திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/033.தெய்வ காப்பியம்
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
33. காப்பியம்
[தொகு]இலக்கணம்:-
பழமையான கதை அல்லது திருவரலாற்றைத் தழுவி இயற்றப் பெறுவது காப்பியம். அஃது தர்ம, அர்த்த, காம, மோட்சம் என்னும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப்பொருள்களை விளக்கும் இலக்கண வரையறை இலங்குவது.
காப்பியம் என்பது கருதுஅறம் பொருளொடு இன்பம் இவற்றிலொன்று எஞ்ச இயம்பலே -பிரபந்த தீபம் 91
அறம் பொரு ளின்பம் வீட்டிற் குறைபாடாகப் பெறுவது காப்பிய மாகும். - சிதம்பரப்பாட்டியல் 42
அறம் ஆதி நான்காய் சொல்லும் பயனிற் குறைதல் சிறுகாப்பியமாக அவைதாம் உன்னும்ஒரு வகைபாட்டிற் பலவகையாம் பாட்டின் உரை பாடை தழுவலுமாம் - சுவாமி நாதம் 164
கருதுசில குன்றினுமக் காப்பியமா மென்ப பெரிதறமே யாதி பிழைத்து - வருவதுதான் காப்பிய மாகும். - வெண்பாப் பாட்டியல் 65
என் குல தெய்வ தேவேசரின் மகா மான்மியத்தில் ஒரு சிறு பகுதியை விதந்தோது முகத்தான் இயற்றப் பெற்றது இப்பனுவல்.
தெய்வ காப்பியம்
காப்பு
கலிவிருத்தம்
மான்மிய ரேதங்கள் மாட்சி மொழிந்திட
கான்மு ளைபெரும் காதலும் கொண்டனன்
வானவ ரேயெழுத் தாணிமு னைநின்று
தானி யற்றிடத் தாள்துணை காப்பிதே!
நூல்
ஆதி தேவன் அகிலம் படைத்தநாள்
நீத மோங்கி நெறிநிறைந் தோங்கின
பாத கக்கலி செய்பவம் தீர்க்கவே
வேதன் மீண்டு புவியவ தாரமே! (1)
அங்ஙண் தேவம காசபை தன்னிலே
பொங்கு மாதவர் போற்றும் இறைவனை
கங்கு ளான்கலி வல்வினை வெல்லவே
இங்ஙண் வந்தவ தாரம் இலங்கவே! (2)
வேண்டு முங்கள் விழைவினை ஏற்றனம்
ஆண்டு யாமோர் கருக்குகை புக்ககால்
மீண்டு மெய்த்திருக் காக்கும் வரோதயர்
யாண்டு யாவர் வரும்உரை மின்எனும் (3)
முதுமை யோங்கு முனிவரர் மாதவர்
இதமி குந்தவர் எழுந்துமுன் போதரும்
மதிம னுமகன் மன்றில்முன் வாய்மலர்ந்(து)|r}}
இதுது ணையாம் இயற்றிடும் என்னுமால் (4)
உலக தின்தலை யாய்மிளிர் பாரதம்
நலங்க னிதமி ழகம்தி ருமுகம்
இலங்கு நன்னுதல் திலகம்மார்க் கநகர்
தலந்த னிலுறை சீர்ஜ மாலுசேன் (5)
புத்ரன் வேண்டிப்பல் நோன்புகள் நோற்றிடும்
மித்ரர் தம்மனை பெரிய தாய்க்கரு
சித்ர மோருயிர் பெற்ற சேய்தனை
பத்ர மாகவே ஈன்றனள் தாய்மணி (6)
ஆயிரத் தெட்டு மாற்றுப்பொன் னாலியில்
மேய சிற்பம் உயிர்பெற்ற போன்மிளிர்
சேயின் பேரெழில் செப்பவும் வல்லதோ
தூய ஞானச் சுடரொளிர்ந் துற்றதே! (7)
அழகெ லாம்திரள் அற்புதப் பெட்டகம்
குழவி யாகிபல் கோடிசூர் யர்ஒளி
எழில்மிளிர்ந் துதயம் செய்தெ ழுந்ததோ
முழுமு தல்வரே வந்தவ தாரமே (8)
உயிரெ லாம்கனிந் தின்புரு வுற்றபோன்
இயல்மெய் குண்டத் திறைவந்து தோன்றினர்
உயர்ப ரம்பொருள் ஓங்கவ தாரமே!
துயர்க டந்துல குய்ந்திடு நேரமே! (9)
வேதம் மேனிகொண் டேயிந்த ஞாலமே!
போதம் ஓங்க வரும்ஆதி மூலமே!
நீதம் சீரார் நிறைதிருக் கோலமே!
நாதர் மெய்வழி நல்குமிக் காலமே! (10)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்
ஆண்ம கவாம் பேறின்றி
அகமே நெகிழ்ந்து நோன்பிருந்து
ஆண்பிள் ளைகண் டனைவோரும்
அன்பும் சுற்றம் ஊரவரும்
பூண்டார் பெரிதும் பூரிப்பு
போற்றி இனிதே வாழ்த்தினர்காண்
தூண்டா மணியார் விளக்கெனவே
துலங்கும் சீரார் குழவியது.
(11)
மட்டில் அழகார் பதுமை யெனும்
மகவை மார்பு மடிமீதும்
தொட்டில் இட்டுத்தாலாட்டிச்
சீரும் சிறப்பாய் வளர்விக்கும்
எட்டி யடிவைத் திச்செல்வம்
இனிதாய் நடையும் பயின்றதுவே
கட்டிக் கரும்பைக் கண்மணியைக்
கனிவாய்ப் பெற்றோர் வளர்த்தார்கள்
(12)
நாளோர் மேனி பொழுதொன்று
நல்ல வண்ணம் வளர்வென்றார்
நாழி யோர்நற் றிருமேனி
நற்க டிகையோர் வண்ணம்
ஆழி துயில்வார் குழவியென
அழகாய் இங்ஙண் வளர்ந்தார்கள்
வாழி வாழி மணிவண்ணா!
வாழி நீடு எனவாழ்த்தும்.
(13)
கட்டிக் கரும்பே! கற்கண்டே!
கனியே! தேனே! எனப்போற்றி
அட்டி யின்றிப் பெற்றோர்கள்
அழகோ வியத்தை வளர்த்தார்கள்
தட்டின் றிநம் தனிச்செல்லம்
தனிராய் மலராய்ப் பரிமளித்தார்
பட்டின் மென்மைத் திருச்செல்வர்
பகலோன் போலும் ஒளிர்ந்திடுவார்!
(14)
திருவோங் கெங்கள் செல்லமது
சீரும் சிறப்பாய் வளர்வோங்கித்
தெருவு விளைவா டல்புரியும்
சீரோர் தம்மோ டினிதாடி
உருகும் மழலை மொழி நவின்று
உள்ளம் பெற்றோர் மகிழ்துளும்ப
அருகு போலும் வேரூன்றி
ஆல்போல் தழைத்து வளர்ந்தாரே!
