உள்ளடக்கத்துக்குச் செல்

நாச்சியார் திருமொழி

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

ஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி

நாச்சியார் திருமொழி

[தொகு]

ஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நம:

நாச்சியார் திருமொழித் தனியன்கள்

[தொகு]

திருக்கண்ணமங்கை யாண்டான் அருளியது

நேரிசை வெண்பா

அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி

மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள்,

ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை

வேயர் பயந்த விளக்கு.


கட்டளைக் கலித்துறை


கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும்

சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல்

மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய

சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.

நூல்

[தொகு]

ஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி


1: தையொரு திங்கள்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


504: தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,

ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,

உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி உன்னையு மும்பியை யும்தொழுதேன்,

வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே. (2) 1


505: வெள்ளைநுண் மணற்கொண்டு தெருவணிந்து வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து,

முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா,

கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி,

புள்ளினை வாய்பிளந் தானென்பதோர் இலக்கினில் புகவென்னை யெய்கிற்றியே. 2


506: மத்தநன் னறுமலர் முருக்கமலர் கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி,

தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து வாசகத் தழித்துன்னை வைதிடாமே,

கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு கோவிந்த னென்பதோர் பேரேழுதி,

வித்தகன் வேங்கட வாணனென்னும் விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே. 3


507: சுவரில் புராணநின் பேரேழுதிச் சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்,

கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும் காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா,

அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும் ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்,

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே. 4


508: வானிடை வாழுமவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்தஅவி,

கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப,

ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்,

மானிட வர்க்கென்று பேச்சுப்படில் வாழகில் லேன்கண்டாய் மன்மதனே. 5



509: உருவுடை யாரிளை யார்கள்நல்லார் ஓத்துவல் லார்களைக் கொண்டு,வைகல்

தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா,

கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன் கருவிளை போல்வண்ணன், கமலவண்ணத்

திருவுடை முகத்தினில் திருக்கண்களால் திருந்தவே நோக்கெனக் கருளுகண்டய். 6


510: காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டி யரிசி யவலமைத்து,

வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மத னே.உன்னை வணங்குகின்றேன்,

தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்,

சாயுடை வயிறுமென் தடமுலையும் தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே. 7


511: மாசுடை யுடம்பொடு தலையுலறி வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு,

தேசுடை திறலுடைக் காமதேவா. நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய்,

பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான் பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம்

கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள் என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய். 8


512: தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித் தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்,

பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே பணிசெய்து வாழப் பெறாவிடில்நான்,

அழுதழு தலமந்தம் மாவழங்க ஆற்றவு மதுவுனக் குறைக்குங்கண்டாய்,

உழுவதோ ரெருத்தினை நுகங்கொடுபாய்ந்து ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே. 9


513: கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்தங்கோர் கரியலற,

மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று,

பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும் புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,

விருப்புடை யின்தமிழ் மாலைவல்லார் விண்ணவர் கோனடி நண்ணுவரே. (2) 10

நாமமாயிரம்

[தொகு]

கலி விருத்தம்

514: நாமமாயிர மேத்தநின்ற நாராயணாநர னே,உன்னை

மாமிதன்மக னாகப்பெற்றா லெமக்குவாதை தவிருமே,

காமன்போதரு காலமென்றுபங் குனிநாள்கடை பாரித்தோம்,

தீமைசெய்யும் சிரீதரா.எங்கள் சிற்றில்வந்து சிதையேலே. (2) 1


515: இன்றுமுற்றும் முதுகுநோவ இருந்திழைத்தஇச் சிற்றிலை,

நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய்,

அன்றுபாலக னாகியாலிலை மேல்துயின்றவெம் மாதியாய்,

என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக் கம்மெழாததெம் பாவமே. 2


516: குண்டுநீருறை கோளரீ.மத யானைகோள்விடுத் தாய்,உன்னைக்

கண்டுமாலுறு வோங்களைக்கடைக் கண்களாலிட்டு வாதியேல்,

வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக் கைகளால்சிர மப்பட்டோம்,

தெண்டிரைக்கடற் பள்ளியாய்.எங்கள் சிற்றில்வந்து சிதையேலே. 3


517: பெய்யுமாமுகில் போல்வண்ணா.உன்றன், பேச்சும்செய்கையும், எங்களை

மையலேற்றி மயக்கவுன்முகம் மாயமந்திரந் தான்கொலோ,

நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை நோவநாங்களு ரைக்கிலோம்,

செய்யதாமரைக் கண்ணினாயெங்கள் சிற்றில்வந்து சிதையேலே. 4


518: வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில் விசித்திரப்பட, வீதிவாய்த்

