உள்ளடக்கத்துக்குச் செல்

நல்ல தீர்ப்பு/அங்கம் 3

விக்கிமூலம் இலிருந்து

அங்கம் 3

காட்சி 1


அரண்மனையின் ஒரு புறத்தில், முல்லை, கிள்ளை, சாலி
                    மூவரும் பேசியிருக்கிறார்கள்.

கிள்ளை : இளவரசி! ஏதாவது படிக்கலாமே

சாலி : வேண்டாம் ஏதாவது விளையாடினால் நன்றாய் இருக்கும்.

முல்லை : படிக்கலாம் கிள்ளை! நீ போய், அம்மா
                   நீராடும் அறைக்கு இந்தப் புறத்தில் ஊஞ்சலின்
                   மேல் கவிதை நூல் இருக்கிறது. எடுத்து வா.

                    [அவள் சென்று எடுத்துவந்து, தானே
                    அதைத் திறந்து பார்க்கிறாள்.]

கிள்ளை : இதைக்கேள் ! சாலி, கவனமாய்க் கேள்
                  நீயும்.

               பச்சை பசுந்தழைக் காட்டினிலே ஒரு
               பக்கத்தில் பூத்திட்ட முல்லையைப் பார்
               அச்சடையாளம் நல் வான்குளத்தில் மின்னும்
               ஆயிரம் மீனெனத் தோன்றுமடி !
               அச்சில் அடித்திட்ட வெள்ளிப் பணம் கையில்
               அள்ளி இறைத்தது போல் இருக்கும்!
               இச்சை நறுமணத் தால்அழைக்கும்--முல்லை
               ஏன் என்று பார்க்கையிலே சிரிக்கும்!

                                                   [முல்லை சிரித்தாள்.]

கிள்ளை : முல்லை, ஏன் என்று பார்க்கையிலே
                   சிரிக்கும் !

சாலி : முல்லைக்கு முல்லைப் பொட்டு!
                                                  [கிளியின் கூச்சல் கேட்கிறது.]

முல்லை : சாலி ஓடு கிளி கதறுகிறது!

                                  [அவள் ஓடிக் கூட்டொடு தூக்கி
                                  வருகிறாள். முல்லை அதைக் கையில்
                                  ஏந்திக்கொள்கிறாள் கூட்டினின்று
                                  எடுத்து]

முல்லை : பத்துப் பணத்திற்கு வாங்கினேன். அப்போது
                  இத்தனை அளவு சிறிது குழந்தை. இப்போது
                  கத்தும் குரலுக்கு வையமும் போதாது. கையிலே
                  வைத்திருந்தால் தான் சாது!

                                                             [தோழி வள்ளி வருகிறாள்]

வள்ளி : அன்னையார் அழைத்தார்கள்.

முல்லை : எனக்கு விடை கொடுங்கள்.

கிள்ளை : சரி.
                    [கிள்ளையும் சாலியும் தம் வீடு செல்கிறார்கள்]

காட்சி 2



                        [பேரரசி கன்னல் தன் படுக்கையறைப் பக்கம்
                        உலவுகின்றாள், அவள் விழிகள் அங்கு பல
                        பக்கங்களையும் கூர்ந்து பார்க்கின்றன. அவள்
                        எதையோ தேடுகிறாள்]

                                                                       [முல்லை வருகிறாள்]
முல்லை : ஏன் அம்மா அழைத்தீர்கள்?

கன்னல் : நீ உணவு உண்ணாமல் இருப்பது
                  உனக்கே தெரியவில்லையா! நேரம்
                 ஆகிறது.

முல்லை : நீங்கள் என்ன தேடுகிறீர்கள். கவிதைச்
                 சுவடியா?

கன்னல் : இல்லை.

முல்லை : பின்னென்னம்மா

கன்னல் : அந்தக் கணையாழி?

முல்லை : எந்தக் கணையாழி?

கன்னல் : மாணிக்கக் கணையாழி?

முல்லை : திடுக்கிடும் சேதி, உங்கள் உயிர்
                  ஆயிற்றே? எங்கு விழுந்திருக்கும்!

கன்னல் : கூச்சலிடாதே, அது தவறியது உன்
                   தந்தையார் அறிந்தால் வருந்துவார். அது
                   மண நாளில் என் விரலில் அவர் இட்டது.
                   இங்குதான் இருக்கும். நீ செல் உணவுண்ண!

முல்லை : நானும் தேடுகிறேன் அம்மா!

கன்னல் : உணவருந்திய பின் தேடு.

முல்லை : இதோ வந்துவிட்டேன். [போகிறாள்]

கன்னல் : அதற்காக நீ செவ்வையாக உணவுண்ணாமல்
                 ஓடிவந்து விடாதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=நல்ல_தீர்ப்பு/அங்கம்_3&oldid=1645121" இலிருந்து மீள்விக்கப்பட்டது