திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/099.உயர் வருக்க மாலை
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
99.வருக்க மாலை
[தொகு]இலக்கணம்:-
வர்க்கம் என்பது சொல், பிரிவு, கிளை என்னும் பொருள் தரும். மொழி முதலாக வரும் எழுத்துகளின் கிளை எழுத்துகளை வர்க்கம் என்னும் சொல் குறிக்கிறது.
பன்னீருயிரும் கசதந பமவய ஞஙவீ ரைந்துயிர் மெய்யு மொழிமுதல் - நன்னுல் எழுத்ததிகாரம் -102
மொழிமுதல் ஆகிய எழுத்துக் கெல்லாம் வருக்கம் உரைப்பது வருக்க மாலை. - பன்னிரு பாட்டியல் - 175
வருக்க மாலையே வருக்கமாய்ச் செய்யுள் மொழிமுதல் எழுத்தெல்லாம் மொழிவது முறையே. - பிரபந்த தீபம் - 33
மன்னகவ லெட்டாய் வருக்கவெழத் தான்வருமேல் முன்வருக்க மாலை மொழி - வெண்பாய் பாட்டியல் - 58
வற்கவுயிர் கசதநப மவவெட்டின் சூழ் மருவகவல் வரின் வருக்க மாலை. - சிதம்பரப் பாட்டியல் - 32
அகர முதலாக உயிரெழுத்து பனிரெண்டும்(12); க, ச, த, ந, ப, ம என்னும் இவை ஆறும் உயிரொடு புணர்ந்தும்(6 X 12 = 72); வகரத்துள் வ, வா, வி, வீ, வெ, வே, வை, மற்றும் வௌ என (8) எட்டும்; ய, யா, யு, யூ, யோ மற்றும் யௌ என (6) ஆறும;ஞ, ஞா, ஞெ, ஞொ, என(4) நான்கும் ஆக ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பாடல்வீதம் 12+72+8+6+4=102; 'ங'கரமும் கூடி 103 பாடல்களால் இயற்றப் பெறுவது வருக்க மாலை.
மேற்கூறிய பாடல்வகையில் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் மீது எழுதப்பெற்றது இப்பனுவல்
உயர் வருக்க மாலை
காப்பு
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அறவாழி சாலையண்ணல் அருட்தாள் போற்றி
அனைத்துயிர்க்கும் உயிரான அன்னாய் போற்றி
பிறவாழி கடத்தும்பெரு புனையே போற்றி
பெம்மானே பெருந்துறைமே வரசே போற்றி
நறவாரும் தார்புனைந்த நாதா போற்றி
நாதநா தாந்தமொளிர் நலமே போற்றி
இறவாத வரமருளும் இணையில் தெய்வ
இருதிருத்தாள் சிரம்புனைந்தேன் காப்பதாமே!
நூல்
அன்பதுவே சிவமென்று அறைந்தார் முன்னோர்
அதுவான பரம்பொருளே அகிலம் உய்ய
அன்பனைத்தும் திரள்உருவாய் அவத ரித்தீர்!
அனந்தர்குலம் உற்பவித்தீர் அமல வாழ்வே!
இன்பவுரு ஈந்தருள திருவுள் எண்ணி
இருபதங்கள் மண்படிய நடஞ்செய் தேவே
துன்பமொழித் தெமையாளும் துரையே என்றும்
துணைசாலை ஆண்டவரே பணிந்தேன் போற்றி!
(1)
ஆரூரா ஆதிகரு வூரா முன்னை
ஆதிக்கும் முன்னேஅ னாதி யான
சீராரும் செங்கமலப் பதத்தோய் இந்தச்
செகமனைத்தும் படைத்தருளிச் காத்து மாந்தர்
நேரார்மெய் வழிநடந்து நித்யம் கொள்ள
நிறைமொழியாம் மறைபலவும் வகுத்து ஈந்தீர்
கார்கொண்டல் தனைவிஞ்சும் கொடைக்க ரத்தோய்
காருண்யா ஆதியே காசி னிக்கே.
(2)
இவன்பவடி வம்தரவே இந்நாள் இந்த
எழில்உத்யோ வனச்சாலைக் கெழுந்த தேவே
பொன்மலர்த்தாள் புவிமாது களிப்பப் பேரார்
பாட்டையர் தனிகைமணி வள்ளலோடு
அன்புநடம் பயின்றுதுன்பம் அனைத்தும் ஏற்று
அருட்செல்வக் குவையின்பம் எமக்கு ஈந்த
பொன்மனத்துப் பொன்னரங்கத் தையா எற்குப்
புகல்தங்கள் பொற்பதமே தஞ்ச மானேன்.
(3)
ஈடிணையில் புகழாரும் இறைவா! யாங்கள்
இகவாழ்வில் மூழ்கிஅயர்ந் திட்ட காலை
தேடரிய தவச்செல்வம் வழங்க வென்றே
திருவுள்ளம் இரங்கியருள் பாலித்தீர்கள்
கூடழியா முத்திதரும் கோவே! தேவே!
குருவடிவம் ஏற்றுவந்த கருணை வேந்தே!
பாடெல்லாம் தங்களது பலனெ மக்கு
பாரிலிது போலெங்கு மென்று மில்லை.
(4)
உலகுயிர்கள் அனைத்துள்ளும் உறைந்தூண் தந்து
உவந்தூட்டி வளர்த்துமுயிர்க் குயிரே யாவும்
நலம்பெறவே நல்வரங்கள் அருள வந்த
நாயகரே நற்றவரே அகில மெல்லாம்
வலம்வந்தீர் வள்ளல்தனி கையர் கூட
மாதவத்தீர் பட்டபடு களமென் சொல்கேன்
குலகுருவே கோதகல்சீர் குணத்தின் குன்றே
குடிமுழுதும் தங்கட்கே அடிமை ஆண்டே!
(5)
ஊனப்பட் டழிவதற்கே விரையும் இந்த
உலகவருள் கிடந்தலைந்த எளியேம் எம்மை
தீனதயா ளர்தாங்கள் தயைசெய் தேற்று
திருவனைத்தும் தந்தனந்தர் தமக்குள் ளாக்கி
வானகத்தின் வைப்புநிதிப் பெட்டகத்தை
வழங்கிடுமாண் பெண்ணியெண்ணி உருகும் நெஞ்சம்
தேனகத்துச் செம்மலரே! திருவே! தங்கள்
திவ்யமலர்ப் பதமெமது புகலிங் கையா.
(6)
எப்பாரில் எப்பதத்தில் எங்கும் என்றும்
ஈடிணையும் ஒப்புவமை கூற வொண்ணா
செப்பரிய திருவோங்கு தேவ தேவே!
சீருயர்மெய் வழியையிச் செகத்தி னோர்க்கு
முப்பாலாய்ப் பொங்கஅருள் அமுதம் ஈந்து
முப்பாழைத் தாட்டிடுமெய்க் குருவே போற்றி
இப்பாரில் இப்பரிசு ஈந்த வள்ளால்
இணைமலர்த்தாள் சிரமிசையே அணிந்தேன் உய்ந்தேன்.
குறிப்பு :- முப்பால் - வீடுபேறு, முப்பாழ் – மரணம்
(7)
ஏதம்அறுத் தெமையாண்ட இறைவா போற்றி
இறவாத வரமருள்செய் ஏந்தல் தாங்கள்
பூதலத்தே பொலிந்திலங்கும் ஞான மேரு
பொற்பகமே கற்பகமே பெருநற் பேறே
சீதனங்கள் எழுவகையும் உயிருள் தேக்கி
ஜென்மசா பல்யர்களாய் எம்மை ஆக்கி
வாதைஎமன் படர்தீர்த்து வாழ்வாங் கிங்கே
வாழவைத்த மாதவரே வாழி போற்றி.
(8)
ஐயனேநின் சன்னதிமுன் கரங்கள் ஏந்தி
அடிமைஎளி யேன்பணிந்து வேண்டு கின்றேன்
துய்யமணிப் பெட்டகமே தனிகை வள்ளல்
சிறியேற்கு அருளியமாப் பரிசே போற்றி!
வையகத்தில் வானகத்தில் உவமை கூற
வியலாத மெய்யின்ப அமிர்த ஊற்றே!
தெய்வதயா நிதியேநும் திருத்தாள் தஞ்சம்
சிந்தையில்ஓ வாநடஞ்செய் தேவ தேவே!
