உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/066.வான்மதியரசர் நான்மணி மாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.66. நான்மணி மாலை

[தொகு]

இலக்கணம்:-

வெண்பாவும் கலித்துறையும் விருத்தமும் அகவலும் முறையே அமையுமாறு அந்தாதித் தொடையுடன் கூடிய நாற்பது செய்யுட்களால் அமைவது நான்மணிமாலை ஆகும்.

வெண்பா கலித்துறை விருத்தம் அகவல்
பின்பேசும் அந்தாதியின் நாற்பது பெறின்
நான்மணி மாலை யாமென நவில்வர்
- இலக்கணவிளக்கம் 821
வெண்பாக் கலித்துறை அகவல் விருத்தம்
நண்பாய் வருவது நான்மணி மாலை
- பன்னிரு பாட்டியல் 153

இந்நூலின் பாட்டுடைத் தலைவர் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் அவர்களின் திவ்வியத் திருவருட் கருணைப் பிரவாகத்தினால் உலகிடைப் பிறந்த நரர் மனுவாகி, மனு அமரராகி, அவ்வமரரும் நித்திய ஜீவ, நீங்கா நன்னிலத் தாள்கை பெறும் திருவரமாகிய அருள் மாட்சியை விதந்தோது முகத்தான் இஃது பாடப் பெற்றதாமென்க.

வான்மதியரசர் நான்மணி மாலை

காப்பு

நேரிசை வெண்பா

அருண்மணியே! ஆருயிர்க்கொ ரேதுணையாய் இங்ஙண்
வருமணியே! மாதவமே! எங்கள் - குருமணியே!
கோதில்சீர் அன்பாய்த் தருமணியே தஞ்சமுற்றேன்
பாதப்பொற் றாள்மலரே காப்பு

நூல்

கட்டளைக் கலித்துறை

காத்தனை ரோஸ்மீ தாக்குடைக் காலம் முதல்இறையே!
பூத்தனை நெஞ்சில் பொலிந்தனை பொன்னரங் கத்தையரே!
ஈத்துவந் தாண்டனை இன்னல்க ளைந்தனை இன்னுயிரே!
மூத்தனை மூவுல கோர்க்கு முதலெனும் விண்ணரசே! (1)

ஆசிரியச்சந்த விருத்தம்

விண்ணர சிங்குற மன்னுயி ருய்ந்திட
வெங்கலி மாய்வுறவும்
அண்ணல்ப தாம்புயம் அம்புவி மீமிசை
ஆர்ந்துந டம்பயில
மண்ணக மாதும கிழ்ந்து களித்திட
மாதவ மாமுனிவோர்
எண்ணம்நி றைவுறும் ஈடில்வ ரம்பெறும்
என்று மகிழ்ந்திடுமே!
(2)

நற்றாய்

நேரிசை ஆசிரியப்பா

மகிழ்ந்தெனை ஏற்ற வரோதய மணியே!
அகழ்ந்தென் அகந்தை அழித்தருள் அணியே!
இகந்தனில் ஈன்ற அன்னையன் றென்னை
உகந்தறிந் தாளிலை உயிர்க்கரு தரிநாள்
ஆண், பெண், அறிவு, அருங்குணம், நிறமும்
மாண்பும் அறிந்திலள் வயிற்றுண வளித்தாள்
காமம் பாவம் எனமிரு தனப்பால்
சேமமென் றளித்தாள் செந்நெறி யுணராள்
பிறப்பி(ன்)நாள் அறியாள் இறப்பதும் தெரியாள்
சிறப்புடை வாழ்வும் செல்கதி யறியாள்
இந்நாட் டினில்மெய் வழியருள் தெய்வம்
அந்நாட் டதன்வித் தாக்கிடும் அம்மை
தாயினும் சிறந்த தயாபரி அன்னையே!
நேயமோ டேற்று நின்திரு மணிச்சூல்
தாங்கினை தீட்டுத் துடக்கறி யாத
பாங்குடைப் பிறப்பிற் பயந்தனை ஞானப்
பாலமு தருத்திய பண்புரை யளவோ
சாவா வாழ்வும் சத்திய நெறியும்
ஓவா இன்பம் உணர்பெறு துறையும்
ஈந்தனை யன்றே எம்பெரு மாட்டி
ஆந்தனை யுணரும் அறிவெனக் கருளினை
தெய்வநற் றாயே! திருவிளை வாடல்
எய்த அருளினை என்க(ண்)ணீர்
பெய்துன் கழல்மலர் பூசித் திடுமே! (3)

