நெஞ்சக்கனல்/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

14

முதலமைச்சருக்கும் கமலக்கண்ணனுக்கும் இடையே நீண்ட நேர அமைதி நிலவியது. அவருக்கும் இவரிடம் கேட்க எதுவுமில்லை. இவருக்கும் அவரிடம் தெளிவு செய்ய எதுவுமில்லை என்பது போல அந்த மெளனம் விட்டுத் தெரிந்தது. பஸ்–ரூட் தொடர்பாகக் கமலக்கண்ணன் தலையிட்டுச் செய்த காரியத்தை முதன் மந்திரி அறவே விரும்பவில்லை என்பதை–அந்த அழுத்தமான மெளனம் காட்டியது:

“சரி! அப்புறம் பார்க்கலாம்...”–என்று மெளனத்தின் நீண்ட இடைவெளிக்குப்பின் மெல்ல வாய் திறந்தார் முதலமைச்சர். அதற்குமேல் அவரை நோக்கிப் ‘போய் வருகிறேன்’–என்ற குறிப்பில் தலையசைத்துவிட்டு எழுந்து வெளியே வருவதைத் தவிரக் கமலக்கண்ணன் செய்ய எதுவும் மீதமில்லை. அதையே அவரும் செய்தார். கோடிசுவரராகிய அவர்–தேசபக்தியையும், தியாகத்தையும் தவிர நாளைக்குச் சாப்பிடுவதற்கென்று ஒரு பைசாவைக்கூடச் சேர்த்துக்கொள்ளாத அந்த ஏழை முதலமைச்சரிடமிருந்து வெளியேறி வரும்போது–குணங்களால் ஏழையாகிவிட்ட தாழ்வு மனப்பான்மையோடு தள்ளாடி நடந்துவர நேரிட்டது. தான் தள்ளாடி நடக்கவும், அவர் நிமிர்ந்து உட்காரவும் காரணமானது எதுவென்று ஒருகணம் உள்ளே சிந்தனை ஒடியபோது அவரால். மேலே சிந்திக்க முடியவில்லை.

‘அந்த முதலமைச்சருக்குச் சொந்த வீடு கிடையாது. மனைவி மக்கள் குடும்பம் கூடக் கிடையாது. தனிக்கட்டை சிறையிலே மலர்ந்த தியாகம்... நாடு விடுதலை பெற்ற பின்பு தொண்டாக மாறியிருக்கிற மாறுதலைத் தான் அவரிடம் இன்று காண முடிந்தது. மறுபடி அந்த எளிய தொண்டரின் அரிய மனத்திலே எப்படிப் பழைய நன்மதிப்பைப் பெறுவதென்பது தான் கமலக்கண்ணனின் இடைவிடாத சிந்தனையாயிருந்தது. செக்ரட்டேரியட்டிலிருந்து வீடு திரும்பியதும் கூட அதே சிந்தனைதான் தொடர்ந்தது. அந்த வேளை பார்த்து மாயாதேவியிடமிருந்து ஃபோன் வந்தது எரிந்து விழுந்தார் அவர். அவருடைய கோபத்துக்குக் காரணம் புரியாமல் மாயா ஃபோனில் பதறிப் போய்க் கொஞ்ச முயன்றாள். அவரே கோபம் தணியாமலே பேச்சைப் பாதியில் வெட்டி ஃபோனை வைத்துவிட்டார். கவலையோடும் சிந்தனையோடும் பங்களா ஹாலில் உட்கார்ந்திருந்த அவரைத் தேடிப் புலவர் வெண்ணெய்க் கண்ணனார் அப்போது எங்கிருந்தோ வந்து சேர்ந்தார். மனிதனுக்குச் சில பலவீனமான வேளைகளில் எதிரே தென்படுகிற ஒவ்வொருவரும் தன்னைவிடப் பலமானவர்களாகத் தோன்றுவதுண்டு. புலவர் வெண்ணெய்க்கண்ணனாரும் கமலக்கண்ணனுக்கு அப்போது அப்படித்தான் தோன்றினார். சிறிது நேரம் புலவரிடம் வேறு எது எதையோ பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டு, பின்பு நடந்ததை எதுவும் கூறாமல் முதலமைச்சருடைய பெயரைக்கூறி, “அவருடைய மனம் திருப்திப்படுகிற மாதிரி ஏதாவது செய்யனும்...! உங்களுக்கு ஏதினாச்சும் ஐடியா தோணினாச் சொல்லுங்களேன்...பார்ப்பம்...’ என்றார் கமலக்கண்ணன்.