(15)
பள்ளிப் பருவம் வந்ததுவே
பகரும் ஏழாண் டந்நாளில்
தெள்ளத் தெளிந்த கலைக்ஞானர்
செல்வர் உலகாச் சார மிகும்
கள்ளம் கபடில் கருப்பண்ணர்
கண்ணா ளர்தம் குலப் பெரியார்
அள்ளற் கரிய அன்புயர்ந்தார்
அவர்தம் பள்ளி தனில்சேர்த்தார்.
(16)
சின்னஞ் சிறிய மெல்லடிகள்
சீரார் நடையும் பயின்றிடவே
பென்னை மடலார் சுவடிதனை
பொன்னார் கரத்தில் தாமேந்தித்
தென்னன் பாண்டித் திருநாட்டுச்
செல்வர் தங்க மணித்தேர்போல்
மென்பூ மித்தாய் மகிழ்வோங்க
மெலிதாய் நடந்து சென்றார்காண்.
(17)
ஆவின் பாலை அருகம்புல்
அதனில் தொட்டுத் திருமகனார்
நாவில் அறியோம் நற்றாள்கள்
நன்றே குருவாழ் கென்றினிதே
தேவர்க் காசான் அட்சரத்தை
சீராய் எழுதி அப்யாசம்
மூவாக் கலையின் முழுமுதற்கு
முதலில் செய்தார் பெரியவர்காண்.
(18)
சித்தி ரத்தின் பதுமையென
செல்வர் ஆசான் முன்னமர்ந்து
மெத்தக் கவனித் தாசான்சொல்
மிகவார்ந் தன்னம் பசுப்போலும்
சித்தம் கனிந்துக் கலைபலவும்
செல்லக் கிளியும் பயின்றனரே!
அத்தன் போலும் ஆசானும்
அன்பு கனியப் பயிற்றினரே!.
(19)
ஆதி தேவன் அழகரசர்
ஆசான் தன்னை மிகவணங்கி
நீதி நூல்கள் சதகங்கள்
நன்னூல், நிகண்டு, இலக்கணங்கள்
போதித்திடவே தாம் கேட்டுப்
பொறுப்பாய்க் கல்வி கற்றனரே
வேதம் தாமே ஆனவரே
வேதம் பயின்றார் வாழியரோ!
(20)
ஆசான் திண்ணை அருகோடை
அரிய இண்டம் புதர்நிழலும்
தேசோங் கிடுநற் பள்ளியதாய்
திகழ்ந்த தந்தக் காலத்தே
மாசில் மணிநம் கலைச்செல்வர்
மகிழ்வாய் கலைகற் றுத்தேர்ந்தார்
நேசர்க் கினியர் நிர்மலர்தான்
நன்கெண் ணெழுத்தும் பயின்றனரே!
(21)
வேறு
மண்ணகத் துழவர் தாமே
மகிழ்ந்துண வளிக்கும் சீமான்
பண்ணைநற் றொழில்செய் வோர்கள்
பசுமறி மேய்க்கும் பண்பர்
வண்ணமாய் அதற்காள் இன்றி
மறுகினர் பெற்றோர் அந்நாள்
அண்ணலும் மறிமேய்ப் போமென்(று)
அகந்தனில் எண்ணம் கொண்டார்.
(22)
அன்னையே! அத்தா! நானே
ஆடுமா டுகளை மேய்ப்பேன்
பொன்னுளம் வருந்தல் வேண்டாம்
பொறுப்புடன் பணிமேற் கொள்வேன்
இன்னவா றிளையர் செப்ப
இனிதுபூ ரிக்கும் பெற்றோர்
நன்னய விளையாட் டிஃதாம்
நாதரும் மேய்ப்பர் ஆனார்.
(23)
பின்னர்ஆ றறிவு மேய்க்கும்
பெருந்தகை தெய்வ மேய்ப்பர்
இன்னவா றாடு மேய்க்கும்
இனியவாங் கரிவாள் ஏந்தும்
தன்னெழில் வயங்கும் சாமி
தன்புல்லாங் குழல்இ சைக்கும்
தன்னருகு ஆடு மாடும்
தலையினை உயர்த்திக் கேட்கும்.
(24)
ஆடுமா டுகள்அ ணிந்த
அழகிய மணிக ளோசை
தேடுபா டுடையர் பாடும்
சீரிசைச் சுருதி சேர்க்கும்
காடதில் இசையின் வெள்ளம்
களிமயில் குயில்கள் சேர்ந்து
ஈடிலா இன்பம் தேக்கும்
எக்களிப் பெங்கும் தங்கும்.
(25)
எம்பிரான் இசைப்பக் கேட்ட
எழில்மரம் செடிகொ டிகள்
தம்மெழில் தளிர்க்கும் வாசம்
தானுமே வந்தங் காரும்
அம்பொழில் ஆயர்பாடி
அழகியர் கண்ணன் இங்கே
செம்பொருள் மேனிச் செல்வர்
சிறந்தனர் வாழி யம்மா!
(26)
பத்துகள் நூற தாகப்
பல்கின மறி பசுக்கள்
மெத்தவும் பால்பெ ருக்கும்
மனையதில் செல்வ மோங்கும்
அத்தன்தாய் அரவ ணைத்து
அன்புமுத் தங்கள் ஈயும்
முத்துளம் மகிழ்ச்சி மேவும்
வாழ்விலிஃ தோர்வ சந்தம்.
(27)
மேய்ப்பராய் அன்று அங்கு
விளங்கிய சாமி சீரார்
ஆய்மதிச் சிந்தை மிக்கார்
அரியமெய்ஞ் ஞான நூல்கள்
தூய்மதி சிறக்கக் கற்று
தேர்ந்தனர் பல்லோர் போற்ற
நேயமிக் குடைய ராக
நேரியர் திகழ்ந்தார் காணே.
(28)
ஓங்கிய குரலெ டுத்து
உத்தமர் பாடுங் காலை
ஆங்குறு மலைகள் யாவும்
அவர்க்குப் பின் பாட்டுப்போல
தேங்குற எதிரொலிக்கும்
தேங்கமழ் தாரோன் எங்கள்
பூங்கழல் பொலியும் அண்ணல்
பொற்பதி அரசர் அம்ம!.
(29)
தாய்முகம் பார்க்கும் சேய்போல்
தன்னரு கணைந்து ஆக்கள்
நேயரின் முகம்அண் ணாந்து
நோக்குதல் அரிய காட்சி
மாயனார் மதிமெய் வல்லார்
வாசமார் மேனி தன்னில்
தோய்ந்திடும் மறிகள் அன்பாய்
துரையவை முகங்கள் நோக்கும்.
