நன்னூல்

விக்கிமூலம் இலிருந்து

பவணந்தி முனிவர் இயற்றியருளிய நன்னூல்[தொகு]

நன்னூல் விருத்தியுரை[தொகு]

(புத்தம் புத்துரை எனப்படும் விருத்தியுரை)

உரையாசிரியர்: மாதவச் சிவஞான அடிகளார்[தொகு]

(பிழையில்லா மெய்ப்பதிப்பு)[தொகு]

பார்க்க:
நன்னூல் மூலம்
நன்னூல் எழுத்ததிகாரம் 1. எழுத்தியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 2. பதவியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 3. உயிரீற்றுப்புணரியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 4. மெய்யீற்றுப்புணரியல்
நன்னூல் சொல்லதிகாரம் [[]]


நன்னூலின் சிறப்புப் பாயிரம்[தொகு]மலர்தலை யுலகின் மல்கிரு ளகல ||(01) மலர் தலை உலகின் மல்கு இருள் அகல

யிலகொளி பரப்பி யாவையும் விளக்கும் || (02)இலகு ஒளி பரப்பி யாவையும் விளக்கும்

பரிதியி னொருதா னாகி முதலீ || (03)பரிதியின் ஒரு தான் ஆகி முதல் ஈறு

றொப்பள வாசை முனிவிகந் துயர்ந்த || (04)ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த

வற்புத மூர்த்திதன் னலர்தரு தன்மையின் || (05)அற்புத மூர்த்தி தன் அலர் தரு தன்மையின்


மனவிருளிரிய மாண்பொருண் முழுவதும் ||(06)மன இருள் இரிய மாண் பொருள் முழுவதும்

முனிவற வருளிய மூவறு மொழியுளுங் || (07)முனிவு அற அருளிய மூ அறு மொழியளும்

குணகடல் குமரி குடகம் வேங்கட || (08)குண கடல் குமரி குடகம் வேங்கடம்

மெனுநான் கெல்லையி னிருந்தமிழ்க் கடலு || (09)எனும் நான்கு எல்லையின் இருந்தமிழ் கடலுள்

ளரும்பொரு ளைந்தையும் யாவரு முணரத் || (10)அரும் பொருள் ஐந்தையும் யாவரும் உணர


தொகைவகை விரியிற் றருகெனத் துன்னா || (11)தொகை வகை விரியில் தருக என துன்னார்

ரிகலற நூறி யிருநில முழுவதுந் || (12)இகல் அற நூறி இருநிலம் முழுவதும்

தனதெனக் கோலித் தன்மத வாரணந் || (13)தனது என கோலி தன்மத வாரணம்

திசைதொறு நிறுவிய திறலுறு தொல்சீர்க் || (14)திசைதொறும் நிறுவிய திறல் உறு தொல் சீர்

கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் || (15)கரும் கழல் வெண் குடை கார் நிகர் வண் கை


திருந்திய செங்கோற் சீய கங்க || (16)திருந்திய செங்கோல் சீய கங்கன்

னருங்கலை வினோத னமரா பரணன் || (17)அரும் கலை வினோதன் அமர் ஆபரணன்

மொழிந்தன னாக முன்னோர் நூலின் || (18)மொழி்ந்தனன் ஆக முன்னோர் நூலின்

வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன் || (19) வழியே நன்னூல் பெயரின் வகுத்தனன்

பொன்மதிற் சனகைச் சன்மதிமுனியருள் || (20)பொன் மதில் சனகை சன்மதி முனி அருள்


பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி || (21)பன்னரும் சிறப்பின் பவணந்தி

யென்னு நாமத் திருந்தவத் தோனே. || (22)என்னும் நாமத்து இரும் தவத்தோனே.

-என்பது பாயிரம்.

மலர்தலை யுலகிற் பலநூ லாய்ந்து
செய்வதும் தவிர்வதும் பெறுவதும் உறுவதும்
உய்வதும் அறியேன் ஒருபொரு ளாக
நன்னெறி பிறழா நற்றவத் தோர்பெறும்
தன்னடித் தாமரை தந்தெனை யாண்ட
திருவா வடுதுறைத் தேசிக னாகிய
கருணையங் கடலைஎன் கண்ணைவிட் டகலாச்
சுவாமி நாத குரவனை அனுதினம்
மனமொழி மெய்களிற் றொழுதவ னருளால்
பொன்மலை யெனஇப் புவிபுகழ் பெருமை
மன்னிய வூற்று மலைமரு தப்பன்
முத்தமிழ்ப் புலமையும் முறையர சுரிமையும்
இத்தலத் தெய்திய இறைமக னாதலின்
நன்னூற் குரைநீ நவையறச் செய்து
பன்னூற் புலவர்முன் பகர்தியென் றியம்பலின்
நன்னா வலர்முக நகைநா ணாமே

என்னால் இயன்றவை இயற்றுமிந் நூலுள்,

இப்பாயிரம் என்னுதலிற்றோவெனின்:

வலம்புரி முத்தின் குலம்புரி பிறப்பும்
வான்யா றன்ன தூய்மையும் வான்யாறு
நிலம்படர்ந் தன்ன நலம்படர் ஒழுக்கமும்
திங்க ளன்ன கல்வியும் திங்களொடு
ஞாயி றன்ன வாய்மையும் யாவதும்
அஃகா வன்பும் வெஃகா உள்ளமும்
துலைநா அன்ன சமநிலை யுளப்பட
எண்வகை உறுப்பின ராகித் திண்ணிதின்
வேளாண் வாழ்க்கையும் தாஅளாண்மையும்
உலகியல் அறிதலும் நிலைஇய தோற்றமும்
பொறையும் நிறையும் பொச்சாப் பின்மையும்
அறிவும் உருவும் ஆற்றலும் புகழும்
சொற்பொருள் உணர்த்துஞ் சொல்வன் மையும்
கற்போர் நெஞ்சம் காமுறப் படுதலும்
இன்னோ ரன்ன தொன்னெறி மரபினர்
பன்னருஞ் சிறப்பின் நல்லா சிரியர்
அறனே பொருட்பயன் இன்பெனும் மூன்றின்
திறன்றி பனுவல் செப்புங் காலை
முன்னர்க் கூறிய எண்வகை யுறுப்பினுள்
ஏற்பன வுடைய ராகிப் பாற்படச்
சொல்லிய பொருண்மை சொல்லியாங் குணர்தலும்
சொல்லிய பொருளொடு சூழ்ந்துநன் குணர்தலும்
தன்னோ ரன்னோர்க்குத் தான்பயப் படுதலும்
செய்ந்நன்றி யறிதலும் தீச்சார் பின்மையும்
மடிதடு மாற்றம் மானம்பொச் சாப்புக்
கடுநோய் சீற்றம் களவே காமம்
என்றிவை யின்மையும் சென்றுவழி படுதலும்
அறத்துறை வழாமையும் குறிப்பறிந் தொழுகலும்
கேட்டவை நினைத்தலும் பாடம் போற்றலும்
மீட்டவை வினவலும் விடுத்தலும் உரைத்தலும்
உடைய ராகி நடையறிந் தியலுநர்
நன்மா ணாக்கர் என்ப மண்மிசைத்

தொன்னூற் புலமைத் துணிபுணர் வோரே”

என ஆத்திரையன் பேராசிரியன் கூறிய பொதுப் பாயிரத்தானே பன்னருஞ் சிறப்பின் நல்லாசிரியனை யுணர்ந்து வழிபட்டு ஒரு நூல் கேட்பான் புகுந்த நன்மாணாக்கர்க்கு, அந்நூலான் நுவலப்படும் பொருளும், அந்நூல் கேட்டலாற் பெறப்படும் பயனும், கேட்டற்குரிய அதிகாரிகளாவார் இவரென்பதூஉம், இன்னது முற்றிய பின்னர் இந்நூல் கேட்கற்பாற்று என்னும் இயைபும் உணந்தன்றி, நூல் கேட்டற்கண் மனவூக்கஞ் செல்லாமையின், இன்றியமையாச் சிறப்பினவாய இந்நான்கும் ஒருதலையாக முன்னர் உணர்த்தல் வேண்டும்; இந்நான்கும் உணர்ந்தவழியும் கற்றுவல்ல சான்றோரல்லாராற் செய்யப்பட்ட நூலாயின் கூறியதுகூறல் முதலிய குற்றமுடைத்தாமன்றே யெனவும், கற்றுவல்ல சான்றோரும் மற்றோர்கோட்பாடு பற்றிச் செய்யின் முனைவனூலொடு முரணுமன்றே யெனவும் ஐயுற்று ஊக்கஞ் செல்லாமையின், அவ் ஐயம் நீக்குதற் பொருட்டு ஆக்கியோன் பெருமையும், நூற் பெருமையும், அந்நூல் வழங்கும் நிலமும், அதன் முதனூலும் இவையென்பது தோன்ற ஆக்கியோன் பெயரும் வழியும் எல்லையும் நூற்பெயரும் உணர்த்தல் வேண்டும். ஆகலின், இவ்வெட்டும், இவ்வெட்டுடனே காலம் களன் காரணம் என்னும் மூன்றும் கூட்டிப் பதினொன்றும் தெரிப்பதே சிறப்புப் பாயிரத்தின் இலக்கணமென மேல் வகுக்கப்படும் ஆக்கியோன்பெயர் முதலியன உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்:

மலர் தலை உலகின் = பரந்த இடத்தையுடைய உலகத்தின்கண்ணே
மல்கு இருள் அகல = நிறைந்த கண்ணிருள் கெட
இலகு ஒளி பரப்பி = விளங்கும் கதிரை விரித்து,
யாவையும் விளக்கும் = கட்பொறிக்கு விடயமாகிய உருவம் அனைத்தினையும் காட்டும்,
பரிதியின் = சூரியனைப் போல,
ஒரு தான் ஆகி = உலகுக்கெல்லாம் தான் ஒரு முதலேயாகி,
முதல் ஈறு ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த = தோற்றமும் ஒடுக்கமும் உவமையும் அளவும் விருப்பும் வெறுப்பும் ஆகியவற்றை இயல்பாகவே நீங்கி நிற்றலால் தலைவனாகிய,
அற்புதமூர்த்தி = ஞானமே திருமேனியாகவுடையான்,
தன் அலர் தரு தன்மையின் = தனது விரிந்த தன்மையாகிய கருணையினாலே,
மன இருள் இரிய = உயிர்களின் மனத்திருளாகிய அவித்தை கெட,
மாண் பொருள் முழுவதும் = மாட்சிமைப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு பொருளையும்,
முனிவு அற அருளிய = விருப்புடன் அருளிச் செய்த,
மூவறு மொழியுளும் = பதினெண்ணிலத்து மொழிகளுள்ளும்,
குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனும் நான்கு எல்லையின் இருந்தமிழ்க் கடலுள் = இந்நான்கு எல்லையினையுடைய யிலத்து மொழியாகி இயல் இசை நாடகம் என்று பெயர்பெற்ற பெரிய தமிழென்னுங் கடலுள்,
அரும்பொருள் ஐந்தையும் = அவ்வறமுதற் பொருள் நான்கையும் உணர்தற்குக் கருவியாய் அருமையவாகிய இயற்றமிழின் பாகுபாடான எழுத்துச் சொற்பொருள் யாப்பு அணியென்னும் ஐந்து பொருளையும்,
யாவரும் உணர = அவ்வியற்றமிழ் உணர்தற்கு முன்னரே உயர்ந்தோர் செய்யுளிடத்து ஆராய்ச்சி உடையராய் அவ்வாராய்ச்சியான் வலியோரேயன்றி எளியோருமுணர,
தொகை வகை விரியின் தருக என = வழியின் நெறியாகிய நால்வகையுள் தொகுத்தும் வகுத்தும் விரித்துமாக்கப்படும் யாப்பினால் பாடித் தருக என,
துன்னார் இகல் அற நூறி = பகைவரது பகைமை கெட அவரைத் துணித்து,
இருநிலம் முழுவதும் தனது எனக் கோலி = பெரிய பூமியனைத்தினையும் தன்னுடையதாகப் பற்றிக்கொண்டு,
தன் மத வாரணம் திசைதொறும் நிறுவிய திறல் உறு தொல் சீர் = தன் மத யானைகளை எட்டுத் திக்கினும் திசைக்களிறுகள் போல நிறுத்திய வெற்றி மிகுந்து தன்னளவேயன்றித் தன்தாதை மூதாதை முதலியோரைத் தொட்டுவரும் கீர்த்தியினையும்,
கருங்கழல் = பெருமை பொருந்திய வீரக் கழலினையும்,
வெண்குடை = வெண்கொற்றக் குடையினையும்,
கார்நிகர் வண்கை = மேகம்போலக் கைம்மாறு கருதாது கொடுக்கும் கையினையும்,
திருந்திய செங்கோல் = கெடாத செங்கோலினையுமுடைய,
சீய கங்கன் = சிங்கம் போன்ற கங்கன்,
அருங்கலை வினோதன் = அரிய நூல்களை ஆராய்தலே பொழுது போக்கும் விளையாட்டாகவுடையான்,
அமர் ஆபரணன் = தன்னகத்து விழுப்புண்பட அமர்செய்தலையே ஆபரணமாகவுடையான்,
மொழிந்தனன் ஆக = சொன்னானாக,
முன்னோர் நூலின் வழியே = தொல்லாசிரியர் நூலின் வழியே,
நன்னூற் பெயரின் வகுத்தனன் = நன்னூலென்னும் பெயரினாற் செய்தனன்,
பொன்மதில் சனகை = பொன்மதில் சூழ்ந்த சனகாபுரத்துள் இருக்கும்,
சன்மதிமுனி அருள் = சன்மதி முனிவன் பெற்ற,
பன்னருஞ் சிறப்பின் பவணந்தி என்னும் நாமத்து = சொல்லுதற்கு அரிய ஞானவொழுக்கச் சிறப்பினையும், பவணந்தி என்னும் பெயரினையும் உடைய,
இருந்தவத்தோன் = பெரிய தவத்தினையுடையோன் என்றவாறு.

