திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



69. பண்ணலங்காரம்[தொகு]

நூற் குறிப்பு:-

அணிஇலக்கண வகையான் எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் திருப்புகழைப் பராவு முகத்தான் இந்நூல் விதந்தோதப் பெறுகின்றது

பொன்னரங்கர் பண்ணலங்காரம்

காப்பு

நேரிசை வெண்பா

தானொளிர்நி லையின்பத் தெய்வத் திருவுருவைத்
தானறியா தூனமுற்ற தீனர்தமை - ஞானமெனும்
மெய்யருளால் உய்வித்த மெய்வழி ஆண்டவர்எம்
தெய்வத் திருத்தாள் சரண்.

சுயம்பிரகாச நித்யானந்த பிரம்ம சொரூபத்தினை அறியாது அஞ்ஞானமென்னும் திமிரத்தால் குருடாயிருந்த எங்களுடைய கண்களை ஞானமென்னும் அஞ்சனச் சலாகையால் திறந்த தேசிகேந்திரரே! தேவரீருடைய திவ்வியத்திருவடிக் கமலங்கட்கே நமஸ்காரம்.

நூல்

1. ஆடுஉப் பொருட்டன்மையணி

நேரிசை வெண்பா

பொன்னரங்க ஆலயத்தார் பூதலத்தின் மேதலத்தார்
என்னரங்கத் தின்ப நடம்புரிவார் - தென்னன்
பெருந்துறையார் வாழ்வு தருந்துறையார் பொற்றாள்
பொருந்திக் கனிந்தே இரு. (1)

பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் பொன்னரங்கம் என்னும் தேவாலயத்தில் எழுந்தருளியுள்ளார்கள். அவர்கள் இந்த வையகத்தின் மேலதாகிய வானகத்துக்குரியவர்கள். எளியேனது இதயமாகிய அரங்கத்தில் திருநடம் புரிந்து பேரின்பம் அருள்பாலிப்பவர்கள். தென்னாடுடைய இச்சிவபிரான். திருவோங்கும் பெரிய நற்றுறையாகிய சாலையம்பதியில் அருளரசாட்சி புரிந்து பேரின்பப் பெருவாழ்வினைத் தங்களை நச்சினார்க்கு இனிது தந்தருள் புரிபவர்கள். அவர்களின் பொன்மயமான திருவடித்தாள்களில் பொருந்தி அன்பு கனிந்து என்னுள்ளமே நீ நிலைத்திருப்பாயாக. பிரம்மப்பிரகாசச் சாலை ஆண்டவர்களை ஆண் தன்மையாகப் பாவித்து பாடுவதால் இஃது ஆடுஉப் பொருட்டன்மையணி ஆயிற்று.

2. மகடூஉப் பொருட்டன்மையணி

நேரிசை வெண்பா

ஆதி பராபரையாள் யாவையுமே ஈன்றளித்தாள்
நீதித் திருவுருவாள் நித்தியத்தாள் - மேதினியில்
சீதமலர் பொற்றாள் சிவக்க நடமிட்டாள்
பாதமலர் போற்றிப் பணி. (2)

பிரம்மோதய மெய்வழிச் சாலைத் தெய்வமாகிய என் அன்னை, ஆதிபராபரை என்னும் முழுமுதற் பொருளாவாள். சகல அண்ட சராசரங்களையும் படைத்துப் பேணும் பெருமாட்டி. நீதியே ஒரு திருமேனியான தரும நாயகி, என்றும் நிலை பெற்ற அன்னை. இப்பெரும் பூமி உய்யும் பொருட்டாய் எங்கள் இதயத்தில் வெம்பிறவி வெம்மை தணிவிக்கும் குளிர்ச்சி பொருந்திய மலர் போலும் பொன்னார் திருவடிகள் சிவந்திட இன்பநடம் புரிகின்றாள். எனது எளிய சிந்தையே! அந்த மலர்த்தாளைப் போற்றிப் பணிந்து வணங்கி உய்வாயாக. தெய்வத்தைப் பெண் தன்மையாகப் பாவித்துப் பாடுதலால் இஃது மகடூஉப் பொருட்டன்மை அணி ஆயிற்று.

3. உயிரற்ற அஃறிணைத்தன்மையணி

நேரிசை வெண்பா

தொட்டு முகஞ்சேர்த்தார் தீங்ககற்றும் வெம்பிறவிக்
கட்டறவே சிந்தை கனிவிக்கும் - மட்டில்
பெருமான் திருத்தாள் பதிந்தே சிறந்த
திருவார்சா லைச்சந்த னம். (3)

பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் பொன்னார் திருவடிக் கமலங்களின் சுவடுகள் பதிந்த பொன்னரங்க ஆலயத்தில் பரப்பப் பெற்றுள்ள, பொன்துகள்கள் போன்ற திருமணல் என்னும் சாலைச் சந்தனத்தில் தங்கள் இருகரங்களையும் பதித்துத் தொட்டு, தங்கள் முகத்தில் ஒற்றிக் கொண்ட அன்பர்களின் இனிய உள்ளம் பக்திப் பெருக்கால் கனியும்; அவர்களின் பிறவிப் பிணி என்னும் கட்டு அறும்; அவர்களின் தீங்குகள் யாவும் அகலும் என்பதாம். சாலைச்சந்தனம் என்னும் திருமணல் அஃறிணைத் தன்மையதாகலின் அஃது உயிரற்ற அஃறிணைத் தன்மையணியாயிற்று.

4. உயிருள்ள அஃறிணைத்தன்மையணி

நேரிசை வெண்பா

வண்ணஎழிற் புள்ளிசிறை வானீல மென்கழுத்தும்
எண்ணமதை ஈர்க்கும் எழில்நடையும் - அண்ணல்
திருப்பேர் அகவிச் செகத்தோர் அறியக்
குருப்பேர்சொல் சாலை மயில். (4)

ஸ்ரீவித்துநாயகம, எங்கள் பெருமான் எழுந்தருளியுள்ள உத்தியோவனமென்னும் சித்திகானகத் திருத்தவ மெய்வழிச் சாலையம்பதியில் ஏராளாமான மயில்கள் திரிதருகின்றன. அவை அழகிய வண்ணப் புள்ளிகள் நிரம்பிய தோகையையும் பிரகாசம் பொருந்திய நீலவானம் போன்ற அழகிய மென்மையான கழுத்தும் உடையன. அவை அசைந்தசைந்து நடக்கும் கம்பீரமான அழகு நடை நம் கருத்தைக் கவர்வதாக அமைந்துள்ளது. அம்மயில்கள் அகவும் சப்தமானது “குருநாதா! குருநாதா!” என்று எங்களுயிர்க் குயிரான பிராணநாயகரை விளித்து வேண்டுவதாக அமைந்துள்ளது. அவை அங்ஙனே காத்துக் கிடந்து கர்த்தாதி கர்த்தர் திருநாமம் அகவிடுதல் போன்று நீ பரந்தாமர் திருப்பாதம் பொருந்தியிருந்து அருள் பெறுவாயாக என் எளிய நெஞ்சே! என்பதாம். மயில் உயிருள்ள அஃறிணைத்தன்மையதாகலில் அஃது அகவுதலைப் பொருத்திப்பாடியதால் அவ்வணி உயிருள்ள அஃறிணைத்தன்மையணி எனலாயிற்று.

5. குறையுவமை அணி

நேரிசை வெண்பா

வெண்கலம் வார்த்து விளக்கியபோன் மிக்கொளிரும்
பண்கலப் பொன்னரங்கர் பாதமலர் - விண்கலத்தைப்
பற்றியபேர் பற்றறுத்துப் பேரின்ப வாழ்வென்னும்
வெற்றிதரும் மெய்வழி தெய்வம். (5)

வெண்கலத்தை உருக்கி வார்த்து அதனைத் துலக்கினால் மின்னும் எழில்போல் ஒளிபொருந்தி விளங்குவது எங்கள் புகழார்ந்த பொன்னரங்கர்தம் திருவடிகள். அத்திருவடி மலர்களைப் பற்றுதல் பரபோகத்திற்கு எத்துவிக்கும். உலகியல் இச்சைகளை அறுத்துப் பேரின்ப போகப் பெரு வாழ்வு என்னும் வெற்றியை அருள்பாலிக்கும் என்பதாம். துலக்கப்பட்ட வெண்கலத்தை ஒத்த திருவடிகள் என்று எம்பெருமானின் திருவடிகட்கு உவமை கூறினாலும், வெண்கலத்தால் ஆன திருவடிகள், எம்பெருமானின் திருவடிகளை வணங்குவதால் ஏற்படும் பலன்களை அளிக்கமாட்டா. எனவே இது குறையுவமையணி எனப் பெறுவதாயிற்று.

6. இல்பொருளுவமை யணி

நேரிசை வெண்பா

மறையாக் கதிரோனாய் மாநிலத்தோர் காண
இறையாய் எழுந்து இவர்ந்தார் - நிறைமெய்
பொழியும்செம் மேகந்தான் பூத்திருக்கும் வான்மெய்
வழிச்சாலை ஆண்டவர்தாள் வாழ்த்து. (6)

உலகியல் சூரியன் மறைவது இயல்பு. ஆயின் ஞான சூரியராகிய எங்கள் பெருமான் மறையாது என்றும் பிரகாசிக்கும் தன்மையர். அவர்கள் திருவுருத் தாங்கி, புவியின்கண் எழுந்தருளி, அறியாமை இருளை அகற்றிப் பவக்கொடுமைகளைக் காய்ந்தெறிந் திட்டார்கள். மழைபொழியும் மேகம் இயல்பாகவே கருமை நிறமுள்ளது. எம் குருகொண்டல் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் அமுத மாரி வருஷிக்கும் திருப்பவளச் செவ்வாயும் செந்தாமரையிதழ் போன்ற மலர் நாவும் செம்மேகம் பூத்திருத்தல் போன்ற எழில் பொருந்தி விளங்குகின்றன. என்மனமே அவர்களின் பொன்னாரடிக் கமலங்களை வாழ்த்தி வணங்கி உய்வாயாக. எவ்விடத்தும் எக்காலத்தும் இல்லாப் பொருள்களை உவமையாக்கி உரைத்தலான் இஃது இல்பொருளுவமையணி ஆயிற்றென்க.

7. விபரீத உவமை அணி

நேரிசை வெண்பா

கொடைக்கரத்தை ஒத்தனவக் கார்முகில்கள் பாயும்
மடையெம்மான் வாக்கினையொத் தார்க்கும் - கடைக்கண்ணோக்
கொத்த ஒளிர்ந்த கதிர்மதிகள் வம்மின்கள்
அத்தனருட் சார்ந்துய்யு மாறு.