(9)
ஒருதனிமெய் முழுமுதலே! அண்டம் யாவும்
உற்பவமாம் தாயகமே! உயிரே! தாங்கள்
திருவுள்ளம் இரங்கியெம்போல் மேனிதாங்கி
தரணிமிசைப் போந்தருளி மெய்ம்மை என்னும்
பெருவழியுட் புகுத்தாட்டி நித்யம் ஈந்து
பெறற்கரிய பேறுதந்த பெரியோய் போற்றி!
கருமுதலாய்க் காத்துவளர் கருணைத் தாயே!
கர்த்தாதி கர்த்தரெனும் சாலைத் தேவே!
(10)
ஓம்காரி என்னுமொரு பேர்பெற் றீரே!
உத்தமியே சாலைவளர் வானின் வித்தே!
பூமணமார் பொழில்மலர்ந்த புட்பகந்தி
பெருந்தருவே பொன்மேரே எம்மையீன்று
சேமாதி சேமமெலாம் செழிக்க ஈந்து
திருவிளைவு ஆடல்புரி திருத்தாள் போற்றி
தேமதுர வாக்கருளும் தேவி சத்தி
திருவேநற் றுணையேஎற் கமைந்த வாழ்வே!
(11)
ஔடதமொன் றழியாமைக் கருளிச் செய்ய
அறவாழி தங்கள்திரு நாமம்செப்பல்
பௌவியமாய்ப் பணிந்தமுத வாக்யம் கேட்டல்
பரமர்திரு வுருவமதைக் காணல் பாக்யம்
சௌகரியம் கழற்றிநித்யம் பெறவோர் மார்க்கம்
சற்குருவின் திருவுருவே சிந்தித் தல்தான்
பௌவம்சூழ் புவியிலவ தாரம் செய்த
பரந்தாமா! பாக்கியமே! பணிந்தேம் நும்தாள்.
(12)
கலியுகத்தில் மாந்தரெலாம் மாய்கை யாலே
கடவுளுமை மறந்தழிவை நோக்கி யேகி
பலியாகி எமன்கைப்பட் டழிதல் கண்டு
பரமர்திரு வுளமிரங்கி அவத ரித்து
நலிவுறுயிர் கடைத்தேற வழிமெய் காட்டும்
நாதாந்த நற்றவரே நற்றாள் போற்றி
வலிமையெலாம் கடந்தவரே வளர்மெய்ஞ் ஞான
வான்வள்ளால் மலர்த்தாள்கள் துணை காப்பாமே.
(13)
காலகா லம்கடந்த கருணை வேந்தே!
காலபயம் கடத்தியெமைக் காத்த தேவே!
ஞாலமுழு துய்ந்திடமெய் வழியைக் காட்டி
நல்வரங்கள் நல்குவித்து நாய கம்மே!
கோலமிகு கொற்றவரே! சாலை வள்ளால்!
கோதறுமெய்ஞ் ஞானவரோ தயரே! போற்றி!
சீலமிகு சத்தியமெய்க் குலமுண் டாக்கி
செகத்திலுயர் சமுதாயம் உற்ப வித்தீர்.
(14)
கிள்நாமக் கொடியேற்றி உலகைக் கூவிக்
கிளர்ந்தெழுமின் கதிபெறவே வம்மின் என்று
தெள்ளியமெய் வழியொன்றே தரணி யெல்லாம்
திருஞானம் பெறுமார்க்கம் என்றே நாட்டி
வெள்ளமெ னஅமுதமடை திறந்து பாய
வேதாந்தம் மான்மியம்மெய்ம் மறைநூல் யாவும்
உள்ளுவப்ப உயிர்களிக்க வழங்கிக் காக்கும்
உற்றதுணை நற்றவரே பணிந்தேன் போற்றி.
(15)
கீழ்மேலென் றேபேத மில்லா தன்பு
கிளரனந்தர் மெய்க்குலத்தைத் தோற்று வித்து
வாழ்மனுக்கள் மறலியமல் கடந்து சீரார்
மெய்ம்மதத்தில் சார்ந்திருந்து சாயுச் யத்தில்
ஆழ்வார்கள் ஆள்வார்கள் அறங்கூர் ஞானம்
அகிலமெலாம் காக்கவந்த அரசே நித்ய
வாழ்வெமக்கு வழங்கியருள் மகதி சாலை
மெய்வழிஆண் டவர்தாள்கள் சரண்செய் தோமே.
(16)
குவலயத்தில் மாந்தர்கலி யிருளில் மூழ்கி
கொடுநரக வழியேகும் காலை ஈடில்
தவமியற்றி சற்சனர்செந் நெறியில் சார
சாவாத வரமருளி காத்துய் வித்து
புவனமிதில் மறைபலவும் தெளியச் செய்து
பூரணமாய் வேதவே தாந்தம் எல்லாம்
உவந்தெல்லோர்க் கும்கற்பித் தருளும் கோவே
ஒருதனிமெய் முழுமுதலே போற்றி போற்றி.
(17)
கூடழியா முத்தியொன்று உள்ள தென்று
குறிப்புணர்த்தி அப்பதமும் பெறச்செய் ஐயர்
வாடாத தவவாய்மை சாலை வள்ளல்
வையகத்தில் இதற்கிணையெங் கென்று மில்லை
தேடரிய திரவியமே தெய்வ மேஎம்
சிந்தைவளர் திருவுயர்மெய் மணியே போற்றி
ஆடகப்பூம் பொற்பதமெம் சிரமேற் கொண்டோம்
அற்புதமே! அடிமலரில் ஏன்று கொண்மின்!
(18)
கெங்கைநதி ஆகாயத் தில்நின் றிங்கு
கிளர்ந்துபெரு கிப்பாய்ந்து வளம் கொழித்து
எங்களுயிர்ப் பயிர்செழிக்க அருளும் வேளாண்
இறைசொரூப மெய்வழிச்சா லைதெய் வம்மே
கங்குல்பக லற்றவிடம் காட்டி ஆண்டீர்
கர்த்தாவே உயிர்க்குயிரே கழல்காத் துய்ந்தேம்
திங்கள்திரு வதனர்எம் பெருமான் தங்கள்
திருநோக்கிற் காட்பட்டோர் மீட்சி பெற்றார்.
(19)
கேட்டறியாக் கேள்விகள்கேட் டுள்ளம் ஆர்ந்து
காணறியாக் காட்சிகள்கண் டுயிர்க ளித்து
தேட்டிலுயர் சாலைவளர் தெய்வம் எங்கள்
ஜீவசிம் மாசனத்தில் எழுந்து எங்கள்
வாட்டங்கள் தவிர்த்தருளும் மாட்சிக் கீடோ
வையகத்தில் வானகத்தில் இணைவே றில்லை
பாட்டையர் தனிகைதரு பரிசாம் எங்கள்
பாண்டியர்நும் தாள்கள்துணை பெற்றோம் உய்ந்தோம்.
(20)
கைகண்ட பலன்அளக்கும் கடவு ளாரே!
கண்கண்ட தெய்வமெனும் கர்த்தா! சாலை
மெய்கண்டோம் மறலியமல் மீட்சி பெற்றோம்
வெவ்வினைகள் அனைத்தும்மே வீயப் பெற்றோம்
உய்வழியாம் மெய்வழியில் உவந்துள் ளானோம்
ஒருதனிமெய் முழுமுதல்வர் என்று ணர்ந்தோம்
துய்யமணிப் பெட்டகமே! துணையே! ஆதி
செம்பொருளே! உமையன்றிக் கதிவே றில்லை.
(21)
கொண்டெம்மைத் தந்தும்மைக் கருணை ஈந்தீர்
காசினியில் பரிமாற்றம் இதுபோ லுண்டோ
விண்டருளி மெய்ம்மறைகள் துலங்க வைத்து
மேலான பாக்கியங்கள் வழங்கிக் காத்து
திண்டாடும் இறுதியினாட் துன்பம் மற்றும்
தரித்திரியம் மிருகபயம் சடுதிச்சாவு
துண்டாடும் முத்தாபம் தீர்த்து ஜீவன்
சீராய்ப்ர யாணமதும் செய்யச் செய்தீர்.
(22)
கோதறுஞ்சீர் கோமகனார் சாலை தெய்வ
கொழுமணப்பூங் கழல்சிரத்தே சூடிப் போற்றி
மூதுரைநன் நாதமருள் மணிநா வேந்தே
முத்தொழிலோன் முத்தாபம் தீர்க்கும் கங்கை
சேதமிலா தவவாய்மைத் தெய்வ கோமான்
திருமலர்த்தாள் பணிந்தோர்க்கு சாயுச்யம் காண்
வேதமெலாம் திரண்டோர்பொன் மேனி கொண்ட
வெல்லரிய மறலியைவெல் வீர வேந்தே!
