திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/044.அருட் சாதகம்
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
44. சாதகம்
[தொகு]இலக்கணம்:-
ஒருவரின் வாழ்வில் பிறப்பு முதல் நிறையான திசை அடையும் வரை நிகழக்கூடியவற்றைக் கிரகங்களின் சுழற்சியைக் கொண்டு கணிக்கவல்லார் கணித்துக் கூறுவது சாதகம் எனப்பெறும்.
தோற்றிய சாதகம் சாற்றும் காலைப் பற்றிய கலியுகத்து உற்ற யாண்டில் திருந்திய சகாத்தமும் ஆண்டும் பொருந்திய ஞாயிறுப் பக்கமும் மேய வாரமும் இராசியும் மன்னுற மொழிதற் குரிய - பன்னிரு பாட்டியல் - 100
ஓரை திதிநிலை யோக நாள் மீனிலை வாரங் கரண நிலை வருகிரக நிலையெழு வவயவ நிலையையும் உணர்வுற்று அவற்றை அமைத்தவற்று ஆற்றலை மகனுக்கு அடைவன அறைதல் சாதகமென மொழிப - முத்து வீரியம் 1038
திதிவாரம் நாள்யோகம் சேர்கரணம் கண்டு துதியார் இராசியிற் சூட்டி - விதிகோட்கண் மாதம் வருடம் மதித்துரைத்தல் மாந்தர்க்கு சாதகத்தின் சாதகமாச் சாற்று - பிரபந்த திரட்டு 2
சாதகம் என்பது திதிவாரம் நாள் மீன் யோகம் கிரணம் ஓரை கிரகம் இவ்வேழானும் இசைப்பது முறையே - பிரபந்ததீபம் 93
எளியேனின் பாட்டுடைத் தலைவர், முழுமுதற் பொருளே திருவுருவம் தாங்கிவந்த எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவகள். அவர்கள் திரு அவதாரம் செய்தருளியது, மார்கழி மாதம் 29 ஆம் தேதி கோழி கூவும் வேளை என்ற குறிப்பு மட்டும் உள்ளது. வருடமோ திட்டமான நேரமோ குறிப்பிடப் பெறவில்லை. எனவே, பொத்தாம் பொதுவாக வாழ்வியல் நிகழ்ச்சிகளைப் பற்றிக் கூறலாயினேன். மாதம், நாள், நட்சத்திரம், யோகம், கரணம், ஓரை இவற்றின் பொதுப்பலன்களை மட்டும் கூறி வைத்து இறைவனைச் சார்ந்தோர் பெறும் நலன்களைக் குறிப்பிட்டுள்ளேன்.
அருட் சாதகம்
காப்பு
எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மோதகம தேந்துதிருக் கரத்தார் எங்கோன்
மூஞ்சுறுவா கனமுடையார் முழுமு தல்வர்
சீதனமெற் களித்தருள்செய் சீரோங் கையர்
தெய்வமெய் வழிச்சாலை ஆண்ட வர்கள்
பாதமலர் சிரம்சூடிப் பணிந்து போற்றி
பண்டாய சாதகத்தின விபரம் கூற
ஏதமறு எம்பெருமான் திருமுன் போந்தேன்
இனிதுபொருள் சொல்லருள்க இணைதாள் காப்பே!
நூல்
அவையடக்கம்
சோதிடமென் பதுஆழம் அகலம் காணாச்
சாகரமென் றனைத்துலகோர் அறிவர் இந்தப்
பேதையதிற் சிறிதுரைக்கப் புகுந்த தென்னில்
பெருங்கடலா ழம்பார்த்த நரிபோ லாகும்
மாதொருபா கர்புகழை இதுநா மத்தில்
வரைவிருப்பம் விஞ்சியதால் உரைக்க லுற்றேன்
மாதவர்கள் கணிதவலார் பொறுத்து ஏற்க
விழைகின்றேன் பிள்ளைமொழி ஏற்பர் சான்றோர்.
(1)
படைப்பு
அண்டபுவ னங்ஙளெல்லாம் படைத்த ஈசன்
அரியமனுப் பிறப்பிற்கே அனைத்தும் ஈந்தான்
விண்டுஅமா னிதம்பரிசாய் வாங்கும் இஃதை
வித்தியா தத்துவமென் றுரைப்பர் சான்றோர்
பண்டுகா லம் நியதி கலையும் வித்தை
பகர்ராகம் புருடன்சுத் தம்மா யையாம்
எண்டிசையும் மேல்கீழும் இயங்கும் தெய்வம்
இவையருளிச் செய்துதுணை யருள்வார் மன்னோ.
(2)
காலம்
காலமிது மனுவுக்கே யன்றி யீண்டு
காணுமுயிர் எவைக்குமது கணிக்கொ ணாது
சீலமொடு இரவுபகல் வாரம் பட்சம்
திங்களொடு ஆண்டெனவும் வகுத்துக் கூறும்
கோலமொடு ஆண்டுகளைஅறுப தாகக்
கூறிடுவார் முன்னோர்கள் அன்ன வற்றுள்
வாலமிக உத்தமம்மத் திபம்அ தமம்
வகுத்துரைத்தார் வரிசைபெறக் கூறும் பின்னே.
(3)
நாட்கள், மாதங்கள்
ஞாயிறுதிங் கள்செவ்வாய் புதன்வி யாழன்
நல்லதொரு வெள்ளிசனி வார நாட்கள்
ஆயதொரு சித்திரைவை காசி ஆனி
ஆடிஆ வணிபுரட் டாசி மற்றும்
தூயதொரு ஐப்பசிகார்த் திகை மார்கழி
தைமாசி பங்குனியாம் ஈறாரென்று
ஏயதொரு மாதங்கள் பொன்ன ரங்கர்
இயம்பியவா ருரைப்பேன்கேண்ம் உலகத் தீரே!
(4)
சாலைத் தமிழ் மாதங்கள்
நன்மதிநா தம்மதிவிண் வீசும்மதியாம்
நலமுடனே பண்மதிபா டும்ம தியாம்
மண்மதி மாரிமதிதண் மதியும் தனஅ
மாமதிஉண் மதியுபம தியென் பார்கள்
பண்புயர்ந்த பரந்தாமர் திங்கள் கட்கு
பகர்ந்தார்கள் புதுநாமம் இற்றை நாளில்
எண்ணிரிய அறுபதாம் ஆண்டு தம்மை
இயம்பிடுவேன் கேண்மின்கள் இனிய நல்லிர்.
(5)
உத்தம ஆண்டுகள்
உத்தமமாம் இருபதெனும் ஆண்டு தம்மை
உரைப்பேன்கேண்ம் பிரபவவி பவமாம், சுக்ல
மெத்தபிர மோதூத, பிரஜோற் பத்தி
மேலாம்ஆங் கிரஸஸ்ரீ முகப வயுவ
சித்தமிகு தாதுஈஸ் வரவெகு தான்ய
சீர்பிரமா திவிக்ரம சித்ர பானு
சுத்தசுபா னுதார்ண பார்த்தி பவாம்
தூயவிய என்பதெனச் செப்புவோமே!.
(6)
மத்திம ஆண்டுகள்
மத்திமமாம் சர்வசித்து சர்வ தாரி
மற்றுவிரோ திக்ருது கரஅ நந்தன
வித்தகமாய் விஜயஜய மன்ம தம்ஆம்
விளம்புதுன் முகிஏர் விளம்பி அஃதே
நத்தியுரை விளம்பிவி காரிசார் வஅரி
நல்பிலவ சுபகிருது சோப கிருது
மெத்தஉரை குரோதிவி சுவாவ சுவாம்
விளம்புபரா பவவென்று விள்ளு வோமே.
(7)
அதம ஆண்டுகள்
அதமம்பில வங்ககீ லக சௌமிய
அதுசாதார்ண விரோதி கிருது மற்றும்
பதமிகப ரிதாபி பிரமா தியும்
பகரும் ஆனந்தரா ட்சசவும் நளவும்
மெத்தபிங் களகாள யுத்திசித் தார்த்தி
ரௌத்ரியும் துன்மதியும் துந்து பியும்
ஒத்தருத் ரோத்காரிரக் தாட்சி குரோதன
உகந்துரைமின் அட்சயமென் றிறுதி யாமே.
(8)
பட்சம், திதி
வளர்பிறை நாள் பதினைந்தே சுக்லபட்சம்
மற்றுதேய் பிறைநாட்கள் கிருஷ்ண பட்சம்
உளபிரத மைதுவிதி யைதிரு தியை
உற்றசதுர்த் திபஞ்ச மிஇயும் சஷ்டி
வளமான சப்தமியும் அஷ்ட மியும்
மற்றுநவ மிதசமியோ டேகா தசியும்
தளமாம் துவாதசியும் திரயோ தசியும்
சதுர்த்தசி அமாவாசை பூர்ணை நாளே.
(9)
கோள்கள்
சூரியன்சந் திரன்செவ்வாய் புதன்வி யாழன்
சுக்கிரனும் சனிராகு கேது என்று
நேரியகோள் ஒன்பதென நிகழ்த்து வார்கள்
நவநாய கர்களெனச் சான்றோர் செப்பும்
சீரியக திர்மதியும் நேத்ர மென்பார்
செவ்வாய்பு தன்நாசித் துவாரம் ஆகும்
ஏரார்ந்த குருசுக்ரன் செவிக ளாகும்
இயல்வாயே சனிகிரக ஸ்தான மாமே.
(10)
பாரோர்சொல் அறிவுமனம் ராகு கேது
பண்பான இவையொன்பான் கிரக மாகும்
சீராக இவர்கள்மனு ஜெனன காலம்
சார்ந்திருந்த இடம்தன்மைக் கேற்ப அன்னோர்
பேராக வாழ்முறைகள் அமையும்கேண்மின்
பெருகுவளம் குறையனைத்தும் உளதாம் ஆயின்
நேராக இறைசார்பு நலமே கூட்டும்
நீணிலத்தில் இவைதெளிவோர் வாழ்வர் மன்னோ.
(11)
இராசிகள்
விண்வெளியை முந்நூற்று அறுபான் பாகை
மிகவரைந்து பன்னிரண்டு பாக மாக்கி
பண்ணகமாய் ஈராறு ராசி என்பார்
பகருமது மேடமிட பம்மிதுனம்
எண்ணரிய கடக(ம்)சிம்மம் கன்னி துலாம்
இயல்விருச் சிகம்தனுசு மகரம் கும்பம்
தண்ணெழிலார் மீனமென உரைப்பர் மேலோர்
செப்பிடுவோம் ராசிநிலை தெளிமின் மேலும்
(12)
சரம் திரம் உபயம் ஆண் பெண் ராசிகள்
மேடம்கட கம்துலாம் மகரம் நான்கும்
முன்னோர்கள் சரராசி என்பர் மற்றும்
ஆடகமாம இடப(ம்)சிம்மம் விருச்சி கம்மும்
அரியகும்ப கம்நான்கும் ஸ்திர ராசிகள்
கூடரிய மிதுனம்கன்னி தனுசு மீனம்
கூறிடுவார் உபயராசி என்பர் ஆன்றோர்
தேடுடைய மேடம்மிது னம்சிம் மமும்
துலாம் தனுசு கும்பமதும் ஆண்ரா சிகள்
(13)
கூடிடபம் கடகம்கன்னி விருச்சிகமும்
கூர்மகரம் மீனமதும் பெண்ராசிகள்.
