திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/052.அறம் வேண்டகம்
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
52. தாண்டகம்
[தொகு]இலக்கணம்:-
தாண்டகம் என்னும் செய்யுளில் மாந்தர்தம் புகழையோ இறைவனின் புகழையோ பாடுவது தாண்டகம் என்னும் இலக்கிய வகையாகும்,எண்சீரான் வருவது நெடுந்தாண்டகம் எனப்படும். அறுசீரான் வருவது குறுந்தாண்டகம் எனப்பெறும்
மூவிரண் டேனும் இருநான் கேனும் சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர் கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள் அறுசீர் குறியது நெடிய தெண்சீராம் - பன்னிரு பாட்டியல் 196
தாண்டகம் என்பது செய்யுள் ஓரடிக்கு இருபத்தேழு எழுத்து இசைய இயம்புதல். அதுவே அளவியல் தாண்டகம் அவற்றுளஓர் அச்சரம் அஃகில் அளவழித் தாண்டகம் - பிரபந்த தீபம் . 79
இருபத்தேழெழுத்து முதலாக உயர்ந்தவெழுத்தினடி யினவா யெழுத்துங் குருவுமிலகுவு மொத்து வந்தன அளவியற் றாண்டக மெனவும் எழுத்தொவ்வாது மெழுத்தலங் கொவ்வாதும் வந்தன அளவழித்தாண்டகம் எனவும் படுமே - தொன்னூல் விளக்கவுரை ப.205
இதன்கண் என்னை ஆண்டு கொண்ட குருபரர் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் திருப்புகழை விதந்து ஓதலாகிறது.
அறம் வேண்டகம்
காப்பு
நேரிசை வெண்பா
ஆண்டவர்பொற் பாதம் அடியேன் சிரம்புனைந்தேன்
வேண்டு வரம் தந்தருளும் மெய்யரசே! - தாண்டகம்
பாடத் தயவருள்க! பொன்னரங்க நாயகரே!
தேடற் கருந்துணைநும் தாள்!
நூல்
அறம்வேண்டு நெடுந்தாண்டகம்
எண்சீர்க் கழிநெடிலடி அளவழி நெடுந்தாண்டகம்
முழுமுதலோர் திருவுருவம் ஏற்றீர் போற்றி!
முனிவர்தம் தனித்தலைவ போற்றி போற்றி!
எழுகதிரின் ஒளிதுலங்கு இறைவா போற்றி!
எனையுமொரு பொருளென்று ஏற்றீர் போற்றி!
உழுதொழில்செய் விரைபாவி உயிர்ப் பயிர்செய்
உத்தமவே ளாண்மையரே போற்றி போற்றி!
பழுதணுகா தெம்முயிரைக் காத்தீர் போற்றி!
பரமசிவ குருவடிவே போற்றி போற்றி! (1)
தொழுதெழுவார் துயரறச்செய் துரையே போற்றி!
தூண்டாத மணிவிளக்கின் சுடரே போற்றி!
வழுவறமெய் வழிகாட்டித் தொடர்ந்தோர்க் கெல்லாம்
மறலியமல் கடத்திநலம் தந்தீர் போற்றி!
பொழுதுபடாச் சுனைமூழ்கு வித்தீர் போற்றி!
போதமுயிர் நாதமணி போற்றி போற்றி!
அழுதுஅடி அடைந்தவரை அரவ ணைக்கும்
அம்பலவா! அருண்மணியே! போற்றி! போற்றி! (2)
பொன்னரங்க நாயகரே போற்றி போற்றி
புரமூன்றும் இளநகையால் எரித்தீர் போற்றி
என்னரங்கத் தருட்தயவால் எழுந்தீர் போற்றி
இனியகனி மொழியமுதம் அருள்வீர் போற்றி
தன்னையறிந் தின்பமுறச் செயதீர் போற்றி
தவத்தரசே தனித்தலைமைப் பதியே போற்றி!
