நன்னூல் எழுத்ததிகாரம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பவணந்தி முனிவர்[தொகு]

நன்னூல் விருத்தியுரை[தொகு]

(புத்தம் புத்துரை எனப்படும் விருத்தியுரை)

உரையாசிரியர்: மாதவச் சிவஞான அடிகளார்[தொகு]

நன்னூல் எழுத்ததிகாரம் 1. எழுத்தியல்[தொகு]

1. எழுத்தியல்[தொகு]

எழுத்ததிகாரம் என்பது, எழுத்தினது அதிகாரத்தையுடையது என அன்மொழித்தொகையாய் அப்படலத்திற்குக் காரணக்குறியாயிற்று. எழுத்து என்றது, அகரமுதல் னகர இறுவாய்க் கிடந்த முதலெழுத்து முப்பதும், உயிர்மெய் முதலிய சார்பெழுத்துப் பத்துமாம். அவற்றிற்கு எழுத்து என்னும் குறி ‘மொழிமுதற் காரணம்’ (நூ.58) என்னும் சூத்திரத்தால் ஓதுபவாகலின், ஈண்டு எதிரது போற்றி ஆளப்பட்டது.

அதிகாரம் - அதிகரித்தல். அஃது இருவகைப்படும். அவற்றுள் ஒன்று, வேந்தன் இருந்துழியிருந்து தன்நிலம் முழுவதும் தன்னாணையின் நடப்பச் செய்வதுபோல, ஒரு சொல் நின்றுழி நின்று பல சூத்திரங்களும் பல ஓத்துக்களும் தன்பொருள நுதலிவரச் செய்வது. ஒன்று, சென்று நடாத்தும் தண்டத் தலைவர் போல, ஓரிடத்து நின்ற சொல் பல சூத்திரங்களோடும் சென்று இயைந்து தன் பொருளைப் பயப்பிப்பது. இவற்றிற்கு, முறையே வடநூலார் யதோத்தேசபக்கம் எனவும், காரியகால பக்கம் எனவும் கூறுப. இது சேனாவரையார் உரையானும் உணர்க. அவற்றுள், ஈண்டு அதிகாரம் என்றது முன்னையது, அதனை உடையது எனவே, எழுத்தை நுதலிவரும் பலவோத்தினது தொகுதி எழுத்ததிகாரம் என்றவாறாயிற்று. எழுத்தினது அதிகாரத்தையுடையது என்புழி, ஆறாவது வினைமுதற் பொருண்மையின்கண் வந்த காரகம்.

இப்படலத்துள் விதிக்கப்படுவனவெல்லாம் கருவியும் செய்கையும் என இருவகைப்படும். அவற்றுள் கருவி எழுத்தியல் பதவியல் என்னும் இரண்டு ஓத்தானும், செய்கை உயிரீற்றுப் புணரியல் முதலிய மூன்று ஓத்தானும் கூறப்படும். கருவி, பொதுவும் சிறப்பும் என இருவகைத்து. முதலிரண்டு ஓத்தினும் கூறப்படுவன பொதுக்கருவி, உயிரீற்றுப்புணரியல் முதற்கண், புணர்ச்சி இன்னதெனக் கூறப்படுவனவும், உருபு புணரியலின் இறுதிக்கண், சாரியைத் தோற்றம் கூறப்படுவனவும், செய்கை யொன்றற்கேயுரிய கருவியாகலின் சிறப்புக் கருவி.


குறிப்பு:¶. காரகம் - வேற்றுமை வினைகொண்டு முடிவது. ஆறாம் வேற்றுமை வினைகொண்டு முடியாது. எடுத்துக்காட்டு: எனது புத்தகம். வினைமுதலைக் கொண்டு முடியும். அவ்வாறு வந்தாலும் காரகம் என்பதாம்.


நூற்பா: 56

(அருகக் கடவுள் வணக்கம்)


பூமலி யசோகின் புனைநிழ லமர்ந்த ||பூ மலி அசோகின் புனை நிழல் அமர்ந்த
நான்முகற் றொழுதுநன் கியம்புவ னெழுத்தே. (01) ||நால் முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்து ஏ.

என்னுதலிற்றோவெனின், கடவுள் வணக்கமும் அதிகாரமும் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
பூக்கள் மலிந்த அசோகமரத்தினது அலங்கரிக்கும் நிழலின்கண் எழுந்தருளியிருந்த நான்கு திருமுகங்களையுடைய கடவுளை வணங்கி, நன்றாகச் சொல்லுவன் எழுத்திலக்கணத்தை என்றவாறு.

எல்லாநூலும் மங்கலமொழிமுதல் வகுத்துக் கூறவேண்டுதலின் பூமலி என்றும், எல்லாச் சமயத்தோராலும் வணங்கப்படும் படைப்பு முதலிய ஐந்தொழிற்கும் உரிய எல்லாக் கடவுளாகியும் நின்றோன் ஒருவனே என்பார், அருகனை நான்முகன் என்றும் கூறினார். இவ்வாறு வள்ளுவநாயனாரும் ஒரு தெய்வத்தைக் குறியாமல்,

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (திருக்குறள், 3.)

என வரையாது கூறுதல் காண்க. எழுத்து என்பது ஆகுபெயர். ஏகாரம் ஈற்றசை. எல்லாம் வல்ல கடவுளை வணங்கலான் இனிது முடியும் என்பது கருதி நன்கு இயம்புவன் என்று புதுந்தமையின், இது நுதலிப்புகுதல் என்னும் உத்தி.


நூற்பா: 57

(எழுத்திலக்கணத்தின் 12 பகுதிகள்)
எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை ||எண் பெயர் முறை பிறப்பு உருவம் மாத்திரை
முதலீ றிடைநிலை போலி யென்றா ||முதல் ஈறு இடைநிலை போலி என்றா
பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே. (02) ||பதம் புணர்பு என பன்னிரு பாற்றது ஏ.