நற்பிதா

பஃறொடை வெண்பா

பூசிக்கப் பேர்தயவால் பொங்கருள்பா லித்தன்பாய்
நேசிக்கும் நல்லனந்தர் நித்தியவாழ் வெய்துவிக்கும்
தேசிகரே வித்தாதி வித்தருளும் தேவாதி
பாசத்தோ டெம்மைப் பயந்த உடல்தந்தை
நேசமெல்லாம் பொய்ம்மை நினைவெல்லாம் பேராசை
காசுக்கே போடும் கரணம் அவர்செய்கை
மாசுற்ற மாடுமனை மற்றுளசெல் வம்அழிவே
பூசந் தனம்கமழும் பொன்னரங்க நாயகரே!
ஆசீர்பா தம்திகழும் ஆதிபிதா தாங்களன்றோ
நேசம் மிகுந்து நிகரில்வான் செல்வங்கள்
தேசுமிகும் சங்கநிதி சீரார் பதுமநிதி
பேசரிய ஞானப் பெருஞ்செல்வம் பேரின்ப
வாசம் புரியெழிலார் வான்கயிலைப் பொன்வீடு
கூசாநா வன்மையொடு கோதகன்ற செந்நெறிசார்
தேசோங்கும் தோற்றம் திருவிளங்கும் கூர்த்தமதி
ஈசாநீர் தந்ததற்கே(து) ஈடு. (4)

சற்குரு

கட்டளைக் கலித்துறை

ஈடிணை யற்ற என்குரு கொண்டல் இருநிலத்தும்
பீடுற ஞானச்செங் கோல்புரி பெம்மான் பெரும்புகழோர்
தேடருஞ் செல்வமாம் சாகாக் கலையெனும் சீர்வரமும்
ஆடகப் பொன்னின் அரங்கர் வழங்கிய வான்கொடையே (5)

தெய்வம்

அறுசீர் ஆசிரியச்சந்த விருத்தம்

கொடையே வழங்கி மறலியெனும்
குறைதீர் வள்ளால்! வானமுத
மடையே திறந்து உயிர்ப்பயிர் செய்
வானே ருழவர் வளர்ஞானக்
கடையே விரித்து வரவொன்றே
கருதும் வணிகர் எளியனுளத்
திடையே புகுந்து இன்பமருள்
இனிய ஞான நடத்தரசே!
(6)

நேரிசை ஆசிரியப்பா

அரசே! அமரர்க் கதிபா! அருளார்
முரசே முழக்கி மெய்யாம் நெறியை
அகிலத் துற்ற நரர்மனு வுய்வித்(து)|r}}
இகம்வாழ் தேவர் எனஅறி வித்து
அறுபான் நான்கு கலைகட் கப்பால்
உறும்சா காத உயர்கலைத் திறனைக்
கற்பித் துய்யும் கதியை நிதியைப்
பொற்புற வகுத்த பேரா சானே
ஒன்றே குலம்மெய்த் தேவர் ஒருவர்
என்றே நிறுவி எழிலார் மறைகள்
நன்றே விளங்க நவில்நா வல்லார்
அன்றங் குரைசெய் அரும்பெறல் நூல்கள்
தெளியத் தேறத் திறனோங் கறிவினில்
ஒளிபெற் றுய்ய உதவுமெய்க் குருவே
ஆற்றின் துறையறி வித்தீர்!
போற்றிநும் பொன்மல ரிணையடி போற்றி! (7)

நன்னிலம்

பஃறொடை வெண்பா

போற்றுதற்கு நாவன்மை போதாது என்துரையின்
மாற்றறியாப் பொன்னார் திருமேனி ஆற்றல்
நிலம்போற் பொறுமை உயிர்தாங்கும் நீர்மை
பலகால் அகழ்ந்தாலும் ஏற்று - வலமாகத்
தங்கநவ ரத்தினங்கள் தாமளிக்கும் தன்மைபோல்
பொங்குமறை மாட்சிப் பொழிதலுடன் - இங்கு
எங்கள் குலம்விளங்க எல்லாப் பிழைபொறுத்துத்
துங்கமணித் தாள்தயவு தந்தருளும் - நுங்கும்
ஆறுசுவைத் தாவரங்கள் அவ்வவற்றிற் காம்சத்து
ஊறுபடா தீந்து உயிர்காத்து - மாறுபடா
வாழ்வும் வரம்வழங்கல் வேண்டிவிழை - மக்கட்கு
ஆழ்கடல்முத் தாய்ந்தெடுத்து ஈதல்போல் - வாழ்வும்
அவரவர்தம் உள்ளத் தளவுயர்வு ஈயும்
தவமேரு எங்கள் இறை. (8)

நிறைகோல்

கட்டளைக் கலித்துறை

இறையே உலகுயிர்கள் எல்லாமுய் விக்கும் எழில்பரனே!
குறையா வளந்தரும் கொண்டலே எங்கள் குலதெய்வமே!
நிறைகோ லெனத்தவ றாநீதித் தீர்ப்பு வழங்கரசே!
மறைமா மணிமுதல் வான்மதி யே!மந்த்ர மாமலையே! (9)