பன்னலங்கள் பெருவரங்கள் வழங்கும் வள்ளால்
பதுமமலர்ப் பொற்றாள்கன் போற்றி போற்றி! (3)
ஈரிரண்டு பிறப்பிடத்தின் வாயி லாக
எழு வகையாம் தோற்றமதைப் படைத்த ஈசா
பாரதனில் மனுக்குலத்தை நித்யத் திற்கே
பண்போங்கப் படைத்தனிர்காண் ஆயின் மாந்தர்
சீருயர்ந்த கடமைதனை மறந்து வீணாய்ச்
சிற்றின்ப நுகர்வுகளில் அழுந்தி மாளும்
நீர்மையினர் எனவுணர்த்தி நெறிப்படுத்த
நிலமிசைவந் தீர்சாலை தேவே! போற்றி! (4)
தன்னையறிந் தேதலைவர் தனைய றிந்து
தருமநெறி மெய்வழியைக் காட்ட வென்றே
தென்னாடு டைசிவமே! அவத ரித்தீர்
திருவுயர்மெய் வழிதன்னில் கூட்டு வித்தீர்!
எந்நாட்ட வர்க்கும்இறை தாங்கள் மன்னோ!
இதையுணர்ந்து தொடர்ந்தோர்கள் உய்வர் தேவே!
பொன்னரங்கர் திருநடஞ்செய் புதுமெய்க் கோட்டை
பொற்பதிமெய் வழிச்சாலை தெய்வம் போற்றி! (5)
உலகவர்போல் திருமேனி தாங்கி வந்து
உண்டுடுத்துத் தொழிலாற்றி வாழ்ந்துகாட்டி
நலமுயர்ந்த மெய்ந்நெறியுள் நலமாய்க் காட்டி
நானிலத்தே மாந்தர்களை ஒருங்கு கூட்டி
பலமதங்கள் சாதிமத பேதம் ஓட்டி
பண்புயர்ந்த அனந்தர்குலம் ஒன்றே ஈட்டி
வலமுயர்ந்த மெய்வழியை வகுத்தீர்! மாண்பார்
வரதகுரு சாலைவளர் தேவே! போற்றி! (6)
குழவியென வளர்காலம் இளமைப் போதும்
குலம்வளர்நற் றொழிலியற்றும் பருவத் தெல்லாம்
அழகரசே! பட்டபடு களமென் சொல்கேன்
அறிவீனர் பொய்க்குருமார் இயற்று துன்பம்
எழிலரசர் தனிகைமணி வள்ள லையர்
இனிதுதடுத் தாண்டுகொண்ட இயல்பென் கூறும்
பொழில்மலர்ந்த கற்பகமே! பொன்ன ரங்கப்
பொற்பகரே! பொற்றாள்கள் போற்றி! போற்றி! (7)
உடல்பொருளும் ஆவியதும் தத்தம் செய்து
உத்தமராம் தனிகையர் பால் உபதேசங்கள்
திடமுடனே செய்தருளப் பெற்றீ ரன்றே!
தேனமுதப் பெருங்கடலில் ஆழ்ந்தீரம்மா!
அடதிடமும் ஆசானின் கிருபை யோங்க
அழகுமனை அருங்குழவி செல்வம் நீத்து
இடமகன்ற வையகத்தோர் உய்ய வென்றே
எம்பெருமான் துறவேற்றீர் போற்றி! போற்றி! (8)
“சொற்கடனைக் கட்டவென்றே செல்கின் றேன்நான்
சூதறியா மாதரசி செல்வச் சேயே!
பற்குணர்என் பரமகுரு தனிகை வள்ளல்
பார்த் திருப்பார் வழி”யென்று விரைந்து சென்று
நற்குணத்தின் சற்குருவின் திருமுன் நின்றீர்
நற்றவரே! துறவேற்றீர்! நயன ரோடு
பொற்பதியே அகிலவலம் புறப்பட் டேகும்
பொக்கிஷமெங் களுக்கருளப் போற்றி போற்றி! (9)
போற்றிசெய்து அகிலவலம் தொடர்கா லத்தே
பொன்மணிநீர் பழகியபல் ஊர் கடந்து
வேற்கரத்தார் தனிகைமணி வள்ளல் உம்மை
மிகச்சோதித் தாரதனில் வென்றீர்! ஐய!
நாற்கார ணர்தாங்கள் நலம் குன்றாது
நம்பிக்கை கொண்டினிது தளராதேகும்
பாற்கடல்பள் ளிநீத்த பரந்தா மா!எம்
பாக்கியமே! பொற்றாள்கள் பணிந்தோம் போற்றி! (10)
பழகாத பல்லூருள் சென்றிர் பாட்டன்
பரிசோத னைகள்பல நிகழ்த்தும் நாட்கள்
எழிலாக எண்ணிருநாள் பசியோ டேக
எந்தைபிரான் அதனிலுமே வென்றீ ரன்றே!