என்னுதலிற்றோவெனின், அவ்வெழுத்திலக்கணம் இத்துணைத்து என்பது உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
இப்பன்னிரு பகுதியினையும் உடைத்து அவ்வெழுத்திலக்கணம் என்றவாறு.

என்றா என்பது எண்ணிடைச் சொல்.

இச்சூத்திரம் தொகுத்துச் சுட்டல் என்னும் உத்தி. மேல் வருவன எல்லாம் வகுத்துக் காட்டல்.


1. எண்[தொகு]

குறிப்பு:

நூற்பா: 58

(எழுத்தும் அதன்வகையும்)
மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி ||மொழி முதல் காரணம் ஆம் அணு திரள் ஒலி
எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே. (03) ||எழுத்து அது முதல் சார்பு என இரு வகைத்து ஏ.

என்னுதலிற்றோவெனின், ‘பன்னிரு பாற்றதுவே’ (நூற்பா, 57) என்றவற்றுள், எழுத்தினது அகத்திலக்கணமாகிய பத்தையும் ஓரியலாகவும், அதன் புறத்திலக்கணமாகிய பதம், புணர்பு என்னும் இரண்டனுள், அவ்வெழுத்தானாம் பதத்தை ஓரியலாகவும், அப்பதம் புணரும் புணர்ப்பை மூன்றியலாகவும், ஓத்துமுறைவைப்பு என்னும் உத்தியான் வைக்கப்புகுந்து, முதற்கண் எழுத்தியலின் எழுத்தினது எண்ணினை நிறுத்தமுறையால் உணர்த்துவான் தொடங்கி, எழுத்து இன்னதென்பதூஉம் அதன்வகையும் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
மொழிக்கு முதற்காரணமாய் அணுத்திரளின் காரியமாய் வரும் ஒலியாவது எழுத்து; அது முதலெழுத்து என்றும், சார்பெழுத்து என்றும் இருவகையினை உடைத்து என்றவாறு.

எனவே, மொழிக்கு முதற்காரணம் எழுத்தானாற் போல, எழுத்திற்கு முதற்காரணம் அணுத்திரள் என்பது பெற்றாம். ஆம் என்னும் பெயரெச்சம் ஒலியென்னும் பெயரோடு முடிந்தது.

முற்கு, வீளை முதலியவற்றிற்கு முதற்காரணமாய், அணுத்திரளின் காரியமாய்வரும் ஒலி எழுத்தாகாமையின், மொழி முதற்காரணமாம் ஒலி என்றார். சிதலது நீர்வாய்ச் சிறுதுகளால் பெரும்புற்று உரு அமைந்த பெற்றியது என்ன, ஐம்புலப் பேருரு ஐந்தும் ஐந்தணுவால் இம்பரிற் சமைவது யாவரும் அறிதலின், அநாதி காரணமாகிய மாயையினை ஈண்டுக் கூறாது, ஆதிகாரணமாகிய செவிப்புலனாம் அணுத்திரளை எழுத்திற்கு முதற்காரணம் என்றார். இவ்வாசிரியர்க்கு மாயை உடன்பாடன்று. அணுத்திரள் ஒன்றுமே துணிவெனின் பிறிதொடு படாஅன் தன்மதங்கொளல் என்னும் மதம்படக் கூறினார் என்றுணர்க. ஈண்டு அணு என்றது ஒலியினது நுட்பத்தை.


குறிப்பு: சிதல் = கறையான். பெற்றியது = தன்மையது. ஐம்புலப் பேருரு - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்து விடயங்களாலாகிய பெரிய உரு. ஐந்து அணுவால் - அந்தச் சுவைமுதலிய ஐந்தின் நுட்பங்களால். அநாதி காரணம்- காலத்தோடு படாத காரணமாகிய. ஆதி காரணம் - காலத்தோடு பட்ட முதற்காரணம். அணுத்திரள்தான் ஒலிக்கெல்லாம் முதற்காரணம் என்பது சமணர் மரபு.


நூற்பா: 59

(முதலெழுத்து)
உயிரு முடம்புமா முப்பது முதலே. (04) ||உயிரும் உடம்பும் ஆம் முப்பது முதலே.

என்னுதலிற்றோவெனின், முதல் எழுத்தின் விரி உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
உயிரும் உடம்பும் ஆகும் முப்பது எழுத்தும் முதல் எழுத்தாம் என்றவாறு.

குறிப்பு: உயிர், உடம்பு என்பவை உவம ஆகுபெயர் ஆகும்.


நூற்பா: 60

(சார்பெழுத்து)
உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள ||உயிர்மெய், ஆய்தம், உயிர் அளபு ஒற்றுஅளபு
பஃகிய இஉ ஐஒள மஃகான் ||அஃகிய இ உ ஐ ஔ மஃகான்
தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும். (05) ||தனிநிலை பத்தும் சார்பு எழுத்து ஆகும்.

என்னுதலிற்றோவெனின், சார்பெழுத்தின் விரி உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
இப்பத்தும் சார்பு எழுத்தாம் என்றவாறு.

அஃகுதல் - சுருங்குதல். தனிநிலை- ஆய்தம். உயிர்களோடும் மெய்களோடும் கூடியும் கூடாதும் அலிபோலத் தனிநிற்றலின் தனிநிலை எனப்படும். உயிர்மெய், உயிரும்மெய்யும் கூடிப்பிறத்தலானும் ஆய்தம் உயிர்போல,

1அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு.

-என அலகுபெற்றும், மெய்போல,

2தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

- என அலகு பெறாதும் ஒருபுடையொத்து, அவற்றினிடையே சார்ந்துவருதலானும், ஏனைய தத்தம் முதலெழுத்தின் திரிபு விகாரத்தால் பிறத்தலானும் சார்பெழுத்தாயின எனக் கொள்க.

[அவ்வாறன்றி உயிர்மெய்யொழிந்தன, அகரம் முதலியன போல் தனித்தானும், ககரம் முதலிய போல அகரமொடு சிவணியானும், இயங்கும் இயல்பின்றி ஒருமொழியைச் சார்ந்து வருதலே தமக்கு இலக்கணமாக உடைமையின் சார்பெழுத்தாயின எனக் கோடலுமாம் என்க.

