திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/059.அன்பு விடு தூது
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
59. தூது
[தொகு]இலக்கணம்:-
தூது என்னும் சொல், செய்தி சொல்லல் என்னும் பொருள் தரும். ஒருவர் பிறிதொருவருக்குத் தான் கூறக் கருதிய செய்தியை அஃறிணைப் பொருள்கள் மூலமாகவோ உயர்திணைப் பொருள்கள் மூலமாகவோ சொல்லியனுப்பிச் சேர்ப்பது தூது என்பதாகும். காதலுற்ற தலைவன் தலைவிக்கோ அல்லது தலைவி தலைவனுக்கோ தம் உள்ளக்கிடக்கையை அல்லது வேண்டுகோளை உணர்த்து முகத்தான் அனுப்பப் பெறுவது தூது. தோழி, நாகணவாய்ப்புள், நெஞ்சம், வண்டு, தென்றல், மேகம், மயில், கிள்ளை, குயில், அன்னம் என்பவற்றைத் தூதுவிடுதல் முதல் மரபாக உள்ளது.
இருதிணையுடன் அமை யயலை உரைத்து தூது சொலவிடுவது தூது. இவைகலிவெண் பாவினால் விரித்துப் பகர்வது மரபே - பிரபந்த மரபியல் - 15
தூதின் இலக்கணம் சொல்லும் வகையே ஆண்பால் பெண்பால் அவரவர் காதலை பாணன் முதலாப் பாவையரோடும் கிள்ளை முதலாம் அஃறிணையோடும் தூது போவெனச் சொல்லுதல் ஆமே - பிரபந்ததீபம் - 76
எகினமயில் கிள்ளை யெழிலியொடு பூவை சகிகுயினெஞ் சார்தென்றல் வண்டு - தொகைபத்தை வேறுவேறாய்ப் பிரித்து வித்தரித்து மாலைகொண்டன் பூறிவா வென்றது தூது - பிரபந்தத்திரட்டு - 30
பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களாகிய என் இன்னுயிர்க்குயிராகிய ஆத்மகாம நாயகருக்கு என் தெய்வீகக் காதலை, அன்பினைத் தூதுவிட்டுத் தெரிவிக்கிறேன்.
அன்பு விடு தூது
காப்பு
ஆதி முழுமுதலிவ் வம்புவியோர் உய்வதற்காய்
நீதித் திருவுருவாய் நின்றிலங்கி - மேதினியில்
மெய்வழியை உண்டாக்கி மிக்கருள்செய் மாதவர்எம்
தெய்வத் திருமலர்த்தாள் காப்பு.
நூல்
சீர்மேவும் இன்பமிகு செந்தமிழ்கொஞ் சும்புவியில்
நேராரும் இல்லாத நித்தியர்தாம் - பேரான (1)
பெம்மான் பெருந்துறையார் பொன்னாட்டு விண்கோமான்
எம்மான் எழில்கலைகள் எல்லாமே - செம்மாந்து (2)
மாலும் அயன்சிவனும் மும்மூர்த்தி ஓருருவாய்ச்
சீலம் பொருந்திச் சிறந்திடவே - காலம் (3)
கடந்த கலிக்கடையில் கற்பகத்தார் பொன்னார்
கடம்தான் எடுத்துக் கலிதீர் - திடமோங்க (4)
தென்னா டுடைசிவனார் தண்ணளியால் நற்றயவால்
அன்னாட்டு வித்தெடுக்க ஆர்ந்துவந்தார் - பொன்னரங்கர் (5)
முப்பத்து முக்கோடி தேவர் முனிரிஷிமார்
பொற்புற்ற தீர்க்க தரிசியரும் - நற்பற்றோ(டு) (6)