(30)
வேறு
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆழிதுயில் அற்புதராம் நார ணர்தாம்
அம்புவியில் அவதரித்தார் அரியர் இந்நாள்
மேழியினைக் கைக்கொள்வே ளாண்மை செய்யும்
மேங்குடியில் உடலெடுத்து வளர்ந்தார் நன்றே
வாழியவர் வளர்ஞானச் செங்கோ லோச்சும்
மாபெரிய பருவம்வரு முன்னே இங்ஙண்
மேழியெனும் செங்கோல்கைக் கொண்டு இந்த
மண்ணுயிர்க்குப் பசிதவிர்க்கும் பணிசெய் தாரே.
(31)
ஆங்குற்ற பள்ளியெனும் வாசல் தன்னில்
அரியதொரு ஆலிம்சா பிரசங் கத்தை
பாங்குடனே இளங்குமரர் பணிவாய்க் கேட்டு
பண்புடனே இதயத்தில் பதித்துக் கொள்ளும்
யாங்குமொரு இறைவன்தான் உண்டு அன்னோர்
அடியார்தீர்க் கத்தரிசி மார்கள் உண்டு
தேங்கமழும் திருவேதம் மரணம் உண்டு
தீர்ப்புநாள் உண்டென்று செப்பினாரே!
(32)
இறப்பினிலே இருவிதங்கள் உண்டு ஒன்று
இழிதகையாய்க் கசப்புத்தீட் டாகிச் சாதல்
விறைப்புற்று நாறிடுதல் புழுத்தல் மேனி
மிகக்கனத்தல் முகமதுவும் கோர மாதல்
துறப்பென்னும் தொண்டையில்நீர் இறங்காத் தன்மை
தீநரகுக் கேகும்அடை யாளம் இஃதாம்
மறலியெனும் இஸ்ராயில் கைப்பட் டேகல்
வெந்நரக வாதியென ஆவார் காணே
(33)
பரிசுத்த மரணமொன்று உண்டு கேண்மின்
பரமரெனும் இறைவரருள் பெற்றோர் தெய்வ
தரிசனம்கொண் டேதீர்த்தம் அருந்தும் மேனி
தானிளகி மணம்வீசும் மஞ்சள் வண்ணம்
பரிமளிக்கும் கனக்காது மண்ணில் போட்டால்
பூமித்தாய் தீர்ப்புவரை மக்காக் காக்கும்
அரியதிது மூமினெனும் ஞானிகட்கே
அற்புதமாய் வாய்க்குமென உரைத்தார் நன்றே!
(34)
ஆதலினால் இறைவணக்கம் தவறேல் ஞானம்
அறிந்தபெரி யோர்கள்தமைத் துணையாய்க் கொண்மின்
சாதலொரு தலைவாசல் நரகம் சொர்க்கம்
தனில்புகுதற் கடையாளம் இறுதி நாளில்
வேதனையில் வீழாது காத்துக் கொண்மின்
மெய்ஞ்ஞானம் பெற்றவர்க்கே இதுகை கூடும்
சாதனையிஃ தொன்றேதான் மனித வாழ்வில்
சார்ந்திருங்கள் இறைவனையே என்றார் அன்னோர்
(35)
அன்னவரின் பிரசங்கம் கேட்ட செல்வர்
அப்பெரியார் உரைவண்ணம் சான்றோர் சார்ந்து
தன்னையறிந் தின்பமுறும் மார்க்கம் நாடும்
சாவாமை பெறவேண்டும் என்று தேடும்
நன்னயமாய் ஞானமென எவர்சொன் னாலும்
நாடியவர் செப்பியதை உறுதி யாகச்
சொன்னபடி செய்திறையைத் தேடலுற்றார்
சூதறியா மென்மையுளத் தோன்றல் தானே!
(36)
பழுதறியாப் பண்பாளர் நமது தங்கம்
பரந்தாமர் இளம்பழன பருவம் தன்னில்
உழுதொழிலே மேற்கொண்டு பணிக ளாற்றும்
உத்தமரும் பணிக்கேகும் முன்னே தெய்வம்
தொழுதெழுவர் தொடர் பிடியாய் இறைநாட் டத்தால்
சான்றோரைத் தேடிமெய்ஞ் ஞான வேட்கை
முழுதுடையார் மூமீன்எங் குள்ளா ரென்று
முயற்சியுடன் கண்டடைய விழைந்தா ரன்றே!
(37)
வேளாண்மைத் தொழில்செயலில் நிறைவே காணும்
வெற்றிகைப் பெற்றோங்கும் விளைச்சல் நன்றாம்
தோளாண்மை விளையாட்டுப் பந்த யங்கள்
துரைமகனும் வெற்றிபெறும் பரிசு கொள்ளும்
ஆளாண்மை நீளத்தாண் டுதலில் வெற்றி
அற்புதமாய் வழுக்குமரம் ஏறும் வெற்றி
கோளாண்மைப் பரிசுகளைக் குவிக்கும் நல்ல
குணக்குன்றாய்த் திகழ்ந்தாரே குமரர் தாமும்
(38)
தேங்காய்கள் நூறுகளைப் பத்துக் குத்தில்
சிதறிடவே உடைத்திடுதல் பார்வே லைகள்
பாங்காகக் கிணறுகளை எவ்வித் தாண்டல்
பலம்மிகுந்த மல்யுத்தம் புரிதல் தம்மில்
ஆங்காங்கு எவர்வரினும் வெற்றி கொண்டு
அவர்மனமும் நோவாமல் நடந்து கொள்வார்
தீங்கினர்கள் எவரையுமே அன்பாய்க் கூறித்
திருத்திடுமோர் பெருந்தகைமைப் பண்பர் தாமே.
(39)
'தம்பி'யென அவ்வூரார் செல்ல மாகத்
தாமழைப்பார் நியாயம்உரை பெரியோர் கூட
தம்பிஇவர் தமைக்கேட்டுத் தீர்ப்புச் சொல்வர்
தரமுயர்ந்த பண்பாள ராயிருப்பர்
நம்பிவரும் எவருக்கும் உதவி செய்து
நல்லுணவு எல்லோர்க்கும் நல்கும் சீர்மை
வெம்பிவரும் எளியார்க்குத் துன்பம் தீர்க்கும்
மேன்மைமிகு குணமிக்கார் குமரர் தாமே!
(40)
சிலம்பமதில் வல்லவர்காண் மாம்பா றைதன்
ஜமீன்தார் மட்டுமிவ ரோடு ஆடும்
வலமிடமாய்ச் சுழன்றாடி வெற்றி வாய்க்கும்
மட்டத்தில் அவர்தோற்கா வண்ணம் காக்கும்
நலமிகுந்த ஜமீன்தாரும் இதனைக் கூர்ந்து
நட்புமிகக் கொண்டாடும் துணையாய் நிற்கும்
பலம் மிகுந்தார் என்றாலும் பிறர்நோ காது
பாதுகாத் திடும்பண்புக் கிணையும் உண்டோ!