(23)
கௌரவமாய்ச் ஜீவன்அது பயணம் செய்து
கர்த்தர்பொன் னாரடியில் ஐக்ய மாக்கும்
கௌரியரே கடையேன்கண் கண்ட தெய்வம்
காருண்ய மூர்த்தியரே சிவமும் பிரம்மம்
கௌத்துவம ணியணிந்த மாலும் ஒன்றாய்க்
கனிந்துருக்கொள் கர்த்தாவே சாலை தேவே
கௌதுகலம் தான்கொண்டு அனந்த ரோடு
கனிந்தினிது வாழவைத்த கருணை நாதா!
குறிப்பு:- கௌரியர் - பாண்டியர், கௌத்துவமணி - துளசிமணி, கௌதுகலம் – குதூகலம்
(24)
சற்குருவாய்த் திருமேனி தாங்கி இந்த
சர்வஉல கும்காக்கும் வரம்கைக் கொண்ட
நற்றவரே! நாதாந்த நாதா! தங்கள்
நலம்புலமைக் கிணையுண்டோ நானி லத்தில்
கற்பகமே! கனிகுலுங்குத் யோவ னத்தில்
காருண்ய மூர்த்தியரின் கடைக்கண் நோக்க
வெற்புஎம படர்தீரும் வினைகள் யாவும்
வீய்ந்தொழிந்து மாய்ந்திடுங்காண் நற்றாள் போற்றி.
(25)
சாயுச்ய பிரம்மமெனும் சர்வே சாநும்
தயவினுக்கு ஆட்பட்ட ஜீவர் கானில்
தூயவராம் அனந்தரொடு சீர்மை ஓங்கி
ஜென்மசா பல்யரெனச் சிறந்து வாழ்ந்து
ஆயகலை அறுபத்து நான்கிற் கப்பால்
அற்புதமாய்ச் சாகாத கலைமெய் பெற்றோம்
தாய்கருணை தனின்மிக்க தயவு கொண்டே
சாலைதிகழ் மெய்த்தாயே! தாள்கள் போற்றி.
(26)
சிந்தையினில் மலர்ந்துமணம் கொழிக்கும் சீரார்
திருவோங்கு கற்பகபூந் தேனே வானே
வந்தனைநின் திருத்தாட்கு வாழ்த்திப் போற்றி
வான்புகழை விதந்தோதிப் பணிந்தேன் அன்னாய்
விந்தையுங்கள் மணிமொழியே அமுத தாரை
வழங்கியமெய் வரங்களுக்கு அளவு முண்டோ
தந்ததயைக் கென்கடவேன் தஞ்சம் உற்றேன்
தயாபரரே தன்னிகரில் தேவ தேவே!
(27)
சீராரும் தனிகைமணிக் குளத்தில் பூத்த
திருமணமார் செழுமலரே! சிவமே! தேவே!
பேரான பெரும்பேர்கொள் பெம்மான் தங்கள்
பொன்னடியே தஞ்சமுற்றோம் ஏன்று கொண்டீர்
கூரான குருவருளே கொண்டோம் அந்தக்
கூற்றுவனின் ஆற்றலினிச் செல்லாதம்ம!
தீராத பிறவியின்நோய் தீரப்பெற்றோம்
தெய்வபிரான் பதமலரே போற்றி! போற்றி!
(28)
சுத்தம்வடித் தெளித்தெடுத்த தூய்மை எங்கும்
சுரர்தலைவர் முழுமுதல்வர் சாலை அண்ணல்
சித்தரெல்லாம் தொழுதேத்தும் தலைமைச் சித்தர்
சிவபரமாம் அருட்ஜோதி கருணை வள்ளல்
வித்துநா யகமென்று விளம்பும் கோமான்
வேதமெலாம் போற்றுவதெம் ஐயர் நாமம்
அத்தனன்னை அருட்குருவும் தெய்வம் ஆன
ஆண்டவர்கள் பொற்றாளே கதியெல் லோர்க்கும்.
(29)
சூக்குமமாய் உயிரினிலே விளங்கும் ஜோதி
தொன்மறைகள் அனைத்தும்தெளி விக்கும்ஜோதி
ஆக்கல்முதல் ஐந்தொழில்செய் துரையெம் ஆதி
அறவாழி ஆருயிர்க ட்கெல்லாம் நாதி
கார்க்கும்தீ கைகொண்ட கர்த்தர் எம்மான்
கனிந்துருகிப் போற்றுவரைக் காக்கும் பெம்மான்
தீர்க்கும்பவ வெவ்வினைகள் சாவுத்துன்பம்
தயாபரர்எம் தெய்வபிரான் மலர்த்தாள் போற்றி.
(30)
செல்வாக்காம் சொல்வாக்கு அருள்செய் சீமான்
திருநிறைந்த ஆற்றலர்என் தேவ கோமான்
பல்கலையும் பூத்தொளிரும் ஞானச் சோலை
பரமரெம தையரருட் பாதம் போற்றி
வல்லசித்தர் பரம்பரையின் கூட்டு கொண்டோம்
மாதவத்தார் பிள்ளையெனும் பேரும் பெற்றோம்
அல்பகலாய் அமுதமொழி அருந்தி ஜீவன்
அழியாத வரம்தந்தீர் அரசே போற்றி.
(31)
சேவடியைச் சரணடைந்தோம் திருமெய்ஞ் ஞானம்
சிந்தைகளி கூரஉயிர் செழிக்கப் பெற்றோம்
மூவடியால் உலகளந்த பெருமான் தாமே
மெய்வழிசா லைஆண்ட வர்காண் அம்மே
தூவெண்மைப் பிறைசூடும் சிவமே இங்கே
திருவுருவம் ஏற்றுஅவ தாரம் செய்தார்
பாவடித்துப் பல்வேத சாரம் தேக்கி
பகர்அமுத பேழைகளாய் ஈய்ந்தார் போற்றி.
(32)
சைவமுத லானமதம் யாவு மொன்றாய்ச்
சமரசமாய் ஆக்கிபெரும் புதுமை செய்தார்
தெய்வமணி சாலையண்ணல் இணையில் ஈசர்
தேவாதி தேவரெங்கள் தந்தைஅம்மே
மெய்வழியே உய்வழியென் றுலகோ ர்க்கெல்லாம்
விளம்புவதெம் தொழிலாகக் கொண்டோம் ஐய
ஐவழியில் வீழாது காத்தார் அம்ம
அடிமலரே அனைத்துயிர்க்கும் அணியாம் கேண்மின்.
(33)
சொன்மாலை சூட்டவிழை சிறியேன் தன்னை
திருவடியில் ஏன்றுகொண்ட தயவென் சொல்கேன்
பொன்மாலை பூட்டிடவும் வல்லேன் அல்லன்
பொன்னரங்கர் எனையுமொரு பொருளாய் ஏற்றீர்
அன்பாலங் கிர்தம்பூண் அரசே தங்கள்
அருட்கடைக்கண் நோக்கினுக்கு ஆட்பட் டேன்காண்
வன்பாலன் மறலியமல் தீண்டா துய்ந்தேன்
மாதவரே! மலரடிக்கே சரண்செய் தேனே!
(34)
சோதியருட் சோதிபரஞ் சோதி தெய்வம்
சாலையெனும் வளர்கயிலைப் பதியில் போந்த
ஆதியருள் நீதிபரர் அரசர் எங்கோன்
அறவாழி ஐயர்அருள் அமுத வாரி
சாதியெனும் இருட்பரப்பைச் க்ஷணத்தில் தீர்க்கும்
சூரியனே ஆரியனே வாழி வாழி
வாதியென்ற எமன்பயத்தை வென்றோம் இன்று
மாதவத்தார் மெல்லடியில் சரணுற் றோமே.
(35)
சௌகரியத் தேட்டினிலே வாழு மாந்தர்
தமையுணர்ந்து தலைவனைநன் கறியச் செய்து
சௌகரிய மனைத்தையுமே வழங்கி யிங்கண்
சத்தியமெய் வழிநடத்தி சற்ச னர்க்கே
ஔஷதமொன் றருளிச்செய் ஆண்டே போற்றி
அளப்பரிய அருளாளா நிகரில் அன்பு
தௌத்திகமெய்ச் சாலையண்ணல் தாள்கள் போற்றி!
சரணடைந்தோம் மரணமிலா வாழ்வுற் றோமே!