கூடகமாம் கும்பமதும் கடககோனும்
குறிபகர பின்னறையும் ஜலராசியாம்
பாடுடைய மேடமதும் ரிசபம்கன்னி
கற்றுமிது னமதுவும் துலாமும்நிற்க
கோடுடைய மகரத்தில் அறைமுன்பாகவும்
குறிப்பார்கள் கஷ்டமெனும் ராசியாமே
(14)
ஆயுள் நிர்ணயம்
விந்தையாம் ரவிமதியின் கலைகள் தம்முள்
விளைஐந்து நாழிகைக்கோர் கலையும் மாறும்
தந்தைதாய்க் கேகர்ப்ப தானம் செய்யும்
தருமணதில் கலைதொடங்கில் ஆயுள் நூறு
அந்தகலை நாழியொன்றுக் கிருபதாக
அதுமிகவும் குறைவுபடல் உண்டுகாணும்
முந்துகலை முடியுங்கால் சக்தி சேரில்
முடிந்திறக்கும் குழவியது கணிதம் காணே.
(15)
அவ்வேளை கோள்நிலைகள் அட்சாம் சங்கள்
அவரிருக்கும் இடம் காலம் அனைத்தும் கூர்ந்து
செவ்வியநற் கணிதவலார் தீர்க்கமாகத்
திருக்கணிதம் செய்தியற்றும் சாத கம்காண்
எவ்வேளை எதுஎங்கே இருந்தபோதும்
இறைசார்பு இருப்பதெனில் அருளால் ஆன்றோர்
திவ்வியமாய்க் கோளரிவாள் கோமான் கூட்ட
தரணிமிசை பல்லாண்டு வாழ்வார் மன்னோ.
(16)
நட்சத்திரங்கள்
விண்தார கைக்கூட்டம் இருபத் தேழாம்
விளங்கும்அசு வனி பரணி கார்த்தி கையும்
எண்ணரிய ரோகிணியும் மிருக சீர்ஷம்
இயல்திருவா திரைபூசம் புனர்பூ சமும்
நண்ணும்ஆ யில்யம்பூ ரமும் உத்ரம்
ஹஸ்தம்சித் திரைஸ்வாதி விசாகம் மற்றும்
பண்ணகமாம் அனுஷமது கேட்டை மூலம்
பூராடம் உத்ராடம் திருவோ ணம்காண்.
(17)
தண்அவிட்டம் சதயமொரு பூரட் டாதி
சீர்உத்தி ரட்டாதி ரேவதி இயாம்
விண்விளங்கு இன்னவைகள் மனுவி னோடு
மிகத்தொடர்பு உடையனவாம் கணித்துப் பார்க்கில்
எண்ணம்சொல் செயல்களொடு இணையும் கேண்மின்
இவற்றுக்கு மேனியிலே இடங்க ளுண்டு
வண்ணமொடு மாந்தர்சற் குருசார்ந் துற்றால்
மன்கிரகம் தாரகைகள் நலமே கூட்டும்.
(18)
நட்சத்திரக் கூட்ட வடிவங்கள்
மாத்தலைய டுப்புகற்றை ஊற்றேங் காய்க்கண்
மணியங்கா டியுடன்பூ நுகமும் அம்மி
பூத்தலைகட் டில்கால்கை புலிக்கண் தீபம்
பொலிசுளகு முடப்பனையும் ஈட்டிமற்றும்
ஆத்தலைபொற் காளம்முழங் காலும் ஆமே
அத்தவிட்டுக் கூட்டம் பூங்கொத்து என்றும்
மாத்தலைகட் டிற்காலும் ஓடம் கலம்
மற்றுகீழ் தென்மேலும் வடதிசை பார்.
(19)
யோகங்கள்
சிவம்சித்தம் சித்திசுபம் சூலம் ப்ரம்மம்
சோபனசுப் ரம் துருவம் ப்ரீதி கண்டம்
தவசுகர்மம் சௌபாக்யம் சாத்யம் பரீகம்
திருதிஅதி கண்டம்ஐந் திரம்விருத்தி
அவகாமம் அரிடானம் ஆயுஷ் மானும்
வரியானும் வியாகாதம் வச்ரம் சுப்ரம்
நவமான விஷ்கம்பம் வைதி ருதி
நவிலுவோம் யோகமிவை இருபத் தேழாம்.
(20)
கரணங்கள்
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
பவபா லவசுகௌல
பத்ரவா சகுனி என்றும்
தவமிகு தைது லையும்
சற்சதுஷ் பாத மோடு
நவமிகு வனசை நாக
வாசிமித் துக்கி னவாம்
யுவமிகு பதினொன் றாகும்
இவைகர ணம்என் றோதே.
கோள்களின் ஆட்சி உச்ச சம நட்பு பகை வீடுகள்
(20)
எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
சூரியர்க்கு சிம்மமது ஆட்சி வீடு
சமவீடு மிதுனமொடு கடகம் கன்னி
நேரியமீ னம்தனுசு விருச்சி கமும்
மிக்கவள நட்பான வீடென் பார்கள்
ஆரியமே ஷம் இவர்க்கு உச்ச வீடு
அறப்பகையாம் இடபமோடு மகரம் கும்பம்
சீரியதாய் துலாமதுவே நீச வீடு
திருக்கணிதம் செய்துபலன் உரைப்பர் காணே.
(21)
சந்திரர்க்குக் கடகமது ஆட்சி வீடு
சம வீடு மேடம்துலாம் தனுசு மீனம்
அந்தகும்பம் அன்பான நட்பு கன்னி
அழகான மிதுனமொடு சிம்மம் என்பர்
விந்தைமிகு இடபமது உச்ச வீடு
விருச்சிகமே நீசவீ டாகும் மன்னோ
சிந்தைநின்ற தனுசுஅவர் நட்பு வீடு
செப்புதுமே உலகவர்கள் அறிய நன்றாய்.
(22)
விந்தைமிகு அங்கார கர்க்கு ஆட்சி
வீடதுவாம் விருச்சிகமும் மேட மும்ஆம்
அந்தமக ரம்அவர்க்கு உச்சம் நீசம்
அக்கடகம் பகைதனுசு மீன மாகும்
முந்தவரு சமவீடு ரிஷபம் கும்பம்
மாட்சிது லாமதுவும் ஆகும் மன்னோ
சிந்தைமிகு சிம்மமொடு தனுசு மீனம்
சீரான நட்பு வீடாகும் கேளும்.
(23)
புதனார்க்கு ஆட்சிகன்னி மிதுனம் ஆகும்
பொலிமேடம் விருச்சிகமும் தனுசு கும்பம்
இதமான மகரமதும் சமவீ டென்பார்
இடபம்சிம்மம் துலாமதுவும் நட்பு வீடாம்
மிதமான மீனமது நீச வீடு
மேலான மேடமது நட்பு வீடு
சதமான தெய்வபதம் சார்ந்த பேர்க்கு
சகலமுமே இறைவீடு சகத்தி னோரே.
(24)
குருபகவா னுக்காட்சி தனுசு மீனம்
குறிப்புடைய கடகமது உச்சம் ஆகும்
வருங்குருவுக் குக்கன்னி மேடம் சிம்மம்
விருச்சிகமும் கும்பமதும் நட்பு வீடாம்
திருஇடபம் மிதுனம்துலாம் பகைவீ டாகும்
சார்மகரம் நீசமென விளம்ப லாகும்
குருபகவான் நிகரில்லா கோளென் றிந்தக்
குவலயத்தோர் கூறுகின்ற குறிப்பு காணே!.
(25)
சுக்கிரனார்க் காட்சிதுலாம் இடப மாகும்
சுகமான மீனமவர்க் குச்ச மாகும்
வக்கிரமாய்க் கன்னியது நீச வீடு
மற்றுகட கம்சிம்மம் பகைவீ டாகும்
மிக்கமிது னம்தனுசு மகரம் மேடம்
மேதினியில் நட்பான வீட தாகும்
தக்கஇவர் அசுரகுரு என்று சொல்வர்
தன்மையது சகத்தீரே அறிந்து கொண்மின்.
(26)
சனிபகவான் ஆட்சியது மகரம் கும்பம்
சமவீடு தனுசினொடு மீனம் ஆகும்
இனியகன்னி மிதுனம்துலாம் நட்பு வீடு
ஏறுதுலாம் உச்சமெனும் வீட தாகும்
தனிமேடம் நீசம்சிம்மம் பகைவீ டாகும்
சீரிடபம் நட்பெனவும் உரைக்க லாகும்
கனிவாக எழுவருக்கும் ஆட்சி உச்சம்
கடிநட்பு பகைநீசம் சமமும் சொன்னோம்.
(27)
ராகுகேதுக் காட்சியிலை யென்பர் சில்லோர்
ராகுகன்னி கேதுமீனம் ஆட்சி யென்பார்
வாகுடைய மிதுனம் கன்னி துலாம் தனுசு
மகரமதும் நட்புடைய வீடு என்பர்
ஆகுமது இருவருக்கும் உச்ச வீடு
அம்மிதுனம் கன்னிதுலாம் மகரமோடு
ஏகுபகை மேடமொடு கடகம் சிம்மம்
இயல்கும்பம் என்னுமிவை பகைவீடாமே.
(28)
பார்வைகள்
சூரியன்சந்தி ரன்புதனும் சுக்ரன் ராகு
செப்புமந்தக் கேதுவும்தம் இடத்திலிருந்து
நேரியலால் ஏழாம்இ டத்தைப் பார்க்கும்
நின்றசெவ்வாய் நான்கேழ்எட் டையும் பார்க்கும்
சூரியராம் குருஐந்தேழ் ஒன்பான் பார்க்கும்
சனிதானும் மூன்றேழ்ஒன் பதனைப் பார்க்கும்
பார்வைதனைக் கணித்துநன்மை தீமை யென்னும்
பலாபலன்கள் பகரும்நற் கணியர் காணே.
(29)
உடலில் ராசிக்குரிய உறுப்புகள்
மேடமது தலையாகும் இடபம் முகமாம்
மிதுனமது மார்பாகும் கடக ராசி
ஈடில்லா இதயமெனும் வயிறு சிம்மம்
இயல்கன்னி விலாவாகும் துலாரா சிதான்
கூடுஅடி வயறாகும் விருச்சி கந்தான்
கொள்ஜனன இந்திரியம் தொடை தனுசு
ஆடுமுழங் கால்மகரம் கணுக்கால் கும்பம்
அழகான பாதமது மீன மாமே.
(30)
ஸ்தானங்களும் உறுப்புகளும் பற்றிய மற்றுமோர் கருத்து
பிறந்ததொரு லக்கினந்தான் முதலாம் ஸ்தானம்
பொருந்துசிரம் இரண்டதுவும் முகமும் கண்கள்
சிறந்தமூன் றாம்ஸ்தானம் தோள்கள் கைகள்
செப்பமிகு கழுத்துஅது நான்காம் ஸ்தானம்
திறந்ததொரு மார்பதுவும் காதும் என்பார்
சீர்ஐந்து மேல்வயிறு முதுகும் ஆறாம்
அறந்தானம் அடிவயிறு ஏழ்இ டுப்பு
அட்டமது மர்மஸ்தா னங்கள் என்பார்.
(31)
ஒன்பதாம் இடம்தொடைகள் என்பர் மற்று
உற்றதசஸ் தானமது முழங்கால் என்னும்
அன்பதாம் பதினொன்றாம் இடம்க ணுக்கால்
அழகாக பாதங்கள் பனிரெண் டென்பர்
இன்பமொடு இவ்வாறு ராசிஸ் தானம்
இவற்றொடு விண்ராசி தொடர்பு கொள்ளும்
தன்குருவைச் சார்ந்துஅற நெறிநிற் போர்க்கு
சகலமுமே சரிநெறியில் இயங்க லாகும்.
(32)
கிரகங்களும் உடல் ஸ்தானங்களும் பஞ்ச பூதங்களும்
குருபகவான் தலையதுவாம் ஆகாயம் காண்
கனலாகும் மார்பும்செவ் வாயும் சூர்யன்
அருள்புதனும் தோள்கழுத்து முதுகு தானும்
அச்சுக்ரன் இடைசந்திரன் இடையுமாகும்
உருவாக நீர்தன்மை இவைக ளாகும்
உற்றசனி பாதமெனும் பூமி யாகும்
திருவாக இதையறிந்தோர் சான்றோர் என்று
சீர்கணித வல்லுநர்கள் செப்பு வாரே.
