உள்ளடக்கத்துக்குச் செல்

தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்/9. உண்ணாவிரதம் ஓங்குக !

விக்கிமூலம் இலிருந்து

9. உண்ணாவிரதம் ஓங்குக !


அற்புத மருந்து

நமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர்.

அந்த அற்புத மருந்துக்கும் பெயர் உண்ணாவிரதம்.

மிருக இனமானது சுகவீனம் அடைகிறபோது சாப்பிடும் காரியத்தை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து விடுகிறது. அதன் வழியாக ஒரு அற்புதமான குணம் பெறுவதை மனித இனம் அறிந்திருக்க வேண்டும். அதை அப்படியே தாங்களும் பின் பற்றியிருக்க வேண்டும். என்றும் நாம் எண்ண இடமுண்டு.

ஆதி மனிதர்கள் இப்படி உணராமல் இருந்து தங்கள் தேகத்திற்குத் தாங்களே உதவிக்கொண்டிருக்கின்றார்கள். அதனால் அவர்கள் இரண்டுவிதமான நன்மைகளில் நனைந்திருக்கின்றார்கள்.


நன்மையோ நன்மை

கிடைத்த நன்மைகளில் ஒன்று, தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைகிறது. இரண்டு. வாழ்நாள் அதிகமாகக் கூடிக்கொண்டது. நீண்ட நாட்கள் நலமுடன் வாழ உதவியது.

உடலுக்கு ஒரு வித மாயசக்தி உண்டு. தனக்கு வருகின்ற நோய்களைத் தானே தீர்த்துக் கொள்ளும் மகோன்னத சக்தி, வருகிற நோய் எந்த விதமான வேகம் கொண்டதாக விளங்கினாலும், அதன் வேகத்தைக் கீழிறக்கி, உடலை இயற்கையான சமநிலையில் இயங்கச் செய்து கொள்ளும் சக்தி. அத்தகைய அரிய சக்தியை இந்த உண்ணா விரதம் உசுப்பிவிடுகிறது. உயர்த்தி விடுகிறது.

எப்படி முடிகிறது?

உண்ணா விரதத்தை விட இயற்கையான மருந்து இந்த உலகில் இல்லையென்கிறார்கள். அப்படி அடித்துப் பேச ஆதார சக்தி எப்படி எங்கே கிடைக்கிறது?

உண்ணாவிரதம் என்பது குழப்பமில்லாத ஒன்று கட்டாயம், பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் கிடையாது. மிகவும் பத்திரமான மருந்து, பவித்தரமான மருந்து.

ஆமாம். உண்ணா விரதம் இருந்தால், உடல் இலேசாக மாறுகிறது. தேகமோ தூய்மையடைகிறது. மனதிலும் மூளை வளத்திலும் பிரகாசம் அதிகரிக்கிறது. அத்துடன் தூய்மையான தோல், தெளிவான பார்வை, திருப்தியான ஜீரணசக்தி கிடைப்பதுடன், பிடிப்பு, படபடப்பு. பதை பதைப்பு, மூட்டு வலி போன்ற சிறு சிறு வேதனைகள் விளைவிக்கும் வலிகள் எல்லாம் விலாசம் தெரியாமல் ஒடி மறைகின்றன.

கடுமையான உண்ணாவிரதம்

உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் இருக்கலாம். உலகைத் தம்பக்கம் கவர்ந்திழுக்க; எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த: பல நிபந்தனைகளை பிறர் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் உண்டு.

அரசியல் உலகில் அடிக்கடி நடக்கும் இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் , பல சமயங்களில் உயிரிழப்பிற்கும் கொண்டு போய்விடும். இலங்கையில் தமிழன் பிரச்சனைக்காக 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் எனும் வீரரை இங்கே நாம் ஒரு சான்றாக நினைத்துக் கொள்ளலாம்.

விரதமும் விவகாரமும்:

ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன.

பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? எத்தகைய நிலைமைக்கு ஆளாகும் என்றெல்லாம் நாம் எண்ணிப் பார்க்கும் போதே புரியும்.

முதல் மூன்று நாட்கள் வரை, பசியை உடல் பொறுமையுடன் பொறுத்துக் கொள்கிறது. அதற்குப் பிறகு உறுப்புக்கள் இயங்க, உடலில் உள்ள உஷணத்தை தணித்து போகாமல் தடுக்க, உடல் தனக்குத்தானே முயற்சிகள் பலவற்றை மேற்கொள்கிறது.

அதாவது உடலுக்கு உணவாக, தன்னுடைய திசுக்களைத் தானே எடுத்துக் கொண்டு சக்தியை சேகரித்துக் கொள்கிறது, எப்படிப்பட்ட திசுக்களை என்று நாம் தெரிந்து கொள்வோமா!.