(36)
தன்னிகரில் தலைவரெங்கள் தேவ கோமான்
தனித்தந்தை தயவுஒரு வடிவாம் சீமான்
என்னையும் ஓர் பொருளென்று ஏற்று ஆண்டீர்
இன்னமிழ்த மீந்துயிரை வளர்த்து அன்னை
பொன்னரங்க நாயகியாள் பொற்பாதத்தாள்
போர்வையென தாருயிர்க்கு பணிந்தேன் அம்மா!
தன்னையறிந் தின்புறவே வைத்த தாயே!
தருமத்தாய் தாள்படிந்தேன் வாழி! வாழி!
(37)
தாயாகித் தந்தையும்சற் குருவும் தெய்வம்
சர்வபரி பூரணமாய் இலங்கும் எம்மான்
தூய்மையனைத் தினுக்கும்பெருந் தூய்மை யான
சுத்தநிற் குணமாகி நின்ற ஐயன்
ஆயகலை அறுபத்து நான்கிற் கப்பால்
அற்புதமாம் சாகாத கலைகொண் டோங்கி
சேயெனையும் தாங்கிஜென்மம் கடைத்தேறச்செய்
திருவுயர்வான் தவகொண்டல் நாமம் போற்றி.
(38)
திருவளர்மெய் ஜீவசிம் மாச னந்தான்
தேவபிரான் சாலைஆண் டவர்கள் பொன்னார்
திருவடிகள் பிறவாழி தாட்டும் நாவாய்
திருவாக்ய அமுர்தமுயிர் வளர்க்கும் ஊண்காண்
திருவுருவம் தியானித்தால் மரணம் தீர்க்கும்
திருவார்மெய் யனந்தர்குலம் கடைத்தேர்ந் துய்யும்
குருகொண்டல் திருமுன்நின் றிறைஞ்சி வேண்டில்
குறைபலவும் தீர்ந்திடுமெய்ச் செல்வ மோங்கும்.
(39)
தீராத வல்பிணியாம் மரணம் தன்னைத்
தீர்ஜீவ பண்டிதர்எம் சாலைத் தெய்வம்
சீராரும் எம்பெருமான் மாட்சி தன்னை
செப்புதலும் எளிதலவே செகத்தி னோரே!
பேரான தனிகைமணி வள்ளல் ஈன்ற
பெரும்புகழார் மெய்வழிச்சா லைத்தெய் வத்தைப்
பாராத கண்ணுமொரு கண்ணா மோமெய்
பகர்மொழிகே ளாச்செவியும் செவிய தாமோ!
(40)
துரியபதம் கடந்தவரென் துளப வேந்தர்
துலங்குமறை தெளிவிக்கும் தென்னாட் டையர்
அரியதவம் புரிந்துபலன் எமக்கீந் துய்த்த
ஆண்டவர்கள் பெரும்புகழை எடுத்துரைக்க
அரிதரிது அனந்தாதி தேவர் சான்றோர்
அற்புதரை உற்பவித்து மெய்ம்மை ஈந்த
பெரியபெரி யவரெங்கள் பெருமான் சாலைப்
பொன்னரங்க நாயகர்தாள் போற்றி போற்றி.
(41)
தூங்காத ஆண்மையர்எம் துரைகாண் சாலைத்
தொல்பெருஞ்சீர் தோன்றலிவர் திருப்பொற் றாள்கள்
பாங்காகப் பற்றினபேர் உய்ந்தார் கேண்மின்
பாண்டியரின் திருவாக்கிற் கிணையுமுண்டோ
பூங்காஉத் யோவனமாம் சாலை அண்ணல்
பொற்பதியர் அற்புதர்தம் நற்பதங்கள்
ஈங்குலகோர்க் கினியபெருந் துணையாய் நின்று
எமன்பயத்தைக் கடத்திஉயர் சுவர்க்க மீயும்.
(42)
தெளிந்தறிமின் தெய்வபிரான் தென்னாட் டின்கண்
திருவவதா ரம்செய்து உலக மாந்தர்
ஒளிந்தரற்றும் மும்மலத்தின் அமலின் மீட்டு
உத்தமசித் திக்கொள்கை வழியிற் சேர்த்து
விளிந்தேமன் கைப்படுவோர் தம்மைக் காத்து
மெய்வழியுட் சாரவைத்து நித்யம் ஈந்தார்
களிமயில்கள் நடனமிடும் சாலை தன்னில்
கனிந்தரசு புரியரசர் ஆண்ட வர்கள்.
(43)
தேடரிய பெருஞ்செல்வம் நித்ய வாழ்வை
திருவுளம்சற் றிரங்கியெங்கட் கருள்பா லித்த
வாடாத தவவாய்மை வள்ளல் ஐயர்
மாட்சியினுக் கென்கடவோம் வணங்கிப் போற்றும்
நீடாழி சூழ்உலகில் அவத ரித்த
நிர்மலர்மெய் வழிசாலை ஆண்ட வர்கள்
கோடானு கோடிகடந் தைஸ்வ ரீயர்
கெழுமலர்ச்சே வடிகட்கே அடிமை யானோம்.
(44)
தையல்பனி மதிமங்கை பங்கர் எங்கள்
தனித்தலைவர் முழுமுதல்வர் உலகிற் போந்து
வெய்யகொடுங் குலவெறிகள் மதபே தங்கள்
வீய்ந்திடச்செய் தொன்றாக்கி வெற்றி மேட்டில்
ஐயர்எழுந் தருளியுள்ள அற்பு தத்தை
அகிலவரே அண்டிவந்து கண்டு உய்மின்
தெய்வமிவர் வந்துபணிந் தேத்தி என்றும்
தீராத பிறவிப்பிணி தீர்த்துக் கொள்வீர்.
(45)
தொண்டருக்கு எளியரெங்கள் தேவ கோமான்
தொழுதுபணிந் தெழுபவர்க்குத்துணையாம் ஆதி
கண்டுதெரி சித்தவர்கள் கூற்றை வென்று
கடைத்தேறச் செய்தபெருங் கனவான் எம்மான்
அண்டிபணிந் தோர்பெறுவர் சாயுச் யம்காண்
அமுதகங்கை பெருகிவரும் அரனார் எங்கோன்
வண்டருக்கு வெல்லரிய வலியர் அண்ணல்
மறைதெளிவித் தாண்டுகொண்ட தெய்வம் காண்மின்.
(46)
தோலா மொழித்தேவர் திருவோங் கெம்மான்
தொல்பழவெவ் வினைக்குவையை துகள்செய் தார்கள்
காலகா லங்கடந்த காருண் யர்மெய்க்
கதியுதவும் கமலபதி மதினா வேந்தர்
கோலம்கொண் டெம்போலும் குரம்பை யேற்ற
குணநிதியர் குருகொண்டல் பாதம் போற்றி!
சீலங்கொள் தேவாதி தேவ ராஜர்
சிந்தையினின் நீங்காது நிற்பார் போற்றி!
(47)
தௌவையாய் ஈன்றுவளர்ந் திட்டீர் அன்புத்
தந்தையாய்ச் சாகாத கல்வி யீந்தீர்
செவ்வையாய்க் குருகொண்ட லாக ஞானச்
செல்வத்தை வழங்கியருள் திருவே போற்றி
பௌவியமாய்ப் பணிந்தோர்க்கு தயவு ஓங்கப்
பரமபத முத்தியின்பம் அருளிச் செய்து
தெவ்வரெனும் பவவினைகள் எமனின் கோரம்
தீர்ந்தொழிய அருள்கனிந்தீர் திருத்தாள் போற்றி.
குறிப்பு :- தௌவை-தாய், பௌவியம்-பணிவு, தெவ்வர்- பகைவர்
(48)
நன்மார்க்க நாதரெனும் திருநன் னாமம்
நாயகரே ஏற்றருளி நானி லத்தே!
பொன்னரங்க ராய்மிளிர்ந்து பணிமா ணாக்கன்
பிணிதவிர்த்து ஞானநறுங் கனிகள் ஈந்து
இன்னலெலாம் தீர்த்தருளி இன்னுயிர்க்குள்
இனிதிருந்து காத்தருளும் சாலை தேவே!
மன்னாதி மன்னவரே! மறைகள் போற்றும்
மாதவர்தாள் மிகப்பணிந்து வணங்குவோமே!
(49)
நாமமதை நவின்றோர்கள் நலம்பெற் றுய்ந்தார்
நாயகரே நாயேனைப் பொருட்டாய் எண்ணி
சீமான்கள் அனந்தருக்குள் ஆக்கி அன்புத்
திருவோங்க அருள்புரிந்த தேவ தேவே
பூமானே பொன்னரங்கத் தையா உங்கள்
பொற்பதங்கள் போற்றுவதே தொழிலாய்க் கொண்டேன்
ஆமாறுன் அடிமையெனை ஏன்று கொண்டு
அருள்கனிந்து ஆதரிப்பீர் போற்றி போற்றி.