வழுக்கிவிடும் கொடுங்காமத் தீய்க்கும் தாங்கள்
வசப்படுமோ எனச்சோதித் தார்கள் மற்றும்
இழுக்குடைய சோதனைகள் அனைத்தும் வைத்தார்
எம்பெருமான் வெற்றி கொண்டீர்! போற்றி! போற்றி! (11)
இருளடர்ந்த நிழல்பொதிந்த காட்டிற் குள்ளே
இருபெரிய சான்றோரும் சென்ற காலம்
அருமலர்த்தாள் வலிபொறுத்து ஏகும் நாளில்
அடுக்கடுக்காய் சோதனைகள் வைத்தார் வள்ளல்
குருபெருமான் திருநோக்கக் குறிப்ப றிந்து
குருமகவே செயல்பட்ட திறத்தை எண்ணில்
திருவுயர்ந்த நுமக்கிணைதான் வையம் வானில்
செப்பரிது தேவாதி தேவே! போற்றி! (12)
புலியுலவு கானகத்தும் வெறுமை யோங்கும்
பாலைவனம் வெயில்மழையும் பனிச கித்து
நலிவடையாத் திடமுடனே நன்மாணாக்கர்
நானிலத்தில் ஈடில்லார் எனப்பேர் தாங்கும்
வலியுடைய திருத்தோளா! மதினா வோங்கும்
மக்காத பதிசக்ர வர்த்தி தாங்கள்
கலியழித்துப் புதுயுகத்தைப் படைத்தீர் நாதா!
கர்த்தாதி கர்த்தர்பதம் போற்றி! போற்றி! (13)
குருபெருமான் திருஆணை கொண்டந் நாளில்
கோமகனார் மறிமேய்த்த திறமென் சொல்கேன்
அருங்கலைகள் அனைத்தினுக்கும் தலைவா! போற்றி!
அமுதமதி பெருகுநதி அருட்ச முத்ரம்
வருகுமடி யவர்கள்தம் துயரம் மாற்றி
வழங்குகொடை வள்ளலுங்கள் பாதம் போற்றி!
பெருநிதியே! பேராளா! பொன்னரங்கம்
பொலிந்திலங்கத் திருவாட்சி செய்தீர் போற்றி! (14)
தவமுனிவர் தனிகைமணி வள்ளல் நும்தம்
திருமுகத்தைத் திருநோக்கால் தடவி அன்பாய்
தவமிருமின் திருப்பரஞ்சீர் குகையுள் மேவி
சன்னதங்கள் பெறுமினென அருளார் ஆணை
சிவபரமே தங்களுக்கு மொழியத் தாங்கள்
திருவுரைவண் ணம்தவத்தே அமர்ந்தி ருந்து
எவருமிது காறும்பெறாச் சன்ன தங்கள்
எம்பெருமான் தரித்தீர்கள் போற்றி! போற்றி! (15)
மெய்யரசின் அருட்செங்கோல் பருவ காலம்
மெய்வழிநல் லரசாங்கம் இனிது வாய்க்க
ஐயர்தனி கைப்பெருமான் அருள்முன் போந்து
அளவில்தவப் பெரும்மாட்சி உணர்த்தி வாழ்த்தி
பொய்முதிர்ந்த கலியுகத்தை அழித்து வான்மெய்ப்
புதுயுகத்தைப் புரந்தருள மாண்டோர் மீண்டு
வையகத்தே மரணமிலா வாழ்வுற்றோங்க
வாழ்த்தினர்காண் வானோர்கள் போற்றி! போற்றி! (16)
ஊணுறக்கம் அலுப்பயர்வு கருதா ஊக்கம்
உளத்துணிவு கொண்டுதவம் உடற்றி னீர்கள்
வானகக்கோன் மணிவாணி மன்னர் தங்கள்
மலர்க்கரத்தில் சன்னதங்கள் விளங்கி யோங்க
ஊனுருகி எலும்பிளகி வில்வேல் சூலம்
உடுக்கைசங்கு சக்கரங்கள் பதிக்கப் பெற்றீர்!
தேனகத்துத் தேவாதி தேவே போற்றி!
