உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/004

விக்கிமூலம் இலிருந்து

4. கொண்டு செல்வாரோ?

பாடியவர் : அம்மூவனார்.
திணை : நெய்தல்.
துறை : தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி அலரச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது. நச்சினார்க்கினியர் இதனைத் தலைவி கூற்றாகக் கொண்டுள்ளனர் (தொல். பொ. 113 உரை). அதனை யொட்டி நாமும் பொருள் கொள்ளலாம்.

[(து–வி.) களவுறவிலே திளைத்துவரும் நங்கையொருத்தி, ஊரிடத்தே எழுந்த பழிச்சொற்களைக் கேட்டு அச்சமுற்றுத், தலைவன் தன்னை விரையவந்து மணந்துகொள்ளல் வேண்டுமெனக் கருதினாள். அதனைத் தலைவனிடம் நேரிற் கூறுதற்கு நாணியவளாக, அவன் குறியிடத்தே சிறைப்புறத்தானாதலை அறிந்து, அவன் கேட்குமாறு, தான் தோழியிடம் உரையாடி உசாவுவாள் போல இவ்வாறு உரைக்கின்றாள்.]

கானலம் சிறுகுடிக் கடன்மேம் பரதவன்
நீல்நிறப் புன்னைக் கொழுநிழல் அசைஇத்
தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி
அந்தண் அரில்வலை உணக்கும் துறைவனொடு
'அலரே அன்னை அறியின் இவணுறை வாழ்க்கை 5

அரிய வாகும் நமக்கு' எனக் கூறின்,
கொண்டுஞ் செல்வர்கொல் தோழி! — உமணர்
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக்
கணநிரை கிளர்க்கும் நெடுநெறிச் சகடம்
மணல்மடுத் துரறும் ஓசை கழனிக் 10
கருங்கால் வெண்குருகு வெரூஉம்

இருங்கழிச் சேர்ப்பின்தம் உறைவின் ஊர்க்கே?

தோழீ! கானற் சோலையிடத்தே அமைந்த அழகான குடியிருப்பிலே வாழ்வோர், கடல்மேற் சென்று மீன் வேட்டையாடி வரும் பரதவர்கள், நீலநிறப் புன்னையினது கொழுமையான நிழலினிடத்தே அவர்கள் தங்கியிருந்தவராகத், தண்ணிய பெரிய கடற்பரப்பினிடத்தே தாம் வேட்டங்குறித்துச் செல்லுதற்கேற்ற ஒள்ளிய பதத்தினை நோக்கியபடியே இருப்பார்கள். அவர்கள் அவ்விடத்தே முறுக்குண்டு கிடந்த வலையினைப் பிரித்துக் காயவைத்தபடியும் இருப்பார்கள், அத்தகைய துறையினை உடையவர் நம் தலைவர். அவர்பாற் சென்று, நம் அன்னையானவள் ஊரிலே எழுந்துள்ள பழிச்சொற்களை அறிந்தனளானால், இவ்விடத்தே தங்கியிருந்து களவிற் கூடிவாழும் நம் வாழ்க்கையானது, நமக்கு இனி அரிதாகிப் போய்விடும்' என்று கூறினால்—

வெண்மையான கல்லுப்பின் விலையைக் கூறியபடியே, கூட்டமாகிய ஆனிரையை எழுப்புகின்ற உப்பு வாணிகர்களது. நெடிதான நெறியிடத்தே செல்லும் வண்டிகள், மணலின்கண் மடுத்து எழுப்புகின்ற ஓசையைக் கேட்டு. வயலிடத்தேயுள்ள கரிய கால்களையுடைய வெளிய நாரைகள் வெருவா நிற்கும், கரிய கழிசூழ்ந்த தம் உறை வீடமாகிய நெய்தனிலத்தேயுள்ள இனிய ஊர்க்கு, நம்மை அவரும் தம்முடன் அழைத்துக்கொண்டு செல்வாரோ?

கருத்து : 'விரைய வந்து மணந்துகொண்டு, தம்மோடு தம்மூர்க்கு நம்மையும் அழைத்தேக வேண்டும்' என்பதாம்.

சொற்பொருள் : ஒண்பதம் – ஒள்ளிய பதம் : கடலிடைச் செல்லற்கு ஏற்றதான பருவநிலை. அரில் – பிணக்கம். கொள்ளை சாற்றல் – விலைகூறல். அசைதல் – தங்குதல்.

உள்ளுறை : (1) 'பரதவர் கடலின் ஒண்பதம் நோக்கி அரில்வலை உணக்கும் துறைவன்' என்றது, அவனும் தலைவியைக் கூடி இன்புறுதற்கான செவ்விநோக்கிச் சிறைப்புறமாக நின்றபடி குறி செய்திருப்பான் என்பதாம்.

(2) 'உமணரது சகடம் மணலிடைக் செல்லும்போது எழுப்பும் ஓசையாற் கழனி நாரை வெருவும்' என்றது, தலைவன் வரைந்துவந்து மணந்துகொள்ளும்பொழுது எழுகின்ற மணமுழவுகளின் ஒலியினாலே, அலருரைக்கும் அயற்பெண்டிரது வாய்கள் அடங்கும் என்றதாம். அன்றி, 'எவரைக் குறித்தோ எழுந்த அலரைத் தன்னைக் குறித்தாகவே கொண்டு தலைவி கவலையுற்று அஞ்சுவள்' என்றதும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/004&oldid=1731239" இலிருந்து மீள்விக்கப்பட்டது