ஆர்ந்து எதிர்நோக்கி ஆவலாய்க் காத்திருந்து
கூர்ந்த படியே அவதரித்தார் - என்சாமி (7)
பேர்கேட்டேன் பேதை பெருங்காதல் கொண்டவர்தம்
ஊர்கேட்டேன் உத்தமர்தம் ஓங்குபுகழ்ச் - சீர்கேட்டேன் (8)
செய்யும் திறம்கேட்டேன் சீர்மெய் அறங்கேட்டேன்
பெய்யும் அருள்மாரிப் பேர்தயவால் - வையகமே (9)
உய்யும் வழியும் உரைசீர் மணிமொழியும்
வெய்ய வினைதீர்க்கும் மேன்மைமிகு - துய்யர்தாம் (10)
பித்தரென்று பேர்படைத்த பிஞ்ஞகர்தம் பால்மிகுந்த
பித்தானேன் பித்தம் தெளிவிக்க - எத்தாலும் (11)
ஆகுமோ அன்னவர்தான் நோயும் அதன்மருந்தும்
ஆகினார் ஆமனுவாய் மேயினார் - போகமார் (12)
அன்னவர்க்குத் தூதுவிட ஆசையுற்றேன் அத்தனைக்கும்
முன்னவர்க்கு, மாமறையை நால்வருக்குச் - சொன்னவர்க்கு (13)
இன்னுயிர்தம் மன்னவர்க்கு மாதவர்க்குக் காதலுற்ற
என்னவர்க்கு என்நிலையை யாருரைப்பார் - என்னரங்கர் (14)
பொற்றாள் பொருந்திப் புகழார் கயிலையர்தம்
நற்றாள் வணங்கி நனியுரைக்க - முற்றும் (15)
தகுதி யுடையாரைத் தேடி மயக்கம்
மிகுதி யடைந்தேன் உரைசொல் - தகுதியென (16)
மான்
மானை விடலாமோ மற்றதுதான் தன்இணையாம்
மானைக்கண் டால்மயங்கும் புல்வெளியைத் - தான்நயக்கும் (17)
வெம்புலிக்கும் வேடுவர்க்கும் அஞ்சி வெருண்டோடும்
தெம்புடனே செப்பும் திறனில்லை - அம்பொழிலில் (18)
வண்டு
தேனை நுகர்வண்டைத் தூதனுப்ப எண்ணிடிலோ
தேன்மலரைக் கண்டால் தியங்கிநிற்கும் - தேனுண்டு (19)
தான்மயங்கி நிற்கும்தன்ரீங்கார மின்றிஎந்தன்
கோனிடத்தே கூறும் தரமிலது - கானகத்தே (20)
மயில்
ஈடில்லா வண்ண எழில்தோகை தான்விரித்து
ஆடும் மயிலை அனுப்பவோ - நாடியது (21)
கார்முகில்கண் டாலோ களித்தாடும் பேடதனை
ஆர்வமாய் நாடி அணைத்திருக்கும் - சீரெழிலார் (22)
கிளி
கிள்ளை தனையனுப்பிக் கேடிலியப் பர்தம்பால்
உள்ளம் உரைக்க உவந்தாலோ - அள்ளும் (23)
சுவைக்கனியைக் கண்டாலே சூழ்ந்தமரும் தேவர்
அவையில் தெளிவுரைக்க ஆகா - நவையில்லாக் (24)
பூவை
காதலர்க்குப் பூவைதனைக் கட்டுரைக்கப் போக்கவெனில்
மாதுலர்க்கு மாண்புரைக்க மாட்டாது - தீதறியா (25)
தீங்கனிக்கே அப்பறவை தேங்கினிற்கும் வல்லூறு
ஆங்கதற்கும் அஞ்சி மறைந்தடங்கும் - பாங்காகப் (26)
குயில்
பூங்குயிலைப் பாங்கியெனப் போக்கவெனில் அத்தாலும்
தேங்கமழ்தார் செம்மலுக்குச் சீருரைக்கத் - தாங்கூவும் (27)
பெற்றி யறியாது பேடழைத்தால் ஓடிவிடும்
மற்றதுவும் தூதுரைக்க மாட்டாது - தெற்றெனவே (28)