(50)
நின்னைத்தந் தென்னைக்கொண் டீர்கள் அம்மா
நீணிலத்தில் இதுபோலும் வணிகம் உண்டோ
பொன்னைமண் புழுதிக்கு மாறு கொண்ட
பெருந்தகையே பேராளா பெரியோய் போற்றி!
முன்னைமு ழுமுதலே! மோனத் தாயே!
மூதுரைமெய்ம் மாமறையே! மெய்ந்நி லையே!
பொன்னரங்க நாயகியே! போற்றி நின்றேன்
பூதலத்தில் போந்துற்ற தெய்வத் தாயே!
(51)
நீதியெலாம் திரண்டுஓர் உருவாய் வந்த
நித்தியரே! நின்மலரே! நீள்வேற் கையா
வேதியரே! வேதவே தாந்தம் போற்றும்
மெய்ப்பொருளே! வேணியரே! மக்கள் யாக்கைக்(கு)|r}}
ஆதியரே! அறவாழி அந்த ணாளா!
அன்பருளத் தருளரசாள் அறமே! போற்றி!
நாதியுமை யன்றியெவர்க் கெங்கு மில்லை
நம்பியடி பணிந்தேன்காண் காப்பீர் தேவே!
(52)
நுண்ணியமெய் மதியரசே நுணுக்கம் தேர்ந்த
நூதனரே நூராணி ஆதித் தாயே!
பண்ணரிய தவமியற்றி சன்ன தங்கள்
பன்னிரண்டும் திருக்கரத்தில் தரிக்கப் பெற்றீர்
அண்ணலரே! ஆருயிர்க்கு அணியே! சீரார்
அறவாழி அந்தணரே! அருளே! அன்பே!
விண்ணவரே! வேதமெலாம் புகழும் தேவே!
மென்மலர்த்தாள் தொழுதுநின்றேன் காப்பீர் ஐயா!.
(53)
நூதனமெய் வழிகொணர்ந்து உலகோர் உய்ய
நுட்பமிகு மறுபிறப்பு நல்கி ஜீவன்
வேதனைதீர்த் தின்புறுத்தித் தேவ ராக்கி
விண்ணகத்து ரகசியங்கள் தெளியச் செய்து
நாதருங்கள் நல்லடியே பணிந்து போற்றி
நற்றவத்தின் பலனளந்தீர்! நலமே தெய்வ
ஆதரவே! அழியாத வரங்கள் ஈந்த
அற்புதரே! கற்பகரே! போற்றி போற்றி.
(54)
நெடுநீர்சூழ் ஞாலத்தே நேமி தாங்கி
நஞ்சீவர் உய்ந்திடவே அவத ரித்தீர்!
கொடுங்கூற்றன் வெம்மைதவிர்த்தெம்மை ஆண்ட
கொண்டலரே! குலதெய்வ தேவே சா!மற்(று)|r}}
எடுகுழந்தை போல்மாசு மறுவற் றோர்க்கு
எளியவரே! இனியவரே! இன்ப வாரி!
படும்ஏக ராசிமேல் விளங்கும் ஜீவ
பண்டிதரே! பாதமலர் போற்றி! போற்றி!.
(55)
நேசமிகு நாயகரே! நீள்பு விக்கண்
நெடும்பார தம்நிகழ்த்தி இன்றிங் கனமே
தேசுநிறை தீந்தமிழ்நன் னாட்டில் போந்து
திருஞான மெய்ந்நெறியைப் பரப்ப வென்று
ஆசிரிய வடிவுகொண்டு அவதரித்து
அழியாத நிதிவழங்கும் வள்ளால்! வள்ளால்!
பூசுரர்அ னந்தாதி தேவர் போற்ற
பொன்னரங்கில் திகழ்கின்றீர் போற்றி! போற்றி!
(56)
நைமிசா ரண்யவன மேகி யங்கு
நாயகியார் தொடரவங்கண் தவமி யற்றி
மெய்ந்நெறிசார் மாந்தர்க்கு பலன்கள் ஈந்தீர்
மேதகுகு லாதிபரே! விண்ணின் வேந்தே!
பைம்பொழியார் சாலைஉத்யோ வனத்தில் செங்கோல்
பாலிக்கும் பற்குணரே! பாதம் போற்றி!
மொய்ம்புகழார் மாணிக்க மலையே! ஞான
வானவரே! வாழிமலர்ப் பாதம் போற்றி!
(57)
நொந்துலகோர் நமனிடரால் நலிந்த ஞான்று
நல்வரங்கள் நல்கிஅவர் தம்மை மீட்டு
வெந்துயரம் வினைக்குவைகள் வீயச் செய்து
விண்ணாட்டு வித்துகளாய் விளைவுற் றோங்க
வந்தருள்செய் மாதவரே! மணிக்குன் றே!சீர்
மெய்வழிச்சா லைதெய்வ மலையே! போற்றி!
சிந்தனைநிற் காக்கியபேர் சிறந்து ஓங்கி
ஜென்மசா பல்யமுற அருளும் தேவே!.
(58)
நோற்றுதவம் மிக்கியற்றிச் சன்னதங்கள்
நற்கரத்தில் தரிக்கப்பெற் றிலங்கும் தேவே!
கூற்றனைவெல் கோமானே கோத கல்சீர்
கொற்றவரே! குஞ்சிதமென் மலரத்தாள் போற்றி
ஆற்றல்மிகு ஆண்டவரே! அடியேங் கட்கு
அருளமுதம் வழங்கியுயிர்ப் பயிர்வ ளர்க்கும்
மேற்றிசைக்கிள் நாமக்கா ரர்என் றிங்கண்
விளங்குபுகழ் மாட்சியரே! வேத நாதா!.
(59)
நௌவியுற நானிலத்தோர்க் கருளை யீந்து
நரர்மனுவாய் மனுஅமரர் ஆகச் செய்து
செவ்வைநெறி மெய்வழியில் நெறிப்ப டுத்தி
ஜென்மசா பல்யரென ஆக்கிவைத்து
அவ்வையென ஈன்றெடுத்து அமுதம் ஊட்டி
அத்தனென வளர்வித்து குருவாய் ஓங்கி
தெவ்வனெனும் மறலியமல் கடத்தி ஆட்கொள்
திருவரங்கா! குருதேவா! என்று கூவே!
(60)
பரம்பொருளோர் திருமேனி தாங்கி வந்து
பாருலகைக் காத்துதிரு வுளமி ரங்கி
சிரம்பணிந்து வேண்டுவரைச் சாயுச் யத்தில்
சேர்ந்துய்ய வரந்தருமெய்ம் மேனித் தேவே
கரங்குவிவார் கடைத்தேறக் கடைக்கண் காட்டும்
காருண்யா! கர்த்தாதி கர்த்தர் கோவே!
அரனயனும் மாலுமொரு உருவாய் வந்த
அறவாழி! மெய்ச் சாலை ஆண்டே! போற்றி!
(61)
பாராதி அண்டங்கள் படைத்த ஈசன்
பாரகத்தோர் கலிக்கடையில் துன்ப முற்று
சீரழிதல் கண்டுதிரு வுளமி ரங்கி
திருவுருவ மொன்றேற்று புவியில் போந்து
நேரியரால் நல்வழியில் நிலைக்க வென்று
நித்தியமெய்ப் பத்தியத்துள் நடத்தி ஆக்கி
சீரியநற் றேவரெனச் சிறந்து ஓங்க
செய்தவரோ தயரே!நும் தாள்கள் போற்றி!
(62)
பிள்ளையென எனையேற்ற பித்தி யம்மை
பெருந்துயரம் பிணிவினைகள் கடத்திக் காத்தீர்!
வெள்ளையுளம் எனும்வாசிக் குதிரை யேறி
வியனுலகம் எங்கெங்கும் வலம் வந்தீர்கள்
கள்ளமிலார்க் கேயருளின் வெள்ளம் பொங்கும்
கங்கையும்நீர்! காருண்யா! ககன நாட்டின்
தெள்ளியசீர் தேவிசத்தி திருமெய் ஓங்கித்
திகழன்னை திருவடியே! தஞ்சம்! தஞ்சம்!