புலவர் சிறிது நேரம் தீவிரமாகச் சிந்திக்கலானார். பின்பு நிதானமாகக் கமலக்கண்ணனிடம் கூறினார்:

“மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லுகிற வழியில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடமொன்றில் அன்னாருக்குச் சீரியதோர் சிலை எடுத்தல் வேண்டும்.”

“சிலையா? உயிரோட இருக்கறப்பவேயா சிலை வைக்கிறது? நல்லா இருக்குமா?”

இவர்கள் இருவரும் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது பிரகாசமும், கலைச்செழியனும் தற்செயலாக அங்கே வந்து சேர்ந்தனர். அவர்களைப் பார்த்ததும் புலவர் முகமலர்ந்து, “வேண்டுமானால் இவர்களையே கேட்டுப் பாருங்களேன்? என் முடிவை இவர்களும் ஒப்புக்கொள்கிறார்களா, இல்லையா, பார்க்கலாம்!” என்றார். கமலக் கண்ணன் நிலைமையைப் பிரகாசத்துக்கும், கலைச்செழியனுக்கும் விளக்கிப் புலவரின் யோசனையையும் கூறினார்.

“ஆமாங்க...இந்த பஸ்ருட் விஷயமா சீஃப் மினிஸ்டருக்கு ஏதோ உங்க மேலே மனவருத்தம்னு பராபரியாக் காதிலே விழுந்திச்சுங்க. அதைச் சரிக்கட்ட இது நல்ல யோசனைதான். சிலை வைக்க ஆகற செலவைக்கூட பப்ளிக்லே வசூல் பண்ணிடலாம். அவருக்கும் மனசு நிறைஞ்சிடும்” என்று பிரகாசமும் கலைச்செழியனும் ஏகமனதாக ஒப்புக்கொண்டார்கள்.

“அவரு ரொம்பக் கறாரானவரு. சம்மதிக்கணுமே?”

“சம்மதிக்காம் என்னங்க? மத்தவங்க தன்னைக் கால்லே விழுந்து கும்பிடலுங்கிற ஆசை, தனக்கு மத்த வங்க சிலைவச்சுக் கொண்டானுங்கிற ஆசை–இல்லாத... அரசியல் பிரமுகரு யாருமே நாட்டிலே இன்னிக்கு இல்லே. மனுஷனைப் பலவீனப்படுத்தணும்னா–முதல்லே அவனைத் தெய்வமாக்கணும். ஒருத்தனைத் தெய்வமாக்கி விட்டா அப்புறம் அவனைத் தனியாப் பலவீனப்படுத்த வேண்டியதில்லே. அவன்தான் மனுஷன்கிறதை...மறக்கச் செய்யிறதே ஒரு பலவீனம்தான்.”

“சொல்லாமலே ஒரு கமிட்டி ஸெட் அப் பண்ணி பேப்பர்லே அறிக்கை விட்டுடலாமா?”

“அப்பிடித்தான் செய்யணும்! ஏற்பாடு பண்ணி கமிட்டியும் போட்டு அறிக்கை விட்டுப்பிட்டா அப்புறம் எப்படி மறுக்கத் தோணும்கிறேன்?”

மறுநாள் தினக்குரவில் முதல் அமைச்சரின் சிலை நிறுவும் கமிட்டியைப் பற்றி முதல் பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது.

