உள்ளடக்கத்துக்குச் செல்

நல்ல தீர்ப்பு/அங்கம் 4

விக்கிமூலம் இலிருந்து

அங்கம் 4

காட்சி 1

          ஓய்வுகொள்ளும் அழகிய தனி அறையில் மணித்
தவிசில் அரசர் வீற்றிருக்கிறார் உணவுண்ட பின். இரு
தோழியர் மயில் விசிறி கொண்டு விசிறுகிறார்கள். அவர்
யாரையோ எதிர்பார்க்கிறார் வழக்கப்படி. வள்ளி
வெற்றிலைச் சுருள் தட்டேந்தி அங்கு வருகிறாள். அரசர்
கண்ணில் வியப்பு.

அரசர் : அரசியார் எங்கே வள்ளி ? உடல் நலம்
                  குறைவா?

வள்ளி :கணையாழி காணவில்லை. பணிப் பெண்கள்
                தேடுகிறார்கள் அரசியார் தேடுகிறார் தங்களிடம்
                மன்னிப்பு வேண்டினார்கள்.

அரசர் : எந்தக் கணையாழி ?

வள்ளி : மாணிக்கக் கணையாழி.

அரசர் : எனவே அரசியார் துன்பத்தில்
                 ஆழ்ந்திருக்கிறார்கள். திருமணத்தில்
                 நான் இட்ட கணையாழி! அரசியாரை
                 மெதுவாக என்னிடம் அழைத்து வந்துவிடு.
                 நான் தேறுதல் கூறுகிறேன். பணிப்பெண்கள்
                 தேடட்டும் போ.
                                                                                 [அவள் போகிறாள்]
                       [அரசி வருகிறாள். வள்ளியும் வருகிறாள்]

அரசி : உங்களிடம் வைத்த அன்பு குறைந்து விட
               வில்லை. என் விழியை, என் நினைவை,
               தங்கள் கணையாழி ஏமாற்றிவிட்டது.


அரசர் : கன்னல்! அதைப்பற்றி நீ வருந்தாதிருந்தால்
                போதும். முப்பது ஆண்டுகள் இன்பத்தை நல்கிக்
                கழிந்தன. வாழ் நாட்களில், ஐம்பது ஆண்டுகள்
                கழிந்தபின் திருமண கணையாழி காணாமற்
                போனால், அதனால் குற்றமில்லை. நீ மறந்திரு.
                இம்மியளவு துன்பத்தையும் உன் நெஞ்சு
                தாங்காது.

அரசி : யார் எடுத்திருப்பார் ? குற்றவாளியை விட்டு
             வைத்தால் இன்னும் இதுபோல நடக்குமே!

அரசர் : அரண்மனை ஆட்களையும், பணிப் பெண்களையும்,
                  காவலர்களையும், உடற்காப்பாளர்களையும்,
                  மற்றும் இங்கு வருவோர் போவாரையும் கேட்டு
                 ஆராய்வோம்.

அரசி : கோள் நிலை வல்லுனர் கூற மாட்டாரா?

அரசர் : கோள் நிலை வல்லவர் கூறுவதைக் கொண்டு
                குற்றத்தை உறுதி செய்வதை முட்டாள் தனமென்று
                அற நூல் கூறுகிறது. உணர்வும் ஒத்துக்கொள்ளாது.

                                                                           [முல்லை வருகிறாள்]
முல்லை : அப்பா!

அரசர் : ஓடிவா குழந்தாய்.

                                                                           [அருகில் வருகிறாள்]

முல்லை : அகப்பட்டதா அம்மா?

அரசி : இல்லை முல்லை !

அரசர் : உன்னிடம் வந்து பேசிப் போகும் பெண்களில்
               யார்மேலாவது ஐயப்பட இடமுண்டா
               குழந்தாய்!

முல்லை : இல்லை அப்பா கிள்ளை, சாலி, தாழை,
                  பொன்னி, தோரை, உண்மையின் அடையாளங்கள்,
                  இனி இங்கு வரவேண்டாம் என்று அவர்களைச் சொல்ல
                  நினைக்கிறீர்களா அப்பா.