தென்றல்
தென்றலைத் தூதுவிடத் தேர்ந்தாலோ பூம்பொழிலார்
மன்றில் தவழ்ந்தே மயங்கிவிடும் - வென்றுவிடும் (29)
வன்புயற்கு ஆற்றாது மாணபரர் வான்சபைக்கு
என்மயலைச் செப்புதற்கு ஏலாது - மென்னடையார் (30)
அன்னம்
அன்னத்தைத் தூதனுப்ப ஆசையுற்றால் அப்புள்ளும்
தெண்ணீர்க் கயங்கண்டால் தேங்கிவிடும் - வன்கானம் (31)
தாண்டிப் பறந்தேகத் தானறியா தென்னவர்க்கு
வேண்டி விழைந்துரைகள் விள்ளாது - ஈண்டினிது (32)
மேகம்
மேகத்தைத் தூதுவிட மேவிடிலோ மாமலையில்
போகத்தார் போலே படிந்துவிடும் - ஏகலையும் (33)
வெஞ்சூ ரைக்காற்றில் விழுந்தோடும் கார்கொண்டல்
பைஞ்சோலை தன்னில் புனல்பொழியும் - எஞ்சாது (34)
நெஞ்சம்
நெஞ்சத்தைத் தூதுவிட நேர்ந்திடிலோ ஆசையெனும்
மஞ்சத்தி லாங்கே மயங்கிவிழும் - அஞ்சுவதும் (35)
கண்டவற்றுள் இச்சைமிகும் காணாத தற்கேங்கும்
விண்டுரைக்க ஏலாது வெட்கமுறும் - பண்டைப் (36)
புராதனரெம் பாங்கரசர் பண்ணெழில்சேர் தெய்வ
வரோதயர் வானவர்தம் வேந்தர் - பராபரர்க்கு (37)
அன்பு
இன்பமொடு தூதனுப்ப யாரைத்தேர்ந் தேனெனிலோ
அன்பே உனைத்தான்நான் ஆர்ந்தெடுத்தேன் - நின்பேர் (38)
எத்தனைபேர் என்று எடுத்துரைக்க ஏலாது
சித்தம் கனிந்ததனைச் செப்புவன் கேள் - மெத்த (39)
மனைவிபால் வைத்திட்டால் மையல்தம் மக்கள்
தனைவிரும்பில் பாசமெனத் தான்பேர் - அனைவரொடும் (40)
அன்பாய் பழகுங்கால் நேசம் அணுக்கமொடு
தென்பாய் இணைந்திருந்தால் நட்பென்பார் - அன்பிற்கு (41)
ஏங்கும் எளியவர்பால் காட்டில் அளியென்பார்
பாங்காய் உலகுயிர்பால் பண்போடு - தேங்கில் (42)
இரக்கம் உறவினரை எண்ணி வியந்து
சுரக்கும்அன் பேவாஞ்சை ஏங்கி - இரக்கும் (43)
எளியவர்பால் காட்டல் கொடைப்பண்பு - இன்பம்
களிதுளும்பும் தெய்வத்தைவேண்டித் - தெளிவதற்கு (44)
பக்தி எனப்பேர் புகல்வர் பறந்தேகும்
சக்திஉனக் குண்டு சகலஉயிர் - தித்திக்கும் (45)
பண்புநீ பாரெங்கும் பல்லோரும் வேண்டுவதுன்
நண்புதான் நீடிய நற்சாந்தம் - பண்பிற் (46)
தலைசிறந்தாய் தற்புகழ்ச்சி கொள்ளாய் சினமில்
நிலைசிறந்தாய் தீங்கு நினையாய் - கலைசிறக்க (47)
நிற்பண்பு இன்றேல் நீடு வளராது
கற்பென்னும் திண்மை கசடில்லா - பொற்பூரும் (48)
காலம்தே சம்வர்த்த மானம் கடந்தோய்நீ
ஞாலத் துயிரனைத்தில் நண்ணினாய் - கோலம் (49)
உயர்ந்தோய்நீ இன்றேல் உலகம் நடவா(து)|r}}
அயர்ந்தோய்நீ என்றால் அனைத்தும் - மயங்கிடும்காண் (50)
