உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/003

விக்கிமூலம் இலிருந்து

3. சுடரொடு படர் பொழுது!

பாடியவர் : இளங்கீரனார்.
திணை : பாலை.
துறை : முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.
[(து–வி.) முன்பொரு காலத்தே பொருள் தேடிவரத் தலைவியைப் பிரிந்து சென்று, அந்தப் பிரிவுக்காலத்தே அவளது நினைவாலுற்ற துயரத்தை அறிந்தவனாயிருந்தான் ஒரு தலைவன். அவன் மீண்டும் பொருட்பிரிவினுக்குத் தன் நெஞ்சம் தன்னைத் தூண்டியபொழுது. இவ்வாறு தன் நெஞ்சொடு கூறியவனாக வருந்துகின்றான்.]

ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினைப்
பொரியரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன இட்டரங்கு இழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்
வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்ச் 5
சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை
உள்ளினேன் அல்லெனோ, யானே — உள்ளிய
வினைமுடித் தன்ன இனியோள்

மனைமாண் சுடரொடு படர்பொழுது எனவே?

நெஞ்சமே! பார்ப்பை ஈன்ற பருந்தானது அந்த வருத்தமுடன் தங்கியிருக்கும். வானத்தைப் பொருதுமாறுபோல வளர்ந்து உயர்ந்த நெடிய கிளையினையும், பொரிந்த அடியினையும் கொண்ட வேம்பினது புள்ளிபட்ட நீழலினிடத்தே, கட்டளைக் கல்லினைப் போலத் தோற்றும் இட்டரங்கினைக் கீறிக்கொண்டு, கல்லாமையினயுைடைய சிறுவர்கள் நெல்லிவட்டினை ஆடிய படியிருக்கும், விற்போரால் ஆறலைத்து உண்டு வாழுகின்ற மக்களின் வெம்மையான குடியிருப்பையுடைய சிற்றூரினிடத்தே, சுரத்தின் கண்ணே வந்ததும், நம் வலியனைத்தையும் மாயச் செய்ததுமான மாலைக்காலத்திலே, "நினைத்த செயலைச் செய்து முடித்தாற்போன்ற இனிமையினைத் தருபவளான நம் தலைவியானவள், மனைக்கு மாட்சிதரும் விளக்கினை ஏற்றிவைத்தவளாக அதன்முன் நின்று, நம்மை நினைந்து துன்புறும் மாலைப்பொழுது இதுவாகும்" என யானும் அவளை நினைத்தேன் அல்லனோ!

கருத்து : "என் நிலைமை அவ்வாறாக, யான் இனியும் எவ்வாறு பிரிந்து போதற்குத் துணிவேன்' என்பதாம்.

சொற்பொருள் : உயவும் – வருந்தியிருக்கும். கட்டளை – கட்டளைக் கல்; இதனைப் பொன்னை உறைத்துக் காணும் கல் எனவும் கூறுவர். மலைப்பாங்கில வட்டரங்கு இழைத்திருந்த காட்சி, கட்டளைக் கல்லிலே பொன்னை உறைத்தாற் காணப்படும் வரைகளையொப்ப விளங்கிற்று என்க. இட்டரங்கு – பகுப்புக்கள் இடப்பட்டிருக்கும் வட்டாடும் அரங்கு. உரன் – ஆற்றல்; வலிமை. மனைமாண் சுடர் – அந்தி விளக்கு; மனைக்கு மாட்சிதரும் மங்கலச் சுடர்விளக்கு.

விளக்கம் : 'உள்ளினேன் அல்லனோ?' என்றது, தன்மனம் அவ்விடத்தே பொருளின்பாற் செல்லாதாய்த் தன் மனையின் கண்ணேயே சென்றபடி துயருற்றது என்பதாம். அதனாற் பிரிவைத் தன்னாலேயும் பொறுத்தற்கு இயலாது என்பதுமாம். இதனால், அவன் தன் போக்கைக் கை விட்டனனாதலும் விளங்கும்.

இறைச்சி : பொரியரை வேம்பினது உயரிய கிளையிடத்தே ஈன்பருந்து இருந்து வருந்தியிருக்க, அதன் புள்ளி பட்ட நிழலிடத்தே கல்லாச் சிறாஅர் வட்டாடியபடி இன்புற்றிருக்கின்றனர். அவ்வாறே, தன் தலைவி புதல்வனைப் பெற்ற வாலாமைநாள் தீராதாளாய் நலிந்திருக்கத், தன் மனம் அவனைப்பற்றி ஏதும் நினையாதே, தன்னைப் பொருள் நினைவிலே கொண்டு செலுத்துகின்றது எனத் தலைவன் அதனிடத்தே கூறியபடி நோகின்றனன் என்று கொள்ளுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/003&oldid=1731237" இலிருந்து மீள்விக்கப்பட்டது