மலை

ஆசிரிய விருத்தம்

மலையென்று மசையாத நிலைகொண்டு விலையுயர்
மணிகள்நவ ரத்னா திகள்
வற்றாது பொங்கிவரு மருவிகனி மூலிகை
வளந்தருகு பான்மை போலும்
நிலமதற் கரணாக நின்றுகொண் டல்தங்கு
நிலையிடம தாய்வி ளங்கும்
நீணிலத் தவதாரம் செய்தருளு நாயக!
நீங்கள் மகமேரு மலையே!
குலையாத வைராக்ய அமுதமழை பொழிதரும்
கோதகல் குரு கொண்டலே!
கனியெழில்மெய் மறைமணிகள் மதிதிருவ ரங்கள்பல
கொழித்திரங் கும்கொற் றவா!
நலியாது எம்முயிர் காத்தரண் போல்நிலை
நாயக! மெய் வழிதெய் வமே!
நமனிருளில் ஒளிதருகு வரமருளு நாதரே!
நற்றவத் தவமே ருவே!
(10)

கடல்

நேரிசை ஆசிரியப்பா

வேலை புவிக்கணி ஆகுதல் போலும்
சாலைஆண்ட வர்களே! தங்கள் செங்கோல்
துயர்தரும் கடைநாள் துன்பம் தவிர்க்கும்
உயிர்க்கணி ஆகிடும் ஒருதனி முதலே!
கரையிலாப் பரப்பென கலைநிறை துறையே!
வரையிலா ஆழ்ப்பென விளங்குபண் புடையீர்!
மேருவென் றுயர்ந்து மிளிர்திரு வுளத்தின்
சீருயர் நித்திலம் பவளம்வ லம்புரி
நிறைந்திடு நன்னீர்க் கடலென ஞானம்
சிறந்தொளிர்ந் திலங்கும் தெய்வ வரோதய!
பெருங்கட லெனத்தயை பெருகிடும் ஐயனே!
அருங்குணச் செம்மலே! அடலேற் றாண்மையீர்!
எண்ணரும் மாட்சி எழில்திகழ்ந் திலகும்
பண்ணக சயனா! பணிந்தனன் திருத்தாள்
வாழிமெய்ச் செங்கோ லாட்சி
வாழிபல் லூழி மாண்புயர்ந் தினிதே! (11)

அருள்மலர்

பஃறொடை வெண்பா

இனிய அருள்ஞானத் தேன்பிலிற்றும் வானத்
தனிச்சிறப்பார் பாரி ஜாதத் திருமலரே!
மண்ணில் மரஞ்செடியில் மற்றும் குளிர்ச்சிமிகும்
தண்ணீரில் பூம்பொழில் பூவாப் பிரகாசப்
பொன்னொளிரும் மாமலரே! பேர்தயவால் இங்கினிது
என்னுயிரில் பூத்த எழிலார்ஐ வண்ணமலர்
கையால் பறியாக் கயவர்கா ணாமலரே!
மெய்யில் செழித்து விளைந்து பொலிமலரே!
கற்பகப்பூங் காவில் காட்சிதரும் மென்மைமிகும்
பொற்புகுநற் பூவே! பெருங்கருணை பொங்குமணம்
வேதம் இதழ்மலரும் மெய்வரமார் தேசுமிகும்
நாதம் விளையும் நறுமணப்பொன் வாய்திறந்து
ஏதம் அறுத்தெங்கள் இச்சையெலாம் தீரவைத்து
மூதுரைமெய்ஞ் ஞான மொழிகனிந்து பொன்மயமாம்
பாதமலர் சிந்தை பதித்துள்ளம் பூரிக்க
நாதர்வரம் நல்கும் இனிது. (12)

கட்டளைக் கலித்துறை

இனியமெய்ஞ் ஞான மலர்மணம் பொங்குத் யோவனமே!
தனிகைக் குமரர் எனத்திகழ் மாண்பார் தனித்தலைவ!
முனிவர்கள் வேந்தே மொழிபழங் கனிந்த முதுமறையே!
இனியும தின்பத் திருமலர்த் தாளென் தலைக்கணியே! (13)

ஆசிரிய விருத்தம்

தலைசெழிக்க வந்தஎங்கள் தனித்தலைமைப்
பெரும்பதியர் சாலைவள்ளல் தாள்ப டிந்தவர்
மலைவறுசன் மார்க்கமதில் வாழ்வுவரம்
மிக்குறவே மட்டிலாப்பே ரின்ப முறுவர்
அலைவறுநெஞ் சத்துமெய்ம்மை ஆர்ந்துயெமன்
வாதனைதீர் ஆன்றநெறி தன்னில் நிலைப்பர்
கலைகளின்சி கரம்சாகாக் கலைக்கதிபர்
காத்தருள்வார் கடைத்தேறும் சாரும் ஜீவனே!
(14)

