உள்ளடக்கத்துக்குச் செல்

நெஞ்சக்கனல்/13

விக்கிமூலம் இலிருந்து

13

ரு வழியாக மத்திய மந்திரி ரமேஷ்சிங்கின் சென்னை விஜயத்தை உடனிருந்து வெற்றிகரமாகச் செய்து வழியனுப்பி வைத்தார் கமலக்கண்ணன். அவரை வழியனுப்பி வைத்துவிட்டு விமானநிலையத்திலிருந்து வீடுதிரும்பியதும் நிம்மதியாகவும், ஒய்வாகவும் இருந்தது. அந்த நேரம் பார்த்து நடிகை மாயாதேவியின் ஃபோன் வந்தது. அவள் என்ன பேச வந்தளோ அதைப் பேசவிடுவதற்கு முன்பே, என்ன இருந்தாலும் அன்னிக்கு பிலிம் சேம்பர்ஸ் பார்ட்டீலே சென்ட்ரல் மினிஸ்டருக்கு முன்னே நீ என்னை அப்பிடித் தர்மசங்கடமான நெலைமைக்கு ஆளாக்கியிருக்கப்பிடாது. பல சமயங்களிலே உனக்கு இங்கிதம்கிறதே என்னான்னு தெரியாமப் போயிடறது”–என்று ஃபோனில் அவளை இரைந்தார். அவள் ஏதோ பதில் சொன்னாள். மீண்டும் கோபம் தணியாமல் “எங்கே எப்பிடி அளவாப் பழகனுங்கறதே உங்களுக்கெல்லாம் தெரியறதேயில்லே” என்றார் அவர். “ஒண்னுமில்லாததை எல்லாம் பெரிசு படுத்தி வீணாச் சண்டைக்கு இழுக்காதிங்க”–என்று கனிவாகக் கொஞ்சும் குரவில் இழைந்து அவருடைய கோபத்தை ஆற்றினாள் அவள். அப்புறம் கோபதாபமின்றி உரை யாடல் பத்து நிமிஷங்கள் தொடர்ந்தது. அவளுக்குத் தெரிந்த யாரோ ஒருவருக்குப் புது பஸ் ரூட் ஒன்று வேணுமாம். அதற்கு உதவி செய்யவேண்டுமென்று கோரி அவரைக் கெஞ்சினாள் அவள்.

“இதையெல்லாம் இப்படி ஃபோன்ல பேசப்பிடாதுங்கிறதை முதல்லே நீ தெரிஞ்சுக்கணும்..” என்று மறுபடியும் சூடேறிய குரலில் இரையத் தொடங்கினார் கமலக்கண்ணன். அவள் பதிலுக்கு இதமாக ஏதோ கூறினாள். “பார்க்கலாம்”– என்று பட்டும் படாமலும் சொல்லி ஃபோனை வைத்தார் அவர். அவளைப்போல் தன்வாழ்வின் ஒரு பகுதியில் பழகிய பெண் இவ்வளவு உரிமை எடுத்துக் கொண்டு உதவி கோருவதைக் கேட்டு அவருக்குத் தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது. பயமும், தயக்கமும்,மாயாவை நினைத்து அல்ல. பதவியை நினைத்தே அந்த உணர்ச்சிகள் உண்டாயின. குற்றம் புரிகிறவர்கள் எங்கே எங்கே என்று நெற்றிக்கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கும் காந்திராமனைப் போன்றவர்கள் அவருடைய நினைவில் வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தனர். வரலாற்றின் படி குருட்சேத்திரப் போர் என்பது பல யுகங்களுக்குமுன் நடந்து முடிந்து விட்டாலும் தர்க்க்ரீதியாகவும், தத்துவரீதியாகவும் அது சராசரி இந்தியனின், மனிதனின் பொது வாழ்விலும், தனி வாழ்விலும் இன்றும் இந்த விநாடியும் நடைபெறக்கூடியதாகவே இருக்கிறது. எதிரே இருப்பவர்கள் நண்பர்கள், உறவினர்கள், வேண்டியவர்கள் என்றெல்லாம் பாராமல்,அவர்களுடைய அதர்மத்தை எதிர்த்துப் போரிடவில்லெடுக்கும். துணிவும் சொல் எடுக்கும் துணிவும் இன்றைய மனிதனிடமும் அபூர்வமாக இருக்கிறது. அரசியலில் பதவியிலும், அதிகாரங்களிலும் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் குருட்சேத்திரப் போர்க்களத்தில் கெளரவர்களைப் போல் இருக்கிறார்கள். அவர்களை எதிர்த்துப் பாசமும், உறவும் கருதாமல் அறப்போர். நடத்துவதற்கோ காந்திராமனைப் போன்றவர்கள் சமூகம் என்ற பாண்டவர்களாக நியாயம் என்ற கண்ணபிரானின் துணையோடு என்றும் எதிர் நிற்கிறார்கள். எனவே குருட்சேத்திரப் போர் என்பது ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையே உள்ள தர்ம அதர்மப் பிரச்சினைகள் உள்ளவரை நித்தியமாக இருக்கும் ஒரு தத்துவமே.