வரந்தரு திருவினராகிய எங்கள் தேவதேவேசரின் திருக்கரமானது கைம்மாறு கருதாது சாவாவரப் பேரின்பப் பெருவாழ்வை வழங்குகின்றது. எம்பெருமான் திருக்கர இயல்பினைக் கண்டு கார்முகில்கள் தாங்களும் பயன் கருதாது மழை பொழிகின்றன. தங்கு தடையின்றிப் பெருகி வரும் எம்பெருமான் திருவாக்கமிர்தத்தைப் பார்த்து வெள்ளப் பெருக்கு மடைதிறந்து பாய்கின்றது. எங்கள் நாயகரின் திருக்கடைக்கண்ணோக்கின் பிரகாசத்தைக் கண்டு சந்திர சூரியர்களின் ஒளிக்கதிர்கள் பிரகாசிக்கின்றன. எனவே அவர்களின் திருவருளைச் சேரந்துய்ய உலகீரே வம்மின்கள். தொன்றுதொட்டு உவமையாக வந்ததனை உவமேயமாக்கி உவமேயப் பொருளை உவமையாக்கி உரைத்தலான் இஃது விபரீத உவமை எனலாயிற்று.

8. மருட்கை யுவமை அணி

நேரிசை வெண்பா

தேன்கைக்கும் எந்தை திருவாக் கமுதின்முன்
வான்கதிரும் மெய்ம்முன் ஒளிமழுங்கும் - வான்கருணை
நாயகரெம் மாருயிர்க்கு நல்கும் தயவுக்கு
தாயன்பு தாழும் தெளி. (8)

எங்கள் குருகொண்டலாகிய முழுமுதற் பொருளின் திருவாக்கு அமிர்தத்தின் நிகரற்ற மதுரத்தைச் சுவைத்தபின் தேனும் கசப்பதுபோல் தோன்றும். அவர்கள் திருமுக மண்டலத்தின் கோடி சூரியப்பிரகாசத்தின் முன் சூரியனும் ஒளி மழுங்கியே தோன்றும். உலகியல் தாய் உடலை வளர்ப்பாள். ஆயினும் எங்கள் தெய்வத்தாய் இகம் பரம் இரண்டினும் இரட்சிக்கும் பெருங்கருணைத் தயவுடையாள். உடலையும் வளர்த்து உயிரையும் வளர்த்து உயிரைப் பற்றிய பிறவிப் பிணியையும் தீர்த்துச் சாவாவரமருளிச் செய்யும் பேரிரக்கத்தினுக்கு எந்தத்தாயன்பும் நிகராகாது என்பதைத் தெரிந்து கொள்வாயாக என் எளிய நெஞ்சே! ஒரு பொருளுக்குக் கூடாத பண்பினைக் கூடுவதாகக் கொண்டு அப்பொருளை பிரிதொரு பொருளுக்கு உவமையாகக் கூறுதலால் மருட்கையுவமை யாயிற்றென்க.

9. தடுமாறுவமை அணி

நேரிசை வெண்பா

வற்றாவான் கங்கைபோல் வாக்கமிர்தம் வாக்கதுபோல்
வற்றாவான் கங்கை பெருகுமால் - கொற்றவர்தம்
வள்ளன்மை வான்முகிலை ஒக்கும்அவ் வான்முகில்தான்
வள்ளல்தன் வள்ளன்மை போன்ம். (9)

எங்கள் பெருமான் திருவாக்கமிர்தம் வற்றாது பெருகும் ஆகாய கங்கை போன்றதாகும். ஆகாய கங்கையின் வெள்ளப்பெருக்கு எங்கள் ஐயரின் திருவாக்கமிர்தம் போல் விளங்குகின்றது. எங்கள் பிராண நாயகரின் கொடைத் தன்மை வான்முகில் வரையறாது பொழிவது போல்வதாம். அந்த, வான்முகிலின் வள்ளண்மை எங்கள் தெய்வத்தின் அருட்கொடை போன்று கைம்மாறு கருதாது சிறந்து விளங்குவதாம். உவமையை உவமேயமாக்கி மீண்டும் அவ்வுவமேயத்தை உவமையாக்கிக் கூறுவதால் இஃது தடுமாறுவமை எனப்பட்டது.

10. சமுச்சயவுவமை அணி

நேரிசை வெண்பா

வரையின்றிப் பொங்குதலால் அன்றிவளம் பொங்கும்
கரைகங்கு காணாத கங்கை - துரையெங்கோன்
வான்கருணை பொங்கிப்பே ரின்பம் உயிர்ப்பயிர்க்குத்
தான்பெருகி உய்வைத் தரும். (10)

கங்கை நதியானது அளவின்றிப் பெருக்கெடுத்தலோடு அமையாது அஃது பாயும் இடங்களிலெல்லாம் வளம்பெருகச் செய்வதுபோல் கருணைப் பெருக்கினால் ஜீவர்கள் பேரின்பம் பெறுவதுடன் சாவாவரமும் பெற்று உய்கின்றனர். எம்பெருமான் திருவருட் பெருக்கிற்கு எல்லை அளவு ஏதும் உளதோ? அவர்கள் அருள் சுரந்து பெருகிப் பாய்வதால் நன்மன ஜீவர்கள் செழித்து இகபர சௌபாக்கியங்களும் தேக ஜீவமுத்திப் பேரின்ப போகப் பெருவாழ்வும் பெற்று உய்கின்றார்கள். ஒரு பொருள் மற்றொரு பொருளை ஒப்பது இதனானே அன்றி மற்று இதனானும் ஒக்கும் என உரைப்பதான் இஃது சமுச்சயவுவமை எனக் கூறலாகின்றது.

11. நியமவுவமை அணி

நேரிசை வெண்பா

அமிர்தமொழி யேஇறைவர் ஆரருள் அஃதுண்டோர்
அமரத்வம் பெற்றுய்ந்தார் நீடு - இமயவர்தம்
சந்தியாய் என்றும் சிறந்தார்பொற் சீரடியே
வந்தனைசெய் துய்யும் வழி. (11)

நமது உயிர்நட நாயகராகிய பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் நிறைமொழியாகிய எமன்படர் அடிபடு அருளார் அமுதத்தினை உண்டவர்கள், தெய்வீக நிலை பெற்று நீடுழி வாழ்வார்கள். அவர்கள் ஆண்டவர்களின் சந்ததியென்னும் பெறற்கரும் பேற்றினைப் பெற்று இனிது விளங்குவார்கள். ஆண்டவர்களின் பொன்னார் அடிக்கமலங்களை வணங்கிப் போற்றுவதே உய்யும் வழியென்றறிக என் நெஞ்சமே! இன்னதற்கு இன்னதெனத் தேற்றேகாரம் கொடுத்துச் செப்பியதான் இஃது நியமஉவமை யாயிற்றென்க.

12. அநியமஉவமை அணி

நேரிசை வெண்பா

உண்டற்றே நற்றேன் இனிக்கும் திருவுருவைக்
கண்டற்றும் எண்ணுகினும் தேன்பிலிற்றும் - அண்டர்கோன்
நன்னாமத் திற்கொப்பு நானிலத்தும் வானகத்தும்
நன்னாமம் ஒன்றே அறி. (12)

நல்லதேன் உண்டபொழுது மட்டுமே இனிக்கும். எங்கள் குருகொண்டல் சர்வபராபரர் சாயுச்ய தவராஜ மேருவின் திருவுருவைத் தரிசித்தபோதும் அவர்களை நினைக்குந்தோறும் இன்பத்தேன் ஊற்றுப் பெருக்கெடுக்கும். முப்பத்து முக்கோடி தேவர்கட்கும் நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிமார்கட்கும் தலைவராகிய எம்பெருமானின் திருநாமத்திற்கு வையகத்திலும் வானகத்திலும் ஈடில்லை. அவர்கள் திருநாமத்திற்கு ஈடிணையாவது அவர்கள் திருநாமமே என்று அறிக நெஞ்சமே! இன்னதற்கு இன்னதே உவமையாம் என முன்பு நியமித்த உண்மையை விலக்கிப் பிரிதொன்றும் உவமையாம் எனக்கூறுவது அநியம உவமையாகும்.

13. மாலைஉவமை அணி

நேரிசை வெண்பா

பொங்கிவரும் காவிரிபோல் காவிரியின் தண்ணளிபோல்
எங்கும் அளிவளம்போல் ஈந்தளித்து - சங்காது
எங்கோன் அருளமுதால் இவ்வுலகம் உய்வுறச்செய்
துங்கப் பெருவளத்தார் சீர். (13)

பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் உயர்ந்த பரிசுத்தம் மிகுந்த திருவருளார் அமிர்தப் பெருக்கு, காவிரி நதி பொங்கிப் பெருகி வருவது போன்று பெருக்கெடுத்துப் பாய்ந்து, அக்காவிரியின் நந்நீர் பாய்வதால் வளங்கொழித்து வயல்கள் செழித்து விளைந்து திகழ்வது போன்றும் அவர்கள் திருநோக்கிற்கு ஆட்பட்டு திருவாக்கமிர்தத்தைச் செவிவாயாக நெஞ்சுகளனாகப் பருகியோருக்கு இகபர சௌபாக்கியச் செல்வங்கள் பொங்கிப் பெருக உய்வு அடையச் செய்யும் என்பதாம். ஒருபொருட்குப் பலவுவமை கூறித் தொடர்ச்சியாகப் புணர்த்துக் கூறுதல் மாலையுவமையெனலாகும்.

14. பொதுநீங்கு உவமை அணி

நேரிசை வெண்பா

வானவரும் ஞானியரும் மாமுனிவோர் மாதவத்தோர்
தானவர்நிற் கொப்பார் தயாநிதியே - மோனசபா
முன்னைப் பழம்பொருளே மூவா முழுமுதலே
அன்னை அனைத்திற்கும் நீர். (14)

தயவே வடிவான வான்நாட்டுச் செல்வமே! தேவலோகத்தில் உள்ள தேவர்கள், ஞானியர், பெரும் முனிபுங்கவர்கள், பெருந்தவசிரேஷ்டர்கள் என்போர் எவரையும் தங்களுக்கு இணைகூற இயலுமோ? மோன வரம்பின் திருச்சபையில் விளங்கும் முழுமுதற்பொருளே! என்றும் முதுமையடையாத தினம் புதியவரே! தாங்களே அனைத்திற்கும் தாய். தன்னைப்போல் எதுவும் இன்றித் தனித்து நிற்கும் சிறப்பினராகக் கூறுதலின் இஃது பொது நீங்கு உவமை யாயிற்றென்க.

