளிர்ந்தது
காணா தனவெலாம் காட்டக் கண்டனர்
வாணாட் பயனெலாம் வாய்க்கச் சிறந்தனர் (180)
இளஞ்சூ ரியன்வளர் எழில்ஒளி திகழ்ந்தது
வளஞ்சேர் மதிகறை நீங்கிச் சிறந்தது
மந்திர ரூபர் தன்திறம் ஆர்ந்தனர்
எந்திர வள்ளல் விண்திறம் ஓர்ந்தனர்
மறையெலாம் ஓருரு வானவர் வானவர் (185)
நிறை நிலை சிறந்து நித்தியர் ஆயினீர்
தேவ ஓவியம் சீர்வ(ண்)ணம் பெற்றது
ஜீவ தயாபரர் திருவுயர்ந் தோங்கினீர்
இங்ஙன மாகவும்
இன்புறு மனையாள் எழிலார் குழவி
அன்புயர் பெற்றோர் சுற்றம் நட்பு (190)
என்பெலாம் பொடிய ஈட்டிய செல்வம்
துன்பென நீத்துத் தொடர்ந்தினிர் குருவை
ஊர்கள் நகர்கள் காடுகள் மலைகள்
பேர்கொள் பெருநகர் கணவாய் கெபிகள்
எல்லாம் நடந்தே கடந்தினிர் குருவொடு (195)
வல்லார் தனிகையர் வழங்கிய வான்கொடை
எண்ணிலாத வற்றை ஏன்றுளம் களித்தீர்
அண்ணலர் உமக்கு வைத்தசோ தனைகளை
வென்றனிர் வெற்றிமே டேறினிர் ஐய!
நன்றிது கண்டு தாதை மகிழ்ந்தனர் (200)
ஈரா றாண்டுகள் இவ்வனம் தொடர்ந்தபின்
பேரார் நாடர் பெருமான் நுமையே
ஆடுகள் மேய்க்கும் பணியினி லமர்த்தினர்
பாடுகொள் பணியதை அணியென ஏற்றனிர்!
ஓராண் டிவ்வா றோடிக் கழிந்தது (205)
சீராளர் உம்மைத் திரும்பவும் அழைத்து
அருட்பெருஞ் சோதியர் ஆகிய நும்மை
திருப்பரங் குன்றத் தவகுகை சேர்த்து
திருவுயர் தவமது செய்திட ஆக்ஞை
அறமெலாம் அருளெலாம் திரள்உரு தாங்கள் (210)
ஊனெலாம் உருக என்பெலாம் இளக
வானகத் தேறி இயற்றினிர் மாதவம்
இதுகா றெவரும் இயற்றிடா வான்தவம்
கதிமா தவர்செயும் கடுந்தவ விளைவால்
கொண்டற் கொடைநிகர் கரங்களில் சன்னதம் (215)
விண்டமை வுற்றன விண்ணவர் நுமக்கே
சங்கு சக்கரம் சூலம் வில்வேல்
பொங்கெழில் உடுக்கை பட்டயம் வாளுடன்
அங்குச பாசம் தண்டா யிதமும்
இதுவரை எவரும் பெற்றறி யாத (220)
பதந்தரு கிள்நா மம்மெனும் சன்னதம்
இவ்வணம் ஈரா றெனும்தவ ஏற்ற
செவ்வையார் சன்னதம் பெற்றனிர் தெய்வமே!
இந்நிலை உணர்ந்த எங்கள் பாட்டையர்
தன்னிலை மறந்து தவத்தமர்ந் திடுநும் (225)
முன்னிலை யமர்ந்திட மெய்யுணர் தாங்கள்
வணங்கிகை கூப்பி எழுந்திட முயன்றினிர்!
இணங்கிய அண்ணல் பொறுபொறுவென்று
நீரே பரனெனும் நித்திய மெய்ம்மையை
சீரோங் கிடவே செப்பினர் திண்ணமாய் (230)
அறிவித் திட்டோர் அரும்பெரும் ஆக்ஞை
செறிவுற உரைப்போம் செல்வமே! கேளாய்!
