உள்ளடக்கத்துக்குச் செல்

நெஞ்சக்கனல்/12

விக்கிமூலம் இலிருந்து

12

டைசியில் தன்மேல் கோபப்பட்டுச்சீறி விழுந்தாலும்– விழட்டும் என்று–மேஜைமேல் தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருந்த மந்திரி கமலக்கண்ணனை எழுப்பி– வெளியே ஐ.சி.எஸ். அதிகாரி வந்து காத்திருப்பதைக் கூறினார் காரியதரிசி. அவரை வரச் சொல்லுமாறு கூறிவிட்டுக் கமலக்கண்ணன் அவசர அவசரமாக முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு ஐ.சி.எஸ். அதிகாரியை வரவேற்பதற்குத் தயாரானார். மனநிலை வேறு தெளிவாக இல்லை. ‘உண்மை ஊழியனின்’ பயமுறுத்தல், அதை வைத்துக் கலைச்செழியன் தன்னை பிளாக் மெயில் செய்து பணம் பறித்தது, எல்லாம் சேர்ந்து மனத்தைக் குழப்பியிருந்தன.

அதிகாரியிடம் முறையைக் கழிப்பது போல் ஒரு மன்னிப்புக்கேட்டு விட்டு வரவேற்றுப் பேசினார். அதிகாரியும் தம்முடைய மன எரிச்சலைக் காட்டிக் கொள்ளாமல், .ஏதோ பேச வேண்டியதைப் பேசிவிட்டுப் போய்ச் சேர்ந்தார்.

சிறிதுநேரத்திற்கு யாரையும் உள்ளே அனுப்பவேண்டாமென்று காரியதரிசியிடம் கூறிவிட்டு மீண்டும் சிந்தனையிலாழ்ந்தார் கமலக்கண்ணன். மந்திரியாக வந்ததிலிருந்து தமது தொழில் நிறுவனங்களின் நிலை என்ன என்பதை அன்றன்று அறிய முடியாமலிருப்பதை எண்ணியும் அவர் கவலைப்பட்டார். தம்முடைய அன்றாட வாழ்க்கையின் உல்லாசங்கள் பலவற்றை இந்தப் பதவி காரணமாகத்தாம் இழக்க நேர்ந்திருப்பதையும் அவர் சிந்தித்தார். நண்பர்கள் சந்திப்பு, கிளப்பில் சீட்டாட்டம், ரோடரி மீட்டிங், டென்னிஸ் விளையாட்டு, வீக் எண்ட் பயணம், எல்லாம் போயிருப்பதையும் உணர முடிந்தது. ஆனாலும் தங்களுக்காகத் தாங்களே நியமித்துக்கொண்ட தெய்வங்களை வழி படுவது போல் மக்கள் மந்திரிகளை வழிபடுவதினால் கிடைக்கிற பதவியின் சுகம் நின்னவு வந்து ஆறுதலளித்தது. ஜனநாயகத்தில் வாக்களிக்கின்றவன் சுதந்திரத்தை ஒரே ஒரு நாளிலும், வாக்களிக்கப்பட்டவன் பதவிக்காலம் முடிகிற வரை பல நாட்களும் அடைய முடியும் என்பது ஞாபகம் வந்தது. அந்த நினைவு இதமாக இருந்தது.

டெலிபோன் மணி அடித்தது. கமலக்கண்ணன் தமது சிந்தனை கலைந்து டெலிபோனை எடுத்தார். முதலமைச்சர் அவருடைய அறையிலிருந்து டெலிபோனில் பேசினார். “டெல்லி மந்திரி ஒருத்தர் வருகிறார். நம்ம அரசாங்க சார்பிலே நீங்கதான் ஏர்ப்போர்ட்டிலே போய் ரெஸீவ் பண்ணனும்”...

“ஒ எஸ்... அப்படியே செய்யறேன் சார் ...”

“அது மட்டுமில்லே! ‘பிளானிங்’ அது – இது எல்லாம் வர்ரவரோட கையிலேதான் இருக்கு. ராஜ்பவனுக்கோ சென்ட்ரல் கெஸ்ட் ஹவுஸ்குக்கோ எங்கே போனாலும், அவர் கூடவே போய்க் க்னிவாகப் பேசி நம்ம ஸ்டேடுக்கு ஆகவேண்டிய நல்ல காரியங்களை மெல்ல அவர் மனசிலே பதிய வச்சுடனும்...சிக்கிரம் புறப்படுங்க...இன்னிக்கு டில்லி பிளேன் லேட்...ஆனாலும் அரைமணி முன்னாலே ஏர்ப்போர்ட் போயிடறது நல்லது.”