திருக்கயிலை வளவரசே! போற்றி போற்றி! (17)
இதமில்லாக் கலிக்கொடுமை இரிய வேண்டும்
இம்பரெல்லாம் உம்பரென மாற வேண்டும்
புதுயுகமே பூமியினில் மலர வேண்டும்
புண்ணியராய் மாந்தரெல்லாம் மிளிர வேண்டும்
விதியென்னும் எமபடரைத் தாண்ட வேண்டும்
வீண்செயல்கள் உலகைவிட்டு விலக வேண்டும்
மதியரசே! மெய்வழியே வைய கத்தில்
விளங்கவர மருள்புரிக! தேவ தேவே! (18)
கலியுகத்தின் கொடுமைகளைக் களைந்து மெய்யாம்
கிருதயுகம் உற்பவமாக் கிடுமின் மைந்தா!
வலியுகத்தில் ஒன்றுகுலம் ஒன்றே தேவன்
மனிதரெல்லாம் மறுப்பிறப்பால் அமரராகிப்
பொலிந்திடவே மெய்வழியை நிலையாய் நாட்டி
பொய்மடிந்து மெய்விடியச் செய்வாய் மன்னோ!
நலியாதே நடுங்காதே செல்க வென்று
நவின்றார்காண் தனிகைவள்ளல் போற்றி போற்றி! (19)
குருபரர்தம் உரைமணியைச் சிரமேற் சூடி
கொற்றவர்நீர் தனியேகிப் பிரசங் கங்கள்
பெருநகரம். திருப்புத்தூர் பிறசிற் றூர்கள்
புரிந்தீர்காண் உரைகேட்டோர் சீடரானார்
திருவறியாக் கொடியர்பலர் இடர்செய் தார்கள்
தீவைத்து ஆசிரமம் எரியச் செய்தார்
பெருமிடர்கள் பலவென்று பெருமான் தாங்கள்
பொன்னரங்கம் இயற்றினிர்கள் போற்றி! போற்றி! (20)
திருவுயர்பொன் னரங்கம்கண் டரசு கோலோன்
செருக்களத்து கொட்டிலுக்கு ஆக்க வென்று
திருவழிந்த பரங்கியரும் விலைதந் தேற்றார்
சிந்தைமயங் கியஎம்மான் திசைகீழ்ப் போந்து
மருவனஞ்சூழ் ஊறல்மலைச் சாரல் மேவி
மாதவம்செய் ஆலயம்பொன் னரங்கம் செய்தீர்!
குருகொண்டல் திருப்புகழ்கேட் டடியார் போந்து
கோற்றேன்கொண் டனந்தரென ஆனார் போற்றி! (21)
சாதிகுலம் மதப்பிணக்கு தவிர்த்து ஒன்றே
சாதியிறை ஒருவரென்று சாதித்தீர்கள்
நீதிதனை நிலைநாட்டி நித்யம் வாழ்வில்
நிலைப்பித்து பேதமற்ற சமுதாயத்தை
மாதவர்தாம் செய்தீர்கள் மறலி தீண்டா
மெய்மதத்தைத் தோற்றுவித்தீர் வையமெங்கும்
வேதநெறி தழைத்தோங்கி விண்ணோர் போந்து
மெய்வழியாம் உய்வழியில் விளைத்தார் போற்றி! (22)
புலைகொலையும் களவும்கள் காமம் தீய
புகைசினிமா ராஜது ரோக மென்ற
தலையாய எண்வகைப்பா தகங்கள் நீங்கி
சற்சனர்வாழ் பதிதன்னை நிறுவி னீர்கள்
கலைபெரிதாம் சாவாமை கற்பித் தீர்கள்
கானகமெய் வழிசார்ந்தோர் கொண்டார் மெய்ம்மை
வலைப்படுமா னெனமறலி கைதீண் டாத
வான்மெய்வரம் அருள்புரிந்தீர் போற்றி போற்றி! (23)
மறைபலவும் தெளியவொளி துலக்கும் சூர்யன்
மகதியையர் மெய்த்தெய்வம் மாண்பார் ஆர்யன்
துறையிறைதாள் அடைவதற்கே ஒன்றென் றிங்கே
தூண்டாமெய் மணிவிளக்கை ஏற்றுவித்தீர்!