தெள்ளிநாங்களி ழைத்தகோல மழித்தியாகிலும், உன்றன்மேல்

உள்ளமோடி யுருகலல்லால் உரோடமொன்று மிலோங்கண்டாய்,

கள்ளமாதவா. கேசவா.உன் முகத்தனகண்க ளல்லவே. 5


519: முற்றிலாதபிள் ளைகளோம்முலை போந்திலாதோமை, நாடொறும்

சிற்றில்மேலிட்டுக் கொண்டுநீசிறி துண்டுதிண்ணென நாமது

கற்றிலோம்,கட லையடைத்தரக்- கர்குலங்களை

முற்றவும் செற்று,இலங்கையைப் பூசலாக்கிய சேவகா.எம்மை வாதியேல். 6


520: பேதநன்கறி வார்களோடிவை பேசினால்பெரி திஞ்சுவை,

யாதுமொன்றறி யாதபிள்ளைக ளோமைநீநலிந் தென்பயன்,

ஓதமாகடல் வண்ணா.உன்மண வாட்டிமாரொடு சூழறும்,

சேதுபந்தம் திருத்தினாயெங்கள் சிற்றில்வந்து சிதையேலே. 7


521: வட்டவாய்ச்சிறு தூதையோடு சிறுசுளகும்மண லுங்கொண்டு,

இட்டமாவிளை யாடுவோங்களைச் சிற்றிலீடழித் தென்பயன்,

தொட்டுதைத்துநலி யேல்கண்டாய்சுடர்ச் சக்கரம்கையி லேந்தினாய்,

கட்டியும்கைத் தாலின்னாமை அறிதியேகடல் வண்ணனே. 8


522: முற்றத்தூடு புகுந்துநின்முகங் காட்டிப்புன்முறு வல்செய்து,

சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக் கக்கடவையோ கோவிந்தா,

முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற நீண்டளந்துகொண் டாய்,எம்மைப்-

பற்றிமெய்ப்பிணக் கிட்டக்காலிந்தப் பக்கம்நின்றவ ரெஞ்சொல்லார்? 9


523: சீதைவாயமு தமுண்டாய்.எங்கள் சிற்றில்நீசிதை யேல். என்று,

வீதிவாய்விளை யாடுமாயர் சிறுமியர்மழ லைச்சொல்லை,

வேதவாய்த்தொழி லார்கள்வாழ்வில்லி புத்தூர்மன்விட்டு சித்தன்றன்,

கோதைவாய்த்தமிழ் வல்லவர்குறை வின்றிவைகுந்தம் சேர்வரே. 2 10

கோழியழைப்பதன்

[தொகு]

524: கோழி யழைப்பதன் முன்னம் குடைந்துநீ ராடுவான் போந்தோம்,

ஆழியஞ் செல்வ னெழுந்தான் அரவணை மேல்பள்ளி கொண்டாய்,

ஏழைமை யாற்றவும் பட்டோ ம் இனியென்றும் பொய்கைக்கு வாரோம்,

தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தரு ளாயே. (2) 1


525: இதுவென் புகுந்ததிங் கந்தோ. இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய்,