இனி, ஆசிரியர் தொல்காப்பியர், செய்கையொன்றனையும் நோக்கிச் சார்பெழுத்து மூன்று எனக் கருவிசெய்தாராகலின், இவ்வாசிரியர் செய்கையும் செய்யுளியலும் நோக்கிச் சார்பெழுத்துப் பத்து எனக் கருவிசெய்தார் என்பதும் உய்த்துணர்க.]


குறிப்பு:

1. திருக்குறள், 943. அலகுபெறுதல் - எண்ணிக்கை பெறுதல்.

உண்க அஃதிலார் என்பதில், உண்|க என்பது நேர்நேர்-தேமா; அஃ|துடம்|பு என்பது நிரைநிரைநேர்-கருவிளங்காய். இங்கு மாமுன் நிரைவந்த இயற்சீர் வெண்டளை. ஆய்தம் இங்கு அலகுபெற்றது. அஃ- என்பது இருகுறில், நிரையசை.

2. திருக்குறள், 236. ‘தோன்றுக வஃதிலார்’ என்பதில், தோன்|றுக - நேர்நிரை-கூவிளம்; வஃ|திலார்-நேர்நிரை-கூவிளம். விளம் முன் நேர் வந்து இயற்சீர் வெண்டளை ஆயிற்று. இங்கு வஃ- என்பதில் ஃ மெய்யெழுத்து போல நின்று, குறில்மெய் என நேரசையாயிற்று.

செய்கை-புணர்ச்சியிலக்கணம். செய்கை நோக்கி ஆசிரியர் தொல்காப்பியர். சார்பெழுத்தென்று குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றை வகுத்தார். மற்றவை செய்யுளியலை நோக்கி ஈண்டுக் கொள்ளப்பட்டன.

தம்மொடு தாம் சார்ந்தும், இடம் சார்ந்தும், இடமும் பற்றுக்கோடும் சார்ந்தும் விகாரத்தால் வருதலின் சார்பெழுத்தாயின என்று கூறுவர் மயிலைநாதர்.

நூற்பா: 61

(சார்பெழுத்தின் விரி)
உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம் ||உயிர்மெய் இரட்டு நூற்று எட்டு உயர் ஆய்தம்
எட்டுயி ரளபெழு மூன்றொற் றளபெடை ||எட்டு உயிர் அளபு எழு மூன்று ஒற்று அளபெடை
ஆறே ழஃகு மிம்முப் பானேழ் ||ஆறு ஏழ் அஃகும் இ முப்பான் ஏழ்
உகர மாறா றைகான் மூன்றே ||உகரம் ஆறு ஆறு ஐகான் மூன்றே
ஒளகா னொன்றே மஃகான் மூன்றே ||ஔகான் ஒன்றே மஃகான் மூன்றே
ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி ||ஆய்தம் இரண்டொடு சார்பு எழுத்து உறு விரி
ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப. (06) ||ஒன்று ஒழி முந்நூற்று எழுபான் என்ப.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன் பொருள்
உயிர்மெய் இருநூற்றுப் பதினாறு; குறுகாத ஆய்தம் எட்டு; உயிரளபெடை இருபத்தொன்று; ஒற்றளபெடை நாற்பத்திரண்டு; குற்றியலிகரம் முப்பத்தேழு; குற்றியலுகரம் முப்பத்தாறு; ஐகாரக் குறுக்கம் மூன்று; ஔகாரக் குறுக்கம் ஒன்று; மகரக் குறுக்கம் மூன்று; ஆய்தக் குறுக்கம் இரண்டுடனே சார்பெழுத்தினது மிகுந்த விரி முந்நூற்று அறுபத்தொன்பதாம் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

இவை இத்துணையவாதல் பிறப்பதிகாரத்தினுள் காண்க. இவ்வாறு உயிர்மெய் ஒழிந்தனவற்றையும், விரித்தல் தொன்னெறி என்பார் என்ப என்றார்.


குறிப்பு: †.பிறப்பதிகாரம் என்பது, எழுத்துக்களின் பிறப்பைக் கூறும் ‘நிறையுயிர் முயற்சியின்’ (74) என்றது முதல், ‘ல ள ஈற்றியைபினாம்(97)’ என்றதுவரை உள்ளவற்றை.

2. பெயர்[தொகு]

நூற்பா: 62

(பெயரின் பொதுஇலக்கணம்)
இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின. (07) ||இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின.

என்னுதலிற்றோவெனின், நிறுத்தமுறையானே எழுத்தின் பெயராமாறு உணர்த்துவான் தொடங்கிப் பெயர்க்கெல்லாம் பொதுவிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
இடுகுறிப்பெயரும், காரணப்பெயரும் ஆகிய இரண்டும், பல பொருட்குப் பொதுப்பெயராயும் ஒரு பொருட்குச் சிறப்புப் பெயராயும் வருவனவாம் என்றவாறு.

ஒரு பொருளைக் குறித்தற்குக் கடவுளானும் அறிவுடையோரானும் இட்டகுறியாகிய பெயர் இடுகுறிப்பெயர். காரணத்தான் வரும் பெயர் காரணப்பெயர்.

உதாரணம்:- மரம் என்பது இடுகுறிப் பொதுப்பெயர். பனை என்பது இடுகுறிச் சிறப்புப்பெயர். அணி என்பது காரணப் பொத்துப்பெயர். முடி என்பது காரணச் சிறப்புப்பெயர்.

இனி, இரட்டுற மொழிதல் என்னும் உத்தியான், இச்சூத்திரத்திற்கு இடுகுறி என்றும் காரணம் என்றும் சொல்லப்படும் இலக்கணங்களையுடைய பெயர்கள், இடுகுறி காரணம் என்னும் இரண்டற்கும் பொதுவாயும், இடுகுறிக்கே சிறப்பாயும் காரணத்திற்கே சிறப்பாயும் வருவனவாம் என்றும் பொருள் உரைத்துக்கொள்க.