இருபெருஞ் சுமையை இதுவரை சுமந்தேன்,
தரவுமக் கெனவே தாங்கியிங் கிருந்தேன்,
யுகத்தீர்ப் பொன்று, புதுயுகம் புரத்தல் (235)
ஜகத்தினில் நிகழ்த்த நீரவ தாரம்
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நிறுவுக; நல்லுப தேசம்;
பொன்றா வரங்கள் பூதலத் தோர்க்கு
அருளுக” என்றார் அண்ணல் தனிகையர் (240)
திருவுயர் தாங்கள் சிந்தை கலங்கி
பிரியேல் என்னைப் பெரும! பிரியில்
தரியேன் என்னுயிர் என்றனிர் தாங்கள்
அண்ணல் தங்கட் காறுதல் செப்பி
எண்ணம் தெளிய இன்மொழி வழங்கி (245)
அவதா ரத்தின் அருமை உணர்த்தி
பவபா ரத்தை தீர்மினென் றுரைத்தார்
ஒருவா றெம்மான் உள்ளம் தேறி
குருசொல் ஆணை கடவா வண்ணம்
தாதையைப் பிரிந்து தனிவழி நடந்து (250)
நீதிமெய் வழியை நீனிலத் தோர்க்கு
மதுரையாம் பதியிலும் துறவிய ரிடத்தும்
விதவித மாக விளம்பியும் ஏலா
நிலைதனை உணர்ந்து நகரது நீங்கி
அலைவுறா நெஞ்சர் வாழ்சிறு ஊர்களில் (255)
சென்று மெய்வழியைச் செப்பிட முனையும்
நன்றுவான் மீகர் தலம்திருப் புத்தூர்
தங்கியங் கிருந்து தருமெழில் அருண்மொழி
பொங்கிடும் அமுதப் பொழிவினை மாந்தியோர்
செங்குமு தம்தரும் தேனினைச் சுவைத்தோர் (260)
தங்களின் சீடர் ஆயினர் அவருள்
உம்முசல் மாவெனும் உத்தமி குடும்பம்
செம்மைசேர் செட்டி நாட்டினோர் நல்லார்
செய்வழி தேடிச் சிந்தை கனிந்தவர் (265)
மெய்வழி சேர்ந்து மிக்கினி துயர்ந்தார்
அருள்வழி சார்ந்த ஆன்றோர் பெருகுற
இருள்நெறி நெஞ்சினர் இடையிடைச் சில்லோர்
மருள்மொழி புகன்றும் வம்புகள் செய்தும்
பெருநெறிக் கிடர்கள் புரிந்தனர் எனினும் (270)
குருமகான் தாங்கள் கொண்டிலிர் தளர்வு
மீண்டும் ஒருகால் மேதகு தனிகையர்
ஆண்டினி திருந்து சின்னாட் சென்று
மூல வளநா டேகல் மொழிந்தார்
சீலர் தாங்கள் சிந்தை நொந்தனிர் (275)
அதுகால்
“இன்னுமா நானிவ் வுடல்சுமந் திடுதல்
பொன்னுமாக் குன்றே புகல்க” வென்றுரைத்து
அண்ணல் பிரிந்திட ஆற்றொணாத் துயருடன்
நண்ணிப் பிரான்மலை நற்றவம் புரிந்தீர்
ஆங்குறு சாமியா ரம்மை கண்டு (280)
ஓங்கும் தவத்தினர் உயர்நிலை வியந்து
அண்ணலைப் பணிந்து கனிந்தினி துருகி
விண்ணவர் தாங்கள் வருகதன் னூர்க்கெனும்
தென்னா டுடைய சிவனார் தாங்கள்
சின்னிபந் தனையுடன் ராஜகம் பீரம் (285)
சென்றாங் குறைந்தீர்; சீடர்கள் நிறைந்தனர்
நன்றிவ் வாறு நடந்திடு காலையில்
ஆங்குத் திருப்புத் தூரினில் அன்பின்
பாங்குயர் சீடர் பரமரைக் காணா(து)|r}}
ஏங்கினர் தேடி இளைத்தனர் நெஞ்சம் (290)
சாங்குகோள் கடந்த சாயுச்யர் ராஜ
கம்பீ ரத்தினில் கனிந்துறல் கேட்டு
தம்பிரான் தனைவந் தேதரி சித்தனர்
பிரிந்ததைச் சொல்லிப் பெரிதும் வருந்தினர்
அருந்தவ ஐயனீர்! ஆவன உரைத்து (295)
அங்குசின் னாளும் இங்கு சின்னாளும்
பொங்குப தேசம் புரிகுவம் என்றனிர்!