இதனுள், பவணந்தி எனவே ஆக்கியோன் பெயரும், முன்னோர் நூலின்வழி யெனவே வழியும், நான்கு எல்லையெனவே எல்லையும், நன்னூல் எனவே நூற்பெயரும், அரும்பொருள் ஐந்து எனவே நுதலிய பொருளும், அவற்றை யாவரும் உணர எனவே முன்னர் நிகண்டு கற்றுச் செய்யுள் ஆராய்ச்சி உடையார்க்கே அவற்றை யாராய்வுழி அவற்றின்கண் உளவாகிய செய்கை வேறுபாடுகளுஞ் சொல்முடிவு பொருள்முடிவு வேறுபாடுகளும் இன்னவென்று துணியப்படாமையின், அவற்றைத் துணிந்து அறியவேண்டி இவ்வியற்றமிழ் நூல் கேட்டறிதலின்கண்ணே ஊக்கஞ் செல்லுமாகலின் அவை ஆராய்ந்த பின்னர் இது கேட்கற்பாற்றென்னும் யாப்பும், அவை ஆராய்ந்தோர் இது கேட்டற்குரியார் என்னும் கேட்போரும், அவர் அப்பொருள் ஐந்தினையும் உணர்ந்து மொழித்திறத்தின் முட்டறுத்தலின் மொழித்திறத்தின் முட்டறுத்தல் என்னும் பயனும், சீயகங்கன் மொழிந்தனனாக நன்னூற் பெயரின் வகுத்தனன் எனவே, அவன் காலத்துப் பாடப்பட்டு அவனது அவைக்களத்து அரங்கேறியது எனக் காலமும் களனும், சீயகங்கன் மொழிந்தமையானும் யாவரிடத்தும் இரக்கமுடைமையானும் வகுத்தமையால் காரணமும் பெறப்பட்டன.

இனி, இவற்றுள் காலம் முதலிய மூன்றும் நூல் செய்தார் காலத்து நிகழ்ந்தன; ஆக்கியோன் பெயர் முதலிய எட்டும் நூல்செய்தார் காலத்தும் நூல் வழங்குங் காலத்தும் ஒப்ப நிகழ்வன; இவை தம்முள் வேற்றுமை. கழிந்தவற்றை உணர்தலால் பெரும்பயனின்மையின் அவை ஒரு சாராராற் கொள்ளப்பட்டன; ஆக்கியோன் பெயர் முதலிய ஒருதலையான் உணர வேண்டுதலின் அவை எல்லா ஆசிரியரானும் கொள்ளப்பட்டன.

வடநூலார், யாப்பை ஆனந்தரியம் என்றும், நுதலிய பொருளை விடயம் என்றும், கேட்போரை அதிகாரிகள் என்றும், பயனைப் பிரயோசனம் என்றும் கூறுப. அவருள் ஒரு சாரார், ஆனந்தரியப் பொருள் நூலைப் பயப்பித்தற்குக் காரணமாய்க் கேட்போரை விசேடித்து நிற்றலின் வேறு கூறவேண்டா என்னும் கருத்தால் ஆனந்தரியம் நீக்கிச் சம்பந்தமொன்றும் கூட்டி நான்கென்பாராயினார். சம்பந்தம் என்பதூஉம் யாப்பு என்னும் பொதுச்சொல்லால் கொள்ளப்படும். அது, நன்னூற் பெயரின் வகுத்தனன் எனவே நூற்கும் நூல் நுதலிய பொருட்கும் வகுப்பதூஉம் வகுக்கப்படுவதூஉமாகிய சம்பந்தம் என்பது பெறப்பட்டது. யாப்பு, இயைபு, தொடர்ச்சி என்பன ஒரு பொருட்கிளவி.

ஈண்டுக் கேட்டல் பாடங்கேட்டல்; அது “கேள்வி விமரிசம் பாவனை” என்பதனானும், ‘கேட்டவை நினைத்தலும் பாடம் போற்றலும்’ (41) என்பதனானும், ‘ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின்’ (42) என்பதனானும் உணர்க.

இவ்வெட்டும் உணர்ந்ததற்குப் பயன் நூல் பயிலுதற்கண் ஊக்கம் உண்டாதல். ஊக்கம் - உள்ளக் கிளர்ச்சி.

இனி, வாய்ப்பக் காட்டல் என்பதனானே இத்துணைச் சிறப்பிலவாய், அவ்வவற்றிற்கு இனமாய்க் காட்டப்படுவனவுமுள என்பது பெற்றாம். அவை ஆக்கியோன் பெயரேயன்றி ஆக்குவித்தோன் பெயர் கூறுதலும், வழியேயன்றி அதன்வகையாகிய தொகுத்தல் முதலிய நான்கினுள் ஒன்றாமாறு கூறுதலும், தன் முதனூலுக்கு வழிகூறுதலும், அதுவந்த மரபுவழி கூறுதலும், பொதுவெல்லை கூறுதலேயன்றிச் செந்தமிழ் முதலியவற்றின் சிறப்பெல்லை கூறுதலும், நூற்பெயரேயன்றிப் படலப் பெயர் ஓத்தின்பெயர் கூறுதலும், நூற்கு இயைபு கூறுதலேயன்றி நூலினுள் படலம் முதலியவற்றிற்கு இயைபு கூறுதலும், சம்பந்தங் காட்டுவார் மதத்தின் நூற்கும் நூனுதலிய பொருட்கும் கிழமை கூறுதலேயன்றி நூல் நுதலிய பொருட்கும் பயனுக்கும் கிழமை கூறுதலும், நூற்கும் நூல் செய்தோனுக்கும் கிழமை கூறுதலும், நூற்கும் நூல் செய்தோனுக்கும் கிழமை கூறுதலும், நூனுதலிய பொருளேயன்றிப் படலம் நுதலியதூஉம் ஓத்து நுதலியதூஉம் சூத்திரம் நுதலியதூஉம் கூறுதலும், கேட்போரேயன்றிக் கேட்பிப்போரைக் கூறுதலும், பயனேயன்றிப் பயனுக்குப் பயன் கூறுதலுமாம்.

இவ்வெட்டனுள் சீயகங்கன் எனவே ஆக்குவித்தோன் பெயரும், தொகை வகை விரி எனவே வழியின் வகையும், மாண்பொருள் முழுவதும் எனவே பயனுக்குப் பயனும் பெறப்பட்டன. ஏனைய இந்நூலுள் வந்துழி வந்துழிக் காண்க.

பயனுக்குப் பயனாவது, (வெண்பா):

 “எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் - மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணுர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்.”

-என்பதனால் காண்க. எனவே, முதல் நூற்பொருள் உணர்தற்கு முறையானே இது கருவி நூல் என்பது பெறப்பட்டது. முதல் நூல் என்றது அறம் முதலிய நான்கினையும் உணர்த்தும் நூலையென அறிக. எழுத்து என்றது இயற்றமிழை. அது, “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப” என்பதனாலும் உணர்க. இசைத்தமிழும் நாடகத்தமிழும் இவ்வியற்றமிழ்போல முதல் நூற்பொருளுணர்தற்குக் கருவியானமையின், இயற்றமிழொன்றுமே கூறினார்; ஆயின் இயற்றமிழை அரும்பொருளைந்து எனக் கூறினமையின், இந்நூலுட் கூறிய, பொருள் யாப்பு அணிகள் என்னும் மூன்று அதிகாரங்களும் அக்காலத்துள்ளன போலும்.

ஈண்டுக் கேட்பிப்போர் இயற்றமிழ் வல்ல ஆசிரியர். படலம் நுதலியது இவ்வதிகாரம் என்னுதலிற்றோவெனின் என்பது. ஓத்து நுதலியது இவ்வோத்து என்னுதலிற்றோவெனின் என்பது. சூத்திரம் நுதலியது இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின் என்பது. படலத்திற்கு இயைபு மேலையதிகாரத்தோடு இயைபுடைத்தாயிற்று என்பது. ஓத்திற்கு இயைபு மேலையோத்தினோடு இயைபுடைத்தாயிற்று என்பது. சூத்திரத்திற்கு இயைபு மேலைச் சூத்திரத்தோடு இயைபுடைத்தாயிற்றென்பது. இவை, நூன்முகத்துக்குக் காட்டப்படுதலேயன்றிப் படல முகத்தும், ஓத்து முகத்தும், சூத்திரமுகத்தும் காட்டப்படும். இவையெல்லாம் பாயிரமேயாம். பிறவும் இவ்வாறே கண்டுகொள்க.

அற்றேல், கேட்போர் மாணாக்கரும் கேட்பிப்போர் ஆசிரியருமாகலான், இவ்விரண்டும் பொதுப்பாயிரத்தால் பெறப்படுமாலோவெனின், அற்றன்று; பொதுவகையான் ஆசிரியர்க்கும் மாணாக்கர்க்கும் இலக்கணம் பெறப்பட்டன அல்லது, இந்நூற்கு இன்னாரென்னும் சிறப்புவகை ஆண்டுப் பெறப்படாமையின், இஃது ஈண்டுக் காட்டப்படும். இது காட்டாக்கால், சிற்றறிவோர் பெருநூலும், பேரறிவோர் சிறுநூலும், முத்தமிழுள் ஒரு நூற்குரியார் ஏனை இரண்டு நூலும், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கனுள் ஒன்றற்கு உரியார் ஏனை மூன்று நூலும் கேட்பான்புக்கு இடர்ப்பட்டு மயங்குப ஆகலின், இஃது ஒருதலையாற் காட்டல் வேண்டும் என்பது. இதுபற்றியன்றே, பொது எனவும் சிறப்பு எனவும் பாயிரம் இருபகுதிப்பட்டதூஉம் என்க.