உதாரணம்:- பரம் என்பது இடுகுறிப்பெயர். பரமன் என்பது காரணப்பெயர். முக்கணன், அந்தணன், மறவன், முள்ளி, கறங்கு, மொழி, சொல் என்பன காரண இடுகுறிப்பெயர். இவை காரணவிடுகுறியாவது என்னையெனின்:- இவற்றுள் முக்கணன் என்னும் பெயர், யானைமுகக் கடவுள் முதலியோர்க்கு மூன்றுகண் உளவாகலின் காரணம் கருதியவழி மூன்றுகண்ணினையுடையோர் பலர்க்கும் சேறலானும், காரணம் கருதாதவழி இடுகுறி மாத்திரையேயாய்ப் பரமனுக்கே சேறலானும், காரணவிடுகுறியாயிற்று. ஏனைப்பெயர்கட்கும் இவ்வாறே காண்க.

இவ்வாறே, வடநூலார் இடுகுறியை ரூடி என்றும், காரணத்தை யோகம் என்றும், காரணவிடுகுறியை யோகரூடி என்றும் வழங்குப. இவ்விலக்கணத்தான் எழுத்தினது பெயரும் பிறபெயரும் வருமாறு காண்க.


நூற்பா: 63


(எழுத்தின்பெயர்)
அம்முத லீரா றாவி கம்முதன் ||அ முதல் ஈர் ஆறு ஆவி க முதல்
மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர். (08) ||மெய் மூ ஆறு என விளம்பினர் புலவர்.

என்னுதலிற்றோவெனின், ஒரு சார் எழுத்தினது பெயர் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
அகரம் முதல் ஔகாரம் ஈறாகக் கிடந்த பன்னிரண்டனையும் ஆவி என்றும், ககரமுதல் னகரம் ஈறாகக் கிடந்த பதினெட்டனையும் மெய் என்றும், நூல்களால் சொன்னார் அறிவுடையோர் என்றவாறு.

கடவுளால் ஆவி மெய் என்றமைத்த பெயர்க்காரணம் உயிர்களான் முற்றும் உணர்தற்கு அருமையும், கடவுள் நூல் உணர்ந்தோர்வழிச் செல்லும் தமது பெருமையும் தோன்ற ‘விளம்பினர் புலவர்’ என்றார்.

ஆவியும் மெய்யும் போறலின், இவ்விருவகை எழுத்திற்கும், ஆவி மெய் என்பன உவமவாகுபெயராய்க் காரணப் பொதுப்பெயராயின. ஏனையவும் இவ்வாறே காண்க.


நூற்பா: 64

(குறில்)
அவற்றுள், ||அவற்றுள்,
அஇ உஎ ஒக்குறி லைந்தே. (09) ||அஇ உஎ ஒக்குறில் ஐந்தே.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன் பொருள்
ஆவி, மெய் என்றவற்றுள் இவ்வைந்தும் குற்றெழுத்தாம் என்றவாறு.


நூற்பா: 65

(நெடில்)
ஆஈ ஊஏஐ ஓஒள நெடில். (10) ||ஆஈ ஊஏ ஐஓ ஔநெடில்.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன் பொருள்
இவ்வேழும் நெட்டெழுத்தாம் என்றவாறு.


நூற்பா: 66

(சுட்டு)
அஇ உம்முதற் றனிவரிற் சுட்டே. (11) ||அ இ உ முதல் தனி வரின் சுட்டே.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன் பொருள்
இம்மூன்றெழுத்தும், மொழிக்குப் புறத்தும் அகத்தும் முதற்கண் தனித்துச் சுட்டுப்பொருள் உணர்த்தவரின் சுட்டெழுத்தாம் என்றவாறு.

முதல் எனப் பொதுப்படக் கூறினமையின் புறத்தும் அகத்தும் என்பது பெற்றாம்.

உதாரணம்: அக்கொற்றன், இக்கொற்றன் உக்கொற்றன் எனவும், அவன் இவன் உவன் எனவும் வரும்.

அவன் என்பதன்கண் அகரம், அறம் என்பதன்கண் அகரம்போலப் பின்னெழுத்துக்களோடு தொடர்ந்து நின்று ஒரு பொருளை உணர்த்தாது, மலையன் என்பதன்கண் பகுதிபோல வேறுநின்று சுட்டுப்பொருள் உணர்த்தலின், அகத்து வரும் இதனையும் தனிவரின் என்றார். இவ்வுரை வினாவிற்கும் கொள்க.


நூற்பா: 67

(வினா)
எயா முதலும் ஆஓ வீற்றும் || எ யா முதலும் ஆ ஓ ஈற்றும்
ஏயிரு வழியும் வினாவா கும்மே. (12) || ஏ இரு வழியும் வினா ஆகும்மே.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன் பொருள்
புறத்தும் அகத்தும் மொழிமுதற்கண் எகரமும் யாவும், ஈற்றின்கண் ஆகாரமும் ஓகாரமும், இவ்விரண்டிடத்தினும் ஏகாரமும் தனித்து வினாப்பொருள் உணர்த்தவரின் வினாவெழுத்தாம் என்றவாறு.

மேல் தனிவரின் என்றதனை மீண்டும் கூட்டுக. இவை புறத்தும் அகத்தும் வருதல் ஏற்றபெற்றி கொள்க. ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல் என்னும் உத்தியான் யா வினாவையும் உடன் கூறினார்.

உதாரணம்: எக்கொற்றன் எனவும், எவன் எனவும், யாவன் எனவும் முதற்கண் வந்தன. கொற்றனா, கொற்றனோ என ஈற்றின்கண் வந்தன. ஏவன், கொற்றனே என ஈரிடத்தும் வந்தது. ஏனைப் பெயர் வினைகளோடும் ஏற்றபெற்றி ஒட்டிக்கொள்க.


நூற்பா: 68

(வல்லினம்)
வல்லினங் கசட தபறவென வாறே. (13) ||வல் இனம் க ச ட த ப ற என ஆறே.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன் பொருள்
இவ்வாறும் வல்லினமாம் என்றவாறு.


