உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

சந்திரனும் பாம்பும் தம்மிற்பகையா யிருக்கவும் அவற்றைப் பகைதீரச் சூடிய அருளாளர் என அறிவுறுத்தவாறாம். ‘பாம்பொடு திங்கட் பகைதீர்த் தாண்டாய்’ என்பது திருத்தாண்டகம். பேரருளாளாகிய இறைவர் எமக்கு இரங்காதிரார் என்பார் ‘இறைவர் எமக்கு இரங்காரேனும்’ என்றார். நிச்சயமாக அருள்செய்வர் என்பது குறிப்பு. தையா உள்ளம் - பொத்துப்படாத உள்ளம்; ஓட்டையில்லாத உறுதியான மனம் என்பது பொருள். தைத்தல் - துளைபடுதல். இனி தயாவுள்ளம் என்பதே அகரத்திற்கு ஐகாரம் போலியாய், தையாவுள்ளம் என நின்றது என்பர் சிவக்கவிமணி.

இதுவன்றே யீசன் திருவுருவ மாமா
றிது வன்றே யென்றனக்கோர் சேமம் — இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே
யின்னுஞ் சுழல்கின்ற திங்கு. (24)

இ-ள்: மின்னுகின்ற சுடரொளிப் பிழம்பாய் நின்று (கட்புலனாகப்) புறத்தே விளங்கித்தோன்றி மீளவும் எனது சிந்தையின்கண் வந்து வீற்றிருந்தருளும் பெருமானே, ஈசனாகிய நினக்குரியதிருவுருவமாவது சுடர் விட்டு விளங்கும் இதுவேயன்றோ? (அடியேனாகிய ) எனக்குரிய ஒப்பற்ற சேமநிதியாக விளங்குவது அருளுருவாகிய இதுவல்லவா? நினது திருவுருவாகிய இதுவே (எனது கட்புலனை விட்டு அகலாது) இங்கே இன்னும் சுழன்று ஒளி வீசிக் கொண்டிருக்கின்றது.எ-று.

இதுவன்றே யென வரும் மூன்றும் சொற்பொருட் பின்வருநிலையென்னும் அணியமைய நின்றன.