(63)
பீடமெனும் இதயத்தில் அமர்ந்து செங்கோல்
புரிந்தருளும் பெருமாட்டி சாலைஅம்மை
ஆடகச்சீர் அபரஞ்சித் தஞ்சம் அன்னாள்
அருள்நடனம் புரிந்ததனால் உயர்ந்தோம் ஆத்தாள்
வாடாது தவம்புரியும் வள்ளண் மைக்கு
வையத்தில் ஈடிணையும் பெரிதும் இல்லை
நீடாழி சூழ்உலகில் நினைவில் வாழ்ந்து
நித்தியமெய்ச் செல்வமது நிறையும் காணே!
(64)
புண்ணியம்செய் கின்றோமென் றுளரும் மாந்தர்
புண்ணியமோர் உருவெடுத்த புதுமை காணார்
கண்ணியரென் காதலர்காண் வாம ணாளர்
கர்த்தாதி கர்த்தரென்றும் கழறு வார்கள்
மண்ணகத்தே வந்தவிஞ்சை விண்ண கத்தார்
மாதவத்தார் போதந்தார் சீத னத்தார்
அண்ணலர்மெய் வழிச்சாலை ஆண்ட வர்கள்
அண்டிநின்றோர் அழியாத வாழ்வு எய்தும்
(65)
பூமணத்தார் செண்பகப்பூ வாச முள்ளார்
பொன்மனத்தார் அன்புளத்தார் பொன்னரங்கர்
மாமணத்தார் மாமணியர் வாழ வைப்பார்
மாரணத்தை பூரணமாய் மாற்றி வைப்பார்
தேமணத்தார் சீருயர்ந்தார் தெய்வத் தாள்கள்
சரணடைந்தோர் அருள்மணத்தை நுகர்வர் என்றும்
வாமணத்தை மகிழ்ந்தேற்றார் மறைதெ ளிந்து
வானவராய் வாழ்வாங்கு வாழ்வார் காணே!
(66)
பெறற்கரிய பேறுகளைப் பணிந்தோர்க் கீயும்
பெருமானே பெண்ணரசாய்த் திகழ்கின் றீர்கள்
அறங்கொழுத்த மதியேறி அருள்மெய் யோங்க
அற்புதங்கள் அளவின்றி நிகழ்த்தும் அன்னாய்!
நறவாரும் தார்புனைந்த நாதா! வேதா!
நன்மார்க்க ராஜரிஷி பாதம் போற்றி
உறவாடி உயிர் காக்கும் ஒருமெய்த் தெய்வம்
உலகனைத்தின் புகல்நீரே! ஒன்றே தேவே!
(67)
பேதமெலாம் தீர்த்தருளி மதங்கள் ஜாதி
பிறந்தவிதம் தெளிவித்து ஒருங்கி ணைத்து
நீதமெலாம் நிலைநாட்டி நானி லத்தில்
நித்தியவாழ் வுண்டென்ற நிஜத்தை நன்கு
போதனைகள் செய்துமக்கள் தம்மை மெய்யில்
புகுத்தாட்டி வாழ்வித்த போதா! போற்றி!
நாதநா தாந்தரெங்கள் இதயம் தன்னில்
நடம்புரியும் ஞானமணி விளக்கே! போற்றி!.
(68)
பைந்தமிழ் நன்நாட்டினிலே அவத ரித்த
பரமேசா! பராபரையே! பிரம்மா! மாலே!
ஜந்தொழில்செய் அறவாழி அந்த ணாளா!
அடியேங்கள் குறைசிறுமை எண்ணி டாது
மைந்தனென ஏற்றாண்ட மணியே போற்றி
மாதவரே சாலைவள நாடா! யாங்கள்
உய்ந்திடமெய் வழியருளும் வள்ளால்! வள்ளால்!
ஒண்மலர்ப்பொற் றாளிணையே சரணம் செய்தோம்.
(69)
பொன்னரங்க நாயகரே! நும்பொற் றாள்கள்
புனைந்தோம்எம் சிரமிசையே அணிந்தோம் போற்றி
தென்னாடு உடைசிவமே! தேவ தேவே!
திருவருளே! பெருஞ்ஜோதி! போற்று கின்றோம்
என்னாரு யிர்க்குயிரே! இணையில் மேரே!
எந்நாட்ட வர்க்குமிறை போற்றி! போற்றி!
தன்னேரி லாத்தலைவா! மரணம் தன்னைத்
தவிர்த்தாளும் தானவரே போற்றி! போற்றி!.
(70)
போற்றுதலுக்குரியஒரே பொருளே போற்றி!
பொன்மலர்வா சம்பெற்றாற் போல்வாய் போற்றி
ஆற்றலெலாம் கண்டஞ்சும் மறலித்துன்பம்
அதுகடத்தி ஆண்டுகொண்ட அருளே! போற்றி!
வேற்றெவரும் எக்காலும் எங்கும் செய்யா
மெய்த்தவசா யுச்யபதி வேந்தே! போற்றி!
மாற்றறியாப் பசும் பொன்னே! மணியே! தேனே!
மகரிஷியே! மலர்ப்பாதம் தஞ்ச முற்றோம்!
(71)
பௌவமெனும் கடல்சூழ்ந்த புவியி லுற்று
பல்லோரும் பவப்பிணியால் துன்ப முற்று
தெவ்வென்ற பகைஏமன் கையிற் சிக்கி
தீநரக மேகுதல்கண் டிறைஇ ரங்கி
செவ்வைநெறி மெய்வழியைக் கொணர்ந்து மக்கள்
ஜென்மசா பல்யமுறச் செய்த மாட்சிக்(கு)|r}}
எவ்வகையான் கைம்மாறு இயற்ற லாகும்
எண்ணியெண்ணி உருகுதலே செய்பணியாம்.
(72)
மந்திரவ ரோதயர்மெய்ச் சாலை ஐயர்
மண்தீண்டாத் திருத்தாளர் வேத நாதர்
விந்திரத்துக்(கு) ஆதியவர் விண்ணாட் டண்ணல்
வெய்யகொடும் கூற்றுவனை வெல்லும் தெய்வம்
அந்தரத்தின் அரியணையில் அமர்ந்தி ருந்து
ஆருயிர்கள் அனைத்தும்பரி பாலிப் பார்என்
சிந்தை யினில் நீங்காது நிற்கும் சாமி
திருத்தாளே தஞ்சமுற்றேன் போற்றி! போற்றி!.
(73)
மாதவத்தார் வானகத்தார் மாதி றத்தார்
மாண்புடையார் மாமணியார் மெய்ஞ்ஞா னத்தின்
போதகத்தார் பொன்மலரார் பாதம் கொண்டார்
பொய்யொழித்தார் மெய்வளர்த்தார் பொன்ன ரங்கர்
பேதகத்தார் பாதகத்தை வீயச் செய்தார்
வெம்மறலி தீமைவெலும் வேற்கரத்தார்
நீதகத்தார் நீணிலத்தில் மாந்தருய்யும்
நித்தியர்மெய்ச் சாலைவளம் நிலைக்க வைத்தார்.
(74)
மிருத்யுவெனும் எமன்படரால் மாந்த ரெல்லாம்
மிக்கிடர்பட் டழிகின்ற மடமை எண்ணி
அருட்கருணை நிதியெங்கள் ஆண்ட வர்கள்
அவதரித்து அருட்பெருக்கால் அழிவை மாற்றி
திருப்பெரிய வரமாதி வரங்கள் ஈந்து
திவ்வியமாய்ப் பேரின்ப சித்தி வாழ்வில்
கருக்குகைமீண் டும்நுழையா(து) ஆசீர் பாதம்
கனிந்தருள்செய் பெருந்தயவே போற்றிபோற்றி!.
(75)
மீகாமன் இல்லாத மரக்க லம்போல்
மேதினியின் மாந்த ரெல்லாம் அலையும் நாளில்
சோகமற அவர்தம்மை ஆட்கொண் டெம்மான்
சுத்தநிர்க் குணப்பிரம்ம குலத்தில் ஆக்கி
சாகாத வரந்தந்து சாயுச் யத்தை
தந்தருளித் தடுத்தாண்ட தன்மை எண்ணில்
மாகாதல் பெருகாதோ மண்டி யிட்டு
வணங்கியடி பணிந்துய்ந்தேன் மாண்பி னீரே!.
(76)
முத்தர்கட்கு அமுதருத்தும் மாதா தெய்வம்
முத்திநட னம்புரிந்து உயிர்கள் காப்பாள்
சித்தர்கட்குத் தலைவியென விளங்கும் தேவி
சீதனமெங் கட்கருளிச் செய்த அன்னை
அத்தனுமாய் அறிவுவளர்ப் பிக்கும் ஆத்தாள்
ஆன்றகுரு தெய்வமென விளங்கும் சக்தி
எத்திக்கும் புகழ்ந்தேத்தும் இனியை தாளில்
எம்சிரமே படியவைத்துப் போற்று கின்றோம்.