ஆதலினால் அன்பே திருமூல மாமுனிவர்
போதித்தார் அன்பே சிவமென்று - சாதித்தார் (51)
உண்மை அதுதானே உத்தமமே தாய்மைதரும்
ஒண்மை உனதன்றோ ஓங்குயர்ந்த - பண்பேகாண் (52)
அன்னைக்கும் சேய்க்கும்ஈங் கன்பருக்கும் நண்பருக்கும்
மன்னுயிர்கள் எல்லாம் மகிழ்வதற்கும் - நின்னை (53)
இணைக்கும்பா லம்என் றியம்புவார் இன்பம்
பிணைக்கும்நீ யன்றோ பெரியாய் - மணக்கும் (54)
மலர்ப்பண்பு என்றால் மிகையாமோ நன்மை
அலர்பண்பு நீயேதான் ஆர்த்துப் - பலபேரும் (55)
வேண்டி விரும்பி விழைகின்றார் நானுந்தான்
வேண்டுகிறேன் நின்னை விமலர்என் - ஆண்டவர்பால் (56)
தூதாகச் சென்றிடுவாய் தோகைஎன் காதலினைத்
தோதாகச் சொல்வாய் செலும்வழிதான் - யாதென்று (57)
செப்புவன்கேள் சற்குணமே சீராரும் தாரணியில்
ஒப்பரிய பாரதத்தில் உள்ளவர்கள் - செப்புமொழி (58)
பத்தோடெட் டில்சிறந்த பைந்தமிழ்ப்பொன் நாடகத்தே
முத்தாய் விளங்கிநிற்கும் மெய்ப்புதுகை - மெத்த (59)
அந்நகர்க்கு அண்மையிலோர் ஆரண்யம் அங்கருகில்
பொன்னரங்கர் பேரருள்செய் பூங்கோவில் - அன்னதன்பேர் (60)
உத்யோ வனசித்தி கானகம் என்றுரைக்கும்
சத்தியமார் மெய்வழிச் சாலையென்பர்- அத்தனருள் (61)
மெத்தவிழை மேன்மக்கள் மிக்குறையும் சுத்தநகர்
முத்தர் முனிவரெல்லாம் மிக்கன்பாய் - நித்தமுமே (62)
பத்திசெய்து பாடிப் பரமரையே போற்றிசெய்து
முத்திசித்தி வேண்டி மிகவணங்கி - நத்திநிற்பர் (63)
ஒன்றே குலம்தெய்வம் என்றே தெளிந்தறிந்து
நன்றே இருவினையும் மும்மலமும் - குன்றவே (64)
நால்வேத மும்விளங்க ஐம்புலனும் தாமடங்க
ஆலமுண்ட கண்டர் அருட்தயவால் - சீலமாய் (65)
ஆறுவகைக் குற்றம் அறநீங்கப் பெற்றோராய்
கூறும்ஏழ் பாவக் கொடுங்குறையும் - நீறாக (66)
எண்குணத்தார் தாளில் இனிதே பணிந்திருந்து
பண்ணகரைப் போற்றிப் புகழ்ந்தேத்தி - வண்ணமாய் (67)
ஒன்பது வாசலுக்கும் உட்தாளைத் தானறிந்து
தென்பினால் தெய்வத் திருவருளார் - செம்பொருளைத் (68)
தாமுணர்ந்து சாமி திருப்பொன்னார் நற்றாளில்
நேமமொடு பத்திசெயும் நற்பதிகாண் - சேமமுற (69)
சீரும் சிறப்பும் திகழ்ந்திருக்கும் மெய்வழியாம்
பேரும் புகழார்ந்த பெற்றியமை - ஆரும் (70)
திருப்பதிகாண் அவ்வினிய தெய்வப் பதிசுற்றி
மருப்பொதியும் காசா மலர்ந்து - இருப்பதுகண் (71)
கொள்ளா எழிற்காட்சி கட்டா இயற்கையரண்
முள்வேலி அங்கே முகிழ்ந்திருக்கும் - தெள்ளியநீர் (72)
ஏரி இலங்கிநிற்கும் இசைதென் வடதிக்கில்