கமலக்கண்ணன் இந்தச் செய்தியைத் தினக்குரலில் காலை ஏழரை மணிக்குப் படித்தார். முதலமைச்சர் காலை ஐந்து மணிக்கே எழுந்திருந்து விடும் பழக்க முடையவராகையால் அவர் அதை ஆறு–ஆறரை மணிக்கே படித்திருக்க முடியும் என்று அநுமானித்துக் கொண்டார் கமலக்கண்ணன், ஐந்தரை– ஐந்தேமுக்கால் மணிக்குள் முதலமைச்சர் வீட்டுக்கு எல்லாத் தினசரிகளும் போடப்பட்டுவிடும் என்பதை அவர் அறிவார். முதலில் இந்து, எக்ஸ்பிரஸ், தினமணி, படித்துவிட்டு அப்புறம் தினக்குரலை எடுப்பார் என்று கற்பனை செய்தது கமலக்கண்ணன் மனம், அவர் இவ்வாறு நினைத்துக் கொண்டிருந்த போதே டெலிபோன் மணி சீறியது. ஒடிப்போய் எடுத்தார் கமலக்கண்ணன். அவ்வளவு அதிகாலையில் வழக்கமாக மற்றவர்கள் எடுத்து யாரென்று கேட்டு அவரிடம் டெலிபோனைக் கொடுப்பது தான் நடைமுறை. அன்று ஏதோ சந்தேகமான ஆவலுடன் அவரே எடுத்தார்.

எதிர்ப்புறம் முதலமைச்சரின் குரல் சிறியது, “இதென்ன அபத்தம் உடனே நிறுத்திட்டு மறுவேலை பாருங்க...சிலையாவது மண்ணாங்கட்டியாவது: அதெல்லாம் விவேகாநந்தர், காந்திஜி, நேதாஜி போன்றவர்களுக்கு வைக்கவேண்டியது. நான் சாதாரணத் தொண்டன். குறைகளும் நிறைகளும் கலந்தவன், மனிதனைத் தெய்வமாக்குவது அற்பத் தனம். தெய்வங்களின் சிலைகளைப் பகுத்தறிவின் பெயரால் ஏளனம் செய்துவிட்டு மனிதர்கள் தங்களுக்குச் சிலைகள் வைத்துக் கொள்கிறமடமையை வெறுப்பவன் நான். ‘பஸ்ரூட்’ ப்ளண்டர் ஒண்ணு போதும். அதைச் சரிசெய்யறதா நெனச்சுக்கிட்டு அதைவிடப் பெரிய ப்ளண்டரை ‘கமிட்’ பண்ணிக்காதிங்க...இதைக் கைவிடறதாகச் சாயங்காலப் பேப்பர்லே நீங்களே அறிவிக்கலேன்னா நானே இன்த மறுத்து அறிக்கைவிட வேண்டியிருக்கும்...”

“.....................”

“என்ன பதில் பேச மாட்டேங்கிறீங்க? உடனே நிறுத்தறேன்னு சொல்லுங்க...”

“அப்படியே செய்யறேன் சார்.கோபப்படாதீங்க...”–என்று பயந்த குரலில் பதில் கூறினார் கமலக்கண்ணன். எதிர்ப்புறம் முதலமைச்சரின் டெலிபோன் செவியை உடைப்பது போல் கோபமாக வைக்கப்படும் ஓசை கமலக்கண்ணனுக்கு கேட்டது. டெலிபோனை வைத்துவிட்டுத் தள்ளாடியவாறு சோபாவில் சாய்ந்தார் அவர். வியாபார ரீதியாகக் கணக்கிட முடியாத நல்ல மனிதர்கள் உலகில் நிறைய இருப்பதாக ஒரு பயம் அவருக்குள்ளேயே கிளர்ந்து சுமையாகிக் கணக்கலாயிற்று. ‘முதலமைச்சரின் வேண்டு கோளுக்கிணங்கிச் சிலை ஏற்பாட்டைக் கைவிடுவதாக’ – அவரே அறிக்கை எழுதியனுப்ப வேண்டிய நிலையிலிருந்தார். புகழையும், பணத்தையும் துச்சமாக மதிக்கிறவர்களை எதிரே பார்க்கும் போதெல்லாம் அந்த நெஞ்சங்களின் கனலில் அவர் பயந்து வெதும்பினார். காரணம் அவரால் புகழையும், பணத்தையும் துச்சமாக மதிக்க முடியவில்லை. அப்படி மதிப்பதற்குரிய நெஞ்சமோ, கனலோ அவரிடமில்லை.