தண்டா மரையின் மலர்த்தேன் நாடி
வண்டுகள் போந்து தேனுணல் போல
மதம்குலம் கருதா மக்கள் திரண்டு (300)
கற்பகம் பூத்து சுவைத்தேன் பிலிற்ற
பொற்புகு வண்டுகள் போந்து உணல்போல்
தற்பரா பரர்நும் திருப்புகழ் கேட்டு
நற்றிருச் சிந்தையர் நாடிவந் துற்றனர் (305)
வானவர் தங்கள் மாட்சிமை தெரிந்த
ஞானக வேட்கையர் நண்ணினர் நும்பால்
மதம்குலம் கருதா மக்கள் திரண்டும்
பதமலர் பணிந்து பரவுதல் கண்டு
மதவெறிக் கொடிய அரக்கர் பொறாது (310)
நிதம்புதி யவர்எம் நேசநா யகருமை
அழித்திட முயன்று அவத்தர்கள் கூடி
ஒழிக்கும் உபாயம் பற்பல செய்தும்
நிறைவுற லின்றி நெஞ்செறி வுற்று
இறைதவத் தூன்றி இருந்தவக் குடிற்குத் (315)
தீவைத் திட்டனர் தம்குலம் கெட்டனர்
எங்களின் சாமிநீர் எரிதழல் மீண்டு
தங்கமா மேரு தனிவழி நடந்து
தீக்கா யங்களால் தேகம் துன்புற
தாக்கும் பசி,கொடும் தாகம், தனிமை (320)
வேதனை யோடு வேற்றூர் சேர்ந்தனிர்
காரைக் காலில் சிறிதே தங்கி
சீரைத் தேடும் சீடரை எண்ணி
மீண்டும் திருப்புத் தூரெழுந் தருளினிர்!
வாடிய பயிராய் மனங்கசிந் திருந்தோர் (325)
நீடிய மகிழ்ச்சியொ டுமைஆ தரித்தனர்
இனிதிவ் வாறு இலங்கிய காலம்
கனிமொழிச் சீடர்கள் ஆண்பெண் பாலர்கள்
திரள்திர ளாகச் சேர்ந்துவந் துற்றனர்
அருள்பொழி காலம் ஆயிழை ஆச்சிமார் (330)
தமைஉப சரிக்கத் தாயனை பண்பினர்
உமையெனும் ஒருவர் வேண்டுமென் றெண்ணினிர்
ஆங்குநற் சிந்தையர் பாட்டையர் குறிப்பும்
தீர்க்கத் தரிசிமார் சீர்மொழி வரைவும்
செப்பிய இலக்கணத் திருமிகு ஒருமகள் (335)
ஒப்பிலாச் சம்செனும் உம்முசல் மாமகள்
இப்பெரும் திருச்செயற் கினிதுறும் என்று
செப்பரும் தவத்துறை செம்மல் எண்ணினிர்
அம்மை பருவுடல் உடைமை கருதி
செம்மையாய் உப்பிலா நோன்பது வைத்தனிர்! (340)
பதினொரு திங்கள் பத்தியம் நிறைவுற
இதமுயர் சம்சு இளைத்தெழில் உற்றனர்
இத்தகு இளமான் அனையமா தரசியைப்
பத்தினி யாய்க்கொளப் பரமர்நீர் எண்ணி
உம்முசல் மாவுளக் கருத்தினை வினவ (345)
மெய்ம்மைநன் குணர்ந்த மேதகு அம்மை
உள்ளம் களித்து உவப்புடன் சம்மதம்
தெள்ளத் தெளிவாய்ச் செப்பி மகள்தனைக்
குருகா ணிக்கை எனச்சமர்ப் பித்தனர்
மறுவில் சீர்திரு மணவிழா வினுக்கு (350)
உறவினர் ஊரார் எதிர்ப்புகள் உரைத்தனர்