“நான் பார்த்துக் கவனிச்சுக்கிறேன் சார்!”

“அப்படியே நாளை–நாளன்னிக்கு உங்க பிஸினஸ் பீப்பிள்ட்ட எல்லாம் சொல்லி சேம்பர் ஆஃப் காமர்ஸ், எண்டர் பிரைஸர்ஸ் அசோசியேஷன்ஸ், எல்லாம் ஒரொரு மீட்டிங் போட்டு அந்த மந்திரியைப் பேசவச்சாக் கூட நல்லது... எல்லாம் கவனிச்சுச் செய்யுங்க.. நான்... இதோ ... இப்பவே முதல் டிரெயின்ல மதுரை புறப்பட்டுக்கிட்டிருக்கேன்...”

“நீங்க போயிட்டு வாங்க சார்! நான் கவனிச்சுக்கிறேன்...” என்றார் கமலக்கண்ணன்.

–உடனே காரியதரிசியைக் கூப்பிட்டு, “நீ அவசரமாப் பூக்கடைக்குப் போயி ஜீப்பிலே மாலை வாங்கிட்டு ஏர்ட் போர்ட்டுக்கு வா!... நான் இப்பவே புறப்படறேன்.. நேர மாக்கிடாதே ... பிளேன் வந்துடும் ... ஜல்தி’ என்று விரட்டி விட்டுப் புறப்பட்டார் கமலக்கண்ணன், இடைவழியில் வீட்டில் முகம் கழுவி உடைமாற்றிக்கொள்ள ஐந்து நிமிடங்கள் ஆயின. விமான நிலையத்திற்குக் கால்மணி முன்னாலேயே போய்விட்டார் அவர்.

ஏற்கெனவே அங்கே வழக்கமாக இம்மாதிரி வரவேற் புக்களுக்கு வரும் நகர் மேயர்,ஷெரீப் எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத் தலைமைக் காரியதரிசி, போலீஸ் அதிகாரிகள் இரண்டு மூன்று எம். எல். ஏக்கள் எல்லோரும் வந்திருந்தனர். பத்திரிகை நிருபர்கள் கூட்டம் ஒரு பக்கம் அலட்சியமாகவும், உல்லாசமாகப் பேசிச் சிரித்தபடியும் காத்திருந் தது. ஏர்போர்ட் லவுன்ச்சில் இருந்த பிரமுகர்கள் கமலக் கண்ணனைக் கண்டதும் உற்சாகமாக வரவேற்றனர். கமலக்கண்ணனும் அவர்களிடையே சென்று அமர்ந்தார்.

“சீஃப் மினிஸ்டர் முதல் டிரெயின்லே மதுரை போறார். நீங்க போய் ரெஸிவ் பண்ணுங்கன்னார். அதான் இப்படி அவசரமா வரவேண்டியதாச்சு. வர வர டெல்லி பிளேன்... மணிக்கணக்கா நாட்கணக்கா லேட்டாகுது போங்க...” என்று சம்பிரதாயமாகவும், பெரிய வியாபாரிக்குரிய அவசரத்துடனும், அலட்சியத்துடனும் பேச்சை ஆரம்பித்தார் கமலக்கண்ணன்.

“உலகத்திலே ஒவ்வொரு நாட்டுக்காரன் எதெதுலேயோ வளர்ச்சியடையறான்னா நாம லேட்டாறதுலேயாவது வளர்ச்சியடையப்பிடாதா; என்ன?”–என்று அசெம்பிளிக்கு வெளியேவந்தும் மறக்காமல் எதிர்க்கட்சிக்கேயுரிய குத்தல் மனப்பான்மையோடு கமலக்கண்ணனிடம் ஜோக் செய்தார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர்.