இக்கருத்தறியாத உரையாசிரியை உள்ளிட்டோரெல்லாரும், நூலரங்கேறும் அவைக்களத்துக் கேட்டாரைக் கேட்போர் என்றும், தொகுத்தல் முதலிய வழியின் வகையினை யாப்பு என்றும் கூறினார். ஆக்கியோன் பெயர் நுதலியபொருள் என்பனபோல இறந்த காலத்தால் கூறாது கேட்போர் என எதிர்காலத்தால் கூறியதே அஃது உரையன்மைக்குச் சான்றாம் ஆகலானும், காலம் களத்துள் அடங்குதலின் வேறு கூறவேண்டாமையானும், ஆக்கியோன் பெயர் முதலியன போல நூல் வழங்குங் காலத்து நிகழ்வதன்றாகலின் அவற்றோடு ஒருங்குவைத்து எண்ணல் பொருந்தாமையானும், கேட்டற்கு உரிய அதிகாரிகளாவாரை ஒரு தலையாக உணர்த்தல் வேண்டும் ஆகலானும், தொகுத்தல் முதலியன வழியுள் அடங்குதலானும், இயைபும் ஒருதலையான் உணர்தற்பாலது ஆகலானும், யாம் கூறியதே வடநூலார்க்கும் உடன்பாடு ஆகலானும் அவருரை போலியுரை என்க.

வழியின் வகையாகிய நால்வகை யாப்பினுள் தொகை விரியாப்பு என ஒன்று போந்ததன்றித் தொகைவகைவிரி எனப் போந்ததில்லையாலோ எனின், நடுநின்ற வகை, பின் நின்ற விரியை நோக்கின் தொகையாகவும், முன்னின்ற தொகையை நோக்கின் விரியாகவும் அடங்குதலின், இது தொகைவிரி யாப்பு என்றதன்பாற்படும் என்க; எனவே, தொகைவிரி என இரண்டாய் வரினும், மரத்தினது பராரையினின்றும் கவடு கோடு கொம்பு வளார் பலவாய் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டெழுந்து நிற்றல்போல் தொகையினின்றும் ஒன்றோடொன்று தொடர்படப் பகுக்கப்பட்டுப் பலவாய் வரினும் தொகை விரியாப்பேயாம் என்க.

இப்பாயிரம் ஒரு நூற்கு உரித்தாகலின் சிறப்புப் பாயிரமாம் என்க.

(விருத்தம்)

நன்னூலுட் கருத்துலகோர் அறியவுரை செய்கவென நரேந்திர சிங்கம்
தென்னூற்று மலைமருதப் பன்புகலப் பொருள்விளங்கச் செய்தான் பாரில்
எந்நூற்கும் எழுத்தொடுசொற் பொருளறிசங் கரநமச்சி வாயன் என்னும்

பன்னூற்செந் தமிழ்ப்புலவன் சைவசிகா மணிநெல்லைப் பதியி னானே. (1)

அகத்தியந்தொல் காப்பியமே முதலியமுன் னூல்கள்பல ஆய்ந்து முப்பால்
பகுத்ததிரு வள்ளுவரே முதன்ஞான நூல்களெலாம் பகல்செய் வான்போல்
இகத்திலுரை செயவலசங் கரநமச்சி வாயனெனும் இசைப்பேர் பெற்ற

தகைப்புலவன் நன்னூலுக் குரைவகுத்த தொருவியப்போ தமிழ்வல் லோரே. (2)

முன்னூற்கும் மலயமுனி தன்னூற்கும் புவியிடத்து முதியோ ராற்சொல்
எந்நூற்கும் தமிழ்க்கடலுள் இனியியற்று நூற்கும்வகை இதனாற் காட்டி
நன்னூற்கு விருத்துரைசெய் தான்றிகந் தத்தளவு நடத்துங் கீர்த்தித்

தென்னூற்று மலைமருதப் பன்சொலச்சங் கரநமச்சி வாயன் றானே. (3)

-இம்மூன்றும் உரைப்பாயிரம்.


நன்னூலின் சிறப்புப்பாயிரம் முற்றிற்று

பாயிரவியல்[தொகு]

பொதுப் பாயிரம்[தொகு]

நூற்பா:1

(பாயிரத்தின் பெயர்கள்)

முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்

முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்

புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்.

புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்.

(01)

என்பது சூத்திரம். என்னுதலிற்றோவெனின், பாயிரத்திற்கு வரூஉம் காரணக்குறிகள் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்: பாயிரத்தின் இலக்கணங்களை முன் உணர்ந்தல்லது, நூல்களைச் செய்தலும் அவற்றை ஈதலும் ஏற்றலும் முடியாமை கருதி முன்னுரைத்தலின் முகவுரை என்றும்,

“பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத்
தொகுதி யாகச் சொல்லுதல் தானே”

- என்பவாகலின், மேல்வகுக்கும் ஐந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பல்வகைப் பொருளையும் தொகுத்துச் சொல்லுதலின் பதிகம் என்றும், நூலினது பெருமை முதலிய விளங்க அணிந்துரைத்தலின் அணிந்துரை என்றும், முகவுரை என்றதுபோல நூன்முகம் என்றும், நூனுதலிய பொருளல்லனவற்றை உரைத்தலின் புறவுரை என்றும், நூற்குள்ள நுதலியபொருளல்லனவற்றை அதற்குத் தந்துரைத்தலின் தந்துரை என்றும், அணிந்துரை என்றாற்போலப் புனைந்துரை என்றும் பாயிரத்துக்குப் பெயராம் என்றவாறு.

பாயிரம் என்பது வரலாறு. பாயிரம் கூறப்புகுந்தார் நிகண்டுபோல அதன் பெயர் விகற்பங்களைக் கூறியது என்னையெனின்:- இப்பாயிரம், பதிகமாகிய புறவுரையாய்த் தந்துரைக்கப்படுவதேனும், நூற்கு இன்றியமையாத அணியாய் முன்னுரைக்கப்படுவது என்பது இக்காரணக் குறிகளான் விளங்குதலின் என்க. (௧)


நூற்பா: 02

(பாயிரத்தின் வகை)
பாயிரம் பொதுச்சிறப் பெனவிரு பாற்றே பாயிரம் பொது சிறப்பு என இரு பாற்றே. (02)

என்னுநுதலிற்றோவெனின், மேற் பாயிரம் என்றதனை வகுத்துணர்த்துதல் நுதலிற்று.

இதன்பொருள்: மேற்பாயிரம் என்றது பொதுப்பாயிரமும், சிறப்புப் பாயிரமும் என இருவகையினையுடைத்து என்றவாறு.


நூற்பா: 03

(பொதுப்பாயிரம்- இலக்கணம்)
நூலே நுவல்வோ னுவலுந் திறனே [01] || நூலே, நுவல்வோன், நுவலும் திறனே
கொள்வோன் கோடற் கூற்றா மைந்து [02] || கொள்வோன், கோடல் கூற்றாம் ஐந்தும்
மெல்லா நூற்கு மிவைபொதுப் பாயிரம். [03] || எல்லா நூற்கும் இவை பொதுப் பாயிரம். (03)
என்நுதலிற்றோவெனின், இருவகைப் பாயிரத்துள் பொதுப்பாயிரத்தை விரித்துணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்: நூலினது வரலாறும், ஆசிரியனது வரலாறும், அவ்வாசிரியன் நூலை மாணாக்கற்குச் சொல்லுதலின் வரலாறும், மாணாக்கனது வரலாறும், அவன் கேட்டலின் வரலாறும் என்னும் ஐந்தும் எல்லா நூற்குமாம் ஆதலின், இவ்வைந்து வரலாற்றையும் விளங்க உணர்த்துவது பொதுப்பாயிரமாம், என்றவாறு.

திறன் = கூற்று, என்றது வரலாற்றையாதலின், அதனை ஏனையவற்றுள்ளும் பிரித்துரைத்தாம். ஆம் என்பதனை எல்லா நூற்கும் ஆம் எனக் கூட்டுக.

 “ஈவோன் தன்மை ஈதல் இயற்கை
கொள்வோன் தன்மை கோடல் மரபென
ஈரிரண் டென்ப பொதுவின் தொகையே.”

- என்பாரும் உளராலோவெனின்:- பாயிரம் கூறுதல் நூல்கட்கு அன்றிப் பிறவற்றிற்கன்றே; அங்ஙனமாதலின், நூல்களின் வரலாறு ஒன்றுமே கூற வேண்டும்; அதனோடு ஆசிரியன் வரலாறு முதலிய நான்கினையும் உடன்கூறுதல், வரலாற்று முறைமையின் வாராதார் நூல்களைக் கற்பிக்கவும் கற்கவும் புகின்,

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.” (திருக்குறள், 836)[1]

-என்றவாறேயாய், நூல்கள் அருமையும் பெருமையும் கெட்டுப் பயன்படாவாம் என்பது கருதியென்க.

அங்ஙனமாயின்,நூன்முகத்து உரைக்கப்படும் பாயிரவுறுப்பினுள் நூலைக் கூறுவது பொருந்தாதென்னின்:- இவ்விலக்கணத்தான் அமைபவன் ஆசிரியன் என்றாற் போல இவ்விலக்கணத்தான் அமைவது நூலென்றது அன்றிப் பாயிரத்துள் நூலைக் கூறியதன்றாம். ஆதலின், ஆசிரியர் தொல்காப்பியர் நூலின் இயல்பை ஓத்துறுப்பாகிய மரபியலுள் கூறினாற்போல, இவ்வாசிரியர் பாயிரவுறுப்பினுள் கூறினார் என்க.

1. இதன்பொருள்: “செய்யும் வகை அறியாத பேதை (கையறியாப் பேதை) ஒரு காரியத்தை மேற்கொள்வானாயின், மேற்கொண்ட காரியம் பிழைபடும்; அம்மட்டோ! தானும் தளை பூணும்” என்பதாம்.

1. நூலினது வரலாறு[தொகு]

நூற்பா: 04

(நூலினது இலக்கணம்)
நூலி னியல்பே நுவலி னோரிரு [01] || நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய் [02] || பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி [03] || நாற்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி
யையிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ [04] || ஐயிரு குற்றமும் அகற்றி அம் மாட்சியோடு
டெண்ணான் குத்தியி னோத்துப் படல [05] || எண் நான்கு உத்தியின் ஓத்து படலம்
மென்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை [06] || என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே. [07] || விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே. (04)

-என்னுதலிற்றோவெனின், மேற்கூறிய ஐந்தனுள் (பார்க்க: நூற்பா, 03) நூலினது வரலாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்: மேற்கூறிய ஐந்தனுள் நூலினது வரலாற்றைச் சொல்லின், இருவகைப் பாயிரத்தையும் முன்னுடைத்தாதல் முதலாக இங்ஙனம் விகற்பித்த பதினொரு விகற்பநடைகளைப் பெற்றுவரும் என்றவாறு.


நூற்பா: 05

(நூல்களின் வகை)

முதல்வழி சார்பென நூன்மூன் றாகும் [01] || முதல், வழி, சார்பு என நூல் மூன்று ஆகும் (05)

-என்னுதலிற்றோவெனின், நூலினது வரலாற்றைத் தொகுத்துக் கூறினார்; அவற்றுள் ‘ஓரிருபாயிர’த்திற்கு வகை போந்து கிடந்தமையின் அதனை ஒழித்து, ஏனையவற்றை வகுத்துக் கூறுவான் தொடங்கி ‘மும்மையின் ஒன்றாய்’ (நூற்பா, 04) என்றதனை வகுத்துணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்: முதனூல், வழிநூல், சார்புநூல் என மூன்று கூற்றதாம் நூல் என்றவாறு.


நூற்பா: 06

(முதல்நூல்)

அவற்றுள், [01] || அவற்றுள்
வினையி னீங்கி விளங்கிய அறிவின்[02] || வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும். [03] || முனைவன் கண்டது முதல் நூல் ஆகும். (06)

என்னுதலிற்றோவெனின், நூல் மூன்றனுள் முதனூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்: வினையின் நீக்கி விளக்கப்படும் அறிவினையுடைய உயிர்கட்கு, வினையின் நீங்கி விளங்கிய அறிவினையுடைய முதல்வன் ஆதிக்கண்ணே செய்தது யாது? அது முதல்நூலாம் என்றவாறு.

இது தொல்காப்பிய மரபியல் 94-ஆம் நூற்பா. இங்கு ‘ஆசிரிய வசன’மாக எடுத்தாளப்பட்டுள்ளது.