மதுவின் துழாய்முடி மாலே. மாயனே.எங்க ளமுதே,

விதியின்மை யாலது மாட்டோ ம் வித்தகப் பிள்ளாய். விரையேல்,

குதிகொண் டரவில் நடித்தாய். குருந்திடைக் கூறை பணியாய். 2


526: எல்லே யீதென்ன இளமை எம்மனை மார்காணி லொட்டார்,

பொல்லாங்கீ தென்று கருதாய் பூங்குருந் தேறி யிருத்தி,

வில்லாலி லங்கை யழித்தாய்.நீ வேண்டிய தெல்லாம் தருவோம்,

பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்தரு ளாயே. 3


527: பரக்க விழித்தெங்கும் நோக்கிப் பலர்குடைந் தாடும் சுனையில்,

அரக்கநில் லாகண்ண நீர்கள் அலமரு கின்றவா பாராய்,

இரக்கமே லொன்று மிலாதாய். இலங்கை யழித்த பிரானே,

குரக்கர சாவ தறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய். 4


528: காலைக் கதுவிடு கின்ற கயலோடு வாளை விரவி,

வேலைப் பிடித்தெந்னை மார்கள் ஓட்டிலென் னவிளை யாட்டோ

கோலச்சிற் றாடை பலவுங் கொண்டுநீ யேறி யிராதே,

கோலங் கரிய பிரானே. குருந்திடைக் கூறை பணியாய். 5


529: தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்களெங் காலைக் கதுவ,

விடத்தே ளெறிந்தாலே போல வேதனை யற்றவும் பட்டோம்

குடத்தை யெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்லஎங் கோவே,

படிற்றையெல் லாம்தவிர்ந் தெங்கள் பட்டைப் பணித்தரு ளாயே. 6


530: நீரிலே நின்றயர்க் கின்றோம் நீதியல் லாதன செய்தாய்,

ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழியெல் லாமுணர் வானே,

ஆர்வ முனக்கே யுடையோம் அம்மனை மார்காணி லொட்டார்,

போர விடாயெங்கள் பட்டைப் பூங்குருந் தேறியி ராதே. 7


531: மாமிமார் மக்களே யல்லோம் மற்றுமிங் கெல்லாரும் போந்தார்,

தூமலர்க் கண்கள் வளரத் தொல்லையி ராத்துயில் வானே,

சேமமே லன்றிது சாலச் சிக்கென நாமிது சொன்னோம்,

கோமள ஆயர்கொ ழுந்தே. குருந்திடைக் கூறை பணியாய். 8


532: கஞ்சன் வலைவைத்த வன்று காரிரு ளெல்லில் பிழைத்து,

நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய் நின்றஇக் கன்னிய ரோமை,

அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட் டிருக்கும்,

வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட மசிமையி லீ.கூறை தாராய். 9


533: கன்னிய ரோடெங்கள் நம்பி கரிய பிரான்விளை யாட்டை,

பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன்பட்டன் கோதை,

இன்னிசை யால்சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம்போய்,

மன்னிய மாதவ னோடு வைகுந்தம் புக்கிருப் பாரே. 2 10


தெள்ளியார் பலர்

[தொகு]

கலி விருத்தம்


534: தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்,

வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்,

பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட,

கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே. 1


535: காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்,

வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்,

ஓட்ட ராவந்தென் கைப்பற்றி,

தன்னோடும் கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே. (2) 2


536: பூம கன்புகழ் வானவர் போற்றுதற் காம கன்,

அணி வாணுதல் தேவகி மாம கன்,

மிகு சீர்வசு தேவர்தம்,

கோம கன்வரில் கூடிடு கூடலே. 3


537: ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட,

பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து,

வாய்த்த காளியன் மேல்நட மாடிய,

கூத்த னார்வரில் கூடிடு கூடலே. 4


538: மாட மாளிகை சூழ்மது ரைப்பதி நாடி,

நந்தெரு வின்நடு வேவந்திட்டு,

ஓடை மாமத யானை யுதைத்தவன்,

கூடு மாகில்நீ கூடிடு கூடலே. 5


539: அற்ற வன்மரு தம்முறி யநடை

கற்ற வன்,கஞ் சனைவஞ் சனையினால்

செற்ற வன்,திக ழும்மது ரைப்பதி,

கொற்ற வன்வரில் கூடிடு கூடலே. 6


540: அன்றின் னாதன செய்சிசு பாலனும்,

நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும்,

வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழ,முன்

கொன்ற வன்வரில் கூடிடு கூடலே. 7


541: ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி

மேவ லன்,விரை சூழ்துவ ராபதிக்

காவ லன்,கன்று மேய்த்து விளையாடும்,

கோவ லன்வரில் கூடிடு கூடலே. 8


542: கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று,

பண்டு மாவலி தன்பெரு வேள்வியில்,

அண்ட மும்நில னும்அடி யொன்றினால்,

கொண்ட வன்வரில் கூடிடு கூடலே. 9


543: பழகு நான்மறை யின்பொரு ளாய்,மதம்

ஒழுகு வாரண முய்ய வளித்த,எம்

அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்,

குழக னார்வரில் கூடிடு கூடலே. 10


544: ஊடல் கூட லுணர்தல் புணர்தலை,

நீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர்,

கூட லைக்குழற் கோதைமுன் கூறிய,

பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே. (2) 11

மன்னு பெரும்புகழ்

[தொகு]

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

545: மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன்

தன்னை, உகந்தது காரண மாகஎன் சங்கிழக் கும்வழக் குண்டே,

புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே,

பன்னியெப் போது மிருந்து விரைந்தென் பவளவா யன்வரக் கூவாய். (2) 1


546: வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட விமல னெனக்குருக் காட்டான்,

உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்,

கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசை பாடுங் குயிலே,

மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென் வேங்கட வன்வரக் கூவாய். 2


547: மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன் இராவணன் மேல்,சர மாரி

தாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த தலைவன் வரவெங்குங் காணேன்,