–டில்லி விமானம் லாண்ட் ஆகி ரன்–வேயில்–சீறிப் பாய்ந்து வந்து நின்றது. கமலக்கண்ணன் மலையோடு விமானத்தை நெருங்கினார். பிர்முகர்களும் பின்தொடர்ந்தனர். மாலையிட்டு அறிமுகங்கள் முடிந்தபின், விமான நிலைய வி.ஐ.பி. ல்வுன்ச்சில் பத்திரிகை நிருபர்கள் டில்லி மந்திரியை வளைத்துக் கொண்டனர். அவர்களுடைய பிரஸ் கான்பரன்ஸ் முடிந்ததும்–தம்காரைப் பின்தொடருமாறு கூறிவிட்டு டில்லிமந்திரியுடன் ராஜ்பவன் சென்றார் கமலக்கண்ணன்.

சேதுசமுத்திரத் திட்டம், உருக்காலைத்திட்டம் பற்றி எல்லாம் டில்லி மந்திரி ஏதாவது பேசினால் பதிலுக்குக் கூறுவதற்குப் புள்ளிவிவரங்களை எல்லாம் அன்று சிரமப்பட்டுச் சிந்தித்து வைத்துக்கொண்டிருந்தார் கமலக்கண்ணன். எந்த விநாடியிலும் டில்லி மந்திரி சர்தார் ரமேஷ்சிங்ஜி அவற்றைப்பற்றித் தன்னிடம் பேசத்தொடங்கலாம் என்ற பயம் காரில் போகும்போதே கமலக்கண்ணன் மனத்தில் இருந்தது. ஆனால் டில்லி மந்திரி ரமேஷ்சிங் ஒரே ஒரு தடவை தான் கமலக்கண்ணனுடன் ராஜ்பவன் போவதற்குள் பேசினார்.

“மிஸ்டர் கமலக்கண்ணன்! பிஃபோர் லீவிங் மெட்ராஸ் ஐ வுட்லைக் டூ ஸீ அட்லீஸ்ட் ஒன் பரத்நாட்யம் ஃபெர்பா மன்ஸ் ஹியர்... கேன் யூ அரேன்ஜ் ஃபார் மீ...” என்று மத்திய மந்திரி பரத நாட்டியம் பார்க்க ஆசை தெரிவித்த போது கமலக்கண்ணன் உருக்காலை, துறைமுகம் பற்றிய புள்ளி விவரங்களை அவசர அவசரமாக மறந்து–பரத நாட்டிய நாரீமணிகளை ஏற்பாடு செய்வதுபற்றி நினைக்கத் தொடங்கினார்.

“யெஸ்! ஐ கேன் அரேன்ஜ்...” –என்று உடனே இணங்கியது மன்றி உருக்காலை, சேது சமுத்திரம்– போன்ற சிரம சாத்தியமான சிந்தனைகளை மறக்க உதவி செய்ததற்காக மத்திய மந்திரிக்கு மனப்பூர்வமாக உள்ளே நன்றியும் செலுத்தினார் கமலக்கண்ணன்.

–ராஜ்பவனில் டெல்லி மந்திரி கவர்னரோடு டீ அருந்தி விட்டுப் பேசிக்கொண்டிருக்கும் போதே – கமலக்கண்ணன் டெலிபோனில் ஃபிலிம் எண்டர் பிரைஸர்ஸ் அசோசியேஷன் காரியதரிசியைக் கூப்பிட்டு, “டெல்லி மந்திரி ரமேஷ் சிங் இன்னும் நாலு நாள் இங்கே தங்கறார். அவர் இங்கே இருக்கறப்ப ஒரு பரதநாட்டியம் பார்க்கனுமாம். ஒரு ஈவினிங் உங்க அசோசியேஷன் சார்பிலே பார்ட்டி ஒண்ணும் கொடுத்து நாட்டியத்துக்கும் ஏற்பாடு பண்ணினா நல்லது. செய்வீங்களா?”–என்றார் கமலக்கண்ணன்.

“கட்டாயம் செய்யறோம் சார்! இப்படி ஒரு மகத்தான சந்தர்ப்பத்தை எங்களுக்கு அளிச்சதுக்காக நாங்க உங்களுக்கு ரொம்பக் கடமைப்பட்டிருக்கோம் சார்!”–என்று ஃபோனில் எதிர்ப்புறமிருந்து வெல்லப் பாகாய் உருகினார் பிலிம் வர்த்தக சபைக் காரியதரிசி.