15. இரட்டை உவமை அணி

கட்டளைக் கலித்துறை

நவநன் நிதிபொங்கு செல்வக் குபேரரின் மிக்கவரென்
சிவவிண் நிதிச்செல்வர் சீரார் தபோநிதி சேர்பெருமான்
பவவன் வினைவீயப் பேரருள் ஈந்திடும் வள்ளலிவர்
தவமெய் வழிதெய்வம் மாமுனி எங்கள் தயாநிதியே! (15)

தவமேருவின் சிகரமாகிய எங்கள் மெய்வழித் தெய்வம், முனிவர்கட்கரசு, தனிப்பெருங்கருணைத் தலைவர், அருட்பெருஞ்சோதி வள்ளல், வானநாட்டுச் செம்மல், ஒன்பான் வகையான மணிகள் நிறைந்த கருவூலத்தினையுடைய குபேரனினும் மிகுந்த செல்வர், எம்பெருமானாகிய சிவ விண்ணாட்டுச் செல்வந்தரின் திருவருட்தயவாகிய நிதியினைப் பெற்ற உயிர்கள் பவமாகிய பிறவிப்பிணி நீங்கி உய்வர். உவமையின் அடைமொழிக்கு ஏற்பப் பொருளுக்கும் அடைமொழியைப் பொருத்திக் கூறுதலான் இரட்டை உவமையென்னும் அணியின்பாற் கூறலாயிற்றென்க.

16. ஒத்தது வென்றது என்னும் உவமை அணி

நேரிசை வெண்பா

கரைகாணா வார்கடல்போன்ம் காருண்யம் எங்கள்
வரைகாணா வெம்பிறவி வீயத் - துரையெங்கோன்
சார்ந்தவர்கள் வெவ்வினைகள் தீர்ந்தவர்மெய் யார்ந்தவர்கள்
தேர்ந்தவர்கள் தெய்வஅருள் போற்று. (16)

எங்கள் பிறவிப் பிணியானது கங்குகரை காணாத கடல் போன்று எவரானும் தீர்ப்பதற்கரிதாக இருந்தது. எங்கள் குருகொண்டல் எங்கள் தயாநிதி தங்கள் தனிப் பெருங்கருணையாகிய எவரானும் எல்லையளவு உரைக்க வியலாத திருவருட்தயவு என்னும் நந்நீர்க் கடல் வளத்தால் அப்பவப் பிணியினைத் தீர்த்தருள் பாலித்தார்கள். ஆகலின் உலகீரே! எங்கள் பரந்தாமரின் திருப்பத மலர்களைச் சார்ந்து, பிறவிப்பிணி தீர்ந்து, மெய்ப்பொருளை ஆர்ந்து பரபோகப் பெருவாழ்வில் தேர்ந்து உய்வீர்களாக. ஒருபொருள் தனக்குரிய உவமைகளில் ஒன்றினை ஒத்துப் பிரிதொன்றினை வென்றதாகக் கூறுதலின் இஃது ஒத்தது வென்றது என்னும் உவமையின் பாற்பட்டது.

17. முதுமொழியுவமை அணி

நேரிசை வெண்பா

பட்டியில் தூங்கினார்க்குக் கெட்டி மேளம் கல்யாணம்
எட்டியுங்கள் ஏர்பதியைப் பார்த்தேற்கு - மட்டில்லா
சாவா வரம்வாழ்வும் சந்ததமும் தந்தருளும்
தேவாநும் பொற்றாள் சரண். (17)

ஆடுகளை மாடுகளை மேய்த்துவிட்டுப் பட்டியில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவனுக்கு எதிர்பாராத விதமாகச் சிறப்பாகத் திருமணம் நடந்ததே போன்று ஐம்பொறிகளாகிய ஆடுகளை ஆங்காங்கு திரியவிட்டு அவற்றின் சிற்றின்பநுகர்வால் மயங்கி உறங்கிக் கிடந்த எளியேன், மெய்வழிச்சாலை என்று ஒன்றிருக்கிறது என்று கேள்வியுற்று அதனைப் பார்த்து வருவோம் என்று இந்த அழகிய திருப்பெரும்பதியினை வந்து தரிசித்த காலை, எனக்கு, இணைதுணை கூறவியலாத - எவராலும் எக்காலத்தும் எவ்வாற்றானும் வழங்க வியலாததாகிய சாவா வரமென்னும் சாயுச்யப் பெரும் பதத்தினைத் தந்தருள் பாலித்த தேவாதி தேவா! திருவையாறா! தேவபரமண்டலத்தின்பிதாவே தீன்குலதிலக நாயகராகிய எம்பெருமானே! தங்கள் திருவருட் பொன் மலர்த் தாள்களைச் சரணடைகின்றேன். ஒருபொருளுக்கு ஏதுப்பொருளைக் குறித்து பழ மொழியை உவமையாக்கி உரைப்பது முதுமொழி யுவமை எனப்பெறும்.

தேட்டிற்கு வந்தேனைக் காட்டிற்குள் கொண்டேவான்
நாட்டிற்கு இஃதே நலவழியாய் - பூட்டிற்கு
எல்லாமே ஓர்திறவு சொல்லாமே சொன்னவர்க்கு
எல்லாம்ச மர்ப்பித்த னம்.

எல்லாத்தேவாலயங்கள் போன்று இஃது ஒன்றாமென நாடிவந்த எளியேங்களை எக்காலத்தும் எவ்விதத்தும் எட்டுணையாகிலும் எண்ணிப் பார்த்தறியாத உத்தியோவன சித்திகானகத்திற்குள் கொண்டேகி, வானநாட்டிற்கு இஃது ஒன்றே வழியாமென அறிவித்து, வேத வேதாந்தங்கள் அனைத்தையும் ஒரெழுத்து மாத்திரைக் கோலென்னும் ஒருமொழி கீதையாகிய விஸ்வரூப விஸ்வநாதத் திறவுகோல் கொண்டு திறப்பித்து, அருள்பாலித்த எங்கள் குலகுரு முத்தித்திருவடிவராகிய தெய்வத்தின் பொன்னாரடிக் கமலங்கட்கு எம்முடல் பொருளாவி அனைத்தையும் எம்குல முழுவதையும் கொத்தடிமையாகச் சமர்ப்பித்தனம். நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்கும் என்னும் முதுமொழியை உவமையாக்கியதான் இஃது முதுமொழி உவமையாயிற்றென்க.

18. சிலேடையுவமை அணி

நேரிசை வெண்பா

தானே அனைத்துள்ளும் தன்னுள் அனைத்தும்கொள்
தானம் வழங்கும் தவகொண்டல் - மோன
சபாநிலையம் இன்ப சுகோதயமும் ஈயும்
தபோனிலைமெய்த் தெய்வமெனும் வான். (19)

வானமானது உலகம் அனைத்தையும் அடக்கிக் கொண்டுள்ளது. அனைத்துள்ளும் அடங்கியுள்ளது. எங்கள் குலதெய்வதேவேசர்! சிவபரம்பொருள்! பரந்தாமர்! ஆதி நாயகர்! நீதித்திருவுருவர்! தபோநிதி! அனைத்துயிர்களையும் தமக்குள் அடக்கி வைத்திருக்கும் அண்டபிர்மாண்டமாகவும், அனைத்துயிர்க்குள்ளும் அணுவுக்கணுவாயும் அடங்கி யிருக்கும் நுண்ணுயிராகவும் விளங்குபவர் எனவே எம்பெருமானே ஞானாகாயம். இஃது வானுக்கும் எங்கள் தேவகோமானுக்கும் சிலேடையாகப் பாடப்பெற்றது.

19. உருவக உவமை அணி

முகமதியால் எங்கள் அகமதிருள் நீக்கும்
சுகமதியர் எங்கோன் திருக்கை - முகிற்கொடையால்
தீர்ந்தோம் பிறவிப் பிணியகன்று மீக்குய்ந்தேம்
ஆர்ந்தேம் அருட்கடலுள் ஆழ்ந்து. (20)

எங்கள் வரதபராபரராகிய பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் திருமுக மண்டலமாகிய பூர்ணச் சந்திரனின் ஞானப் பிரகாசத்தினால் எங்கள் உள்ளத்தில் படிந்திருந்த நீக்குதற்கரிய இருளானது அகன்று கைம்மாறு கருதாத கொண்டற் கொடைக் கரத்தினால் எங்கள் சாவு என்னும் துக்கம் நிவர்த்தியாகிப் பேரின்ப போகப் பெருவாழ்வு என்னும் சுகம் உதயமாகிறது. எனவே பாலில் நீர் கலந்தாற்போலும் உப்புப் பொம்மை நீருள் அமிழ்ந்து உருவற்றாற் போலவும் தெய்வத் திருவருட்கடலுள் ஆழ்ந்து பிரிவற நிற்போமாக. ஒருபொருளை உருவகம்செய்து அதனையே மீண்டும் மற்றொரு பொருளோடு உவமித்ததால் உருவக உவமையா யிற்றென்க.

20. அற்புதவுவமை அணி

வண்டுகளைத் தேடிவந்த வான்மலரே! வானமுதை
உண்டுகளைப் பாறவருள் ஓர்மதியே! - பண்டு
பழுத்தவினை காய்ந்தெறியும் பிஞ்ஞகரே! பூந்தாள்
வழுத்துமக ரந்தரெளி யேம். (21)

இயல்பாக வண்டுகள் மலரைத் தேடிச்சென்று தேன் உண்டு களிக்கும். ஆயின் ஜீவர்கள் என்னும் வண்டுகளாகிய எங்களைத் தேடிவந்து திருவருள் ஞானாமிர்தத் தேன்பிலிற்றும். எண்ணிய எண்ணியாங்கு எய்துவிக்கும் இணை துணைகூற வியலாத கற்பக வான் பாரிஜாத மலரே! வானமுதத்தினை உண்டு சாவுத்துன்பம் என்னும் களைப்பினை ஆற்ற அருளமுதம் வழங்கும் வான்மதியாகிய எங்கள் குலதெய்வமே! நெடுநாளாகப் பூத்துக்காய்த்து பழுத்துக் கிடந்த எங்கள் பிறவிப்பிணியினைத் தகித்தெறியும் சங்கார கரணரே! (மலரின் மகரந்தத் துகள்கள் மகரந்தச் சூல்மடி சேர்வது இயல்பு) மகரந்தத்துகள்களாகிய எளிய ஜீவர்களாகிய எங்களைத் தங்கள் திருமணிச்சூலில் தாங்கிப் புனல் ஜென்ம மறுபிறப்பு அருள்வதற்காக ஏற்கும் தங்கள் பொன்னார் திருமலர்த்தாள்களைப் பணிந்துய்கின்றோம். ஒருபொருளை வியப்புச்சுவை தோன்றுமாறு கூறி அப்பொருளை பிறிது ஒரு பொருளுக்கு உவமையாக்கி உரைப்பது அற்புத உவமையாமென்க.