போதலர் காவில் புதுமணம் நாறப் பொறிவண்டின் காமரங் கேட்டு,உன்

காதலி யோடுடன் வாழ்குயி லே.என் கருமாணிக் கம்வரக் கூவாய். 3


548: என்புரு கியின வேல்நெடுங் கண்கள் இமைபொருந் தாபல நாளும்,

துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர் தோணி பெறாதுழல் கின்றேன்,

அன்புடை யாரைப் பிரிவுறு நோயது நீயு மறிதி குயிலே,

பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப் புண்ணிய னைவரக் கூவாய். 4


549: மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் வில்லிபுத் தூருறை வான்றன்,

பொன்னடி காண்பதோ ராசயி னாலென் பொருகயற் கண்ணிணை துஞ்சா,

இன்னடி சிலோடு பாலமு தூட்டி எடுத்தவென் கோலக் கிளியை,

உன்னொடு தோழமை கொள்வன் குயிலே. உலகளந் தான்வரக் கூவாய். (2) 5


550: எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும் இருடீகே சன்வலி செய்ய,

முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும் முலயு மழகழிந் தேன்நான்,

கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளு மிளங்குயி லே,என்

தத்துவ னைவரக் கூகிற்றி யாகில் தலையல்லால் கைம்மாறி லேனே. 6


551: பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப் புணர்வதோ ராசயி னால்,என்

கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித் தாவியை யாகுலஞ் செய்யும்,

அங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு ஆழியும் சங்குமொண் தண்டும்,

தங்கிய கையவ னைவரக் கூவில்நீ, சாலத் தருமம் பெறுதி. 7


552: சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்த முடையன்,

நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம் நானு மவனு மறிதும்,

தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறுகுயி லே,திரு மாலை

ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில் அவனைநான் செய்வன காணே. 8


553: பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர் பாசத் தகப்பட்டி ருந்தேன்,

பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி லே.குறிக் கொண்டிது நீகேள்,

சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்,

இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும். 9


554: அன்றுல கம்மளந் தானை யுகந்தடி- மைக்கண வன்வலி செய்ய,

தென்றலுந் திங்களு மூடறுத் தென்னை நலியும் முறைமை யறியேன்,

என்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத் தகர்த்தாதே நீயும் குயிலே,

இன்றுநா ராயண னைவரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன். 10


555: விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேற்கண் மடந்தை விரும்பி,

கண்ணுற வென்கடல் வண்ணனைக் கூவு கருங்குயி லே. என்ற மாற்றம்,

பண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன் பட்டர்பி ரான்கோதை சொன்ன,

நண்ணுறு வாசக மாலைவல் லார்நமோ- நாராய ணாயவென் பாரே. (2) 11

வாரணமாயிரம்

[தொகு]

கலி விருத்தம்

556: வாரண மாயிரம் சூழவ லம்செய்து,

நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1


557: நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,

பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,

கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்

காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2


558: இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,

வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,

மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,

அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3


559: நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,

பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,

பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,

காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4


560: கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,

சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,

மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்

அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5


561: மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,

முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6


562: வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,

பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,

காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,

தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7


563: இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,

நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,

செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,

அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8


564: வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு

எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,

அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,

பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9


565: குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,

மங்கல வீதி வலம்செய்து மணநீர்,

அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,

மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10


566: ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,

வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,

தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,

வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. (2) 11

கருப்பூரம் நாறுமோ

[தொகு]

கலிவிருத்தம்

567: கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ,

மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. (2) 1


568: கடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன் உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத் திடரில் குடியேறித் தீய வசுரர்,

நடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே. 2


569: தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்,

இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்,நீயும்

வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்,

குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கெ. 3


570: சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்,

அந்தர மொன்றின்றி யேறி யவஞ்செவியில்,

மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே,

இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே. 4


571: உன்னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை,

இன்னா ரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண்,

மன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்,

பன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே. 5


572: போய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம்,

சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக் குடிகொண்டு

சேய்த்தீர்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய

வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே.