புகழ், பதவி, அதிகாரம், பணம், செல்வாக்கு எல்லாம் இருந்தாலும் கமலக்கண்ணன் தன்னுடைய மனோபயங்களைத் தவிர்க்கமுடியவில்லை. அரும்பாடுபட்டு அடைந்த தேர்தல் வெற்றி...அதன் காரணமாகக் கிடைத்த மந்திரி பதவி எல்லாவற்றையும் எண்ணி எண்ணி அஞ்சினார் அவர். விருப்பு வெறுப்பற்ற பிரதிபலனைக் கணக்கிடாமல் தொண்டு செய்யும் தொண்டன் ஒருவனைத் தவிரப் பொது வாழ்வில் யாரும் பயப்படாமல் இருக்கமுடியாது. அரசியலில் ஒருவன் தொண்டனாக இருக்கிறவரை தான் தன்னைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ அவனுக்குப் பயமில்லை. தலைவனாகவோ, பதவிக்குரியவனாகவோ வந்த பின்புதான் பயம் என்பதே ஆரம்பமாகிறது. அந்தஸ்தின் உயரத்திற்குப் போன பின்புதான் பயம் என்ற பள்ளம் கண்ணுக்குத் தெரிகிறது, பயமுறுத்துகிறது.

‘இங்கிருந்து மறுபடியும் கீழே இறங்கிவிடுவோமோ...’ என்றபயமும், இதற்கும் மேலே போக வேண்டுமே என்ற சுயநலமும்தான் இப்போது அவரைக் கவலைப்படச் செய்தன. ஆனால் இன்னும் ஒருவாரத்தில் பட்ஜெட் அறிவிக்கப் படவேண்டுமென்ற பெரிய கவலையில் இந்தச் சிறிய கவலைகளை மறக்க முடிந்தது. மாயாதேவிக்கு வேண்டியஆளுக்குப் புதிய பஸ்ரூட் பெர்மிட், ‘உண்மை ஊழியனின்’ பயமுறுத்தல், கடம்பவனேசுவரர் கோவில் புனருத்தாரண நிதி, தினக்குரலின் சர்க்குலேஷன் நாளுக்கு நாள் குறைவதாகப் பிரகாசம் கூறிய கசப்பான நிலைமை, ஆகிய எல்லாவற்றையும் மறந்து ‘பட்ஜெட்’டிற்கு உருக்கொடுப்பதில் அவர் ஈடுபட்டார். காரியதரிசிகளும், பொருளாதார நிபுணர்களும் உதவினர். சிலதினங்களில் ‘பட்ஜெட்’ தயாரிப்பு அவருடைய இலாகா அளவில் நிறைவேறி முடிந்துவிட்டது அதைவெளியிட வேண்டிய வேலை தான் மீதமிருந்தது.

நாளைக்கு விடிந்தால் அசெம்பிளியின் பட்ஜெட் செஷன் ஆரம்பமாகிறது. முதல் நாளிரவு ஆவலினாலும், பரபரப்பினாலும், பயத்தினாலும் கமலக்கண்ணனுக்குத் தூக்கமே இல்லை. விடிந்ததும் நீராடி உடை மாற்றிக் கொண்டு கோவிலுக்குப் போய் வந்தார். அசெம்பிளிக்குப் புறப்படுமுன் பங்களாவின் பின்கட்டுக்குப் போய்த் தாயைப் பார்த்து வணங்கி ஆசிபெற்றார்.