(41)
வேங்கை வேட்டைநாய்ச் சம்பவம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தந்தையின் நண்பர் மலையடி வாரத்
தோட்டத்தில் வாழ்பவர் அவர்தான்
விந்தையாய் வேங்கை வேட்டைநாய் வளர்க்கும்
வல்லவர் அவரிடம் மகவைத்
தந்தையோர் செய்தி செப்பிட வேண்டித்
தாமனுப் பினர்அந்த வேளை
அந்தநண் பருமே வேட்டைநாய் தன்னை
அவிழ்த்துவிட் டிருந்தனர் காணே
(42)
இந்தஓர் நிலைமை அறிந்திடாக் குமரர்
ஏகிடும் அன்னவர் தோட்டம்
அந்தநாய் விரைந்து அண்ணல்மேல் பாய
அம்பென வந்தது குமரர்
தந்தனர் இடது கரத்தினை நாயின்
திறந்தவாய் தனில்வலக் கரத்தால்
விந்தையாய்ப் பிளந்து வீழ்த்தினர் நாயும்
வெறிகொடு மேனியைக் கீறும்.
(43)
மேனியெ லாம்நாய் கீறிய தாலே
மிகரண களமதாம் உதிரம்
தான்பெரு கிடவும் இளவலும் மயங்கிச்
சாய்ந்தனர் நாயினுக் குடையார்
தான்விரைந் துவந்து தாங்கி நன்மருந்தால்
செல்வருக் காவன புரியும்
வான்மகன் நிலையைப் பெற்றவர்க் குடனே
மாண்பரும் செய்திசொல் லிடுமே.
(44)
கண்மணி புண்கொள் காட்சியைக் கண்டு
கதறிடும் பெற்றவர் தாமே
விண்மணி யேயுன் மேனியை இங்ஙன்
வந்துகண் டிடவோகண் படைத்தோம்
ஒண்மணி பெற்றோர் உளம்துய ருற்று
உத்தமர் தமைவண்டி யேற்றி
பண்ணவர் தம்மூர் கொண்டுசென் றவர்க்குப்
பண்ணினர் மருத்துவம் சிறப்பாய்.
(45)
இங்ஙனம் செல்லம் இடருறு நேர்ச்சி
இயன்றது தப்பினர் உயிரே!
தங்கம்நம் செல்வர் ஞானியென் றெவரும்
தாமுரை செப்பிடில் நம்பும்
இங்குய தார்த்த இன்னுளம் உடைமை
எத்தர்கள் கண்டுமே ஏய்க்கும்
அங்ஙன்ஏ மாந்த அரியசில் நிகழ்வு
அறைகுவன் கேண்மின்கள் மன்னோ!.
(46)
பதினாறுகால் உரிகட்டித்தவமிருத்தல்
கானகம் சென்று கால்பதி னாறாய்க்
கட்டுக ஆலில்ஓர் உரியை
தானதில் அமர்ந்து காளியின் மந்த்ரம்
ஜபித்தொரு நாள்ஒரு காலாய்
தானறுத் தெறிந்து கடைசியில் வீழ்நாள்
தாயவள் காளியும் தாங்கும்
ஈனனாம் ஒருவன் இப்படிச் செப்ப
எம்பிரான் நம்பிஏ மாந்தார்.
(47)
மதுரை வீர மந்திரம்
கழுத்தள வுடைய நீரில்மூன் றுநாள்
கடிதிரு மதுரையின் வீரன்
எழுந்தொரு குதிரை மீதுவந் திடுவான்
என்றொரு புளுகனும் உரைப்ப
கெழுதகைச் சான்றோர் குமரரும் நம்பி
குளத்தினில் ஆழ்ந்திருந் தனரே!
கொழுத்தஅச் சனியன் கூற்றுபொய் என்று
கண்டுளம் நொந்தனர் அண்ணல்
(48)
கல்பு பிரகாசமாகக் காட்டல்
கல்பினை ஒளிரக் காட்டுவன் மஸ்தான்
குறித்தனர் ஒருவனைச் சில்லோர்
புல்லனாம் அன்னோன் புசிப்பிலன் என்ற
பொய்யுரை நம்பினர் எம்மான்
சில்மிஷம் என்று தெளிந்தனர் பின்னர்
சிந்தையும் மயங்கினர் நம்பி
பல்வித போலிச் சாமியார் உலகைப்
பாழ்செயல் கண்டுளம் வருந்தும்.
(49)
எருக்கன்பால் அருந்தல்
எருக்கனின் பாலை ஏற்றருந் திடிலோ
எற்படும் ஞானமென் றொருவன்
சுருக்கமாய் உரைக்க அங்ஙனம் செய்து
தொண்டையும் வெந்தனர் அண்ணல்
குருக்கள்சா மியர்மார் ஞானிய ரென்று
கொடியவர் வேடமிட் டலையும்
அருக்கன்நம் அண்ணல் அவர்சொலல் நம்பி
அகம்மிக நொந்தனர் அதுகால்.
(50)
ராஜயோகம்
மூச்சை யிழுத்து ரேசகம் பூரகம்
மிக்கவே கும்பகம் செய்தால்
ஆச்சுது வாசியோகமிக் கோங்கி
அந்தரத் தெழும்பிடும் தேகம்
மூச்சடங் கிடுதல் வாசியின் யோகம்
மொழிந்தனர் இங்ஙனம் சில்லோர்
வாச்சுது ராஜ யோகமென் றெம்மான்
வரிசையாய் இதைக்கடைப் பிடிக்கும்.
(51)
வேறு
கலித்தாழிசை
திறனார்விளை வதுஆடலும் சிறப்போங்கிடு குணமும்
அறமேநினை உளமும்எது பணியாற்றிடு திறமும்
புறமேதிரி மனதைஇனி சுகமேநிறை வுறலும்
உறவாகிடும் எளியோர்க்கெவர் நிகராகுவர் உலகீர்!
(52)
இவரின்புகழ் மிகவேபரந் தெட்டுத்திசை ஊரார்
இவருக்கு(த்)தம் மகவேகொடை தரவேமிக முனைவர்
தவறேதுமில் குணவானெனில் யார்தான்தயங் கிடுவார்
புவனத்திவர் பொலிதேஜஸைப் புகழாதவர் இலையே
(53)
மார்க்கநகர் அணித்தேஒரு திருவூர்உள ததுவும்
ஆர்க்கும்பெயர் பள்ளநகர் அதனில்வதி செல்வர்
சீர்கொள்உயர் மக்கத்து ஹஜரத்தவர் மகளார்
வார்க்கும்சிலை தங்கம்மெனும் சுலோகாபீவி என்பர்.
