பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிமிர்ந்து நிற்கும் தோரணை, மனித ஜாதிக்கு மட்டுமே சொந்தமாகும்.

சாய்ந்து சரிந்து, ஒய்ந்து ஒடிந்து போய் நிற்பது மிருகங்களுக்குரிய தோரணையாகும்.

மனித இனம் இப்படி மாறிவிடக் கூடாது. உணவில் கட்டுப்பாடு வேண்டும். உடல் எடையை ஒரு சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நன்னோக்குடன் தான் இந்த நூல் எழுதப் பெற்றிருக்கிறது.

உணவு உட்கொள்ளுவதின் அவசியம், உணவுப் பொருட்களின் சக்தி விகிதம், உணவைப் பயன்படுத்துகின்ற பக்குவம், ஊளைச்சதை ஏன் உண்டாகிறது? அது தரும் ஆபத்தான விஷயங்கள் என்னென்ன? எப்படி அதிலிருந்து தப்பி வருவது போன்ற சுவையான செய்திகள் இந்த நூலில் சொல்லப் பட்டிருக்கின்றன.

‘சுவையான உணவை உண்ண வேண்டும், சுகமான வாழ்வை எண்ண வேண்டும்’ என்ற சொர்க்கமயமான இலட்சியம் தான் இந்த நூலை என்னை எழுதத் தூண்டியது.

இயன்றவரை, மிக சுவையாக எழுதியிருக்கிறேன்.

நல்ல வாழ்வு வாழ வேண்டுமென்று விரும்புகிற 'நலம் விரும்பிகள்' இதனைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

வருமுன் காப்பவர் அறிஞராவார். வந்த பின் தடுப்பவர் மனிதராவார். வந்ததை வாங்கி வருந்திக் கொண்டிருப்பவர் கடையராவார்.