அறம்சொல் தவறா அன்னைபெண் சிங்கம்
ஒருமனத் துணிவொடு வருவதை எதிர்கொடு
திருமணம் நிகழ்த்த உறுதியும் பூண்டனர்
உலகிது காலம் காணொணா விந்தையாய் (355)
அலகில் சோதியர் அருள்மண மகட்கு
வெள்ளைக் கலைதனை அணிவித் தெழில்மணம்
கொள்ளவும் உற்றார் கொண்டனர் வேதனை
பெண்மான் சம்சு பனிமதி நாச்சியார்
விண்மா தென்று விளம்பினீர் தாங்கள் (360)
திருமண மறுநாள் குருமணி பர்மா
பெருநகர் ஏகினிர் ஊர்அலர் தூற்றினர்
ஐந்தொடு நாற்பது நாட்கடந் தையர்
பைந்தமிழ்த் திருப்புத் தூர்வந் துற்றனிர்
உம்முசல் மாவொடு உற்றம் சுற்றம் (365)
தம்முளம் துயர்கடந் தேமகிழ் வுற்றனர்
முன்னை முதல்வர் அன்னை பனிமதி
தன்னை ஹஜ்உடை தரிக்கச் சொற்றனிர்
நாயகர் தாங்களும் நற்றவ அன்னையும்
நேயமிக் கேகி மக்கா மதினா (370)
சற்குரு தனிகைத் திருமணி நல்லூர்
பொற்குணைன் நகரம் போந்து செருசலேம்
எல்லாம் கண்டு இனிதுளம் களித்து
நல்லார் நாயகி நன்மணி யுடனே
பொல்லாப் பிணிதவிர் பூதலம் போந்தனர் (375)
எல்லாச் சீடரும் இனிதுபூ ரித்தனர்
சின்னாட் சென்று தேவியா ருடனே
தென்னா டுடைய சிவபிரான் தாங்கள்
அன்னையாருடனே அழகொளிர் பொழில் வனம்
நைமிசா ரண்ய நற்குகை ஏகினிர் (380)
மைவணக் குகையுள் மாதவம் புரிந்தனிர்
ஓராண் டங்ஙண் உயர்தவ மியற்றி
சீரார் ஞான நூல்கள் அருளி
திருப்புத் தூர்க்குத் திரும்பவந் தினிது
அருளா சிரமம் ஆங்கொன் றியற்றினிர் (385)
தாயினும் கருணைத் தயாபரர்க் கங்கு
தீயவர் செய்தொடர் தீங்குகள் கருதி
மைசூர் செல்ல வாகன மேறினிர்!
மெய்ச்சீர் சீடர்கள் மொய்த்துஅங் கெழுந்து
பிரியேல் என்று பெரிதும் வேண்டிட (390)
பெரியோர் தாங்கள் மதுரையிற் றங்கி
அருப்புக் கோட்டைப் பாதையின் மேற்பால்
இருப்புப் பரன்மே டென்னும் இடத்தில்
பொன்னரங் கியற்றினிர் பட்ட பாடுகள்
சொன்மொழிக் கடங்கா சுருதி இடங்கொளா (395)
அவ்வண மாற்றி அருள்திரு செங்கோல்
செவ்வணம் புரியும் சீர்மிகு காலம்
மெய்யர சாட்சி மிக்குயர் அந்நாள்
வையகப் பெரும்போர் வந்தது அதற்கு
பொன்னரங் காலயம் போர்க்களக் கருவி (400)
தன்னை வைத்திட தகுதியென் றாட்சியர்
நன்னயமாக நயந்துமை வேண்டினர்
பாங்குயர் தாங்கள் பெரிதும் ஆய்ந்து
ஆங்கு அரண்மனைக் கெதிர்மனை யுண்டோ?