நோயுற்ற நலிந்த திசுக்கள், பாதிக்கப்பட்டு பலமற்றுப் போன பயனில்லாத திசுக்கள், மற்றும் உடலுக்கு அதிக அத்யாவசியம் இல்லாத திசுக்கள் என்பதாக, அந்த விரத மிருக்கும் தேகம் தோந்தெடுத்து, எரித்து, தன் தேக சக்தியைத் தக்க வைத்துக் கொள்கிறது.

இதனால் வேண்டப்படாத கொழுப்புப் பகுதிகள், ஊளைச் சதைகள், வெறுக்கும் காட்சியைத் தருகிற விரும்பப்படாத பகுதிகள் எல்லாமே இந்த விரத வெந்தணலில் வீழ்ந்து, உருகி, உருவிழந்து, ஒழிந்து போகின்றன.

ஈரல், கிட்னி, நுரையீரல், தோல் போன்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றும் பணியைச் செய்கின்ற முக்கிய உறுப்புக்கள் எல்லாம், மேலும் சுமை கூடிய பணியைச் செய்யும் பொறுப்பேற்கவும் நேர்கின்றன. ஆமாம். இவ்வாறு எரிந்து போய் கழிவாகிய பொருட்களை வெளியேற்றுகிற அதிகப்படியான சுமையை, இவைகள் சுமந்து தளர்ந்து கொள்ளத் தொடங்குகின்றன.

இவ்விதமாக, எப்பொழுதும் வெளியேறும் பொதுவான கழிவுப் பொருட்களுடன், மேலும் பல கழிவுப் பொருட்கள், சிறுநீர், வியர்வை, மற்றும் கரியமில வாயு போன்றவைகளும் கூடுதலாக உடலில் இருந்து வெளியேற்றப்படும் சூழ்நிலையும் அமைந்து விடுகிறது.

நாக்கோ வெளுத்து விட்டது போன்ற வெண்மையான அமைப்பை பெறுவதுடன், வாயில் கெட்ட நாற்றமும் வீச ஆரம்பித்து விடுகிறது. சிறுநீரும் கொஞ்சம் ஆரஞ்சு கலந்த வண்ணமாக மாறி நாற்றம் கொள்ளவும் தொடங்கி விடுகிறது.

அதாவது, சாதாரணமாக வெளியேற்றும் கழிவுப் பொருட்களின் அளவு, இப்போது பத்து மடங்காகப் பெருகி கொள்கிறது.

வயிற்றுக்கு ஏதும் உள்ளே செல்ல வில்லை என்பதால் ஜீரண உறுப்புக்கள் ஓய்வாகி விடுகின்றன என்றாலும், அவைகளின் செயல்களில் நிறுத்தம் இல்லாமல், இயக்கத்திலே தான் இருந்து கொண்டிருக்கின்றன.

குடல்களின் இயக்கங்கள் தடபுடலாக நடைபெறுவதுடன், அதனதன் இயற்கையான நடைமுறைகள் ஆரவாரத்துடன் செயல்படுத்தவும் படுகின்றன. இப்படியான சூழ்நிலையில், இயற்கையான செயல்பாடுகள், உறுப்புக்கள், மற்றும் திசுக்கள் யாவும் திடமிழந்து போவதால், உடல் இயக்கமானது தடைபட்டுத் தளர்ந்து போகவும் செய்கிறது.

முன்று நாட்கள் முடிந்தால் :

உண்ணா விரதம் தொடங்கி 3 நாட்கள் முடிந்து நான்காம் நாள் தொடங்கி, அதிலிருந்து 12 நாட்கள் வரையிலும், தொடர்கிறபோது உடலின் வெப்பம் அதிகமாகிக் கொள்கிறது. கழிவுகளை வெளியேற்றும் காரியத்தை மிகுதிப்படுத்த, வயிற்றுப் போக்கு போன்றவையும் ஏற்பட்டு விடுகிறது.

அதனைத் தொடர்ந்து, உடலின் இயற்கையான சமநிலைக்கு உடல் உறுப்புக்கள் வந்து விடுகிறது. வேகம் குறைந்து போகத் தொடங்குகிறது.

சந்திக்க வேண்டிய சங்கடங்கள்

உடம்புக்குள்ளே பலவித இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றன. கடுமையான தலைவலி போன்ற துன்பங்கள் உண்டாகின்றன. ஏற்கெனவே நாம் கூறிய படி, துர்நாற்றம், வெள்ளையாகிற நாக்கு, கலர் மாறிய சிறுநீர் இவையும் இதில் அடங்கும்.

பசி மந்தம் ஏற்படுகிற அதே நேரத்தில, உறுப்புக்களில் மதமதப்பும், குளிர்ந்துபோகும் நிலையும் (Coldness) வருகிறது. இப்படிப்பட்ட நிலை ஏற்படும்போது, உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு விடுவது புத்திசாலித்தனமாகும்.

உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறபோது, பக்கத்திலேயே ஒரு மருத்துவரைக் கொண்டு, அடிக்கடி பரிசோதித்துப் பார்த்துக்கொள்வது பேரபாயம் எதுவும் நிகழ்வதைத் தடுத்திட உதவும்.