பட்ஜெட் செஷன் என்பதால் அன்று அசெம்பிளியில் சகல எம்.எல்.ஏக்களும் வந்திருந்தார்கள். ‘பட்ஜெட்’டைச், சமர்ப்பித்து அவர் உரை நிகழ்த்தினார். அவருடைய கட்சி எம்.எல்.ஏக்கள் நிர்ப்பந்தமாக அவரது பட்ஜெட்டை ஆதரிக்க வேண்டிய நிலையிலிருந்தார்கள். எதிர்க்கட்சிக் காரர்களோ நிர்ப்பந்தமாக அதை எதிர்க்க வேண்டிய நிலையிலிருந்தார்கள். கேள்விக்கணைகளும் கண்டனக் கணைகளும் கிளர்ந்தன. சாயங்கால செஷனுக்கு முன் மந்திரி கமலக்கண்ணன் அறையில் தற்செயலாக அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த அவருடைய கட்சி எம். எல்.ஏக்கள் சிலரே பட்ஜெட்டைப்பற்றி அதிருப்தி தெரிவித்துத் தனிப்பட்ட அபிப்பிராயம் கூறினார்கள். மாலை செஷனில் எதிர்க்கட்சித் தலைவர் ‘இது பொதுமக்களுக்குப் பயன்படாத பட்ஜெட்’–என்று காரசாரமாக வெளுத்துக் கட்டிவிட்டார். அதோடு சபை கலைந்தது மறுநாள் பட் ஜெட் விவாதங்கள் தொடரும் என்று சபாநாயகர் அறிவித்துவிட்டார். அவசரஅவசரமாக வீட்டுக்குவந்து சாயங் காலப்பத்திரிகைகளை எல்லாம் வரவழைத்துப் படித்தார் கமலக்கண்ணன். அவரே நடத்தும் ‘தினக்குரல்’ தவிர வேறு எல்லாப் பத்திரிகைகளும் பட்ஜெட் சுகமில்லை என்பது போல் தாக்கி எழுதியிருந்தன. தினக்குரலில் மட்டும் பட்ஜெட் சமர்ப்பிக்கும் முன் அமைச்சர் தன் அன்னையைக் கண்டு ஆசிபெற்றார்– ஆலயம் சென்று வழிபட்டார் – என் பது போன்ற செய்திகள் முன் பக்கத்தில் வந்திருந்ததோடு ‘ஏழைக்கும் செல்வருக்கும் ஏற்ற பட்ஜெட்’–என்ற தலைப்பில் தலையங்கமும் பாராட்டி எழுதப்பட்டிருந்தது. தன் பத்திரிகையிலேயே வெளிவந்த அந்த பாராட்டினால் மட்டும் அவர் திருப்தியடைந்துவிட முடியவில்லை. அதே சமயத்தில் ஒரு திருப்தியும் இருந்தது. எவ்வளவு நல்ல பட்ஜெட் ஆனாலும் தாக்கி எழுதுவதுதான் பத்திரிகைகளின் வழக்கம். எனவே பத்திரிகைகளை நினைத்துக் கவலைப்பட வேண்டியதில்லை என ஆறுதல் கொள்ளவும் முடிந்தது. இந்த அம்சத்தில் பத்திரிகைகளும், எதிர்க்கட்சிகளும் ஒரே மாதிரித்தான் என்று தோன்றியது. மறுநாள் பட்ஜெட் மீது நடைபெற இருக்கும் விவாதத்தில் என்னென்ன கேள்விகள் வருமோ என்ற தயக்கமிருந்தாலும், முறை மீறவிடாமல் சபாநாயகர் ஓரளவு துணை செய்வார் என்ற நம்பிக்கை இருந்தது.

அன்றிரவு மாயாதேவி மீண்டும் அவருக்கு ஃபோன் செய்தாள்.

“வரவர உங்க தயவே இல்லை! என்னோட குறவஞ்சி நாட்டிய நாடக அரங்கேற்றத்துக்கு அழைப்பு அனுப்பிச்சேன், நீங்க வரவே இல்லை! டெல்லி மந்திரி ரமேஷ்சிங் வந்திருந்தப்ப ரொம்ப பாராமுகமாக நடந்துக்கிட்டீங்க. ‘பஸ்ரூட்’ விஷயமாகச் சொன்னேன். இதுவரைக்கும் நீங்க ஒண்ணுமே கவனிக்கல்லே...? என்மேல் ஏன் இத்தினி கோவமோ தெரியலே. நான் என்னிக்கும் உங்களவள்தான். என்னை நீங்க மறந்துடப்பிடாது இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே பட்ஜெட்கிட்ஜெட் எல்லாம் தயாரிச்சுக் களைப்பா இருப்பீங்களே? இன்னிக்காவது வந்துபோங்களேன்...” என்று கெஞ்சினாள் அவள். அவருக்கும் போக வேண்டும் போல நைப்பாசையாகத் தான் இருந்தது. ஆனாலும் மந்திரியாகி விட்ட நிலைமையை எண்ணித் தயங்கினார், பயப்பட்டார்.

“முன்னேமாதிரி நெனைச்சா வந்துடறகாரியமா மாயா? மந்திரியானப்பறம் எங்கே நம்ம இஷ்டப்படி முடியுது...?”

“ஊருக்குத்தான் இன்னிக்கி மந்திரி நீங்க, எனக்கு என். னிக்குமே நீங்க ராஜாதானே...?”

“அதிலே சந்தேகம் வேறேயா?”

“அதுசரி!அந்த பஸ்ரூட் விஷயம்என்னாச்சு? ‘பார்ட்டி’ இங்கேயே ‘கன்னிமரா’விலே ஒரு மாசமா வந்து குடியிருக்கானே! அவனுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்!”

“சீக்கிரமே காரியம் ஆகும்னு சொல்லு!”