(33)
இராசி ஸ்தானங்களும் வாழ்வியலும்
திருவான உயிர்முதலாம் இரண்டாம் வாக்கு
சீர்குடும்பம் மூன்றாம்ச கோத ரம்மே
கருவுயிர்த்த தாய்நான்கு புத்ர பாக்யம்
காணுமைந்தாம் பகைரோகம் கடனும் ஆறு
திருமனையேழ் ஆயுளெட்டு பாக்யம் ஒன்பான்
சீர்தொழில் பத்துலாபம் பதினொன் றாகும்
வருவிரயம் மோட்சமது பனிரெண்டாகும்
வரிசையிது ஸ்தானமென வழுத்து மோமே.
(34)
காரகத்வம்
சூரியன்உ யிர்தந்தை காரகர் ஆம்
சந்தரன்உடல் தாயும்செவ் வாய்தான் பூமி
நேரியசகோதரமும் புதன்தாய் மாமன்
நல்வித்தை குருபுத்ர காரகன் ஆம்
சீர்சுக்ரன் மனையாள்வா கனகா ரகம்ஆம்
சனிஆயுள் ராகுபோ கர்யோ கர்ஆம்
பாரினில்கே துஞானம் மோட்சமென்று
பகர்வார்கள் காரகத்வம் பெரியோர்தாமே
(35)
திசைகள்
சூரியர்தி சைஆறு ஆண்டு சந்த்ரன்
திசைபத்து செவ்வாய்க்கு ஆண்டே ழாகும்
ஆரியகுரு பதினா றாண்டு சுக்ரன்
அவர்க்கிருப தாம் சனிக்கு பத்தொன்பது
பேரான புதன் பதினேழ்ராகு வுக்கு
பதினெட்டு கேதுவுக்கு ஏழாண்டென்பர்
சாருதிசை நூற்றிருப தென்று கூறும்
சார்ந்திறைபாற் பற்றுள்ளோர் நீடு வாழ்வர்
(36)
கோள் நிலை கூறல்
அவரவரும் உதித்த பொழு தவ்வக் கோள்கள்
அமர்ந்திருக்கும் ராசியினில் மாறிநிற்கும்
இவர் நின்ற ராசிநிலை இன்று உள்ள
இதமான கோட்சாரம் கண்டு அன்னோர்
அவர்களொடு சேர்கிரகம் பார்வை ஆய்ந்து
ஆட்சி உச்சம் சமம்நட்பு பகை நீச்சங்கள்
நவமாக ஆய்ந்தறிந்தே பலன்சொல் தன்மை
நற்கணித ஜோதிடர்க்குக் கடமை யாமே
ஆதியிறை அடிபணிந்து அருளை வேண்டி
அவ்வக்கோள் பலனுரைக்கப் பணிந்து போற்றி
ஜோதியதின் திடமறிந்து சுத்த பக்தித்
திறனுடனே கிரகநா யகர்கள் தம்மை
நீதியுடன் மரியாதைப் பன்மைசேர்த்து
நேமமுடன் அவர்கள்செயல் பணிந்து கூறி
மேதினியில் ஆய்ந்துரைத்தல் முறையா மென்று
விண்கணியர்க் கினிதுரைக்கும் ஏன்று கொண்மின்!
பொதுப் பலன்கள்
கலி விருத்தம்
பிறந்த நாள்பலன் செப்புதும் ஆயினும்
அறமார் ஜாதக அமைப்பின் படியதாம்
அறமெ லாமுரு வாயின தெய்வத்தின்
நிறையன் புபற்றில் நற்பலன் பெற்றிடும். (35)
பிறந்த நாள் பலன்
ஞாயி றில்பிறந் தோர்மிகு செல்வர்கள்
ஆய தோற்றம் அழகியர் மற்றுமே
மேய தெஃதும் அலட்சியம் செய்பவர்
நேய மானவர் என்றுரை செப்புதும். (36)
திங்க ளில்பிறந் தோரீகைச் சிந்தையர்
பொங்கும் செல்வம் பொலிபவர் மேலுமே
எங்கும் செல்வாக்கு கொண்டவ ராவராம்
தங்கும் மாநிற மாகத்தி கழ்வர்காண் (37)
செவ்வாய் தன்னில் பிறந்தவர் காரியம்
செவ்வை யாகப் புரிய முனைகுவர்
இவ்வ கையினர் செந்நிறம் கொண்டவர்
ஒவ்வாப் பொய்ம்மை உரையியல் மாந்தராம் (38)
புதன்பி றந்தவர் பெற்றோர்கற் றோரிடம்
இதவு ரைபுகல் இங்கிதர் கல்விமான்
மதிமி குந்தவர் பக்திசி றந்தவர்
மிதமாம் பொன்னிற மேனியர் என்னுமே (39)
வியாழன் தன்னில் பிறந்தவர் என்றுமே
தயவாய்த் தாய்தந்தை சான்றோர் மதிப்பவர்
இயல்உ யர்உடல் வாகினர் மாநிறம்
நயமு டைஉரை நன்குசொல் தன்மையர் (40)
வெள்ளி தன்னில் பிறந்தவர் செல்வர்கள்
எள்ளு நெஞ்சத் தியல்பினர் தோற்பிலார்
அள்ளும் செந்நிறத் தன்மையர் அன்பிறை
கொள்ளு மாயின் குறைகளை வாய்ப்புறும் (41)
சனியி னில்பிறந் தோர்கள் துணிவுளார்
இனிய தானம்தர் மங்கள் இயற்றுவார்
தனிய மைதியர் காரியம் ஆற்றுவர்
மனிதர் மாநிறம் கொண்டநற் பண்பினர் (42)
இலக்கின பலன்கள்
நேரிசை வெண்பா
மேடலக்கி னத்தோன் மெலிதேகி சாமர்த்யன்
சீடருளான் சஞ்சாரி சன்மானம் - தேடுடையான்
உற்றார்பால் பற்றுடையான் உள்ளச்சம் மிக்குடையான்
நற்றவர்பால் நாட்டமுளான் காண் (43)
இடபலக் னமுடையோன் எக்கார்யம் வல்லான்
உடன்வாழ் மனைதோடம் உற்றான் - அடமுடையான்
அற்பப்புத் ரர்உடையான் அந்நியர்செல் வம்நயக்கும்
நற்சத்ய வானும் இவர். (44)
மிதுனஇ லக்கினத்தோன் மிக்கினியன் மென்மை
இதமனைவி சொற்கேட்பன் நல்லன் - எதிலும்
புகழ்வேட்கை மிக்கானும் சிக்கனத்தான் வெட்கம்
மிகவுடையான் சொற்றவறான் காண். (45)
கடகத்தான் செல்வன் குருபரர்விஸ் வாசம்
திடமுடையான் காமிதன் பெற்றோர்க் - கடங்காதான்
அற்பப்புத் ரர்உள்ளான் அன்பில் மனையுடையான்
சற்குருவால் நன்மைபெறு வான். (46)
சிம்மத்தான் கம்பீரன் தைர்யன் தனவானாம்
செம்பொருள்பால் பக்திச் சிறப்புடையான் - வெம்மைமிகு
கோபி சகலகலை கற்பான் கபடுடையான்
பாபத்தான் என்றே பகர். (47)
கன்னியான் தர்மன் கழிவிரக்கம் அச்சத்தான்
அன்பன் சனப்பிரியன் செல்வந்தன் - மன்னுமிறை
அஞ்சும் சுபகார்யம் ஆற்றும் திறமுடையான்
வஞ்சம் உடையோனும் ஆம். (48)
நல்லதுலாம் லக்கினத்தான் நற்புத்தி நற்பொறுமை
எல்லாம் உடையான் சுகம்விரும்பும் - வல்லான்
புகழ்விரும்பிச் செய்கை புரியும் அரசின்
தகநட்பும் சார்வான் இனிது. (49)
விருச்சிகத்தான் புத்தி வெகுமானி வஞ்சன்
பெருமுயற்சி கொள்வன் மனைபால் - பெருவிருப்பன்
அன்பினிமை சொல்வல்லான் பந்துஜன ஆர்வமிலான்
இன்பநெறி ஏகும் விரைந்து. (50)
தனுசுலக்கி னத்தோன் அபிமானி சத்யன்
தனவானாம் போகன் சுகவான் - இனந்தழுவும்
மித்ரனாம் மேல்நாடு சஞ்சாரி நல்வசியன்
உத்யோ கபரனும் ஆம். (51)
மகரன் அபகார்யன் மாசெல்வன் கோபி
சுகப்பிரியன் தன்மனைபால் வாஞ்சை - மிகவுடையான்
நல்ல திடபுத்தி வெல்லும் உபாயமுடை
வல்லான் இவனென் றறி. (52)
கும்பத்தான் திட்பமுளான் குள்ளன்செங் கண்ணனுமாம்
தெம்புடையான் தற்புகழ்வன் நற்சுகமே - மொய்ம்புடையான்
தாரம் இரண்டுடையான் செய்ந்நன்றி தான்மறப்பன்
வீரம்குறைந் தோனாம் விளம்பு (53)
மீனத்தான் ஞானம் மிகவுடையான் பக்திமான்
ஆன இரக்கமுளான் செல்வமுளான் மோனமிகு
சான்றோர்பால் விஸ்வாசம் தானுடையான் சௌகரியன்
ஆற்ற அறமுடையோன் காண். (54)
நட்சத்திரப் பலன்கள்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அசுவினி நட்சத் ரத்தோர்
அழகிய தோற்றம் உள்ளோர்
இசைவுடன் அணிகள் பூணும்
இச்சையர் கல்வி மான்கள்
திசையுளோர் அனைவ ராலும்
சினேகிக்கப் படுவர் என்றும்
வசைவிரும் பாத மாந்தர்
வல்லவர் என்று கூறே
(55)
பரணியில் பிறந்தோர் கார்ய
வாதிக ளாய்த்தி கழ்வர்
தரணியும் ஆள்வர் ராஜ
தந்திரம் உடையோர் ஆடம்
பரமிக வுடையார் புத்தி
மானிவர் தனிமை வேண்டும்
தரமுடை யோராய் வாழும்
தன்மையர் அறிக மன்னோ!.
(56)
கார்த்திகை தன்னில் தோன்றும்
கனிவுடைய மாந்தர் மிக்கு
கீர்த்தியை விரும்பும் சற்றே
கர்வமும் உடையோர் காமி
ஆர்த்திடும் சுவைஊண் வேட்கும்
அவர்முகஸ் துதிவி ரும்பும்
கூர்த்திரு தாரம் கொள்ளும்
குணமுளார் அறிமின் நன்றே.
(57)
ரோகிணி தன்னில் தோன்றும்
உத்தமர் அன்பாய்ப் பேசும்
ஆகம சாஸ்திர ரங்கள்
அறிந்திடு வேட்கை யுள்ளோர்
மோகமாய்த் தான தர்மம்
மிகச்செயும் நல்லோர் இன்னோர்
ஏகனின் பாலன் புள்ளோர்
எழிலுடை மாண்பர் காணே.