நேரிசை ஆசிரியப்பா

ஜீவர்கள் உலகிடைப் பிறந்ததன் காரணம்
தேவர்கள் எனவவர் பிறப்புறும் சீர்திறம்
கோவலர் எம்பிரான் குருமணி தயைமிகு
சேவடி அருள்தரத் திருவுறும் எம்முயிர்த்
தேவதே வர்திருக் கயிலையர் எம்மான்
நாவலர் சாலை ஆண்டவர் எங்கோன்
பிறவிக் கடல்கடந் தக்கரை யுற்றிட
உறுதுணை தெப்பம் ஆயினர் என்துரை
அகமும் புறமும் ஆனவென் ஐயர்
இகமும் பரமும் என்னுயிர்த் தலைவர்
கல்வியும் பயனும் கர்த்தாதி கர்த்தர்
செல்வமும் சிறப்பும் தென்னரங் கையர்
இணைநிகர் கூற இயலா மாட்சியர்
துணையென தாருயிர்க் குற்றமெய்த் தெய்வம்
பொன்னரங் கண்ணல் பொற்றாள்
என்னுளத் திருத்தி ஏற்றுதும் போற்றி! (15)

கலி வெண்பா

போற்றி எனதுயிரில் பூத்துக் கமழ்ந்தபதம்
ஏற்றி இறைஞ்சுதுமே எக்காலும் - வேற்றொருவர்
எண்ணியும் பார்த்தறியா ஏகாப் பெருவெளியை
நண்ணி நெடுங்காலம் நற்றவந்தான் - பண்ணிப்
பெறுசன்ன தங்கள்சீர் எண்ணடங்கா ஜீவர்க்(கு)|r}}
உறுதுணையாய் வந்து உவந்து மறுபிறப்புத்
தந்த தயவினுக்குத் தாரணியில் விண்ணுலகில்
எந்த விதத்தீ டியம்புதுமோ - சிந்தை
கனிந்து கனிந்துருகிக் கண்ணினீர் வாரக்
குனிந்து பணிந்தனனெம் கோமான் - முனிந்தெமது
வெம்மாயக் காட்டினை வெட்டியதை நீறாக்கிச்
சும்மா யிருவென்ற சீர்வரந்தான் - அம்மா
பெரிது பெரிது பெரிதென்பேன் செய்தற்(கு)|r}}
அரிது அரிது அரிதாம் - குருதிலகம்
மெய்வழி ஆண்டவர்கள் வான்புகழைப் பேசுவதே
உய்வழியெற் குற்ற பணி (16)

கட்டளைக் கலித்துறை

பணியென்ப தும்மைப் பராவுதல் அம்மா! சிரமதற்(கு)|r}}
அணியென்ப துங்கள் அழகார் திருமலர்த் தாள்அத்தனே!
மணிமொழி வான்மறை வையகத் தேகொணர் மாதவரே!
தணியாத மாரணத் தாகம் தவிர்த்த தபோநிதியே! (17)

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியச்சந்த விருத்தம்

நிதியாய் வந்தெம் வறுமைதவிர்
நித்யச் செல்வ நிலைப்பேறே!
பதியாய் வந்தெம் தனிமைதவிர்
பண்போங் கினிமெய் வாழ்துணையே!
நதியாய் வந்தெம் இதயநிலம்
நனையப் பயிர்செய் நல்வளமே!
கதியே! உயிர்க்குச் சாலைவளர்
கலையே! உங்கள் தாள்தஞ்சம்
(18)

நேரிசை ஆசிரியப்பா

தஞ்சம் புகுந்தவர் தம்மை அருகணைத்(து)|r}}
அஞ்சேல் எனும்வரம் ஆதர வோங்கிட
பஞ்ச பாவம் பறந்திட மாதவ
விஞ்சை மந்திரம் விளம்பிய மாமணி
வஞ்சகர்க் கெட்டா வான்கற் பகக்கனி
செஞ்சொற் சுவைகெழு செந்தேன் நிறைகுடம்
துஞ்சா ஆண்மையர் சூதுவா தற்ற
நெஞ்சினர் நினைவில் நிலைத்திடு குருமகான்
கஞ்சமென் மலர்த்தாள் கதியருள் காதலர்
நன்செய் நாற்றென நனிவளர் உயிர்ப்பயிர்
பொன்செய் பேரருள் பொங்கருள் போதமார்
என்னுயிர்க் குயிராய் இலங்கிடு மென்னவர்
மன்னுவி ராட்தவ மாற்றிக் கலிதவிர்
தென்னன் பெருந்துறைச் சீமான்
என்னையும் பொருளென ஏற்றதற் கேதிணை! (19)