எதிர்ப்புறம் கொஞ்சலாக நாலு வார்த்தை சொல்லி ஃபோனிலேயே அவரைத் திருப்திப் படுத்திவிட்டு மாயா ரிஸிவரை வைத்தாள். அந்த பஸ்ருட் விஷயமாக அவளுக்கு உதவி செய்ய வேண்டுமென்று கமலக்கண்ணனும் மனத்தில் நினைத்துக் கொண்டார். பல காரணங்களால் மாயாதேவியைப் பகைத்துக்கொள்ளவும் அவர் தயாராக இல்லை. அவர் மனம் வைத்தால் காதும் காதும் வைத்தாற் போல் அந்த பஸ் ரூட்டை மாயாதேவியின் ‘பார்ட்டிக்கு’ வாங்கிக் கொடுக்கவும் முடியும். அவர் நிலையில் அவருக்கு அது பெரிய காரியமில்லைதான்.

தேவையான காரியங்களைச் செய்து கொடுத்து யாருடைய பகைமையும் தவிர்க்க அவர் தயாராயிருந்தார். அந்தக் காந்திராமனே ஒரு காரியமாக உதவி வேண்டி வந்தால் கூட மற்றவர்களுக்குச் செய்து கொடுப்பதைவிட அவசரமாகவும், அவசியமாகவும் அவனுக்கு அதைச் செய்து கொடுத்து அவனது பகைமை என்ற நெருப்பை அவித்துவிட அவர் தயார் தான்! ஆனால் அவன் தேடி வரவேண்டுமே?

கட்சிக் கட்டுப்பாட்டினாலும் வலிமையினாலும் பட்ஜெட் விவாதத்தின் போது அசெம்பிளியில் கமலக்கண்ணனின் பெயர் கெட்டுப் போகும் படி எதுவும் நடந்துவிட வில்லை. கேள்விகளும், விவாதங்களும், கண்டனங்களும் பலமாக இருந்தன. யார் எப்போது நிதி மந்திரியாக இருந்தாலும் அவை இருக்கும், ‘காந்திராமனின் சர்வோதயக் குரல்’ வாரப் பத்திரிகையில் கூடக் ‘கமலக்கண்ணனின் பட்ஜெட் தேசியக் கட்சியின் இலட்சியங்களுக்கு ஏற்றதாக இல்லை’ என்பதை விவரித்துத் தலையங்கம் எழுதப்பட்டிருந்ததைக் கமலக்கண்ணனே படித்துப் பார்த்தார். ஒரே கட்சியைச்சேர்ந்தவராக இருந்தும் காந்திராமன் அப்படிச் செய்திருப்பதைக் கண்டு கமலக்கண்ணன் பயந்தார். தன் மேல் காந்திராமனுக்குச் சொந்தமாக விரோதங்கள், வெறுப்புக்கள் இருந்தாலும் பட்ஜெட் விஷயத்தில் கட்சியை விட்டுக் கொடுத்தாற்போல் காந்திராமன் எழுத மாட்டார் என்று நினைத்திருந்தார் கமலக்கண்ணன். இப்போது அந்த நம்பிக்கையும் போய்விட்டது கட்சி அலுவலகத்திற்கு ஃபோன் செய்து தலைவரிடம் பேசினார். “இந்தக் காந்திராமன் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உடனே அவரைக் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் இல்லாவிட்டால் போகப் போகத் தொல்லைதான்"– என்று கண்டிப்பாகக் கூறினார் கட்சித் தலைவர் அதைச் செய்ய அஞ்சினார்.

“அது நடக்காத காரியம் சார்! அவர் நேஷனல் மூவ் மெண்டிலே பலமுறை ஜெயிலுக்குப் போனவர். அசல் தியாகி. அந்த நாளிலே மகாத்மாஜியோட தமிழ்நாடு பூரா சுற்றியிருக்கிறார். தியாகிகளுக்காக அரசாங்கம் நிலம் கொடுத்த போது கூட, ‘இப்படி நிலம் வாங்கிக்கறதுக்காக அன்னிக்கு நான் தியாகம் செய்யலே! தியாகத்துக்காகவே தான் தியாகம் செய்தேன். தயவுசெய்து அதற்குக் கூலி கொடுத்து என்னை அவமானப்படுத்தாதீங்க’ன்னு அதை மறுத்துவிட்டார். அப்படிப்பட்ட ஆளை நான் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வெளியேற்றினா எம்பேரு கட்சிப்பேரு” எல்லாமே கெட்டுப் போயுடும். இதுமட்டும் என்னாலே முடியாது. தயவுசெய்து நீங்க என்னை மன்னிக்கணும்...”