நூற்பா: 07

(வழி நூல்)
முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப் [01] || முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்து
பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி [02] || பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
யழியா மரபினது வழிநூ லாகும். [03] || அழியா மரபினது வழிநூல் ஆகும். (07)

என்னுதலிற்றோவெனின், வழிநூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன்பொருள்: தொல்லாசிரியர் நூல்களின் பொருள் முடிபு முழுவதுமொத்து, வழி நூல் செய்வோன் முதனூல் உளதாகவும் தான் வழிநூல் செய்தற்குக் காரணமாக வேண்டிய விகற்பங்களையும் உடன்கூறி, அவ்விகற்பங்கள் உணர்வுடையோர் பலர்க்கும் ஒப்ப முடிந்தமையின, அழியாது உலகத்து நின்று நிலவும் மரபினையுடையது வழிநூலாம் என்றவாறு.

பின்னோன் வேண்டும் விகற்பங் கூறுதலாவது: ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல’ (நூற்பா: 462) என்றவற்றை இறந்தது விலக்கல் எதிரது போற்றல் என்னும் உத்திகளான் விலக்கியும் போற்றியும் கூறுதல் முதலியன.

‘முனைவன் கண்டது முதனூ லாகும்’ (நூற்பா, 06) என ஒருமையாற் கூறினார், ஈண்டு முன்னோர் நூல் எனப் பன்மையால் கூறியது, இறைவன் நூலையும் அவன் அருள்வழிப் பட்டுத் தத்தம் மரபின் வரும் குரவர் (குரவர் - ஆசிரியர்) பலர் நூலையும் தழீஇக்கோடற்கு என்க. எனவே, முதனூல் மாத்திரையாய் நிற்பது இறைவன் நூலும், வழிநூல் மாத்திரையாய் நிற்பது இறுதி நூலும் அன்றி, இடைநிற்கும் நூல்களெல்லாம் ஒருவற்கு மைந்தனாயினான் மற்றொருவற்குத் தந்தையாயினாற்போல, முதல்நூலாயும் வழிநூலாயும் நிற்கும் என்பது பெற்றாம்.

இறந்தது விலக்கல் - இறந்துபோன வழக்குகளை விலக்குதல், எதிரது போற்றல் - இப்போது வழங்குவனவற்றைத் தழுவிக்கொள்ளுதல்.


நூற்பா: 08

(சார்பு நூல்)
இருவர் நூற்கு மொருசிறை தொடங்கித் [01] || இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கி
திரிபுவே றுடையது புடைநூ லாகும். [02] ||திரிபு வேறு உடையது புடைநூல் ஆகும். (08)

என்னுதலிற்றோவெனின், சார்புநூல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன்பொருள்
முதனூல் வழிநூல் என்னும் இருதிறத்து நூல்கட்கும் பொருள்முடிபு ஒருபுடையொத்து, ஒழிந்தன எல்லாம் ஒவ்வாமையுடையது சார்புநூலாம் என்றவாறு.

எனவே, முதனூற்கு, வழிநூலும் சார்புநூலும், ஒருவற்கு மைந்தனும் மருமானும் போலும் என்க.

ஒருநூல், தனக்கு வழிநூலை நோக்கின் முதனூலாகவும், முதனூலை நோக்கின் சார்புநூலாகவும் நிற்குமாயினும் இம்முத்திறத்தினுள் ஒரு திறத்தின்கண் மற்றொரு திறம் இன்மையின், ‘மும்மையின் ஒன்றாய்’ (நூற்பா, 04) என்றார்.

(மருமான் - மருமகன் (சகோதரியின் புதல்வன்). சங்கநூல்களில் இச்சொல் வழித்தோன்றலைக் குறிக்கும். இப்பொருளிலேயே இங்கு ஆளப்பெற்றுள்ளமையுங் கருதுக. 139-ஆம் நூற்பா பார்க்க)


நூற்பா: 09

(வழிநூலுக்கும் சார்புநூலுக்கும் உரிய சிறப்புவிதி)
முன்னோர் மொழிபொருளே யன்றி அவர்மொழியும் || முன்னோர் நூலின் மொழி பொருளே அன்றி அவர் மொழியும்
பொன்னேபோற் போற்றுவ மென்பதற்கும்- முன்னோரின் || பொன்னே போல் போற்றுவம் என்பதற்கும் - முன்னோரின்
வேறுநூல் செய்துமெனு மேற்கோளி லென்பதற்கும் || வேறு நூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும்
கூறுபழஞ் சூத்திரத்தின் கோள்.|| கூறு பழம் சூத்திரத்தின் கோள்.

என்னுதலிற்றோவெனின், வழிநூற்கும் சார்பு நூற்கும் எய்தியதன் மேற் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று; முன்னோர் நூலின் பொருள் முடிபு முழுவதும் ஒப்பவும் ஒருபுடை ஒப்பவும் கூறுவதன்றியும், அந்நூற் சூத்திரங்களையும் ஒரோவழி எடுத்துக்கூறுக என்றலின்.

இதன்பொருள்
முன்னோர் மொழிந்த பொருளையேயன்றி அவர் மொழியினையும் பொன்போலப் போற்றிக்கொள்வம் என்பதற்கு இலச்சினையாகவும், முன்னோர் நூலையே கூறாது அந்நூலினின்றும் வழிநூல் சார்புநூல் செய்தோமாயினும், ஆசிரிய வசனங்களை ஒரோவழி எடுத்து உடன்கூறுதல் வழி நூற்கும் சார்பு நூற்கும் இலக்கணமாதலின் இந்நூலகத்து ஆசிரிய வசனம் இல்லை எனக் குற்றம் கூறுவாராதலின் அக்குற்றம் ஒழிதற்காகவும், பழஞ்சூத்திரத்தின் கோளைக் கூறு என்றவாறு.

ஆசிரிய வசனம் எனினும், மேற்கோள் எனினும், பழஞ்சூத்திரத்தின் கோள் எனினும் ஒக்கும்.

முன் போற்றுவம் செய்தும் என உளப்பாட்டுத் தன்மைப் பன்மை முற்றாகவும், பின்னர்க் கூறு என முன்னிலையேவல் ஒருமையாகவும் கூறினமையின், வழிநூலும் சார்புநூலும் செய்வோர் பலர்குழீஇ ஒருவர்க்கு ஒருவர் கூறும்கூற்றாக இச்சூத்திரம் செய்யப்பட்டது என்க.


நூற்பா: 10

(நாற்பொருள் பயன்)
அறம்பொரு ளின்பம் வீடடைத னூற்பயனே. || அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே1.

என்னுதலிற்றோவெனின், ‘நாற்பொருட் பயன்’ (நூற்பா, 04) என்றதனை வகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
அறமும் பொருளும் இன்பமும் வீடடைதலும் ஆகிய இந்நான்கும் நூல் தழுவப்படும் பயனாம் என்றவாறு.

வீடு என வாளா கூறாது வீடடைதல் என்றார்; வீடு என்பது பேரின்பமாகிய சாத்தியமாகலின் நான்கும் என்னும் செவ்வெண்2ணின் தொகையோடு முற்றும்மை விகாரத்தால் தொக்கன.

இது முதல் ஐந்து நூற்பாக்களை (10 முதல் 14 முடிய) பாடலனார் சொல்லியன எனச் சொல்லுகிறது யாப்பருங்கலக்காரிகை பழைய உரை.

குறிப்பு
1.அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கையும் அடைதல் நூற்பயன் என்பர் மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர் ஆகிய இருவரும். அறமும் பொருளும் இன்பமும் வீடு அடைதலும் ஆகிய நான்கும் நூற்பயன் என உரைகண்டு, வீடு அடைதல் என்பதற்கு மேற்குறித்தவாறு உரைநயம் காண்பர் சிவஞான சுவாமிகள்.

2. செவ்வெண்: பெயர்களின் இடையே எண்ணிடைச் சொல் தொக்குநிற்க வருவது.

எழுமதம் முதலியன[தொகு]

நூற்பா: 11

(ஏழுமதம்)
எழுவகை மதமே யுடன்படன் மறுத்தல்||எழு வகை மதமே உடன்படல் மறுத்தல்
பிறர்தம் மதமேற் கொண்டு களைவே ||பிறர் தம் மதம் மேல் கொண்டு களைவே
தாஅ னாட்டித் தனாது நிறுப்பே ||தாஅன் நாட்டி தனாது நிறுப்பே
இருவர் மாறுகோ ளொருதலை துணிவே ||இருவர் மாறு கோள் ஒருதலை துணிவே
பிறர்நூற் குற்றங் காட்ட லேனைப் ||பிறர் நூல் குற்றம் காட்டல் ஏனை
பிறிதொடு படாஅன் றன்மதங் கொளலே.||பிறிதொடு படாஅன் தன் மதம் கொளலே.

என்னுதலிற்றோவெனின், எழுமதம் (நூற்பா, 04) என்றதனை வகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

இதன்பொருள்
மேல் எழுவகை மதம் என்று சொல்லப்பட்டன, இங்ஙனம் பிறர் மதத்தை உடன்படல் முதலியவாக விதந்தனவாம் என்றவாறு.

நூல் தழுவிய மதங்கள் பலவாயினும், தலைமை பற்றிய மதம் ஏழென்பது நூல் வழக்காம் என்க. குற்றம் பத்து, அழகு பத்து, உத்தி முப்பத்திரண்டு என்பனவும் அன்ன.

இவ் எழுவகை மதங்கட்கும், பதப்பொருளோடு உதாரணம் விளங்க இந்நூலுள் வந்துழி வந்துழிக் காட்டுதும்; ஆங்காங்கு உணர்க.

குறிப்பு: மதம் - கொள்கை என்று பொருள்.

நூற்பா: 12

(பத்துக் குற்றம்)
குன்றக் கூறன் மிகைபடக் கூறல் ||குன்ற கூறல் மிகைபட கூறல்
கூறியது கூறன் மாறுகொளக் கூறல் ||கூறியது கூறல் மாறு கொள கூறல்
வழூஉச்சொற் புணர்த்தன் மயங்க வைத்தல் ||வழூஉ சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல் ||வெற்று என தொடுத்தல் மற்று ஒன்று விரித்தல்
சென்றுதேய்ந் திறுத னின்று பயனின்மை ||சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை
என்றிவை யீரைங் குற்ற நூற்கே. ||என்று இவை ஈர் ஐ குற்றம் நூற்கு ஏ.

என்னுதலிற்றோவெனின், ஐயிரு குற்றம் (நூற்பா, 04) என்றதனை வகுத்துணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
நூற்குப் பத்துக் குற்றங்களாவன, குன்றக்கூறல் முதலிய இவைகளாம் என்றவாறு.

நூல்கள் இக்குற்றம் சாராது வருதல் காண்க.

குறிப்பு:

1. குன்றக் கூறல்: கருத்தை முழுவதும் விளக்கும் சொல் இல்லாமலும், தேவையான அளவு பொருள் முடிவுபெறாமலும் சொல்வது.
2. மிகைபடக் கூறல்: சொல்லையும் பொருளையும் மிகுதியாகக் கூறுதல்.
3. கூறியது கூறல்: சொன்னவற்றையே யாதொரு பயனும் இல்லாமல் மீண்டும் கூறுதல்.
4. மாறுகொளக் கூறல்: முன்பு சொன்னதற்கு மாறாகக் கூறுதல்.
5. வழூஉச் சொல் புணர்த்தல்: குற்றம் பொருந்திய சிதைவுச் சொல்லையும், இழிந்த சொல்லையும் சேர்த்துக் கூறல்.
6. வெற்றெனத் தொடுத்தல்: வெறும் சொற்களைச் சேர்த்துக் கூறுதல்.
7. நின்று பயன் இன்மை: சொல்லிருந்தும் பயனில்லாது நிற்றல்.
8. மற்றொன்று விரித்தல்: கூறப்படும் பொருளுக்குத் தொடர்பில்லாத மற்றவற்றை விரிவாகக் கூறுதல்.
9. சென்று தேய்ந்து இறுதல்: தொடங்கும் போது அளவாகத் தொடங்கிப் போகப் போகத் தேய்ந்து/குறைந்து முடிதல்.
10. நின்று பயன் இன்மை: சொல்லிருந்தும் அதனால் எந்தவொரு பயனும் இல்லாது அமைத்தல்.
நின்று பயனின்மை, வெற்றெனத் தொடுத்தல் என்பன ஒரே பொருளைத் தருவனவாம். ஆயினும் நின்று பயனின்மை என்பது ஒரு சொல்லின் மேலது, வெற்றெனத் தொடுத்தல் என்பது தொடர்மொழி மேலது.