இறைபரமோர் உருவெடுத்து உலகிற் போந்த
எம்பெருமான் எழிற்றாயே! இணைதாள் தஞ்சம்
மறையாத கதிரவனே! வாழி! வாழி!
மறுவில்சீர் மெய்த்தேவே! போற்றி! போற்றி! (24)
இறந்திறந்து மாந்தரெல்லாம் வீணாய்ப் போனார்
இந்நிலையை மாற்றியிற வாமை யீந்தீர்
அறந்திகழ ஜீவப்ர யாணம் ஆகி
அழகொளிரப் பசுமஞ்சள் வண்ணம் பூத்து
நறுமணமாய்க் குருபரர்தீர்த் தம்ம ருந்தி
நற்கோல சுவர்க்கபதி வம்சம் என்று
உறுபிரம்மப் பிரகாசம் சிறக்கச் செய்யும்
உத்தமரே! பணிந்தேம்யாம் போற்றி! போற்றி! (25)
வரம்பெருகு மணிவாணி மன்னே போற்றி
மாதவரே மெய்வழிஆண் டவரே போற்றி
கரம்குவிவார் கதிபெறவே வரந்தந் தாளும்
கணிக்கரிய மாட்சியரே! கலைமெய் வாழ்வே!
சிரம் பணிந்தார் ஜென்மசா பல்யம் ஓங்கத்
திருவருள்செய் தனிகைமணிகுமர ரேறே!
பரம்பொருளே! பசுபதியே! பார்வான் போற்றும்
பற்றரிய பற்றே!நும் பொற்றாள் போற்றி! (26)
இறைசொருபர் திருவுள்ளம் இரங்கி யிங்கண்
இறவாத மனுக்குலத்தை உய்வித் தீர்கள்
குறைவிலதோர் சமுதாயம் உற்ப வித்து
குவலயத்தில் கலியழித்துப் புதுயு கத்தில்
நிறையுடைய அனந்தர்குலம் என்று நாட்ட
நிர்ணயித்தார் நிர்மலரே நீதி யோங்க
மறையனைத்தும் தெளிவுறச்செய் மாமே ரே!நும்
மாமணித்தாள் இதயமதில் வாழ்க! போற்றி! (27)
வந்தவந்த பெரியோர்கள் பார வான்கள்
வருகைதனை எதிர்நோக்கி வரைந்துவைத்த
சிந்தைசெழித் துறுதிபெறும் தீர்க்க மான
தெரிசனங்கள் உரைவண்ணம் வந்த தேவே!
தந்தைஉயிர் அத்தனைக்கும் தாயும் நீரே!
சற்குருவும் இறைவரும்நீர் தரும வேந்தே!
விந்தையுயர் விமலரெனும் சாலை வாழ்வே!
வேதமுதல் ஆனவரே! போற்றி! போற்றி! (28)
செப்படிவித் தைக்கள்ளர் குறிசொல் வோர்கள்
தீயவழி தேர்ந்துகொண்ட சிறியோர் தம்மை
இப்படிமெய் வழிதந்து இடர்தீர்க் கின்ற
ஈடில்லா மாட்சியெலாம் அறிந்து மாந்தர்
ஒப்பரிய திருமுன்போந்(து) அடியார் ஆனார்
ஓங்கிதிரு வடைந்தார்கள் உய்தி பெற்றார்
துப்புடையீர் தாங்களன்றோ தேவ தேவே!
திருவடியைப் பணிந்தேம்காண் போற்றி! போற்றி! (29)
திருவெனுமெய்க் குருபரரே போற்றி! போற்றி!
திங்களணி கங்கையரே! போற்றி! போற்றி!
பெருகமுது பொழிநதியே! போற்றி! போற்றி!
பேதமறுத் தெமையாண்டீர் போற்றி! போற்றி!
அருகணைத்து அமுதளித்து ஆத ரித்து
அடியனின்சொன் மலரேற்றீர் போற்றி! போற்றி!
குருபரரே! கொழுமலர்ச் சேவடிகள் போற்றி!
கோதகல்சீர் மாதவரே! போற்றி! போற்றி! (30)
அறம்வேண்டு குறுந் தாண்டகம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அருட்கோலம் தாங்கி யிந்த
அம்புவி போந்தீர் போற்றி!
இருட் கோள மாகப் கண்டு
இருந்தனிர் எம்மான் போற்றி!