அவர்விழை வேற்று ஆலயம் தன்னை (405)
அவருக் களித்து அகன்றினிர் மதுரை
ஆலயம் மாற அரசு மாறும்
சீலர்அக் காலம் ஜன்னலின் மேலே
ஆலயம் மாற அரசு மாறும்என
சீலமாய் வருநாள் நிகழ்வினைக் கல்லில்
பதித்த தீர்க்கத் தரிசனம் நிறைவுற
விதித்த வாறே வெள்ளையர் போயினர் (410)
திருமுடி சூடிச் செங்கோ லோச்சிய
அருளர சன்னல் அந்நகர் நீங்கிக்
கொடிகுடை விருதுகள் கொண்டு வண்டிகளில்
விடிதிசை நோக்கி வேந்தர்நீர் போந்தீர்
பல்திசைச் சென்று, பாங்குடன் ஆய்ந்து (415)
நல்புதுக் கோட்டை நகரதன் மேற்பால்
ஊரல் மலையின் சாரல் சார்ந்து
சீரார் பாப்ப னாச்சியின் வயலில்
சாலை அமைக்க தேர்ந்தனிர் அஃதினைச்
சோலை உத்யோ வனமாய் ஆக்கப் (420)
பாடு பட்டது பாறைகள் உருகும்
காடுகள் திருத்தி கழனிக ளாக்கி
மேடுகள் மாற்றி விடுதிகள் அமைத்து
உய்வழி யருளும் உயர்தவப் பேருர்!
மெய்வழிச் சாலை மெய்யூர் ஆக்கினிர்! (425)
ஆழிவாழ் ஐயர்நீர் அமர்வுறு மிதனை
ஊழி விதியென உரைத்திடு தீர்க்க
தரிசிமார் வரைந்த தரிசினை மணிமொழி
வரிசை வரிசையாய் வந்து குவிந்தன
காலமும் இடமும் கணிதமும் அறிந்த (430)
சீலர்கள் ஞானிகள் சித்தர்கள் முத்தர்கள்
வரைந்துரை மொழிசெயல் மாட்சிக ளெல்லாம்
நிரைநிரை யாக நிகழ்ந்தன இங்ஙண்
ஓங்குயர் மாட்சி உத்தியோ வனத்தில்
தேங்கமழ் சாலைச் சித்திகா னகத்தில் (435)
பூங்கமழ் பொன்னரங் கையரே! தாங்கள்
பாங்குயர் ஞானச் செங்கோல் ஓச்சினிர்!
தெய்வமே தங்கள் தனிப்பெருந் தயவால்
உய்யவந் துற்ற உலகினர் யாவரும்
அருட்கடை நோக்கால் நரர்மனு வாகி (440)
இருட்குலம் நெரிய மறுபிறப் புற்று
தேவர்கள் ஆகிச் சிறந்தனர் மன்னோ!