நீரார் வயல்கிழக்கே நீடிருக்கும் - சேரும்பேர் (73)
கானகம் மேற்கே கனிந்திருக்கும் அவ்விடந்தான்
போனகம் தந்தருளும் பொன்னரங்கர் - மாநகரம் (74)
ஓயா வணக்கங்கள் ஊதும்எக் காளங்கள்
மாயாத கீத மணியோசை - தோயாத (75)
துந்துபியின் நன்முழக்கம் தெய்வத்தைத் தோத்தரிக்கும்
சிந்தைகவர் பண்ணோசை தேன்பொழியும் - எந்தைபிரான் (76)
அன்றுரைத்த உத்தரவு ஆர்ந்து அதன்படியே
சென்றயுக முத்தர்கள் சீர்முனிவர் - இன்றுவந்து (77)
தோணோக்கம் பாடித் தொழுது வணங்கினிற்கும்
மாணாக்கர் ஆன மதிச்செல்வர் - மாண்பாக்கும் (78)
அம்மையப்பர் எங்கோன் அருள்செய்த ரட்சிப்பு
செம்மைத் திருஉருமால் சூடிநிற்றல் - அம்பொழிலில் (79)
செந்தா மரைமலர்கள் சீராய் மிளிர்வதுபோல்
விந்தை யழகாய் விளங்குங்காண் - சந்ததியர் (80)
பண்டெழிலார் வெண்ணுருமால் மிக்கணிந்து மாண்புடனே
வெண்டா மரைக்காடாய் மேலோங்கும் - எண்டிசையும் (81)
பாரா வணக்கத்தோர் பாடிக் களித்திருப்பர்
சீராக தெய்வத்தின் மான்மியத்தை - ஆர்வமொடு (82)
போற்றிப் பராவிப் பொலிந்திருப்பர் பொன்துகளார்
ஆற்று மணல்விரித்த ஆலயந்தான் - ஏற்றமொடு (83)
மேரு மலைபோலே மிக்கிலங்கித் தான்விளங்கும்
ஆரும் திருக்கோவில் அங்கேகில் - நேரார் (84)
அறுநான்கு மூப்பர் இடைவாள் அழகார்
பொறுமை சிறந்திருப்பர் பாங்காய் - மறுவில்லாக் (85)
கோலம் சிறந்திருக்கும் கூட்டம் கொண் டாட்டங்கள்
சீலம்நி றைந்திருக்கும் சிந்தையர்சேர் - ஆலயத்தில் (86)
அம்பொன் கொழுமணியர் மேடை அதிற்ஜீவ
சிம்மா சனமதுசீர் பெற்றிலங்கும் - செம்மையதில் (87)
ஆனை மருப்பும் அழகுமயிற் பீலிகளும்
ஏனை எழில்சிற்பம் ஆரெழில்சேர் - மோன (88)
சபாபதியர் எங்கள் தனித்தலைவர் வான
தபோதனர்தம் தாயகமாம் ஞான - குபேரரெங்கள் (89)
தெய்வத்தனிப்பிரான் சீர்கயிலை மாண்பகத்தார்
ஐயர் புகழுரைக்க ஆர்திறத்தார் - மெய்த்தவத்தார் (90)
சீராயி ரம்கொண்ட தெய்வ தயாபரர்க்குப்
பேராயி ரம்செப்பிற் போதுவதோ - நேர்மெய் (91)
சீர்சிறப்பு ஏழும் சிறக்க அருள்தருவார்
பேர்தயவி னோடெம் பெருமானார் - கார்க்கும்தீ (92)
திருஅழகு
கைக்கொண்ட காருண்யர் கர்த்தாதி கர்த்தருடை
மெய்கொண்ட மேனி மிகும்அழகை - மெய்யாய் (93)
எடுத்துரைக்க ஏதுதிறன் என்றாலும் சற்றே
மடுத்திடுக இன்செவியில் மன்னோ - வடுவில்சீர் (94)
க்ஷத்திரியர் போல்வடிவம் தாங்கித் திருசிரத்தில்
மெத்த எழில்மகுட மாண்பிலங்கும் - அத்திருவில் (95)