“அப்ப நாளன்னிக்குச் சாயங்காலம் வச்சுக்கலாம். ஸிக்ஸ் தர்ட்டி டு ஸெவன் தர்ட்டி. என்கேஜ்மெண்ட் பிக்ஸ்ட்...”என்று முடித்தார் உள்ளூர் மந்திரி கமலக்கண்ணன். எதிர்ப்புறம் பிலிம் வர்த்தக சபைக் காரியதரிசி ஆயிரம் நன்றிகளை அவசர அவசரமாகத் தெரிவித்து விட்டு ஃபோனை வைத்தார்.

டெல்லி மந்திரி ராஜ்பவனிலிருந்து கெஸ்ட் ஹவுஸுக் குக் காரில் வரும்போது உடன் வந்த கமலக்கண்ணன் ‘நாட்டியத்துக்கு ஏற்பாடு செய்தாயிற்று’ என்பதை அவரிடம் தெரிவித்தார். அவரும் அதற்காக மகிழ்ந்து உடனே கமலக்கண்ணனுக்கு நன்றி தெரிவித்தார்.

–இரவு டின்னருக்கும் புகழ்பெற்ற தென்னிந்திய இட்லி சாம்பார் இரண்டும் சூடாக இருந்தால் நல்லது என்று ரமேஷ்சிங் அபிப்பிராயப்படவே. நகரத்திலேயே இட்லி தயாரிப்பதில் பெயர் பெற்ற ஹோட்டல் ஒன்றிற்குத் தகவல் சொல்லி ஜீப்பில் ஆளனுப்பினார் கமலக்கண்ணன், இட்லி சாம்பார் வந்தது. டெல்லி மந்திரி முன்றே மூன்று இட்லிகளை ஆறு பிளேட் சாம்பாரில் கரைத்துக் குடித்தார். சாம்பாரை மட்டுமே அவர் அதிகம் சுவைப்பதாகத் தெரிந்தது. சாம்பாருக்குத் தொட்டுக்கொள்ளவே இட்லியை அவர் பயன்படுத்தினார். கமலக்கண்ணனுக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ‘இந்த டில்லி மந்திரியை ஒருநாள் பகல் தன் வீட்டில் லஞ்சிற்கு அழைத்து ...உள்ளுர் இண்டஸ்டிரியலிஸ்ட்டுகளையும், பாங்கர்களையும், மந்திரிகளையும் கூப்பிட்டு ஒரு தடபுடல் செய்தால் என்ன?...’ என்று எண்ணினார். உடனே ரமேஷ்சிங்கிடம் தன் ஆசையை மெல்ல வெளியிட்டார் கமலக்கண்ணன்.

“ஒ எஸ் வித் பிளஷர்”–என்று புன்னகையோடு இணங்கினார் டெல்லி மந்திரி. உடனே மனைவிக்கு ஃபோன் செய்து சமையல் ஏற்பாடுகள்–மெனு பற்றி விவரித்தார் காரியதரிசிக்கு...அழைப்பு அனுப்பவேண்டிய ஆட்கள் பற்றி உத்தரவுகள் பிறப்பித்தார் நண்பர்களுக்கும் அட்டகாசமாக ஃபோன் செய்தார்.

“யாரு–குமரகிரி டெக்ஸ்டைல்ஸ் நாயுடுகாருவா? நீங்க இல்லாம நம்ம வீட்டிலே எந்த விருந்தும் நடக்காது. நடக்கவும் கூடாது. நாளை மறுநாள்– சென்ட்ரல் மினிஸ்டருக்கு ஒரு லன்ச் அரேன்ஜ் பண்ணியிருக்கேன்! பெரிசா ஒண்ணுமில்லே. எல்லா லீடிங் இன்டஸ்டிரியலிஸ்டா மட்டுமே கூப்பிட்டிருக்கேன். மந்திரியையும் பார்த்துப் பேசினாப்பிலே இருக்கும் கட்டாயம் வந்திடுங்க” என்கிற பாணியில், அழைப்புக்களை அடுத்தடுத்து விடுத்தார். அரைமணிநேரத்திற்குள் நகரின் முக்கியஸ்தர்களுக்கும் பிரமுகர்களுக்கும் ஃபோன் செய்து தெரிவித்துவிட்டார் கமலக்கண்ணன்.