இதற்குமேல் கட்சித் தலைவரைக் கமலக்கண்ணனால் வற்புறுத்த முடியவில்லை. ‘காந்திராமன் காலைவாரி விடுகிறார்’– என்றதலைப்பில் தினக்குரலில் ஒரு பதில் தலையங் கம் மறுத்து எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. ‘தினக்குரல்’ கமலக்கண்ணனின் பத்திரிகை என்பதாலேயே அதில் வந்த மறுப்பு–பயனில்லாமல் போயிற்று. ஏராளமான கண்டனக் கடிதங்கள் தினக்குரலின் அலுவலகத்தில் குவிந்தன. ‘உம்மைப்போல் முந்தா நாள் காலையில் பதவிக்காகக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு எல்லாம் காந்திராமனைத் தாக்கி எழுதுவதற்கு யோக்கியதையே இல்லை’ என்று வந்த எல்லாக் கடிதங்களுமே கமலக்கண்ணனைத் திட்டின. சில ஊர்களிலிருந்து பத்திரிகையின் அன்றையப் பிரதியை எரித்த சாம்பல் கற்றைகள் கவரில் வந்தன. கமலக்கண்ணன் பயந்துவிட்டார். உடனே காந்திராமனை எதிர்த்து எதுவும் எழுதக்கூடாதென்று தினக்குரலுக்கு அவரே கட்டளையிட வேண்டியதாயிற்று. ஒருவேளை நினைத்துப் பார்த்தால் காந்திராமனைப்போல் நெஞ்சில்கனல் அவியாமல் இருக்கிற ஒருவரைக் கொன்று விட வேண்டும் போலிருந்தது அவருக்கு இன்னொரு வேளை– இன்னொரு விதமான மனநிலையோடு நினைத்துப் பார்த்தால்–நெஞ்சில் அப்படி ஒரு கனல் இல்லாத தன்னைத்தானே கொன்று கொண்டு விட வேண்டும் போலவும் இருந்தது.

அவரைப் போன்ற ஒரு பிரமுகர் நினைத்துப் பொறாமைப் படவேண்டிய எந்த வசதியும் காந்திராமனிடம் நிச்சயமாக இல்லை. ஆனால் அவரிடம் இல்லாத அந்த நெஞ்சின்கனல்– தார்மீகக் கனல் அவனிடம் இருந்தது. அதைக் கண்டு தான் அவர் பயந்தார். அதை நினைத்துத் தான் அவர் பொறாமைப்பட்டார்.

அவன் மட்டும் பணத்தினால் விலைக்கு வாங்கிவிட முடிந்த மனிதனாக இருந்தால் அவர் நாளைக்கே அவனை விலைக்கு வாங்கிவிடத் தயார். இந்த மாகாணத்தையே விலைக்கு வாங்க முடிந்த பணவசதி அவரிடம் உண்டு. ஆனால்...? ஆனால்? ‘நோ ஒன் கேன் பார்ச்சேஸ் ஹிம்...’

இடையே ஒருமுறை ஸ்டேட் நிதிமந்திரிகளின் மாநாட்டிற்காக டெல்லி போய் வந்தார் கமலக்கண்ணன். மத்திய நிதி மந்திரி மூன்று தினங்கள் மாநில நிதி மந்திரிகளைக்கூட்டி வைத்துப்பேசினார். டெல்லியிலிருந்தபோது தற்செயலாக ரமேஷ்சிங்ஜியைச் சந்திக்க நேர்ந்தது ரமேஷ்சிங், “ஐநெவர் ஃபர்கெட் யுவர் இட்லி சாம்பார் அண்ட் மாயாதேவிஸ் டான்ஸ் பெர் பாமன்ஸ்”– என்று வியந்தார் . கமலக்கண்ணன் புன்னகை புரிந்தார். பேச்சினிடையே “வெரி வெரி... ஸ்வீட் கேர்ல்” என்று மாயாவைப் பற்றி மறுமுறையும் குறிப்பிட்டார் ரமேஷ்சிங். டெல்லியின் தனிமையில் அவளுடைய பெயரைக் கேட்டதுமே கமலக்கண்ணன் ஆசை மயமாகிவிட்டார். அன்றிரவே டெல்லியிலிருந்து மாயாவுக்கு ஒரு டிரங்க்கால்’ போட்டு, “ரமேஷ்சிங் உன்னை மறக்காமல் விசாரித்தார். பலே ஆளாச்சே நீ...? உன் கியாதி டெல்லி வரை பரவியிருக்கு” என்று பேசினார்.

“ரொம்பக் குளிராயிருக்குமே டெல்லியிலே? என் ஞாபகம் வரதா உங்களுக்கு...என்ன வரலியா?”

“ஞாபகம் வராமல. இப்ப ஃபோன் பண்ணினேன்?”

“அது சரி! நான் சொன்ன பஸ்ரூட் விஷயம் மறந்தே போச்சா; என்ன? அந்தப் ‘பார்ட்டி’ இன்னும் கன்னிமராவிலேயே...?”