(58)
மிருகசீ ரிடத்தில் தோன்றும்
மானுடர் திறமை யாளர்
பெரும்பய சுபாவம் கொண்டோர்
பெரிதும் உல்லாசம் மாதர்
மருவிடும் சபலம் உள்ளோர்
மாண்பர்கள் வாழ்வில் ஞான
குருபரர் சார்ந்து நின்றால்
குணநிறை கொள்வர் மன்னோ
(59)
ஆதிரை பிறந்தோர் கல்வி
ஆர்வமிக் குடையோர் செல்வம்
மீதிவர் மிகுந்த வேட்கை
மிக்குளார் நேர்மை யாளர்
நீதியில் நடக்க எண்ணும்
நேர்வழி தேரும் சான்றோர்
பாதமே பணியும் கட்டுப்
பாடுடைப் பண்பர் இன்னோர்
(60)
புனர்பூ சம்பி றந்தோர்
புத்திமான் அமைதி யாளர்
தனதுளம் ஒப்பிக் கார்யம்
தான்முடித் திடும்வல் லார்காண்
முனைப்புளார் அறிஞர் மேன்மை
மிகுதரம் உடையர் நீதி
தனைநினைந் தென்றும் வாழ்வர்
சத்தியர் என்று கூரே.
(61)
பூசநட் சத்ரத்தோர் என்றும்
புண்ணியர் காரி யத்தை
நேசமாய் விரைந்து ஆற்றும்
நல்லவர் செல்வம் சேர்ப்பர்
ஆசிலார் வன்மை வாகு
அவசர மிகுபண் பாளர்
தேசுயர் தெய்வ பக்தர்
திறன்மிக உடையர் செப்பே!
(62)
ஆயில்யம் பிறந்த மாந்தர்
அறம்மறம் இரண்டும் உள்ளோர்
நேயநன் மனையின் வாழ்வில்
நிறைகுறை யுண்டு ஆற்றல்
மேயவர் கார்யம் செய்யும்
மிகமுயற் சியினர் அதற்கு
தீயதும் செயத்த யங்கார்
திறனிது இவர்க்கென் றோதே!
(63)
மகமதிற் பிறந்த மாந்தர்
மற்றவர்க் குதவியாளர்
மிகுமரி யாதை யுள்ளோர்
மிகப்பலர் போற்றும் மாண்பர்
அகமிகு போகர் மிக்க
செல்வராம் கோபம் மிக்கார்
சகலமும் சாதிப்பார் காண்
தந்திர உத்தி யாளர்.
(64)
பூரத்தார் பொன்பொ ருள்கள்
புகழ்அருள் போற்றும் மாந்தர்
சீரொத்து நீதி நேர்மை
செந்தண்மை யாளர் இந்தப்
பாரொத்து வாழும் மாட்சிப்
பாங்கறி பக்தி யாளர்
காரொத்த கொடையும் செய்யும்
கண்ணியர் அறிமின் ஐய!
(65)
உத்திரத் தோர்கள் தம்மை
உகந்துளம் விரும்பு வார்கள்
எத்திறத் தானும் செல்வம்
ஈட்டிடும் முயற்சி யுள்ளோர்
மெத்தவும் இறைபால் அன்பு
மிக்குடை நல்லார் இன்னோர்
சொத்து நன்மனைவி ஊர்திச்
சிறப்புடை யார்கள் மன்னோ!
(66)
அஸ்தத்தில் பிறந்தோர் உள்ளம்
ஆற்றமிக் கவர்காண் பர
வஸ்துபால் பற்றெ எதற்கும்
மனங்கலங் காதோர் போதை
வஸ்துபால் மயங்கும் வேட்கை
மிக்குளார் செல்வம் சேர்ப்பர்
வஸ்திரம் அழகாய்ப் பூணும்
மாண்பரும் அன்பர் மன்னோ!
(67)
சித்திரை பிறந்தோர் சீலம்
சிறந்தவர் செயல்க ளாற்றி
முத்திரை பதிப்பர் ஆடை
மோகமும் உடையர் கர்வம்
மெத்தவும் உண்ட லைச்சல்
மிக்கவும் அவச ரத்தார்
ஒத்தவர் பால்மிக் கன்பு
உடையவர் அறிமின் அம்ம!
(68)
சுவாதியில் பிறந்த மாந்தர்
தாய்தந்தை பேணும் நல்லோர்
தவோன்னதர் பக்தி கொள்வர்
சகலபோ கங்கள் வேட்போர்
திவாகரர் போலத் தேஜஸ்
சேயிழை யார்க்கி னியர்
நவமணி கொழிக்கும் செல்வ
நாட்டமும் உடையோர் இன்னோர்!
(69)
விசாகத்திற் பிறந்தோர் செய்கை
விரைவினர் ஆற்றல் வாய்த்தோர்
அசோகராம் இசையில் அன்பு
அமரராம் தன்மை மிக்கார்
திசாதிசை சென்று செல்வம்
சேர்த்திடு பண்பா ளர்கள்
உசாவுமெய்ஞ் ஞானச் செல்வர்
உத்தம ரான மாண்பர்!
(70)
அனுஷத்தில் பிறந்தோர் நல்ல
நல்ல அழகினர் தூய்மை மிக்கார்
மனுஷர்க்குள் மாணிக்கம் அம்
மதிப்பொடு வாழ்வர் செல்வர்
இனியவர் வைராக் யத்தார்
எடுத்தது முடிக்கும் வாய்மை
கனிமொழி யுடையர் சொந்தம்
காத்திடும் பக்தர் காணே!
(71)
கேட்டையில் உதித்தோர் சான்றோர்
கிரமமாம் விரதர் தெய்வ
நாட்டமும் உடையார் பிற்றை
நினைவிலாச் செலவு செய்வர்
தேட்டமிக் குடையார் தந்தை
தாயிடம் பாசம் மிக்கார்
ஈட்டிய செல்வம் மற்றோர்க்
கீந்திடும் ஈகை யாளர்!
(72)
மூலத்தில் உதித்தோர் பெற்றோர்
மாமனார்க் கியற்றும் தோஷம்
ஞாலத்தில் இவர்கள் செய்த
நன்றியை மறப்பர் ஆணின்
மூலமோ அரசு ஆளும்
என்றுரை புகல்வர் இன்னோர்
காலத்தில் இறைந யந்தால்
கட்டமும் நட்டம் வாரா!
(73)
பூராடத் தில்உ தித்தோர்
போட்டிகள் எதிர்ப்பு தம்மைப்
போராடி வாழ்வர் உண்டிப்
பிரியராம் பக்தி மான்கள்
பாரோடி பொருள்சேர்ப் பார்கள்
பரோப காரம் செய்வர்
சீரோடு இறைசார்ந் தோர்கள்
திருமிக வாழ்வர் மன்னோ!
(74)
உத்திரா டத்தில் வந்தோர்
உரைதிறன் உடையர் செல்வர்
மித்திரர் நல்லோர் கட்கு
சத்துரு தீயோர் கட்கு
எத்திறத் தொழிலும் செய்யும்
இயல்பினர் கரங்கள் நீண்டோர்
சுத்தராம் ஞானம் தேடும்
சீரினர் இவர்கள் என்பர்!
(75)
திருவோ ணத்தார் சற்று
சுயநலம் பிடிவா தத்தார்
மருவிய மனைபால் பற்று
மதிப்புகள் உடையார் ஞான
குருவடை நல்லார் கோபம்
கொள்பவர் குடும்பம் பேணும்
பெருகுறு செல்வம் தேடும்
பிறர்தமக் கீயார் மன்னோ!
(76)
அவிட்டத்தில் உதித்தார் நல்லார்
அறிஞராய்த் திகழ்வர் ஞானச்
செவிச்சுவை யறியும் மாட்சித்
திறன்பல உடையர் என்றும்
தவறுகள் செய்யாத் தன்மை
தவத்தினர் பேணும் சீரோர்
எவற்றிலும் நேர்மை நட்பு
இனியநற் பண்பர் நேசர்
(77)
சதயத்தில் பிறந்த மாண்பர்
தைரியம் ஆற்றல் மிக்கார்
இதயத்தில் நீதி யுள்ளார்
இனிததி காரம் செய்வர்
பதவிகள் வகிப்பர் பல்லோர்
புகழ்கலைக் ஞான வானாம்
எதனிலும் வென்றி கொள்ளும்
இயல்பினர் இவர்காண் அம்ம!
(78)
பூரட்டா தியில்பி றந்தோர்
பேரெழில் அதிர்ஷ்டம் வாய்ப்போர்
யாருக்கும் உதவும் பண்பும்
ஆகம புராணத் தேர்ச்சி
பேரெட்டுத் திக்கும் போற்றும்
பேறுளார் விஷய ஞானி
சீருற்ற வாழ்வில் மிக்கச்
சலிப்பதும் கொண்டி ருப்பர்
(79)
உத்திரட் டாதித் தோன்றல்
உரைமிக ஆடும் போற்றி
நத்தினோர்க் குதவும் தன்னின்
நலத்தையே மிகுதி தேடும்
மெத்தநேர் பிரச்னை தன்னில்
மீள்வறி யாது தேங்கும்
சொத்துகள் சுகங்கள் சேரும்
சீர்நட்பால் மேன்மை யோங்கும்
(80)
ரேவதி தன்னின் மக்கள்
இயன்றநன் கொடைகள் ஈவர்
தீவிர பக்தி யாளர்
சாஸ்திரம் வல்லார் நல்ல
ஆவல்பன் மொழிபால் வல்ல
அன்பர்கள் நன் மனத்தர்
பூவுலகினில் இறைவர்
பற்றினால் மேன்மை கொள்வர்
(81)
பிறந்த மாத பலன்கள்
ஆறுசீர்க் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்
சித்திரை தனில்பி றந்தோர்
தெய்வநற் பக்தி மிக்கார்
வித்தகர் சாஸ்தி ரங்கள்
மிகப்படித் தோர்பெற் றோர்பால்
மெத்தவும் பாசம் பக்தி
மிகவுளார் மகிழ்ச்சி வாழ்வில்
எத்திசைச் செலினும் ஏற்றம்
இலங்கிடத்துலங்கு மன்னோ
(82)
வைகாசி உதித்த மாந்தர்
மற்றவர்க் காய்உ ழைப்பர்
செய்காரி யங்கள் தன்னில்
துணிவுடன் வெற்றி கொள்ளும்
மெய்காட்டும் சான்றோர் பக்தி
மிக்குடைக் கீர்த்தி யாளர்
கைகாட்டும் கலைகள் யாவும்
கற்றவ ராயி ருப்பர்
(83)
ஆனியில் பிறந்த மக்கள்
அவசரம் கோபம் கொள்வர்
தேனிபோல் சுறுசு றுப்பாய்ச்
செயல்புரி வார்கள் மற்றும்
தானுயர் நிலையில் வாழத்
தன்னார்வம் மிகவே கொள்வர்
மானமிக் குயர்ந்த பண்பர்
மகிழ்வுடன் வாழ்வில் ஓங்கும்
(84)
ஆடியில் பிறப்பெ டுத்தோர்
அரியசற் குணங்கள் உற்றோர்
தேடிமெய்ச் செல்வம் சேர்ப்பர்
சீரிய பணிக ளாற்றும்
நாடிடும் மாந்த ருக்கு
நன்மைகள் செய்வர் இன்னோர்
வாடிடாப் புகழ் நிறைந்து
வாழ்வினில் உயர்வர் இன்னோர்
(85)
ஆவணி மாதம் தோன்றும்
அன்பர்நன் நேர்மை யாளர்
மேவுநற் பதவி தன்னில்
வீற்றிடும் அந்தஸ் துள்ளோர்
தேவநற் பண்பு பக்தி
சிறப்புளார் மற்றோர் தம்பால்
ஆவிடும் அன்பு காட்டும்
ஆன்றநற் பண்பின் நல்லார்
(86)
புரட்டாசி தனில் பிறந்தோர்
பாசமிக் குடையார் செல்வம்
திரட்டிடும் வெளிநா டேகும்
சீரிய பண்பு மிக்கார்
அருட்செல்வம் தேடும் மாந்தர்க்
கருந்துணை செய்யும் பண்பு
பெரும்புகழ் உடைய ராகப்
பார்தனில் வாழ்வர் மன்னோ
(87)
ஐப்பசி தனில் பிறந்தோர்
அரிய தன்னலத் திற்காக
