பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னம்

273

அன்னாசி

மையைத் தயாரிக்கவும், தோல் பதனிடுதலிலும் இது பயனாகிறது. இது மருந்துகளிலும், தொற்று நீக்கியாகவும், சாயங்களிலும் பயனாவதுண்டு. குடிதண்ணீரைச் சுத்தம் செய்ய இதைச் சேர்ப்பதுண்டு.

அன்னம் வனப்பும் கம்பீரமும் வாய்ந்த பெரிய நீர்ப்பறவை. இது வாத்துக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் எட்டு முதல் பத்து வகைகளுண்டு. இவை உலகத்தின் பல பாகங்களில் வாழ்கின்றன. ஆயினும் கிழக்கு அர்த்த கோளத்தின் வட பகுதியில்தான் இவை இனத்திலும் தொகையிலும் மிகுந்திருக்கின்றன. இந்தியாவில் அன்னங்கள் வடமேற்குப் பாகங்களுக்குத் தெற்கே சிந்து வரையிலும் மிகவும் குளிர்ச்சியான ஆண்டுகளில் குளிர்காலத்தில் வலசை வருகின்றன. அன்னம் பறந்து செல்லும்போது ஆப்பு வடிவமாக V போல அணிவகுத்துப்போகும். உரத்த எக்காளச் சத்தம்போல ஒலித்துக்கொண்டு பறக்கும். அது புழு, நத்தை முதலிய நீர்வாழ் பிராணிகளையும், மீன் முட்டைகளையும், நீர்ப் பூண்டுகளின் வேர், கிழங்கு, தண்டு, இலை, விதை முதலியவற்றையும் தின்னும். தன் நீண்ட கழுத்தைக் கொண்டு நீருக்குள் நெடுந்தூரம் துழாவி இரை தேடும்.

அன்னம்

அன்னத்தில் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரி இருக்கும். வசந்தகாலத்தில் குளிர்ச்சியான வடபகுதிகளுக்குச் சென்று, ஏரி கரைகளில் நாணல் முதலிய நீர்ப் பூண்டுகளைச் சேர்த்துப் பெரிய குவியலாகக் கூடுகட்டி அதில் 5-9 முட்டையிடும். கூட்டினுட்பாகம் அதன் மெல்லிய தூவியால் அமைந்திருக்கும். பெண் 35-40 நாள் வரையில் அடைகாக்கும். ஆண் காவலிருக்கும். வட நாடுகளிலுள்ள அன்னம் குளிர்காலத்தில் தெற்கு நோக்கி வலசை வரும். சில இனங்கள் மணிக்கு 40-50 மைல் வேகமாகப் பறக்கும்.

அன்னத்தின் குஞ்சு முதலில் பார்ப்பதற்கு விகாரமாகச் சிலும்பலான செம்பட்டை இறகுகள் பொதிந்திருக்கும். இரண்டாவது ஆண்டில்தான் அதற்கு வெண்மையான அழகிய இறகு முளைக்கும். இரை தேடப் பழகிய குஞ்சுகள் சில காலம் வரையிலும் இராக்காலங்களில் கூட்டுக்கு வரும். அப்போதெல்லாம் தாயன்னம் அவற்றைக் கவலையோடு காப்பாற்றும். குஞ்சுகளைப் பேணும் இந்த வேலையில் தந்தையும் தாய்க்கு உதவி செய்யும். குஞ்சுகள் தாயின் முதுகின் மேலேறிக்கொண்டு போவதும், ஏதாவது அச்சமுண்டானால் அதன் இறக்கையின் அடியில் மறைந்துகொள்வதும் அடிக்கடி நிகழும் காட்சிகள். அன்னம் நூறாண்டு காலம் உயிர் வாழ்ந்திருக்கலாம்.