21. சிறப்புருவக அணி

நேரிசை வெண்பா

கொண்டல் கரமாய் குவளை அருள்நோக்காய்
தண்டேன் பொழியுமலர்ச் செவ்வாயாய் - கண்டம்
கமுகாய்ச்செந் தாமரைத்தாள் ஆகிற் றிருள்தீர்
அமுதாயிற் றெங்கோமான் வாக்கு. (22)

பிரதிபலன் கருதாத அருள்மழைமுகில் போன்றது எங்கள் தேவகோமானின் திருக்கரம். திருக்குவளை மலர்கள் போன்ற நயனங்கள் திருவருட்பிரகாசம் பொருந்தியன. அருளாரமுதத் தேன் பிலிற்றிச் செவிவாயாக மாந்துந்தோறும் நிகரற்ற பேரின்பச் சுவை வழங்குவது எங்கள் உயிரில்கலந்தினிக்கும் சாலை ஆண்டவர்களின் திருப்பவளச் செவ்வாய்! அத்திருவாயினின்றும் பெருக்கெடுத்து எங்கள் உயிர்ப்பயிரில் பாய்ந்து வளஞ்சுரந்து சாவா வரமருள்வது எங்களையரின் அமுதவாக்கு. தென்றல்காற்றில் மலர் போன்று அசைந்தசைந்து நிசழ்ந்தவழ்ந்து இசைந்த உள்ளத்து இருள் தீர்த்து அருள்பாலிக்கும் திருச்சிரத்தினைத் தாங்காநிற்கும் வான்கமுகு போன்றது எங்கள் தேவகோமானின் திருக்கழுத்து. எங்கள் உயிர்நட நாயகரின் பேரெழில் இருந்தவாறு என்னே! என்னே! சிறந்த அடைகளை உருவகம் செய்து அக்காரணத்தான் பொருளையும் உருவகம் செய்ததான் சிறப்புருவகம் ஆயிற்று.

22. நட்புருவக அணி

நேரிசை வெண்பா

கூற்றுக்கோர் கூற்றாய் கொடுங்கலிக்கோர் வெங்கலியாய்
ஏற்றவர்க்குப் பேரின்ப இன்னமுதாய் - மாற்றறியா
மெய்யருக்கு மெய்யாகி மெய்யறியாப் பொய்யருக்குப்
பொய்யாகும் மெய்யிஃதை மேவு. (23)

பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் உயிர்களைக் கொல்லும் எமனுக்கு எமன். அழியும் கலிப்பவகர இருளைவெல்லும் வெங்கலி. ஆயின் எங்களுக்கு தனிப் பெருங்கருணாரமுதம் வழங்கும் தர்மப்பிரபு. எங்கள் உயிருள் ஆனந்த நடமிடும் இனிய பிராணநாயகர். மெய்யருக்கு மெய்யர் பொய்யருக்குப் பொய்யர். ஆகலின் இனிய இதயம் உடைய ஜீவர்களே இம்மெய்யினை மேவி உய்வீர்களாக. ஒரு பொருளை உருவகம் செய்து அஃது ஒருவர்க்குத் தீங்கும் அஃதே மற்றவர்க்கு நன்மையும் அளிப்பதாகக் கூறுவது நட்புருவகம் எனலாயிற்று.

நேரிசை வெண்பா

சாவா வரமென்னும் சுகநிதியை ஈந்தருள்செய்
தேவா! திருவருளும் வான்கதிரே! - ஓவாப்பேர்
இன்ப மழைபொழியும் ஏரார்ந்த கொண்டலரே!
அன்பிற்கட் டுண்டபெரு வான். (24)

எத்திறத்தாரானும் எவ்வாற்றானும் எக்காலத்தும் வழங்க இயலாததாகிய பேரின்பப் பெருவாழ்வை வழங்கி அருள் பாலிக்கும் திருவருள்ஞானக்கோடி சூரியப்பிரகாசரே! ஓய்வு ஒழிவின்றி ஜீவர்களை ரட்சிக்கும் பொருட்டாய் அருளாரமுதவர்ஷிப்பு என்னும் ஞானத் தேன் மழை பொழியும் வான்முகிலே! அண்ட சராசரங்களையும் தம்முள் அடக்கிக் கொண்டுள்ள ஞானஆகாயமாகிய தாங்கள் பரிசுத்த யதார்த்த வைராக்கிய ஜீவர்களின் களங்கமற்ற பயபக்தி மிகுந்த அன்பிற்குள் கட்டுண்டவர்களன்றோ?

23. வியநிலை உருவக அணி

நேரிசை வெண்பா

பூங்கமலப் பொற்பதமும் பொங்கருளார் செவ்வாயும்
தேங்குவளை யார்த்த திருநயனம் - வீங்கொளிசேர்
வான்மதியம் போல்வதனம் வண்ணம் தெரிசித்தோர்க்
கேன்பிறவித் துன்பம் இனி. (25)

வாரும் உலகீரே! பிரகாசம் பொருந்திய செந்தாமரை மலரிதழ்கள் போன்ற எம்பெருமானின் திருத்தாள்களையும், பிறவிப் பெருங்கடல் நீந்தும் புணையாகிய பேரின்பப் பெருவாழ்வருளும் அமுத தாரையாகிய திருமறை மணி மொழி பொழியும் திருப்பவளச் செவ்வாயினையும், இனிய தேன்பிலிற்றும் குவளை மலர்போன்று பெருந்தயை கனிந்த அருளடைபடுத்த எழில் திருவிழிகளையும், அருட் பிரகாசம் பொருந்திய முழுமதி போன்ற அழகிய திருமுகத்தினையும், ஒருமுறை தரிசித்தாலேபோதும். இருவினைகளும் பிறவிப்பிணிகளும் தீரும் நல்லிரே! ஒன்றன் அங்கம் பலவற்றுள் சிலவற்றை மட்டும் உருவகம் செய்து வியப்பது வியநிலை உருவகம் என்பதாம்.

24. வேற்றுமை உருவக அணி

நேரிசை வெண்பா

திருவோங்கு மெய்வழி தெய்வ அருட்தேன்
தருமினிமை நல்லுயிர்க்குச் சீராய் - குருவருட்தேன்
என்றும் திகட்டா சுவைகுன்றா கொம்புத்தேன்
குன்றும் திகட்டும் சுவை. (26)

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற ஓங்குயர் சிறப்பின் பாங்குறு கொள்கையை உலகில் நிலை நிறுத்திய சத்திய தேவ பிரம்மகுலம், மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம் ஆகியவற்றின் உற்பவ உற்பன்னராகிய எங்கள் குலகுரு கர்த்தாதி கர்த்தர் கல்கி அவதார புருஷோத்தமர் மகதி மனுமகன் அவர்களின் திருவுயர் கருணைபொங்கும் அமுத வாக்கென்னும் தெய்வ அருட்தேனைச் செவிவாயாக நெஞ்சுகளனாகச் சுவைத்தால் அஃது என்றும் சுவை குன்றாது, எப்போதும் திகட்டாது. எண்ணுந்தோறெண்ணுந் தோறும் இன்பம்தரும். ஆயின் கொம்புத்தேன் ஓரளவிற்குமேல் திகட்டும். சுவையும் குன்றும். இஃது வேற்றுமை உருவகம் என்னும் அணியின் பாற்பட்டது.

25. முற்றுருவக அணி

எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

அருள்பொழியும் முகநிலவும் இளநகைபி றங்கும்
அழகிதழாம் பவளஎழில் திருப்பல்முத் தாரம்
திருக்குவளை நயனம்வளை தனுபுருவம் எள்ளின்
செழுமலர்நா சியினழகும் செங்கதுப்புக் கன்னம்
இருள்கடியும் அருளமுதத் திருமொழிமென் மிடறும்
இலகுசங்கம் மத்தகமார் பகம்கொண்டற்கொடைக்கை
திருவடிசெந் தாமரையைத் தெரிசித்த பேர்க்கு
தீங்ககலும் பிறவியெனும் மரணமிலை கண்டீர்!
(27)

ஜீவர்களின் இதயமெனும் செழுநிலத்தில் எங்கோன்
செம்பொருளாம் வித்திடவும் திருவருளா ரமுதம்
மேவுமழை பொழியஉயிர்ப் பயிர்செழித்து முத்தி
விளைந்ததுகாண் வினையறுத்தே வன்பவத்தைத் தூற்றி
தேவருளம் பொங்கலிடச் சிந்தையெனும் கன்னல்
செழித்தினிக்கக் களித்திருப்போம் தேவர்களே வம்மின்!
கூவியழைத் தருகிருத்திக் கொழுங்கனிஞா னத்தைக்
குருபெருமான் அருள்தருவார் கனிந்தினிதே பெறுமின்.
(28)

ஏ! அகன்ற பெரிய உலகீரே! வம்மின்கள்! மரணமிலாப்பெருவாழ்வு :என்னும் பெரும்பதம் பெற நயப்பீரேல் அதற்கோர் துறையுண்டு. அருள் வழங்கும் துரையுண்டு. எங்கள் ராஜாதி ராஜர்! தேவாதி தேவர்! கர்த்தாதி கர்த்தர்! குலகுரு முத்தித் திருவடிவர் அவர்களின் திருவருள் ஜீவகாந்தமென உயிரைக் கவர்ந்து இழுக்கும். இளநகை பிறங்கும் செவ்வல்லி மலர்களை ஒத்த பவள இதழ்கள், கட்டாணிமுத்தாரம் போன்ற திருப்பல்வரிசை, திருக்குவளை மலர்கள் போன்ற அருள்பொழியும் விழிகள், இந்திரதனுவினை ஒத்த எழில் புருவங்கள், எள்ளுப்பூப் போன்ற வடிவழகுமிக்க வெளியே மூச்சோடாத அழகிய நாசி, சிவந்த மாங்கனியணைய கதுப்புக் கன்னங்கள். எங்கள் பிறவியிருள் கடியும் அருளமுதம் பொழியும் திருமலர்வாய், ஆழிகாணாத திருவலம்புரிச் சங்கனைய திருக்கழுத்து, விசாலமான ஆணிமுத்துமாலைகளும் தங்க முப்புரிநூலும் தவழும் அகன்ற ஆரெழில் மார்பகமும், முழந்தாளின் முட்டுவரை நீண்ட முபாரக்காகிய அழகிய திருக்கரங்கள், செந்தாமரை மலர் போன்ற அழகிய திருவடிகள் ஆகியவற்றை ஒருமுறை தரிசித்தால் போதுமே அம்மா! இருவினை ஒழிந்திடுமே ஐயா! எங்கள் குரு கொண்டலாகிய அனந்தர்கட்கரசர் ஆருயிர் நாயகர்! அமிர்தவாரிதி! தேவகோமான்! ஜீவர்களின் இதயமாகிய செழுநிலத்தில் மெய்ப் பொருளாகிய வித்தினை விதைத்து அருளாரமிர்தம் வர்ஷித்ததால் உயிர்ப்பயிர் செழித்து வளர்ந்து முத்தியென்னும் பெரும்பதம் விளைந்தது. அதுகாலை எங்கள் குருநாதர் வெவ்வினைகளை அறுத்துப் பவப்பிணியினைத் தூற்றியருளவும் தேவர்களாகிய எங்களிதயம் பொங்கலிட்டது. எங்கள் சிந்தையான கரும்பு இனித்து மகிழ்ச்சி பெருகிநிற்கின்றது. அதைப்பெற தேவர்களே! வாருங்கள்! வாருங்கள்! எளியரென் றெண்ணாது இதயகமல வாசராகிய எங்கள் அறவாழி அந்தணர் அருளமுதம் வாரி வழங்குகின்றார்கள். பெறவந்து முந்துமின் உலகீரே! மேலே குறிக்கப்பெற்றுள்ள இரண்டு பாசுரங்களும் முற்றும் உருவகங்களாகவே பாடப் பெற்றமையான் முற்றுருவக அணி என்பதன் பாற்பட்டதாமென்க.

