நல்ல தீர்ப்பு/அங்கம் 5
அங்கம் 5
காட்சி 1
[வீட்டில் படைத்தலைவன் மாழையும், கண்ணி
என்னும் அவன் மனைவியும் தாங்கொணாத்
துன்பத்தோடு தலை சாய்த்து நாற்காலியில்
துவள்கின்றார்கள். எதிரில் கண்ணீர் ததும்பக்
கிள்ளை நிற்கிறாள்]
மாழை : நீ எடுக்கவில்லையானால், சாலி ஏன்
அப்படிச் சொல்லுகிறாள்?
கிள்ளை : என்னை ஏன் அவள் இத்தனை பெரிய
குற்றத்திற்கு உட்படுத்துகிறாள் என்பது எனக்கே
விளங்க வில்லை. அவள் முழுதும் பொய்
சொல்லுகிறாள். அன்னை தந்தைக்கும் தெரிவிக்காமல்
அந்த மாணிக்கக் கணையாழியை நான் எப்படி
அணிந்து கொள்ள முடியும்? அப்பா, இத்தனை
பெரிய குற்றம் நான் இழைப் பவளா? இல்லை.
இல்லவேயில்லை அன்னையே!
கண்ணி : நாழிகையாகிறது மன்றுநோக்கி
கூட்டிச் செல்லுங்கள்.
மாழை : நான் போகமாட்டேன் மானக்கேடு
தலை தூக்கமுடியவில்லை. மகளே, நீ போ.
அங்கேயாவது உண்மை கூறு!
[ஓவென்று அலறிக்கொண்டு கிள்ளை
ஓடுகிறாள்]
காட்சி 2
அறமன்றம்
பிறை நாட்டரசர் வயவரி மன்னர் பெருந் தவிசில்
வீற்றிருந்தார் இடப்புறமாக,
வழக்கெடுத்துரைப்போன் வளன்
அமர்ந்திருந்தான் வலப்புறமாகக் குறிப்பெடுக்கும்
கொன்றை அமைந்திருந்தான், எதிரில்
முன் வரிசையில், இளவரசி முல்லையும்,
அமைச்சன் மகள் சாலியும் இருந்தனர்.
பின்வரிசையில், அமைச்சு வல்லுளி
உட்கார்ந்திருந்தான் தாழை, தோரை ஒரு புறம்
காணுமாறு வந்திருந்தனர். கிள்ளை
குற்றவாளியாக அரசர்க்கு முன் நின்றிருந்தாள்
காவலர் பணியாளர் பலர் பல பக்கங்களிலும்
நின்றிருந்தனர். பெருமக்கள் பலர் காணுமாறு
போந்திருந்தனர்.
பேரரசு எழுந்து
அறமன்றத்தைத் துவக்கம் செய்தேன். நடு நிலை
கோணாது தீர்ப்பளிப்பதாய் உறுதி
கூறுகிறேன்.
வழக்கெடுத்துரைக்கும் வளன் கூறினான் :
பிறைநாட்டின் பேரரசியார் கன்னல்
அம்மையாரின் மாணிக்கக்
கணையாழி காணாமற் போயிற்று. அதைக்
கிள்ளை என்னும் இவள் — படைத்தலைவர்
மாழையின் மகள் களவு செய்ததாகப்
பேரரசியர் நினைக்கிறார்கள். இவ் வழக்கின்
சான்றினராக இளவரசியார் முல்லையும்,
அமைச்சர் மகள் சாலியும்
அழைக்கப்பெற்றுள்ளார்கள். மன்றில் கூடியுள்ளவர்கள்
இவ் வழக்கில் உதவி செய்யும்படியும் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
அரசு : கிள்ளையே, அறமன்றத்தின் முன் மெய்
கூறுவதாக நீ உறுதி கூறு
கிள்ளை: நான் இந்த அறமன்றத்தின் முன் பொய்
கூறுவேனாயின், மக்களில் தன்னை உயர்ந்தவன்
என்று கூறுகின்ற கொடியோன் செய்யும் கொடுமை
செய்தவள் ஆவேன்.
நான் இந்த அறமன்றத்தின் முன் பொய்
கூறு வேனாயின், உழுதவனைக் கூலிக்காரன் என்று
கூறி உழுதவனைத்தான் பறிக்கும் முதலாளி செய்யும்
தீமையைச் செய்தவள் ஆவேன்.