கிள்நாமம் ஒன்று கிளர்ந்தொளிரும் சோதிமின்னும்
பொன்னார் பிறைமதியைப் போல்நுதலும் - வன்னெஞ்சர் (96)
அஞ்சப் பிளந்தெறிவாள் ஆர்புருவம் ஐயர்தமைத்
தஞ்சம் அடைந்தோர் தமக்கிரங்கித் - துஞ்சா (97)
அருட்கமலக் கண்கள் கதிர்மதியர் நெஞ்சத்
திருள்கடியும் செங்குமுதச் செவ்வாய் - திருவிளங்கும் (98)
கண்டம் வலம்புரிச்சங் கொத்துக் கனிந்திலங்கும்
தண்டேன் பொழியுமலர்த் தாரணியும் - அண்டர்கோன் (99)
பேரார்முப் பொன்புரினூல் முத்தாரம் பூணணிகள்
சேரும் திருமார்பம் சன்னதங்கள் - சார்ந்திலங்கும் (100)
கொண்டல்போன்ம் நீண்ட கொடைக்கரங்கள் - பொன்கலமார்
மண்டும் எழில்உதரம் மன்மருங்கில் - கண்டுகளி (101)
பட்டு இடைதுகிலும் பஞ்சகச்சை யும்இலங்கும்
மட்டில் எழிலாரும் வெண்கலம்போற் கட்டழகு (102)
தாட்கள் கமலமலர் செவ்விதழ்தி ருப்பாதம்
ஆட்கொண் டெமைக்கார் அணிதிகழும் - தேட்டுயர்ந்த (103)
மாதவர்எம் சாமி மணிவாணி மன்னவர்தாம்
காதலர் எம்இதயக் கோவிலுளார் - போதலரும் (104)
அன்பு கனிந்து அருளும் பெருக்கெடுக்க
என்பும் இளகும் எழில்தவத்தார் - இன்ப (105)
வடிவர் வணங்கிநிற்போர் வன்பிறவிக் கட்டு
பொடியக் கனிந்தருள்வார் போற்றும் - அடியாளை (106)
ஏன்றுகொண்ட பேர்தயவுக் கென்கடவேன் பொன்னரங்கர்
ஆன்றதிரு மாளிகைவிட் டையரெங்கள் - தோன்றல் (107)
இசைந்தமதி தன்னில் நிசந்தவழும் தென்றல்
அசைந்துவரும் ஆரழகில் மேனி - பசந்துவிடும் (108)
வான்மதியர் வானவர்கோன் மாமேரு ஆலயத்தே
தான்ஜீவ சிம்மா சனத்தமர்ந்து - தேனார் (109)
அமுத மழைபொழிந்து அனந்தர்குலம் என்னும்
எமதுயிர்க்குள் இன்ப நடஞ்செய் - இமையவர்காண் (110)
ஆதி முழுமுதலாய் அன்றிருந்து இன்றிங்கண்
நீதி யுகம்புரக்க நீடுவந்தார் - வேதமுதல் (111)
தில்லைத் திருப்பதியில் சீரார் நடம்புரிந்து
நல்லுயிர்க்கு இன்பமிக நல்குவார் - எல்லையிலாப் (112)
பாற்கடலுள் சேஷணையில் பள்ளிகொண்டு பாரனைத்தும்
போற்றிஅருள் பாலிக்கும் பைந்தாரர் - ஏற்றித் (113)
துதிசெய் துதிக்கையோ(டு) ஐங்கரத்தார் மூல
பதியாம் கணபதியாய் வீற்று - மதியாரும் (114)
வேலெடுத்து எங்கள் வினைதவிர்க்கும் வேதியர்பொற்
காலெடுக்கும் ஞானக் கதிர்வேலர் - சீலமிகு (115)
ஆறு தெருவாடி ஆருயிர்கார் ஆதிசக்தி
மாறுபா டில்லா அருள்மாரி - கூறரிய (116)
வானறஞ்செய் சேனைகொடு வல்லரக்கத் தன்மைகெடத்
தானறஞ்செய் தண்ணளிசேர் கோதண்டத் - தானவர்பல் (117)