அன்னத்தை மனிதர் வளர்ப்பதுண்டு. இந்திய உயிர்க்காட்சிச் சாலைகளிலும் பூங்காக்களிலும் வெள்ளையன்னமும் காரன்னமும் வைத்து வளர்ப்பதைக் காணலாம். அன்னத்தின் தூய வெண்மையான இறகும், ஒய்யாரமாக உயர்த்தியும் வளைத்தும் திருப்பியும் சீர் பெற நிறுத்தும் கழுத்தும், பவள நிறமான அலகும் அதற்குப் பேரழகு செய்கின்றன. அது நீரில் உடம்பையசைக்காமல் நீந்திச் செல்வதும், நிலத்தில் ஒல்கி யசைந்தசைந்து நடந்து செல்வதும் கம்பீரமாக இருக்கின்றன. இந்தப் பண்புகளாலே அன்னப்பறவை உலக இலக்கியங்களிலெல்லாம் கதையிலும் பாட்டிலும் இடம் பெற்றிருக்கின்றது. அன்னம் உயிர்விடும் தருணத்தில் ஒலித்துக்கொண்டே உயிர்விடும் என்பார்கள். அன்னம் நீரையும் பாலையும் கலந்து வைத்தால் நீரிலிருந்து பாலை மட்டும் பிரித்து உண்ணும் என்பது கவி மரபு. அன்னங்களில் மூன்று நான்கு இனங்கள் முக்கியமானவை. அவை ஊமை அன்னம், சீழ்க்கை அன்னம்,காரன்னம், கருங்கழுத்தன்னம் என்பன.

ஊமை அன்னம் (Mute Swan) : இது அன்னங்களிலெல்லாம் பெரியது. எல்லா இறகுகளும் மாசற்ற வெண்பனி போன்று வெண்மையாயிருக்கும். கழுத்து மெலிவாகவும் நன்றாக வளைந்துமிருக்கும். பவளம் போன்ற சிவந்த அலகின் அடியில் கரிய புடைப்பு ஒன்றுண்டு. கண்கள் இலேசான கபில நிறமானவை. கால்கள் கருமையாக இருக்கும். இதன் குரல் மெல்லியதாயும் இசையுள்ளதாயும் இருக்கும். இந்த அன்னத்தை வளர்க்கின்றனர். வளர்ப்பன்னம் ஒலிப்பதில்லை; அதனால் இது ஊமை அன்னம் எனப்படும். காட்டன்னங்கள் தெற்கு நோக்கி வலசைவரும்போது வளர்ப்பன்னங்களுடன் தாராளமாகக் கலக்கின்றன. இந்த அன்னம் 5 அடி நீளமிருக்கும். 30 ராத்தல் நிறையுள்ளது. இது ஐரோப்பாவிலுள்ளது. அமெரிக்காவிலும் இதைக் கொண்டுபோய் வளர்த்து வருகின்றனர்.

சீழ்க்கை அன்னம் (Whistling S.): இதுவும் வெண்மை நிறமானது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உண்டு. இந்தப் பறவைக்குக் கழுத்துச் சற்றுக் குட்டையாயும் தடிப்பாயுமிருக்கும். அலகு மஞ்சள் நிறம். அதற்கடியில் புடைப்புக் கிடையாது. பறக்கும் போது இனிய குரலோடு கூவிக்கொண்டே போகும்.

காரன்னம் (Black S.): ஊமை அன்னத்தைப் போல அவ்வளவு பெரியதன்று. இது ஆஸ்திரேலியாவிலுள்ளது. உடல் புகைபோன்ற கருமையாகவாவது, சாம்பலாகவாவது இருக்கும். சிறகிலுள்ள முதலிறகுகள் மட்டும் வெண்மையானவை. கண் இரத்தச் சிவப்பு. அலகு சிவப்பு; ஆனால் நுனியில் வெள்ளையாயிருக்கும்.

கருங்கழுத்தன்னம் (Black necked S.) தென் அமெரிக்காவிலுள்ளது. தலையுங் கழுத்தும் கறுப்பான அரக்குப்பழுப்பு நிறம். மற்றப் பாகங்கள் வெண்மை. அலகின் அடியிலுள்ள புடைப்பு நன்றாகத் தெரியும். சிவப்பாயிருக்கும். அலகு ஈய நிறம். இது கழுத்தை நேராக நீட்டிக்கொண்டு பறக்கும். பா. பா.

அன்னாசி சுவையும் மணமும் மிகுந்த பழம். இது முதன்முதல் அமெரிக்காவின் வெப்ப வலயத்தில் இருந்தது. இதற்குத் தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டு மொழியில் நானாஸ் என்று பெயர். இது சாதாரணமாக ஒரு தேங்காயளவு பருமன் இருக்கிறது. சில ஜாதி இன்னும் மிகப் பெரிதாக இருக்கும். பழத்தின் உள்ளே கெட்டியான சதை வெளிர்மஞ்சள் அல்லது வெளிர் கிச்சிலி நிறமுள்ளதாக இருக்கும். மேலே தோல் அழுத்தமாகச் சொரசொரப்பாக இருக்கும் ; இது உள்ளிருக்கும் சதையைக் காப்பாற்ற உதவுகிறது. ஆண்டில் எந்தக் காலத்திலும் இந்தப் பழம் அகப்படும்.