உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை 1/031

விக்கிமூலம் இலிருந்து

31. துறையும் கசந்ததடீ!

பாடியவர் : நக்கீரனார்.
திணை : நெய்தல்.
துறை : தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவி வன்புறை எதிர் அழிந்தது.
[(து.வி.) குறியிடத்தே தலைவன் வந்து, ஒரு சார் செவ்வி நோக்கிக் களவுறவை நாடினனாய்க் காத்து நிற்கின்றான். அவ் வேளையிலே, தோழி, தலைவியின் வருத்தத்தை மாற்றக் கருதியவளாய்த் 'தலைவன் வருவான். நீ ஆற்றியிரு' எனக் கூறுகின்றாள். அதனைக் கேட்ட தலைவி, தன் ஆற்றாமை மீதூர அதனை அழித்துக் கூறுவது இது.]

மாஇரும் பரப்பகம் துணிய நோக்கிச்
சேயிறா எறிந்த சிறுவெண் காக்கை
பாய்இரும் பனிக்கழி துழைஇப் பைங்கால்
தான்வீழ் பெடைக்குப் பயிரிடூஉ கரக்கும்
சிறுவீ ஞாழல் துறையுமார் இனிதே; 5
பெரும்பலம் புற்ற நெஞ்சமொடு, பலநினைந்து,
யானும் இனையேன்—ஆயின், ஆனாது
வேறுபல் நாட்டில் கால்தர வந்த
பலவுறு பண்ணியம் இழிதரு நிலவுமணல்
நெடுஞ்சினைப் புன்னைக் கடுஞ்சூல் வெண்குருகு 10
உலவுத்திரை ஓதம் வெரூஉம்
உரவுநீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே.

தோழீ! ஒன்றோடொன்று பொருந்தாதனவும், பல்வேறு தன்மைகளைக் கொண்டவுமான பற்பல நாடுகளினின்றும், காற்றுக் கலங்களைச் செலுத்துதலினாலே, அக் கலங்களிற் சென்றுவரும் வணிகர்கள் கொண்டுதர, வந்து சேர்ந்த பண்டங்கள் பலவும் இறக்கியிடப்பட்டிருக்கும், நிலவைப் போன்ற வெண்மை கொண்ட மணற்பரப்பினிடத்தேயுள்ள நெடிதான புன்னையினது கிளையிலே, முதிர்ந்த சூலினையுடைய வெள்ளிய குருகானது தங்கியிருக்கும். கரையிடத்தே வந்து உலவுகின்ற அலைகளின் ஓசைக்கு அக்குருகும் வெருவா நிற்கும் தன்மையுடைய, வலிய நீர்ப்பரப்பினைக் கொண்ட கடற்கரை நாட்டினனான தலைவனோடு, நான் கூடி மணம் பெறாததன் முன்பாக நன்றாயிருந்தேன்.

பெரியதும், கரிய நீரைக் கொண்டதுமான கழிப்பரப்பானது நீர் தெளிந்திருந்த செவ்வியை நோக்கி, அதனிடத்தேயுள்ள சிவந்த இறாமீனைப் பற்றுவதற்குப் பாய்ந்த சிறிய வெண்காக்கை, பரவிய பெரிய குளிர்ச்சியுடைய கழியிடத்தைத் துழாவியதாய்த் தான் விரும்பும் பசிய கால்களையுடைய தன் பெடையை அழைத்துத் தான் பற்றிய இறாலை அதற்குக் கொடுத்து இன்புறும் தன்மையினையுடையதும், சிறு பூக்களைக் கொண்டதுமான ஞாழலந்துறையும் முன்பு இனிதாகவேயிருந்தது. ஆனால், இப்போதோ, அதுவும் துன்பந்தருவதாயுள்ளது. பெரிதும் வருத்தங்கொண்ட நெஞ்சத்தோடு. பலவற்றையும் நினைந்தவளாக, யானும் இத்தன்மையள் ஆயினேன்; இதனைக் காண்பாயாக!

கருத்து : 'அவனைப் பிரிந்ததனாலே எல்லாம் வெறுத்ததடீ; அவன் வருவானென்ற நம்பிக்கையும் அழிந்ததடீ' என்பதாம்.

சொற்பொருள் : வெண் காக்கை – காக்கையுள் ஒரு வகை; நீர்க்காக்கை சுடற்காக்கை என்பதும் இது. துணிய – தெளிய. பயிரிடூஉ – அழைத்து. புலம்பு – வருத்தம். கால் – காற்று. பண்ணியம் – பண்டங்கள். கடுஞ்சூல் – முதிர்ந்த சூல். சேர்ப்பன் – நெய்தல் நிலத் தலைவன்.

விளக்கம் : முன்னர்க் காக்கை இறாலைப் பிடித்துத் தன் பேடையை அழைத்து அதற்கு ஊட்டுதலைக் கண்டு, தனக்குத் தலைவன் செய்யும் தண்ணளியின் நினைவாலே இன்புற்றவள் தலைவி. அவள், இப்போது, தலைவன் தன்னை மறந்தமையினாலே வந்துற்ற நோயின் மிகுதியினாலே, அக்காட்சியைக் கண்டதும், தன்பால் அன்பற்ற அவனை நினைந்து பெரிதும் துன்புற்றனள் என்று கொள்க. 'ஆனாது பல்வேறு நாட்டில்' என்றதனால், பாண்டியர் பல்வேறு கடல் கடந்த நாடுகளிடத்தும் அரசியல் கலாசாரத் தொடர்பும் வாணிக உறவும் பெற்றிருந்தனர் என்பதும் விளங்கும்.

உள்ளுறை : 'குருகு' கடற்கரையிடத்தே வாழ்வதாயினும் தான் கொண்ட சூலின் முதிர்ச்சி காரணமாகத் தளர்ந்தமையினால், அலையோசைக்கு வெருவியதுபோலத், தலைவியும் தன் பிறந்த வீட்டிலேயே இருந்தும், தன் களவுறவின் தன்மையினாலே. அன்னையின் பேச்சைக் கேட்குந்தோறும் பெரிதும் பெரிதும் அஞ்சுவாளாயினாள் என்று கொள்க.

இறைச்சி : இறாமீனைப் பற்றிய காக்கையும் அதனைத் தான் உண்ணாதாய்த் தன் அன்புப் பேடையை அழைத்து ஊட்டுகின்ற துறையை உடையவனாயிருந்தும், தலைவன் தன் அன்புறு காதலியான தன்னை மறந்தவனாய்த் தன் வினைகளிலேயே மனஞ்செல்வான் ஆயினனே! இஃது என்னையோ?' என நொந்து புலம்புகின்றாள் தலைவி எனக் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/031&oldid=1731372" இலிருந்து மீள்விக்கப்பட்டது