நூற்பா: 69

(மெல்லினம்)
மெல்லினம் ஙஞண நமன வெனவாறே. (14) || மெல் இனம் ங ஞ ண ந ம ன என ஆறே.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன் பொருள்
இவ்வாறும் மெல்லினமாம் என்றவாறு.


நூற்பா: 70

(இடையினம்)
இடையினம் யரல வழள வெனவாறே. (15) ||

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன் பொருள்
இவ்வாறும் இடையினமாம் என்றவாறு.

குறிப்பு: 68, 69, 70 நூற்பாக்களில் க ச முதலிய மெய்களிலுள்ள அகரம் (க்+அ) எழுத்துச் சாரியை. உண்மையில் க். ச், ட், த், ப், ற் என்பவையே வல்லினம். க என்பதில் வரும் அ எழுத்துச் சாரியை என்பதாம். இடையினம், மெல்லினம் என்பவையும் இதுபோன்றவையே. இந்த மூவினமும் முறையே வலி, மெலி, இடை- வன்மை, மென்மை, இடைமை - வன்கணம், மென்கணம், இடைக்கணம் - வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து எனும் வேறுபெயர்களாலும் வழங்கப்படும்.


நூற்பா: 71

(இனவெழுத்து)

ஐஒள இஉச் செறிய முதலெழுத் || ஐ ஔ இ உ செறிய முதல் எழுத்து
திவ்விரண் டோரின மாய்வரன் முறையே. (16) || இவ் இரண்டு ஓர் இனம் ஆய் வரல் முறையே.

என்னுதலிற்றோவெனின், இதுவும் அது.

இதன் பொருள்
இனமில்லாத ஐகார ஔகாரங்கள், ஈகார ஊகாரங்கட்கு இனமாகிய இகர உகரங்களைத் தமக்கும் இனமாகப் பொருந்த, முதலெழுத்துக்கள் இவ்விரண்டு ஓரினமாய் வருதல் முறை; ஆதலால், அவை இனவெழுத்தென்றும் பெயரவாம் என்றவாறு.


நூற்பா: 72

(இனம் என்றதற்குக் காரணம்)

தான முயற்சி யளவு பொருள்வடி || தானம் முயற்சி அளவு பொருள் வடிவு
வானவொன் றாதியோர் புடையொப் பினமே. (17) || ஆன ஒன்று ஆதி ஓர்புடை ஒப்பு இனமே.

என்னுதலிற்றோவெனின், மேல் இனம் என்றதற்குக் காரணம் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
தானம் முதலியவாய இவற்றுள் ஒன்று முதலாக ஒருபுடை ஒத்தலால் இனமாம் என்றவாறு.

தானம் - உரம்முதலியன. முயற்சி - இதழ் முயற்சி முதலியன. அளவு- மாத்திரை. பொருள் - பாலன் விருத்தன் ஆனாற்போலக் குறிலினது விகாரமே நெடிலாதலின், இரண்டற்கும் பொருள் ஒன்று என்று முதல்நூலான் நியமிக்கப்பட்ட பொருள். வடிவு- ஒலிவடிவு, வரிவடிவு. இவற்றுள் ஒன்றும் பலவும் ஒத்து இனமாய் வருதல் கண்டுகொள்க.

சார்பெழுத்திற்குப் பெயர் கூறாது ஒழிந்தார். ஆய்தம் தனிநிலை ஆதலானும், ஏனைச் சார்பெழுத்துக்குச் சுட்டு வினா என்று விதந்து ஓதினவை ஒழிந்த முதலெழுத்தின் பெயரே பெயராய் அடங்குதலானும் என்க.

இச்சூத்திரம் ஏதுவின் முடித்தல் என்னும் உத்தி.


குறிப்பு: ஏதுவின் முடித்தல்: முடிவு பெறாததைக் காரணத்தான் முடித்து வைத்தல். ஏது-காரணம். முன்சூத்திரத்தில் இன எழுத்து எனப் பெயர் தந்தமைக்குக் காரணம் தானம் முதலியவற்றுள் ஓர்புடை ஒப்பு ஏது(காரணம்) என முடித்துக் காட்டியமையின் ஏதுவின் முடித்தல் என்பதாம்.

3. முறை[தொகு]

நூற்பா: 73

(எழுத்துகளின் வரிசைமுறை)
சிறப்பினு மினத்தினுஞ் செறிந்தீ்ண்டம்முதல் || சிறப்பினும் இனத்தினும் செறிந்து ஈண்டு அ முதல்
நடத்த றானே முறையா கும்மே. (18) || நடத்தல் தானே முறை ஆகும்மே.

என்னுதலிற்றோவெனின், நிறுத்த முறையானே முறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள்
சிறப்பினானும் இனத்தினானும் பொருந்தி, இவ்வுலகத்து அகரம் முதலாக வழங்குதல்தானே, எழுத்தினது முறையாம் என்றவாறு.

குறிலினது விகாரமே நெடிலாதலான் குறில் முன்னிற்றலின் சிறப்பின் என்றும், நெடில் இனமாய்ப் பின்னிற்றலின் இனத்தின் என்றும், நாதமாத்திரையாய் எல்லா எழுத்திற்கும் காரணமாய் முன்னிற்றலின் அம்முதல் என்றும், எல்லா எழுத்திற்கும் வைத்த முறைக்காரணம் உயிர்களான் முற்றும் உணர்தல் ஆகாமையின் நடத்தல்தானே என்றும் கூறினார்.

[அங்ஙனமாயினும், நெடுங்கணக்கினுள் அகரமுதல் னகர இறுவாய்க் கிடக்கை முறையாதற்குக் காரணமும் ஒருவாறு காட்டுதும்:-

அகரம் முதலிய பன்னீருயிரும் தனித்தியங்கும் ஆற்றல் உடைமையானும், ககரம் முதலிய பதினெட்டு மெய்யும் அகரத்தோடு கூடியல்லது இயங்கும் ஆற்றல் இன்மையானும், அச்சிறப்பும் சிறப்பின்மையும் நோக்கி உயிர் முன்னும், மெய் பின்னுமாக வைக்கப்பட்டன.