நூற்பா: 13

(பத்தழகு)
சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் ||சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவி்ன்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல் ||நவின்றோர்க்கு இனிமை நல் மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை யாழமுடைத் தாதல் ||ஓசை உடைமை ஆழம் உடைத்து ஆதல்
முறையின் வைப்பே யுலக மலையாமை ||முறையின் வைப்பே உலகம் மலையாமை
விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த ||விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்த்து
தாகுத னூலிற் கழகெனும் பத்தே. ||ஆகுதல் நூலிற்கு அழகு எனும் பத்தே.

என்னுதலிற்றோவெனின், பத்தழகு என்றதனை வகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
நூலிற்கு அழகு என்று சொல்லப்படும் பத்தாவன, சுருங்கச் சொல்லல் முதலியவாம் என்றவாறு.

நூல்கள் இப்பத்தழகோடும் கூடிவருதல் காண்க.


நூற்பா: 14 ||

(முப்பத்திரண்டு உத்தி)
நுதலிப் புகுத லோத்துமுறை வைப்பே||நுதலி புகுதல் ஓத்து முறை வைப்பே
தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்||தொகுத்து சுட்டல் வகுத்து காட்டல்
முடித்துக் காட்டன் முடிவிடங் கூறல்||முடித்து காட்டல் முடிவு இடம் கூறல்
தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல்||தான் எடுத்து மொழிதல் பிறன் கோள் கூறல்
சொற்பொருள் விரித்த றொடர்ச்சொற் புணர்த்தல்||சொல் பொருள் விரித்தல் தொடர் சொல் புணர்த்தல்
இரட்டுற மொழித லேதுவின் முடித்தல்||இரட்டு உற மொழிதல் ஏதுவின் முடித்தல்
ஒப்பின் முடித்தன் மாட்டெறிந் தொழுகல்||ஒப்பின் முடித்தல் மாட்டு எறிந்து ஒழுகல்
இறந்தது விலக்க லெதிரது போற்றல்||இறந்தது விலக்கல் எதிரது போற்றல்
முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்||முன் மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல்
விகற்பத்தின் முடித்தன் முடிந்தது முடித்தல்||விகற்பத்தின் முடித்தல் முடிந்தது முடித்தல்
உரைத்து மென்ற லுரைத்தா மென்றல்||உரைத்தும் என்றல் உரைத்தாம் என்றல்
ஒருதலை துணித லெடுத்துக் காட்டல்||ஒருதலை துணிதல் எடுத்து காட்டல்
எடுத்த மொழியி னெய்த வைத்தல்||எடுத்த மொழியின் எய்த வைத்தல்
இன்ன தல்ல திதுவென் மொழிதல்||இன்னது அல்லது இது என மொழிதல்
எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல்||எஞ்சிய சொல்லின் எய்த கூறல்
பிறநூன் முடிந்தது தானுடன் படுதல்||பிற நூல் முடிந்தது தான் உடன்படுதல்
தன்குறி வழக்க மிகவெடுத் துரைத்தல்||தன் குறி வழக்கம் மிக எடுத்து உரைத்தல்
சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல்||சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல்
ஒன்றின முடித்த றன்னின முடித்தல்||ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல்
உய்த்துணர வைப்பென வுத்தியெண் ணான்கே.||உய்த்து உணர வைப்பு என உத்தி எண் நான்கே.

என்னுதலிற்றோவெனின், எண்ணான்கு உத்தி (நூற்பா, 04) என்றதனை வகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
முப்பத்திரண்டு உத்தியாவன, நுதலிப் புகுதல் முதலியனவாம்.

இவற்றுள் ஒன்றினமுடித்தல் தன்னின முடித்தல் என்பது ஓர் உத்தி. உய்த்துணரவைப்பு என்பதனை உத்திக்கு அடையாக்கி, உய்த்துணரவைப்பு எனும் உத்தி எண்ணான்கே எனப் பாடமோதி, அதனை இரண்டு உத்தியாக்கினும் அமையும்.

இவ்வுத்திகட்குப் பதப்பொருளொடு உதாரணம் விளங்க இந்நூலுள் வந்துழி வந்துழிக் காட்டுதும்; ஆங்காங்குணர்க.

மதத்தினுள்ளும், அழகினுள்ளும் வருவன சிலவற்றை உத்தியுள்ளும் கூறியது என்னை எனின்:- கொள்கைவகையான் மதம் என்றும், சிறப்புவகையான் அழகு என்றும், இம்மதம் அழகு முதலிய எல்லாம் புத்திநுட்பத்து அமையும்வகையான் உத்தி என்றும் கூறப்படுமென்க. அங்ஙனமாயின், மதம் அழகு எல்லாவற்றையும் உத்தியின்பாற்படுத்துக் கூறாது சிலவற்றைக் கூறியது என்னையெனின்:- வரம்பின்றி வரும் உத்தியுள் தலைமைபற்றிக் கூறும் முப்பத்திரண்டில் வந்தன கூறினார் என்க.

குறிப்பு: வரம்பின்றி வருதலாவது - நன்னூலார் கூறியது ஒழியத் தொல்காப்பியத்துக் கூறப்பட்டனவாக, இவ்வுரையாசிரியரே தம் உரையுள் எடுத்து ஆளுவனவாகிய ‘மொழிந்த பொருளோடு ஒன்ற அவ்வயின் மொழியாததனையும் முட்டின்றி முடித்தல்’, ‘உரையிற்கோடல்’, ‘உடம்பொடு புணர்த்தல்’, ‘எதிர்மறைமுகத்தான் எய்தாதது எய்துவித்தல்’, ‘ஏற்புழிக் கோடல்’ முதலாயின.

மதம் - - - - - - - உத்தி

:இருவர் மாறுகோள் ஒருதலை துணிவு - - ஒரு தலை துணிதல்
உடன் படல் - - பிறநூன் முடிந்தது தான்உடன்படுதல்
தான் நாட்டித்தனாது நிறுப்பு - -- தன்குறி வழக்கம் மிக எடுத்துரைத்தல்.


அழகு - - - - - உத்தி

:விளங்க வைத்தல் - - - சொற்பொருள் விரித்தல்
முறையின் வைப்பு - - - ஓத்துமுறை வைப்பு
விளங்கு உதாரணத்து ஆகுதல் - - - எடுத்துக் காட்டல்.


நூற்பா: 15.

(உத்தி இன்னதென்பது)
நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி ||நூல் பொருள் வழக்கொடு வாய்ப்ப காட்டி
ஏற்புழி யறிந்திதற் கிவ்வகை யாமெனத் ||ஏற்புழி அறிந்து இதற்கு இவ் வகை ஆம் என
தகும்வகை செலுத்துத றந்திர வுத்தி. (15) ||தகும் வகை செலுத்துதல் தந்திர உத்தி.

ஓத்து, படலம் முதலியன[தொகு]

நூற்பா: 16.

(ஓத்து இன்னதென்பது)
நேரின மணியை நிரல்பட வைத்தாங் ||நேர் இன மணியை நிரல்பட வைத்து ஆங்கு
கோரினப் பொருளை யொருவழி வைப்ப ||ஓர் இன பொருளை ஒருவழி வைப்பது
தோத்தென மொழிப வுயர்மொழிப் புலவர். (16) ||ஓத்து என மொழிப உயர் மொழி புலவர்.

என்னுதலிற்றோவெனின், இருவகை (நூற்பா, 04) உறுப்பினுள் ஓத்துறுப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்: ஒரு சாதியாயுள்ள மணிகளை முறையே பதித்தாற்போல ஒரு சாதியாயுள்ள பொருள்களை ஒருவழிப்படக் கூறுவது ஓத்துறுப்பாம் எனச் சொல்லுவர், உயிர்க்குறுதி பயக்கும் மெய்ம்மொழிகளையுடைய புலவர் என்றவாறு.

நேர்தல் - ஒன்றுபடல்.

இவ்வாறு வருதல் இந்நூலுறுப்பினுள் காண்க. (௧௬)

குறிப்பு: இச்சூத்திரமும், அடுத்த சூத்திரமும் (நூற்பா, 16, 17) ஆசிரிய வசனம்; தொல்காப்பியம்-செய்யுளியல், 171, 172).

நூற்பா: 17.

(படலம் இன்னதென்பது)
ஒருநெறி யின்றி விரவிய பொருளாற் ||ஒரு நெறி இன்றி விரவிய பொருளால்
பொதுமொழி தொடரி னதுபடல மாகும். (17) ||பொது மொழி தொடரின் அது படலம் ஆகும்.

என்னுதலிற்றோவெனின், படலவுறுப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
ஒருவழிப்படாது விராய பொருளோடு பொருந்திப் பலபொருளை உணர்த்தும் பொதுச்சொற்கள் ஒரோவழியின்றித் தொடர்ந்துவரின் அது படலவுறுப்பாம் என்றவாறு.

படலவுறுப்பினையுடைய காப்பியங்களுள் பாட்டுடைத் தலைவனது சரிதையேயன்றி மலை கடல்நாடு முதலிய பல பொருட்டிறங்களும் விரவிவருதலும், பல பொருளை உணர்த்தும் பொதுச்சொற்கள் ஒரோவழியின்றித் தொடர்ந்து வருதலும் காண்க. (௧௭)


நூற்பா: 18.

(சூத்திரம் இன்னதென்பது)
சில்வகை யெழுத்திற் பல்வகைப் பொருளைச் ||சில் வகை எழுத்தில் பல் வகை பொருளை
செவ்வ னாடியிற் செறித்தினிது விளக்கித் ||செவ்வன் ஆடியில் செறித்து இனிது விளக்கி
திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம். (18) ||திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம்.

என்னுதலிற்றோவெனின், சூத்திரமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
சிறிய கண்ணாடியில் பெரிய சரீர முதலியவற்றின் சாயை (நிழல்) செவ்வாகச் செறிந்து இனிதாக விளங்கினாற்போல, செவ்வாகச் செறிந்து இனிதாக விளங்கச் சில்வகை எழுத்துக்களான் இயன்ற யாப்பின்கண் பல்வகைப்பட்ட பொருள்களைச் செவ்வாகச் செறித்து இனிதாக விளக்கி, அப்பல பொருட்டிண்மையும் நுண்மையும் சிறந்து வருவன சூத்திரங்களாம் என்றவாறு.

திட்பம் - குற்றமின்மையின் அலைவற நிற்றல். இவ்வாறு வருதல் இச்சூத்திரத்துள்ளும் காண்க.


நூற்பா: 19

(சூத்திர நிலை)
ஆற்றொழுக் கரிமா நோக்கந் தவளைப் ||ஆற்று ஒழுக்கு அரிமா நோக்கம் தவளை
பாய்த்துப் பருந்தின்வீழ் வன்னசூத் திரநிலை. (19) ||பாய்த்து பருந்தின் வீழ்வு அன்ன சூத்திர நிலை.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன் பொருள்
மேற்கூறிய சூத்திரங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்ந்து நிற்கும் நிலைகள், ஆற்றொழுக்கு முதலிய நான்கினையும் போலும் என்றவாறு.

இவ்வாறு நிற்றல், இந்நூலுள் வந்துழி வந்துழிக் காட்டுதும்; ஆங்காங்கு உணர்க.

குறிப்பு: ஆற்றொழுக்கினை 291-ஆம்நூற்பாவிலும், அரிமா நோக்கத்தினை 109-ஆம் நூற்பாவிலும், தவளைப்பாய்த்தினை 101-ஆம் நூற்பாவினும், பருந்தின் வீழ்வினை 96-ஆம் சூத்திரத்தினும் காண்க.