(77)
மூமீன்கள் உருவாகும் எல்லை சாலை
மெய்ப்பயிரே விளைவிக்கும் வளமார் வேலை
கோமான்மெய் யறந்துலங்கும் குரும கான்காண்
கூடழியா தவரங்கள் வழங்கும் சீமான்
காமனைக்கண் ணாலெரித்த கருணை வள்ளல்
கர்த்தாதி கர்த்தரென்னும் எங்கள் தெய்வம்
தோமறுமெய் வழியருளும் சர்வ சாட்சி
திருநிறைமெய்த் தவராஜர் செங்கோலாட்சி.
(78)
மெய்வழியே மாந்தரினம் உய்யு மார்க்கம்
முத்தியருள் வித்தகரின் நெறியே தீர்க்கம்
உய்வழியெங் கட்களிக்கும் ஒருமெய்த் தெய்வம்
உத்தியோ வனர்தாளை வணக்கம் செய்வோம்
ஐவழியின் ஆவலினின் றகன்று மெய்ம்மை
அருள்நெறியில் நிலைநின்றோர் வழியோ செம்மை
துய்யமனத் தனியோகர் அனந்தர் வாழும்
சிவபதிபே ரின்பசித்தி தன்னில் ஆழும்.
(79)
மேலவள நாட்டினைவிட் டிங்கு வந்து
மெய்வழியால் மெய்வரங்கள் யாவும் தந்து
சீலர்களைச் சற்சனரை மெய்யர் தம்மை
திருவிளைவு ஆடல்புரிந் தருளும் செம்மை
கோலமிகு சுவர்க்கபதி சந்த தியாய்
குருகுலமாம் பெருங்குலத்தோர் அனந்தாதியர்
வாலகுரு மெய்வழிதெய் வத்தைப் போற்றி
வணங்கிடுவார் தேவரென பெற்றார் ஏற்றம்.
(80)
மைத்ரேய புத்தரெனும் எங்கோன் செங்கோல்
வருங்காலம் புத்தருரை வண்ணம் போந்தார்
மெய்தருவான் வள்ளலென விளங்கி நின்று
வெவ்வினைகள் வீய்ந்தழியச் செய்தார் எம்மான்
கைதருகும் வான்செல்வம் கணக்கிலாது
கண்டுதெரி சித்தவர்கள் உய்ந்தார் கோடி
எய்ப்பென்னும் ஏமனமல் இனிச் செல்லாது
எம்பெருமான் திருமுன்னர் வினைநில்லாது.
(81)
மொய்ம்புகழைப் போற்றுவதே எங்கள் வேலை
முத்திவளர் ஞானமொளிர் பதியே சாலை
ஐயரெங்கள் ஆண்டவர்கள் தவம்செய் சோலை
அருட்பிரவா கம்பொழிகின் றிந்தக் காலை
தெய்வமணி அருளாட்சி புரிசெங் கோலை
திருஅனந்தர் அருந்துமிறை தருமெய்ப் பாலை
மெய்த் தெய்வம் அணியுநவ ரத்ன மாலை
மிருத்யுனின்று சுதந்தரங்கொள் செய்தி ஓலை.
(82)
மோதுமெம படர்தீர்க்கும் சாலை வள்ளல்
மெய்க்குலத்தோர் அனைவருக்கும் இன்பத் துள்ளல்
சீதனமேழ் வகைதம்மை சீடர் அள்ளும்
சிந்தையிறை திருவடிகள் சிரமேற் கொள்ளும்
மூதுரைஓர் முழுமுதல்வர் தெய்வத்தங்கம்
மெய்யடியார் அனைவருமே அவர்தம் அங்கம்
வாதையிலாப் பேரின்ப சித்தி வாழ்வில்
வள்ளல்தமை வணங்கிய பேர்எல்லாம் ஆழ்வர்.
(83)
மௌனமெனும் சுவர்ணகி ரீடம் தன்னை
மாதவரமெய் தரித்தெழிலார் செங்கோல் ஏற்று
மௌவலெம் மல்லிகைசெண் பகம்ம ணக்க
மெயம்மைஅனந் தாதியர்கள் சூழ்ந்து போற்ற
செவ்வையொடு ஜீவசிம் மாச னத்தில்
திருவிளங்க வீற்றிருந்து நீதி ஆட்சி
துவ்வெண்பி றைசூடிச் சிவனார் எம்முன்
துலங்கும்அழ(கு) எடுத்துரைத்தல் எளிதோ அம்ம!
(84)
வழியொன்றே வையகத்து மாந்தர்க் கெல்லாம்
மெய்வழியே உய்வழிகாண் மாண்பி னீரே!
பொழிலாரும் உத்தியோ வனமெய்ச் சாலை
பொன்னரங்கர் ஆண்டவர்கள் உலவும் சோலை
அழியாத பெருவரங்கள் அருளும் ஐயர்
அடிநிழலிற் படிந்தோர்தம் உயிர்கள் உய்வர்
எழிலாரும் செண்பகப்பூ வாச மேனி
எந்தைபிரான் வான்வள்ளல் தாள்கள் போற்றி.
(85)
வானகத்து மெய்நிதியம் வழங்கும் வள்ளல்
வரம்பில்லா ஆற்றலர்எம் தேவ கோமான்
தேனகத்தார் எம்சாமி துரையின் தாள்கள்
தஞ்சமுற்றார் விஞ்சைவரம் அருளப் பெற்றார்
ஆனகத்தார் உயிரினிக்கும் அமுதம் பெற்று
அனந்தரொடு கூடிமகிழ்ந் தின்ப முற்று
போனகமாம் தேனமுதப் பெருக்கில் ஆழ்ந்து
பொன்னரங்கர் பதம்வணங்குப் பணியில் சூழ்ந்து.
(86)
வித்துநாயக மெங்கள் வேத நாதர்
மெய்வழிச்சா லையாண்டார்க் கன்ப ராகில்
ஒத்து பணிந் துவந்திறைஞ்சி னோர்க ளெல்லாம்
ஒப்பற்ற பெருவாழ்வில் உறைவர் கேண்மின்
சித்தமலம் அறப்பெற்று சிவமாய் ஆகி
சீரோங்கச் சொர்க்கபதிச் சந்த தியாய்
மொத்தவுயர் அனந்தாதி தேவ ராகி
மேதினியில் நீடூழி வாழ்வர் காணே.
(87)
வீராதி வீரரென தம்மைத் தாமே
வியந்தோர்கள் எரிநரகின் விறகாய்ச் சாவார்
பாராதி அண்டங்கள் படைத்த ஈசன்
பாருலகில் அவதரித்தார் சாலை தன்னில்
சீரோங்க அரசாட்சி செய்து செங்கோல்
திருநிறையும் மரணபயம் அணுகாவண்ணம்
நேராரில் நித்தியராய் சார்ந்தோர் தம்மை
நீடூழி வாழவைத்தார் நற்றாள் போற்றி
(88)
வெம்பிறவிக் கட்டறுக்க மார்க்க முண்டு
மெய்வழி தெய் வத்தாள்கள் பணிவ தொன்றே
செம்பொருளைக் காட்டிச்ஜென் மம்சா பல்யம்
திருவோங்கச் செய்திடுவார் எங்கள் கோமான்
உம்பரென நரர்தம்மை மாற்றி வைப்பார்
உத்தமர்அ னந்தாதி தேவர் என்று
தம்பதங்கண் டுய்ந்தோங்காண் சார்ந்தோர் வாழ்ந்தார்
சாவாமை பெற்றோங்கச் செய்வார் தெய்வம்
(89)
வேதவே தாந்தமெலாம் போற்றி ஏற்றும்
வித்துநா யகமெங்கள் விமலராஜர்
நாதநா தாந்தரிவர் நன்மை நல்கி
நன்மக்கள் நற்கதியைப் பெறயீங் குய்த்தார்
ஆதரவு அண்ணலின்றி உலகில் வேறு
அணுவுமிலை உயிருக்குத் துணைவர் ஆவர்
சீதளபத் மபாதம் பணிந்தோர் ஓங்கிச்
சாயுச்யப் பதம்பெறவே அருளும் ஈசன்.