ஆயிரமாம் எங்கள் அனந்தரெனும் கோபியர்பால்
நேயமிக நல்குமருட் கண்ணபிரான் - தேயமிதிற் (118)
சாதிகுலம் பேணும் சமயத்தோர் சண்டைகளைச்
சேதிக்க வந்த சிவபுரத்தார் - பூதலத்தே (119)
அந்தந்தக் காலத் தவதரித்து அன்புடையார்
சிந்தா குலம்தவிர்த்த சீதனத்தார் - முந்தையர் (120)
முன்னைப் பழம்பொருளாய் மூத்திருந்து மூதறிவார்
பின்னைப் பெரும்பொருளார் பெற்றியராய் - இந்நாளில் (121)
தன்னைத்தந் தேபிச்சி என்னைக்கொண் டார்எண்ணில்
என்னில் சதுருடையார் யார்சொன்மின் - என்னன்பே (122)
காணும் அனைத்தும்என் காதலரே காணார்க்கு
காணாப் பொருளாகும் மாதுளரே - மாணெழில்சேர் (123)
விண்ணின்று தேவர் வணங்கக் கலிக்கடையில்
கண்கண்ட தெய்வமாய்க் காட்சிதரும் - பண்ணழகர் (124)
இந்நாட்டி லிங்கே எமபடரை மாற்றியெமை
அந்நாட்டு வித்தாக ஆக்கவந்த - பொன்னாடர் (125)
சாதிகளின் கர்த்தர் சமரசவே தநாதர்
நீதிச்செங் கோலோச்சும் நித்தியர்மெய் - மாதவஞ்சேர் (126)
நாற்கா ரணராஜர் நாதமுனி - சன்னதஞ்சேர்
வேற்கரத்தார் மெய்வழிச்சா லைத்தெய்வம் - மாற்றறியாப் (127)
பொன்னரங்கர் எல்லா உயிர்க்கும் புகலிடத்தார்
என்னரங்கர் என்னா ருயிர்த்தேவர் - என்றும் (128)
உறக்கம் இலாத்தவத்தோர் உத்தமஅ னந்தர்
துறக்கம் பெறவருளும் தெய்வம் - அறவாழி (129)
ஒப்புவமை கூற இயலாத எண்குணத்தார்
செப்பரிய மேனிலையர் செந்தமிழ்ச்சீர் - இப்புவியில் (130)
வந்து அவதரித்து வல்வினைநோய் தீர்மருந்து
தந்து பிறவிப் பிணிதவிர்க்கும் - எந்தன் (131)
உயிர்க்குள் இனிக்கும் ஒருகணவர் எல்லா
உயிர்க்கும் உறுதுணைவர் ஓங்கும் - உயிர்ப்பயிர்செய் (132)
ஊருடையார் உத்தமமாம் பேருடையார் ஒப்பில்தவச்
சீருடையார் செந்தண்மை பூண்சிரமார் - தாருடையார் (133)
பொன்னழகர் இன்னுயிரில் பூரிக்கும் ஆரமுதர்
என்னழகர் எல்லா வரம்கைக்கொண் - டின்னருள்செய் (134)
இன்ப வடிவர்க்(கு) இனிதாகத் தூதுரைக்க
அன்பாய் இணங்கினிற்கும் அன்பே!கேள் - என்பால் (135)
இரக்கம் மிகக்கொண்டே ஏந்திழையென் நெஞ்சில்
சுரக்கும் உணர்வுகளைச் சொல்வேன் - சுரக்கின்ற (136)
வஞ்சமிலை வஞ்சி வளைநெகிழ்ந்தேன் மிக்கயர்ந்து
துஞ்சலிலேன் தோத்தரித்த லேதொழிலாய் - மஞ்சம் (137)
கசந்ததம்மா காதலரை எண்ணியெண்ணி மேனி
பசந்ததம்மா பற்றாலே கைகால் - அசந்ததம்மா (138)
ஓவாது உத்தமரின் நாமம் உரைக்கின்றேன்
ஆவா அவர்நினைவே ஆனந்தம் - ஆவலாய் (139)
சாமி எனதுதுரை சாலைக்குச் சென்றுசிவ