ஆற்றொழுக்கு:ஆற்றுத் தண்ணீர் இடையறாது ஒழுகுதல் போல நூற்பாக்களும், தம்முள் பொருள் இயைபு உடையனவாக ஒழுகுதல். அரிமா நோக்கம்:சிங்கம் ஒரு பொருளை உடலைத் திருப்பாமல் முன்னும், பின்னும் பார்ப்பது போல ஒரு நூற்பாவின் பொருள் முன்னும் பின்னுமுள்ள நூற்பாவின் பொருளோடு இயைபு உடைத்தாதல்; (பொதுவியல், முன்னுள்ள பெயர் வினைகளோடும், பின்னுள்ள இடை உரிகளோடும் இயைபுடையதான பொது இலக்கணங்களை உணர்த்தல்); தவளைப் பாய்த்து: தவளையானது, இடையிட்டுத் தாவித் தத்திச் செல்வது போல ஒரு நூற்பாவின் பொருள் ள் ஒரு நூற்பாவையிடையிட்டு அடுத்த நூற்பாவோடு சென்று இயைந்து பொருள்பயத்தல்; பருந்தின் வீழ்வு: பருந்து நெடுந்தூரம் இடையிட்டுத் தான் விரும்பிய பொருளைக் கொண்டு விண்ணேகுவது போல ஒரு சூத்திரப்பொருள் பலசூத்திரங்களை இடையிட்டுச் சென்று பொருள் பயப்பது. இவை மயிலைநாதர் கண்ட குறிப்பு.


நூற்பா: 20

(சூத்திரவகைகள்)
பிண்டந் தொகைவகை குறியே செய்கை ||பிண்டம் தொகை வகை குறியே செய்கை
கொண்டியல் புறனடைக் கூற்றன சூத்திரம். (20) ||கொண்டு இயல் புறனடை கூற்றன சூத்திரம்.

என்னுதலிற்றோவெனின், இதுவுமது.

இதன்பொருள்
பிண்டம் எனவும், தொகை எனவும், வகை எனவும், குறி எனவும், செய்கை எனவும் இவற்றை அலைவறக் கொண்டு இவற்றின் புறத்து அடையாய் வரும் புறனடை எனவும் கூறும் கூற்றினையுடையவாம் மேற்கூறிய சூத்திரங்கள் என்றவாறு.

இவற்றுள் பிண்டமாவன: ‘பன்னிரு பாற்றதுவே’ (நூ: 57) என்றற் றொடக்கத்துத் தொகைபோலாது ‘நன்கு இயம்புவன் எழுத்தே’ (நூ: 56) என்றற்றொடக்கத்துப் பொதுப்பட வருவன. தொகையும், வகையும் புறனடையும் வந்துழி வந்துழிக் காட்டுதும், ஆங்காங்கு உணர்க. விரி வகையின்பாற் படுதலின் கூறாராயினார். குறியாவன: இவை உயிர், இவை ஒற்று, இவை பெயர், இவை வினை என்றற்றொடக்கத்து அறிதன் மாத்திரையாய் வருவன. குறி என்பது அறிதலை உணர்த்திய முதனிலைத் தொழிற்பெயர். செய்கையாவன: பதமுன் விகுதியும், பதமும் உருபும் புணரும் புணர்ச்சிவிதி அறிந்து அங்ஙனம் அறிதன் மாத்திரையாய் நில்லாது, அவ்வாறு வேண்டுழிப் புணர்த்தலைச் செய்தலும், பெயர் வினை முதலிய கொள்ளும் முடிபு விதி அறிந்து, அங்ஙனம் அறிதன் மாத்திரையாய் நில்லாது அவ்வாறு, வேண்டுழி முடித்தலைச் செய்தலும் முதலியன. இப்பிண்டம் முதலிய ஆறு பெயரும், அப்பொருளை உணர்த்தும் சூத்திரங்கட்கு ஆகுபெயராய் வந்தன.

எல்லாச் சூத்திரங்களும் பிண்டம் தொகை வகை புறனடையென்னும் நான்கனுள் அடங்குமன்றே? அங்ஙனமாகக் குறியினையும் செய்கையினையும் வேறோதியது, எல்லா நூலுள்ளும் சொல்லப்படுவன அறிவதும் செய்வதுமன்றி வேறின்மையின் பிண்டமாக்கியும் தொகுத்தும் வகுத்தும் புறத்து அடைகொடுத்தும் கூறப்படுவன குறியும் செய்கையுமே என்பது தோன்றற்கு என்க. இங்ஙனம் கூறவே, எல்லா நூலுள்ளும் வரும் எல்லாச் சூத்திரங்களும், குறிச்சூத்திரம் செய்கைச் சூத்திரம் என இரண்டாய் அடங்கும் என்பது பெற்றாம்.

இவ்வாறன்றிக் குறி என்பதற்குப் பெயர்களை உணர்த்துஞ் சூத்திரம் என்றும், செய்கை என்பதற்கு எழுத்துப் புணர்ச்சியை உணர்த்துஞ் சூத்திரம் என்றும் பொருள் கூறுவாரும் உளர். அங்ஙனம் கூறின், ஏனையிலக்கணங்களைக் கூறும் சூத்திரங்களையும் விதந்து கூறவேண்டும்; அவையின்மையானும், பெயரும் புணர்ச்சியும் இவ்விலக்கண நூற்கன்றிப் பொதுப்பாயிரமாய் எல்லா நூற்கும் பொருந்தாமையானும் அது பொருளன்று என்க.


நூற்பா: 21

(உரையின் பொதுவிலக்கணம்)
பாடங் கருத்தே சொல்வகை சொற்பொருள் ||பாடம் கருத்தே சொல் வகை சொல் பொருள்
தொகுத்துரை யுதாரணம் வினாவிடை விசேடம் ||தொகுத்து உரை உதாரணம் வினா விடை விசேடம்
விரிவதி காரந் துணிவு பயனோ ||விரிவு அதிகாரம் துணிவு பயனோடு
டாசிரிய வசனமென் றீரே ழுரையே. (21) ||ஆசிரிய வசனம் என்று ஈர் ஏழ் உரையே.

என்னுதலிற்றோவெனின், மேல் காண்டிகையுரை, விருத்தியுரை (நூற்பா, 4) என்றார், அவற்றை உணர்த்துவான் தொடங்கி, உரையினது பொதுவிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இதன்பொருள்
இப்பதினான்கு வகையான் உரைக்கப்படும், நூற்கு உரை என்றவாறு.

இவற்றுள் விசேடமாவது, சூத்திரத்துள் பொருளன்றி ஆண்டைக்கு வேண்டுவன தந்துரைத்தல். விரிவாவது, வேற்றுமை முதலிய தொக்கு நின்றனவற்றை விரிக்க வேண்டுழி விரித்துரைத்தல். அதிகாரமாவது, எடுத்துக்கொண்ட அதிகாரம் இதுவாதலின், இச்சூத்திரத்து அதிகரித்த பொருள் இது என அவ்வதிகாரத்தோடு பொருந்த உரைக்கவேண்டுழி உரைத்தல். துணிவாவது, ஐயுறக்கிடந்துழி, இதற்கு இதுவே பொருள் என உரைத்தல். ஏனைய பொருள் விளங்கிக் கிடந்தன.

இப்பதினான்கும் இவ்வுரையுள் வந்துழி வந்துழிக் காட்டுதும், ஆங்காங்கு உணர்க.


நூற்பா: 22

(காண்டிகை உரை)
கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும் ||கருத்து, பதம்பொருள் காட்டு மூன்றினும்
அவற்றொடு வினாவிடை யாக்க லானும் ||அவற்றொடு வினா விடை ஆக்கலானும்
சூத்திரத் துட்பொரு டோற்றுவ காண்டிகை. (22) ||சூத்திரத்து உள் பொருள் தோற்றுவ காண்டிகை.

என்னுதலிற்றோவெனின், காண்டிகையுரை ஆமாறு உணர்த்துதல்நுதலிற்று.

இதன் பொருள்
மேற்கூறிய பதினான்கினுள் கருத்துரையும், பதப்பொருளும், உதாரணமும் ஆகிய மூன்றனையும் உரைத்தலானும், அம்மூன்றனோடு வினாவிடை என்னும் இரண்டையுங் கூட்டி உரைத்தலானும், சூத்திரத்துள் பொருளை விளக்குவன காண்டிகையுரைகளாம் என்றவாறு.


நூற்பா: 23.

(விருத்தியுரை)
சூத்திரத் துட்பொரு ளன்றியு மாண்டைக் ||சூத்திரத்து உள் பொருள் அன்றியும் ஆண்டைக்கு
கின்றி யமையா யாவையும் விளங்கத் ||இன்றியமையா யாவையும் விளங்க
தன்னுரை யானும் பிறநூ லானும் ||தன் உரையானும் பிற நூலானும்
ஐய மகலவைங் காண்டிகை யுறுப்பொடு ||ஐயம் அகல ஐ காண்டிகை உறுப்பொடும்
மெய்யினை யெஞ்சா திசைப்பது விருத்தி. (23) ||மெய்யினை எஞ்சாது இசைப்பது விருத்தி.

என்னுதலிற்றோவெனின், விருத்தியுரையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
காண்டிகையுரை போல் சூத்திரத்துள் பொருள் விளக்குதல் மாத்திரையின் நில்லாது, அவ்விடங்கட்கு இன்றியமையாத பொருள்கள் யாவையும் விளங்கத் தானுரைக்கும் உரையானும், ஆசிரிய வசனங்களானும், மேற்கூறிய காண்டிகை உறுப்பு ஐந்தினானும் ஐயந் தீரச் சுருங்காது மெய்ம்மைப் பொருளை விரித்துரைப்பது விருத்தியுரையாம் என்றவாறு.

‘சூத்திரத்துட் பொருளன்றியும்’ என்றமையான், மேற்கூறிய பதினான்கு உறுப்புங் கொண்டது விருத்தியுரை என்பது பெற்றாம்.


நூற்பா: 24

(நூல் எனும் பெயரின் காரணம்)
பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச் ||பஞ்சு தன் சொல்லா பனுவல் இழை ஆக
செஞ்சொற் புலவனே சேயிழையா- எஞ்சாத ||செம் சொல் புலவனே சேய் இழையா - எஞ்சாத
கையேவா யாகக் கதிரே மதியாக ||கையே வாய் ஆக கதிரே மதி ஆக
மையிலா நூன்முடியு மாறு. (24) ||மை இலா நூல் முடிக்கும் ஆறு.

என்னுதலிற்றோவெனின், நூல் என்னும் பெயர் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
இந்த நூல் முடியுமாறு இது ஆதலின், நூல் என்றது உவம ஆகுபெயர் ஆகும் என்றவாறு.

(❖ இந்த வெண்பாவும், அடுத்த வெண்பாவும் (25) இறையனாரகப்பொருளில் உள்ளவை.)


நூற்பா: 25

உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப் ||உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை
புரத்தின் வளமுருக்கிப் பொல்லா- மரத்தின் ||புரத்தின் வளம் உருக்கி பொல்லா - மரத்தின்
கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோன் மாந்தர் ||கனம் கோட்டம் தீர்க்கும் நூல் அஃதே போல் மாந்தர்
மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு. (25) ||மனம் கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு.

என்னுநுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன்பொருள்
அந்நூல்போல் செப்பம் செய்தலானும் நூல் என்றது உவமவாகுபெயராம் என்றவாறு.

புரத்தின் உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய தீமை வளமுருக்கி எனக் கூட்டுக். புரம் - உடம்பு. உரம் - நெஞ்சு. பின்பு தீமைவளம் என்றமையான் முன்பு நல்வளம் எனத் தந்துரைக்க. நல்வளம்-அறிவு; தீமைவளம்-அறியாமை.

2. ஆசிரியன் வரலாறு[தொகு]

நூற்பா: 26

நல்லாசிரியர் இலக்கணம்
குலனரு டெய்வங் கொள்கை மேன்மை ||குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயி றெளிவு கட்டுரை வன்மை ||கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும் ||நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும்
உலகிய லறிவோ டுயர்குண மினையவும் ||உலகியல் அறிவோடு உயர் குணம் இனையவும்
அமைபவ னூலுரை யாசிரி யன்னே. (26) ||அமைபவன் நூல் உரை ஆசிரியன் ஏ.

என்னுதலிற்றோவெனின், நிறுத்தமுறையானே (3) ஆசிரியனது வரலாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன்பொருள்
இவ்வியல்பினையுடையார் கற்பிக்கும் ஆசிரியர் ஆவார் என்றவாறு.