ஒப்புடன் வாய்ப்பைத் தேடும்
உற்றதும் பற்றிக் கொள்வர்
செப்பரி தாக ஊக்கம்
காட்டிடும் செயல் களில்தாம்
ஒப்பியே தவறும் செய்யும்
உணர்வுடை யவராய்க் காண்பர்
(88)
கார்த்திகை தனில்பி றந்தோர்
கவனமாய்ச் செல்வம் சேர்ப்பர்
ஆர்த்து பெற்றோர்கள் தம்மை
அரவணைத் தன்பு செய்வர்
கூர்த்து எச்செயலும் செய்து
குவித்திடும் புகழும் வெற்றி
தேர்ந்த நற்செல்வ மானாய்ச்
சிறப்புடன் சகத்தில் வாழ்வர்
(89)
மார்கழி மாதம் வந்தோர்
மதிமிகு தெய்வ பக்தர்
சீர்மிகு பெற்றோர்க் கன்பர்
சற்குண வான்கள் மிக்கு
ஆர்வமாய்ச் செல்வம் சேர்ப்பர்
அரிதுயர் லட்சியம் கொள்வர்
பூரண மனத்தோ டன்பாய்
பொறுப்புடன் திகழ்வர் வாழ்வில்
(90)
தைதனில் உதித்த சான்றோர்
சகல நற்குணம் பொருந்தி
மெய்ந்நெறி நோக்கி ஏகும்
மேலவர் தொடர்பு கொள்ளும்
செய்தொழில் சிறக்கச் செல்வம்
சேர்ப்பர்பல் லோர்பு கழ்வர்
வையகம் தன்னில் இன்னோர்
வளமுடன் வாழ்வர் மன்னோ
(91)
மாசியில் பிறந்த மாந்தர்
மற்றவர் சொல்லை ஏலார்
நேசித்துத் தான்நி னைத்த
காரியம் முடிப்பர் தெய்வ
ஆசிகள் பெறுவர் மற்றோர்க்கு
அன்புடன் தொண்டும் செய்வர்
பூசிப்பர் இறையை ஞானம்
பெற்றுயர்ந் தோங்கும் அம்ம
(92)
பங்குனி பிறந்தோர் மற்றோர்
படுதுயர் சகியார் அன்பு
பொங்கிடும் நல்லார் நன்றே
புரிகுவர் சிந்தித் தெஃதும்
தங்கள் நற்குடும்பம் பேணும்
சகலர்க்கும் உதவி யாளர்
இங்கிதம் உடையார் மக்கட்
கினியராய் சிறப்பாய் வாழ்வர்
(93)
திதிகளின் பலன்கள்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பிரதமை திதியோர் திட்டமிட் டினிதே
பெரும்பணி இயற்றிட வல்லார்
இரக்கமும் ஈகை தயையுடை யவர்காண்
எத்திசைத் தேசமும் செல்வர்
பெருமதி யூகம் பொறுமை நிதானம்
பிறர்நன்றி மறந்திடா நல்லார்
பொருள்வச திகளும் புகழ்புரி திறமை
பெற்றவர் என்றினி தறிமின்
(94)
துதியையாம் திதியோர் தூநெறிச் செல்வர்
தவறிடா நேர்மையர் சான்றோர்
மதிமிகு வாக்குப் பலிதமும் உடையார்
மற்றவர்க் குதவிடும் நல்லார்
இதமிகு உழைப்பால் செல்வமும் சேர்ப்பர்
இங்கிதம் இரக்கமும் உடையார்
துதியெனும் புகழ்சேர் தூயவ ராவார்
சீர்மைமிக் குடையவ ராமே
(95)
திரிதியை திதியோர் செந்தண்மை இயல்பும்
தெய்வநற் பக்தியும் உடையார்
பெருமரி யாதை பெற்றவர் பிறரைப்
பேணிடும் கார்யசா தனையர்
பிரியமாய்த் தொண்டு தெய்வகைங் கர்யம்
புரிந்திடும் தூய்மையர் பலவான்
அரியநற் செயல்கள் நேர்மையர் த்வேஷம்
அற்றவர் இன்னவர் அறிமின்
(96)
சதுர்த்திதி தனிலே உதித்தவர் சகல
சாஸ்திர விற்பன்னர் ஆவர்
இதமுடன் மந்திரம் மருத்துவம் அறிந்தோர்
எப்பணியும் செய்ய வல்லார்
அதிஷ்டமும் தெய்வ அருளதும் உடையார்
அன்னிய தேசமும் செல்வார்
மதிநுணுக் கத்தார் மதிப்புடன் பொருளும்
முறையுடன் சேர்த்திடு நல்லார்
(97)
பஞ்சமி உதித்தார் பல்கலை வல்லார்
புராணங்கள் சாஸ்திரம் தெளிவார்
நெஞ்சகம் பூமி சொத்துகள் நினைந்து
நேரிய வழிகளைத் தேடும்
எஞ்சிடும் விசனம் திருப்தியில் நிலைமை
இதயத்தில் ஓவா திருக்கும்
பஞ்சணை சுகமே மிகவிழை பண்பர்
பாரில்உல் லாசப் பிரியர்
(98)
சஷ்டியில் வந்தோர் துணிச்சலும் கோபம்
தானுடை ஆண்மையர் நல்லார்
ஸ்பஷ்டமாய்ப் பிரபுத் துவமொடு புகழும்
பெரியவர் தனவான்கள் உதவி
இஷ்டம் கொண் டிருப்பர் ஆயினும் சோம்பல்
இயல்பின ராகவும் இருப்பர்
கஷ்டங்கள் வருங்கால் சலிப்புமிக் கடைவர்
கண்ணிய வானுமா யிருப்பர்
(99)
சப்தமி தனிலே பிறந்திடு மாந்தர்
சகலக லாவலர் ஆவர்
ஒப்பியே பெருமை புகழ்மிகப் பெருகும்
உயர்தர்ம சிந்தனை உடையார்
செப்பிய வண்ணம் செயல்புரி தன்மை
சொல்வன்மை யுடையவர் ஆயின்
எப்பிணியாலோ இடர்ப்பட நேரும்
இறைதயை உய்விக்கும் இவரை
(100)
அஷ்டமி தனிலே தோன்றுவர் அழகர்க்(கு)
அற்புத சந்ததி வாய்க்கும்
அஷ்டஜஸ் வர்யம் உடைவர் ஆவர்
அவமதிப் புகளும் நேரும்
கஷ்டங்கள் பிணியால் கடுந்துயர் உழக்கும்
கண்ணிய நிலையதும் உளதாம்
நஷ்டங்கள் வரினும் நல்லிறை பக்தி
நன்மை புரிந்திடும் இவர்க்கே
(101)
நவமியில் பிறந்தார் நல்லவர் வல்லார்
நாரியர் நாட்டமும் உடையார்
அவமதிப்(பு) அவஸ்தை அண்டிடும் இவர்கள்
அரிய நற்செயல்களும் புரிவர்
கவனமெக்காலும் காமுகத் திருக்கும்
கண்ணியப் புகழ் செயலுண்டு
சிவநெறி தனிலே சார்ந்திடில் இந்தத்
தீங்குகள் அகன்றிடும் மன்னோ!
(102)
தசமியில் உதித்தார் தயாளசிந் தையினர்
தான்வலிந் தனைவர்க்கும் உதவும்
இசைவுடன் தூய்மை விரதங்கள் பூஜை
இரக்கமும் தொண்டுளம் உடையார்
வசதிகள் வாய்ப்பு பணபலம் உடையார்
பந்துமித் திரர்களும் சுற்றம்
வசையிலா வாழ்வும் சிறப்புமிக் கவராய்
வாழ்வர்காண் இத்தினத் தினரே!
(103)
திதியது ஏகா தசியினில் உதித்தார்
தெய்வபக் திகல்வி கேள்வி
மதிநிறை ஞானி யூகமும் வசதி
வாக்குசுத் தம்உளார் எவரும்
மதித்திட நீதி மான்களின் தொடர்பும்
மகிழ்ச்சியார் வாழ்வினில் சிறப்பும்
இதமிகு வித்யா சிறப்பினை உடையார்
இங்கிதம் தெரிந்தவர் கேண்மின்!
(104)
துவாதசி பிறந்தோர் தயவு தாட்சண்யம்
தருமநற் குணங்களும் உடையோர்
அவாவுடன் ஈகை அருள்குண மிகுந்தோர்
அரியகா ரியங்களும் இயற்றும்
தவோன்னதர் சார்ந்து தெய்வநல் வணக்கம்
செய்பவர் மாட்சிமிக் குடையார்
திவாகரன் போல வாழ்பதி புகழச்
சிறப்பவர் என்றுரை சாற்றே!
திதிதிர யோதசி தனில்பிறந் துற்றோர்
(105)
செல்வங்கள் பெருகிட வாழும்
அதிபகை யுடையோர் அறமிலா நெறியில்
அவாவுடன் செல்வதும் இயல்பு
மதிப்பது வேண்டும் மந்த்ரதந் திரங்கள்
வகையறி இயல்பினர் இவர்காண்
அதிகம்பொய் பேசும் நெறியல்லா நெறியில்
ஆவல்கொண் டலைந்திடும் இன்னோர்!
(106)
சதுர்த்தசி உதித்தார் சுயநலம் தந்த்ரம்
தற்பெருமை மிக உடையார்
இதமிலாக் குணங்கள் இவரிடம் இருக்கும்
இன்னல்கள் பலபிறர்க் கீட்டும்
அதிகமுன் கோபம் அடுத்தவர் பொருள்பால்
ஆசைகொள் தன்மையும் இருக்கும்
மதிதனில் சூழ்ச்சி மற்றவர் பகையும்
மிக்கிருக்கும் இவர் பாலே
(107)
அமாவாசை திதியில் அகிலத்தில் போந்தோர்
அதிகவர்ச் சியுடன் பேசும்
தமைப்பகட் டான தோற்றத்தில் காட்டும்
தடையின்றிப் பொய்பல மொழியும்
அமைதியில் நெஞ்சர் ஆற்றிடும் பணியில்
அதிதிறன் காட்டியே கவரும்
தமர்பிறர் எண்ணார் தன்பொருள் தேட்டம்
சிந்தையில் உடையவர் காணே.
(108)
பூரணை நாளில் பிறப்பெடுத் தோர்கள்
மனம்உடல் நலமிகப் பேணும்
சீருடை நட்பு திறன்மிகு நுட்பம்
செப்பிடும் வாய்மையும் கொள்வர்
பேரிறை பக்தி பெருஞ்செயல் நாட்டம்
பெருந்தகைப் பண்புகள் உடையர்
ஆர்ந்திடு நீதி அவருளத் திருக்கும்
அன்புநற் பண்புகள் மிளிரும்
(109)
கரணங்களின் பலன்கள்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பவக ரணம் ஜெனித்தோர்
பான்மைசிக் கனமும் உள்ளோர்
சிவபக்தி குறைவு தீமை
செய்திடத் தயங்கார் பல்கால்
அவமதிப் படைவர் சோர்வும்
அதிகமாம் மறதி யுள்ளார்
தவத்தினர்ச் சார்ந்தால் பாவம்
தீர்ந்திடும் நலமே சேரும்
(111)
பாலன கரணத் தோற்றம்
பண்பினர் கல்வி கேள்வி
சீலமாம் மதிநன் நுட்பம்
திறனுளார் பதவி பட்டம்
மூலமெய்ஞ் ஞானம் மேன்மை
மெல்லிசைத் திறனு மிக்கார்
ஞாலத்தில் கவிசெய் ஆற்றல்
நன்குளார் அறிமின் மன்னோ
(112)
கௌலவ கரணத் தார்கள்
கண்ணியர் பொருள்தேட் டுள்ளோர்
சௌகர்ய வாழ்வு திருப்தி
சகலர்க்கும் உதவும் பண்பு
செவ்வையாய்க் கார்யம் செய்யும்
திருநிறை ஆற்றல் அன்பில்
ஔவைபோல் அனை வருக்கும்
அருள்செயும் அறமார் பண்பு.