“ஆல் ரைட் மாயா! ஐ வில் ஃபோன் அப் டு தி கன்ஸ்ர்ன் மினிஸ்டர் டு நைட் இட்ஸெல்ஃப், மோஸ்ட் ப்ராப்பலி ஹி வில் கெட் தி ஆர்டர்ஸ் டு–மாரோ ஆர் டே ஆஃப்டர் டுமாரோ...ஓ கே..”

“தாங்க் யூ...தாங்க் யூ...நான் அவருக்கு இப்பவே சொல்லிடறேன்...”

“ஐயையோ! இப்பவே சொல்லிடாதே! கன்னிமரா வைக் காலி பண்ணிட்டு உடனே செகரெட்டேரியட்டுக்கு ஒடிடப் போறான்...நாளைக்குச் சொல்லு போதும்” என்று ஃபோனில் ஜோக் செய்தார் கமலக்கண்ணன். மாயாவோடு பேசி முடிந்தபின் அந்த இனிய சொப்பனங்களைத் தழுவிய படியே டில்லியின் குளிர்ந்த இரவை வெது வெதுப்பாக்கிக் கொண்டு உறங்கினார் கமலக்கண்ணன்.

மறுநாள் மாலை மாயாவிடமிருந்து அவருக்கு டிரங்க...கால் வந்தது.

“நான் சொன்ன பார்ட்டிக்கு ஆர்டர் கிடைத்து விட்டது. உங்களுக்குத்தான் நான் ரொம்ப ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன்...லோ கைண்ட் அஃப். யூ”

“இந்த மாதிரி விஷயமாக இப்படியெல்லாம் நீ எனக்கு ஃபோன் பண்ணப்பிடாது மாயா? காரியம் ஆனாச் சரி தான். ஃபேர்ன்லே நான் இங்கிருந்து உன்னைக் கூப்பிடறதைப் போல நீயும் அங்கிருந்து என்னைக் கூப்பிடலாமா?. காதும் காதும் வச்சாப்பிலே ஒரு காரியம் முடியறதைக் கெடுத்துடாதே” என்று அவளைக் கடிந்து கொண்டார் கமலக்கண்ணன். மறுநாள் விமானத்தில் அவர் சென்னை திரும்பிவிட்டார். அன்றும் மறுநாளும் கொஞ்சம் ஒய்வெடுத்துக் கொள்ள முடிந்தது. இரண்டு நாட்களும் தொடர்ந்தாற் போல் அரசாங்க விடுமுறையாதலால் செக்ரட்டேரியட்டிற்குப் போகவேண்டிய அவசியமில்லை.

மூன்றாம் நாள் அதிகாலையில் கட்சித் தலைவர் பரபரப்பாக அவரைத் தேடி வீட்டுக்கு வந்தார்.

“என்ன இருந்தாலும் நீங்க இப்படிச் செய்திருக்கப் படாது. பொது வாழ்க்கையிலே இதுமாதிரி தாட்சண்யங்களே கூடாது.”

“எதைச் சொல்றீங்க? என்ன சொல்றீங்க? நீங்க சொல்றது எனக்கு ஒண்னுமே புரியலியே!”

“அந்தப் புலிப்பட்டி மணியத்துக்கு பஸ்ரூட் தரச் சொல்லி டிரான்ஸ்போர்ட் மினிஸ்டருக்கு ரெகமண்ட். பண்ணினிங்களே! அதைத்தான் சொல்றேன்...”

‘புலிப்பட்டியாவது, மண்ணியாவது, எனக்கு ஒரு எழவுமே தெரியாது; மாயாதான் சொன்னாள்...’ என்று பதில் சொல்ல நினைத்தவர் சட்டென்று நாக்கைக் கடித்து அதை அடக்கிக்கொண்டு,

“ஆமாம்! அதுலே என்ன தப்பு” என்று கேட்டார்.

“என்ன தப்பா? அந்தப் புலிப்பட்டி மணியம் பழைய கள்ளுக்கடை ஆள். கள்ளுக்கடை மறியலின் போது நாலு தேசியவாதிகளை அவன் கடை முன்னாடி அவனே ஆள் விட்டுக் கொலை பண்ணின கிராதகன். போதாதகுறைக்கு அந்த நாளைய ஜஸ்டிஸ் பார்ட்டி ஆள் வேறு. நீங்களும் முன்னாள் ஜஸ்டிஸ் பார்ட்டி ஆள். இவனும் பழைய ஜஸ்டிஸ் பார்ட்டிக்காரன். அதனாலே இதை வெளியிலே எப்பிடி எப்பிடியோ காது மூக்கு வச்சிப் பேசறாங்க. ‘அந்தரூட்டுக்கு அநுமதி கேட்டு எத்தனையோ நல்ல நல்ல அப்ளிகேஷன்லாம் இருந்தது சார்! ஆனா எனக்கு ஸீனியரா இருக்கிற ஒரு மினிஸ்டர் சிபாரிசு செய்யறப்பு நான் எப்படி மறுக்கிறதுன்னு அவரு சொன்ன ஆளுக்கே அனுமதி கொடுத்துட்டேன்’ என்று டிரான்ஸ்போர்ட் மின்னிஸ்டர் சொல்றாரு. சீஃப் மினிஸ்டருக்கும் இது விஷயம் நீங்க தலையிட்டுச் செய்ததின்னு தெரிஞ்சிருக்கு. அவரு எங்கிட்ட வருத்தப்படறாரு. அந்தப் புலிப்பட்டி மணியம் யாரோ சினிமாக்காரி மாயாவாமே; அவளுக்கு வேண்டியவனாம். அவ உங்களுக்கும் வேண்டியவள்னு கூடப் பேசிக்கிறாங்க...”

