தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்/8. எப்படி சாப்பிட வேண்டும்?
என்ன சாப்பிடுவது என்று எண்ணித் தவிக்கும் நிலைமை இருக்கும்போது, எப்படி சாப்பிடுவது என்று எழுதுகின்றீர்களே என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும், துண்டும்.
நியாயமான கேள்விதான்:
வாழ்க்கையில் வருகிற புதிர்கள், போராட்டங்கள், சதிர்கள், சச்சரவுகள், சங்கடங்கள், சந்தர்ப்ப சூழ்நிலை சமாச்சாரங்கள் எல்லாமே சம்பாதிக்கத் தான்.
சம்பாதிப்பது எதற்காக? வசதியுடன் வாழ வக்கணையாக சாப்பிட, வாழ்வின் நோக்கமும் நுணுக்கமும் அதுதானே!
ஏழைகள் என்ன சாப்பிடுவது என்று ஏங்குகின்றார்கள். எல்லா வசதி படைத்த பணக்காரர்கள் எதைச் சாப்பிடுவது, எப்படி சாப்பிடுவது என்று ஏங்கிக்கிடக்கின்றார்கள்.
ஆக சாப்பிடாமல் யாராலும், வாழ்ந்திட முடியாது. இருந்தாலும், சாப்பிட நமக்கு உணவு கிடைக்கிறபொழுது சமர்த்தாக எப்படி சாப்பிடுவது அந்தக் காரியத்தில் மகிழ்வது எப்படி என்று கொஞ்சம் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லதுதானே! விரும்பி சாப்பிடுங்கள். அதற்காக விரைவாக வேண்டாம். ஆவலுடன் சாப்பிடுங்கள். அதற்காக ஆவேசம் வேண்டாம். கொஞ்சமாக எடுத்து எடுத்து சாப்பிடுங்கள்.
அதிகமாக, வாய்க்கு அடங்காமல் அள்ளிவிட வேண்டாம். உணவை அரைத்து உள்ளே அனுப்பும் பொழுதே, சுவைத்துச் சாப்பிடுங்கள். இல்லையேல் அது அஜீரணத்தை உண்டுபண்ணிவிடுகிறது.
எதையாவது படித்துக் கொண்டோ அல்லது தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டோ சாப்பிடுவது சரியல்ல. அப்படிப் பழகிவிட்டிருந்தால், பழக்கத்தைத் தொடரலாம். மாற்ற வேண்டியதில்லை.
எத்தனைமுறை சாப்பிடுகிறோம் என்பதில் கருத்தைச் செலுத்த வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அளவில் குறைவாக சாப்பிடுபவர்களும் உண்டு. இருந்தாலும், நேரம் தவறாது குறித்த நேரத்தில் சாப்பிடுவது சாலச் சிறந்தது.
நேரம் தவறி நிறைய சாப்பிடுவதைவிட குறித்த நேரத்தில் குறைவான அளவுடன் சாப்பிடுவது நல்லது.
அடிக்கடி குறைவான நேரத்திற்குள் சாப்பிடுவது நல்லதல்ல. அதுபோல, நீண்ட இடைவெளி விட்டு நிறைய சாப்பிடுவதும் நல்லதல்ல.
இன்னும் ஒன்று, உங்களுக்கு தேவையான அளவுக்குமேல் சாப்பிடுவது சந்தோஷத்தை தராது. சங்கடத்தையும் சகலவிதமான கஷ்டங்களையும் பின்னால் பிறப்பிக்கும் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
மற்றவர்கள் உங்களை சாப்பிடச் சொல்ல வற்புறுத்துவார்கள் , அந்த வற்புறுத்தலுக்காக, விருந்தோம்பலுக்காக, அவர்களை திருப்திப்படுத்தவேண்டும் என்பதற்காக, அதிகமாக உண்ணக்கூடாது.
பசி தீர்ந்து போய்விட்டது என்ற திருப்தி ஏற்பட்டு விடுகிற அந்தத் தருணத்திலேயே, சாப்பிடுவதை நீங்கள் நிறுத்திவிடவேண்டும்.
எப்பொழுதுமே சாப்பிட்ட பிறகு, வயிறு சுமையில்லாதவாறு, சுகமான உணர்வுகளைத் தருவது போன்று இருக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு உணவை ஒழிக்க முடியாதது. அதே சமயத்தில் இரண்டு நாளைக்கும் சேர்த்து வைத்துக் கொள்ளத்தெரியாதது. இந்த வயிறு. இந்தத் துன்பம்தரும் வயிற்றுடன் வாழ்வதுமிகக் கஷ்டமான காரியம் என்று அவ்வை பாட்டி அழுதிருக்கிறாள்.
ஆக, வயிற்றைத் திருப்திகரமாக வைத்துக் கொண்டிருக்கிற யாருமே திருப்திகரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்கள் என்பதுதான் உண்மையாகும்.
சரியாக சாப்பிடத் தெரியாதவர்கள் வாழ்க்கையை தவறுகள்சூழ்ந்துகொண்டு நோய்களாக மாற்றி, அவரையே சாப்பிட்டுவிடும் என்பது தான் வாழ்க்கைச் சரித்திரத்தின் வலிமையான சான்றாக அமைந்திருக்கிறது.