(54)
மணமாதிவள் அழகோவியம் மறுமாசெதும் அறியாள்
குணபூஷணி குணவான்தனைக் கொழுநன்எனக் கொளவே
அணங்கின்னவள் அமுதன்னவள் மயிலாள்குரல் குயிலாள்
மணங்கொள்ளவே உளம்கொண்டனள் இனியாள்செழுங் கனியாள்
(55)
எமதையரின் திருவார்மணம் தமர்சொந்தமாய்க் கருதும்
இமவான்மகள் சிவனார்தமை இணைகொண்டது போலும்
ஜமின் தாருமே முனர்நின்றுமே மணமேநடத் திடுமே
அமராபதி அருளானது அழகஃதுடன் மணமே.
(56)
கனியொன்றதின் சுவையோமலர் கெழுநன்மண முதிர்வோ
இனியன்தனின் இயலாற்றலை இணையும் எழில் இனிதே
இனியொப்பிலை இருவர்க்கிடை சுகவாரிதி யுறுமே
முனிமாதவர் ரிஷிதேவர்கள் சுபசோபனம் மொழியும்.
(57)
மணவாளனும் மணவாட்டியும் சுவைபாலொடு தேனும்
மணமார்மலர் பெடைஅன்றிலும் மணியும்ஒளி அதுபோல்
இணங்கும்இவர்க் கிணையாரினி எனுநன்னிலை யுறுமே
குணங்கொள்திரு குமரர்க்கிது குறையற்றதோர் நிலையே.
(58)
இதுயிங்ஙனம் நிகழ்வாகவும் முறைவாணிகம் செயவே
புதிதாய்மதி தனில்யோசனை புரிந்தார் அது செயலாம்
இதமாய்வளர் செஞ்சாலியை ஈரோடரு கார்ந்து
அதுதிங்களூர் காசுக்கா ரன்பாளையம் தங்கும். (59)
மனைநல்லறம் புரிகாலையில் மணியார்ஒரு குழவி
தனையீன்றனர் கனகச்சிலை பொலிவுற்றது திருவே
இனி(து)அத்தனை அதுஒத்தது இதயக்கனி மணியே
பணியார்மலர் நவரத்தின கசிதம்எழில் மயிலே. (60)
மனையில்நிறை மகிழ்வேஉறைந் ததுகாணிது உலகம்
தனில்வாழ்பவர் இயல்பாயின இதுகாலையில் வருகும்
தனிகையெனும் மணிவாணியர் தமர்செல்வரைத் தேடும்
இனிதானவர் கதிமாதவர் எமதையரைக் கூடும்.
(61)
கட்டளைக் கலித்துறை
திருவோ லக்கம் அதனில் கொடுத்த திருவாக்கு
மருவும் உலக மயக்கால் மறக்கும் அதுகூர்ந்து
வருகும் கிருபை திருவோர் உடலம் அதுகொண்டு
பெருகும் தயையால் புதல்வர் தமையே அவர்சாரும்.
(62)
காலம் நேரம் இடமும் பருவம் கணிதத்தும்
ஆலம் அருந்தும் அருளாள் இறைவர் தமையேற்க
கோலம் குருவாய் வருகும் குமரர் குணமணியார்
சாலை யேறும் நன்னே ரமது அதுகாலை.
(63)
பெரியார் முதியர் மெலிதாய் நடந்து குமரேசர்
அரிதாய் வருகும் இடமே குறிப்பாய் அதுநேரும்
சரியாய் அவர்கண் ணெதிரெ செலவும் இவர்கண்டு
மரியா தைமிகு வணக்கம் புரிந்தே வரவேற்கும்.
(64)
தன்மகன் தன்மை உருவம் எழிலும் முதல்கண்டார்
பொன்னுளம் தன்னில் பூரிப் பெய்தும் இளங்குமரர்
தன்மனை வருக வெனவே விழைய அதையேற்றார்
தென்னவர் தொடர்ந்து மனைசென் றமுது தனையேற்றார்.
(65)
யாழினர் எங்கோன் அமுது படைத்தா ரதையேற்று
பூழியர் நத்தத் தேரடி அமர்ந்து ஞானமெனும்
ஆழியுள் ஆழ்த்தும் அரும்பெரும் செல்வக் குவையீந்தார்
வாழிய எங்கோன் வரந்தரு திருவினர் வாழியரோ!
(66)
விண்டுரை செப்ப வியலா விசும்பின் முகடேறி
கண்டனர் காட்சிகள் எண்ணில இன்பம் கனிந்ததுவே
அண்டர்க் கரியர் தொண்டர்க் கெளியர் திருவுள்ளம்
கொண்டது மெய்ம்மை குவலயம் உய்நாள் அதுநாளே!
(67)
நாடியே வந்தது நற்றவச் செல்வம் நன்மழைதான்
வாடிய பயிர்க்கு வருதுணை யானது அஃதொப்ப
தேடிய செல்வம் திருக்கர முற்றது குருபரரைக்
கூடிய இன்பம் கோடியும் தாண்டிடும் குருதேவே!
(68)
வானே திறந்தது மட்டிலா ஞான அமுதமழை
தேனே பொழிந்தது செம்மல் திருவுள் கனித்ததுவே
கோனே முப்பொருள் தத்தம் கொடுத்துப் பெற்றனரே
பூனேர் தனிகையர் உள்ள(ம்) நிறைந்துமெய் பொங்கியதே.
(69)
வறியார் பெறுமோர் புதையல் மலடிக் கொருமகவு
நெறிபோன்ம் வயிரம் பொதிந்த பேழை யதுபோலும்
அறவோர் வருகை பெறுமெய் அமுதம் இதுகொண்டு
துறவேற் றிடவும் துணிந்தார் எங்கோன் வாழியரோ.
(70)
உலகின் உயிர்கள் தளிர வருமோர் மழையானார்
நலங்கள் திரண்டு நலிவே கழிந்த சுகமானார்
வலங்கொள் எமனின் இடர்தீர்த் தருளும் படையானார்
உலகின் மறைகள் அனைத்தும் தெளிக்கும் விடையானார்.
(71)
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மெய்ப்பொருளைப் பெற்றதுவே மேலவரின் உள்ளம்
மிகக்கனிந்து பொங்கியதே வானமுத வெள்ளம்
கைப்பொருளாய்க் கிடைத்தம்மா குருபரரின் உறவு
கண்மணியர் எம்பெருமான் ஏற்றனர்மெய்த் துறவு
பொய்ப்பொருளும் மனைவிமக்கள் உற்றசுற்றம் விட்டு
பெரியவரைத் தொடர்ந்தேகும் அண்ணல்புறப் பட்டு
வைப்புநிதி மனுக்குலமே பெற்றிடவே சேர்க்க
வானவரும் தனிகையொடு செல்லுமுளம் ஆர்க்க.