சிந்தித்தபடியே வராந்தாப் பக்கம் நடந்தவர்–எதிர்ப்புறம் தெருச்சுவரில் ஏதோ போஸ்டர் பளீரென்று தெரியவே– தோட்டத்துச் சுவரருகே சென்று நின்று படிக்க முயன்றார். எழுத்துக்கள் அங்கிருந்து சரியாகத் தெரியவில்லை. தோட்ட்க்காரனைக் கூப்பிட்டு அது என்ன சுவரொட்டி என்று படித்தறிந்து வருமாறு பணித்தார். அந்தச் சுவரொட்டியைப் பற்றி அவர் மனத்தில் ஏதோ சந்தேகம் தட்டியது. தோட்டக்காரனை அனுப்பவும் முதலில் அவர் மனம் கூசினாலும் தானே நேரில் தெருவில் போய்நின்று அதைப் படித்துப் பார்க்கத் துணிய முடியாமலிருந்தது. போஸ்டரோ தன் சம்பந்தப்பட்டதென்று அவரது மனக்குறளி கூறியது. ‘பஸ்ருட் ஊழல்’ கண்டனக் கூட்டம். பிரபல தேசபக்தர் காந்திராமன் தலைமையில் நடைபெறும்’– என்று சுவரொட்டியில் கண்டவற்றை வந்து அப்படியே ஒப்பித்தான் தோட்டக்காரன். அவருடைய மனத்தில் பதற்றமும், பரபரப்பும் அதிகமாயின.

“முடிஞ்சா இன்னிக்கிச் சாயங்காலம் அந்தக் கூட்டத்துக்குப் போயி என்னபேசுறாங்கன்னு கேட்டுக்கிட்டுவா...”–என்று தோட்டக்காரனிடம் அந்தரங்கமாகச் சொல்லி வைத்தார். அவர் அவனும் சரியென்று தலையாட்டினான்.

நடுப்பகலில் புலவர் வெண்ணெய்க்கண்ணனார் கமலக்கண்ணனைப் பார்க்க வந்தார். அவர் கையில் காந்திராமன் நடத்தும் பத்திரிகை இருந்தது. அந்தப் பத்திரிகையைப் புலவர் கைகளில் பார்த்ததுமே கமலக்கண்ணனுக்கு வயிறெரிந்தது. “சர்வோதயக் குரலா அது? அதை ஏன் கையிலே வச்சுக்கிட்டிருக்கீரு” என்று புலவரை வினாவினார்.

“பாருங்க... உங்களுக்குக் காண்பிக்கத்தான் வாங்கிக் கொண்டு வந்தேன்” என்று புலவர் அந்தப் பத்திரிகையையே கமலக்கண்ணனிடம் நீட்டினார். மனமும் கைளும் பதறி அதை வாங்கினார் கமலக்கண்ணன்.

அந்தப் பத்திரிகையில் கார்ட்டூனிலிருந்து தலையங்கம் வரை எல்லாவற்றிலும் கமலக்கண்ணனைக் கடுமையாகத் தாக்கியிருந்தார்கள்.