நான் இந்த அறமன்றத்தின் முன் பொய் கூறுவேனாயின்,
தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழால் ஊழியம் பெற்றுத்
தமிழையன்றி அயல் மொழியை ஆதரிக்கும் சழக்கன்
செய்யும் சழக்குச் சூழ்ந்தவள் ஆவேன். நான் இந்த
அறமன்றத்தின் முன் மெய்யே கூறுவதாக உறுதி
கூறுகிறேன்.
அரசர் : கிள்ளாய் நீ அந்த மாணிக்கக் கணையாழியை
எடுத்ததுண்டா?
கிள்ளை : நான் எடுத்ததில்லை பேரரசே!
அரசர் : அக்கணையாழி இப்போது உன்னிடமோ,
உன்னால் பிறரிடமோ இல்லையா?
கிள்ளை : என்னிடம் இல்லை. நான் அதைப் பிறரிடம்
கொடுத்து வைத்ததும் இல்லை பேரரசே!
அரசர் : சாலி இதுபற்றி உனக்கென்ன தெரியும்?
சாலி : கிள்ளை வைத்திருக்கக் கண்டேன்
அரசர் : என்றைக்கு?
சாலி : நேற்று
அரசர் : நேற்று அரண்மனைக்குப் போனதுண்டா?
சாலி : நானும் கிள்ளையும் போனதுண்டு.
அரசர் : என்ன வேலை?
சாலி : இளவரசி முல்லைக்கு நாங்கள் தோழிகள்.
அரசர் : இவை மெய்தானா கிள்ளாய்?
கிள்ளை : அவை அனைத்தும் மெய்
அரசர் : முல்லையே இவை மெய்யா?
முல்லை : ஆம் மெய்.
அரசர் : நீ என்ன கூறுவாய் கிள்ளையே!
கிள்ளை : என்னிடம் எப்போது பார்த்தாள் சாலி?
சாலி : நேற்றுக் கையில் வைத்திருந்த போது
தான் சாலி பார்த்தாள்.
கிள்ளை : எந்த இடத்தில்
சாலி : இளவரசியை விட்டு வெளிவருகையில்
கிள்ளை : எப்படி வைத்திருந்தேன்?
சாலி : கையில்
கிள்ளை : எந்தக் கையில் ?
சாலி : உம்--வலக்கையில்!
கிள்ளை : என் வலக்கையில் அச் சிறிய பொருளை
வைத்திருந்தால் அது எப்படித் தெரிந்தது
சாலிக்கு?
சாலி : நான் தான் என்ன அது என்று கேட்டேன்
கிள்ளைதான் இது மாணிக்கக் கணையாழி
என்று கூறினாள்.
கிள்ளை : அது பற்றிச் சாலி கிள்ளையை ஒன்றும்
கேட்கவில்லையா?
சாலி : இல்லை
முல்லை : பேரரசே நான் ஒன்று கூற முன்வருகிறேன்.
சாலி முதலில் என்னிடமும் தங்களிடமும், கூறியது
வேறு அவள் கூறினாள்: கிள்ளையிடமிருந்து ஏதோ
ஒன்று கீழ் விழுந்தது. அது சிவப்பொளியுடையதாய்
இருந்தது. அதை அவள் இடையில் செருகினாள், அது
தங்கக் காசைத்துணியில் அழுத்திய அளவில்
தோன்றிற்று என்றாள்.
இப்பொழுது சொல்வன அனைத்தும் வேறு! கிள்ளை
நல்லவள் இப்படிப்பட்ட குற்றம் செய்பவள் அல்ல.
சாலி கிள்ளையைக் குற்றத்தில் உட்படுத்த எண்ணி
இவ்வாறு வேண்டு மென்றே கூறுகிறாள் என்று
எனக்குத் தோன்றுகிறது.
அரசர் : மன்றிலுள்ளவர்களே! அரண்மனைப் பொருள்
களவு போனால், அதுபற்றி யார் மேல் சிறிது
ஐயம் ஏற்பட்டாலும் அவர்களை அயல் நாடு கடத்தி
வைக்கும்படி அற நூல் கட்டளையிடுகிறது.
நான் அதன்படி, கிள்ளை பீலி நாட்டில் நாலாண்டு
வாழ்ந்திருக்கத் தீர்ப்பு கூறினேன் இதன்படி கிள்ளை
இன்றே பீலி நாட்டுக்குப் புறப்பட்டுவிடவேண்டும்.
[அனைவரும் கண்கலங்குகிறார்கள்]
கிள்ளை : பீலி நாட்டிற்கா? நம் சிற்றரசிருக்கும் இந்தப்
பீலி நாட்டுக்குத் தானே பேரரசே?
அரசர் : ஆம் இன்றே பயணத்தைத் தொடங்கு!