நூற்பா: 27

(நிலத்தின் மாண்பு)
தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும் ||தெரிவு அரும் பெருமையும் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி யளவிற் பயத்தலும் ||பருவம் முயற்சி அளவின் பயத்தலும்
மருவிய நன்னில மாண்பா கும்மே. (27) ||மருவிய நல் நில மாண்பு ஆகும் ஏ.

என்னுதலிற்றோவெனின், மேற்கூறிய உவமையை விரித்து உணர்த்துதல் நுதலிற்று.

இதன்பொருள்
நிலத்தினது மாட்சிமை இது ஆதலின், இஃது உவமையாயிற்று என்றவாறு.


நூற்பா: 28

(மலையின் மாண்பு)
அளக்க லாகா வளவும் பொருளும் ||அளக்கல் ஆகா அளவும் பொருளும்
துளக்க லாகா நிலையுந் தோற்றமும் ||துளக்கல் ஆகா நிலையும் தோற்றமும்
வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே. (28) ||வறப்பினும் வளம் தரும் வண்மையும் மலைக்கே.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன்பொருள்
மலையினது மாட்சிமை இது ஆதலின் இஃது உவமையாயிற்று என்றவாறு.


நூற்பா: 29

(நிறைகோல் மாண்பு)
ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலும் ||ஐயம் தீர பொருளை உணர்த்தலும்
மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே. (29) ||மெய் நடுநிலையும் மிகு நிறைகோற்கு ஏ.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன்பொருள்
நிறைகோலினது மாட்சிமை இது ஆதலின் இஃது உவமையாயிற்று என்றவாறு.


நூற்பா: 30

(மலரின் மாண்பு)
மங்கல மாகி யின்றி யமையா ||மங்கலம் ஆகி இன்றியமையாது
தியாவரு மகிழ்ந்து மேற்கொள மெல்கிப் ||யாவரும் மகிழ்ந்து மேல் கொள மெல்கி
பொழுதின் முகமலர் வுடையது பூவே. (30) || பொழுதின் முக மலர்வு உடையது பூவே.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன்பொருள்
மலரினது மாட்சிமை இது ஆதலின் இஃது உவமையாயிற்று என்றவாறு.

இவ்வுவமைகளின் மாட்சிமைபோலப் பொருளினது மாட்சிமையும் விரித்து உரைத்துக் கொள்க.


நூற்பா: 31

(ஆசிரியர் ஆகாதவர் இலக்கணம்)
மொழிகுண மின்மையு மிழிகுண வியல்பும் ||மொழி குணம் இன்மையும் இழி குணம் இயல்பும்
அழுக்கா றவாவஞ்ச மச்ச மாடலும் ||அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடலும்
கழற்குட மடற்பனை பருத்திக் குண்டிகை ||கழல் குடம் மடல் பனை பருத்தி குண்டிகை
முடத்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையும் ||முடம் தெங்கு ஒப்பு என முரண் கொள் சிந்தையும்
உடையோ ரிலரா சிரியரா குதலே. (31) ||உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதல் ஏ.

என்னுதலிற்றோவெனின், ஆசிரியராகார் இவர் என உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
இக்குற்றங்களையுடையோர் கற்பிக்கும் ஆசிரியர் ஆகார் என்றவாறு.


நூற்பா: 32

(கழற்குடத்தின் இயல்பு) ||
பெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றரும் ||பெய்த முறை அன்றி பிறழ உடன் தரும்
செய்தி கழற்பெய் குடத்தின் சீரே. (32) ||செய்தி கழல் பெய் குடத்தின் சீரே.

என்னுதலிற்றோவெனின், மேற்கூறிய உவமையை விரித்துணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
கழற்பெய் குடத்தின் குற்றம் இது ஆதலின் இஃது உவமையாயிற்று என்றவாறு.


நூற்பா: 33

(மடற்பனையின் இயல்பு)
தானே தரக்கொளி னன்றித் தன்பான் ||தானே தர கொளின் அன்றி தன் பால்
மேவிக் கொளப்படா விடத்தது மடற்பனை. (33) ||மேவி கொளப்படா இடத்தது மடல் பனை.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன்பொருள்
மடற்பனையின் குற்றம் இது ஆதலின் இஃது உவமையாயிற்று என்றவாறு.


நூற்பா: 34

(பருத்திக்குண்டிகையின் தன்மை)
அரிதிற் பெயக்கொண் டப்பொரு டான்பிறர்க் ||அரிதின் பெய கொண்டு அப்பொருள் தான் பிறர்க்கு
கெளிதீ வில்லது பருத்திக் குண்டிகை. (34) ||எளிது ஈவு இல்லது பருத்தி குண்டிகை.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன்பொருள்
பருத்தி பெய்த குண்டிகையின் குற்றம் இது ஆதலின் இஃது உவமையாயிற்று என்றவாறு.


நூற்பா: 35

(முடத்தெங்கின் தன்மை)
பல்வகை யுதவி வழிபடு பண்பி ||பல் வகை உதவி வழிபடு பண்பின்
னல்லோர் களிக்கு மதுமுடத் தெங்கே. (35) ||அல்லோர்க்கு அளிக்கும் அது முடம் தெங்கே

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன்பொருள்
முடத்தெங்கினது குற்றம் இது ஆதலின் இஃது உவமையாயிற்று என்றவாறு.

இவ்வுவமைகளின் குற்றம்போலப் பொருளின் குற்றமும் விரித்து உரைத்துக்கொள்க.

3. பாடஞ்சொல்லலினது வரலாறு[தொகு]

நூற்பா: 36

ஈத லியல்பே யியம்புங் காலைக் ||ஈதல் இயல்பே இயம்பும் காலை
காலமு மிடனும் வாலிதி னோக்கிச் ||காலமும் இடமும் வாலிதின் நோக்கி
சிறந்துழி யிருந்துதன் றெய்வம் வாழ்த்தி ||சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப் படும்பொரு ளுள்ளத் தமைத்து ||உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து ||விரையான் வெகுளான் விரும்பி முகம் மலர்ந்து
கொள்வோன் கொள்வகை யறிந்தவ னுளங்கொளக் ||கொள்வோன் கொள் வகை அறிந்து அவன் உளம் கொள
கோட்டமின் மனத்தினூல் கொடுத்த லென்ப. (36) ||கோட்டம் இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப.

என்னுதலிற்றோவெனின், நிறுத்தமுறையானே (நூற்பா, 3) ஆசிரியன் கற்பிக்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
கற்பிக்குமாறு இவ்வாறு எனச் சொல்லுவர் புலவர் என்றவாறு.

4. மாணாக்கனது வரலாறு[தொகு]

நூற்பா: 37

(மாணாக்கர் இலக்கணம்)
தன்மக னாசான் மகனே மன்மகன் ||தன் மகன் ஆசான் மகனே மன் மகன்
பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே ||பொருள் நனி கொடுப்போன் வழிபடுவோனே
உரைகோ ளாளற் குரைப்பது நூலே. (37) ||உரை கோளாளற்கு உரைப்பது நூலே.

என்னுதலிற்றோவெனின், நிறுத்த முறையானே (நூ.3) மாணாக்கனது வரலாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
இவ்வறுவர்க்கும் சொல்லப்படுவது நூல் என்றவாறு.


நூற்பா: 38

(மூவகை மாணாக்கர்)
அன்ன மாவே மண்ணொடு கிளியே ||அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி ||இல்லிக்குடம் ஆடு எருமை நெய்அரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர். (38) ||அன்னர் தலை இடை கடை மாணாக்கர்.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன் பொருள்
மேற்கூறிய அறுவருள், அன்னமும் பசுவும் போல்வார் தலைமாணாக்கர்; மண்ணும் கிளியும் போல்வார் இடைமாணாக்கர்; இல்லிக்குடமும், ஆடும், எருமையும், நெய்யரியும் போல்வார் கடைமாணாக்கர் என்றவாறு.

இவ்வுவமைத் திறமும் பொருட்டிறமும் விரித்துரைத்துக் கொள்க.


நூற்பா: 39


(மாணாக்கர் ஆகாதவர் இலக்கணம்)
களிமடி மானி காமி கள்வன் ||களி மடி மானி காமி கள்வன்
பிணியனேழை பிணக்கன் சினத்தன் ||பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்
துயில்வோன் மந்தன் றொன்னூற் கஞ்சித் ||துயில்வோன் மந்தன் தொல் நூற்கு அஞ்சி
தடுமா றுளத்தன் றறுகணன் பாவி ||தடுமாறு உளத்தன் தறுகணன் பாவி
படிறனின் னோர்க்குப் பகரார் நூலே. (39) ||படிறன் இன்னோர்க்கு பகரார் நூலே.

என்னுதலிற்றோவெனின், மாணாக்கராகார் இவர் என உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
இக்குற்றங்களையுடையார்க்கு நூலைச் சொல்லார் ஆசிரியர் என்றவாறு.

5. பாடங்கேட்டலின் வரலாறு[தொகு]

நூற்பா: 40

கோடன் மரபே கூறுங் காலைப் ||கோடல் மரபே கூறும் காலை
பொழுதொடு சென்று வழிபடன் முனியான் ||பொழுதொடு சென்று வழிபடல் முனியான்
குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந் ||குணத்தொடு பழகி அவன் குறிப்பில் சார்ந்து
திருவென விருந்து சொல்லெனச் சொல்லிப் ||இரு என இருந்து சொல் என சொல்லி
பருகுவ னன்னவார் வத்த னாகிச் ||பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகி
சித்திரப் பாவையி னத்தக வடங்கிச் ||சித்திரம் பாவையின் அத்தக அடங்கி
செவிவா யாக நெஞ்சுகள னாகக் ||செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆக
கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப் ||கேட்டவை கேட்டவை விடாது உளத்து அமைத்து
போவெனப் போத லென்மனார் புலவர். (40) ||போ என போதல் என்மனார் புலவர்.

என்னுதலிற்றோவெனின், நிறுத்த முறையானே (நூ.3) மாணாக்கன் நூலைக் கற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
கற்குமாறு இவ்வாறு எனச் சொல்லுவர் புலவர் என்றவாறு.


நூற்பா: 41

(பயிலும் முறை)
நூல்பயி லியல்பே நுவலின் வழக்கறிதல் ||நூல் பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் ||பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசாற் சார்ந்தவை யமைவரக் கேட்டல் ||ஆசான் சார்ந்து அவை அமைவர கேட்டல்
அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் ||அ மாண்பு உடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்த லென்றிவை ||வினாதல் வினாயவை விடுத்தல் என்று இவை
கடனாக் கொளினே மடநனி யிகக்கும். (41) ||கடன் ஆ கொளினே மடம் நனி இகக்கும்.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன் பொருள்
இவ்வாறு நூலைப் பயின்றவர்க்கு அறியாமை மிகுதியும் போம் என்றவாறு.


நூற்பா: 42

ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பின் ||ஒரு குறி கேட்போன் இருகால் கேட்பின்
பெருகநூலிற் பிழைபாடிலனே. (42) ||பெருக நூலில் பிழை பாடு இலனே.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன் பொருள்
ஒருகால் கேட்ட துணையான அமையாது இருகால் கேட்பானாகில் அந்நூலின்கண் பிழைபாடு மிகுதியும் இலன் என்றவாறு.


நூற்பா: 43

முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும். (43) ||மு கால் கேட்பின் முறை அறிந்து உரைக்கும்.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன் பொருள்
முக்காற் கேட்டானாகில் ஆசிரியன் கற்பித்த முறை அறிந்து உரைப்பன் என்றவாறு.


நூற்பா: 44

ஆசா னுரைத்த தமைவரக் கொளினும் ||ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும்
காற்கூ றல்லது பற்றல னாகும். (44) ||கால் கூறு அல்லது பற்றலன் ஆகும்.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன் பொருள்
ஆசிரியன் கற்பித்தனவற்றைத் தன்னறிவின்கண் அமையக் கற்றானாகிலும் புலமைத் திறத்தில் காற்கூறல்லது பற்றான் என்றவாறு.