–மறுநாள் காலையில் வெளியான ஆங்கில தமிழ் தினசரிகளில் எல்லாம் முதல் நாள் மாலை கமலக்கண்ணன் விமானநிலையத்தில் ரமேஷ்சிங்குக்கு மாலை போட்டு வர வேற்ற புகைப்படம் வெளியாகியிருந்தது. வீட்டிலிருந்தே கெஸ்ட் ஹவுஸ் ஆட்களுக்கு ஃபோன் செய்து ரமேஷ்சிங் எழுந்திருந்ததும் பத்திரிகைகளை அவருக்கு அனுப்பு மாறும்... ‘தினக்குரல்’ தமிழ் பத்திரிகையைக் காட்டி, “இதை எங்கள் ஸ்டேட் மந்திரி கமலக்கண்ணன் ஆதரவுடன் நடத்துகிறார்கள்”–என்பதையும் தெரிவிக்குமாறும் கூறினார் கமலக்கண்ணன்.

–அன்றுமாலை...அதாவது டெல்லி மந்திரி வந்த இரண்டாவது நாள் மாலை...கட்சி அலுவலகத்திலே அவருக்கு ஒரு கூட்டம் இருந்தது. அத்தக் கூட்டத்திற்குப் போனால் மறுபடி காந்திராமனைச் சந்திக்க வேண்டி நேருமோ என்று கமலக்கண்ணன் தயங்கினார். ஆனால் போகாமலும் இருக்கமுடியாதென்று தோன்றியது. வந்ததிலிருந்து. கூடவே இருந்துவிட்டுக் கட்சிக்கூட்டத்துக்கு மட்டும் போக வில்லை என்றால் அதை யாராவது கவனித்து வம்பு பேசுவார்கள் என்றாலும் காத்திராமனின் முகம், எருக்கம் பூ மாலை, எல்லாம் நினைவு வந்து அந்த இடத்திற்குப் போவதற்கே பயத்தையும், தயக்கத்தையும் உண்டாக்கின. மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு வீட்டிலிருந்து தனியே. போகாமல் கெஸ்ட்ஹவுஸிலிருந்து மந்திரியுடனேயே புறப்பட்டு விட்டார். கட்சி அலுவலகத்தில் கூட்டம் அமைதியாகவே நடந்தது. ரமேஷ்சிங்கிற்கு நன்றாக ஆங்கிலம் தெரிந் திருந்தும் பிடிவாதமாக ‘இந்தியில்தான் பேசுவேன்’ என்று அங்கே இந்தியில் பேசினார். அந்தப் பேச்சை அவர் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் பலருக்குப் புரிந்திருக்கும். அங்கு, வந்திருந்தவர்களில் பெரும்பாலோருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும். மொத்தத்தில் இரண்டொருவருக்கே இந்தி தெரியும். எனவே பேச்சும் கூட்டத்தில் அதற்கிருந்த வரவேற்பும் மந்தமாகவே இருந்தன. டில்லி மந்திரியின் இந்திப் பேச்சையாரோ ஒரு நரைத்தலை மனிதர் தமிழிலே மொழிபெயர்த்துக் கூறினார். கூட்டம் மந்தமாக நடந்து முடிந்தது. முன்னால் கமலக்கண்ணன் நினைத்துப் பயந்தபடி காந்திராமன் அந்தக்கூட்டத்திற்கே வரவில்லை.

கூட்டம் முடிந்ததும் ஆர்வமும் உற்சாகமும் நிறைந்த இளந்தலை முறைப் பத்திரிகை நிருபர் ஒருவர் டில்லி மந்திரியை வழிமறித்துப் பேசத் தொடங்கிவிட்டார்.

“நீங்கள் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் இங்கிருந்தவர்களில் பலருக்குப் புரிந்திருக்கும்.”

“ஆங்கிலம் விதேசி மொழி! அது இந்த நாட்டில் தொண்ணூற்றெட்டு சதவிகிதம் மக்களுக்குத் தெரியாது...”