இறவாப் பெருவரம் இங்ஙனம் பெற்றனர்
பிறவா நெறிபே ரின்பம் உற்றனர்
ஐயனே! தங்களின் அருட்பெருங் கொடையால் (445)
இருள்ம டிந்துமெய்ப் பொருள்வி டிந்தது
மருள்ம றைந்துமெய் மறைகள் துலங்கின
குலங்கள் அனைத்தும் கூடிக் குலவின
நலமிகு மதங்கள் நன்கொருங் கிணைந்தன
பேதம் மறைந்தது வேதம் விடிந்தது (450)
நாதம் விளைந்தது போதம் பொலிந்தது
திறவுகோல் ஒன்றால் மறைகளின் பூட்டுகள்
திறந்தன சிறந்தன தெளிந்தன ஒளிர்ந்தன
ஒருதனி முதலே உயிர்க்குயி ரெனுமெம்
திருவளர் தவமே! தெய்வமே! தங்கள் (455)
திருமுக தரிசனை இருவினை தீர்க்கும்
அருள்மொழி கேட்கில் அருமறை துலங்கும்
நாமம் நவின்றால் நலம்பல நிறையும்
சேமம் சிறக்கும் சிந்தை தெளியும்
மூவா முதல்வரின் மொழியமு தாலே (460)
சாவா வரமும் சாயுச்ய நிலையும்
ஜீவனின் முத்தியும் தேகநல் முத்தியும்
ஓவா அறம்புரி உயர்நிலை வந்துறும்
எண்ணிய எய்துறும் சொல்லிய நிறைவுறும்
வண்ணமெய் வாழ்வில் வளம்நிறைந் தோங்குறும் (465)
குறையெதும் இல்லை நிறைவதே என்றும்
மறைதெளி வுண்டு துரையருள் நன்று
உடற்பிணி தீரும் உயிர்ப்பிணி மாறும்
திடமருள் தயவால் தீரா வினையறும்
மொழியமு தாலே மறலியே நையும் (470)
விழிதய வாலே வெற்றிகை வல்யம்
ஐயா! எனது ஆருயிர்த் தேவே!
மெய்யா! விமலா! வள்ளலே!கோவே!
எல்லாம் வல்ல ஏரார் நாயகா!
பல்லுயி ரனைத்தும் படைத்தருள் தூயகா! (475)
தவமிகச் செய்து பலனெமக்கீந்தீர்!
சிவபரம் பொருளே பாடுகள் பட்டு
அவனியில் எமக்கு அருள்வர மளித்தீர்!
குவலயத் தோரின் குறைகளை குருவே!
துன்பம் தொலைத்தருள் இன்பமெய் உருவே! (480)
அன்பின் வடிவமே! அருளின்ஓ வியமே!
வரந்தரு திருவே! அறந்திகழ் அரசே!
இரங்கியெங் களுக்காய் இங்கவதரித்து
சிரகிரி அமர்ந்த செழுஞ்சுடர் மணியே!
பரவுல கினிலெமைப் பதித்தருள் வள்ளால் (485)
அத்தனே! சுத்தனே! அருட்குரு தெய்வமே!
நித்தியா! நின்மல ரடிபணிந் துய்வமே!
பாரக மெல்லாம் பரவுக மெய்வழி
நேரகர் நீதியர் நாடுக உய்வழி
தவமணி முரசே! சற்சனர் பரிசே! (490)
சிவபரம் பொருள்உயிர் சீருயிர் அரசே!
அறமெலாம் திரண்ட அற்புத வடிவே!
உறவெலாம் கடந்த ஆருயிர்க் குறவே!
தென்னா டுடைய சிவபரம் பொருளே
என்னா ருயிக்குயிளினிக்குமெய் அருளே
மதிப்பினில் அடங்கா மாணிக்க மலையே!
புதுமையிற் புதுமை பூத்தநன் மலரே! (495)
கதியே! பதியே! மதியே! நிதியே!
விதியெலாம் கடந்த மெய்ப்பொருள் நிலையே!
வண்ணஓ வியமே! மெய்யர்கா வியமே!
தஞ்சம் சரணம் தாழ்ந்து பணிந்தோம்!
கஞ்சமென் மலர்த்தாள் சிரமிசை அணிந்தோம்! (500)
வாழ்க!நின் செங்கோல் வாழிய!
வாழ்க!ஊழூழி மெய்வழி ஓங்கவே!
- மெய்வழி பக்தி இலக்கியங்கள்
- மெய்வழி அடியார்களின் படைப்புகள்
- சமய இலக்கியம்
- அகரமுதலான வரிசையில் படைப்புகள்
- இறையியல்
- சிற்றிலக்கியங்கள்
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
- கவிதைகள்
- திரட்டு நூல்கள்
- 2017 படைப்புகள்
- பாடல்கள்
- தற்கால புலவர்களின் படைப்புகள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்