நூற்பா: 45

அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகாற் || அ வினையாளரொடு பயில் வகை ஒரு கால்
செவ்விதி னுரைப்ப வவ்விரு காலும் ||செவ்விதின் உரைப்ப அ இருகாலும்
மையறு புலமை மாண்புடைத் தாகும். (45) ||மை அறு புலமை மாண்பு உடைத்து ஆகும்.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன் பொருள்
தன்போலியரோடு பயிலும்வகையால் காற்கூறும், அக்கல்வியைத் தன் மாணாக்கர்க்கும் அவைக்களத்தோர்க்கும் உணர விரித்துரைத்தலான் அரைக்கூறுமாகக் குற்றமற்ற புலைமை நிரம்பும் என்றவாறு.


நூற்பா: 46

அழலி னீங்கா னணுகா னஞ்சி ||அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி
நிழலி னீங்கா னிறைந்த நெஞ்சமோ ||நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு
டெத்திறத் தாசா னுவக்கு மத்திறம் ||எ திறத்து ஆசான் உவக்கும் அ திறம்
அறத்திற் றிரியாப் படர்ச்சிவழி பாடே. (46) ||அறத்தின் திரியா படர்ச்சி வழிபாடே.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன் பொருள்
இவ்வாறு ஒழுகுதல் வழிபாடாம் என்றவாறு.


பொதுப்பாயிரம் முற்றிற்று[தொகு]

சிறப்புப் பாயிரத்திலக்கணம்[தொகு]

நூற்பா: 47

சிறப்புப் பாயிரத்தின் பொதுவிதி
ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை‡மேலொட்டு உரை ||ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே ||நூல் பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோ டாயெண் பொருளும் ||கேட்போர் பயனோடு ஆய் எண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே. (47) ||வாய்ப்ப காட்டல் பாயிரத்து இயல்பே.

என்னுதலிற்றோவெனின், ‘பாயிரம் பொதுச்சிறப்பு’ (2) என மேல் நிறுத்த முறையானே ‘மலர்தலை உலகின்’ என்றற் றொடக்கத்தனவாய் எல்லா நூற்கண்ணும் வரும் சிறப்புப் பாயிரங்களினது பொதுவிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இதனையும் பொதுப்பாயிரத்துள் கூறினார், பொது ஐந்தனுள் நூன்முகத்தினது இலக்கணம் ஆதலின் என்க.
இதன்பொருள்
இவ்வெட்டுப் பொருளையும் விளங்க உணர்த்துவது சிறப்புப்பாயிரத்து இலக்கணமாம் என்றவாறு.

ஆக்கியோன் பெயரே என்றற்றொடக்கத்தனவற்றுள் சிறப்பு என்பது தோன்றினமையின், பாயிரம் என வாளா கூறினார்.

குறிப்பு:இச்சூத்திரமும், வரும்சூத்திரமும் (48)தொல்காப்பிய இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளிலும், இறையனாரகப்பொருள் உரையிலும் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன.


நூற்பா: 48

காலங் களனே காரண மென்றிம் ||காலம் களனே காரணம் என்று இம்
மூவகை யேற்றி மொழிநரு முளரே. (48) ||மூவகை ஏற்றி மொழிநரும் உளரே.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன்பொருள்
அவ்வெட்டனோடு இம்மூன்றினையும் கூட்டிப் பதினொன்றாகக் கூறுவாரும் உளர் என்றவாறு.


நூற்பா: 49

(நூலுக்குப் பெயரிடும் முறை)
முதனூல் கருத்த னளவு மிகுதி ||முதல் நூல் கருத்தன் அளவு மிகுதி
பொருள்செய் வித்தோன் றன்மைமுத னிமித்தினும் ||பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தினும்
இடுகுறி யானுநூற் கெய்தும் பெயரே. (49) ||இடுகுறியானும் நூற்கு எய்தும் பெயரே.

என்னுதலிற்றோவெனின், மேற்கூறிய பதினொன்றனுள் நூற்பெயர்க்குச் சிறப்பு விதி உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
முதல்நூல் முதல், தன்மை ஈறாகக் கூறிய ஏழும் பிறவுமாகிய காரணங்களானும்,இடுகுறியானும் நூற்குப் பெயர் வரும் என்றவாறு.
வரலாறு
முதல்நூலால் பெயர்பெற்றன ஆரியப்படலம், பாரதம் முதலாயின. கருத்தனால் பெயர்பெற்றன அகத்தியம், தொல்காப்பியம் முதலாயின. அளவினால் பெயர்பெற்றன பன்னிருபடலம், நாலடி நானூறு முதலாயின. மிகுதியால்பெயர்பெற்றன களவியல் முதலாயின. பொருளால் பெயர்பெற்றன அகப்பொருள் முதலாயின. செய்வித்தோனால் பெயர் பெற்றன சாதவாகனம் முதலாயின. தன்மையால் பெயர்பெற்றன சிந்தாமணி, நன்னூல் முதலாயின. இடுகுறியால் பெயர்பெற்றன நிகண்டு, கலைக்கோட்டுத் தண்டு முதலாயின. பிறவும் அன்ன.


நூற்பா: 50

(நூல்யாப்பு நான்குவகை)
தொகுத்தல் விரித்த றொகைவிரி மொழிபெயர்ப் ||தொகுத்தல் விரித்தல் தொகை விரி மொழிபெயர்ப்பு
பெனத்தகு நூல்யாப் பீரிரண் டென்ப. (50) ||என தகும் நூல் யாப்பு ஈர் இரண்டு என்ப.

என்னுதலிற்றோவெனின், வாய்ப்பக்காட்டல் என்பதனால் போந்த சிறப்பில்லனவற்றுள் வழியின்வகை இத்துணையாம் என உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
நூல் யாக்கப்படும் யாப்பு, தொகுத்து யாக்கப்படுவதூஉம், விரித்து யாக்கப்படுவதூஉம், தொகுத்தும் விரித்தும் யாக்கப்படுவதூஉம், மொழிபெயர்த்து யாக்கப்படுவதூஉம் என்று சொல்லத்தகும் இந்நான்கு கூற்றதாம் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

மேற்கூறிய பதினொன்றனுள் ஒன்றாகிய யாப்பினோடும் வெண்பா முதலிய யாப்பினோடும் வேற்றுமை தோன்ற ‘எனத்தகு நூல்யாப்பு’ என்றார். சிறப்பில்லனவற்றுள் வழியின்வகை ஒன்றனையும் எடுத்தோதியது என்னையெனின்:- இந்நூல் தொகைவிரிப்பட யாத்தமை தோன்றற்கு என்க. இவ்வாறே ஆசிரியர் தொல்காப்பியரும்,

“வழியின் வகையே நால்வகைத் தாகும்”

“தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்(து

அதற்பட யாத்தோ(டு) அனைமர பினவே.”)

-என எடுத்தோதுமாறு காண்க.


நூற்பா: 51

(சிறப்புப் பாயிரம் செய்தற்குரியவர்கள்)
தன்னா சிரியன் றன்னொடு கற்றோன் ||தன் ஆசிரியன் தன்னொடு கற்றோன்
தன்மா ணாக்கன் றகுமுரை காரனென் ||தன்மாணாக்கன் தகும் உரை காரன் என்று
றின்னோர் பாயிர மியம்புதல் கடனே. (51) ||இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே.

என்னுதலிற்றோவெனின், இவ்விலக்கணங்களையுடைய சிறப்புப் பாயிரம் கூறுதற்கு உரியார் இவர் என உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
ஒருவன் கூறிய நூற்கு இந்நால்வருள் ஒருவர் சிறப்புப்பாயிரம் கூறுதல் முறைமையாம் என்றவாறு.


நூற்பா: 52

(சிறப்புப்பாயிரம் பிறர்செய்யக் காரணம்)
தோன்றாத் தோற்றித் துறைபல முடிப்பினும் ||தோன்றாத் தோற்றி துறை பல முடிப்பினும்
தான்றற் புகழ்த றகுதி யன்றே. (52) ||தான் தற்புகழ்தல் தகுதி அன்றே.

என்னுதலிற்றோவெனின், சிறப்புப்பாயிரம் பிறர் கூறுதற்குக் காரணம் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
தோன்றாத நுட்பங்களையெல்லாம் தோற்றிப் பல துறைப்பட்டு விரிந்த நூலைச் செய்து முடித்தானாயினும் தன்னைத் தான் புகழ்தல் தகுதியன்றாம்; ஆதலின், நூல்செய்தானது புகழாகிய சிறப்புப் பாயிரத்தைப் பிறர் கூறவேண்டும் என்றவாறு.

குறிப்பு: ¶. இவ்விரு சூத்திரங்களையும் (52, 53) பனம்பாரம் என்பர் மயிலைநாதர்.


நூற்பா: 53

(தற்புகழ்ச்சி தகும் இடங்கள்)
மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும் ||மன் உடை மன்றத்து ஓலை தூக்கினும்
தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும் ||தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும்
மன்னிய வவையிடை வெல்லுறு பொழுதினும் ||மன்னிய அவை இடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும் ||தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலுந் தகும்புல வோற்கே. (53) ||தன்னை புகழ்தலும் தகும் புலவோற்கு ஏ.

என்னுதலிற்றோவெனின், தற்புகழ்ச்சியும் ஒரோவழிக் குற்றமன்று என்பது உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
இவ்விடங்களாயின், தன்னைப் புகழ்தலும் தகுதியாம் புலவோற்கு என்றவாறு.

புகழ்தலும் என்ற உம்மையான் இவ்விடங்களிலும் தன்னைப் புகழாமையே தகுதி என்பது பெற்றாம்.


நூற்பா: 54

(பாயிரம் நூலுக்கு இன்றியமையாதது)
ஆயிர முகத்தா னகன்ற தாயினும் ||ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே. (54) ||பாயிரம் இல்லது பனுவல் அன்றே.

என்னுதலிற்றோவெனின், இருவகைப் பாயிரங்களும் நூற்கு இன்றியமையாதன என்பது உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
ஆயிரம் உறுப்புக்களான் விரிந்த நூலாயினும் பாயிரம் இல்லாதது நூலன்று என்றவாறு.


நூற்பா: 55

மாடக்குச் சித்திரமு மாநகர்க்குக் கோபுரமும் ||மாடக்கு சித்திரமும் மா நகர்க்கு கோபுரமும்
ஆடமைத்தோ ணல்லார்க் கணியும்போல்- நாடிமுன் ||ஆடு அமை தோள் நல்லார்க்கு அணியும் போல் - நாடி முன்
ஐதுரையா நின்ற வணிந்துரையை யெந்நூற்கும் ||ஐது உரையா நின்ற அணிந்துரையை எ நூற்கும்
பெய்துரையா வைத்தார் பெரிது. (55) ||பெய்து உரையா வைத்தார் பெரிது.

என்னுதலிற்றோவெனின், மேல் பாயிரமில்லது பனுவலன்று என்றார், அஃது அன்றாதற்குக் காரணம் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
அறிவுடையோர் மாடம் முதலிய மூன்றற்கும் சித்திர முதலிய மூன்றும்போலக் கருதி, அழகிதாகிய பொருளை உணர்த்தாநின்ற இருவகைப் பாயிரங்களையும் உரைத்து, எவ்வகைப்பட்ட பெரிய நூல்கட்கும் முன்னர்ப் பெய்துவைத்தார் பெரும்பாலும்; ஆதலின், பாயிரமில்லது பனுவல் அன்றாம் என்றவாறு.

குறிப்பு: மாடத்துக்கு என்பதில் உள்ள அத்துச் சாரியை குறைந்து ‘மாடக்கு’ என வந்தது.


சிறப்புப்பாயிரத்திலக்கணம் முற்றிற்று[தொகு]

பார்க்க:

[[]]||
நன்னூல் மூலம்
நன்னூல் எழுத்ததிகாரம் 1. எழுத்தியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 2. பதவியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 3. உயிரீற்றுப்புணரியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 4. மெய்யீற்றுப்புணரியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 5. உருபுபுணரியல்
நன்னூல் சொல்லதிகாரம்
  1. 1
"https://ta.wikisource.org/w/index.php?title=நன்னூல்&oldid=1536210" இலிருந்து மீள்விக்கப்பட்டது