இனி, உயிர்களுள் அ இ உ என்பன, முறையே அங்காந்து கூறும் முயற்சியானும்,அவ்வங்காப்போடு அண்பல்லடி நாவிளிம்புறக் கூறு முயற்சியானும், அவ்வங்காப்போடு இதழ் குவித்துக் கூறும் முயற்சியானும் பிறத்தலான், அப்பிறப்பிடத்து முறையே முறையாக வைக்கப்பட்டன. ஆகார ஈகார ஊகாரங்கள், அகர முதலியவற்றிற்கு இனம் ஆதலின் அவற்றைச் சார வைக்கப்பட்டன. இனி எகரமாவது அகரக்கூறும் இகரக்கூறும் தம்முள் ஒத்து இசைத்து நரமடங்கல் போல் நிற்பதொன்றாகலானும், ஒகரமாவது அகரக்கூறும் உகரக்கூறும் தம்முள் ஒத்து இசைத்து அவ்வாறு நிற்பதொன்றாகலானும், அவை அவற்றின் பின் முறையே வைக்கப்பட்டன. ஏகார ஓகாரங்கள் இனமாதலின் அவற்றின் பின் முறையே வைக்கப்பட்டன. அகரமும் யகரமும் இகரமும் தம்முள் ஒத்து இசைத்து நிற்பது ஒன்றாகலின் எகர ஏகாரங்களின் பின் ஐகாரமும், அகரமும் வகரமும் உகரமும் தம்முளொத்து இசைத்து நிற்பதொன்றாகலின் ஒகர ஓகாரங்களின் பின் ஔகாரமும் வைக்கப்பட்டன. இவ்வாறாதல் பற்றி, ஏ ஓ ஐ ஔ என்னும் நான்கனையும் வடநூலார் சந்தியக்கரம் என்பர். கையடனார் நரமடங்கல் போல என்று உவமையும் கூறினார். இக்கருத்தே பற்றி ஆசிரியர்,

 ‘அம்முன் இகரம் யகரம் என்றிவை
எய்தின் ஐயொத் திசைக்கும் அவ்வோ(டு)
உவ்வும் வவ்வும் ஔவோ ரன்ன’ (125)

-என்றார். இவ்வாறே ஆசிரியர் தொல்காப்பியனாரும்,

‘அகர இகரம் ஐகாரம் ஆகும்’

 ‘அகர உகரம் ஔகாரம் ஆகும்’

-எனக் கூறி, ஐ என்னும் நெட்டெழுத்தின் வடிவு புலப்படுத்தற்கு அகர இகரங்களேயன்றி அவற்றிடையே யகரமும் ஒத்திசைக்கும் என்பார்,

 ‘அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்’

-என்றும், ‘மெய்பற’ என்ற இலேசானே, ஔ என்னும் நெட்டெழுத்தின் வடிவு புலப்படுத்தற்கு அகர உகரங்களேயன்றி அவற்றிடையே வகரமும் ஒத்திசைக்கும் என்றும், இம்பர் உம்பர் என்றாற்போல்வன காலவகை இடவகைகளான் மயங்குமாகலின், இவற்றின் முதற்கண் நிற்பது யாதோ இறுதிக்கண் நிற்பது யாதோ என்னும் ஐயம் நீக்குதற்கு,

 ‘இகரமும் யகரமும் இறுதி விரவும்’

-என்றும் கூறினார். மொழிந்த பொருளோடு ஒன்ற அவ்வயின் மொழியாததனையும் முட்டின்று முடித்தல் என்னும் உத்தியான், எகர ஏகாரங்கள் ஒகர ஓகாரங்கள் அவ்வாறாதலும் கொள்ளவைத்தார். மாபாடியத்துள் ஊகாரத்தின் பின்னின்ற வடவெழுத்து நான்குயிர்க்கும் இடையே ரகர லகரக் கூறுகள் ஒத்து நிற்கும் என்ற ஆசிரியர் பதஞ்சலியார்க்கு, ஐ ஔ என்புழியும் இடையே யகர வகரக் கூறுகள் விரவி நிற்கும் என்பது உடன்பாடாதல் பெற்றாம். எகர முதலியவற்றுள் அகரக்கூறு குறைவும், இகர உகரக் கூறுகள் மிகுதியுமாம் எனவும் உணர்க. இது மாபாடியத்துள் கண்டது. ஈண்டுக் கூறியவாற்றானே, அகரம் உயிரெழுத்துக்களினும் கலந்து நிற்குமாறு அறிக.

இனி, மெய்களுள் வலியாரை முன்வைத்து மெலியாரைப் பின்வைத்தல் மரபு ஆகலின், அச்சிறப்பு நோக்கி வல்லெழுத்துக்கள் முன்னும், அவ்வவற்றிற்கு இனமொத்த வல்லெழுத்துக்கள் அவ்வவற்றின் பின்னுமாக வைக்கப்பட்டன. அவ்விரண்டும் நோக்கியல்லது இடைநிகரனவாய் ஒலித்தல் அறியப்படாமையின், அதுபற்றி இடையெழுத்துக்கள் அவ்விரு கூற்றிற்கும் பின் வைக்கப்பட்டன. ஒருவாற்றான் ஒத்தலும் ஒருவாற்றான் வேறாதலும் உடைமை பற்றியன்றே இனம் என்று வழங்கப்படுவது: அவற்றுள் இடையெழுத்து ஆறும்,இடப்பிறப்பான் ஒத்தலும் முயற்சிப் பிறப்பான் வேறாதலும் உடைமையின் இடைக்கணம் என ஓரினமாயின. உயிர்க்கணம், வன்கணம், மென்கணம் என்பவற்றிற்கும் இஃது ஒக்கும்.