விரதம் எப்பொழுது வேண்டும்!

சிறு குழந்தைகள் என்றால், அவர்களை சில தொத்து வியாதிகள் இன்புளுவன்சா, டான்சில்ஸ், மூச்சுக்குழல் வியாதி போன்றவை தாக்கும் போது, பட்டினி போட்டால், அவர்களுக்குள்ள வியாதியின் வேகம் குறையவும் மறையவும் உதவுகிறது.

சிலருக்கு ஜீரணக் கோளாறு ஏற்படும்போது, தோல்வியாதிகள் தோன்றுகிறபோது, எலும்பு நோய்கள், மூட்டுவலி பிடிப்பு, சிறுநீர்ப்பையில் கோளாறு, மன நோய்கள், அலர்ஜி, போன்றவை வருகிற பொழுது, இப்படிப்பட்ட பட்டினி விரதம் பாங்காக இருந்து உதவுகிறது.

ஒரு சிலர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டு நாட்கள் விரதம் இருப்பது உண்டு.

உடல் நலத்தை மிகுதிப்படுத்திக் கொள்ளவும். நோய் தடுத்துக் கொள்கின்ற நுண்மையான ஆற்றலை நிறைத்துக் கொள்ளவும் விரதம் உதவுகிறது. அதாவது உடல் நலமாக இருக்கும் பொழுதுதான், உண்ணாத விரதம் உதவி செய்கிறது.

எலும்புருக்கி நோய், புற்றுநோய், தைராய்டு சுரப்பி சரிவர செயல்படாததால் வரும் நோய்கள்; நரம்பு சம்பந்தமான வியாதிகள், நீரிழிவு நோய், போன்றவற்றால் அவதிப்படும் மக்கள், விரதம் இருந்து பட்டினி கிடப்பதற்கு முன்பாக, அவர்கள்அளிக்கும் ஆலோசனைக் கேற்பவே நடந்து கொள்ள வேண்டும்.

சராசரி உடல் எடைக்கும் குறைந்த உடல் எடை (Under weight) கொண்டவர்கள்; நலிந்த உடல் உள்ளவர்கள் அல்லது பற்றாக் குறை உணவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டினி கிடப்பது பாதுகாப்பானது அது உடலுக்கு உற்சாகமளிப்பதாகவும் அமைகிறது.

பட்டினி கிடந்து முடிக்கிற பொழுது அதிகமான உணவையோ அதிக சத்துள்ள உணவையோ உடனே உண்ணாமல், நீர் ஆகாரமாக, அல்லது பழச்சாறாகப் பருகிக் கொள்ளலாம். அல்லது காய்களை வேக வைத்து வடித்த சூப் முதலியவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


பட்டினி நேரத்தில் :

பட்டினி கிடந்து விரதத்தைக் கடைப்பிடிக்கும் சமயத்தில், தேவையான சில முக்கிய குறிப்புக்களைக் கீழே கொடுத்திருக்கிறோம். அவற்றைச் செய்யாது தவிர்த்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும்.

1. அதிகக் கடினமான வேலைகளைச் செய்யக் கூடாது.

2. மனதுக்கும் அதிக சிந்தனைப் பணியைத் தராது குறைத்துக்கொள்ள வேண்டும்.

3. வாகனங்கள் ஒட்டுவதையும் நிறுத்தி வைக்கவும்.

4. அதற்காக, படுத்த படுக்கையாகி கிடக்கக்கூடாது.

5. ஒய்வுக்காக, அதே சமயத்தில் நல்ல ஆரோக்கியமான காற்றுக்காக திறந்த வெளியில் நடத்தல் நல்லது.

6. பட்டினி விரதத்தின் போது அதிகக் குளிர்ந்த நீரிலோ அல்லது வென்னீரிலோ குளிக்கக்கூடாது.

7. நல்ல துண்டினால், உடம்பைத் துடைத்துக் கொண்டு மசாஜ் செய்வது போல அழுத்தித் துடைப்பது நல்லது.

8. உடலை வெதுவெதுப்பாக வைத்துக் காக்கும் தன்மையுள்ள ஆடைகளை அப்பொழுது அணிந்து கொள்வது நல்லது.

குறிப்பு: அடிக்கடி விரதம் இருப்பது உடல் சுகத்துக்கு உகந்ததல்ல. எதிர்பார்ப்புக்கு மாறாக ஏதாவது நடந்துவிடும். வாரத்தில் ஒருநாள் ஒரு பொழுது, அல்லது மாதத்தில் ஒரு நாள் அல்லது ஆறு வாரத்திற்குள் ஒரு நாள் பட்டினி இருப்பது சிறந்த உடல் நலத்தை நல்கும்.

அதுவே ஆனந்தமான, ஆரோக்கியமான, அற்புதமான வாழ்வை வாழ வழிகாட்டும், வசப்படுத்தும்; வாழ்விக்கும்.