26. அபநுதி உருவக அணி

நேரிசை வெண்பா

அரவிந்தம் இஃது தாளன்று அண்ணல்
கரமன்று கொண்டல் கருணை - வரமருளும்
நாவன்(று) அமுதமடை நல்வதன மன்றுமதி
தேவாதி தேவன் திரு.
(29)

எமது கருணாமூர்த்தியின் பெருகொளிசேர் திருவுருவ தரிசினை பெற்றபோது கண்ட காட்சியாவது:- அவர்கள் திருவடியை நோக்கினேன், அஃது திருவடியன்று தாமரைமலர்; அவர்கள் திருக்கரத்தினை நோக்கினேன், அஃது திருக்கரமன்று; வரையறாது, கைம்மாறு கருதாது பொழியும் கார்முகில்; அவர்கள் திருவாயினின்று பொழியும் அமுத வாக்கினைச் செவிமடுத்தேன்; அஃது திருவாக்கன்று, அமிர்தமானது எல்லையளவின்றிப் பாயும் அமிர்தமடை. அவர்கள் திருமுக மண்டலத்தைத் தரிசித்தேன். அஃது பூர்ணச் சந்திரோதயம். இதுவே என் தேவாதி தேவரின் பரிபூர்ண அலங்கிர்தமாயிற்று. எடுத்துக்கொண்ட உண்மைப் பொருளை மறுத்து உருவகப் பொருளை முடித்ததான் இஃது அபநுதி உருவகம் எனக்கூறலாயிற்று.

27. உள்ளுறை உவம அணி

நேரிசை வெண்பா

மறையாக் கதிரோன் விளங்கொளிசேர் திங்கள்
கறையாம் இருட்கில்லை வேலை - குறையாத்
தனவந்தர்ச் சார்ந்தோம் தரித்திரங் கெற்கு
இனமில்லை இன்பம் நிலை.
(30)

பகலவன் மறைதல் இயல்பு. ஆயின் எங்கள் இதயம் மேவி இருள்கிழித் தோட்டிடும் எங்களாருயிர்க்குயிராகிய ஞானமாலியவர்கள் என்றும் எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார்கள். இனி அறியாமை என்னும் கறை படிந்த இருள்தன்மைக்கு இங்கு வேலையேதுமில்லை. என்றும் குறையாத பரபோகச் செல்வஞானகுபேரராகிய எம்பெருமானை எளியேன் சேர்ந்தேன். எனவே எளியேனும் செல்வந்தனே. மரணமென்னும் வறுமை வாய்ப்படும் தரித்திரர்கள் எமக்கு உறவினமன்று; புறவினம். பேரின்பம் இங்கு நிலைத்துள்ளது என்நெஞ்சே! அறிவாயாக! மறையும் இயல்பினது ஜடப்பொருளாகிய பகலவன். ஆயின் ஞான ஆதவனாகிய எம்பெருமானின் திருவருட்பிரகாசம் அல்லும் பகலும் அனவரதமும் பிரகாசிக்கும் அருட்பிரகாசத்தான் எளியோன் அறியாமை நீங்கப்பெற்றேன் எனக்கூறுமுகத்தான் இஃது உள்ளுறை உவமை அணி எனப்பெறுவதாயிற்று.

28. சாதி பற்றிய ஒட்டணி

நேரிசை வெண்பா

அருந்திங்கண் பொன்னரங்கர் ஆரமுதம் மாற்று
மருந்தெங்கண் வல்வினைநோய்க் குண்டு - பொருந்துங்கள்
பூதலத்தின் மேதலத்தார் சீதனத்தால் தீதகற்றும்
காதலர்தம் பாதமலர்க் காட்சி. (31)

பாருலகீரே! ஆயிரத்தெட்டு மாற்று அபரஞ்சித் தங்கமும் நாணும் கோடி சூர்யப்பிரகாசராகிய எங்கள் பொன்னரங்கர் அருள்பாலிக்கும் வானாரமிர்தத்தை அருந்துங்கள். அஃது ஒன்றன்றி நமது வல்வினை நோய்க்கு மருந்து வேறில்லை காண். ஆகலின் இப்புவியின் மேலதாகிய வானுலக வள்ளல்பிரான் எங்கோமான் அருள் பாலிக்கும் பெருங்கொடையாகிய திருவருட் சீதனத்தால் நம் சர்வபாவங்களும் தகித்தெறியப்படுமன்றோ? நம் உயிர்க்கு உயிராகிய பேரின்ப நாயகரின் பொன்னார் திருவடிக் கமலங்களை தரிசித்து உய்வோமாக. கருதிய பொருளை மறைத்து அதனோடொத்த பிறிதொன்றினை உரைக்குங்கால் ஒரு சாதிப் பொருளாக வைத்துக் கூறுதலின் சாதி பற்றிய ஒட்டணி ஆகும்.

29. தன்மையணி

மருள்தீர் மருத்துவர் மாதவர் பொற்றாள்
இருள்தீர்த் திருவினையும் தீர்க்கும் - அருளால்
ஆமாறு மெய்வழியெம் ஆண்டவர்தாள் சார்ந்தோர்
கோமானாய் வாழ்வர் கனிந்து. (32)

பரந்த வையத்தினோரே! ஜீவபண்டிதராகிய வைத்தீஸ்வரர் நமது தேவதேசிகேந்திரராகிய மாதவ மாமுனிவராகிய நமது பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் பொன்னாரடிக்கமலங்கள் நமது உயிரினைப் பற்றிப் பிடித்திருக்கும் நீக்குதற்கரிய இருள் கவிந்த இருவினைகளையும் பிறவிப் பிணியையும் தீர்க்குமன்றோ! நம்முயிர்க்கு ஆகும்நெறி மெய்வழி ஒன்றே. அதனைச் சார்ந்தோர் இகம்பரம் இரண்டிலும் செல்வந்தர்களாய் நிறைந்து இனிதிருப்பர் என்பதாம். இஃது மெய்வழி ஆண்டவர்கள் திருத்தாளின் தன்மையை இயல்பாக எடுத்துரைத்ததான் இஃது தன்மையணி எனலாயிற்றென்க அடுத்துவரும் இருசெய்யுட்களும் இத்தன்மையத்தே.

இதுவுமது நேரிசை வெண்பா

கல்லைக் கனியாக்கிக் கைப்பை இனிப்பாக்கும்
எல்லை உளததனை ஏனறியீர் - தில்லைத்
திருப்பதியாம் மெய்வழியைச் சேர்ந்திறைதாள் நண்ணில்
இருப்பதுபே ரின்பத் தலம். (33)

எல்லையற்ற பெருவெளி, சிதாகாசம், சிற்றம்பலம், திருப்பெரும்பதி என்று பலவகையாகப் பரவிடத்தக்க உயர்நெறியாகிய மெய்வழியில் சார்வது பேரின்பத்தலத்தில் நிலைபெறும் பெருவாழ்வு அருள்வதாகும். எங்கள் குருமகான்மியர் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் திருவடிகளைக் பணிந்தால் அஃது இளகுதற்கரிய கல் போன்ற இதயத்தைக் கனிந்த கனிபோல் நெகிழவைக்கும்; மாரணமாகிய கசப்பினை நீக்கிச் சாவாவரப் பேரின்பப் பெருவாழ்வினை அருளும்.

இதுவுமது நேரிசை வெண்பா

அடைக்கலங்கொண் டாண்டவர்தாட் காகில் அவர்பால்
படைக்கலங்கொண் டேமறலி பாயான் - மடைக்கலமார்
ஐயரருள் பெய்துயிர்கள் உய்யவருட் செய்யுமிந்த
மெய்வழியிற் பேரின்ப மேவு. (34)

ஜீவர்கள் உய்வதற்காகத் திரு அவதாரம் செய்து அருள்பாலிக்கும் மெய்வழி ஆண்டவர்களின் பொன்னாரடிக் கமலங்களைப் பணிந்து அடைக்கலம் புகுந்த உயிர்களைக் கொடிய ஆயுதங்களைக் கொண்டு உயிர் கவரவரும் எமன் கை தீண்டமாட்டாது ஆகலின் மெய்வழி சார்ந்து பேரின்பப் பெருவாழ்வைப்பெற முந்துமின்கள்.

30. எடுத்துக்காட்டு உவமை அணி

நேரிசை வெண்பா

கும்மென்னும் காரிருள்தான் கூட்டோடே வீயுங்காண்
இம்மென் றெழுகதிரோன் ஏரொளிமுன் - எம்மான்
அருட்கடைக்கண் நோக்கால் அறும்பிறவி பாவம்
இருவினையும் ஏகும் அறி! (35)

கும்மிருட்டு என்று கூறப்பெறும் கடுமையான இருளும் கதிரவன் உதித்த அக்கணமே விலகிடுதல் போன்று எம்பெருமான் திருக்கடைக்கண் அருள் நோக்கால் ஜீவர்களின் சர்வபவங்களும் பிறவிப் பிணியும் உடனே விலகும் என்பதாம். கதிரவன் உதித்த அக்கணமே இருளனைத்தும் விலகுதல் போல் எம்பிரான் திருக்கடைக்கண் நோக்கம் படட்வுடன் பிறவிப்பிணி திருமாகலான் இஃது எடுத்துக்காட்டுவமை அணி.

31. உல்லேக அணி

கட்டளைக் கலித்துறை

அப்பனு மன்னை அருட்குரு தெய்வமு மாகினின்று
செப்பரி தாகிய சீருயி ருக்குயிர் நாயகராய்
ஒப்புவ மையிலார் வானகம்வையகம் யாவினுக்கும்
இப்புவி மேவிடு நற்றுணை மெய்வழி ஆண்டவரே! (36)

தந்தையும் தாயும், திருவருள் புரியும் சற்குரு பெருமானும், எல்லாம் வல்ல தெய்வமுமாய் எங்களுயிர்க்குயிரான தன்னேரில்லாத் தலைவருமாய் இப்புவியின்கண் வான் உலக அருட்செல்வத்தைக் கொணர்ந்து வழங்கி எல்லா உயிர்களும் உய்வதற்குப் பெரிய நற்றுணையாக விளங்குபவர்கள் மெய்வழி ஆண்டவர்களே!