(72)
பண்ணவரும் மன்னவரும் பலஊர்கள் கடந்தே
பண்புடனே அகிலவலம் புரிந்தார்கள் நடந்தே
எண்ணரிய ஞானபதம் தனிகைவள்ளல் மொழியும்
எங்கள்பிரான் இதயமதில் இன்பமது வழியும்
கண்மணிக்குக் குருபரரும் சோதனைகள் வைக்கும்
கனவயிர மலையெம்மான் அனைத்திலுமே ஜெயிக்கும்
அண்ணலர்க்கு பசிதாகம், பயம்காமம் யாவும்
அப்பெரியார் பரீட்சைசெய அருங்குமரர் மேவும்.
(73)
அனைத்துலகும் ஆளவரு வோர்க்கமுதம் வருகும்
ஆண்டவரை மறிமேய்க்கும் ஆளெனவே தருகும்
தினைத்துணையும் எம்பெருமான் பணியதனைக் குறைவாய்
சிந்தையிலும் எண்ணலிலார் ஏற்றனரே நிறைவாய்
தனைத்தந்தார் தனிகையர்க்கே அன்னவரும் மகவாய்
தவம்புரியத் தானமர்த்தும் தவகுகையில் மிகவே
முனைப்புடனே மிக்கியற்றும் பாசுபதத் தவமே
விண்ணகத்து சன்னதங்கள் வரப்பெற்றார் சிவமே.
(74)
பண்ணரிய பாசுபதத் தவத்தாலே குமரர்
பன்னிருசன் னதம்பெற்றார் போற்றிடுவர் அமரர்
வண்ணமகன் சன்னதங்கள் பாட்டையர் பார்த்து
மிகமகிழ்ந்து பூரிக்கும் மாண்புளத்தே ஆர்த்து
அண்ணலவர் தமைவணங்க அதைத்தடுத்தே தேக்கும்
அரன்அரிநீ குருபரன்நீ உலகினைநீ காக்கும்
விண்ணவர்நீ நன்மார்க்க நாதர்நீர் ஐயா!
விளங்கிடுவாய் உலகமெலாம் புரந்தளிக்கும் மெய்யா!
(75)
உலகெலாம்சென் றுபதேசம் வழங்கிடுநீ தங்கம்
உன்வழியே மெய்வழியாய் உலகினில்வி ளங்கும்
அலகில்விளை யாட்டுடையாய் அகம்கலங்கேல் சென்று
அனைத்துமத குலமினங்கள் ஒருங்கிணைப்பாய் நன்று
குலதிலகம் உளம்வருந்தும் ஒருவாறு ஐயன்
குருபரரைப் பிரிந்தேகிப் பிரசங்கம் செய்யும்
நலமிகுந்த திருப்புத்தூர் நன்மக்க ளிடையே
நம்பெருமான் விரித்தனரே ஞானமெனும் கடையே.
(76)
மாணிக்கம் போல்பவர்கள் உபதேசம் பெற்றார்
வன்கணர்கள் சிலரிடர்கள் செய்துதுயர் உற்றார்
வீணர்கள் தீமூட்டும் ஆசிரமத் திற்கே
மெய்த்தெய்வம் மீண்டேகும் காரைக்கா லுக்கே
ஆணிப்பொன் அம்பலவர் அன்னைபனி மதியை
அருள்மணமும் கொண்டனர்கள் மாற்றினர்கள் விதியை
காணிக்கை மாணாக்கர் கொண்டுவந்தா சிரமம்
கட்டிசபை நடத்திஆன்ம லாபம்பெறும் திறமாய்
(77)
பின்னரெம தையர்பனி மாமதித்தா யுடனே
பெரிதேகும் “ஹஜ்”ஜென்னும் யாத்திரையும் திடனே
தன்னிகரில் தவமாற்ற நைமிசா ரண்யம்
தாய்பெரிய நாச்சியாரும் துணைநின்றார் புண்யம்
இன்னல்பல இயற்றினர்கள் ஈனர்களும் இடையே
எம்பெருமான் அத்தனையும் வென்றேறும் தடையை
மன்னவரும் மனம்மாறி மைசூர்செல முயன்றார்
மக்கள்மிக வருந்திவிழைந் ததனால்செலா நின்றார்.
(78)
மதுரையிலே பரன்மேட்டில் ஆலயமொன் றாக்க
மாணாக்கர் விழைந்தார்கள் ஆண்டவர்கள் ஏற்கும்
இதமுடனே காணிக்கைப் பொன்குவியல் சேரும்
இனியதிருப் பணிகள்செய மக்கள்களி கூரும்
புதுமைமிக மரம்செங்கல் சேராத வண்ணம்
பொன்னரங்க ஆலயத்தை உருவாக்கும் அண்ணல்
நிதம்புதியர் பொறியாள ராய்நின்று இயக்கும்
நிர்மலர்க்கு பணிபுரிந்தால் புண்ணியமே பயக்கும்.
(79)
அருளாளர்க்(கு) ஆலயமும் திருமாளி கையுமே
அன்பர்களின் விடுதிகளும் அற்புதமாய் அமையும்
திருவோங்கும் திறப்புவிழா கொடியேற்றம் சிறக்கும்
செங்கரத்தால் பொன்திறவு கோல்கொண்டு திறக்கும்
குருபரரின் மாணாக்கர் மலர்மாரி பொழியும்
ககனத்தில் சுபசோப னம்தேவர் மொழியும்
பெருவரங்கள் அருள்பொன்ன ரங்கமிது காண்மின்
பொற்பதியின் அருளரசர் திருமொழிகள் கேண்மின்.
(80)
ஆலயத்தின் அருகினிலே கனிச்சோலை ஒன்று
அனைத்துவகைக் கனிகுலுங்கும் ஆரெழிலே நன்று
சீலமிகு சீடர்களும் தேவபிரான் தயவால்
திருவரங்கர் அருள்வழங்க செழிக்குமுயிர் உ(ய்)யவே
கோலமிகு ஆகமங்கள் மறைகள் வந்து கூடும்
கொற்றவரின் மாணாக்கர் நாவில்விளை யாடும்
ஆலமுண்ட கண்டரெங்கள் ஆண்டவர்பொற் பதியே
அண்டிவந்து பணிந்திடுவோர் அடையுமேநற் கதியே!
(81)
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இங்ஙனம் ஞானச் செங்கோல்
எம்பிரான் ஆற்றும் நாளில்
அங்ஙணோர் விமானம் தாழ
அதுபறந்(து) அச்சுத் தாள்கள்
எங்ஙணும் வீசி யேகும்
என்னெனச் கூர்ந்து நோக்கில்
பொங்குபட் டாளம் வந்து
பயிற்சிமேற் கொள்ளும் என்னும்.
(82)
ஆதலால் அவ்வி டத்தோர்
அகன்றுமே செல்ல வேண்டும்
ஈதர சாங்க ஆணை
என்றதில் உரைகள் கண்டார்
மூதுரை யாளர் கேட்டு
மிகமிக வருந்தி னாரே
தீதுறு குறியா யிஃது
தெரிகிற தென்றார் மன்னோ!