‘குரங்கு கையில் பூமாலை’ என்று ஒரு கேலிச் சித்திரம். அதில் கமலக்கண்ணனைக் குரங்காகவும்–பூமாலையில் உள்ள மலர்களைத் தேசிய லட்சியங்களாகவும் உருவகம் செய்திருந்தது. தலையங்கத்தில் ‘பஸ்–ரூட்’ விஷயம் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கமலக்கண்ணன் சூடுசுரணையோ, மானமோ உள்ளவராக இருந்தால் உடனே இராஜிநாமா செய்யவேண்டுமென்றும் கோரப்பட்டிருந்தது. அதில் ஒரு ‘பாரா’ இப்படி இருந்தது.

“தன் லட்சியங்களில் நம்பிக்கையில்லாத ஒருவரைப் –பணபலத்துக்காகக் கட்சியில் ஏற்பதும்–பதவியளிப்பதும் – பாலில் நஞ்சுக்கலப்பதைப் போன்றது. திலகரிலிருந்து காந்தி வரை தன்னலம் கருதாமல் வளர்த்த மாபெரும் தேசிய இயக்கம் இன்று ஒரு சாதாரண அரசியல் கட்சியாகிவிட்டாலும்–அதில் பல்வேறு கட்சிக்காரர்கள் ஊடுருவுகிற அளவு அது பலவீனப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. சுயநல நோக்கங்களுக்காகத் தேசியக் கட்சியில் ஊடுருவியிருக்கிற ஒவ்வொருவரும் அந்த அந்த அளவுக்குக் கட்சியைப் பலவீனப் படுத்துகிறார்கள் என்றே கூறவேண்டும். சமீபத்தில் ‘பஸ்ருட் விஷயமாக’ நடந்த முடிவும் இதையே நிரூபிக்கிறது. கட்சியிலிருந்து உண்மையும் நியாயமும் விலகிப் போய்க் கொண்டேயிருக்கின்றன. உண்மைத் தொண்டர்களும், அன்பர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இது கேவலமான நிலை அரசியல், தொண்டாக இருந்த காலம் போய் வசதியுள்ளவர்கள் முதலீடு செய்யும் ஒரு லாபகரமான தொழிலாக மாறி வருகிறது. அப்படித் தான் நமது புதிய நிதி மந்திரியும் அரசியல் தொழிலில் இப்போது முதலீடு செய்திருக்கிறார் போலும்...’

படிக்கப் படிக்க கமலக்கண்ணனுக்கு ஆத்திரம் பற்றி எரிந்தது. காந்திராமனைப் போன்றவர்கள் பேச்சிலும், எழுத்திலும் ஏன் தன்னை இவ்வளவு தீவிரமாக எதிர்க் கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியாமல் மனம் குமுறினார் அவர். தன் செல்வாக்கிற்கும், செல்வத்திற்கும், பதவிக்கும் அவர்கள் ஏன் பயப்படுவதில்லை என்பது அவருக்கும் வேடிக்கையாகவே இருந்தது.

முதலமைச்சர் விரும்பாததன் காரணமாகச் சிலை வைக்கும் யோசனை கைவிடப்பட்டதாக அன்றைய மாலைத் தினசரிகளில் அவரே அனுப்பிய செய்திகள் வந்திருந்தன. மறுநாள் காலை தினக்குரலிலும் அதே செய்தி வந்தது. திடீரென்று பத்திரிகைகளின் ஆசிரியர் கடிதப் பகுதியில் கமலக்கண்ணன் இராஜிநாமா செய்ய வேண்டுமென்று கோரும் கடிதங்கள் நிறைய வரலாயின. சில பத்திரிகைகள் அவர் ராஜிநாமா செய்வாரென்று தாமாகவே ஹேஷ்யச் செய்தி வேறு வெளியிட்டிருந்தன. 