பொருட்கோலம் காட்டி என்னுள்
புக்கர சாண்டீர் போற்றி!
திருக்கோலம் கண்டேன் போற்றி!
திருவருட் தயவே போற்றி!
(1)
வாடாத மலரே! ஜீவ
மணிமன்றின் ஒளியே போற்றி!
தேடாத வானின் மெய்ம்மைத்
தேன்கனிச் சுவையே போற்றி!
கோடா யிதம்கைக் கொண்டு
குவலயம் போந்தீர் போற்றி!
நீடாழி சூழ்வை யத்தில்
நித்தியம் அருள்வீர் போற்றி
(2)
ஏடாயி ரங்கள் கோடி
எழுத்தறக் கற்ற பேர்க்கும்
கூடாத அரிய ஞானக்
கதிரவன் தாங்கள் போற்றி!
வீடாக உயிர்கட் கெல்லாம்
விளங்கு மெய்த் தேவே! போற்றி!
ஈடிலார் அன்றின் றென்றும்
என்னுயிர்த் துணையே! போற்றி!
(3)
களிப்பருள் ஞான நேத்ரக்
காட்சியே போற்றி! போற்றி!
அளியருள் வள்ளால் வானத்
தமரர்மெய் யன்பே போற்றி
ஒளிர்மணி மிளிரும் வள்ளால்
உத்தமா! போற்றி! போற்றி!
தெளிவுயர் மெய்ம்மை நித்யச்
செல்வமே! அருள்வீர்! போற்றி!
(4)
நினதருட் தயவால் பெற்ற
நன்னுயிர் நின்ன தன்றோ!
கனதவத் துறையும் சீமான்
கர்த்தரே! போற்றி! போற்றி!
அனந்தர்தம் அன்னை அத்தன்
ஆன்றசற் குருவும் தெய்வம்
எனவிளைந் தருள்தே வேசா!
இணைமலர்த் தாள்கள் போற்றி
(5)
உலகெலாம் உய்யவென்று
ஒருதனி முதல்வா! தாங்கள்
நலமிகு அவதா ரம்செய்
நற்றவ போற்றி! போற்றி!
வலமுயர் தவம்மிக் காற்றி
மாட்சியார் சன்ன தங்கள்
குலமெம துய்ய வென்று
கொண்டனிர்! போற்றி! போற்றி!
(6)
மேதினி நித்யம் பெற்று
மிக்குய்ய வேண்டித் தாங்கள்
நீதிமெய்ம் மேனி கொண்டு
நீணிலத் தருள்செய் காலை
பாதகர் செய்த தீமை
பகர்வதற் கெளிதோ அம்ம!
வேதியர் சகித்தீர்! பொன்னார்
மெல்லடி பணிந்தோம் போற்றி!
(7)
ஒன்றுநற் குலமும் தெய்வம்
உலகிடை என்று நாட்ட
மன்றுளா டரசே தாங்கள்
மாதவம் புரிந்து கூற்றை
வென்றுமெய் வழியுள் ஆக்க
வேதமுற் றுணர்ந்து ஞானக்
குன்றுநும் மடிகள் மாந்தர்
கொண்டனர் வென்றி போற்றி
(8)
தொன்றுதொட் டுலகில் ஓங்கு
துய்ய மெய்ஞ் ஞான பாட்டை
இன்று நன்றிலங்குச் சீர்மெய்
இனிதுறச் செய்தீர்! போற்றி!
வென்றுமுத் தாபம் கூற்றம்
வெங்கொடு மலங்கள் போக்கி
நன்றுமெய் வழியே எங்கும்
நாட்டினீர்! போற்றி போற்றி
(9)
வேதங்கள் ஆகமங்கள்
விளங்கிட அருள் செய்தேவே!
போதங்கள் மந்தி ரங்கள்
பொலிந்துமெய் யுருவைக் காட்ட
நாதநா தாந்தர் செய்தீர்!
நன்மலர்ப் பொற்றாள் போற்றி!
நீதமெய் வாழியே என்றும்
நிலைத்திட அருள்வீர் போற்றி!
(10)
அலைவறுத் தமரர் பல்கி
அகிலத்தே அனந்தர் என்று
நிலைபெறச் செய்தீர் தேவே!
நின்னரு ளாணை ஓங்க!