573:

செங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல்

செங்கட் கருமேனி வாசுதே வனுடய,

அங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,

சங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே. 7


574:

உண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்,

கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே,

பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்,

பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே. 8


575: பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப,

மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்,

பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்,

சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே. 9


576: பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்,

வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை,

ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்,

ஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே. (2) 10

விண்ணீல மேலாப்பு

[தொகு]

தரவு கொச்சகக் கலிப்பா


577: விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்,

தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே,

கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை,

பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே? (2) 1


578: மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள், வேங்கடத்துச்

சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே,

காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்,

ஏமத்தோர் தென்றலுக்கிங்- கிலக்காய்நா னிருப்பேனே. 2


579: ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம்,

எளிமையா லிட்டென்னை ஈடழியப் போயினவால்,

குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி,

அளியத்த மேகங்காள். ஆவிகாத் திருப்பேனே. 3


580: மின்னாகத் தெழுகின்ற மேகங்காள், வேங்கடத்துத்

தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு,

என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோ றும்,

பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே. 4


581: வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள், வேங்கடத்துத்

தேன்கொண்ட மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள்,

ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்,

தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே. 5


582: சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள்,மாவலியை

நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்

உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்து,என்னை

நலங்கொண்ட நாரணற்கென் நடலைநோய் செப்புமினே. 6


583: சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள், வேங்கடத்துச்

செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்,

கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து,ஒருநாள்

தங்குமே லென்னாவி தங்குமென் றுரயீரே. (2) 7


584: கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள், வேங்கடத்துப்

போர்காலத் தெழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி,

நீர்காலத் தெருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனை,

வார்காலத் தொருநாள்தம் வாசகம்தந் தருளாரே. 8


585: மதயானை போலெழுந்த மாமுகில்காள், வேங்கடத்தைப்

பதியாக வாழ்வீர்காள். பாம்பணையான் வார்த்தையென்னே,

கதியென்றும் தானாவான் கருதாது,ஓர் பெண்கொடியை

வதைசெய்தான். என்னும்சொல் வையகத்தார் மதியாரே. (2) 9


586: நாகத்தி னணையானை நன்னுதலாள் நயந்துரைசெய்,

மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம்,

போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ்,

ஆகத்து வைத்துரைப்பார் அவரடியா ராகுவரே. (2) 10:

சிந்தூரச் செம்பொடி

[தொகு]

கலிநிலைத்துறை

587: சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்,

இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்,

மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட

சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ. (2) 1


588: போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில்,

தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற,

கார்க்கொள் படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்தரியேன்,

ஆர்க்கிடு கோதோழி. அவன்தார்ச்செய்த பூசலையே. 2


589: கருவிளை யொண்மலர்காள். காயாமலர் காள்,

திருமால் உருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரையீர்,

திருவிளை யாடுதிண்டோ ள் திருமாலிருஞ் சோலைநம்பி,

வரிவளை யில்புகுந்து வந்திபற்றும் வழ்க்குளதே. 3


590: பைம்பொழில் வாழ்குயில்காள். மயில்காள்.ஒண் கருவிளைகாள்,

வம்பக் களங்கனிகாள். வண்ணப்பூவை நறுமலர்காள்,

ஐம்பெரும் பாதகர்காள். அணிமாலிருஞ் சோலைநின்ற,

எம்பெரு மானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே ? 4


591: துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற,

செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்,மலர்மேல்

தொங்கிய வண்டினங்காள். தொகுபூஞ்சுனை காள்,சுனையில்

தங்குசெந் தாமரைகாள். எனக்கோர்சரண் சாற்றுமினே. 5


592: நாறு நறும்பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு, நான்

நூறு தடாவில்வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்,

நூறு தடாநிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்,

ஏறு திருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ. (2) 6


593: இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்,நான்

ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்,

தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்

நின்ற பிரான்,அடியேன் மனத்தேவந்து நேர்படிலே. 7


594: காலை யெழுந்திருந்து கரியகுரு விக்கணங்கள்,

மாலின் வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ,

சோலை மலைப்பெருமான் துவராபதி யெம்பெருமான்,

ஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே. 8


595: கோங்கல ரும்பொழில்மா- லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல்

தூங்குபொன் மாலைகளோ- டுடனாய்நின்று தூங்குகின்றேன்,

பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும்,

சார்ங்கவில் நாணொலியும் தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ. 9


596: சந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருது,

வந்திழி யும்சிலம்பா- றுடைமாலிருஞ் சோலைநின்ற,

சுந்தரனை, சுரும்பார் குழல்கோதை தொகுத்துரைத்த,

செந்தமிழ் பத்தும்வல்லார் திருமாலடி சேர்வர்களே. (2) 10

கார்க்கோடல் பூக்காள்

[தொகு]