“அப்படியல்ல! பல ஆண்டுகளாக இந்த நாட்டுமொழிகளில் ஒன்றாக நம்மோடு இணைந்திருக்கிறது ஆங்கிலம், உலக ஒற்றுமைக்கே வழிவகுக்கிறது ஆங்கிலம். மற்ற மொழிகளோ ஒரு மாநில ஒற்றுமைக்கே துணைசெய்வதில்லை. உதாரணமாக உங்களையே எடுத்துக்கொள்ளுவோம். தனிப்பட்ட முறையிலும், சொந்தமாகவும் உங்களிடம் யார் பேசினாலும் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுகிறீர்கள். ஆனால் கூட்டங்களில் மட்டும்.வறட்டுப் பிடிவாதத்தோடு இந்தியில் பேசுகிறீர்கள்...”

“யூ ஆர் டாக்கிங் டூ மச் கீப் யுவர் லிமிட்ஸ்”... என்று உணர்ச்சிவசப்பட்டு நிருபரை கோபித்துக்கொண்டார் ரமேஷ்சிங். என்ன காரணத்தாலோ அந்த இளம் நிருபர் டெல்லி மந்திரியை மடக்கியதை விரும்பி உள்ளுர மகிழ்ந்தார் கமலக்கண்ணன். டெல்லி மந்திரியின் மொழி வெறி அவருக்கும் பிடிக்க வில்லை. இந்தியாவின் ஒற்றுமைக்கு வட இந்தியர்கள் தங்கள் மொழி வெறியாலேயே உலைவைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அருவருப்பாக இருந்தது. அவருக்கு. ஆனால் வெளிப்படையாக அப்படிச் சொல்லித் தமக்குப் பதவி கொடுத்திருக்கும் கட்சியைப் பகைத்துக் கொள்ளவும் கமலக்கண்ணன் தயாராயில்லை. . .

டிெல்லி மந்திரியிடம் தனியே பரஸ்பரம் குடும்ப செளக்கியங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் கமலக்கண்ணனிடம் கூறினார்:–

“எனக்கு இரண்டு பையன்கள்! ஒருத்தன் இங்கிலாந்துலேயும்; இன்னொருத்தன் அமெரிக்காவிலே மிக்சிகன் யூனிவர்சிடியிலும் படிக்கிறார்கள். யூ நோ... இண்டியன் எஜூகேஷன் ஸ்டாண்டர்ட் இஸ் வெரி வெரி புவர்...”

தன் குழந்தைகளைக் கவனமாக வெளி நாட்டில் ஆங்கிலச் சூழ்நிலையில் படிக்க வைக்கும். இதே மந்திரி ‘பாமர இந்தியர்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன’ என்ற மனோபாவத்தோடு இந்தி வெறியுடனிருப்பதை உணர்த்தார் கமலக்கண்ணன். ஒரு கோமாளி போல் அபிப்பிராயங்களை உதிர்க்கும் அந்த டெல்லி மந்திரி– திறமை வாய்ந்த தென்னிந்தியப் பத்திரிகை நிருபர்களிடம் மாட்டிக் கொண்டு விழிப்பதைக் காண வேடிக்கையாயிருந்தது கமலக்கண்ணனுக்கு.

மறுநாள் பகலில் கமலக்கண்ணனின் பங்களாவில் ஒரு நவீன பஃபே முறை லஞ்சுக்கு ஏற்பாடாகியிருந்தது. மந்திரி ரமேஷ்சிங்குக்காகவே சூடாக நாலு பிளேட் சாம்பார் தனியே எடுத்து வைக்கச் சொல்லி சமையற்காரரிடம் கூறிவிட்டார் கமலக்கண்ணன். இந்தியின் மேலிருந்த காதலை விட டில்லி மந்திரிக்குத் தென்னிந்திய சாம்பார் மேல் அதிகமான காதல் ஏற்பட்டுக்கொண்டிருப்பதைக் கமலக்கண்ணன் இரண்டு தினங்களாகவே அவரோடு கூட இருந்து கண்டுபிடித்கிருந்தார்.