வலைப்படு மாந்தர் மீள்மெய்
வழியுயர்ந்திடவே சாகாக்
கலைதனை அருள்செய் தேவே!
கமலமென் பொற்றாள் போற்றி
(11)
வருணமென் றுரைத்து மாந்தர்
வன்கொடும் பேதம் செய்கால்
திருவுயர் தங்கள் மெய்ம்மை
சீரினர் வருணம் என்று
அருண்மழை பொழிந்தீர்! போற்றி!
அற்புதம் இதனின் வேறில்
கருணையங் கடலே! போற்றி!
கதிதரு இறையே! போற்றி!
(12)
குருபரர் எனுமோர் மாட்சி
குவலயத் தேற்றீர் போற்றி!
பெருகுறு அமுத தாரை
பொங்குமா காய கங்கை
வருகுற மாந்தினோர்கள்
மறலியை வென்றா ரன்றே!
திருமிகு தவமே ரென்னும்
தெய்வமே! போற்றி! போற்றி!
(13)
மந்திர உருவே! வேத
மாமறைப் பொருளே! போற்றி!
எந்திர வள்ளால் நித்யம்
ஈந்தருள் அரசே! போற்றி!
செந்திரு வோங்கும் செல்வச்
செம்மலே! போற்றி! போற்றி!
எந்தைமெய்ச் சிந்தை வாழ்க
எம்முயிர்க் குயிரே! போற்றி!
(14)
உலகெலாம் உய்ய வந்த
ஒருதனி முதலே போற்றி!
நலமெலாம் திரண்ட இன்ப
நாயகா போற்றி போற்றி!
இலகுமெய்ச் சாலை மேவும
இறைவரே! போற்றி! போற்றி!
வலமிகு பொன்மே ரென்னும்
மாதவா! போற்றி! போற்றி!
(15)
இணைதுணை கூற வொண்ணா
எம்பெரு மானே! போற்றி
புணையெனப் பிறவி ஆழிப்
பெருந்துயர் கடத்தி யுய்க்கும்
அணையென அமுதம் தேக்கும்
அருட்குரு பரரே! போற்றி
பிணைநிக ரில்லா இன்பப்
பெருந்திரு வருள்வாய்! போற்றி!
(16)
அறமிளிர் பொழிலே சாலை
அனந்தர்தம் தலைவா! போற்றி!
நறுமலர் செண்ப கத்தின்
நன்மண மேனி போற்றி!
நிறைமொழி மதினாச் செல்வ
நித்தியர் எங்கோன் போற்றி
மறலிகை தீண்டா மெய்யாம்
மதமருள் அரசே! போற்றி!
(17)
அன்புயர் சிவமே மாலே
அருட்பிரம்ம வஸ்து போற்றி!
இன்பமே திரண்ட சீரார்
எழில் மணி வாணி மன்னா
மன்பதை ஜீவர் மாளா
வகைதரு துரையே போற்றி!
பொன்பதி சாலை மேவும்
பொன்னரங் கரசே போற்றி!
(18)
தீர்க்கநற் றரிசி மார்கள்
திருமிகு நோக்கின் வண்ணம்
கார்க்கு மெய் கொண்ட நாதா
கழல் மலர் போற்றி! போற்றி!
பார்க்குள்வான் தவம்செய் மாட்சி
பரமரே போற்றி! போற்றி!
ஆர்க்குருமெம் மாரு யிர்க்கு
அருந்துணை யரசே! போற்றி!
(19)
கனிமொழி மதுர வாக்கால்
கனவரம் அருள் செய் வள்ளால்
இனிக்கதி தாங்கள் தேவே!
ஏந்தலே போற்றி போற்றி
முனிவர்கட் கரசே போற்றி
மூதுரை நாதா போற்றி
தனிப்பெருங் கருணை யோங்கும்
தெய்வமே! தஞ்சம்! தஞ்சம்!
(20)
- மெய்வழி பக்தி இலக்கியங்கள்
- மெய்வழி அடியார்களின் படைப்புகள்
- சமய இலக்கியம்
- அகரமுதலான வரிசையில் படைப்புகள்
- இறையியல்
- சிற்றிலக்கியங்கள்
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
- கவிதைகள்
- திரட்டு நூல்கள்
- 2017 படைப்புகள்
- பாடல்கள்
- தற்கால புலவர்களின் படைப்புகள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்