நற்றிணை 1/030
30. யாது செய்வேன்?
- பாடியவர் : கொற்றனார்.
- திணை : மருதம்.
- துறை : பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தோழி சொல்லியது.
[(து–வி.) பரத்தையருடனே உறவுபூண்டிருந்த தலைவன்,மீண்டும் தன் இல்லத்திற்கு வருகின்றான். தோழி, தலைவி ஊடியிருப்பதைக் கூற, அவன், 'யாரையும் அறியேன்' என அதனை மறுக்கின்றான். அவனுக்குத் தோழி சொல்வதாக அமைந்தது இச்செய்யுள்.]
கண்டனென் மகிழ்ந! கண்டுஎவன் செய்கோ?
பாணன் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும்
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கிநின்
மார்புதலைக் கொண்ட மாண்இழை மகளிர்
5
கவல் ஏமுற்ற வெய்துவீழ் அரிப்பனி
கால் ஏமுற்ற பைதரு காலைக்
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன்வீழ்பு
பலர்கொள் பலகை போல
வாங்க வாங்கநின்று ஊங்குஅஞர் நிலையே!
10
தலைவனே! நின்னுடைய பாணனின் கையிடத்தாக விளங்குவது பண்பமைந்த சிறிய யாழ் ஆகும். அதுதான் அழகிய வண்டினைப்போல இம்மென்னும் ஒலியோடே இசை முழக்கும். அத்தகையதும், நீ எழுந்து வருகின்றதுமான தெருவிலே, நீ எதிர்ப்படுதலை நோக்கியபடியே, நின்னுடைய மார்பினை முன்பு தமக்கு உரிமையெனப் பற்றிக் கொண்டிருந்தவரான, மாட்சிமைப்பட்ட இழைகளை அணிந்தோரான பரத்தையர் பலரும் காத்திருந்தனர். பெருங்காற்று வீசிச் சுழற்றுதலால் துன்புற்ற காலத்துக் கடலிலே மரக்கலம் கவிழ்ந்து போனதாக, அதனாற் கலங்கியவராக ஒருங்கே கடலிடை வீழ்ந்த பலரும், ஒருங்கே பற்றிக்கொண்டு, இழுக்கும் பலகையொன்றைப் போல, நின்னைப் பலரும் கவற்சி மிகுந்ததனாலே வெப்பமுடன் வீழ்கின்ற கண்ணீர்த் துளிகளுடனே, நீ வரவும், தாந்தாம் பற்றிக் கொண்டு தத்தம்முடன் வருமாறு இழுத்தனர். அதனாற் பெரிதும் வருத்தமுற்று நின்ற நின்னுடைய நிலைமையை அன்று யானும் கண்டேன். அங்ஙனம் கண்டிருந்தும், இன்று நீ யாரையும் அறியேன்' எனக் கூறும் இதற்கு யான் யாது செய்யற் பாலேன்!
கருத்து : 'நினது நிலையை யான் அறிவேன்; அதனால் என்னை ஏமாற்ற முயலுதல் வேண்டாம்' என்பதாம்
சொற்பொருள் : பண்பு – இன்னிசை மிழற்றும் அமைதி. சீறியாழ் – சிறிய யாழ். ஏர் தரு – எழுந்தருளும். 'தெரு' என்றது, பரத்தையர் வாழும் தெருவினை. கவல் ஏமுற்ற – கவற்சி மிகுதியாதலினாலே.
விளக்கம் : தோழி தலைவனைப் பழித்துக் கூறுதலின் தலைவன் மீண்டும் சூளுரைத்துப் பொய்ம்மை பாராட்டுவதனாலே வந்துறும் கேட்டிற்கு அஞ்சிய கற்பினளாய், அவனை ஏற்றுக் கொள்வாள் தலைவி என்க. கடலில் கலங்கவிழ வீழ்ந்தோர் பலரும், அகப்பட்ட ஒரு பலகையை நாற்புறமும் பற்றிக்கொண்டு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி இழுத்து, முடிவிலே அனைவரும் நீரில் மூழ்கி அழிவர். அவ்வாறே, அப் பரத்தையரும் "நின்னைப் பற்றி உய்வதற்கு முயன்றும், இயலாதே பெருந்துயரில் ஆழ்ந்தனர்" என்பதாம். அவரைச் சென்று காத்தருள்க எனக் கூறி வாயின் மறுத்ததும் ஆம்.