அடுத்த வார சர்வோதயக்குரலில் ‘முதலமைச்சருக்குச் சிலை– காக்கை பிடிக்கும் முயற்சியா?’ என்று தலையங்கம் வந்திருந்தது. இதே செய்தியைப் பொதுக் கூட்டத்திலும் காந்திராமன் பேசியதாகக் கூட்டம் நடந்திருந்த தினத்தின் மாலையிலேயே தோட்டக்காரன் கேட்டுக்கொண்டு வந்து கமலக்கண்ணனிடம் தெரிவித்திருந்தான். இப்போது ஐந்து நாட்களுக்குப் பின் அதையே தலையங்கமாக எழுதியிருந்தார் காந்திராமன். கமலக்கண்ணனுக்கு அவருடைய சக காபினட் மந்திரிகளிடமே நல்ல பெயர் போய்விட்டது. அவரை இலட்சியம் செய்யாதது போல் அவர்கள் நடந்து கொள்ளத் தலைப்பட்டார்கள். பஸ்ரூட் விஷயம் அளவுக் கதிகமாகப் பெரிது படுத்தப்பட்டு விட்டது. சில மஞ்சள் பத்திரிகைகள் இதில் மாயாதேவியையும் சம்பந்தப்படுத்தி எழுதின. அபவாதம் தனியே வருவதில்லை போலும். முதலமைச்சருக்குக் கமலக்கண்ணனைப் பற்றி ஏராளமாக தந்திகள் பறந்தன. பொதுமக்களின் சக்தி இவ்வளவு கடுமையாக இருக்க முடியுமென்று அவருக்கு இதற்கு முன் எப்போதுமே தெரிய வாய்ப்பிருந்ததில்லை. காந்திராமன் தலைமையில் கட்சியின் நீண்டகாலத் தலைவர்கள் பலர் முதலமைச்சரிடம் தூது போய்ப் பேசியதாகவும் ஒரு தகவல் கமலக்கண்ணனுக்குத் தெரிய வந்தது. உண்மையில் அந்த ‘பஸ்ரூட்’ விஷயத்தை அவர் செய்யாமலே விட்டிருக்கலாம். யாருக்கு அதைச்செய்கிறோம் என்பது தெரியாமலே அதை மாயாவுக்காகச் செய்யப்போக இப்படி ஒரு பெரிய எதிர்ப்புச் சூறாவளியில் சிக்க நேரிடுமென்று அவர் கனவிலும் . நினைக்கவில்லை, பார்க்கப்போனால் இது டிரான்ஸ் போர்ட் மந்திரி விவகாரம். ஆனால் எப்படியோ பழி கமலக்கண்ணனையே சரியாகத் தேடி வந்தது. ‘டிரான்ஸ் போர்ட் மந்திரி இதில் நிரபராதி’ – என்பது போலாகி விட்டது. பத்திரிகைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கமலக்கண்ணனைச் சரியாகப் பழி வாங்கின. அவர் செய்த சிலை முயற்சியில் முதலமைச்சர் வேறு அவரை வெறுக்கத் தொடங்கியிருந்தார். ரூட் கிடைக்காத மற்ற விண்ணப்பதாரர்கள் ஓர் பெரிய அரசியல் குழப்பமாக இதை மாற்றிவிட்டு–அத்தனை குழப்பத்திற்கும். கமலக்கண்ணனே காரணமென்றும் கிளறி விட்டு விட்டார்கள். எங்கும் இதே பேச்சாகிவிட்டது. பெரிய குற்றம் எதையும் மன்மறிந்து செய்யாமலே இருந்தாற் போலிருந்து அவர் அருவருக்கத் தக்கவராகி விட்டார். சில பெரிய பத்திரிகைகள் ‘பஸ் ஊழல்’– செய்திகள் என்றே ஒரு பத்தி தொடர்ந்து வெளியிடத் தொடங்கிவிட்டன். ஒரு மஞ்சள் பத்திரிகை ‘மாயாதேவிக்கு அவர் நெக்லஸ் பரிசளித்துக் கொண்டிருக்கும் படத்தை’ எப்படியோ–எங்கிருந்தோ வாங்கிப் பிரசுரித்து ‘நிதி மந்திரியா–சினிமா லோலரா?’–என்று கீழே ஒரு வாக்கியமும் அச்சிட்டிருந்தது. அந்தப் படம் வெளிவந்த தினத்திலிருந்து கலைச்செழியன் அவர் முன் தென்படுவதில்லை. ‘ஆள் எங்கே?’–என்பதும் தெரியாது போயிற்று. சரியான தொகைக்கு, அவனிடம் அந்தப் படத்தை யாரேனும் விலைக்கு வாங்கியிருக்க வேண்டு மென்று கமலக்கண்ணனால் அநுமானிக்க முடிந்தது. படத்தை வெளியிட்ட பத்திரிகையின்மேல் வழக்குப்போடவும் வழியில்லாமல் இருந்தது. அந்தப் பதினைந்து நாள் சூறாவளியில் முதன் மந்திரியோ, சகமந்திரிகளோ, கட்சித் தலைவர்களோ, கமலக்கண்ணனைப் பார்க்கவும் வரவில்லை, ஃபோனிலும் பேசவில்லை. புறக்கணித்த மாதிரி நடந்துகொண்டார்கள்.