[கிள்ளை சிரிப்பில் குதித்தாள். அவள்
முல்லையிடம் ஓடிவந்து உரத்த குரலில்,]
இளவரசியே, என் பொருட்டு நீ வருந்து
கின்றாயா? நீ மகிழ்ச்சியடை! சாலியின்
சூழ்ச்சி; என்னைப் பீலியில் சேர்த்தது அவள்
என்மேல் இல்லாததைச் சொல்லி என்னை
அந்த நிலாவிடம் சேர்த்தாள். நாலாண்டில்,
எனக்கு, ஆடல் பாடல் நன்றாய் வந்து விடுமே.
முல்லை : உனக்கு நல்லதாயிற்று! வாழி வாழி,
உனக்கு ஏற்பட்ட தண்டனை உன்னை
இனிக்க வைத்து விட்டதே ஆட்டம் உனக்கு
ஒரே ஆண்டில் வந்துவிடுமே!
[இதைச் சாலி கேட்டுத் திடுக்கிடுகிறாள்.
அவள் தனக்குள்]
முல்லை அவள் மேல் அன்பாய் இருந்தது
எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் இந்தச்
சூழ்ச்சி செய்தேன், அதன் பயனாக அவள்
நிலாவையடைந்து விட்டால், பிறை நாட்டின்
பாராட்டும் புகழ்ச்சியும் கிள்ளைக்குத் தான்!........
[அந்தச் சாலி, அரசனை நோக்கிக் கூறுகிறாள்]
பேரரசே! குற்றவாளியாகிய கிள்ளை அந்தப்
பீலி நாட்டில் ஆடல் கற்றுக்கொள்ளலாகாது என்று
தீர்ப்பளிக்க வேண்டுகிறேன்.
[அரசர் முதல் அனைவரும் சிரிக்கின்றனர்,
சாலியின் தந்தையான அமைச்சன் முகம்
கவிழ்ந்து கொள்ளுகிறது]
அரசர் : சாலி, உனக்கு யார்மேல் எப்படிப்பட்ட
கெட்ட எண்ணம் உண்டாகிறதோ அதை
யெல்லாம் நான் தீர்ப்பாகச் சொல்லித்
தீர்த்துவிட வேண்டுமோ? உன் வாய்ச்
சொல்லைக்கொண்டு கிள்ளையைத் தண்டித்தது
சரியில்லை என்று நன்றாக விளங்கிவிட்டது.
கிள்ளை : அப்படியானால், தாங்கள் எனக்களித்த
தீர்ப்பை மாற்றவா போகிறீர்கள்?
[அனைவரும் சிரிக்கிறார்கள்]
அரசர் : அஞ்ச வேண்டாம். அப்படி ஒன்றும் இல்லை
கிள்ளை : நான் இப்போதே தானே போய் விட
வேண்டும் ? இப்படித்தான் தீர்ப்பளித்தீர்கள்
என்று என் தந்தையாரிடம் நான் சொன்னால்
அவர் நம்பமாட்டார். வேண்டுமென்று நானே
சொல்லுவதாக அவர் நினைப்பார். அவரையும்
அழைத்துத் தீர்ப்பைச் சொல்லி விடும்படி
தங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
முல்லை : ஆம் ஆம்!
[மீண்டும் சிரிப்பு]
இதற்குள் பேரரசியார் மன்று நோக்கி வருவதாகக்
கூறத் தோழி ஒருத்தி அங்கு வருகிறாள். அவளை
அனைவரும் நோக்கியிருக்கிறார்கள்.
தோழி : பேரரசே! பேரரசியார் மன்று நோக்கி
வருகிறார்கள்.
[அனைவரும் எழுந்து நிற்கிறார்கள்.
அரசியார் அரசரிடம் கணையாழியை
நீட்டுகிறார்]
பேரரசி : அகப்பட்டு விட்டது. கிள்ளை குற்றவாளியல்ல .
கிள்ளை : அதெப்படி ? தீர்ப்பை மாற்றக் கூடாது பேரரசே!
அரசர் : நீ குற்றவாளி என்றுதானே அந்தத் தீர்ப்பைச்
செய்தேன். இப்போது நீ குற்றவாளியில்லை, தீர்ப்பை
மாற்றத்தானே வேண்டும்?
கிள்ளை : நான் தீர்ப்பளிக்கு முன் எப்படியோ
அப்படித்தான் இப்போதும் அப்போதைக்கு
இப்போது என்ன வேறுபாட்டைக் கண்டீர்கள்?
அரசர் : தீர்ப்புக்கு முன் இருந்த நிலையில் நீ
இப்போது இல்லையே!