(113)
தைதுலை கரணத் தோர்கள்
தருமநற் குணங்கள் மிக்கார்
எய்திடும் மகிழ்ச்சி இன்பம்
இனிதனை வர்க்கும் ஈகை
உய்கதி தன்னில் பற்று
உயர்ந்த மெய்த் திறமும் நேர்மை
மெய்வழி சார்ந்தால் மிக்க
மேன்மையும் அடைவர் மன்னோ!
(114)
கரசையாம் கரணத் தோற்றம்
கடவுள்பால் பக்தி பூணும்
பெரும்புகழ் அடையும் வாழ்வில்
பேணிடும் பிறர்க்குத் தொண்டு
அருமைப் பெற்றோர்க்கு அன்பு
அயலவர் தம்பால் நேசம்
உரமிக உடல்வா குள்ளார்
உத்தம ராவர் மன்னோ!
(115)
வணிசையாம் கரணம் வந்தோர்
வாக்கு சாதுர்யம் அன்பு
அணிபுனை தோற்றம் பெண்ணார்
ஆசைமிக் குடையார் மேலும்
துணிவுடை யாராம் மற்றும்
ஜகஜாலத் திறனும் உள்ளார்
பிணியகல் வாழ்நாள் பெற்ற
பேரினர் அறிக மன்னோ
(116)
கிம்துஷ் கினாம்க ரணம்
கவலை தோய் உணர்வுமுள்ளார்
செம்மைசார் நண்பர் பல்லோர்
தீச்செயல் புரியும் எண்ணம்
தம்செயல் அவச ரத்தால்
சிற்சில அவம திப்பும்
செம்பொருள் இறைசார்ந்திட்டால
தீப்பலன் விலகும் காணே!
(117)
பத்திரை கரணத் தார்கள்
பக்தியும் வாய்மை தூய்மை
மெத்த செல்வாக்கு நேர்மை
மேன்மையாம் லட்சி யங்கள்
உத்தம நீதி எண்ணம்
உதவிகள் பிறர்க்குச் செய்யும்
சித்தமெய் உடையா ரென்று
செப்புதும் உலகி னோர்க்கே!
(118)
சதுஷ்பாத கரண மாந்தர்
சற்குண சீலர் செல்வர்
அதிர்ஷ்ட மிக்குடையோர் தேக
ஆரோக்கியம் இனிது பெற்றோர்
எதிலும்நன் னோக்கி னோடு
இயல்வன செய்யும் தன்மை
புதியநற் செல்வம் பொங்கப்
புரிவர்நற் செயல்கள் மன்னோ!
(119)
சகுனியாம் கரணத் தோர்கள்
துர்க்குணம் கெட்ட சேர்க்கை
வெகுளியாம் குணமும் மிக்க
முரடராய் விளங்கும் மற்றும்
மிகுமற தியதும் வெய்ய
பாபகிருத் தியங்கள் செய்யும்
அகம் வருந் திடுவெம் பாவ
அழிசெயல் புரிவர் மன்னோ!
(120)
நாகவே கரண மாந்தர்
நற்பணிச் செல்வச் சேர்க்கை
தேகஆ ரோக்யம் மெய்யைச்
செப்பிடும் உயர்ந்த பண்பு
ஆகுலட் சுமிக ரத்தோர்
அறஞ்செயல் புரியும் வேட்கை
பாகமாம் அதிர்ஷ்ட மாந்தர்
என்றுரை பகரும் மன்னோ!
(121)
யோக பலன்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விஷ்கம்ப யோகம் மேவிய மாந்தர்
மிகுவண்டி வாகன யோகர்
இஷ்டமிக் குற்றார் இன்னோர் என்றும்
எதிரியை வெல்திற னுடையார்
நஷ்டமில் லாத நல்வள வாழ்வு
நன்கியற் றிடுதிறன் உடையார்
ஸ்பஷ்டமாய் மாந்தர் பாராட்டு பெற்று
இன்பமாய் வாழ்ந்திடு வார்கள்
(122)
பிரீதியோ கத்தில் பிறந்தோர் சற்குணங்கள்
பெற்றிருப் பார்மதி நுட்பம்
நீதியாம் எண்ணம் நிஜமுக தைரியம்
நேர்மையாம் செயல்களும் உடையார்
ஆதியாம் பெற்றோர் தமைமிகப் பணிவர்
அறநெறி இதயத்தில் இயங்கும்
மேதினி தனிலே மிக்குயர் சிறப்பு
மென்மைசார் இயல்பினர் இவர்காண்.
(123)
ஆயுஸ்மான் யோகம் அடைந்தவர் தாங்கள்
அற்புத நற்குண முடையோர்
தீயவை நன்மை தெளிந்தவர் நன்றே
சுகமிகு வாழ்வுடை யோர்கள்
ஆயுளின் பலமும் ஆரோக்கியச் சிறப்பும்
அகந்தெளிந்(து) உறைபவர் இவர்கள்
நேயமோடு அனைவர் போற்றிட வாழும்
நற்சிந்தை யோக்கியர் இவரே!
(124)
சௌபாக்ய யோகச் சற்சனர் தாங்கள்
சுகமிகு ஜீவனம் உடையோர்
சிவபக்தி செல்வாக் கினொடு புகழும்
சார்மதப் பற்றுடை யோர்கள்
நவநிதி நிறைந்து நன்குநல் வாழ்வில்
நல்லவர் நட்பொடு வாழ்வர்
பவப்பிணி தீர்க்கும் பரமரைத் தேடும்
பாக்கியம் இன்னவர் உடையர்.
(125)
அதிகண்ட யோகம் அடைந்தவர் எளிதில்
அரும்பொருள் சேர்ப்பவர் ஆவர்
நிதிகொண்ட அவர்கள் உறவினர் பேணி
நற்றலை மைத்தனம் பெறுவர்
மதிமிக வுடையரவர் வாழ்வினில் நல்ல
மாண்புடைச் செயல்களே செய்வர்
இதமிகு மவர்கள் சிக்கனம் உடையார்
என்றும் குன்றாநிலை எய்தும்
(126)
சோபன யோகர் சாமர்த்யம் நல்ல
சற்குணம் உடையவர் அறிமின்
பூபதி வாழ்வில் சங்கடம் பிரச்னை
பேதமில் லாமலே வாழ்வர்
ஆபத்துவரினும் அரிய சூதானத்
தாலவை வென்றினி துய்ய
மாபதி இறைவர் வழிபடல் யாத்(தி)ரை
மனமுவந் தியற்றிடும் இவரே!
(128)
சுகர்ம யோகத்தோர் சுகம்குறை யாதோர்
சுத்தர்கள் புத்திமான் காண்மின்
சகல லாபங்கள் சற்சனர் சேர்க்கை
சார்ந்தவர் வாழ்ந்திடு நிலையர்
புகழ்மிக வுடையார் பொன்னெனு மனையாள்
பொருத்தமா யனமந்திடப் பெறுவர்
தகவுடை வாழ்வில் சீருடை யவராய்ச்
சகத்தினில் வாழ்பவர் இவர்கள்
(129)
திருதியோ கத்தார் துன்மார்க்கச் செயல்செய்
துணிவொடு முனைந்திடு குணத்தார்
பெரிதிவர் தமது சுயநலம் தேடும்
பிரச்சினை தனைமிகச் செய்வர்
அரிதிவர்க்கு அடுத்தார் அடைநலம் புகழ்கண்டு
அகம்கடுத் திடும்இயல் புடையார்
கருதிடும் எண்ணம் கபடுடை தன்மை
காண்பதற் கினியர்போன்ம் திண்மை
(130)
சூல யோகத்தோர் சுபாவம துரைக்கில்
அடம் முரட்டுத்தனம் வாதம்
கோலமாய்த் துஷ்ட தேவதை வணக்கம்
கொண்டவர் வன்மையர் இவரே
ஏலதந்திரமாய் எதிரணி தோற்க
இயல்வது புரிதிறம் உடையார்
தூல முள்ளவரை சுயநலத் தேட்டம்
சொற்புத்தி நற்புத்தி கேளார்
(131)
கண்டயோ கத்தார் கடியவர் கோபி
கருதிடார் குடும்பப் பொறுப்பு
விண்டசொற் சோர்வு ஞாபக மறதி
மிகவுடை யவரிவர் காண்க
கண்டவர் அஞ்சி நடுங்கியோ டிடுமே
கோபமிக் குடையவர் இவரே
அண்டிடார் எவரும் இவரரு கினிலே
அத்தகு பண்புளார் ஆவர்.
(132)
விருத்தியோ கத்தார் விஷய மெய்ஞ்ஞான
வித்தகர் ஆவரென் றறிமின்
கருத்தினில் தெளிவும் கல்விநற் றிறனும்
கலைபல தெளிதிறன் உடையார்
பொருத்தமாய் நல்ல நட்புடை யவராய்
பெருந்தகைத் தன்மையும் உடையார்
திருத்தமாய் மறைகள் தெளிவுசொற் பொழிவு
செய்பவர் இன்னவர் அறிமின்.