கட்டளைக் கலித்துறை

வேண்டிய வேண்டியாங் கெய்திடும் வெந்துயர் தீர்வுஎமன்
தீண்டரும் தீங்கிரிந் தேகிடும் செல்வச் செழுநிதிகள்
பூண்டிடும் இன்பம் பொழிந்திடும் பொன்னரங் கத்தவமார்
ஆண்டவர் தாளில் அடைக்கலம் கொண்ட அடியவர்க்கே! (37)

மறலிகை தீண்டாவரந்தரு திருவினராகிய எங்கள் குலகுரு தெய்வ நாயகரின் திருவடித் தாள்மலர்களில் தஞ்சம் அடைந்த அடியவர்களுக்கு வேண்டிய அனைத்தும் விழைந்தவாறே கிட்டும். எமன் வாதனை என்னும் துன்பம் தீர்ந்திடும். இகபர சம்பத்துகள் அனைத்தும் நிறைவுறப் பெறுவர். பேரின்ப போகப் பெருவாழ்வு வந்துறும் என்பதாம். ஒருபொருள் பற்றிப் பலவகையாய் வியந்துரைப்பதான் இஃது உல்லேக அணி எனலாயிற்று.

32. புகழ் ஒப்புமைக் கூட்ட அணி

நேரிசை வெண்பா

முத்தர் வணங்கும் முழுமுதற்மெய்த் தெய்வத்திற்(கு)
எத்தான்ஓர் ஒப்பு இயம்பரிது - வித்தகர்தாள்
வேதங்க ளின்சாரம் வான்சாலை மெய்த்தமிழ்மெய்ப்
போதங்கள் பொங்கும் துறை. (38)

முத்தர்களாகிய அனந்தாதி தேவர்கள் போற்றிப் பணிந்து பரவி வணங்கித் துதிக்கும் முழுமுதற் பொருளாகிய எங்கள் தேவ கோமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களுக்கு இணைதுணை கூறுவதும் கூடுவதோ? எங்கள் வித்துநாயகமாகிய கர்த்தாதி கர்த்தரின் திருவடித்தாமரைகளே சர்வவேதங்களின் சாரம்; எங்கள் உயர்திருவோங்குமகான்மியர் அருள்பாலித்த சாலைத் தமிழ் சகல ஞான போதங்களின் துறையாகும் என்பதாம். சாலை ஆண்டவர்களின் புகழும் திறமும் கூறப்பெற்றிருப்பதான் இஃது புகழ் ஒப்புமைக் கூட்டம் என்னும் அணியாயிற்றென்க.

33. பழி ஒப்புமைக்கூட்ட அணி

நேரிசை வெண்பா

வான்தனிகை வள்ளல் குமரர் முழுமுதல்வர்
தான்மனித தூலத்தில் தோன்றுதலால் - ஈனருளம்
மானிடரென் றெண்ணி மயக்குற்றுத் தாமிகழ்ந்து
தீநரகில் வீழ்ந்திடுவர் தேர். (39)

என் மனமே! நம் தவப்பெரும் பாட்டையர் தனிகைமணி வள்ளற்பிரான் அவர்களின் திருவருட் குமாரராகிய நம் ஐயர்! நம் தெய்வம்! நம் சாமி! நமது துரை நமது இன்பநாயகர்! ஒரு திருமேனி தாங்கி மனிதர்போலத் தோற்றமளித்த இவ்வருளவதாரத்தினை மானுடம் என்று எவரேனும் அறியாமை மயக்கத்தால் இகழ்ந்து உரைப்பாரெனில் அவர்கள் மீளாத தீய நரகில் வீழ்ந்து துன்புறுவர் என்பதனைத் தெளிவாயாக. இஃது பழி ஒப்புமைக் கூட்டம் என்றும் அணியின்பாற்பட்டது.

34. இருபொருள் வேற்றுமைச்சம அணி

நேரிசை வெண்பா

வந்திரந்தார்க் கீந்து வறுமைதனைத் தீர்வள்ளல்
தந்தகொடை சின்னாளே தாபரிக்கும் - எந்தை
தவக்கொடையால் மாரணம்தீர் தண்ணளிக்கு வானும்
புவிக்கொடையும் ஒப்போ புகல். (40)

வறுமையால் வாடித் தம்மை வந்து யாசித்த இரவலர்க்கு வள்ளல்கள் என்போர் வழங்கும் கொடைப் பொருளானது சில நாட்களே அவர்தம் குறையைத் தீர்க்கும். ஆயின் எங்கள் கொண்டற் கொடைத் திருக்கரத்தினராகிய தேவகோமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் தங்கள் திருமுன் வந்து பணிந்து ஏங்கி நின்ற ஜீவர்கட்கு வழங்கி அருள்பாலிக்கும் தவச் செல்வமாகிய கொடை எவராலும் நீக்குதற்கரிய மாரணம் என்னும் சாவுத்துன்பத்தை நீக்கி இறவாப் பெருவரம் அருளி எப்போதும் நிலைபெற்ற பேரின்பம் அருள் பாலிக்கும். இதற்கு வையகத்தையும் வானகத்தையும் ஈடாகக் கொடுத்தாலும் தகுமோ? என்பதாம். இஃது இரண்டு பொருள்களை ஒப்பிட்டு அவற்றின் வேற்றுமையைக் காட்டுதலின் இருபொருள் வேற்றுமைச் சமம் என்னும் அணியின் பாற்பட்டதென்க.

35. திட்டாந்த அணி

நேரிசை வெண்பா

வேத முழுமுதல்எம் மெய்வழிதெய் வத்தடியார்
பூதலத்தில் ஏழையர்போற் றோன்றிடினும் - சேதமுறார்
முல்லை சிறிதெனினும் வீசுமணம் வீங்குதல்போன்ம்
எல்லைபரம் ஏகும் இனிது. (41)

சகல வேதமாமறைகளும் புகழ்ந்தேத்தும் எங்கள் வரதபராபரர் மெய்வழி ஆண்டவர்களின் அடியார்களாகிய அனந்தர்குலப் பெருமக்கள், உலகினர் தோற்றத்தில் ஏழை எளியவர்கள் போல் தோற்றமளிப்பாரெனினும் அவர்களை ஏழை எளியவர்கள் என்று கருதாதீர்கள். அவர்கள் முன் சென்ற நெடுங்காலங்களில் முனிபுங்கவர்களாகவும் தீர்க்க தரிசிமார்களாகவும் பாரவான்களாகவும் விளங்கிய மகத்துக்கள். முழுமுதற் பொருளின் உத்திரவுப்படி இவ்வுலகில் தோன்றி, அவர்கள் திருவருள் நாட்டத்தால் உலகத் தேட்டின் இச்சையின்றி எளியவர்களாக வாழ்ந்து வரம்பெற்று, தெய்வீக வாழ்வில் வளர்ந்து கொண்டுள்ளார்கள். அனந்தாதி தேவகுலப் பெருமக்கள் மாரணம் என்னும் சேதத்திற் சிக்காதவர்கள். சாவாவரம் பெற்றவர்கள். தெய்வத் திருப்பணி, வணக்கப் பெரும் பலன் பெற்ற சான்றோர். முல்லை மலர் உருவத்தில் சிறிய எளிய வெண்மைநிற இதழ்களுடன் விளங்குகின்றதெனினும் நிகரற்ற நறுமணம் கமழும் தன்மையது போன்றவர்கள் எங்கள் அனந்தாதி தேவர்கள். ஒரு பொருளின் திறத்தை முதற்கண் கூறி அதன்பின் அதனோடு ஒப்புமை கொள்ளும்படி மற்றொரு பொருளின் திறம் கூறுதலான் இஃது திட்டாந்த அணி எனலாயிற்று.

36. தற்குண அணி

நேரிசை வெண்பா

தவகொண்டல் எம்பெருமான் தண்ணளியால் மாந்தர்
பவவெம்மை வேட்கை தணியும் - புவிமாந்தர்
வான்முகில்பெய் வாரியின்நீர் வேட்கை தவிர்த்தலால்
தன்கொண்டல் பேர்கொண்ட கார். (42)

வான்முகில் வழங்கும் மழையின் நீர் தாகம் தணித்து மக்களைக் காத்தலால் அஃது கார் என்றும் கொண்டல் என்றும் பெயரேற்றது. அதுபோன்று எங்கள் பிரபு நாயகம் தேவகோமான்! கைம்மாறு கருதாத முகில்போன்ற தவத்தின் அரசர்! தங்கள் வள்ளல் தன்மையால் அருள் பாலிக்கவும் அதனைப் பெற்ற ஜீவர்கள் பவப்பிணி கடந்து இறுதி நாளில் ஏற்படும் மரணதாகம் தவிர்வர். ஆகலின் எங்கள் தேவகோமானுக்கு கார்க்கும்தீகைக்கொண்ட “கார்த்தீகையர்” என்ற திருப்பெரும் நாமமும் வழங்குவதாயிற்று. ஒரு பொருளின் குணத்தை மற்றொரு பொருள் சார்ந்துழிப் பற்றுதல் தற்குண அணி எனப்பெறலாயிற்று.

37. பிரத்திய னீக அணி

நேரிசை வெண்பா

ஒருகோடி சூரியரின் ஓங்கொளியும் நாணும்
திருவோங்கு சாலைவள நாடர் - திருவதனம்
கண்டு கழல்வணங்கி நாணிக் குடதிசைபோய்
அண்டி மறைந்தான் கதிர். (43)

எங்கள் குருகொண்டல்! தேவகோமான்! ராஜாதி ராஜர்! சாலை வளநாடர்! மெய்வழி ஆண்டவர்களின் அழகிய திருமுக மண்டலத்தின் எழில் பிரகாசத்தின் முன் ஒரு கோடி சூரியனின் பிரகாசமும் வெட்கும் எனின் ஒரு சூரியனின் பிரகாசம் அதற்கு நிகராகுமோ? அற்றன்று ஆதலின் இவ்வுலக சூரியன் எம்பெருமான் திருவதனப் பிரகாசத்தினைக் கண்டு வெட்கித் தலைதாழ்ந்து மேற்றிசையில் சென்று மறைந்தான் என்பதாம். இயற்கை நிலையை இயல்பாகக் கூறாமல் அதன் உவமேயப் பொருளை உயர்வுபடுத்திக் கூறுதல் பிரத்தியனீகம் என்னும் அணியின் பாற்பட்டதாகும்.

38. நிச்சயகர்ப்ப அணி

கட்டளைக் கலித்துறை

மன்மத னென்னில் கருப்புத் தனுவிலை வான்கயிலை
மன்சிவ னென்னில் அரையுருமாதிலை மாலெனிலோ
நன்முகில் வண்ணம் இலைநான் முகனெனில் ஓர்முகமே
என்புகல் வேனிவர் யாவரும் ஓருரு எம்பிரானே! (44)

எங்கள் வரதபராபரர் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களை மன்மதன் எனக் கூறலாமோவெனின் அவர்கள் திருக்கரத்தில் கரும்புவில் இல்லை. அன்றிச் சிவபிரான் என்று கூறலாமோ எனில் பாதி உரு பெண்ணாக இல்லை. மற்று திருமால் என்று கூறலாமோ எனில் அவர்கள் திருமேனி வண்ணம் கார்முகில் போன்ற கருமை வண்ணம் இல்லை. அன்றி நான்முகன் என்று கூறலாமோ எனில் அவர்கள் திருமுகமண்டலம் ஒன்றே. ஆகலின் இவர்கள் அனைவரின் திறமும் ஒருங்கு திரண்ட ஓர்உரு எம்பிரான் என்றவாறு. தன்னால் உரைக்கப்பட்ட பொருளைப் பிரிதொன்றாக ஐயுற்றுப் பின் அதற்குக் காரணம் கூறி ஐயம் விலக்கி மீண்டும் ஐயப்படுவதாகக் கூறி முடிப்பது நிச்சயகர்ப்பம் எனலாகும்.

