பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

வயிறு

அவன் சாப்பிடவில்லை. சோகமாகத் தன் மனைவியையும் அடுத்த வீட்டுக்காரியையும் பார்த்தான். பெருமூச்சுவிட்டான்.

"பரவாயில்லை. நீ அப்புறம் சாப்பிடலாம்" என்று கூறி அண்டை வீட்டுக்காரி தட்டைத் தச்சன் மனைவியிடம் தந்தாள்.

பின்னவள் உளம் நெகிழ்ந்தாள். அவள் துக்கத்தோடு சூப்பை நோக்கினாள். பிறகு, செத்துக்கொண்டிருக்கும் தன் கணவனைப் பார்த்தாள். தட்டை அலமாரியில் வைப்பதற்காகப் போனாள்.

அவள் அலமாரியைத் திறந்தபோது, அவளுக்கு எழுந்த இரக்க உணர்வினால் அவள் இதயம் வலித்தது. அந்த அலமாரி எத்தனை எத்தனை முறைகள் திறந்து மூடப்பட்டிருக்கிறது: எத்தனை வகையான இனிய பொருள்கள் அதில் வைக்கப்பட்டிருந்தன; அதிலிருந்து தின்பதற்கு இனிய பொருள்களை நிறைய நிறைய எடுத்தபோது எத்தனை நண்பர்களின் கண்கள் சந்தோஷத்தால் ஒளிர்ந்தன. அப்படி ஒரு காலத்தில் வளம் நிறைந்து குலுங்கிய தங்கள் வாழ்க்கை அலமாரியைத் தச்சன்தான் எத்தனை தடவைகள் திறந்து திறந்து மூடியிருக்கிறான்!

அவள் இன்னும் அந்தத் தட்டை அலமாரிக்குள் வைக்க வில்லை. அதற்குள், பக்கத்து வீட்டுக்காரி மெல்லிய குரலில் என்னவோ கூறி அவளை அழைத்தாள்.

சீக்காளி செத்துக்கொண்டிருந்தான்.

அவன் நெடுமூச்செறிந்தான். ஏதோ சொல்ல ஆசைப்பட்டான்.

அவனது சுருங்கிய தொண்டைக்குள்ளிருந்து தெளிவில்லாத ஒரு சத்தம் வெளிப்பட்டது.

சுருங்குகிற தொண்டைக்கும் கனத்த மூச்சு உயிர்த்தலுக்குமிடையே அவன் கூறியது கேட்டது. "சாவது இப்படித்தான் என்றால், தான் சித்தமாக இருக்கிறேன்" என்று நோயாளி சொன்னான்,

அவன் அமைதியாக, வேகமாகவும்கூட, இறந்துபோனான்.

அறையில் மரண அமைதி நிலவியது,

அப்புறம் என்ன? எல்லாம் அவ்வளவுதானா?

அவன் மனைவி ஏதோ ஒரு மாறுதலுக்காகக் காத்திருந்தாள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அவள் தன் முன்னே பார்த்தாள். ஒரு பக்கம் பசித்த தச்சனின் திறந்த, உறைந்துவிட்ட கண்களைக் கண்டாள். மறுபுறம் அலமாரியைப் பார்த்தாள். அதுவும் திறந்து, இயக்கமற்று இருந்தது. அவளை வதைத்துவந்தவன் பார்த்தது போலவே அதுவும் அவளைப் பார்த்தது.