“ஷட் அப்! நான்சென்ஸ்...எனக்கு யாரும் வேண்டிய வங்கள்ல்லே! வேண்டியவங்களை வச்சுக்காலந்தள்ளனும்கிறதுக்கு நான் ஒண்னும் பஞ்சைப்பயல் இல்லே...” என்று கோபமாக அவரிடம் இரைந்தார் கமலக்கண்ணன்.

“நீங்க பெரிய கோடீஸ்வரர்தான்! ஆனாலும் பதவியிலே இருக்கிறப்ப பேர் கெட்டுடாமப் பார்த்துக்கனுமில்லியா?” என்று நறுவிசாகக் கூறிவிட்டு விடைபெற்றார் கட்சித்தலைவர். ஆனால் வந்தசுருக்கில் அவர் சட்டென்று பேசிக்கத்தரித்துக் கொண்டு போன விதம் கமலக்கண்ணனுக்கு என்னவோ போலிருந்தது. ஆள் யார், என்ன, என்பதைப் போன்ற விவரங்களைக் கேட்காமல் மாயா சொன்னதை மட்டுமே நம்பி பஸ்ரூட் விஷயமாகத் தான் தலையிட்டுச் சிபாரிசு செய்தது. பெரிய தவறென்றே அவருக்கும் இப்போது தோன்றியது. கட்சித் தலைவரே நேரில் வந்து கோபித்துக் கொண்டு பேசிவிட்டுப் போனதிலிருந்து இந்த பஸ்ருட் விஷயம் பெரிதாக உருவெடுக்கப்போகிறது என்ற பயம் இப்போதே கமலக்கண்ணனுக்கு வந்துவிட்டது.

‘அதுவும் இதே ருட்டுக்கு அனுமதி வேண்டிக் கட்சி நலனில் அக்கறையுள்ள நியாயமான தேசியவாதிகளிட மிருந்து மனுவும் வந்திருக்கிறபோது. வேறொருவருக்கு அது கொடுக்கப்பட்டதைப் பார்த்து அவர்களே வயிறெரிந்து இதைப் பெரிதாகக் கிளப்புவார்கள். அவ்வளவேன்? மாயா சிபாரிசு செய்த பார்ட்டி இப்படிப்பட்டவர்–பழைய தேச விரோதப் பேர்வழி என்றெல்லாம் தெரிந்திருந்தால் நானே இதற்குத் துணிந்திருக்க மாட்டேன்! ஹீம்...எப்படியோ இந்த மாதிரி ஆகிவிட்டது! இதை என்னுடைய போதாத வேளை என்று தான் சொல்லவேண்டும்’–என்று நினைக்கலானார் அவர். விஷயம் அதோடு போய்விடவில்லை. மறு– நாள் செகரட்டேரியட் போனபோது முதன் மந்திரியின் அறையிலிருந்து ஃபோனில் கமலக்கண்ணனுக்கு ஒர் அழைப்பு வந்தது. ‘ஒருநிமிஷம் தயவு செய்து இப்படி வந்து விட்டுப் போறீங்களா மிஸ்டர் கமலக்கண்ணன்...உங்களிடம் நேரில் கொஞ்சம் பேசணும்’–என்று முதன் மந்திரியே பேசிக் கூப்பிட்டார்.வயது மூத்தவரும் நிர்வாகத்தில் சூரரும், அநுபவசாலியுமான அந்த முதன் மந்திரியிடம் கமலக்கண்ணனுக்கு பயமே இருந்தது. அவர் யாரையும் இப்படிக் கூப்பிட்டுப் பேசுவதே அபூர்வம். சதா காலமும் ஃபைல் கட்டுக்களில் மூழ்கியிருப்பவர் அவர். அவரைத் தேடிச் செல்லும் போது பஸ்ரூட் விஷயமாகத் தான். அவர் தன்னைக் கூப்பிடுகிறார் என்பது போல் உணர்ந்ததும், ‘கடவுளே! தயவுசெய்து இது வேறு விஷயமாக இருக்கட்டுமே’–என்று பிரார்த்தித்துக் கொண்டு தான் போனார் கமலக்கண்ணன்.