அரசர்: வாழி வாழி நான் அப்படிச் சொல்லவே
                மாட்டேன்.
                                                                 [சாலி வருகின்றாள்]
சாலி : இளவரசியார் இருக்கிறாரா?

முல்லை : அப்பா சாலி இங்கு வரலாமா?

அரசர் : ஓ, நன்றாக !

முல்லை : சாலி உள்ளே வா!
                               [வருகிறாள், முல்லை கை காட்டுகிறாள்.
                                சாலி உட்கார்ந்தாள் பக்கத்தில்]

சாலி: பேரரசர், பேரரசியார் ஏதோ தனியாகப்
             பேசுகையில் நான் வந்தது இடையூறோ என்னவோ,
             மன்னிக்க வேண்டுகிறேன்.

அரசி : அப்படி ஒன்றுமில்லை என் மாணிக்கக்
             கணையாழி மறைந்து விட்டது அது பற்றிய
             ஆராய்ச்சி. அரண்மனை ஆட்கள்
             எடுத்திருப்பார்கள். அல்லது பணிப்பெண்கள்.
             இல்லை என்றால் அகப்பட்டு விடவும் கூடும்.

சாலி : இல்லையம்மா, கிள்ளை எடுத்தாள் !

முல்லை : கிள்ளையா?

கன்னல் : அப்படியா!

அரசர் : நீ எப்போது பார்த்தாய்?

முல்லை : நீ கண்ணால் பார்த்தாயா?

சாலி : இளவரசியே! நானும் கிள்ளையும் உன்னை
            விட்டுப்பிரிந்து போகையில், கிள்ளையின் இடை
            யினின்று சிறு பொருள் ஒன்று விழுந்தது. கிள்ளை
            நானறியாதபடி அதை எடுத்தாள். தவிந்த விரல்களின்
            புறத்தில், சிவந்த ஒளி

           அடித்தது. என்ன என்றேன்; ஒன்றுமில்லை
           என்று கூறி சாப்பிட்டபின் அரண்மனைக்குப்
           போகலாமா என்று, வேறு பேச்சைத் துவக்கினாள்.
           அதை அவள் இடையில் செருகினாள். அது,
           துணியில் முடிந்த தங்கக்காசு அளவு காட்சி
           அளித்தது.

அரசர் : குழந்தாய்! நீ வருந்தலாகாது. நான்
                கிள்ளையை அறமன்றுக்கு அழைக்க வேண்டும்.
                அவள் என் படைத்தலைவர் மகள், உனது
                அன்புள்ள தோழி ஆயினும் அறத்தின் முன்
                அனைவரும் நிகர்.

முல்லை : அவள் நல்லவள் அப்பா.

அரசர் : அறமன்றம் அவளை நல்லவள்
              என்று உறுதி செய்யட்டுமே!

சாலி : அரசே, அவள் தீயவள். அவள் தீயவளானால்,
            அறமன்றம் தீர்ப்புக் கூறட்டும்.

அரசர் : மன்றம் நோக்கிச் செல்லுவேன். இதில்,
             சேர்க்கையுடையவர் அனைவரையும் மன்று
             நோக்கி வரும்படி அழைப்பு அனுப்புகிறேன்.

சாலி : வணக்கம்.

                                                                           [போகிறாள்]

கன்னல் : கிள்ளை நல்லவள் என்று நான்
                     எண்ணினேன்.

முல்லை : இப்போதும் அவள் நல்லவள் தான்
                       அம்மா

           [அரசர் போகிறார். முல்லை தலை
           குனிந்தபடி வருத்தத்தோடு தன்
           அறை நோக்கிச் செல்லுகிறாள்]

"https://ta.wikisource.org/w/index.php?title=நல்ல_தீர்ப்பு/அங்கம்_4&oldid=1645124" இலிருந்து மீள்விக்கப்பட்டது