பஃறொடை வெண்பா

இணையேதும் எங்ஙணும் என்றுமி லாத
புணையே உயிர்க்குப் புகலே! பதம்பணிந்தேன்
என்றும் குறையாத செல்வந்தர் ஏரார்ந்த
குன்றின் மணிவிளக்கே! கோதகன்ற மேரே!
கலையாத ஓவியமே! கற்பனைக் கெட்டாத
நிலையான காவியமே! நீடுலகோர்க் கென்றும்
வளையாத செங்கோலே! மாதவத்தில் என்றும்
களையாத கற்பகமே! கற்றோமென் பார்க்கு
இளையாக் கலைக்கரசே! இன்ப வரங்கள்
சளையாது ஈயும் தவவான் கொடைவள்ளால்!
அன்பேறும் விண்பேறே! அல்லல்பட் டாற்றோமிங்(கு)|r}}
என்பார்க்குத் தங்கி இளைப்பாறு மண்டபமே!
வாடு முயிர்ப்பயிர்க்கு வான்மழையே! மெய்வழியைத்
தேடும் தபோதனர்க்குச் சேரும் நிறைசெல்வம்
சாலைமெய்த் தேவே! சரணம் குணாநிதியே!
கோலம் திகழ்கோமான் வாழி! (20)

கட்டளைக் கலித்துறை

வாழ்வின் துறையறி யாமல் வழிகெட் டலைந்தலைந்து
தாழ்வில் கிடந்த தமியேனை ஏற்றுமெய் வாழ்வருளி
ஊழ்வினை மாற்றியே உய்யவைத் தீரே! அருட்கடலில்
ஆழ்கென ஆண்டதற் கென்னகைம் மாறு இயற்றுவனே! (21)

ஆசிரிய விருத்தம்

இயலுவதோ எமன்வருங்கால் உற்றம் சுற்றம்
இனியமனை மக்களொடு செல்வமெல்லாம்
புயலெனெமன் பேரிடியைத் தடுப்ப துண்டோ?
பெருமானெம் பொன்னரங்கர் சாலைத் தெய்வம்
நயமுயர்ந்த திருநாமம் நவின்ற பேர்கள்
நமனிடரும் வினைப்பயனும் நீங்கிஉய்வர்
தயவுடைய தனித்தலைமைப் பெரியீர்! தேவே!
தஞ்சமுற்றோம் திருமலர்த்தாள் சிரகிரீடம்.
(22)

நேரிசை ஆசிரியப்பா

ஈடில் மாதவர்க் கிப்புவி தன்னில்
பாடு கொஞ்சமோ பகலு மிரவிலை
ஊணும் உறக்கமும் உற்ற சுற்றமும்
தானெ னும்சிறு மைதனை விட்டுமே
ஆன ஞான அரும்பெறல் சூரியன்
கோனின் செங்கதிர் காணும் இருளறும்
வான்சி றப்புறும் மாட்சி ஓங்குமால்
தேன்க மழ்திரு வாய்மலர் சீர்மணம்
வையகம் வானகம் எங்கும் கமழும்
மெய்ம்மை தங்கிடும் விண்ணவர் பூம்பதம்
பற்றி நின்றுப ராவுவர் உய்குவர்
வெற்றி மேடுறும் வேந்தர் எம்துரை
இற்றை நாளிலென் இன்னுயிர்க் கின்பருள்
கொற்ற வர்தவ கொண்டல் தயைகனி
வுற்ற மெய்யுரை உணர்வோர்
நற்ற வப்பலன் நண்ண வாழ்த்துமே! (23)

கலி வெண்பா

வாழ்த்தி வணங்கிடுமின் வையகத்தீர் வானகத்தீர்
பாழ்த்தமுத் தாபங்கள் போயொழியும் - ஆழ்த்தி
அகம்நெக்கு நெக்குருகி ஆண்டவர்கள் பாதம்
சுகம்தரும் சாதனமென் றோர்ந்து - சகமிதுதான்
தோன்றியநாள் தொட்டுத் திறமுடனே எவ்வெவரும்
ஏன்றெடுத்துச் செப்பா இனியதிறம் - சான்றாண்மை
மிக்கத் திருவுள்ளம் தானிரங்கி அன்பொழுகத்
தக்கோ னெனவாக்கிச் சற்சனருள் - ஒக்கவிருந்(து)|r}}
இன்ப உலகம் இதுவென்று காட்டினர்காண்
வானவராய்த் தானவராய் வானமுதம் பொங்கிவரும்
தேனவராய் ஞானம் தெளிசாலைக் - கோனவராய்ச்
சீரோங்கும் தெய்வம் சகலவரம் தந்தருளும்
பாரோங்க வந்த பரமேசர் - பேராரும்
பொன்னரங்கர் பாதமலர் போற்றிப் பணிவோர்கள்
விண்ணவராய் ஓங்கும் விரைந்து (24)