இனி, க ங்ககளும், ச ஞக்களும், ட ணக்களும், த நக்களும், ப மக்களும், அடிநாவண்ணம் இடைநாவண்ணம், நுனிநாவண்ணம், அண்பல்லடி இதழ் என்னும் இவற்றின் முயற்சியான் பிறத்தலான், அப்பிறப்பிடத்து முறையே முறையாக வைக்கப்பட்டன. ய ர ல வக்கள் நான்கும் முறையே அடியண்ணமும், இடையண்ணமும், அண்பல் முதலும், இதழும் என்னும் இவற்றின் முயற்சியால் பிறத்தலான், அப்பிறப்பிடத்து முறையே முறையாக வைக்கப்பட்டன. ழகார றகார னகாரங்கள் மூன்றும் தமிழெழுத்து என்பது அறிவித்தற்கு இறுதிக்கண் வைக்கப்பட்டன. அவற்றுள்ளும் ழகாரம் இடையெழுத்தாகலின் அதுபற்றி இடையெழுத்தோடு சார்த்தி, அவற்றிறுதிக்கண் வைக்கப்பட்டது. வடமொழியின் லகரம் ளகரமாகவும் உச்சரிக்கப்படுவதன்றித் தனியே ஓரெழுத்து அன்மையின், அச்சிறப்பின்மை பற்றி இடையெழுத்தாகிய ளகரம் ழகரத்திற்கும் பின் வைக்கப்பட்டது. இவ்வாறே, உயிருள்ளும் எகர ஒகரங்கள் ஒருவாற்றான் சிறப்பெழுத்தாயினும், பிராகிருத மொழியில் பயின்று வருதலானும், சாமவேதம் உடையாருள் ஒருசாரார் இசைபற்றிக் குழூஉக்குறி பொலக்கொண்டு ஓதுபவாகலானும், இறுதிக்கண் வையாது முறைபற்றி ஏகார ஓகாரங்களின்முன் வைக்கப்பட்டன. ஆகையால், முறையாமாறு இவையென உய்த்து உணர்ந்துகொள்க.

இவ்வாறு உலகத்தும் பிறப்பொத்தல் பற்றியே இனம் என்று வழங்குபவாகலின், ஈண்டு இனத்தினும் என்றதற்குப் பிற காரணங்களும் உளவேனும், பெரும்பான்மையும் பிறப்பு ஒத்தலே இனம் என்று கொள்க.

4. பிறப்பு[தொகு]

நூற்பா: 74


(பிறப்பின் பொதுவிதி)
நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்ட முச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே. (19)


நூற்பா: 75

(முதலெழுத்தின் பிறப்பு- இடம்)
அவ்வழி,
ஆவி யிடைமை யிடமிட றாகும்
மேவு மென்மைமூக் குரம்பெறும் வன்மை. (20)

8

நூற்பா: 76

(முதலெழுத்தின் பிறப்பு-முயற்சி)
அவற்றுள்,
முயற்சியுள் அஆ வங்காப் புடைய. (21)


நூற்பா: 77

இஈ எஏ ஐயங் காப்போ
டண்பன் முதனா விளிம்புற வருமே. (22)


நூற்பா: 78

உஊ ஒஓ ஒளவிதழ் குவிவே. (23)


நூற்பா: 79

கஙவுஞ் சஞவும் டணவும் முதலிடை
நுனிநா வண்ண முறமுறை வருமே. (24)


நூற்பா: 80

அண்பல் லடிநா முடியுறத் தநவரும். (25)


நூற்பா: 81

மீகீ ழிதழுறப் பம்மப் பிறக்கும். (26)


நூற்பா: 82

அடிநா வடியண முறயத் தோன்றும். (27)


நூற்பா: 83

அண்ண நுனிநா வருட ரழவரும். (28)


நூற்பா: 84

அண்பன் முதலு மண்ணமு முறையின்
நாவிளிம்பு வீங்கி யொற்றவும் வருடவும்
லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும். (29)


நூற்பா: 85

மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே. (30)


நூற்பா: 86

அண்ண நுனிநா நனியுறிற் றனவரும். (31)


நூற்பா: 87

(சார்பெழுத்துப் பிறப்பு- இடம், முயற்சி)
ஆய்தக் கிடந்தலை யங்கா முயற்சி
சார்பெழுத் தேனவுந் தம்முத லனைய. (32)


நூற்பா: 88

(பிறப்புக்குப் புறனடை)
எடுத்தல் படுத்த னலித லுழப்பில்
திரிபுந் தத்தமிற் சிறிதுள வாகும். (33)


நூற்பா: 89

(உயிர்மெய்)
புள்ளிவிட் டவ்வொடு முன்னுரு வாகியும்
ஏனை யுயிரோ டுருவு திரிந்தும்
உயிரள வாயதன் வடிவொழித் திருவயிற்
பெயரொடு மொற்றுமுன் னாய்வரு முயிர்மெய். (34)


நூற்பா: 90

(முற்றாய்தம்)
குறியதன் முன்ன ராய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே. (35)


நூற்பா: 91

(உயிரளபெடை)
இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடில்
அளபெழு மவற்றவற் றினக்குறில் குறியே. (36)


நூற்பா: 92

(ஒற்றளபெடை)
ஙஞண நமன வயலள வாய்தம்
அளபாங் குறிலிணை குறிற்கீ ழிடைகடை
மிகலே யவற்றின் குறியாம் வேறே. (37)


நூற்பா: 93

(குற்றியலிகரம்)
யகரம் வரக்குற ளுத்திரி யிகரமும்
அசைச்சொன் மியாவி னிகரமுங் குறிய. (38)


நூற்பா: 94

(குற்றியலுகரம்)
நெடிலோ டாய்த முயிர்வலி மெலியிடைத்
தொடர்மொழி யிறுதி வன்மை யூருகரம்
அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே. (39)


நூற்பா: 95

(ஐகார, ஒளகாரக் குறுக்கங்கள்)
தற்சுட் டளபொழி யைம்மூ வழியும்
நையு மௌவு முதலற் றாகும். (40)


நூற்பா: 96

(மகரக்குறுக்கம்)
ணனமுன்னும் வஃகான் மிசையுமக் குறுகும். (41)