கலிநிலைத்துறை

597: கார்க்கோடல் பூக்காள். கார்க்கடல் வண்ணனென் மேல்உம்மைப்

போர்க்கோலம் செய்து போர விடுத்தவ னெங்குற்றான்,

ஆர்க்கோ இனிநாம் பூச லிடுவது, அணிதுழாய்த்

தார்க்கோடும் நெஞ்சந் தன்னைப் படைக்கவல் லேனந்தோ. (2) 1


598: மேற்றோன்றிப் பூக்காள் மேலுல கங்களின் மீதுபோய்,

மேற்றோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில்,

மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர் போலச் சுடாது,எம்மை

மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துகொள் கிற்றிரே. 2


599: கோவை மணாட்டி. நீயுன் கொழுங்கனி கொண்டு,எம்மை

ஆவி தொலைவியேல் வாயழ- கர்தம்மை யஞ்சுதும்

பாவி யேன்தோன்றிப் பாம்பணை- யார்க்கும்தம் பாம்புபோல்,

நாவு மிரண்டுள வாய்த்து நாணிலி யேனுக்கே. 3


600: முல்லைப் பிராட்டி.நீயுன் முறுவல்கள் கொண்டு,எம்மை

அல்லல் விளைவியே லாழிநங் காய்.உன்ன டைக்கலம்,

கொல்லை யரக்கியை மூக்கரிந் திட்ட குமரனார்

சொல்லும் பொய்யானால், நானும் பிறந்தமை பொய்யன்றே. 4


601: பாடும் குயில்காள். ஈதென்ன பாடல்,நல் வேங்கட

நாடர் நமக்கொரு வாழ்வுதந் தால்வந்து பாடுமின்,

ஆடும் கருளக் கொடியுடை யார்வந் தருள்செய்து,

கூடுவ ராயிடில் கூவிநும் பாட்டுகள் கேட்டுமே. 5


602: கணமா மயில்காள். கண்ணபி ரான்திருக் கோலம்போன்று,

அணிமா நடம்பயின் றாடுகின் றீர்க்கடி வீழ்கின்றேன்,

பணமா டரவணைப் பற்பல காலமும் பள்ளிகொள்,

மணவாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே. 6


603: நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில் காள்,உம்மை

நடமாட்டங் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்,

குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து,எம்மை

உடைமாடு கொண்டா னுங்களுக் கினியொன்று போதுமே ? 7


604: மழையே. மழையே. மண்புறம் பூசியுள் ளாய்நின்ற,

மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத் துள்நின்ற,

அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத்

தழுவநின்று, என்னைத் ததர்த்திக்கொண் டூற்றவும் வல்லையே? 8


605: கடலே. கடலே. உன்னைக் கடைந்து கலக்குறுத்து

உடலுள் புகுந்துநின் றூறல் அறுத்தவற்கு, என்னையும்

உடலுள் புகுந்துநின் றூறல் அறுக்கின்ற மாயற்குஎன்

நடலைக ளெல்லாம் நாகணைக் கேசென்று ரைத்தியே. 9


606: நல்லஎன் தோழி. நாக ணைமிசை நம்பரர்,

செல்வர் பெரியர் சிறுமா னிடவர்நாம் செய்வதென்,

வில்லி புதுவை விட்டுசித் தர்தங்கள் தேவரை,

வல்ல பரிசு வருவிப்ப ரேலது காண்டுமே. (2) 10

தாமுகக்கும்

[தொகு]

தரவு சொச்சகக் கலிப்பா


607: தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ,

யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்,

தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்,

ஆமுகத்தை நோக்காரால் அம்மனே. அம்மனே. (2) 1


608: எழிலுடைய வம்மனைமீர். என்னரங்கத் தின்னமுதர்,

குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில்

எழுகமலப் பூவழக ரெம்மானார், என்னுடைய

கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே. 2


609: பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்,

அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்,

செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார்,

எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே. (2) 3


610: மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்,

பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற,

பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்,

இச்சை யுடையரே லித்தெருவே போதாரே ? 4


611: பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று,

எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்,

நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்,

இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே. 5


612: கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார், காவிரிநீர்

செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார்,

எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது, நான்மறையின்

சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே. 6


613: உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து,

பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்,

திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார்,

எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே. 7


614: பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு, பண்டொருநாள்

மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்,

தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்,

பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே. (2) 8


615: கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்,

திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து,

அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த,

பெண்ணாளன் பேணுமூர் பேரு மரங்கமே. 9


616: செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த,

மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்,

தம்மை யுகப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல்,

தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே . (2) 10

மற்றிருந்தீர்

[தொகு]

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


617: மற்றிருந் தீர்கட் கறியலாகா மாதவ னென்பதோ ரன்புதன்னை,

உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம் ஊமைய ரோடு செவிடர்வார்த்தை,