கிள்ளை : நான் இப்போதும் குற்றவாளியில்லை. அப்போதும்
குற்றவாளியில்லையே, தீர்ப்பை ஏன் மாற்ற வேண்டும்?
அரசர் : அப்படியா நீ சொல்வதும் ஒரு வகையில் சரியே
நீ என்ன சொல்கிறாய், சாலி!
சாலி : நான் தான் குற்றவாளி , எனக்குத்தான் அந்தத்
தீர்ப்பை ஏற்பாடு செய்யவேண்டும்.
அரசர் : அது ஏன்? நீ எப்படிக் குற்றவாளி?
சாலி : நான்தான் முதலில் அந்தக் கணையாழியை
எடுத்தேன். பிறகு வைத்து விட்டேன். ஆகையால்
நான்தான் குற்றவாளி. [சிரிப்பு]
பேரரசி : எவ்விடத்திலிருந்து எடுத்தாய்?
சாலி : அங்குத் தான்.....
பேரரசி : எங்கு?
சாலி : தாங்கள் நீராடும் கட்டத்தின் இப்புறமிருந்த
கண்ணாடிச் சிலையின் கீழிலிருந்து எடுத்தேன்
பேரரசி : எங்கு வைத்தாய்?
சாலி : அங்குதான் வைத்தேன்.
பேரரசி : இல்லை இல்லை. நீ கணையாழியை
எடுக்கவுமில்லை; வைக்கவுமில்லை. ஆடல்
கற்றுக் கொள்ள விரும்புகிறாய் நிலாவிடம்
பாவை விளக்கின் அடியில் கணையாழியை
நான் வைத்து மறந்தேன். இப்போது தான்
நினைவு வந்தது.
அரசர் : ஆனால், நான் உனக்குத் தீர்ப்புக்
கூறட்டுமா சாலி?
கிள்ளை : எனக்களித்த தீர்ப்பு மாறுதல் கூடாது!
அரசர்: அதையும் மாற்றித்தானாக வேண்டும்.
கேளுங்கள் சாலி நல்ல பெண்ணாகிய கிள்ளை
மேல் பொய்ப்பழி கூறியதால் சாலி கிள்ளையை
மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்தத் தீர்ப்பு
நிறைவேறிய பின், அரண்மனைப் பொருளில்
ஆடல் அரங்கு ஒன்று அமைத்து, இந்நாட்டின்
ஆடற்சாலை முன்னேற்றத்திற்கு, நிலாவை
வரவழைத்து, கிள்ளை, சாலி முதலிய
அனைவர்க்கும் சொல்லி வைக்கச் செய்ய
வேண்டும்! என்ன!
கிள்ளை : சாலி, என்னை மன்னிப்புக்கேள் விரைவில்.
சாலி: மன்னிக்க வேண்டும் -- எங்கே பேரரசே,
ஆடல் அரங்கம்?
அரசர் : ஆடற்கலை நம் நாட்டில் எழுக.
குழந்தைகளே உங்கள் விருப்பம் நன்று. இதோ
அனைத்தும் ஏற்பாடு செய்துவிடுகின்றேன்,
காட்சி 3
[பிறை நாட்டில் புதிதாக அமைத்த அரங்கில்,
நிலாவினால் பயிற்றப்பட்ட பெண்கள், கிள்ளை,
சாலி, தாழை, தோரை, முல்லை முதலியவர்கள்
ஆடுகின்றார்கள்]
நிலா பாடுகிறாள்.
செங்கதிர் எழுந்தான் திரைக்கடல் மேலே
சிரிக்கும் செந்தாமரைபோலே!
எங்கணும் ஒளியே! எங்கணும் உணர்வே!
இனிதாய் மலர்ந்ததுகாலை!
ஏரினைத் தூக்கி உழவர்கள் தொடர்ந்தார்!
எருதுகள் முன்செல்லநடந்தார்!
ஊரினிற் பெண்கள் நீர்க்குடம் சுமந்தே
உவப்புடன் குளக்கரைஅடைந்தார்!
வாணிகர் கடைகளைத் திறந்திடு கின்றார்
மாணவர் ஏட்டோடுசென்றார்.
வீணையைப்போல் அங்காடிகள் கூவி
வீதியெல்லாம் நடக் கின்றார்.
எழுந்தன அறங்கள் நிறைந்தன அன்பும்!
ஏகின ஏகின துன்பம்!
பொழிந்தன பொழிந்தன தமிழரின் நாட்டில்
புதுமைகள் ! எங்கனும்இன்பம்!
முற்றும்.