(83)
அடுத்துசின் னாளில் அங்கு
ஆங்கிலப் படைகள் வந்து
எடுத்தன பயிற்சி ஆயின்
எம்பிரான் மக்கள் செய்தி
மடுத்தநாள் தன்னி னின்று
மனம்மிகக் கவலை யுற்றார்
அடுத்தஅப் படைத் தலைவன்
ஆயும்கற் றளியைக் கூர்ந்து
(84)
வரும்பெரும் போர்க்கி டங்காய்
மாற்றலாம் இஃதை என்றான்
பெரும்பதி அரசர் சாலைப்
பொற்பதி வேண்டும் என்றான்
பெருங்குண தெய்வம் இஃது
பொன்னர்தம் கோவில் என்றார்
பெருந்தகை அறியா அந்தப்
பேதையும் ஓர்கி லானே.
(85)
மிரட்டியே ஆல யத்தை
மேவலாம் என்று எண்ணி
கரட்டுளப் படை வீரற்குக்
கட்டளை யிட்டான் அந்தப்
பரட்டையர் நெருங்க வொண்ணாப்
பாங்கினைத் தெய்வம் செய்தார்
இருட்டுடை நெஞ்சன் அந்த
ஈனனும் மாறிப் போனான்.
(86)
பின்னரோர் பஞ்சாப் சிங்கம்
பெரும்படைத் தலைமை யேற்றான்
பொன்னரங் கையர் தம்மைப்
போற்றியே வணங்கி நின்றான்
தென்னவர் உரையா டுங்கால்
சிரம்கரம் அசைவைக் கண்டு
என்னவர் “குருநானக்” என்று
ஏகமாய் முழங்கிப் போற்றும்.
(87)
வணங்கினான் தெய்வம் தன்னை
வாழ்த்தினான் சாரட் ஏற்றி
இணங்கியே ஊர்வ லம்மாய்
இன்பநா யகரைப் போற்றும்
மணம்கமழ் நெஞ்சன் மேலோர்க்(கு)|r}}
வணக்கமாய்ச் செய்தி சொன்னான்
குணம்கெழு வைஸ்ராய் வந்து
கும்பிட்டு வேண்டி நின்றார்.
(88)
உலகத்தின் நலனுக் காக
உற்றது பெரும்போர் ஐய!
நலமதற்கு ஆல யத்தை
நல்கியே உதவு மென்றான்
வலங் கொளும் தெய்வம் தன்னை
வணங்கியே பணிந்து வேண்டும்
பலங்கொண்ட அரசன் கேட்கப்
பரமரும் சிந்தித் தாரே
(89)
அரசனே வணங்கிக் கேட்க
அதைமறுத் திடல்நன் றாகா
அரசனே எதிர்த்தால் நாமும்
யாதுசெய் குவமென் றோரும்
அரசனுக் கிணக்க மாவோம்
ஆண்டவர் சிந்தித் தாரால்
அரசனுக் கால யத்தை
அளித்திட முடிவு செய்தார்.
(90)
இதுஒன்றே போதும் என்று
எண்ணியே இயற்றி னோம்நாம்
இதுதனக் கிவ்வா றாயிற்(று)|r}}
என்று நாயகரும் எண்ணி
இதமனம் கசிந்து அன்னோர்க்(கு)|r}}
இணக்கமாய் ஆல யத்தை
அதம்செயும் போர்க் கிடங்குக்(கு)|r}}
ஆகிட அண்ணல் ஈந்தார்.
(91)
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
வடிவுடைய பெருமாளும் ஆல யத்தை
மன்னவர்க்கு வழங்கிவிட்டு மக்க ளோடு
கொடிகுடையும் விருதுகளும் வண்டி யேற்றி
கொண்டுபுறப் பட்டார்கள் குமுறும் மக்கள்
நெடியதொரு பயணமது கிழக்கு நோக்கி
நிர்மலரும் செய்தார்கள் வேந்தன் பட்டி
அடியவரின் மனையதனில் தங்கிச் சற்றே
அயர்வொழிய நேர்ந்தார்கள் ஐயர் தாமே!
(92)
அதுகால்ஓர் குரூரனுமே இடர்செய் திட்டான்
அதைதெய்வம் மேவினர்கள் இதம தாக
புதுக்கோட்டை அருகினிலே ஊரல் சாரல்
போய்ப்பார்த்து விலைகொடுத்துப் பெற்றா ரஃதை
இதமாக அங்குகுடி யேறி நன்றாய்
எண்ணரிய பாடுபட்டு சாலை செய்யும்
விதமாக ஆலயமும் விடுதி யாவும்
விளங்கிடவே கட்டினர்விண் சாலை அண்ணல்.
(93)
கண்ணாளர் காசாம்பூ ஏரி சார்ந்து
கட்டிவைத்த ஆலயம்காண் பொன்னரங்கம்
அண்ணல்திரு வடிபடிய மாரி பெய்து
அங்குற்ற ஊர்பலவும் செழிக்கக் கண்ட
வண்ணமிகு மக்களெல்லாம் திரண்டு வந்து
வாசவரை இசைமுழக்கி வரவேற்றார்கள்
விண்ணவரும் அன்னவரை உறவோர் என்று
விளித்தார்கள் மக்களெல்லாம் மகிழ்ந்தார் நன்றே!
(94)
பொன்னரங்கர் பொன்கொண்டு வந்தா ரென்று
பொய்யுரைகள் புகன்றார்கள் கள்ள நெஞ்சர்
அன்னவரைக் கொள்ளையிட வேண்டு மென்று
அழிச்சாட்டிப் பொய்ப்பயல்கள் முனைந்து வந்தார்
தென்பாண்டிச் சிங்கமெங்கள் துரையின் மக்கள்
சீறுபுலி யானார்கள் சிதறும் கள்ளர்
வன்கொடியர் தமைவெல்லும் வகைகள் செய்து
மாதவர்கள் மெய்யாட்சி நடத்தினாரே!
(95)
எண்ணவொண்ணா தீர்க்கதரி சனங்கள் வந்து
எம்பெருமான் புகழ்போற்றி குவியல் மேவும்
விண்ணவரும் மக்களுக்கு விஞ்சை மந்த்ரம்
வணக்கமுறை யாவையுமே எடுத்து வைத்தார்
வண்ணமுற ஜீவசிம்மா சனமும் ஏறி
வாசவரும் தவச்செங்கோல் ஓச்சி நின்றார்
எண்ணரிய மதம் சாதி குலத்து மக்கள்
இணங்கிவந்து ஆண்டவரை வணங்கி நின்றார்
(96)
ஆதிசைவம் வைணவமும் கிறிஸ்து இஸ்லாம்
அனைத்துமதம் வேதமெலாம் அண்ணல் சாலை
நீதமுற வந்திங்கு நெறிசார்ந் திட்டு
நிர்மலரே தலைவரென்று நிரூபித் தோங்கும்
ஏதமறு பரவெளியர் எம்மான் என்று
இசைந்தசைந்து இன்பமுற்றுப் போற்றி செய்யும்
சேதமுறா சாயுச்யம் அனைவோர் கொள்ளத்
தேவாதி தேவர்வரம் தந்தார் தானே!