காமி எனதுஉரை சாற்றிடுவாய் - ஆமிதற்கு (140)
ஆலயத்தில் எம்போல்வர் ஆர்த்து குழுமியுள
காலம் பொருத்தமிலை கண்ணாளர் - கோலத் (141)
திருமாளி கைதன்னில் தேவியரோ டெந்தன்
பெருமா ளிருக்குங்கால் போகேல் - ஒருநாளும் (142)
ஓய்வுசாய் வின்றி யுகத்தவசு செய்யவென்று
நாயகர்தாம் செல்கின்ற நன்நேரம் - வாய்ப்பில்லை (143)
தன்னந் தனியோர்கால் சன்னிதியில் என்னழகு
மன்னர் இருக்குங்கால் மண்டியிட்டு - என்எளிய (144)
விண்ணப்பம் தன்னை விதந்துரைப்பாய் மாதவச்சீர்
விண்ணப்பர்க் கெந்தன்பேர் வாழ்த்துரைப்பாய் - பண்ணப்பர் (145)
காந்தருவ மாய்ச்சித்தி கானகத்தில் மாலையிட்ட
மாந்திருவை முன்னே மகிழ்ந்துரைசெய் - தாந்திருவார் (146)
வேதம் விளங்கிடவே மெல்லியல்என் சிந்தைக்கு
பாதம் அருளியெனைப் பேணியதும் - நீதர் (147)
மருள்தீர முத்தாபம் மாய்ந்திரிய ஏற்று
அருளமுதம் தந்தாண்ட அஃதும் - பெருந்தயவால் (148)
அன்றுசிவ காமிக்கு ஆர்ந்து இடப்பாகம்
நன்றளித்த நற்றயவை நற்சீரை - என்றனுக்கும் (149)
நல்கிய நாயகர்க்கு நன்குரைப்பாய் நல்லன்பே
தொல்புகழார் செம்பொருளைத் தோத்தரித்தோர் - நல்விதமாய் (150)
மெய்குண்ட விண்கயிலை மேனாட் டறவலஞ்செய்
உய்கின்ற நற்பணியுள் ஓங்குவித்து - வைகுண்ட (151)
வாசகர்தம் மெய்யார் வளமேனி விட்டென்னுள்
நேசங்கொண் டேகுடியே றிச்சிறந்து - தேசுடனே (152)
கற்பகத்தின் சோலைதனில் கைப்பிடித்துக் காடவர்கோன்
நற்சுகத்தை நன்கருள்செய் நாதமுனி - பொற்பதத்தை (153)
எண்ணியெண்ணி ஏங்கும் இளங்கலையாள் இங்கொருத்தி
கண்ணினீர் வாரக் கசிந்துருகி - விண்ணப்ப (154)
மாலையொன்று தந்தனுப்பும் மன்னவர்க்குத் யோவனத்தின்
சோலைதனில் சீரார் சமூகமதில் - கோலஞ்சேர் (155)
தெய்வப்பொற் றாளில் சமர்ப்பித்து சேயிழையேன்
நைவதனை சற்றே நயந்துரைத்து - மையலால் (156)
கோதை கசிதல் கனிந்துரைத்துக் காத்திருக்கும்
மாதைத் திருவுளத்தே எண்ணுவித்து - நாதர் (157)
திருத்தாளில் சூடிப் பெரும்பாக்யம் சேரும்
அருள்மாலை நீவாங்கி வா. (158)
- மெய்வழி பக்தி இலக்கியங்கள்
- மெய்வழி அடியார்களின் படைப்புகள்
- சமய இலக்கியம்
- அகரமுதலான வரிசையில் படைப்புகள்
- இறையியல்
- சிற்றிலக்கியங்கள்
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
- கவிதைகள்
- திரட்டு நூல்கள்
- 2017 படைப்புகள்
- பாடல்கள்
- தற்கால புலவர்களின் படைப்புகள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்