(133)
துருவ யோகத்தார் துதிமிக உடையார்
சுகமிகு வாழ்வமை நல்லார்
பொருள்மிக வசதி யுடையவர் புண்யம்
புரிந்திடும் நல்லவர் இனியர்
அருமையாய்க் கார்யம் ஆற்றிடும் திறனார்
அன்புயர் பண்பினர் வல்லார்
திருமிக வுடையார் செல்வம்சீர் சிறக்கச்
சகத்தினில் வாழ்பவர் இவர்கள்
(134)
வியாகாத யோக மாந்தர்கள் துணிவு
மிகவுடை யாரெனும் தோற்றம்
நயமிலாக் குதர்க்க வாதிக ளிவர்கள்
நற்குணம் அற்றவர் தெளிமின்
இயல்பாய் எவரையும் பகையெனக் கொள்ளும்
இயல்பினர் இன்னவர் காண்மின்
துயர்தனக் கிவரே உறவினர் ஆவர்
செப்பிடில் நெஞ்சமும் உருகும்
(135)
ஹர்ஷன யோகர் காரியம் எதையும்
கருத்துடன் ஆற்றிடும் சொர்ண
வர்ஷிப்பு இவர்க்கு வாய்த்திடும் செல்வம்
மிக்கவர் வாழ்வினில் லக்ஷ்மி
தர்ஷனம் பெற்றார் எனத்தகும் நல்லார்
தகைமிகு நூதனச் செயல்கள்
கரிசன மாய்த்தம் பணிகளைச் செய்வர்
கனதெளி வுடையவாழ் வினர்காண்
(136)
வச்சிர யோகர் வான்பொருள் பொன்னும்
மனைநில புலன்நிறை வசதி
உச்சமாய் தான்ய தனநிறை பலமும்
உடையவர் துணிவுடை ஆற்றல்
நிச்சய மாகப் பெற்றுயர் வாழ்வில்
நாரிய ராசையும் மிக்கார்
மெச்சுசா தனைகள் வெல்நிறை ஆற்றல்
மதிப்புகள் சமூகத்தில் நிறையும்
(137)
சித்தியோ கத்தார் சீர்புகழ் பெறுவர்
தன்னடக் கமும்தன் மானம்
முத்திய ளிக்கும் முழுமுதல் பால்மிக்(கு)
அன்பினர் நன்றியும் மறவார்
வித்தகம் விசுவா சம்மிக வுடையார்
வியத்தகு நற்குணம் மிக்கார்
சித்தம் சிவன்பால் வைத்திடும் சீரோர்
ஜெயமிகு வாழ்வினில் வாழும்
(138)
விதிபாத யோகர் விபரீதச் செயல்கள்
வஞ்சகம் மிக்குடை வாழ்வில்
மதியாத தன்மை மற்றவர்க் கிடர்கள்
விளைத்திடும் விஷமிகு தன்மை
கதிதீது வருதல் கருதிலார் பிறர்பால்
கருத்துவேற் றுமைமிக வுடையார்
முதியோர்கள் மற்றோர் ஏச்சுபேச் சுகட்கு
மிக்கிடம் கொடுப்பது இயல்பாம்
(139)
வரியான்யோ கத்தார் வஞ்சகர் முரடர்
வாழ்வினில் சுயநலம் பேணும்
சரியான சொத்து தன்னாலே பகைமை
தன்பெற்றோர் உறவினர் பாலும்
பெரிதான பகைகள் பெற்றிடும் இவர்கள்
பிரச்சினை தீர்வதில் லார்கள்
உரித்தான குடும்பம் தனிலும் ஒவ்வாமை
உடையவர் அவமதிப் படைவர்
(140)
பரிகத்தார் தீய பற்குண முடையார்
பண்பிலா செய்கைகள் செய்வர்
அரிதாம் ஒற்றுமைதான் அணுவும் இலாதார்
அனைவரின் பகைகொளும் மன்னோ
சரியென உலகோர் சாற்றுதல் மதியார்
தன்மனம் செல்படி செய்வர்
பெரியோர்தம் ஆசி பெற்றிவர் உற்றால்
பெரும்பதம் வாழ்வதும் பெறுமே
(141)
சிவயோகம் உடையார் சிந்தையில் என்றும்
சிவபதம் அடைதிறன் நிறைவும்
எவர்பாலும் என்றும் இணக்கமும் இரக்கம்
ஈகையும் இலங்கிடும் மாந்தர்
தவமார் மெய்ஞ்ஞானம் தான்பெறு வேட்கை
திருவுயர் மாட்சியர் செல்வர்
துவளாத ஊக்கம் தொடர்ந் துடையாராய்
தூய்மதி நன்மைகள் விளங்கும்
(142)
சித்தயோ கத்தார் தெய்வநன் நாட்டம்
சொற்றவ றாமையும் தெளிவும்
சுத்த நாணயமும் சான்றோர்தம் நேசம்
சற்குரு பக்தியும் உடையார்
சொத்துகள் உடையார் சுகமதும் அடைவர்
தீங்கிலா நடக்கைகள் கொள்வர்
மெத்தநற் குடும்ப மேன்மையும் உடையார்
மாந்தரிற் சிறந்தவ ராமே!
(143)
சாத்திய யோகச் சான்றவர் சகல
வித்தையும் தேர்ச்சி பெற்றவர்கள்
மாத்திற வித்வான் மாண்புநன் மனையாள்
வசீகரம் உடையவர் ஆவர்
சாத்திரப் பயிற்சி சற்குரு தயவு
ஸ்திரமிகு செல்வமும் உடையார்
மீத்திறன் உடையார் யாத்திரை செல்வார்
மகிழ்வுறு வாழ்வினில் திகழ்வர்
(144)
சுபயோ கத்தார் சுத்தநற் குணத்தார்
தோற்றம் வசீகரம் உடையார்
தபோபல முடையார் தயவினைப் பெறுவர்
சகலர்க்கும் இனிய வராவர்
உபவருமானப் பொன்பொருள் சேர்க்கை
உடையவர் பெண்நயப் புடையார்
சுபபலன் எதிலும் சிறந்திட வாழ்வர்
தெய்நற் றயவுடை நல்லார்.
(145)
சுப்ரம யோகர் தருமநன் மார்க்கர்
சரியெனும் செந்நெறி யாளர்
எப்பொழுதும்நல் தானங்கள் ஈந்து
இனிதுநல் வாழ்வினில் சிறப்பர்
துப்புடை வித்வான் சீர்பிர சங்கி
திறமையும் கோபமும் உண்டு
மெய்ப்பொருள் ஞான விழைவினர் தெய்வ
வரம்பெறு மாட்சியர் இவர்காண்
(146)
பிராமிய யோகர் பிதுர்தன நாசர்
ஆயினும் பெருங்குண முடையார்
தராதரம் தெரிந்த தாராள மனத்தார்
சோம்பலும் மறதியும் உடையார்
பரோப காரம் புரிபவர் இயலும்
பண்ணிசை கேளிக்கைப் பிரியர்
இராது நற்றொழிலில் வாய்ப்புகள் எனினும்
ஏர்புகழ் வாழ்வுறு வார்கள்
(147)
ஐந்திர யோகர் அனைத்துநற் கலைஞர்
அதிகாரம் பெரும்புகழ் அடைவர்
மைந்துடை மாதர் பால்நயப் புடையார்
மனமிகக் கருணையும் மிக்கார்
நைந்தவர்க் குதவி நன்கினி தாற்றும்
நற்பரோ பகாரம் உடையார்
முந்துறு சமூக மதிப்புடை யவராம்
மூதறிஞர் தொடர் புடையார்
(148)
வைதிரு தியோ கத்தினர் தன்னை
மிகப்புகழ் பண்பினர் மற்று
எய்திடு ஆடம் பரமிக வுடையார்
எவரையும் அலட்சியம் செய்வர்
செய்யுயர் தர்ம கார்யமும் ஆற்றும்
சற்றும்கூச் சம்மிலா இயல்பும்
துய்யவ ரெனினும் துர்க்குணச் செய்கை
சேர்ந்தவ ராகவே திகழ்வர்
(149)
தாக்கம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விண்ணத்துக் கோள்மீன்கள் லக்னம் ராசி
விளங்கியங்கு உள்ளதெல்லாம் மனுவின் தேகம்
மண்ணகத்து உலவிடுநாள் தொடரும் பாகம்
வரைந்துளர்கள் கணிதவலார் தெளிவாய் இஃதை
எண்ணம்சொல் செயல்யாவும் இறைபால் சாற்றி
எனதில்லை நினதருளே என்று தீர்க்க
வண்ணமுற வாழ்வார்க்கு நாள்கோள் தாக்கம்
வாராது இறைதயவே வயங்கும் மன்னோ!
(150)
அண்டத்துக் கொத்தது பிண்டம்
அண்டத்துக் கொத்ததுவே பிண்டம் என்பர்
அனைத்துக்கோள் தாரகைகள் லக்னம் ராசி
பிண்டத்தில் அங்கங்கள் அனைத்தும் ஆகும்
பெரிதுதெளிந் தறிந்துணர்ந்து தெய்வம் சார்ந்தால்
விண்டந்த வினைகடத்தி மெய்ம்மை கூற
வெய்யஎமன் வாதனையைத் தவிர்த்து வீடு
கண்டொத்துக் கதிபெற்று உய்யச் செய்வர்
காருண்யர் கழல்பற்றி உய்க மன்னோ!
(151)
பொய் ஜோதிடம்
கணிதஜோ திடரென்று கூறிக் கொண்டு
கணக்கறியார் ஜோதியதும் காணா மாந்தர்
அணிதிகழும் அரன்பக்தி அணுவு மில்லார்
அனைத்தையுமே தெரிந்தவர்போல் நடித்துக் கொண்டு
துணிந்தேபொய் கூசாமல் நற்ப லன்கள்
சொல்லிபொருள் காணிக்கை கேட்டுப்பெற்று
தணியாத தீராநோய் சாபம் கொள்வர்
தாரணியில் நடக்கு திங்கன் என்சொல்கேனே!
(152)
அரிதான கோள்நிலையும் சார்பும் வீடும்
அறிந்துணர்ந்து தெளிவாகப் பலன்கள் கூறத்
தெரியாதோர் ஜோதிடராய்த் தம்மைக் கூறி
தீமைகளை விலக்கிடுவேன் வம்மின் என்று
பரிகாரம் செய்வனெனப் பணம் பறிக்கும்
பாவிகளைப் பாருலகோர் நம்பி மாயும்
அரியயனும் அரனுமொரு உருவாய்வந்து
அவதரித்த இறை சார்ந்தோர் உய்வர் காண்மின்
(153)
ஜோதிடம் நன்குரைப்போர்
ஆதியிறை அடிபணிந்து அருளை வேண்டி
அருளுகஎன் நாவிலென் றடிப ணிந்து
ஜோதியதின் திடமறிந்து சுத்த பக்தித்
திறனுடனே கிரகநா யகர்கள் தம்மை
நீதியுடன் மரியாதைப் பன்மை சேர்த்து
நன்கவர்கள் தமைவணங்கிப் பேதமின்றி
மேதினியில் ஆய்ந்துரைத்தல் நன்றாம் என்று
மிக்கினிமை பொங்கிவரச் சாற்றும் காணே
பாட்டுடைத்தலைவர் பரந்தாமர் போற்றி
(154)
கலித்தாழிசை
தாய்தந்தையில் தனயாஓரு தனியானமெய் யிறையே
தரணிதனில் அவதாரமே யுகத்தீர்ப்பது செயவே
வாய்கொண்டுரை வயதிற்கள விலையேபுது யுகமே
வருவித்திட அருள்வித்தெமை யுகவித்தெனத் தெளியும்
தூய்மெய்ம்மதி மணியே!உமைத் தொழுதோர்இனி இறவார்
திருமாவரம் பெறுவாரவர் அமராபதி உறைவார்
ஆய்மெய்ந்நிலை அறிவாரவர் அழியாநிதி பெறுவார்
அறவாழியர் அமுதம்தரு எமதாண்டவர் அறிமின்!
(155)
ஆதித்திரு நாள்குக்குட மதுகூவிடு வேளை
அதுவேஉஷைக் காலம்மென அறைவர்கணி நூலோர்
நீதிக்குரு ராசிக்குடை தெய்வத்திரு லக்னம்
நித்யத்தவ யோகம் உயிர் மரணம்தவிர்கரணம்
வேதத்திரு மார்க்கச்சிர மாதம் மதின் கடைநாள்
மெய்வந்தனிர் தைவந்தது உய்வுற்றது உலகே
சாதிக்குரு ஒரைக்கிர கம்மொன்பதும் உச்சம்
தவமேருவே புகழோதிடத் திறமேதெனக் கரசே!
(156)
கலைகள்தமின் முதலேவய ததுஏழினில் அட்ச்ரம்
கற்பித்தனர் வயதொன்பதில் மறிமேயத்தது தொழிலே
நிலையாம்தொழில் உழவேறுகோல் பதினாறதில் தொடரும்
நல்இல்லறம் ஐயைந்தினில் நடந்தேறிடு காலம்
வலமேறிடு நெல்வாணிகம் செல்வம்மது நிறைவே
வருமெய்க்குரு தனிகைத்திரு வள்ளல் தமின்இணைவே
உலகுய்ந்திடத் துறவேற்றது மூவொன்பதில் குருவின்
உடன்சென்றனிர் அறவாழியுள் ஆழ்ந்தீர்தவ மணியே!
(157)
குருவாணையால் மறிமேய்த்தனிர் குலமெங்களை மேய்க்க
குன்றேபரங் கிரியேகினிர் தவமோ நெடுங் காலம்
திருபன்னிரு தவ சன்னதம் அருள்மெய்க்கரத் தேற்றீர்!
தனிகைதரு கனியே! அருட் பிரசங்கமும் ஆற்றும்
அருட்சீடர்கள் அணுகும்கொடு அரக்கர்குலம் இடறும்
அதைவென்றுமே மதுராபதி திருஆலயம் இயற்றும்
வருஆங்கிலம!பெரும்போர்க்கள மதற் காலயம் விழைய
வழங்கிப்புது மைக்கோட்டையின் மலைஊறைலைச் சார்ந்தீர்!