(90)
வையகத்தும் வானகத்தும் இணையில் லாத
மெய்யரசு ஞானச்செங் கோல்நன் கோச்சத்
துய்யகத்தார் தொல் பெருஞ்சீர் துரைஎம் சாமி
தொண்டருக்கு எளியவரெம் சாலையண்ணல்
வெய்யகொடும் எமன்பயத்தை வீயச் செய்தார்
மேலாம்மெய்ஞ் ஞானபதம் வழங்கும் தெய்வம்
கைமெய்யாய்க் கனவரங்கள் தருகும் தேவர்
கர்த்தாதி கர்த்தர்பதம் பிடித்து உய்வோம்.
(91)
வௌவமெனும் மலர்த்தாளர் மெய்யர் சாலை
மாதவரின் திருநோக்குக் காட்பட்டோர்கள்
வெவ்வினைகள் தீர்ந்துய்வர் மேலாம் ஞான
வேட்கைதணிந் தேமறைகள் துலங்கப் பெற்று
செவ்வைநெறி மெய்வழியில் சார்ந்து ஜீவன்
ஜென்மசா பல்யமது கொண்டு ஓங்கும்
எவ்வுலகும் உய்வதற்குத் துறையி தொன்றே
எஃகன்ன மெய்வழிதெய் வத்தாள் போற்றி.
குறிப்பு :- வௌவம்-தாமரை
(92)
யந்திரமா மிவ்வுடலை இயக்கும் சக்தி
யானெனதென் றுரைசெயலைக் கடந்து நிற்கும்
மந்திரமா மாமணியே! மணியின் ஜோதி!
மாதவரே! மன்பதைக்குள் எவர்க்கும் எட்டா
செந்திருவே சிவசிகர மென்னும் தேவே!
தீனரெமைத் தடுத்தாண்டு கொண்ட வாமி
விந்திரங்கள் யாவுமொன்றாய்த் திரண்டு போந்த
மெய்வழிநற் சாலைவள நாடர் போற்றி.
(93)
யாவினுக்கும் முன்னுளதாய்த் திகழும் தெய்வம்
யாவையுமே படைத்தளித்துக் காக்கும் தெய்வம்
தேவபிரான் சாலைவள நாட்டில் நின்று
திருவரங்கள் அளித்தருளு கின்றார் இன்று
பூவுலக மனைத்தினுக்கும் தெய்வம் ஒன்று
பொன்னரங்கர்ச் சார்ந்தவர்கள் கூற்றை வென்று
சாவினின்று மீட்பளித்துக் காப்பார் நன்று
சற்சனராம் அனந்தாதி யர்வாழ் மன்று.
(94)
யுவராஜர் தனிகைவள்ளல் அரசர்க் கெம்மான்
யுக்தியெலாம் கண்டஞ்சும் யுக்தி யாளர்
தவராஜர் தண்ணளியர் தரும வேந்தர்
தனித்தலைமைப் பெரும்பதியர் சாலை வள்ளல்
சிவபரமாம் திருவுயர்ந்த தேவர் கோன்காண்
தீந்தமிழ்நற் புவியினர்கொள் பெறுநற் பேறு
குவலயத்தில் ஒன்றுகுலம் ஒன்று தெய்வம்
கொள்கையிதை நிலைப்பித்த குருரா ஜர்காண்.
(95)
யூகமிகுந் துத்தமராம் குருவைச் சார்ந்து
உடல்பொருளும் ஆவியதும் தத்தம் செய்து
தாகமுடன் குருதயவுக் காட்பட் டால்தான்
திருஞான மலர்பூக்கும் ஜீவன் உய்யும்
மோகமிகுந் தழிசெயலில் வீழா வண்ணம்
முழுமுதலே குருவாய்வந் தாட்கொண்டார் காண்
சாகுதலைத் தள்ளியங்கே சாயுச் யத்தில்
சீரோங்க மெய்த்தெய்வம் ஆக்கும் காண்மின்.
(96)
யோகமெனில் இறைவருடன் கலத்தல் தேர்மின்
உண்மையிது அறியாமல் உலக மாந்தர்
ஆகமிதில் மூச்சடக்கி மூல ரோகம்
அதுகிளம்பி உதிரமது சிந்தி மாள்வர்
பூகயிலா யம்சாலை தெய்வம் போந்து
பொய்யொழித்து மெய்வழியைக் காட்டி மாந்தர்
ஏகுநெறி இதுவொன்றே திட்டமாக
இனிதிங்கண் நிலைப்பித்தார் உலகி னீரே!
(97)
யௌவனத்தே முப்பஃதாம் ஆண்டுக் குள்ளே
இறைசார்ந்து மும்மலமும் இரியப் பெற்று
தெவ்வென்னும் மறலியமல் தீரப் பெற்று
ஜென்மசா பல்யமுறல் நன்மை உண்மை
செவ்வைநெறி மெய்வழிமெய்த் தெய்வம் போற்றி!
திருவிளங்க அருள்வரங்கள் அருளப் பெற்று
முவ்வாசை யும்கடந்து மூமீன் ஆகி
மோட்சமெனும் வீடடைதல் உறுதி யாமே.
(98)
ஞமனிருளில் நலிந்துகிடந் தயர்ந்து மக்கள்
நரகிடையே ஏகுதலைத் தவிர்க்க வென்று
இமையவர்தம் தலைவரெனும் எம்மான் சாலை
ஈடிணையில் ஆண்டவர்கள் அவத ரித்துத்
தமரெனவே சார்ந்தவர்க்கு முத்தா பங்கள்
தீர்த்துஜென்ம சாபல்ய ராக்கி ஆண்டார்
கமழும்செண் பகவாச மேனி யண்ணல்
கழல்பற்றிச் சுகவீடு அடைய வம்மின்.
(99)
ஞாலத்தோர் மூவாசைக் கடல்து ரும்பாய்
நிரயத்தின் எரிவிறகாய் எரியும் காலம்
ஆலமுண்ட கண்டர்அம ரேசர் போந்து
அனைத்துமதம் குலமொன்றாய் ஆக்கியாட்சி
சீலரெனும் அனந்தாதி சத்ய தேவத்
திருவாரும் பிரம்மகுலம் உற்ப வித்து
கோலமிகு எம்பெருமான் கழல்கள் பற்றும்
கூடகரே பிறவியிதன் கடல்க டந்தோர்.
(100)
ஞெப்தியெனும் அம்மெய்யாம் ஞானம் இன்றி
நீசப்பொய்ஞ் ஞானியர்கள் மலிந்த ஞான்று
ஒப்புயர்வு கூறவிய லாத தெய்வம்
உருவேற்று உலகிடையே போந்து உண்மை
செப்பியிந்தத் திருஞானம் செழிக்கச் செய்த
சீரோங்கு மெய்ச்செயலுக் கிணையு முண்டோ
அப்பனெங்கள் ஆண்டவர்கள் அருளை எண்ணி
அகம்நெகிழ்ந்து பணிகின்றோம் போற்றி! போற்றி!
குறிப்பு:- ஞெப்தி-ஞானம்
(101)
ஞேயமெலாம் அழிபொருளில் வைத்து மக்கள்
நிலையில்லா வாழ்வதனை நிஜமென் றெண்ணி
தீயெமனின் சுழற்காற்றில் தூசாய்ப் போங்கால்
திருவோங்கு மெய்த்தெய்வம் தடுத்தாட் கொண்டார்
தாயி(ன்)மிகு தயவுடனே அமுதம் ஈந்து
சற்சனராய்த் தேவர்களால் வளர்க்கு மாட்சி
தூயவுளத் தோர்கண்டு தொடர்ந்து கொண்டு
தொல்புவியில் நீடூழி வாழ்தல் காண்மின்.
(102)
இங்ககர முதலிறைவர் இரக்கம் கொண்டு
இப்புவியில் மெய்ப்பயிரை விளைக்க வேண்டி
செங்கமலத் தாள்வருந்த நடம்ப யின்று
சீரோங்கு பேரின்ப சித்தி வாழ்வை
தங்களடி நிழல் படிந்த தமர்க்குஈந்து
தம்நாட்டு வித்தாக்கிப் பொதிந்து வைத்து
பொங்கமரர் குலம்வளர்க்கும் பொன்னரங்கர்
பொற்றாளே கதியென்று போற்று வோமே!
(103)
- மெய்வழி பக்தி இலக்கியங்கள்
- மெய்வழி அடியார்களின் படைப்புகள்
- சமய இலக்கியம்
- அகரமுதலான வரிசையில் படைப்புகள்
- இறையியல்
- சிற்றிலக்கியங்கள்
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
- கவிதைகள்
- திரட்டு நூல்கள்
- 2017 படைப்புகள்
- பாடல்கள்
- தற்கால புலவர்களின் படைப்புகள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்