39. சுத்த சந்தய அணி

கலித்தாழிசை

மதனோஅரி அயனோஇவர் சிவனோஅவர் சுதனோ
இதமார்மொழி கனிதேனடை பிழிவோஉயர் அமுதோ
வதனம்மதி கதிரோஎழில் கமலம்மல ரதுவோ
எதுவோவென திருமுன்வரு முதனாளினின் நினைவே! (45)

எமது ஆருயிர்க்குயிரான சாலை ஆண்டவர்களை, என்சாமியை, எனது துரையை, என் குலதெய்வ கோமளேஸ்வரரை, முதன் முதலாகத் தரிசித்த போது, இவர் மன்மதனோ? அன்றி திருமாலோ? அல்லது நான்முகனோ அன்றி சிவபிரானோ? அல்லது அவர்கள் திருக்குமாரராகிய திருமுருகப்பெருமானோ? யாவரிவர்? இவர்கள் திருவாயினின்றும் வெளிப்படும் மணிமொழி பழுத்த இனிய கனியோ? கனியின்சாறோ? மதுரச்சுவைகனிந்த தேனோ? அல்லது அமிர்தமோ? அறிகிலேனே! இவர்கள் திருமுக மண்டலம் சூரியனோ? அல்லது சந்திரனோ? அல்லது மலர்ந்த அழகிய செந்தாமரை மலரோ? எதற்கிதனை ஒப்பிடலாகும் என்று கருதி மயங்கினேன் என்றவாறு.ஒருபொருளைக் கண்ட ஞான்று அதன் அழகினைப் பலவாறாக ஐயுறுதல் சுத்தசந்தயம் எனலாயிற்று.

40. நிச்சயாந்த அணி

நேரிசை வெண்பா

மாற்றறியா மாதங்கம் மாமேனி மின்வீசித்
தோற்றுதலால் இன்பம் சொரிதலால் கூற்றுவனை
மாற்றுதலால் ஓங்கு மறைமொழியால் மாதவர்தான்
ஏற்றமுயர் ஈடில் பரன். (46)

ஆயிரத்தெட்டுமாற்று அபரஞ்சித் தங்கம் என்றும் மாற்றுக் கூற வியலாத பிரகாசம் பொருந்திய உயர்ந்த தங்க நிறமுடைய மேனியின் மின்னல் வீசுதல் போன்ற அழகு கண்டற்றே கழிபேருவகை தருவதாலும் உயர்ந்த வேதாந்தங்களின் முடிபுகளை அமிர்தமொழியால் விளக்குவதாலும் எமன் கைதீண்டா உயர்ந்த சாவாவர வாழ்வினைத் தருவதாலும் இவர்களே அந்தப் பரப்பிரம்மம் என்பதாகும். ஒவ்வோர் அழகாகக் கூறி இறுதியில் முடிவுக்கு வருதலால் இஃது நிச்சயாந்தம் என்னும் அணியாயிற்று.

41. அற்புத அணி

எண்சீர் விருத்தம்

ஓரிரவில் உதித்தகதிர் உளத்திருளை அகற்ற
ஒளிரமுத மழைபொழியும் குமுதமலர் விரிந்து
சீர்பெருகு நாள்விடிந்து மதியுதித்து எளியேம்
தெரிசித்தேம் திருவடிகள் சிந்தையர விந்தம்
பார்கனிந்த ஞானாக்னி பற்றியெரிந் தினிதே
பாங்குயர்த்த மெய்வழிகாண் பரபோகச் செல்வம்
ஆர்கலிஞா லத்திலெமக் கரும் பரிசாய்க் கிடைத்த
அன்பெனுநற் குடிலமர்ந்த அண்ணல்பதம் காப்பே!
(47)

மறுபிறப்புப் புனல்ஜென்மம், எட்டாநாள் ராஞானஸ் நானம், முரீது பெறுதல், மாற்றிப்பிறத்தல், பிரம்மோபதேசம் என்றெல்லாம் வழங்கப்பெறும் அந்தப் பெரும்பரிசு பெறும் நிகரற்ற ஓர் இரவில் ஞான சூரியர் உதித்தவுடன் நீக்குதற்கரிதாக எங்கள் உள்ளத்தில் இருந்த மாசுமறு, அறியாமை மறைந்து, அவர்கள் வர்ஷிப்பால் இதயமாகிய அல்லி மலர் மலர்ந்தது. அங்ஙனம் அவ்வற்புத நாள் விடிந்து பூர்ணச் சந்திரன் உதித்தது போன்ற எங்கள் இதய தாமரைபூத்து அறிவு பிரகாசம் பெற்றது. எங்கள் சிந்தையாகிய கமலமலர் ஞானாக்னி பற்றி எரிந்து பிரகாசமுற்றது. இத்தகைய பாங்கு உயர்ந்த தெய்வீகப் பேரின்பச் செல்வமானது அலைகள் சப்தியானின்ற கடல்சூழப் பெற்ற இவ்வுலகில் எங்களுக்கும் கிடைத்த உயர்ந்த நற்பரிசாயிற்று. எளியேங்கள் அன்பு கனிந்த இதயமாகிய சிறுகுடிலில் எழுந்தருளிச் செய்து அருள் பாலிக்கும் எங்கள் தேவாதி தேவரின் திருவடி மலர்களே எமக்குக்காப்பாகும். இரவில் சூரியன் உதிப்பதில்லை. சூரியனைக்கண்ட அல்லி மலர்வதில்லை. பகலில் பூர்ணச்சந்திரன் உதிப்பதில்லை. பூர்ணச்சந்திரனைக் கண்டு தாமரை மலர்வதில்லை. செந்தாமரை மலர் அக்கினி பற்றி எரிவதில்லை. ஆயினும் இவை அமைந்தவாறு கூறுதலான் இஃது அற்புத அணி எனலாயிற்று.

42. நிதரிசன அலங்கார அணி

நேரிசை வெண்பா

கற்றானும் மின்னலிடி கார்பொழிவு என்னும்எவ்
வாற்றானும் சற்றும் வரைதகரா - ஆற்றல்போன்ம்
கூற்றம் விதிபிறவி வெவ்வினையால் மெய்த்தெய்வம்
ஏற்றானுக் கில்லை இடர்.
(48)

கடும்புயற்காற்று, கண்ணைப்பறிக்கின்ற ஒளிமிக்க மின்னல், நெஞ்சு நடுங்குறும் பேரோசையுடைய இடி, கடும் மழை ஆகிய இவற்றால் மலையானது நிலைகுலைவதில்லை. அதுபோன்று எங்கள் குலகுரு தெய்வ தேவேசர் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் திருவடிகளைச் சார்ந்தவர்கட்கு எமன் அமல், விதி, பிறவிப்பிணி, இருவினை என்னும் எவற்றானும் துன்பம் இல்லை யென்பதாம். கண்கூடாகக் காணும் காட்சி என்பதைக் கூறுதலான் இஃது நிதரிசன அலங்காரம் எனலாயிற்று.

43. இயங்கு திணை தற்குறிப்பேற்ற அணி

கட்டளைக் கலித்துறை

ஆதிப ராபரை மெய்வழி ஆண்டிடஆண்குருவாய்
நீதிய ரோருரு நேர்ந்தது ஏனெனில் நீணிலத்தோர்
நீதமில் காம நெறிபடர் நீர்மைய ராதலினால்
சேதமி லாநெறி சேர்ந்திட ஓர்துணை யாகிடலே! (49)

ஆதி சத்தியாகிய எங்கள் ஆதிபராபரை, அகிலாண்டேஸ்வரி, பிரம்மாண்ட நாயகி, மெய்வழி ஆண்டவர்கள் என ஆண் உருவில் தோன்றியது ஏனெனில் அவர்கள் பெண் உருவில் தோன்றியிருந்தால் இப்புவிமாந்தர் முதற்கண் காணுறும் போதில் அவர்கள் மாபெரும் திருவுயர் செயலறியாமல் பெண்ணென்று எண்ணி கொடிய காம நினைவு கொண்டு நோக்கிப் பாவப் பெருஞ்சுமை ஏற்பர். எனவே அவர்கள் சேதமில்லாத நன்னெறியில் சார்வதற்காக ஆணுருவில் அவதரித்தார்கள் என்பதாம். இயல்பாகத் தீமை தவிர்க்கப்பெறும் பொருட்டு பெண்மை ஆண்மையெனச் சித்தரிகப் பெற நேர்ந்தது எனக்கூறப்பெறுவதான் இயங்குதிணை தற்குறிப்பேற்ற அணியெனலாயிற்று.

44. நிலைத்திணைத் தற்குறிப்பேற்ற அணி

கலித்தாழிசை

பிறைநாள்வளர் முழுவான்மதி வளர்ஓங்குயர் தவமால்
இறையேற்றிடு கொடிமீதினில் பிறையேறிய தகையே
குறையாதிது வளர்வேறிடு துறைமெய்வழி நிதியே
உறைவார்மதி நிறைவால்தவம் திருவோங்கிடல் சொலுமே! (50)

உலகம் உய்வான் பொருட்டு யுகத்தவசுப் பெருவேள்வியியற்றும் எங்கள் மங்கா தவத்தங்க மாதவமாமுனி ராஜாதி ராஜர் அவர்கட்கு மூன்றாம் பிறை நாள் துவங்கி முழுமதி நன்னாள் வரை தவத்தில் வளர்வு இயல்பாகவே ஏற்படும். எனவே எங்கள் ஐயர் தங்கள் திருக்கொடியில் (வளர்பிறை) பிறைபோன்ற கிள்நாம அடையாளத்தினைப் பொறித்திருக்கின்றார்கள். அஃது வளர்பிறையினைக் குறிப்பதாக அமைந்துள்ளது. இயல்பாகவே பிறைமதியின் தன்மை வளர்வது. அது போன்று தெய்வத்தின் தவமும் இயல்பாகவே வளரும் தன்மைத்து. ஆதலின் இஃது நிலைத் திணைத் தற்குறிப் பேற்ற அணியாயிற்றென்க.