முதன்மந்திரி அவரை முகமலர்ச்சியோடு வரவேற்றார். அலுவலக அறைக்கும் அப்பால் உள்ளே தள்ளி இருந்த தம்முடைய ‘லஞ்ச்’ரூமிற்கு அழைத்துச் சென்று மிகவும் அந்தரங்கமான முறையில் இரகசியமாகவே பேச்சைத் தொடங்கினார். ஆனால் பேச்சு மட்டும் பஸ்ரூட் விஷயமாகவே இருந்தது:–

“என்ன மிஸ்டர் கமலக்கண்ணன், இதில் இப்படி நீங்கள் போய் மாட்டிக்கொள்ளலாமா? எத்தனையோ தொழிற்சாலைகளையும், கம்பெனிகளையும் நன்றாக நிர்வாகம் செய்திருக்கிறீர்கள். இதில் போய் அவசரப் பட்டுத் தப்பான ஆளுக்குச் சிபாரிசு செய்துவிட்டீர்களே? டிரான்ஸ்போர்ட் மினிஸ்டர் இளைஞர். பதவிக்குப் புதியவர். உங்களைப் போலக் காபினட்லே இரண்டாவது இடத்திலே இருக்கிற மந்திரி சொன்னதும் யாரையும் கேட்காமல் நீங்க சொன்னவருக்கே ஆர்டர்ஸ் கொடுத்து அனுப்பிவிட்டார். இப்ப என்னடான்னா ஏகப்பட்ட கலவரமாயிருக்கு. பார்ட்டி ஆபீஸ்லே ஒரே கொந்தளிப்பு. ஒரு தகுதியுள்ள நல்ல ஆளுக்கு இதைக் கொடுத்திருந்தா பார்ட்டி ஆளுங்களைக்கூட நீங்க இதிலெல்லாம் தலையிடாதீங்கன்னு: நானே கண்டிச்சு அனுப்பிடுவேன். ரூட்டுக்கு அநுமதி வாங்கிட்டுப் போயிருக்கிறவனோ முதல் நம்பர் அயோக்கியன். கொலைகாரன்...இதே ரூட்டுக்கு அப்ளை பண்ணின பத்து நல்லவனும் இப்ப சண்டைக்காரனா மாறி–ஆட்களைக் கிளப்பி விடறான்கள். நாளையே பத்திரிகைக்காரர். களைத் தேடி இதைப்பற்றி எழுதச் சொல்லுவார்கள். எப்படி சமாளிப்பதென்றுதான் தெரியவில்லை...”

“தவறுதான் சார்! ஆனால் என்னை அறியாமல் நடந்துவிட்டது.”

“எப்படி அது...சாத்தியம்? உங்களை அறியாம. எப்பிடி நடக்கும்?”

கட்சித் தலைவரிடம் மறைத்தது போல முதலமைச்சரிடம் உண்மையை மறைக்க விரும்பாமல், “எனக்குத்தெரிஞ்ச ஒருத்தர் இந்த ஆளுக்காகச் சிபாரிசு பண்ணினார். நான் பண்ணின ஒரே தப்பு இந்த ஆள் யாருன்னு கேட்காமலே டெல்லியிலிருந்து டிரான்ஸ்போர்ட் மினிஸ்ட்டருக்கு ஃபோன் பண்ணிவிட்டேன்...” என்று ஒருவிதமாகக் கூறி விட்டார் கமலக்கண்ணன். இதை கேட்டுச் சில விநாடிகள் ஏதோ யோசனையிலாழ்ந்தார் முதலமைச்சர். பின்பு பெரு மூச்சு விட்டுவிட்டு, “இதெல்லாம் வெளியிலே இருக்கிறவனுக்குத் தெரியாது. அவன் பாட்டுக்கு மந்திரி கமலக் கண்ணனும் முன்னாள் ஜஸ்டிஸ் ஆள்–ரூட் வாங்கியிருக் கிறவனும் பழைய ஜஸ்டிஸ் ஆள்–’ என்று தான் பாமர நிலையில் பேசுவான். சிபாரிசு நீங்கள் செய்ததால் தான் இது கிடைத்தது என்பது எப்படியோ எம்.என்.சி.சி. ஊழியர்கள் அனைவருக்கும் பார்ட்டி ஆபீஸுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கிறதே?”–என்று குறைபட்டுக் கொண்டார் முதன் மந்திரி. அந்த நிலையில் கமலக்கண்ணனால் அவருக்குத் திருப்தியளிக்கிற ஒரு பதிலும் கூற முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=நெஞ்சக்கனல்/13&oldid=976868" இலிருந்து மீள்விக்கப்பட்டது