ஒருநாள் அவர் மனைவி தானாகவே அவரிடம்இதைப் பற்றிய பேச்சைத் தொடங்கினாள்:–

“இதுக்காகப்போட்டு ஏன் இப்படி மனசை அலட்டிக்கிறீங்க...? பொதுக்காரியம்னா நாலுவிதமும்தான் இருக்கும். நமக்கு இருக்கிறது நாலு தலைமுறைக்குக் காணும். பஸ்ரூட் வாங்கிக்கொடுத்துப் பணம் சம்பாதிக்கணும்னு நம்ம தலையிலே எழுதலே. சனியனை விட்டுத் தலையை முழுகுங்க...ஏதோ கிரக பலன் சரியில்லே...அந்த சோசியரு சர்மா–வந்தால் கேக்கணும்!...அவரையும் கொஞ்ச நாளாக் காணலை...”

“அவருக்கு போன் இருக்கு...கூப்பிட்டு வரச்சொல்லேன்..கேட்போம்” என்றார் கமலக்கண்ணன். அவருடைய மனைவி உடனே ஜோசியருக்கு ஃபோன் செய்து விட்டுக் கமலக்கண்ணனின் அருகே வந்தாள்... “என்னாங்க? ஜோசியரு என்னமோ வாய் புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோன்னு பேசறாரு...?”

“வர்ராரா? இல்லையா? என்ன சொன்னாரு...? சொல்லு...”

“வர்ரேன்னாரு...ஆனாகுரல்தான் உற்சாகமாஇல்லே!”

“எப்படி இருக்கும்? அவரும் எல்லாம் கேள்விப்பட்டிருப்பாரில்ல?”

“உங்க நண்பர்– அதான்...அந்த டிரான்ஸ்போர்ட் மினிஸ்டரு, தன் பேரில் அபவாதம் வராமத் தப்பணுங்கிறதுக்காக–நீங்கதான் டில்லிலேருந்து போன் பண்ணி இது விஷயமா அவரை வற்புறுத்தினிங்கன்னு’ எல்லாரிட்டவும் சொல்லியிருப்பாரு போலருக்கு...”

“சொன்னா என்ன தப்பு அதிலே? உள்ளதைத் தானே சொல்லியிருப்பாரு...நான் போன். பண்ணியிருக்கக் கூடாதுதானே?” என்று கமலக்கண்ணனும் விரக்தியோடு தன்னை வெறுத்தாற் போலவே கூறினார். அந்த விஷயமாக மனைவி தன்னுடன் பேசுவதுகூட அப்போது அவருக்குப் பிடிக்கவில்லை. அதை விட்டுவிட்டு வேறு எதையாவது பேசினால் நல்லதுபோலத் தோன்றியது. மனைவி...பங்களாவின் முன்புறம் போய் ஜோதிடர் சர்மாவை அழைத்து. வரக் கார் அனுப்பினாள். அரைமணி நேரத்தில் ஜோதிடர் சர்மா வந்தார். ஜாதகத்தைக் கொண்டுவந்து அவரிடம் வைத்தார் கமலக்கண்ணன். .