நகரத்தின் பெரிய பெரிய தொழிலதிபர்களும் பாங்குகளின் டைரக்டர் போர்டுத் தலைவர்களும் கமலக்கண்ணன் வீட்டு விருந்துக்கு வந்திருந்தார்கள். ஒவ்வொருவரையும் கவனமாக மறந்து விடாமல் மந்திரிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் கமலக்கண்ணன் எல்லாருடனும் மந்திரி கலகலப்பாகப் பழகினார். பேர் தான் ‘பஃபே’ என்றாலும் ஏராளமான வகைகள் டேபிளில் இருந்தன. எல்லாம் பிரமாதமான தயாரிப்புக்கள். ‘வெஜிடேரியன் டேபிள்’, நான் வெஜிடேரியன் டேபிள்’... என்று இரண்டும் தனித்தனியே இருந்தன. இரண்டிலும் ஏராளமான பதார்த்த வகைகள் இருந்ததாலும் எல்லாரும் பேசிக்கொண்டும், உலாவிக்கொண்டும் சாப்பிட்டதாலும் விருந்து முடியப்பகல் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. மாலையில் ஃபிலிம் எண்டர்பிரைசர்ஸ் அசோசியேஷன் கூட்டம் இருந்ததனால் மந்திரி ஓய்வு கொள்வதற்காக கெஸ்ட் ஹவுஸ் போய் விட்டார். கமலக்கண்ணன் மாலை ஆறு மணிக்குக்கஸ்ட்ஹவுஸ் சென்று டில்லி மந்திரியை அழைத்துக் கொண்டு ஃபிலிம் வர்த்தகசபைக் கூட்டத்திற்குப் போவதென்று திட்டமிட்டிருந்தார். ஃபிலிம் வர்த்தக சபைக்காரர்கள் பிரமாதமாகக் கண்ணாடித்தாளில் அழைப்பிதழ்கள் அச்சிட்டு அனுப்பியிருந்தனர். பரத நாட்டியத்துக்குக் கூட மாயாதேவியைத்தான் ஏற்பாடு செய்திருந்தனர். தற்செயலாக அவர்கள் அப்படி ஏற்பாடு செய்திருந்தார்களா அல்லது தனக்கு மாயாதேவியை ஏற்பாடு செய்தால் தான் பிடிக்கும் என்று அவர்களாகவே அநுமானித்துக் கொண்டு ஏற்பாடு செய்திருந்தார்களா என்பது கமலக் கண்ணனுக்குத் தெரியவில்லை. ஃபிலிம் வர்த்தக சபைக்காரர்கள். மேல் அவருக்குக் கோபம் கோபமாக வந்தது. தர்மசங்கடமான நிலைமையில் அவர் இருந்தார். மாயா தேவியைக்கண்டும் காணாமலும் பழகிக்கொள்ளலாம் என்று அவர் நினைத்திருந்த நினைப்பில் மண்ணைப்போட்டுவிட்டு அவர் தலைமையிலேயே மத்திய மந்திரிக்கு நடக்கும் ஒரு விருந்தில் மாயாதேவியின் நடனத்தையும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புடன் சேர்த்துப் போட்டுவிட்டதை அவ்வளவாக அவரால் இரசிக்க முடியவில்லை. தனக்கும் மாயா தேவிக்கும் இடையே உள்ள நட்பு நகரப் பிரமுகர்கள் வட்டாரத்தில் ஓரளவு தெரியுமாகையினால் யாராவது இதை வைத்து வம்பு பேசப் போகிறார்களே என்று பயந்தார் அவர். கூட்டங்களில் அல்லது பொது நிகழ்ச்சிகளில் பலர் நடுவே மந்திரி என்ற அந்தஸ்தோடு தான் தலை நிமிர்ந்து நிற்கிற வேளைகளில் மாயா எதிர்ப்பட்டுத் தன்னை வணங்கு வதையோ, நெருக்கம் தெரிகிற பாவனையில் புன்னகை பூப்பதையோ அவர் பலமுறை தவிர்க்க முயன்றிருக்கிறார். இப்போதோ இந்த டில்லி மந்திரி ரமேஷ்சிங் விஷயத்தில்– இதுமாதிரி ஆகிவிட்டது. நிகழ்ச்சி நிரல் எல்லாம் அச்சாகியாவருக்கும் அனுப்பப் பட்டுவிட்டதனாலும், பத்திரிகைகளில் வெளிவந்து பரவிவிட்டதனாலும் இனி மாயா தேவியை அந்த நிகழ்ச்சியிலிருந்து விலக்குவதென்பது முடியாத நிலை ஆகியிருந்தது கமலக்கண்ணனுக்கு. ஆகவே தர்மசங்கடத்தோடும், பயத்தோடும், தயக்கத்துடனும் தான் அந்த விருந்துக்கு டில்லி மந்திரியோடு போனார் கமலக்கண்ணன் .