45. எழுத்துநிரல் நிரை அணி

நேரிசை வெண்பா

ஆநீ திதிமெய் உருவாய் கனகஅருள்
மேனிகொண் டாரமுத மிக்கருளித் - தாநீதர்
வையகமுற் றுய்விக்கும் மெய்வழிதந் தாண்டார்கள்
ஐயர்திருத் தாளே கதி. (51)

'ஆ' 'நீ' என்ற இரு எழுத்துக்களை முன்நிரலாயும் திதி என்ற எழுத்துக்களையும் 'மெய்' 'உருவாய்' என்ற சொற்களைப் பின்னிரலாயும் கொண்டு ஆதிமெய் நீதி உருவாய் கனக மேனி கொண்டு அருளாரமுதம் மிகவும் வழங்கி இவ்வுலகம் முழுவதும் உய்விக்கும் அருஞ்செயல் புரிகின்றார்கள். அவர்களின் திருவடி மலர்த்தாள்களில் சரணாகதியடை வாயாக என்நெஞ்சே! ஆநீ திதி என்னும் எழுத்துக்கள் ஆதிநீதி என நிரல் நிரையாகக் கொண்டு கூட்டிப்பொருள்கொள்ளுமாறு இயற்றப்பெற்றதான் இது எழுத்து நிரல் நிரை அணியாயிற்றென்க.

46. பெயர்வினை நிரல் நிரை அணி

நேரிசை வெண்பா

மெய்வழியில் காஷாயம் மெய்சார் உபதேசம்
உய்வழியிஃ தொப்பரிய பாதமலர் - தெய்வத்தாய்
சேர்த்ததுவும் தந்ததுவும் செய்ததுவும் காட்டியதும்
ஆர்த்துப்பே ராருயிருய்ந் தேம். (52)

மெய்வழியில் சேர்த்ததுவும் காஷாயம் தந்ததுவும் மெய்சார் உபதேசம் செய்ததுவும் உய்வழியில் ஒப்பரிய பாதமலர் காட்டியதும் தெய்வத்தாய். அத்திருப் பெருந்தாயின் திருவருளை விரும்பிப் போற்றி இனிய நல்லுயிர் உய்யப் பெற்றோம் என்க. மேலுள்ள பெயர்கட்குக் கீழுள்ள வினைகளைக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்வதால் பெயர் வினை நிரல்நிரை எனலாயிற்று.

47. பூட்டுவில் பொருள்கோள்

நேரிசை வெண்பா

பணிவோர் பிறப்பறுவர் பற்றிச் சிரமீ
தணிவோர் வினையறுவர் அம்பொன் - மணிமன்றில்
இன்ப நடம்புரியும் எங்கள்மெய் யாண்டவர்கள்
அன்பர்பணி பொன்னார் பதம். (53)

எங்கள் இதயமாகிய மணிமன்றில் திருநடம் புரிந்து பிரகாசித்துக் கொண்டிருக்கும் எங்கள் குரு கொண்டலாகிய பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் அன்பர்களாகிய அனந்தர்கள் போற்றிப் பணிந்து வணங்கும் பொன் மயமான திருமலர்ப் பாதங்களைப் பற்றித் துதி செய்து சிரத்தில் அணிந்து கொள்பவர்கட்கு பிறவிப்பிணியும் இரு வினைத் துன்பங்களும் தீரும். இறுதி அடியை முதலடியிற் சேர்த்துப் பொருள் கொள்வதால் இது பூட்டுவில் பொருள்கோள் எனலாயிற்று.

48. மாலா தீவக அணி

நேரிசை வெண்பா

தோற்றச் சிறப்பு மனுப்பிறப்பு அம்மனுவை
ஏற்றார் எனில்சிறப்பு என்தெய்வம் - ஏற்றபினர்
மாற்றிப் பிறத்தல் மலர்ப்பதத்தை ஓவாது
போற்றல் சிறப்பென் றறி. (54)

எழுவகைத் தோற்றத்தில் மானிடப்பிறப்பு வாய்ப்பது சிறப்பு. அப்படி மானிடப்பிறப்பு வாய்த்திடினும் எங்கள் குருகொண்டலாகிய முழுமுதற் பொருள் மெய்வழி ஆண்டவர்கள் உயர்ந்த இனிய தனிப்பெருங்கருணைத் திருவுள்ளம் இரங்கி 'அங்கத்தினன்' என ஏற்றுக் கொள்ளல் அதனினும் சிறப்பு. அவ்வாறு ஏற்றுக்கொண்ட பின்னர் அவர்கள் தங்கள் திருமணிச் சூலில் தாங்கி மறுபிறப்புப் புனல் ஜென்மம் தந்து பிறப்பித்துப், பாதம் விளங்குவோர்க்கு வேதம் விளங்கும்! என்று கூறப்பெறுவதாகிய திருவடிப் பெரும்பேறு என்னும் மலர்மிசை ஏகி மாணடி சேர்தல் மிகமிகப் பெருஞ்சிறப்பு. ஒன்றினும் ஒன்று சிறப்பென மாலைபோல் கூறுதலால் மாலாதீவகம் எனப்பட்டது.

49. சொற்பின் வருனிலையணி

நேரிசை வெண்பா

நாடகத்தார் நல்லகத்தார் அன்பகத்தார் பண்பகத்தார்
கூடகத்தார் ஆர்சிரத்தார் தார்தரித்தார் - ஏடகத்தார்
வீடகத்தார் மாதவத்தார் சீர்சிரத்தார் பார்புரந்தார்
ஆடகச்சீர் தாள்சிரத்தே பூண். (55)

தெய்வீக அன்புகனிந்த நல்ல அகமுடையவர்கள் ஆண்டவர்களின் திருச்சபை நாடுமின்கள்! அவர்களின் தனிப்பெருங் கருணைத் தயவாகிய பெரும் பண்பினால் ஏற்றாள்வார்கள். அன்பர்களின் தலைகளாகிய மாலைகளைப் புனைந்த கபாலிஸ்வரராகிய எங்கள் மெய்வழி ஆண்டவர்களின் ஆயிரத்தெட்டு மாற்று அபரஞ்சித் தங்கமும் நாணும் பிரகாசம் பொருந்திய அழகிய திருவடிகளை உங்கள் சிரமீது பூண்டு பிறவித்துன்பம் தீருமின்கள். “தார்” என்னும் சொல் பலவிடங்களிலும் பயின்று வருதலின் சொற் பின்வரு நிலையணி எனக்கூறலாயிற்று.

50. குணவதிசய அணி

நேரிசை வெண்பா

தென்னரங்கர் பொன்னரங்கில் செம்பொற்றாள் சீர்நடத்தால்
எண்ணரங்கத் தின்பம் விளைத்தாண்டார் - தன்னிகரில்
எண்குணத்தார் விண்ணகத்தை மண்ணகத்தில் கொண்டிவர்ந்த
பண்ணகத்தைப் போற்றிப் பணி. (56)

தென்னாடுடைய சிவபிரானாகிய எங்கள் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் பொன்னரங்க ஆலயத்தில் எங்கள் இதயமாகிய பொன்னம்பலத்தில் தங்களின் அழகிய சிவந்த திருவடியால் நடம் புரிந்து எங்கள் எளிய இதயம் பூரித்திட அருள்பாலித்தார்கள். எட்டு வகையான உயர்ந்த குணங்களை உடைய எங்கள் தெய்வம் வைகுண்டத்தை, வான்கயிலையை, மெய்குண்டமாகப் பூலோகக் கைலாயமாக இறக்கி வைத்து மெய்வழிச்சாலைப் பொன்னரங்கமென்று வழங்கத் திருவருள் பாலிக்கின்றார்கள். அவர்களை வணங்கி உய்வீர்களாக உலகீரே! சற்குணத்தின் அதிசயத்தை வியப்பதான் இஃது குணவதிய அணியாயிற்றென்க.

51. திரிபதிசய அணி

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தேங்கமழ்தார் பாங்கரசர் தனிகைமணி தருபரிசு
எங்கள் தெய்வம்
ஓங்குபுகழ் திருமணிநா பொழியுமறை அமிர்தமழை
உவந்து சீடர்
ஆங்கவர்தாம் களித்தாடத் தருக்கினங்கள் தனித்தலைவர்
திருச்ச பைக்கு
தாங்களும் மெய் வழிச்சாரப் பூந்தென்றல் மலர்மணத்தைத்
தூது போக்கும்.
(57)

தேன் சிந்தும் மலர்களால் ஆன அழகிய மாலை புனைந்த :திருமார்பகத்தை உடைய எங்கள் அருட்பெருந்தேவபிரான், எங்கள் பாட்டையர் தனிகை மணி வள்ளல் எங்கட்குத் தந்த தனிப்பெரும் :பரிசு. எங்கள் குரு கொண்டல் வானோரெல்லாம் மகிழ்ந்து போற்றிப் புகழும் திருமலர் மணிவாய் திறந்து பொழியும் அமிர்த மழையாகிய ஞானோபதேச திருவாக்கியங்களைக் கேட்டு எங்கள் அனந்தாதி தேவர்கள் உள்ளம் பூரித்து உவகை மிகுந்து உள்ளம் நெகிழ்ந்து உடல் குழைந்து ஆடும் அழகினைக் கண்டு அவ்வுத்தியோவனத்தில் விளங்கா நின்ற மரம் செடி கொடிகள் என்னும் தருக்கினங்கள் தாங்களும் சபைக்கு வரவிழைந்து தங்கள் மலர் வாசத்தினைத் தென்றல் காற்றின் மூலமாகத் தூது அனுப்பினவாம். கானகத்தில் மலர்களின் நறுமணம் கமழ்வது இயல்பு. அதனை ஆண்டவர்கட்குத்தூது விட்டதாகத் திரிபாகக் கூறுதலின் இஃது திரிபதிசய அணியெனலாயிற்று.

52. ஒரு பொருட் தீவக அணி

நேரிசை வெண்பா

அருளமுதே எங்கள் அகவிருளை நீக்கிப்
பொருள்வழங்கிப் பொன்னாட்டின் வித்தாய் - வரும்பிறவி
துன்பம் தவிர்த்திடும் தேகம் ஜீவன்முத்தி
இன்பம் அளிக்கும் இனிது. (58)

எங்கள் ராஜாதிராஜர், தேவாதிதேவர், கர்த்தாதிகர்த்தர் வித்து நாயகம், குரு கொண்டல், தயாநிதி, வான்வள்ளல் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் வழங்கும் அருளாரமுதம் எங்கள் இதயத்தில் இருக்கும் அஞ்ஞான இருளை அகற்றும் மெய்ப்பொருளை வழங்கும். அந்நாட்டினுக்கு எங்களை வித்தாக ஏற்றுக்கொள்ளச் செய்யும். பிறவிப் பிணித்துன்பத்தைத் தீர்க்கும். ஜீவன் முத்தியுடன் தேகமுத்தியும் தந்து சாவாவர வாழ்வினை இனிதருளும் என்பதாம். ஒருபொருளே செய்யும் பல்வகைச் செயல்களைக் கூறுதலான் இஃது ஒரு பொருட்தீவகம் எனலாயிற்று.


பொன்னரங்கர் பண்ணலங்காரம் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!