“ராகு கொஞ்சம் கஷ்டப்படுத்தறான். ஒரு மண்டலத்துக்குக் கொஞ்சம் போறாது. திங்கள் கிழமை திங்கள் கிழமை...ஏதாவது முருகன் சந்நிதியிலே உங்க நட்சத்திரத்துக்கு அர்ச்சனை பண்ணுங்கோ. எல்லாம் சரியாப் போயிடும்” என்றார் சர்மா.

“உண்மையிலே பார்க்குப் போனா இது ஒரு பெரிய பழியைத் தரவேண்டிய கெட்ட காரியமே இல்லே. மிஸ்டர் சர்மா! நான் எதிலேயும் ‘கமிட்’ பண்ணிக்கலே, அப்படி இருந்தும் பழி எல்லாம் எனக்கு வந்துவிட்டது. போன் பண்ணிச் சொன்னதுக்கூடப் ப்ரூப் இல்லை. ஒரே அடியா எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லேன்னு அடிச்சுப் பேசி ருக்கலாம் ஆனால் அப்பிடியும் எனக்குப் பேசவரவில்லை.”

“எல்லாம் காலக்கோளாறு. ‘பாஸ்லிங்கிளவிட்ஸ்’ தான் எல்லாம் சரியாயிடும். முருகன் கிருபை பண்ணுவான்.”

“கிருபை பண்ணலியே மிஸ்டர் சர்மா! விஷயம் பெரிசாவில்ல ஆயிட்டுது.”

“கவலைப்படாதிங்கோ... எல்லாம் சரியா ஆகும். கொஞ்ச காலத்துக்குத்தான் போறாது. உங்களுக்கிருக்கிற பணத்துக்கு இந்த டர்ட்டி ‘பாலிடிக்ஸ்’ல இறங்கியிருக்கணும்கிறதே இல்லை...”

“அதென்ன சரியாகும்னும் சொல்றீங்க, டர்ட்டி பாலிடிக்ஸ்ல இறங்கியிருக்க வேண்டாம்னும் சொல்றீங்க...”

“பொதுவாகச் சொன்னேன். வேறேனுண்னுமில்லே” இன்னும் ஒரு பத்து நாள் கழிந்தது. இதற்கிடையில் கமலக்கண்ணன் வீட்டு வாசலில் ஒரு கட்சி பிரமுகர் உண்ணாவிரதம் தொடங்கியிருந்தார். முதன் மந்திரியோ சகமந்திரிகளோ அந்த உண்ணாவிரதக்காரரைக் கண்டிக்க முன் வரவில்லை மாறாகக் கமலக்கண்ணனுக்குக் கிடைத்த அந்தரங்கத் தகவல்களின்படி முதன்மந்திரியும், மற்ற மந்திரிகளும் இவற்றையெல்லாம் ஆதரித்துச் சும்மா இருப்பதாகவே தோன்றியது. இந்நிலையில் அடுத்த அசெம்பிளி செஷன் தொடங்கவேண்டிய நாளும் நெருங்கியது. கமலக்கண்ணனுக்குத் தன் நிலைமை.இன்னும் தெளிவாகவில்லை, மனக்குழப்பமும் அவரை விட்டப்பாடில்லை. எதிரிகளின் கண்டனக்கணைகளும், எதிர்ப்புக் கூட்டங்களும், உண்ணா விரதங்களும் இன்னும் நின்றபாடில்லை. கடைசியாக அசெம்பிளி கூடுமுன்பே முதன் மந்திரியை வீட்டில் பார்த்து விடுவதென்ற முடிவிற்கு வந்தார் கமலக்கண்ணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நெஞ்சக்கனல்/14&oldid=976870" இருந்து மீள்விக்கப்பட்டது