கட்டளைக் கலித்துறை

வியந்தேன் மணிச்சூல் தனிலென்னை ஏன்றுஈன் றும்தயவால்
இயைந்திரு வானோ ரிடையே எனும்வரம் ஈந்தனிரே!
ஜெயந்தரும் நும்திரு நாமம் தரிப்பித்த சீர்கருணை
நயந்து பணிந்து வணங்கினன் நின்தாளே நாதியம்மா! (25)

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியச்சந்த விருத்தம்

நாதியென துயிர்வான்மறை நன்றேதுலங் கிடவே
நற்றாள்திரு நடனம்புரி நவமேஉயர் தவமே!
ஆதிதுணை யெனவந்துறு அமராதிபர் தலைவா!
அன்போங்கிடு பண்பேஎமன் துன்பம்தவிர் நண்பே!
வேதம்திரு வுருதூரிகை வரையாஓ வியமே!
வியன்பூமியில் தமிழ்மூன்றியல் மெய்யோங்குகா வியமே!
பேதம்தவிர் போதம்திரு நாதம்தவ நீதம்
பெற்றோம்களிப் புற்றோம்அழி வற்றோம்வரம் பெற்றோம்
(26)

நேரிசை ஆசிரியப்பா

பெற்றாய் அண்டச ராசரம் ஈன்ற
நற்றாய் பேரொளி வடிவுடை நாயகி
உற்றாய் எம்முயிர் தனில்நிறைந் தினிதே
நிற்றாய் நீடுல கினில்கலை வடிவம்
உற்றாய் உணர்வாய் அறிவாய்த் தெளிவாய்
கற்றோங் கிடுமெய்க் கல்வியென் றோங்கினை
இகந்தனில் தரிசனை எம்மனோர்க் களித்து
சுகந்தரும் அமுதம் சுரந்தருள் அன்னாய்
புலன்வழி யின்பம் பெரிதென மயங்கி
நலங்கெட் டலைந்து நமனெனும் கடுவாய்
குதறிடச் சிக்கிச் சிதறிடஇருந்தோம்
இதமுயர் திரிசூல் ஏந்திய பொற்கரம்
காத்தது பொன்னார் கழலடி சேர்த்தது
பூத்தது எம்முயிர் மெய்வழிப் பொழிலில்
தஞ்சம் தஞ்சம் தாயே
நெஞ்ச(ம்)நெக் குருகிட நினைச்சர ணடைந்தேம். (27)

கலி வெண்பா

நின்னைச் சரணடைதல் ஒன்றே உயிர்க்குய்தி
பின்னை வழியில்லை பெம்மானே என்னைப்
பிள்ளையென ஏற்ற பெருங்கருணைக் கீடுளதோ
வள்ளல் பெருமான்நின் மாண்புயர்பேர் உள்ளம்
உருகப் புகன்றோர்க்கு உண்டோ இடுக்கண்
கருகும் வினைபவங்கள் தீர்ந்து - பெருகும்
பேரானந் தம்பொதிந்த வேதாந்தம் மான்மியமும்
சீரோங்கு ஞானக் கருவூலம் - ஆர்ந்ததனைத்
தொட்டாலும் இன்பம் செவிகுளிரப் பண்ணிசைத்தால்
மட்டில்லா ஆனந்தம் உற்றுணர்ந்தால் - எட்டாத
மேனிலைக்கு ஏற்றும் இறவா வரமருளும்
வானகச்செல் வங்கள் மகிழ்ந்தளிக்கும் - கானகமாம்
உத்யோ வனச்சாலை ஓங்கும் தவத்தரசே!
சித்தர் கணத்தலைவா! தெய்வமே! - முத்தியருள்
வித்தாதி நாயகமே! மெய்ச்சாலை ஆண்டவரே!
பத்தினேன் நின்பொற் கழல். (28)

கட்டளைக் கலித்துறை

பொற்கழல் தன்னைப் பொருந்து மனந்தர் பெருங்குலத்தோர்
சற்சனர் சாலைத் தமிழின்பம் பொங்கத் தமையுணர்ந்தோர்
கற்கும்சா காக்கல்வி கற்றே தெளிந்த குருமரபோர்
நற்குண மெல்லாம் நனிதிகழ் நற்றவர் நானிலத்தே! (29)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நானிலத்தே நமனிடர்தீர் நல்லரசே!
நலமனைத்தும் பொதிந்தவொரு வல்லரசே!
கானகத்தே உலகுயிர்நற் கதிபெறவே
கனிந்து வரம் அருள்பொழியும் ஓர்உறவே
ஞானமெனும் திருவிளங்கும் நற்பதியே
நத்தினர்க்குச் சித்திமுத்தி யருள்நிதியே
வானமுதம் பொழிநிதியம் செழித்திடவே
வழங்கு(ம்)வள்ளல் வையமெலாம் களித்திடவே! (30)