(97)
ஆதியரை அண்டினபேர் அனைவ ருக்கும்
ஆண்டவர்கள் பிரம்மோப தேசம் தந்து
நீதமிகு அனந்தாதி தேவ ரென்று
நித்தியராய் ஆக்கிவைத்துப் பத்தி யங்கள்
வேதங்கள் ஓதிடும்வே தியர்க ளாக்கி
மிக்குயர்ந்த நீதித்திரு மணங்கள் செய்து
மேதினியில் நிகரில்லா வரங்கள் ஈந்து
மெய்வழிச் சாலைசெய்தார் தெய்வம் தாமே.
(98)
விண்மண்ணும் கதிர்மதியும் உள்ளமட்டும்
மெய்வழிஒன் றேநிலைக்கக் செய்தார் தெய்வம்
அண்ணல்திரு வேதம்அருள் நாமம் செப்பும்
அனைவருமே சாவாத வரம்பெற் றார்கள்
எண்ணிலடங் காதசிறப் பெல்லாம் சாரும்
யதார்த்தமன வைராக்யர் எய்தச் செய்து
கண்ணாளர் மெய்வழிஆண் டவர்கள் தெய்வம்
கர்த்தாதி கர்த்தர்புகழ் வாழி! வாழி!
(99)
ஐயர்ஐயங் கார்முதலி கவுண்டர் செட்டி
ஆச்சாரி ஆண்டியொடு கள்ளர் தேவர்
தெய்வங்கள் சேர்வைஅம்ப லக்கா ரர்கள்
சக்கிலியர் பரையர்பள்ளர் ரெட்டி யாரும்
மெய்சாரும் பண்டிதரும் மேனன் கோனார்
முத்தரையர் கருணீகர் கண்டர் போயர்
உய்வுடைய உடையார்கள் தம்பிரான்கள்
உறு செங்கண் நாயக்கர் யாதவர்கள்
(100)
தேசிகரும் நயினாரும் புலவர் பக்தர்
திருமறவர் சீக்கியரும் ராஜ புத்ரர்
ஆசிபெறும் சௌராஷ்டிரர் ஆண்டி வேளார்
ஆயிரப்பி ரியரொடு சர்மா வாரி
நேயமிகு நம்பூதரி நாயர் தீயர்
நல்லாறு சுத்தியாரும் நாடார் பாலர்
பூசாரி சைனிகரும் கண்டி வண்ணார்
பற்பலசா தியினர் வந்து பணிந்து சேர்ந்தார்.
(101)
எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
முழுமுதல் தாமோர் குருபர ராகி
மேதினிமிசை வரு கோலம்
எழுதரு சாலை ஆண்டவ ரென்று
எழில்பொலி திருவுயர் சீலம்
வழுவிலாச் சான்றோர் அனந்தர்க ளெல்லாம்
மாண்புடன் வாழ்உயர் காலம்
கெழுதகை மனுக்கள் தேவர்க ளாக
கனிவரம் தரும்ஆதி மூலம்
(102)
பொய்க்கலிக் கடையன் பொசுங்கிடச் செய்து
புத்தொழில் பிறங்கிட உலகில்
மெய்க்குடைச் செங்கோல் ஓச்சிடும் தெய்வம்
மெய்வழிச் சாலைஆண்ட வரே!
மெய்க்குலத் தோர்க்கு விதிமுறை நெறிகள்
வழிவளர் திருவுயர் இனமாய்
வைத்தனர் எங்கோன் வாழி யெம்மானின்
வளர்புகழ் வாழிவா ழியரோ!
(103)
உலகிலெத் தனையோ அவதாரம் வந்து
உற்றது யாவரும் அறிவர்
நலமுறு அன்னோர் நலிவுற உலகோர்
நாட்டினர் பற்பல இடர்கள்
கலகங்க ளாலே குடையடித் தவைதாம்
கலைந்தன சடங்குகள் மிஞ்சும்
நலம்கொளும் சாலை ஆண்டவர் வந்தே
நிலைப்படுத் திடுமெய்யின் வழியே!
(104)
பொய்ப்போ தகர்கள் முகத்திரை கிழிந்து
போயினர் நரகதன் விறகாய்
மெய்ப்பயன் பெற்ற வீரவெம் புலிகள்
மேயினர் தேவர்உத் தமராய்
துய்ப்புகள் கொடிய தீய்ந்தன மெய்யர்
துறக்கமும் மேவின நிறைவாய்
எய்ப்பெனும் எமனின் அமலடர் தீர்ந்து
எய்தினர் நித்தியம் என்றும்
நித்தியச் செல்வம் நீதிமெய் வாழ்வு
(105)
நிறைமன நெறிமுறை வழங்கி
சத்தியச் செங்கோல் ஓச்சினர் தெய்வம்
சார்ந்தனர் தேவதே வேந்த்ரர்
பத்திய நெறியில் பிறழ்வில ராகிப்
பரிசுத்தம் ஓங்கிட வாழும்
முத்தர்கள் முனிவர் எனுநிலை மேவி
முமூச்சுக ளாகினர் மன்னோ!
(106)
வித்துநா யகமே! வேத வேதாந்த
மாட்சியரே! தங்கள் தாள்கள்
மெத்தவும் பற்றி மீட்சியுற் றார்கள்
மெய்வழி தெய்வமே! போற்றி!
உத்தம புருடர் உயர்தவத் தோர்கள்
உன்னதர் எனுநிலை உவந்த
சுத்தம தோங்கும் தெய்வமே! போற்றி!
திருவடி தஞ்ச முற்றோமே!
(107)
நைவழி கடத்தி நலவழி நடத்தி
நன்மனச் செல்வர்க ளாக்கி
ஐவழி தாட்டி அறவழி ஊட்டி
அரும்பெரும் வரந்தரும் சாமி
செய்வழி காட்டி உய்வழி கூட்டும்
மெய்வழி தெய்வமே! வாழி?
மெய்வழி ஒன்றே மேதினி யெங்கும்
வாழி! ஊழூழி நாள் வாழி!
(108)
- மெய்வழி பக்தி இலக்கியங்கள்
- மெய்வழி அடியார்களின் படைப்புகள்
- சமய இலக்கியம்
- அகரமுதலான வரிசையில் படைப்புகள்
- இறையியல்
- சிற்றிலக்கியங்கள்
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
- கவிதைகள்
- திரட்டு நூல்கள்
- 2017 படைப்புகள்
- பாடல்கள்
- தற்கால புலவர்களின் படைப்புகள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்