பெற்றிருந் தாளை யொழியவேபோய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி,

மற்பொருந் தாமற் களமடைந்த மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின். (2) 1


618: நாணி யினியோர் கருமமில்லை நாலய லாரும் அறிந்தொழிந்தார்,

பாணியா தென்னை மருந்து செய்து பண்டுபண் டாக்க வுறுதிராகில்,

மாணி யுருவா யுலகளந்த மாயனைக் காணில் தலைமறியும்,

ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில் ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின். 2


619: தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத் தனிவழி போயினாள். என்னும்சொல்லு,

வந்தபின் னைப்பழி காப்பரிது மாயவன் வந்துருக் காட்டுகின்றான்,

கொந்தள மாக்கிப் பரக்கழித்துக் குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற

நந்தகோ பாலன் கடைத்தலைக்கே நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின். 3


620: அங்கைத் தலத்திடை யாழிகொண்டான் அவன்முகத் தன்றி விழியேனென்று,

செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச் சிறுமா னிடவரைக் காணில்நாணும்,

கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர் கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா,

இங்குத்தை வாழ்வை யொழியவேபோய் யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின். 4


621: ஆர்க்குமென் நோயி தறியலாகா தம்மனை மீர்.துழ திப்படாதே,

கார்க்கடல் வண்ணனென் பானொருவன் கைகண்ட யோகம் தடவத்தீரும்,

நீர்க்கரை நின்ற கடம்பையேறிக் காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்து,

போர்க்கள மாக நிருத்தஞ்செய்த பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின். 5


622: கார்த்தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்,

ஈர்த்திடு கின்றன வென்னைவந்திட் டிருடீகே சன்பக்கல் போகேயென்று,

வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடி சிலுண்ணும் போது,ஈதென்று

பார்த்திருந் துநெடு நோக்குக்கொள்ளும் பத்தவி லோசநத் துய்த்திடுமின். 6


623: வண்ணம் திரிவும் மனங்குழைவும் மானமி லாமையும் வாய்வெளுப்பும்,

உண்ண லுறாமையு முள்மெலிவும் ஓதநீர் வண்ணனென் பானொருவன்,

தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு சூட்டத் தணியும், பிலம்பன்றன்னைப்

பண்ணழி யப்பல தேவன்வென்ற பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின். 7


624: கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்,

பற்றி யுரலிடை யாப்புமுண்டான் பாவிகாள். உங்களுக் கேச்சுக்கொலோ,

கற்றன பேசி வசையுணாதே காலிக ளுய்ய மழைதடுத்து,

கொற்றக் குடையாக வேந்திநின்ற கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின். 8


625: கூட்டி லிருந்து கிளியெப்போதும் கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும்,

ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந் தான். என் றுயரக்கூவும்,

நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள் நன்மை யிழந்து தலையிடாதே,

சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும் துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின். 9


626: மன்னு மதுரை தொடக்கமாக வண்துவ ராபதி தன்னளவும்,

தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித் தாழ்குழ லாள்துணிந் ததுணிவை,

பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும் புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,

இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே. (2) 10

கண்ணனென்னும்

[தொகு]