நேரிசை ஆசிரியப்பா

மேதினி மாந்தர் மெய்யறி யாமல்
ஏதினிக் கதியென் றிடருறு காலை
போதகப் புலையர் பொய்ந்நெறி புகலும்
தீதுறு கொடியர் செறிந்தலை நாளில்
வேதனை தவிர்க்க விரைந்துவந் தெமக்குச்
சீதன மளித்த செல்வநற் குவையே!
மாதன வானே! வானக வேந்தே!
காதலர் எங்கள் கற்பகத் தருவே!
பூதலத் தெமக்கெனப் போந்த மெய்க் குருவே!
பாதர வெமனின் படர்செறி காலம்
ஆதர வுங்கள் அடித்தலம் அரசே!
நீதிநா யகமே நித்யமெய் யகமே!
போதிவி ருட்சமே! பொன்னரங் கையரே!
வேதியர் பொன்மலர் மென்றாள்
நாதியெந் தமக்கு நனிபணிந் தனமே! (31)

கலி வெண்பா

பணிந்தவர்க்கு இன்சொல் பகர்ந்துதவிச் செல்வம்
அணிந்திடுமின் என்றருள்செய் அண்ணல் - மணிமொழியர்
கல்லாரும் கற்றவரும் வல்லாரும் மாட்டாரும்
எல்லாரும் இன்பமுற இன்கனிவாய்ச் சொல்லார்ந்து
மெய்வழியைக் காட்டியெமை உய்வழியிற் கூட்டிவைத்த
ஐயா உமது அருளின்றேல் - வையகத்தே
மாமறைகள் மந்திரங்கள் ஆரணங்கள் ஆகமங்கள்
தாமயங்கி யன்றோ தடுமாறி - ஊமையெனப்
போயிருக்கும் எம்சாமி பொன்னார் திருவோங்கும்
தாயுள்ளம் மிக்க தயவுடனே - ஓய்வில்
தவம்புரிந்து அப்பலன்கள் தந்தெம்மைக் காக்கும்
சிவமே! பரம்பொருளே! சீரார் - நவநிதியப்
பெட்டகமே! எங்கள் பெருமானே! பற்றினர்க்கு
நட்டமில்லா வாணிகமே! நம்பினர்க்குத் - தொட்டனைத்து
ஊறிப் பெருகும் அருள்நதியே! ஓங்குதவப்
பேறே! வணங்கும் இனிது. (32)

கட்டளைக் கலித்துறை

இனிது மெய்வழி ஆண்டவர் நாமம் விதந்துரைத்தல்
இனிது திருப்புகழ் போற்றித் திரிதல் திருப்பணிகள்
இனிது புரிதல் எழிலார் திருவுரு சிந்தித்தலும்
இனிது திருமூல மந்திரம் ஓவாது ஓதுதலே (33)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியச்சந்த விருத்தம்

ஓதி உணர்ந்த அனந்தர்குலம்
உலகில் ஏமன் துயர்கடந்து
   : நீதிஅரசர் ஆண்டவர்கள்
நியம நெறியில் நிதம்நடந்து
பேதம் தவிர்ந்து பேரின்பப்
பெருவாழ் வதனில் மகிழ்ந்திருந்து
நாதர் புகழே மிகநவின்று
நித்யம் பெற்றோங் குதல்காண்மின்
(34)

நேரிசை ஆசிரியப்பா

காணாக் காட்சிகள் கண்டிடக் காட்டி
பூணற் கரிய செவிநுகர் கனிகள்
பேணி அருளிப் பெரும்பதத் திருத்தி
மாண்பார் ஞான மணித்திரு வுருவம்!
அன்புக் கடலில் ஆழ்த்திய பெரும!
பொன்மலர்த் தாள்கள் பொருந்திட எம்முள்
இன்பம் முகிழ்க்க ஏற்றினீர் விண்ணில்
துன்பம் தவிர்த்து தொல்பொருள் சிறப்பார்
மெய்வழித் தேவே! மெய்வழித் தேவே!
உய்வழி காட்டி உவந்தமெய்க் குருவே!
ஐவழி கடத்திய அருங்கடற் புணையே!
செய்வழி காட்டிய செம்மலே! பாழ்கருப்
பைவழி மாற்றிய பண்புயர் தவமே!
ஐயரே! அத்தா! அருள்கனி அம்மையே!
போற்றிட ஓவா தும்மையே
ஆற்றல் தந்தினி தாளுமின் என்னையே! (35)