ஃபிலிம் வர்த்தக சபை விருந்தில் டில்லி மந்திரி ஆங்கிலத்தில்தான் பேசினார். இந்தியில் பேசினால் ஒருவேளை அங்கு வந்திருந்த அழகிய பெண்களும் இளம் எக்ஸ்ட்ராக்களும், தன்னுடைய ஹாஸ்யங்களுக்குச் சிரிக்க முடியாமல் போய்விடுமோ என்று பயந்துதான் அப்படிப் பேசுகிறார் என்பதைக் கமலக்கண்ணன் புரிந்துகொண்டார்.

நடிகை மாயாதேவியின் பரதநாட்டியம் நடந்தபோது டெல்லி மந்திரி வாஹ், வாஹ் என்று நிமிஷத்துக்கு ஒரு தரம் தலையாட்டிக் கொண்டிருந்தார். மந்திரியின் ஒரு பக்கம் கமலக்கண்ணனும் மறுபக்கம் பிலிம் வர்த்தகசங்கத் தலைவரும் அமர்ந்திருந்தனர். டெல்லி மந்திரி தற்செயலாகப் பேசிக்கொண்டிருந்த போது மாயாவைப் பற்றிக் கமலக்கண்ணனிடம் ஏதோ கூறத் தொடங்கவே, பிலிம் சங்கத் தலைவர் குறுக்கிட்டு, “அவருக்குத் தெரியாதுங்களா? ஹீ...இஸ்...ஆல்ரெடி..” என்று ஏதோ டெல்லி மந்திரியிடம் சொல்லத் தொடங்கிய அந்தவேளையில் கமலக்கண்ணனின் முகம்போன போக்கைப் பார்த்து மேலே ஒன்றும் சொல்லாமல் நிறுத்திக்கொண்டார். இதையெல்லாம் சாதாரணமாகச் செய்து விடுவது போல் நாட்டியம் முடிந்ததும் ஒரு சம்பவம் நடந்தது. டெல்லி மந்திரியைச் சந்திப்பதற்காக மாயா அவசர அவசரமாக மேக்–அப்பைக் கலைத்துவிட்டு மேடையிலிருந்து வந்தாள். கைகூப்பியவளைக் கமலக்கண்ணன்–டெல்லி மந்திரிக்கு அறிமுகம் செய்திருக்க வேண்டும். கமலக்கண்ணன் தயங்கியபடி சும்மா இருக்கவே மற்றொருபுறம் அமர்ந்திருந்த பிலிம் வர்த்தக சங்கத் தலைவர் அறிமுகப்படுத்தினார். ஆனால் மாயாவோ டெல்லி மந்திரியிடம் பேசிவிட்டுக் கமலக்கண் ணனை விசேஷப் புன்னகைகளோடு அணுகி, “என்ன? பார்த்து ரொம்ப நாளாச்சே?” என்று தமிழில் குழைந்த போது கமலக்கண்ணனுக்கு–ஒன்றுமே பதில் சொல்ல வரவில்லை. அசடு வழியச் சிரித்தார். ஃபிலிம் சங்கத் தலைவருக்கு கமலக்கண்ணனின் நிலை புரிந்தது. ஆனால் டெல்லி மந்திரி ஆங்கிலத்தில் மாயாவிடம் கமலக்கண்ணனைப் பற்றி ஏதோ கூறத் தொடங்கவே, ‘வாட் இஸ் திஸ்...யூ நீட் நாட் டெல் மீ எபெளட் ஹிம், ஐ நோ ஹிம் ஃபுல்லி வெல்...’–என்று மாயாவே உற்சாகமாகப் பதில் கூறினாள். கமலக்கண்ணன் மேலும் அசடு வழிந்தார். மாயாதேவி தன்னை மிக மிகத் தர்மசங்கடமான நிலையில் வைப்பதாகக் கருதி அவள்மேல் கடுங்கோபம் குமுறிப் பொங்கியது அவருள்ளே.

"https://ta.wikisource.org/w/index.php?title=நெஞ்சக்கனல்/12&oldid=976867" இலிருந்து மீள்விக்கப்பட்டது