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


627: கண்ண னென்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை,

புண்ணில் புளிப்பெய் தாற்போலப் புறநின் றழகு பேசாதே,

பெண்ணின் வருத்த மறியாத பெருமா னரையில் பீதக

வண்ண ஆடை கொண்டு,என்னை வாட்டம் தணிய வீசீரே. (2) 1


628: பாலா லிலையில் துயில்கொண்ட பரமன் வலைப்பட் டிருந்தேனை,

வேலால் துன்னம் பெய்தாற்போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே,

கோலால் நிரைமேய்த் தாயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி,

நீலார் தண்ணந் துழாய்கொண்டென் நெறிமேன் குழல்மேல் சூட்டீரே. 2


629: கஞ்சைக் காய்ந்த கருவல்லி கடைக்க ணென்னும் சிறைக்கோலால்,

நெஞ்சூ டுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை,

அஞ்சே லென்னா னவனொருவன் அவன்மார் வணிந்த வனமாலை,

வஞ்சி யாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே. 3


630: ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்,

காரே றுழக்க வுழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை,

ஆரா வமுத மனையான்றன் அமுத வாயி லூறிய,

நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி யிளைப்பை நீக்கிரே. 4


631: அழிலும் தொழிலு முருக்காட்டான் அஞ்சே லென்னா னவனொருவன்,

தழுவி முழுகிப் புகுந்தென்னைச் சுற்றிச் சுழன்று போகானால்,

தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமா லூதி வருகின்ற

குழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத் தடவீரே. 5


632: நடையொன் றில்லா வுலகத்து நந்த கோபன் மகனென்னும்,

கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு,

புடையும் பெயர கில்லேன்நான் போட்கன் மிதித்த அடிப்பாட்டில்

பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா வுயிரென் னுடம்பையே. 6


633: வெற்றிக் கருள கொடியான்றன் மீமீ தாடா வுலகத்து,

வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பே யாக வளர்த்தாளே,

குற்ற மற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு,

அற்ற குற்ற மவைதீர அணைய வமுக்கிக் கட்டீரே. 7


634: உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ வென்னாத,

கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த் தனனைக் கண்டக்கால்,

கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்

அள்ளிப் பறித்திட் டவன்மார்வில் எறிந்தென் அழலை தீர்வேனே. 8


635: கொம்மை முலைக ளிடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல்,

இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்,

செம்மை யுடைய திருமார்வில் சேர்த்தா னேலும் ஒருஞான்று,

மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிகநன்றே. 9


636: அல்லல் விளைத்த பெருமானை ஆயர் பாடிக் கணிவிளக்கை,

வில்லி புதுவை நகர்நம்பி விட்டு சித்தன் வியன்கோதை,

வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிகவிரும்பும்,

சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடளுள் துவளாரே. (2) 10

பட்டி மேய்ந்து

[தொகு]

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

637: பட்டி மேய்ந்தோர் காரேறு பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்,

இட்டீ றிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே?-

இட்ட மான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி,

விட்டுக் கொண்டு விளையாட விருந்தா வனத்தே கண்டோ மே. (2) 1


638: அனுங்க வென்னைப் பிரிவுசெய் தாயர் பாடி கவர்ந்துண்ணும்,

குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த் தனனைக் கண்டீரே?-

கணங்க ளோடு மின்மேகம் கலந்தாற் போல, வனமாலை

மினுங்க நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோ மே. 2


639: மாலாய்ப் பிரந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை,

ஏலாப் பொய்க ளுரைப்பானை இங்கே போதக் கண்டீரே?-

மேலால் பரந்த வெயில்காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்,

மேலாப் பின்கீழ் வருவானை விருந்தா வனத்தே கண்டோ மே. 3


640: கார்த்தண் கமலக் கண்ணென்னும் நெடுங்கயி றுபடுத் தி,என்னை

ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் றன்னைக் கண்டீரே?-

போர்த்த முத்தின் குப்பாயப் புகர்மால் யானைக் கன்றேபோல்,

வேர்த்து நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோ மே. 4


641: மாத வன்என் மணியினை வலையில் பிழைத்த பன்றிபோல்,

ஏது மொன்றும் கொளத்தாரா ஈசன் றன்னைக் கண்டீரே?-

பீதக வாடை யுடைதாழப் பெருங்கார் மேகக் கன்றேபோல்,

வீதி யார வருவானை விருந்தா வனத்தே கண்டோ மே. (2) 5


642: தரும மறியாக் குறும்பனைத் தங்கைச் சார்ங்க மதுவேபோல்,

புருவ வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே?-

உருவு கரிதாய் முகம்செய்தாய் உதயப் பருப்ப தத்தின்மேல்,

விரியும் கதிரே போல்வானை விருந்தா வனத்தே கண்டோ மே. 6


643: பொருத்த முடைய நம்பியைப் புறம்போ லுள்ளும் கரியானை

கருத்தைப் பிழைத்து நின்றஅக் கருமா முகிலைக் கண்டீரே?-

அருத்தித் தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம்போல்,

விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தா வனத்தே கண்டோ மே. 7


644: வெளிய சங்கொன் றுடையானைப் பீதக வாடை யுடையானை,

அளிநன் குடைய திருமாலை ஆழி யானைக் கண்டீரே?-

களிவண் டெங்கும் கலந்தாற்போல் கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்,

மிளிர நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோ மே. 8


645: நாட்டைப் படையென்று அயன்முதலாத் தந்த நளிர்மா மலருந்தி,

வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் றன்னைக் கண்டீரே?-

காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளு முடன்மடிய,

வேட்டை யாடி வருவானை விருந்தா வனத்தே கண்டோ மே. 9


646: பருந்தாட் களிற்றுக் கருள்செய்த பரமன் றன்னை, பாரின்மேல்

விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதைசொல்,

மருந்தா மென்று தம்மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,

பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப் பிரியா தென்று மிருப்பாரே. (2) 10

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=நாச்சியார்_திருமொழி&oldid=1526110" இலிருந்து மீள்விக்கப்பட்டது