பஃறொடை வெண்பா

ஏறாத மேனிலைக்கு ஏற்றிவைத்த என்னரசே!
சீராரும் மெய்யைச் செகத்தோர்க்க ளித்தவரே!
பேராரும் பெம்மானே! பூவுலகில் வானுலகில்
நேராரும் இல்லா நெடியோயே! என்றென்றும்
மாறாத நித்தியமெய் வாழ்வுவரம் தந்தவரே!
கூரார்ந்த ஞானக் குறியனைத்தும் மிக்கருளி
மீறாதே நின்னருளாம் மெய்ஞ்ஞானச் செந்நெறியைச்
சாராதோர் தம்மைநீர் சாரேலென் றெச்சரித்து
கூரான ஐயர் குருவருளை மிக்கீந்து
வேரோடு எந்தன் வினைபவங்க ளைப்பிடுங்கி
ஆறா ரணத்தில் அழுந்தாமற் காப்பாற்றி
பேறான தங்கள் பெரும்பேரைத் தாம்சூட்டும்
ஆரான நாட்டு ஐயா! எமதுசிரத்
தார்புனைந்த மார்பழகா! தண்ணளிசெய் பொற்கரத்தோய்!
மேரேறே! வாழ்த்தும் வியந்து! (36)

கட்டளைக் கலித்துறை

வாழ்த்தி வியந்திட வோர்பொரு ளுண்டுன் மலர்ப்பதமே!
ஆழ்த்திக் களித்துப்பூ ரித்திட உண்டும் அருளமுதம்
தாழ்த்திப் பணிந்திடக் கையும் சிரமுண்டு தானவரே!
பாழ்த்த பிறவிப் பிணிக்கு மருந்துங்கள் பேர்தயவே! (37)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியச்சந்த விருத்தம்

தயவே! எமக்குச் சீதனமாய்த்
தந்தீர் பொன்னின் அரங்கரசே!
உயவே தங்கள் திருநெறியே
உலகம் அனைத்தின் பெருநெறியே!
மயலே அறவும் மறலிகெட
மாய்கைக் குற்ற குணபேதம்
இயல்பாய் விலக எமையாண்ட
எங்கோன் பிறவிப் பிணிதீர்க்கும்
(38)

நேரிசை ஆசிரியப்பா

தீர்க்க தரிசனச் செயல்கள் நிறைவுற
பார்க்குள் எழுந்தருள் பரமர் ஸ்ரீமகா
மார்க்க மாமணி வைய முய்யவே
சீர்கொண் டருள்கனி சிந்தை வளர்கனி
உருவும் பேரிலா ஒருமெய் முழுமுதல்
உருவும் பேர்புனைந் துற்றெ மக்கென
பெருவ ளஞ்சுரந் தின்ப வரந்தர
குருகு ணாநிதி கொண்ட துன்பமிங்(கு)|r}}
எண்ண யியல்வதோ எடுத்து விரிவுரை
பண்ண இயல்வதோ பகர்ந்த கேட்டுளம்
கண்ணி னீர்சொரிந் துருகிக் கர்த்தராம்
விண்ணின் வேந்தரின் ஆட்சி மாட்சியை
விளம்பி எங்கணும் திரித ரல்எனின்
உளம்பு குந்துறை ஒருதனிப் பெரும!
கருணை நாயக! கலைகளின்
திருவி ளங்கிடத் தெய்வமே! போற்றதும்! (39)

பஃறொடை வெண்பா

போற்றிப் புகழ்பாடிப் பொன்னரங்க நாயகரே!
ஏற்றி இறைஞ்சிடவும் எக்காலும் சிந்தித்துக்
கூற்றுதைத்த சேவடியைக் கோதகற்றும் பொன்மலர்வாய்
சாற்றும் அமுதமொழிச் சீர்கடலுள் ஆழ்ந்திடவும்
ஆற்றல் அருள்சாமி அன்புருவாம் என்துரையே!
மாற்றறியா மாதங்கம்! மாணிக்க மாமலையே!
பேற்றில் சிறந்த பெரும்பேறே! மாகலையே!
வேற்றொருவர் ஈடு விளம்பரிய விண்ணவரே!
ஐயா உமதுதிரு அன்பேறும் நன்குடியாய்

மெய்யாய் நிலைத்திருக்க வேண்டிப் பதம்பணிந்தேன்
துய்யா திருமணியே! தொல்பெருஞ்சீர் கற்பகமே!
நையாது காத்தருளும் நாதாவே! நற்றவமே!
மெய்யோங்கி மெய்யாரும் வேதத் திருவுருவே!
ஐயரே வாழ்க! அருள்மணிப்பொற் றாள்வாழ்க!
தெய்வமே! வாழ்க! சிந்தைகுடி கொண்டாள்க!
மெய்வரங்கள் வான்சீர் அருள்! (40)

வான்மதியரசர் நான்மணி மாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!