(158)
வழியாம்மெ(ய்)யின் சாலைக்குடில் மண்ணாலியற்றினிரே!
மதிவானிதி திருஆலயம் கதவேஇலை நிலையே!
கொழிதீர்க்கமார் தரிசிக்குவை பொழியும்வரு நிகழ்வை
கொண்டல்திரு வாய்மை அமு தம்பொங்கிடு காலம்
மொழிவான்தமிழ் பொலிமாமறை துலங்கும் வசந்தங்காண்!
முனிமாதவர் பலர்சீடராய் வருகைதரு கோலம்
அழியாவரம் பெறவந்தனர் அனைத்துமத குலமே!
அறிவோர்நிறை திருஆலயம் அறவாழியின் தலமே!
(159)
மறலியமல் தனைவென்றிடு மதிமாதவர் பதியே!
மனுவின்குல மனைத்தும்உயும் வழிமெய்யிது கதியே!
துறவோர்வணங் கிடுவேதியர் சுரர் போற்றிடு மதியே!
திருவுள்நிறை கன்னிவிராட் தவம்ஊழியின் விதியே!
மறவாதவர் அனந்தாதியர் வணங்கும்பெரு நிதியே!
வரமேதர பெருகிவழி அருள்வெள்ளமார் நதியே!
அறவாழியே! அமுதே!உயிர் அன்பே!புகழ் சாற்றும்
அரசேதவ முரசே!உயிர்க் கணியேபதம் போற்றும்.
(160)
மறையாவுமே தெளிவாகிட வரையும்புது வேதம்
மணிவாணியர் மகிழ்வெய்திடப் பொழியும் தவநாதம்
குறையேகெட கொழிமெய்ம்மொழி கனிபூங்குயில் கீதம்
கோதற்றவர் வேதக்கிளி கொஞ்சும் தவ நீதம்
அறவோர் பணி அழியாநிதி அமுதர்பதி பாதம்
அணிவோர்மதி தெளிஞானமார் அருளின்பிர சாதம்
திறமோங்கிடு அனந்தாதியர் சிந்தைகனிந் தோதும்
தெய்வக்குல முழுதும்பே ரின்பம்அலை மோதும்
(161)
கலியன்கெடச் செயுமெய்வழி இறைவர்திரு ஆற்றல்!
கர்த்தாதியர் கர்த்தர்குலம் கழறும்புகழ் ஏற்றல்!
வலியார்க்கெலாம் வலியன்எமன் பயம்தன்னையே மாற்றல்!
மன்னும்உயிர் தன்னின்இறை பதமாமலர் போற்றல்!
நலியாதவர் நமனார்க்கினி நமர்அனந்தா தியரே!
நாட்டம் இறை நற்றாள்துணை நமக்கேஇலை துயரே
ஒலிவாயலில் நமையீன்றவர் ஏற்றும்உயிர்ப் பயிரே
உத்யோவனந் தவச்சாலையர் எமதாருயிர்க் குயிரே
(162)
மணியேமணி ஒளியேஇசை மணிநாதமே விஞ்சும்
மறையோதிடு அனந்தாதியர் வண்ணக்கிளி கொஞ்சும்
அணிவோம்சிரம் அண்ணல்பதம் அறமேதவழ் மஞ்சம்
அபரஞ்சியின் ஒளி நாணிடு அழகார்எழில் கஞ்சம்
பிணியாவது மரணம் அது இனியேதெமை அஞ்சும்
பிறவாநெறி இறையேதரும் பேரின்பமே மிஞ்சும்
பணியாவது அரனார்பதம் பணிகின்றது நெஞ்சம்
பரமேசர்மெய் வழிஆண்டவர் பொற்பாதமே தஞ்சம்
(163)
கோள்கள்இனி தியங்கும்செயல் கோமான்இறை தயவே
கொற்றம்இறை செங்கோல்தனின் குடிமக்களும் அவையே
நாள்களெலாம் நன்னாளெனும் நாதர்பதம் பணியில்
நம்மாருயிர்க் கினியில்லையே நமன்கைப்பிடி அணியில்
ஆள்கொண்டெமை அருளால்வளர் அன்பேசிவம் ஆனார்
அஞ்சேலெனத் தஞ்சம்அருள் நெஞ்சம்தரு கோனார்
தாள்கண்டவர்க் கினியில்லையே துயரம்எனு நீதம்
தவமாதவர் எழிலார்திரு அருள்பொங்கிடு பாதம்
(164)
கோள்கள் நல்லனவாக வேண்டல்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
வேண்டுதல்
அணிதிகழ் பொன்னார் அரங்கர்மெய் வழியெம்
ஆண்டவ ரேதஞ்சம் தஞ்சம்
பிணிகொடுந் துன்பம் புரிந்திட தவித்தேன்
பேதையான் அடைக்கல மானேன்
மணிமொழித் திருவாய் மலர்ந்தெளி யேற்கு
வரந்தா வேண்டிநின் றுருகும்
அணிதிகழ் ஒன்பான் கோள்தரும் நலமே
அளித்திட வேண்டினேன் அரசே!
(165)
ஆய்கலை வல்லார் திருவுயர் எங்கோன்
அனந்தர்கட் காருயிர் தேவே!
தாயினும் மிக்க தயவுடை இறையே!
தாள்மலர் சிரம் பணிந்தேத்தும்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதனும்
குருசுக்ரன் சனியர விரண்டும்
ஆயின ஒன்பான் கோள்களும் நல்ல
ஆண்டவர் சந்ததிக் கினிதே
(166)
தூயமெய்த் திருவார் பனிமதி அன்னை
துங்கநற் பங்கர்மெய் வழியார்
நேயர்பொன் னரங்கர் சாலை ஆண்டவர்கள்
நற்பதநிழல் படிந்தோர்க்கு
ஞாயிறுமுதலாம் ஒன்பது கோள்கள்
நல்லன நல்லன வாகும்
சேயெனைக் காப்பீர் திருவடி தஞ்சம்
தெய்வமே! அடைக்கல மானேன்
(167)
அன்பது கொண்டு அடைக்கலம் புக்க
அடியவர்க் கருண்மழை பொழியும்
பொன்பது மத்தாள் பூட்டினம் சிரமேல்
பொன்னரங் கென்னுயிர்க் கரசே!
ஒன்பது கோள்கள் இன்பது வழங்கும்
உத்தமர் அனந்தர்சந் ததிக்கே!
தென்பதும் நலமும் தந்தினி தாள்க
தெய்வமே! தஞ்சம்நும் தாள்கள்!
(168)
வழிவழி என்பர் வியன்புவி யோர்கள்
வினைவிளை ஒன்பது கோள்கள்
பதியும தருட்தாள் படிந்தவர்க் கினிய
பலன்தர லாகிட வேண்டும்
கதிபிறி தில்லை காத்தருள் புரிவீர்
காணுமுத் யோவனத் திலங்கும்
அதிபதி சாலை ஆண்டவர் நும்தாள்
அடைக்கலம் ஆயினன் அம்மா
(169)
செஞ்சொல்வா ரிதியே திருவருள் துரையே!
சிந்தை நொந் தலமரு கின்றேன்
பஞ்சின்மெல் லடியென் சிரமிசைப் படிய
பவவினை கெடவர மருள்வீர்!
அஞ்சினேன் கோள்கள் அமல்தமக் கன்னாய்!
அவைநல்ல நல்லன வாக
குஞ்சித பாதம் குறுகினேன் தஞ்சம்
குலதெய்வ மேசாலை அரசே!
(170)
பைந்தமிழ்ப் புவியில் அவதரித் தனந்தர்
பணிந்திடத் திடம்தவத் தரசே!
ஐந்தோடு நான்கென் றாகிய கோள்கள்
அவைநலம் பலன்தர அருள்வீர்!
நைந்திடும் உளத்தேன் நற்பதம் பணிந்தேன்
நாதிநீ ரன்றியார் அரசே!
உய்ந்திடத் திருவுள் இரங்கிட விழைந்தேன்
உத்தமா! மெய்வழித் தேவே!
(171)
விஞ்சிடும் ஒன்பான் கோள்களின் வினைகள்
வினைதுயர் தரத்தவித் தடியேன்!
அஞ்சினேன் எளியேன் அடைக்கல மானேன்
அவைநலம்தர அருள் புரிவீர்!
பஞ்சின்மெல் லுளத்தேன் பொன்னரங் கையா
பதமலர் படிந்தனன் சாமி!
எஞ்சுவ தெதுகாண் கதிபிறி தில்லை
எனக்கரும் துணைதரும் தேவே!
(172)
வாடினேன் பிணியால் வருந்தினேன் சாமி
வினைசெயும் கோள்அமல் தவிர
நாடினேன் நின்பொற் றாள்மலர் தஞ்சம்
நற்றவா அவைநலம் தருக
தேடினேன் தங்கள் திருவருள் ஒன்றே
திரவியம் எளியனேற் கரசே!
ஆடிய பாதம் அடைக்கல மானேன்
அருள்மொழி மெய்வழித் தேவே!
(173)
என்னையும் பொருளாய் ஏன்றுகொண் டெளியேன்
இடர்பிணி தவிர்த்தருள் சாமி!
நன்னலம் தருக ஒன்பது கோள்கள்
நமன்துயர் தவிர்த்தருள் புரிக!
நின்னைவந் தடைந்தேன் திக்குவே றில்லை
நின்பதம் சிரமிசை யணிந்தேன்!
பொன்னரங் கையா! மறலிவெல் கையா!
போற்றினேன் மெய்வழித் தேவே!
(174)
எண்சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
கிரேதாயு கம்திரேதா யுகமும் மற்றும்
துவாபரமும் கலியுகமும் சதுர்யு கம்ஆம்
வரோதயர் நான்குயுகங் கட்கும் யாண்டு
வகுத்துரைத்தார் இருபத்தெண் சதுர்யு கம்ஆம்
பராபரன் உரைவண்ணம் கடைக்க லியாம்
பாரினிலே பரமேசர் அவத ரித்து
தராதரமாய் நரர்மனுவை அமரர் ஆக்கும்
சீர்திறத்தைச் சிறப்பினையான் என்சொல் வேனே!
(175)
ஆழிவாழ் ஐயரிங்கு அவத ரித்து
அருள்பொழிய இருளழிய அறம்து லங்க
ஊழிநடத் தெம்பெருமான் அந்நாட் டிற்கு
யுகவித்தாய்த் தேர்ந்தெடுத்துச் சாலை நாட்டில்
பூழியர்மெய்ப் பாண்டியராம் பொன்ன ரங்கர்
பொற்பதியுட் புகுவிக்கும் வசந்தம் இஃதே
வாழியவர் தாள் படிந்தோர் என்றும் மெய்ம்மை
வளம்பெருக ஊழுழி வாழ்வர் தாளில்
(176)
காலத்தின் கிரகங்கள் நியதி வண்ணம்
கடமைதனை அணுப்பிசகா நடத்து சாலை
கோலமனுக் கடன்மறந்த தாலே ஒன்பான்
கோளமலால் நல்வினைக்கும் தீவினைக்கும்
ஏலதொரு காரணமாய் இயங்கும் ஆயின்
எம்பெருமான் சாலைவள்ளல் பொன்னரங்கர்
ஆலமுண்ட கண்டரடி பணிந்த பேர்க்கு
அவைதுணையாய் நலம்புரியும் அறிமின் மன்னோ!
(177)
- மெய்வழி பக்தி இலக்கியங்கள்
- மெய்வழி அடியார்களின் படைப்புகள்
- சமய இலக்கியம்
- அகரமுதலான வரிசையில் படைப்புகள்
- இறையியல்
- சிற்றிலக்கியங்கள்
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
- கவிதைகள்
- திரட்டு நூல்கள்
- 2017 படைப்புகள்
- பாடல்கள்
- தற்கால புலவர்களின் படைப்புகள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்