நூற்பா: 97

(ஆய்தக்குறுக்கம்)
லளவீற் றியைபினா மாய்த மஃகும். (42)


5. உருவம்[தொகு]

நூற்பா: 98


தொல்லை வடிவின வெல்லா வெழுத்துமாண்
டெய்து மெகர வொகரமெய் புள்ளி. (43)

6. மாத்திரை[தொகு]

நூற்பா: 99


(எழுத்துக்களின் மாத்திரை)


மூன்றுயி ரளபிரண் டாநெடி லொன்றே
குறிலோ டையௌக் குறுக்க மொற்றள
பரையொற் றிஉக் குறுக்க மாய்தங்
கால்குறண் மஃகா னாய்த மாத்திரை. (44)


நூற்பா: 100


(மாத்திரை என்றால் என்ன)
இயல்பெழு மாந்த ரிமைநொடி மாத்திரை. (45)


நூற்பா: 101

(மாத்திரைக்குப் புறனடை)
ஆவியு மொற்று மளவிறந்திசைத்துலும்
மேவு மிசைவிளி பண்டமாற் றாதியின். (46)

7. முதனிலை[தொகு]

நூற்பா: 102

(மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள்)
பன்னீ ருயிருங் கசதந பமவய
ஞஙவீ ரைந்துயிர் மெய்யு மொழிமுதல். (47)


நூற்பா: 103

(வகரம்)
உஊ ஒஓ வலவொடு வம்முதல். (48)


நூற்பா: 104

(யகரம்)
அஆ உஊ ஓஒள யம்முதல். (49)


நூற்பா: 105

(ஞகரம்)
அஆ எஒவ்வோ டாகு ஞம்முதல். (50)


நூற்பா: 106

(ஙகரம்)
சுட்டியா வெகர வினாவழி யவ்வை
யொட்டி ஙவ்வு முதலா கும்மே. (51).



8. இறுதிநிலை[தொகு]

நூற்பா: 107

(மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள்)
ஆவி ஞணநமன யரலவ ழளமெய்
சாயு முகரநா லாறு மீறே. (52)


நூற்பா: 108

(சிறப்பு விதி)


குற்றுயி ரளபி னீறா மெகர
மெய்யொ டேலாதொந் நவ்வொ டாமௌக்
ககர வகரமோ டாகு மென்ப. (53)


நூற்பா: 109

(எழுத்தின் முதலும் ஈறும்)


நின்ற நெறியேயுயிர் மெய்முத லீறே. (54)

9. இடைநிலை[தொகு]

நூற்பா: 110

(உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம்)


கசதப வொழித்த வீரேழன் கூட்டம்
மெய்ம்மயக் குடனிலை ரழவொழித் தீரேட்
டாகுமிவ்விருபான் மயக்கு மொழியிடை
மேவு முயிர்மெய் மயக்கள வின்றே (55)


நூற்பா: 111

(வேற்றுநிலைமெய்ம்மயக்கம்-சிறப்புவிதிகள்)
ஙம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே. (56)

நூற்பா: 112

ஞநமுன் றம்மினம் யகரமொ டாகும் (57)


நூற்பா: 113

டறமுன் கசப மெய்யுடன் மயங்கும். (58)


நூற்பா: 114

ணனமுன் னினங்கச ஞபமய வவ்வரும். (59)


நூற்பா: 115

மம்முன் பயவ மயங்கு மென்ப. (60)


நூற்பா: 116

யரழ முன்னர் மொழிமுதன் மெய்வரும். (61)


நூற்பா: 117

லளமுன் கசப வயவொன் றும்மே. (62)


நூற்பா: 118

'(உடனிலை மெய்ம்மயக்கம்- சிறப்புவிதி)
ரழ வல்லன தம்முற் றாமுட னிலையும். (63)


நூற்பா: 119


யரழவொற் றின்முன் கசதப ஙஞநம
ஈரொற்றாம்ரழத் தனிக்குறி லணையா. (64)


நூற்பா: 120


லளமெய் திரிந்த ணனமுன் மகாரம்
நைந்தீ ரொற்றாஞ் செய்யு ளுள்ளே. (65)


நூற்பா: 121


தம்பெயர் மொழியின் முதலு மயக்கமும்
இம்முறை மாறி யியலு மென்ப. (66)

10. போலி[தொகு]

நூற்பா: 122

(மொழியிறுதிப் போலி)


மகர விறுதி அஃறிணைப் பெயரின்
னகரமோ டுறழா நடப்பன வுளவே. (67)


நூற்பா: 123


(மொழிமுதற்போலி, மொழியிடைப்போலி)


அஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன். (68)


நூற்பா: 124


(மொழியிடைப்போலி


ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி
ஞஃகா னுறழு மென்மரு முளரே. (69)


நூற்பா: 125


(சந்தியக்கரம்


அம்மு னிகரம் யகர மென்றிவை
யெய்தி னையொத் திசைக்கு மவ்வோ
டுவ்வும் வவ்வு மௌவோ ரன்ன. (70)


நூற்பா: 126


(எழுத்தின் சாரியைகள்)


மெய்க ளகரமு நெட்டுயிர் காரமும்
ஐயௌக் கானு மிருமைக் குறிலிவ்
விரண்டொடு கரமுமாஞ் சாரியை பெறும்பிற. (71)



நூற்பா: 127


(இவ்வியலின் புறனடை நூற்பா)


மொழியாய்த் தொடரினு முன்னனைத் தெழுத்தே. (72)

எழுத்ததிகாரம் எழுத்தியல் முற்றிற்று[தொகு]

பார்க்க:
நன்னூல் மூலம்
நன்னூல் பாயிரவியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 1. எழுத்தியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 2. பதவியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 3. உயிரீற்றுப்புணரியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 4. மெய்யீற்றுப்புணரியல்
நன்னூல் எழுத்ததிகாரம் 5. உருபுபுணரியல்
[[]] :[[]]:[[]]:[[]]:[[]] :[[]]